news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 17:5-8; 1கொரி 15:12,16-20; லூக் 6:17,20-26 கடவுளே தஞ்சமென நாடுகிறவர்கள் பேறுபெற்றவர்கள்!

திருவிவிலியத்தில் கடவுளுக்கெனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. அவை, ‘எல்-ஷடாய் (எல்லாம் வல்லவர் - தொநூ 17:1), ‘எபினேசர் (உதவி செய்பவர் - 1சாமு 7:12), ‘எல்-ரோயி (காண்கின்றவர் - தொநூ 16:13), ‘எலோகிம் (படைத்தவர் - தொநூ 1:1; எசா 40:28), ‘யாவே ராஃப் (குணமாக்குபவர்விப 15:26), ‘யாவே யிரே  (வழங்குபவர் - தொநூ 22:14), ‘யாவே ஷம்மா (இருக்கின்றவர் - எசே 48:35), ‘யாவே ஷாலோம் (அவரே நம் அமைதி - நீதி 6:24), ‘யாவே சித் கேனு (கடவுள் நம்முடைய நீதி - எரே 23:6) மற்றும் பல. இந்தப் பெயர்கள் வெறும் தலைப்புகள் அல்ல; அவை ஒவ்வொன்றும் கடவுளின் தன்மை மற்றும் இயல்பின் பிரதிபலிப்பாகும். கடவுளின் பெயர், அவர் யார்? அவர் நம்முடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்? என்பதை வெளிப்படுத்தும் தனித்துவமான செயலைக் குறிக்கிறது.

கடவுளின் பல்வேறு பெயர்களில்அனாவிம் யாவே (Anawim Yahweh) என்பதும் ஒன்று. இப்பெயருக்குஏழைகளின் கடவுள்என்று பொருள்கொள்ளலாம். ஏன் கடவுள் ஏழைகள் பக்கம் இருக்கிறார்? ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு போன்ற வாழ்வியல் எதார்த்தங்களை அன்றாடம் எதிர்கொள்பவர்கள் ஏழைகள். இவர்களின் மனம் இயல்பாகவே ஆண்டவரை நோக்கியே எழும். இவர்களுடைய வாழ்க்கை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதாகவே இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் பணத்திலும் உலகப் பொருள்களிலும் மன மகிழ்வைக் காணாமல், இறைவன் வழங்கும் கொடை கள் அனைத்திலும் மனமகிழ்வைக் கண்டு, தங்களிடம் இருப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். இத்தகையோரையே இயேசுபேறு பெற்றவர்எனக் குறிப்பிடுகிறார்.

பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று தரப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் இரு வகையான மனிதரை முன்வைக்கின்றன. முதலாவதாக, மனிதர்கள் மீதும், இவ்வுலகப் பொருள்கள்மீதும் நம்பிக்கை வைப்போர்; இரண்டாவதாக, கடவுள்மீது நம்பிக்கை வைப்போர்.

இன்றைய முதல் வாசகத்தில் (எரே 17:5-8) எரேமியா முன்னுரைத்த இறைவாக்கின் காலம் கி.மு. 598-க்கு முந்தையதாக இருக்க வேண்டும். இப்பகுதியில் மனிதர்மீது நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும்; கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் வகைப்படுத்துகின்றார் எரேமியா. யூதாவை ஆண்ட அரசர்களில் கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து வாழ்ந்த அரசர்களைக் காண்பது மிகவும் அரிது. யூதாவை ஆண்ட மனாசே (2அர 21:2), ஆமோன் (2அர 21:20), யோவகாசு (2அர 23:32), யோயாக்கின் (2அர 24:9), செதேக்கியா (2அர 24:19) போன்ற பெரும்பாலான அரசர்கள் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்கள்மீதே நம்பிக்கை கொண்டனர். இதனால், கடவுள் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். எனவே, யூதாவை ஆண்ட அரசர்களும் அரசும் வீழ்ச்சியையே சந்தித்தன.

இன்றைய வாசகத்தில் எரேமியாவின் இறைவாக்கு யூதா அரசன் யோயாக்கிம் காலத்தில் (2அர 23:36-37) நடக்கிறது. யோயாக்கிம் 11 ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டார். பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கிம் தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்த்து, பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் இக்கிளர்ச்சியை அடக்கி, கி.மு. 598-ஆம் ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். இதனால் எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவப் பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கிம் கொல்லப்படுகிறார், எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்.

மனிதரில் அதாவது, கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாமல் எகிப்தியரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர். கடவுள்மீது நம்பிக்கை வைப்போர் வாழ்வு பெறுவர். எரேமியா, தங்கள் சக மனிதர்கள் மேலும், தங்கள் சிலை வழிபாட்டின் மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நம்பிக்கையைப் பதிக்காமல், ஆற்றல் வாய்ந்த கடவுள்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இன்றைய முதல் வாசகம் நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.

இரண்டாம் வாசகத்தில் (1கொரி 15:12,16-20) இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பாமல், இவ்வுலகக் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களையும், இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பி அவருக்குச் சான்று பகர்ந்து வாழும் மனிதர்களையும் வகைப்படுத்துகிறார் திருத்தூதர் பவுல். கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர், ஒருசில கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில்உயிர்த்தெழுதலே இல்லைஎன்று வாதித்து வந்தனர். கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளைப் பொறுத்தவரையில், உடல் என்பது அழிவுக்குரியதாகவும் வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. இறப்பு என்பது அழிவுக்குரிய உடலிலிருந்து ஆன்மா பெறும் விடுதலை. எனவே, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் பவுல், மிகவும் பொறுமையோடும் சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார்.

பவுலின் சிந்தனையில் நாம் கடவுளோடும் மனிதரோடும் ஏற்படுத்தும் உறவின் தொடர்பு சாதனமாக உடல் விளங்குகிறது. இவ்வுலகில் மனிதர்கள் இந்த உடலைக் கொண்டே உலகில் உறவுகளை ஏற்படுத்துகின்றனர். இவ்வுடல் இவ்வுலகில் அழிந்த பிறகும் மனிதர் விண்ணுலகில் கடவுளோடும் புனிதர்களோடும் உறவினைத் தொடர முடியும். அது மனிதரின் உடல் தன்மையிலேயே தொடரும். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது. இந்த அழியா உடலையே இயேசு பெற்றார். அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம். ஆனால், அந்த உடல் விண்ணகச் சூழ்நிலைக்கு ஏற்றதாயிருக்கும். தூய ஆவியால் முழுவதும் உருமாற்றமடைந்த உடலாயிருக்கும். இவ்வாறு உயிர்த்தெழுதலே கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படை என்று வலியுறுத்தும் பவுல், அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அழைப்பு விடுக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின்மலைப்பொழிவில் (மத் 5:3-10) எட்டுப் பேறுகளைப் பதிவு செய்கிறார் மத்தேயுஆனால் லூக்கா எழுதும்சமவெளிப்பொழிவில்இயேசுவின் போதனைகளைநான்கு வாழ்வின் பேறுகள், ‘நான்கு கேடுகள்என வடிவமைக்கின்றார்.

இயேசுவின்சமவெளிப் பொழிவுஎன்பது ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டோருக்கு அவர் கொடுத்த நம்பிக்கை மிக்க அழைப்பாகும். ஏழ்மை, அடக்குமுறை, அநீதி போன்ற சூழ்நிலைகள் காரணமாக நலிவுற்ற நிலையில் வாழ்ந்து வந்த பல யூத மக்கள்கடவுளே எங்கள் கதிஎன்று நம்பிக்கை கொண்டிருந்தனர். தங்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையே இவர்களின் சக்தியாக இருந்தது. இயேசு இவர்களுக்கே தம் நற்செய்தியை ஒப்படைப்பதோடு, தம்முடைய பணியிலே அவர்களைப் பங்கெடுக்க வைக்கிறார். இறையாட்சியைக் கட்டியெழுப்புவதில் ஏழையரின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு - இவை தன்னிலே பேறுபெற்றவை என்றோ அல்லது அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ இயேசு கூறவில்லை. இயேசு இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; மாறாக, இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்துகிறார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகியவை இறைவனை நோக்கி அடிக்கடித் திரும்ப, இறைவனைத் தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்க இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று அறிவுறுத்துகிறார். இவை நிறைவாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள்! இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர் தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புகள் குறைவு எனும் உண்மையையும் இடித்துரைக்கிறார்.

