news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு (15 செப்டம்பர் 2024)
சிலுவை இல்லாமல் சீடத்துவம் இல்லை!

இயேசு யார்? அவரை எப்படிப் பின்பற்றுவது? எனும் இரு கேள்விகளுக்கு விடை காண அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு. மாற்கு நற்செய்தி 16 அதிகாரங்களைக் கொண்ட மிகச்சிறிய நற்செய்தி. இந்த நற்செய்தியின் முதல் பகுதி, இயேசுவின் கலிலேயப் பணியை மையமாகவும் (1:14-8:26), இரண்டாம் பகுதி எருசலேம் பணியை மையமாகவும் (8:31-16:8) கொண்டு பிரித்துக் கூறுகின்றனர் திருவிவிலியப் பேராசிரியர்கள். மாற்கு நற்செய்தி 8 -ஆம் அதிகாரம் இயேசுவின் கலிலேயப் பணியின் நிறைவுப் பகுதியாகவும், எருசலேம் பணியின் தொடக்கப் பகுதியாகவும் அமைகிறது. இவ்வதிகாரத்தில் இயேசு கேட்கும் இரு கேள்விகளை மையமாகக் கொண்டு நம் சிந்தனைகளை நிறைப்போம்.

இயேசு மெசியாவாக மக்களுக்கும் குறிப்பாக, தம் சீடருக்கும் வெளிப்படுத்த விரும்பி, அதற்கேற்ப தம் இறையாட்சிப் பணிகளை ஆற்றினார். மக்களும் சீடரும் இயேசுவின் வல்ல செயல்களைக் கண்டு வியந்தனர்; அவர் போதனைகளை ஏற்றனர்; பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றவர்களைத் தவிர ஏனைய மக்கள் இயேசுவைப் பற்றி நல்லெண்ணம் கொண்டனர். தம்மைப் பிற்காலத்தில் மக்களுக்கு அறிவித்துத் தம் இறையாட்சிப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டிய சீடர்கள், தம்மைப் பற்றித் தெளிவான அறிவுபெற வேண்டும் என இயேசு விரும்பினார். ஆகவே, கலிலேயாவில் பணி முடியும் வேளையில் தம்மைப் பற்றிய ஆய்வை இயேசு சீடரிடம் நடத்துகிறார். அவர் நடத்தும் ஆய்வில் கேட்கும் இரண்டு கேள்விகள்தான் ‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’, ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’

இயேசுவின் இந்த இரு கேள்விகளையும் ஆழமாகச் சிந்திக்கும்போது, இது வெறும் கேள்விகள் அல்ல; மாறாக, சீடத்துவத்துக்கான ஓர் அழைப்பு எனப் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க அவரே நமக்குத் தரும் அழைப்பு. அழைப்புக்கு வெறும் வாய்மொழி அறிக்கையால் அல்ல; செயல் வடிவம் கொடுக்க அல்லது இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவதற்கான அழைப்பாகும் (முதல் வாசகம் யாக் 2:14-18). இயேசு தருகின்ற அழைப்பைச் சீடர்கள் புரிந்துகொண்டனரா? நாம் புரிந்துகொண்டுள்ளோமா? சிந்திப்போம்.

இயேசு கேட்ட முதல் கேள்வி: ‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’ என்பது. இயேசு இந்தக் கேள்வியைக் கேட்ட இடமும் முக்கியத்துவம் பெறுகிறது. இயேசு பிலிப்புச் செசரியாவைச் சேர்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். மன்னன் ஏரோதின் மகன் பிலிப்பு தன் நினைவாகவும், சீசரின் நினைவாகவும் உருவாக்கிய பிரமாண்டமான நகரம் பிலிப்புச் செசரியா. மேலும், அப்பகுதியில் பால் (Bal), பான் (Pan), சீயுஸ் (Zeus) போன்ற கடவுள்களுக்குக் கோவில்களும் இருந்தன. அரசர்கள், பிற கடவுள்கள் போன்றோரின் பெருமைகளையும், அவர்கள் கட்டிய பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும் அடையாளப்படுத்தும் அப்பகுதியில், சீடரின் எண்ணங்களில் தாம் எத்தகைய அடையாளத்தைப் பதித்திருக்கிறோம் என்பதை அறிய விழைந்தார் இயேசு. இயேசுவின் முதல் கேள்விக்குச் சீடர் இயேசுவிடம், “வல்ல செயல்கள் செய்ததால் எலியா என்றும், ஆட்சியாளர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதால் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியாவைப்போல செயல்பட்டதால் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்கிறார்கள் (8:28). ஆனால், சீடர்கள் தம்மை என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆர்வம் கொண்ட இயேசு, “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என வினவுகிறார். இயேசுவின் இந்தக் கேள்வி மாற்கு நற்செய்தியின் மையக்கேள்வியாக அமைகிறது. பேதுரு “நீர் மெசியா” என்று ஒரே வார்த்தையில் பதிலளிக்கிறார். பேதுருவின் பதில்மொழி ஒட்டுமொத்தக் கிறிஸ்தவர்களின் பதிலாகவே பார்க்கப்பட வேண்டும். மெசியா என்றால் ‘அருள்பொழிவு செய்யப்பட்டவர்’ என்று பொருள். பழைய ஏற்பாட்டில் குருக்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் அருள்பொழிவு செய்யப்பட்டு கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டனர் என நம்பினர். ஆனால், இயேசுவின் காலத்தில் மெசியா குறித்த யூதர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம். ‘தாவீதின் வழித்தோன்றலில் மெசியா மாபெரும் அரசராக இருப்பார்; உரோமையரின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து நலமான எதிர்காலத்தை அமைத்துத் தருவார்; அவர் எருசலேம் நகரைப் புதுப்பிப்பார்; அவருக்கு எதிராக எழும் போரில் அவரே வெற்றி பெறுவார்; அவருடைய எதிரிகள் காணாமல் போவார்கள்; மெசியாவே உலக நாடுகளை அரசாள்வார்; அவரது அரசு என்றென்றும் நீடித்திருக்கும்; அமைதியும் நன்மையும் நிறைந்த புதிய காலத்தை அவர் அருள்வார்.’ இவ்வாறான மெசியா குறித்த பெருங்கனவு யூதர்களுக்கு மட்டுமல்ல, சீடர்களுக்கும் இருந்தன. மெசியா வீரதீரச் செயல்கள் புரிந்து, யூத மக்களுக்கு ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவராக இருப்பார் என்ற நம்பிக்கையின் எதிரொலிதான் பேதுருவின் ‘மெசியா அறிக்கை.’

பேதுருவும், மற்ற சீடரும் இயேசுவை மெசியா என்று அறிக்கையிட, இயேசுவோ தமது மரணத்தைப் பற்றி அறிக்கையிடுகிறார். தம்மை ‘மானிட மகன்’ என்கிறார். இந்த மானிட மகனைத் தம் மக்களுக்காகத் தியாகம் செய்து இறக்க வேண்டிய ‘துன்புறும் மெசியாவாக’ மிக அழகாக வடிக்கிறார் நற்செய்தியாளர் மாற்கு.

இயேசு தம் துன்பங்களையும் இறப்பையும் முதன்முறை வெளிப்படுத்துகிறார் (8:31). தம்மைப் பின்தொடர்தல் என்பது தமது பாடுகள், இறப்பு, உயிர்ப்பில் பங்குகொள்வதாகும் எனும் படிப்பினையை இயேசு தொடர்ச்சியாகக் கற்பிக்கிறார். பேதுருவால் இதைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. எனவே, பேதுரு இயேசுவைத் தனியே அழைத்துக் கடிந்துகொள்கிறார். இயேசுவும் பேதுருவிடம் ‘என் கண்முன் நில்லாதே, சாத்தானே’ என்றும், ‘மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணுகிறாய்’ எனவும்  கடிந்துகொள்கிறார்.

‘சாத்தான்’ என்றால் ‘எதிரி’ என்று பொருள்படும். நம்பிக்கை இல்லாத சீடர்கள் சாத்தானுக்குரியவர்கள். இயேசுவின் குழுமத்தில் சாத்தானுக்கு இடமில்லை. ‘மனிதர்கள்’ என்பவர்கள் இவ்விடத்தில் யூதத் தலைமைத்துவத்தையும், அல்லது தொடக்கக்கால திரு அவையில் இயேசுவிற்கு எதிராக இருந்த அனைத்துத் தலைமைத்துவத்தையும் குறிப்பதாக அமைகிறது. இப்பின்னணியில் இயேசு பாடுபடக் கூடாது என்று அடம்பிடிக்கும் பேதுரு தமக்கு எதிரி என்றும், அவர் விரும்பியபடியே தாம் வல்ல செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டிய மெசியா அல்ல என்றும் இயேசு ஆவேசத்துடன் இங்கே அறிவிக்கிறார் (8:33).

