news
ஆன்மிகம்
கல்மனம் கரைய...

கடவுள் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொநூ 2:7). “கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார். ஆணும்-பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் (தொநூ 1:27).

இவ்வாறு கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் ஆதிப்பெற்றோர்களின் கீழ்ப்படியாமையால் படைத்தவனின் பாதையிலிருந்து விலகி, தீயவழிகளில் சென்று, கண்போன போக்கில் கால் சென்று, கால்போன போக்கில் மனிதன் சென்று, தான் தோன்றித்தனமாக வாழத் தொடங்கினான்.

தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா 5:22) போன்றவற்றால் செறிவூட்டப்பட்ட மனிதன், மனிதநேயம் வற்றிப் போய், அற்றுப் போய், கல்மனம் படைத்தவனாக மாறிவிட்டான், மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை கடவுள் படைத்த வானம் மாறவில்லை; வான்மதியும், மீனும், கடல் காற்றும், மலரும் மண்ணும், கொடியும், சோலையும் மாறவில்லை. ஆனால் மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.

கடவுள் படைத்த அத்தனை உயிர்களும் உருவான காலத்திலிருந்து இன்று வரை தன்னுடைய தன்மை மாறாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, வாழ்ந்து கொண்டிருக்கின்றன, வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதன் மட்டும் ஏனோ தன் தன்மை மாறி, தடம் மாறி, தடுமாறி, உரு மாறி, உடல் மாறி, உள்ளம் மாறி, கள்ளம் கொண்டு, கொள்ளை உள்ளம் கொண்டு, கபடம் கொண்டு, கொலைவெறி கொண்டு, களியாட்டம் கொண்டு, காமவெறி கொண்டு, பொறாமை கொண்டு, மதியிழந்து, மானமிழந்து, பகுத்தறிவை இழந்து, பகிர்ந்துண்ணலை இழந்து, பொறுமை இழந்து, பொறுப்புணர்வை இழந்து சாத்தானின் பாதையில் வாழத் தொடங்கிவிட்டான். மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான்.

தாயின் வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே அறிந்திருந்தேன். நீ பிறக்குமுன்பே உன்னை திருநிலைப்படுத்தினேன் (எரே 1:5) என்ற இறைவாக்கினரின் கூற்றுப்படி, மனிதனைத் தேர்ந்தெடுத்துப் படைத்தார் இறைவன். ‘படைத்தான் படைப்பெல்லாம் மனுவிற்காக; மனுவைப் படைத்தான் தன்னை வணங்கஎன்ற வார்த்தைகளின்படி மனிதன் தம்மை வணங்க வேண்டும், தம் கூக்குரலுக்கு இணங்க வேண்டும், தம் வழிகளைப் பின்பற்ற வேண்டும், தம் போதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார் இறைவன். ஆனால், மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறி விட்டான்.

உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவரை அன்பு கூர்வாயாக (மாற் 12:31) என்ற தெய்வத்தின் வார்த்தையை மறந்து,

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கான் செயல்

என்ற தெய்வீகப் புலவரின் வரிகளை மறந்து வாழப் பழகிக்கொண்ட மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான். இவ்வாறு வாழ்ந்த மனிதன் தன் வாழ்க்கையில் சாதித்தது என்ன? என்று சிந்தித்தால்... ஒன்றுமில்லை! “நூறாண்டு காலம் வாழ்த்தியவர்கள் எல்லாம் ஒருவர் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையில் வாழும்பொழுதுசெத்துத் தொலையிறாள்லயேஎன்று கட்டிய மனைவியும், ஒட்டிய உறவுகளும் எரிச்சல்படுவார்கள், ஏளனமாய் பேசிக் கொள்வார்கள், இறப்புக்காகக் காத்திருப்பார்கள், ‘அண்ணன் எப்ப இறப்பான், திண்ணை எப்ப காலியாகும்என்ற ஏக்கத்தோடு வாழ்வார்கள்

கண்ணே, மணியே, கட்டிக் கரும்பே, தங்கமே, வைரமேஎன்று கொஞ்சிய தாயும், ‘என் உயிரே நீங்கதான்என்று சொன்ன தாரமும் இறந்து பிணமானபின் உடன் வரவா போகிறார்கள்? ‘உன்னை நொடிகூட பிரிந்திருக்க முடியாதுஎன்று மாயாஜாலம் காட்டியவர்கள் எல்லாம் பிணமானபின் தொடக்கூட அருகில் வரமாட்டார்கள். சுருங்கச் சொன்னால் மனிதன்இடிந்த மதிலுக்கும் (குட்டிச் சுவர்) சிதைந்த வேலிக்கும் ஒப்பாவார்கள் (திபா 62:3) என்பதே மனிதன் தன் நெறிகெட்ட வாழ்க்கையால் தேடிக்கொண்ட சொத்தாகும்.