இயேசு, எசாயாவைப் பின்பற்றி (எசா 65:13-14), மூன்று கேடுகளை முன்வைக்கிறார். பணக்காரர்கள் கடவுளை மறக்கின்றனர்; அத்துடன் இறையருளுக்கு அவர்கள் தங்கள் உள்ளக் கதவுகளைத் திறப்பது கிடையாது (லூக் 12:13-21) என்கிறார். செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில் ஒருவரின் மனம் மனிதர்கள்மீதும் பணத்தின்மீதும் அதிகாரங்களின்மீதும் தங்கும்; பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம்; பணமும் உலகப் பொருள்களும் உண்மை மனமகிழ்வைத் தருவதில்லை. பணம் அழிவுக்கே இட்டுச் செல்லுமென எச்சரிக்கை விடுக்கிறார். கடவுள் ஏழ்மையையன்று, ஏழைகளை ஆசிர்வதிக்கிறார். அவர் ஏழையரின் கடவுள்! (அனாவிம் யாவே). அவர்களுக்கு எப்போதும் அவர் உறுதுணையாயிருக்கிறார். ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து, ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.

இன்றைய பதிலுரைப் பாடலும் இயேசுவின் வழி நின்று, “ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்எனக் கூறுகிறது (திபா 1:3,4). ஆகவே, இன்றைய மூன்று வாசகங்களும் குறிப்பிடுவதுபோல, மனிதர்மேல் அல்லது உலகு சார்ந்த செல்வங்களின்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரையே தஞ்சமெனக் கொண்டு, நீரோடையோரம் நடப்பட்ட மரங்களாகச் செழித்து வளர்வோம். திருத்தந்தை குறிப்பிடுவதுபோல, ‘ஏழைகளிடம் அன்புடன் கவனம் செலுத்துவது உண்மையான அக்கறையின் துவக்கம் (நற்செய்தியின் மகிழ்வு-199) என்பதை உணர்ந்து, இயேசு கூறிய கேடுகளில் சிக்கிக் கொள்ளாமல், அவர் கூறிய வாழ்வின் பேறுகளால் நம் மனங்களை நிரப்புவோம்.

news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 9, 2025, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 6:1-8; 1கொரி 15:1-11; லூக் 5:1-11 - தாழ்ச்சியே இறையழைப்பின் முதன்மையான மதிப்பீடு!

சிறந்த இறையியல் மேதையாக, பேராசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக அறியப்பட்டவர் லூயிஸ் (C.S. Lewis- 1898-1963). இவர் 1942-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் BBC வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்துகுறைந்தபட்ச கிறித்தவம் (Mere Christianity) என்ற நூலை 1952 -ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் தொடக்க உரையிலேயேபெரும் பாவம் (The Great Sin) என்ற தலைப்பில் அகந்தையைப் பற்றிய ஆழமான கருத்துகளைக் கூறியுள்ளார். ‘எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இந்த உலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் ஆணவம்என்று அவர் தன் நூலில் எழுதுகிறார்.

தொடர்ந்து லூயிஸ் ஆணவத்தின் மற்றொரு தவறான கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ‘பல்வேறு குறைபாடோடு இருக்கும் மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு. ஆனால், ஆணவத்தில் ஊறிப் போனவர்கள் இணைந்து வருவது இயலாத செயல். அப்படியே அவர்கள் சேர்ந்துவந்தாலும், தங்களுள் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கும் போட்டி உருவாகும். இந்தப் போட்டியாலும் ஒப்புமையாலும் ஆணவத்தில் சிக்கியவர்கள் கடவுளோடும் தொடர்பு கொள்ள முடியாது. அவர்களைப் பொருத்தவரைக் கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.’

தலையாய பாவம் ஆணவம் என்றால், தலையாய புண்ணியம் தாழ்ச்சி. தாழ்ச்சி என்பது உண்மை நிலை; உயர்ந்த நிலை; துணிவு நிலை; தன் இயலாமையை உணரும் நிலை; தன்னைப் பற்றிய நேர்மையான மனநிலை. தன்னிடம் உள்ள நிறை-குறைகள் முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே தாழ்ச்சி அல்லது பணிவு.

இன்றைய மூன்று வாசகங்களும் குறிப்பிடும் திருவிவிலிய மாந்தர்கள் - இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய மூவரையும் இறைவன் தம் பணிக்கென அழைக்கின்ற போது, அவர்கள் தங்கள் குறைகளைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, இறையழைப்புக்குத் தங்களையே கையளிக்கின்றனர். எவரொருவர் ஆண்டவர்முன் தன்னையே தாழ்த்திக் கொள்கிறாரோ அவரைத்தானே கடவுள் உயர்த்துகிறார் (லூக் 14:11; யாக் 4:10). தாழ்ச்சி உள்ளவர்களுக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீரா 3:19).

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பையும், அவரது பணியையும் பற்றிப் பேசுகிறது. எசாயாவின் அழைப்பு கி.மு. 742 -ஆம் ஆண்டில் உசியா அரசர் ஆணவத்தால் தொழுநோய் பிடித்து இறந்தபோது (1குறி 26:16,21) நிகழ்கிறது. இந்நிகழ்வு ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியாக அமைகிறது. ஆண்டவர் அரியணைமீது அமர்ந்திருப்பதும், தொங்கலாடைக் கோவிலை நிரப்பி நிற்பதும், செராபீன்கள் சூழ்ந்து நிற்பதும் ஆண்டவருடைய மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன. ‘செராபீன்என்றால் எபிரேயத்தில்எரிந்து கொண்டிருப்பதுஅல்லதுஎரிபவைஎன்பது பொருள். இந்தச் செராபீன்கள், ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்என்று பாடிக்கொண்டிருக்கின்றனர்.

இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்ட எசாயாதூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்எனத் தன் நிலையை உணர்ந்து அறிக்கையிடுகிறார் (6:5). ஆண்டவரது முன்னிலையில் தான் தூய்மையற்றவராக உணர்கிறார். இந்த உணர்வு அவரது குற்றங்களால் வருகின்ற உணர்வு அன்று; மாறாக, மனித நிலையினால் வருகின்ற உணர்வு. ஆண்டவர் அவரது அச்சத்தைப் போக்குகின்றார். செராபீன்களில் ஒருவர் நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து எசாயாவின் உதடுகளைத் தூய்மைப்படுத்துகின்றார். இச்செயலால் எசாயா முழுவதுமாகத் தூய்மையாக்கப்படுகின்றார். ‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’ என இறைவன் கேட்கும்போது, தூய உதடுகளைப் பெற்ற எசாயா, ‘இதோ, நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்என்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுல் கொரிந்து நகரத் திரு அவையில் விளங்கிய ஒரு பிரச்சினை பற்றிப் பேசுகிறார். கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர், ஒரு சில கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உயிர்த்தெழுதலே இல்லை என்று வாதித்து வந்தனர். கிரேக்கச் சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை வெறுத்தது. இச்சிந்தனையை எதிர்த்துஉயிர்த்தெழுதலே கிறித்தவ நம்பிக்கைக்கு அடிப்படைஎன்று வலியுறுத்துகின்றார் பவுல். உயிர்ப்பின்போது நம் உடலும் மாற்றம் பெறும் எனவும் போதிக்கிறார். இறந்தவர்கள் உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திரு அவைக்குப் பவுல் இறையியல் விளக்கம் தருகின்றார். ‘கிறிஸ்து நமக்காக இறந்தார், அடக்கம் செய்யப்பட்டார், உயிருடன் எழுப்பப்பட்டார் - இதுதான் தொடக்கத் திரு அவைக்குத் திருத்தூதர்கள் வழங்கிய நற்செய்தி. இதே நம்பிக்கை அறிக்கையை எந்த மாற்றமுமின்றி பவுலும் அறிவிக்கிறார்.

திருத்தூதர்களுக்குத் தோன்றிய இயேசு, இறுதியாக, காலம் தப்பிப் பிறந்த குழந்தையைப் போன்ற தனக்கும் தோன்றியதாகப் பேசுகின்றார் பவுல். அதே நேரத்தில், திரு அவையைத் துன்புறுத்திய குற்றவுணர்வுக்கு ஆளான அவர், இயேசுவின் அழைப்பைக் கண்டதும், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்எனத் தன் குற்றநிலையை உணர்கிறார் (1கொரி 5:8). தன்னிடம் உள்ள நிறை-குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதுதானே பணிவு!

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சீடரை அழைக்கும் நிகழ்வையும், இந்நிகழ்வோடு கெனசரேத்து ஏரியில் பெருமளவு மீன்பிடித்த நிகழ்வையும் இணைத்து லூக்கா பதிவு செய்கிறார். கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்த இயேசு, சீமோனின் படகில் உரிமையோடு ஏறுகிறார். படகையே போதிக்கும் ஒரு தளமாக மாற்றுகிறார். படகில் இருந்த அனைவரும் இயேசுவின் போதனையை உற்றுக் கவனிக்கின்றனர். இரவு முழுவதும் உழைத்தும் மீன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்த சீமோனின் உள்ளத்தில் இயேசுவின் போதனைகள் மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தச் சூழலில்தான் இயேசு, ‘ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்என்கிறார். ‘இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லைஎன்று தயங்கிய பேதுரு, இருப்பினும், ‘உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்என்று கூறி வலைகளைப் போடுகிறார். மிகுதியான மீன்பாடு கிடைக்கின்றது. உடனே, பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்என்கிறார். கடவுள் ஒருவரது வாழ்க்கையில் தலையிடும்போது வெளிப்படும் பயம் இதுவாகும் (எசா 6:5; எரே 1:6; விப 3:11).

