‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’, ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்’ என்பவை நம் முன்னோர் கூறிச்சென்ற மிக அழகான முதுமொழிகள். மனித வாழ்வில் ஆலயத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? ஆலயங்கள் பல்வேறுபட்ட தலைமுறைகளின் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள். ஆலயம் என்பது அன்பு, மன்னிப்பு, தியாகம், ஒற்றுமை, பிறரன்பு, விட்டுக்கொடுத்தல், பெருந்தன்மை, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளின் கூடாரம்.
ஆலயம்
என்பதற்கு ‘ஆன்மாக்கள் ஆண்டவனின் திருவடியில் இலயிக்கும் இடம்’ என்பது பொருள். ‘ஆ’ என்றால் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள், ஆன்மாக்கள். இலயம் என்றால் ஒருமைப்படுதல். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் மனம் ஒன்றி இலயிக்கும் இடமே ஆலயம். ஆலயத்திற்கு ‘கோவில்’ என்ற பெயரும் உண்டு. ‘கோ’ என்பதற்குக் கடவுள் அல்லது அரசன் என்பது பொருள். ‘இல்’ என்றால் குடியிருக்குமிடம், இல்லம் என்று பொருள். எனவே, கோவில் எனப்படுவது ‘கடவுள் குடியிருக்குமிடம்’ என்பதாகும்.
நம்
திரு அவையில் பெருங்கோவில்கள், தலைமைப் பேராலயம், ஆலயங்கள், திருத்தலங்கள், சிற்றாலயங்கள் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை யாவும் மக்களின் வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. ஆலயங்கள் இறையருளின் வாய்க்கால்களாக, மனமுடைந்த தருணங்களில் கண்ணீர் மல்க மன்றாடும்போது, இவை நம்பிக்கை தரும் அடைக்கலப் பாறையாக இருப்பதை நம்மால் உணரமுடியும்.
இன்று
கோவில்களைப் பற்றி நாம் சிந்திக்கும் வேளையில், உலகில் இருக்கக்கூடிய ஆலயங்களுக்குள் எல்லாம் சிறந்த ஆலயமாக விளங்கக்கூடிய தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமுடியாது.
தூய
இலாத்தரன் பெருங்கோவில் உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும், அனைத்துலகத் திரு அவைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் அமைந்த கோவிலாக விளங்குகிறது. கத்தோலிக்கத் திரு அவையின் பேராலயங் களிலெல்லாம் மிகப் பழமையான பேராலயமும் இதுதான். உரோமை நகரில் அமைந்துள்ள இக் கோவில், உலகமனைத்திற்கும் ‘தாய்க் கோவிலாகவும்’, ‘தலைமைக்
கோவிலாகவும்’ கருதப்படுகிறது.
இந்தத் தூய இலாத்தரன் பெருங்கோவிலின் நேர்ந்தளிப்பு விழாவைத்தான் நாம் இன்று கொண்டாடுகிறோம்.
இந்தக்
கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிளாசியோ
இலாத்தரானோ என்ற ஆளுநருக்குச் சொந்தமானதாக இருந் தது. கி.பி. 65-இல்
ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற பிளாசியோ என்பவர் நீரோ மன்னனுக்கெதிராகச் செயல்பட்டதால் பிளாசியோவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான இலாத்தரன் பெருங்கோவில் இருக்கும் இடம் நீரோ மன்னனுக்குச் சொந்தமானது. அதன்பின், கி.பி.
313-ஆம் ஆண்டில் மன்னன் கான்ஸ்டாண்டைன் கிறித்தவ மக்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்க விரும்பி இவ்விடத்தில் அவர்களுக்கான ஆலயம் ஒன்றைக் கட்ட விரும்பினார்.
கி.பி. 318-ஆம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் அக்கோவிலை, ‘தூய்மைமிகு மீட்பராம் கிறிஸ்துவுக்கு’ நேர்ந்தளித்தார்.
9-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸ் இக்கோவிலைத் ‘திருமுழுக்கு யோவான் ஆலயம்’ என்றும், 12-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை இரண்டாம் லூசியஸ் ‘நற்செய்தியாளர் தூய யோவான் ஆலயம்’ என்ற பெயரையும் வழங்கினர். அதனால் இப்பேராலயத்திற்கு இயேசு மீட்பர் ஆலயம், திருமுழுக்கு யோவான் ஆலயம், நற்செய்தியாளர் யோவான் ஆலயம் என மூன்று பெயர்களுண்டு.
‘திருத்தந்தையின் ஆலயம்’ என்று அழைக்கப்படும் இவ்வாலயத்தில் 5 பொதுச்சங்கங்களும், 20 ஆயர் பேரவைகளும் நடைபெற்றிருக்கின்றன. பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும், ஆண்டவர் இராவுணவு உண்ட மேசையும் இங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம் ‘பொன் ஆலயம்’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு பல்வேறு சிறப்புமிக்க தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நன்னாளில், இன்றைய வாசகங்கள் ஆலயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்கு உணர்த்துகின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் கடவுளின் இல்லத்தினின்று, அவரது புனித மலையாம் சீயோனின்று புறப்படுகின்ற நீரோடை, வாழ்வு தரும் நீராக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார். ‘கோவிலிலிருந்து வரும் தண் ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்” என்கிறார். அதாவது, நலமான, வளமான வாழ்வுக்குத் தேவையானவற்றை அடையாளம் காட்டும் தளமாக இருப்பவை ஆலயம். உண்மையில் ஆலயம் என்பது இறை உடனிருப்பின் அடையாளம்; இரக்கத்தின் இருக்கை’.
ஆனால்...
இன்று ஓங்கி உயர்ந்த ஆலயங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள், வனப்புமிக்க ஓவியங்கள், தங்கமும் வைரமும் கலந்த அலங்காரங்கள், கண்களைக் கவரும் ஆலய முகப்புத்தோற்றங்கள்... உண்மையில் கடவுளை அடையாளம் காட்டும் குறியீடாக இருக்கின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆலயங்கள் அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, அதிகாரத்தின் மையமாக அன்றும் இன்றும் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஆலயம் ஒன்றிணைக்கும் இடமாக, பாகுபாடுகளைக் களையும் இடமாக, வாழ்வு தரும் இடமாக, நம்பிக்கையை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், இத்தன்மையை ஆலயங்கள் இழந்தபொழுது இறைவாக்கினர்கள் மிகக் கடுமையாக இறைவாக்குரைத்தனர் (எரே 7:3-11). இயேசுவும் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்ற வேளையில், “என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” (யோவா
2:16) எனக் கடிந்துகொண்டார். ஆலயம் கள்வர்களின் குகையாக (மாற் 11:17; லூக் 19:46) ஏழைகளின் இரத்தம் குடித்த சூழலில், அதன் புனிதம் காக்கக் கடுமையாகச் சாடினார்.
இன்றைய
நற்செய்தியில், யூத நம்பிக்கையின் மையமான எருசலேம் ஆலயம் அர்த்தமற்றுப்போக, கடவுளின் வலக்கரத்தால் புதிய ஆலயம் எழுவது பற்றிப் படிக்கின்றோம். ஆலயத்திற்கு புதிய பார்வையை இயேசு முன் வைக்கிறார். உயிர்ப்பெற்றெழப்போகும் இயேசுவே இறைவனும் மனிதரும் சந்திக்கும் புதிய ஆலயம். மனிதர் கையால் கட்டப்பட்ட ஆலயத்தில் அல்ல; மாறாக, கடவுளை உள்ளத்தில், உறைவிடத்தில் வழிபட அழைக்கிறார் இயேசு. “கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவில் உள்ளது”
(திவெ 21:3); “வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார்” (யோவா
1:14). எனவே, மனுவுருவான இயேசுவே கோவில் எனப் புரிய முடியும் (யோவா 2:21). ஆகவேதான், ‘46 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள். அதை நான் மூன்று நாளில் கட்டி எழுப்புவேன்’ (2:19) என்று
இயேசு கூறுகிறார்.
