news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு (30-08-2026) - எரே 20:7-9; உரோ 12:1-2; மத் 16:21-27

திருப்பலி முன்னுரை

இயேசுவின் பெயரால், அவருடைய சீடர்களாய் வாழவேண்டும் என்ற ஆவலுடன் மகிழ்வோடு கூடிவந்துள்ள இறைமக்களாகிய உங்கள்  அனைவரையும் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வாஞ்சையோடு வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தி வழியே, கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது  சிலுவையைச் சுமக்கும் தியாகப் பயணம் என்பதை இறைமகன் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசு தாம் எருசலேமுக்குச் சென்று துன்பங்கள் பல பட்டு, கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும் என்பதைத் தம் சீடர்களுக்கு வெளிப்படையாகக் கூறுகின்றார்.

உண்மையான சீடத்துவம் என்பது சுகமான பாதையில் செல்வதல்ல; துன்பங்கள் வந்தவுடன் படைத்த ஆண்டவரையே வெறுப்பதல்ல; இழப்புகளைச் சந்தித்தவுடன் கடவுளைச் சந்திக்க ஆலயமே செல்லாமல் இருப்பதல்ல; மாறாக, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காகத் தன் விருப்பங்களையும் சுயநலத்தையும் துறப்பதாகும். உலக இன்பங்களைப் பெற நினைத்து ஆன்மாவை இழப்பதைவிட, இறைவனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நிலைவாழ்வை அடைய முயற்சிப்பதே சிறந்தது. சிலுவைகள் அவமானங்கள் அல்ல; மாறாக, மக்கள் பணியில் நமக்குக் கிடைக்கும் மகுடங்கள். எனவேதன்னலம் கடந்து இறைவனின் திருவுளம் நாடி, பொது நலனோடு மக்கள் பணியாற்றி, இயேசுவின் உண்மைச்சீடர்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, இறைப்பணியில் தான் சந்திக்கும் போராட்டங்களையும், உள்ளக் குமுறல்களையும், மக்கள் செய்த ஏளனத்தையும் ஆண்டவரிடம் வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். ஆனாலும், இதயத்தில் பற்றி எரியும் இறைவார்த்தையைத் தீவிரமாக அறிவிக்கின்றார். நாமும் எதிர்ப்புகள் வந்தாலும் எரேமியாவைப் போன்று கடவுளின் வார்த்தையைத்  துணிவோடும் ஆர்வத்தோடும்  பறைசாற்ற அருள்வேண்டி இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் உடலையும் உள்ளத்தையும் அன்றாடச் செயல்பாடுகளையும் தூய மனத்தோடு இறைவனுக்குக் காணிக்கையாக்குவதே நாம் செலுத்தும் உண்மையான வழிபாடு ஆகும். இந்த உலகத்தின் சுயநலப் போக்குகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளாமல், இறைவனின் திருவுளத்தை அறிந்துகொண்டு, நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் புதுப்பித்து, இறைவனுக்கு உகந்த தூய பலியாக நம்மையே கொடுக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. ‘துணிவோடிருங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் எரேமியாவைப் போன்று உலகச் சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், உம்முடைய நற்செய்தியைத் துணிவோடு பறைசாற்றத் தேவையான தூய ஆவியின் ஆற்றலையும் அருள்வரங்களையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வல்லமை மிகுந்த ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடும், ஏழை எளிய மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் நீதியான சிந்தனையோடும் செயல்படவும், நாட்டை அமைதியான முறையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘அஞ்சாதே! நான் உன்னோடுஎன்று மொழிந்த ஆண்டவரே! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நோய், வறுமை, அவமானம், இழப்புகள், குடும்பச் சிக்கல்கள் போன்ற சிலுவைகளால் சோர்ந்து விடாமல், எங்கள்மேல் கவலை கொண்டுள்ள உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நலம் நல்கும் ஆண்டவரே! எமது நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோய்களினால் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகளை நீர் ஆசிர்வதித்து, நோயிலிருந்து முழுமையான விடுதலையைத் தந்து காத்திடவும், உயிர்க்கொல்லி நோய், தொற்றுநோய், புற்றுநோய் அனைத்திலுமிருந்தும் எங்கள் அனைவரையும் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு - எசா 22:19-23; உரோ 11: 33-36; மத் 16: 13-20 (23.08.2026)

