news
ஞாயிறு மறையுரை
மார்ச் 30, 2025, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (3-ஆம் ஆண்டு) யோசு 5:9,10-12: 2கொரி 5:17-21; லூக் 15:1-3, 11-32 (மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாத இறைவன்!)

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறை நாம்மகிழும் ஞாயிறு (Laetare Sunday) என்று கொண்டாடுகிறோம். உயிர்ப்பை நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில் மகிழ்வை வளர்க்க, இந்த ஞாயிறு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மகிழ்ச்சி அடைவதற்கான பல நூறு காரணங்களைக் கூற முடியும். அவற்றில், மிக முக்கியமான காரணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மன்னிப்பு வழங்கிய தருணங்கள்.

2014-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களைமன்னிப்பின் விழாவாக (Festival of Forgiveness) கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார். இந்த மன்னிப்பு விழாவின்போது, உலகெங்கும் பல கோவில்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருப்பதும், அங்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். மன்னிப்பின் விழாவை அறிமுகம் செய்து வைத்தபோது திருத்தந்தைஆண்டவருக்கென 24 மணி நேரத்தை ஒதுக்கி, நாம் மனமாற்றத்திற்கான சிறப்பு நேரமாக அதைச் செலவிடுவோம். காணாமற்போன மகன் திரும்பி வந்தபோது, அதை ஒரு விழாவாகக் கொண்டாடிய தந்தையைப்போல, நாம் இதைக் கொண்டாடுவோம்என்று கூறினார்.

எதிர்நோக்கின் சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் இவ் வேளையில், ‘மன்னிப்பதில் சோர்வடையாத இறைவன்என்ற மையப் பொருளில் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் இதுவரை பெற்றிராத இரண்டு மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். முதலில், அவர்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் புறப்படும்போது, எகிப்தியர் அவர்களைப் பார்த்து, “அறியாத கடவுளை நோக்கி நாடோடிகளாக அலைந்து திரிகிறீர்களே, நீங்கள் நம்பும் கடவுள் பொய்யர்; அவரது வாக்குறுதியும் பொய்என அவர்கள்மீது பழிசுமத்தினர். ஆனால், கடவுளோ எகிப்தியரின் பழிச்சொற்களைப் பொய்யாக்கி, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடக்கச்செய்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழையச் செய்தார் (யோசு 5:9).

இரண்டாவது, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எகிப்தியர்முன் பல தலைமுறைகளாக அடிமைகளாகக் கைகட்டி வாழ்ந்தவர்கள். அவர்களில் எவருமே சுதந்திரமாகத் தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் இல்லாதவர்கள். இப்போது தாங்கள் உரிமையாகக் கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலத்தின் விளைச்சலைத் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக உண்ண ஆரம்பிக்கின்றனர். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத மகிழ்ச்சியான ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெறுகின்றனர். இவர்களின் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம், எல்லை தாண்டி மன்னிப்பதில் சோர்வடையாத இறைவனைத் தவிர வேறு எவர் இருக்க முடியும்!

மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவர் மனம் திருந்தி வாழ்வார்; மன்னிப்புக் கொடுக்கத் தெரிந்தவர் மனம் மகிழ்ந்து வாழ்வார். மன்னிப்புக் கேட்பதற்கும் மன்னிப்புக் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நமக்கு மிகவும் எளிதாகிவிடும் அல்லவா! இந்தச் சிந்தனைகளை விவரிக்கிறதுஇரக்கத்தின் நற்செய்திஎன அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளகாணாமல்போன மகன்உவமை.

வரிதண்டுவோர், பாவிகள் யாவரோடும் இயேசு உரையாடி, உண்டு மகிழ்ந்ததை விரும்பாத பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவுக்கு எதிராகமுணுமுணுத்தனர் (லூக் 15:1,2). இவர்களின் முணுமுணுப்புக்கான காரணம் என்ன? வரிதண்டுவோர், பாவிகள் மட்டில் இயேசுவின் நிலைப்பாடு என்ன? என்று ஆராய்ந்தாலே இன்று இயேசு நமக்குக் கூறவிரும்பும் கருத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

பழைய ஏற்பாட்டுப் பார்வையில் யூதர்கள் பாவிகளோடும் பிற இனத்தாரோடும் பழகுவது இல்லை. அவர்களை யூதர்கள்பாவிகள்என்றே கருதினர். பாவிகளை மீட்க வந்த இயேசுவோ அவர்களோடு உண்டு, உரையாடி, வரவேற்று மகிழ்ந்தார்; அவர்களுக்கு வாழ்வளிக்க விரும்பினார்; அவர்களின் பாவநிலையை ஏற்றார் (2கொரி 5:21). இந்தப் பின்னணியில் புறக்கணிக்கப்பட்டு, பாவிகளாகக் கருதப்பட்டவர்கள் தங்களை இளைய மகனுடன் இனம் காணலாம். இயேசுவிடம் திரும்பி வரும் அவர்களின் உணர்வு, மனம்மாறித் திரும்பி வந்த இளைய மகனின் உணர்வைப்போல அமைகிறது. அவர்களின் இந்தச் செயல் மூலமாக இறைவன் பாவிகளை வெறுத்து ஒதுக்குபவர் அல்லர் என்பதை இயேசு நிறுவுகிறார்.

மேலும், மூத்த மகன் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் முன்மாதிரியாகத் தோன்றினாலும், ஆழ்ந்த தவறான புரிதல் கொண்டவராக இருக்கிறார். மனம் மாறித் திரும்பி வந்த தம்பியை மகிழ்ந்து கொண்டாட மனமில்லாமல், தந்தைக்கு எதிராக முணுமுணுக்கிறார். இந்த எதிர்ப்பில் அவரது உண்மை நிலை தெளிவாகவும் ஓர் அன்பற்ற கீழ்ப்படிதல் துல்லியமாகவும் வெளிப்படுகிறது. “உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை (15:29) எனத் தந்தையிடம் முறையிடும் இந்த மகனின் செயல் பரிசேயர், மறைநூல் அறிஞரின் உணர்வைப் போல அமைகிறது. இவ்வுவமையில் மனம்மாறி வருபவர்களை மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவும் இந்த மனமாற்றம் கொண்டாடப்பட வேண்டும் என்பதும் இயேசு வலியுறுத்தும் செய்தி.

இந்த உவமையில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டியவர் தன் மகன்மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் இரக்கமிகுந்த தந்தைதான். அவர் தான் இன்றைய நற்செய்தியின் மையம். அவர்தான் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர். தன்னிலை இழந்து, தன் தந்தையை விட்டு விலகிச் சென்ற இளைய மகன் தன் தந்தையின் மன்னிப்பையும் அன்பையும் தேடித் திரும்பி வருகிறான். வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக் கொள்ளாமல்தன் சொத்தைப் பகிர்ந்தளித்த (லூக் 15:12) தந்தையின் நற்குணத்தை அறிகிறான். தான் எண்ணியதற்கு மாறாக அவர்எத்துணை இனியவர் (திபா 34:8) என்பதை உணர்கிறான். தான் தொலைவில் இருக்கும்போதே தன்னை நோக்கி நகரும் தன் தந்தையின் இதயத்தைப் பார்க்கிறான். தந்தையும் அவன்மீது பரிவுகொண்டு, ஓடித் தழுவி, அவனை முத்தமிட்டு, எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொள்கிறார். அது மட்டுமல்லாமல்அவனுக்குப் பெரிய விருந்தொன்று அளிக்கிறார். எனவே, இவ்வுவமையை  ஊதாரி மகனின் உவமை என்பதைவிடஊதாரி தந்தையின் உவமைஎன்பது எவ்வளவு பொருத்தமாய் அமைகிறது அன்றோ!

இந்த உவமையிலிருந்து கடவுள்நல்ல தந்தைஎன்பதை உணர்கிறோம். அவர் நம் செயல்களுக்குப் பலனோ தண்டனையோ அளிக்கும் ஓர் அதிகாரியென்று காணாது, நம்மை அன்பு செய்யும் தந்தையாக அவரைக் காணவேண்டும். நம் பாவங்களைக் கண்டு வியப்போ திகிலோ கொள்பவரல்லர் கடவுள். நம் பலவீனத்தை அவர் அறிவார். அவர் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரிந்ததில்லை. நம் அனைத்து அனுபவங்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார். எவ்வளவு தூரம் நாம் சென்றிருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும், நமது வாழ்வையும் நேரத்தையும் வீணடித்திருந்தாலும், இறைவனிடம் திரும்பிவர முடிவு செய்தோமானால் அன்பில் சோர்வடையாத நம் தந்தை நமக்காகத் தமது கரங்களை விரித்துக் காத்திருக்கின்றார்.