புதிய
ஏற்பாட்டுச் சிந்தனைகளின் அடிப்படையில், சடங்குத்தனமான வழிபாட்டைத் தள்ளி வைத்துவிட்டு, கடவுள் வாழும் ஆலயம் மனிதர்தாம் எனும் மிக உயர்ந்த இறையியல் சிந்தனையை முன் வைக்கிறார் திருத்தூதர் பவுல். கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் “வாழும் கடவுளின் கோவில் நாமே”
(1 கொரி 3:16) என்கிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் நடுவில் கடவுள் கூடாரத்தில் உறைந்தார். இப்போது தூய ஆவி நம் உள்ளங்களில் குடிகொள்கிறார். இதனால் நாம் அவர் வாழும் கோவிலாகிறோம் (6:19; எபே 2:21). எபேசு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல், “திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோரை அடித்தளமாகவும் கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறோம்” (எபே
2:20) என்கிறார். இப்பகுதியில் திருத்தூதர் பவுல், இறைவன் கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் அல்ல; மாறாக, இறைமக்களின் இதயங்களில் வாழ்பவராக இருக்கிறார் என்கிறார். ‘ஊனுடம்பு ஆலயம்’ என்று திருமூலர் கூறியதில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு அன்றோ!
நிறைவாக,
இன்றைய விழா நமக்கு உணர்த்தும் பாடம்: முதலில், நாம் ஒவ்வொருவரும் இறைத் தாங்கிகள். அதாவது மனிதராகிய நாம் கடவுளின் உடனிருப்பைத் தாங்கியுள்ள உயிருள்ள நடமாடும் ஆலயங்கள் என்பதை உணரவேண்டும். இரண்டாவதாக, நமக்குள் இறைவன் தங்கி வாழ்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும், நமது உடலென்னும் ஆலயத்தைப் புண்ணியங்களால் அலங்கரிக்கவும் வேண்டும். ‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்’ என்பது கண்ணதாசரின் பொருளுள்ள வரிகள். மூன்றாவதாக, பெருங்கோவில்களில் அலங்காரங்களைப் பார்த்துப்பழகிய நாம், மனிதரில் கடவுளைப் பார்க்கும் நிலைக்கு உயரவேண்டும். அறிவால் கடவுளை ஆராய்வதைவிட அன்பால் கடவுளை உணர்வோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று!
இறப்பு மனித வாழ்வின் தவிர்க்க இயலாத ஒரு சந்திப்பு. நமது வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பதும் அழுத்தம் கொடுப்பதும் இறப்புதான். இறப்பு என்பது கல்லறையோடு முடிந்துவிடும் மாயை அல்ல; மாறாக, உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களைக் கட்டியெழுப்ப நடத்தப்படும் போராட்டங்களின் நிறைவு. எனவேதான், இறப்பின் அர்த்தம் என்னவென்று சிந்திக்கையில், உண்மையிலேயே அது வாழ்வு பற்றிய கேள்வியாக அமைகிறது. ஆகவே, நமது இறப்பு அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது.
இறப்பை
மனநிறைவோடும் மனமகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர், இவ்வுலக வாழ்வைக் கடவுள் எதிர்பார்க்கும் வகையில் வாழ்ந்துள்ளார் எனப் புரிந்துகொள்ளலாம். நமது வாழ்வு இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றது இன்றைய கல்லறைத் திருவிழா! இன்று நாம் இறப்பைச் சந்தித்த நமது அன்புக்குரியவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறோம். இந்த நாளைப் பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ், “கடந்த காலத்தையும் நம்மோடு வழிநடந்தவர்களையும் நமக்கு வாழ்வு தந்தவர்களையும் நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களையும் நினைவுகூரும் நம்பிக்கையின் நாள்” என்கிறார் (மறையுரை, 02.12.2018).
நமது
கத்தோலிக்க மரபின் சிறப்புமிக்க ஒரு பழக்கம் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பது. இந்த நாளில் ஏன் நாம் இறந்தவர்களை நினைவுகூர வேண்டும்? திருவிவிலியத்தில் இதற்கான குறிப்புகளும் முன்னுதாரணங்களும் உண்டா? திரு அவையில் இந்தப் பழக்கம் எப்போது வந்தது? இது போன்ற பல கேள்விகள் இன்று
நம் முன்னால் வைக்கப்படுகின்றன. இதற்கான புரிதல்களை இன்று தேடுவது நமது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாக அமையும்.
இன்று
நாம் கொண்டாடும் ‘இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரின் விழா’ கத்தோலிக்கத் திரு அவையில் மட்டுமல்லாமல், பிற திரு அவைகளும் கூட இந்நாளில் இறந்தவர்களை நினைவுகூர்கின்றன. இந்த விழாவானது புனித ஒடிலோ என்பவரால் 10-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. அன்றைய நாளில் துறவு மடத்தில் உள்ள துறவிகள் சிறப்புச் செபங்களை, பாடல்களை இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுத்தனர். 15-ஆம் நூற்றாண்டில் மூன்று திருப்பலிகளை அருள்பணியாளர்கள் இந்த நாளில் கொண்டாடினர். திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் 1920-ஆம் ஆண்டு இந்த விழாவைத் திரு அவையின் அதிகாரப்பூர்வ விழாவாக மாற்றினார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் “கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்தே வழிப்போக்கர்களின் திரு அவை இறந்தவர்களின் நினைவை வணக்கத்தோடு கொண்டாடி வந்துள்ளது” (திருச்சபை
எண். 50) என்று இவ்வழக்கத்தின் தொன்மையைக் குறித்துக் குறிப்பிடுகிறது.
நமது
மரபுகளும் இறைவார்த்தைகளும் இறந்தோரை நினைவுகூர்ந்து செபிக்கவே நம்மை அழைக்கின்றன. தொடக்க காலத் திரு அவையின் வாழ்க்கையையும் வரலாற்றையும் அறிய நமக்கு உதவியாக இருந்தவை கல்லறைச் சுரங்கங்களே (Catacombs). இறந்தோரின்
கல்லறைக் குகைகளில் அவர்களுக்கான செபங்கள் குறியீடுகளாக, வார்த்தைகளாகப் பொறிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இறந்தோருக்கு அமைதி, நிலையான வாழ்வு, மீட்பு, கிறிஸ்துவுடன் ஒன்றிணைதல், வானதூதர்களோடு இணைதல் போன்ற வார்த்தைகள் கல்லறைகளில் செபங்களாகப் பொறிக்கப்பட்டிருந்தன. கி.பி. 120 - 200 உள்பட்ட
காலத்தில் வாழ்ந்த பிரிகியாவில் உள்ள அயரா போலிசின் ஆயர் அபெர்சியூஸ் தான் இறப்பதற்கு முன்னதாகவே தனக்கான கல்வெட்டில், ‘அபெர்சியுசாகிய எனக்காகச் செபியுங்கள்’ என்று
எழுதியுள்ளார்.
முதல்
நூற்றாண்டிலிருந்தே மக்கள் கல்லறைகளைச் சந்தித்து இறந்தவர்களுக்காக அடிக்கடிச் செபித்துள்ளனர். ‘தொடக்கத் திரு அவையின் இரு தூண்கள்’ எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக இருந்தன. திருமறைத் தந்தையான தெர்த்தூலியன் கி.பி. 211-இல்
தான் எழுதிய ‘The Crown’ என்ற
தொகுப்பில், ‘இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவு நாளில் அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்போம்’ என்று
எழுதியுள்ளார். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த எருசலேம் நகரத்துப் புனித சிரில் (கி.பி. 315-386) தனது
மறைபரப்புப் போதனையில் ‘இறந்த நம்பிக்கையாளர்களை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலி அந்த ஆன்மாக்களுக்கு மிகுந்த பலன் தரும்’ என்று நம்புவதாக எழுதியுள்ளார். மேலும், புனித அகுஸ்தினாரின் தாய் புனித மோனிக்கா தன் மகனிடம், “ஒன்றே ஒன்றை மட்டும் உன்னிடம் கேட்கிறேன்: திருப்பலியில் ஆண்டவருடைய பீடத்தில் என்னை நினைத்துக்கொள்” என்று
வேண்டுகோள் வைத்தார். ஆகவே, இறந்தோருக்காக நாம் பலி ஒப்புக்கொடுத்து வேண்டுவது நம் திரு அவையில் தொன்றுதொட்டு உள்ள மரபு. எனவேதான் இன்றைய நாளில் மிகச் சிறப்பாக இறந்தோரை நினைவுகூர்ந்து பலி ஒப்புக்கொடுத்துச் செபிக்கின்றோம்.
