பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வின் இடைவிடாத தேடல் - மகிழ்ச்சி! கல்வி, வேலை, பணம், செல்வம், உறவு, மதிப்பு, அதிகாரம் என இவையனைத்தும் ஒருவர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே. அதனால்தான், “மகிழ்ச்சி மனிதனின் ஏக்கத்துடனான முக்கியமான எதிர்பார்ப்பு” என்கிறார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். ஆனால், இன்று நாம் செய்யும் செயல்கள் எப்போதும் உண்மையான, நீடித்த மகிழ்ச்சியைக் கொணர்வதில்லை. வசதி வாய்ப்புகள், செல்வச் செழிப்புகள், தொழில் வளர்ச்சிகள் என எல்லாம் இருந்தும் ‘மகிழ்ச்சி இல்லையே’, ‘மனநிம்மதி இல்லையே’ என்று புலம்புபவர்கள் நம் மத்தியில் ஏராளம். ஏன்? ஏனெனில், உலகம் இன்று நமக்கு வழங்கும் ‘மகிழ்ச்சி’ என்பது ஒரு மாயை. அது வசதியிலும் புகழிலும் வெற்றியிலும் இருப்பதாகப் போதிக்கிறது; மகிழ்ச்சியைத் தவறான இடத்தில் தேடச் சொல்லுகிறது.
பொதுக்காலத்தின்
நான்காம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய இறைவார்த்தை நம்மை மகிழ்ச்சியின் உண்மையான வேர்களுக்கு அழைத்துச் செல்கிறது. இன்று இறைவன் ஒரு ‘புரட்சிகரமான மகிழ்ச்சியை’ நமக்கு
அறிமுகப்படுத்துகிறார்.
நற்செய்தியாளர்
மத்தேயு இயேசுவின் போதனையை ஐந்து உரைகளாகத் தொகுத்துள்ளார். இதில் புகழ்வாய்ந்தது மலைப்பொழிவு என்று குறிப்பிடப்படும் முதல் உரையாகும். இது அதிகாரங்கள் 5 முதல் 7 வரை அமைந்துள்ள ஒரு மிக நீண்ட உரை. இந்த மலைப்பொழிவைக் கிறித்தவ வாழ்வின் ‘விண்ணக அரசமைப்புச் சட்டம்’ என்று அழைக்கலாம். மலைப்பொழிவு 1) பேறுகளும் அதைத் தொடர்ந்து சில அறிவுரைகளும் (5:3-20); 2) பழைய ஏற்பாட்டுச் சட்டத்திற்கு மாற்றாக இயேசு அளிக்கும் மனிதநேயப் போதனைகள் (5:21-48); 3) யூத அறச் செயல்களுக்குத் தேவையான உள்ளார்ந்த தன்மை (6:1-18); 4) புதிய சமுதாயம் உருவாக இயேசு தரும் சில விதிமுறைகள் என நான்கு பகுதிகளைக்
கொண்டுள்ளது.
இன்றைய
நற்செய்தியில், இயேசு ஒரு மலையின்மீது அமர்ந்து சீடர்களுக்கும் திரளான மக்களுக்கும் போதித்த மலைப்பொழிவின் முதல் பகுதியை வாசிக்கிறோம். மகிழ்ச்சிக்கான உலகளாவிய இலக்கணத்தை அவர் இந்த மலைப்பொழிவிலே தருகிறார். ‘பேறுபெற்றோர்’ (Blessed) என்பது உண்மையான
மற்றும் முழுமையான மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். ‘பேறுபெற்ற நிலை’
(Beatitude) என்பதற்கான
கிரேக்க மூலச்சொல்லான ‘மக்காரியோஸ்’ (Makarios) என்பதற்கு ‘மகிழ்ச்சி’ என்பது
பொருள். இயேசு வழங்கிய எட்டுப் பேறுகளையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
‘ஏழையரின் உள்ளத்தோர்’ என்போர்
‘இறைவனே எங்கள் கதி, எங்களுக்கு அவரே எல்லாம்’ என்று கடவுளை மட்டுமே சார்ந்து வாழ்பவர்கள். இவர்கள் விண்ணக அமைதியை, மகிழ்ச்சியை மண்ணகத்திலே முன் சுவைப்பர். ‘துயருறுவோர்’ என்போர்
துன்புறுவோர் மற்றும் துன்புறுத்தப்படுவோர். அதாவது, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் எதிராகச் செய்த பாவங்களை எண்ணித் துயருறுவோர்; அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் சுயநலம் கொண்டவர்களால் துன்புறுத்தப்படுவோர். இவர்கள் ஆறுதல் பெறுவர். ஏனெனில், துன்புறுகிறவர்களுக்குக் கடவுள்தாம் ஆறுதல். ‘ஆறுதல்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘கடவுள் உன் பக்கத்தில் இருப்பார்’
என்பதும் பொருள். ‘கனிவுடையோர்’ என்போர்
வன்முறையற்ற, மென்மையான இதயம் கொண்டவர்கள். கனிவு என்பது இயேசுவைக் குறிக்கும் சொல்லாடல். “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்”
(மத் 11:29). ‘கனிவு’ என்ற சொல்லுக்கு இயேசுவின் வாழ்க்கையே இலக்கணம். கனிவை கிரேக்கத் திருவிவிலியம் தாழ்ச்சியுடையவர்கள் அல்லது இனிமையானவர்கள் என்று காட்டுகிறது. இவர்கள்தான் உலகை வெல்வார்கள். ‘நீதியின்மேல் பசி தாகம் கொண்டோர்’
இறைவனின் திருவுளம் நிறைவேற ஏங்குபவர்கள். நீதியை நிலைநாட்டுவதுதான் கடவுளுடைய பணி; அதில் பங்கெடுப்பவர்கள் பேறு பெற்றவர்கள் ஆகின்றனர்.
‘இரக்கமுடையோர்’ என்போர்
பிறரை மன்னித்து அன்பு காட்டுபவர்கள். அவர்களுக்கே இறைவனின் மன்னிப்பு கிட்டும். ‘தூய்மையான உள்ளத்தோர்’ என்ற
வரியில், மகிழ்ச்சி என்பது நாம் அணிந்திருக்கும் உடைகளிலோ அல்லது பதவிகளிலோ இல்லை; மாறாக, கள்ளமில்லாத நேர்மையான நமது உள்ளத்தில்தான் இருக்கிறது. அங்கே இறைவன் குடிகொண்டிருக்கிறார். வாழ்க்கையில் சண்டைகளைத் தவிர்த்து, அமைதியை விதைப்பவர்களே இறைவனின் பிள்ளைகள் என்ற ஓர் ஆழமான இறையியலை இயேசு காட்டுகிறார். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் என்போர் உண்மைக்காகவும் இறைவனுக்காகவும் சோதனைகளை ஏற்பவர்கள். அவர்கள் விண்ணகத்தையே உரிமையாக்குகின்றனர். இந்த எட்டுப் பேறுகளும் உலகப் போக்கிற்கு மாறானவை என்றாலும், ஒரு மனிதனைத் தூயவனாகவும் மகிழ்ச்சியானவனாகவும் மாற்றும் வல்லமை கொண்டவை என்பதை இயேசு கற்றுத்தருகிறார்.
ஆண்டவர்
இயேசு மகிழ்ச்சிக்கான எட்டு பேறுகளை வரிசைப்படுத்திக் கூறும் வேளையில், இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் செப்பனியா ஆண்டவரைத் தேடுவதும் நேர்மையை நாடுவதும் மனத்தாழ்மையோடு தேடுவதும் மகிழ்ச்சியை அடைவதற்கான வாய்க்கால் என அறிவுறுத்துகிறார். இதில் செப்பனியா
‘எளியோர்’ (2:3) மற்றும்
‘எஞ்சியோர்’ (3:13) தாழ்மையுள்ள
இதயத்தோடு ஆண்டவர் பெயரில் நம்பிக்கை வைப்போரைக் குறிக்கிறார். இறுதி நாளில் ஆண்டவரிடம் இவர்களுக்குப் புகலிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வழங்குகிறார். நாம் நம்மையே நம்பியிருப்பதை விடுத்து, இறைவனை நம்பத் தொடங்கும்போது உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் பிறக்கிறது என நம்பலாம் அன்றோ!