இவ்வாறாக, இன்றைய மூன்று வாசகங்களிலும் எசாயாவும் பவுலும் பேதுருவும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டபோது, தூயவரான கடவுளின்முன் இறைப்பணியாற்ற தங்களை முற்றிலும்தகுதியற்றவர்களாகஉணர்கின்றனர். தங்கள் குறைகளையும் சிறுமையையும் மனத்தாழ்மையையும் உள்ளபடியே வெளிப்படுத்துகின்றனர். இவர்களின் இதயத் தாழ்ச்சி அச்சத்திலும் பாவ உணர்விலும் வெளிப்பட்டதல்ல; மாறாக, வியப்பிலும் தாழ்ச்சியிலும் கூறப்பட்டவை. குறையுள்ள இம்மூவரும் நிறையுள்ள இறைவனின் தொடுதலுக்குத் தங்களை அனுமதிக்கின்றனர். கடவுள் அவர்களை நிறைவுள்ளவராக்குகின்றார். ‘மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 18:12). ‘தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்என்கிறார் புனித அகுஸ்தின். ‘திரு அவையில் இருக்கும் மேய்ப்பர்கள் தாழ்ச்சி எனும் பாதையைக் காட்டாவிடில், அவர்கள் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியாதுஎனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று இங்கே ஆழமாகப் பொருள்படுகிறது (பிப்ரவரி 7, 2020).

ஆணவம் பாராட்டுபவர்களால் தங்களிடமுள்ள பல வீனத்தைத் தெளிவாகப் பார்க்க இயலாது. நம்மிடமுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாதபோது அவற்றைத் திருத்துவது இயலாத செயல். குறைகள் திருத்தப்படாதிருந்தால் அதன் எதிர்விளைவுகள் துன்பத்தைச் சுமந்து வரும். அதேவேளை தாழ்ச்சி மனம் கடவுளிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும், நம் குறைகளைத் திருத்திப் புதுவாழ்வுக்கு இட்டுச் செல்லும். ‘தாழ்ச்சியே ஒருவரைக் கடவுளுக்கும் உடன் வாழும் சகோதரர்களுக்கும் நெருக்கமானவர்களாக மாற்றும் திறன்கொண்டதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (நவ. 06, 2023). ஒருமுறை அன்னை தெரேசா தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, “நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம்என்னும் வாக்கு இங்கே எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றது.

எனவே, நம்மை நெருங்கிவர விரும்பும் இயேசுவை நம் இதயங்களில் வரவேற்க நாம் தயாராக இருப்போம். நம்முடைய தினசரி வாழ்விலும் குடும்ப வாழ்விலும் உறவுகளை அனுபவிப்பதிலும் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தோல்விகளைச் சந்திக்கும் வேளையில் நம் மனம் எனும் படகில் இயேசுவை ஏற்றி அவர் நமக்கு இடும் கட்டளைகளை நிறைவேற்றுவோம். நம்முடைய அன்றாட நிகழ்வில் நம்மை நோக்கி வரும் இறைவனின் அழைப்பை உணரும் வரத்தைக் கேட்போம். கோபுரத்தில் இருந்தபோது ஆடாத ஆட்டம் ஆடியவர்களைக் காலம் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறது என்பதை மறக்கமுடியுமோ? தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். ‘அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும் - கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்.

மானிடா, உன் கடவுளுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடந்துகொள்வதைத் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக் 6:8).

news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 2, 2025, ஆண்டின் பொதுக்காலம்; 4 ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 3:1-4; எபி 2:14-18; லூக் 2:22-40 - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

தம் அன்பு மகனை நம் கரங்களில் ஒப்படைக்கும் இறைவன்!

கடவுளின் படைப்பு அனைத்தும் நல்லவை, சிறப்பானவை, அவரது நன்மைத்தனத்திற்குச் சான்றானவை. கடவுள் நமக்குத் தரும் நிபந்தனையற்றக் கொடைகள் அனைத்தும் முதல்தரமானவை. கடவுளின் அருள் கொடைகளுக்கு நன்றிச்செயலாக நாம் அவருக்குத் திருப்பிச் செலுத்துபவையே காணிக்கைகள். காணிக்கை என்பது தியாக உணர்வின் வெளிப்பாடு. தியாகம் என்பது அன்பை அளக்கும் அளவுகோல். இறைவனை உண்மையாக அன்புகூர்பவரே இறைவனுக்காக எதையும் தரத் தயாராகிறார்.

இந்த உலகில் எதுவும் நம்முடையது அல்லவே! ஒரு வேளை உழைப்பு நம்முடையதாக இருந்தாலும், விதையும் விதையைத் தாங்கிப் பிடிக்கும் மண்ணும், விதை முளைக்க உயிர் கொடுக்கும் நீரும், முளைத்த செடி ஓங்கி வளர ஒளியும் இறைவன் தந்ததல்லவா! எனவே, ‘நான் கொடுப்பவை என்னுடையதல்ல; அது இறைவனுடையது. இறைவனுடையதை இறைவனுக்கே திருப்பிக் கொடுக்கிறேன்என்ற உணர்வோடு ஒப்புக்கொடுப்பதுதான் காணிக்கை! இந்த உணர்வோடுஆண்டவர் அருளிய செல்வத்தை(திபா 127:3) மரியாவும் யோசேப்பும் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டு வருகின்றனர்.

மோசே வழியாகதலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய் (விப 13:2) எனக் கடவுள் கட்டளை பிறப்பித்திருந்தார். சட்டங்கள் நிறைவேற்றுவதன் வழியாக, நல்ல அறநெறி வாழ்வு வாழ்வதன் வழியாக மீட்பைக் கண்டுகொள்ள முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் யோசேப்பு-மரியா. இவர்கள் தங்கள் குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்து அர்ப்பணித்த இந்த நாளைஅர்ப்பணத்தின் நாளாகவும், ‘அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் நாளாகவும்சிறப்பித்து மகிழ்கிறோம். இந்த உலக நாளை 1997-ஆம் ஆண்டில் உருவாக்கியவர் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்.

கோவிலுக்குப் படைக்கப்பட்டவை அனைத்தும் ஏழைகளுக்கே சொந்தம் என்று திருவிவிலியம் கூறுவதுபோல, கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு முழுமையாக ஏழைகளுக்குச் சொந்தமாகிறார். இக்குழந்தை இவ்வுலகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை என்பதை உணர்கிறோம். இயேசு தம்மையே அப்பமாகவும், சிலுவையில் தம் உடலையே பலிபொருளாகவும் உடைத்துக்கொடுப்பதன் அடையாளமாக இந்த அர்ப்பணம் அமைகின்றது.

இயேசுவின் பெற்றோர் குழந்தையைக் கோவிலில் அர்ப்பணிக்கும்போது, சிமியோனும் அன்னாவும் கோவிலில் இருக்கின்றனர். சிமியோன் நேர்மையாளர்; இறைப்பற்று மிக்கவர். அன்னா ஓர் இறைவாக்கினர்; கைம்பெண். கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி, அல்லும் பகலும் திருப்பணி செய்து வருபவர். ‘நமக்குள்ளேயே நாம் முடங்கிவிடுவதன் வழியாகத் தனிமையை நாம் வெற்றிகொள்ள முடியாது. கடவுளை நோக்கிக் குரல் எழுப்புவதன் வழியாக வெற்றி காணமுடியும்என்பதை உணர்ந்து வாழ்ந்தவர். இவ்விருவரும் மரியா-யோசேப்பைப் போன்றுஇஸ்ரயேலில் எஞ்சியுள்ளோர் (மீக் 2:12) குழுவைச் சார்ந்தவர்கள். இவர்கள் இறைவாக்கினர் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து, தாழ்மையிலும் பற்றுறுதியிலும் தம் வாழ்நாள்களைக் கழித்து வந்தனர். இவர்கள் இறைவன் அனுப்பவிருக்கும் மீட்பரை எதிர்பார்த்திருந்தவர்கள்; இறைவன் மக்களைத் தேற்றும் நாளுக்காகக் காத்திருந்தவர்கள். இவர்கள்மீது கடவுள் அருள் பாலித்து, இவர்களுக்குத் தம் மகனைக் கண்டு மகிழ்வுறும் பேற்றை அளிக்கிறார்.