இறந்த நம்பிக்கையாளர்களை
அன்புடன் நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிக்க இறைவார்த்தையும் நம்மைத் தூண்டுகின்றது. சீராக்கின் ஞானநூல், “உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு; உயிர் நீத்தோருக்கும் அன்பு காட்ட மறவாதே”
(7:33) என்கிறது. “குழந்தாய் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்து... அவர்களுடைய அடக்கத்திற்குச் செல்லத் தவறாதே”
(38:16). இறந்தவர்கள்
தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர்களுக்காக வேண்டிக்கொள்வது புனிதமும் பயனுள்ள எண்ணமுமாய் இருந்துள்ளது (2மக் 12:45). மோசே, ஆரோனுக்காக இஸ்ரயேல் மக்கள் 30 நாள்கள் துக்கம் கடைப்பிடித்துக் கொண்டாடினர். புதிய ஏற்பாட்டில் இயேசு தம் நண்பன் இலாசருக்காக உள்ளம் குமுறிக் கலங்கி (யோவா 11:33) அழுதார் (11:35). இவ்வாறாக, இறந்த உறவுகளுக்காகத் துயரம் கொண்டாடுவதும் நினைவுகூர்வதும் திருவிவிலிய அழைப்பாகவே உள்ளது.
இன்றைய
நாள் கொண்டாட்டம் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? இந்த நாள் அ) நினைவு (செபித்தல்),
ஆ) நன்றி, இ) நம்பிக்கை என்ற
மூன்று எண்ணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
முதலாவதாக,
இந்த நாள் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நினைவு நாள். ‘பழகிப் புரிந்த உயிர்கள் பல விலகிப் பிரிந்து
போயின. நிலவு போல ஒளிர்ந்த முகங்கள் நினைவுகளாய் ஆயின’ என்ற நமது பாடல் வரிகள் இறந்தோரின் நினைவுகளின் உன்னதத்தைக் கோடிட்டுக்காட்டுகின்றன. மனித வாழ்வில் உறவுகளை மரணம்கூட உடைத்துவிட முடியாது. மரணம் உடலைப் பிரித்தெடுத்தாலும் நினைவுகளை மரணத்தால் பிரித்தெடுக்க இயலாது. மனிதன் இறந்தாலும் அல்லது உடல் மறைந்தாலும் உறவுகள், நினைவுகள் தொடர்கின்றன. சந்தித்த இழப்புகளை, தொலைத்த உறவுகளை, இறந்த மனிதர்களை நாம் நம் நினைவுகளில் சுமந்தே வாழ்கிறோம். நீங்கா நினைவில் இறந்தோர் வாழ்கின்றனர். ஜலாலுதின் ரூமி என்ற சூஃபி அறிஞர், “நினைவுகள் இருக்கும்வரை பிரிவுகள் சுடுவதில்லை. நான் மரித்த பிறகு என்னைக் கல்லறைக் குழிகளில் தேடாதீர்கள்... மனிதர்களின் மனக்குகைகளில் தேடுங் கள்” என்கிறார். கல்லறையில் மனிதன் காணாமல் போனாலும் மனிதர்களது மனக்குகைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் நாம் இறந்தவர்களை நினைவுகூர்கிறோம்.
இரண்டாவதாக,
இந்த நாள் ஒரு நன்றியின் விழா. “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும்
கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனித கையால் கட்டப்படாதது, நிலையானது”
(2கொரி 5:1) என்று பவுல் குறிப்பிடுவது போல, பூமியில் புதைக்கப்பட்ட உடல்கள் விண்ணகத் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்கு கொள்கின்றன என்பது நமது நம்பிக்கை. ஆகவே, விண்ணகத் தூயோரின் நினைவைப் போற்றுவதும், அவர்களைக் குறித்து கடவுளுக்கு நன்றி பாராட்டுவதும் அவர்களோடு நமக்குள்ள சகோதர அன்பைச் செயல்படுத்துவதாக அமைகிறது.
மூன்றாவதாக,
இந்த நாள் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதாவது, இறந்த நமது சகோதர-சகோதரிகள் இளைப்பாறும் இடமான கல்லறைக்கு நாம் செல்லும்போது, இறந்து அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை நாம் புதுப்பித்துக்கொள்கிறோம். இறைத்தந்தையின் அன்பைக் காணும் இடத்தில், நமக்குமுன் வாழ்ந்து இறந்தவர்களை நாம் உறுதியாகச் சந்திப்போம் என்பதுதான் நமது நம்பிக்கை. ஆகவே, மணமகனைச் சந்திப்பதே நம் வாழ்வுப் பயணத்தின் இலக்கு என்றால், அவ்வாழ்வில் வழங்கப்பட்டுள்ள நேரத்தை அன்பில் வளர்வதற்குரிய நேரமாக மாற்றிக்கொள்வோம். மரணம் முடிவல்ல; எனவே, வாழ்வில் நாம் ஒருவர் மற்றவருக்காக இறப்பதற்குக் கற்றுக்கொள்வோம். இறைவன்
மனம் மகிழ்ந்து பாராட்ட, மனிதர் உளமாரப் புகழ, நம் மனம் பெருமிதமடைய சிறப்புடன் வாழ்வோம். இறப்பிலும் புதுவாழ்வு பெறுவோம்.
இறைவேண்டுதல் என்பது நம்பிக்கையின் உயிர்மூச்சு. இறைவேண்டல் குறித்து எத்தனையோ விளக்கங்களைப் புனிதர்கள் வழியாகவும் இறையியலாளர்கள் வழியாகவும் நாம் பெற்றிருந்தாலும், அதனை வாழ்ந்து அனுபவிப்பதன் வழியாகத்தான் அவரவர் புரிந்துகொள்ள முடியும். வார்த்தைகளை வீணாக்காமல் அதேவேளை, அமைதியாக இறைவனிடம் இணைந்து, அவரிடம் நம்மை ஒப்படைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைப்பதுதான் இறைவேண்டல். செபம் என்பது, தான் செய்த சாதனைகளையும் நல்ல செயல்களையும் பட்டியலிட்டு சுயபுகழ்ச்சியோ அல்லது பாராட்டோ தேடும் நேரமல்ல; மாறாக, இறைவல்லமைக்கு முன் தாழ்ச்சியுடன் ‘நான் ஒன்றுமில்லாதவன்’ என்ற நிலையை ஏற்கும் நிலையாகும்.
பொதுக்காலத்தின்
30-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆன்மிக வாழ்வில் ஆணவத்தையும் அகந்தையையும் அகற்றி, தாழ்ச்சியுடனும் பணிவுடனும் வாழ்வதற்கு அழைக்கின்றன.
ஆணவம்
நம்மை இறைவனிடமிருந்து பிரித்து விடும். மாறாக, ஆணவம் அகற்றி பணிவுடனும் தாழ்ச்சியுடனும் வாழும்போது, ஒருவர் தெய்வ நிலைக்கு உயரமுடியும். கடவுள் நம்மை விட்டு வெளியேறும் இறுதி நிலையே ஆணவம். ‘ஆணவம் அழிவைக் கொடுக்கும்’ - இது
நம் முன்னோர் வகுத்த பழமொழி. “தாழ்ச்சியே மற்ற அனைத்துப் புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்பார் புனித அகுஸ்தின். தாழ்ச்சி கொண்ட மனநிலையே முழு ஈடுபாட்டுடன் கூடிய இறைவேண்டலுக்கு வழிகாட்டும். “தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்தான் முகில்களை ஊடுருவிச் செல்லும்”
(சீஞா 35:17). உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியே செபத்தின் முதல்படி. இக்கூற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய
உவமை (18:9-14).