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில், கிறித்தவர்கள் கடவுளின் ஞானமாகிய இயேசுவைத் தங்கள் மேல்வரிச் சட்டமாகக் கொள்ள வேண்டும் எனவும் சிலுவையின் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறார். மேலும் அவர், உலகம் யாரை ‘முட்டாள்கள்’ என்று
கருதுகிறதோ, அவர்களைத் தேடி இறைவன் வருகிறார். உலகம் யாரை ‘பலவீனமானவர்கள்’ என்று
ஒதுக்குகிறதோ, அவர்களைக் கொண்டு வலிமையானவற்றை வெட்கப்பட வைக்கிறார். இங்கே மகிழ்ச்சி என்பது நமது தகுதியினால் வருவதல்ல; மாறாக, இறைவனால் நாம் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உணர்வினால் வருகிறது. “பெருமை பாராட்டுபவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்” என்கிறார்
பவுல்.
காரணம்
என்னவெனில், யூதர்கள், கிரேக்கர்கள் தங்கள் படிப்பறிவால் அறிவுப்பூர்வமாகக் கடவுளை அறிந்துவிடலாம் என நம்பினார்கள். ஆனால்,
சிலுவையின் வல்லமையும் ஞானமும் மனிதரைக் கவரும் வகையில் சொல்லழகிலோ அல்லது வல்ல செயல்களிலோ அமையாது, மனிதரை உள்ளிருந்து உருமாற்றும் அருளில் அடங்கியிருக்கிறது என்று கூறி, நாம் யாராக இருந்தாலும், நம்மிடம் என்ன இருந்தாலும் நம்மைக் குறித்துப் பெருமை பாராட்டாமல், கடவுளைக் குறித்துப் பெருமை பாராட்டி வாழும்போது, நாம் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறோம் என்று பவுல் கற்றுத் தருகிறார்.
நாம்
நல்ல கிறித்தவர்களாக, விண்ணக மகிழ்ச்சியை மண்ணகத்தில் சுவைக்க என்ன செய்ய வேண்டும்? முதலாவது, மனத்தாழ்மையோடும் நேர்மையோடும் இறைவனைத் தேடுவோம். இன்றைய உலகம் நம்மிடம் கூறுகிறது: “பணம் இருந்தால் பாதுகாப்பு”, “அதிகாரம்
இருந்தால் மதிப்பு”,
“பெயர் இருந்தால் மகிழ்ச்சி.” ஆனால், கடவுள் நம்மோடும் நாம் அவரோடும் இருந்தால்தான் மகிழ்ச்சி என்பதை யார் மறுக்க இயலும்!
இரண்டாவது,
இகழ்ச்சியை இறைவனுக்காக ஏற்றுக்கொள்ளும் இதயம் வேண்டுவோம். கிறித்தவ வாழ்க்கை என்பது துன்பமே இல்லாத வாழ்க்கை அல்ல; அழுகையே இல்லாத பாதையும் அல்ல! இயேசுவைப் பின்பற்றும் வாழ்க்கையில் இகழ்ச்சி, தவறான குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல்கள் வரலாம். அப்போது நாம் தனியாக அழுவதில்லை. துன்புறுவதில்லை. நமக்காகத் திரு அவையும் துன்புறுகிறது. நமக்கு முன்னே வாழ்ந்த இறைவாக்கினர்கள், உண்மைக்காக நின்றவர்கள், நீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் அனைவரும் இதே பாதையில்தான் நடந்தனர்.
மூன்றாவது,
நீதியும் அன்பும் கொண்ட வாழ்க்கையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கவேண்டும். நீதியையும் அன்பையும் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய போராட்டங்களில் அல்ல; மாறாக, நமது பண்பான பேச்சில், பணிவான பணிகளில், நேர்மையான நடத்தையில், உண்மையான உள்ளத்தில் என ஒவ்வொரு நொடியும்
நாம் எடுக்கும் எளிய தீர்மானங்களில்தான் அடங்கியுள்ளது.
எனவே,
இயேசு நமக்குத் தரும் மலைப்பொழிவின் பேறுபெற்றோர் வாழ்வியல் முறை நாளைக்கான பாடமல்ல; அது இன்றே தொடங்கும் வாழ்க்கை முறை. நாம் இறைவனை முதன்மைப்படுத்தினால், உண்மைக்காக அமைதியோடு நிற்கக் கற்றுக்கொண்டால், அன்பையும் நீதியையும் வாழ்க்கை முறையாக மாற்றினால், மண்ணகத்தில் வாழ்ந்தபடியே விண்ணக மகிழ்ச்சியைச் சுவைக்கும் உண்மையான கிறித்தவர்களாக மாறமுடியும்.
இறையாட்சி என்பது விண்ணகம் அல்ல; அது ஓர் இடமல்ல; ஓர் அரசியல் ஆட்சி முறையுமல்ல; அது கடவுள் மையமாக இருக்கும் வாழ்க்கைமுறை; அன்பு செய்யும் ஆட்சி நிலை; நீதி நிலவும் இறைச்சமூகம்; மன்னிப்பு மலரும் உறவுமுறை; அமைதி விதைக்கப்படும் இடம். இறைவன் மனித வாழ்வுக்குள் நுழைவதும் மனித இதயங்களில் அவரது ஆட்சி மலர்வதுமே இறையாட்சி. இறையாட்சி என்பது இறைவனின் விருப்பம் நிறைவேறும் இடம். இறைவனின் ஆட்சி நிலையானது; உலகளாவியது; ஆன்மிகமானது.
இயேசு
தம் பணியைத் தொடங்கியபோது அறிவித்த முதல் செய்தி: “மனம் மாறுங்கள், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது” (மத்
4:17). இறையாட்சி பேசுவதால் அல்ல; அறிவிப்பதால் அல்ல; மாறாக, அது மனமாற்றத்தின் வழியாக, இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் அன்பு, சேவை, நீதி ஆகிய செயல்களால் கட்டமைக்கப்படுகிறது. இன்று இயேசு உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய இறையாட்சி எனும் இயக்கத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் பணியாளராய் ஒளிர்ந்திட அழைக்கப்படுகின்றோம்.
இயேசு
தொடங்கிய பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகம் அமைகின்றது. “செபுலோன் நாடே! நப்தலி நாடே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது” (எசா
9:1,2; மத் 4:15-16) என்ற அழகிய வரிகளை இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். இவை இரண்டிற்குமான முக்கியத் தொடர்பு என்ன எனக் காண முயல்வோம்.
யோசுவா
தனது தலைமையில் இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அந்நாட்டின் பகுதிகளை 12 குலத்தாருக்கும் வழங்கினார். செபுலோன், நப்தலி நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் அங்கு ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த வேற்றின மக்களை விரட்டிவிட்டே அவற்றை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், செபுலோன், நப்தலி நாட்டிலிருந்த வேற்றின மக்களை அவரால் விரட்ட முடியவில்லை. எனவே, யோசுவா இந்த இரண்டு நாடுகளையும் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கியபோது, அங்குள்ள வேற்றின மக்களோடு இணைந்து வாழவேண்டிய சூழலே ஏற்பட்டது. இது இஸ்ரேல் மக்களுக்கு ஒரு பெரும் அவமதிப்பாக இருந்ததாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த இரு நாடுகளும் கலிலேயப் பகுதியில் யோர்தானுக்கு அப்பால் வருகின்ற ‘பெருங்கடல் வழிப்பகுதியே’ என்றும்
கூறப்பட்டுள்ளது. ‘பெருங்கடல் வழிப்பகுதி’ என்பது
இஸ்ரயேல் நாட்டையும் எகிப்து போன்ற பிற நாடுகளையும் இணைக்கும் பெரியதொரு வியாபாரச் சாலையாகவும் அமைந்திருக் கின்றது.