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?’ என்று கவிஞர் கண்ணதாசன் மனிதனின் வாழ்க்கைப் பாதையைக் கேள்விக் கணைகளால் துளைக்கிறான், தொடுக்கிறான். இதையே ஒளவையாரும்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு

ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்

பாவி காள் அந்தப் பணம்

தன்நல்வழிபாடலில் கேள்விகள் மூலமாக ஏவுகணைகளை ஏவுகிறார். எனவே, மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், அரசன் முதல் ஆண்டி வரை, வாழ்க்கையில் தொடர்ந்து வருவது பாய் மற்றும் நோய் இந்த இரண்டுதான். ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?’ என்று கவிஞர் கூறுவது போல, இறுதியில் எல்லாரும் பிணத்தை கைவிட்ட நிலையில், ‘மண்மட்டுந்தான் அந்தப் பிணத்தை வா... வா... என்று வரவேற்று அழைத்து, ‘மகனே, மகளே நான் இருக்கிறேன். என் மடியில் வந்து உறங்குஎன்று தழுவிக்கொள்ளும். மனிதனுக்கு வாழ்க்கையில் மிஞ்சுவது மண் மட்டுமே. இதைத்தான்நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய் (தொநூ 3:19) என்று திருவிவிலியம் விளக்குகிறது.

இந்த நிகழ்வை நினைத்துப் பார்ப்பதற்காகத்தான் திருநீற்றுப் புதன் கொண்டாடப்படுகிறது. அன்றிலிருந்துதான் தவக்காலம் ஆரம்பமாகிறது. தவக்காலம் என்பது தியாகத்தின் காலம், அருளடையாளங்களின் காலம், நோன்பின் காலம், நல்ல நோக்கங்களை நிறைவேற்றும் காலம், கொடைகளின் காலம், தடைகளை உடைத்தெறியும் காலம், மனக் கட்டுப்பாட்டின் காலம், பிறர் மனத்தைத் தொட்டுப்பார்க்கும் காலம், செபத்தின் காலம், தவத்தின் காலம், ஆண்டவரோடு ஒன்றிணையும் காலம், ஒன்றிப்பின் காலம்.

இத்தவக்காலம்வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்என்று பாடிய வள்ளலாரின் காலம், ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோஎன்ற பாரதியாரின் பாடலை மெய்ப்பிக்கும் காலம், மகாத்மா காந்தியடிகள் கண்ட அகிம்சையின் காலம், அறத்தின் காலம், பிறரை நேசிக்கும் காலம், ஆசிக்கும் காலம், கடவுளை மட்டுமே இதயத்தின் ஆழத்தில் பூசிக்கும் காலம், வெறுப்பகற்றும் காலம், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று முழங்கிய வள்ளுவரின் வரிகளை வாழ்வாக்குவதன் காலம், உடலை ஒறுத்து, ஊனியல்புகளை வெறுத்து, தீச் செயல்களை அறுத்து, கோபத்தைப் பொறுத்து வாழ வேண்டிய காலம்.

தவக்காலத்தில் பக்தி முயற்சிகளில் முழு மனத்துடனும், முழுமையாகவும் பங்கேற்போம். தவக்காலத்தில் காவியுடை அணிவது முக்கியமல்ல, பாவியாய் வாழாமல் இருப்பதே முக்கியம். நோன்பு இருப்பது முக்கியமல்ல, பிறரை நோகடிக்காமல் வாழ்வதே முக்கியம். வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாயிருந்து (மத் 6:16) தாடி வளர்ப்பது முக்கியமல்ல, ஒழுக்கச் செயல்களை நாடிச் செல்வதே, ஏழைகளைத் தேடிச் செல்வதே முக்கியம். செபமாலையோ, சிலுவையோ அணிந்துகொள்வது முக்கியமல்ல, பிறர் தோளில் சிலுவைகளைச் சுமத்தாமல் இருப்பதே முக்கியம்.