“இருவர் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர்”
(18:10) என்று இயேசு இன்றைய உவமையைத் தொடங்குகிறார். இந்த உவமையை இயேசு கூறுவதற்கான காரணத்தை இன்றைய உவமையின் அறிமுக வரிகள் நமக்குக் கூறுகின்றன: “தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து”
இயேசு கூறிய உவமை இது. இறைவேண்டலில் பணிவு அவசியம் என்ற உயர்ந்த பாடத்தைக் கற்றுத்தர இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.
இருவர்
இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் செல்கின்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரி தண்டுபவர் (லூக் 18:10). பிளேவியஸ் யோசேபுஸ் என்ற வரலாற்று ஆசிரியரின் குறிப்புப்படி குருகுலம் சேராத சாதாரண பொதுமக்கள் கூட்டத்திலிருந்து வந்தவர்கள் பரிசேயர்கள். உரோமை அரசுடனோ அல்லது யூத தலைமைக் குருகுலத்துடனோ சேராது, மோசேயின் சட்டங்களையும் தங்கள் சட்டங்களையும் நுணுக்கமாகக் கடைப்பிடித்து உரோமை அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், திருவிவிலியத்தைப் பற்றி அனைத்து அறிவினையும் இவர்கள் கற்றுத்தெளிந்தவர்கள். திருச்சட்டம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இவர்கள் நற்செயல்கள் செய்து வந்தனர். வாரத்தில் இருமுறை நோன்பிருப்பது, வருவாயில் பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாக வழங்குவது (லூக் 18:12), திருச்சட்டம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான செயல் (இச 14:22-23). மோசே சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவற்றிற்கும்
பல மடங்கு அதிகமான செபம், தவம், உண்ணா நோன்பு, தர்மம் என்று அனைத்திலும் பரிசேயர்கள் எடுத்துக்காட்டான வாழ்க்கை நடத்தியவர்கள். அதுவும், இந்த முயற்சிகள் எல்லாமே மக்களின் கண்கள் முன்பாகவே இவர்கள் மேற்கொண்டனர். எனவே, இவர்கள் யூதச் சமுதாயத்தில் அவ்வளவு உயர்ந்த இடம்பெற்றிருந்தனர்.
பரிசேயர்களோடு
ஒப்பிடும்போது, வரிதண்டுவோர் மக்களால் இகழப்பட்டவர்கள். மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்கள்.
நாட்டை ஆண்ட அந்நிய உரோமையருக்கு வரி வசூலித்துக் கொடுத்த இவர்களிடம் நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து
போயிருந்தன. மேலும், பல வழிகளில் அநியாயவரி
வசூலித்ததால் இகழப்பட்டுப் பாவிகளாகக் கருதப்பட்டனர். இவர்கள் இருவரும் இறைவன் முன்னிலையில் இருந்தபோது, வரிதண்டுவோரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகிறார் (18:14அ).
ஏன்
இந்தத் தலைகீழ்
மாற்றம்? இருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயர் கூறியது 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் கூறியதோ நான்கு வார்த்தைகள்தான். இருவரும் ‘கடவுளே’ என்ற வார்த்தையுடன் தங்கள் வேண்டுதலைத் தொடங்கினர். பரிசேயர் தனது நேர்மையான, அப்பழுக்கற்ற வாழ்வை இறைவனிடம் பட்டியலிட்டுக் கூறுகிறார்: “கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்” (18:11) என்கிறார். தான்
செய்த எல்லாச் செயல்களுக்கும் கடவுள் பலன் அளிக்கக் கட்டுப்பட்டுள்ளார் என பரிசேயர் எண்ணினார்.
‘இவ்வளவு செய்தேன், கொடுத்தேன். இவ்வளவு பெற எனக்கு உரிமை உண்டு’ என்ற முறையிலேயே கடவுளை ஒரு கடை வியாபாரியாக எண்ணினார். ‘கடவுளே’ என்ற அந்த முதல் வார்த்தைக்குப் பிறகு பரிசேயர் கூறிய மீதி 26 வார்த்தைகளில், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசியவையே அதிகம்.
பரிசேயரின்
கூற்று இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப மேற்கொண்ட முயற்சி. சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன் மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், இவர் கடவுளுக்கே கடிவாளமிடும் முயற்சியில் ஈடுபட்டார். இதுதான் அவரின் பெரும்தவறு.
இதற்கு
மாறாக வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் தன்னை யாரோடும் ஒப்பிடாமல், “நான் ஒரு பாவி”
(18:13) என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார். கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராகத் தான் செய்த பாவங்களை ஏற்று, அவற்றிற்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையிலேயே கடவுளின் அருளிரக்கம் அவரைத் தொடுகிறது. மன்னிப்பைப் பெற்று, ‘கடவுளுக்கு ஏற்புடையவராகி அவர் வீடு திரும்புகிறார்.’ பரிசேயரோ, கடவுளுடைய அருளுக்குத் தன்னை அடிபணிய வைக்காது, தன் சுயநிறைவிலேயே தன் முன்னைய நிலையில் யாதொரு மாற்றமுமின்றித் திரும்பிச் செல்கிறார்.
இந்த
உவமை வழியாக நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? பல நேரங்களில் நம்முடைய
செபம் நமது சாதனைகளை விளக்குவதாகவே அமைகிறது. நம்முடைய செபம், நோன்பு, கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தல், நேர்ச்சை போன்ற செயல்களைப் பற்றியே நாம் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். இதுவல்ல உண்மையான செபம். ஒரு சாதாரண விவசாயி புனித ஜான் வியான்னியிடம் ஒருமுறை, “திருநற்கருணைப் பெட்டி முன் நான் செபிக்கும்போது நான் இயேசுவைப் பார்க் கிறேன்; அவர் என்னைப் பார்க்கிறார்” என்று
கூறினாராம். இதைவிட சிறந்த இறைவேண்டல் எது இருக்கமுடியும்? ஆகவே, இறைவேண்டலினால் விண்ணகத்தையும் அசைத்துவிடலாம்; கடவுளைத் தன் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என எண்ணுவது தவறான
போக்கு. “செபங்கள் இறைவனை மாற்றுவதில்லை, செபம் செய்பவரை மாற்றுகின்றன” என்கிறார்
சோரன் கிர்க்ககார்டு (Søren Kierke gaard). ஆகவே,
நம்முடைய வேண்டுதல்கள் நமக்குள் வியப்புக்குரிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.
இரண்டாவதாக,
பல வேளைகளில் “மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் நம் வேண்டுதல் கேட்கப்படும்” (மத்
6:7) என நாம் நினைக்கிறோம். நம்முடைய நல்ல செயல்களைக் கடவுளுக்கு நினைவூட்டி நாம் நல்லவர்கள் என்பதில் பெருமையடைகிறோம். நம் நல்ல செயல்களை அன்று; கடவுளின் நல்ல செயல்களை எடுத்துக்கூறுவதுதான் செபத்தின் மையமாக இருக்கமுடியும். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “ஆன்மிக ஆணவம் கடவுளை வணங்குவதைவிட, தன்னலத்தை வணங்குவதற்கு நம்மை இட்டுச் செல்லும்”
(மூவேளைச் செபவுரை, 23.10.2022) என்பதை உணரவேண்டும்.
