இயேசுவின் ஒளியில் இறைவாழ்வை நோக்கி...!
இன்று நாம் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவை ‘மூன்று அரசர்கள் திருநாள்’ என்றும், ‘மூன்று ஞானிகள் திருநாள்’ என்றும் அழைக்கிறோம். கடவுள் அனைத்துலக மக்களுக்குமானவர் என்பதே இவ்விழாவின் மையப்பொருள். “இறைவன் மனுக்குலத்தை நாடி வருவதையும் மனிதர்கள் இறைவனை நாடிச் செல்வதையும் இணைக்கும் ஓர் அழகிய திருநாள் இத்திருக்காட்சித் திருநாள்” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இடையர்கள், சிமியோன், அன்னா, மரியா, யோசேப்பு என யூத இனத்தவருக்கே தம்மை வெளிப்படுத்திய இறைவன், பிற இனத்தவர்களாகிய கீழ்த்திசை ஞானிகளுக்கும் தம்மை வெளிப்படுத்துகிறார். ‘இறைவனின் வெளிப்பாடு ஒரு சிலருக்கானதல்ல; இனம், சமயம், மொழி, பண்பாடு என அனைத்து எல்லைகளையும் கடந்து, மெசியா அனைத்துலக மக்களுக்குமானவர்’ என்பதை இவ்விழா நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்றைய
முதல் வாசகத்தில், “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (60:3) என
எசாயா முன்னறிவிப்பது மெசியா அனைத்துலக மீட்பர் என உணர்த்துகிறது. வெவ்வேறு
நாடுகளையும் இனங்களையும் பண்பாடுகளையும் சார்ந்தவர்களாக மக்கள் இருந்தாலும், கடவுளின் மீட்பு அனைவருக்கும் பொதுவானது என்பது இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. கீழ்த்திசையிலிருந்து எருசலேமுக்குப் பயணம் செய்த ஞானிகள் யூதரல்லாதவர்கள், தெரிந்துகொள்ளப்படாதவர்கள்,
திருவிவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்! இருப்பினும், மெசியாவின் பிறப்பினால் பெறப்படும் மீட்பு தங்களுக்குமானது என்பதை நம்பியே பயணப்பட்டனர்.
ஞானிகள்
குழந்தை இயேசுவை வணங்கிவிட்டு, தங்கள் பேழைகளைத் திறந்து பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களை அளித்ததை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த ஞானிகளிடமிருந்து பயனுள்ள சில பாடங்களை நாம் இன்று கற்றுக்கொள்வோம்.
முதலாவது,
யார் இந்த மூன்று ஞானிகள்? மத்தேயு நற்செய்தி 2-ஆம் அதிகாரத்தில் மட்டுமே இம்மூவரைப் பற்றிய சிறு குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவர்கள் விண் ஆய்வாளரையோ, கிழக்கு நாடுகளின் ஓர் அறிஞரையோ, எதிர்காலத்தைக் கணிப்பவர்களையோ குறிக்கலாம். இவர்கள்
உண்மையைத் தேடித்தேடி நிலையற்ற மனங்கொண்ட யூதரல்லாப் புறவினப் பெரியோர். மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்பதே இவர்கள் பெயர்கள் என மரபு கூறுகிறது.
வானதூதர்களால்
அறிவிக்கப்படாமல் தாங்களாகவே வானியல் விண்மீன்கள் பற்றிப் படித்து இறைவன் பிறப்பை அறிந்து, அறிமுகமில்லாத இடத்திற்குப் பயணம் செய்கிறார்கள் இந்த மூன்று ஞானிகள். இரவில் மட்டுமே கண்களுக்குத் தெரியும் விண்மீன்களைப் பின்தொடர்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல; மேலும், சாலைப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும்,
பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். இத்தனை இடர்கள், குழப்பமான கேள்விகள், ஆபத்தான மற்றும் வியப்புகள் நிறைந்த பயணத்தைக் குறித்துக் கவலை கொள்ளாமல், மனவேதனை அடையாமல், ஏமாற்றம் காணாமல், குறைகூறாமல் அவர்கள் தொடர்ந்து பயணித்தார்கள்; குழந்தையைக் கண்டு வணங்கினார்கள். ஞானிகள் போல நாமும் இடர்களுக்கு மத்தியிலும் இறைவனை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பது இவ்விழா உணர்த்தும் முதல் பாடம்.
இரண்டாவது,
இயேசுவைக் கண்டு வணங்குவதற்கு நீண்ட மற்றும் கடினமான பயணத்தை எதிர்கொண்ட மூன்று ஞானிகள் ஒரு விண்மீனின் அற்புதமான அடையாளத்தால் வழிநடத்தப்பட்டு, இறுதியாக அவர்கள் தங்கள் இலக்கை அடைகின்றனர். தாங்கள் தேடி வந்த குழந்தை, கற்பனை செய்த விதத்தில் அல்ல; மாறாக, அவர் எளியவராகவும் ஏழையாகவும் இருக்கிறார் என்பதை எண்ணி அவர்கள் அந்த மீட்பரை ஏற்றுக்கொள்கின்றனர். புறத்தோற்றங்களைக் கடந்து பார்ப்பதற்கு அவர்களால் முடிந்தது. வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பல நேரங்களில் மறைந்திருக்கும்
ஆண்டவரை வணங்குவதற்கு இந்த ஞானிகளின் செயல் நம்மைத் தூண்டுகிறது.
மனுக்குலத்திற்காகத்
தம்மைத் தாழ்த்திக்கொள்ள முன்வந்த பாலன் இயேசுவில் இறைவனைக் கண்டு, வியப்பில் ஆழ்ந்து, மகிழ்ந்து, நெடுஞ்சாண்கிடையாய் தாழ்மையுடன் விழுந்து குழந்தையை வணங்குகின்றனர் (மத் 2:11). வணங்குதல் என்பது, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும் மிக மதிப்புமிக்கவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு செயல். ஞானிகள் யூதர்களின் அரசர் எனத் தாங்கள் அறிந்து வைத்திருந்த ஒருவரை வணங்குகின்றனர்.
ஞானிகள்
இறைவனை வணங்கியதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடும்போது, “ஆண்டவரை வணங்குதல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது நொடிப்பொழுதில் நடப்பதுமல்ல; மாறாக, அதற்குக் குறிப்பிட்ட ஆன்மிகப் பக்குவம் தேவை. மேலும், அது ஒரு நீண்ட அகவாழ்வுப் பயணத்தின் கனியாகும்”
என்கிறார் (திருக்காட்சித் திருவிழா மறையுரை, 06.01.2021). மேலும், “நம் வாழ்வில் ஆண்டவரை நுழைய அனுமதிப்பதே வணங்குதலாகும். அவரது ஆறுதல், இவ்வுலகில் இறங்கிவரவும், அவரது கனிவான அன்பு நம்மை நிரப்புவதற்கும் அனுமதிப்பதே வணங்குதல் என்பதன் பொருள்” என்கிறார் (‘டுவிட்டர்’
செய்தி,
08.01.2020).
குழந்தையையும்
அதன் தாயையும் காணும் ஞானிகள் இரண்டு முக்கியமான அடையாளங்களை நமக்கு உணர்த்துகின்றனர். ஒன்று, உண்மையான ஞானத்தை இங்கே காண்கிறார்கள். எனவேதான் உண்மையான ஞானத்துக்கு முன்னால், உலக ஞானம் பணிந்து விழுந்து கிடக்கிறது. இங்கே இயேசுவே உண்மையான ஞானமாகவும், அந்த ஞானத்தை வைத்திருப்பவராக மரியாவையும் மத்தேயு காட்டுகிறார். மற்றொன்று, பொன், பொருள், அறிவு, ஞானம், பெயர், புகழ் என எல்லாம் பெற்றிருந்தும்,
உண்மையான செல்வம் என்பது புகழ், வெற்றி ஆகியவற்றில் இல்லை; மாறாக, பணிவு, பொறுமை, அமைதி, ஏழ்மை, எளிமை போன்றவற்றில்தான் கடவுளைக் கண்டு வியப்படைய முடியும் என்பதை ஞானிகள் கற்றுத் தருகின்றனர்.
என்னுடைய
பணிவு எப்படிப்பட்டது? எனது வீண் பெருமை என் ஆன்மிக முன்னேற்றத்தைத் தடுக்கிறதா? கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் திறந்த மனத்துடன் இருக்க நான் பணிவுடன் செயல்படுகிறேனா? நான் எப்போதும் இயேசுவை அறிந்துகொள்ளும் தேவையில் இருக்கிறேனா? போன்ற கேள்விகளை இன்று நாம் கேட்கத் தூண்டுகின்றனர் இந்த ஞானிகள்.