திருப்பலி முன்னுரை

அன்புச் சகோதர - சகோதரிகளே! வாழும் கடவுளின் மகனாகிய இயேசுவின் பெயரால் உங்களை ஞாயிறு வழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்என பேதுரு துணிவோடு அறிக்கையிட்டார். பேதுருவைப்போல இயேசுவை நம் வாழ்வின் தெய்வமாக அறிக்கையிடும் நம்பிக்கைத் துணிவு நம்மிடம் உள்ளதா? என இன்று சிந்திப்போம்.

இறுதிமூச்சுவரை இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பேதுரு திரு அவையின் முதல் தலைவரானார். “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்ற திருவிவிலிய வார்த்தைக்கேற்ப, நற்கருணையில் இயேசுவை உட்கொள்ளும் நாம் அவரை நம் வாழ்வாலும் அறிவிக்கவேண்டும். உண்மைக்குச் சான்று பகர்ந்து உயிரைக் கையளித்த அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமி ஆகியோரின் தியாக வாழ்வு நம் நம்பிக்கைப் பயணத்திற்குச் சிறந்த வழிகாட்டியாகும்.

வாழ்க்கையில் புயல்களும் சவால்களும் வந்தாலும், கிறிஸ்து என்னும் பாறைமீது கட்டப்பட்ட நாம், நம்பிக்கையில் தளர்ச்சியடையாமல் வாழ்வோம். திரு அவையின் உறுப்பினர்களாக அதில் மகிழ்ச்சியோடு பணியாற்றவும், எண்ம உலகில் உண்மையான ஞானமாகிய ஆண்டவரை உணர்ந்து சான்று பகரவும் தேவையான வரங்களைக் கேட்டு, இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

கடவுளின் அழைப்பு மகத்துவமானது. தாம் தேர்ந்துகொண்டவர்களைப் பாதுகாத்து உயர்த்தும் ஆண்டவர், அவர்களுக்குத் தம் வல்லமையை அளிக்கிறார். “ஆண்டவர் தம் வழிகளை நமக்கு அறிவிப்பார்என்னும் இறைவாக்கிற்கேற்ப, அவரது இறைப் பராமரிப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கடவுளின் எல்லையற்ற ஞானத்தையும் இரக்கத்தின் ஆழத்தையும் போற்றுகிறது. “ஆண்டவரை அண்டி வாழ்பவர் கைவிடப்படுவதில்லைஎன்பதை உணர்ந்து, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவர்தம் திட்டத்திற்குப் பணிந்து வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் கால மாற்றத்திற்கேற்ப ஞானத்துடனும் விவேகத்துடனும் பணியாற்றவும், தனிமை, நோய், புரிந்துகொள்ளாமை போன்ற தருணங்களில் உம் பிரசன்னத்தில் திடம் கொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன் வாழும் இறைவா! வாழ்வின் சோதனைகளில் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற உறுதியான நம்பிக்கையோடு வாழவும், வாழும் கடவுளின் மகனாகிய உம்மை எங்களது அன்றாட வாழ்வால் சான்றுபகர்ந்து அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழிகாட்டும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறையோடும், நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடும் உண்மையிலும் நேர்மையிலும் வழிநடத்தத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் குடும்பங்களிலும் பங்கிலும் உள்ள குழந்தைகள் அனைவரும் இறைநம்பிக்கையிலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கி, பெற்றோரை மதித்து நடக்கும் நல்ல பண்பை வளர்த்துக்கொள்ளத் தேவையான ஞானத்தைத் தந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (16.08.2026) எசா 56:1,6-7; உரோ 11:13-15;29-32; மத் 15:21-28

