கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில் வசித்து வருபவர் மரியகுட்டி. இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். கணவர் மற்றும் மகன் என ஆண் துணை இல்லாததால் கைம்பெண் உதவித்தொகை இவருக்குக் கிடைத்தது. 45 ஆண்டுகளாகக் கிடைத்து வந்த ஓய்வூதியம் கடந்த ஐந்து மாதங்களாக இவருக்குக் கிடைக்கவில்லை. தனது வாழ்வாதாரத்திற்கு உதவியாகக் கிடைத்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால், மண்சட்டியுடன் தெருவில் இறங்கி ‘பிச்சை சட்டி’ ஏந்திப் போராட்டம் நடத்தினார். ‘ஏழைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்’ என்ற அட்டையுடன் பிச்சை சட்டியை ஏந்தி தெருவில் இறங்கிய போது மக்கள் ஆதரவு கிடைத்தது. போராட்டம் அரசின் காதுகளுக்கு எட்டியது. தனிமனிதராகப் போராடி வெற்றியும் கண்டார்.
பொதுக்காலத்தின்
29-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நீதிக்கான போராட்டத்தில்
இறைநம்பிக்கையுடன் தளர்வின்றிப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
இன்றைய
முதல் வாசகத்தில் இஸ்ரயேலர்கள் அமலேக்கியர்களுக்கு எதிரான போரில் வெற்றிகொள்வதைக் காண்கிறோம்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தவர்கள்
அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேலர்களுக்கு
எதிராகப் போர் தொடுக்க வருகிறார்கள் என்ற செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து,
அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச்
செய்தது. இஸ்ரயேல் மக்களை அமலேக்கியர் இரபிதிம் என்னுமிடத்தில் எதிர்த்துப் போரிட வந்தபோது,
குன்றின்மேல் நின்று மோசே கரங்களை உயர்த்திச் செபித்தபோதெல்லாம் வெற்றி கண்டனர். மோசே
தளர்ந்து தன் கைகளைத் தளரவிட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றி அடைந்தனர். ஆனாலும், தங்களின்
நீதிக்கான போராட்டத்தில் இறைவனின் துணையோடு மோசே வெற்றி பெறுகிறார்.
இன்றைய
நற்செய்தியில் தனது உரிமைக்கான போராட்டத்தில் ஒரு கைம்பெண் எப்படி வெற்றி பெறுகிறார்
என்பதை லூக்கா பதிவுசெய்கிறார். இந்த உவமையைப்
புரிந்துகொள்வதற்கு முன்னர் முதலில் இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தில் வாழ்ந்த கைம்பெண்களின்
நிலையைப் புரிந்துகொள்வோம்.
கைம்பெண்களைப்
பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.
கைம்பெண்கள் இழிவாக நடத்தப்பட்டனர்; அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. ஆண்களை மையப்படுத்தி
அமைந்திருந்த இஸ்ரயேல் சமுதாயத்தில், கணவனை இழந்தக் கைம்பெண்கள் நிலம், சொத்து ஆகிய
பிற உரிமைகளையும் இழந்தனர். சட்டப்படி உரிமைகளற்ற இவர்கள், கணவனின் குடும்பத்தினர்
காட்டக்கூடிய கருணையை நம்பியே வாழ வேண்டியிருந்தது. அன்று நடந்தது இன்றும் தொடர்கிறது.
சமுதாயத்தில் சக்தியற்றவர்கள் என்று தெரிந்தால், இந்தச் சமூகம் அவர்களைப் பல வழிகளிலும்
பயன்படுத்தும், துன்புறுத்தும். கணவன் இன்றி, குழந்தைகளின் துணையும் இன்றி உள்ள கைம்பெண்கள்
சந்திக்கும் துயரங்கள் மனித வரலாற்றில் நீண்டதொரு தொடர்கதை. இறைவன் ஏழைகள், அந்நியர்,
அனாதைகள், கைம்பெண்கள் ஆகிய வலுவிழந்த மக்கள் சார்பில் இருப்பவர் என்ற கருத்துதான்
இன்னமும் இவர்களை வாழவைக்கிறது (இச 10:18; 24:17; 27:19; விப 22:22; மலா 3:5).
இன்றைய
நற்செய்தியில் வரும் கைம்பெண் நம்பிக்கையால் உந்தப்பட்டு, கடவுள் எப்படியும் தன் சார்பில்
வருவார், தனக்கு நீதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் போராடுகிறார். இயேசுவின் காலத்தில்
இரண்டு நீதிமன்றங்கள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன: 1. தோரா நீதிமன்றம், 2. அரசு
நீதி மன்றம். தோரா நீதிமன்றம் யூதச் சட்டமாகிய தோரா (ஐந்நூல்கள்) அடிப்படையிலும் (மிஷ்னா
சன் கெட்ரின் 1:6). அரசு நீதிமன்றம் அரசு சட்டத்திற்கேற்பவும் நீதி வழங்கியது. உவமையில்
கூறப்பட்டுள்ள கைம்பெண் தோரா நீதிமன்றத்திற்கு வந்து வழக்காடுகிறார். “என் எதிரியைத்
தண்டித்து எனக்கு நீதி வழங்கும்” (லூக் 18:3) என்பதே நடுவரின்முன் இக்கைம்பெண்
வைத்த வேண்டுதல். ஆனால், நீதி வழங்கவேண்டிய நடுவரோ வழக்கை இழுத்தடிக்கிறார். ஆனாலும்,
தனக்கு ‘நீதி வேண்டும்’ என்பதில் தெளிவாய் இக்கைம்பெண் நீதியைப்
பெற்றிட முன்னெடுத்த செயல்பாடுகள் நம்மை வியப்படையச் செய்கின்றன.
முதலில்,
ஒரு பெண் - குழந்தை நிலையில் தந்தைக்கும், மனைவி - என்ற நிலையில் கணவனுக்கும், முதுமை
நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தில்,
இந்தக் கைம்பெண் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் நில்லாது தனியாக நின்று செயல்படுகிறார்.
ஒரு பெண் தனித்து நின்று போராடுவதே வெற்றிதான்.
இரண்டாவது,
நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பவர்கள், நேரடியாகத் தங்கள் வழக்கை வாதாடவேண்டும். அவர்கள்
சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் கிடையாது. வழக்கிற்குச் சாதகமாகவோ அல்லது அதற்கு எதிராகவோ
ஓரிருவர் சாட்சி சொல்லலாம். இங்கும் ஒரு சிறு பின்னடைவு பெண்களுக்கு உண்டு. பெண்கள்
பொது இடங்களில் சாட்சி சொல்வது மிக மிக அரிது. நீதிமன்றங்கள் என்பவை ஆண் செயல்பாட்டிடம்.
எனவே, பெண்கள் சாட்சி கூறினாலும், அதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் ஆண்களின் விருப்பத்தைப்
பொறுத்தது. இத்தகைய சூழ்நிலையிலும் இக்கைம்பெண் தனியாகவே நீதிமன்றம் சென்று தானே வழக்காடியது
ஆணாதிக்கச் சமூக அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.
மூன்றாவதாக,
நடுவர் இக்கைம்பெண்ணின் வழக்கிற்குச் செவிசாய்க்கவில்லை (8:4). எனவே, இந்தக் கைம்பெண்
தன் வழக்கில் நீதி வழங்கவில்லையே என்று தளர்வடையவில்லை; மனமுடைந்து அமைதியாகிவிடவில்லை;
சோர்வுற்று வழக்கைக் கைவிட்டுவிடவுமில்லை; நம்பிக்கையிழந்து நொந்துகொள்ளவுமில்லை. மாறாக,
போராட்டப் பாதையில் இறங்குகிறார். ‘நீதி வேண்டும்’ எனத்
தொடர்ந்து குரல் எழுப்புகிறார். இதுவரை கைம்பெண்ணின் பிரச்சினையாக இருந்த இந்த வழக்கு
ஒரு பொதுப்பிரச்சினையாக மாறுகிறது. பலமுறை நீதிமன்றம் (4:5) சென்று தனக்கு நீதி வேண்டும்
என்று தொடர்ந்து குரல் கொடுத்ததால், தன் வழக்கை இனியும் தள்ளிப்போட முடியாது என்ற சூழலைக்
கைம்பெண் உருவாக்குகிறார். இனியும் இவ்வழக்கைத் தள்ளிப்போட்டால் நடுவர் தோராவுக்கு
எதிராகச் செயல்படுபவர் என்ற கண்டனக் குரலுக்கு ஆளாகிவிடுவார். அதற்கு அந்த நடுவர் தயாராக
இல்லை; எனவே, அக்கைம்பெண்ணுக்கு நீதி வழங்குகிறார். கைம்பெண் தன்னுடைய தொடர் போராட்டத்தில்
வெற்றியும் பெறுகிறார்.
