news
ஞாயிறு மறையுரை
திருவருகைக் காலம் 2 ஆம் ஞாயிறு – 08.12.2024 (3 ஆம் ஆண்டு) பாரூக் 5:1-9; பிலி 1:4-6,8-11; லூக் 3:1-6

பள்ளங்களைப் பண்படுத்தும் பாலைநிலக் குரலாய்!

நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம் திருவருகைக் காலம். திருவருகைக்கால முதல் ஞாயிறன்றுஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடன் காத்திருப்போம்என்னும் மையச் சிந்தனையில் சிந்தித்தோம். இரண்டாம் ஞாயிறு நம் உள்ளக் குடிலில் பிறக்கவிருக்கும் மெசியாவின் வருகைக்காக நம் உள்ளங்களின் பள்ளங்களைப் பண்படுத்த நாம் அழைக்கப்படுகின்றோம்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை நாம் கொண்டாடத் தொடங்குவதற்கு முன்னதாகவே வர்த்தக உலகம் அதற்கான தயாரிப்பை முன்னெடுக்கத் தொடங்கிவிடுகிறது. இவ்விழாவை நாம் எவ்விதம் கொண்டாட வேண்டும் என்பதையே இந்த வர்த்தக உலகம்தான் தீர்மானிக்கின்றது. இவை பல எண்ணங்களை நம்மீது திணிக்க முயன்று, அதில் வெற்றியும் பெறுகின்றது. வர்த்தக உலகம் வைத்திருக்கும் எண்ணங்களுக்குப் பின்னால் சுயநலம் மட்டுமே ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் என்று வரிசையாக வரும் திருவிழாக்களுக்கு வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் வகுத்துள்ள கண்ணிகளில் நாமும் விழுந்துவிடுகிறோம்.

ஒவ்வொரு விழாவுக்கும் வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் கண்ணும் கருத்துமாக ஏற்பாடுகள் செய்கின்றன. பட்டாசு முதல் பட்டாடை வரை புதிய புதிய அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. விளம்பர உலகம் தேவையற்ற பொருள்களையெல்லாம் கவர்ச்சியுடன் விளம்பரம் செய்து நம்மை அவற்றிற்கு அடிமையாக்குகின்றது. தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதியை இழக்கிறோமே தவிர, அவற்றால் நிம்மதியை அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை. வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் நேரத்தில் விழாக்களைக் கொண்டாடும் நாம் ஒரு சிறிய பங்கை நமது திருநாள்களுக்குத் தயாரிக்க ஆர்வம் காட்டினால் உண்மையிலேயே நாம் கொண்டாடும் விழாக்கள் மிகுந்த பொருளுள்ளதாக அமையும்.

இன்றைய ஞாயிறு நம்மை மெசியாவின் வருகைக்காய் தயார் செய்ய அழைப்பதோடு மட்டுமல்லாது, நம் உள்ளங்களின் பள்ளங்களைப் பண்படுத்தவும் அழைக்கின்றது. இன்றைய நாளில் திருமுழுக்கு யோவானின் போதனைகளைப் பின்பற்றி வாழ அவரையே ஓர் எடுத்துக்காட்டாகத் தருகிறது நம் திரு அவை.

திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; ‘தனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய் (யோவா 1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர்; பொதுவாக இருக்க வேண்டிய எருசலேம் கோவிலின் இடம் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், உயர்குடியினர், ஆண்கள், பெண்கள், சிறார், பிற இனத்தவர் என வரையறுக்கப்பட்ட சூழலில், அதை எதிர்த்து, பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தவர் (லூக் 3:2); யூதத் தலைவர்கள் பகட்டான ஆடை அணிந்து, மறை நூல் வாசகப் பட்டைகளை அகலமாக்கி, குஞ்சங்களைப் பெரிதாக்கியபோது (மத் 23:5) அவற்றை எதிர்த்து, ஒட்டக முடியிலான ஆடை அணிந்து, தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தவர் (மாற் 1:6); கோவிலின் குருக்கள் பலியினால் பாவ மன்னிப்புப் பெற மக்களை வலியுறுத்தியபோது, மனம்மாற மக்களை அழைத்து நீரினால் திருமுழுக்கு அளித்தவர் (1:8); பாலைநிலக் குரலாய் ஏரோதின் அநீதச் செயலை எதிர்த்தவர்; தான் கொலை செய்யப்படப்போவதைப் பற்றித் துளியளவேனும் கவலைகொள்ளாது, கடவுளின் குரலாய் முழங்கியவர்; அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர்; இறையாட்சி மதிப்பீடுகளை அஞ்சா நெஞ்சுடன் போதித்தவர். இவ்வாறு பாலைநிலக் குரலாய்ப் புதிய சமுதாய உருவாக்கத்திற்கான அழைப்பைக் கொடுத்ததினால், “மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிட பெரியவர் எவரும் தோன்றியதில்லை (மத் 11:11) என இயேசுவால் வியந்து பாராட்டப் பெற்றவர்.

கடவுளின் வாக்கைப் பெற்று இறைவார்த்தைக்குச் சாட்சியாக வாழ்ந்த திருமுழுக்கு யோவான், இன்றைய நற்செய்தியில் மக்களை மெசியாவின் வருகைக்கான தயாரிப்பாக இரண்டு அழைப்புகளைக் கொடுக்கிறார்.

1) “பாவமன்னிப்புப் பெற மனம்மாறித் திருழுழுக்குப் பெறுங்கள் (3:3); 2) “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் (3:4).

ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவாக்கினர்கள் முழங்கிய நற்செய்தி முழக்கத்தையே யோவான் பின்பற்றிப் போதிக்கிறார். அவர்களைப் போன்று வரவிருக்கும் தீர்ப்புப் பற்றியும் அறிவிக்கிறார்; எசாயா 40:3-5 வார்த்தைகளை எடுத்துக்கூறி, ஆண்டவரின் வருகைக்காகவும், அவரது தீர்ப்புக்காகவும் மக்களைத் தயார் செய்கிறார்; ஆண்டவரது தீர்ப்பு நீதியின் அடித்தளத்திலே கட்டப்பட்டது என்பதால் அநீதியும் நேர்மையும் மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கற்பிக்கிறார்; அநீத வாழ்விலிருந்து மனம் திரும்பினால்தான் இறைவனின் கோபத்திலிருந்து விடுதலை அடைய முடியும் என்று எடுத்துக்கூறுகிறார் (3:7). இதற்கு அடிப்படையாகமனமாற்றம் தேவைஎனப் போதிக்கிறார்.

மனமாற்றம்என்பது நமது வாழ்வில் மாபெரும் செயல்களை நிகழ்த்திக் காட்டும். கடவுளை நோக்கித் திரும்பி வருதலே மனமாற்றம். இஸ்ரயேல் மக்களின் மனமாற்றம் அவர்களைப் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தது. இத்தகைய வியத்தகு செயல்களை இன்றைய பதிலுரைப்பாடல் மற்றும் முதல் வாசகத்தில் காண்கிறோம்.

இன்றைய பதிலுரைப்பாடலில்ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார் (திபா 126) என்று அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர். இது ஒருவகை சீயோன் மலைப் பாடல். இதை ஒரு குழு புலம்பல் பாடலாகவும் காணலாம். பாபிலோனிய நாடு கடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து தாங்கள் வேற்று நாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஓர் இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப் பார்க்கிறார்.

இந்த நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூக் 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலராக இருந்தவர் (எரே 32:36:43:45). பாபிலோனியாவுக்கு இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். அவர் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பில், இஸ்ரயேலின் அழிவிற்கு மக்களின் பாவம்தான் காரணம் எனவும், அனைவருக்கும் பாவத்தை விட்டு விலக வேண்டிய தேவையுள்ளதையும் காட்டுகிறார்.

துன்பமும் வெறுமையும் நம்பிக்கையின்மையும் நிறைந்த எருசலேமிற்கு, பாரூக்கினுடைய ஐந்தாம் அதிகாரம் நம்பிக்கை ஒளியை வீசுகின்றது. அகதியாகப் போன எருசலேம் மகள், அரசியாக முடியுடனும் ஆடம்பர உடைகளுடனும் வருவாள் என்பது எத்துணை அழகு! மகிழ்ச்சி, மாட்சி, ஒளி, நீதி, அமைதி, இரக்கம் இவற்றைத் தருபவர் மனிதரல்லர், கடவுள் என்கிறார் பாரூக்கு. மனமாற்றத்தின் வழியாகவே இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மாபெரும் செயல்களைக் கண்டுணர முடிந்தது.