மூன்றாவது,
தூரத்திலிருந்து விண்மீனின் வழிகாட்டுதலுடன் வந்து எளிய உருவில் குழந்தை இயேசுவைக் கண்டுகொண்டு, அவர்முன் தெண்டனிட்டு வணங்கிய ஞானிகள் அவருக்கு விலை உயர்ந்த காணிக்கைகளை வழங்குகின்றனர். ‘ஏரோதிடம் திரும்பிப்போக வேண்டாம்’
எனக் கனவில் எச்சரிக்கப்பட்டதும், அவர்கள் அகமாற்றம் அடைந்தவர்களாக, வேறு பாதையில் தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர் (மத் 2:12). இயேசுவுடனான சந்திப்பிற்குப் பிறகு, யாரும் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது.
குழந்தை
இயேசுவோடு ஞானிகள் மேற்கொண்ட சந்திப்பு அவர்களை, அங்கேயே கட்டிவைக்கவில்லை; மாறாக, அவர்களின் மகிழ்ச்சியை, அவரவர் இடங்களில்
பறைசாற்ற வைத்தது. இறைவனைச் சந்தித்தவர்கள், தங்கள் பழைய வாழ்வுப் பாதையில் நடைபோட முடியாது. ஆண்டவரைக் காணும் தேடலை நிறுத்திக் கொள்ளாமல் தொடர் தேடலில் ஈடுபட்டார்கள். ஆண்டவர் அரண்மனையிலும் அரசக் குடும்பத்திலுமல்ல; எளிமையிலும் ஏழ்மையிலும் தம்மை வெளிப்படுத்த இயலும் என்பதை உலகுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
ஒரு
பயணம், எப்போதும் மனத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பயணம் மேற்கொண்டபின் நாம் முன்பிருந்ததுபோல் இருப்பதில்லை. ஒரு பயணத்திலிருந்து கிடைத்த உள்ளார்ந்த வளர்ச்சியை முதலில் அனுபவிக்காமல், எவரும் ஆண்டவரை வணங்குவதில்லை. படிப்படியான செயல்முறை வழியாகவே நாம் ஆண்டவரை வணங்குகிறவர்களாக மாறுகிறோம். நாமும் இறைவனைச் சந்தித்தபின் சுதந்திரமாக, நம் பாதையில் பயணிக்க இறைவனால் விடப்படுகிறோம். அந்தப் பாதை நாம் வந்த பாதையே எனினும், நாம் நம்மில் மாற்றம் பெற்றவர்களாக உள்ளோம் என்பதை ஞானிகள் நமக்கு உணர்த்துகின்றனர்.
நிறைவாக,
விண்மீன் காட்டிய பாதையில் சென்று இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிய ஞானிகளைப்போல், நாமும் தடைகள் பல எழுந்தாலும், தளரா
உள்ளத்துடன், உன்னதக் குறிக்கோள்கள் என்ற விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண முயல்வோம். விண்ணக வாழ்வுக்குரியவற்றைத் தேடுவதில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். ‘இயேசு எங்கே பிறந்திருக்கிறார்?’ என்ற கேள்விதான் ஞானிகள் இயேசுவைத் தேடிக் கண்டுகொள்ள உதவியது. அதுபோல, நமது வாழ்வில் நம் உள்ளத்தில் எழும் கேள்விகள் வழியாக நம்மோடு பேசும் கடவுளின் குரலைக் கேட்போம்.
தீமையின்
மாயை, வீண் விவாதங்கள், பொய்யான இன்பத்தை வலியுறுத்தும் உலகப்போக்குகள் போன்ற இவ்வுலக ஒளியில் சிக்கிக்கொள்ளாமல், ஞானிகள் மூவரைப் போன்று, இறை ஒளியைப் பிரதிபலிக்கும் நிலவாக நாம் ஒவ்வொருவரும் செயல்படுவோம். கடவுளை நோக்கி நம் கண்களை உயர்த்தி (எசா 60:4), நம் இதயங்களில் பதிந்திருக்கும் விருப்பங்களைக் கேட்போம். அவர் நமக்கு மேலே ஒளிரச்செய்யும் விண்மீன்களைப் பின்பற்றுவோம். இறைவனிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாகவும் நாம் மாறுவோம்.
புத்தாண்டு சிறப்பு மறையுரை
அன்னையின் அரவணைப்பில்
ஆண்டின் முதல் நாள்!
உலகின் எல்லா மொழிகளின் சொற்களிலும் பேரழகான சொல் ‘அம்மா!’ கடவுளின் படைப்பில் தன்னலத்தின் நிழல்கூடப் படாதது தாயின் படைப்பு. தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறெதுவுமில்லை. குழந்தையை உலகில் உயிர்மெய்யாக்கி உலவ விடுபவர் தாய். அன்னை இல்லையெனில் இந்த உலகில் மனித இனமே இருந்திருக்காது! ‘தாயிற் சிறந்த கோவில் இல்லை’ என்று ஒளவையார் தாய்மையின் சிறப்பைப்பற்றி அன்றே பாடியுள்ளார்.
உலகின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு மட்டுமே. ‘தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்று நவில்கின்றார் நபிகள் நாயகம். அன்பின் இலக்கணம் தாய்! அன்புக்கு ஆதாரமும் தாயே! தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு வேறு எதுவும் இல்லை. ‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே’ என்று பாடினார் கவிஞர் வாலி. “என் அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவரால்தான் என் இலக்கிய இரசனையும் வளர்ந்தது” என்றார் ஜான் இரஸ்கின். ‘அன்னையிருக்கத் தோல்வியில்லை; அன்னையின்றி வெற்றியில்லை’ என்னும் கூற்று நம் நினைவுக்கு வருகிறது.
வரலாற்றை உருவாக்குபவர் தாய். முதல் ஆசிரியராய், செவிலியராய் நம்மைப் புடமிட்டு நமக்குப் பெரும் உந்துசக்தியாக, ஆற்றலின் இருப்பிடமாக, அன்பின் பெட்டகமாக இருப்பவர் நம் தாயே! தாயே உயிர் அனைத்திற்கும் ஆதாரம். உயிர் எழுத்தில் ‘அ’ எடுத்து, மெய் எழுத்தில் ‘ம்’ எடுத்து, உயிர்மெய் எழுத்தில் ‘மா’ எடுத்து, அழகுத் தமிழில் கோர்த்தெடுத்த முத்து ‘அம்மா!’
ஆண்டின் முதல் நாள் இன்று, அன்னையின் மகிமையை எண்ணிப் பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ என்று அறிக்கையிட்டுக் கொண்டாடத் திரு அவை நம்மை அழைக்கிறது. ஆண்டின் முதல் நாளில் பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசி பெறுவதுபோல, மரியன்னையின் பிள்ளைகளாகிய நாமும் நம் விண்ணக அன்னையிடம் ஆசி பெறுவோம். நமக்கென இருக்கும் ஒரே ஒரு மாதிரி அன்னை மரியா. அவரே நம்பிக்கையின் தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவி புரிய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம் பற்றித் துவங்குவோம்.
அன்னை மரியா பெண்களில் பேறுபெற்றவர் மட்டுமல்ல, மானிடர் அனைவரிலும் பேறுபெற்றவர். ஆண்டவர் தனக்குச் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும் என்று நம்பியதால் (லூக் 1:45), இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றதால் (1:48), ஆண்டவர் இயேசுவைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்ததால் (11:27), இறைவார்த்தையைக்
கேட்டு அதைக் கடைப்பிடித்து வாழ்ந்ததால் (11:28), தன் மகனின் போதனைகளையும் செயல்களையும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டதால் (7:23), இயேசு நிகழ்த்திய அரும் அடையாளங்களைக் கண்டதால் (10:23), உயிர்த்த
ஆண்டவரை முதன்முதலாகக் காணாமலேயே அவரது உயிர்ப்பை ஏற்றுக்கொள்ளும் கொடையை மரியா பெற்றிருந்ததால் (யோவா 20:29) அன்னை மரியா பேறுபெற்றவர் ஆகிறார். இவ்வாறு ஒரு முறை, இருமுறை அல்ல... பலமுறை பேறுபெற்ற கொடையைப் பெற்ற அன்னை மரியாவை ‘கடவுளின் தாய்’ என அழைத்து மகிழ்கிறது திரு அவை.
அன்னை மரியாவைக் குறித்து ‘கடவுளின் தாய்’ (கி.பி. 431), ‘மரியா எப்பொழுதும் கன்னி’ (கி.பி.553), ‘மரியா அமல உற்பவி’ (கி.பி.1854), ‘மரியா விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்’ (கி.பி.1950) என நான்கு மறைக்கோட்பாடுகளை (Dogma) அறிவித்துள்ளது திரு அவை. அவற்றுள் முதன்மையானதும் பழமையானதுமான பேருண்மை ‘மரியா கடவுளின் தாய்’ (Mary is
Theotokos) என்பதாகும். Theotokos எனும் கிரேக்கச் சொல்லுக்கு, ‘கடவுளைத் தாங்கியவர்’ என்று பொருள்.