சமூக ஊடகங்கள் நம்மையும் நம் குழந்தைகளையும் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்ட, குடும்பங்களில் முழுமையாகப் புகுந்துகொண்ட இக்காலத்தில் ஆலயங்கள் அனைத்தும் ஆளரவமற்றே காணப்படுகின்றன. பக்தி முயற்சிகள் தேய்ந்துகொண்டே வருவது வருத்தத்திற்குரியதாகும். தெய்வ நம்பிக்கையை விட ஊடகங்களுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவம் முதன்மையாகப் பார்க்கப்படுகிறது.

எனவே, இத்தவக்காலத்திலாவது திருப்பலிகளில் குறிப்பாக ஞாயிறு திருப்பலியில் தவறாது, முறையாகப் பங்கேற்போம். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சிலுவைப்பாதையில் கலந்து கொண்டு கல்வாரிப் பாதையைத் தியானிப்போம். பக்தி நிகழ்ச்சிகளை உடலால், உள்ளத்தால், சொல்லால், செயலால் நிரப்புவோம்.

தம்மைக் கொடுத்த இயேசுவுக்கு

நம்மைக் கொடுக்கத் தயாராவோம்!

கல்மனம் கரையட்டும் இயேசுவை நோக்கி

கைகளும் விரியட்டும்!

news
ஆன்மிகம்
முக்காலம் உணர்த்தும் தவக்காலம்

வல்லமையான மூன்று மாதங்கள் இன்றிலிருந்து நமக்காகக் காத்திருக்கின்றன. 40 நாள் தவக்காலம்; 50 நாள் பாஸ்கா காலம். சிலுவையை நோக்கிய, பாஸ்காவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள அழைக்கும் காலமிது. தூய ஆவியாரின் வருகையை நோக்கித் தொடர்ந்து நாம் பயணிக்க, நமக்கு அழைப்பு விடுக்கும் காலம்; இது ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் உன்னதமான காலம். இத்தவக்காலத்தைத் திருநீற்றுப் புதனுடன் தொடங்குகிறோம். இன்றைய நாளுக்கான அருள்வாக்கின் அடிப்படையில் நாம் சிந்திக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறோம். “கடவுளை மறந்துவிடாதீர்கள்என்று மீண்டுமாக நினைவுபடுத்துகிறார் இறைவாக்கினர் யோவேல். மக்கள் உடன்படிக்கையை மீறினார்கள்; கடவுளிடமிருந்து தூர விலகிச் சென்றார்கள்; அத்தகைய சூழலில், “நீங்கள் கடவுளோடு நெருக்கமான உறவில் இருக்க வேண்டும்; மீண்டும் அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நீங்கள் வாழ வேண்டும்என்று நினைவுபடுத்துகிறார். மேலும், “இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியவில்லை; ஆனால்,  இப்போது கடவுளின் பிள்ளைகளாக அவரிடம் திரும்பி வாருங்கள். உடன்படிக்கையின்போது நீங்கள் எப்படி இருந்தீர்களோ, அத்தகைய நிலைக்குத் திரும்பி வாருங்கள் (யோவே 2:12) என அழைப்பு விடுக்கிறார். அவ்வாறே, “தொடக்கத்தில் இருந்த அன்பு உங்களிடம் இப்போது இல்லைஎன்றதொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.

திருமண வாழ்விலும் சரி, அழைத்தல் வாழ்விலும் சரி, சிறப்பான அழைப்பிலும் சரி... நாம் முன்பிருந்த நிலையில் இருக்கிறோமா? தொடக்கத்திலி ருந்த அன்பு நம்மிடம் இருக்கிறதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் கூறுகிறார்: “உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை... நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெது வெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன் (திவெ 3:15-16) என்று குறிப்பிடுவது நம்மைப் பார்த்துக் கூறுவது போலவே இருக்கிறது. ‘ஏதோ இந்த வாழ்வுக்கு வந்துவிட்டோம், நாள்களைத் தள்ளி விடுவோம்என்று எண்ணிக்கொண்டு துடிப்பில்லாமல், ஆர்வம் இல்லாமல் வாழ்கின்ற ஒரு வாழ்க்கையைப் பார்த்து இறைவன் அவ்வாறே குறிப்பிடுவார்.