சீடருடன் உரையாடிய இயேசு, மக்களையும் தம்மிடம் அழைத்து, தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தங்கள் வாழ்வில் துன்பங்களை ஏற்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக விளக்கம் தருகிறார். எனவே, தம்மைப் பின்பற்றுதல் என்பது ஓர் அழைப்பு என்றும், அதற்கு ஒருவர் தமது சிலுவையைச் சுமக்க வேண்டும் என்றும் சொல்கிறார். இங்கே சீடத்துவம் என்பது அனைவருக்கும் உரிய ஓர் அழைப்பு என்பது புலப்படுகிறது. இயேசு கற்றுத் தரும் சீடத்துவம் என்பது சிலுவையைத் தூக்கிச் சுமப்பதே. எனவே, சிலுவையைத் தூக்கிச் சுமப்பவரே ஆண்டவரின் ஊழியர் என்பதை முதல் வாசகம் வழி புரிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் ஊழியராக எவ்வாறு செயல்படுவது என்பதை ஆண்டவரின் ஊழியரைப் பற்றிய மூன்றாம் கவிதையில் எசாயா (எசா 50:5-9)  அழகுறக் குறிப்பிடுகிறார். எசாயா குறிப்பிடும் ஆண்டவரின் ஊழியரின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது, அவருக்கு எதிர்ப்புகள் வரும் (மோசே); பல வழிகளில் துன்பங்கள் வரும் (எரேமியா); இருப்பினும், அவர் ஆண்டவரின் வார்த்தைகளை மக்களுக்குக் கொடுப்பார்; அதன் வழியாக அவர்களைக் கடவுள் சார்பில் ஊக்குவிப்பார்; அவர் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பார்; ஆண்டவரின் குரலைக் கேட்க எப்போதும் தம் செவிகளையும் மனத்தையும் திறந்து வைத்திருப்பார்; துன்பங்கள் சூழ்ந்தாலும் கடவுளது விருப்பத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பார்; ஆண்டவரின் துணையும் அவருக்கு எப்போதும் இருக்கும். இந்தப் பண்புகளைப் பார்க்கும்போது, ஆண்டவரின் உண்மையான ஊழியராகிய இயேசுவின் பணியையும் வாழ்வையும் புரிந்துகொள்ள முடிகிறது.

கற்றுக்கொள்வோம்...

• சிலுவை இல்லாத சீடத்துவம் வெறுமையானது. இயேசுவிற்காக அனைத்தையும் இழக்கலாம், இயேசுவை எதற்காகவும் இழக்கக்கூடாது என்பதை உணர்வோம்.   

• இயேசுவை நம்பி, அவரோடு பயணிக்க, அவரைப் போல் வாழ, துயருற்றாலும் துணிந்து பின் தொடர, நமது வாழ்வுப்பாதையை மாற்றியமைப்போம்.

• வெறும் அலங்கார வார்த்தைகளால் தேவையிலிருப்போருக்கு ஆறுதல் கூறாமல், அவர்களின் குறைகளை நீக்க நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுவோம்.
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம்; 23 -ஆம் ஞாயிறு (08 செப்டம்பர் 2024)
கடவுளுக்கு நாம் முக்கியமானவர்கள்!

மனிதராய் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஒன்று நோய். ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர் என எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் நோய்கள் பாதிக்கும். நோயுற்ற மனிதன் தன் சொந்தத் தாய்-தந்தையைவிட, மனைவி-குழந்தைகளைவிட மருத்துவரைத்தான் அதிகம் நம்புகிறான். குறிப்பாக, செல்வம் படைத்தவர்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று, அல்லது உலகின் எந்த மூலையிலும் இருந்து மருத்துவர்களை வரவழைத்து நோயை நீக்க முயற்சிகள் மேற்கொள்வதை அறிகிறோம். ஆனால், நோயைத் தீர்ப்பதற்கோ அல்லது அதிலிருந்து விடுபடுவதற்கோ அடிப்படை வசதிகள் ஏதுமில்லா ஏழைகள் நம்பியிருப்பதோ இறைவனை மட்டுமே.

இன்று செப்டம்பர் 8 - நம் அன்னையின் பிறந்த நாள்! மனுக்குலத்தின் மீட்பரை, ஆண்டவரின் திருமகனைப் பெற்றெடுத்த தாய் மரியா உதித்த நாள்! நோயுற்ற மனிதர்கள் வேதனையும் கண்ணீருமாக, கனத்ததோர் இதயத்துடன் துயர் நீக்கும் வேளைநகர் ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையைத் தேடி, பெருமூச்சிட்டபடியே, அன்னையின் திருத்தலங்களுக்குச் செல்லும் ஆயிரமாயிரம் பக்தர்களை நாம் அறிவோம்.

ஆரோக்கிய அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று இடம்பெறும் வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தங்களான நோயும், வறுமையும் நம்மை வாட்டும்போது, நம் மனத்தில் எழும் எண்ணங்கள் என்ன? நோயுற்றோரை, வறியோரைப் பற்றிச் சிந்திக்கும்போது, நாம் என்ன நினைக்கிறோம்? என்ன செய்கிறோம்?

பளபளக்கும் கிரானைட் கற்களும், மினுமினுக்கும் கண்கவர் விளக்குகளும், பத்து பதினைந்து தளங்களும் கொண்ட மருத்துவமனைக்குள் இன்று ஏழைகள் நுழையவே இயலாது. அதுபோலவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வறியோரும் நோயுற்றோரும் இறைவனை நெருங்க முடியாது. காரணம், அன்றைய யூதச் சமயத் தலைவர்கள், ‘நோய் தீமையானது! குற்றங்களுக்குத் தண்டனையாக வருவது; நோய்க்கான காரணம் மனிதரின் தீய செயலே; எனவே, நோயும் வறுமையும் பாவத்திற்கான தண்டனைகள். நோயுற்றோரும் வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். அவர்களை விட்டு விலகியிருப்பது நல்லது’ போன்ற அச்சங்களை மனிதர்கள்மீது திணித்து வந்தனர். நோயுற்றோர் கோயிலுக்குள் கூட நுழைய அனுமதிக்கப்படவில்லை. நோயாளி அல்லது ஏழை என்றவுடன், ‘இவர் செய்த பாவமா? அல்லது இவர் பெற்றோர் செய்த பாவமா?’ என வழக்குகள் எழுந்தன (யோவா 9:2).

சமயத் தலைவர்கள் நோயுற்றோரையும் வறியோரையும் இறைவனிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பிரித்து வைத்து, அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்த வேளையில், உறுதியற்ற அவர்களின் உள்ளங்களுக்கு மீட்பிற்கான உறுதியை அளிக்கிறது இன்றைய முதல் வாசகம். நம்பிக்கை இழப்பு, கடவுளால் கைவிடப்பட்ட ஓர் உணர்வு, அரசர்களின் பலவீனமான ஆட்சி, அசிரியாவின் அச்சுறுத்தல், ஏதோமியர்களின் துன்புறுத்தல் (ஏதோமியர்கள் ஏசாவின் வழிவந்தவர்கள்), வட அரசான இஸ்ரயேலின் அழிவு, தொடர் தோல்வி, தொடர் ஏமாற்றங்கள்... இவற்றால் துவண்டுபோயிருந்த மக்களுக்கு எசாயாவின் வார்த்தைகள் நம்பிக்கையை அளிக்கின்றன. இறுகிப்போன பாறைக்குள்ளிருந்தும் சின்னதாய்க் கசியும் நீர்த்துளி போல, மக்களின் ஆழமான வேதனைகளிலும் இறைவனிடம் கொண்ட நம்பிக்கைக் குறையவில்லை.  இரண்டாந்தர குடிமக்களாக, மதிக்கப்படாத மனிதர்களாகப் பார்க்கப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயுற்றோர், சிறார், பிற இனத்தார், அயல்நாட்டினர் யாவரும் கடவுளின் பிள்ளைகள்; மதிக்கப்பட வேண்டியவர்கள்; பாதுகாப்பிற்கு உரியவர்கள். இவர்கள் துன்புறும்போது ஓடோடி வந்து உதவுபவர் இறைவன் என்பது இன்றைய திருப்பாடலின் மையக்கருத்து (திபா 146).

வறியோர், நோயுற்றோர் இவர்களின் நிழல்கூட தங்கள்மேல் படக்கூடாது  எனக் கருத்தாய் செயல்பட்ட யூதச் சமயத் தலைவர்களுக்கு மத்தியில், இவர்களையே இயேசு தேடிச் செல்கிறார். இவர்களையே ‘பேறுபெற்றோர்’ என்கிறார். இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துத் தம்முடைய இறையாட்சிக்குள் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறார். இன்றைய நற்செய்தியில் காது கேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு நலப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 7:31-37).

இயேசு பிற இனத்துப் பகுதிகளான தீர், சீதோன் போன்ற நகர்களில் தமது பணியை முடித்துவிட்டு, தெக்கப்பொலி வழியாகக் கலிலேயக் கடலை அடைகிறார். இரு பகுதிகளுமே பிற இனத்தார் வாழும் பகுதிகள். தெக்கப்பொலி என்றால் ‘பத்து நகரங்கள்’ என்பது பொருள். இந்த நகரங்கள் யோர்தானை ஒட்டிய பகுதியிலிருந்து தமஸ்குவரை பரவிக்கிடந்தன. இது அதிகமாகப் பிற இனத்தார் வாழ்ந்த குடியேற்றப் பகுதி. தெக்கப்பொலி என்று மாற்கு குறிப்பிட்டு எழுதுவது இயேசு பிற இனத்தாரோடு தம்மை ஒன்றித்துக் கொண்டதையே காட்டுகிறது. இப்பகுதியில் காதுகேளாதவரும், திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள்.