கான்ஸ்டான்டிநோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியா கடவுளின் தாய்’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர், “இயேசு இரண்டு ஆள்களாக உள்ளார். அதாவது, இயேசு மனித இயல்பு (human nature) மற்றும் கடவுள் இயல்பு (divine nature) என்று இரண்டு இயல்புகளுடன் உள்ளார். அவர் மரியாவிடம் பிறக்கையில் சாதாரண மனிதர் என்றும், பின் வளர்ந்து வந்தபோது, அவர் கடவுளாக மாறினார்” என்றும் தவறான போதனையைப் போதித்தார். எனவே, ‘மரியா இயேசு என்ற மனிதனின் தாய் (Christokos) மட்டுமே; அவர் கடவுளின் தாய் (Theotokos) அல்லர்’ என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான் நெஸ்டோரியனிசம் (Nestorianism) என்று அழைக்கப்பட்டது.
இப்போதனையால் எழுந்த சிக்கலைத் தீர்க்க முற்பட்டது திரு அவை. கி.பி. 431 -ஆம் ஆண்டு எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் கூடிய திருச்சங்கம், தவறான கருத்துகளைக் கூறிய நெஸ்டோரியசையும் அவரது போதனைகளைப் பின்தொடர்ந்தவர்களையும் நீக்கியது. இயேசு இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள் என மறைக்கோட்பாடாக அறிவித்தது. இதன் அடிப்படையில் ‘மரியா கடவுளின் தாய்’ என்பதை வரையறுத்துக் கூறியது. 1974 -ஆம் ஆண்டில் புனித திருத்தந்தை 6 -ஆம் பவுல் அவர்கள், ‘Marialis
Cultus’ எனப்படும் திருத்தூதுக் கொள்கை வழியாக, சனவரி முதல் நாளில் இவ்விழா சிறப்பிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார் (எண் 5). ஆகவேதான் நாம் இன்று இப்பேருண்மையை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடுகிறோம்.
திருவிவிலியத்தில் மரியா கடவுளின் தாயாக வானதூதர் கபிரியேல் மரியாவிடம் கூறிய, “இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; …உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்” (லூக் 1:31) என்பதிலிருந்தும் எலிசபெத் மரியாவிடம், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (1:43) என்று இறைவாக்கு உரைப்பதிலிருந்தும் ‘மரியா கடவுளின் தாய்’ என்பது திருவிவிலியத்தில் ஆதாரப் புள்ளியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. “மரியா உண்மையாகவே இறைவனும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பெற்றுப் போற்றப்பெறுகிறார்” என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (திருச்சபை எண் 53). மேலும், “அன்னை மரியா இறைவனின் தாய் எனும் கொடையாலும், அலுவலாலும் மீட்பரான தன் மகனோடு ஒன்றித்திருக்கிறார்” என்கிறது (எண் 63). அன்னையின் மகிமையைக் குறிப்பிடுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுளும், மனித சமுதாயமும், ஒருவர் மற்றவரைவிட்டுப் பிரியாவண்ணம், பெண்ணின் வயிற்றில் ஒன்றிணைந்தன. நம் மனித சமுதாயம், கடவுளில் என்றென்றும் இருக்கின்றது. மரியா கடவுளின் அன்னையாக என்றென்றும் இருக்கிறார். அமைதியின் இளவரசரின் அன்னையும், இப்பூமியின் அனைத்து மக்களின் அன்னையுமாகிய மரியா, ஒப்புரவுப் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் நம்மோடு இருந்து காக்கிறார்” என்று குறிப்பிடுகின்றார் (‘டுவிட்டர்’ செய்தி, சன 1, 2020).
மரியா உலகின் மீட்பராம் இயேசுவை நமக்குக் காட்டுகின்றார். அவர் ஓர் அன்னையாக நம்மை ஆசிர்வதிக்கின்றார். அன்னை மரியா அகிலத் திரு அவையையும் அகில உலகையும் ஆசிர்வதிக்கிறார். இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் மனித சமுதாயத்திற்கும் ஆசிராக விளங்குகிறார். அவரே அருளையும் இரக்கத்தையும் அமைதியையும் அளவில்லாமல் பொழிகிறார்.
இறைவனே ஆசியின் ஊற்று; அவரிடமிருந்தே அனைத்து ஆசிகளும் உண்டாயின. இந்த இயேசுவை நமக்கு வழங்குவதன் வழியாக, இறைவன் தரும் ஆசிரின் முழுமையைத் திரு அவை நமக்கு வழங்குகிறது. இந்த ஆசிரை மனிதர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே, கிறித்தவர்களாகிய நமது முக்கியப் பணி என்பதை இன்று உணர்வோம்.
ஆண்டின் முதல் நாளில், முதல் வாசகத்தில் இறைவன் மோசே வழியாக ஆரோனுக்கும், அவர் புதல்வர்களுக்கும் கொடுக்கக்கூடிய ‘குருத்துவ ஆசி’ இறைவனின் பிள்ளைகளாகிய நமக்கும் உரியதாக அமைகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!”, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!”, “ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண் 6:24-26) என்று எண்ணிக்கை நூலில் நாம் கேட்கும் சொற்கள், இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் எவ்வாறு ஆசிர்வதிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இறைவனின் ஆசியை யாரும், எவருக்கும் பரிந்துரைக்கலாம் என்பது திருவிவிலியம் தரும் பாடம். புதிய ஆண்டில் இறைவனின் ஆசியை இரக்கத்தோடு பெற்றுக்கொண்டு, நாமும் அந்த ஆசியைப் பிறருக்கு வழங்குவோம்.
58-வது உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கும் இந்நாளில், “ஆண்டவரே, எங்கள் குற்றங்களை மன்னியும்; உமது அமைதியை எங்களுக்கு அளித்தருளும்” (மத் 6:12) என வேண்டிக்கொள்வோம். வரலாற்றுப் பாதையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நமக்குக் கவலைகளை உருவாக்கினாலும், அன்னை மரியா நம்மை எப்போதும் கவனித்து வருகிறார் என்ற எண்ணத்தில், நாம் இந்தப் புதிய ஆண்டைத் துவங்குவோம். நம் கரம்பிடித்து நமது தாயாக, நம் தந்தையாம் இறைவனின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள நம்மை வழிநடத்தும் தாயிடம் சேயாய் நாடி வருவோம். இனிமையும், பராமரிக்கும் தன்மையும் கொண்ட நம் தாய், இறைவனிடமிருந்து மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத் தருவாராக! பிறக்கவிருக்கும் புத்தாண்டில் இறைவன் நம் அனைவரையும் நலன்களால் நிரப்பி வழிநடத்திக் காப்பாராக!
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இறைவனுக்கு இடமளிக்கும் இல்லமாக...
கிறிஸ்துமஸ் காலம் குடும்ப உறவைக் கொண்டாடி மகிழும் ஓர் அழகிய காலம். இக்காலத்தில் வரும் இந்த ஞாயிறன்று நாம் திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்பம் மானிட சமூகத்தின் அடிப்படைக் கூறு; மனித உறவின் நிறைவு; நாகரிகத்தின் தொடக்கக் கல்வியைக் கற்றுத்தரும் முதல் பள்ளிக்கூடம். ஒருவர் மற்றவருடைய உள்ளத்து உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களுடன் நல்லுறவுகொள்ளவும், அவரின் ஆளுமை வளர்ச்சியின் முதல் படிநிலையை அமைத்துக்கொடுப்பதும் குடும்பமே! குடும்பம் இல்லாமல் மனிதகுலக் கலாச்சாரம், பண்பாடு என்பது சாத்தியமற்றது. குடும்பம்தான் சமூகத்தின் அடித்தளம்!
ஒரு சமூகத்தின் நலமும் வளமும் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் செழுமையும் சீர்மையும் அச்சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பினால் உருவாகிறது. சமூகத்தினுடைய உறவுப் பிணைப்பின் அடிப்படை அமைப்பாக இருப்பதும் குடும்பம். நமக்கு முகவரியாய், அடையாளமாய் இருப்பதும் குடும்பமே. பாசத்தின் உறைவிடமாகவும் நெருக்கத்தின் இருப்பிடமாகவும் இருப்பது குடும்பம். திருத்தந்தை பிரான்சிஸ் கிறித்தவக் குடும்பங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “குடும்பம் என்பது ஒரு கருத்தியல் அல்ல; மாறாக, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை நெறி. இது அன்றாட வாழ்க்கையின் அணிகலன். அன்பிலும் ஒழுக்கநெறியிலும் கட்டமைக்கப்பட்ட இறைநம்பிக்கையை அடுத்தத் தலைமுறையினருக்கு வழங்கும் வாழ்வியல் பயணம்” என்கிறார் (செப்டம்பர் 11, 2013). தாராளக்
குணம், பகிர்தல், பொறுப்புணர்வு, அன்பு, அமைதி, இரக்கம், நல்லறிவு, நல்லொழுக்கம், தூய்மை, ஒற்றுமை, பொறுமை, தியாகம், கடின உழைப்பு, சகிப்புத்தன்மை போன்ற அறம் சார்ந்த பண்புகளை நாம் கற்றுக்கொள்ளும் பல்கலைக்கழகம் குடும்பம்.
