news
ஞாயிறு மறையுரை
மார்ச் 15, 2026, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு 1சாமு 16:1,6-7,10-13; எபே 5:8-14; யோவா 9:1-41 (இதயத்தைப் பார்க்கும் இறைவனும் ஒளிபெறும் இதயங்களும்

இன்று நாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறானமகிழும் ஞாயிறு (Laetare Sunday)-ஐக் கொண்டாடுகிறோம். உயிர்ப்புப் பெருவிழாவை நோக்கி நாம் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில், மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியைத் தூண்டும் ஒரு மைல்கல்லாக இந்நாள் அமைகிறது. “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1சாமு 16:7) என்ற உண்மையைச் சிந்திக்கும் வேளையில், வெளிக்கண்களால் காண்பதைக் காட்டிலும், இறைவனின் ஒளியால் அகக்கண்களைத் திறப்பதே உண்மையான மகிழ்ச்சி என்பதை இன்று உணர்கிறோம்.

இறைவனின் பார்வையை நாம் பெறவேண்டுமெனில், முதலில் நாம் உலகப் பார்வையைத் துறந்து இறைப்பார்வையை ஏந்தவேண்டும். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராக தாவீது தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வை விவரிக்கிறது. ஈசாயின் மூத்த மகன்கள் அவர்களின் தோற்றத்தாலும் உயரத்தாலும் சாமுவேல் இறைவாக்கினரைக் கவர்கிறார்கள். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே... மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை (1சாமு 16:7) என்று கூறி அவர்களை நிராகரிக்கிறார். மனிதர் கண்களைப் பார்க்கின்றனர்; கடவுள் இதயத்தைப் பார்க்கின்றார். ஈசாயின் ஏழு புதல்வர்களையும் நிராகரித்த கடவுள், இறுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைய மகன் தாவீதைத் தேர்ந்தெடுக்கிறார்.

சிறுவனாக இருந்த தாவீதிடம் அப்போது ஒரு படைத்தலைவருக்கோ அல்லது ஆட்சியாளருக்கோ உரிய மதிநுட்பமோ, மனத்துணிவோ அல்லது உலகளாவிய தகுதிகளோ இருந்திருக்கவில்லை. ஆடு மேய்க்கும் ஒரு சாதாரண சிறுவனாகவே அவர் பார்க்கப்பட்டார். ஆனால், உலகம் யாரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையோ, யாரை ஒதுக்கி வைத்ததோ, அவர்களையே இறைவன் தேர்ந்தெடுத்துத் தம் பணிக்கென அனுப்புகிறார். இதே உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியிலும் நாம் காண்கிறோம். பிறவியிலேயே பார்வையற்ற ஒரு மனிதர், சமூகத்தால்பாவிஎன்று முத்திரை குத்தப்பட்டவர்; சமூகத்தில் மிகக் கடினமான துன்பங்களுக்கு ஆளானவர்; ஆலயத்தில் நுழையத் தடை செய்யப்பட்டவர்; இரந்துண்ணும் ஓர் எளியவர். அன்று அங்கிருந்த சீடர்களும் பரிசேயர்களும் அவரை ஒரு சுமையாகவோ அல்லது பாவத்தின் அடையாளமாகவோதான் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவரை ஒதுக்கித் தள்ளாமல், கடவுளின் செயல் அவர் வழியாக வெளிப்படும் பொருட்டு அவரைத் தேர்ந்தெடுத்தார்.

தாவீதுக்கு அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர் எப்படி ஒரு புதிய ஆற்றலைப் பெற்றாரோ, அதேபோல இயேசு அந்தப் பார்வையற்றவரின் கண்களில் உமிழ்நீர் தடவி, “சிலோவாம் குளத்திற்குப் போய்க் கண்களைக் கழுவும்என்று பணித்தபோது, ஒரு புதிய படைப்பு அங்கே நிகழ்ந்தது.

பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறும் நிகழ்வில் இயேசு செய்கின்ற அடையாள முறைகள் நம் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. இயேசு உமிழ்தல், சேற்றைப் பூசுதல், கழுவுதல் போன்ற செயல்களால் நோயாளிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறார். ஏன் இவ்வளவு அடையாளங்கள்? இந்த அடையாள முறைகள் நோயாளிகளின் நம்பிக்கையைத் தூண்டி, அதை வலுப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இதனைத் திக்கிப் பேசுபவர் நலம்பெற்ற நிகழ்விலும் (மாற் 7:33-35), பெத்சாயிதாவில் பார்வையற்ற ஒருவர் பார்வை பெற்ற நிகழ்விலும் (மாற் 8:23-25) காணலாம். உமிழ்தல், சேறு பூசுதல், கைகளை வைத்தல், வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பெருமூச்சு விடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் ஒருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஊடகங்களாகச் செயல்பட்டன.

யோவான் குறிப்பிடுகின்ற சிலோவாம் குளம் ஆழமான இறையியல் சிந்தனையை நமக்குள் விதைக்கின்றது. சிலோவாம் குளம் என்பது எருசலேம் நகரின் தெற்கு எல்லையில் அமைந்திருந்த ஒரு முக்கியமான நீர்நிலையாகும். விவிலியப் பேராசிரியர் கு. எரோணிமுசு விளக்கப்படி, இக்குளத்திலிருந்துதான் கூடாரத் திருவிழாவின் தண்ணீர்ச் சடங்குகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. பொதுவாக, எருசலேம் நகருக்கு வெளியே இருந்த கெதிரோன் பள்ளத்தாக்கில்கிகோன்ஊற்றிலிருந்து மக்கள் தண்ணீர் கொண்டுவந்தனர். ஆனால், போர்க்காலங்களில், நகர் முற்றுகையிடப்பட்டிருக்கும் நேரங்களில் இவ்வூற்றுக்கு மக்களால் செல்ல முடியாததால் அரசர் எசேக்கியா (கி.மு. 716-687), சென்னாக்கிரீபு (704-681) என்னும் அசீரியப் பேரரசர் நகரை முற்றுகையிடுவார் எனத் தெரிந்ததும், 1749 அடி நீளமுள்ள கடினமான பாறையைக் குடைந்து ஒரு சுரங்கப் பாதை வழியாக நகருக்குள் இருந்த இந்தக் குளத்திற்குக் கொண்டு வந்தார். இவ்வாறு இக்குளத்திற்கு வரும் நீர்கிகோன்ஊற்றிலிருந்து தாரையாகஅனுப்பப்பட்டதால், ‘அனுப்பப்பட்டதுஎன்னும் பொருளில் இதற்குசிலோவாம்என்று பெயரிடப்பட்டது. யோவான் இயேசுவைக் குறிக்கும் வகையில் அதனைச் சற்று மாற்றிஅனுப்பப்பட்டவர்என்று பொருள் கொடுக்கிறார். இதன் மூலம் அந்தப் பார்வையற்றவர் வாழ்வு தரும் நீராகிய இயேசுவிடம் சென்று நலம் பெறுகிறார்.

குளத்தில் போய்க் கண்களைக் கழுவியதால் பார்வை பெற்றவர், அந்த நல்ல செய்தியை உலகிற்குப் பறைசாற்ற அனுப்பப்படுகிறார். யூதர்களும் பரிசேயர்களும் பல கேள்விகளைக் கேட்கின்றனர். தன்னை நலப்படுத்தியவர் யார் என்றுகூட பார்வை பெற்றவர் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால், நலம் தந்தவர் ஒரு சாதாரண ஆளாக மட்டும் இருக்க முடியாது என்பதை உணர்கிறார். தான் சந்திக்கப் போகின்ற பிரச்சினையைக்கூட உணராமல், பார்வை பெற்றவர், தனக்குப் பார்வை அளித்த அந்த ஆள்ஓர் இறைவாக்கினர் (9:17) என்று நற்செய்தி அறிவிக்கிறார். எந்த அச்சுறுத்தலுக்கும் அவர் அசையவில்லை. “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட முயல்கின்றனர் (9:34,35). இந்நிகழ்வு இயேசுவையும் யூதர்கள் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்ததை நமக்கு நினைவூட்டுகின்றது.

பார்வையற்றவர் நலமடைந்த நிகழ்வில், அவர்திரும்பி வருதல் (9:7) என்பது நாம் ஆழமாகச் சிந்திக்கவேண்டிய ஒரு முக்கியமான தருணமாகும். இயேசுவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவிய அந்த மனிதர், பார்வை பெற்றவுடன் உடனடியாகத் திரும்பி வருகிறார். பிறவியிலேயே பார்வையற்ற அவர், அதுவரை எந்த ஒரு மனிதரையும், ஏன் தனக்கு நலம் அளித்த இயேசுவைக் கூட கண்டதில்லை. இருப்பினும், இயேசுவின் தொடுதலால் புதிய ஆற்றல் பெற்ற அவர், அவரைஓர் இறைவாக்கினர் (9:17) என்று துணிவோடு அறிவிக்கிறார்.