இந்த
உவமை வழியாக இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? 1) இந்த உவமையில் இயேசு சுட்டிக்காட்டும்
கைம்பெண் ஒரு சாதாரணமான பெண் அல்ல; அவர் ஓர் இறையாட்சிப் போராளி எனலாம். இன்று இறையாட்சிப்
பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இந்தக் கைம்பெண்
இரந்து மன்றாடி, நடுவரின் காலில் விழுந்து நீதியைப் பெறவில்லை; அவர் யாரிடமும் கெஞ்சிக்
கூத்தாடவில்லை; மாறாக, அவர் போராடினார். நீதிக்காகப் போராடினார். போராடி நீதியை வென்றெடுத்தார்.
எனவே, சமூகத்தின் அநீதச் சக்தியை எதிர்த்து நிற்பது இறையாட்சியின் முக்கியச் செயல்பாடு
என்பதை இக்கைம்பெண் நமக்கு உணர்த்துகிறார்.
2)
“மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும்”
(லூக் 18:1) என்பதற்கு உருவகமாக இயேசு கூறிய உவமையில் இறைவேண்டல் என்பது வெறுமனே புகழ்ச்சியும்
நன்றியும் வேண்டலும் மட்டுமல்ல; அது ஒரு நம்பிக்கை போராட்டம் என்பதை உணர்கிறோம். திருத்தந்தை
பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு இறைவேண்டல் பற்றிய புதன் மறைக்கல்வி உரையில் “ஊக்கமின்மை,
கவலை, ஏமாற்றம் போன்ற மனித அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றபோது, இறைவேண்டல் என்பது
எளிதானதன்று; மாறாக, அது ஓர் அகப் போராட்டம்” என்கிறார்
(12.05.2021). எனவே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுவது போல, அநீத அமைப்புகளுக்கு
முன் தலை வணங்காது கண்டித்துப் பேசுவதும் கடிந்துகொள்வதும் இறைவார்த்தையை அறிவிப்பதும்
இறைவேண்டல்தான் (2 திமொ 4:2).
3)
நிறைவாக, ஏழைகள் நசுக்கப்படுகின்ற போது, “ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு
நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்” (திபா 10:1) என்ற எண்ணங்கள் தோன்றலாம்.
“அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல்
இருப்பாரோ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?” (லூக் 18:7) என்ற இறைவார்த்தையில்
நம்பிக்கைகொண்டு தொடர்ந்து செபிக்கவேண்டும். இன்னல்கள், இடைஞ்சல்கள் இடையிலும் ‘படைகளின்
ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்’ (2சாமு 5:10) என்ற நம்பிக்கையே நம்
அழுத்தமான இறைவேண்டல்.
உலகில் இன்றுவரை மிகப்பெரிய அறிவியல் அறிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஏறத்தாழ ஈராயிரம் கருவிகளைப் புதிதாகக் கண்டுபிடித்து, மனித வாழ்விற்கு வளம் சேர்த்தவர். 1914-ஆம் ஆண்டு அவரது பரிசோதனைக் கூடம் திடீரென தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. அப்போது அவருக்கு வயது 67. அவர் பல்லாண்டுகளாய் எடுத்து வைத்திருந்த குறிப்புகள் அனைத்தும் சாம்பலாயின. மறுநாள் காலையில் சாம்பல் குவியலாய் மாறியிருந்த பரிசோதனைக் கூடத்தைப் பார்த்துவிட்டு எடிசன் கூறினார்: “துன்பத்தில் ஒரு பெரும் பயன் இருக்கிறது. நம் தவறுகள் எல்லாம் எரிந்துவிடுகின்றன. நமது பணிகளை நாம் மீண்டும் புதிதாகத் தொடங்கலாம். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.”
நன்றியுணர்வு
நல்லொழுக்கங்களில் சிறந்தது. நமக்கு இறைவன் செய்த நன்மைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி பாராட்டுவது அடிப்படையான மானுடப் பண்பு. ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு, கடவுள் நம் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்புக்கும், நாம் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் நன்றிகூற அழைப்புவிடுக்கின்றது.
சிரியா
நாட்டுப் படைத்தலைவரும், வலிமைமிக்க வீரருமான நாமான் தொழுநோயிலிருந்து நலம்பெற, இஸ்ரயேலில் கடவுளின் அடியார் எலிசாவைச் சந்தித்து அவர் வாக்கிற்கிணங்க செயல்பட்டதையும், அவர் தோல் நோயிலிருந்து முழுமையாக நலம்பெற்றதையும், “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை”
(2அர 5:15) என உறுதியாக அறிக்கையிட்டதையும்
நன்றி நிறைந்த உள்ளத்துடன் அவருக்கு அன்பளிப்புக் கொடுக்க முன்வந்ததையும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது.
பத்துத்
தொழுநோயாளர்கள் நோய் நீங்கப் பெற்ற நிகழ்வில் செய் நன்றி மறவாமல், நலமளித்த இயேசுவுக்கு நன்றி கூறவந்த சமாரியரையும் “கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” (17:18) என இயேசு அவரைப்
பாராட்டியதையும் இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. நாம் நம்பத்தகாதவரெனினும் கடவுள் நம்பத்தகுந்தவராக இருக்கிறார் (2திமோ 2:13) என்பதை பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார். “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே”
(1தெச 5:18) என இன்றைய வாழ்த்தொலியில்
பாடுகிறோம்.
மேற்குறிப்பிட்ட
இறைவார்த்தைகளின் பின்னணியில் இன்றைய வழிபாடு நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன? முதலில் மனிதர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக, ஏழைகளை, குழந்தைகளை, மாற்றுத்திறனாளிகளை (லேவி 19:14). பொதுவாக, மனிதர் ஆள் பார்த்துச் செயல்படுவது நிதர்சமான உண்மை (யாக் 2:2-3). கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுபவர் அல்லர் (உரோ 2:11; கலா 2:6). கடவுளை மட்டுமே நம்பியவர்கள் ‘யாவேயின் ஏழைகள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களைக் கடவுள் என்றும் காப்பாற்றுவார் (திபா 35:10; எசா 61:1; மத் 5:3; லூக் 6:20). இன்றைய நற்செய்தி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
தொழுநோய்
என்பது ஒரு தோல்நோய். இயேசுவின் காலத்திலும் பழைய ஏற்பாட்டிலும் தோலில் உண்டாகும் பல்வேறு குறைபாடுகளைக் குறிக்க தொழுநோய் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த நோயைக் குணமாக்க முடியாது என்பதாலும், இது விரைவாக மற்றவர்களுக்குப் பரவும் என்ற காரணத்தாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டனர். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் தண்டனைக்கு உள்ளானவர்கள் (எண் 12:9-10; 2 அர
15:3-5) என்றும் மக்கள் நம்பினர். தொழுநோய் என்ற காரணத்தால் யூதர்களும் சமாரியர்களும் புறக்கணித்த பத்துத் தொழுநோயாளர்களை இயேசு சந்திக்கிறார். இரைச்சல்களுக்கு மத்தியில் இயேசு அவர்களை நலப்படுத்துகிறார். இரைச்சல்களுக்கு மத்தியில் நலமளிப்பது ஒன்றும் இயேசுவுக்குப் புதிதல்ல (லூக் 8:42; 18:38). இயேசுவைப்போல நோயுற்றோரை, ஏழைகளை, மாற்றுத்திறனாளிகளை மதிப்புடனும் மாண்புடனும் நடத்தவேண்டும் என்பது இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தரும் முதல் பாடம்.