பார்வையுடைய, நடக்க முடிந்த இவர் தானாகவே இயேசுவிடம் வந்து நலம் வேண்டியிருக்கலாமே! ஏன் இவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வரவேண்டும்? குறையுள்ள மனிதர் ஒரு பாவி என்றும், அவர் கடவுளின் தண்டனையை அனுபவிக்கிறார் என்பதும் யூதர்களின் நம்பிக்கை. யூதச் சமயப் போதகர்களால் இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட இந்தக் காதுகேளாதவர் சமூக அழுத்தம், புறக்கணிப்பு, தன்னைக் காயப்படுத்தும் முறையில் நடந்துகொள்ளும் சமூகம், சமயத் தலைவர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பு இவற்றால் அச்சமூகத்திலிருந்தே விலகி வாழ விரும்பியவர்.  மேலும், இயேசுவைப் பற்றிக் கேட்க முடியாத நிலையிலும், தன் தேவையை வெளிப்படுத்த முடியாத நிலையிலும் இருந்த ஒரு நோயாளி. இப்படி வாழ்ந்த ஒருவரைத்தான் அவர்மேல் அக்கறை கொண்ட சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர் என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம். நோயுற்றவரை நலமாக்குவது ஒரு வல்ல செயல் என்றால், அவர்களை மனிதர்களாக மதித்து நடத்துவதும் ஒரு வல்ல செயல்தான்.

காது கேளாத மனிதரை இயேசுவிடம் அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்த செயல் வியப்பைத் தருகின்றது. ஒரு சொல் கொண்டு அவரை நலமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு காதுகேளாதவரைத் தனியே அழைத்துச் செல்கிறார். தனியே அழைத்துச் செல்வது என்பது பெறப் போகும் தனிப்பட்ட இறையனுபவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தம் விரல்களை அவர் காதுகளில் இடுகிறார்; உமிழ் நீரால் அவர் நாவைத் தொடுகிறார்; வானத்தை அண்ணாந்து பார்க்கும் இயேசு, தம் தந்தையின் துணையை அழைத்தவராய், ‘எப்பத்தா’ என்று அரமேயத்தில் சொல்கிறார். அதற்குத் ‘திறக்கப்படு’ என்பது பொருள். இயேசுவின் இந்தச் செயல் நோயுற்ற அந்த மனிதர்மீது இயேசு கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தின. இயேசுவின் ஆழ்ந்த அன்பு அவரை முழுமையாக நலமாக்கியது.

இயேசு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பாவிகள் ஆகியோரை எப்போதும் இழிவாகக் கருதியதே இல்லை. இயேசு நலமற்ற இந்த மனிதருக்காக எடுத்துக்கொள்ளும் நேரமும், காட்டும் பொறுமையும் வியப்பைத் தருகின்றன. குறையுள்ள மனிதரைத் தனியே அழைத்துச் சென்று அவரை நிறைவாக்கி அனுப்புகின்றார். இயேசு இந்த மனிதரை ஒரு பிரச்சினையாகவோ அல்லது ஓர் இடர்பாடாகவோ கருதவில்லை. அவரை ஒரு மனிதராகக் கருதினார். தாய்க்குரிய பரிவோடு இயேசு இம்மனிதரின் செவிகளையும் நாவையும் தொட்டு நலமாக்கினார். ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய வியப்பான செயல்களை நாம் அறிவோம்.

இன்று செய்யக்கூடிய நற்செயல்களைப் பலரும் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு மத்தியில், நோயுற்ற இந்த மனிதரை ஒரு காட்சிப்பொருளாக மற்றவர்களிடம் காட்டாமல் இயேசு நலமாக்கியதன் வழியாக நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறார். இன்று உதவிகள் செய்வதைப் படங்களாக, காணொளிகளாகப் பதிவு செய்து, ஊடகங்களிலும் இணையத்திலும் பதிவேற்றிப் பலர் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், உதவிகள் பெறுவோரின் முகங்களை ஊடகங்களில் வெளியிடுவது இன்னும் உதவிகள் பெறுவோரின் மனத்தைக் களங்கப்படுத்தும் என்பதைப் பலரும் உணர்வதில்லை.

இன்று நோயுற்றோரையும் வறியோரையும் எப்படிப் பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? நம்மில் எத்தனை பேருக்கு வறியோரை, நோயுற்றோரைக் கண்டதும் மரியாதை என்ற உணர்வு எழுகிறது? மனிதர்கள் பலரும் இன்று ஆள்பார்த்தே செயல்படுகின்றனர். வசதியும் செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் திரு அவையிலும் முதலிடம் (யாக் 2:9) என்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்தச் சமுதாய நோயை நம்மிடமிருந்தும், திரு அவையிடமிருந்தும் இறைவன் அகற்ற வேண்டும் என்று மனமுருகி வேண்டுவோம். கடவுளை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் ‘யாவேயின் ஏழைகள்’. அவர்களைக் கடவுள் என்றும் காப்பாற்றுவார் (திபா 35:10; எசா 61:1; மத் 5:3; லூக் 6:20). அவர்களை ஒருபோதும் இழிவாகக் கருதாமல் அரவணைத்து உதவிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் அன்புப் பாடங்களை முன்வைக்கும் புனித யாக்கோபுவின் நல்வார்த்தைகளை நமதாக்குவோம் (யாக் 2:1-5).

நோயுற்றோரும், வறியோரும் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களைத் தன் வாழ்வின் மையமாகவும், பணிகளின் மையமாகவும் கொண்டு வாழ்ந்த புனித அன்னை தெரேசாவைப் போல, வறியோருக்காகவும், நோயுற்றோருக்காகவும் தொடர்ந்து அன்புப் பணியை ஆற்றுவோம். மகிழ்ச்சியான தாராள உள்ளமே நல்ல கிறிஸ்தவருக்கான அடையாளம். ஆகவே, முகமலர்ச்சியோடும் அகமலர்ச்சியோடும் நோய்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கு நாம் நம்பிக்கை ஒளியாய் இருப்போம்.
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு (01 செப்டம்பர் 2024)
டவுள் விரும்புவது இதயத் தூய்மையே!

கடவுள் இல்லாத இடம் உண்டா? ஒருவேளை இறைவனிடம், “இறைவா! எல்லா இடங்களிலும் நீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். நீர் இல்லாத இடம் ஒன்று ஏதாகிலும் உண்டோ?” என்று கேட்டால் அவர் ‘ஆம்’ என்று சொல்வார். “நான் இல்லாத இடம் ஒன்று உண்டு. அது வழிபாட்டுத் தலங்கள்” என்பார். இன்று சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் கடவுளோடும் கோவிலோடும் இணைக்கப்பட்டு விட்டன. அவை மேலும் இறுகிப்போய் இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச்சடங்குகளாக மாறிவிட்டன.  இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் சமய வாழ்வில் கடவுளைவிட முக்கியத்துவம் பெற்றுவிட்டதால், வெறுமையான சடங்குகளை மட்டுமே முன்னிறுத்தும் ஆலய வழிபாடுகளில் இறைவனுக்கு ஏது நாட்டம்? (ஆமோ 5:21).

கடவுள் தூயவர்! அவர் எத்தகைய தூய்மையை விரும்புகிறார்? அகத்தூய்மையையா? அல்லது புறத் தூய்மையையா? அவர் விரும்புவது சடங்குகளையும் மரபுகளையுமா? அல்லது அவரையும் பிறரையும் அன்பு செய்வதையா? கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதயத் தூய்மையா? அல்லது வெளிவேடச் செயல்களா? மனிதச் சட்டங்கள், சடங்குகள், மரபுகள் எல்லாம் எந்த மதிப்பீட்டைக் கட்டிக் காக்கின்றன? இவற்றால் மனிதம் மதிக்கப்படுகிறதா? மானிட மாண்பு காக்கப்படுகிறதா? இதுபோன்ற பல கேள்விகளுக்குச் சிறந்த விடயத்தை வழங்குகிறது ஆண்டின் பொதுக்காலம் 22 -ஆம் ஞாயிறு வழிபாடு.

முதல் வாசகத்திலிருந்து நமது சிந்தனையைத் துவங்கலாம். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இனம் இஸ்ரயேல் (விப 19:6). அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்; சுதந்திர மக்கள். எனவே, அவர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபடாது, பிற மக்களின் தவறான மதிப்பீடுகளைப் பின்பற்றாது, தீய வழியில் நடவாமல் நல்ல மனிதராக வாழ வேண்டும் என யாவே கடவுள் விரும்பினார். அவர்கள் கடவுளை அறியவும், மற்ற மக்களைப் போல் அல்லாமல் தனிப்பட்ட முறையில் கடவுளுடன் உறவுகொள்ளவும் அழைக்கும் இறைவன், சீனாய் மலையில் மோசே வழியாகப் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார் (விப 20:1-17). இவை அடிப்படைச் சட்டங்கள்; மக்கள் சுதந்திரமாக வாழ உதவும் நெறிமுறைகள்.

வாங்கிய கடனைத் திரும்பக் கொடுப்பது, காணும் பொருளைக் களவாடாமல் இருப்பது, மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடப்பது என மக்களின் அன்றாட வாழ்வை நெறிப்படுத்தத் தேவையான கட்டளைகளைக் கடவுள் வழங்கினார். கடவுள் கொடுத்த சட்டங்கள் நல்லவையாகவும் நீதியுள்ளவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக, எதிரியின் மாடு அல்லது கழுதை துன்பப்பட்டுக் கொண்டிருந்தால் அதன் துன்பம் போக்க அடுத்தவருக்குக் கடமை உண்டு. அதாவது, பகைமை இருந்தாலும்கூட பிறர் சொத்து அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது போன்ற  மனிதநேயக் கருத்துகள் இறைவன் வகுத்துக் கொடுத்த சட்டங்களின் மையமாக இருந்தன (விப 23:4-5).

ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலப் பயணத்திற்குப் பிறகு, மோசே மோவாபு சமவெளிப் பகுதியில் புதிய தலைமுறை இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் வகுத்த சட்டம் குறித்தும், இறைமக்களின் மேன்மை குறித்தும் அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்கிறார். மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் கடவுள் வழங்கிய கட்டளைகளைக் கடைப்பிடித்தல் அவசியம். கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்கும் வாழ்வாகும். இதையே, “மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?” என்று மோசே கேட்கிறார். மேலும், மிக முக்கியமாக கடவுளின் கைகளால் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் “எதையும் சேர்க்கவும் வேண்டாம்; அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்” (இச 4:2) என அறிவுரை வழங்குகிறார். இதுதான் இன்றைய முதல் வாசகத்தின் சூழல்.

இறைவனின் கட்டளைகள் வழியாக அவரோடு இணைந்திருப்பதைத் தங்கள் அடையாளமாகவும் கலாச்சாரமாகவும் எண்ணினர் இஸ்ரயேல் மக்கள். காலப்போக்கில் இவர்கள் தங்கள் மூதாதையரின் மரபுகளை முன்னிறுத்தி, கடவுளின் கட்டளைகளைப் பின்னுக்குத் தள்ளினர். புதிய புதிய சட்டங்களும் மரபுகளும் பெருகப் பெருக கடவுளின் கட்டளைகளின் நோக்கம் மறைந்துபோனது. யூதச் சமூகத்தில் சட்டக் காவலர்களாகத் தங்களை முன்னிலைப்படுத்திய பரிசேயரும், மறைநூல் அறிஞரும் கடவுளின் பத்துக் கட்டளைகளைத் தங்கள் வசதிக்கேற்ப 613 சட்டங்களாகப் பிரித்து, பெரிதாக்கி அதைச் சாதாரண மக்கள்மீது திணித்தனர். தேவையற்ற மரபுகள், சடங்குகள் சார்ந்த சட்டங்கள் மக்களுக்குக் கடைப்பிடிப்பதில் பெரும் சுமையாகிவிட்டன. எனவே, கடவுளைவிட முக்கியமானதாகக் கருதப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொருளற்ற சடங்குகளையும் பரிசேயர் மற்றும் திருச்சட்ட அறிஞரின் வெளிவேடத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தோலுரித்துக் காட்டுகிறார்.

‘கழுவுதல்’ என்ற மரபு பற்றிய விவாதம் எழுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ‘மூதாதையர் மரபுப்படி’ இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர் பரிசேயரும் மறைநூல் அறிஞரும். சம்பிரதாயக் கழுவுதல் என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன (மாற் 7:3-4). உணவுக்கு முன் கைகளைக் கழுவுவதையும் கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுவதையும் கடந்து, கடவுளின் கட்டளைகள் கற்றுத் தரும் மனிதநேய மதிப்பீடுகளின்படி வாழ இயேசு அழைக்கிறார். ‘மூதாதையர் மரபு’ என்பது கடவுள் கட்டளை அல்ல; அது காலப்போக்கில் சில சட்ட அறிஞர்கள் உருவாக்கிய வாய்மொழி மரபுகள். பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர் உருவாக்கிய இந்த வாய்மொழி மரபுகள் சாமானிய மக்கள்மேல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்த பயன்பட்டதே தவிர, இறை அனுபவத்தையோ, மனித மாண்பு செயல்களையோ உருவாக்கவில்லை என்பதே இயேசுவின் குற்றச்சாட்டு.

தூய்மை - தீட்டு என்பதற்குப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் முன்னோர் மரபு சார்ந்த விளக்கம் கொண்டிருக்கையில், இயேசு மனிதம் சார்ந்த புதிய விளக்கம் தருகிறார். ‘தீட்டு’ என்பது சட்டத்தை மீறி கை கழுவாததால் வருவதல்ல; அது பிறரைக் குற்றப்படுத்துவதாலும், அடுத்தவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்துவதாலும், பிறருடைய தேவைகளை உணராதிருப்பதாலும், தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்ற எண்ணத்தாலும் வருவது என உரைக்கிறார். நோன்பு கடைப்பிடித்தல், கோவில் வரி செலுத்துதல், வழிபாட்டுத் தூய்மை, ஓய்வுநாள் சட்டத்தைப் பின்பற்றுதல், தொழுகைக்கூடங்களில் தவறாமல் பங்கெடுத்தல் போன்ற புறச்செயல்களைச் செய்வதால் தாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்றும், மற்றவர்கள் பாவிகள் என்றும் சொல்லிக் கொண்டனர் பரிசேயக் கூட்டத்தினர். உணவு அருந்தும் முன் கை கழுவாத தம் சீடர்களைவிட, சமுதாயத்தில் எளியவரின் நிலையைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ‘வெளிவேடக்காரராய்’ வாழும் பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றோரே தீட்டானவர்கள் எனக் கடுமையாகச் சாடுகிறார் இயேசு.

இன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அழுக்கானவர்கள், அவர்களைத் தொட்டால் தீட்டு என்று கூறித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் கொடுமை நம் நாட்டில்தான் நடக்கிறது. மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிப்பவர்கள் சமூக எதிரிகள் மட்டுமல்லர், சமய எதிரிகளும்கூட. அவர்கள் கடவுளுக்கும் எதிரானவர்கள். எல்லா உயிர்களையும் இறைவன்தாமே படைத்தார்; அப்படியிருக்க, தீட்டானதை இறைவன் எப்படிப் படைத்திருக்க முடியும்? (சாஞா 11:24). சக மனிதர்களை அன்பு செய்யத் தெரியாதவர்களால் எப்படிக் கடவுளிடம் அன்பு செலுத்த முடியும்? (1யோவா 4:20).

சக மனிதரைப் பிறப்பால் ‘தீட்டானவர்’ என்று கூறுபவர், தனது சிந்தனையால் தீட்டானவர் ஆகிறார். புற அழுக்கைவிட, அக அழுக்கு அசிங்கமானது! இதைத்தான் இயேசு ‘மனிதர் உள்ளத்திலிருந்து வெளிவரும் தீய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் போன்றவையே ஒருவரைத் தீட்டுப்படுத்தும்’ என்கிறார் (7:14). இன்று சமயவாதிகளில் பலர் மூளையில் அழுக்கைச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அழுக்கென்று ஒப்புக்கொள்வதில்லை. மாறாக, அழுக்குகளுக்கு அர்த்தமுண்டு என்று வாதாடுகிறார்கள், பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரைப்போல.

இயேசு ஏற்படுத்திய இறையாட்சி என்பது நாம் வெளியரங்கமாகக் கடைப்பிடிக்கும் சில சட்டங்களால் உருவானதல்ல; அது உள்ளார்ந்த மனமாற்றத்தாலும், இறைத்திட்டத்தைச் செயலாக்குவதாலும் அமைவது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய யாக்கோபு, இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடப்பவர்களாக இருக்க வேண்டும் (யாக் 1:22) என்கிறார். துன்புறும் அனாதைகள், கைம்பெண்களைக் கவனித்துக்கொள்வதோடு தம் வாழ்வின் தவறுக்கு ஏதுவான செயல்களைத் தவிர்த்தலே நேரிய சமய வாழ்வின் அடையாளங்கள் (1:27).

யாக்கோபு வரையறுத்த இந்தத் தூய வாழ்வை, தன் சொந்த வாழ்வாக மாற்றி, ஏழையரோடு தன்னை இணைத்துக்கொண்டவர் செப்டம்பர் 5 ஆம் நாள் சமய பேதமின்றி நாம் கொண்டாடும் புனித அன்னை தெரசா. ஒருமுறை ஓர் ஊடகவியலாளர் அன்னை தெரசாவின் பணியைக் கண்டு வியந்து, “எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது? என்று கேட்டபோது, அன்னை தெரசா பணிவோடு அவரிடம், “நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு துறவற வாழ்வில் இணைந்தபோது, ‘இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்துசெல்’ என்று சொல்லி என் அம்மா என்னை வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளது” என்று கூறினார். இந்தச் சமூகம் சாக்கடை, அழுக்கு, தீட்டு என முத்திரை குத்திய இடங்களில்தான் இந்தத் தூய இதயம் தன்னை இணைத்துக்கொண்டது. அந்த இதயத்தில்தான் இறைவனும் குடிகொண்டார்!

நாம் உணர்ந்துகொள்ள வேண்டியவை:

• ‘உதட்டினால் மட்டும் கடவுளைப் போற்றுகிறவர்களாக இராமல்’ (எசா 29:13), கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றி (இச 4:6) நாம் உண்மையான சமயப் பற்றோடு வாழ்வோம்.

• சடங்குகள், சட்டங்கள், மரபுகள் இவற்றைக் கடவுளைவிட முக்கியமான நிலைக்கு உயர்த்திவிடும்போது, நாம் கடவுளையே மறந்துவிடுகிறோம் என்னும் ஆபத்தை உணர்வோம்.

• இதயத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து, ‘மனத்துக்கண் மாசிலனாய்’ வாழ்ந்து கடவுளுக்கு உகந்த காணிக்கையாக நாளும் நம்மையே ஒப்புக்கொடுப்போம் (திபா 15).
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (25 ஆகஸ்டு 2024)
‘நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?’

வாழ்வில் போராட்டங்கள், பிரச்சினைகள், துயரங்களைச் சந்திக்கும்போது வருத்தம், ஏமாற்றம், இயலாமை, கோபம் போன்ற பல உணர்வுகள் நம்மில் எழுகின்றன. இந்தப் பிரச்சினைகளோடு வாழ்க்கை தொடர்பான பல சவால்கள் நிறைந்த கேள்விகளும் நம்மை வாட்டுகின்றன. சில சமயம் வாழ்க்கையில் நாம் நசுக்கப்படலாம்; கையறு நிலைக்குத் தள்ளப்படலாம்; இறைவன்மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையில் தடுமாறலாம். அந்நேரங்களில் நாம் இயேசுவை விட்டு விலகிச் செல்லாமல், அவர் கரம்பிடித்து நடக்கையில் நம்மைச் சுற்றி நிகழ்பவை அனைத்தும் நலமானதாகவே அமையும் எனும் நம்பிக்கையை விதைக்கிறது இன்றைய திருவழிபாடு.