நல்ல குடும்பத்திற்கு ஒரு சிறந்த மாதிரியாகத் திருக்குடும்பத்தையே திரு அவை காட்டுகிறது. ஆண்டவர் இயேசுவை முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு உருவாகிய அழகிய குடும்பம் திருக்குடும்பம். கடவுளின் வார்த்தையைத் தாழ்ச்சியுடன் நம்பி உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து, உதரத்தில் தாங்கி அடிமையாய் வாழ்ந்த மரியாவும் பிறக்கப்போகும் குழந்தை இறைமகன் என அறிந்ததும், நம்பித்துணிந்த மரியாவின் வழிநின்று, இறைமகனை ஏற்றுப் பாதுகாப்புத் தந்த நேர்மையாளர் யோசேப்பும் தெய்வீகப் பிறவிகள்தாமே! இதை உணர்ந்ததால்தான் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால், “நாசரேத்தூரில் வாழ்ந்த திருக்குடும்பம் உலகோரின் உன்னதமான பல்கலைக்கழகம்” என்றார். எனவே, மரியா-யோசேப்பு-இயேசு என்னும் இத்திருக்குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.
அன்னை மரியா தனது வயிற்றில் மட்டுமல்ல, வாழ்வு முழுவதுமாக இறைவார்த்தைக்கு இடம் கொடுத்தார். தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் தனது உள்ளத்தில் பதித்துச் சிந்தித்தார். ஆண்டவர் கூறியவை நிறைவேறும் என நம்பினார். “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று முழு ஈடுபாட்டோடு கூறினார். தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடந்தராமல், ஆண்டவருக்குத் தன் வாழ்வில் முழு இடம் தந்தார். எதிர்பாராத துன்பங்கள் வாழ்வில் பின்தொடர்ந்து வந்தாலும் நிலைகுலையாது, இறைவார்த்தையில் நிலைத்து நின்றார்.
மரியாவின் கணவர் யோசேப்பு ஒரு நேர்மையாளர். யோசேப்பின் அமைதி வாழ்வில் அன்பும் தியாகமும் உரக்க வெளிப்பட்டன. கடவுளின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்கும் ஒரு நபராகவே யோசேப்பு தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். அவர் வாழ்க்கைக்கான தனது சொந்தத் திட்டங்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டவர் அல்லர். எப்போதும் தன்னைக் கடவுளுக்காக வாழக்கூடியவராகவும், அவர் திட்டத்திற்காக எப்போதும் தயாராக இருக்கக்கூடியவராகவுமே இருந்தார். ஆகவேதான் யோசேப்பைப் பற்றிக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ், “தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, தனது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பதிலாக யோசேப்பு தேர்ந்துகொண்ட வாழ்க்கை நெறி மிகப்பெரிய அர்ப்பணம்!” என்றார் (மூவேளைச் செபவுரை, டிசம்பர் 22, 2013).
நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் மையமும் மகிழ்ச்சியும் இயேசுவே. நற்பண்புகளைத் தம் தாய் தந்தையிடமிருந்தே கற்றார். மற்ற குழந்தைகள் போலவே அவர் அறிவிலும் உணர்விலும் அனுபவங்களிலும் வளர்ந்தார். ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக் 2:52). 12 வயதிலே
இயேசு தம் தந்தையோடு கொண்டிருந்த ஆன்மிக உறவை வெளிப்படுத்தினார்; தாம் யார் என்பதைக் கண்டுகொண்டார். தந்தையின் பணிக்காகத் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தார். ஆக, திருக்குடும்பம் அ) ஓர் இயல்பான, ஆ) இறைப்பக்தி நிறைந்த, இ) இறைத்திட்டத்தை ஏற்ற ஒரு குடும்பமாக இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.
முதலில், திருக்குடும்பம் ஓர் இயல்பான குடும்பம். இந்தக் குடும்பம் எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்காமல் இல்லை. இவர்கள் மத்தியிலும் பிரச்சினைகள் இருந்தன. திருவிழாவின்போது காணாமற்போன தன் மகனைக் கண்டுபிடிக்கப் பெற்றோர் எடுக்கின்ற முயற்சிகள், மகனைக் காணாத பதைபதைப்பு, மகனைக் கண்டதும் அடைகின்ற மகிழ்ச்சி, தங்கள் மகன் மறைநூல் வல்லுநர் மத்தியில் அமர்ந்து அவர்களுக்குப் போதனை செய்ததைப் பார்த்த வியப்பு, அதே நேரத்தில் ஏற்பட்ட அச்ச உணர்வு, பெற்றோரின் கண்டிப்பு, இயேசுவின் பதில், மகனின் தனித்து முடிவெடுக்கும் நிலை, மரியாவின் அமைதி என மற்ற குடும்பங்களிலும் நடக்கின்ற நிகழ்வுகள், உரையாடல்கள், உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற இயல்பான குடும்பமே திருக்குடும்பம்.
இரண்டாவது, திருக்குடும்பம் இறைபக்தியில் நிறைந்த ஒரு குடும்பம். இயேசுவின் பெற்றோர் யூதச் சமயச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தனர் (2:41). ஆண்டுதோறும் பாஸ்கா எனும் சமய விழாவைக் கொண்டாட யூதர்களின் சமயத் தலைநகரமான எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது ஒவ்வொரு யூதரின் தவிர்க்க முடியாத கடமையாகும். 12 வயதிலிருந்து ஒவ்வொரு யூத இளைஞனும் சமய வழிபாட்டுச் சடங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டியது முக்கியக் கடமையாகும். இக்கடமையைத் தமது மகன் நிறைவேற்ற பெற்றோர் உதவி செய்கின்றனர். மேலும், இயேசு ஆலயத்தில் பெரியவர்கள் நடுவில் இருப்பதும் உரையாடுவதும் இறைத்தந்தையைப் பற்றிக் குறிப்பிடுவதும் அவர் ஒரு நல்ல யூதச் சிறுவனாக, சமயப் பற்றுமிக்கவராக இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மூன்றாவது, மரியா, யோசேப்பு, இயேசு ஆகிய மூவரும் அனைத்தையும் உள்ளத்திலிருத்திச் செபித்து, இறைத்திட்டத்திற்கு அனைத்திலும் பணிகின்றனர். இறைத்திட்டத்தை ஏற்று இறுதிவரைக் கடைப்பிடிக்கின்றனர். இன்றைய நற்செய்தியில் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனும் இயேசுவின் பதில்மொழி, அவர் பன்னிரண்டு வயதிலேயே தம் வாழ்வின் இலக்கு, இலட்சியம், பணி என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தார் என்பதை விளக்குகிறது.
இவ்வாறு, இயேசு மரியா-யோசேப்பு அமைத்த திருக்குடும்பம் தன்னலமற்ற அன்பை, தன்னிகரற்ற அமைதியை உலகில் வாழ்ந்து காட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தில் புனிதம் காத்தது. புனிதமிகு வாழ்வு முறையாலும் மதிப்பீட்டு வாழ்வாலும் சாட்சிய வாழ்வாலும் உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் திருக்குடும்பம் மாதிரியாகத் திகழ்கின்றது. ஆகவேதான் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், “திரு அவையின் முதல் மாதிரி இந்த நாசரேத்தூர் திருக்குடும்பம்” என்கிறார்.
குடும்பம்தான் உலகையும் வரலாற்றையும் இயக்குகின்ற ஆற்றல். குடும்பத்தில்தான் மற்றவர்களுக்குச் செவிசாய்க்கவும், அவர்களை அங்கீகரிக்கவும், மதிக்கவும், அவர்களுக்கு உதவவும், ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழவும் கற்றுக்கொள்கிறோம். ஆனால், பிறரன்பும் இறையன்பும் இரண்டறக் கலந்து சங்கமிக்கும் குடும்பம் என்கின்ற அமைப்பு இன்று வளர்ச்சி, நாகரிகம், தனிமனிதச் சுதந்திரம் என்கின்ற சிந்தனைக்குள் சிக்குண்டு, சீரழிந்து வருவது வேதனையான உண்மை. மனிதர்கள் இன்று நுகர்வு கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். அதாவது, தூக்கி எறியப்படுகின்றனர். “பயன்படுத்தி, தூக்கி எறி” எனும் கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். இன்று குடும்பங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிமைப்படுத்தியுள்ளனர்; பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அடிமைகளாக்கியுள்ளனர். தம்பதியர் தங்கள் திருமண வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர்.
ஒரு குடும்பம் என்பது ஒற்றுமை, ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகளைப் போதிக்கும் ஆசானாக இருக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “குடும்ப உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனில், ‘நன்றி’, ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’, ‘தயவுசெய்து’ என்ற வார்த்தைகளைச் சொல்லிப் பழகுவோம்”. கடினமான நேரங்களில் கடவுளை ‘அப்பா’ என்னும் அழகான பெயரில் அழைக்கக் கற்றுக்கொள்வோம். எகிப்தில் அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலைத் திருக்குடும்பம் எதிர்கொண்டபோது, கடவுள் அவர்களைக் கைவிடவில்லை.