இரண்டாவது
பாடம், இயேசு நலம்பெற்றவரை நோக்கிக் கேட்ட கேள்வியில் தொடங்குகிறது. பத்துப் பேரில் நலம் பெற்ற ஒருவர் தம்மை நோக்கித் திரும்பி வருவதைக் காணும் இயேசு, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?” (லூக் 17:17) எனக் கேட்கின்றார். இந்தக் கேள்வி இயேசுவின் ஒட்டுமொத்த மனநிலையையும் அவரது ஏக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது. தங்களிடையே எவ்விதப் பாகுபாடுமின்றி நோயுற்றிருந்தபோது, பத்துப் பேரும் ஒருசேர வந்ததைக் கண்ட இயேசு, தற்போது ஒருவரை மட்டும் காண்கிறார். இந்தச் சமாரியர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற ஏக்கம்; அவர்களிடம் இயேசு கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்ற ஏக்கம் போன்றவற்றின் வெளிப்பாடே இயேசுவின் அந்தக் கேள்வி.
சமூகத்தில்
துன்பம், பேரழிவு என்று வரும் போது நாம் பல வழிகளில் இணைந்துகொள்கிறோம்.
நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போதும், கலவரங்கள், போர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும் மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோம். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு பெரும் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தகர்க்கப்பட்டபோது, செரில் ஷாயர் என்ற பேராசிரியர் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் இவை:
“கரும்புகையும் புழுதியும் சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது, நாம் ஒரே நிறத்தவரானோம். எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது, நாம் ஒரே இனத்தவரானோம். உதவி வேண்டி முழந்தாள்படியிட்டபோது, நாம் ஒரே மதத்தவரானோம். இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது, நாம் ஒரே உடலானோம். இந்தப் பெரும் அழிவை எண்ணி கூடிவந்து அழுதபோது, நாம் ஒரே குடும்பமானோம்.”
ஒரு
கொடூரமான நிகழ்வு, சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. ஒரே இனமாக்கியது; ஒரே மதமாக்கியது; ஒரே குடும்பமாக்கியது. பேரழிவின்போது சாதி, சமயம், மொழி, கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து
வெளிப்படும் மனித நேயம், அனைத்தும் சீரானபிறகு பார்க்கமுடியாமல் போய்விடுகிறது.
“மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற இயேசுவின் ஏக்கம் நிறைந்த கேள்விக்கு நாம் இன்றும் பதில் கூறமுடியாமல் தடுமாறுகிறோம். நிறம், பணம், பதவி, சாதி, இனம், மொழி என நமக்குள் இருக்கும்
ஏற்றத்தாழ்வுகள்தான் எத்தனையோ? நாம் இயேசுவுக்குக் கூறவேண்டிய பதிலே இன்று நாம் கற்றுக் கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம்.
நாம்
கற்கவேண்டிய மூன்றாவது பாடம், வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றியுணர்வு. நலம் பெற்ற பத்துப் பேரில் ஒருவர் மட்டும் திரும்பி வருவதைப் பார்க்கும்போது, நன்றி யுள்ளவர்களைவிட நன்றி மறந்தவர்கள்தான் அதிகம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நன்றி சொல்லாத தன்மை அல்லது நன்றி மறந்த தன்மையைத் திருவிவிலியம், “நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்; பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்” (சாஞா
16:29) என்கிறது. “ஓ!… குளிர்காலக் கடும் காற்றே! நீ வீசு! மனிதரின்
நன்றி மறந்த செயலைவிட உன் வாட்டும் குளிர் ஒன்றும் கொடியது அல்ல” என்று கவிஞர் ஷேக்ஸ்பியர் பாடுகிறார். “நன்றி என்னும் வார்த்தையே நமது வாழ்வு முழுமைக்கும் போதுமான செபம்” என்கிறார் மெய்ஸ்டர் எக்கார்ட்.
நாம்
நன்றியுணர்வை இறைவனுக்கு வெளிப்படுத்துவதில் மூன்று படிநிலைகளை உணரலாம். அ) தனிப்பட்ட முறையில்
இறைவன் நமக்குச் செய்யும் நன்மைகளை எண்ணி அவருக்கு நன்றிகூறல் (திபா 116:12). ஆ) தனக்கென்று இல்லாமல்
பிறருக்கும் சமுதாயத்திற்கும் கிடைக்கும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றிகூறல் (பிலி 1:3; பில 1:4). இ) வாழ்க்கையில் என்ன
நடந்தாலும் நம்மை வருத்துகிற கவலையிலும்கூட இறைவனுக்கு நன்றிகூறல் (யோபு 1:21). திருத்தந்தை பிரான்சிஸ் “தொடர்ந்து நன்றியுரைத்தலே நமது நம்பிக்கைப் பயணத்தின் உச்சக்கட்டம்” என்கிறார்.
நிறைவாக,
நன்றிகூறுதலின் முழுமை ‘நன்றி செய்தல்.’ இது ஓர் அரிதான பதமே. எளிதாக ஒருவர் செய்த நன்மைக்கு ‘நன்றி’ அல்லது ‘தேங்க்யூ’
என்று கூறி கடந்துசென்றுவிடலாம். ஆனால், நமக்கு நன்மை செய்தோருக்கு ஏதாவது நல்லது செய்வதே நன்றியுணர்வின் முழுமையான வெளிப்பாடு. நன்றியுணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலமே ஒருவர் உள்ள நலனைப் பெறமுடியும். எந்நன்றி செய்வேன் யான்? நன்றி நிறைந்த உள்ளமே கடவுள் வாழும் இல்லம்!
இங்கிலாந்தின் இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்ற புகழ்பெற்ற கோவில் உள்ளது. அக்கோவிலின் முகப்பில் ‘இருபதாம் நூற்றாண்டு மறைச்சாட்சிகள்’ என்று பத்துப் பேரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மாக்சிமிலியன் கோல்பே; மற்றொருவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. மாக்சிமிலியன் கோல்பே நாசி அராஜகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததால், நாசிகளால் Auschwitz வதைமுகாமில் அடைக்கப்பட்டு, தன் சக கைதிகளில் ஒருவருக்காக 1941, ஆகஸ்டு 14-ஆம் நாள் இறந்தார். பேராயர் ஆஸ்கர் ரொமேரோ நீதிக்காகக் குரல் கொடுத்து, அதன் விளைவாக, 1980, மார்ச் 24-ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் 1982-ஆம் ஆண்டு மாக்சி மிலியனைப் புனிதராக உயர்த்தியபோது, ‘வன்முறையால் துன்புறும் நம் காலத்திற்குப் பாதுகாவலர்’ என்று
இவரைக் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் ரோமேரோவைப் புனிதராக உயர்த்தியபோது, ‘அரசாலும் செல்வந்தர்களாலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுகாப்புத் தரும் புகலிடமாக இவர் வாழ்ந்தார்’ எனக்
குறிப்பிட்டார். வன்முறைகளுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் வாழ்ந்தாலும், வன்முறைகளுக்கு இவர்களிடமிருந்து வந்த பதில் அன்பு ஒன்றே.
இன்று
நாம் பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நம்மைச் சுற்றி நிகழும் வன்முறைகளுக்கு மத்தியிலும் கடவுளின் நற்செயல்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்க நம்மை அழைக்கின்றன.
உலக
வரலாற்றின் பெரும்பாலான பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கும்போது அவை வன்முறையால் காயமுற்ற பக்கங்களாகவே உள்ளன. போர், வன்முறை, தீவிரவாதம், அநியாயப் படுகொலைகள், ஆணவச்செயல்கள், அடக்குமுறைகள், மனிதக் கடத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்மங்கள், இயற்கை அழித்தல்கள் என வன்முறைகள் நம்மைச்
சுற்றி நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மதவெறிக்கும் இனவெறிக்கும் தீவிரவாதத்துக்கும் முடிவுகட்டிய தந்தை காந்திஜி பிறந்த நம் மண்ணை ‘அகிம்சை மண்’ என்று இன்று கூறி பெருமையடைய முடியாது. சாதிக்காகவும் சமயத்திற்காகவும் அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் கொலைகள் நிகழ்வதும் நீதிக்குக் குரல் கொடுப்பவரின் குரல்வளைகள் நெரிக்கப்படுவதும் நம் நாட்டில் நிகழும் காட்சிகளே.
மனித
வரலாற்றில் காணப்படும் வன்முறைகளுக்குப் பல வழிகளில் பதில்
கூறப்பட்டுள்ளன. இன்றும் நாம் பதில்கள் கூறி வருகிறோம். நிகழும் வன்முறைகளுக்கு மூன்று வழிகளில் பதில் கூறுவதை உணரலாம். 1. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று வன்முறைகளுக்கு வன்முறையாலேயே பதில் கூறுவது; 2. மனிதநேயமற்ற வன்முறைகளுக்கு மனித நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம் முறையிடுவது; 3. நம் இறைமகன் இயேசு வாழ்ந்து காட்டியதுபோல வன்முறைகளுக்கு அன்பால் பதில் கூறுவது.