கடந்த நான்கு வாரங்களாகவே நாம் யோவான் 6-ஆம் அதிகாரத்திலிருந்து நற்செய்திப் பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இயேசு 5000 பேருக்கு அப்பம் பலுகச் செய்த நிகழ்வோடு யோவான் ஆறாம் அதிகாரம் தொடங்குகிறது. இயேசு வழங்கிய வியப்புக்குரிய விருந்தில் பங்குகொண்ட மக்கள், தங்கள் வயிற்றுப் பசியைத் தீர்க்க, இயேசுவை மீண்டும் தேடிவருகின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையினால் அல்ல; மாறாக, அழிந்துபோகும் உணவையே தேடினர் (யோவா 6:26). தொடர்ந்து யூதர்களுடனான விவாதத்தில் நற்கருணை பற்றிய பல இறையியல் உண்மைகளை இயேசு விளக்கிக் கூறினார். பல கடினமான சவால்களை முன்வைத்தார். அழியாத உணவை அவர் தருவதாகக் கூறியதும், இயேசுவைப் பின்தொடர்ந்தவர்களுள் பலர் அவருடைய பேச்சினை ஏற்றுக்கொள்வது கடினம் எனவும் (6:60), அவருடைய போதனை நம்ப இயலாததாக உள்ளதாகவும் கூறி அவரை விட்டுப் பிரிந்து செல்கின்றனர் (6:66). ஆனால், இயேசுவைப் பின்சென்றவர்களில் சிலரோ, அவர்மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அவரது போதனைகளை ஏற்றுக்கொள்கின்றனர் (6:69).

இயேசுவின் சீடர்கள் அவரை விட்டு விலகிச் செல்வதற்கான காரணங்கள் சில:

முதலாவதாக, “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது” என்று இயேசு கூறியபோது, “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?” (6:42) என்று கூறி இயேசுவை நிராகரிக்கின்றனர். தங்களுக்கு அறிமுகமான ஒருவரை, மிகச் சாதாரணமான ஒரு மனிதரை, இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ள அவர்களுக்குத் தடையாக இருந்தது அவர்களுடைய ‘முற்சார்பு எண்ணங்கள்.’

இரண்டாவது, யாரெல்லாம் உலகத்தின்மீது தீராத பற்றும், உலகப் பொருள்களின்மீது அளவில்லாத ஆசையும் கொண்டிருந்தார்களோ அவர்களாலும் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்ல இயலவில்லை. எடுத்துக்காட்டாக, ‘செல்வம் துறந்து வாழ்தலே என்னைப் பின்தொடர்வதற்கான  எளிய வழி’ என்று இயேசு கூறியபோது, உலகப் பொருள்களின்மீது பற்று கொண்டவர்கள் இயேசுவோடு உடன் பயணிக்க இயலாமல் போனது (மத் 19:21,22).

மூன்றாவதாக, இயேசுவின் சவாலான போதனைகள். எடுத்துக்காட்டாக, தமது உடல், இரத்தம், நிலைவாழ்வு, நற்கருணை பற்றி இயேசு போதித்தபோது, “இதை ஏற்றுக்கொள்வது  மிகக்கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” (6:60) என்று சொல்லி சீடர்கள் பலர் இயேசுவிடமிருந்து விலகிச் சென்றனர்.

இயேசுவையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவரை விட்டுப் பலர் பிரிந்து சென்ற சூழலில், இயேசு பன்னிரு சீடர்களிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” (6:67) என்று கேட்கிறார். திருத்தூதர்கள் இயேசுவின் போதனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அல்லது இயேசுவைப் பற்றி இன்னும் முழுமையாக அறிந்திராவிட்டாலும், பேதுரு அனைவர் சார்பாகவும் “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” (6:68) என உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறார்.

பேதுரு மற்றும் திருத்தூதர்களின் இந்த முடிவு ஒரு சாதாரண முடிவு அல்ல; மரணத்தை விரும்பி ஏற்கும் முடிவு. எனவே, அவர்களின் முடிவு அவர்களை இறப்புவரை அழைத்துச் சென்றது. இருப்பினும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை; இயேசுவை விட்டு விலகிச் செல்லவுமில்லை. இயேசுவுக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணமாக்கியதால் சக்திமிகுந்த சாட்சிகளாக அனைவரும் மாறினர். தங்களையே இயேசுவுக்கு முழுமையாக அர்ப்பணித்தனர்; சரணடைந்தனர். இதுவே உறுதியான நம்பிக்கை; உண்மையான சீடத்துவம். பேதுரு தனது நம்பிக்கை அறிக்கை வழியாகத் திருத்தூதர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியதுபோல, இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா தனது நம்பிக்கை அறிக்கை வாயிலாக இஸ்ரயேல் மக்களை ஒன்றிணைத்து வழிநடத்துவதைக் காண்கிறோம்.

மோசேவுக்குப்பின் இஸ்ரயேல் மக்களைத் திறம்பட வழிநடத்தி, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்து வந்தவர் யோசுவா (இச 34:9). ஓர் இறைவாக்கினரைப்போல் யோசுவா ‘ஆண்டவரின் ஊழியராக’ இருந்து மக்களை வழிநடத்தியவர். வாக்களிக்கப்பட்ட நாட்டைக் கைப்பற்ற நடந்த போரிலும், மேற்கொண்ட தடைகளிலும் யாவே இறைவன் ஆற்றிய வியத்தகு செயல்களைக் கண்டவர். யாவேயின் கட்டளைப்படி, கைப்பற்றப்பட்ட நாட்டுப் பகுதிகளை வெவ்வேறு இஸ்ரயேல் குலத்தினருக்கும் பங்கிட்டுக் கொடுத்தவர் (யோசு 13:1).

மோசேயின் மூலமாக வழிநடத்திய இறைவன், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் இஸ்ரயேல் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளியதை நினைவூட்டும் யோசுவா, மக்கள் பிற இனக் கடவுள்களை விட்டு விட்டு, யாவே கடவுளை மட்டும் பற்றிக்கொள்ள அழைக்கிறார் (23:8). பிற இனக் கடவுள்களைப் பின்செல்லாமலும், அவற்றை வணங்காமலும், “ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் ஊழியம் புரிய மக்களிடம் விண்ணப்பிக்கிறார் (24:14). யோசுவாவின் விண்ணப்பத்தைக் கேட்ட மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” என ஆண்டவர்மேல்  தாங்கள் கொண்டிருந்த பற்றுறுதியையும், நம்பிக்கையையும் அறிக்கையிடுகின்றனர் (24:18).

பேதுரு மற்றும் யோசுவா ஆகிய இருவரும் வெளிப்படுத்திய நம்பிக்கை அறிக்கையைத்தான் நாமும் நம் திருமுழுக்கின்போதும், ஆண்டுதோறும் கொண்டாடும் பாஸ்கா திருவிழிப்பு போன்ற திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் அறிக்கை செய்ய அழைக்கப்படுகிறோம். நம்பிக்கை அறிக்கையின் இறுதியில், ‘தூய கத்தோலிக்கத் திரு அவையை நம்புகிறேன்’ என அறிக்கையிடுகிறோம். நமது நம்பிக்கையின் மிக முக்கியமான கூறு இதுதான்.

இறைவார்த்தையால் முன்னறிவிக்கப்பட்ட இறையாட்சியைப் போதித்து, இயேசு இவ்வுலகில் திரு அவையைத் தொடங்கி வைத்தார் (திருச்சபை எண்.5). இந்த இறையாட்சி நிலைபெற பன்னிரு திருத்தூதர்களைக் கொண்ட அமைப்பை நிறுவினார். தமது முதன்மைத் திருத்தூதரான பேதுருவின் தலைமையில் இத்திருக்கூட்டத்திற்குக் கட்டமைப்பை உருவாக்கினார்.

‘ஒரே ஆயனும் ஒரே மந்தையும்’ என்ற எதிர்நோக்கோடு கிறிஸ்தவ சமூகம் ஒரே தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் நோக்கம். எனவேதான் இயேசு நம்பிக்கை கொண்டோர் பிளவுபடா உள்ளத்தோடு ஒரே சமூகமாக இணைந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். அந்த ஒன்றிப்பை உண்மையாக்க கிறிஸ்து பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியாரைத் தந்து உறுதிப்படுத்தினார்.

எனவே, நாம் சார்ந்திருக்கும் திரு அவை என்பது ஒரே திரு அவை, தூய திரு அவை, கத்தோலிக்கத் திரு அவை, திருத்தூது திரு அவை.

தந்தை-மகன்-தூய ஆவி ஆகிய மூவரும் தம்முள் ஒன்றாய் இருக்கின்ற காரணத்தால், அவரினின்று ஊற்றெடுக்கும் திரு அவையும் ஒன்றாய் இருக்கிறது. தந்தையோடும் தூய ஆவியோடும் இயேசு ஒருவரே தூயவர் என்பதால், அவர் நிறுவிய திரு அவையும் தூயதாக இருக்கிறது.