இஸ்ரயேல் மக்கள் நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சூழ்நிலையில், கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி நம்பிக்கை தரும் விடுதலைச் செய்தியை வழங்குகின்றார். கடவுள் தம் மக்களை விடுவித்து, அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழ அழைத்துச் செல்வார் என்ற எசாயாவின் இறைவாக்கைக் கோடிட்டு, ‘இயேசுவே மெசியா, அவராலே அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். புதுவாழ்வைப் பெறவேண்டுமெனில், நமது உள்ளத்தின் பள்ளங்களைச் சரிசெய்ய வேண்டும்என அழைப்பு விடுக்கிறார்.

குறுக்கு வழியில் நடந்து, குறுகலான சிந்தனைக்கு ஆட்பட்டு, சுயநலங்களான பல்வேறு விருப்பங்களுக்கு உடன்பட்டு, மனித நலன்களை மேம்படுத்தாமல் சுயநலத்தையே மேம்படுத்துகிற கோணலான பாதையை, உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், இரக்கம் போன்ற இறைவனுடைய மதிப்பீடுகளால் சரிசெய்யப்பட வேண்டும். கடவுளின் பாதை நேரானதாகவும் சமமானதாகவும் தடைகள் இல்லாததாகவும் இருக்கவேண்டும் என்பதே கடவுளை உள்ளங்களில் வரவேற்பதற்கான முன்தயாரிப்புகள்.

எனவே, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் வேண்டுவதுபோல, அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட இறைவனை நாடுவோம்.

அக்கறையற்ற நிலையால், இவ்வுலகில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியுள்ளனஎன்பதை எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அயலவரின் தேவைகளை உணரும்போதுதான், நாம் உருவாக்கியுள்ள பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும்என்று கூறுகிறார் (மூவேளைச் செப உரை, 9.12.2018). ஆண்டவர் தம் மக்களைக் கனிவுடன் கண்காணித்து வழிநடத்துவது போல, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை, எளியவர்களைப் பாதுகாக்கின்றவர்களாக, பராமரிக்கின்றவர்களாக, அவர்களது குரலாக நாம் ஒலிக்க வேண்டும். அன்பற்ற, அக்கறையற்ற வாழ்க்கையால், நம் உள்ளங்களில் ஓட்டைகள் உருவாகியிருந்தால், அவற்றை நிரப்புவதற்கு இந்தத் திருவருகைக்காலம் நல்லதொரு வாய்ப்பாக அமையட்டும்.

இறைவன் நம்மைத் தேடி வருகிற புனிதக் காலத்தில் நம் வாழ்வைச் சீர்படுத்தி, பாதைகளைச் செம்மையாக்கி, இறைவனைச் சந்திக்கப் புறப்படுவோம். அன்பு, நீதி, தாழ்ச்சி, நம்பிக்கை இவற்றைக் கொண்டு நமது மனத்தைப் பண்படுத்துவோம். உண்மையை எடுத்துரைப்பதில் சிறிதும் தயங்காமல் வாழ்ந்த புனித திருமுழுக்கு யோவானைப் போல வாழ்வோம். இறை அருளோடு இணைந்து வாழ்ந்ததினால்அருள் நிறைந்தவர்என இறைவனால் வாழ்த்துப் பெற்ற அமல உற்பவ அன்னையின் துணை வேண்டி, நம் உள்ளங்களின் பள்ளங்களை இறைவனே பண்படுத்த சிறப்பாக மன்றாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
01, டிசம்பர் 2024, திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 33:14-16; தெச 3:12-4:2 லூக் 21:25-28;34-36

மீண்டும் வருவார்... விழிப்புடன் காத்திருப்போம்!

இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்த ஞாயிறு புதிய திருவழிபாட்டு ஆண்டைத் துவக்கி வைக்கிறது. மூன்றாண்டு சுழற்சியில் நிகழும் திருவழிபாட்டு ஆண்டு அட்டவணையின் மூன்றாவது ஆண்டை ஆரம்பிக்கிறோம்.

திருவருகைக் காலம் அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கிவந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம் (ஞாயிறு மறையுரை, 30.11.2020).

திருவருகைக் காலம் என்பது இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம். அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் இதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.

வழிபாட்டு ஆண்டு மற்றும் நாள்காட்டியின் பொது ஒழுங்கு முறைகள்எண்: 39 திருவருகைக் காலத்தின் இரு நோக்கங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாக ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும், இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது எனக் கூறுகிறது. இவ்வகையில், கிறிஸ்துவின் முதல் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப் போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருந்து எதிர்நோக்க வேண்டும் என்பதே இக்காலத்தின் மையக்கருத்து.

இன்றைய வழிபாட்டு வாசகங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை மையப்படுத்தியதாக அமைகின்றது. நம் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் வருகைக்காகக் காத்திருப்பது போன்ற நெகிழ்ச்சியான அனுபவம் ஏதுமில்லை. இயேசு மீண்டும் வருவார் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் வேரூன்றியுள்ள ஆழமான இறைநம்பிக்கை. நாமும் அதே நம்பிக்கையோடு ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

காத்திருப்பது என்பது விழித்திருப்பது; கதவு திறந்து வைத்திருப்பது. காத்திருக்கும் விதையே மரமாகிறது; காத்திருக்கும் காய்தான் கனியாகிறது. வாழ்க்கை மரணத்திற்காகக் காத்திருக்கிறது; மரணம் வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறது. நாம் எல்லாரும் யாருக்கோ, எதற்கோ காத்திருக்கிறோம். வாழ்க்கை என்பது காத்திருத்தல்தான். எது தேவையோ அதற்காகக் காத்திருக்கிறோம். எதை நாம் உயர்வாக மதிக்கிறோமா, அதற்காகக் காத்திருக்கிறோம். காத்திருத்தல், எதற்காகக் காத்திருக்கிறோமோ அதன் மதிப்பைக் கூட்டுகிறது. காத்திருத்தல் ஒரு தவம். அதற்கு வரம் கிடைக்காமல் போகாது!” - கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் இவை.

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் கிறிஸ்துவின் வருகைக்காக மக்கள் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்ததை நமக்கு எடுத்தியம்புகின்றன. பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றி 18 மாதங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, கடைசியில் தீயிலிட்டு அழித்ததை எரேமியா இறைவாக்கினர் தன் கண்களால் கண்டார். எருசலேம் நகரமே முற்றிலுமாக அழிந்தது. இந்த அழிவைக் கண்ட மக்கள் அவநம்பிக்கைக் கொண்டனர். இப்படிப்பட்ட அவநம்பிக்கை நிறைந்த சூழலில் இறைவாக்கினர் எரேமியா மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவன் வழங்கிய வாக்குறுதியை அவர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்கிறார் (எசா 11:1). ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்ட மக்கள் ஒருபோதும் விரக்தி அடைய மாட்டார்கள். ஏனெனில், ஆண்டவர் துன்பங்களிலிருந்து விடுவிப்பார் என்னும் உறுதியான நம்பிக்கையை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார்.