உலக
வரலாற்றில் உண்மையும் அன்பும் மட்டுமே எப்போதும் வென்றுள்ளன. வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும்கூட வீழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. வன்முறைக்கு வன்முறை ஒருநாளும் தீர்வாகாது. வன்முறை, நன்மையைச் செய்வதுபோல் தோன்றினாலும், அந்த நன்மை நிரந்தரமற்றது; அது கொணரும் தீமைதான் நிரந்தரமானது. வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகக் கூறும் நாடுகளும் சில உள்ளன. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்ற வழிமுறையைச் சில நேரங்களில் நாமும் நியாயப்படுத்துகிறோம். ‘பழிக்குப்பழி’ என்று
ஒவ்வொருவரும் நடந்துகொண்டால் இந்த உலகம் மனிதர்களில்லா உலகமாகத்தான் இருக்கமுடியும்.
இந்த
உலகில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் எழுப்புகின்ற கேள்வி, ‘ஏன் இவ்வளவு வன்முறைகள், போர்கள், உயிரிழப்புகள், பச்சிளங்குழந்தைகளின் மரணங்கள்? உண்மையில் கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருந்தால் ஏன் இவற்றையெல்லாம் அனுமதிக்கிறார்? நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? நல்லவராக வாழ்வதால் என்ன பயன்? தீயோர் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? இதற்கொரு முடிவே இல்லையா? இவற்றையெல்லாம் கடவுள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றாரே?’ நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கு மத்தியில் நமக்குள் மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவை. சில நேரங்களில் இதுபோன்ற கேள்விகள் கடவுள்மீதான நமது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றன. இச்சூழ்நிலையில் கடவுளிடம் முறையிடுவதே வன்முறைகளுக்குப் பதில் கூறும் இரண்டாவது வழி என்று அபக்கூக்கு எழுப்புகின்ற முறையீட்டில் காண்கின்றோம்.
இன்றைய
முதல் வாசகத்தில், பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கி, “பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும் போது நீர் ஏன் மௌனமாய் இருக்கிறீர்?” என வினவுகிறார் அபக்கூக்கு.
“இன்னும் எத்துணை காலத்திற்கு?” (1:2), “நீர் ஏன் என்னைக் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?” (1:3) என்ற இறைவாக்கினரின் புலம்பல் யோபு இறைவனை நோக்கி எழுப்பிய புலம்பலை ஒத்திருக்கின்றன (யோபு
31:16,17,19,21,29,33,34). இறைவாக்கினர்
அபக்கூக்கு யூதா நாட்டை ஆண்ட யோயாக்கிம் காலத்தில் வாழ்ந்தவர். இவர் அசீரியப் பேரரசின் தலைநகரமாகிய நினிவே வீழ்ந்த காலத்திலிருந்து (கி.மு. 612) பாபிலோனியர்களால்
யூதா வீழ்த்தப்பட்ட (கி.மு. 588) காலம்வரை
இறைவாக்கு உரைத்தவர். சமுதாயத்தில் நேர்மையற்றோர் செல்வச்செழிப்பில் வளர்வதையும், நேர்மையாளர் நீதிக்காகத் துன்புறுத்தப்படுவதையும் பார்க்கும் போது, ‘ஆண்டவர் ஏன் இவற்றை அனுமதிக்கின்றார்?’ என்ற கேள்வியை எழுப்புவது மனித இயல்பு. இறைவாக்கினர் அபக்கூக்கு இந்த அடிப்படைக் கேள்வியை ஆண்டவரிடமே எழுப்புகிறார். அதாவது, ‘யூதாவில் வாழும் நேர்மையாளரின் நிலை என்ன?’ என்பதுதான் அபக்கூக்கு இறைவனை நோக்கி எழுப்பும் கேள்வி.
முதல்
வாசகத்தின் இரண்டாவது பகுதியில் அபக்கூக்குவின் கேள்விக்கு ஆண்டவர் பதில் அளிக்கிறார். “ஆண்டவர்மேல் கொண்ட நம்பிக்கையால் நேர்மையுடையோர் வாழ்வு பெறுவர். ஆதலால், துன்பங்களுக்கு நடுவிலும் தம்மீது நம்பிக்கை கொள்பவர்களைக் காக்க வல்லவராக ஆண்டவர் இருக்கின்றார்” எனும் ஆண்டவரின் செய்தியை அபக்கூக்கு மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். நிகழும் அநீதியைக் கடவுள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதில்லை;
மாறாக, கடவுள் ஒரு ‘நோக்கமும் இலக்கும் பார்வையும்’ வைத்துள்ளார்.
நேரம் வரும்போது அவற்றிற்கு இறைவன் முடிவு கட்டுகின்றார். அப்போது தீமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். எனவே, இறைவன் காலம் தாழ்த்தினாலும் இறைவனிடமிருந்து நீதி கட்டாயம் வரும் என்று நம்பி வாழ்வது வன்முறைக்கு நாம் தரும் இரண்டாவது பதில். இப்படிப்பட்ட நம்பிக்கையின் விளைவுகளை இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடுகிறார்.
மனித
வாழ்வின் மையமே இறைநம்பிக்கைதான். நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பதும் நம்பிக்கையே. துன்பம், நோய், பிரிவு, வறுமை, புலம்பெயர்ந்து செல்லல், அனைவராலும் கைவிடப்பட்ட நிலை போன்ற கடினமான காலங்களிலும் ஒரு மனிதரை இறைவன்மீதும் தன்மீதும் ஆழமான அன்புகொள்ளச் செய்து வழிநடத்துவதும் நம்பிக்கையே! வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த இந்த நம்பிக்கையே தேவையானதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” (லூக்
17:5) என்று சீடர்கள் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்வது எதிர்வரும் துன்பங்கள், சவால்கள், தங்களுக்கு எதிராக நிகழப்போகும் வன்முறைகள், மரணங்களுக்கு மத்தியிலும் உறுதியோடு பணிசெய்வதற்குத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்கின்ற ஆற்றல் அல்லது திறனாகும் (17:6). நம்பிக்கையே நற்செயல்களின் ஊற்று. ஆகவேதான் சவால்கள், துன்பங்கள், வன்முறைகளுக்கு இயேசு கற்றுத்தரும் மூன்றாவது வழி அன்பு.
இறுதியாக,
வன்முறைகளைப் பற்றி நினைக்கும்போது, பொதுவாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம் தெரிகின்றன. ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும் பணிபுரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், குழந்தைகள் மீது, பெண்கள் மீது, வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. இவை பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மௌனமாகச் சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவை செய்திகளாக வெளிவராததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகின்றன.
நல்ல
பண்புகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாலேயே இன்று நம் குடும்பங்களில் இந்த வன்முறைகள் அரங்கேறுகின்றன. நம் வாழ்க்கைக்குத் தேவையானது அன்பு ஒன்றே. வன்முறையின் பல வடிவங்களுக்கு மத்தியில்
நம்பிக்கையைக் கைவிடாமல் அன்பை விதைப்போம். கடுகளவு நம்பிக்கை நம்மிடம் இருந்தாலும் போதும்... வெறுப்பு எனும் கோட்டையைத் தகர்த்துவிட முடியும். வன்முறைக்கு அன்பே நம் பதிலாகட்டும்.
இரக்கம் என்பது மனிதனின் முதன்மை அடையாளம். மனித சமுதாயம் பரிவும் கரிசனையும் ஒற்றுமையும் தழைத்திருக்க வேண்டிய ஓர் உயிர்மை அமைப்பாகும். ஒருவரின் துன்ப நிலையை மற்றவர்கள் உணர்வதுதான் மனிதநேயத்தின் அடிப்படை. இதுவே, சமூகத்தின் உயிரணு. பிறரின் துன்பத்தை உணர மறுப்பது ஒருவர் மனிதனாக இருக்கவேண்டிய அடிப்படை பண்புகளை மறுப்பதாகும். ஒருவர் தனது நலனையே கருதி, பிறரின் துயரங்களை நோக்காமல், புறக்கணித்து வாழத் தொடங்கினால், அது சமூகத்தின் பேரழிவே. ‘உணர்வின்மை’ என்பது ஒருவர் பிறரின் துன்ப நிலையை, பிணிகளை, வறுமையை, பசியை, சமூக அநீதியை ஏற்க மறுக்கும் மனநிலையாகும். ஆகவேதான், உணர்வின்மை என்பது ஒரு பெருங்குற்றம்; ஒரு பெரும்பாவம்!