எல்லா இன, மொழி, நாட்டினரையும் ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து அனைவருக்கும் பொதுவானதாகவும், உரோமை ஆயரோடு கொண்டுள்ள உறவு ஒன்றிப்பினாலும் இத்திரு அவை கத்தோலிக்கத் திரு அவையாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமது திரு அவை திருத்தூதர்களை அடிக்கல்லாகவும், இயேசுவை மூலைக்கல்லாகவும் கொண்டு கட்டப்பட்ட திருத்தூது திரு அவையாக இருக்கிறது.

இத்தகைய தன்மைகளும், பண்பு நலன்களும் நமது கத்தோலிக்கத் திரு அவைக்கு மட்டுமே உரியன. இத்தகு ஆழ்ந்த பொருள்செறிவும், இறையியல் கட்டமைப்பும் கொண்ட ஒரு திரு அவையின் உறுப்பினராக நாம் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவோம். கிறிஸ்துவிலும், அவரது திரு அவை மீதும் நம்பிக்கைக் கொள்வோம். ‘இயேசுவின் குத்தித் திறக்கப்பட்ட விலாவிலிருந்து பிறந்த இந்தத் தாய் திரு அவையை’ விட்டு விலகிச் செல்பவர்களுக்காகச் சிறப்பாக இன்று மன்றாடுவோம்.

நாம் இயேசுவை விட்டு, திரு அவையை விட்டு விலகிச் செல்லும்போது, இயேசு திருத்தூதர்களைப் பார்த்துக் கேட்ட அதே கேள்வியை இன்று நம்மைப் பார்த்தும் கேட்கிறார்: “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” (6:67). இறைவனை நோக்கி யோசுவா, இயேசுவை நோக்கிப் பேதுரு கூறிய பதிலை நாமும் ஒரே குரலாக இயேசுவுக்குச் சொல்வோம்.

“நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில், அவரே எங்கள் கடவுள்” (யோசு 24:18); “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன” (யோவா 6:68).
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (18 ஆகஸ்டு 2024)
நிலைவாழ்வு தரும் உணவு நற்கருணை

கடவுள் மனிதருக்கு உணவளித்து வாழ வைக்கின்றார். மனிதரைப் படைத்த கடவுள் முதல் செயலாக அவர்களுக்கு உணவு அளிக்கிறார் (தொநூ 2:9). பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னாவும், காடை இறைச்சியும் உணவாக அளித்து அவர்களைக் காத்தார் (விப 16:2). ஞானத்தின் ஊற்றாம் இயேசு தம் பணிவாழ்வில் உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இயேசு செய்த வல்ல செயல்கள், மனமாற்றங்கள், அறிவுரைகள், உவமைகள் யாவும் உணவு வேளையில்தான் நிகழ்ந்தன.

பாலைநிலத்தில் தம் வார்த்தைகளுக்குச் செவிமடுத்த மக்களுக்கு வயிறார உணவு அளித்தார் (மாற் 6:42). தொழுகைக்கூடத் தலைவர் யாயீரின் மகளை உயிர்த்தெழச் செய்தபோது, அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார் (லூக் 8:55). மீன் பிடிக்கச் சென்ற தம் சீடர்கள் களைப்புடன் திரும்பிய போது, அவர்களுக்காக உணவு தயாரித்துக் கொடுத்தார் (யோவா 21:12).  வரி தண்டுபவர்கள், பாவிகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் இல்லங்களைத் தேடிச் சென்று, அவர்களோடு உணவு உண்டு, அவர்களுக்கு மனமாற்றத்தையும் மீட்பையும் வழங்கினார் (மத் 9:9-10; லூக் 11:37; 14:1). இதனால் இயேசுவுக்குக் கிடைத்த பட்டம் - “பெருந்தீனிக்காரன், குடிகாரன்” (மத் 19:11).

இயேசு பிறந்தது பஞ்சு மெத்தையில் அன்று; கால்நடைகளுக்கு உணவு வைக்கின்ற ‘தீவனத் தொட்டியில்’ (லூக் 2:12). ஏழ்மை, எளிமை, தனிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை... இவற்றில் ஏழையாகப் பிறந்த இயேசு உணவின் அருமையை அறியாதிருப்பாரோ? ஒன்பது மணிக்கு வந்தவருக்கும், ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கு வந்தவருக்கும்,  ஐந்து மணிக்கு வந்தவருக்கும் ஒரேவிதமான ஊதியம் கொடுக்கும் இயேசுவின் செயல் ஒரு வேளை நமது பார்வையில்   அநீதியாகத் தெரியலாம் (மத் 20:1-16); ஆனால் இயேசு ஒவ்வொருவரின் பசியைப் பார்க்கிறார். “உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை” (மத் 15:32) எனும் இயேசுவின் பரிவுமிக்க உணர்வுதான் இங்கேயும் வெளிப்படுகிறது. யோவான் நற்செய்தி 6 -ஆம் அதிகாரம், கடவுள் மனிதருக்குத் தரும் மூன்று வகையான உணவுகளைப் பற்றிப் பேசுகிறது. உடல் உணவு (1-15); இறைவார்த்தையாய் உள்ள உணவு (35-50); கிறிஸ்தவச் செயல்பாட்டிற்கான நற்கருணை உணவு (51-58). கடந்த மூன்று வாரங்களாக உடலுக்கு இன்றியமையாத உடல் உணவு பற்றியும், உள்ளத்திற்குத் தேவையான இறைவார்த்தை உணவு பற்றியும் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று, நற்கருணை உணவைப் பற்றிச் சிந்திப்போம்.

கடந்த வார நற்செய்திப் பகுதியின் இறுதி வசனத்தில் இயேசு, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்” (6:51) என்பார். இது இயேசுவுக்கும் யூதருக்கும் இடையே ஒரு விவாதத்தை உருவாக்கியது. “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” (6:52) எனும் வினா, நற்கருணையைப் பற்றி இன்னும் ஆழமாக விளக்கிச் சொல்ல இயேசுவுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

இயேசுவின் சதையை உண்பதும், அவருடைய இரத்தத்தைக் குடிப்பதும் ஏற்றுக்கொள்ள இயலாத செயல்களாக யூதருக்குப் பட்டன. என்ன காரணம்? யூத மரபிலே தசையை உண்ணுதல் என்பதற்கு வெறுத்தல், பழித்தல் என்ற பொருளுண்டு (திப 27:2; செக் 11:9). உணவு தொடர்பான பல சட்டங்களும் யூதர்களுக்கு இருந்தன. தடைசெய்யப்பட்ட உணவுகள் இருந்தன. இரத்தம் பிரிக்கப்படாத விலங்குக் கறியை உண்ணக்கூடாது என்பது மிக முக்கியமான ஓர் உணவுச் சட்டம். “இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதீர்கள்” என்பது ஒரு முக்கியமான சட்டம் (தொநூ 9:4). இரத்தத்தைக் குடிப்பது என்பது ஓர் அருவருக்கத்தக்க செயல். அது யூதர்களின் வாழ்வில் தடைசெய்யப்பட்ட ஒரு செயல் (லேவி 3:17; இச 12:23). எனவே, அதை அருந்தக்கூடாது என்பது கடவுளின் கட்டளை (லேவி 17:10-14; திப 15:29).

கடவுளுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆட்டினை எவ்வாறு உண்ணவேண்டும் என்பது குறித்து இணைச்சட்ட நூல் இவ்வாறு கூறுகிறது: “ஆட்டின் இரத்தத்தை உண்ணவேண்டாம். தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிடு” (15:23). யூதர்களைப் பொறுத்தவரை உயிர் என்பது இரத்தத்தில் இருப்பதாக நம்பினார்கள். உயிர் கடவுளுக்குச் சொந்தமானது; எனவே கடவுளுக்குச் சொந்தமானதை மனிதர்கள் எப்படி உண்ணமுடியும்? இயேசு கூறிய கூற்றை நேரடிப் பொருளில்தான், அதாவது, ‘சதையை உண்ணல்’ எனும் பொருளில்தான் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இயேசுவின் இரத்தத்தைக் குடிக்க இயேசு கூறுவதாகப் புரிந்துகொண்டு, “இதை ஏற்றுக்கொள்வது கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?” (6:60) எனக் கூறி முணுமுணுத்தார்கள்.

யூதர்களின் முணுமுணுப்புக்காக இயேசு தம் கூற்றைச் சற்றும் மாற்றிக்கொள்ளவில்லை. “மானிட மகனுடைய சதையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய வாழ்வு அடையமாட்டீர்கள்” என மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் (6:53). இயேசு சொன்ன ‘சதை’, ‘இரத்தம்’ என்ற இந்த இரு வார்த்தைகளும் மக்களை  நிலைகுலையச் செய்தன. ‘அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தம் சதையையும் இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே...’ என்று மக்கள் தடுமாறினர். இருந்தாலும், மீண்டும் உறுதிபடச் சொல்கிறார்: “எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” (6:54). எனவே, இயேசு நற்கருணையில் தருவது வெறும் வாழ்வு அல்ல, நிலைவாழ்வு. பழைய ஏற்பாட்டு மக்கள் திருச்சட்டத்தையும், மன்னாவையும் பெற்று ‘மடிந்துபோகும்’ வாழ்வுதான் வாழ்ந்தனர். ஆனால் இயேசு தரும் உணவை உண்பவர் ‘நிலைவாழ்வு’ பெறுவார் (6:58).

யோவான் நற்செய்தி முழுவதிலுமே இயேசு தம்மை நிலைவாழ்வு அருள்பவராகவே வெளிப்படுத்துகிறார் (3:17, 10:27, 5:24, 6:39, 17:3).