தொடக்கக்கால கிறித்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்ததை இன்றைய இரண்டாம் வாசகம் பதிவு செய்கிறது. ஆண்டவர் விரைவில் மீண்டும் வருவார் என்றும், அப்போது அவரை நம்புவோர் இறைமாட்சியில் பங்கு பெறுவர் என்றும் பவுல் தெசலோனிக்காவில் போதித்திருந்தார். ஆனால், பலர் இயேசுவின் வருகைக்கு முன்னரே இறந்துவிட்ட நிலையில், இறந்தோரின் நிலை என்ன என்ற கேள்வி அவர்களை வருத்தியது. இதன் தொடர்ச்சியாக, தெசலோனிக்கக் கிறித்தவர்களுக்குக் கிறிஸ்துவின் வருகை குறித்த இரண்டு ஐயப்பாடுகள் எழுந்தன. ஒன்று, கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள் கிறிஸ்து வரும்போது நிலைவாழ்வில் பங்கு பெறுவார்களா? மற்றொன்று, எப்போது கிறிஸ்து வருவார்? இவ்விரு ஐயப்பாடுகளுக்கும் பவுல் விடையளிக்கிறார். கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து, அமைதியாக உழைக்கப் பணிக்கிறார். கிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார். பவுல், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ தெசலோனிக்கருக்கு அழைப்பு விடுக்கிறார். ஒவ்வொருவரும் தூயவர்களாக வாழ்வதே கடவுளுடைய திருவுளம் என்று அழுத்தமாகப் பேசுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு, மானிட மகனின் வருகையைப் பற்றித் தம் சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். 2000 ஆண்டுகளாகக் கிறித்தவ வரலாற்றில்இயேசு எப்போது வருவார்?’ என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கின்றது. இயேசு மீண்டும் வருவார் என்பது திண்ணமான உண்மை. ஆனால், அவர் எப்போது வருவார் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இயேசுஎனக்கும் தெரியாதுஎன்றே சொல்கிறார். ஆனால், நம் நடுவில் சில கிறித்தவ சபைகள் இயேசுவின் வருகை அண்மையில் உள்ளது எனவும், இயேசுவின் இரண்டாம் வருகையின் நாளையும் நேரத்தையும் துல்லியமாகத் தாங்கள் அறிந்தது போலவும் போதிப்பதைக் கேட்க முடிகிறது. இயேசு தமது இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசும்போது, பல அடையாளங்களைத் தருகிறாரே தவிர, அது எந்த ஆண்டு, எந்த மாதம், நாள், நேரம் என்று எந்த அட்டவணையையும் அவர் தரவில்லை. எனவே, இரண்டாம் வருகைக்கு நாள் குறிக்கும் சபைகளின், போதகர்களின் எண்ணங்கள் நற்செய்திக்குப் புறம்பானவை என்பதை எளிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மானிட மகனின் மாட்சிமிகு வருகைக்கு முன் நிகழும் சில அடையாளங்களாக, ‘போலி இறைவாக்கினர்கள் தோன்றி ஏமாற்றுவார்கள் (லூக் 21:8), ‘போர்கள் உருவாகும் (21:9), ‘நிலநடுக்கங்களும் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும் (21:11), ‘அரசு அதிகாரிகளால் துன்பங்கள் எழும் (21:12-19), ‘எருசலேம் படைகளால் சூழப்பட்டு அழிவிற்குள்ளாகும் (21:20-24), ‘உலகிலே மாற்றங்கள் ஏற்படும் (21:25-26) என்றெல்லாம் இயேசு குறிப்பிடுகிறார். அப்போது மானிட மகன் வல்லமையோடும் மாட்சியோடும் மேகங்கள்மீது வருவார் என்கிறார் (21:27-28).

இவ்வாறு, உலக முடிவைப்பற்றி இயேசு குறிப்பிடும்போது, அந்நேரத்தில் இயேசு பதுங்கி ஒளியச் சொல்லவில்லை; தப்பித்து, தலைதெறிக்க ஓடச் சொல்லவில்லை; மாறாக, ‘தலைநிமிர்ந்து நில்லுங்கள்என்று கூறுகிறார். நாம் சந்திக்கப்போவது அழிவல்ல; மீட்பு என்பதால், நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கச் சொல்கிறார். அழிவு என்றால் அலறி அடித்து ஓடத்தான் வேண்டும். மீட்பு என்பதால் கடவுளைச் சந்திக்க நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

இயேசுவின் வருகையை அச்சமின்றி எதிர்கொள்ள இரண்டு அழைப்புகளை இயேசு நமக்குத் தருகிறார்:

1. எச்சரிக்கையாய் இருங்கள், 2. விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். எச்சரிக்கையாய் இருப்பது குறித்து இயேசு சில அறிவுரைகளைத் தெளிவாகத் தருகிறார். “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து கண்ணியைப்போல் உங்களைச் சிக்கவைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்என்று எச்சரிக்கிறார் (21:34). அதாவது, இவ்வுலகின் கவர்ச்சிகள், சோதனைகளுக்கு மயங்கி, நமது வாழ்வின் ஒப்பற்ற செல்வமாம் இயேசுவிடமிருந்து விலகிச் சென்றுவிடாதவாறு கவனமாக இருக்கவேண்டும் என்பது முதல் அறிவுரை.

இரண்டாவது, இயேசுவின் இரண்டாம் வருகையும், நமது இறப்பும் எப்பொழுது என்று உறுதியாகத் தெரியாததால், “எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் (21:36) என்னும் அழைப்பை இயேசு தருகிறார். விழிப்பாயிருந்து நாம் நமது அன்றாடக் கடமைகளை அக்கறையோடும் அன்போடும் பொறுப்போடும் செய்ய வேண்டும். இறையாட்சியின் வருகைக்காய் காத்திருக்கும் நாம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகளில் நேரத்தைத் தொலைத்துவிடாமல், தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல், கடவுள் விரும்பும் வழியில் நடக்க விழிப்பாயிருந்து மன்றாடுவோம். ‘ஆண்டவராம் இயேசுவே வாரும்என்ற சிறிய இறைவேண்டலை மீண்டும், மீண்டும், நமக்குள் எடுத்துரைப்போம்.

நம் மீட்புக்காக வரவிருக்கும் இறைவனை நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் எதிர்பார்த்துக் காத்திருப்போம். அன்றாட வாழ்வின் சவால்களும், துயர்களும் நம்மை மூழ்கடித்துவிடாமல் இருக்க விழிப்பாயிருந்து வேண்டுவோம். நம்பிக்கையற்ற செய்திகளை மட்டுமே காதிலும் கருத்திலும் வாங்கி, நம் உள்ளங்களைத் தொலைத்து விடாமல், நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை அதிகமாகப் பரப்பிட முயல்வோம். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி, ஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடன் காத்திருப்போம். இந்தக் காத்திருப்பு நமக்கானது! நம் வாழ்வுக்கானது! மீட்புக்கானது!

news
ஞாயிறு மறையுரை
கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (இரண்டாம் ஆண்டு) தானி 7:13-14; திவெ 1:5-8; யோவா 18:33-37 (24 நவம்பர் 2024)

உண்மையின் அரசரே வருக! நிலையான ஆட்சி தருக!

இன்று நாம் கிறிஸ்து அரசர் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறும் இன்றுதான். கிறிஸ்து அரசர் திருநாளை, திருத்தந்தை 11 -ஆம் பயஸ் அவர்கள் 11-12-1925 அன்றுQuas Primas’  என்ற சுற்றுமடல் வழியாக நிறுவினார். அது அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை கொண்டாட வேண்டுமெனப் பணித்தார். 1960-ஆம் ஆண்டு வழிபாட்டு அட்டவணையைத் திருத்தம் செய்த திருத்தந்தை 23-ஆம் ஜான் இவ்விழாவை முதன்மை விழாவாகத் தரம் உயர்த்தினார். 1969-ஆம் ஆண்டு திருத்தந்தை 6-ஆம் பால் வெளியிட்ட ‘Mottu Proprio’ என்ற மடலின் வழியாக இந்த விழாவின் பெயரைகிறிஸ்து அனைத்துலகின் அரசர்என மாற்றினார். மேலும், வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு கொண்டாட சில மாற்றங்களை உருவாக்கினார்.

2020 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிறிஸ்து அரசர் திருநாள் திருப்பலியை வத்திக்கானில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், ‘2021 -ஆம் ஆண்டு கிறிஸ்து அரசர் திருநாளோடு உலக இளைஞர் நாளும் இணைத்துச் சிறப்பிக்கப்படும்என்று அறிவித்தார். திருத்தந்தை புனித 2-ஆம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டு வந்த உலக இளைஞர் நாள், தற்போது கிறிஸ்து அரசர் திருநாளன்று சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. “ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ ஓடுவர்; களைப்படையார் (காண். எசா 40:31) என்பது இந்நாளில் நாம் கொண்டாடும் உலக இளைஞர் நாளின் மையப்பொருளாகும்.