திருப்பலி முன்னுரை

எல்லையில்லாத வரங்களையும், அளவில்லாத நலன்களையும் கொடுத்து நம் அனைவரையும் அற்புதமாக வழிநடத்திவரும் இயேசுவின் பெயரால் உங்களைத் திருவழிபாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கிறோம்கடுகளவு நம்பிக்கை கடலளவு நன்மை பயக்கும் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெரியப்படுத்துகிறது. சில நேரங்களில் நாம் கேட்பது கிடைக்காவிட்டால் நம்பிக்கையில் தளர்ந்துவிடுகின்றோம். கடவுள் நமது தேவையறிந்து தக்க நேரத்தில் தரமானதைத் தருவார் என்ற நம்பிக்கையில் நிலைத்திருக்க அருள் வேண்டுவோம். கானானியப் பெண்ணைப் போன்று விடாமுயற்சியுடன் மண்டியிட்டுஆண்டவரே எனக்கு உதவும்என்று  இயேசுவைசிக்கெனபிடித்துக்கொள்வோம். அவநம்பிக்கை மனநிலையைக் கடந்து, ஆண்டவரிடம் முழுமையாகச் சரணடைவோம்மனத்தில் சந்தேகமின்றி இயேசுவால் அன்றி வேறு எவராலும் குணப்படுத்த முடியாது என்ற கானானியப் பெண்ணின் மனநிலையை நமதாக்குவோம். ‘நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்என்று இயேசு இன்று நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். நல்லதையே நினைப்போம்; நல்லதையே விதைப்போம்; நல்லதை மட்டுமே நாடுவோம்நொடிப்பொழுதும் கைவிடாது காத்துவரும் இயேசுவிடம் தஞ்சமாவோம். உயிரைக் கொடுத்து திருமறையை வளர்த்த இயேசுவின் சீடர்களிடம்  விளங்கிய ஆழமான நம்பிக்கை நம்மிலும் வளர்ந்திட இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கடவுளின் அழைப்பைப் பெற்று உண்மையை நிலைநாட்டி, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நேர்மையுடனும், இறைநம்பிக்கையுடனும்  வாழும்போது கடவுளின் உடனிருப்பு நம்மோடு இருக்கும். உள்ளம் என்னும் ஆலயத்தை ஆண்டவர் வாழும் இல்லமாக மாற்றும்போது அவருடைய இரக்கம் நம்மை வழிநடத்தும். அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது அவர் அனைத்துத் தீங்கினின்றும் காத்திடுவார் என்று கூறி  இறைமதிப்பீடுகளின் வழியில் பயணிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும், கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அவர் இரக்கமும் கனிவும் உடையவர். கடவுளின் அருள்கொடைகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு, நம்பிக்கை இவற்றை நமது வாழ்வில் கடைப்பிடித்து, கடவுளின் ஆசிபெற்ற மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உம்மீது கொண்ட நம்பிக்கையால் உமக்காகத் தங்களையே அர்ப்பணித்த எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் காலத்தின் தேவைக்கேற்ப கருத்துடன் பணிசெய்திடவும், கலக்கமின்றி துணிச்சலோடு நற்செய்தியை அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன் வாழும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உம்மிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த வாழ்க்கைக்காக நன்றி கூறுகின்றோம். அன்பிலும் பண்பிலும் பகிர்விலும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திடவும், உம்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்திடவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கம் அறிந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், அனைத்து வளங்களையும் கொண்ட எம்  நாட்டை வழிநடத்திடவும், மக்கள் என்ற சொத்தைக் காப்பதில் கருத்துடன் செயல்படவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எங்கள் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் ஒற்றுமையுடன் வாழவும், அன்பியக் கூட்டங்களிலும், திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வத்தோடு நாங்கள்  பங்கேற்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு (09.08.2026) 1அர 19:9அ, 11-13அ; உரோ 9:1-5; மத் 14:22-33

திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதரிகளே, சகோதரர்களே! ஆண்டவரின் துணையை நம்பி, துணிவோடு பயணிக்க ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு திருப்பலி நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