இயேசு குறிப்பிடும் நிலைவாழ்வு என்பது அவரின் வருகையோடு தொடங்குகிறது. இயேசுவை நம்பி அவரில் திருமுழுக்குப் பெறுபவர்கள் நிலைவாழ்வுக்கு உட்படுகிறார்கள் (உரோ 6:4). இந்த நிலைவாழ்வு இயேசுவால் நமக்குக் கொடுக்கப்படும் புதுவாழ்வு (1கொரி 4:11). கடவுளுக்கு மட்டுமே உரித்தான நிலைவாழ்வில் பங்குகொள்ள நாம் பேறுபெற்றுள்ளோம். சுருங்கக்கூறின், காலத்திலும் காலம் கடந்தும் (விப 3:14) கடவுளோடு, கடவுளுக்குள் ஒன்றித்து அவர் வாழ்வில் பங்குபெறுவதே ‘நிலைவாழ்வு’.

இயேசுவுக்குள் ஒன்றித்து எவ்வாறு வாழ்வது? இயேசுவின் சதை ‘உண்மையான உணவு’. இயேசுவின் இரத்தம் ‘உண்மையான பானம்’ (6:55). இந்த உண்மையான உணவை உண்டு, உண்மையான பானத்தைப் பருகுபவர்கள் வெறும் வாழ்வையல்ல, நிலைவாழ்வைக் கொண்டிருப்பர். அது மட்டுமன்று, இயேசுவை உண்ணும்போது இயேசுவுக்கும், அவரை உண்பவருக்குமிடையே ஒரு நெருக்கமான உறவு பிறக்கிறது (1கொரி 10:16).

இந்த உறவு பிரிக்க முடியாத ஓர் உறவு! இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் “எனது சதையை உண்டு, எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்கிறார் (6:56). தந்தையும் மகனும் கொண்டிருக்கும் ஒரே இறை உயிரில் நற்கருணை வழி நாமும் பங்குபெறுகிறோம்.

இறுதியாக, இயேசு தமது தந்தையை ‘வாழும் தந்தை’ என அழைக்கிறார். ‘அவரே என்றும் வாழ்பவர்’ (தொநூ 21:33); ‘காலத்திற்கு அப்பாற்பட்டவர்’ (உரோ 16:26); ‘அவர்தான் என்னை அனுப்பினார்’ என்கிறார் (6:57). அவரால் தாம் வாழ்வதைப் போல், தம்மை உண்போரும் தம்மால் வாழ்வர் என்கிறார். தமக்கும், தம் தந்தைக்கும், தம் உடலை உண்போருக்குமான பிரிக்க முடியாத உறவை எடுத்துக்காட்டுகிறார். தங்களின் சட்டங்களாலும், கடைப்பிடிக்கும் விருத்தசேதனத்தாலும், தங்கள் யூதப் பிறப்பாலும் தாங்கள் கடவுளோடு இணைந்திருக்கிறவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த யூதர்களுக்கு இயேசு கூறியதைக் கேட்பதற்குக் கடினமாகத்தான் இருந்திருக்கும். இயேசுவை விடுத்து தந்தை கடவுளை நாம் அடைய முடியாது; அவரது உடலை உட்கொள்ளாமல் நாம் நிலைவாழ்வில் பங்குபெற முடியாது என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்.

நம் வாழ்வின் மையமாக இருக்கும் ‘நற்கருணை’ நமக்குக் கடவுளின் கொடைகளைத் தருகிறது. யாருக்கும் கிடைக்காத சிறப்பு என்னவெனில், நற்கருணையில் கிறிஸ்துவையே (கடவுளையே) உணவாகப் பெறுகிறோம். இந்த நற்கருணையில் இறைவனின் அளவு கடந்த அருளை நாம் பெறுகிறோம்.

நற்கருணைக்கு ‘இறைவனின் அணைகடந்த அருள்’ என்று பொருள் தருகிறார் வீரமாமுனிவர். “அழியா வாழ்விற்கு அருமருந்தாகவும், சாவுக்கு ஒரு மாற்று மருந்தாகவும் இயேசுவோடு என்றும் வாழ நம்பிக்கையாகவும் இருப்பது நற்கருணை” என்கிறார் புனித அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார். “நற்கருணை முன் என்னையே மறக்கிறேன்; அவர் எனக்குள் வந்து விடுகிறார்” என்கிறார் புனித அன்னை தெரசா. எனவே, இயேசுவின் உடலாம் நற்கருணையை ஒவ்வொரு நாளும் சுவைத்துப் பார்ப்போம் (திபா 34).

இயேசுவின் உடலைச் சுவைத்துப் பார்ப்பதால்,

• நாம் அவரோடு இணைந்து உயிருள்ள ஆலயமாய், பலியாய், பலி பொருளாய் மாறி தம்மையே ஒப்புக்கொடுக்கிறோம்!

• நாம் அவரது வார்த்தையைக் கேட்பதிலும், அதை அன்றாடம் வாழ்வாக்குவதிலும் முனைப்போடு செயல்படுகிறோம்!

• நாம் அவரின் முன்மாதிரியைப் பின்பற்றி, தேவையில் உள்ள நம் சகோதர-சகோதரிகளுக்காக நம் வாழ்வையே கையளிக்க முன்வருகிறோம்!
news
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு (11 ஆகஸ்ட் 2024)
வாழ்வு அளிக்கும் உணவு இறைவார்த்தை!

மனிதரின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும், முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அடிப்படையான உணவு உரிமை ஒரு மனிதருக்கு மறுக்கப்படும்போது அங்கே பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குகிறது. இது கொலை, கொள்ளை போன்ற தீமைகளுக்கும் வழியமைக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக உணவு நாளை முன்னிட்டு தனது மூவேளைச் செப உரையின் இறுதியில், “வறுமை, பசி ஏராளமான நம் சகோதர, சகோதரிகளை மாண்பிழக்கச் செய்கின்றது; அவர்களைப் புண்படுத்துகின்றது மற்றும் உயிரைப் பறிக்கின்றது. எனவே, பசிக்கொடுமையை அகற்றுவதற்கு உலகில் அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும்” என்று உலகினருக்கு அழைப்பு விடுத்தார் (அக்டோபர் 16, 2016).

உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவுதான். இந்த உணவு ஒரு மனிதருக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதைப் பல இடங்களில் இயேசு போதித்துள்ளார். “நான் பசியாக இருந்தேன்; நீங்கள் உணவு கொடுத்தீர்களா? நான் தாகமாய் இருந்தேன்; நீங்கள் என் தாகத்தைத் தணித்தீர்களா?” (மத் 25:35). இதுதான் மானிட மகன் மாட்சியுடன் வரும்போது ஆசி பெறுவதற்கான தகுதிகளில் ஒன்றாக அமைகிறது. எனவே, பசியோடு வருபவரின் பசியை ஆற்றுவது மிகப்பெரிய பேறு! கடந்த இரு வாரங்களாக உடல் பசியோடு தம்மைத் தேடி வந்த மக்களுக்குக் கனிவோடு உணவு பகிர்ந்து கொடுத்த இயேசு, இன்றைய பகுதியில் ‘உள்ளப் பசியை’ ஆற்ற முன்வருகிறார்.

உடல் பசி மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. உடல் பசியை உணவு கொண்டு ஆற்றிவிடலாம். ஆனால், இன்று உள்ளத்தை அல்லது மனத்தை ஆக்கிரமித்துள்ள பசிகள் ஏராளம். அவை அறிவுப் பசி, அதிகாரப் பசி, ஆணவப் பசி, ஆசைப் பசி, பிறர் மனைமீது பசி, புகழ் பசி, பதவி பசி, பணப் பசி, கோபப் பசி, மண் பசி, இணையதளப் பசி... எனப் பல வடிவங்களில் நீள்கின்றன. இப்படிப்பட்ட பசியைத் தீர்க்க முடியாததால்தான் வன்முறைகளும், கொலைகளும், போர்களும் நிகழ்கின்றன. மனிதரை வாட்டுகின்ற இவ்வாறான பசிகள் கொரோனாவைவிட கொடூரமானவை. மனிதர்களிடையே காணப்படும் பல்வேறு வகையான பசிகள் இன்றைய வாசகங்களில் வெளிப்படுவதை உணரலாம்.

அரசியான ஈசபேலுக்கு அஞ்சி நெடுந்தூரம் பயணிக்கும் எலியாவை இறைவன் உணவும், தண்ணீரும் தந்து திடப்படுத்துவதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது (1அர 19:4-8). இப்பகுதியை மேலோட்டமாக வாசிக்கும்போது, பசித்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற ஒரு வரிச் சிந்தனையில் நாம் கடந்துபோகலாம். ஆனால், எலியா யார்? அவர் ஏன் பாலைநிலத்திற்குச் சென்றார்? ஒரு சூரைச் செடியின்கீழ் அமர்ந்துகொண்டு ஏன் சாக விரும்பினார்? போன்ற கேள்விகளுக்குப் பின்னால் மனிதர்களின் கோரப்பசியும், கொலைவெறிச் செயல்களும் மறைந்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இன்றைய முதல் வாசகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இறைவாக்கினர் எலியாவைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியமாகும். இஸ்ரயேல் மற்றும் யூதா பகுதிகளுக்கு ஆண்டவரால் அனுப்பப்பட்ட முக்கியமான இறைவாக்கினர்கள் வரிசையில் முதலாவதாக வருபவர் எலியா. மோசேவுக்கு அடுத்தபடியாக மிகவும் மதிக்கப்பட்ட மாபெரும் இறைவாக்கினர் இவர். ‘யாவே ஆண்டவரே உண்மையான கடவுள்’ என்பதைத் துணிந்து பறைசாற்றிட போராடியவர். கடவுளின் பெயரால் அருள் அடையாளங்களை நிகழ்த்தியவர். திருவிவிலியத்தில் வரும் முதல் உயிர்ப்பித்தல் நிகழ்வு எலியா வழியாக நிகழ்கிறது (1அர 17:22).