மூன்றாவதாக,
தற்பெருமை உடையோரும் பிறரை இகழ்வோரும் என்றுமே உண்மையான செப மனிதராக இருக்கமுடியாது. ஆண்டவர் முன்னே அமரும்போது ஆணவமின்றி அமர்வதே உண்மையான செபம். ‘பூவும் புல்லும்போல் புவியில் வாழ்கிறேன்’ என்று
தன்னிலை உணர்வதும், அதனை ஏற்றுக்கொள்வதுமே உண்மையான இறைவேண்டலின் கூறுகள். மனத்தாழ்மையோடு எந்த அளவிற்கு நம்மையே தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்குக் கடவுள் நம்மை உயர்த்துவார். உண்மையான மனத்தாழ்மையில் நாம் இருக்கும் உண்மை நிலையை அப்படியே கடவுளிடம் எடுத்துக்கூறும் சக்தியுடையவர்களாக மாறுவோம். “களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?” (யோபு 10:9) என்று தனது ஒன்றுமில்லா நிலையை இறைவன் முன்னிலையில் வெளிப்படுத்துவோம்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில் வசித்து வருபவர் மரியகுட்டி. இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். கணவர் மற்றும் மகன் என ஆண் துணை இல்லாததால் கைம்பெண் உதவித்தொகை இவருக்குக் கிடைத்தது. 45 ஆண்டுகளாகக் கிடைத்து வந்த ஓய்வூதியம் கடந்த ஐந்து மாதங்களாக இவருக்குக் கிடைக்கவில்லை. தனது வாழ்வாதாரத்திற்கு உதவியாகக் கிடைத்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால், மண்சட்டியுடன் தெருவில் இறங்கி ‘பிச்சை சட்டி’ ஏந்திப் போராட்டம் நடத்தினார். ‘ஏழைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்’ என்ற அட்டையுடன் பிச்சை சட்டியை ஏந்தி தெருவில் இறங்கிய போது மக்கள் ஆதரவு கிடைத்தது. போராட்டம் அரசின் காதுகளுக்கு எட்டியது. தனிமனிதராகப் போராடி வெற்றியும் கண்டார்.
பொதுக்காலத்தின்
29-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நீதிக்கான போராட்டத்தில்
இறைநம்பிக்கையுடன் தளர்வின்றிப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில் இஸ்ரயேலர்கள் அமலேக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதைக் காண்கிறோம்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தவர்கள்
அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேலர்களுக்கு
எதிராகப் போர் தொடுக்க வருகிறார்கள் என்ற செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து,
அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச்
செய்தது. இஸ்ரயேல் மக்களை அமலேக்கியர் இரபிதிம் என்னுமிடத்தில் எதிர்த்துப் போரிட வந்தபோது,
குன்றின்மேல் நின்று மோசே கரங்களை உயர்த்திச் செபித்தபோதெல்லாம் வெற்றி கண்டனர். மோசே
தளர்ந்து தன் கைகளைத் தளரவிட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றி அடைந்தனர். ஆனாலும், தங்களின்
நீதிக்கான போராட்டத்தில் இறைவனின் துணையோடு மோசே வெற்றி பெறுகிறார்.
இன்றைய
நற்செய்தியில் தனது உரிமைக்கான போராட்டத்தில் ஒரு கைம்பெண் எப்படி வெற்றி பெறுகிறார்
என்பதை லூக்கா பதிவுசெய்கிறார். இந்த உவமையைப்
புரிந்துகொள்வதற்கு முன்னர் முதலில் இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்களின்
நிலையைப் புரிந்துகொள்வோம்.
கைம்பெண்களைப்
பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.
கைம்பெண்கள் இழிவாக நடத்தப்பட்டனர்; அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. ஆண்களை மையப்படுத்தி
அமைந்திருந்த இஸ்ரயேல் சமுதாயத்தில், கணவனை இழந்தக் கைம்பெண்கள் நிலம், சொத்து ஆகிய
பிற உரிமைகளையும் இழந்தனர். சட்டப்படி உரிமைகளற்ற இவர்கள், கணவனின் குடும்பத்தினர்
காட்டக்கூடிய கருணையை நம்பியே வாழ வேண்டியிருந்தது. அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது.
சமுதாயத்தில் சக்தியற்றவர்கள் என்று தெரிந்தால், இந்தச் சமூகம் அவர்களைப் பல வழிகளிலும்
பயன்படுத்தும், துன்புறுத்தும். கணவன் இன்றி, குழந்தைகளின் துணையும் இன்றி உள்ள கைம்பெண்கள்
சந்திக்கும் துயரங்கள் மனித வரலாற்றில் நீண்டதொரு தொடர்கதை. இறைவன் ஏழைகள், அந்நியர்,
அனாதைகள், கைம்பெண்கள் ஆகிய வலுவிழந்த மக்கள் சார்பில் இருப்பவர் என்ற கருத்துதான்
இன்னமும் இவர்களை வாழவைக்கிறது (இச 10:18; 24:17; 27:19; விப 22:22; மலா 3:5).
இன்றைய
நற்செய்தியில் வரும் கைம்பெண் நம்பிக்கையால் உந்தப்பட்டு, கடவுள் எப்படியும் தன் சார்பில்
வருவார், தனக்கு நீதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் போராடுகிறார். இயேசுவின் காலத்தில்
இரண்டு நீதிமன்றங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன: 1. தோரா நீதிமன்றம், 2. அரசு
நீதி மன்றம். தோரா நீதிமன்றம் யூதச் சட்டமாகிய தோரா (ஐந்நூல்கள்) அடிப்படையிலும் (மிஷ்னா
சன் கெட்ரின் 1:6). அரசு நீதிமன்றம் அரசு சட்டத்திற்கேற்பவும் நீதி வழங்கியது. உவமையில்
கூறப்பட்டுள்ள கைம்பெண் தோரா நீதிமன்றத்திற்கு வந்து வழக்காடுகிறார். “என் எதிரியைத்
தண்டித்து எனக்கு நீதி வழங்கும்” (லூக் 18:3) என்பதே நடுவரின்முன் இக்கைம்பெண்
வைத்த வேண்டுதல். ஆனால், நீதி வழங்கவேண்டிய நடுவரோ வழக்கை இழுத்தடிக்கிறார். ஆனாலும்,
தனக்கு ‘நீதி வேண்டும்’ என்பதில் தெளிவாய் இக்கைம்பெண் நீதியைப்
பெற்றிட முன்னெடுத்த செயல்பாடுகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.
முதலில்,
ஒரு பெண் - குழந்தை நிலையில் தந்தைக்கும், மனைவி - என்ற நிலையில் கணவனுக்கும், முதுமை
நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில்,
இந்தக் கைம்பெண் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் நில்லாது தனியாக நின்று செயல்படுகிறார்.
ஒரு பெண் தனித்து நின்று போராடுவதே வெற்றிதான்.
இரண்டாவது,
நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பவர்கள், நேரடியாகத் தங்கள் வழக்கை வாதாடவேண்டும். அவர்கள்
சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் கிடையாது. வழக்கிற்குச் சாதகமாகவோ அல்லது அதற்கு எதிராகவோ
ஓரிருவர் சாட்சி சொல்லலாம். இங்கும் ஒரு சிறு பின்னடைவு பெண்களுக்கு உண்டு. பெண்கள்
பொது இடங்களில் சாட்சி சொல்வது மிக மிக அரிது. நீதிமன்றங்கள் என்பவை ஆண் செயல்பாட்டிடம்.
எனவே, பெண்கள் சாட்சி கூறினாலும், அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் ஆண்களின் விருப்பத்தைப்
பொறுத்தது. இத்தகைய சூழ்நிலையிலும் இக்கைம்பெண் தனியாகவே நீதிமன்றம் சென்று தானே வழக்காடியது
ஆணாதிக்கச் சமூக அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
மூன்றாவதாக,
நடுவர் இக்கைம்பெண்ணின் வழக்கிற்குச் செவிசாய்க்கவில்லை (8:4). எனவே, இந்தக் கைம்பெண்
தன் வழக்கில் நீதி வழங்கவில்லையே என்று தளர்வடையவில்லை; மனமுடைந்து அமைதியாகிவிடவில்லை;
சோர்வுற்று வழக்கைக் கைவிட்டுவிடவுமில்லை; நம்பிக்கையிழந்து நொந்துகொள்ளவுமில்லை. மாறாக,
போராட்டப் பாதையில் இறங்குகிறார். ‘நீதி வேண்டும்’ எனத்
தொடர்ந்து குரல் எழுப்புகிறார். இதுவரை கைம்பெண்ணின் பிரச்சினையாக இருந்த இந்த வழக்கு
ஒரு பொதுப்பிரச்சினையாக மாறுகிறது. பலமுறை நீதிமன்றம் (4:5) சென்று தனக்கு நீதி வேண்டும்
என்று தொடர்ந்து குரல் கொடுத்ததால், தன் வழக்கை இனியும் தள்ளிப்போட முடியாது என்ற சூழலைக்
கைம்பெண் உருவாக்குகிறார். இனியும் இவ்வழக்கைத் தள்ளிப்போட்டால் நடுவர் தோராவுக்கு
எதிராகச் செயல்படுபவர் என்ற கண்டனக் குரலுக்கு ஆளாகிவிடுவார். அதற்கு அந்த நடுவர் தயாராக
இல்லை; எனவே, அக்கைம்பெண்ணுக்கு நீதி வழங்குகிறார். கைம்பெண் தன்னுடைய தொடர் போராட்டத்தில்
வெற்றியும் பெறுகிறார்.