லூக்கா பதிமூன்றாம் அதிகாரத்தில்கோபுரம் இடிந்து விழுந்து 18 பேர் இறந்து விட்டார்கள் (லூக் 13:4) என்று குறிப்பிடப்படுகிறதுஇது ஏன் நிகழ்ந்தது தெரியுமா? மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லாரும் அவ்வாறே அழிந்து போவீர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே. அத்தி மரத்தின் உவமையை அறிவீர்கள். மூன்று ஆண்டுகள் பழம் ஏதும் இல்லாதபோதும் தோட்டத் தொழிலாளர், “இதை வெட்டிவிட வேண்டாம்; இன்னும் ஓராண்டு இருக்கட்டும். இல்லையென்றால் வெட்டிவிடலாம் (லூக் 13:9) எனக் கெஞ்சிக் கேட்கிறார்மனந்திரும்புவதற்கான, பலன் கொடுப்பதற்கான அவகாசம் நமக்குக் கொடுக்கப்படுகிறது. நாமும் பலன் கொடுக்க, கனி கொடுக்க வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறார். எப்போது அத்தகைய பலன் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார். உங்களுக்கும் எனக்கும் இறைவன் தரும் அழைப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

திருநீற்றுப் புதன் நம்முடைய திருவழிபாட்டு நாள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. இன்று சிறுமிகள், சிறுவர்கள், இளையோர், குடும்ப உறுப்பினர்கள் யாவரும் இணைந்து இத்திருப்பலியிலே பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம். இந்நாளில் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதையும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அவர் இரக்கமிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர்; பேரன்பு மிக்கவர். இதுதான் அவரிடம் நாம் வருவதற்கான நம்பிக்கையை நம்மிடம் விதைக்கிறது. ஆகவே, குடும்பமாக எல்லாரும் இணைந்து இப்பலியிலே பங்கெடுப்பது திரு அவையின் குரலைக் கேட்டு, ஆயரின் குரலைக் கேட்டு, அருள்பணியாளர்களின் குரலைக் கேட்டு, ‘மனம் மாற வேண்டும்என்பதற்காகவே!

இந்நாளின் இரண்டாவது வாசகத்தில் தூய பவுலடியார் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்: “கடவுளோடு ஒப்புரவாகுங்கள், எங்களோடு ஒப்புரவாகுங்கள், திரு அவையோடு ஒப்புரவாகுங்கள் (2கொரி 5:20); எங்கள் வழியாக, அருளடையாளங்கள் வழியாக ஒப்புரவாகுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். இதுவே இக்காலத்தில் இறைவன் கொடுக்கின்ற மிக முக்கியமான செய்தி.

இது கடவுளுக்கு ஏற்புடைய காலம்; இதுவே மீட்பின் காலம்; இதுவே தகுந்த காலம். இந்தக் காலத்தில் மனம் மாறவில்லை என்றால், எந்தக் காலத்தில் மனம் மாறப்போகின்றோம்? இந்தத் தவக்காலத்தில் நம்முடைய கண்களை அவர்மீது பதிய வைக்க வேண்டாமா? நமக்காகச் சிலுவையில் துன்புற்று, இரத்தம் சிந்தி நமக்கு மீட்புத் தந்த அவருடைய பாடுகளில் நாம் ஒன்றித்திருக்க வேண்டாமா? பவுலடியார் கூறுவது போல அவருடைய பாடுகளில் குறைவாக இருப்பது நம்மில் நிறைவு பெற வேண்டாமா? ஆகவே, நாம் சிலுவையை உற்றுப்பார்க்க வேண்டும். ஆண்டவரிடம் கூறுவோம், ‘ஆண்டவரே! எங்களுக்காக மரித்தீரே, உம்மைத் தனிமையிலே சிலுவையிலே அறைய விடமாட்டேன். நான் உமக்காகத் துன்புறுவேன்; திரு அவைக்காகத் துன்புறுவேன்; தேவையில் இருக்கும் என் சகோதர- சகோதரிகளுக்காகத் துன்புறுவேன்; உம்முடைய பாடுகளில் நான் பங்கேற்பேன்என உறுதி கொள்வோம். இதற்காகத்தான் ஒப்புரவாக்கியவர் துன்புற்றார்; வேதனையுற்றார்.

