கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள் மூவர், ஏரோது மன்னனிடம் சென்று, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?, அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்று சொன்னதைக் கேட்டதும், அவன் கலங்கினான். அவனோடு சேர்ந்து எருசலேம் நகர் முழுவதும் கலங்கியது. பின்னர் அவன் அவர்களைத் தனியாக அழைத்து, “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்றான். ஆனால் ஞானிகள் மூவரும் ஏரோது மன்னனிடம் போகவேண்டாம் என்று கனவிலே எச்சரிக்கப்பட்டதால் அவர்கள் வேறு வழியாகப் போய்விடுகிறார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோடுகிறான். அப்படி இயேசுவுக்காக, இயேசுவுக்குப் பதிலாகக் கொல்லப்பட்டவர்கள்தான் இந்த மாசில்லா குழந்தைகள் (மத் 2: 1-18).
யூத வரலாற்று ஆசிரியரான பிலாவியுஸ் ஜோசபுஸ் தன்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் இந்த நிகழ்வைக் குறித்து எங்கும் குறிப்பிடாததால், ஒருவேளை இந்தக் கொடிய நிகழ்வில் நிறையக் குழந்தைகள் இறந்திருக்க மாட்டார்கள் என்று ஒருசிலர் சொல்வர். இன்னும் ஒருசிலர் பெத்லகேமையும் அதன் சுற்றுப்புறத்தையும், அங்கு வாழ்ந்த மக்கள்தொகையையும் வைத்துப் பார்க்கும்போது முப்பதிலிருந்து முப்பத்தைந்து குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்வர். எப்படி இருந்தாலும் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுவோ என்று பயந்து பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுபோட்ட ஏரோதின் ஈவு இரக்கமற்ற செயல் உண்மையிலே வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
இந்த ஏரோதைக் குறித்து முன்பு சொன்ன அதே வரலாற்று ஆசிரியர் பிலாவியுஸ் ஜோசபுஸ், “ஏரோதுக்கு பிள்ளையாகப் பிறப்பதை விட, அவனுடைய வீட்டில் பன்றியாகப் பிறப்பது நலம்” என்பார். அந்தளவுக்கு ஏரோது தன்னுடைய பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்து தன்னுடைய பிள்ளைகளைக்கூட கொன்றுபோட்ட அரசன். கிமு. 35 ஆம் ஆண்டு தன்னுடைய மருமகனையும், கிமு 34 ஆம் ஆண்டு தன்னுடைய சகோதரன் ஜோசப்பையும், கிமு 29 ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி மரியம்மையும், அதே ஆண்டில் தன்னுடைய மனைவியின் அன்னை அலெக்ஸாண்ட்ரா என்பவரையும், கிமு 25 ஆம் ஆண்டில் தன்னுடைய இன்னொரு மருமகன் செஸ்டோபர் என்பவரையும், கிமு 4 ஆம் ஆண்டில் மகன் அந்திபத்தார் என்பவரைக் கொன்றுபோட்டான். இப்படியாக ஏரோது மன்னன் தன்னுடைய பதவியைக் காத்துக்கொள்ள, அதற்குத் தடையாக இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொன்றுபோடும் அரக்கனாக இருந்தான். இப்படிப்பட்டவன் இயேசுவைக் கொல்வதற்காக இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண்குழந்தைகளைக் கொன்றுபோட்டதில் வியப்பேதும் இல்லை.
ஏரோது நிகழ்த்திய இந்தக் கொடிய நிகழ்வு பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாரவோன் மன்னன் மோசேயைக் கொல்வதற்காக ஏனைய யூதக் குழந்தைகளைக் கொன்றுபோட்டதை நியாபகப்படுத்துகின்றது (விப 1:22). ஆனால் மோசே எப்படி பாரவோனின் கையிலிருந்து தப்பித்தாரோ அதுபோன்று குழந்தை இயேசுவும் அவருடைய தாய் மரியாவும் ஏரோதின் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் யோசேப்பு வந்த கனவில் மூலம் எச்சரிக்கப்பட்டு எகிப்துக்கு தப்பி ஓடுகிறார்கள். அவன் இறந்தபிறகே தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிவருகின்றார்கள்.
இயேசுவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்த மாசற்ற குழந்தைகளுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கப்பட்டது என்று அறிய முற்படும்போதும் முதல் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். பீட்டர் கிறிசோஸ்லோகுஸ் என்பவர் தான் இதனைத் தொடங்கினார். தூய அகுஸ்தினாரோ “மாசற்ற குழந்தைகளின் இறப்பை விண்ணில் மொட்டுகள் மலருகின்றன” என்பார்.