வாழ்க்கை என்னும் கடலில் துன்பங்கள், கடன் தொல்லைகள், வறுமை, நோய்கள் எனப் பேரலைகள் மோதி நம்மைத் திணறடிக்கும்போது, இயேசு நம்மைப் பார்த்துதுணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்!’ என்று உரக்கக் கூறுகிறார். பல நேரங்களில் சோதனைகள் தொடரும்போதும், நம்பியவர்கள் கைவிடும்போதும், யாரும் நம்மைப் புரிந்துகொள்ளாமல் தனித்து விடப்படும்போதும் நாம் விரக்தி அடைகிறோம். இறைவனின் உடனிருப்பை மறந்துவிடுகிறோம். ஆனால், எத்தகைய புயல் வீசினாலும் இயேசுவின் கரங்களைசிக்கெனப் பிடித்துக்கொள்ளும்போது, நம் வாழ்வின் அனைத்துச் சிக்கல்களும் அவிழ்ந்துபோகும்.

எனவே, குழப்பமான சூழல்களில் நம் பாதைக்கு ஒளியாக விளங்கும் இறைவார்த்தையை வாசிப்போம். சுமையால் மனம் கலங்கும் நேரங்களில், ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!’ என்று முழு நம்பிக்கையோடு கூப்பிடுவோம். இல்லாமையிலும் இயலாமையிலும் ஆண்டவரிடம் சரணடைவோம். அச்சமின்றி, துணிவோடு இயேசுவின் பாதையில் பயணிக்கவும், இமைப்பொழுதும் நம்மைவிட்டு நீங்காத அவரோடு இணைந்து வாழவும் தேவையான வரங்களை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் அமைதியான பிரசன்னத்தை உணரவும், அக அமைதியைப் பேணவும் இன்றைய முதல் வாசகம் அழைப்பு விடுக்கிறது. சோர்வுற்றிருந்த இறைவாக்கினர் எலியாவுக்கு ஆண்டவரின் மெல்லிய குரல் ஆறுதலையும் புதுப் பலத்தையும் தந்தது. சோதனைக் காலங்களில் கடவுளின் குரல் நம்மையும் வழிநடத்தும் என்ற நம்பிக்கையோடு இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மக்களின் மீட்பிற்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணியும் திருத்தூதர் பவுலின் ஆழ்ந்த அன்பையும் பொறுப்புணர்வையும் இவ்வாசகம் வெளிப்படுத்துகிறது. பிறர்மீது உண்மையான அன்பும் தியாக உள்ளமும் கொண்டு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ‘துணிவோடிருங்கள்என்ற ஆண்டவரே! திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் துன்பங்களில் சோர்ந்துவிடாமல், உம்மீது கொண்ட நம்பிக்கையில் தொடர்ந்து செயலாற்ற வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘அஞ்சாதீர்கள்என்ற ஆண்டவரே! உம் பிள்ளைகளாகிய நாங்கள் துன்பங்கள், இழப்புகள் மற்றும் வெறுமைகளிலும் உம்மைவிட்டுப் பிரியாமல், உமது கரம் பற்றி உயர்ந்து வாழ வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்ற ஆண்டவரே! எம் குடும்பங்களிலும் பங்கிலும் நோய்களால் துன்புறுவோர் உடலிலும் மனத்திலும் விடுதலை பெற்று, மகிழ்ச்சியோடு வாழ, உமது குணமாக்கும் கரங்களை நீட்ட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. துணிவைத் தரும் ஆண்டவரே! எம் இளையோரும் - இளம் பெண்களும் உலக மாயைகளில் வீழாமல், உம்மைக் கண்டடைந்து, பங்குப் பணிகளில் ஆர்வத்தோடு பங்கேற்று, உயிரோட்டமுள்ள திரு அவையைக் கட்டியெழுப்ப வரம்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு (02-08-2026) எசா 55:1-3; உரோ 8:35,37-39; மத் 14:13-21