இந்தப் புனித காலத்தில் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களின் பட்டியலில்செபம்என்பது முதற் நற்செயலாக இருக்கிறது. செபிப்பது பெருமைக்காக அல்ல; பாடுவதுகூட பெருமைக்காக அல்ல; மற்றவர்கள் செபிப்பதற்காகத் துணை செய்கின்றோம். நாம் பெரியவர்கள் என்று மார்தட்டிக் கொள்வதற்காக அல்ல; மக்களை ஆண்டவரை நோக்கித் திருப்புவதற்கு வாய்க்காலாக அமைகிறோம். செபம் இறைப் புகழ்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும்; தற்புகழ்ச்சி கொண்டதாக அமையக்கூடாது. நம் ஆண்டவர் இயேசுவும் செபித்தார்; செபிக்க நமக்குக் கற்றுக்கொடுத்தார். தம் செபத்தில் தந்தையாம் கடவுளுக்கு நன்றி கூறினார். நம் தேவைகளுக்காக மன்றாடினார். நம் ஒற்றுமைக்காக இறைவேண்டல் செய்தார். அவர் பாவம் செய்யவில்லை; எனவே, மன்னிப்புக் கேட்கவில்லை. நாம் பாவிகள் ஆனோம்; ஆகவே, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். இது செபத்தின் ஒரு பகுதி.

மற்றொரு பகுதி, ஆண்டவர் பேசுவதைக் கேட்பது. ஆலயத்திலும் வீட்டிலும் அமர்ந்திருக்கின்ற போது அவர் முன் அமர்ந்து பேசுவதைவிட அவர் பேசுவதைக் கேட்பது செபத்தின் இரண்டாம் படி நிலை. கூர்ந்து நோக்கினால் ஒவ்வொரு முறையும் செபிக்கும்போது நாம் ஆண்டவரிடம் பேசுவதை விட, ஆண்டவர் நம்மிடம் அதிகமாகப் பேசுவார். அந்தக் கெத்சமனி தோட்டத்திலே தந்தையோடு உறவாடும்போது, “தந்தையே, கூடுமானால் இந்தத் துன்பக்கலம் என்னை விட்டு அகலட்டும்என்று வேண்டினார். தந்தையாம் கடவுளும் மகனிடம் பேசினார், “இல்லை மகனே! இந்தத் துன்பக்கலத்தை நீ குடிக்க வேண்டும்என்று கூறினார். அதேபோல, “மகனே! மகளே! உன்னுடைய கடமையைச் செய்; தியாகம் செய்; நேரத்தை ஒழுங்காகப் பயன்படுத்துஎன்று ஆண்டவர் நம்மிடம் பேசுவார். இந்தத் தவக்காலம் ஆண்டவர் நம்மிடம் பேசுவதைக் கேட்கின்ற காலமாக அமையட்டும்.

இந்தத் தவக்காலத்தில் ஒரு முறையாவது திருவிவிலியம் முழுவதையும் படித்து முடித்துவிட வேண்டும் என உறுதி ஏற்போம். முழுவதும் படிக்க முடியாதவர்கள் குறைந்த அளவு அவருடைய வார்த்தையைக் கேட்கும் ஆர்வத்தைப் பெற்றுக் கொள்வோம். ஆண்டவரை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம்அவருடைய பார்வை எப்போதும் நம் மீது இருக்கிறது. மேலும், அவரது குரலைக் கேட்போம்; அவர் குரல் நமக்கு நல்வழி காட்டும்.

தவக்காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டாவது நற்செயல்நோன்பு.’ எதற்காக நோன்பு இருக்கிறோம்? நோன்பின் அடிப்படைக் கூறு என்ன? என்பதை நாம் தெளிவுறப் புரிந்துகொள்ள வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் அண்மையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார், “நாம் சாப்பிடாமல் இருப்பதால் என்ன பலன்? அதனால் யாருக்கு என்ன பலன்? நாம் சாப்பிடாமல் ஒறுத்தல் மேற்கொள்வது பட்டினிக் கிடப்போருக்கு, தேவையில் இருப்போருக்கு, வயது  முதிர்ந்த ஆதரவற்றோருக்கு உதவக்கூடியதாக அமைய வேண்டும்; அவர்களுடைய பசியைப் போக்கக் கூடியதாக அமைய வேண்டும்என்று குறிப்பிடுகிறார். நோன்பின் தன்மை அடிப்படையில் மற்றவருக்கு அன்பு காட்டுவதாக இருக்க வேண்டும். நம்முடைய உபவாசம் கூட நம்மைச் சுயநலமாக மாற்றிவிடக்கூடாது. நம்மை ஆண்டவருக்கு நெருக்கமானவராக மாற்றவேண்டும். இல்லை என்றால், நம்முடைய உபவாசம் பொருளற்றதாகிப்போகும்.