இன்று
நாம் பொதுக்காலத்தின் 26-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அடுத்தவர்களின் தேவையைப் பற்றிய அக்கறையின்மையும், பிறரது வேதனை பற்றிய உணர்வின்மையும் ஒரு பெருங்குற்றம் என எச்சரிக்கிறது.
இன்றைய
முதல் வாசகத்தில் ஆமோஸ் தன்னுடைய சமகாலத்துச் செல்வந்தர்களின் சொகுசு வாழ்க்கையையும் அவர்களது கிறக்க நிலையையும் இடித்துரைக்கிறார். குறிப்பாக, சமாரியாவின் உயர்குடி மக்களுக்கு எதிராக நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கின்றார். செல்வக் குவிப்பும் அதனால் ஏற்பட்ட நுகர்வுவெறிச் சொகுசுகளுமே வாழ்வுக்கான பாதுகாப்பு என அவர்கள் இறுமாந்திருந்தார்கள்.
வஞ்சிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டு ‘வாழ்வு இனிக்கிறதே’ எனச்
சுகபோகத்தில் மூழ்கியிருந்தனர். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். ஆடம்பரத்திலும் கேளிக்கைகளிலும் அழகு சாதனங்களிலும் நுகர்வுவெறியிலும் மூழ்கியிருந்த இஸ்ரயேலின் மேட்டுக்குடிப் பெண்டிரை ஆமோஸ், ‘பாசான் மாடுகள்”
(ஆமோ 4:1) என இடித்துரைக்கிறார். ஏழைகளின் உழைப்பை
மனச்சாட்சியின்றிச் சுரண்டுமாறு தங்கள் கணவருக்கு மந்திரம் ஓதிய (ஆமோ 4:1) இவர்களை ‘கொழுப்பேறிய பசுக்களாக’
(திபா 22:12) சுட்டிக்காட்டுகிறார்.
ஏழைகளின்
நலனின் அக்கறையின்றி இருப்பவர்களை ‘இன்பத்தில் திளைத்திருப்போர்’, “கவலையற்றிருப்போர்’, ‘உயர்குடி
மக்கள்’, ‘பெருமை
வாய்ந்தவர்கள்’ (6:1) போன்ற
பெயர்களில் அழைக்கும் ஆமோஸ், விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார்
(6:4). செல்வர்கள் தங்களுடைய மேட்டிமை வாழ்வால் எவற்றையெல்லாம் செய்ய இயலாதோ அவற்றைச் செய்யும் மாயை உலகில் வாழ்ந்தனர் என்று சாடும் ஆமோஸ், தாவீதைப்போல இசைப் பாடகராகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்களின் பாடல் அலறலுக்கு ஒப்பானது என்கிறார் (6:5). இவ்வாறாக, செல்வர்கள் தங்கள் எல்லாச் செயல்கள் வழியாகச் சாதாரண மக்களிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக்கொண்டனர்.
நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவத்தையோ அதற்கான வழிகளையோ அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொள்ளவில்லை. பாவப் பளு ஏற ஏறக் கடவுளின்
திசையைக் கண்டறியும் அவர்களின் பார்வைகளும் மங்கிக்கொண்டே இருந்தன.
ஆகவேதான்,
மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மை அவர்களுக்கு ஒருசேர அழிவையே உறுதியாகக் கொண்டுவரும் என ஆமோஸ் எச்சரிக்கிறார்
(6:7). ஆமோஸ் உரைத்தபடியே, அவரது இறைவாக்குப் பணி முடிந்த 30-40 ஆண்டுகளில் சமாரியா என்கிற இஸ்ரயேலின் தலைநகரம் அசீரியப் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு வடநாடு அழிக்கப்பட்டது (கி.மு. 722) என்பது
நாம் அறிந்த இஸ்ரயேலரின் வரலாறு.
வான்வீட்டில்
நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் (லூக் 16:9) என்றும் கூறும் கடவுள், தங்களுடைய சொகுசு வாழ்வுக்கும் நுகர்வுவெறிக்கும் வாயில்லா ஏழைகளின் உடலையும் உயிரையும் சுரண்டுவதை எப்படிச் சகித்துக்கொள்வார்? சுயநலத்தையும் கண்டுகொள்ளாத தன்மையையும் கண்டு கடவுள் கொதித்துப்போய் விடுகிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் ‘செல்வரும் இலாசரும்’
உவமையில், தனக்குக் கீழ் ஏழை இலாசர் உணவின்றி அவதிப்படுவதைப் பற்றிக் கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் தன்னுணர்வு அற்ற நிலையில் செல்வர் இருப்பதைப் பெருங்குற்றமாகப் பார்க்கிறார்.
மாந்தரெல்லாம்
மனநிறைவோடு வாழவேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அந்த மனநிறைவு செல்வத்தால் வந்துவிடாது என்பது இயேசுவின் போதனைத் திருப்பம். இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், சிலர் கடவுளின் படைப்பைச் சூறையாடி, அதனைப் பதுக்கி, உழைப்பவரை அடிமையாக்கி, உழைப்பிற்கும் தேவைக்குமேற்ற ஊதியம் வழங்காமல் தங்கள் வாழ்வை மட்டும் வளப்படுத்திக் கொண்டமையால் உருவானதே ஏற்றத்தாழ்வு. இதன் காரணமாகவே, இலாசர் எவ்வகையிலும் கவனிப்பாரற்றுக் கேவலமாக, உடல் முழுவதும் புண்களாய் நிறைந்து “அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்”
(லூக் 16:20). “கிடந்தார்”
என்ற சொல்லில் இலாசரின் அவலநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்றே!
இலாசரின்
நிலைமையை, அ) அவர் ஓர்
ஏழை, ஆ) அவர் உடல்
முழுவதும் புண்கள், இ) வீடற்றவர் ஈ)
பசியால் துடித்தவர் உ) நாய்களோடு இருப்பவர்
என விவரிக்கும் லூக்கா, செல்வரின் மனநிலையை இவ்வாறு விவரிக்கிறார்: அ) இலாசரைப் பற்றிச்
செல்வருக்குக் கவலை இல்லை. ஆ) அவரது பசி,
பட்டினி பற்றிச் செல்வர் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை. இ) அவர் இலாசரைக்
கண்டுகொள்ளவில்லை. ஈ) தம் செல்வத்தில்
சிறு பகுதியைப் பகிர்ந்துகொள்ளவில்லை. உ) ஒருவேளை உணவுகூட
கொடுக்க முன்வரவில்லை. ஆகவே, இலாசரின் நிலை பற்றிய ‘உணர்வின்மையே’ செல்வரின்
பெரிய குற்றமாகிறது. செல்வர் தம்மையும் தம் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள அவர் கட்டியெழுப்பிய தடுப்புச் சுவர்களே அவர் விண்ணகம் செல்லமுடியாது அவரைத் தடுத்துவிடுகின்றன (16:26).
ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே உள்ள தடைச் சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். இதுவே, இயேசு நம்முன் வைக்கும் விண்ணகத் தேர்வுக்கான சவால். ஆகவே, இறையாட்சி சமூகத்தின் உறுப்பினர் தகுதியைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்?
முதலாவதாக,
இன்றைய உலகில் பெரும் பிரச்சினை பற்றாக்குறையல்ல, பகிராக்குறையே! தான் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவைக் கடவுள் தந்துள்ளார். ஆனால், மனிதருள் பலர் போதுமான வளங்களைப் பறித்து அவற்றைத் தமக்கும் தம் தலைமுறைகளுக்கும் சேர்த்து வைத்துள்ளனர். ஒருவர் எவ்வளவு செல்வத்தை வைத்திருக்கிறார் என்பதை வைத்து இந்த உலகம் கணக்கிடும், ஆனால் அவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதை வைத்துக் கணக்கிடுபவர் கடவுள். அளவுக்கு அதிகமான செல்வம் அநீதியானது. ஏனெனில், அது அநீதியாகச் சேர்க்கப்பட்டது. செல்வம் நம் அன்றாட அனுபவத்திற்கே, அவை அன்பிற்குரியவை அல்ல. வாழ்வே உயர் செல்வம். அதை நமக்கென மட்டும் என்றில்லாமல் பிறர்க்கென வாழ்கையில் உண்மையான செல்வந்தர் நாமே. “பகிரப்படாத செல்வம் பாவமானது”
என்ற புனித பேசிலின் பார்வை முற்றிலும் உண்மை. பகிர முன்வராதோர் இறையாட்சி சமூகத்தில் உறுப்பினராகத் தகுதியற்றவர்களே!