கடவுள் நமது போராட்டங்களை அறிவார். அவர் அனைத்தையும் அறிந்தவர்! கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக, கைவிடப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. கடினங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே இயேசு இருக்க விரும்புகிறார். மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாடுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் சாமுவேலின் தாய் அன்னாவைப்போல அல்லும் பகலும் கடவுளை நோக்கி வேண்டுவோம். இதயத்தில் இறைவார்த்தையைச் சுமந்து, இல்லங்களுக்கு இயேசுவை அழைத்துச்செல்வோம். நம் குடும்பங்கள் எப்போதும் இறைவனுக்கு இடமளிக்கும் இல்லமாகட்டும்!
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்!
கடவுள் விண்ணகத்தில் நம் கண்களுக்குத் தோன்றாத வகையில் தங்கிவிடவில்லை; மாறாக, மண்ணகத்தில் மனிதராக இறங்கி வந்துள்ளார். கிறிஸ்துமஸ் - இறைவனின் நெருக்கத்தைக் கொண்டாடவும், அவரது உண்மையான அன்பைக் கண்டுகொள்ளவும் அழைப்பு விடுக்கும் விழா! ஆண்டவரின் நெருக்கமும் அவரது அன்பும் மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் உள்ளங்கள், இல்லங்கள், உறவுகள் அனைத்திலும் நிறைந்திருக்க வேண்டுகிறேன்.
கிறிஸ்து
பிறப்பு விழா - மகிழ்ச்சியின் விழா; நம்பிக்கையின் விழா; கடவுளின் பேரன்பை உணர்த்தும் விழா. மனுக்குலத்தின்மீது இறைவன் கொண்ட அன்பின் மேன்மையால் விளைந்த அற்புதமான வரலாறு!
இந்த
நள்ளிரவு வேளையில், “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்” (எசா
9:6) என்ற எசாயா இறைவாக்கினரின் சொற்கள் இன்று நம் உள்ளத்தை நிரப்புகின்றன. பிறப்பு எப்போதும் நம்பிக்கையின் ஊற்றாக, எதிர்காலத்தின் வாக்குறுதியாகத் திகழ்கிறது. ஒரு குழந்தையின் பிறப்பு விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு, பெற்றுக்கொள்ளும் அனைத்திலும் மிகப்பெரிய ஒன்றாக அமைகிறது.
குளிர்
நிறைந்த இவ்விரவில், ஒளிர்விடும் சிறு விளக்குப்போல் இறைமகன் பிறந்துள்ளார். இயேசு எனும் இக்குழந்தை நம்மோடு உரையாடும் வண்ணம் மனுவுரு எடுத்துள்ளார். கடவுள் தமக்குத்தாமே பேசிக்கொள்ள விரும்புவதில்லை; ஏனெனில், தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாராக இருக்கின்ற கடவுளே உரையாடல்தான். எனவே, மனித உடலெடுத்த இறைவார்த்தையாம் இயேசுவின் பிறப்பால் கடவுளே நம்மோடு உரையாடுவதற்கான பாதையைக் காட்டியுள்ளார். அவரின் பிறப்பால் நாம் அனைவருமே கடவுளை ‘நம் தந்தை’ என்றழைக்கிறோம்; அவருடன் பேசுகிறோம். எனவே, நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பது கடவுள் வழங்கும் செய்தி. நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நாம் ஒருவர் மற்றவரை மதித்துச் செவிமடுக்கும் உடன் பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாக இந்த இரவு நேரம் அமையட்டும்.
முதலாவது,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” (எசா
9:6) என்ற செய்தி அவர் நம்மை அன்பு கூருகிறார் என்பதைக் காட்டுகிறது. இறைவன் நம்மை அருளின் குழந்தைகளாக, இறைவனின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு, அவரே இறங்கி வருகிறார். இது ஒரு வியத்தகு கொடை! “கடவுள் நம்முடன் இருக்கிறார்” (மத்
1:23) என்ற உறுதியை நமக்கு வழங்குகிறார். நமக்கென இறைவன் தம் சொந்த மகனையே தந்துள்ளார். வார்த்தையாம் இறைவன், வார்த்தைகளற்ற ஒரு குழந்தையாகத் தம் வாழ்வையே நமக்கு வழங்க வந்துள்ளார்.
கிறிஸ்துவின்
பிறப்பு எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் ஆற்றலை நமக்குத் தருகிறது. ஆனால், நாம் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வற்ற செயல்களையும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகச் செய்யும் அநீதிகளையும் பார்க்கும்போது, இறைவன் நம்மை உயர்வாக மதித்து இத்தகைய கொடையை அளிப்பதற்கு நாம் தகுதியுடையவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அமைதியான, வன்முறையற்ற உலகை உருவாக்குவதில் நாம் தோற்றுப்போனோம். திருவிவிலியத்தை வாழ்வாக்கத் தவறிவிட்டோம். பசப்பு வார்த்தைகளால் பிறரை ஏமாற்றிவிட்டோம். கடவுளின் விருப்பத்திற்கு எதிராக எதிர் திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம் வாழ்வின் ஆதாரமாகிய இறைவனை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிறையப் பேசுகிறோம்; அதேவேளை நன்மைத்தனம் குறித்து அறியாதவராகச் செயல்படுகிறோம். ஆதிக்கமும் சுரண்டலும் வன்முறையும் பன்மடங்கு பெருகியுள்ளன. வாழ்வின் அடிப்படைகளை நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. “அனைவரையும் அன்பு செய்வாயாக”
(மாற் 12:31) எனும் இயேசுவின் உயர்ந்த நெறியைப்பற்றி அறிந்த பிறகும் கடைப்பிடிக்கத் தடுமாறுகிறோம். ஒருவரையொருவர் அன்பு செய்வதற்குப் பதிலாக வெறுக்கிறோம், பகையை வளர்க்கிறோம்.
கடவுள்
நமக்கு உயரிய ஓர் இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஏனெனில், அவரின் அன்பு அத்தகையது. நம்மை அன்புகூருவதன் வழியாக, நம் உள்மனக் காயங்களைக் குணப்படுத்தவும், நம்மை மீட்கவும் செய்கிறார். “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” எனும்
செய்தி இறைவன் நம்மை அன்புகூருகிறார் என்பதையும், நாமும் மற்றவரை அன்புகூர வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றது.
இரண்டாவது,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” என்ற
செய்தி, அக்குழந்தை எவ்விடத்தில் பிறந்துள்ளார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவர் அரசர்களின் மாளிகையில் பிறக்கும் தகுதியுடைய ஒரு குழந்தை. ஆனால், மாடடைத் தொழுவத்தில், இருள் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறக்க வேண்டிய காரணம் என்ன? ஏழ்மை, எளிமை, தனிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை இவற்றில்தான் ஏழையாகப் பிறந்த இயேசுவைக் காணமுடிகிறது. அவர் நம் ஏழ்மையான, எளிய நிலைகளில் இறங்கி வந்து, நம்மை எவ்வளவு தூரம் அன்புகூருகிறார் என்பதைக் காட்ட, அவரும் எளிய வகையில் பிறப்பெடுத்தார். எனவே, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தில் மட்டுமே இறைவனைக் காண முடியும் என்பதுதான் நமக்குத் தரும் மற்றுமொரு செய்தி. கடவுள் எப்போதும் நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் அவர் சிறிய வழியையே தேர்ந்து கொள்கிறார்.
கடவுளின்
இந்த வெளிப்பாட்டை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம். இவ்வாறு கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்வதில் தோற்றுப்போகிறோம். இவ்வுலகின் பார்வையில் கடவுள் தம்மை எளியவராக வெளிப்படுத்தினார். நாமோ இன்னமும் அவரைப் பிரமாண்டமான பெரிய காரியங்களில், ஆடம்பர விளக்கு அலங்காரங்களில் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறோம். பகைமை என்ற கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டவர்கள் இறைவனை எப்போதும் தரிசிக்க முடியாது. இறைவன் பணிவிடை புரிபவராக நம் நடுவிலே மனிதராகப் பிறக்கிறார் (லூக் 22:27). நாமோ, பணிவிடை ஏற்பவராக இருக்கிறோம். அவர் பதவியையும் புகழையும் தேடவில்லை. நாமோ பதவியையும் புகழையும் மட்டுமே தேடுகிறோம். எனவே, எளிமையை ஏற்றுக்கொள்வதற்கான அருளைக் கேட்போம். ஏழ்மை நிலையில் பிறந்த இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது அவரைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வதாகும்.