இஸ்ரயேலின்
வடபகுதியில் அமைந்துள்ள இந்தப் பகுதிகள்தாம் அசீரியர்களால் முதலில் கைப்பற்றப்பட்டன. கி.மு. 7-ஆம்
நூற்றாண்டில் அசீரியர்கள், வட அரசான இஸ்ரயேலைத்
தாக்கி, சமாரியாவைச் சூறையாடி, இஸ்ரயேல் நிலப்பரப்பையே மாற்றி அமைத்தார்கள். வளமையும் செழுமையும் அழகும் சேர்ந்த கலிலேயப் பகுதி இவர்களால் கைப்பற்றப்பட்டு, பேரழிவுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டது. தென்னரசான யூதேயாவை விட, வட அரசான இஸ்ரயேல்
பல வழிகளில் வல்லமையுடையதாக இருந்தபோதும் அழிந்துபோனது. இந்தப் பகுதிகளின் அழிவு ஆண்டவருடைய தெரிவிலே நிகழ்ந்தது (9:1) என்று எசாயா கூறினாலும், செபுலோனையும் நப்தலியையும், பிற்காலத்தில் அதிகளவாகப் பிற இனத்தவர் வாழ்ந்த பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதிகள் மற்றும் பிற இனத்தவர் வாழும் கலிலேயா போன்றவை ஆண்டவரால் மேன்மைப்படுத்தப்படும் என்கிறார். எசாயா இணைத்துக் கூறிய ஆசிமொழிகள் பிற்காலத்தில் இந்தப் பகுதியில் (கலிலேயாவில்) இயேசு பணி செய்ததை நினைவூட்டுகிறது.
காரிருளின்
துயரத்திலிருந்த, அவமதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து இயேசு தமது பணியைத் தொடங்குவது, “செபுலோன் நாடே! நப்தலி நாடே!... காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” (எசா
9:1) என்று இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறுகின்றதாக மத்தேயு காட்டுகின்றார் (மத் 4:15). இயேசு யூத மக்களுக்கு மட்டுமே நன்மைதரும் விதத்தில் எருசலேம் ஆலயத்தில் தமது நற்செய்திப் பணியைத் தொடங்காமல், எல்லா நாடுகள் மற்றும் இன மக்களைச் சென்றடையும்
வகையில், “மனம் மாறுங்கள்; ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்
4:17) என்று முழக்கமிட்டுத் தமது பொதுவாழ்வுப் பணியை எல்லா இனத்தவரும் வாழும் செபுலோன், நப்தலி நாடுகளின் பகுதியில் தொடங்குகின்றார்.
இயேசுவின்
பணிவாழ்வைக் குறித்து ஏற்கெனவே சிமியோன் இவ்வாறு சான்று பகர்கின்றார்: “இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை”
(லூக் 2:32). நற்செய்தியாளர் யோவானும் இயேசுவை ஒளியாகக் காண்கிறார் (யோவா 1:9). மேலும், ‘இயேசுவே உலகின் ஒளி’ என்கிறார் (8:12). இருளைப் போக்கும் ஒளியாக இயேசுவைக் கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பியதுபோல, நாமும் அனைவருக்கும் பணியாற்றிட கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளார். நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் இயேசுவில்தாம் முழுமைபெறுகிறது. ஆகவே, இயேசுவின் பணியை நாம் தொடரவேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு நமக்குத் தரும் அழைப்பு.
இறையாட்சிப்
பணியில் நம்மையே நாம் இணைத்துக்கொள்ளும்போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வு நமக்குத் தேவை. இயேசு தம் சமூக மக்களின் வாழ்வுநிலையையும், மக்களை அடிமைப்படுத்திய உயர்குடியினரின் அரசியல் மற்றும் சமய ஆதிக்கத்தையும் நன்கு அறிந்திருந்தார். அடக்குமுறையால் வசூலிக்கப்பட்ட ஆலய வரியும் மக்கள் வறுமையில் வாட சிலர் மட்டும் வளமையில் வாழ்வதன் பின்னணியைத் தெரிந்திருந்தார். தம் சமூகத்தில் அரசியலும் ஆன்மிகமும் எவ்வாறு மக்களை ஏய்ப்பதிலும் ஏமாற்றுவதிலும் கைகோர்த்துச் சென்றன என்பதை அவர் அறியாமல் இல்லை. தம் சமூகத்தைப் பற்றிய ஆய்வும், சமூகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விழிப்புணர்வுமே இயேசுவின் இறையாட்சிப் பணிக்குக் கூர்மை தந்தன எனலாம். இயேசு தாம் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்ததோடு நின்றுவிடாமல் அல்லது போதனையோடு விட்டுவிடாமல் தம் மக்கள்மீது கொண்ட மட்டற்ற அன்பினாலும் கரிசனையினாலும் ஆர்வத்தோடு பணிசெய்ய முன்வருகிறார்.
ஆன்மிகம்
என்ற போர்வையில் தங்கள் போலித் தன்மையை மறைத்து, மக்களைத் தவறான வழியில் நடத்திய சமயத் தலைவர்களை எதிர்ப்பதன் விளைவுகளையும் அவர் தெரிந்திருந்தார். இருப்பினும், இறையாட்சிப் பணி என்பது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பதால், வேறுபாடு பாராமல் அனைவரும் வாழ்வு பெற உழைக்க முன்வருகிறார். வறுமையும் ஏழ்மையும் அகன்று, நீதியும் உண்மையும் உயர்ந்து, எங்கும் சமத்துவம் ஓங்கச் செய்வதே இயேசுவின் இறையாட்சிக் கனவு. தாம் சுமக்கும் கனவைத் தனித்து ஆற்றிட விரும்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள் நடுவிலிருந்து கரம்கோர்க்க சிலரை இப்பணிக்கென அழைக்கிறார். அவருடைய அழைப்பில் ஆடம்பரம் இல்லை; ஆர்ப்பாட்டம் இல்லை. சமூகத்தின் கடைநிலையிலிருந்து அழைக்கப்பட்டவர்கள் அவர்களைப்போலக் கடைநிலையில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்ந்து, அவர்கள் உயர்வுக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. இயேசுவின் இறையாட்சிப் பணிக்காக அழைக்கப்பட்டவர்களும் தியாகத்தோடு உழைத்தனர்.
இன்று
நாம் எவ்வாறு இறையாட்சிப் பணியைத் தொடர முடியும்? கிறித்தவ வாழ்வின் இரு முக்கியக் கூறுகள்: 1. மனமாற்றம், 2. இயேசுவைப் பின்தொடர்தல். இயேசுவின் மீது கொண்ட அளவற்ற அன்பால் நாம் அவரைப் பின்செல்ல ஆரம்பித்தால் நம் வாழ்வில் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். இயேசுவின் இறையாட்சிக் கனவின் இலட்சியமே பிளவுகள் நீக்கி, பிரிவினை களைந்து, ஒன்றிணைந்து வாழ்வதுதான். ஆனால், இன்று சாதி, மதம், இனம், மொழி, வசதி, படிப்பு எனப் பல்வேறு காரணிகளால் பிளவுபட்டு வாழ்கிறோம். திரு அவைக்குள் இருக்கும் சாதியப் பிளவுகளையும் மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே இன்றைய இரண்டாம் வாசகத்தில், இயேசுவின் பெயரால் ஒன்றாய் வாழக் கேட்டுக்கொள்கிறார் பவுல். கிறிஸ்துவின் மனநிலையை (பிலி 2:5) எல்லாரும் கொண்டிருந்து, அவரில் ஒன்றாய் வாழ்வதால் (2கொரி 5:17) ஒற்றுமை நிலைக்கும் என்கிறார். கிறித்தவ ஒன்றிப்பும் மதநல்லிணக்கமும் காலத்தின் கட்டாயம்.
பிளவை
ஏற்படுத்துபவன் அலகை; நம்மை இணைத்து வைப்பவர் கடவுள். பிளவுபட்டால் நாம் பலவீனர்கள்; ஒன்றுபட்டால் நாம் அசைக்க முடியாதவர்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஒத்தக் கருத்துடையவர்களாய் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாக இயேசுவைப் பின்தொடர முயல்வோம். இறைவார்த்தை ஞாயிறைக் கொண்டாடும் இன்று, இறைவார்த்தை என்பது வாசிக்கப்படுவதற்காக அல்ல; வாழப்படுவதற்காக என்பதை உணர்ந்து இறையாட்சியின் நிறைசாட்சியாக நித்தமும் வாழ்ந்து இயேசுவின் பணியாளர்களாய் மாறுவோம்.
இந்தச் சமூகத்தில் ஒருவர், பொதுவாக அவரின் அடையாளங்கள், பண்பு, குடும்பப் பின்னணி இவற்றின் மூலமாக அறிமுகமாகிறார். சில வேளைகளில் ஒரு மனிதரை நாம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய அதிகாரம், பதவி, வலிமை, சாதனை இவற்றைக் கூறி அறிமுகப்படுத்துகிறோம். ஆனால், கடவுள் தம்மை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திய விதம் முற்றிலும் மாறுபட்டது. இயேசுவைத் திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்தும்போது, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்று அறிமுகப்படுத்துகிறார். இங்கே இயேசு ஓர் அரசராக அல்ல; ஒரு போர்வீரராக அல்ல; மாறாக, பலியிடப்படும் செம்மறியாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். இதுவே, கிறித்தவ நம்பிக்கையின் மைய உண்மை.