தனக்கு வாழ்வளித்தவருக்கு நன்றி சொல்லவும், அந்தப் புனிதமான பாதங்களைக் கண்டு பணியவும் அவருடைய விழிகளும் கால்களும் விரைந்தன. தான் சந்திக்கப்போகும் சமூகப் பிரச்சினைகளையோ, அதிகாரிகளின் எதிர்ப்பையோ பற்றி அவர் கவலைப்படவில்லை; மாறாக, தான் பெற்ற மாபெரும் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும், தன்னைப்போல இருளில் இருப்பவர்களை ஒளியின் ஊற்றாகிய இயேசுவிடம் அழைத்துச் செல்லவும் அவர் துடித்தார். இவ்வாறு, பார்வை பெற்ற அந்த எளிய மனிதர், வெறும் நலம் பெற்றவராக மட்டும் நின்றுவிடாமல், கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்த நற்செய்தியாளராக உருமாறித் திரும்பி வருகிறார். ஆனால், பார்வை இருந்தும் பரிசேயர்கள் தங்கள் அகப்பார்வையை இழந்து, கண்ணிருந்தும் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர்.

பார்வை பெற்ற மனிதர் ஒளியை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கிய அதே வேளையில், புனித பவுல் எபேசியருக்கு எழுதிய இரண்டாம் வாசகம் (எபே 5:8-14) வழியாக, “ஆண்டவரோடு இணைந்து ஒளியின் மக்களாக நடங்கள்என்று நம்மை அழைக்கிறார். ‘ஒளியின் மக்கள்என்போர் இருளின் செயல்களுக்கு இடம்கொடாமல், நீதி, உண்மை இவற்றில் நிலைத்து வாழ்பவர்கள்.

இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: முதலில், இருளைக் களைந்து ஒளியைத் தழுவவேண்டும். பரிசேயர்களைப்போலச் சட்டங்கள் எனும் இருளில் சிக்கி, தங்களுக்கு முன் நின்ற மெய்யான ஒளியைக் (இயேசுவைக்) காண மறுத்தது போல, நம் அகக்கண்களை மறைத்துக்கொள்ளாமல் நம் இதயத்தில் இறைவனின் ஒளி சுடர்விட நம்மை அனுமதிப்போம். இரண்டாவது, இதயத்தால் பார்க்கும் பண்பை வளர்த்துக்கொள்வதன் வழியாக, குடும்பங்களில் நோயுற்றோரையும் முதியோரையும்பயனற்றவர்கள்என்று ஒதுக்கும்குற்ற உணர்வில்லாக் கலாச்சாரத்தைஒழித்து, அவர்களை அன்பால் தாங்கும் இதயத்தைப் பெறுவோம்.

மூன்றாவதாக, பார்வை பெற்ற மனிதன் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் இயேசுவை அறிவித்ததுபோல, நாமும் உள்ளொளி பெற்றவர்களாக நம் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் அன்பிற்குச் சாட்சிகளாக மாறுவோம். வாருங்கள், நம் இதயங்களை ஆண்டவரிடம் ஒப்படைப்போம். அவர் நம் இருளை அகற்றி, நம்மைத் தகுதியுள்ளவர்களாக மாற்றி, ஒளியின் மக்களாக உலகிற்கு அனுப்பி வைப்பார். இறைவனின் ஒளி நம் இதயங்களில் என்றென்றும் சுடர்விடட்டும்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 08, 2026, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு - விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42 (தாகம் தீர்க்கும் மெய்யான நம்பிக்கை!)

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பாலைவனப் பயணம். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஏதோ ஒரு தாகத்தோடுதான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உடல் சார்ந்த தாகத்தை ஒரு குவளைத் தண்ணீர் தீர்த்துவிடும். ஆனால், அன்பு, அமைதி, ஆற்றல் மற்றும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி அலையும் நம் உள்ளத்தின் தாகத்தை இந்த உலகப் பொருள்கள் எவற்றாலும் தீர்க்க முடியாது. நமது ஆன்மா உண்மையான அமைதிக்காகத் தாகம் கொள்கிறது.

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்றைய இறைவார்த்தைகள், நம் வாழ்வின் வறண்ட நிலங்களில்வாழ்வு தரும் தண்ணீரைதேடி அலையும் மனிதருக்கும், அந்தத் தண்ணீரை அள்ளித் தரும் இறைவனுக்கும் இடையிலான உறவை அழகுறக் காட்டுகின்றன. முணுமுணுப்பில் தொடங்கி, நம்பிக்கையில் முதிர்ச்சியடைந்து, இறுதியில் உண்மையான வழிபாட்டில் நிலைபெறுவதே இன்றைய வழிபாட்டின் மையச் செய்தி.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் தாகத்தால் தவிக்கிறார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்த கடவுளின் வல்லமையை அவர்கள் மறக்கிறார்கள். நன்றி மறந்து கடவுளைச் சோதிக்கும் விதமாக மோசேயைக் கடிந்துகொள்கின்றனர். தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லையே என்று முணுமுணுக்கின்றனர். சிலவேளைகளில் தங்கள் வெறுப்புணர்ச்சியைக் காட்டவும் முணுமுணுத்தனர். “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து அழைத்து வந்தாய்?” (விப 17:3) என்று அவர்கள் மோசேயிடம் சண்டையிடுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், தன்மீது இந்த மக்கள் கல்லெறிவார்களோ (17:4) என்று மோசேயே பயம்கொள்ளும் அளவிற்கு அவர்களின் நன்றி மறந்த நடவடிக்கைகள் இருந்தன என்பதைப் பார்க்கின்றோம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் சமூகத்தில்கல்லால் எறிந்து கொல்லுதல்என்பது மிகக் கடுமையான மற்றும் பொதுவான தண்டனையாகக் கருதப்பட்டது. இது வெறும் தண்டனை மட்டுமல்ல; தீயவர்களை அழிப்பதன் மூலம் பாவத்தைத் தங்கள் சமூகத்திலிருந்து விரட்டும் ஒரு புனிதச் செயலாகவே மக்களால் பார்க்கப்பட்டது. விபச்சாரம், தெய்வ நிந்தனை மற்றும் ஓய்வுநாளை மீறுதல் போன்ற பெரும் குற்றங்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது. திருவிவிலிய வரலாற்றில் இயேசுவின் காலத்திலும் (யோவா 8:7), திருத்தூதர் பணிகள் காலத்தில் ஸ்தேவான் போன்ற தொடக்க காலப் புனிதர்களிடமும் (திப 7:58) இத்தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், மோசே, மக்கள் தன்னை நோக்கி கற்களை வீசப்போகிறார்கள் எனும் அச்சம் மரணத்தைப் பற்றியது மட்டுமல்ல; தான் கடவுளால் கைவிடப்பட்ட ஒருபாவிஎன்று மக்கள் முத்திரைக் குத்திவிடுவார்களோ என்ற தவிப்பைப் பற்றியது. இந்த இக்கட்டான நிலையில் மோசே ஆண்டவரை நோக்கிக் கதறுகிறார் (17:4). ஆண்டவர் உடனடியாகச் செயலில் இறங்குகிறார். இது மக்களின் முணுமுணுப்பிற்காக அல்ல; மாறாக, “நான் உன்னோடு இருப்பேன் (விப 3:12) என்று தாம் மோசேக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக! எகிப்தில் நைல் நதியை அடித்து வியத்தகு செயல்களைச் செய்த அதே தடியைக் கொண்டு செல்லுமாறு ஆண்டவர் பணிக்கிறார். அந்தத் தடி, மோசே தனிமையில் இல்லை என்பதையும், கடவுளின் வல்லமை அவரோடு இருக்கிறது என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் அடையாளமாக அமைந்தது. இறுதியில், பாறை பிளந்து தண்ணீர் புறப்படுகிறது.

பிற்காலத்தில் புனித பவுல் இந்த நிகழ்வை மிக அழகாக விளக்குகிறார். அன்று பாலைவனத்தில் மக்களின் தாகத்தைத் தணிக்கப் பிளக்கப்பட்ட அந்தப் பாறை கிறிஸ்துவையே குறிக்கிறது (1கொரி 10:4). அவரே நம் ஆன்ம தாகத்தைத் தீர்க்கும் உண்மையான பாறை; அவரே நமக்கு வாழ்வளிக்கும் வற்றாத ஊற்று.

இஸ்ரயேல் மக்கள் பாறையிலிருந்து தண்ணீர் பெற்ற நிகழ்விற்கும், இன்றைய நற்செய்தியில் சமாரியப் பெண் வாழ்வு தரும் தண்ணீரைப் பெறுவதற்கும் இடையேயான ஓர் ஆழமான இறையியல் தொடர்பு, பழைய ஏற்பாட்டில் மோசே பாறையை அடித்தபோது தண்ணீர் புறப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசு தம் அன்பால் அந்தப் பெண்ணின் இதயத்தைத் தொட்டபோது, அங்கேநம்பிக்கைஎன்னும் ஆன்மிக ஊற்று புறப்படுகிறது.