மூன்றாவது,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” என்ற
செய்தி, நமக்காகத் தரப்பட்டுள்ள இந்த ஆண் மகவு ஏன் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்”
(லூக் 2:12) என இடையர்களிடம் வானதூதர்
சொல்வதைக் காண்கிறோம். ‘அப்பத்தின் இல்லம்’ என்று பொருள்படும் பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில் இறைவன் பிறக்கிறார். மனிதர் வாழ்வதற்கு உணவு தேவை என்பதை உணர்ந்த இறைவன், “இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன்”
(யோவா 6:35) என்று சொல்வதுபோல், இயேசுவின் பிறப்பு அமைகிறது. இந்நேரத்தில் பசியால் வாடும் அனைவரையும் குறிப்பாக, சிறார்களை நினைத்துப் பார்ப்போம்.
“இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்”
(மத் 26:26) என்று தம் பிறப்பு முதல் சொன்னவர் இயேசு. சேர்த்து வைப்பதில் வாழ்வு அடங்குவதில்லை; மாறாக, பகிர்வதிலும், தருவதிலுமே அது அடங்கியுள்ளது என்பதை பெத்லகேமில் பிறந்த இக்குழந்தை நம்மிடம் சொல்கிறது.
இந்தக்
கிறிஸ்து பிறப்பு விழாவில், ஒன்றுமில்லாதவர்களுடன் நான் என்னையே அப்பமாகப் பகிர்ந்துகொள்கிறேனா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போம். வலுவற்றோர், நோயுற்றோர், கைவிடப்பட்டோர், வயது முதிர்ந்தோர், விளிம்புநிலையில் இருப்போர், தனிமையில் வாழ்வோர், கைதிகள், வேலை இழந்தோர், பொருளாதார நெருக்கடியில் துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், புதுமை பாலினத்தோர் ஆகியோர் நம் இல்லக் கதவுகளை வந்து தட்டும்போது அவர்களை மறவாதிருப்போம்.
நிறைவாக,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” என்ற
செய்தி சொல்வது: அவர் நம்மைக் காக்க வந்துள்ளார்! இந்த இரவிலே தம்மையே ஒரு கொடையாக, எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குகிறார்.
இயேசு என்ற கொடையை நாம் வரவேற்று, அவரைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே, இறைவன், ‘இம்மானுவேலாக’ வாழ
பிறந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவில் அவர் மீண்டும் பிறக்க மன்றாடுவோம்.
“எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி”
(லூக் 2:10) என இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல,
அதே மகிழ்ச்சியைக் கடவுள் நமக்கும் இன்று தருவாராக! “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” (எசா
9:2) என்று எசாயா குறிப்பிடுவதுபோல, நம் உள்ளங்களும் இல்லங்களும் கிறிஸ்து எனும் பேரொளியால் நிரப்பப்பட வேண்டுவோம். நாம் வாழ்கின்ற இடங்களில், குடும்பங்களில் ஒரு சிறிய புன்னகையாகக் கிறிஸ்துவின் ஒளியை வழங்குவோம். கடவுளின் அன்பால் ஆழமாக இயக்கப்பட நம்மையே அனுமதிப்போம். ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றுகின்ற சாதாரண செயல்கள் வழியாக, நம் வாழ்வை மிகச் சிறந்த படைப்பாக மாற்றுவோம்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ்
வாழ்த்துகள்!
வாழ்வளிக்கும் சந்திப்புகள்: உரையாட... உறவாட... உடனிருக்க
வரலாற்றில் எத்தனையோ சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன; நிகழ்கின்றன. நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு, சாதனையாளர்களுடனான சந்திப்பு, பேரிடர் காலச் சந்திப்பு என ஏராளமான சந்திப்புகள் நிகழ்கின்றன. இயற்கையும்கூட சந்தித்துக்கொள்கின்றது. மழை பூமியைச் சந்திக்கின்றது; சூரிய ஒளியை மரங்கள் சந்தித்துக்கொள்கின்றன. சில சந்திப்புகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம்; சில சந்திப்புகள் வருத்தங்களை உருவாக்கலாம். வாழ்க்கையில் ‘மற்றுமொருமுறை இவரைச் சந்திக்க மாட்டேனா?’ என ஏங்குபவர்கள் உண்டு. ‘இனி என்னுடைய வாழ்க்கையில் இவரைச் சந்திக்கவே கூடாது’ என்று எண்ணுபவர்களும் உண்டு.
நாம்
பயணம் மேற்கொள்ளும்போது பலரைச் சந்திக்கிறோம். குறிப்பாக, அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்களோடு அறிமுகமாகி உரையாடுகிறோம். அதுவும் நீண்ட நெடிய பயணம் என்றால், நாம் மிகவும் அவர்களோடு ஒன்றித்துப்போய் விடுகிறோம். அப்போது நம்மிடம் இருக்கின்ற உணவினையும் உணர்வுகளையும் இன்ப-துன்ப நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்கின்றோம். இத்தகைய உறவாடல்கள் நமக்குள் புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. பழைய உறவுகளை ஆழப்படுத்துகின்றன.
“நான் மட்டும் அவரைச் சந்தித்திருக்காவிட்டால், நான் இந்த உயர்ந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது”,
“அவருடனான சந்திப்புதான் என் வாழ்வையே மாற்றி அமைத்தது”
என்றெல்லாம் நாம்
சொல்லக் கேட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாமே
சொல்லியிருக்கலாம். நாம் மேற்கொள்ளும் சந்திப்புகள் நம் வாழ்வை மாற்றுகின்றன; வளமான சந்திப்புகள் வாழ்வைக் கொடுக்கின்றன.
திருவருகைக்
காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் ‘இறை-மனிதச் சந்திப்பு’
எனும் உன்னதமான சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. பழைய ஏற்பாட்டுக் காலம் தொடங்கி, புதிய ஏற்பாட்டுக் காலம் வரை மீட்பு வரலாற்றில், வியத்தகு முறையில் இறைவன் மனிதனைச் சந்தித்ததைப் பார்க்கிறோம்.
மீட்பின்
தொடக்கமாக, கடவுள்-நோவா சந்திப்பு; அதனைத் தொடர்ந்து நமது முதுபெரும் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களுடனான கடவுளின் சந்திப்பு; இஸ்ரயேல் மக்களை விடுவிப்பவராக முழுப் பொறுப்பேற்றுக் கொண்ட மோசேவுடனான கடவுளின் சந்திப்பு; இஸ்ரயேல் மக்கள் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குத் தமது மீட்புச் செய்தியைக் கொடுப்பதற்காக எசாயா, எரேமியா, எசேக்கியேல், ஆமோஸ், செப்பனியா, யோவேல், யோனா, மீக்கா ஆகியோருடனான இறைவனின் சந்திப்பு ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க இறை-மனிதச் சந்திப்புகளாகும்.
புதிய
ஏற்பாட்டிலும் இறை-மனிதச் சந்திப்புகள் பல நிகழ்ந்துள்ளன. இறைவன்
தமது மீட்புத் திட்டத்திற்காக அன்னை மரியாவை முதலில் சந்திக்கிறார். தொடர்ந்து மரியாவின் கணவரும் இயேசுவின் தந்தையுமான யோசேப்பைச் சந்திக்கிறார். மக்களின் மீட்புக்காக மன்றாடிக் கொண்டிருந்த செக்கரியாவைக் கடவுள் சந்திக்கிறார். மனுக்குலத்தை மீட்க மனுவுருவான இயேசு தமது பணிவாழ்வைத் தொடங்கும்போது, முதன்முதலாகத் திரு முழுக்கு யோவானைச் சந்திக்கிறார். இயேசு மகதலா மரியா, மத்தேயு, சக்கேயு எனப் பலரையும் சந்திக்கிறார். இந்த இறை-மனிதச் சந்திப்புகளிலெல்லாம் ‘உரையாடல் - உறவாடல் - உடனிருத்தல்’ என்ற
மூன்று முக்கியச் சிந்தனைகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றை ‘மெசியா காலப் பண்புகள்’
எனலாம்.
இன்றைய
முதல் வாசகத்தில், பாபிலோனிய மன்னர் நெபுகத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டபோது, யூதாவை ஆட்சி புரிந்தவர்களால் தங்கள் நகரைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே, சிறிய இடமாகிய பெத்லகேமிலிருந்து தோன்றும் அரசரால் மட்டும்தான் தம் மக்களைக் காப்பாற்ற முடியும் என இறைவாக்கினர் மீக்கா
முன்னறிவிக்கிறார். மீக்கா முன்னறிவிக்கும் இந்த அரசர்தான் மெசியாவாகிய இயேசு. மீக்கா முன்னறிவித்தபடி பெத்லகேமில் மெசியா பிறப்பார் (லூக் 2:4-7); இவர் என்றும் அரசாள்வார். எனவே, ‘மெசியாவின் பிறப்பு மனுக்குலத்துடனான ஒரு சந்திப்பு. இந்தச் சந்திப்பில் மெசியா சிதறுண்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பார்; அச்சமில்லாத வாழ்வையும் அமைதியையும் அருள்வார். அவரே அவர்களை மேய்ப்பார்; வலிமையோடு மக்களைத் தேடிவந்து காப்பாற்றுவார்’ என்பதை
உறுதிபடக் கூறுகிறார்.
