news
கவிதை
குருவே உம்மைத் தொழுதே பணிந்தோம்! (செப்டம்பர் 05)

ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

அறிவின் விளக்கே ஆசிரியப் பெருமானே!

வழிகாட்டும் தெய்வமே தியாக உருவமே!

இருள்நீக்கும் ஜோதியே இறைவனின் வடிவமே!

அன்பின் நிறைவே அருளின் நிறைகுடமே!

இனிதாய் கற்பித்து இதயம் தொடுபவரே!

இயலாக் கனவினையும் நனவாக்கும் நாயகரே!

கிரியா ஊக்கியாய் இயங்கும் ஆற்றலே!

பிரியா உறவை வணைத்த ஏந்தலே!

விலைகொடா இலக்குகளை எட்டிட வைப்பவரே!

சொற்களால் போற்ற இயலா மேன்மையரே!

வாழ்நாள் முழுதும் வழிகாட்டும் தீபமே!

பாரும் போற்றும் தியாகத்தின் உருவே!

உயரிய அறிவினை உவப்பாய் தருபவரே!

ஞானப் பாலினை நயம்பட புகட்டுபவரே!

வாழ்வின் மதிப்பை வளமாய் சேர்ப்பவரே!

நற்பண்பு விதைகளை நெஞ்சில் விதைப்பவரே!

ஒழுக்கமும் சீர்மையும் உணர்த்தும் வழிகாட்டியே!

சீரிய குணங்களைச் செதுக்கும் சிற்பியே!

அர்ப்பணிப்பு சேவைக்கு அகிலமே போற்றுமே!

ஈடில்லாத் தியாகத்தை இதயமே வணங்குமே!

பயிலும் பாடத்தைப் பண்புடன் நடத்துபவரே!

ஆர்வத் தீயை அகத்தில் மூட்டுபவரே!

நாளுமே வளர நன்மையைக் கற்பிப்பவரே!

பள்ளிப் பயணத்தைப் பரவச மாக்குபவரே!

சலிப்பில்லா முகத்தால் புன்னகை தருபவரே!

மனத்தின் சுமையினை மகிழ்வாய் மாற்றுபவரே!

வெற்றிப் பாதையை வெளிச்சம் காட்டுபவரே!

குருவே உம்மைத் தொழுதே பணிந்தோம்!

news
கவிதை
மனிதம் மேம்பட...

படைப்பின் சிகரம் மனிதம் - அதன்

மாண்பை மதித்தல் புனிதம்

உணர மறுத்தல் அநீதம் - என்றும்

மலர் வைத்தல் அதீதம் (மேன்மை)

 

குடும்பம் என்பது கதம்பம் - முறையே

தொடுத்தால் இன்பம் ததும்பும்.

காலம் கடந்தால் வெதும்பும்- அன்பு

கனிந்தால் உறவுகள் அரும்பும்.

 

மக்கள் செல்வம் பேறு - வேண்டாமென

மறுத்தல் பெரும் தீது

ஆணும் பெண்ணம் ஈடு-பாலினம்

பகுத்தல் சமூகக் கேடு.

 

உயர்ந்தவர் தாழ்ந்தவர் உண்டோ? - ஆறு

அறிவவன் மானிடப் பண்போ?

இம்மதம் அம்மதம் எனினும் - இறையுள்

சங்கமம் அல்லாத ஒன்றோ?

 

உறவுகள் மேம்படவேண்டும்- வேண்டாப்

பிளவுகள் தீப்படவேண்டும்.

அனைவரும் நலம்படவேண்டும் - சுயநல

அழுக்குகள் கழிபடவேண்டும்.

 

சேர்ந்து வாழ்தல் நன்று - ஆதலின்

சோதரம் பேணுவோம் நின்று.

செயற்கை நீக்கம் கண்டு - பயனுறு

இயற்கையை மீட்போம் வென்று!

news
கவிதை
வாழ்வுக்கான பேரணி

பேரணி இது பேரணி

வாழ்வுக்கான பேரணியில்

வாழ்வியலைப் போற்றி

வாஞ்சையுடன் நடந்திடுவோம்!

சூது நிறைந்தே சூழ்ந்தாலும்

சூழ்ச்சி வெல்ல அணி செய்வோமே!

கருக்கலைப்பு என்னும்

காலக் கொடுமையை உணர்த்தியே

காரிருளை அகற்றியே ஒளியில் மிளிர

அறத்தை விதைத்து வாழ்ந்திடுவோமே!

அன்பினைச் சுவைக்க

ஏங்கும் இதயங்களுக்கு

அரணாய் என்றும் நின்றிடுவோமே!

இறை நம்பிக்கையே

நம் கொடியாகப் பறக்கட்டுமே!

பகையறுக்கும் நற்குணமே

நம் படையாக நடைபோடட்டுமே!

உலகநீதியில் நில்லாது இறைநீதியில்

நிமிர்ந்தென்றும் நடந்திடுவோமே!

உயிரை மறுக்கும் ஒவ்வொரு செயலும்

வாழ்வின் வேதனை என்றே

கூக்குரலிடுவோமே!

உயிரை மதித்து வாழ்வில் சிறக்கும்

மனங்களாலே வானரசின்

விதைகளை விதைப்போமே!

இறைவன் தந்த இவ்வாழ்வில்

இருட்டு எண்ணங்கள்

இல்லாமல்

இனிதே செல்வோமே!