அக்காலச் சூழலில் நிலவிய யூத-சமாரியப் பகைமை மற்றும் பாலினத் தடைகளைத் தகர்த்து, இயேசு அந்தப் பெண்ணிடம் உரையாடத் தொடங்குகிறார். சமாரியப் பெண்ணிற்கும் இயேசுவிற்கும் இடையிலான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல், வெறும் ஒரு கிணற்றடிச் சந்திப்பு மட்டுமல்ல; அது சமூக மற்றும் ஆன்மிகச் சுவர்களைத் தகர்த்த ஒரு பெரும் புரட்சியாகும். திருவிவிலியப் பின்னணியில் இதைக் கூர்ந்து நோக்கும்போது, பல ஆழமானஉடைத்தல்கள்அங்கே நிகழ்கின்றன. ஒரு யூத ஆடவர் பெண்ணோடு பொதுவிடத்தில் பேசுவதும், தீட்டானவர்களாகக் கருதப்பட்ட சமாரியர்களிடம் தண்ணீர் கேட்பதும் அக்காலச் சூழலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சமாரியப் பகுதிகளைப் புறக்கணித்துச் செல்லும் யூதப் பழக்கத்தையும், சமாரியர்கள் வழிபாடு குறித்துக் கொண்டிருந்த தவறான (ஐந்து கணவர்கள் - ஐந்து கடவுள்கள்) கருத்துகளையும் இயேசு தம் உரையாடலால் சுக்கு நூறாக உடைத்து, ‘ஒரே கடவுள்என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்குகிறார். வழிபாடு என்பது இடத்தைச் சார்ந்தது அல்ல; மாறாக, இறைத் தந்தையின் உண்மை இயல்புக்கு ஏற்ப அவரைஆவியோடும் உண்மையோடும் (யோவா 4:24) வழிபடுவதே என்ற புதிய ஆன்மிகப் புரிதலை அவர் நிலைநாட்டுகிறார். இதன் மூலம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரிவினைச் சுவர்களையும், தவறான வழிபாட்டு முறைகளையும் அகற்றி, இறையாட்சியின் சமத்துவப் பாதையை அவர் திறந்து காட்டுகிறார்.

இயேசு அச்சமாரியப் பெண்ணிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் (யோவா 4:8) என்று கேட்ட வேண்டுகோள், அப்பெண்ணின் இதயக் கதவைத் திறக்கும் திறவுகோலாக மாறியது. முதலில் வெறும் தாகமுள்ள சாதாரண யூதராகத் தெரிந்த இயேசு (4:9), உரையாடல் வளர வளர அவருக்கு ஒருவள்ளலாகவும்’ (4:14), பின்னர் அவரது வாழ்வின் கசப்பான உண்மைகளைச் சுட்டிக்காட்டிய போது ஓர்இறைவாக்கினராகவும் (4:19) வெளிப்படுகிறார். இறுதியில், அவரே எதிர்பார்த்திருந்தமெசியா (4:25) என்பதை அந்தப் பெண் கண்டடையும்போது, அவரது நம்பிக்கை அதன் முழுமையை எட்டுகிறது. இந்த மாற்றத்தின் உச்சக்கட்ட அடையாளமாக அவர் தன் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறார். சமூகம் தன்னை ஏளனம் செய்யும் என்று அஞ்சி, தனிமையில் தண்ணீர் எடுக்க வந்த அந்தப் பெண் (4:6), இப்போது அதே சமூகத்திடம் நற்செய்தியை அறிவிக்கும் துணிச்சல் மிக்கவராக மாறுகிறார். அப்பெண் விட்டுச் சென்ற குடம், அவரது பழைய பாவ வாழ்வு, கடந்த காலப் பயம் மற்றும் உலகப் பற்று ஆகியவற்றின் அடையாளம்.

புனித பவுல் கூறுவதுபோல, இந்த மெய்யான நம்பிக்கையே அப்பெண்ணை ஒருபோதும் ஏமாற்றாத மீட்பிற்கு அழைத்துச் சென்றது. கிறிஸ்துவின் அன்பைப் பற்றிக்கொண்ட அந்தப் பெண்ணிற்கு, உலகத் தண்ணீர் தேவையில்லாமல் போனதுபோல, உண்மையான நம்பிக்கைப் பாதையில் நடப்பவர்களுக்கு இவ்வுலகின் தற்காலிக இன்பங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. சமாரியப் பெண் கிணற்றடியில் கண்டடைந்த அந்த ஆன்மிக முதிர்ச்சியை, பவுல் ஓர் இறையியல் சட்டகமாக விவரிக்கிறார். “நாம் நம்பிக்கையினால் கடவுளுக்கு உகந்தவர்களாகியுள்ளோம் (உரோ 5:1). இது வெறும் சடங்கு சார்ந்த நம்பிக்கை அல்ல; இந்த நம்பிக்கை நம்முடைய தகுதியின் மேல் உருவானதும் அல்ல; நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார் (5:8). அந்தப் பெண் ஐந்து கணவர்களோடு வாழ்ந்து, பாவச் சூழலில் இருந்தபோதே இயேசு அவரைத் தேடி வந்து வாழ்வளித்தார்.

நிறைவாக, சமாரியப் பெண்ணின் மாற்றமும், பாலைவனத்தில் பாறை பிளக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய அன்றாட வாழ்விற்குத் தேவையான சில முக்கியமான உண்மைகளைக் கற்றுத் தருகின்றன.

முதலில் வரும்போது இஸ்ரயேல் மக்களைப் போலக் குறைகளை மட்டும் பார்க்காமல், கடந்த காலத்தில் கடவுள் செய்த நன்மைகளை நினைவு கூர்வது நம் நம்பிக்கையை வளர்க்கும். இரண்டாவதாக, சமாரியப் பெண் தன் வாழ்வின் கசப்பான உண்மைகளை இயேசுவிடம் மறைக்காமல் அறிக்கையிட்டதுபோல, நாம் நம் பலவீனங்களை ஒப்புக்கொள்ளும்போதுதான் கடவுளின் அருள் நம்முள் செயல்படும். மூன்றாவதாக, வழிபாடு என்பது சடங்கு அல்ல; அது நம் இதயத்தின் துடிப்பு. நம் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து, ஒரே இறைவனை மெய்யான நம்பிக்கையோடு வழிபடுவதே உண்மையான வழிபாடு. அந்த மெய்யான நம்பிக்கை நம் தாகத்தைத் தீர்க்கட்டும்; நம் வாழ்வைப் புதுப்பிக்கட்டும்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 01, 2026, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு - தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9 (மாற்றம் காண அழைக்கும் மலைப்பயணம்)

தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும் மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் ஆகிய உயரிய சிந்தனைகளை அசைபோட இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடந்த ஞாயிறன்று பாலைநிலத்தில் சோதனைகளைச் சந்தித்து, உருக்குலைந்த நிலையில் நின்ற இயேசுவைச் சந்தித்த நாம், இன்று தாபோர் மலையில் மாட்சிமையுடன் உருமாறி நிற்கும் இயேசுவைச் சந்திக்கிறோம்.

பாலைநிலத்தில் நாற்பது நாள்கள் நோன்பிருந்த இயேசுவிடம், ‘அதிகாரம் மற்றும் செல்வாக்குபோன்ற குறுக்கு வழிகள் மூலம் தம்மை எளிதாக உருமாற்றிக்கொள்ள முடியும் என ஆசை காட்டிய அலகையின் மாய வழிகளை மறுத்த இயேசு, பாடுகள் மற்றும் மரணம் என்ற இடர்ப்பாடுகள் நிறைந்த பாதையின் வழியாகவே உண்மையான மாட்சி பிறக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார் (மத் 16:25). இயேசுவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, மனந்தளர்ந்து போயிருந்த சீடர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும், ‘சிலுவைப்பாதையே சீடத்துவத்தின் வழிஎன்பதை உறுதிப்படுத்தவும் நிகழும் மாபெரும் அடையாளமே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் இயேசுவின் தோற்ற மாற்றம்.