இன்றைய
நற்செய்தியில், இறைத்திட்டத்திற்குத் திறந்த உள்ளத்தோடும் தாழ்ச்சியோடும் தன்னை ஒப்புக்கொடுத்த, உருவிலா இறைவனைக் கருவில் தாங்கிய அன்னை மரியாவும் ஆண்டவரின் வருகைக்கு மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவனைத் தன் திருவயிற்றில் தாங்கிய எலிசபெத்தும் சந்திக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. அன்னை மரியாவும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்ட சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; இது இரு நம்பிக்கையாளர்களின் சந்திப்பு. இயற்கைக்கு அப்பாற்பட்டு நடந்த இறைவனின் வெளிப்பாட்டை ஒருவரையொருவர் பகிர்ந்துகொண்ட சந்திப்பு. இரண்டு காலங்களின் சந்திப்பு. பழைய ஏற்பாட்டின் நிறைவாகக் கருதப்படுகின்ற திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகின்ற மீட்பர் இயேசுவும் பிறப்பதற்கு முன்னரே ஒருவரையொருவர் சந்திக்கின்ற இறை-மனிதச் சந்திப்பு. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் எந்தச் சந்திப்புகளும் இயல்பாக நடப்பவை அல்ல; மாறாக, அவை இறைவன் எடுத்த முயற்சியால் விளைந்தவை. ஆகவே, இறைச் சந்திப்பு எப்போதும் இறைவனிடமிருந்தே தொடங்குகின்றது என்பதை நினைவில் கொள்ளலாம்.
நற்செய்தியின்
இரகசியத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவும் யூதா மலைநாட்டிலிருந்த எலிசபெத்தின் ஊராகிய அயின்கரீமுக்கு விரைந்து செல்கிறார் மரியா. இப்பயணம் அவ்வளவு எளிதான பயணம் அல்ல; வலிகளும் சவால்களும் நிறைந்த பயணம். பொதுவாக வலிகள் நிறைந்த பயணங்கள் எதிர்கால மகிழ்வைக் கொடுக்கக் கூடியவையாகவே இருக்கும். சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு விட்டு வேலையின் காரணமாக வெளி நாட்டுக்குச் செல்பவர்களின் பயணம் வலி நிறைந்ததாகவே இருந்தாலும் அப்பயணத்தில் எதிர்கால மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மரியா வசிக்கும் நாசரேத் ஊருக்கும், எலிசபெத் இருக்கும் யூதேய மலைநாட்டிலுள்ள ஊருக்குமான தொலைவு 81 மைல், அதாவது, சுமார் 130 கி.மீ. தூரம்
இருந்தாலும், அந்தத் தூரத்தை அடைவதற்கு மரியா கழுதையின்மேல்தான் பயணம் செய்கிறார். இந்தத் தொலைவைக் கடப்பதற்குக் குறைந்தது மூன்று நாள்களாவது ஆகியிருக்க வேண்டும். அன்னை மரியா கருவுற்ற சில நாள்களிலேயே இந்தப் பயணம் நிகழ்கிறது. இறைவனின் துணையை மட்டுமே நம்பி மரியா இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மரியா நாசரேத்தூரிலிருந்து அயின்கரீமுக்குச் சென்றதே முதல் நற்கருணை பயணம்” என்கிறார்.
மரியா-எலிசபெத் சந்திப்பில் வெளிப்படும் மெசியா காலப் பண்புகள் என்னென்ன? முதலாவதாக, அன்னை மரியா, வானதூதரின் செய்தியைப் பெற்றவுடனே, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல்,
தன் உறவினர் எலிசபெத் தேவையில் இருக்கிறார் என்பதை அறிந்து தனது அன்பையும் ஆதரவையும் கொடுப்பதற்காக, விரைந்துசென்று உதவுகிறார். இச்செயல், மரியா ஏற்கனவே தன் கருவில் வளரும் இறைமகனின் சீடராக மாறிவிட்டார் என்பதைக் காண்பிப்பதாக உள்ளது. பிறர் தேவையைத் தன் உள்ளத்தில் தனதாக உணர்வது அன்னை மரியாவுக்கே உரிய தனித்துவமான பண்பு. கானாவூர் திருமண நிகழ்வில் அன்னை மரியாவின் இதே பண்பை நம்மால் கண்டுகொள்ள முடியும். இதனையே திருத்தந்தை பிரான்சிஸ், “ஒருவரின் கண்களை உற்று நோக்கவில்லையெனில் அவர்களின் தேவைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியாது”
என்கிறார் (வத்திக்கான், 19.12.2021).
இரண்டாவதாக,
தன் மனத்திலும் வயிற்றிலும் சுமந்த மகிழ்வை, உற்சாகத்தை, வியப்பை, அச்சத்தைக் கருவுற்றிருக்கும் தன் உறவினரான எலிசபெத்துடன் பகிர்ந்துகொள்ள ஆவல் கொண்ட மரியாவை எலிசபெத் இன்முகத்தோடும் நன்றி உணர்வோடும் “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்”
என வாழ்த்துவதும் பாராட்டுவதும் மெசியா காலத்து மற்றொரு பண்பு. பிறரை வாழ்த்தும்போது, ஆசிர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசிர்பெறுகிறோம்.
மூன்றாவதாக,
அன்னை மரியாவின் இந்தச் சந்திப்பு, இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் தனியாவோ அல்லது தனிமையாகவோ அல்ல; மாறாக, ஒருவர் மற்றவருடன் இணக்கமாக இணைந்திருக்கும் நிலையில் வாழ்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. நம் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “மற்றவர்களின் தேவை குறித்து ஒரு சமுதாயம் கண்டுகொள்ளாமல் செல்லும்போது, புறக்கணிப்பு எனும் கலாச்சாரத்திற்குள் நுழைகிறது”
(கிறிஸ்துமஸ் சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கிய உரை, 20.12.2021). எனவே, நாமும் தனிமையில் வாழ்வோருக்கும் வயது முதிர்ந்தோருக்கும் நமது உடனிருப்பை வழங்கவேண்டும் என்பது மற்றுமொரு மெசியா காலப்பண்பாகும்.
நிறைவாக,
இளம்பெண் மரியா, எலிசபெத்துக்குப் பணிகள் ஆற்றியபோது அதற்கு ஈடாக, வயது முதிர்ந்த பெண்ணான எலிசபெத்திடமிருந்து அனுபவங்களையும், ஆலோசனைகளையும், ஆன்மிக வழிகாட்டல்களையும் கொடைகளாகப் பெற்றுக்கொள்வது, நாம் பிறருக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு உதவிக்கும் மறு உதவியைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது. எனவே, இச்சந்திப்பு நமக்குத் தரும் நற்பாடமான, பிறரன்பை மனத்தில் கொண்டு, தேவையில் இருக்கும் நம் சகோதரர் சகோதரிகளை இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மையமாக வைத்து செயல்பட முன்வருவோம். நமக்கென்று ஆயிரம் கவலைகள் இருந்தாலும், நம் பிறரன்புப் பணிகளை இன்முகத்துடன் ஆற்றுவோம். ஏனெனில் உரையாட, உறவாட, உடனிருக்க இரக்கம், நெருக்கம் மற்றும் கனிவு நிரம்பியிருக்கும் குழந்தை இயேசு எப்போதும் நம் அருகில் உள்ளார்.
அவரில் மகிழ... அயலாரை மகிழ்விக்க...
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை ‘Gaudete Sunday’ அதாவது ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். ‘மெசியாவின் வருகைக்காக விழிப்போடு காத்திருப்போம்’, ‘நம் உள்ளங்களைப் பண்படுத்துவோம்’ என்று கடந்த இரு வாரங்களாய் திரு வருகைக்கால ஞாயிறு சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டோம். இன்று மகிழ்ச்சி என்பது என்ன? எவ்வாறு மகிழ்கிறோம்? எப்படி மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறோம்? போன்ற கேள்விகளுக்கு விடைகள் தேடுவோம்.
‘மகிழ்ச்சி என்பது எது?’ எனக் கேட்டால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கூறுவர். மகிழ்ச்சிக்கான வரையறை என்பது, ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது.
மகிழ்ச்சி, மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு. மகிழ்ச்சியை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. மகிழ்ச்சியைப் பெறும் நோக்கத்துடன் செய்யும் எல்லாச் செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. பிறருக்குத் தீமை நேரிடக் கூடாது என்ற விழிப்புடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றி உள்ளவர்களின் மனநிலையையும் மாற்றி, வாழ்க்கையை இனிமையாக்கும்.