இறைத்தந்தையின் மன்னிப்பு அவரது அன்பை மிகத்தெளிவாகக் காணக்கூடிய அடையாளம். இறைமன்னிப்பு ஒரு வரையறைக்கு உட்பட்டதல்ல; இறைவனின் இரக்கத்தில் மன்னிப்புப் பெறாத எந்தப் பாவமும் இல்லை. “கடவுள் நம் மிகக் கொடிய பாவங்களையும்கூட மன்னித்து, நம்மை வரவேற்று, நம்மோடு விருந்து கொண்டாடுபவர்; ஆனால், நாம்தான் அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சோர்வடைகிறோம்என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செபவுரை, 27.03.2022). மன்னிப்பு எப்போதுமே நம் வானகத் தந்தையின் இலவசச் செயலாக உள்ளது. ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் பெறும் இறைவனின் மன்னிப்பு, அவரிடம் நாம் திரும்பி வரவும், அவர் நமக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

நிறைவாக, நம் இதயங்கள் மூடப்பட்டு, மன்னிக்க இயலாமல் இருப்பதுதான் பல உறவுச் சிக்கல்களுக்குக் காரணமாக அமைகிறது. நம் வாழ்வில் மனக்கசப்பு, பழிவாங்குதல், கோபம் ஆகியவை நம் வாழ்வைத் துன்பமாக மாற்றுகின்றன. இன்றைய இரண்டாம் வாசகத்தின் அழைப்பிற்கேற்ப, பாவமறியாத கிறிஸ்து, பாவிகளாகிய நம் அனைவரோடும் தம்மை இணைத்துக் கொண்டு, நமக்காகப் பாவப்பரிகாரப் பலியானதுபோல, நாம் அனைவரும் இயேசுவின் அன்பால் இயக்கப்பட்டு, பிறரோடு ஒப்புரவாகி, அவரைப்போல தியாக வாழ்க்கை வாழமுயல்வோம்.

இறைவன் மட்டுமே நம் பாவங்களை மன்னிக்கிறார். அவரிடமிருந்து மன்னிப்பு உறுதியானது. நம் இறைத்தந்தையைப் போன்று நாமும் இரக்கம்நிறை மனத்துடன் பிறரை நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றுக்கொள்வோம். பிறரை மன்னிப்பது நமக்குக் கடினமாக இருக்குமேயானால், தூய பிலிப்பு நேரி கூறுவதுபோல, “சிலுவையில் தொங்கும் இயேசுவை உற்றுநோக்குவோம்.” நம் தவறுகளுக்காக மனம் வருந்தி, கடவுளின் இரக்கத்தைப் பெறுவதன் வழியாக அக்களிப்போம். நம் அயலவரை மனத்தில் சுமையின்றி நோக்கும் சக்திபெறுவோம்.

மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடையாத இறைத் தந்தையைப்போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப்போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம். அதற்கான அருளை ஆண்டவர் இயேசு நமக்கு அருளவேண்டும் என்று இந்நாளில் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 23, 2025, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 3:1-8,13-15; 1கொரி 10:1-6,10-12; லூக் 13:1-9 - அருள் வாழ்வின் அடித்தளம் மனமாற்றம்!

இன்று தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு! இன்றைய வாசகங்கள் அனைத்தும் மனமாற்றத்தை மையமாகக் கொண்டமைகின்றன. மனமாற்றம் என்றதுமே, அது பாவத்திலிருந்து மனம் மாறுதல் என்றும், ‘மனம் மாறுங்கள்என்னும் அழைப்பு பாவிகளுக்கு மட்டும்தான் என்றும் நினைக்கின்றோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் செய்த பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றிலிருந்து மனமாறுதல் என்று கருதுகின்றோம். இது உண்மை என்றாலும், கிறித்தவ மனமாற்றம் என்பது ஆண்டவரது அளவு கடந்த அன்பால் கவரப்பட்டு, மனத்தின் உள்ஆழத்திலே பாவத்தை வெறுத்து ஒதுக்கி, ஆண்டவர் காட்டும் அன்புப் பாதையில் நடப்பதாகும். இது ஒரு நாள், இரண்டு நாளில் முடிந்துவிடும் ஒன்றன்று; மாறாக, அன்றாடம் வாழ வேண்டிய வாழ்வு நெறியாகும்.

இயேசு கலிலேயாவில் தமது பணியைத் தொடங்கும்போது, “மனம் மாறுங்கள்என்றே முழங்கினார். அவர் விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் போதித்த இறுதிப் போதனையும்மனம் மாறுங்கள் (லூக் 24:47) என்பதாகும். திரு அவையின் முதல் திருத்தந்தை புனித பேதுரு பெந்தக்கோஸ்து நாளில் மக்களுக்கு வழங்கிய முதல் அருளுரையும்மனம் மாறுங்கள் (திப 2:38) என்பதுதான்.

முதல் மனிதனாகிய ஆதாமிடம் கடவுள், “நீ எங்கே இருக்கின்றாய்?” (தொநூ 3:9) என்ற கேள்வி தொடங்கி, இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் இயேசு எல்லாரையும் நோக்கி, “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும் (திவெ 22:17) என்ற அழைப்பு முடிய மனிதன் மனம் மாறி புதுவாழ்வு பெறவேண்டும் என்பதுதான் திருவிவிலியத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை இழைந்தோடும் ஆழமான கருப்பொருள். மனம் மாறுதல் என்பது சுயநலத்திலிருந்தும் கடவுளின் கட்டளைக்கு எதிரான கிளர்ச்சியிலிருந்தும் பாதையை மாற்றுதல் ஆகும். மனமாற்றம் என்பது, கடவுளை நோக்கித் திரும்பி வருவதும் அவரிடம் முழுமையாக நம்பிக்கைகொள்வதும் அவரது மன்னிப்பு, கருணை, வழிகாட்டுதல், திட்டம் யாவற்றையும் நாடிச் செல்வதுமாகும். இது ஒரு மனிதனில் நிகழ்கின்ற முழுமையான, தலைகீழ் மாற்றம் எனலாம். விடுதலை இறையியலில் தந்தை எனப் போற்றப்பெறும் குஸ்தாவோ குத்தியரஸ், “மனமாற்றம் என்பது தீவிரமான உருமாற்றம்என்று குறிப்பிடுவார்.

இன்றைய முதல் வாசகத்தில், பாவத்தின் விளைவாக எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து துன்புற்ற இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாறுவதற்காக ஒரு வாய்ப்பை வழங்குகிறார் கடவுள். பாவத்தின் காரணமாக மக்கள்அழிந்து போகட்டும்என அவர் விரும்பவில்லை; மாறாக, “வணங்காக் கழுத்துள்ள (தொநூ 33:3) அவர்களை மீட்டு, பாலும் தேனும் பொழியும் வளமான நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இஸ்ரயேல் மக்கள்மீது ஆசையோடு வைத்துள்ள கடவுளின் கனிந்துருகும் செயலை என்னவென்று சொல்வது! முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் பிள்ளையை அரவணைக்கும் ஒரு தாயைப்போல, தந்தையைப்போல கடவுள் இங்குச் செயல்படுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கொண்டுள்ள இரக்கச் செயல், அவர்கள் மனம் மாறுவதற்கான ஒரு நல் வாய்ப்பாக அமைகிறது.

இரக்கமும் அருளும் கொண்ட கடவுள் (திபா 103:8) ஒரு தனிமனிதனின், ஒரு சமூகத்தின் விடுதலைக்காக மோசேயைப் பொறுப்பேற்கச் சொல்கிறார். மிதியான் நாட்டில் தன் மாமனார் இத்திரோவின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே முதலில் தயக்கம் காட்டினாலும், கடவுள் அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்து, அவரது தயக்கத்தை நீக்கி, அவர் வழியாகக் கொணர்ந்த விடுதலை, வரலாறானது. இந்த வரலாற்று அனுபவத்தையே தாவீது இன்றைய திருப்பாடலில் பாடலாகப் பாடுகிறார். ‘குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்ற, நோய்களையெல்லாம் குணமாக்குகின்ற கடவுளுடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதேஎன்கிறார் (திபா 103:2,3). பழைய ஏற்பாட்டில் எங்கும் காணமுடியாத அளவுக்கு ஆண்டவரின் அன்பு, கனிவு, பரிவு, இரக்கம் முதலியன இப்பாடலில் வழிந்தோடுவதைக் காணலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலும் மனம் மாறுவதற்கான ஓர் அழைப்பைக் கொரிந்திய மக்களுக்குக் கொடுக்கிறார். பவுல் காலத் தில் கொரிந்திய நகரம் மிகப்பெரிய ஒரு வணிக நகரமாகவும் உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் விளங்கியது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன. கொரிந்தியக் கிறித்தவர்களில் பெரும்பாலோர் பிற இனத்தைச் சார்ந்த புதிய கிறித்தவர்களாக இருந்தனர். இம்மக்களிடத்தில் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களைநம் முன்னோர் (1கொரி 10:1) என்று பவுல் அழைக்கிறார். இதனால் இம்மக்கள் அனைவரும் ஒரே கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனவும் இஸ்ரயேல் மக்களின் உண்மை வழித்தோன்றல்கள் என்பதையும் பவுல் தெளிவாக்குகிறார். இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த நிகழ்வையும் பாலைநிலத்தில் மன்னாவை உண்டு, பாறை நீரைப் பருகிய நிகழ்வையும் விளக்குவதன் மூலம் பழைய இஸ்ரயேல் மக்களுக்கும் புதிய இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவும் தொடர்பை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