கடந்த
இரு வாரங்களாக, ஆண்டவருடைய திருக்காட்சி மற்றும் ஆண்டவருடைய திருமுழுக்கு ஆகிய இரு நிகழ்வுகள் வழியே நமக்கு அறிமுகமான இயேசு, இன்று ‘உலகத்தின் பாவத்தைப் போக்கும் செம்மறியாக’ அறிமுகமாகிறார்.
இந்த அறிமுகம் யோவான் நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது.
இயேசு
தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” எனச்
சுட்டிக்காட்டுகிறார். ‘ஆட்டுக்குட்டி’ என்ற
சொல்லில் பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. இவை மூன்றும் இயேசுவுக்கு மிகவும் பொருந்திப்போவதை அறியமுடிகிறது. திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டிய “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்ற
கூற்று மாசுமரு வற்றதாய் மீட்புக்காக இரத்தம் சிந்திய (விப 12:5) ஆட்டினை நினைவூட்டுகிறது. ஆட்டுக்குட்டி,
செம்மறியாட்டுக்குட்டி
என்பது யோவான் நற் செய்தியில் ஒரு முக்கியமான அடையாளம். ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்பதைப்
பலவிதமாகப் புரிந்துகொள்ளலாம். இச்சொற்றொடருக்கு இருவேறு பொருள்கள் உள்ளன: 1. ஆட்டுக்குட்டி, 2. இறைவனின் ஊழியன்.
“இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்பதை
இஸ்ரயேல் மக்களின் மீட்புக்குக் காரணமாய் இருந்த மாசுமருவற்றதாக, மீட்புக்காக இரத்தம் சிந்திய பாஸ்கா ஆடாக (விப 12:5,46; யோவா 19:36; 1பேது 1:8,18,19; திவெ 5:9), மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்து நகருக்குப் புறம்பே துரத்தப்பட்டுக் கொல்லப்படும் (லேவி 16:20) பாவப் பரிகார ஆடாக (தொநூ 9:6; எபி 9:6), மக்கபேயர் காலத்திலிருந்தே கொம்புடன் தோன்றும் ஆடு வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது போன்று, இயேசுவும் ‘இதோ இறைவனின் வெற்றி’ எனும் பொருளில் திருவெளிப்பாட்டு ஆடாக (திவெ 7:17; 17:14) அல்லது ஒவ்வொரு நாளும் திருப்பீடத்தில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகப் புரிந்துகொள்ளலாம்.
‘இதோ! இறைவனின் ஆட்டுக்குட்டி’ என்பதை
‘இதோ! இறைவனின் ஊழியன்’ என்றும் சில திருவிவிலிய அறிஞர்கள் மொழிபெயர்க்கின்றனர். இறை ஊழியர் கொடுமையாக நடத்தப்பட்டார்; இழுத்துச் செல்லப்பட்டார்; கைது செய்யப்பட்டார்; செம்மறிபோல் வாய் திறக்கவில்லை (எசா 53:7). இறை ஊழியர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார், தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் (எசா 53:4,5) எனும் கூற்றுகள் இயேசுவுக்கு முற்றிலும் பொருந்திப் போகிறது. எனவேதான், திருமுழுக்கு யோவான் இயேசுவை ‘உலகத்தின் பாவங்களைப் போக்கும் செம்மறி’ என அறிமுகப்படுத்துகிறார்.
இன்றைய
முதல் வாசகம் உலகிற்கு மீட்பைக் கொண்டுவந்த கடவுளின் ஊழியர் (கடவுளின் ஆட்டுக்குட்டி) இயேசுவே என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பாடலாக அமைகிறது. இவ்வாசகப் பகுதி இரண்டாவது ‘ஆண்டவரின் ஊழியர் பாடல்’ என அறியப்படுகிறது. இப்பாடல் ‘இஸ்ரயேலை’ ஆண்டவரின்
ஊழியராகக் காட்டுகிறது (49:3). இந்த இஸ்ரயேல் என்போர் ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இஸ்ரயேலரைக் குறிக்கலாம். இருப்பினும், இப்பாடலின் கருத்துகள் இயேசுவோடு ஒன்றிப் போவதைப் பார்க்கமுடிகிறது. ‘இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி’
(லூக் 2:32); அவர் தம்மையே வெறுமையாக்கி, கடவுளால் மாட்சிப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலுள்ள ஊழியர் (பிலி 2:8). இவ்வாறு இயேசு ஓர் உண்மையான இறை ஊழியராக வெளிப்படுகிறார். சிதறிக் கிடக்கும் (எசா 49:5) இஸ்ரயேல் மக்கள்மீது இரக்கம் கொண்டு ஆண்டவர் அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பார்; அவர்கள்மீது கொண்டுள்ள அன்பை அவர் சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும், எதிரிகளை வென்று அவர்களுக்கு விடுதலை வழங்குவதிலும், அவர்களுக்குப் புதுவாழ்வு அளிப்பதிலும் வெளிப்படுத்துவார். அவரே முன்னின்று அதைச் செய்வார் என்ற உண்மையை இது கூறுகிறது.
இன்றைய
முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் ‘இயேசுவே இறை ஊழியர்-கடவுளின் ஆட்டுக்குட்டி’ என
அறிவிக்கும் வேளையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவை ‘அனைவருக்கும் ஆண்டவர்’ என உறுதிப்பட அறிக்கையிடுகின்றார்.
மேலும், இயேசுவின் திருத்தூதனாகத் தன்னை அடையாளப்படுத்தும் பவுல், அவருடைய பதிலாளாக இருந்து அவரை அறிக்கையிடுவதும் சான்று பகர்வதும் ஒவ்வோர் ஊழியருடைய கடமையாக இருக்கிறது எனப் பணிக்கிறார்.
உரோமை
மதங்களும் மற்றும் பல உரோமைய கடவுள்களின்
வழிபாடுகளும் கொரிந்தில் காணப்பட்ட வேளையில், கொரிந்து நகரம் ‘கடவுளின் திரு அவை’
(1கொரி 1:1) என்கிறார் பவுல். கொரிந்து திரு அவை கிறிஸ்துவில் புனிதமாக்கப்பட்டுள்ளது என்று வரைவிலக்கணம் கொடுக்கிறார். எனவே, திரு அவையைப் புனிதமாக்குவது எவருடைய மனித ஆற்றலாலுமல்ல; மாறாக, இயேசுவின் ஆற்றலால் என்பது இங்கே புலப்படுகிறது.
இறுதியாக,
ஆட்டுக்குட்டியாக அறிமுகமாகும் கடவுள் தாழ்ச்சியின், தியாகத்தின், அன்பின் ஆட்டுக்குட்டியாகச் சான்றுபகர்ந்து வாழ நம்மை அழைக்கிறார். தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று கூறுவதற்கு வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி மட்டும் போதாது; தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றிய தெளிவும் தேவை. இத்தகைய தெளிவும் நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் போலியான தாழ்ச்சி தெரியும். தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை இயேசுவின் பக்கம் திருப்பி, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்றார் திருமுழுக்கு யோவான்.
ஆட்டுக்குட்டி
பலவீனத்தின் அடையாளம் போலத் தோன்றலாம்; ஆனால், அதில் மறைந்திருப்பது அன்பின் மிகப்பெரிய வலிமை. இயேசு எதிர்த்துப் போராடவில்லை, பழிவாங்கவில்லை, குரல் எழுப்பி தம்மை நிரூபிக்கவில்லை. மாறாக, அமைதியாகச் சிலுவையை ஏற்றுக்கொண்டார். நம் வாழ்க்கையில் நாம் எத்தனை முறை எதிர்ப்பதையே வலிமை என்று எண்ணுகிறோம்? பழிவாங்குவதையே நீதியாகக் கருதுகிறோம்? ஆட்டுக்குட்டியாக வந்த கடவுள் நமக்கு உணர்த்தும் முதல் பாடம் ‘பணிவே உண்மையான வலிமை’ என்பதுதான்.