திருத்தந்தை 11 -ஆம் பயஸ் இவ்விழாவை முதன்முதலில் ஏற்படுத்த முக்கியக் காரணம், 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட உலகப் போர்கள், கிறித்தவத் தன்மை விலகி சர்வாதிகார மனநிலைகள் எழுந்தன. பல இடங்களில் கிறித்தவ நம்பிக்கையாளர்கள் அடக்குமுறையைச் சந்தித்தனர். முதலாம் உலகப் போர் முடிந்தாலும், உலகத்தில் பகைமை, பழிவாங்கும் வெறி அடங்கவில்லை. திரு அவையின் அதிகாரம் கேள்விக்குள்ளானது; கிறித்தவம் கலக்காத ஆட்சி அமைக்கப் பல ஐரோப்பியத் தலைவர்கள் முனைந்தனர்; கடவுள் அந்நியப்பட்டுப் போனார். இந்த நெருக்கடி நிலையில், திருத்தந்தை 11 -ஆம் பயஸ், இந்தக் கொடுங்கோல் மனம்கொண்ட தலைவர்கள்/அரசர்களுக்கு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசராக அறிவித்தார்.

இயேசுவை அரசராக எண்ணும் போது, அவர்தம் வாழ்நாளில் தம்மை ஓர் அரசராகக் காட்டிக்கொண்டது இல்லை. பதவியை அவர் வலிந்து கட்டிக்கொண்டதுமில்லை. அரசராகக் கொண்டாடப்பட வேண்டியவர் பிலாத்து முன் தீர்ப்புக்காக ஒரு விசாரணைக் கைதியாக நிற்கிறார். அவர் எப்படி ஓர் அரசராக இருக்க முடியும்? அவர் அரசர் என்றால் அவரது அரசு எத்தகையது? யார் அவருடைய ஆட்சிக்குரிய மக்கள்? அரண்மனையே அடைக்கலம் என வாழ்ந்த அரசர்கள் மத்தியில் இயேசுவின் ஆட்சி வேறுபட்டிருக்கக் காரணம் என்ன? போன்ற வினாக்கள் நம்முன் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் இந்நாள் விடையளிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் கடவுளின் நிலையான, அழிக்க முடியாத அரசு வானத்தின் மேகங்கள்மீது இறங்கி வருவதையும், ஏனைய கொடுங்கோல் அரசுகளை வெல்வதையும் காண்கிறார். அவர் கண்ட காட்சியில் குறிப்பிடும் தொன்மை வாய்ந்தவர் கடவுளே! அவரே எல்லா அரசுகளுக்கும் அதிகாரம் அளிப்பவர்; தீர்ப்பும் வழங்குபவர். அவர் அருகில் இருப்பவர் இயேசு கிறிஸ்து என விளக்கம் பெறுகிறோம்.

கிறிஸ்துஎன்ற கிரேக்கச் சொல்லுக்கும், ‘மெசியாஎன்ற எபிரேயச் சொல்லுக்கும்திருப்பொழிவு செய்யப்பட்டவர்என்பது பொருள். இஸ்ரயேல் வரலாற்றில் அரசர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்கள் திருஎண்ணெயால் திருப்பொழிவு செய்யப்படுவது வழக்கம். இங்கே கடவுளே திருப்பொழிவு செய்த புதிய அரசர் இயேசு. அவர் நிறுவிய ஆட்சியே இறையாட்சி. இயேசு நிறுவிய ஆட்சியில் இராணுவம் கிடையாது. எனவே, போர் தொடுப்பது இல்லை. அவர் நிறுவிய ஆட்சிக்கு நிலப்பரப்பு கிடையாது. எனவே, நிலத்தைக் காக்கக் கோட்டைக் கொத்தளங்கள் தேவையில்லை. ‘வரிஎன்ற பெயரில் மக்களைச் சுரண்ட வேண்டிய அவசியமும் இல்லை. யாரையும் அடக்கவோ, ஒடுக்கவோ தேவை இல்லை. மாறாக, மதிப்பீடுகளின் அடிப்படையில் இயேசு கட்டியமைத்த ஆட்சியே இறையாட்சி. அங்கு அதிகாரம் அல்ல; சேவையே முக்கியம். சொத்துகளைக் குவிப்பது அல்ல; தன்னை இழப்பதே மையம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவமே தமது கொள்கை என எங்கும் முழங்கினார். ‘உண்மையை எடுத்துரைப்பதே தமது பணிஎன்று சொல்லி, பணிவிடை பெற வந்த அரசர்கள் மத்தியில் தம்மைப் பணிவிடை புரியும் ஒரு தொண்டனாக அடையாளப்படுத்தி ஏழ்மையின் அரசாட்சியை நிறுவினார்.

இயேசு நிறுவிய ஆட்சிக்கு இறைவன் ஒருவரே தேவை. அவர் ஒருவரே போதும் என்று சொல்லக் கூடிய மக்களின் மனங்களில்தான் இந்த ஆட்சி அமையும். இயேசுவின் ஆட்சியில்யார் பெரியவர்?’ என்ற கேள்விக்கு இடமில்லை. எல்லாருக்குமே இயேசுவின் ஆட்சியில், அவரது அரியணையில் பங்கு உண்டு. எல்லாரும் சமமே. இங்கே அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை. ‘எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் மன்னர்கள்என்று பாரதி கண்ட சமத்துவச் சமூகமே இயேசுவின் இறையாட்சிச் சமூகம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவை ஓர் அரசராகப் புரிந்துகொள்கிறோம். இயேசுவுக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டு அவர் தம்மையே ஓர் அரசராக ஆக்கிக்கொள்கிறார் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டு உரோமைப் பேரரசுக்கு எதிரான பெருங்குற்றம், துரோகம் ஆகும். இதுவே அவரது கொலைக்குக் காரணமாக அவரது சிலுவையின்மேல் எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. எனவே, இயேசுவின்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதிசெய்யும் நோக்கில்தான் சீசரின் கைப்பொம்மையாக இருக்கும் பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?” என வினவுகிறார் (லூக் 18:33). பிலாத்து நினைக்கும் முறையிலான அரசர் அல்லர் இயேசு. அவரிடம் ஆயுதங்களும் இல்லை, ஆள்பலமும் இல்லை. அவர் உரோமை அரசுக்குப் போட்டி அரசரும் அல்லர். அவரது ஆட்சி வேறுபட்டது; அவரது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல (18:36). அது இறை உலகு சார்ந்தது. அது அன்பு, நீதி, அமைதி, மகிழ்ச்சி போன்ற இறையாட்சியின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. அது வாழ்வின் அரசு. இத்தகைய அரசுக்கு இயேசுவே தலைவர். இப்பொருளில் இயேசு ஓர் அரசரே.

நீ யூதரின் அரசனா?” என்ற பிலாத்துவின் கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கொடுக்கவில்லை. தாம் ஓர் அரசர் என்றால் பிலாத்து அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளமாட்டார்; யூதரின் குற்றச்சாட்டு உண்மையென நினைத்துக்கொள்வார். தாம் ஓர் அரசர் இல்லை என்றால், அது தம் அரச நிலையை மறுப்பது போலாகிவிடும். எனவே, எந்த வித நேரடிப் பதிலையும் தராமல், “அரசன் என்று நீர் சொல்லுகிறீர் (18:37) எனப் பதிலளித்து, தம் அரசின் தன்மையை விளக்குகிறார் இயேசு. அதாவது உண்மையை நிலைநாட்டி, மக்களுக்கு வாழ்வு வழங்கும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தம் பணி என அடித்துக் கூறுகிறார்.

தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளையும் காண மறுத்து, எப்போது தன் பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்துவைப்போல ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். கொள்கை என்ற பெயரில், மதம் என்ற பெயரில், இவ்வுலகில் இவர்கள் விதைப்பதெல்லாம் வெறுப்பும், வேதனையும்தான். சுயநலமற்ற அரசர்களையோ, தலைவர்களையோ காண்பது மிக அரிது.

நிறைவாக, கிறிஸ்துவை அரசர் என்று கொண்டாடும் நாம், நம்மை அடிமைகளாக்கி, நம்மைச் சுரண்டுவதில் சுகம் கண்டு, பதவி-புகழே நிரந்தரம் என வாழும் தலைவர்களையும், தலைவிகளையும் இனங்கண்டு, அவர்களைத் துதிபாடும் மனநிலை நம்மிடமிருந்து களைய உறுதியேற்போம். உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து உழைக்க முன்வருவோம். இவ்வுலகப் புகழையும், மகிமையையும் அதிகாரத்தையும் விரும்பாதது தம் அரசு என்று இயேசு வெளிப்படையாகக் காட்டுவதைக் காணும் நாம், பிறருக்கு ஆற்றும் பணியில் மகிழ்ச்சி காண்போம்.