பொதுவாக, கோவிலுக்குக் கொண்டு வரும் குழந்தைகளைக் குருக்களிடமே பெற்றோர் கொடுப்பர் (1சாமு 2:20). ஆனால், இங்கே சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். கடவுளின் அருஞ்செயலைக் காணும் சிமியோன்எனது வாழ்நாள் தவப்பயனைப் பெறப்போகின்றேன்; எனது மண்ணக வாழ்வு பொருள் கொண்ட ஒன்றாக முடியப் போகின்றதுஎன்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துகின்றார். மேலும், சிமியோன்ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!’ (லூக் 2:29) என்று தன்னுடைய இறப்பைப் பற்றியும், ‘மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன (2:31) என்று மகிழ்ச்சிப் பெருக்கோடும் கடவுளைப் புகழ்கின்றார்.

தன் சொந்த இல்லத்திற்கு இறைவன் வருவார்; அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் வருவார்; அவரது வரவு எப்படி இருக்கும் என்பதை முன்னறிவிக்கும் விதமாக, ‘இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் (2:34) என இறைவாக்கு உரைக்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் நாளைப்பற்றி மலாக்கியும் இவ்விதம் கூறுகிறார்: “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்... அவர் வரும் நாளைத் தாங்கக்கூடியவர் யார்?” (மலா 3:1,2).

யூதாவில் நிலவிய அறநெறி மற்றும் சமயப் பிரச்சினையைப் பற்றி இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. இறைவாக்கினர் மலாக்கி காலத்தில், குருக்களும் மக்களும் சமயக் கடமைகளில் தவறினர். மக்கள் கொணரும் முதல்தரமான காணிக்கைகளைத் தங்களின் சொந்த உடமைகளாக்கிக் கொண்டு, இரண்டாந்தரக் காணிக்கைகளை அதிக விலைக்கு மக்களுக்கு விற்று (2:1-3) திருப்பீடத்தைத் தீட்டுப்படுத்தினர். பலர் ஆண்டவருக்குச் சேரவேண்டிய காணிக்கையை முறைப்படி செலுத்தவில்லை. அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்தனர்; அவரது திருப்பெயரைக் களங்கப்படுத்தினர். இந்தப் பின்புலத்தில், கடவுள் தம்முடைய தூதரை அனுப்புவார்; அவர்தம் மக்களைத் தூய்மைப்படுத்துவார்; அந்நாளில் தீர்ப்பளிக்கப்படும், ஒப்புரவு ஏற்படும், விடுதலை அருளப்படும்; ஆலயமும் தூய்மை அடையும். கட்டளைகளைக் கடைப்பிடித்துத் தூய்மையுடன் ஒழுகுபவர்களுக்கு ஆண்டவரின் நாள் ஆசிரின் நாளாக அமையும்என முன்னுரைக்கிறார் மலாக்கி.

மக்களின் அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டும் அரசியல் மெசியாவாகவும், கோவில் வழிபாட்டைத் தூய்மைப்படுத்தும் குருத்துவ மெசியாவாகவும் மீட்பர் வருவார் எனக் காத்திருக்கின்ற சிமியோன் உடன்படிக்கையின் தூதராம் இயேசுவைக் கண்டுகொள்கின்றார். சிமியோனின் இச்செயலைக் குறித்து திருத்தந்தை, “தன் வாழ்நாள் முழுவதும், சிமியோன் இறைவனின் வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். தன் நீண்ட வாழ்வில் துயரங்களும், சோர்வும் உண்டானாலும், அவரது உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளி அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. தன்னைச்சுற்றி நடந்த நிகழ்வுகளால் துயருற்று, மனத்தளர்ச்சி அடையாமல், பொறுமையுடன் இருந்ததால்தான்நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டனஎன்று சிமியோனால் இறைவனிடம் கூறமுடிந்ததுஎன்று கூறினார் (பிப்ரவரி 03, 2021).

சிமியோன் அன்னை மரியாவைப் பார்த்து, “உமது உள்ளத்தையும் ஒரு  வாள் ஊடுருவிப் பாயும்என்ற இறைவாக்கு, தந்தை கடவுள் தம் மகன் இயேசுவுக்காக வைத்திருக்கும் பணி என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இயேசு நன்மைகளைச் செய்யும்போது இச்சமூகம் அவரை எதிர்க்கும்; இறுதியில் அவரது உயிரையே பறிக்கத் திட்டமிடும். ஓய்வுநாளில் நோயாளர்களை நலப்படுத்துதல், கோவிலைத் தூய்மைப்படுத்த சாட்டையை எடுத்தல், பாவிகளுடன் உணவருந்துதல், பிறர் குற்றங்களை மன்னித்தல் இவை அனைத்துமே அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான சவால்களே. பொருளற்ற சட்டங்களால் மக்களைத் துன்புறுத்திய பரிசேயக் கூட்டங்களை வன்மையாகக் கண்டித்தார் இயேசு. நீதியை நிலைநாட்ட தீமையைத் தீக்கிரையாக்கினார். எனவேதான் இயேசுஎதிர்க்கப்படும் அடையாளமாகவும் (லூக் 2:34), ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் (2:35) எனவும் சிமியோன் மரியாவை நோக்கிக் கூறினார்.

எனவே, மனித மீட்புக்குச் சிலுவையின் பாதையைத் தவிர வேறு பாதையை இறைவன் காணவில்லை. நமது மீட்பின் பயணத்தில் இயேசு எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எவ்வித ஆறுதலுமின்றி கூட இருந்தவர்கள் கைவிட்ட நிலையை அனுபவித்தார். மனித ஊன், இரத்தம், சாவு இவற்றைப் பகிர்ந்து நம்மை மீட்டார். ‘துன்பம் ஒரு நல்ல ஆசிரியர்தானே!’ ‘துன்பமே நமது அர்ப்பணத்தில் வலிமை சேர்க்கிறது. பிறரோடு இணைந்து உழைப்பது, துன்புறுவது, மகிழ்வுறுவது இவையே கிறிஸ்து நமக்குக் காட்டும் மீட்பின் பாதையாகும்என்கிறது இரண்டாம் வாசகம்.

இன்றைய விழா நமக்குச் சொல்லித் தரும் முக்கியப் பாடங்கள் என்ன? முதலில், நம்மையே நாம் முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும்போதுகடவுள் அனுபவம்பெறுகிறோம். நம் அர்ப்பணத்தில் கடவுளைக் காண்கிறோம்; அவரது திட்டத்தை அறிந்துகொள்கிறோம்; மீட்பின் கருவியாகிறோம். இரண்டாவது, ஒவ்வோர் அர்ப்பணமும் நம்மை உலகின் பொதுச் சொத்தாக்குகின்றன. மக்களுக்காக நாம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோமெனில், மக்களுக்காகப் பணியாற்ற நாம் முன்வரவேண்டும். ஆண்டவருக்கு அஞ்சி, அவரது பெயரை நினைத்து, நீதிநெறி பிறழாது வாழ்வோரின் பெயர்கள் மட்டுமே கடவுளின் நூலில் இடம் பெறும் (மலா 3:16) என்பதை நினைவில் கொள்வோம்.

மூன்றாவது, இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த மரியா - யோசேப்பு, சிமியோன், அன்னா ஆகிய நான்கு பேரும் பல்வேறு விதங்களில் வேறுபட்டவர்கள்; எனினும், இவர்கள் இறைவனை அணுகி, அவரால் வழிநடத்தப்பட தங்களை அனுமதித்தவர்கள். இறைவனின் பாதையில் நடப்பதற்குரிய விருப்பத்தையும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்கு அனுமதிப்பதையும் கிறித்தவ வாழ்வு எதிர்பார்க்கிறது என்பதை இந்த நான்கு பேரிடமிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

நிறைவாக, அர்ப்பண உலக நாளைச் சிறப்பிக்கும் இன்று அர்ப்பண வாழ்விற்கெனத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களையும், வயதில் முதிர்ந்து, உடலால் தளர்ந்துள்ள அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரையும் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். உடல், உள்ள ரீதியான பல்வேறு சவால்கள், சோதனைகள், தடுமாற்றங்கள் என எத்தனை தடைகள் வந்தாலும், அன்னை மரியாவைப்போல மனவுறுதியோடு வாழ இவர்களுக்காக வேண்டிக்கொள்வோம். இன்றைய நாளில் உருகி ஒளி கொடுக்கும் மெழுகுதிரியைச் சுமக்கும் நாம் ஒவ்வொருவரும் குழந்தையின் வடிவில் வரும் இறைவனை நம் கரங்களில் ஏந்தி இறைவனின் ஒளிக் கீற்றுகளாக ஒளிர்ந்திடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 26, 2025 ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) நெகே 8:2-4, 5-6,8-10; 1 கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21

ஆண்டவரை மகிழ்விக்கும் முழு மனித விடுதலைப் பணிகள்!