இந்த
உவமை வழியாக இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? 1) இந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டும்
கைம்பெண் ஒரு சாதாரணமான பெண் அல்ல; அவர் ஓர் இறையாட்சிப் போராளி எனலாம். இன்று இறையாட்சிப்
பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இந்தக் கைம்பெண்
இரந்து மன்றாடி, நடுவரின் காலில் விழுந்து நீதியைப் பெறவில்லை; அவர் யாரிடமும் கெஞ்சிக்
கூத்தாடவில்லை; மாறாக, அவர் போராடினார். நீதிக்காகப் போராடினார். போராடி நீதியை வென்றெடுத்தார்.
எனவே, சமூகத்தின் அநீதச் சக்தியை எதிர்த்து நிற்பது இறையாட்சியின் முக்கியச் செயல்பாடு
என்பதை இக்கைம்பெண் நமக்கு உணர்த்துகிறார்.
2)
“மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும்”
(லூக் 18:1) என்பதற்கு உருவகமாக இயேசு கூறிய உவமையில் இறைவேண்டல் என்பது வெறுமனே புகழ்ச்சியும்
நன்றியும் வேண்டலும் மட்டுமல்ல; அது ஒரு நம்பிக்கை போராட்டம் என்பதை உணர்கிறோம். திருத்தந்தை
பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு இறைவேண்டல் பற்றிய புதன் மறைக்கல்வி உரையில் “ஊக்கமின்மை,
கவலை, ஏமாற்றம் போன்ற மனித அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றபோது, இறைவேண்டல் என்பது
எளிதானதன்று; மாறாக, அது ஓர் அகப் போராட்டம்” என்கிறார்
(12.05.2021). எனவே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுவது போல, அநீத அமைப்புகளுக்கு
முன் தலை வணங்காது கண்டித்துப் பேசுவதும் கடிந்துகொள்வதும் இறைவார்த்தையை அறிவிப்பதும்
இறைவேண்டல்தான் (2 திமொ 4:2).
3)
நிறைவாக, ஏழைகள் நசுக்கப்படுகின்ற போது, “ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு
நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்” (திபா 10:1) என்ற எண்ணங்கள் தோன்றலாம்.
“அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல்
இருப்பாரோ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?” (லூக் 18:7) என்ற இறைவார்த்தையில்
நம்பிக்கைகொண்டு தொடர்ந்து செபிக்கவேண்டும். இன்னல்கள், இடைஞ்சல்கள் இடையிலும் ‘படைகளின்
ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்’ (2சாமு 5:10) என்ற நம்பிக்கையே நம்
அழுத்தமான இறைவேண்டல்.
உலகில் இன்றுவரை மிகப்பெரிய அறிவியல் அறிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஏறத்தாழ ஈராயிரம் கருவிகளைப் புதிதாகக் கண்டுபிடித்து, மனித வாழ்விற்கு வளம் சேர்த்தவர். 1914-ஆம் ஆண்டு அவரது பரிசோதனைக் கூடம் திடீரென தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. அப்போது அவருக்கு வயது 67. அவர் பல்லாண்டுகளாய் எடுத்து வைத்திருந்த குறிப்புகள் அனைத்தும் சாம்பலாயின. மறுநாள் காலையில் சாம்பல் குவியலாய் மாறியிருந்த பரிசோதனைக் கூடத்தைப் பார்த்துவிட்டு எடிசன் கூறினார்: “துன்பத்தில் ஒரு பெரும் பயன் இருக்கிறது. நம் தவறுகள் எல்லாம் எரிந்துவிடுகின்றன. நமது பணிகளை நாம் மீண்டும் புதிதாகத் தொடங்கலாம். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.”
நன்றியுணர்வு
நல்லொழுக்கங்களில் சிறந்தது. நமக்கு இறைவன் செய்த நன்மைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி பாராட்டுவது அடிப்படையான மானுடப் பண்பு. ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு, கடவுள் நம் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்புக்கும், நாம் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் நன்றிகூற அழைப்புவிடுக்கின்றது.
சிரியா
நாட்டுப் படைத்தலைவரும், வலிமைமிக்க வீரருமான நாமான் தொழுநோயிலிருந்து நலம்பெற, இஸ்ரயேலில் கடவுளின் அடியார் எலிசாவைச் சந்தித்து அவர் வாக்கிற்கிணங்க செயல்பட்டதையும், அவர் தோல் நோயிலிருந்து முழுமையாக நலம்பெற்றதையும், “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை”
(2அர 5:15) என உறுதியாக அறிக்கையிட்டதையும்
நன்றி நிறைந்த உள்ளத்துடன் அவருக்கு அன்பளிப்புக் கொடுக்க முன்வந்ததையும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது.
பத்துத்
தொழுநோயாளர்கள் நோய் நீங்கப் பெற்ற நிகழ்வில் செய் நன்றி மறவாமல், நலமளித்த இயேசுவுக்கு நன்றி கூறவந்த சமாரியரையும் “கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” (17:18) என இயேசு அவரைப்
பாராட்டியதையும் இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. நாம் நம்பத்தகாதவரெனினும் கடவுள் நம்பத்தகுந்தவராக இருக்கிறார் (2திமோ 2:13) என்பதை பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார். “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே”
(1தெச 5:18) என இன்றைய வாழ்த்தொலியில்
பாடுகிறோம்.
மேற்குறிப்பிட்ட
இறைவார்த்தைகளின் பின்னணியில் இன்றைய வழிபாடு நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன? முதலில் மனிதர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக, ஏழைகளை, குழந்தைகளை, மாற்றுத்திறனாளிகளை (லேவி 19:14). பொதுவாக, மனிதர் ஆள் பார்த்துச் செயல்படுவது நிதர்சமான உண்மை (யாக் 2:2-3). கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுபவர் அல்லர் (உரோ 2:11; கலா 2:6). கடவுளை மட்டுமே நம்பியவர்கள் ‘யாவேயின் ஏழைகள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களைக் கடவுள் என்றும் காப்பாற்றுவார் (திபா 35:10; எசா 61:1; மத் 5:3; லூக் 6:20). இன்றைய நற்செய்தி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
தொழுநோய்
என்பது ஒரு தோல்நோய். இயேசுவின் காலத்திலும் பழைய ஏற்பாட்டிலும் தோலில் உண்டாகும் பல்வேறு குறைபாடுகளைக் குறிக்க தொழுநோய் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த நோயைக் குணமாக்க முடியாது என்பதாலும், இது விரைவாக மற்றவர்களுக்குப் பரவும் என்ற காரணத்தாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டனர். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் தண்டனைக்கு உள்ளானவர்கள் (எண் 12:9-10; 2 அர
15:3-5) என்றும் மக்கள் நம்பினர். தொழுநோய் என்ற காரணத்தால் யூதர்களும் சமாரியர்களும் புறக்கணித்த பத்துத் தொழுநோயாளர்களை இயேசு சந்திக்கிறார். இரைச்சல்களுக்கு மத்தியில் இயேசு அவர்களை நலப்படுத்துகிறார். இரைச்சல்களுக்கு மத்தியில் நலமளிப்பது ஒன்றும் இயேசுவுக்குப் புதிதல்ல (லூக் 8:42; 18:38). இயேசுவைப்போல நோயுற்றோரை, ஏழைகளை, மாற்றுத்திறனாளிகளை மதிப்புடனும் மாண்புடனும் நடத்தவேண்டும் என்பது இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தரும் முதல் பாடம்.