அமைதி, சுதந்திரம் மற்றும் வாழ்வின் முழுமையை விரும்பும் நாம் ஒவ்வொருவரும் நம் இதய அரியணையில் இயேசுவை அரசராக அமர வைத்து, உண்மைக்குச் சான்று பகர்ந்து, நீதிக்குக் குரல் கொடுக்கும் கிறிஸ்து அரசரின் ஆட்சிக்குரிய மக்களாக வாழ விண்ணக அரசியாம் அன்னை மரியா நமக்கு உதவி புரியட்டும். சிறப்பாக, இன்று தங்கள் உலக நாளைக் கொண்டாடும் இளைஞர்கள் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்று, எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக இவ்வுலகைக் கட்டியெழுப்ப வேண்டும் என அனைத்துலக அரசராம் கிறிஸ்துவிடம் மன்றாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
17 நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு - தானி 12:1-3; எபி 10:11-14,18 மாற் 13:24-32

கடவுளின் தீர்ப்பு ஏழைகளுக்கே சாதகம்!

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாளோடு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்கிறோம். வரும் திருவருகைக்கால முதல் ஞாயிறு, திருவழிபாட்டின் புதிய ஆண்டாக அமைகிறது. நாம் நிறைவு செய்யும் இந்தத் திருவழிபாட்டு ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் மாற்கு நற்செய்தியின் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

2016-ஆம் ஆண்டு நாம் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் உலக வறியோர் நாளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார். அதன் அடிப்படையில், நவம்பர் மாதம் 17-ஆம் நாள், அதாவது பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறை எட்டாவது உலக வறியோர் தினமாகச் சிறப்பிக்கின்றோம். இந்நாளைக் குறித்து ஜூன் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்பட்ட  புனித அந்தோனியார் திருநாளன்று, சீராக் நூலாசிரியர் எடுத்துக்காட்டும் “ஏழைகளின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது (சீரா 21:5) என்ற இறைவார்த்தையை மையக்கருத்தாகத் திருத்தந்தை தெரிவு செய்துள்ளார்.

உலக வறியோர் தினத்தைக் கொண்டாடத் திரு அவை பணித்த இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் இறுதிநாள் எப்போது, எவ்விதம் வரும் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த இறுதிக்காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.

யூத மக்கள் மத்தியில் இறுதிநாள் சார்ந்த எண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அதுவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உலக முடிவு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது. இறுதிக்காலத்தைப் பற்றி யூதர்கள், இறுதி நாள் மிகுந்த அச்சம் தரும் நாளாக விடியும் என அஞ்சினர். அது கடவுளின் கோபம் எனவும், உலக அழிவு எனவும் எண்ணினர் (1அர 8:37; எரே 4:11-26; எசே 5:120). கொடுமையான அரசர்கள் பிடியில் சிக்கித் தவித்து, அடிமைகளாக வாழ்ந்தபோது, அதுவே உலக அழிவின் காலம் என நினைத்தனர். குழப்பங்கள், போர்கள், இயற்கை அழிவுகள் போன்றவை உலக இறுதிநாளின் முன்னோட்டம் எனவும் எண்ணினர். நம் காலத்திலும் புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகிய இயற்கைப் பேரிடர்களாலும், ‘கொரோனா எனும் பெருந்தொற்றினால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த வேளைகளிலும் ‘இதுதான் உலக முடிவா?’ என்ற கேள்விகளும் எழுந்தன என்பதை நாம் அறிவோம்.

2000-ஆம் ஆண்டு நெருங்கிய வேளையில் உலக முடிவைப் பற்றிய வதந்திகளும், பல குழப்பங்களும் உருவாகின. இறுதிநாளின் அச்சத்தை மிகவும் மிகைப்படுத்தி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில சமயப் போதகர்களும் இலாபம் தேடினர் என்பது உண்மை. எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்றக் குன்றருகே ‘ஒலிவ மலை ஹோட்டல் (Mount of Olives Hotel) என்ற விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998 -ஆம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். “2000 -ஆம் ஆண்டு, இயேசுவின் ‘இரண்டாம் வருகை நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்பதே அக்கடிதத்தில் கூறப்பட்ட விளம்பர வரிகள்.

வர்த்தக உலகமும், சில சமயப் போதகர்களும் ‘உலக முடிவு, ‘இரண்டாம் வருகை ஆகியவற்றைக் கேலிப்பொருளாக மாற்றி, இலாபம் தேடுவதில் தீவிரம் காட்டும் வேளையில், உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்ப வேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும், இறுதிக் காலத்தை நாம் எவ்விதம் தயார் செய்வது போன்ற கேள்விகளை எழுப்புவது நல்லது.

இன்றைய முதல் வாசகம், இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது. துன்பங்களில் நிலைகுலையாது நிலைத்திருக்கும் நல்லவரை ஆண்டவர் கைவிடமாட்டார் எனவும், அவர்கள் பெயர்கள் வாழ்வின் நூலில் இடம்பெறும் எனவும் நம்பிக்கை தருகிறது. இன்றைய நற்செய்திப் பகுதி மானிட மகனின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கின்றது. மனிதராகப் பிறந்து பாடுபட்ட இயேசு மிகுந்த வல்லமையோடு மீண்டும் வருவார்; வரும்போது வானில் பெரும் அடையாளங்கள் காணப்படும். தம்மைப் பின்பற்றி, இறைநம்பிக்கை கொண்டு நேரிய வழியில் நடப்போர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை; இறைவனது விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வோர் இறைவனின் மாட்சியில் பங்குகொள்வர் என இயேசு எடுத்துரைக்கிறார்.

நல்வாழ்வின் அடிப்படையிலேயே ஒருவர் முடிவில்லா வாழ்வை வெகுமதியாகப் பெறமுடியும் என்பதே இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. திருத்தந்தை உரையாற்றிய மூவேளைச் செப உரையிலும், “இறுதிநாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ் காலத்தைச் செம்மையான முறையில் நாம் வாழ வேண்டும் எனக் கூறுகிறார் (வத்திக்கான், 18.11.2018).

நாம் வாழும் இந்த வாழ்க்கை இறப்போடு முற்றிலும் முடிந்து விடுவதில்லை. இவ்வுலகைத் தாண்டி, மற்றொரு வாழ்வு உண்டு. மறுவாழ்வு குறித்து திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துகளில் ‘இறுதித்தீர்ப்பு என்பது ஒரு முக்கியமான பாடம். 

மூவகை மனநிலைகளில் வாழும் மனிதர்களைச் சந்திக்கிறோம். முதலில், எப்படியும் ஒருநாள் சாகத்தான் போகிறோம்; அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம் என்ற சுயநல மனநிலையில் வாழ்பவர்கள்; இரண்டாம் நிலையில், என்னதான் நல்லவற்றைச் செய்தாலும், எல்லாமே ஒருநாள் அழியத்தான் போகிறது; பின் ஏன் நல்லவற்றைச் செய்ய வேண்டும்? என்ற விரக்தி மனநிலையோடு வாழ்பவர்கள்; மூன்றாம் நிலையில், எல்லாமே அழியத்தான் போகிறது, நானும் சாகப்போகிறேன்; அதற்கு முன் உள்ள நேரத்தில், என்னால் முடிந்தவரை நல்லது செய்வேன் என்ற நம்பிக்கை உணர்வில் வாழ்பவர்கள். இந்த நம்பிக்கை உணர்வுக்குக் கூடுதல் அர்த்தம் தருவது, மறுவாழ்வு என்ற எண்ணம். நம் வாழ்வு இவ்வுலகத்தோடு முடிவடையாமல் அது மறு உலகிலும் தொடரும் என்ற உணர்வே இவ்வுலகப் பயணத்தைப் பயனுள்ள பாதையில் தொடர்வதற்கு உதவியாக உள்ளது.

இவ்வுலகில் வாழும் நாம் இறுதிநாளில் தகுந்த வெகுமதியோ, தண்டனையோ எதனடிப்படையில் பெறுகிறோம்? ‘வறியோருக்கு நாம் என்ன செய்தோம்?’ என்ற ஒரே ஒரு கேள்விதான் மறுவாழ்விற்குள் நாம் அடியெடுத்து வைக்க அனுமதி தரும் நுழைவுச்சீட்டு. அதிலும், குறிப்பாக, தேவையில் இருக்கும் வறியோருக்கு நாம் என்ன செய்தோம் என்பது ஒன்றே மறுவாழ்வின் வாசலில் நம் வாழ்வை எடைபோடப் போகும் தராசு.