மாற்றம் என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல, அது இறைவனின் விருப்பமும்கூட. மாற்றம் எப்போதும் ஒரு வலியோடுதான் தொடங்குகிறது. நமக்குப் பழகிப்போன வசதியான வாழ்வை விட்டு வெளியேறுவது கடினம் என்பதால், நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் தயங்குகிறோம். மாற்றம் என்பது தேக்கநிலையை உடைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு பயணம். இது வெறும் வெளிப்புற அலங்காரம் அல்ல; அது உட்புற உருமாற்றம். இன்றைய வாசகங்கள் நமக்கு ஒருமலைப்பயணத்தைமுன் வைக்கின்றன. மலை என்பது இறைவன் வாழும் இடம்; மலையுச்சி என்பது இறைவனைச் சந்திக்கும் இடம். அங்கே பழைய இயல்புகள் களைந்து, புதிய மனிதராக நாம் உருமாற அழைக்கப்படுகிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கொண்டாடும் நாம், முதல் வாசகத்தில் ஆபிரகாமின் வாழ்விலும் ஒரு பெரும் மாற்றத்தைக் காண்கிறோம். பொதுவாக, இளம்வயதில் மாற்றங்களைச் சந்திப்பது எளிது. ஆனால், வேரூன்றிப் போன முதுமையில் மாற்றங்களை ஏற்பது என்பது பெரும் மனப் போராட்டம். ஆபிரகாம் தன் ஊரைவிட்டுப் புறப்பட ஆண்டவர் அழைத்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. வாழ்க்கையின் அந்திமத்தில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில், பழகிய இடங்களை விட்டுவிட்டு முன்பின் தெரியாத நாட்டிற்குப் போகச் சொல்வது ஒரு மனிதருக்கு எத்தகைய தயக்கத்தை உருவாக்கியிருக்கும்? இன்றைய உலகிலும், முதிர்ந்த வயதில் புதிய சூழல்களுக்குத் தள்ளப்படும் முதியவர்களின் மனவலியை ஆபிரகாமின் இந்தத் தொடக்ககாலப் போராட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.

வாழ்க்கை என்பது ஒரு வசதியான இடத்தில் தங்குவதல்ல; மாறாக, இறைவனுக்காகத் தொடர்ந்து நகர்வது. ஆண்டவர் ஆபிரகாமிடம் மூன்று கடினமான தியாகங்களைக் கேட்கிறார்: ) தன் நாடு, ) தன் இனம், ) தன் தந்தை வீடு. நாடு ஒருவரின் பாதுகாப்பையும் பற்றையும், இனம் ஒருவரின் சுற்றத்தாரையும் உறவையும், தந்தை வீடு ஒருவரின் அடையாளத்தையும் உரிமையையும் குறிக்கின்றது. ஆபிரகாமின் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் இந்த மூன்றும்தான் ஒரு மனிதரின் முகவரி. ஒருவரின் உரிமைகளும் உறவுகளும் இதைக்கொண்டே அளவிடப்படுகின்றன. ஆபிரகாமுக்குக் கடவுள் வழங்கிய கட்டளைகள் கடினமாக இருந்தபோதிலும், அவரது ஆழமான கடவுள் அனுபவம், தெரியாத பாதையிலும் அவரைத் துணிவுடன் நடக்க வைத்தது.

ஆபிரகாம் தனது அடையாளங்களை, முகவரியை இழந்தார்; இறைவனின் அடையாளமாக, முகவரியாக மாறினார். ஆபிரகாம் எதை இழந்தாரோ, அதைவிடப் பன்மடங்கு மேலானவற்றை ஆண்டவர் அவருக்கு வாக்களிக்கிறார். ஆபிரகாமின் கீழ்ப்படிதலால் அவர் நான்கு ஆசிகளைப் பெறுகின்றார். அவை: ) பெரிய இனம், ) ஆசி, ) சிறப்புற்ற பெயர், ) நீயே ஆசி. நாம் இறைவனுக்காக நம்மையே இழக்க முன்வரும்போது நாம் கேட்காமலேயே பன்மடங்கு பேறுபலன்களைப் பெறமுடியும் என்பதை ஆபிரகாம் நமக்கு நினைவூட்டுகின்றார். “நீயே ஆசியாக விளங்குவாய் (தொநூ 12:2) என்பது திருவிவிலியத்திலேயே மிகவும் தனித்துவமான ஓர் அழைப்பு. ஆபிரகாம் ஆசியைப் பெறுபவர் மட்டுமல்லர், அவர் ஆசியாகவே மாறுகிறார்.

ஆபிரகாமின்புறப்பாடும்இன்றைய நற்செய்தியில் இயேசுவின்தோற்ற மாற்றமும்வெவ்வேறு காலங்களில் நடந்தாலும், இவை இரண்டும்இழத்தல் மற்றும் பெறுதல்என்ற ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. ஆபிரகாம் தன் வசதிகளைத் துறந்து, ஒரு தெரியாத நிலத்தை நோக்கிப் பயணிக்கத் துணிந்தபோதுதான் ஒரு பெரிய இனத்தின் தந்தையாக உருமாறினார். அதுபோலவே, இயேசுவும் பாடுகள் மற்றும் சிலுவை மரணம் என்ற வேதனை நிறைந்த பாதையை ஏற்கத் துணிந்தபோதுதான், தாபோர் மலையில் ஒளிமயமாக உருமாறினார். ஆபிரகாம் தன்அடையாளங்களைஇழந்தார். இயேசு தம்உயிரையேஇழந்தார். தன்னிலை மாறத் துணியாத எவரும், தெய்வீக ஒளியைப் பிரதிபலிக்க முடியாது. ஆபிரகாம் ஆசியாக மாறியது போல, நாமும் சிலுவையைச் சுமக்கத் துணிந்தால் மட்டுமே, மாட்சிமையின் ஒளியாக உருமாற முடியும் என்பதே இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் ஒருவரிச் செய்தி.

இன்று ஆசி மற்றும் பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரணான உறவே கிறித்தவ வாழ்வின் மிகப்பெரிய சவால். நாம் ஆசியை விரும்புகிறோம்; ஆனால், அதை நோக்கிய கடினமான பயணத்தைத் (சிலுவையை) தவிர்க்க நினைக்கிறோம். இந்த மனப்போராட்டத்தைச் சீடர்களின் வாழ்விலும் வார்த்தையிலும் தெளிவாக அவதானிக்க முடிகிறது. இயேசு தம் சாவைப் பற்றி முதன்முறை முன்னறிவித்தபோது (மத் 16:21) சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, பேதுருஆண்டவரே, இது வேண்டாம்; இப்படி உமக்கு நடக்கவே கூடாது (16:22) என்றார். பேதுரு இன்பமான, பாதுகாப்பான சூழலிலேயே தங்கிவிட விரும்பினார் (17:4). கீழே காத்திருக்கும் சிலுவை, பாடுகள் மற்றும் மரணத்தைச் சந்திக்க அவர் அஞ்சினார். அவர்களுக்கு மெசியா என்பவர்வெற்றி வீரராகமட்டுமே தெரிந்தார்; ‘துன்புறும் ஊழியனாகதெரியவில்லை. அவர்கள்மாட்சிமைஇயேசுவை விரும்பினார்கள்; ‘உருகுலைந்தஇயேசுவை அல்ல.

நம்முடைய இயல்பும் சீடர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதை உணரலாம். ஆசிகள் கிடைக்கும்போது அவ்விடத்திலேயே தங்கிவிடத் துடிக்கும் நாம், அந்த ஆசியைப் பெறுவதற்காகக் கடக்க வேண்டிய போராட்டங்களைக் கண்டு பின்வாங்குகிறோம். இழப்பு இல்லாமல் ஆசி இல்லை. ஆபிரகாம் ஆசியாக மாறியது, அவர் தன் நாடு, இனம், தந்தை வீடு என்ற தன் முழு முகவரியையும் இழந்ததினால் கிடைத்த பேறு! கைகள் காலியாக இருந்தால்தானே புதிய பரிசைப் பெறமுடியும்!

இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் முன்வைக்கும் அழைப்பும்நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள் (திமொ 1:8) என்பதே. துன்பத்தை ஒரு சுமையாகப் பார்க்காமல், ‘கடவுளின் வல்லமைவெளிப்படும் களமாகப் பார்க்க நம்மை அழைக்கிறார். பவுல் குறிப்பிடுவது போல, கிறிஸ்து சாவு என்ற அதிகாரத்தை அழித்துவிட்டு, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிர்வித்தார். அந்த ஒளியைப் பிரதிபலிக்க வேண்டுமென்றால், நாம் கிறிஸ்துவின் துன்பத்திலும் பங்குகொள்ளவேண்டும். துன்பத்தில் பங்கெடுப்பது என்பது முடங்கிப்போவதல்ல; மாறாக, ஆபிரகாமைப் போலப் புறப்படுவதும், சீடர்களைப் போலப் பாதுகாப்பான கூடாரங்களை விட்டு வெளியேறுவதும், பவுலைப் போல நற்செய்திக்காகத் தியாகங்களைச் செய்வதும் ஆகும்.

இன்றைய இந்த மலைப்பயணம் நமது வாழ்விற்கான மூன்று மாபெரும் உண்மைகளை உணர்த்துகின்றன: ஒன்று, துணிந்து புறப்படுவோம். ‘வயதாகிவிட்டது, சூழல் சரியில்லைஎன்ற சாக்குகளைத் தவிர்த்து, இறைவனின் அழைப்பு வரும்போது மாற்றத்தை நோக்கி முதலடியை எடுத்து வைப்போம். நமது இதமான சூழலை (comfort zone) விட்டு வெளியேறும் அந்தப் புள்ளியில்தான் இறைவனின் ஆசி தொடங்குகிறது.