வாழ்வுக்கான பேரணியில்

வாகை காணவே

நடைபோடுவோமே!

news
கவிதை
சமர்ப்பணம்

கருவறையைக் கல்லறையாக்கிய தாய்மார்களுக்கு இக்கவிதை ஒரு சமர்ப்பணம்!

கருவாய் உருகொடுத்தவளே!

என்னைக் கழுவித் தூக்கி எறியத் துணிந்தாள்,

பலரின் வற்புறுத்தலால் நீயும் என்னை

வேண்டாம் என்றாயே ஏன்?

என் சின்ன இதயம் எப்போது

தன் துடிப்பை நிறுத்தும்

எனத் துடித்தாய் ஏன்?

என்னை அனுப்பியவரிடம்

நான் கூக்குரலிட்டேன்.

யாரோ செய்த தவறுக்கு

எனக்கு ஏன் இந்த நிலைமை?

கண்மை இட்டு அலங்கரிக்க

வேண்டிய என்னை

நீயும் அலங்கரித்தாய் சவப்பெட்டியில்!

காரணமின்றிக் கலைந்து போனேன்

உருவில்லாமல்...!

மீண்டும் ஜென்மம் என்று ஒன்று இருந்தால்

என்னிடம் வா தாயே,

உன்னைப் போல் இல்லாமல்!

என் கருவறையில் உனக்கு உருகொடுத்து

இவ்வுலகிற்கு உன்னைப்

பரிசாய் தருவேன்!

news
கவிதை
வல்ல தேவன் அழைக்கின்றார்!

வழியும்  உண்மையும்  நானென்றே

                வல்ல  இயேசு  மொழிந்தாரே!

வழியின்  துணையாய்  இறைச்சொற்கள்

                விழிபோல்  நம்மைக்  காத்திடுதே!

 

பாவ  இருளில்  வாழ்வோர்க்குப்

                பரமன்  அருளைப்  பகிர்வதற்கும்

காவல்  தூதர்  பணியாற்ற

                காக்கும்  இளையோர்  வருவீரே!

 

திராட்சைக்  கொடியாய்  வாழ்ந்திங்கே

                தேவன்  கனியைச்  சுவைப்பதற்குத்

திரட்டித்  தரவே  இளையோரே

                திரண்டு  வாரீர்  பணியாற்ற!

 

இறைவன்  பணியை  ஆர்வமுடன்

                இமைபோல்  நாளும்  வளர்த்திடவும்

துறவு  வாழ்வின்  சபைகளிலே

                தொடர்ந்து  பணியை  ஆற்றிடலாம்!

 

அழியா  இல்லம்  விண்ணகத்தை

                அடையும்  வழிகள்  இவையென்றே

வழியைக்  காட்ட  இளையோரை

                வருக  என்றே  அழைக்கின்றோம்!

 

கல்வி  மற்றும்  மருத்துவத்தைக்

                கடவுள்  பணியாய்ச்  செய்வோமே!

வல்ல  தேவன்  அழைக்கின்றார்

                வாரீர்  மேய்ப்புப்  பணியாற்ற!

news
கவிதை
மரியின் மகிழ்வான மே மாதமே அருள் தருக!

அம்மா உன்னை நினைத்து மகிழ்ந்திட தந்திட்டாய்

தயங்காமல் தரணிக்கு ஆறுதலை அளித்திட்டாய்

அருளும் ஆசிரும் நிறைவாய் பெற்றிடுவோம் இம்மாதம்!

 

அன்னையே உந்தன் செபமாலை நாள்தோறும் செய்திட

அழைத்திட்டாய் எம்மை இந்த அருள் மாதத்தில்

ஆசையாய் குடும்பத்தோடு கூடிடுவோம் ஆலயத்தில்!

 

பல வண்ணப் பூக்களால் அலங்கரித்தல் அழகாமே!

அழகோவியமே உந்தன் கருணை மட்டும் போதும் அம்மா!

பாடிப்பாடி புகழந்தேத்திட எம்மை அழைத்தாயே!

 

கருணை உந்தன் பார்வை பட்டால் போதுமம்மா

காலமெல்லாம் நின் பணி கிடைத்தலே சுகமம்மா

கால தேவனே உன் கட்டளையைக் கேட்கலாம்!

 

தாயே உன்னைப் புகழ்ந்து பாடிட தந்தாயே

இந்த முழு மாதத்தையும் உன் கருணையால் நிறைத்தாயே

நாள்தோறும் அலங்கரித்திடுவோம் செபமாலையால்!

 

நாதனின் தாயேஆகட்டும்என்றவளே அம்மா!

உன் முகம் பார்த்தால் கவலைகள் காணாதம்மா!

உம் முன் முழந்தாளிட்டால் முழுப்பயனும் எமதம்மா!

 

தாயே இந்த மாதம் எங்களின் வசந்தகாலம் அம்மா

கூடி வருவோம் குதூகலத்தோடு ஆடிப்பாடிடுவோம்

உந்தன் ஆணையாம் செபமாலையை ஏந்திடுவோம்!

 

வாழ்வில் வசந்தங்கள் தந்திட்ட தாயே

வாயார உம்மைப் போற்றி நன்றி நவிலும் மாதமம்மா

நீயின்றி எங்களுக்குத் தஞ்சம் யாரம்மா!

 

எமக்காகத் திருமகனை அளித்திட்ட தாயே

எங்களின் எல்லாமுமான அழகு அன்னையே

குடும்பமாய் கூடி வந்திட்டோம் உம்மை வணங்க!