கிறிஸ்து பிறப்பின் 2025-ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கொண்டாடி, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற கருப்பொருளில் சிந்தித்துப் பயணிக்க அன்போடு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 24 செவ்வாய் அன்று மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவைத் திறந்து நம்பிக்கையின் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை, தொடர்ந்து டிசம்பர் 26 வியாழன் முதல் மறைச்சாட்சியாளரான தூய ஸ்தேவான் திருவிழாவன்று உரோமையிலுள்ள ரெபிபியாவின் சிறையில் இரண்டாவது புனிதக் கதவையும் திறந்து, திருப்பலி நிறைவேற்றி அங்கு வாழும் சிறைக்கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

நம்பிக்கையின் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை, தான் நிறைவேற்றிய கிறிஸ்து பிறப்புத் திருப்பலி மறையுரையில், “புனிதக் கதவு திறக்கப்பட்டதன் வழியாக நாம்  புதியதொரு யூபிலி ஆண்டைத் தொடங்கியுள்ளோம். நமது அன்னை பூமிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அநியாயக் கடன்களால் ஏழை நாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுமைகள் மற்றும் பழைய, புதிய வகையான அடிமைத்தனங்களால் சிறைபிடிக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையை அளித்து இந்த உலகையே மாற்றியமைப்பதற்கு நம்மை அழைக்கிறது இந்த யூபிலி ஆண்டுஎன்றார்.

யூபிலி ஆண்டு என்பது, இஸ்ரயேல் மக்கள் ஏழாம் ஆண்டு ஓய்வு ஆண்டு, 50-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டு என வகுத்து அனைவருக்கும் ஓய்வு அளித்து, ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தார்கள். யூபிலி என்ற எபிரேயச் சொல், ஆட்டின் கொம்பை ஊதி, ‘அருள்தரும் ஆண்டினைமுழக்கம் இடுவதைக் குறிக்கிறது. ஆண்டவர் அருள்தரும் ஆண்டு என்பது புதுப்பிப்பு, ஓய்வு, கடன் தள்ளுபடி, மற்றும் அடிமைகளுக்கான சுதந்திரத்தின் ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. இது சமூக நீதி மற்றும் ஆன்மிக மறுமலர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது. சுற்றுப்புறச் சூழல் மதிக்கப்பட்டு வந்தது. யூபிலி ஆண்டு நிலத்துக்கு மட்டுமன்று, உழைப்பவர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஓய்வு தரும் ஆண்டு; கடன்பட்டோர் கடனிலிருந்து விடுதலை பெறும் ஆண்டு; அடிமைப்பட்டோர் விடுதலை பெற்றுச் சுதந்திரமாகச் செல்லும் ஆண்டு; இவ்வாறு சுழற்சி சமுதாயத்தை மீண்டும் உருவாக்கும் ஆண்டு (காண். லேவி 25). மக்களுக்கு விடுதலை, சொத்துகள் மீட்பு, ஓய்வு இவையே யூபிலி ஆண்டுக்கான முக்கியக் கூறுகள்.

இறைவாக்கினர் எசாயா யூபிலியைஆண்டவர் அருள்தரும் ஆண்டு (எசா 61:2) என வெளிப்படுத்துகிறார். யூபிலி ஆண்டில் தீட்டப்படும் திட்டங்கள் யாவும் நல்லவையே; சிந்திக்கப்படும் சிந்தனைகள் யாவும் மிக உயர்ந்த எண்ணங்களே; ஏட்டிலே எழுதப்படும் எழுத்துகள் யாவும் சிறந்த வரலாற்று ஆவணங்களே. ஆயினும், இவை யாவும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? யூபிலி என்றாலே முழு மனித விடுதலைப் பணிகள்தானே! ஆனால், கடைப்பிடிப்பதில் திரு அவையிலும் கிறித்தவச் சமூகத்திலும் எத்துணை நழுவல்கள்?

ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு இயேசுவின் இரக்கமிகு விடுதலைப் பணிகள்தான் இயேசுவைப் பின்பற்றும் கிறித்தவர்களின் பணிகள் என்பதை வலியுறுத்துகின்றது.

நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் இயேசு அருள்தரும் ஆண்டினைத் திட்டவட்டமாக அறிவித்து, தம் பொதுப்பணியை விடுதலைப் பணியாகத் தொடங்கினார். அவர் வாசித்த எசாயாவின் சொற்கள், பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக்கூடியவை. ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டைப் பற்றிய அறிவிப்பு (எசா 61:1,2) போன்ற இயேசுவின் பணிவாழ்வின் கொள்கை விளக்க அறிக்கைக்கு விளக்கம் தேவையோ! ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர் இவர்கள்தாம் இயேசுவின் இலக்கு மக்கள். உடலளவிலும் மனத்தளவிலும் கட்டுண்டு கிடந்த மனித சமுதாயத்தை விடுவிக்கவே தாம் வந்ததாகக் கூறினார். இயேசுவின் வருகையிலேஅருள் தரும் ஆண்டு (லூக் 4:19) தொடங்கிவிட்டது. அன்றைய சமூகக் கட்டமைப்பு, பொருளாதார வரிச்சுமை, சமச்சீரற்ற சமயக்கொள்கை, இறுக்கமான வாழ்வியல் சூழல் என இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு விடுதலை வழங்குவதே தம் பணி வாழ்வின் இலக்கணம் எனக் குறிப்பிட்டார் (மத் 11:28).

சமுதாய நீதி  பற்றிய கனவுகள் என்றாவது, எப்போதாவது நனவாகுமா என்று ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே அவை நனவாகிவிட்டன, நிறைவேறிவிட்டன (லூக் 4:21) என்று இயேசு கூறிய வார்த்தைகள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். இயேசு ஒருவரே முழு மனித விடுதலையை அளிப்பவர் (யோவா 8:32). யூத யூபிலி மரபுக்குப் புதிய பொருளை வழங்கி, தம்மைக் கடவுளின் இரக்கத்தின் உருவமாக உருவாக்கினார்.

வெறும் சமூக அடிமைத்தனத்திலிருந்து மட்டுமல்ல, எல்லாவிதமான நோய்களிலிருந்தும் இயேசு நம்மை மீட்கிறார். அவர் சாதாரணமாக நம்மை மீட்கவில்லை. சிலுவையில் மரணத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வதன் வழியாக, இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம் (எபே1:7).

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பெறும் மீட்பை அல்லது விடுதலை வாழ்வைப் பற்றிப் பார்க்கிறோம். பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு எருசலேம் வந்த இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் நெகேமியாவின் தலைமையில் மீண்டும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். நெகேமியா பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளிடையே மனம் தளராது கட்டியெழுப்பினார். மோசே, இஸ்ரயேல் மக்களை மீட்டு, திருச்சட்டம் வழங்கி, பாலைநிலத்தில் அவர்களை வழிநடத்தி வந்தது எதையும் அறியாதவர்களாக இருந்த எருசலேம் மக்களுக்கு, குருவும் மறைவல்லுநருமான எஸ்ரா மோசேயின் சட்டத்தை மீண்டும் நிலைப்படுத்துகிறார். மறந்துபோன மோசேயின் அடிப்படைப் போதனைகளை எஸ்ராவும் நெகேமியாவும் முன்னின்று பட்டியலிடுகின்றனர். எஸ்ரா விளக்கமாக வாசிக்க அவர்கள் அதன் பொருளைப் புரிந்துகொண்டு, ஆண்டவரை வாழ்த்தினர்; ‘ஆமென்! ஆமென்!’ என்று பதிலுரைத்தனர்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதனர் (நெகே 8:6). ஆண்டவருடைய சட்டங்கள் தண்டிக்க அல்ல; மாறாக, வாழ்வு கொடுக்கவே என்பதை எடுத்துரைக்கும் எஸ்ரா, ஆண்டவரின் புனித நாள் மகிழ்ச்சியின் நாள்; எனவே, வருந்த வேண்டாம் எனக் கூறுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்உடல் உருவகம்பற்றிப் பேசுகிறார். பவுலின் காலத்தில்உடல்பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஓர் உருவகம். மெனேனியு என்ற உரோமை அரசவை உறுப்பினர் உடலை உருவகமாகப் பயன்படுத்தி, அரசாள்வோர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் அவர்களுக்காக உழைப்பவர்கள் என்றும் கூறினார். மேலும், அரசாள்வோரை அவர் உடலின் மத்தியில் காணப்படும் வயிற்றுக்கு ஒப்பிட்டார்; மற்ற உறுப்புகள் எல்லாம் உழைக்கும் மக்களைக் குறிக்கும் என்றார். அதாவது அவர்கள் அனைவரும் வயிற்றுக்காகவே உழைப்பவர்கள் என்றார். ஆனால், பவுல் இந்த உருவகத்தில், ஒவ்வோர் உறுப்பும் முக்கியமானது என்றும் குறிப்பாக, சிறிய, மறைவான உறுப்புகள்கூட மதிப்புப் பெற்றவையாயிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார். எனவே, நாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தாமல், வேற்றுமை பாராமல், ஒரே மனத்தோடும் நோக்கோடும் ஒற்றுமையில் வாழும்போது கிறிஸ்துவை அனுபவிக்க முடியும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவின் உடலாகிறோம் என்ற உயரியக் கோட்பாட்டை முன்வைக்கிறார்.