இரண்டாவது, கூடாரம் அமைக்காதிருப்போம். வாழ்வின் தற்காலிக வெற்றிகளிலோ, வசதிகளிலோ திருப்தி அடைந்து அங்கேயே தங்கிவிடாமல், ஆன்மிக வாழ்வு என்பது ஓர் இடைவிடாத பயணம் என்பதை உணர்வோம். மலையுச்சியில் பெற்ற ஒளியை மக்களிடம் கொண்டு செல்ல, மீண்டும் சமவெளிக்கு இறங்கி வந்து பணியாற்றுவதே உண்மையான சீடத்துவம்.

மூன்றாவது, துன்பத்தை ஒளியாக்குவோம். துன்பத்தைக் கண்டு அஞ்சாமல், நற்செய்திக்காக நாம் ஏற்கும் அவமானங்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்போம். சிலுவையின் நிழலில் உறுதியாக நின்றால் மட்டுமே மாட்சியின் ஒளியைக் காண முடியும். ஆபிரகாமின் மாற்றமும், இயேசுவின் மாட்சியும், பவுலின் மன உறுதியும் நம்மை வழிநடத்தட்டும்.

news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 22, 2026, தவக்காலத்தின் முதல் ஞாயிறு - தொநூ 2:7-9,3:1-7; உரோ 5:12-19; மத் 4:1-11 (அலகையின் அடிமைகள் அல்ல; அருள்வாழ்வின் மக்கள் நாம்!)

நம் இதயத்தின் கடினத்தன்மையை அகற்றி, அதை அன்பினால் நிரப்பும் ஒரு வசந்த காலம் தவக்காலம். “மனம் மாறுங்கள், நற்செய்தியை நம்புங்கள்என்ற அழைப்பிற்கு ஏற்ப, நம்முடைய பாவ வழிகளை விட்டு விலகி, கடவுளை நோக்கித் திரும்புகின்ற ஒரு காலம். இது வெறுமனே சோகமான காலம் அல்ல; இது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியில் நுழைவதற்கான ஓர் அருளின் காலம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டது போல, “தவக்காலம் என்பது ஒரு தனிமையான பயணம் அல்ல; இது கடவுளோடும் பிறரோடும் நாம் மேற்கொள்ளும் ஒரு புனிதப் பயணம்.”

ஒவ்வோர் ஆண்டும் முதல் ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள மையச்சிந்தனைசோதனை.’ நம் வாழ்வில் சோதனைகள் வருவது இயற்கை. ஆனால், அந்தச் சோதனைகளில் நாம் வீழ்ந்து போகிறோமா? அல்லது அவற்றை ஏணிகளாக மாற்றி இறைவனை நோக்கி உயர்கிறோமா? என்பதே இன்றைய நாள் நம்முன் வைக்கும் கேள்வி. ஆதாமைப்போல அலகையின் பேச்சைக் கேட்டு வீழ்ந்தவர்களாய் வாழாமல், சோதனைகளை வெற்றிகொண்ட இயேசுவிடம் கற்றுக்கொள்ளவும், மிகுதியான அருளைப் பெற்று மகிழவும் இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

சோதனை என்பது கடவுள் நமக்கு வைக்கும்தேர்வுஅல்ல; மாறாக, அது நம் சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதற்கான ஒரு களம். சோதனை என்பது விழுவதற்காக வைக்கப்பட்ட பொறி அல்ல; அது எழுவதற்காகக் கொடுக்கப்பட்ட ஏணி. சோதனை நம் மனக்கதவைத் தட்டுவது பாவம் அல்ல; அதற்கு நாம் இடங் கொடுத்துக் கதவைத் திறப்பதே பாவம். “சோதனை உன்னை வீழ்த்தினால் அது பாவம்; நீ சோதனையை வீழ்த்தினால் அது பேறுபெற்ற நிலைஎன்பார் புனித ஜான் மரிய வியான்னி.

சோதனை என்பது பாவம் அல்ல; மாறாக, கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவின் ஆழத்தை அளவிடும் ஒரு கருவி (யோபு 23:10). திருவிவிலியத்தில் சோதனையை இரண்டு வேறுபட்ட பார்வைகளில் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று, சோதனை கடவுளால் அனுமதிக்கப்படுவது; மற்றொன்று, அலகையால் விளைவிக்கப்படுவது. ஒருபுறம், சோதனை என்பது ஒருவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், அவரை ஆன்மிக ரீதியில் முதிர்ச்சியடையவும் செய்யும்; மறுபுறம், இது மனிதனைப் பாவத்தில் விழச் செய்யவும் கடவுளிடமிருந்து பிரிக்கவும் தூண்டும். திருவிவிலிய வரலாற்றில் சோதனைகளைச் சந்தித்தவர்கள் பலர். அவர்களில் சிலர் தோற்றனர், சிலர் வென்றனர். ஆதாம் மற்றும் ஏவாள் (தொநூ 3:6), சிம்சோன் (நீத 16:16), தாவீது அரசர் (2சாமு 11:27). இவர்கள் அனைவரும் சோதனையால் வீழ்ந்தவர்கள். யோசேப்பு (தொநூ 39:9), யோபு (யோபு 1:21), ஆபிரகாம் (தொநூ 22:12) இவர்கள் சோதனையை வென்றவர்கள்.

மனிதர்கள் அடிப்படையில் கடவுளின் அன்பினாலும் சிந்தனையாலும் மற்றும் அவரின் சொந்தத் திட்டத்தினாலும் உருவானவர்கள். இயற்கையாக அவர்கள் நல்லவர்கள். இருப்பினும், அவர்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு, பின்னர் தங்கள் தெய்வீக நிலையை இழந்தார்கள் என்பதே படைப்பின் தொடக்கம் உணர்த்தும் பாடம்.

தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், படைப்பின் சிகரமான மனிதரின் தோற்றத்தையும் நம்பிக்கையின்மையால் வீழ்ந்த வீழ்ச்சியையும் பற்றிய மிக முக்கியமான சில உண்மைகளை நமக்குக் கற்பிக்கின்றன. ஆதாம் ஏன் சோதிக்கப்பட்டான்? ஏன் பாவத்தில் விழுந்தான்? அலகை நேரடியாக ஆதாமைப் பாவத்தைச் செய்யத் தூண்டவில்லை. “தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் நீங்கள் உண்ணக்கூடாது என்று கடவுள் கூறியது உண்மையா?” (தொநூ 3:1) என்ற சந்தேகத்தை முதலில் மனிதனுக்குள் விதைக்கிறது. முதல் பெற்றோரிடம், “தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது. அதைத் தொடவும் கூடாது.” (தொநூ 3:3) என்ற கடவுளின் கட்டளையை ஒரு சுமையாக உணர வைத்தது. “நீங்கள் சாகமாட்டீர்கள்... கடவுளைப் போல அறிவைப் பெறுவீர்கள் (3:4,5) என்று கூறி, மனிதனின் உள்ளத்தில்பேராசையைதூண்டியது. கடவுளைப் போல மாற நினைப்பது தவறல்ல; ஆனால், கடவுளைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக மாற நினைப்பது பாவமாகிறது. முதல் பெற்றோர் கனியை உண்டவுடன், “அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன (3:7). இது அவர்களுக்குக் கிடைத்த ஞானம் அல்ல; மாறாக, வெட்கமும் குற்ற உணர்வும்தான். அங்கே கடவுளுடனான உறவு துண்டிக்கப்படுகிறது.

இறைவார்த்தையின் மீது சந்தேகம் கொள்வதே பாவத்தின் தொடக்கமாகிறது. கடவுள் நமக்குச் சுதந்திரத்தைத் தந்துள்ளார். ஆனால், அந்தச் சுதந்திரத்தைக் கடவுளின் விருப்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தும்போது நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். பாவம் செய்த பிறகு ஆதாமை நோக்கிக் கடவுள், “எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கும் போது, ஆதாம் தன் தவற்றை ஏற்காமல், ஏவாள் மீது பழி போட்ட அந்தபொறுப்புத் துறப்புஇன்றுவரை மனிதகுலத்தைவிட்டு நீங்கவில்லை. புனித அகுஸ்தினார் இவ்வாறு குறிப்பிடுவார்: “தவறு செய்வது மனித இயல்பு; ஆனால், செய்த தவறிலேயே நிலைத்திருப்பது அலகையின் இயல்பு.”