இரண்டாவதாக,
இந்த உலக வாழ்வு மறுவாழ்வை நமக்குப் பெற்றுத்தரும். மறுவாழ்வுக்கு இந்த உலக வாழ்வே ஆதாரம். வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் நம்முடைய மறுவாழ்வை நிர்ணயிக்கின்றன. செய்த குற்றங்களுக்குத் தண்டனை என்பது பொதுவாக இவ்வுலக நீதியின் அளவுகோல். ஆனால், செய்யத் தவறிய நன்மைகளுக்காகத் தண்டனை பெறுதல் என்பது மறு உலக நீதியின் அளவுகோல். நம் அயலார்மீது அன்பு, பரிவு, கருணை காட்டுவது நாம் செய்யவேண்டிய நன்மைகள். இவற்றைச் செய்ய மறுக்கும்போது, நம் வாழ்வில் கடவுளின் எண்ணங்களும் ஏக்கங்களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இதுவே தொடர்கதையானால் பாவமே நெறிமுறையாக்கப்பட்டு கடவுளை நிரந்தரமாக மறந்துபோய்விடும் நரக நிலையை நாமே உருவாக்கிக்கொள்வோம்.
மூன்றாவதாக,
அடுத்தவர்களின் தேவைகளைப் பற்றிய கவலையின்மை, அவற்றைக் கண்டுகொள்ளாமை குறிப்பாக, பிறரின் துன்பநிலை பற்றிய ‘உணர்வின்மை’ ஒரு
பெருங்குற்றம். கொடும் வறுமை, கடுமையான நோய், பெருந்தோல்வி, இழப்பு, வஞ்சிக்கப்பட்ட நிலை, போன்றவற்றால் நொந்து நொடிந்து முகவரியற்ற நிலையில் இருக்கும் இலாசர்கள் நம் மத்தியில் ஏராளம். “இரக்கம் என்பது புலனாகாத ஒரு சொல் அல்ல, அது ஒரு வாழ்வு முறை. இரக்கத்திற்குப் பார்க்கக்கூடிய கண்களும், கேட்கக்கூடிய காதுகளும், தீர்த்து வைக்கக் கூடிய கைகளும் உள்ளன”
(சிறப்பு யூபிலி மறைக்கல்வி உரை, 30.06.2016) என்ற திருத்தந்தை பிரான்சிஸின் எண்ணங்கள் எண்ணிப்பார்க்கத்தக்கதே. எனவே, பிறரின் துன்பங்கள், தேவைகளின் நிலைபற்றி உணர்வற்றும் கவலையற்றும் நாம் வாழ்ந்தோமெனில் அதுவே, இன்றைய பெரும் பாவம்! பெருங்குற்றம்!
கடவுள் இந்த உலகைத் தமது சாயலில் மிக அழகாகப் படைத்தார். ஆனால், மனிதனோ செல்வத்தைப் படைத்தான். தன் படைப்பாம் செல்வத்தை வைத்து உலகை ஆட்டிப் படைக்க விரும்புகின்றான். இன்று செல்வத்தை நம்பியே தங்கள் செல்வாக்கை நிலைப்படுத்த விழைகின்றனர் பலர். செல்வம் தங்களைப் பாதுகாக்கும் என்ற போலி நம்பிக்கையில்தான் பலரும் பொழுதைக் கழிக்கின்றனர். செல்வம் நமக்காகவேயன்றி, நாம் செல்வத்திற்காக இல்லை என மனம் உணர மறந்துபோகிறோம். படைத்தவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செல்வத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும்போது அதற்கு அடிமையாகிறோம். வாழ்வில் நாம் பெற்ற உயர்ந்த செல்வம் நம் நெஞ்சம் வாழும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் நாயகருமான கடவுளுமே. ஒப்பற்ற செல்வம் இயேசுவைத் தவிர வேறு எவர்? (பிலி 3:8). இன்றிலிருந்து நாளை காணாமல்போகும் செல்வத்தின்மீது பற்றுக்கொண்டு, அதற்கு அடிபணிந்து வாழ்தல் மடமையும் அறிவீனமுமேயன்றி வேறேது?
பொதுக்காலத்தின்
25-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் பயன் கருதாப் பாசத்தோடு
நம்மை அரவணைக்கும் கடவுளைப்போல, ஏழை எளியோரை அரவணைத்து மதித்து நடக்க அழைப்புவிடுக்கிறது.
இன்றைய
முதல் வாசகத்தில், செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டு தவறான வழிகளில் பணத்தைக்
குவித்து, வறியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் அழித்தொழிக்க நினைக்கும் செல்வந்தர்களைக்
கண்டிக்கிறார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆடு மேய்த்தும், அத்திமரம் வளர்த்தும் பிழைப்பை
நடத்தியவர் ஆமோஸ். தென்னாடான யூதாவைச் சார்ந்த இவர், வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று
இறைவாக்குப் பணியை மேற்கொண்டார். ஆமோஸ் இஸ்ரயேல் மக்களிடம் இறைவாக்குரைக்கக் கடவுளால்
அனுப்பப்பட்டபோது, அவர்கள் பொருளாதாரத்தில்
வேரூன்றியிருந்தனர். வளமும் வாழ்வும் செல்வரிடமும் வலியோரிடமும் மட்டுமே இருந்தன. அவர்களின்
ஆன்மிகச் சக்தி அதல பாதாளத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. சிலை வழிபாடு எனும் தீயப்பழக்கம்
வானம் வரையிலும் விரிந்து பரந்திருந்தது. இந்நாட்டின் சமயத் தலைநகரம் பெத்தேல் தீமைகளின்
மையப்புள்ளியாக இயங்கிச் செயல்பட்டது. தங்கள் செல்வாக்கைப் பறைசாற்ற அரண்மனை போன்ற
வீடுகளை வானளாவாகக் கட்டி நிமிர்ந்து பார்த்தார்கள். அடிப்படை வசதிகளுடன் வீடு கட்டுவது
நியாயம். ஆனால், செல்வப் புகழைப் பறைசாற்றும் நோக்குடன் வீடு கட்டுதல் என்பது கடவுள்
தந்த வளங்களை வீணாக்குவதே! இந்தப் போக்கு இப்போதும் இவ்வுலகில் இருப்பதை அவதானிக்க
முடிகிறது.
ஓய்வுநாள்
போன்ற திருநாள்களில்கூட இறைவாக்கினைக் கேட்டுச் சிந்திக்கும் பொறுமையில்லாமல், தங்கள்
வியாபாரத்திலே ஈடுபட்டு இலாபத்தை இஸ்ரயேலர் குவித்து வந்தனர். கள்ளத்தராசு, சிறியனவாக்கப்பட்ட
எடைக்கல் போன்றவற்றால் பொருள்களின் அளவுகளைக் குறைத்துக்கொண்டு விருப்பம்போல் விலையேற்றிக்
கொள்ளை இலாபம் ஈட்டினர் (8:5). தவிட்டைக்கூட தானியம் எனக் கூறி மனச்சாட்சியை விற்றுக்
கலப்படம் செய்து கொள்ளையடித்துக் குபேரர்கள் ஆயினர் (8:6). ஏழை எளிய மக்களை அடிமைகளாக
விற்றனர் (8:6). சமயக் கொண்டாட்டங்களுக்கான வெளிப்புற ஆடம்பரங்களைப் பகட்டுடன் கொண்டாடுவதற்காக
நிதிகளைக் கொட்டிக் குவித்தனர். தங்கள் தவறை மறைப்பதற்காக, திருவிழாக்களையும் தேரோட்டங்களையும்
சடங்கு சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்தனர். வேடங்களிலும் பக்தி முழக்கங்களிலும் மயங்கி
விடுபவரல்லர் இறைவன்! (5:23)
செல்வத்தில்
மூழ்கி நிச்சயமற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த தம் சமகாலத்துப் பணக்கார மற்றும் ஆதிக்க
வர்க்கத்திடம் ‘கடவுளைத் தேடு; நீ வாழ்வாய்’ என
அழைப்பு விடுக்கிறார் ஆமோஸ். அதுமட்டுமன்றி,
கடவுளின் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுவது நாட்டுக்கே அழிவை ஏற்படுத்தும் எனவும்
எச்சரிக்கிறார்.