ஆயிரம் நன்மைகளை அடுத்தடுத்து வழங்கியிருந்தாலும், அந்தப் பராமரிப்பின் கடவுள் ஆற்றிய அருஞ்செயல்களை இஸ்ரயேல் மக்கள் மறந்து போயினர். அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கவும், சிலைவழிபாட்டில் ஈடுபடவும் செய்தனர். இதனால், அவர்கள் கடவுளின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானார்கள். இந்தத் தீமையிலிருந்து விடுதலை பெற முடியாமலும் விரும்பாமலும் தவித்தவர்கள் அவர்தம் வாரிசுகளான புதிய இஸ்ரயேல் மக்கள். இந்தக் கொரிந்து நகர மக்களும் பவுலின் அறிவுரைகளுக்கு எதிராக முணுமுணுக்கவே செய்தனர். எனவே, நம்பிக்கைகொண்ட கொரிந்து நகர மக்கள்சிலைவழிபாடுஎன்னும் தங்களின் பாவத்திலிருந்து மனமாற்றம் பெற்று, இயேசுவை நோக்கித் திரும்பி வர வேண்டும் என பவுல் அழைப்பு விடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தியிலும் இயேசு மனமாற்றம் குறித்தே போதிக்கின்றார். இரண்டு வரலாற்று நிகழ்வுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. ஒன்று, கலிலேயரைப் பிலாத்து கொன்ற நிகழ்வு; மற்றொன்று, சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் இறந்த நிகழ்வு. வரலாற்றில் இது போன்ற விபத்துகளும் இறப்புகளும் நிகழும்போது அவை பாவத்திற்கான தண்டனை என்றே எண்ணப்பட்டன (யோபு 4:17; எசே 18:26; யோவா 9:2-3). இதற்குக் காரணம், பழைய ஏற்பாட்டில் மறுவாழ்வு பற்றி மக்களுக்குத் தெரியாததால் அவர்கள் இக்காலத் தண்டனை பற்றிய விளக்கத்தையே நம்பி ஏற்றுக்கொண்டனர். இதுவே, இவர்களுக்கு இறைவனது நீதியாகவும் தோன்றியது. ஆனால், இயேசுவோ கடவுள் தண்டனை அளிப்பது பற்றி மக்கள் கொண்டிருந்த எண்ணத்தையே மாற்றுகிறார்.

கோவிலில் பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றதால், அவர்கள் இரத்தம் சிந்தப்பட்ட புனித இடம் மாசுபட்டு விட்டது என்று இயேசுவிடம் வந்து சிலர் கூறுகின்றனர். இச்செய்தியைக் கேட்ட இயேசு, சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வையும் இணைத்து, அழிவினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, ‘அவசரத் தீர்ப்புகள் வழங்க வேண்டாம்என்று எச்சரிக்கிறார். பல நேரங்களில் மற்றவர்களைவிட நாம் மேலானவர்கள் என்ற எண்ணத்திற்கு அடிமைகளாகிறோம். எனவே, பிறர்மேல் தண்டனை விழும்போது, துன்பங்கள் வரும்போது, அது நீதிதான் என்று நினைக்கிறோம். அத்துன்பங்களே நம்மை அண்டும்போது, “கடவுளே ஏன் என்னைத் தண்டிக்கிறீர்? நான் என்ன பாவம் செய்தேன்?” என்று கேட்கின்றோம். இவ்வேளையில், இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுவது: நம் எதிரிகள் செய்யும் தீமைகள், நாம் செய்யும் தீமைகளை விடப் பெரியனவோ அல்லது மோசமானவையோ அல்ல என்பதுதான். மேலும், அனைவரும் மனம் திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதை இங்கே இயேசு குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய நற்செய்தியின் இறுதியில் காணப்படும் அத்திமர உவமை வாயிலாக இறைவனின் காத்திருப்பும் அவரது பொறுமையும் நாம் மனம் மாற வேண்டும் என்பதற்கான கால அளவாகும்.

நிறைவாக, திருத்தந்தையின் இந்த ஆண்டு தவக்காலச் செய்தியில் முதலாவதாக, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பதுபயணம் மேற்கொள்வது; அதாவது, இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கிப் பயணம் செய்ததுபோல் நம் வாழ்வும் இறைவனை நோக்கிச் செல்லும் பயணமாக இருக்கவேண்டும். இரண்டாவது, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பதுஒன்றிணைந்து பயணித்தல்ஆகும். இது நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மாண்பின் அடித்தளத்தில் ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும் எவரையும் தள்ளாமலும் மிதித்து விடாமலும் கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் ஒதுக்கி விடாமலும் இருப்பதாகும். மூன்றாவது, மனமாற்றத்திற்கான அழைப்பு என்பதுஎதிர்நோக்குடன் பயணித்தல்ஆகும். அதாவது, கடவுளையும் மீட்பு மற்றும் நிலைவாழ்வு குறித்த அவரது வாக்குறுதியிலும் நம்பிக்கை கொண்டு பயணம் மேற்கொள்வதாகும் (தவக்காலச் செய்தி, 06.02.2025).

எனவே, இந்தத் தவக்காலத்தில் நாம் மனம் மாறுவதற்காக மீண்டும் அவர் பொறுமையோடு காத்திருக்கிறார். மனம் மாற்றம் பெறுவோம், புது வாழ்வு அடைவோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 16, 2025, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 15:5-12,17-18,21; பிலி 3:17-4:1; லூக் 9:28-36 - உடைபட... உயிர் கொடுக்க... உருமாற!

இன்று தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு! இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வையும் சிந்திக்கும் வாய்ப்பைத் திரு அவை நமக்கு வழங்குகின்றது. இயேசு தோற்ற மாற்ற நிகழ்வை ஏன் தவக்காலத்தில் சிந்திக்க வேண்டும்? இயேசுவின் தோற்ற மாற்றம் அவரின் கல்வாரிப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டம்; துன்பங்கள் வழியாகப் பெறப்போகும் மாட்சிமைக்கான முன்னடையாளம். கிறித்தவர்களாகிய நாம் சிலுவைகளைச் சுமக்காமல் உயிர்ப்பைக் கொண்டாட முடியாது என்பதை நம் மனத்திலே ஆழப்பதிக்கின்ற ஒரு நிகழ்வு. உடைபட மனமில்லாதவர் உருவாகவும் முடியாது, பிறரை உருவாக்கவும் முடியாது என்ற உண்மையை உணர்த்தும் ஓர் இறை வெளிப்பாடு இது.

இயேசுவின் தோற்ற மாற்றம் பற்றிய நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் மூன்றிலுமே காணப்படுகிறது (மத் 17:1-9; மாற் 9:2-10; லூக் 9:28-36). “நாங்கள் சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை; நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள் (2பேது 1:16) என்று பேதுரு எழுதுவது இயேசுவின் தோற்ற மாற்றம் என்பதுபுனையப்பட்ட கதை அல்ல; மாறாக, உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றுஎன்பதை உறுதிப்படுத்துகிறது.

இன்றைய லூக்கா நற்செய்தியின் அறிமுக வரிகள், “இயேசு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார் (9:28) என்கிறது. இங்கே மலையும் செபமும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மலை உச்சி இறைவனோடு இணைகின்ற, இறைவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துகின்ற இடமாக மீட்பின் வரலாற்றிலும், திரு அவையின் படிப்பினையிலும் நாம் காண்கின்றோம். செபம் இறைவனை நோக்கி நம் கண்களைத் திருப்புவதற்கான ஒரு வாய்க்காலாக அமைகிறது. ஆழ்நிலை இறை வேண்டலில் இயேசுவின் முகத் தோற்றம் மட்டுமல்ல, அவர் உடுத்தியிருக்கும் ஆடை கூட  மின்னல் போல ஒளி வீசியது.

காசைப் போட்டால் நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போன்றதல்ல செபம். இறை வேண்டல் என்பது தேவைகளை அடுக்கிக் கொண்டே செல்வதுமல்ல; இறைவனின் பேரன்பை எண்ணி நன்றி சொல்வதே செபம். இறைவனின் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் அளிக்கும் அனுமதியே செபம். இயேசு நீண்ட செபத்தில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக் 6:12). தம் சீடர்கள் பல வகைகளிலே துன்பப்படுவார்கள், சோதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தே செபித்தார் (2:31). தமது செபத்தின் வழியாக, தமது தோற்ற மாற்றத்தின் வழியாக இயேசு சீடர்களுக்கு உறுதியும் வலிமையும் அளித்தார் (யோவா 17:9). இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வு சீடர்கள் இயேசுவின் துன்பங்களையும், சிலுவைச் சாவையும் புரிந்து கொள்ள உதவியது எனலாம்.