நோன்பை உபவாசம் என்கிறோம். அதன் அர்த்தம் என்ன? வாசிப்பது... வசிப்பது என பொருள்படுகிறது... யாரை வாசிக்கின்றோம்? யாருடன் வசிக்கின்றோம் என்பது அதன் உட்பொருள். ஆண்டவரை வாசிக்கின்றோமா? அவரோடு வசிக்கின்றோமா? அவர் சாயலில் இருக்கும் மனிதரோடு வசிக்கின்றோமா? என்பதுதான் கேள்வி. ஆண்டவரோடு வசிக்கவும் நம்முடைய சகோதர சகோதரிகளோடு இணைந்திருக்கவும் திரு அவையோடு இணைந்து பயணிக்கவும் உறவுகளோடு ஒன்றித்திருக்கவும் எனப் பல செயல்பாடுகளை இது முன்வைக்கிறது. ஆண்டவரோடு இணைந்திருக்கவில்லை என்றால், அவர் மக்களோடு வசிக்கவில்லை என்றால் இந்த நோன்பு பொருளற்றுப் போய்விடும்.

நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்றாவது நற்செயல்ஈகை.’ இறைவன் நம் உள்ளத்தைக் காண்கிறார். என்ன கொடுக்கின்றோம்? யாருக்குக் கொடுக்கின்றோம்? என்ன மனநிலையில் அதைக் கொடுக்கின்றோம்? என்பதை உற்று நோக்குகிறார். காணிக்கைப் பெட்டியின் அருகில் அமர்ந்து ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையை உற்றுநோக்கிய இயேசு, அது மேலானது என்று பாராட்டுகிறார். அந்த ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையைக் கண்ட இயேசு, அதில் அவருடைய கண்ணீரைப் பார்க்கிறார்; வியர்வையைப் பார்க்கிறார்; நேரத்தைப் பார்க்கிறார்! இத்தகைய செயல்பாட்டை, மனநிலையை இறைவன் நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

இப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்ய, மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க மனந்திரும்புதலை மேற்கொள்வோம். கடின உழைப்புக்கு இறைவன் கைம்மாறு கொடுப்பார். இந்தப் பருவத்தில் குழந்தைகள், சிரமப்பட்டுப் படிப்பதைப் பார்க்கிறோம். இறைவன் அவர்களுக்கு மிகுந்த கைம்மாறு அளிப்பார். நம்முடைய உழைப்பை, காணிக்கையை, நற்செயல்களை இறைவன் அமைதியாகப்  பார்க்கிறார். மறந்துவிட வேண்டாம். நிச்சயமாக இறைவன் அதற்கான கைம்மாறை அளிப்பார்.

இந்த நாள், மூன்று காலங்களையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஒன்று, கடந்த காலத்தின் பாவச் செயல். ஆகவேதான், “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன் (திபா 51:4) என்று மனம் வருத்தம் அடைகிறோம். இரண்டாவதாக, நிகழ்காலம். “ஆண்டவரே, என் பாவம் எப்போதும் என் மனக்கண் முன் நிற்கிறது (51:3) என்று புலம்புகிறோம். மூன்றாவது, எதிர்காலம். “ஆண்டவரே, தூயதோர் உள்ளத்தை உருவாக்கும் ஆவியை என்மீது பொழிந்தருளும்: உமது ஆவியை என்னிடம் இருந்து எடுத்துவிடாதேயும் (51:10-11) என்று வேண்டுகிறோம்.

நாமும் ஆண்டவரிடம் திரும்பிவரப் புறப்படுவோம். காணாமல்போன மைந்தனை அரவணைத்துக் கொண்டது போல, உம்மிடம் திரும்பி வரும் எங்களையும் அரவணைத்துக்கொள்ளும்; ஆண்ட வரே, எங்களிடமிருந்து தூய ஆவியாரை எடுத்து விடாதேயும்! நாங்கள் திரும்பி வருகிறோம். எங்களை அரவணைத்துக்கொள்ளும் என்று கூறி நமது நம்பிக்கை பயணத்தைத் தொடர்வோம்.

news
ஆன்மிகம்
கிறிஸ்துவை அடுத்து மரியாவின் இடமானது மிக உயர்ந்ததாக இருக்கின்றது! (Mary’s place is highest after Christ) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 10