இரண்டாவது
பாடம், இயேசு நலம்பெற்றவரை நோக்கிக் கேட்ட கேள்வியில் தொடங்குகிறது. பத்துப் பேரில் நலம் பெற்ற ஒருவர் தம்மை நோக்கித் திரும்பி வருவதைக் காணும் இயேசு, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?” (லூக் 17:17) எனக் கேட்கின்றார். இந்தக் கேள்வி இயேசுவின் ஒட்டுமொத்த மனநிலையையும் அவரது ஏக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது. தங்களிடையே எவ்விதப் பாகுபாடுமின்றி நோயுற்றிருந்தபோது, பத்துப் பேரும் ஒருசேர வந்ததைக் கண்ட இயேசு, தற்போது ஒருவரை மட்டும் காண்கிறார். இந்தச் சமாரியர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற ஏக்கம்; அவர்களிடம் இயேசு கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்ற ஏக்கம் போன்றவற்றின் வெளிப்பாடே இயேசுவின் அந்தக் கேள்வி.
சமூகத்தில்
துன்பம், பேரழிவு என்று வரும் போது நாம் பல வழிகளில் இணைந்துகொள்கிறோம்.
நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போதும், கலவரங்கள், போர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும் மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோம். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு பெரும் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தகர்க்கப்பட்டபோது, செரில் ஷாயர் என்ற பேராசிரியர் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் இவை:
“கரும்புகையும் புழுதியும் சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது, நாம் ஒரே நிறத்தவரானோம். எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது, நாம் ஒரே இனத்தவரானோம். உதவி வேண்டி முழந்தாள்படியிட்டபோது, நாம் ஒரே மதத்தவரானோம். இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது, நாம் ஒரே உடலானோம். இந்தப் பெரும் அழிவை எண்ணி கூடிவந்து அழுதபோது, நாம் ஒரே குடும்பமானோம்.”
ஒரு
கொடூரமான நிகழ்வு, சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. ஒரே இனமாக்கியது; ஒரே மதமாக்கியது; ஒரே குடும்பமாக்கியது. பேரழிவின்போது சாதி, சமயம், மொழி, கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து
வெளிப்படும் மனித நேயம், அனைத்தும் சீரானபிறகு பார்க்கமுடியாமல் போய்விடுகிறது.
“மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற இயேசுவின் ஏக்கம் நிறைந்த கேள்விக்கு நாம் இன்றும் பதில் கூறமுடியாமல் தடுமாறுகிறோம். நிறம், பணம், பதவி, சாதி, இனம், மொழி என நமக்குள் இருக்கும்
ஏற்றத்தாழ்வுகள்தான் எத்தனையோ? நாம் இயேசுவுக்குக் கூறவேண்டிய பதிலே இன்று நாம் கற்றுக் கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம்.
நாம்
கற்கவேண்டிய மூன்றாவது பாடம், வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றியுணர்வு. நலம் பெற்ற பத்துப் பேரில் ஒருவர் மட்டும் திரும்பி வருவதைப் பார்க்கும்போது, நன்றி யுள்ளவர்களைவிட நன்றி மறந்தவர்கள்தான் அதிகம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நன்றி சொல்லாத தன்மை அல்லது நன்றி மறந்த தன்மையைத் திருவிவிலியம், “நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்; பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்” (சாஞா
16:29) என்கிறது. “ஓ!… குளிர்காலக் கடும் காற்றே! நீ வீசு! மனிதரின்
நன்றி மறந்த செயலைவிட உன் வாட்டும் குளிர் ஒன்றும் கொடியது அல்ல” என்று கவிஞர் ஷேக்ஸ்பியர் பாடுகிறார். “நன்றி என்னும் வார்த்தையே நமது வாழ்வு முழுமைக்கும் போதுமான செபம்” என்கிறார் மெய்ஸ்டர் எக்கார்ட்.
நாம்
நன்றியுணர்வை இறைவனுக்கு வெளிப்படுத்துவதில் மூன்று படிநிலைகளை உணரலாம். அ) தனிப்பட்ட முறையில்
இறைவன் நமக்குச் செய்யும் நன்மைகளை எண்ணி அவருக்கு நன்றிகூறல் (திபா 116:12). ஆ) தனக்கென்று இல்லாமல்
பிறருக்கும் சமுதாயத்திற்கும் கிடைக்கும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றிகூறல் (பிலி 1:3; பில 1:4). இ) வாழ்க்கையில் என்ன
நடந்தாலும் நம்மை வருத்துகிற கவலையிலும்கூட இறைவனுக்கு நன்றிகூறல் (யோபு 1:21). திருத்தந்தை பிரான்சிஸ் “தொடர்ந்து நன்றியுரைத்தலே நமது நம்பிக்கைப் பயணத்தின் உச்சக்கட்டம்” என்கிறார்.
நிறைவாக,
நன்றிகூறுதலின் முழுமை ‘நன்றி செய்தல்.’ இது ஓர் அரிதான பதமே. எளிதாக ஒருவர் செய்த நன்மைக்கு ‘நன்றி’ அல்லது ‘தேங்க்யூ’
என்று கூறி கடந்துசென்றுவிடலாம். ஆனால், நமக்கு நன்மை செய்தோருக்கு ஏதாவது நல்லது செய்வதே நன்றியுணர்வின் முழுமையான வெளிப்பாடு. நன்றியுணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலமே ஒருவர் உள்ள நலனைப் பெறமுடியும். எந்நன்றி செய்வேன் யான்? நன்றி நிறைந்த உள்ளமே கடவுள் வாழும் இல்லம்!
இங்கிலாந்தின் இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்ற புகழ்பெற்ற கோவில் உள்ளது. அக்கோவிலின் முகப்பில் ‘இருபதாம் நூற்றாண்டு மறைச்சாட்சிகள்’ என்று பத்துப் பேரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மாக்சிமிலியன் கோல்பே; மற்றொருவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. மாக்சிமிலியன் கோல்பே நாசி அராஜகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததால், நாசிகளால் Auschwitz வதைமுகாமில் அடைக்கப்பட்டு, தன் சக கைதிகளில் ஒருவருக்காக 1941, ஆகஸ்டு 14-ஆம் நாள் இறந்தார். பேராயர் ஆஸ்கர் ரொமேரோ நீதிக்காகக் குரல் கொடுத்து, அதன் விளைவாக, 1980, மார்ச் 24-ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் 1982-ஆம் ஆண்டு மாக்சி மிலியனைப் புனிதராக உயர்த்தியபோது, ‘வன்முறையால் துன்புறும் நம் காலத்திற்குப் பாதுகாவலர்’ என்று
இவரைக் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் ரோமேரோவைப் புனிதராக உயர்த்தியபோது, ‘அரசாலும் செல்வந்தர்களாலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுகாப்புத் தரும் புகலிடமாக இவர் வாழ்ந்தார்’ எனக்
குறிப்பிட்டார். வன்முறைகளுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் வாழ்ந்தாலும், வன்முறைகளுக்கு இவர்களிடமிருந்து வந்த பதில் அன்பு ஒன்றே.
இன்று
நாம் பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நம்மைச் சுற்றி நிகழும் வன்முறைகளுக்கு மத்தியிலும் கடவுளின் நற்செயல்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்க நம்மை அழைக்கின்றன.
உலக
வரலாற்றின் பெரும்பாலான பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கும்போது அவை வன்முறையால் காயமுற்ற பக்கங்களாகவே உள்ளன. போர், வன்முறை, தீவிரவாதம், அநியாயப் படுகொலைகள், ஆணவச்செயல்கள், அடக்குமுறைகள், மனிதக் கடத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்மங்கள், இயற்கை அழித்தல்கள் என வன்முறைகள் நம்மைச்
சுற்றி நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மதவெறிக்கும் இனவெறிக்கும் தீவிரவாதத்துக்கும் முடிவுகட்டிய தந்தை காந்திஜி பிறந்த நம் மண்ணை ‘அகிம்சை மண்’ என்று இன்று கூறி பெருமையடைய முடியாது. சாதிக்காகவும் சமயத்திற்காகவும் அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் கொலைகள் நிகழ்வதும் நீதிக்குக் குரல் கொடுப்பவரின் குரல்வளைகள் நெரிக்கப்படுவதும் நம் நாட்டில் நிகழும் காட்சிகளே.