இயேசு ஏன் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரை மட்டும் மலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? இயேசு முதன்முறை தம் பாடுகளை அறிவித்த போது, அதை முதலில் எதிர்த்தவர் பேதுரு. இயேசு அவரைக் கடிந்துகொண்ட பாணி, பேதுருவை மட்டுமல்ல, மற்ற சீடர்களையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஏனெனில், சீடர்களின் எதிர்பார்ப்புகள் இயேசுவின் இப்புதிய வெளிப்பாடுகளால் தவிடுபொடியாகி விட்டன. பேதுரு அனைவரின் சார்பாக நின்றுகொண்டு, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” (மத் 19:27) என்று தங்கள் இயலாமைகளை வெளிப்படுத்துகின்றார். செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் தங்கள் தாயின் மூலமாக, “அரியணையின் வலப்புறமும் இடப்புறமும் அமர (மத் 20:21) பரிந்துரை செய்கின்றனர். இந்தச் சூழலில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருக்கும் உடனடியாக ஓர்ஆன்மிக அருள்தேவைப்பட்டது.

ஆகவே, சீடர்களின் பலவீனத்தை நன்கு அறிந்தவரான இயேசு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு தம் பாடுகளுக்கும் இறப்பிற்குப்பின் வரவிருந்த தமது வெற்றியைத் தம் தோற்ற மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் பாடுகளைப்பற்றிக் கேட்டு நொந்துபோயிருந்த பேதுரு, இப்போது அவரது வெற்றிகரமான தோற்றத்தில் பெருமகிழ்ச்சி கொள்கிறார். இதே தோற்றத்தில் இயேசு நீடித்திருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார். ஆனால், இயேசுவோ சீடர்கள் நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும், வாழ்வின் உண்மைத்தன்மையை உணர வேண்டும், தமது சிலுவையைச் சுமக்கும் திருத்தூதர்களாக மாற்றம் பெறவேண்டும் எனக் கூறி மலையை விட்டு இறங்கிப் பணிசெய்ய அழைத்து வருகிறார்.

தோற்ற மாற்ற நிகழ்வில் நம் கூடுதல் கவனத்தை ஈர்ப்பவர்கள் மோசேயும் எலியாவும். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மோசேயும் எலியாவும் மிக முக்கியமானவர்கள். மோசே மிகப்பெரிய திருச்சட்ட அறிஞர்; இறைவாக்கினர் எலியா இறைவாக்கினர்களுள் தலைமையானவர். கடவுளைத் தேடக்கூடியவர்கள் வாழ்வில் வரக்கூடிய பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துபவர்கள் இவர்கள். மோசே இறைவன் கொடுத்த கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு அதன்படியே மக்களை வழிநடத்த புறப்பட்டபொழுது, அவர் மக்களால் எதிர்க்கப்பட்டு, பல்வேறு முணுமுணுப்பிற்கு ஆளான சூழலிலும், கடவுளின் பார்வையில் மோசே ஏற்றுக்கொள்ளப்பட்டார். எலியாவும் அன்றைய காலத்தில் போலி பொய்வாக்கினர்களால் எதிர்க்கப்பட்டாலும், கடவுளால் அவர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே, பாடுகளிலும் போராட்டங்களிலும் எதிர்ப்புகளிலும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் இயேசுவுடன் கடவுள் உடனிருக்கிறார் என்பதுதான் மோசேயும் எலியாவும் இயேசுவோடு உரையாடிய செய்தி (லூக் 9:31).

கடவுளின் திட்டத்தை நிறைவேற்றும்போது துன்பத்தைத் தவிர்க்க முடியாது. ‘சிலுவையின்றி மீட்பு இல்லை, ‘துன்பமின்றி வெற்றியில்லை.’ சிலுவைக்கு அப்பால் மாட்சி! இறப்பிற்கு அப்பால் உயிர்ப்பு! இதுதான் இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் மையச் செய்தி.

இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வில் துன்பம் மற்றும் சாவு பற்றி இயேசு கொண்டிருந்த கருத்தைப் புரிந்துகொள்வது நமது சிந்தனையை இன்னும் கூர்மைப்படுத்தும். இயேசு ஏழை எளியவர்களோடும் ஒடுக்கப்பட்டவர்களோடும் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டார். அவர்கள்மேல் பரிவு கொண்டார். இக்காரணத்திற்காகத்தான் அவர் துன்புறுத்தப்படலானார். துன்பத்தை ஒழிப்பதற்கான ஒரே வழி துன்புறத் தயாராக இருப்பது என்பதையே இயேசு வாழ்ந்து காட்டினார். துன்பத்தைப் போக்குவதற்குத் துன்புறுவதே ஒரே வழி என இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கலானார். துன்புறும் மனிதரைக் கண்டு இரக்கப்படுவது மட்டுமல்ல, அவரோடு நாமும் துன்புற வேண்டும். ஆகவேதான், “தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (9:23)  என்றார். லூக்கா மட்டுமேநாள்தோறும் சிலுவையைத் தூக்கட்டும்எனச் சீடத்துவத்தின் கடினத்தன்மையை விளக்குகிறார்.

சீடத்துவத்தின் உச்சம் இறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான். ‘என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார் (9:24) என்றே இயேசு சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார். இறையாட்சிக்குச் சான்று பகர வேண்டுமென்றால் தாம் இறக்கவேண்டும் என இயேசு எண்ணினார். தாம் சொன்னபடியே இயேசு அனைத்து மனிதருக்காகவும் தம் உயிரைக் கையளிக்க முன்வந்தார். தம் சொல்லும் செயலும் தம்மை இடர்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை உறுதியாக உணர்ந்தபோதிலும், மக்களின் நலனுக்காகப் பல நற்செயல்களைப் புரிந்தார். இயேசு மனித குலத்தின் நலனுக்காக இறப்பதற்கு முன்வருவதன் வெள்ளோட்டம்தான் இயேசுவின் தோற்ற மாற்றம். இயேசு தம்முடைய இறையாட்சி இலட்சியத்தை அடைய அவர் கையிலெடுத்த ஒரே ஆயுதம் தந்தையின்மீது கொண்ட நம்பிக்கை.

வார்த்தைகளைவிட செயல்களே வலிமை வாய்ந்தவை என்பார்கள். ஆனால், செயல்களைவிடவும் வலிமை வாய்ந்தவை இறப்பு! இறையாட்சி வர வேண்டும் என்பதற்காக இயேசு இறந்தார்! எனவே, துன்புற, இறக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் அழைப்பு! இயேசுவின் அழைப்பை ஏற்ற திருத்தூதர்கள் இயேசுவுடன் எருசலேம் வரை சென்று இறக்கவும் துணிந்தார்கள்; பலர் மறைச்சாட்சியரானார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் உண்மைக் கிறித்தவர்களுக்கும் போலிக் கிறித்தவர்களுக்குமான முரண்பாட்டை விளக்குகிறார். சிலுவையின் பகைவர்களாக இல்லாமல், சிலுவையை அரவணைப்பவர்களாக இருக்கவேண்டும். சிலுவையைத் தூக்கிச் செல்பவர்களே விண்ணகக் குடியுரிமையைப் பெறத் தகுதி உடையவர்கள் என்கிறார். தொடக்க வரியானநீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள் (பிலி 3:17) என்ற அழைப்பு அவரின் கடிதத்தில் பலமுறை இடம் பெற்றுள்ளன (1கொரி 4:16; 11:1; 1தெச 1:6; 2:10; 2தெச 3:7,9). இங்கே அவர் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை; மாறாக, “இயேசுவினுடைய முன்மாதிரிகையைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்என்கிறார். ‘கிறிஸ்துவின் மனத்தை (1கொரி 2:16) உள் வாங்கியவர் பவுல். பிலிப்பியருக்கு பவுல் எழுதிய கடிதத் தின் மையச்செய்தியே இவ்வாசகத்தின் இறுதி வரியாக அமைகிறது - “ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் (4:1). 

எனவே, இயேசு சுமக்கும் சிலுவையில் கொஞ்சம் நாமும் தோள் கொடுப்போம். அவரது அன்பில், உறவில் நிலைத்திருப்போம். பிறருக்கென நம்மையே அர்ப்பணிக்க, உடைபட, உயிர்கொடுக்க முன்வருவோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 09, 2025, தவக்காலத்தின் முதல் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) இச 26:4-10; உரோ 10:8-13; லூக்கா 4:1-13 (சோதனை நேரங்களில் எங்களோடு இருந்தருளும், ஆண்டவரே!)