இரண்டாவதாக,
இயேசுவைச் சுட்டிக்காட்டும் திருமுழுக்கு யோவான் “இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” (யோவா
1:29-30) எனக் குறிப்பிடுகிறார். அதாவது, பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரையே கொடுக்கும் செம்மறி இயேசுவே (1பேது 1:18,19). ஆட்டுக்குட்டியாம் இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்பதாலே அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் ஆகிறார். அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் (எசா 53:7). ஆகவே, நாம் எந்த அளவிற்குப் பிறருக்காகத் தியாகம் செய்கிறோம்? நம் நேரம், நம் வசதி, நம் ஆறுதல் பிறரின் வாழ்க்கைக்காக உடைக்கப்படுகிறதா? ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள் நமக்கு உணர்த்தும் மற்றொரு பாடம் தியாகம் என்பது தனக்காக மட்டும் வாழ்வதில் அல்ல; பிறருக்காக வாழ்வதிலும் அடங்கியுள்ளது என்பதுதான்.
மூன்றாவதாக,
ஆட்டுக்குட்டியாம் இயேசு நமக்கு அன்பின் முகமாக அறிமுகமாகிறார். பிரச்சினைகளால், பல்வேறு சிக்கல்களால் கசப்புற்று வாழ்பவர்களுக்கு, “உங்களை நான் மறக்கவில்லை, உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன், உங்களை நான் அன்பு செய்கின்றேன்” (எசா
49:15-16) என்று கூறி, அன்பின் அடையாளமாக அவர் இருக்கிறார்.
அன்பிலேதான்
தாழ்ச்சியும் தியாகமும் இணைந்திருக்கிறது. ஆகவே, நாம் சுமந்து கொண்டிருக்கும் கோபம், வெறுப்பு, பழைய காயங்கள் ஆகியவற்றைக் களைந்து ஆட்டுக்குட்டியாக நம் இதயத்தில் வந்துள்ள இயேசுவுக்கு அன்பின் சாட்சிகளாக, தியாகத்தின் உருவாக, பிறர் வாழ்வில் ஓர் உந்துசக்தியாக மாறுவோம்.
நாம் வாழும் சமூகத்தில் அநீதிகள் என்பது அரிதான நிகழ்வுகளல்ல; அவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. பசியால் வாடும் மனிதரின் அலட்சியம், அதிகாரத்தின் பெயரால் நிகழும் அத்துமீறல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஏழைகளின் உரிமைகள் மறுக்கப்படுதல், உண்மை பேசுபவர்களின் குரல் அடக்கப்படுதல், புலம்பெயர்ந்தோர் தாக்கப்படுதல், போதை கலாச்சாரச் சீரழிவு... என இவை அனைத்தும் நம்மைச் சுற்றி தினந்தோறும் நடைபெறும் அநீதியான செயல்களின் வெளிப்பாடுகளாகும். பல நேரங்களில் இவற்றைக் காண்கிறோம்; ஆனால், பழகிப்போன மனநிலையால், பயத்தால் அல்லது பொறுப்பற்ற தன்மையால் அமைதியாகக் கடந்து செல்கிறோம்.
அநீதி
நிகழும் இடங்களில் மட்டுமல்ல, அதைக் கண்டும் மௌனம் காக்கும் நம்மிடமும் அதன் வேர்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. ‘இது நம்முடைய பிரச்சினை அல்ல’ என்ற மனப்பாங்கு சமூகத்தின் மனிதநேயத்தை மெல்ல மெல்ல நீர்த்துப் போகச் செய்கிறது. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காத ஒவ்வொரு தருணமும், அது மேலும் வலுப்பெற நாமே வழிவகுக்கிறோம்.
நீதி
இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? பொதுவாக, வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும் - செல்வர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம்வேண்டும்; ஆட்சியாளர்கள் மாற வேண்டும்; இது மாறவேண்டும்; அது மாறவேண்டும்... என்ற பட்டியலைத் தயாரித்து, நம்மில் பலர் காத்திருக்கிறோம். அதேவேளையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றங்கள் தேவை என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெறும் வெளி மாற்றங்களால் எவ்விதப் பயனும் நிகழப்போவதில்லை.
மகாத்மா
காந்தியின் ஒரு வாசகம் இவ்வாறு அமைகிறது: “நீங்கள் இந்த உலகத்தில் என்ன மாற்றத்தைக் காண விரும்புகிறீர்களோ, அதைப்போல நீங்களும் மாறியிருக்கவேண்டும்” (Be the change that you wish to see in the world). அப்படி மாறாவிட்டால் தார்மிகமாக அவர்கள் பேசத் தகுதியற்றவர்களாகிறார்கள்.
‘இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும்? என்னவெல்லாம் மாறவேண்டும்?’ என்று அதிகம் பேர் பேசுகிறார்கள். ஆனால், அந்த மாற்றத்தை அவர்கள் உள்வாங்கி மாறியிருக்கிறார்களா என்றால் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.
இன்று
நாம் அன்றாடம் இவ்வுலகில் காணும் அநீதியான செயல்கள் அனைத்துமே, மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தாம். உள்ளத்தில் உருவாகும் இந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு மனமாற்றம் அவசியம். மனமாற்றத்தின் வழியே கலாச்சார மாற்றத்தையும், அவற்றின் விளைவாக இன்னும் பல உன்னத மாற்றங்களையும்
கொணர்வதே தம் பணி, தம் வாழ்வு என்பதைக் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்தார் இயேசு. மாற்றங்கள் மேலிருந்து அல்ல; மாறாக, கீழிருந்து அதாவது, மக்களிடமிருந்து தொடங்கவேண்டும் என்பதைத் தெளிவாக்க தம்மையே மக்களில் ஒருவராகக் கரைத்துக்கொண்டார். தம் பணிவாழ்வின் முதல் அடியை யோர்தானில் எடுத்துவைத்தார். அதுதான் அவர் பெற்ற திருமுழுக்கு.
இன்று
நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். பொதுக்காலத்தின் முதல் வாரத்தைத் தொடங்குகின்றோம். மனிதகுலத்தை மீட்க இறைவனுக்கு எத்தனையோ பல வழிகள் இருந்திருக்கும்.
வானிலிருந்த வண்ணம் அவர் மக்களைக் காக்க வழியிருந்தும், இயேசு நம்மில் ஒருவராகத் தம்மையே இணைத்துக்கொண்டார். பாவிகளோடு இருக்க விரும்பி அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல் மேலிருந்துகொண்டே இயேசு நம்மை மீட்க விரும்பவில்லை; மாறாக, பாவங்களைத் தம்மீது சுமந்துகொண்டு நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் என்பதை இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் காட்டுகிறது. இயேசு தண்ணீருக்குள் இறங்குமுன்னரே மக்கள் கூட்டத்திற்குள் இறங்கியது-பாவம் தவிர மற்றனைத்திலும் அவர் மனித உருவெடுத்திருந்தார் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.
பாவிகளோடு
தம் அருகாமையை, இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசுவின்மீது தூய ஆவியார் இறங்கி வந்ததும் வானத்திலிருந்து, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; அவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத்
3:17) என்று தந்தையின் குரலொலியால் அவர் கடவுளின் மகனாக உலகிற்கு அறிவிக்கப்படுகிறார். இறைத்தந்தை தமது முகம் மற்றும் குரல் வழியாகத் தம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துகின்றார். அவரது முகம் இணக்கமான உறவையும், குரல் மனித நேயத்தையும் வெளிப்படுத்துகின்றன. இறைத்தந்தையின் முகத்தையும் குரலையும் இன்றைய விழாவில் நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அவரது குரலுக்குச் செவிசாய்த்து, தந்தையின் கருணையின் முகத்தை இயேசுவிலும் பிறரிலும் கண்டுகொண்டு மக்களின் நல்வாழ்விற்காகப் பணியாற்றிய பலநூறு நல்ல உள்ளங்களுள் ஒருவராக அறியப்படுபவர் புனித தமியான்.
1850-ஆம் ஆண்டு,
ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அத்தீவில் ஒரு சிற்றாலயத்தை நிறுவுவதற்கென இளம் அருள்பணியாளர் தமியான் ஆயரால் அனுப்பப்பட்டார். தன் 33-வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம் அருள்பணியாளர் தமியான், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு அந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார்.