ஆமோஸ்
இஸ்ரயேலின் அநீதியான செயல்களைச் சாடுகின்ற அதேவேளையில், நேர்மையற்று தவறான செயல் புரிந்த
வீட்டுப்பொறுப்பாளரை இயேசு இன்றைய நற்செய்தியில் பாராட்டுகின்றார். இயேசு கூறிய இந்த
உவமை புரிந்துகொள்வதற்குக் கடினம், ஆயினும், இவ்வுவமை வழியாக இயேசு நமக்குக் கூறும்
பாடம் குறித்துச் சிந்திக்கவேண்டும். ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர்’ உவமையில், நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியை
இயேசு பாராட்டினாலும், நேர்மையற்ற செல்வத்தை நீதியான முறையில் எப்படிக் கையாள்வது?
அழியா விண்ணகச் செல்வம், பணிவிடையின் முக்கியத்துவம் குறித்துச் சில முக்கியப் பாடங்களை
இயேசு நம்முன் வைக்கின்றார்.
முதலில்,
“நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்” (16:9) என்கிறார் இயேசு. ‘நேர்மையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி
நண்பர்களைத் தேடிக்கொள்வது எப்படி முறையாகும்?’ என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை.
எனினும், இக்கூற்றில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
லூக்காவின் பார்வையில் எல்லாச் செல்வமும் நேர்மையற்றதுதான். அதாவது, தேவையில் இருக்கும்
பிறரின் தேவையை நிறைவேற்றாது, சேர்த்து வைக்கப்பட்ட செல்வம் எல்லாமே தவறான செல்வம்தான்.
எனவே, நேர்மையற்ற செல்வம் கொண்டிருப்போர் இறையாட்சியில் நுழைய முடியாது (மத்
19:24; மாற் 10:25; லூக் 18:25). எனினும், அவர்களும் இறையாட்சி சமூகத்தில் இணைய ஒரு
வாய்ப்புள்ளது. ஆம், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்வது. அதாவது,
பிறரின் தேவைகளைக் கண்டுகொள்ளாது சேர்த்து வைக்கப்பட்ட செல்வத்தை - நேர்மையற்ற செல்வத்தைப்
பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும். “முன்மதி மற்றும் படைப்பாற்றலை நல்லவற்றிற்கும்
மற்றவருக்குப் பணிபுரியவும் பயன்படுத்தப்படலாம்” எனத்
திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார் (மூவேளைச் செப உரை, 18.09.2022). தொடர்ந்து “இவ்வுலகப்
பொருள்களை நமக்கு மட்டுமே என்றில்லாமல், பிறருக்கும் பயன்படுத்தும் உடன் பிறந்த உணர்வின்
உறவுகளால் வெளிப்படுத்தப்படும் அன்பே அவசியம்” என்பார்
திருத்தந்தை. இக்கருத்தில் ஐயன் வள்ளுவன் தம் ஈரடியில்,
‘அருட்செல்வம்
செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார்
கண்ணும் உள’ (குறள் 241)
எனப்
பாடுகிறார். தவறான செயல்கள் புரியும் இழி மக்களிடம் கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்.
ஆனாலும், அந்தச் செல்வம் அருள் செல்வத்துக்கு ஈடாகாது. நாம் சேர்த்து வைத்திருக்கும்
செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போதுதான் அவற்றின் உண்மைப் பயன் வெளிப்படும்.
இரண்டாவது,
இயேசு ‘மிகச்சிறியவற்றில் நம்பத்தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பர்’ (16:10) என்கிறார். நம்பகத்தன்மை மற்றும் நேர்மை திரு
அவையின் தலைமைப் பண்புக்கான தகுதி எனலாம். நேர்மையற்ற செல்வத்தைக்கூட கையாள்வதிலேயே
நம்பகத்தன்மை இல்லையெனில் அவர்கள் இறையாட்சி சமூகத்தில் எந்தப் பொறுப்புக்கும் தகுதியற்றவர்கள்
ஆகிறார்கள். செல்வத்தை முறையாகக் கையாள்பவரே அதாவது, செல்வத்தைப் பகிர்ந்து அளிப்போரே
இறையாட்சி சமூகத்தில் உறுப்பினராகவும், அச் சமூகத்தில் பணிப்பொறுப்பையும் ஏற்கத் தகுதிபெற
முடியும். பிறருக்கு நன்மை செய்யாதவர் தனக்கும் நன்மைசெய்ய முடியாதவர் என்பதுதான் இங்குப்
புரிந்துகொள்ளும் அழகான செய்தி.
மூன்றாவது,
செல்வத்தைப் பற்றி மிக பொதுவான இறையியல் செய்தியைத் தரும் இயேசு, “ஒருவரால் கடவுளுக்கும்
செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது” (16:13) என்கிறார். செல்வம், நமக்குப்
பணிவிடை செய்யவேண்டும்; அதற்கு மாறாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும் அறிவும் கொண்ட
நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார். அதாவது, செல்வமே எல்லாம் என்று
அதற்காகவே நாம் வாழ்ந்தால், அதுவே நம் ‘கடவுளாகி’ உண்மைக்
கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும் என எச்சரிக்கின்றார்.
செல்வத்தின்மீது
நாம் கொள்ளும் மிதமிஞ்சிய பற்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தி விடும். காசையும்
கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்றவேண்டாம். அவற்றிற்குக் கோவில் கட்டவோ,
அவற்றிற்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்பதே இயேசு ஆணித்தரமாகக் கூறும்
ஆலோசனைகள். கடவுளின் கரம் பற்றும் முயற்சி நம் நம்பிக்கையை உயர்க்கச் செய்யும். வேதனை,
விரக்தி, கண்ணீர், கவலை எனத் துன்பங்கள் கழுத்திற்குமேல் போனாலும் கடவுளைத் தேடும்போது
வாழ்வுக்கான வழி பிறக்கும்.
நிறைவாக,
அ) நாம் செல்வத்தை ஈட்டுவதிலும் பயன்படுத்துவதிலும் நேர்மையான எண்ணம் கொண்டிருப்போம்.
ஆ) அழியும் இவ்வுலகச் செல்வத்தைக்கொண்டு விண்ணுலக அழியாச் செல்வத்தை ஈட்டிக்கொள்ள வேண்டுமெனில்,
இருப்பவற்றை இல்லாதவர்களிடம் கொடுத்து மகிழ்வோம் (லூக் 13:33). இ) எல்லாவற்றிற்கும்
மேலாகப் பாசத்தோடு நம்மைப் பராமரிக்கும் இறைவன் ஒருவருக்கே பணிவிடை புரிவோம். இயேசுவே
நம் ஒப்பற்ற செல்வம்!
நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலெனா அவர்கள், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம், எருசலேமில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ஓரிடத்தில் மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்ட சிலுவை எது என்பதை ஆய்வுசெய்ய, மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை எனப் புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.
அச்சிலுவையைக்
கண்டுபிடித்த இடத்தில், 335-ஆம் ஆண்டு புனித கல்லறைக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகிய நாள்களில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அர்ப்பணிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள் திருச்சிலுவையின் மகிமை விழாவெனத் திரு அவையில் கொண்டாடப்படுகிறது.
அன்பானவர்களே!