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. பொதுவாக, தவக்காலம் என்றதுமே சாம்பல், சாக்குத்துணி, நோன்பு, தவம், தர்மம் போன்ற அடையாளங்கள் நம் மனத்தை நிரப்பும். சோகம், துயரம், மனவருத்தம், ஒருவகைக் குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் என்பது இறைவனின் இரக்கத்தையும் அருளையும் அன்பையும் மன்னிப்பையும் கொண்டு வரும் வசந்த காலம் என்ற பொருளில் சிந்திப்பது நல்லது.

தவக்காலம், நம்மையே நாம் புடமிட்டுப் பார்க்க வேண்டிய சுயஆய்வுக்கான காலம்; இறைவனின் நிபந்தனையற்ற அன்பினை நினைத்து உள்ளம் உருகி ஒப்புரவாகும் காலம்; குற்றங்களிலிருந்து திருந்தி வரும் காலம்; இறைவன் பக்கம் திரும்பி வரும் காலம்; இறைவனோடு ஒன்றிக்கவும், இலக்கு நோக்கிப் பயணிக்கவும் நமக்கு ஊக்கமளிக்கின்ற, வழிகாட்டுகின்ற காலம்; தீமைகளிலிருந்து விடுபட, தீயோனிடமிருந்து விலகிச் செல்ல ஆற்றல் தரும் காலம்; ஆண்டவனின் அருகில் செல்ல, அலகையின் ஆர்ப்பரிப்பிலிருந்து அகன்று செல்ல இறைவன் நம்மை அழைக்கும் மனமாற்றத்தின் காலம்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திரு அவை நம்மை அழைக்கிறது. இன்றைய நாளில் இயேசு சந்தித்த மூன்று சோதனைகளையும், அவற்றை எவ்வாறு இயேசு முறியடித்தார் என்பதையும் சிந்தித்து வாழ்வாக்க முயற்சி செய்வோம்.

சோதனை என்பது என்ன? நம் தீய உணர்வுகளாலும் நாட்டங்களாலும் தீயன செய்வதற்குத் தூண்டப்படும் இயல்பே சோதனை. இச்சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கியமான கூறு எனலாம். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எப்படிப் பார்க்கிறோம்? தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவதுபோல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். சோதனை நேரங்களில்சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை - இப்படித்தான் நமது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறோம். ‘மிகப்பெரிய சோதனையில மாட்டிக்கொண்டேன், என்னால எழ முடியல, ‘எல்லாம் என் தலைவிதி, ‘ஒரே சோதனையா இருக்குப்பா, குடும்ப வாழ்க்கையை நடத்தவே முடியல...’ போன்ற உணர்வுகளை நாம் பல நேரங்களில் வெளிப்படுத்துகிறோம்.

சோதனைகளுக்கு, தீய நாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது, நமது சொந்தச் சக்திக்கு மீறியதாய் சோதனைகள் வரும்போது, மனத்திலே உறுதி குறையலாம், நம்பிக்கை தளரலாம். ‘எதுவும் என்னால் செய்ய இயலாதுஎன்ற மாயை உருவாகலாம். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், சோதனைகளோடு போராடி வெற்றிபெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும் உறுதியான மனமும் உள்ளன என்பதையே இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார். இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும், நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்ற உணர்வும் நம்மில் உருவாக வேண்டும்.

இயேசுஅலகையினால் சோதிக்கப்பட்டார்(லூக் 4:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. தூய ஆவியாரால் இயேசுவின் பணியில் தொடங்கப்பட்ட திட்டமானது தீய ஆவியால் தடங்கலுறுகிறது. அவர் தீய நாட்டங்களாலோ உணர்வுகளாலோ சோதனைக்குட்படவில்லை; மாறாக, தம் பணிக்குறிக்கோளிலிருந்து திசைமாற அலகையினால் தூண்டப்படுகிறார். அவர் சோதனைகளைச் சந்தித்து, அலகையின் பிடியில் விழாது, அதைத் துரத்தி மிக எளிதாக வெற்றி கண்டார். எப்படி? அவர் பாலைநிலத்தில் நாற்பது நாள் தம் தந்தையின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். தூய்மையான கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படிச் சோதனையில் விழமுடியும்? தந்தையும் தம் மகனை விழவிடவில்லை என்பது இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் நல்லதொரு பாடம்.

இயேசு அலகையால் மூன்று சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார். அவை: ) இயேசு தம்முடைய இறையாற்றலைப் பயன்படுத்தித் தம் பசியைத் தீர்த்துக் கொள்ள, அதாவது கல்லை அப்பமாக்கி உண்ண;

) உலக அரசுகள் மேல் அதிகாரம் பெற தன்னைத் தெண்டனிட்டு வணங்க; ) ‘கடவுள் காப்பாற்றுகிறாரா?’ என்பதைச் சோதித்துப் பார்க்க, கோவிலின் உயர்ந்த பகுதியிலிருந்து குதிக்க என்பன.

கல்லை அப்பமாக மாற்றச் சொல்லி முன்வைத்த முதல் சோதனை, நம் பேராசையுடன் தொடர்புடையது. கடவுளின் துணை இன்றியும், கடவுளுக்கு எதிராகச் சென்றும் நாம், வாழ்வில் நிறைவைக் காணமுடியும் என்று பல வேளைகளில் நம்மை நம்பவைக்க அலகை எடுக்கும் முயற்சிகளையே இந்தச் சோதனை குறித்துக் காட்டுகிறது. இரண்டாவது சோதனை, பணம், பதவி, மற்றும் அதிகாரம் என்ற பொய்த் தெய்வங்கள் முன் தலை வணங்குவதைக் குறிக்கின்றது. மூன்றாவது சோதனை, கடவுளை நம் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்த முனைவதைக் குறித்துக்காட்டுகிறது. இம்மூன்று சோதனைகளையும் 1. பேராசையைத் தூண்டும் சோதனை, 2. அதிகாரத்தின்மீது நாட்டம் கொள்ளும் சோதனை, 3. புகழ் மற்றும் ஆணவத்தின் மீதான ஆசையைத் தூண்டும் சோதனை என வகைப்படுத்தலாம்.

இயேசு எவ்வாறு இச்சோதனைகளை முறியடித்தார்? 1. இயேசு தந்தையின்மீது கொண்ட உறவு (இறைவேண்டல்). 2. உலகப்பொருள்களின்மீது அவருக்கிருந்த பற்றின்மை (இச்சையின்மை). 3. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் மன உறுதிப்பாடு (இறைவார்த்தை). இவை மூன்றும் இயேசுவுக்கு அலகையின் திட்டங்களைப் புறந்தள்ளும் வெற்றிகரமான பாதைகளாக அமைந்தன. இயேசு இறைவார்த்தையைப் பயன்படுத்தி அலகையை வென்றது, கடவுளின் முன் தாழ்ச்சியோடும் மன உறுதியோடும் செயல்பட்டது நம் வாழ்விற்குச் சிறந்ததொரு பாடமாக அமைகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் இயேசு எதிர்கொண்ட இந்த மூன்று சோதனைகளையும் குறித்து மக்களுக்குப் போதிக்கும்போது, “ஒரு பொருளை உடைமையாக்குவதில் அல்ல; அதைப் பகிர்வதிலும், பிறர்மீது அதிகாரம் காட்டுவதில் அல்ல; அன்புகூர்வதிலும், புகழ், ஆணவத்தின்மீதும் அல்ல; பணிபுரிவதிலும் நாம் செயல்பட்டால் இயேசுவைப்போல அலகையின் திட்டங்களை முறியடிக்க முடியும்என்கிறார் (மூவேளைச் செபவுரை, மார்ச் 6, 2022).

சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அலகையின் சோதனையில் விழாதவர்கள் எவரும் இல்லை. நாம் யாவருமே வாழ்கையின் வெவ்வேறு கட்டங்களில் சோதனைகளை எதிர்கொள்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் பல்வேறு வகைகளில் அமைகின்றன. மனஅழுத்தம், அச்சம், விரக்தி போன்ற உளவியல் சோதனைகள், வேலை இழப்பு, வறுமை, கடன் போன்ற பொருளாதாரச் சோதனைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான உறவுசார்ந்த சோதனைகள், நோய், மனநலப் பாதிப்புகள் போன்ற உடல்நலச் சோதனைகள், அநீதி, சாதி, சமய வேறுபாடுகள் போன்ற சமூகச் சோதனைகள் என நாம் எதிர்கொள்பவை கணக்கிலடங்காதவை. துன்பம் அல்லது சோதனைகளுக்குமனிதப் பேராசையும்ஓர் அடிப்படைக் காரணமாக அமைகிறது.

இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனைகளைப் போன்றே பொருள், அதிகாரம் மற்றும் புகழுக்கான சோதனைகள் நம் வாழ்வுப் பயணத்திலும் வருகின்றன. நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் உடல் ஆசை, பண ஆசை, பொருளாசை, பதவி ஆசை, புகழாசை என்பவை தீராத ஆசைகளாக இறுதிவரை இருக்கின்றன. ஆசைகள் ஒரு மனிதருக்கு அதிகமாக இருப்பதால்தான் தொடர்ந்து துன்பங்களும் சோதனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆசைகள் இல்லை என்றால், துன்பம் இல்லை எனஅவாஅறுத்தல்எனும் அதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும் (குறள் 368).

நாம் எப்படிச் சோதனைகளில் வெற்றி காணமுடியும் என்பதற்கு இன்றைய முதல் இரண்டு வாசகங்களிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்களின் மிகப் பழமையானநம்பிக்கை முழக்கம்ஆகும். இவ்வாசகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வைச் சுருங்கக் கூறுகிறது. சாதாரண நாடோடி இனமாக இருந்த இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தெரிந்துகொண்டு, ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பினார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டைக் கொடையாக வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்துகிறார். வலிய கரத்தாலும் அஞ்சத்தக்க பேராற்றலாலும் கடவுள் அருஞ்செயல்களை நிகழ்த்தி வழிநடத்தி வந்ததற்காகவும், நாட்டை வழங்கியதற்காகவும், முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து நன்றிகூறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், ‘இயேசுவே ஆண்டவர்எனவும், ‘அவர் சாவை வென்று உயிர்த்தெழுந்தார் எனவும் நாவால் அறிக்கையிட்டு வாழ்பவரே மீட்பு பெறுவர்எனப் பவுல் அறிக்கையிடுகிறார்.

ஆக, ஒருவர் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அவ்வப்போது தன்னைச் சரிசெய்துகொள்ளும்போதும், உயிருள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்போதும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும் என்கிறது முதல் இரண்டு வாசகங்கள்.

நிறைவாக, நாம் தொடங்கியிருக்கின்ற இத்தவக்காலத்தில், நாம் என்ன செய்யலாம்? முதலில், இடைவிடா இறைவேண்டல் நமக்குத் தேவை. இத்தவக்காலத்தில் அமைதிக்கும் இறைவேண்டலுக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் இதயங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் அலகையின் கவர்ச்சிகரமான சூழ்ச்சிகளை முறியடிப்போம். இரண்டாவது, எவ்வேளையிலும், பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமலும் அலகையோடு உடன்பாடு செய்து கொள்ளாமலும் தீமைகளை எதிர்கொள்ள இறைவார்த்தையின் துணையை நாடுவோம். இறுதியாக, நம் கண்களை இறைவனின் பார்வையோடு பதித்து அவர் திருவுளம் நிறைவேற்ற முன்வருவோம். இன்றைய பதிலுரைப் பாடல் உரைப்பது போன்று, “துன்ப வேளைகளில் எங்களோடு இருந்தருளும், ஆண்டவரேஎன இறைவனை நோக்கி வேண்டிக்கொள்வோம்.

news
ஞாயிறு மறையுரை
மார்ச் 02, 2025, ஆண்டின் பொதுக்காலம் 8-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) சீஞா 27:4-7; 1 கொரி 15:54-58; லூக் 6:39-45 - நற்சொல்லும் நற்செயலும் ஒரு நல்ல மனிதரின் அடையாளம்!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த அலோன்சோ ஆல்வரஸ் பாரெடா (Alonso  Alvarez Parreda) என்பவர் இயக்கிய ஓர் உணர்வுப்பூர்வமான ஆறு நிமிடக் குறும்படம்ஓர் அடையாளத்தின் கதை (The Story of a Sigh). ஒரு பார்வைத் திறனற்ற முதியவர் சாலையோரம் அமர்ந்து, தனது அருகில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்து உதவி கோருகிறார். அந்தப் பலகையில், ‘என்மீது பரிவு காட்டுங்கள், நான் பார்வையற்றவன் (‘Have Compassion, I am Blind’) என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புப் பலகையைப் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை. அப்போது அந்தப் பக்கமாக வரும் இளைஞர், அந்தப் பார்வைத் திறனற்றவரின் அருகிலே வந்து, அந்த அறிவிப்புப் பலகையைக் கையில் எடுத்து, ஏதோ எழுதி, அவர் அருகில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார். சில நிமிடங்களில் அந்தப் பக்கமாகச் செல்கிறவர்கள் ஒவ்வொருவரும் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்துவிட்டு, அந்தக் குவளையில் தங்களிடம் இருந்த காசைப் போடுகிறார்கள். மாலைக்குள் குவளை நிரம்பிவிடுகிறது. தரையிலும் சில நாணயங்கள் சிதறிக்கிடக்கின்றன. கை நிறைய அதை அள்ளி மகிழ்ச்சி அடைகிறார் அந்த முதியவர்.

மாலையில் அந்த இளைஞர் பார்வையற்றவரின் அருகில் வந்து அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்த்தபடி நிற்கிறார். அந்த முதியவர் இவரின் காலணிகளைத் தடவிப்பார்த்து, காலையில் வந்தவர் இவர்தான் என அறிந்துகொண்டு, “அப்படி என்னதான் எழுதினீர்கள்?” என வினவுகிறார். “இன்று மிக அழகான நாள்; ஆனால், அதை என்னால் பார்க்க இயலவில்லை (‘Today is a Beautiful day; and I can\\\'t see it’) என்று எழுதினேன்என்று சொல்லிக் கடந்து செல்கிறார்

ஒரு வார்த்தையின் ஆற்றலை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக் குறும்படம். சரியான வார்த்தைகள் நம் வாழ்வையே மாற்றிவிடும் என்பதற்கு இந்த அழகிய காணொளி சிறந்த எடுத்துக்காட்டு. மனிதரின் கண்டுபிடிப்பில் மகத்தானது சொற்கள். சொற்கள் வெறும் சத்தங்கள் அல்ல; அவை விதைகள். விளைநிலத்தில் விதைக்கப்படும்போது வளர்ந்து செழிப்பதோடு மற்றொரு விதையாகவும் மாறுகிறது. இடம் அறிந்து விதைத்தால், அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் பலன் மிகப்பெரிது.

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு வாசகங்கள் ஒரு மனிதரின் நற்குணம் அல்லது நல்மதிப்பீடு என்பது அவரவர் பேசும் சொற்களையும் செயல்களையும் மையமாகக் கொண்டு அமைகிறது எனப் போதிக்கிறது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மனித வாழ்வின் அறநெறி மற்றும் வாழ்வியல் நெறியைப் பற்றிப் போதிக்கிறது. இவ்வாசகம் ஒரு மனிதரை அவரது சொற்களையும் உரையாடலையும் கொண்டு கணிக்கலாம் என்கிறது. இரண்டு உவமைகள் வழியாக ஆசிரியர் விளக்கம் அளிக்கிறார். முதல் உவமை: ‘சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே மனிதரின் பேச்சில் மாசு படிந்துவிடுகின்றது.’ இரண்டாவது உவமை: ‘குயவரின் கலன்களைச் சூளை பரிசோதிக்கின்றது; மனிதரை உரையாடல் பரிசோதிக்கின்றது.’ அதாவது, மாவு சலிக்கும்போது உமி சல்லடையின் மேலே தங்குவதுபோல, மனிதர்கள் பேசும்போது அவர்களின் பேச்சில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. குயவன் உருவாக்கிய மண்பாண்டங்கள் உறுதியானவையா, உறுதித்தன்மையற்றவையா என்பது சூளைக்குள் போடப்பட்டுச் சோதிக்கப்படுகிறது. அதுபோலவே ஒரு மனிதரின் உரையாடல் மூலம் அவரது தரமும் பண்பும் அறிவும் சோதிக்கப்படுகிறது என ஆசிரியர் விளக்கம் தருகிறார்.

உரையாடல் என்பது மனிதனின் உள்ளத்தை வெளிக்காட்டும் ஒரு கருவி. ஒரு மனிதர் நல்லவரா? கெட்டவரா? என்பது அவர் பேசும் பேச்சைக் கொண்டும், உரையாடல் வழியாகவும் கண்டுகொள்ள முடிகிறது. மேலும், ஒரு மனிதரின் நற்குணத்தையும் நல்மதிப்பீட்டையும் அவரது வெளிப்புற அடையாளங்களைக் கொண்டு அறிந்துகொள்ள முடியாது. மாறாக, அவர் பேசும் சொற்களையும் உரையாடலையும் கொண்டே அறிந்துகொள்ளலாம். ஒருவர் பேசும் நல்ல சொற்களே நல்ல செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. நற்சொல்லும் நற்செயலும் ஒரு மனிதரின் உயர்ந்த பண்புகள். நல்ல சொற்களோடு நல்ல செயல்களும் இணைந்திருக்கின்றன. நல்ல சொற்கள் ஒரு மனிதரை மதிப்படையச் செய்கிறது; பிறரை மகிழ்விக்கிறது; நம்பிக்கையைக் கொடுக்கிறது; ஊக்கமளிக்கிறது. நல்ல செயல்கள் ஒரு சமூகத்திற்குப் பெரும் நன்மைகளைக் கொண்டு வருகிறது. எனவே, நல்ல செயல்கள் செய்வதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என இன்றைய இரண்டாம் வாசகம் வழியாகப் போதிக்கிறார் திருத்தூதர் பவுல்.