ஆதாம் எனும்ஒரு மனிதனின்கீழ்ப்படியாமையால் பாவம் உலகிற்குள் நுழைந்தது. பாவத்தின் விளைவாகச் சாவு வந்தது (உரோ 5:12). ஆதாம், ஏதேன் தோட்டத்தில் சோதிக்கப்பட்டுத் தோற்றுப் போனான். ஆனால், ஆதாம் தோற்ற இடத்தில் அதாவது, ‘ஒரு மனிதனின்கீழ்ப்படிதலால் அருள் உலகிற்குள் பெருகியது. அருளின் விளைவாக வாழ்வு வந்தது. பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம், நாமும் சோதனைகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவர் நமக்குத் தந்துள்ளார்.

இயேசு எவ்வாறு அலகையை வென்றார்? அவர் அலகை எதிர்கொண்டது, உடல் உறுதியினால் அல்ல; மாறாக, இறைவார்த்தையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையினால். முதல் சோதனையில் தமது பசியைப் போக்க இறைமகன் என்ற தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு புதுமை செய்ய இயேசு இசையவில்லை. தாம் யூத மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வெறுமனே ஒரு புதுமை செய்யும் மெசியா அல்லர் என்றும், மக்கள் வாழ்விற்கு மிகவும் தேவையான இறைவார்த்தையை அளிக்க வந்தவர் என்றும் இயேசு உறுதியுடன் கூறி முதல் சோதனையை வெல்கிறார்.

தாம் கடவுள் மகன் என்பதை இயேசு ஒரு வீரதீரச் செயலின் மூலம் காட்டவேண்டும் என்பது இரண்டாவது சோதனை. அதாவது, இயேசு மக்கள் சார்ந்த கடினமான மீட்புப் பணியை ஒதுக்கிவிட்டு, ஒரு குறுக்குப் பாதை வழியாகத் தமது பணியை முடித்துக் கொள்ளவேண்டுமாம்! இறைவார்த்தையின் வழி இச்சோதனையையும் இயேசு வெல்கிறார்.

மூன்றாவது சோதனையில், இயேசு தமது இறையாட்சிப் பணிக்குரிய அன்பு, நீதி, சமத்துவம், இரக்கம் போன்ற மதிப்பீடுகளை விட்டுவிட்டு, உலக ஆட்சிக்குரிய பகட்டும் பொருளும் பதவியும் நாட வேண்டும் என்று சாத்தான் முயற்சி செய்கிறது. இச்சோதனைக்கு உட்படுதல் என்பது கடவுளுக்கு ஊழியம் செய்யாமல் உலக சக்திகளுக்கு ஊழியம் செய்வதாகும் என்ற இறைவார்த்தையை மேற்கோள்காட்டிச் சாத்தானை விரட்டுகிறார் இயேசு. உலக மாயைகளுக்கு அடிபணியும் சோதனைகளை வென்ற இயேசுவுக்கு வானதூதர்களே பணிவிடை புரியும் உயர்நிலை ஏற்படுகிறது (மத் 4:11). சோதனைகளை வென்ற இயேசு உறுதியான உள்ளத்துடன் தமது பணி வாழ்வைத் தொடங்குகிறார்.

இயேசு எதிர்கொண்ட மூன்று சோதனைகளும் சாமானிய மனிதரின் வாழ்க்கை சூழலில் எதிர்கொள்ளும் சோதனைகளே. ஆனால், அவற்றை எப்படி முறியடிப்பது என்பதற்கானவெற்றிப் பாதையைஇயேசு நமக்குத் தம் பாலைநிலப் பயணத்தின் வழியாகக் காட்டியுள்ளார். முதலில், இறைவார்த்தையை நம் வாழ்வின் ஆயுதமாக்கவேண்டும் (எபி 4:12). இரண்டாவது, நாம் அலகையின் அடிமைகள் அல்ல; மாறாக, கடவுளின் பிள்ளைகள் எனும் அடையாளத்தில் உறுதியாக நிற்கவேண்டும் (கலா 4:7). மூன்றாவது, “சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டும் (மத் 26:41).

எனவே, நம் வாழ்வின் பாலைநிலங்களில் சோதனைகள் வரும்போது, நாம் தனிமையில் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். ஆதாமைப் போலத் தோற்றுப்போக நாம் அழைக்கப்படவில்லை. மாறாக, புதிய ஆதாமாகிய கிறிஸ்துவின் வழியாக வெற்றியைச் சுவைக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, இந்தத் தவக்காலத்தில் இறைவார்த்தை என்ற வாளை ஏந்துவோம்; செபம் என்ற கேடயத்தைப் பிடிப்போம்; அருள்வாழ்வு என்ற பாதையில் உறுதியுடன் நடப்போம். ஆதாமோடு வீழ்ந்தது போதும், ஆண்டவரோடு எழுவோம்! சோதனைகளை வெல்வோம்!

news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 15, 2026 ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37 - தெளிந்த இதயம்... தேர்ந்தெடுக்கும் தெய்வீகம்!

கடவுள் மனிதரைப் படைத்தபோது, அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆனால், அந்தச் சுதந்திரம் என்பது நாம் விரும்புவதை எல்லாம் செய்வதல்ல; மாறாக, எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பது. இதயம் என்பது வெறும் உணர்ச்சிகளின் இருப்பிடம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தீர்மானங்கள் பிறக்கும் இடம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் முதலில் நம் இதயத்தில் ஓர் எண்ணமாகவோ அல்லது ஒரு தீர்மானமாகவோதான் பிறக்கிறது. நம் இதயத்தைத் தூய்மைப்படுத்தும்போது, நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு முடிவும் கடவுளுக்கு உகந்ததெய்வீகத் தேர்வாகமாறும்.

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு உகந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டுமென அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், ‘உனக்கு முன் வாழ்வும் சாவும் - அதாவது, ‘நன்மையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளனஎன்கிறார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஒவ்வொருவருக்கும் நல்லது - கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை - அதாவது விருப்புரிமை அருளப்பட்டுள்ளது. இதனால் ஆசிருக்கும் அழிவிற்கும் அவரவர்தான் பொறுப்பு என்று சீராக் நூல் விளக்குகிறது.

கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்பது அல்லது விட்டுவிடுவது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது அல்லது அவரவரின் தெரிவைப் பொறுத்தது. கடவுள் அடிமையான நேர்மையாளர்களை அல்ல; சுதந்திரமான நேர்மையாளர்களையே விரும்புகிறார். “மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுளளன; உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள் (சீஞா 15:15,16) என்னும் இந்த வரி இணைச் சட்ட நூலில் மோசே வாழ்வையும் சாவையும் தெரிவுகளாக முன்வைப்பதை நினைவூட்டுகிறது (இச 30:19-20).

சீராக் குறிப்பிடும் நீரும் நெருப்பும் மிக முக்கியமான உருவகங்கள். ஒன்று, இதமான தன்மையையும்; மற்றொன்று, வெம்மையான தன்மையையும் காட்டுகின்றன. சீராக் இதனை இரண்டு எதிர்கருத்துப் பதங்களாக ஒப்பிடுகிறார். நீர் பாதுகாப்பான உருவகமாகவும் அல்லது ஆசிருக்கான உருவகமாகவும், நெருப்பு பாதுகாப்பற்ற உருவகமாகவும் அல்லது தண்டனைக்கான உருவகமாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. நீரா? நெருப்பா? எதைக் கைநீட்டி எடுப்பது? வாழ்வா? சாவா? எதை விரும்புவது? என்ற கேள்விகளை முன்வைக்கிறார் சீராக். எவரும் சாவை விரும்புவதில்லை. வாழ்வையே அனைவரும் விரும்புகின்றோம். இங்கு சீராக் கூறும் வாழ்வு எப்படிப்பட்டது? வெறுமனே மூச்சுவிடுவதும், இதயம் துடிப்பதும் அல்லது உடல் சார்ந்த செயல்கள் வாழ்வு என்றாகி விடுமா? இவை வெறும் உடல் இயக்கம் மட்டுமே. வாழ்வு என்பது தெரிவுகள் சார்ந்ததுஇறைவன் மீது பற்றுக்கொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக் 12:15) என்பது இயேசுவின் படிப்பினை. இங்கே இறைவாக்கினர் சீராக், வாழ்வையும் சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா? என்ற கேள்வியை நம்மில் எழுப்புகிறார். வாழ்விற்கும் சாவிற்கும் பொறுப்பாளிகள் மனிதர்களே என்பது இங்கே புலப்படுகிறது. வாழ்வையும் சாவையும் மனிதரின் விருப்பம் இல்லாமல் கடவுளே தீர்மானிக்கிறார் என்ற கூற்று தவறானது.

