news
வத்திக்கான் செய்திகள்
“உண்மையைக் கண்டிப்புடனும் கருணையுடனும் பாதுகாப்போம்!”

வத்திக்கான் உச்ச நீதிமன்றமானஉரோமை ரோட்டா (Roman Rota) அமைப்பின் புதிய நீதித்துறை ஆண்டைத் தொடக்கி வைத்து நீதிபதிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை, “உண்மையை எவ்விதச் சமரசமும் இன்றிப் பாதுகாக்கவேண்டும்; அதேசமயம் அதில் பிடிவாதம் இருக்கக்கூடாது. எதையும் புறக்கணிக்காமல் அன்பைச் செயல்படுத்தவேண்டும். நீதியும் அன்பும் முரண்பட்டவை அல்ல; மாறாக, அவை இறைவனின் மறைப் பொருளில் ஒன்றிணைந்தவை.  மேய்ப்புப்பணி ஆர்வத்தினால் வரும் தவறான இரக்கம் வழக்கின் உண்மையை மறைத்துவிடக்கூடாதுஎன்று எச்சரித்த திருத்தந்தை லியோ, “தனிநபர்கள் மீதான மனிதாபிமானம் இல்லாத, உணர்ச்சியற்ற தீர்ப்புகளும் நீதியாகாது; குறிப்பாக, திருமண முறிவு வழக்குகளில் போதிய ஆதாரங்களின்றி முடிவெடுப்பது சட்டத்தின் மாண்பைச் சிதைக்கும்என்றும்  சுட்டிக்காட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“புதிய மறைப்பணி இயக்கத்திற்கு தூண்டுகோல் புனித லீமா ரோஸ்!” - கர்தினால் தாக்லே

பெரு நாட்டின் புகழ்பெற்ற புனிதரான லீமா நகர் புனித ரோஸ் (St. Rose of Lima) குறித்த உலகளாவிய கருத்தரங்கு உரோமையில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வத்திக்கான் தோட்டத்தில் இப்புனிதரின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழ்வைத் தொடங்கி வைத்த கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே, “புனித ரோஸின் ஆன்மிகம் கடல்களைக் கடந்து தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. போதனைகளை விட முன்மாதிரிகளை விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டிஎன்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முயற்சி ஒரு புதிய மறைப்பணி இயக்கத்திற்கு விதையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தந்தை லியோ முன்னிலையில் திறக்கப்படவுள்ள இத்திருவுருவம், முற்றிலும் பெரு நாட்டின் மூலப்பொருள்களால் செதுக்கப்பட்டுள்ளதாகவும், இயேசு புனித ரோஸிற்கு மலர்களை வழங்கும் காட்சியை இது சித்தரிப்பதாகவும் வத்திக்கான் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. மேலும், பூக்கடைக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்களின் பாதுகாவலியாகப் போற்றப்படும் இப்புனிதர், ‘முள்களுக்கு இடையே மலர்ந்த லீலிஎனத் திரு அவையால் புகழப்படுகிறார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இனப்படுகொலை எனும் கொடூரம், எந்தவோர் இனத்திற்கும் இனி நேரிடக்கூடாது”- திருத்தந்தை லியோ

உலகஹாலோகாஸ்ட் (Holocaust) நினைவு தினத்தை முன்னிட்டு, உலகில் இனி எந்தவோர் இனத்திற்கும் எதிராக இனப்படுகொலை எனும் கொடூரம் நிகழக்கூடாது என்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான யூதர்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்குக் காரணமான அந்தப் பழைய கசப்பான நிகழ்வுகளை வத்திக்கானில் நடைபெற்ற வாராந்திரப் பொதுமறை உரையின்போது வேதனையுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “யூத எதிர்ப்பு உணர்வு, ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத உலகத்தை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்என்று பரஸ்பர மரியாதை மற்றும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“அமைதிக்காக நமது குரல்களை உயர்த்துவோம்”- திருத்தந்தை லியோ

மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலைக் குறிப்பிட்டு, அமைதிக்காக உலக நாடுகள் ஒன்றிணையவேண்டும் என்று திருத்தந்தை லியோ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைதிக்காக நாம் அனைவரும் மிக அதிகமாகச் செபிக்கவேண்டும்என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.  மத்தியக் கிழக்கில் குறிப்பாக, பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் திருத்தந்தையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சாதாரண மக்களாகிய நாம் அமைதிக்காக உரக்கக் குரல் கொடுக்கவேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும்என்று வலியுறுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
இறைவனின் திட்டங்களுக்கு உங்களைத் தயார்படுத்துங்கள்!

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும்SEEK 2026’ இளைஞர் மாநாட்டில், காணொளி மூலம் உரையாற்றிய திருத்தந்தை லியோ, இளையோர் இயேசுவுடன் தனிப்பட்ட முறையில் நேரத்தைச் செலவிட வேண்டுமென உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். ‘நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?என்ற திருவிவிலியக் கேள்வியை அவர் முன்வைத்தார். ‘உயரங்களை நோக்கி என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த 26-வது ஆண்டு மாநாட்டில் கொலம்பஸ், டென்வர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 25,000-க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றுள்ளனர்.

news
வத்திக்கான் செய்திகள்
வெனிசுலா பதற்றம்: வன்முறையைத் தவிர்க்க திருத்தந்தை லியோ வேண்டுகோள்!

வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், அங்கு அமைதி நிலவ வேண்டுமெனத் திருத்தந்தை லியோ உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். வெனிசுலாவில் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தின்படி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, “மக்களின் நலனே அனைத்தையும் விட முக்கியமானது; வன்முறையைத் தவிர்த்து, அமைதி மற்றும் ஒத்திசைவான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்.