நாம் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றோம், எத்தனை மறைநூல்களைக் கற்றுத்தேர்ந்தோம், எத்தனை பக்தி முயற்சிகளில், திருப்பயணங்களில் பங்கேற்றோம், எத்தனை நாள் உண்ணா நோன்புகளைக் கடைப்பிடித்தோம் என்பவை மட்டும் மறுவாழ்வில் நாம் நுழைவதற்கு அளவுகோல்களாக இருக்காது. வறியோரிடமிருந்து பெறக்கூடிய பரிந்துரைக் கடிதம் இன்றி, மறுவாழ்வில் அடியெடுத்து வைக்க முடியாது. தேவையில் இருப்போர் சார்பில் என்னென்ன செய்தோம் அல்லது செய்ய மறுத்தோம் என்பதே நம்மை ‘முடிவில்லா வாழ்வுக்கு அல்லது ‘முடிவில்லா அழிவுக்கு இட்டுச் செல்லும்.

உலக வறியோர் தினத்திற்காகத் தமது செய்தியில், ‘கடவுள் தமது குழந்தைகளின் துன்ப துயரங்களை அறிந்திருக்கிறார்; ஏனென்றால் அவர் நம்மீது கவனமும் அக்கறையும் கொண்ட ஒரு தந்தை என்றும், ‘ஒரு தந்தையாக தேவையில் இருப்போராகிய ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், துன்பப்படுபவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ‘நாம் நாள்தோறும் சந்திக்கும் ஏழைகளின் முகங்களிலும் முகவரியிலும் இந்த இறைவார்த்தையைப் படித்துச் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் (உலக வறியோர் தின உரை, 13.06.2024).

பல்வேறு துன்பங்களால் தங்கள் முகத்தையும், முகவரியையும் இழந்து, அடையாளம் ஏதுமின்றி அலையும் ஏழை மக்களுடன் தம்மையே இணைத்துக்கொண்ட இயேசு,  அதே இணைப்பை இறுதித்தீர்ப்பு நேரத்திலும் உருவாக்குகிறார். மனிதர்கள் என்ற அடையாளமே இன்றி உருக்குலைந்து போயிருக்கும் இம்மனிதர்களே, இறுதித்தீர்ப்பு வேளையில் இயேசுவோடு இணைந்து, நமக்குத் தீர்ப்பு வழங்க வருவர். எனவே, தேவையில் இருக்கும் ஒருவருக்காவது நன்மைகள் செய்து, அவரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்று, விண்ணரசில் நுழையும் தகுதி பெற இன்றே முயல்வோம்.

ஏழைகளுக்காக மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து, இறுதிநாளில் மானிட மகனை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.

news
ஞாயிறு மறையுரை
10, நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு - 1அர 17:10-16; எபி 9:24-28; மாற்கு 12:38-44
இறைவனில் இழக்கத் துணிந்த மனம்!

இறைவனுக்குக் காணிக்கை கொடுக்கும் வழக்கம் எல்லாச் சமயங்களிலும் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், இறைவனுக்கு எதை நாம் காணிக்கையாகக் கொடுக்க முடியும்? நமக்குச் சொந்தமானதைக் கொடுத்தால்தானே அது காணிக்கையாகும்! நம்முடையது என நாம் நினைக்கும் எதுவும் நம்முடையதல்லவே. இந்தப் பூமி நம்முடையதல்ல... நம் உடல், உயிர் நம்முடையதல்ல... ஏன் நம் பெற்றோர்கூட நாம் தேர்ந்தெடுத்தவர்கள் அல்லர்... நாம் இறக்கும்போது ‘இது என்னுடையது’ என எதையும் கொண்டு செல்லவும் முடியாது. 

ஒன்றுமே கொண்டு வராத நமக்கு இறைவன் வழங்கியதில் சிறியவற்றை மீண்டும் அவருக்கே திருப்பிக் கொடுப்பது எப்படிக் காணிக்கை ஆகும்? இறைவனுக்குத் தேவைகள் ஏதேனும் உண்டோ? இறைவன் எந்தத் தேவையும் அற்றவர். இறைவன் பெறுபவர் அல்லர்; அவர் தருகிறவர்! பிறகு ஏன் காணிக்கை? 

காணிக்கை தருவது உண்மையில் ஒரு வழிபாடு. ‘இறைவா நான் உமக்குத் தருபவை எதுவும் என்னுடையதல்ல; அது உம்முடையது. உம்முடையதை உமக்கே திருப்பித் தருகிறேன்’ என்ற உணர்வோடு அனைத்தையும் இறைவனுக்கே கொடுக்கும் ஓர் உள்ளார்ந்த வழிபாடுதான் காணிக்கை. இந்த உணர்வோடு இறைவனுக்குக் கொடுக்க முன்வருபவர்கள் விளம்பரம் தேட மாட்டார்கள்; வீண் பெருமையை நாட மாட்டார்கள். 

இன்று தர்மம் செய்வதுகூட ஒரு வியாபாரமாகி விட்டது. “நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” (மத் 6:5) என்கிறது திருவிவிலியம். உயர்ந்த அறத்தின் இலக்கணமும் இதுவல்லவா! ஆனால், இன்று பலர் தண்டோரா போட்டுத் தர்மம் செய்கிறார்கள். தங்கள் புகைப்படம் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்கிறார்கள். தங்கள் பெயர்கள் கல்வெட்டுகளில் பதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உதவி செய்கின்றனர். ஆலயங்களில் தர்மம் செய்யும்போதுகூட சிலர் தங்கள் பெயர்களைப் பெரிதாகப் போட்டு, ‘இன்னார் உபயம்’ என்று எழுதி வைத்துள்ளதைப் பார்த்திருக்கிறோம். இவை அனைத்தும் தர்மமாகுமோ? அது முதலீடு; அது பண்டமாற்று. உண்மையில் தர்மம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுப்பதுவே. 

‘நான் மிகப்பெரிய செல்வந்தன்’ என்ற ஆணவத்திலும், ‘எல்லாம் என்னுடையதே’ என்ற அறியாமையிலும் தம்பட்டம் அடித்துத் தானதர்மங்கள் செய்யும் விளம்பர விரும்பிகளுக்கு நடுவில், எவ்வித விளம்பரமும் தேடாமல், எவருடைய கவனத்தையும் ஈர்க்காமல், இறைவன்மீது மட்டில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்த இரண்டு ஏழைக் கைம்பெண்கள் இன்றைய வார்த்தை வழிபாட்டில் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உயர் ஆளுமைகள்.

இன்றைய முதல் வாசகத்தில் எலியா என்ற இறைவாக்கினர் சந்திக்கும் சாரிபாத்துக் கைம்பெண்ணை நாமும் சந்திக்கிறோம். சாரிபாத்து ஒரு பெனிசிய துறைமுக நகர். இது ஒரு புறவின மக்கள் வாழும் இடம். இஸ்ரயேலில் (வட நாடு) பணியாற்றிய மிக முக்கியமான இறைவாக்கினரான எலியா இஸ்ரயேல் குலத்தவரல்லாத பெண்ணைச் சந்திக்கிறார். அந்தக் கைம்பெண்ணும், அவரது மகனும் வாழ்ந்த வாழ்க்கை என்பது வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தினந்தோறும் போராடும் பல கோடி ஏழைகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. அடுத்த நாள் விடியாமலே இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தோடு படுக்கச் செல்லும் கோடிக்கணக்கான ஏழைகளில் இவர்களும் அடங்குவர். ஒரு பானையில் கையளவு மாவு... கலயத்தில் சிறிதளவு எண்ணெய்... இவ்வளவுதானே இந்த ஏழைத்தாயின் சொத்து மதிப்பு. இருப்பதை இன்றோ, நாளையோ உண்டுவிட்டு மாண்டுவிட வேண்டியதுதான் என்று தங்களுக்குத் தாமே மரணத் தீர்ப்பு எழுதிவிட்டனர் (1அர 17:12).