இஸ்ரயேல் நாட்டை ஆண்ட அரசர்களுள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்கள் மிகக் குறைவு. ஏறக்குறைய எல்லா அரசர்களும் தீய வழியில் நடந்தனர். இவர்களின் வரலாறு இன்று நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அருள்பொழிவு செய்யப்பட்டு, ஆண்டவரால் அழைக்கப்பட்ட அரசர்கள், ஆண்டவரை மறந்து, சுயநலன்களுக்கு அடிமையாகி வேறு தெய்வங்களை வழிபட்டு வாழ்கின்ற நிலையைப் பார்க்கும்போது, இன்றைய அரசியல்வாதிகளின் நிலை நம் கண்முன் விரிகிறது. ஆண்டவரை மறந்து வாழ்கின்ற இச்சமூகம் தொழில்நுட்பப் பசி, பணப் பசி, அதிகாரப் பசி, சுயநலப் பசி, போதைப் பசி, மது/மாது பசி போன்ற பசிகளுக்கு அடிமையாகி நிற்கின்ற நிலையைப் பார்க்க முடிகிறது.

இஸ்ரயேல் மக்கள் வேற்றுத் தெய்வங்களை வழிபட அரசர்கள் காரணமாயினர். அவர்கள் வழிபட்ட தெய்வங்களுள் முக்கியமானவர் பாகால். பாகால் ஒரு கானானேயக் கடவுள். பாகாலை வழிபட்டவர்கள் அவரை மழையின் தெய்வமாகக் கருதினார்கள். மழையைப் பெய்வித்து, நல்ல விளைச்சலைக் கொடுப்பவர் பாகால் என மக்கள் நம்பினார்கள். அரசர் ஆகாபு தலைநகரான சமாரியாவில் பாகாலுக்குக் கோவில் கட்டி வழிபட்டார். யாவே கடவுளையே மறந்துவிட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் எலியா அரசர் முன்னிலையில் வந்து நின்று, “என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” எனச் சூளுரைத்தார் (1அர 17:1). பாகால் கடவுள் அல்ல; அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதை எலியா நிரூபித்துக் காட்டினார். கார்மேல் மலையில் யாவே ஆண்டவரின் பிரதிநிதியான எலியா பாகால் தெய்வத்தின் பிரதிநிதிகளான அரசர் ஆகாபு மற்றும் பொய்வாக்கினர்கள் 450 பேர் முன்னிலையில் ‘யாவே ஆண்டவர்தான் உண்மையான கடவுள்; பாகால் என்பது ஒன்றுமில்லை’ என்பதை உறுதி செய்தார். மக்கள் அனைவரும் முகம் குப்புற விழுந்து, “ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள்!”  என்று முழங்கினர் (1அர 17:39). பாகாலின்  பொய்வாக்கினர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இறைவாக்கினர் எலியா பாகாலின் பொய்வாக்கினர்களுக்குச் செய்ததைக் கேள்விப்பட்டதும் அரசி ஈசபேல் எலியாவைக் கொல்லத் தேடுவதும், அரசிக்குப் பயந்து தன் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு எலியா பாலைவனம் நோக்கித் தப்பி ஓடுவதும் இன்றைய முதல் வாசகத்தின் பின்னணியாக அமைகிறது. ஈசபேலின் அதிகாரப் பசி, பதவிப் பசி, கொலை வெறிப் பசி, பிறர் மண் பசி போன்ற வேட்கையினால் ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் உண்மையுடன் செயல்படும்போது, அதிகாரப் பசியில் இருப்பவர்களிடமிருந்து ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பது இதில் தெளிவாகிறது.

எலியா ஈசபேலிடமிருந்து பாலைவனம் வழியாக ஓரேபு என்ற கடவுளின் மலைக்குத் தப்பி ஓடிய பயணத்தில் ஆண்டவர் துணை நிற்கின்றார்; வழியில் தேவையான உணவுகள், உதவிகள் அவருக்குக் கிடைக்கச் செய்கிறார். ஆண்டவரின் ஊழியர்கள் எப்போதும் தனித்துவிடப்படுவதில்லை. மனிதர்கள் அவர்களைக் கைவிட்டாலும், தங்கள் பணியில் வெற்றி பெறவில்லை என அவர்கள் விரக்தியடைந்தாலும், ஆண்டவர் அவர்களோடிருக்கிறார்; அவர்களுக்கு வழித்துணை புரிகிறார்; அவர்களைத் திடப்படுத்துகிறார் என்பதற்கு இன்றைய முதல் வாசககம் ஒரு சான்று.

எனவே, இன்றைய முதல் வாசகத்தில் கடவுளுடைய வார்த்தை முக்கியப் பங்காற்றுகிறது. இறைவாக்கினர் எலியா வழியாகக் கடவுளின் வாக்கைக் கேட்ட மக்கள் ‘போலி தெய்வ வழிபாடு’ என்ற பசி நோயிலிருந்து நலம் பெற்றனர். கடவுளின் வாக்கைக் கேளாத அரசன் ஆகாபு மற்றும் அரசி ஈசபேல் ஆகிய இருவரும் ஆண்டவருடைய தீர்ப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஆண்டவருடைய வார்த்தைகள் அவர்களில் நிறைவேறுகின்றன. அவர்களுடைய இரத்தத்தை நாய்கள் நக்குகின்றன (1அர 21:19; 22:38; 2அர 9:37). ஆகவே, அதிகாரப் பசி, செல்வப் பசி, புகழ் பசி அனைத்தும் ஒருவருக்கு நிலையான வாழ்வைத் தராது என்பதற்கு இவர்களின் வாழ்க்கை நமக்கோர் எடுத்துக்காட்டு.

இன்றைய முதல் வாசகச் சிந்தனையோடு நற்செய்தி வாசகத்தை இணைத்துச் சிந்திக்கும்போது, இயேசுவைத் தேடி வந்தவர்களின் உள்ளங்களில் எழும் வெவ்வேறு விதமான பசிகளையும் உணர முடிகிறது. இன்றைய நற்செய்திப் பகுதியில், உடல் உணவு அழியக்கூடியது; அழியாத உணவு ஒன்று உண்டு. அவ்வுணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு; அது வாழ்வு தரும் உணவு; இவ்வுணவு இறைவனின் சொல், இறைவார்த்தை, மனிதரை வாழ வைக்கும் உணவு என்ற இறை உண்மைகளைக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் வயிற்றுப் பசியைப் போக்க மீண்டும் இயேசுவிடம் வந்த மக்களின் பேராசைப் பசி, இயேசு சொன்ன உண்மையை ஏற்கவும், எதிர்க்கவும் முடியாமல் இயேசுவின் பிறப்பையும், வளர்ப்பையும் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்கும் யூதர்களின் எதிர்ப்புப் பசி, அவர்களின் நம்பிக்கையின்மை என்ற பசியை எதிர்ப்புகளாகவும்  முணுமுணுப்புகளாகவும் எதிர்கொண்ட இயேசு, யூதர்களுக்கும், மக்களுக்கும் நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் கற்றுக்கொடுக்கின்றார்.

தம்மைத் தேடி வரும் மக்கள் தந்தையின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்; அவரால் ஈர்க்கப்பட வேண்டும். அப்படியானால்தான் நம்பிக்கை கொண்டு வாழ முடியும் (யோவா 6:43-44) என்ற உண்மையை இயேசு வலியுறுத்துகிறார். கடவுள் யாரையும் வலுக்கட்டாயமாகத் தம்மிடம் இழுத்துக்கொள்வதில்லை; மாறாக, மனிதரின் உள்ளத்தில் போதிக்கிறார். இயேசுவிடம் செல்ல மனிதரைத் தூண்டுகிறார். இறைவனின் தூண்டுதலுக்குச் செவிசாய்ப்போர் அவரால் ஈர்க்கப்பெறுவர். இவ்வாறு தந்தையால் ஈர்க்கப்பெறுவர் மட்டுமே தந்தையைக் காண முடியும். அதுவும் இயேசுவில்தான் அவரைக் காண முடியும். இயேசுவே தந்தையின் முழு வெளிப்பாடு (காண். யோவா 1:18) என்ற ஆழமான சிந்தனைகளை நாம் நற்செய்தியில் காண்கிறோம். ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்வர்’ (மத் 4:4). மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல; மாறாக, ஆண்டவரது சொல் (சாஞா 16:26). வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் கடவுளிடமே உள்ளன (யோவா 6:68).  எனவே,

• நம்மை வாழ வைக்கும் கடவுளின் வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்று, எலியாவைப்போல நீதி, உண்மை, அமைதி போன்ற அறப்பசி கொள்வோம்.

• உள்ளப் பசியோடு நம்மைத் தேடிவரும் வறியோருக்கு நல்ல சொற்கள், ஆறுதலான ஊக்கமூட்டும் வார்த்தைகள், பெரியோரின் ஞானம் நிறைந்த போதனைகள், இறைவெளிப்பாடுகளால் உள்ளப் பசியாற்றுவோம்.

• அதேநேரம், தெருவோரத்தில் 24 மணி நேரமும் வானத்தைக் கூரையாகப் பார்த்துக் கொண்டு இரந்துண்பவர்களுக்கு இனிய உரையால் அல்ல, இனிய உணவால் உடல் பசியாற்றுவோம்.