news
வத்திக்கான் செய்திகள்
உலகச் சமூகத் தொடர்பு தினம் 2026: கருப்பொருளை அறிவித்த திருத்தந்தை லியோ!

மனிதர்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பது இன்றைய சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்ற தலைப்பை முன்மொழிந்து 2026-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதிக்கான 60-வது உலகச் சமூகத் தொடர்பு தினக் கருப்பொருளை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை லியோ. ‘Preserving human voices and facesஎன்ற கருப்பொருளை மையப்படுத்தி, இந்த உலகச் சமூகத் தொடர்பு தினம் கொண்டாடப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள், மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளி அதன் ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இது எந்தச் சூழலிலும் மனிதர்களுக்கே உரிய கருணை, நெறிமுறை மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட பொறுப்புகளுடன் செயலாற்றாது எனவும், இயந்திரங்கள் மனிதர்களின் வேலையை எளிமையாக்கவே பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி, மனிதர்களை ஓரங்கட்டுவது ஏற்கமுடியாதது என வத்திக்கான் ஊடகப் பேராணையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, சமூகத்திற்கு வழிகாட்டும் முகவராக மனிதகுலம் இருப்பதை உறுதி செய்வதுடன், மனிதத்தின் தனித்துவத்தைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, மனித வாழ்க்கையை இணைப்பதுடன் எளிதாக்கக்கூடிய கருவிகளாக, இயந்திரங்கள் செயல்படும் இடமாகத் தகவல்தொடர்பின் எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உலகச் சமூகத் தொடர்பு தினம் கொண்டாடப்படவுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
“இதுபோன்ற ஒரு சூழலை இதுவரை பார்த்தது இல்லை”- காசா குறித்துக் கவலை தெரிவித்த கர்தினால் பிட்சா பால்லா!

காசாவிற்கு அமைதிஎன்ற இணையவழி செப விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதுபெரும் தந்தை, பிரான்சிஸ்கன் சபை துறவியாக, புனித பூமியில் 35 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இவ்வளவு கடினமான தருணத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என வேதனை தெரிவித்துள்ளார். காசாவில் வாழும் மக்கள் போர் மற்றும் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருவதாகவும், இருக்க இடமின்றி, வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகின்றனர். வலிமையின் மொழி தோல்வியடையும் போது, வன்முறையின் முழு கோட்டையும் இடிந்து விழும்போது, நாம் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அழகு நிறைந்த புனித பூமியை அன்பு மற்றும் சாந்த குணத்துடன் மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்எனக்  கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘இருளில் இருந்து ஒளியை நோக்கி’கடவுளின் அழைப்பை எடுத்துரைத்த திருத்தந்தை!

வத்திக்கானில் பொதுப்பார்வையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, “கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பு மிக ஆழமும், முழுமையான தியாகமும் கொண்டதுஎன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தந்தையின் அன்பிற்குச் சாட்சியாக விளங்கும் கிறிஸ்துவின் இந்த வழிமுறை கடந்த காலத்துடன் மட்டுமல்ல, இன்றும் பொருந்திச் செல்கிறது. நமது கடந்த கால இரவுகளோ அல்லது பழமையான தவறுகளோ, உடைந்து போன பிணைப்புகளோ, அது எதுவாக இருந்தாலும் அவருடைய மீட்பில் இருந்து எதையும் நாம் விலக்கி வைக்கமுடியாது. கடவுளின் கருணையால் தொட முடியாத அளவுக்கு அழிக்கப்பட்ட கடந்த காலம் எதுவும் இல்லை; சமரசத்திற்கு உள்ளான வரலாறும் இல்லை. கடவுள் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்கிறார். தனிமை, அவமானம், கைவிடுதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தின் அன்றாட நரகத்திலும், நாம் தந்தையின் அன்பிற்குச் சாட்சியமளிக்க முடியும்என்று உறுதிபடத் தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
ஆயுதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; சகோதரத்துவமும் நீதியும் தளிர்க்க வேண்டும்!

திருத்தந்தை லியோ உக்ரேனிய மக்களுக்காக உடனடிப் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், அண்மையில் அமெரிக்காவின் மினசோட்டாவில் கத்தோலிக்கப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், மவுரித்தேனியா கடற்கரையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகவும் தனது ஆழ்ந்த இரங்கலையும் இறைவேண்டலையும் தெரிவித்துள்ளார். மேலும், “ஆயுதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; சகோதரத்துவமும் நீதியும் தளிர்க்க வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். “உலகில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் அல்லது காயமடையும் குழந்தைகளுக்காக அன்றாடம் இறைவேண்டல் செய்வதாகக் கூறிய திருத்தந்தை, “உலகத்தைப் பாதிக்கும் பெரிய மற்றும் சிறிய ஆயுதங்களின் தொற்றுநோயைத் தடுக்க கடவுளிடம் மன்றாடுவோம்எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

news
வத்திக்கான் செய்திகள்
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

அண்மையில் ‘Streets of Fear: Freedom of Religion and Belief in 2024/25’ என்ற  அறிக்கையை  வெளியிட்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (HRCP), கிறித்தவர்கள் மற்றும் இந்துகளுக்கு எதிரான வன்முறைகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளது. “சிறுபான்மையினருக்கு எதிரான அடிப்படைப் பாகுபாட்டைத் தவிர்க்க பாகிஸ்தான் தவறிவிட்டது; உலகம் ஒருங்கிணைப்பு நோக்கிச் செல்லும் வேளையில், நாமோ சகிப்புத்தன்மையற்ற, கொடூரமான சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்என்றுதேசிய நீதியும் அமைதியும்ஆணையத்தின் (NCJP) துணை இயக்குநர் அட்டாவுரெஹ்மான் சமன் தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
புனிதராக அறிவிக்கப்பட்ட அருள்சகோதரி மரியா துரொன்காத்தி

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களால் 2012-ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்சகோதரி மரியா துரொன்காத்தி அவர்களுக்குத் திருத்தந்தை லியோ அவர்கள் அக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை உலக மறைப்பணி ஞாயிறன்று  புனிதர் பட்டம் வழங்குவதாக  அறிவித்துள்ளார். தான் ஒரு மறைப்பணியாளராக இருக்கவேண்டும் என்பதையே தனது உறுதியான நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்த இத்தாலியைச் சேர்ந்த சலேசியச் சபை அருள்சகோதரியான மரியா துரொன்காத்தி அவர்கள், 1883-ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று பிரேசியாவில் பிறந்தார். 1969, ஆகஸ்டு 25 அன்று குயிட்டோவிற்குச் சென்ற அவர், விமான விபத்தில் இறந்தார்.