விரக்தியின் விளிம்பில் விம்மிக்கொண்டிருந்த இந்தக் கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள், இறைவாக்கினர் எலியா வழியாகக் குறுக்கிடுகிறார். இறைவனின் குறுக்கீடு என்பது அந்தப் பெண்ணின் வாழ்வில் இறைவன் நிகழ்த்தப்போகும் வல்ல செயல்களைக் காண்பதற்கான ஓர் அழைப்பு அல்லவா!  குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்ட எலியா, தொடர்ந்து ‘கொஞ்சம் உணவும் (அப்பமும்) தருவாயா?’ என விண்ணப்பிக்கிறார். அந்தப் பெண்ணோ தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாலும், தன்னுடைய வறுமையிலும் பசியிலும் மற்றொரு மனிதரின் பசியைப் போக்க முன்வருகிறார். ஆம், ஏழைகளின் மனம் அப்படிப்பட்டதுதானே! அவர்களுக்குத்தான் பிறர் பசி என்பது என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். எனவேதான், மகனின் பசியையும்கூட மறந்து, எலியாவின் பசியைத் துடைப்பதே பெரிது என எண்ணுகிறார். 

எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் தன்னுடைய வாழ்வுக்காக வைத்திருந்த அனைத்தையும் கொடுத்த இந்த சாரிபாத்துக் கைம்பெண்ணைப்போல, மற்றொரு கைம்பெண்ணை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இந்த ஏழைக் கைம்பெண்ணைக் குறித்து நற்செய்தி கூறும் வார்த்தைகள் ஆழமானவை.

பிறர் பாராட்ட வேண்டுமென மிகுதியிலிருந்து மிகுதியாய்க் காணிக்கைக் கொடுத்தனர் செல்வர்கள். ஆனால், இந்த ஏழைக் கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே காணிக்கைப் பெட்டியில் போடுகிறார். இந்தக் கைம்பெண் போட்டது என்னமோ இரண்டு செப்புக்காசுகள்தாம். அதாவது, சிறிதும் மதிப்பற்ற மிகச்சிறிய நாணயங்கள் அவை. இவர் போட்ட இரண்டு காசுகள் ஒரு கொதிராந்துக்கு இணையானவை என மாற்கு குறிப்பிடுகிறார். ஒரு கொதிராந்து என்பது ஒரு தெனாரியத்தில் 128 -இல் ஒரு பகுதி. அதாவது ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி. அப்படியெனில், அப்பெண் காணிக்கைப் பெட்டியில் போட்டது மிக மிகச் சிறிய காசு. ஆனால், அப்பெண்ணின் பார்வையில் அக்காசு மிகவும் மதிப்புக்குரியது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பல ‘வித்தைகளை’ செய்த மறைநூல் அறிஞர்கள் நடுவில், அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க எத்தகைய முயற்சியையும் எடுக்காத இப்பெண்ணின் செயலைக் கூர்ந்து கவனித்த இயேசு, அவரை மட்டுமே சிறப்பாகப் பாராட்டுகிறார். 

“இறைவன் அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்லர். அவர் தரமான வாழ்வைக் கருதுபவர். உள்ளத்தின் சிந்தனைகளை நன்கு அறியும் இறைவன், தூய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்ததை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம் (மூவேளைச் செப உரை, 11.11.2018).

இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை நம் அன்புக்கு உரியதாக, சிறந்ததாக இருக்க வேண்டும். அதைத் தரும்போது மனம் உவந்து தரவேண்டும். இல்லை என்றால், அது காணிக்கை ஆகாது. காணிக்கை என்பது தியாக உணர்வின் வெளிப்பாடு. தியாகம் அன்பை அளக்கும் அளவுகோல். இந்தக் கைம்பெண் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறார். இறைப்பராமரிப்பில் தன்னையே இழக்கிறார். கைம்மாறு கருதாமல் தன்னையே கடவுளிடம் கொடுக்கிறார். கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று அவர் இப்படிச் செய்யவில்லை. எனவேதான், காணிக்கை செலுத்திய நிறைவுடன் காணாமல் போய் விடுகிறார். ‘கடவுளே, நான் இவ்வளவு தருகிறேன், நீ இவ்வளவு தா’ என்றால் அது வியாபாரம். 

சங்க காலத்தில் ஆய் அண்டிரன் என்ற ஒரு சிற்றரசன் இருந்தான். அவனது கொடை குணத்தைப் பாராட்டி, புலவர் ஏணிச்சேரி முடமோசியார் இவ்வாறு பாராட்டிப் பாடுகிறார்:

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்; 
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே”
(புறநானூறு 134)

இந்தப் பிறவியில் அறம் செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும் என்று எண்ணிக்கொண்டு ஆய் அறம் செய்வதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால் அது அறமல்ல, வணிகம் என்று நினைப்பவன் ஆய். அறம் என்பது சான்றோர்கள் வாழ்ந்து காட்டிய ஒரு வழிமுறை என்று எண்ணிக்கொண்டு கொடை வழங்குபவன் ஆய் என்று புகழ்ந்து பாடுகிறார் புலவர்.

இன்றைய வாசகங்களில் நாம் சந்தித்த இவ்விரண்டு கைம்பெண்களும் தங்களுடைய செலவுகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொள்ளாது, அனைத்தையும் கொடுத்துவிட்டு, இறைவனுக்கு முன் வெறுமையாகத் திரும்புகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நன்மைகள் செய்த இவர்கள், இறைவனின் இதயத்தில் இடம்பிடித்தனர். எவ்விதப் பலனையும் எதிர்பாராமல், இவ்விரு கைம்பெண்கள் செய்த செயல்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, கவிஞர் கலீல் கிப்ரான் அவர்கள் எழுதிய ‘கொடுப்பது’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ‘நீ சேர்த்து வைத்துள்ள உடைமைகளிலிருந்து நீ கொடுக்கும்போது, குறைவாகவே கொடுக்கிறாய். எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போதுதான் உண்மையிலேயே கொடுக்கிறாய்.’

எனவே, கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது, எதையும் எதிபார்க்காமல், நம்மையே வருத்திக் கொடுக்க முன்வருவோம். இந்த இரு கைம்பெண்களைப்போல, தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகப் பலியாகத் தந்துள்ள ஆயிரமாயிரம் கைம்பெண்களை நினைத்துப் பார்ப்போம். வறுமையில் வாழ்ந்தாலும், தன்னை முற்றிலும் இறைவனில் இழந்த அன்னை மரியாவைப்போல நம்மையே இறைவனில் இழக்க முன்வருவோம்.

news
ஞாயிறு மறையுரை
03, நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு - இச 6:2-6 எபி 7:23-28 மாற் 12:28-34

அன்பே வாழ்வு!

அன்பே பெருங்கொடை!

“அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து. ஆனால், அந்த அன்பே பொய்யானால் இந்த உலகத்தில் அதைவிடக் கொடிய நோய் எதுவுமில்லை” என்றவர் புனித அன்னை தெரேசா. மனித வாழ்வின் இரகசியம் அன்பு செய்வதிலே அடங்கியிருக்கிறது. காலத்திற்கும் காலாவதியாகாத ஒரே மருந்து அன்பே. மனிதர் அன்பு செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்கிறார்.

“கடவுள் தம் உருவிலே மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்” (தொநூ 1:27). கடவுளுடைய பண்புகளால் படைக்கப்பட்டவரே மனிதர். மற்ற படைப்புகளில் இறைவனுடைய பண்புகள் சில வெளிப்பட்டாலும், மனிதரிடத்தில்தான் கடவுளுடைய பண்புகள் முழுமையாக வெளிப்பட்டன. அன்பே கடவுளின் முழுமையான பண்பு. மனிதர் இறை-மனித அன்பின் வழியாக இறைவனோடு நெருங்கி வரமுடியும். கடவுளின் கட்டளைகளின்படி நடந்தால் கடவுளை இன்னும் அதிகமாக நெருங்கி வரலாம். இறைவனின் முதன்மையான கட்டளையே அன்பு செய்வதுதான். இறைவனோடு அன்புகொள்ளும் தகுதி மனிதருக்கே இருக்கிறது. இதுவே மானிடப் படைப்பின் பெருமை.

‘மானிடர் - கடவுளின் உருவம்’ என்ற கருத்துரு மனிதர் மற்ற படைப்புகளோடும், சக மனிதர்களோடும், இறைவனோடும் அன்பு கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதுவே மனிதராவதற்கு உயரிய வழி. மனித பிறப்பின் இலட்சியமும் அதுவே. “அன்பே உருவான கடவுள், பிறரை அன்புகூர வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, அன்பிலிருந்து நம்மைப் படைத்தார்” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனப் பாடினார் புலவர் ஒளவையார். உண்மையில் மானிடராய்ப் பிறத்தல் எளிது; ஆனால், மானிடராய் வாழ்வதுதான் கடினம். அதனால்தான் உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப், ‘மனிதனுக்கு மிகவும் கடினமானது மனிதனாவதுதான்’ என்கிறார்.