இவ்வாறு இன்றைய இறைவாக்குகள் அனைத்துமே எதிர்நோக்கு, அமைதி, மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் நீதியை வளர்ப்பதற்கும், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் நமக்கு அழைப்பு விடுப்பதாக இருக்கிறது.

இந்த யூபிலி ஆண்டில், விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாகக் கடவுள் நம்மீது பொழிகிறார். இந்த யூபிலி, நமக்கு எதிர்நோக்கின் காலமாக அமைந்துள்ளது. இது கடவுளைச் சந்திப்பதில் உள்ள மகிழ்ச்சியை மீட்டெடுக்கவும், நமது ஆன்மிக வாழ்வைப் புதுப்பித்துக்கொள்ளவும் நம்மை அழைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியின், அன்பின் மற்றும் மன்னிப்பின் எதிர்நோக்கைப் பெறுவதற்கான அருமையானதொரு வழியை இந்த யூபிலி ஆண்டு நமக்குத் திறந்துள்ளது. ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது (உரோ 5:5) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப நம் ஒவ்வொருவருக்குமே ஏமாற்றம் தராத எதிர்நோக்கை யூபிலி ஆண்டு அளிக்கின்றது.

ஆகவே, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டு நமக்கு உணர்த்தும் கடமைகள் என்ன? முதலில், யூபிலி ஆண்டில் குடும்பங்களில் அன்பு நிரப்பப்பட வேண்டும். சகோதர உறவுகளைப் புதுப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பொறாமை, சண்டைகள், பிரித்தாளும் சூழ்ச்சி ஆகியவற்றிற்கு நம் குடும்பங்களில் ஒருபோதும் இடமளித்தல் கூடாது. உண்மையான யூபிலி என்பது நமது இதயத்தின் உள்ளே இருக்கின்றது.

இரண்டாவது, மனித மாண்பும் மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு இன்னல்களை அனுபவிக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையின் அடையாளங்களாய் நாம் பிரதிபலிக்க வேண்டும். முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லம், அகதிகள் முகாம், சிறைக்கைதிகள் இருக்கும் இடம் முதலியவற்றைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து உதவிகள் செய்ய முன்வருவோம். மூன்றாவது, மிக முக்கியமாக, நம் சமூகத்தில் சாதியத் தீமைகளுக்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கும், ஏழை எளிய மக்களைப் புறக்கணித்து வாழும் இயல்புக்கும், பணம்-பதவி மோகங்களுக்கும் நாம் அடிமையாகாமலும் பிறரை அடிமையாக்காமலும் இருப்போம். ஆண்டவரை மகிழ்விக்கும் முழு மனித விடுதலைப் பணிகளைச் சிரமேற்கொள்வோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 62:1-5; 1கொரி 12:4-11; யோவா 2:1-12

காத்திட கடவுளுண்டு, கலங்கிட வேண்டாம்!

இரண்டு இளம் உள்ளங்கள் மகிழ்வோடும் துணிவோடும் ஒரு குடும்பத்தை அமைக்க முடிவெடுப்பது என்பது எத்துணை அழகான சாட்சியம்! குருத்துவம், துறவறம் போன்று உண்மையும் உறுதிப்பாடும் கொண்ட ஓர் இறை அழைத்தலே திருமணம். திருமணம் என்பது மனித உறவுகளிலேயே மிக நெருக்கமான, அழகான இலக்கணம்! அந்த இலக்கணத்தில் தம் இறை முத்திரையைப் பதிக்க மூவொரு கடவுளின் இறைமகன் அந்தத் திருமணத்தில் கலந்துகொள்கிறார். கலிலேயாவின் கானாவில் நிகழ்ந்த ஒரு திருமணத்தில் ஏற்பட்ட குறையையும், அந்தக் குறை தீர்க்கப்பட்ட அழகையும் நாம் இன்று சிந்திக்கிறோம்.

யூத மக்களிடையே பொதுவாக, திருமண நிகழ்வு ஏழு நாள்கள் நடைபெறும். இந்த ஏழு நாள்கள் வெறுமனே உண்டு குடிப்பதற்காக அல்ல; மாறாக, உறவுகளைப் பகிர்ந்திட, உதவிகள் புரிந்திட, உறுதுணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்திட ஒன்றாய் கூடினர். இந்த மனநிலையில்தான் இயேசுவின் சீடர்கள், இயேசு, அவருடைய தாய் முன்னரே அழைப்புப் பெற்றுச் செல்கின்றனர். பொதுவாக, திருமணங்களில் உணவு வேளையில்தான் சில பற்றாக்குறைகள் நிகழ்வதுண்டு. அவ்வாறு குறைகள் ஏற்படும்போது அவற்றைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. கானாவில் நடந்த திருமணத்திலும் உணவு வேளையில் இரசம் தீரப்போவதையும், அதனால் திருமண வீட்டார் எதிர்கொள்ளப் போகும் அவமானத்தையும் உணர்ந்த மரியா, இயேசுவிடம் விரைந்து சென்று, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்கிறார் (யோவா 2:3). இந்த ஒற்றை வரி வார்த்தையால் உளம்நிறை மகிழ்ச்சியை அக்குடும்பத்திற்கு அள்ளிக் கொடுக்கிறார் அன்னை மரியா. “நம் நலத்திற்குக் காவலராக இருக்கும் அன்னை மரியா தன் குழந்தைகளின் தேவை குறித்து அக்கறையுள்ளவர்களாகச் செயல்படுவதன்மூலம் அத்தேவை அனைத்தையும் நிறைவு செய்பவராகவும் இருக்கிறார்என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று உண்மை என்பது இங்கே எண்பிக்கப்படுகிறது. மரியா இயேசுவிடம் பரிந்துரைத்ததை ஓர் அழகான இறைவேண்டல் என்கின்றனர் இறையியல் வல்லுநர்கள். செபம் என்றதும், ‘இது வேண்டும், அது வேண்டும்என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். கடவுளிடம் நீண்ட பட்டியல்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச் சொல்வது அழகான, உயர்வான செபம். இந்தச் செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையை அன்னை மரியா வெளிப்படுத்திய ஒற்றை வார்த்தையில் காண முடிகிறது.

அன்னை மரியா திருவிவிலியத்தில் அதிக வார்த்தைகள் ஒன்றும் பேசவில்லை. ஆனால், அவர் பேசிய ஒருசில வார்த்தைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. யோவான் நற்செய்தியாளர் மரியாவைப் பற்றி இரண்டு குறிப்புகளைத் தருகிறார். ஒன்று, கானா  திருமணம் (2:1-12). இரண்டு, சிலுவையடியில் (19:25-27). இயேசு தம் பணி வாழ்வை ஆரம்பிக்கும் வகையில் முதல் அருளடையாளத்தை இயேசு செய்வதற்கு அன்னை மரியாவே தூண்டுதலாக இருந்தார். அதுபோன்று தம் பணி வாழ்வில் இறுதியில் அதாவது கல்வாரி மலைமீது சிலுவையில் இயேசு தொங்கிக்கொண்டிருந்தபோது சிலுவை அருகில் இயேசுவின் தாய் நின்று கொண்டிருந்தார். துன்ப வேளையில் ஆறுதல் தரும் அன்னையாக, அன்னை மரியா இருக்கிறார் என்பதை இவ்விரு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகின்றன.

கானா திருமண நிகழ்வில் இரண்டு சொற்றொடர்களை மட்டுமே அன்னை மரியா உச்சரித்தார். ஒன்று, ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது; மற்றொன்று, ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்.’ அன்னை மரியா கூறிய இரண்டாவது கூற்று, கானா திருமண விழா பற்றிய நிகழ்ச்சியின் மையச் சிந்தனையாக அமைகின்றது. ‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்னும் கூற்றில் ஆண்டவர் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. நமக்கு விருப்பமானதைத் தெரிவு செய்து செயலாற்றிவிட்டு, பிடிக்காததை விட்டுவிடுவது என்பது மரியா நமக்குத் தரும் அழைப்பு அல்ல. வாழ்வில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதைப்போன்ற தருணங்களில் மரியா கூறிய இந்த நான்கு சொற்களும் நம் வாழ்வில் அடித்தளமாக மாறினால், நாமும் வல்ல செயல்களைக் காணமுடியும்.

தம் தாயின் உதவி செய்யும் உணர்வையும், வருந்துவோரின் துன்பத்தைத் தன் துன்பமாக உணரும் பரிவுள்ளத்தையும் கண்ட இயேசுவால் தாயின் விண்ணப்பத்தை மறுக்க முடியுமோ? இதுதான் அன்னை மரியாவின் அழகு! இதுவே அவரது இலக்கணம்! குறைகள் உருவானதும் வந்து நிற்பவர் அன்னை மரியா. அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும்.