யூத மக்கள் இறைவனின் வழி வாழ்வது என்பதை இறைச் சட்டங்களின்படி, அதாவது மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் மட்டுமே நினைத்துப் பார்த்தனர். இஸ்ரயேல் மதத்தலைவர்கள் சட்டத்தை ஒருகணக்குப் புத்தகமாகமாற்றியிருந்தார்கள். ‘இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் புண்ணியம்என்ற சுயநலக் கணக்குகளே அவர்களிடம் மேலோங்கியிருந்தன. சட்டத்தின் நோக்கம்மனிதனைப் புனிதப்படுத்துவதுஎன்பதை மறந்து, சட்டத்தை வைத்துமனிதனை ஒடுக்குவதுஎன்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். சட்டத்தைப் பின்பற்றுவது என்பது ஏதோ ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு, ‘நான் நேர்மையானவன்என்று தம்பட்டம் அடிப்பதல்ல; அது இதயத்திலிருந்து வரும் அர்ப்பணிப்பு. “சட்டம் என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். அன்பு இல்லாத சட்டம் வெறும் அடிமைத்தனம்என்றார் புனித இரண்டாம் ஜான்பால். இதைத்தான் இயேசு தம் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தம் வாழ்நாள் முழுவதும் தெளிவுபடுத்தினார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்கள் முற்காலத்தவருக்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் (மத் 5:21,27,33) என்று சட்டத்தைத் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு நம்மை அழைக்கிறார். “கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய்யாணை இடாதேபோன்ற வெளிப்படையான சட்டங்களைக் கடந்து, இதயம் எனும் ஆழமான பகுதிக்குச் செல்கிறார். அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயக் குணங்களைக் கொண்டிருந்தால்தான் சட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற புதிய வழியில் சிந்திக்க இயேசு அழைக்கிறார். சட்டங்களை வெறும் சடங்காக நிறைவேற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள முதன்மையைக் கண்டுபிடித்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

பழைய சட்டத்தின்படிகொலைஎன்பது ஒரு குற்றவியல் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இயேசுவின் பார்வையில், ஒருவனை மனதால் வெறுப்பதும், சினம் கொள்வதும், ‘அறிவிலியேஎனத் திட்டுவதும் கூட ஒருவகை கொலைதான். காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற வரலாற்றின் முதல் கொலைக்குக் காரணம் சினம், வெறுப்பு, பகையே. மனித உறவுகளை முறித்துப் பகைமையை உருவாக்கும் வன்சொற்களும்கூட குற்றங்களே. ஆகவே, உறவுகளில் விரிசல் விழும்போது இருண்ட இதயத்தோடு இறைவனை வழிபட முடியாது. முதலில், வாழ்க்கையில் நல்ல மனித உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பிறகுதான் கடவுளுடன் நாம் சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் இயேசு.

இரண்டாவதாக, இயேசு, விபச்சாரம் செய்வது மட்டும் குற்றமன்று; இத்தகைய பாவச்செயலுக்குத் தூண்டும் இச்சைகளை அகற்றுவதிலும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்கிறார். விபச்சாரம் என்பது உடலில் நடக்கும் ஒரு செயல் மட்டுமல்ல; அது பார்வையில் தொடங்கும் ஒரு கறை. பார்வை தெளிவாக இருந்தால் ஒழிய, உள்ளம் தூய்மை அடையாது. பெண்களை மதிப்பதும் மனைவியைச் சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல் நடத்துவதும் ஒவ்வோர் ஆண்மகனும் கற்றுக்கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக, ‘பொய்யாணை இடாதேஎன்ற சட்டத்தைத் திருத்தி, ‘ஆணையிடவே வேண்டாம்என்று இயேசு அறிவுறுத்துகிறார். ஏனெனில், கடவுளின் பெயரையோ, விண்ணையோ, மண்ணையோ சாட்சியாக இழுப்பது ஒருவிதமானஆன்மிக மிரட்டல்.’ அது நாம் கடவுளுக்கு ஏற்படுத்தும் இழுக்கு. அது மட்டுமன்று, மனித உறவுகளுக்கும் ஏற்படுத்தும் இழுக்குதான். ஏன் மக்கள் ஆணையிடுகின்றனர்? தங்கள் பேச்சின் மீது நம்பிக்கை இல்லாததால் தான். எவரொருவர் உண்மையாக வாழ்கிறாரோ அவருக்குச் சத்தியம் என்ற கூடுதல் பாதுகாப்புத் தேவைப்படாது. அவரது வார்த்தையே ஒரு புனிதமான சட்டமாக மாறும்.

எனவே, இயேசு இன்று நம்மிடம் எதிர்பார்ப்பது, மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் விட மேலான ஒரு நெறியைத்தான். நம் கோபம், நம் பார்வையில் உள்ள அசுத்தம், நம் பேச்சில் உள்ள வன்முறை என அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கச் சொல்கிறார். “பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வரும்போது, உன் சகோதரர் மீது உனக்கு மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், அங்கேயே காணிக்கையை வைத்துவிட்டு முதலில் போய் அவரோடு ஒப்புரவாகுஎன்று இயேசு கட்டளையிடுகிறார். இயேசு தரும் இடுக்கண் வழி அவர் போதிக்கும் இறைஞானமே. இது அன்பிற்கும் மன்னிப்பிற்கும் ஒன்றிப்பிற்கும் ஆதரவானது. ஆகவே, மனிதர் தெரிவு செய்ய வேண்டியது உலக ஞானத்தை அல்ல; மாறாக, இறைஞானத்தையே. இந்த இறைஞானம் வேறொன்றுமில்லை, அது சிலுவையின் ஞானமே என்கிறார் பவுல். எனவே, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இறைவனின் ஞானத்தினால் வழிநடத்தப்படட்டும்.

நிறைவாக, இறைவனின் சட்டங்கள் நம்மை ஒடுக்குவதற்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இன்று நாம் உணர்வோம். அன்பினால் தூண்டப்பட்டு நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துவோம். நம் உறவுகள், பார்வைகள் மற்றும் பேச்சுகள் அனைத்திலும் சட்டத்தின் ஆன்மாவான அன்பைப் பொதித்து வைப்போம். நம் வாழ்வின் ஒவ்வொரு தேர்வையும் அன்பின் அடிப்படையில் எடுப்போம். அவ்வாறு தெளிந்த இதயத்தோடு நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்மை மண்ணுலக மனிதர்களிலிருந்து விண்ணுலகின் தெய்வீகப் பிள்ளைகளாக மாற்றும் பேரொளியாக அமையட்டும்.

news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 08, 2026, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு எசா 58:7-10; 1கொரி 2:1-5; மத் 5:13-16 (உலகிற்கு உப்பாகவும்... வாழ்விற்கு விளக்காகவும்...)

சுவை இல்லாத உணவு குப்பையிலே... ஒளி இல்லாத வீடு இருளிலே...! ஒரு சிறு துளி உப்பு ஒரு பானை உணவின் சுவையையே மாற்றுகிறது. ஒரு சின்னஞ்சிறு மெழுகுவர்த்தி ஒரு பெரிய அறையின் இருளையே விரட்டுகிறது. இவை இரண்டிற்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. இவை இரண்டும் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளவேண்டும். உப்பு உணவோடு கரைந்து தன்னை இழக்கவேண்டும்; மெழுகுவர்த்தி நெருப்போடு உருகித் தன்னைத் தேய்த்துக்கொள்ளவேண்டும். தன் வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளும் உப்பு குப்பையில் எறியப்படும்; எரியாத மெழுகுவர்த்தி இருளில் புதைக்கப்படும்.

ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் (மத் 5:13-14) என்ற உருவகங்கள் வழியே ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை அவர் நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசு மலைப்பொழிவின் வழியாக நமக்கு வழங்கும் இந்த அழைப்பு, வெறும் அறிவுரை அல்ல; அது ஒரு சீடத்துவத்தின் அடையாளம். இயேசுவின் வார்த்தைகளைக் கூர்மைப்படுத்தி நோக்கும்போது, அவர் உப்பாக, ஒளியாக இருக்க முயலுங்கள் என்றோ அல்லது உப்பைப்போல, ஒளியைப்போல இருக்கிறீர்கள் என்றோ கூறவில்லை. அவர், உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள் என்கிறார். அதாவது, ஒரு கிறித்தவர் இயல்பிலேயே இந்தத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார் என்கிறார் இயேசு.

உப்பின் தன்மையை திருவிவிலியக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உப்பு மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்பட்டது. இது வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, உணவுகளைப் பதப்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த உப்பு பயன்படுத்தப்பட்டது. எலிசா இறைவாக்கினர் உப்பைக்கொண்டே உதவாத நீரை நல்ல நீராக்கினார் (2அர 2:19-22). உப்பு ஒரு மாறாத உடன்படிக்கையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது (எண் 18:19). “நீ செலுத்தும் மாவுப்பலி ஒவ்வொன்றிலும் உப்பு சேர்க்கவேண்டும்  (லேவி 2:13). அதாவது, உப்புக் கலந்து உண்ணுவது பிரிக்க முடியாத நட்பையும் முடிவுறா உறவையும் குறித்தது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை (வாழ்நாள் முழுவதும்) என்னும் வழக்காட்டுப் பழமொழி நம் வாழ்விற்குச் சுவை சேர்த்த இறைவனையும், நமக்கு உதவிய மனிதர்களையும் நன்றியோடு நினைக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் உப்பை அழகான உருவகமாகவே காட்டும் இயேசு, தம் சீடர்களைஉலகின் உப்பாக இருக்கிறீர்கள் (மாற்கு 9,50: லூக்கா 14,34) என்கிறார். தூய பவுல் கிறித்தவர்களின் பேச்சு எப்போதும் கனிவாகவும் உப்புச் சேர்த்தது போலச் சுவையாகவும் இருக்கக் கேட்கிறார் (கொலோ 4:6).