அன்பிற்குரியவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 31 -ஆம் ஞாயிறு வழிபாடு முப்பரிமாண அன்பைக் குறித்துச் சிந்திக்க நம்மை அழைக்கிறது. தன்னையும், தன்னைப் போன்ற பிறரையும், தம் உருவின் முழுவடிவாம் இறைவனையும் அன்பு செய்து வாழ ஆரத்தழுவி நம்மை அழைக்கிறார் இறைமகன் இயேசு.

இன்றைய நற்செய்தியிலிருந்து நம் சிந்தனையைத் துவங்குவோம். இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த மறைநூல் அறிஞர் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” (மாற் 12:28) என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறார். இயேசு அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். “இஸ்ரயேலே கேள்” என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு மூன்று கட்டளைகளைக் கூறுகிறார். அவை 1. இறையன்பு, 2. பிறரன்பு, 3. தன்னன்பு.

யூதர்கள் ஆண்டவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்வதைத் தங்கள் முதன்மையான கட்டளையாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த முதன்மையான கட்டளையே (இச 6:4) யூதரின் நம்பிக்கை முழக்கம் ஆகும். இது யூதச் சமயத்தில் மிக முக்கியமான ‘செமா மன்றாட்டு’ (Shema Prayer). ஒரு யூதர் இந்த மன்றாட்டை ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை செபித்தார். இதனை இஸ்ரயேலர்களின் காலைச் செபம் என்று சொல்வார்கள். இவர்களின் காலைச் செபம் ‘செமா இஸ்ரயேல்’ (shema Israel) என்று தொடங்குகின்றது. யூதக் குழந்தைகளுக்கு முதன்முதலில் கற்றுக்கொடுக்கப்பட்ட செபமும் இதுவே. “நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல்” (இச 6:7). இறக்கும் தறுவாயில் ஒரு யூதரின் உதடுகளில் ஒலித்த இறுதி மன்றாட்டும் இதுதான்.

இந்த ‘இஸ்ரயேலே கேள்’ என்ற நம்பிக்கை முழக்கத்தை ஒவ்வொரு யூதரும் தங்கள் வீடுகளின் கதவுகளில் தொங்கவிட்டனர். ஆண்களோ இந்த நம்பிக்கை முழக்கத்தைக் கையிலே சீட்டுப் பட்டமாகக் கட்டிக் கொண்டனர். சிலர் சீட்டுப் பட்டமாக எழுதி நெற்றியிலும் கட்டிக்கொண்டனர். இஸ்ரயேலர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு சிந்தனையோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும், முழு வலிமையோடும் கடவுளை அன்பு செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.

இதில் மிக முக்கியமான இறையியல் நம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன. யாவே, பிற தெய்வப் போலி வழிபாடுகளைச் சகித்துக்கொள்ளாத கடவுள் ஆவார். அவர் அன்பைக் கொடுத்து அனைத்தையும் தொடங்கி வைக்கிறார் (உரோ 8:31-39; எபே 1:1). பின்னர் அதே அன்பை எதிர்பார்க்கிறார். அந்த அன்பு முழுமையான அன்பாக இருக்கவேண்டும். ‘கடவுளையும் அன்பு செய்வேன்; அதேவேளையில் கொஞ்சம் மூடநம்பிக்கையிலும் எனக்கு விருப்பம் உண்டு’ என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் பகுதி நேர அன்பர்கள். அவர்களால் கடவுளை முழுமையாக அன்பு செய்ய முடியாது. எனவேதான், இக்கட்டளையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இயேசு  திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளை எது எனக் கேட்ட மறைநூல் அறிஞரிடம், இந்த வசனத்தையே (இச 6:4) மனப்பாடமாகக் கூற வைத்தார் (மாற் 12:28).

இறையன்பு என்ற கட்டளையைப் பற்றிப் பேசிய இயேசு, இதற்கு இணையாக இரண்டாவது கட்டளையாக லேவியர் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார் (லேவி 19:18; மாற் 12:31). யூதர்களின் பார்வையில் இக்கட்டளை தம் சொந்த இனத்தாரை மட்டுமே அன்பு செய்யத் தூண்டியது (விப 2:13). அதாவது, அடுத்திருப்பவர் என்பது ஒரு சக யூதரையே குறித்தது. ஆனால், இயேசுவோ அன்புக்கு எல்லை இல்லை எனத் தெளிவாகக் கற்பித்தார் (லூக் 10:25; மத் 5:43). இயேசுவின் பார்வையில் அடுத்திருப்பவர் என்பவர் தேவையிலிருக்கும் அனைவரையும் உள்ளடக்குகிற, பரந்து விரிந்த கண்ணோட்டமாகும். இதுவே இயேசு வழங்கும் புதிய கட்டளையாகும் (யோவா 13:34-35).

இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். அடுத்தவர்மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, தன்மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிடுகிறார். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று இயேசு கூறுகிறார். பிறரன்பின் தொடக்கமே தன்னன்பு. தன்னை அன்பு செய்பவர் மட்டுமே கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்வர். தன்னன்பு இல்லாதவர் பிறரிடமிருந்து அன்பைப் பெறவோ, பிறருக்கு அன்பைக் கொடுக்கவோ முடியாது. தன் உணர்வுகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் செவிமடுப்பவரே, பிறருடைய உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் செவிமடுக்க முடியும். தன்னை மதித்து, ஏற்று, அன்பு செய்து, பிறரையும் ஏற்று உறவுகொண்டு, இறையன்பில் வாழும் மனிதரே முழு மனிதராகிறார்.

இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடும்போது, “கடவுளை அன்புகூர்வது என்பது, அவரருகே அவருக்காக வாழ்ந்து, அவருடன் இணைந்து உழைப்பவர்களாக, அதாவது நமக்கு அடுத்திருப்பவரிடையே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பணிபுரிவதையும், எல்லைகளின்றி மன்னிப்பதையும், ஒன்றிப்பிலும் சகோதரத்துவத்திலும் உறவுகளை வளர்ப்பதையும் குறித்து நிற்கின்றது” எனவும், “பிறரன்பு என்பது ஏழைகளின் வெளிப்புறத் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல; அவர்கள் எதிர்பார்க்கும் உடன்பிறந்த நெருக்கத்தையும், அக்கறையையும் நாம் வெளிப்படுத்தவேண்டும்” எனவும் குறிப்பிடுகிறார் (மூவேளைச் செப உரை, 04.11.2018).

நிறைவாக, இடையறாது அன்பு செலுத்தி வாழ்வது என்பது கடினம்தான். ‘அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்று புலம்பும் பெரும்பாலான மனிதர்களின் ஓசையைக் கேட்க முடிகிறது. ‘அன்பினால் பல ஏமாற்றங்களைச் சந்தித்துத் துவண்டுப்போனேன்’ என அங்கலாய்த்தவர்களையும் நாம் சந்தித்துள்ளோம். உண்மையான அன்பு யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை அன்பு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. அன்பு செலுத்துவதையே தங்களது இயல்பாகக் கொண்டவர்களின் எண்ணங்கள் மேன்மையானதாகவே இருக்கும். உண்மை அன்பு எந்த நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல. ஒருவரை அவருடைய இயல்பிலேயே, இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்வதே உண்மையான அன்பு.

இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பு உண்மையான, நிபந்தனையற்ற அன்பு. நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை அன்பு செய்கிறார். தமது வாழ்வில் சந்தித்த எல்லாரையும் அளவுகடந்து அன்புகூர்ந்தார். தலைமைக் குருவான அவர் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி (எபி 7:27), தம் அன்பு முகவரியை அகிலத்திற்கும் பறைசாற்றினார். அன்பே வாழ்வு; அன்பே கடவுள்; அன்பே பெருங்கொடை. “உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப்போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே” (மூவேளைச் செப உரை, 13-10-2024) உண்மையான, கலப்படமற்ற அன்பின் தெய்வீக இலக்கணத்தை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள, அதையே அயலாருக்கும் வழங்க இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.