ஆயரின்
அனுமதியுடன் அத்தீவில் தங்கிய அருள்பணியாளர் தமியான் விரைவில் அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ஒருசில மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர் திருப்பலி நிறைவேற்றும்போது, ‘தொழுநோயாளிகளாகிய நாம்’ என்று அவர்களோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.
ஐந்தாண்டுகள் தொழுநோயாளியாக அவர்கள் நடுவே உழைத்துவந்த அவர், 1889, ஏப்ரல் 15-ஆம் தேதி தன் 49-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
தம்மை
முன்னிலைப்படுத்தாமல்,
முப்பது ஆண்டுகள் சாதாரண ஒரு வாழ்வை வாழ்ந்த இயேசு, மூன்று ஆண்டுகளே பொதுவாழ்வில் ஈடுபட்டார். இயேசுவின் பொதுவாழ்வு மற்றும் பணியின் தொடக்கமாக அமைந்திருந்தது அவரது திருமுழுக்கு. இயேசு தம் திருமுழுக்கை யோர்தான் நதியில் தனியே பெறவில்லை; மக்களோடு மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவு மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்வித்தன. இயேசு யோர்தான் நதியில் மக்களோடு மக்களாய் தம்மைக் கரைத்துக் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம், தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை. இயேசுவும் தம் மைந்தனுக்குரிய தம் பணியைச் செய்யும் பணியாளருக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சொற்களாக ஒலிக்கின்றன. “இதோ, என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது...” (எசா 42:1-4).
இயேசுவின்
திருமுழுக்கு பல்வேறு சிந்தனைகளை இன்று நமக்கு விட்டுச்செல்கின்றன. முதலில், நாம் இயேசுவோடு இணைந்து பணியாற்ற வேண்டியதைக் குறித்து நிற்கிறது. சமூகத்தில் நிலவி வரும் அநீதி அமைப்புகளின் தொடர் செயல்பாடுகளுக்குத் தாமும் பொறுப்பேற்கவேண்டும் என்பதன் வெளிப்பாடாக இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உழைப்பதும், நமக்கான சமூகப் பொறுப்புகளை ஏற்பதும் தேவையானது என்பதே இயேசுவின் திருமுழுக்கு நமக்கு உணர்த்தும் பாடம். இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கு, நம் திருமுழுக்கின் வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டைப் புதுப்பிக்க உதவுகிறது. இயேசுவைப் போல நாம் ஒருவர் மற்றவரது சுமைகளைப் பகிரவேண்டும் எனவும், கருணையுடன் ஒருவர் மற்றவருக்கு உதவவேண்டும் எனவும் இயேசுவின் சீடர்களாகிய நாமும் உடன் வாழ்பவர்கள், திரு அவை மற்றும் சமூகத்துடன் நீதியைக் கடைப்பிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
நிறைவாக,
மக்களை நல்லவர்-கெட்டவர் என்று பிரித்து கடுமையாகத் தீர்ப்பளித்துக் கண்டனம் செய்பவர்களைப்போல் அல்லாமல், உடன் வாழ்பவர்களின் காயங்கள் மற்றும் பலவீனங்களைக் கருணையுடன் பகிர்ந்துகொள்பவர்களாக, நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை உணர்ந்து எல்லாரும் அவர் அன்பில் வாழ முயற்சி செய்வோம். இறைத்திட்டத்தை மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டிய இயேசுவைப் போன்று சமூக மாற்றத்திற்காக உழைக்க முன்வருவோம்.
இன்று நாம் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழாவை ‘மூன்று அரசர்கள் திருநாள்’ என்றும், ‘மூன்று ஞானிகள் திருநாள்’ என்றும் நாம் அழைக்கின்றோம். கீழ்த்திசை ஞானிகள் மெசியாவைத் தேடிவந்து வணங்கிய நாள் இந்த நாள். ‘இறைவனின் வெளிப்பாடு ஒரு சிலருக்கானதல்ல; இனம், சமயம், மொழி, பண்பாடு என அனைத்து எல்லைகளையும் கடந்து, மெசியா அனைத்துலக மக்களுக்குமானவர்’ என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இது. இவ்விழாவைக் குறித்துத் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடும்போது, “திருக்காட்சிப் பெருவிழா என்பது கிறிஸ்துவின் பிறப்பு என்ற மறையுண்மையை உலகறியச் செய்த ஒரு நிகழ்வு” என்றும், “கிறிஸ்து கொணர்ந்த மீட்பு, எவ்வித எல்லையுமின்றி அனைவருக்குமானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு,
கிறித்தவர்களின் கடவுள் மட்டுமல்லர்; அவர் அனைவருக்குமான கடவுள். அவர் அனைவரையும் அன்பு செய்யும் கடவுள். அவர் அனைவரையும் மீட்க வந்த மெசியா. அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டுப் பிரித்து, அதனால் மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை.
கடவுள் எல்லாருக்குமான தந்தை என்பதே இன்றைய விழா நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடம். இன்றைய வாசகங்கள் அனைத்திலும் இதே பாடம் இழையோடுவதைக் காணமுடிகிறது.
இன்றைய
முதல் வாசகத்தில், ‘நாடு கடத்தப்பட்டு நாலாப்பக்கமும் சிதறிக் கிடக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒன்றுகூட்டப்படுவர்; அனைவரும் எருசலேமுக்குக் கூட்டி வரப்படுவர்; அவர்கள் இழந்த மேன்மையை மீண்டும் அடைவர்; ஆண்டவரே முன்னின்று இதைச் செய்வார்’
என்ற நம்பிக்கை செய்தியைத் தருகிறார் இறைவாக்கினர் எசாயா. மேலும், ‘ஆண்டவருடைய மாட்சி எருசலேம் மீது ஒளிரும்போது எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் எருசலேமை நோக்கி வருவர்; எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவர்; எருசலேம் செல்வங்களால் நிறையும்’
என்கிறார். இவ்வாசகத்தில் “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்”
(எசா 60:3) எனும் கூற்று, கடவுள் எல்லாருக்குமானவர் என்பதை நேரடியாகவே குறிப்பிடுகின்றது.
இரண்டாம்
வாசகத்தில், பவுல் எபேசு திரு அவைக்கு அறிவித்த மறைபொருள், நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளராகவும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள் (எபே 3:6). இந்த ஒன்றிணைப்பை உடன் உரிமையாளர்கள், ஒரே உடலின் உறுப்பினர்கள், உடன் பங்காளிகள் என்ற வார்த்தைகளில் விளக்கி, பிற இனத்தாரும் - யூதரும் இனி வெவ்வேறு நாட்டினர், சமயத்தினர், இனத்தினர் அல்லர்; இரு இனங்களும் வேறுபாடற்ற ஒரே சமூகமாகக் கிறிஸ்து வழியாக மாறிவிட்டது எனப் பிற இனத்தாருக்குக் கிடைத்த நலன்களை எடுத்துரைக்கின்றார் பவுல்.
நற்செய்தியில்,
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கின்றோம்” (மத்
2:1-2) என்று ஞானிகள் எருசலேமுக்குப் பயணம் மேற்கொண்டதை வாசிக்கிறோம். யார் இந்த ஞானிகள்? இவர்கள் எத்தனை பேர்? இவர்களின் தொழில் என்ன? எங்கிருந்து வந்தவர்கள்? ஏன் வந்தார்கள்? போன்ற கேள்விகளுக்குச் சரியான திருவிவிலிய ஆதாரம் இல்லை. அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள் பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மூவராக இருக்கக்கூடும் என்றும், மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்பதே அவர்கள் பெயர்கள் என்றும் பாரம்பரிய மரபு கூறுகின்றது. மேலும், ஞானிகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ‘மாஜாய்’
(Magi) என்பது
பாரசீகர்களைக் குறிக்கலாம் என்றும், அவர்கள் விண் ஆய்வாளர்களாக இருப்பதால் பாபிலோனியர்களாக இருக்கும் என்றும் இயேசுவுக்குக் கொண்டு வந்த பரிசுப்பொருள்களின் அடிப்படையில் அவர்கள் அராபிய அல்லது சிரியாவின் பாலைநிலங்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மேலும், “கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள்” (மத்
2:1) என்பது பிற இனத்தாரைக் குறிப்பதாகவே கொள்ளலாம். அதாவது, யூதர்களுக்குக் கிழக்குப் பகுதி என்பது யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதியைக் குறிக்கிறது. இப்பகுதி எப்போதுமே பிற இனத்தார் பகுதியையே குறித்து வந்தது. எனவே, ஞானிகள் என்போர் பிற இனத்தார், தெரிந்துகொள்ளப்படாதவர்கள்,
திருவிவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களுக்கும் இயேசுவின் திருக்காட்சி அருளப்படுகின்றது என்பது யூதர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி.