நமது பாவம் மற்றும் உலகின் தீமையைச் சிலுவை மரத்தோடு ஏற்றுக்கொண்டு, உலக மக்களை அன்பால் வெற்றிகொண்ட இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சிலுவையின் மகிமையை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவ்விழா ‘திருச்சிலுவையின் மாட்சி’,
‘திருச்சிலுவையின் வெற்றி’,
‘பெருமைமிகு திருச்சிலுவை நாள்’,
‘சிலுவை உயர்த்தப்பட்ட நாள்’ எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
நாம்
இந்த உலகில் பிறந்தபோது, நம்மை வரவேற்க நம் பெற்றோர் நம்மீது வரைந்த முதல் வரவேற்பு அடையாளம் சிலுவை. திருமுழுக்கு அருளடையாளம் வழியாக, நம்மைத் திரு அவையில் ஓர் உறுப்பினராகச் சேர்த்திடும் அடையாளம் சிலுவை. நாம் இறந்தபோது நம் கல்லறையின்மீது ஊன்றப்படும் அடையாளம் சிலுவை. இறந்த நாம் அனைவரும் மீண்டும் உயிர்ப்பெற்றெழ இறைமகன் தேர்ந்தெடுத்த அடையாளம் திருச்சிலுவை. பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றோம். சிலுவை அடையாளம் வரைந்து நாள்தோறும் நமது நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
எங்குச் சென்றாலும் சிலுவையை நாம் மறப்பதில்லை. சிலுவை என்பது நம் வாழ்வில் ஒரு தவிர்க்கமுடியாத நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது. கிறித்தவர்களின் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைந்திருந்திருப்பது திருச்சிலுவை. சிலுவையின்றிக் கிறித்தவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. திருச்சிலுவை நம்பிக்கையின் அடையாளம்; திருச்சிலுவை வாழ்வின் அடையாளம்; சிலுவை வெற்றியின் அடையாளம்; சிலுவை மீட்பின் அடையாளம்; திருச்சிலுவை அனைத்து நன்மைகளின் ஊற்று. இன்று நாம் கொண்டாடும் திருச்சிலுவையின் மாட்சி விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலில்,
திருச்சிலுவை என்பது நம் நம்பிக்கையின் அடையாளம். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வந்து, ஓர் என்ற மலையிலிருந்து செங்கடல் சாலை வழியாகப் பயணப்படும்போது மோசேவுக்கும் கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். இறைவனுக்கு எதிராகப் பேசி, பாவம் செய்த மக்களைப் பாம்புகள் கடித்தன. இச்செயல் இஸ்ரயேல் மக்கள் கடவுள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கான அடையாளமாகவும் அமைந்திருக்கின்றது. வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப் பாலைவனத்தின் வழியாகக் கடந்து சென்ற கடவுளின் மக்கள், தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் சோர்வடைந்தனர். நம்பிக்கையை இழந்த மக்கள் இறுதியில் கடவுளின் வாக்குறுதியையும் மறந்து, வளமான நாட்டை நோக்கி வழிநடத்துகின்றவர் நம் கடவுள் என்பதை நம்பும் வலிமையையும் இழக்கின்றனர்.
கடவுளை
நம்பாத மக்கள் பாம்பினால் கடிபட்டது தற்செயலான நிகழ்வு அல்ல; திருவிவிலியத்தில் தொடக்க நூலில் குறிப்பிடப்படும் முதல் பாம்பு ஆதாம்-ஏவாள் இதயத்தில் அவநம்பிக்கையை விதைத்தது. கடவுள் நல்லவரல்லர் என்றும், அவர்களின் மகிழ்ச்சி, சுதந்திரத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் கடவுள் என்றும் தீய நஞ்சைக் கக்கியது. பாலைவனத்தில் இப்பாம்பு ‘கொள்ளிவாய்ப் பாம்பாக’ தோன்றுகிறது. அதாவது, மீண்டும் மக்களின் செயலால் பாவம் திரும்புகின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பாமல், அவர்களுக்கு வாழ்வளித்த கடவுள் மேல் குற்றம் சுமத்துகின்றார்கள். குழப்பம் விளைவிக்கின்றார்கள். இதனால் தங்களது மரணத்தைச் சந்தித்து நம்பிக்கையற்றவர்களின் முடிவு இதுதான் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆக, இன்றைய வாசகத்தின் முதல் பகுதி, நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில், இறைவன் மீதும்
ஒவ்வொரு மனிதர்மீதும் ஏற்பட்ட அவநம்பிக்கையின் தருணங்களை ஆய்வு செய்துபார்க்க அழைக்கின்றது. எத்தனை முறை நம்முடைய மனச் சோர்வு, தோல்வி, விரக்திநிலை, பொறுமையற்ற தன்மை போன்றவற்றால் நமது உள்ளத்தைப் பாலைநிலமாக்கி இருக்கின்றோம்? நம் இதயங்களில் தங்கியிருக்கும் தோல்விகள் மற்றும் சோர்வுகள் இறைவனை நோக்கிப் பார்க்கும் வலிமையை இழக்கின்ற சூழல்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் நமது நம்பிக்கையின் அடையாளமாக இருப்பது சிலுவையே என்பதை உணர்கிறோம்.
இரண்டாவதாக,
திருச்சிலுவை என்பது நம் வாழ்வின் அடையாளம் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதி நமக்கு உணர்த்துகிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மோசேவிடம் திரும்பி வரும்போது, மோசே ஆண்டவரிடம் மக்களுக்காக மன்றாடுகின்றார். கடவுள் கூறியபடியே மோசே, வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கம்பத்தில் பொருத்த, அதைப் பார்த்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தனர். நச்சுப்பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற மோசேவுக்கு வழிசொல்லும் இறைவன் அப்பாம்புகளை அழிக்கவில்லை. கடவுளின் இச்செயல் மனித வாழ்வில் ஏற்படும் துன்பம், பாவம், அவநம்பிக்கை போன்றவற்றைக் கையாள வழிகாட்டுகின்றது.
கம்பத்தில்
பொருத்தப்பட்ட வெண்கலப் பாம்பை நோக்கியோர் அனைவரும் வாழ்வு பெற்றது போன்று, சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்த்து, அவர் காட்டும் வழியில் நடப்போர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். இக்கருத்தை இன்றைய நற்செய்தி முன்னுணர்த்துகிறது. “பாலை நிலத்தில் மோசேவால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல, மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்”
(யோவா 3:14-15).
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், அன்பிற்காக அனைத்தையும் துறந்து, தம்மையே தாழ்த்தி, தம் நிலையை விட்டுக் கீழிறங்கி வந்து, சிலுவைச் சாவுவரை கீழ்ப்படிபவராக இருந்த இயேசுவை, இறைவன் மேலுலகிற்கு உயர்த்தினார் எனப் பவுல் குறிப் பிடுகிறார். எனவே, நமக்காகச் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு, மரணத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பாம்பின் விசத்தன்மையை அகற்றி, சாவிலிருந்து புதிய வாழ்வுக்கு உயர்த்துகிறார். எனவே, நாம் அவரைப் பார்க்கும் போது பாவம், துன்பம் அனைத்தையும் அதன் ஆற்றலையும் அழித்துவிடுகின்றார் என்பதே இவ்விழா உணர்த்தும் உண்மை.
மூன்றாவதாக,
திருச்சிலுவை என்பது நன்மைகளின் ஊற்று. நம்முடைய கிறித்தவ வாழ்விற்கான எல்லா நன்மைகளையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம். திருச்சிலுவையே நமது மீட்பின் பாதை, மறுவாழ்வு மற்றும் உயிர்ப்புக்கான பாதை. சிலுவையில் தொங்கும் இயேசுவிடமிருந்து வெறுப்பை அல்ல, அன்பை, வேறுபாட்டை அல்ல, இரக்கத்தை, பகைமையை அல்ல, மன்னிப்பைக் கற்றுக்கொள்கின்றோம். அவரின் நீட்டிய கரங்கள், இறைவனின் மென்மையான அரவணைப்பை வெளிப்படுத்துகின்றன. அவ்வன்பினை நாமும் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தவே அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
நான்காவதாக,
திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பே. இதுவே கிறித்தவத்தின் வழி. இது பதவி, ஆற்றல், தகுதி போன்றவற்றினால் வருவதல்ல. தம் மக்களுக்காகத் தம் உயிரையே கொடுத்த இயேசுவின் மீட்பின் வழி. தம் உடன் சகோதர-சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படாது, தாழ்ச்சி, உலகளாவிய அன்பு கொண்ட தன்னிகரற்ற வழி. “திருச்சிலுவை ஓர் அலங்காரப் பொருள் அல்ல; இது நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளமும் அல்ல; மாறாக, இது நம் பாவங்களைத் தம்மீது சுமந்த, தம்மையே தாழ்த்திய இறைவனின் பேருண்மை”
என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மறையுரை, ஏப். 8, 2014).
சிலுவையில்
அறையப்பட்ட இயேசுவின் துளையுண்ட காயங்களிலிருந்து நாம் பிறப்பெடுத்துள்ளோம். எனவே, அன்பால் தீமையை வெல்வோம். இந்நாளில் நம்பிக்கையோடு சிலுவையை நோக்குவோம். சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்தச் சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணர்வோம். அன்பும் அமைதியும் கொண்டு, மகிழ்வான சான்று தரும் புதிய வாழ்வு வாழ்வோம். திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பு!