‘மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பவர் இறைவனே.’ அவரே மகிழ்ச்சியைத் தருகிறார். “கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியானவர்கள். உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் இயேசுவோடு கொண்டுள்ள உறவில் கிடைக்கிறது” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேம்
மக்கள் யாவே தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வாழவில்லை; பிற தெய்வங்களை நாடினர்; சிலை வழிபாடு செய்து மகிழ்ந்தனர் (செப் 1:4); இறுமாப்பு உடையவர்களாக மாறினர்; தங்கள் இதயங்களில் ஆண்டவரைப் புறக்கணித்தனர்; ஆண்டவர் பலமுறை இஸ்ரயேல் மக்களை எச்சரித்தும் அவர்கள் ஆண்டவருடைய குரலினைக் கேட்கவில்லை. ஆண்டவர் எந்த அளவுக்கு அவர்களைத் தண்டித்தாரோ, அந்த அளவுக்கு அவர்கள் அதிகமாகப் பாவங்கள் செய்ய ஆவல் கொண்டனர். கடவுளின் கனிந்த அன்பைப் புறக்கணித்துப் பாவச் சேற்றில் மூழ்கியதால், எருசலேம் மக்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். பிற சமய மக்களைப்போல் பாவிகளாகி விட்டதால் கடவுளால் தண்டிக்கப்பட்டனர். எருசலேம் மக்கள் பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. கடவுள் அவர்கள் நடுவில்தான்
இருந்தார் (செப் 3:15). தங்களின் பாவ நிலையை உணர்ந்து, ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை வைத்த ‘இஸ்ரயேலின் எஞ்சியோரை’
தம்முடன் மகிழ்ந்து பாட அழைக்கிறார் ஆண்டவர். இதுவே இன்றைய முதல் வாசகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், மகிழ்ச்சி நிறைவாழ்வுக்கான வழியைப் பவுல் காட்டுகிறார். பவுல் உரோமைச் சிறையில் பல்வேறு துன்பங்களை அடைந்து வந்தபொழுது, “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” (பிலி
4:4) என்று ஆண்டவர் இயேசுவின் உறவில் பிலிப்பியர் நிலைத்து நிற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
ஒருவரால் எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ந்திருக்க முடியும்; ஏனெனில், மகிழ்ச்சி என்பது ஒருவர் வாழும் சூழலிலிருந்து வருவதைக் காட்டிலும், அது அவரது மனநிலையிலிருந்து உருவாகிறது என்ற உயர்ந்த பாடத்தை அவர் நமக்குச் சொல்லித் தருகிறார். கனிந்த உள்ளம், கவலை கொள்ளாமை, நன்றியுடன்கூடிய இறைவேண்டல் முதலானவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார். “இயேசுவைச் சந்திக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் தரும் மகிழ்ச்சி எந்நாளும் குடிகொண்டிருக்கும்” என்கிறார்
திருத்தந்தை.
இன்றைய
நற்செய்திப் பகுதியில், “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்
3:4) என்ற திருமுழுக்கு யோவானின் அழைப்பைக் கேட்ட கூட்டத்தினர் அவரிடம் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” (3:10) என்று கேட்பதாக நற்செய்தி தொடங்குகிறது. மக்கள் கூட்டத்தினர், வரிதண்டுவோர், படைவீரர் ஆகிய மூன்று நிலையினரும் யோவானிடம் முன்வைக்கும் கேள்விகளுக்கு அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப யோவான் பதில் அளிக்கிறார்.
முதலாவதாக,
யோவான் மக்களுக்குக் கூறிய பதிலில், ‘இரண்டு அங்கிகளை உடையவர்களும்’, அளவுக்கு
மிகுதியாய் ‘உணவு வைத்திருப்பவர்களும்’ பகிர்ந்துகொள்ளுங்கள்
(லூக் 3:11) என்கிறார். காரணம், பகிராத்தன்மையாலே யூதேயாவின் எளிய மக்கள் வறுமையில் வாடினர். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே போனார்கள். எனவே, சமூகத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போராடும் ஏழை மக்களோடு பகிர்ந்து வாழ்வதே இறைவனைச் சந்திப்பதற்கான முதல் வழி எனவும், பகிரும்போதுதான் இறைவனின் ஆசிரைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யோவான் கற்றுத் தருகிறார். “நம் தேவைக்கு அதிகமாகச் சேமித்து வைக்கும் உணவு ஏழைகள் வாயிலிருந்து பிடுங்கப்பட்டது; அவை அவர்கள் இரத்தத்திலிருந்து உறிஞ்சப்பட்டது” எனக்
கூறுகிறார் புனித யோவான் கிறிஸ்சோஸ்தம்.
இரண்டாவதாக,
யோவான் வரி தண்டுவோருக்குக் கூறிய அறிவுரையில், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” (3:12) என்கிறார்.
பாலஸ்தீனத்தில் மக்களை அழுத்தும் பெரும் சுமையாக இருந்தது வரி. மக்கள் வாழ வழி இல்லாதபோதும் கோவிலுக்கும் அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டனர். மேலும், வரிதண்டுவோருக்குச் செலுத்தவேண்டிய அதிகப்படியான இலஞ்சம், வரி செலுத்த இயலாத மக்களிடம் அரசு பிடுங்கிக்கொண்ட நிலங்களால் அடிமைகளாகவும் அகதிகளாகவும் மாறிய ஏழை மக்களின் அவல நிலையின் பின்னணியில் யோவானின் பதில் அமைகிறது.
மூன்றாவதாக,
படைவீரர் கேட்ட கேள்விக்கு, “யார் மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்” (3:13) என்கிறார்
யோவான். உரோமைப் பேரரசில் வாழ்ந்த யூத மக்கள் பலர் தங்கள் விடுதலைக்காக அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது, அவர்கள்மீது பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில்தான் யோவான் இந்த அழைப்பைப் படைவீரருக்கு விடுக்கிறார். சுருங்கக்கூறின், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் அ) பகிர்ந்துகொள், ஆ)
பணம் பறிக்காதே, இ) பகையை வளர்க்காதே
- இவையே யோவான் வழங்கும் போதனைகளாகும்.
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் திருமுழுக்கு யோவான் கூறிய இந்த அறிவுரைகளைத் தழுவி, ஒரு நபர் அல்லது ஒரு நாடு மகிழ்ச்சியாக வாழ்வதற்குச் சில பட்டியலை வரையறுத்துள்ளது ஐ.நா. சபை.
மகிழ்ச்சியாக வாழ்வது ‘மனித உரிமைகளில் ஒன்று’ எனக் கூறும் ஐ.நா. சபை,
நீடித்த நிலையான மகிழ்ச்சி என்பது ‘சமூகத்தில் நம் உறவுகளிலிருந்தும் ஈடுபாட்டிலிருந்தும் பிறக்கிறது’ என
வலியுறுத்திச் சொல்கிறது. சமூகப் பாதுகாப்பு, வருமானம், நலவாழ்வு, சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிப் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா எந்த இடத்தில் வருகிறது என அறிவதற்கு நமக்கு
ஆர்வம் எழலாம். 136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. அதாவது உலகிலேயே மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
ஒவ்வொரு
நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ‘கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்தீர்களா?’ என்பதுதான். வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும் ஒருவரே மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார். “உண்மையான மகிழ்ச்சி, நாம் வைத்திருக்கும் பொருள்களில் அல்ல; மாறாக, அவற்றைக் கொடுப்பதில்தான் பிறக்கிறது” என்கிறார்
திருத்தந்தை. உவகைப் பொங்க கொடுப்பவர்கள் தாங்களும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கிறார்கள். கடவுள் தம்மை முழுவதுமாக இம்மனுக்குலத்திற்குக் கொடுத்தார். இந்தக் கொடுத்தலில்தான் அவர் மகிழ்ச்சியும் அடைந்தார். கிறிஸ்துமஸ்கூட இதுதானே! கடவுள் தம்மையே நமக்காகக் கொடுத்தார்.
“மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை. அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்” என
எடுத்துரைக்கின்றன வத்திக்கான் சங்க ஏடுகள் (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69).
அன்பானவர்களே!
வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைப் பெரிய தத்துவங்களில் தேட வேண்டாம். பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வேண்டாம். நாம் பாலர் பள்ளியில் படித்த பாடங்களையே நினைவூட்டுகிறேன். “யாரையும் ஏமாற்றாமல் விளையாடு; எவரையும் அடிக்காதே; பிறர் பொருள்மீது ஆசைப்படாதே; அடுத்தவரைக் காயப்படுத்தாதே; இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடு; உணவை வீணாக்காதே; தவறு செய்தால் மன்னிப்புக் கேள்; உயிர்களைக் கொல்லாதே.” இவைதானே நாம் பாலர் பள்ளியில் படித்த பாடங்கள்!
கடவுள்
ஒரு பச்சிளம் குழந்தையாய் நம் மடியில் வந்து அமர விரும்புகிறார். எளிய வடிவில் நம் மத்தியில் வாழும் இறைவனைச் சந்திக்கத் தயாராவோம். அன்பான வார்த்தை, அமைதி நிறைந்த ஆறுதல், எளிய உடனிருப்பு, பரிவின் பார்வை, கனிந்த பகிர்வு, கரைகாணாக் கருணை... இவையே நம்மை மகிழ்விக்கும்; அயலாரையும் மகிழ்விக்கும்.