இத்திருமண நிகழ்வில் நம் சிறப்புக் கவனத்துக்குரியவர்கள் பணியாளர்கள். “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்என்று இயேசு சொன்னதும்இயேசு என்ற இந்த இளைஞர் என்ன செய்துவிடுவார்?’ என்றும் எண்ணியிருக்கலாம். காரணம் அவர் இதுவரை வெளிப்படையாக எவ்வித வல்ல செயலையும் செய்திருக்கவில்லை. ஆனால், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதும் பணியாளர்கள், ‘தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப்போல்இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அதுவும் தொட்டியில் விளிம்புவரை தண்ணீரை நிரப்பினர். எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை தண்ணீரை நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது எனலாம்.

கடவுள் என்பவர் நிறைவானவர், அவரிடம் குறையொன்றுமில்லை. இதன் காரணமாக, கடவுள் தம்மால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் நிறைவாக, எந்தக் குறையுமின்றி இருக்க விரும்புகிறார். “கடவுளின் பிரசன்னம் நன்மைத்தனங்களால் நிறைந்துள்ளதுஎனும் தூய பேசிலின் வார்த்தைகள் இங்கே நினைவு கூரத்தக்கவை. தந்தையின் வழியில் இயேசுவும் குறைவில்லா வாழ்வு வழங்க வந்தவர். அதையும் நிறைவாக வழங்க வந்தவர் (யோவா 10:10). ‘காத்திட கடவுளுண்டு, கலங்கிட வேண்டாம்என்ற நம்பிக்கை வரிகளை நினைவூட்டுகிறது கானா திருமண நிகழ்வு. தேவையில் நமக்குத் துணையாக வருபவராகவும் தக்க வேளையில் நமக்கு உணவளிப்பவராகவும் இயேசு நம்மோடு இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களை ஒரு மேலான வாழ்விற்கு, ஒரு மகிழ்ச்சியின் கொண்டாட்டத்திற்குக் கடவுள் அவர்களை அழைத்துச் செல்கிறார். கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே உள்ள உறவு புதுப்பிக்கப்படுகிறது. எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும் அந்நியப் படையெடுப்புகளாலும் சீரழிக்கப்பட்டது. அதனால் அவர்களுக்குக் கிடைத்த பெயர்கள்கைவிடப்பட்டவள், ‘புறக்கணிக்கப்பட்டவள்.’ கடவுளின் பார்வையால் இவர்களின் பெயர்கள் மாற்றம் பெறுகின்றன. ‘எப்சிபா - அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், ‘பெயுலா - மண முடித்தவள் என்று இறைவன் வழங்கும் புதிய பெயர்கள் எருசலேம் பெறும் புதிய வாழ்வையும் புதிய உறவையும் குறிக்கின்றன. எனவே, புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் மகிழ்ச்சியின் மக்கள். இம்மகிழ்ச்சி இயேசு நம்மோடு இருப்பதால் என்றும் எங்கும் நிறைவாகக் கிடைக்கும். மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் நம் கடவுள் நம்மில் மகிழ்கிறார் (எசா 62:5).

இறுதியாக, இன்றைய வார்த்தை வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தியை அறிய முற்படுவோம். தன் மகன்மீது கொண்ட நம்பிக்கையினால்அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்று பணியாளர்களைப் பார்த்துக் கூறிய அன்னை மரியா இறைவனை எந்தளவுக்கு நம்ப வேண்டும் என்ற அழைப்பை நமக்குத் தருகிறார். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை அன்னை மரியா எடுத்துக்காட்டுகிறார்.

ஏழைகள், ஒதுக்கப்பட்டோர், இரந்துண்போர், ஆதரவற்றோர் இவர்கள் கடைசிப் பந்தியில் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்த சூழலில், எப்போதாவது ஒருமுறை மட்டும் கிடைக்கும் இரசம் இவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்பது மரியாவின் கவலை. எனவேதான் இயேசுவிடம் முறையிட்டு முன்பு பரிமாறப்பட்டதைவிடச் சிறந்த இரசத்தைப் பெற்றுக் கொடுக்கிறார். வேறு யாரும் கவலைப்படாத வேளையில் மரியாவின் பார்வை மட்டும் இவர்கள்பால் விழுகிறது. எனவே, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாகபயணிக்கும் இச்சிறப்பு யூபிலி ஆண்டில், யாருடைய பார்வையும் படாத ஏழைகள்பால் நம் பார்வை படவேண்டும் என்பதை மரியாவின் செயல் நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, தொட்டியில் விளிம்பு வரை தண்ணீரை நிரப்பிய பணியாளர்களின் செயல், தயக்கத்தோடும் எரிச்சலோடும் ஈடுபாடின்றியும் செயல்படாமல் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மனநிறைவைத் தருவதோடு, வாழ்வில் பல மாற்றங்களையும் புதுமைகளையும் உருவாக்கும் எனும் பாடத்தை நம் மனத்திலே பதிக்கிறது.

நிறைவாக, திருமண விழாவில் பரிமாறப்பட்ட சாதாரண இரசம் தீர்ந்துவிட, இயேசு அருளிய புதிய இரசம் சுவைமிக்கதாய் இருந்தது (2:10). தீர்ந்துவிட்ட பழைய இரசம் யூத முறைமைகளைக் குறித்து நிற்கிறது. அவை அர்த்தமற்றுப் போய்விட்டன. அவை இனி தேவையில்லை. அவற்றிற்குப் பதில் இயேசு புதிய முறைமைகளை, வாழ்க்கை நெறிமுறைகளைத் தருகிறார். இயேசு தரும் புதிய முறைமைகள் யூத முறைமைகளைவிட மிகவும் சிறந்தவை, வாழ வைப்பவை. ஆகவே, பழைய மரபுகளை விட்டுவிட்டு இயேசு தரும் புதிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்நிகழ்வு நமக்கு வழங்கும் மற்றுமொரு மேலான அழைப்பு.

ஆகவே, இயேசு சொல்வதையெல்லாம் நாம் செய்தால், தண்ணீர் இரசமாய் மாறியதைப் போல், நமது வாழ்வும் பல வகைகளில் மாறும். பிறரின் துயர் துடைக்கும் பணியில், அன்னை மரியாவைப்போல பயணிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 12, 2025, ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) எசாயா 40:1-5,9-11; தீத்து 2:11-14; 3:4-7; லூக்கா 3:15-16, 21-22

அவரோடு அவராக... அவரில் அவர் வழியாக..!

மனித வரலாற்றில் ஆழமான எண்ணங்களையும் காயங்களையும் பதித்துச் சென்ற நிகழ்வு இரண்டாம் உலகப் போர். மனித குலத்தையே வேதனையிலும் வெட்கத்திலும் தலைகுனிய வைக்கும் வரலாற்றுப் பிழை இந்தப் போர். இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டநாத்சிவதைமுகாம்கள் (நச்சு வாயுச் சூளை), மனித வரலாற்றில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளன. பலர் நச்சு வாயுச் சூளையில் உயிரிழந்தனர். இன்னும் பலர் அந்த வாயுச் சூளைகளுக்குச் செல்வதற்கு முன்னரே உள்ளத்தால் இறந்து, நடைப்பிணங்களாக வலம் வந்தனர்.

இந்த வதைமுகாமிலிருந்து உயிரோடு வெளியேறியவர்களில் பலர் உடலாலும் உள்ளத்தாலும் நொறுங்கிப் போய், தங்கள் மீதி நாள்களைக் கழித்தனர். மிகச்சிலரே அந்த வதைமுகாம்களிலிருந்து வெளியேறி உள்ளத்தளவில் போதுமான நலத்துடன் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் விக்டர் பிராங்கல் (Viktor E. Frankl) என்ற ஆஸ்திரிய நாட்டு மேதை.

புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும், மனநல மருத்துவராகவும் வாழ்ந்த விக்டர் பிராங்கல், தன் வதைமுகாம் அனுபவங்களையும், அவற்றிலிருந்து தான் வெற்றிகரமாக வெளிவர தனக்கு உதவியாக இருந்த உண்மைகளையும் தொகுத்து, ‘Man\'s Search for Meaningஅதாவது, ‘அர்த்தத்திற்காக மனிதனின் தேடல்என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். இந்தக் கொடிய சூழல்களிலிருந்து, தான் உயிரோடும் ஓரளவு உள்ள நலத்தோடும் வெளியேறியதற்கு இரு காரணங்களை அவர் கூறுகிறார். ஒன்று, தன் மனைவி தன்மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் என்ற உணர்வு; மற்றொன்று, தான் எழுதி முடித்திருந்த ஒரு புதிய நூலின் கைப்பிரதியைத் தன் கண்முன்னேநாத்சிபடையினர் அழித்து விட்டதால், அந்நூலை மீண்டும் எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்று தனக்குள் எழுந்த ஆவல்.

நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொண்டாலும், இரண்டு காரணிகள் நம்மை இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டவை. 1) தன்மீது அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வு. 2) என்னுடைய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு. இந்த இரண்டு நோக்கங்களும்தான் பலரையும் வாழ வைக்கின்றன. அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வுதான் இவ்வுலகையும் இயங்க வைக்கின்றது.

ஆண்டின் பொதுக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் இரண்டு செய்திகள்: 1) நம்மில் ஒருவராக நம்மோடு வந்துள்ள இயேசுவின் அன்பை உணர்வது, 2) அவரில் அவர் வழியாக இணைந்து நற்செயல்கள் புரிவது.

இந்தச் சமூகத்தில் மாற்றங்களை விரும்பிச் செயல்படும் எவரையும் அவ்வளவு எளிதாக இச்சமூகம் அங்கீகரிப்பதில்லை. சமூக மாற்றத்திற்கான நற்செயல்களைச் செய்யும்போது, பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சிலர் தங்கள் நற்பெயரை இழக்க நேரிடலாம். சிலர் பெரிய விலையாகத் தங்கள் உயிரையே கொடுக்க நேரிடலாம். இதுபோன்ற சவால்கள், எதிர்ப்புகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும், சமூக மாற்றத்திற்காக அர்ப்பணத்துடன் ஈடுபடும் உன்னதமான மனிதர்கள் இன்னமும் நம் மத்தியில் வாழத்தான் செய்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இயேசுவின் திருமுழுக்கு அன்றைய பாலஸ்தீன சமூகத்திற்கு இயேசு கொடுத்த சமூகப் பொறுப்புணர்வு மிக்கப் பதிலிறுப்பு எனலாம். பாலஸ்தீன சமூகம் ஏற்றத்தாழ்வுகளும் ஏழ்மைப் பிணிகளும் சமூகப் புறக்கணிப்பும் பாலின வேறுபாடுகளும் நிறைந்த சமூகம். மனிதரைக் கடவுளின் சாயலாகப் பாராமல், சட்டங்களுக்குள் முடக்கிவைத்து, உயர்வு-தாழ்வு பாராட்டிய சமூகம். யாரேனும் மாற்றத்திற்காகக் குரல் கொடுத்தால்சமயத் துரோகிஎனக் குற்றம் சாட்டிய சமூகம். ஏழை - பணக்காரன், ஆள்பவன் - அடிமை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்று பிளவுபட்ட, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தைப் பார்த்துச் சோர்ந்து போன யூத மக்கள், எப்போது இந்த வேறுபாடுகள் மறையும் என்று காத்துக் கிடந்தனர். முப்பது ஆண்டுகள் நாசரேத்தூரில் வாழ்ந்த இயேசு, தம்மைச் சுற்றி நடந்த பல அநீதிகளைக் காண்கிறார். அதற்கு விடைதேடும் ஓர் இளைஞராக, முதலில் மக்களோடு மக்களாகத் தம்மைக் கரைத்துக்கொள்கிறார்; உறுதியுடனும் துணிவுடனும் திருமுழுக்குப் பெற யோவானிடம் வருகிறார்.

முதலில், மக்களோடு மக்களாகக் கலந்து இயேசு திருமுழுக்குப் பெற வருகிறார் (லூக் 3:21). மக்களை மீட்க வந்தவர் மக்களோடு மக்களாக வருவதா? இயேசு தன்னிடம் வருவதைக் கண்டு திகைத்து நிற்கிறார் திருமுழுக்கு யோவான். “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (3:16) என்று மக்களிடம் அடிக்கடிக் கூறி வந்தவர் யோவான். “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்என யோவான் தன் நிலை உணர்ந்து கூறினாலும், தம்மைத் தாழ்த்தி திருமுழுக்குப் பெற முன்வருகிறார் இயேசு. யோவானைவிட பெரியவர் என்ற எண்ணம் எதுவுமின்றி, பாவிகளோடு பாவம் செய்யாத தம்மையும் இணைத்துக்கொள்கிறார். “பாவிகளோடு இருக்க விரும்பி, அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல், மேலிருந்து கொண்டே நம்மை மீட்க இயேசு விரும்பவில்லை; மாறாக, பாவங்களைத் தம்மீது சுமந்துகொண்டு, நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் அவர் என்பதைக் காண்பிக்கின்றது (மூவேளைச் செப உரை, 10.01.2021). இத்தகைய எளிய மக்களோடு மக்களாக இயேசு திருமுழுக்குப் பெறச் செல்வது அவர்கள்பால் அவர் கொண்டிருந்த அன்பையும் அவர்கள் வாழ்வு மாற்றத்தில் அவர் காட்டிய அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கு அவரது சமூகப் பொறுப்புணர்வை நமக்கு உணர்த்துகிறது. திருமுழுக்கு இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இறையாட்சிப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு அவரது திருமுழுக்கு நடந்தேறுகிறது.

பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் (லூக் 3:3) என்றுதான் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளில் பறைசாற்றி வந்தார். மீட்பர் வரும்போது தாங்கள் புனித நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வெளிச்சடங்கின் மூலம் மனம் மாறிப் புதிய வாழ்வு வாழ விரும்பியவர்களுக்கு யோவான் திருமுழுக்கு அளித்து வந்தார். எனவே, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு இயேசுவுக்குத் தேவை இல்லை. பின்பு ஏன் அவர் திருமுழுக்குப் பெறவேண்டும்? பாவிகளாகிய நம்முடன் தம்மை ஒன்றிணைத்துக்கொண்டு கடவுளைத் தேடும் நமது மீட்பின் பாதையில் உடன் இணைகிறார். மேலும், சமூகத்தில் நிலவி வரும் அநீதி அமைப்புகளின் தொடர் செயல்பாடுகளுக்குத் தாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகத் திருமுழுக்குப் பெறுகிறார். ஆக, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உழைப்பதும், நமக்கான சமூகப் பொறுப்புகளை ஏற்பதும் தேவையானது என்பதையே இயேசுவின் திருமுழுக்கு நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் நாம் நமது திருமுழுக்கு நாளையும் சற்று எண்ணிப்பார்க்க அழைக்கப்படுகிறோம். கடவுளின் குழந்தைகளாக, திரு அவையின் உறுப்பினராக நாம் பிறந்த நாள் நம் திருமுழுக்கு நாள். “என் அன்பு மகனே, நீ வானதூதரின் நண்பன், இறைவனின் குழந்தை, இயேசுவின் சகோதரன், தூய ஆவியின் ஆலயம்என்று திருமுழுக்குப் பெற்ற குழந்தையைப் பார்த்துக் கூறுவார் புனித பிரான்சிஸ் சலேசியார். “என் திருமுழுக்கு நாளே என் வாழ்வின் மிக முக்கியமான நாள் எனக் கருதுகிறேன்என்றார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்.

நாம் பெற்றவைகளுள் உயர்ந்த கொடை நம் திரு முழுக்கு. திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளுக்குச் சொந்தமானவர்களாகிறோம் மற்றும் மீட்பின் மகிழ்ச்சியைக் கொண்டுள்ளோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (‘டுவிட்டர்செய்தி, 14.01.2019).

நிறைவாக, திருமுழுக்கை நாம் பெறுவதால் பலவித மாற்றங்களை நமக்குள் பெறுகின்றோம். நாம் பிறப்பு நிலைப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று கடவுளுக்குள் புதுப்பிறப்பு அடைகின்றோம் (2கொரி 5:17). கிறிஸ்துவோடு இணைந்து இருக்கும்படி திரு முழுக்குப் பெற்ற நாம், கிறிஸ்துவை ஆடையாக அணிந்து கொள்கின்றோம் (கலா 3:27). கடவுளின் ஆவியால் தூய்மையாக்கப்பட்டு அவருக்கு ஏற்புடையவராகின்றோம் (1கொரி 6:11). வேற்றுமை களைந்து ஒற்றுமை தழைக்க நாம் அனைவரும் திருமுழுக்குப் பெற்றுள்ளோம் (1கொரி 1:13). கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமைப்பேற்றால் அவரைஅப்பா தந்தையேஎன அழைக்கின்றோம். அவருடைய பங்காளிகளாகவும், அவருடைய துன்பங்களிலும் பங்கு பெறுகின்றோம் (உரோ 8:16-17). இறைவன் உறையும் ஆலயமாகத் திகழ்கின்றோம் (1கொரி 6:19). உலகமெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புப் பெறுகின்றோம் (மாற் 16:15).  எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினராகவும், அரச குருக்களின் திருகூட்டத்தினராகவும், தூய மக்களினத்தினராகவும், அவரது உரிமைச் சொத்தான மக்களாகவும் திகழ்கின்றோம் (1பேது 2:9).

எனவே, கடவுளின் பிள்ளைகளாகிய நாம் எல்லாரும் அவர் அன்பில் வாழ்வோம். இறைத்திட்டத்தை மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டிய இயேசுவைப் போன்று சமூக மாற்றத்திற்காக உழைக்க முன் வருவோம்.