வானதூதர்
வழியாகவும், எரியும் புதரிலும் தங்களுடன் பேசி, உறவாடி, உடன்படிக்கை ஏற்படுத்திய கடவுளைத் தங்களுடைய உடமையாக்க முயன்றனர் யூதர்கள். அனைவரும் கடவுளுடைய பிள்ளைகள் என்பது அவர்களுக்குக் கசப்பாகவே இருந்தது. அவர்கள் பிற இனத்தாரைப் புறக்கணித்தனர்; எரிநரகத்திற்குரியவர்கள் எனக் கருதினர். “நீங்களே எல்லா மக்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்” (விப
19:5), “நீங்கள் மக்களாய் இருப்பீர்கள், நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்”
(எரே 30:22) போன்ற வாக்குறுதிகளைத் தங்களுக்கே உரிய தனியுடைமையாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், உன்னதக் கடவுளின் மகனாக உதித்தவரின் பிறப்பைத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் தெரிந்துகொள்வதற்கு முன்பே கீழ்த்திசை ஞானிகள் அறிந்துகொண்டதுதான் கடவுளின் திருவுளம்.
இம்மானுவேலாகப்
பிறந்தவர் (மத் 1:23) யூத இனத்திற்கான தனியுடைமை அல்ல; எல்லா மக்களுக்கும் உரிய பொதுவுடைமை. மீட்பு யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி அழைப்பு அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்று போதித்தார் பேதுரு (திப 10). இதைப் புரிந்துகொண்ட பவுல், ‘பிற இனத்தாரும் இயேசுவின் உடலின் உறுப்பினராகிறார்கள்’ என்று
கூறினார் (எபே 3:6). திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய மூவேளைச் செபவுரையில், “கிறிஸ்துவின் ஒளியை நாம் வரவேற்பதன் அடையாளமாக, அவரை நமது தனிப்பட்ட உரிமைச் சொத்தாகக் கருதாமல், அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் கடமையை நாம் பெற்றுள்ளோம்” எனக்
கூறியுள்ளார்
(06.01.2021).
இன்றைய
மதவாத அரசியல் சூழலில், கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்; அவர் அனைவருக்குமான தந்தை என்பது கருத்தியலாகவே நிற்கின்றது. கடவுள் எல்லாருக்கும் சொந்தம் என்று எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தானே மதங்களாலும் மார்க்கங்களாலும் மனிதர்கள் பிரிந்தே இருக்கின்றனர்! கடவுளை இதயத்தால் வழிபடும் மனிதர்கள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மதவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இச்செயல் கடவுளின் இயல்புக்கே முரணானது. அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதே இறைமை. தம்மைத் தேடும் அனைவருக்குமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். அன்பும் அமைதியும் கடவுளுக்கே உரித்தானவை.
கீழ்த்திசை
ஞானிகளின் தேடல் நமக்குத் தரும் அழுத்தமான அழைப்பு சமயம், சாதி, மொழி, இனம் - இவற்றால் எழுகின்ற பிணக்குகளைக் களைந்து ஒருவர் மற்றவரைச் சகோதர மனப்பான்மையோடு நடத்தவேண்டும் என்பதுதான். இதுதான் தந்தைக்குரிய விருப்பமாகவும் இருக்கமுடியும். ஆனால், ஏன் மானுட மனம் இன்னும் ஒன்றாகச் சங்கமிக்கவில்லை? மனிதகுலத்தோடும் மனிதகுல வரலாற்றோடும் நெருங்கி இணைக்கப்பெற்றுள்ள திரு அவையிலும் பிளவுகள் இல்லாமல் இல்லை. வெறுப்புகளுக்கும் பிரிவினைகளுக்கும் கிறித்தவர்களாகிய நாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், மூன்று நிலைகளில் நம் மனத்தை நிலைநிறுத்த வேண்டும். அவை 1. சமநிலை, 2. ஏற்புநிலை, 3. துணிவுநிலை.
இறைவனின்
வெளிப்பாட்டில் அனைவரும் சமம் என்பதற்கு மாட்டுத்தொழுவம் ஒரு சான்று. சமநிலையில் நுண்மதி கொண்ட ஞானிகளும், கடைநிலையில் வாழும் இடையர்களும் பிறந்த பாலன் இயேசுவைச் சமநிலையில் காண்கின்றனர். நீண்ட மற்றும் கடினமான பயணத்திற்குப் பிறகு, குழந்தை இயேசுவைக் கண்ட ஞானிகள், அக்குழந்தை தாங்கள் கற்பனை செய்த விதத்தில் அல்ல; மாறாக, அவர் எளியவராகவும் ஏழையாகவும் இருக்கிறார் என்ற நிலையிலும் அவரை மீட்பராக ஏற்றுக்கொள்கின்றனர். கடவுளை ஏற்றதால் உள்ளும் புறமும் வாழ்வில் மாற்றம் பெற்ற அவர்கள் ‘கடவுள் எல்லாருக்குமான தந்தை’ எனும் பேருண்மையைத் துணிவுடன் அறிவிக்கத் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.
எனவே,
இன்று வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பல நேரங்களில் மறைந்திருக்கும்
ஆண்டவரை வணங்குவதற்கு இந்த ஞானிகள் நம்மைத் தூண்டுகின்றனர். கடவுளின் பெயரால் அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் உருவாக்கும் பிரிவுகளையும் பிளவுகளையும் வேரோடு களைய இவ்விழா நம்மை அழைக்கிறது. இறுதியாக, நாம் புதிய பாதையில் பயணிக்கும்போது எழும் தடைகளையும் தளர்வுகளையும் வீழ்த்தி, எல்லாருக்கும் எல்லாமும் என்றிருக்கும் இறைவனைத் துணிவுடன் உலகுக்கு அறிவிக்க நாம் புறப்படவேண்டும்.
2025-ஆம் ஆண்டு நன்றியோடு விடைபெறுகிறது. 2026-ஆம் ஆண்டு கனவுகளோடும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் புதிதாய்ப் பிறக்கின்றது. இறைவனுக்கு நன்றிகூறி இப்புதிய ஆண்டை வரவேற்போம்.
ஆண்டின்
முதல் நாள் நமக்கு மூன்று முக்கிய விழாக்களை நினைவூட்டுகின்றன. முதலில், அன்னையின்
மகிமையை எண்ணிப்பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ என்று
அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம். இரண்டாவதாக, இன்று ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளையும்;
மூன்றாவதாக, உலக அமைதி நாளையும் நினைவு கூர்கிறோம்.
ஆண்டின்
முதல் நாளான இன்று பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசிபெறுவதுபோல, நாம் நம் விண்ணக அன்னையிடம்
ஆசிபெறுவோம். அன்னை மரியா மீட்பு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் உன்னதமான உயிர்.
மனித மீட்பில் அவரது பங்களிப்பு தலைமுறைதோறும் (லூக் 1:48) நினைவுகூரப்படுகிறது. அன்னை
மரியா இறைமகன் இயேசுவின் தாயாக இருப்பதால் அவர் நமக்கும் தாயாகிறார். அவரே நம்பிக்கையின்
தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவிபுரிய எப்போதும் தயார் நிலையில்
இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு இறைவனின் ஆசிரையும் அருளையும்
பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம்பற்றித் தொடங்குவோம்.
அன்னை
மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள மதிப்பிற்குரிய தலைப்பு அல்லது பட்டம் ‘மரியா-கடவுளின்
தாய்.’ அன்னை மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள ‘மரியா கடவுளின் தாய்’, ‘மரியா என்றும் கன்னி’,
‘மரியா அமல உற்பவி’, ‘மரியாவின் விண்ணேற்பு’ ஆகிய நான்கு மறைக்கோட்பாடுகளிலும் (Dogma) மிகவும்
தொன்மையானது ‘மரியா கடவுளின் தாய்’ என்ற உயரிய பட்டம்தான். அன்னை மரியாவைக்
‘கடவுளின் தாய்’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா?
அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார்.