ஒளி என்பது திருவிவிலியத்தில் இறைவனின் முன்னிலையையும் உண்மையையும் குறிக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. திருவிவிலியம் ஒளியை உயிரின் அடையாளமாகக் காட்டுகிறது (யோபு 3:16; திபா 49:19). ஒளியில் நடத்தல் மற்றும் ஒளியில் வாழ்தல் போன்றவை நேர்மையான வாழ்வையும், கடவுளுடனான வாழ்வையும் குறிக்கின்றன. ஒளி வளமையையும், அத்தோடு மகிழ்ச்சியான வாழ்வையும் குறித்தது (எஸ் 8:16). திருப்பாடல் ஆசிரியர் ஒளியைப் பல இறையியல் விழுமியங்களுக்கு ஒப்பிடுகிறார். ‘இறைவார்த்தையே விளக்கு (திபா 119:105); ‘ஆண்டவரே ஒளி (திபா 27:1). முதல் ஏற்பாட்டில் ஒளி கடவுளின் இறைமகிமையையும் மாட்சியையும் காட்டவும் அடையாளப்படுத்தப்பட்டது. முதல் ஏற்பாட்டைப் போலவே இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி பல அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது. இயேசு தம்முடைய சீடர்களை ஒளியின் மக்களாக இருக்கிறீர்கள் என்கிறார். “நானே உலகிற்கு ஒளி; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் (யோவா 8:12) எனக் கூறி சாட்சிய வாழ்வுக்கு அழைக்கிறார். பவுலும், “ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள் (எபே 5:8) எனக் கூறுகிறார்.

சமூகத்தில் உப்பாகவும் ஒளியாகவும் இருப்பவர்களின் சாட்சிய வாழ்வு எவ்வாறு இருக்கும் என்பதை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகம் நமக்கு நயம்பட எடுத்துரைக்கிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா நான்கு மிக முக்கியமான மனிதநேயச் செயல்களைப் பட்டியலிடுகிறார். அவை: 1. பசித்தோருக்கு உணவைப் பகிர்தல், 2. தங்க இடமில்லாத வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல், 3. உடையற்றோருக்கு உடையளித்தல், 4. இனத்தாருக்கு உதவிசெய்தல் (எசா 58:7). கடவுளுடைய பார்வையில் இவை ஏன் முக்கியத் வம் பெறுகின்றன?

முதலில், உண்ணாநோன்பு என்பது ஓர் ஆன்மிகப் புதுப்பித்தலுக்கான ஒரு நிகழ்வு. இச்செயல் சாதாரண இறைவேண்டலுக்கு வலுசேர்க்கும் ஒன்றாகவே இஸ்ரயேல் மக்கள் பார்த்தனர் (2சாமு 12:22; எஸ் 8:23; யோவே 2:12; லூக் 2:37). ஆனால், கடவுளின் பார்வையில் உண்ணாநோன்பு என்பது தவிர்க்கப்படும் உணவைப் பசிப்போருக்குக் கொடுப்பதில் நிறைவுபெறுகிறது. இரண்டாவது, தங்க இடமில்லாத வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல் என்பது சகோதரத்துவத்தைப் பேணுகின்ற ஒரு முக்கியச் செயல். யூதா நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாபிலோனிய இடப்பெயர்விற்குப் பிறகு (யூதாவின் 70 ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு) வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆகினர். பணக்காரர்கள் தங்கள் நிலங்களைப் பெரிதாக்கிய அதேவேளை, ஏழைகள் வீடு நிலமற்றவர்களாயினர். இப்பின்னணியில், வீடற்றவர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்தல் ஒரு புண்ணியமாகப் பார்க்கப்பட்டது. அதுமட்டுமன்றி, இச்செயலைச் செய்வதன் வழியாக அவர்கள் வீடற்றவர்களுக்கும் தந்தையாக இருக்கும் கடவுளின் உண்மையான மக்களாகின்றனர்.

மூன்றாவது, உடை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது ஆளையும் குறித்துக் காட்டுகிறது. ஆகவேதான் நம் முன்னவர்கள்ஆள் பாதி, ஆடை பாதிஎன்றனர். உடையற்று இருப்பவர் அனைத்தையும் இழந்தவராகிறார். அவர் அடிமை என்றே கருதப்படுவார். உடையைக்கொண்டே ஒருவரின் நிலைமை கணிக்கப்படுகின்றது. இங்ஙனம், உடையற்றவருக்கு உடையளிப்பது, அவருக்கு மனிதத்தைக் கொடுப்பது போன்றதாகிறது. நான்காவது, இனத்தாருக்கு உதவிசெய்ய மறுப்பது என்பது தன் அடையாளத்தையே மறைத்தலும் சகோதர வெறுப்பைக் காட்டலும் ஆகும். எனவேதான்உன் இனம்என்பது எபிரேயப் பாடத்தில்உன் சதைஎன்று குறிப்பிடப்படுகிறது. எனவே, உதவி செய்யாதிருப்பது ஒரு பாவம் என்றாகிறது. மேற்குறிப்பிட்ட மனித நேயச் செயல்களைச் செய்பவர்கள் என்னென்ன நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்?

கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் மிக முக்கியமான அடையாளமான ஒளிபோல அவர்கள் இந்தச் சமூகத்தில் துலங்குவர்; அவர்களுக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். நேர்மை ஒரு வானதூதர் போல், நல்லவர்களின் முன்னால் சென்று காக்கும். அதாவது, ஒருவருக்கு முன் நேர்மை செல்லும்போது அவர் தீமை மற்றும் ஆபத்துகளைத் தவிர்ப்பார். ஆண்டவருடைய வல்லமை அவர்களுக்குப் பின்னால் காவல்தூதர் போல் செல்லும் என்கிறார் இறைவாக்கினர் எசாயா. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலும், சமூகத்தில் உப்பாக, ஒளியாக இருப்பது என்பது, மனித அறிவினாலோ, வல்லமையினாலோ அல்ல; மாறாக, ‘சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியால்என்கிறார். எவரொருவர் தன்னுடைய கற்றல் மற்றும் உலக மெய்யறிவுகள் அனைத்தையும்குப்பையாககருதுகிறாரோ, அவரிடத்தில்தான் ஞானத்தின் உறைவிடமாகிய தூய ஆவியார் குடிகொள்கிறார் என்கிறார்.

நிறைவாக, இன்று நாம் வாழும் உலகம் இரண்டு பெரும் சவால்களைச் சந்திக்கிறது: 1. சுவையற்ற வாழ்வு, 2. இருள் சூழ்ந்த உலகு. இன்று மனித நேயம் மறைந்து, சுயநலமே மேலோங்கி நிற்கிறது. அநீதி, சாதி-மத வன்முறை, வெறுப்பு இச்சமூகத்தை இருளாக்குகின்றன. இத்தகைய சூழலில் நாம் எப்படி உப்பாகவும் ஒளியாகவும் மாறுவது? ) கிறித்தவர்கள் கோவிலுக்குள் மட்டும் இருப்பவர்கள் அல்லர்; எசாயா கூறுவதுபோல, வீடற்றவரைத் தேடிச்சென்று அணைப்பதிலும், பசித்திருப்பவனுக்கு உணவிடுவதிலும்தான் நம் நம்பிக்கை சுவை பெறுகிறது. ) பவுல் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே தன் ஒளியாகக் கொண்டதுபோல, நம்முடைய துன்பங்களையும் தியாகங்களையும் மற்றவர்களுக்காகப் பலியாக்கும்போது நாமும் ஒளியாகிறோம். ) “மலையின் மேல் இருக்கும் நகரை மறைக்க முடியாது.” நம்முடைய கத்தோலிக்க வாழ்வு ஒரு சாட்சிய வாழ்வாக இருக்கவேண்டும். நாம் செய்யும் நற் செயல்கள் நம்மைப் பெருமைப்படுத்த அல்ல; மாறாக, கடவுளைப் புகழவேண்டும்.

காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாய் மாறுவோம்... வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு ஒளியாய் மிளிர்வோம்... கிறிஸ்துவின் சாட்சிகளாய் உலகை மாற்றுவோம்.