கொரிந்து நகரக் கிறித்தவர்களில் சிலர் கிரேக்கத் தத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் உயிர்த்தெழுதலே இல்லை என்று வாதித்து வந்தனர். ‘நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே... பிறகு ஏன் உழைக்க வேண்டும்?’ எனச் சிலர் கேள்வி எழுப்பினர். இந்தப் பின்புலத்தில்சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைக்கும் கொடைஎன்று அக்களிக்கிறார் பவுல். கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர் எனப் போதிக்கிறார். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத்தருகிறது என்று கூறிக் கடவுளுக்கு நன்றிகூற விழைகிறார்.

தொடர்ந்து, ‘உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள். நீங்கள் உழைப்பது ஒருபோதும் வீண்போகாதுஎன்று அறிவுரை வழங்கி, நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்களே உயிர்ப்பின் கனிகள் என நமக்கு ஊக்கமளிக்கிறார். ‘கை தவறினாலும், நற்செயல் தவறக்கூடாதுஎன்பார்கள். அதாவது தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமில்லை; ஆனால், நற்செயல் செய்யாமல் ஒருபோதும் இருக்கக்கூடாது எனப் பவுல் சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு இரண்டு உருவகங்களை வாழ்க்கைப் பாடமாகக் கற்றுத்தருகிறார். முதலில்பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவாரல்லவா?’ என்று இயேசு எழுப்பும் இந்தக் கேள்விகள் யார், யாருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. உடல் அளவில் பார்வையிழந்தோர் மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலாது என்பதை இயேசு இவ்வுருவகம் வழியே வலியுறுத்தவில்லை. மாறாக, வழிகாட்ட விரும்பும் குரு, தன் சீடர்களைவிட, தெளிவான பார்வை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இந்த அணுகுமுறையிலேயே திருத்தந்தை பிரான்சிஸ், ‘பிறருக்குக் கற்பிக்கும் பொறுப்பிலுள்ளோர் குறிப்பாக, ஆன்மிக மேய்ப்பர்கள், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் கடமையுணர்ந்து, மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும்எனக் கேட்டுக்கொள்கிறார் (ஞாயிறு மூவேளைச் சிந்தனை, மார்ச் 3, 2019).

இயேசு குறிப்பிடும் இரண்டாவது உருவகத்தில், ‘நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?’ எனக் கேள்வி எழுப்பும் இயேசு, தன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் ஒருவரின் வெளிவேடத்தைத் தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கிறார். இயேசுவின் இச்சிந்தனையை வள்ளுவர்குற்றங்கடிதல்எனும் அதிகாரத்தில்,

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு (குறள் 436)

என்கிறார். அதாவது, முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கிய பிறகு, பிறர் குற்றத்தைக் கண்டு வழிகாட்டும் தலைவருக்கு எந்தக் குறையும் இருக்காது என்கிறார். திருத்தந்தைநம் குறைகளைக் காண மறுத்து, மற்றவர்களின் குறைகள் குறித்து அதிகம் அசைபோடுதல், மற்றவர்களைக் குறித்து புறங்கூறி, மனிதர்களிடையே முரண்பாடுகளையும் பகைமையையும் தீமைகளையும் விதைத்தல் போன்ற பழக்கங்களைக் கைவிட்டு, தங்கள் பாவங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்த நாம் முன்வர வேண்டும்என அழைப்பு விடுக்கிறார் (ஞாயிறு மூவேளைச் சிந்தனை, மார்ச் 3, 2019).

இறுதியாக, ‘கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை; ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்; ‘உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்எனும் இயேசுவின் சொற்கள் வழியாக, ஒருவரின் நன்மதிப்பீடு அவரது நற்சொல்லிலும் நற்செயலிலும் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

எனவே, நம் பார்வையில் மரக்கட்டைகளாகத் தைத்து நிற்கும் குறைகளைத் தூர எறிந்து, தெளிவான பார்வையுடன் பிறரது குறைகளை அகற்ற உதவிகள் செய்யவும், அவர்களை உன்னத வழிகளுக்கு அழைத்துச் செல்லவும் இறைவன் நமக்கு அருள்தர வேண்டுமென்று செபிப்போம். நல்வார்த்தைகளால் பிறரை ஊக்கப்படுத்துபவர்களாகவும், நற்செயல்களால் நற்கனியைக் கொடுக்கக்கூடிய நல்ல மரங்களாகவும் வாழ்வோம். நலம் தரும் வார்த்தைகள்தான் நற்செய்தி. அவற்றை நம் ஆண்டவர் இயேசு நமக்குத் தந்திருக்கிறார். இயேசு தரும் நலமான வார்த்தைகளை இதயத்தில் ஏந்தி, பிறரைப்பற்றி நாம் எப்போதும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் எவரையும் தவறாகத் தீர்ப்பிடாமல், ஆண்டவரின் வார்த்தைகளின்மீது அடித்தளமிட்டவர்களாகவும் இறைவேண்டலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ்வோம். நம் வாழ்வு வெறும் பேச்சுகளில் அன்று; செயல்களில் காட்டப்பட வேண்டும். நல்ல சொல்லைப்  பேசவும் நல்ல செயலைச் செய்யவும் ஆண்டவர் அருள்புரியட்டும். நற்சொல்லும் நற்செயலுமே ஒரு நல்ல மனிதரின் அடையாளம்!

news
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 23, 2025 ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) 1சாமு 26:2,7-9, 12-13,22-23; 1கொரி 15:45-49; லூக் 6:27-38 (வெறுப்பற்ற வாழ்வு தெய்வீகமானது!)

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஒரு சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்த சிறாரின் மனநலம் பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அடுத்து என்ன செயல் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், சிறார் மற்றும் வளரிளம் பருவத்திலேயே பல கொலைகளைச் செய்து, சீர்த்திருத்தப் பள்ளியில் இவர்கள் இருப்பதற்குக் காரணம்இவர்கள் சிறுவயதில் வெறுக்கப்பட்டதேஎன அந்தப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.

அந்த ஆய்வில், ஓர் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஒரு சிறுவன் கூறியது: “என் அப்பா என்னை வெறுத்தார். ஏனெனில், அவர் எனது இரண்டாவது அப்பா. என் வீட்டில் நாய் குட்டிக்குக் காட்டிய அன்பைக்கூட அவர் என்னிடம் காட்டியதில்லை. அவருக்குப் பிறந்த என் தம்பி மீதுதான் அவ்வளவு பாசம். நான் மனத்தளவில் தனிமைப்படுத்தப்பட்டேன். நான் விளையாட்டு வீரனாகிக் குடும்பத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டுமென விரும்பிய அவர், அதற்காகச் சிறந்த பயிற்சியாளர் ஒருவரை நியமித்தார். என்னை வெறுத்த அவருக்கு நான் ஏன் பெருமை தேடித் தரவேண்டும்? அதற்கு மாறாக, நான் அவருக்கு அவமானத்தைத் தேடித்தர விரும்பினேன். அவர் குற்ற உணர்வால் காலமெல்லாம் கண்ணீரில் துடிக்க வேண்டும் என்பதற்காகவே ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டேன்என்றான்.

1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதிக்கும், ஜூலை 15-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆப்பிரிக்காவின் ருவாண்டா நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அந்நாட்டின் ஹமூட்டு மற்றும் துட்சி இனத்தவர் ஒருவரையொருவர் கொன்று பழிதீர்த்துக் கொண்டனர். இதில், ஐந்து இலட்சம் முதல், பத்து இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் துட்சி இனத்தவர். இந்த இனப் படுகொலைகளுக்குக் காரணம், இவ்விரு இனத்தவரும் ஒருவர் மற்றவர் மீது கொண்டிருந்த வெறுப்புணர்வே!

இவ்விரு நிகழ்வுகளிலும் ஒருவர் மற்றவர்மீது காட்டுகின்ற வெறுப்பு அத்தனை பேரையும் கொலைக் குற்றவாளிகளாக்கி விட்டது. ஏன் இவ்வளவு வெறுப்பு? அன்பும் அறமும், ஈகையும் ஈரமும், கனிவும் பரிவும், நேயமும் தியாகமும் ஏன் மனிதர்கள் மனத்திலிருந்து மறைந்துவிட்டன? கடவுள் அன்பே வடிவானவர்! அவர் சாயலில்தானே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! அவரைப் போன்றுதானே நாம் இருக்கவேண்டும்!