மனித
வரலாற்றில் காணப்படும் வன்முறைகளுக்குப் பல வழிகளில் பதில்
கூறப்பட்டுள்ளன. இன்றும் நாம் பதில்கள் கூறி வருகிறோம். நிகழும் வன்முறைகளுக்கு மூன்று வழிகளில் பதில் கூறுவதை உணரலாம். 1. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று வன்முறைகளுக்கு வன்முறையாலேயே பதில் கூறுவது; 2. மனிதநேயமற்ற வன்முறைகளுக்கு மனித நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம் முறையிடுவது; 3. நம் இறைமகன் இயேசு வாழ்ந்து காட்டியதுபோல வன்முறைகளுக்கு அன்பால் பதில் கூறுவது.
உலக
வரலாற்றில் உண்மையும் அன்பும் மட்டுமே எப்போதும் வென்றுள்ளன. வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும்கூட வீழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. வன்முறைக்கு வன்முறை ஒருநாளும் தீர்வாகாது. வன்முறை, நன்மையைச் செய்வதுபோல் தோன்றினாலும், அந்த நன்மை நிரந்தரமற்றது; அது கொணரும் தீமைதான் நிரந்தரமானது. வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகக் கூறும் நாடுகளும் சில உள்ளன. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற வழிமுறையைச் சில நேரங்களில் நாமும் நியாயப்படுத்துகிறோம். ‘பழிக்குப்பழி’ என்று
ஒவ்வொருவரும் நடந்துகொண்டால் இந்த உலகம் மனிதர்களில்லா உலகமாகத்தான் இருக்கமுடியும்.
இந்த
உலகில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் எழுப்புகின்ற கேள்வி, ‘ஏன் இவ்வளவு வன்முறைகள், போர்கள், உயிரிழப்புகள், பச்சிளங்குழந்தைகளின் மரணங்கள்? உண்மையில் கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருந்தால் ஏன் இவற்றையெல்லாம் அனுமதிக்கிறார்? நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? நல்லவராக வாழ்வதால் என்ன பயன்? தீயோர் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? இதற்கொரு முடிவே இல்லையா? இவற்றையெல்லாம் கடவுள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றாரே?’ நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கு மத்தியில் நமக்குள் மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவை. சில நேரங்களில் இதுபோன்ற கேள்விகள் கடவுள்மீதான நமது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றன. இச்சூழ்நிலையில் கடவுளிடம் முறையிடுவதே வன்முறைகளுக்குப் பதில் கூறும் இரண்டாவது வழி என்று அபக்கூக்கு எழுப்புகின்ற முறையீட்டில் காண்கின்றோம்.
இன்றைய
முதல் வாசகத்தில், பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கி, “பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும் போது நீர் ஏன் மௌனமாய் இருக்கிறீர்?” என வினவுகிறார் அபக்கூக்கு.
“இன்னும் எத்துணை காலத்திற்கு?” (1:2), “நீர் ஏன் என்னைக் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?” (1:3) என்ற இறைவாக்கினரின் புலம்பல் யோபு இறைவனை நோக்கி எழுப்பிய புலம்பலை ஒத்திருக்கின்றன (யோபு
31:16,17,19,21,29,33,34). இறைவாக்கினர்
அபக்கூக்கு யூதா நாட்டை ஆண்ட யோயாக்கிம் காலத்தில் வாழ்ந்தவர். இவர் அசீரியப் பேரரசின் தலைநகரமாகிய நினிவே வீழ்ந்த காலத்திலிருந்து (கி.மு. 612) பாபிலோனியர்களால்
யூதா வீழ்த்தப்பட்ட (கி.மு. 588) காலம்வரை
இறைவாக்கு உரைத்தவர். சமுதாயத்தில் நேர்மையற்றோர் செல்வச்செழிப்பில் வளர்வதையும், நேர்மையாளர் நீதிக்காகத் துன்புறுத்தப்படுவதையும் பார்க்கும் போது, ‘ஆண்டவர் ஏன் இவற்றை அனுமதிக்கின்றார்?’ என்ற கேள்வியை எழுப்புவது மனித இயல்பு. இறைவாக்கினர் அபக்கூக்கு இந்த அடிப்படைக் கேள்வியை ஆண்டவரிடமே எழுப்புகிறார். அதாவது, ‘யூதாவில் வாழும் நேர்மையாளரின் நிலை என்ன?’ என்பதுதான் அபக்கூக்கு இறைவனை நோக்கி எழுப்பும் கேள்வி.
முதல்
வாசகத்தின் இரண்டாவது பகுதியில் அபக்கூக்குவின் கேள்விக்கு ஆண்டவர் பதில் அளிக்கிறார். “ஆண்டவர்மேல் கொண்ட நம்பிக்கையால் நேர்மையுடையோர் வாழ்வு பெறுவர். ஆதலால், துன்பங்களுக்கு நடுவிலும் தம்மீது நம்பிக்கை கொள்பவர்களைக் காக்க வல்லவராக ஆண்டவர் இருக்கின்றார்” எனும் ஆண்டவரின் செய்தியை அபக்கூக்கு மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். நிகழும் அநீதியைக் கடவுள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதில்லை;
மாறாக, கடவுள் ஒரு ‘நோக்கமும் இலக்கும் பார்வையும்’ வைத்துள்ளார்.
நேரம் வரும்போது அவற்றிற்கு இறைவன் முடிவு கட்டுகின்றார். அப்போது தீமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். எனவே, இறைவன் காலம் தாழ்த்தினாலும் இறைவனிடமிருந்து நீதி கட்டாயம் வரும் என்று நம்பி வாழ்வது வன்முறைக்கு நாம் தரும் இரண்டாவது பதில். இப்படிப்பட்ட நம்பிக்கையின் விளைவுகளை இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடுகிறார்.
மனித
வாழ்வின் மையமே இறைநம்பிக்கைதான். நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பதும் நம்பிக்கையே. துன்பம், நோய், பிரிவு, வறுமை, புலம்பெயர்ந்து செல்லல், அனைவராலும் கைவிடப்பட்ட நிலை போன்ற கடினமான காலங்களிலும் ஒரு மனிதரை இறைவன்மீதும் தன்மீதும் ஆழமான அன்புகொள்ளச் செய்து வழிநடத்துவதும் நம்பிக்கையே! வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த இந்த நம்பிக்கையே தேவையானதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” (லூக்
17:5) என்று சீடர்கள் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்வது எதிர்வரும் துன்பங்கள், சவால்கள், தங்களுக்கு எதிராக நிகழப்போகும் வன்முறைகள், மரணங்களுக்கு மத்தியிலும் உறுதியோடு பணிசெய்வதற்குத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்கின்ற ஆற்றல் அல்லது திறனாகும் (17:6). நம்பிக்கையே நற்செயல்களின் ஊற்று. ஆகவேதான் சவால்கள், துன்பங்கள், வன்முறைகளுக்கு இயேசு கற்றுத்தரும் மூன்றாவது வழி அன்பு.
இறுதியாக,
வன்முறைகளைப் பற்றி நினைக்கும்போது, பொதுவாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம் தெரிகின்றன. ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும் பணிபுரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், குழந்தைகள் மீது, பெண்கள் மீது, வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. இவை பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மௌனமாகச் சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவை செய்திகளாக வெளிவராததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகின்றன.
நல்ல
பண்புகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாலேயே இன்று நம் குடும்பங்களில் இந்த வன்முறைகள் அரங்கேறுகின்றன. நம் வாழ்க்கைக்குத் தேவையானது அன்பு ஒன்றே. வன்முறையின் பல வடிவங்களுக்கு மத்தியில்
நம்பிக்கையைக் கைவிடாமல் அன்பை விதைப்போம். கடுகளவு நம்பிக்கை நம்மிடம் இருந்தாலும் போதும்... வெறுப்பு எனும் கோட்டையைத் தகர்த்துவிட முடியும். வன்முறைக்கு அன்பே நம் பதிலாகட்டும்.