திருப்பலி முன்னுரை

இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துகளும் வரவேற்பும்! தமது இரக்கத்தினாலும் கருணையாலும் இவ்வையகத்தை வழிநடத்தி வரும் இறைவனைத் தேடி வந்திருக்கும் உங்களை, பரிவும் பகிர்வும் கொண்ட மக்களாக வாழப் பொதுக்காலத்தின் 18-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

தம்மைத் தேடி வந்த திரளான மக்களின் உடல் மற்றும் ஆன்மப் பசியைப் போக்கிய இயேசு, நம் வாழ்விலும் அற்புதங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார். நமது நேரம், திறமைகள் மற்றும் ஆறுதலான வார்த்தைகளை அவரிடம் ஒப்படைக்கும் போது, அவர் அவற்றைப் பலமடங்கு பெருக்கி, நம் கவலைகளையும் இன்னல்களையும் நீக்கி இரட்டிப்பான ஆசிரைத் தருகிறார். இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தை நாம் பற்றிக்கொள்ளும்போது, நம்மை வாட்டும் நோய்களும் நம்பிக்கையின்மையும் அகன்று போகும்.

நற்கருணை நாதராகிய இயேசுவை உட்கொள்ளும் நாம், அவரைப் போலவே மாற அழைக்கப்படுகிறோம். தேவைக்காக மட்டும் இறைவனைத் தேடாமல், நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவரை முழுமையாகச் சார்ந்து வாழ நாம் முன்வர வேண்டும். இந்தத் திருப்பலியில், இயேசுவின் விழுமியங்களை நம் வாழ்வில் கடைப்பிடிக்கவும், பிறரை அன்போடு அரவணைக்கும் பகிர்வின் இதயம் பெற்று வாழவும் வரம் வேண்டி, அவரின் சாட்சிகளாய் ஒன்றிணைந்து செபிப்போம். நமது இதயம் இயேசுவின் இதயம்போல் மாறிட இப்புனிதப் பலியில் முழுமையாக இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் நமது ஆன்மிகத் தாகத்தைத் தீர்க்க இறைவன் விடுக்கும் இலவசப் பேரழைப்பாகும். உலகப் பொருள்கள் தரும் தற்காலிக மகிழ்ச்சி மனித தாகத்தைத் தீர்ப்பதில்லை; ஆண்டவரின் வார்த்தையே அதற்கு அருமருந்து. எக்குறையுமின்றி நம்மை வழிநடத்தி வரும் இறைவனின் பேரன்பைச் சுவைக்க, இந்த முதல் வாசகத்திற்கு ஆர்வம் கலந்த பக்தியோடு செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம் வாழ்வில் துன்பங்கள் வரும்போது இறைவனின் அன்பை நாம் சந்தேகிக்கலாம்; ஆனால், உலகில் எந்தச் சக்தியாலும் நம்மை அவரின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்னும் மாபெரும் உறுதியை இன்றைய இரண்டாம் வாசகம் தருகிறது. அச்சமின்றி ஆண்டவரின் கரம் பற்றி நம்பிக்கையுடன் வாழ அழைக்கும் இவ்வார்த்தைகளுக்குப் பற்றுறுதியோடு செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர் அனைவருக்கும் ஆசிர் அளியும். உமது அன்பைத் தேர்ந்துகொண்ட இவர்கள், அதனை அகிலத்திற்கு ஆர்வம் கலந்த துணிவோடு எடுத்துரைக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. கருணையின் தெய்வமே! நாங்கள் உம்மைப்போல் பரிவும் இரக்கமும் கொண்ட இதயம் பெற்று வாழ அருள்புரியும். மற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்யவும், எங்களிடம் உள்ள வளங்களைப் பிறரோடு மகிழ்ச்சியோடு பகிர்ந்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எங்கள் சிந்தனை, சொல், செயல்களால் உமது பேரன்பில் நாங்கள் என்றும் நிலைத்திருக்க அருள்தாரும். இமைப்பொழுதும் எங்களை நீங்காது காக்கும் உம்மீது கொண்ட நல் நம்பிக்கையில், நாங்கள் ஒவ்வொரு நாளும் வளர வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பரிவுமிக்க பரம்பொருளே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதியும். அவர்கள் ஞானத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கவும், அவர்களுக்கு நாங்கள் நம்பிக்கை வாழ்வின் முன்மாதிரிகளாகத் திகழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு (26-07-2026) 1அர 3:5,7-12; உரோ 8:28-30; மத் 13:44-52