அன்னை மரியாவை ‘இறைவனின் தாய்’ என நாம் அழைக்கும்போது, கடவுள் மனிதகுலத்திற்கு
அருகில் உள்ளார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. காலங்களைக் கணித்து, யுகங்களை
நொடித்து அவரவர் வினையின் விளைவை அறுக்கச்செய்யும் இறைவன் நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல்
உருவெடுத்தார். ‘கடவுள் மனிதரானார்’ (யோவா 1:14), ‘கடவுள் நம்மோடு’ (மத் 1:22-23), ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர் அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்’ (பிலி 2:6,7) என்பதில்தான் அவரது பேரன்பு வெளிப்பட்டது.
எனவே, ‘மரியா கடவுளின் தாய்’ என்னும் கோட்பாடு ‘இயேசு கிறிஸ்துதாம்
உண்மையான கடவுள்’ என்பதையே வெளிப்படுத்துகிறது.
கி.பி.
4-ஆம் நூற்றாண்டிலேயே ‘மரியா கடவுளின் தாய்’ என
ஏற்றுக்கொள்வதில் திரு அவைக்குள் கருத்துமோதல்களும் பிரிவினைகளும் ஏற்பட்டன. இயேசு
கடவுளா? மனிதனா? அவரில் மனித- இறைத்தன்மைகள் இருந்தனவா? போன்ற மோதல்கள் தொடர்ந்தன.
குறிப்பாக, கான்ஸ்டாண்டி நோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியா கடவுளின்
தாய்’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
‘மனித உயிர் கடவுளை எப்படிப் பெற்றெடுக்க முடியும்? மரியா, இயேசு என்ற மனிதனின் தாய்
மட்டுமே. கடவுளின் தாய் அல்லர்’ என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான்
‘நெஸ்டோரியனிசம்’ (Nestorianism) என்று அழைக்கப்பட்டது. இந்தச் சிக்கலைத்
தீர்க்க கி.பி. 431-இல் எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் ஒன்றுகூடிய
பொதுச்சங்கம், ‘மரியா, கடவுளின் தாய்’
என உறுதிபட அறிவித்தது. ஆகவே, நாமும் அன்னை மரியாவை ‘நம் தாய்’ எனப் புகழ்ந்து பாடி இப்புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
இன்றைய
வழிபாட்டில் மிக முக்கியமாக, நாம் ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளைக் கொண்டாடுகிறோம்.
இந்த நாள் இறைவனின் தாய் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நாளாக, அதாவது, மோசேவின் சட்டப்படி
கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்தசேதனம் செய்த நாளாக, குழந்தைக்கு வானதூதர் அறிவித்தபடியே
‘இயேசு’ என்று பெயரிட்டு மகிழ்ந்த நாளாக இருக்கிறது.
இயேசு என்ற பெயருக்கு ‘கடவுள் நம்மை மீட்கின்றார், நமக்கு உதவுகின்றார், நம்மை வாழ்விக்கின்றார்,
நம்மோடு உடனிருக்கின்றார்’ என்று பொருள். இயேசு எனும் பெயர் வல்லமையுள்ள
பெயர். மண்ணகமும் விண்ணகமும் மண்டியிடும் பெயர். இப்பெயர் இயேசுவே இறைச்சாயல், ஒவ்வொருவருக்கும்
அனைவருக்குமான ஆசிர் மற்றும் உலகின் அமைதி என்ற இறைவெளிப்பாட்டின் நிறைவாகும். எனவே,
இயேசு என்ற பெயர், அவர் வாக்களித்த அமைதி (யோவா 14:27) நமக்கு உறுதியாகக் கிடைக்கும்
என்ற நம்பிக்கையை இன்று நம் உள்ளங்களில் விதைக்கிறது.
மூன்றாவதாக,
இந்த நாளை உலக அமைதி நாளாகக் கொண்டாட திரு அவை நம்மைப் பணிக்கின்றது. 1968-ஆம் ஆண்டில்
புனித திருத்தந்தை 6-ஆம் பவுல் சனவரி முதல் நாளில் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட வேண்டுமென
அழைப்புவிடுத்தார் (எண் 5). இறைவன் வழங்கிய
இந்தப் புதிய ஆண்டின் முதல் நாளான இன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகம், இறைவன்
மோசேவுக்கு வழங்கிய ஆசி, ஆரோன், அவரது புதல்வர்கள் வழியாகத் தலைமுறை, தலைமுறையாகத்
தொடர்ந்து நமக்கும் வருகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி
உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!\" (எண்
6:25,26). இன்று ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் இறைவன் நிறைவான ஆசியையும் அருளையும்
பொழிகிறார். இறையமைதியே இறைவன் நமக்கு வழங்கும் ஆசி. இந்த ஆசியை முழுமையாக மனிதர்களுக்குப்
பகிர்ந்தளிப்பதே நமது முக்கியப் பணியாகும்.
இவ்வாண்டு,
திருத்தந்தை லியோ “உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக; ஆயுதங்களற்ற அமைதியை நோக்கி...”
(யோவா 20:19) என்பதை உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளாகத் தந்துள்ளார். அவர் தன்னுடைய
செய்தியில், வன்முறை மற்றும் போரினை நிராகரித்து, அன்பு மற்றும் நீதியை அடிப்படையாகக்
கொண்ட உண்மையான அமைதியைத் தழுவ உலக அமைதி நாளானது மனிதகுலத்தை அழைக்கிறது என்றும்,
இந்த அமைதியானது ஆயுதங்களற்ற அமைதியாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். நல்லிணக்கம்,
நம்பிக்கை, அக்கறை, பரிவு மற்றும் பற்றுறுதியை உருவாக்கும் திறன் கொண்டதாக அமைதி இருக்க
வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதி
என்பது இறைவனின் கொடை. இயேசு நமக்கு வழங்கிய பிறரன்பின் முதற்கனி அமைதி. அதுவே இறைவனுடனான
நம் ஒப்புரவு அமைதி. வன்முறை மற்றும் தீமைகளின் விதையைவிட வலிமை நிறைந்தவை. உலக அமைதித்
திருநாளான இன்று அன்னை மரியின் திரு உருவின் முன்னால், அமைதியின் கொடைக்கான பரிந்துரையை
வேண்டுவோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு பாலனைப்போல், நாமும் இந்த அன்னையின்
கைகளில் குழந்தையாக உள்ளோம். இந்த அன்னையிடம் நமது தேவைகள், உலகின் தேவைகள் அனைத்தையும்
ஒப்படைப்போம். குறிப்பாக, உலகில் நீதியையும் அமைதியையும் தேடுவோர் அனைவரின் தேவைகளையும்
அவரிடம் ஒப்படைப்போம். நேர்மறை எண்ணங்களுடன் நன்மைகளை நினைத்து, நன்மைகளையே ஆற்றுவோம்.
இந்த
ஆண்டில் நமது எண்ணங்கள், நமது சொற்கள், நமது செயல்கள், நமது வாழ்வுமுறை இறைவனுக்குத்
தகுதியானவைகளாக மாறிட... இறைவனுடைய ஆசியும் அருளும், நம் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்
ஆரோக்கியம், நிறைவான மகிழ்ச்சி, உழைப்புக்கேற்ற ஊதியம், மன அமைதி, நிபந்தனையற்ற அன்பு,
உண்மையான உறவுகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்திட நாம் ஒருவர் மற்றவருக்காக
வேண்டிக்கொள்வோம். இனிமையும் பராமரிக்கும் தன்மையும் கொண்ட இத்தாய், இறைவனிடமிருந்து
மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத்தருவாராக!
இறுதியாக,
நம் இறைவன் இரக்கமும் கனிவும் உடையவர். வாக்கு மாறாதவர். முக்காலமும் கடந்து நம்மை
அன்பு செய்பவர். அவர் நமக்கு வழங்கியுள்ள அனைத்துக் கொடைகளுக்காக நன்றிகூறுவோம். இயேசுவின்
ஆதரவும், அவரது அன்பும் நமக்கு நிறைவாக உண்டு என்ற நம்பிக்கையோடு இந்தப் புதிய ஆண்டை
எதிர்கொள்வோம். இறைவனின் தாயும், நம் தாயுமான அன்னை மரியா நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
இல்லத்திலும் நாடுகளுக்கிடையிலும், அமைதி என்ற கொடையை இறைவனிடமிருந்து பெற்றுத்தருவாராக!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!