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலத்தின் 7-ஆம் ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகிறோம். இன்றைய மூன்று வாசகங்களும் பகைமையைப் போக்கவும் வெறுப்பை வேரறுக்கவும் மன்னிப்பை வளர்க்கவும் நம்மை அழைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், தன்மீது பகைமை காட்டிய சவுலைக் கொல்லாமல் அமைதியாகச் செல்லும் தாவீதின் உயர்ந்த மனத்தைப் பார்க்கிறோம். சவுல் இஸ்ரயேலின் முதல் அரசர். சாமுவேல், சவுலை எண்ணெயால் அருள்பொழிவு செய்து திருநிலைப்படுத்தினார் (1சாமு 10:1). அவர்தான் சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய ஆற்றல்மிக்க வேற்றின எதிரியான பெலிஸ்தியருக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றி கண்டார். காலப்போக்கில் சவுல் கடவுளுக்கும் சாமுவேலுக்கும் கீழ்ப்படிதலின்றித் தனக்குச் சரியாகப்பட்டதைச் செய்ய முனைந்தார் (1சாமு 15). எனவே, சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே சாமுவேல் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்தார் (16:13). தாவீது படைக்கலத்தின்மீது நம்பிக்கை வைக்காது, கடவுளையே நம்பி கோலியாத்தை வீழ்த்தினார். கோலியாத்தை வென்றதில் தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்பட, இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்பியது.

மனத்திற்குள் தோன்றும் பொறாமை, ‘அழித்துவிடு, தீங்கு செய், வெறுப்புக்கொள் - இப்படித்தான் மனத்தைத் தூண்டிக்கொண்டே இருக்கும். இந்த அகத் தூண்டுதலுக்குச் செவிகொடுப்பவர்கள் மறுகணமே குற்றவாளியாகிவிடுகிறார்கள். வளமை குன்றாமல் நம் வாழ்க்கை எப்போதுமிருக்க ஒருபோதும் பொறாமை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொறாமை கொண்டு பிறரை அழிக்க முயற்சி செய்பவர்கள் தங்களையே அழித்துக்கொள்கின்றனர். தாவீதுமீது பொறாமை கொண்ட சவுலும் பல நேரங்களில், பல இடங்களில் தாவீதைக் கொல்ல முயற்சி செய்கிறார். தாவீது சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார். தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து திரிந்த சவுல், களைப்புற்று ஓரிடத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. சவுலைக் கொல்லும் வாய்ப்பு இப்போது தாவீதின் கரங்களில் வாய்த்துள்ளது. இந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

உறங்கும் எதிரி, ஊன்றப்பட்ட ஈட்டி, உயிரை எடுக்கத் தயாராக இருந்த தோழர் அபிசாய் என அனைத்தும் தனக்கு ஆதரவாக இருந்தபோதிலும், “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” (1சாமு 26:9) என்று கூறி, மன்னன் சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் செல்கிறார். அத்துடன் நின்றுவிடாமல், சவுல் தன் தவறை உணர்ந்து, நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில், சவுலின் ஈட்டியைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். சற்றுத் தொலைவில் தாவீது நின்று கொண்டு, “அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை (26:22-23) என்ற தாவீதின் வார்த்தைகள் நம் மனங்களில் ஊற்றெடுக்கும் பகைமை உணர்வுகளைக் களைந்தெறிவதற்கான வழிகளைச் சொல்லித் தருகின்றன.

பகைவருக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவதற்குப் பதில் அவர்களை அரவணைக்க, ஆசியளிக்க நம் கரங்களை உயர்த்த வேண்டும் என்ற மேலான வாழ்வியல் சிந்தனையை இயேசு இன்றைய நற்செய்தியில் கற்றுத்தருகிறார். இன்றைய நற்செய்திப் பகுதி சென்ற வாரம் நாம் கேட்ட சமவெளிப் பொழிவின் தொடர்ச்சியாக உள்ளது. சமவெளிப் பொழிவு முழுவதிலும், குறிப்பாக, இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு வழங்கும் அறிவுரைகளும் நடைமுறை வாழ்வுக்கு எள்ளளவும் உதவாத அறிவுரைகள் போலவே தோன்றுகின்றன. காரணம், இந்த உலகம் அன்றிலிருந்து இன்று வரை, பகைவருக்குப் பகைமை, வெறுப்போருக்கு வெறுப்பு, உதவி செய்வோருக்கு உதவி, இரக்கம் காட்டுவோருக்கு இரக்கம், அன்பு செய்வோருக்கு அன்பு, சபிப்போருக்குச் சாபம் என்றுதானே சொல்லித் தந்துள்ளது. ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசுவோ, “பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்காக இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காமல் இருத்தல்…” என மிக அழகாக அடுக்கிக்கொண்டு செல்கிறார்.

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, மிக அசாதாரணமான அறிவுரைகளாக அல்லது சவால்களாக இயேசுவின் போதனைகள் தோன்றினாலும், இவற்றைப் பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்துகிறார். இறையாட்சியின் மக்கள் சாதாரண மற்ற மக்களைப்போல இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. நம்முடைய வாழ்வியலும் அறநெறியும் ஆன்மிகமும் மற்றவர்களைவிட உயர்ந்ததாக, சிறந்ததாக இருக்கவேண்டும். பழிக்குப் பழி, தவறு செய்வோருக்குத் தண்டனை என்ற கருத்தோடு நாம் நின்றுவிட்டால், காந்தியடிகள் கூறுவதுபோல, “இந்த உலகமே பார்வையற்றதாகிவிடும்.”

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, நாம் அனைவரும் விண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருக்க வேண்டும். மனித இயல்பை நாம் கொண்டிருந்தாலும், ஆவிக்குரிய இயல்புகளை இறைவன் நமக்குத் தந்துள்ளார். தம் மகனின் உயிர்ப்பின் வழியாக இயேசு உயிர் தருபவராக மாறுகிறார். எனவே, நாம் கிறிஸ்துவின் தெய்வீக இயல்பின்படி வாழ வேண்டும்.

மனித இயல்பில் வாழ்ந்தாலும் விண்ணக ஆவிக்குரிய இயல்பில் வாழ்ந்த மாமனிதர்களை வரலாறு என்றுமே மறக்கவில்லை. தன்னைச் சுட்ட துருக்கிய இளைஞர் முகமது அலி அஃகாவைச் சிறையில் சென்று சந்தித்து, ஆரத்தழுவி முத்தமிட்ட திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால், தன்னுடைய கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸ், தன் இரு மகன்கள் பிலிப் மற்றும் திமோத்தி ஆகியோரை உயிரோடு எரித்துக் கொலை செய்த தாராசிங்கை மன்னித்த ஸ்டெயின்ஸின் மனைவி, பேருந்தில் அருள்சகோதரி இராணி மரியாவைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த சமுந்தர் சிங்கை மன்னித்த இராணி மரியாவின் உடன் சகோதரி செல்மி பவுல் போன்ற அனைவரும் புனித அன்னை தெரசா கூறுவதுபோல, “வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்எனும் கூற்றின்படி வாழ்ந்து காட்டியவர்கள்.

இன்றைக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் கொடிய செயலைத்தான் அதிகம் காண்கிறோம். அரசியல் கொலை, ஆணவக்கொலை, சாதி, சமய, இனக்கொலை போன்றவை அன்றாட செய்திகள். வெறுப்புணர்வும் பகை உணர்வும் காட்டாற்று வெள்ளமாய்ப் பொங்கி அனைத்து உயிர்களையும் அடித்துக்கொண்டு போவதைப் பார்க்கிறோம். இதற்கு மணிப்பூர் வன்முறை சிறந்த உதாரணம். வெறுப்பு என்ற தீய குணத்தால், ஒருவர், தன்னையும், உறவுகளையும் இழக்கிறார். குடும்பங்களில் உறவுகள்மீது காட்டும் வெறுப்பு, படிப்படியாக உறவுகளையே விலகச் செய்துவிடுகிறது. நம் உறவுகள் ஏதோ ஒரு சூழலில் நமக்குத் தீமை செய்திருக்கலாம் அல்லது நமக்கு எதிராகப் பேசி இருக்கலாம். எத்தனை நாளைக்குப் பகையையே நினைத்துக்கொண்டு வெறுப்பிலே வாழப்போகிறோம்?

மனத்திலிருந்து வெறுப்பு என்ற தீயசக்தியை வேரோடு அறுத்துவிட்டு, உறவுகளில் வளர முயற்சிப்போம். சில காயங்கள் மருந்தால் சரியாகும். சில காயங்கள் மறந்தால் சரியாகும்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “வன்முறை மற்றும் வெறுப்பின் சூழலிலிருந்து வெளிவந்து உலகை இதயத்தின் கண்களால் உற்றுநோக்குவோம்.” இயேசு-தாவீது-பவுல் இவர்களைப் போன்று வெறுப்புணர்வைத் தவிர்த்து, அன்புணர்வை வளர்ப்போம். ஏனெனில், வெறுப்பற்ற வாழ்வுதானே தெய்வீகமானது!