திருப்பலி முன்னுரை

கடவுள் என்ற மிகப்பெரிய புதையலைத் தேடி ஞாயிறு திருப்பலிக்கு வருகை புரிந்திருக்கும் கடவுளின் பிள்ளைகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். கடவுள் பரிசாகக் கொடுத்த இந்த வாழ்க்கையைத் தரிசாகப் போட்டுவிடாமல், பலமடங்கு பலன் கொடுத்து வாழ ஆண்டின் பொதுக்காலம் 17 - ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

உலகச் செல்வங்களாகிய பணம், பட்டம், பேராசை இவற்றைச் சேமிப்பதிலேயே நாள்களை நகர்த்தி, வாழ்க்கை என்ற புதையலை அனுபவிக்காமலேயே சென்றுவிடுகின்றோம். இறைவன் நமக்குக் கொடுத்த பெற்றோர், மனைவி, குழந்தை, உறவினர், நண்பர் போன்ற புதையல்களை அன்பால், பண்பால், பாசத்தால் அரவணைப்போம். இறையாட்சியின் மதிப்பீடுகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பெறுவதற்கும் விதைப்பதற்கும் தியாகம் செய்யவும், நமது மனத்தைப் பண்படுத்தவும், ஞானத்துடன் செயல்படவும் முன் வருவோம்.

நமது மனமாகிய வலையில் விழும் வெறுப்பு, பாகுபாடு, தன்னலம், பொய், திருட்டு, வஞ்சகம், கோபம், குடி, ஆணவம் போன்றகெட்ட மீன்களைஅகற்றிவிட்டு பரிவு, கருணை, இரக்கம், அன்பு, மனிதநேயம், நல்லிணக்கம், சேவை போன்ற நல்ல மீன்களைச் சேர்த்துக் கொள்வோம்இதயம் என்ற நிலத்தில் இறைவார்த்தை என்ற விதையை அனுதினமும் விதைத்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் சாலமோனிடம்உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டபோது, சாலமோன் பொன்னோ பொருளோ கேட்கவில்லை; மாறாக, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஞானத்தை மட்டும் கேட்கின்றார். ஆண்டவரிடம் ஆயிரக்கணக்கான தேவைகளை அடுக்கிக்கொண்டே செல்லும் நமக்கு, ஞானத்தின் அவசியத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம் திட்டங்கள் வேறு; ஆண்டவரின் திட்டங்கள் வேறு. ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களுக்கு அவரின் துணை எப்போதும் உண்டு. தாம் அழைத்தவர்களை எத்தீங்கும் அணுகாது உடன் பயணிக்கின்றார். அவரின் திட்டத்திற்குப் பணிந்து வாழும் அவருடைய பிள்ளைகளுக்குத் தமது மாட்சிமையில் பங்கு கொடுப்பார் என்று கூறி ஆண்டவரின் அன்பில் நிலைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவறத்தார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கவும், நம்பிக்கையின் ஒளியில் மக்களை வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நீதியின் தேவனே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மக்கள் வளமோடும் அமைதியோடும் வாழ்வதற்கான சட்டங்களைக் கொண்டுவரத் தேவையான ஞானத்தை எம் நாட்டு தலைவர்களுக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையின் ஊற்றே எம் இறைவா! நாங்கள் அனைவரும் அன்பு, மன்னிப்பு, ஏற்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகளில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வாழும் இடத்தைச் சொர்க்கமாக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் அனைவரும் இறைநம்பிக்கையில் வேரூன்றவும், உலகப் போக்கின்படி செல்லாமல் இறைவார்த்தையை அனுதினமும் வாசித்து அதன்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.