1. தனது 8-வது இயலில்மனுவுருவான வார்த்தை மற்றும் மறையுடல் பற்றிய மறையுண்மையில் கன்னி மரியாவின் பங்கு மற்றும் இறைவனின் தாய்க்கான மீட்படைந்தோருடைய கடமைகள்என்பதைப் பற்றி விளக்குகின்றஇறைத் திட்டத்தில் திரு அவைஎன்ற சங்க ஏட்டைப் பின்பற்றிமரியா பற்றிய ஒரு முழுமையான கோட்பாட்டைக் கொடுப்பதற்கோ அல்லது இறையியலாளர்களுடைய ஆய்வுகளால் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படாத கேள்விகளைப் பற்றி தீர்மானிப்பதற்கோ (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 54) முயலாமல், மரியாவின் மேல் திரு அவை வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படைச் சுருக்கத்தைத் தர நான் விரும்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள குறிப்புகளையும் திருத்தூது பாரம்பரியத்தையும் (Apostolic Tradition) மற்றும் நம் காலம் வரையிலும் திரு அவையில் ஏற்பட்டிருக்கின்ற கோட்பாட்டு முன்னேற்றத்தையும் கணக்கில் கொண்டுமனுவுருவான வார்த்தை மற்றும் மறையுடலினுடைய மறையுண்மையில் கன்னி மரியாவினுடைய  பங்கு (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 54) பற்றி விவரிக்க எண்ணுகிறேன்.

மேலும், மீட்பின் வரலாற்றில் மரியாவின் பங்கானது கிறிஸ்து மற்றும் திரு அவையின் மறையுண்மையோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளதால், இதனுடைய மிக விரிவான மற்றும் அளவிட முடியாத வளமையைத் தருகின்ற இந்த அடிப்படையான ஆதாரக் குறிப்புகளின் கவனத்தை இழக்காமல், மரியியல் கோட்பாட்டிற்கான சரியான  சூழலமைவைத் தருவது முக்கியமானதொன்றாகும்.

ஆண்டவருடைய தாயின் மறையுண்மையை ஆய்கின்ற பணியானது உண்மையிலேயே விரிவானதொன்றாகும். மேலும், இது பல நூற்றாண்டுகளாகப் பல மேய்ப்பர்களையும் (pastors) இறையியல் வல்லுநர்களையும் (theologians) உள்ளடக்கியதாகும். மரியியலுடைய மிக முக்கியமான பண்புக் கூறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற அவர்களின் பணியில் சிலர் அதைக் கிறிஸ்தியலோடும் (Christology) திரு அவையியலோடும் (ecclesiology) சில நேரங்களில் விவரித்துள்ளனர். எவ்வாறாயினும், நம்பிக்கையின் எல்லா மறையுண்மைகளோடும் அவருக்குள்ள தொடர்பைக் கணக்கில் கொள்கையில் திரு விவிலியத்தின் மற்றும் திரு அவையின் பாரம்பரியத்தின் பின்னணியில் மீட்பு வரலாற்றில் அவரின் ஆளுமை மற்றும் பங்களிப்பை நன்கு தெரியும்படி செய்கின்ற அந்தச் சிறப்பானதொரு முறைக்கு மரியா தகுதியுள்ளவராகின்றார்.

2. இது திருச்சங்கத்தின் கட்டளைகளைப் பின் பற்றிகிறிஸ்துவின் தாயும், மனுக்குலத்தின் தாயும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையாளர்களின் தாயுமாகிய, இறைவனின் தாய்மீதான மீட்படைந்தோரின் கடமைகளைமிகச் சரியாக விளக்குவதற்குப் பயனுள்ளதொன்றாகத் தெரிகிறதுஉண்மையில், இறைவனின் மீட்புத் திட்டத்தில் மரியாவுக்கென்று ஒதுக்கப்பட்டப் பங்கானது, கிறித்தவர்களின் ஏற்பு மற்றும் கவனத்தை மட்டுமல்ல, நம்பிக்கையிலும் புனிதத்திலும் திரு அவைக்கு முன்செல்கின்ற அவரின் நற்செய்தி மனநிலையை வாழ்வில் வெளிப்படுத்துவதற்கான திடமான தேர்வுகளாகவும் இருக்கின்றன. இவ்வாறு நம்பிக்கையாளர்களின் செப வாழ்வின் வழியில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தைக் கொண்டு வருவதற்கு ஆண்டவருடைய தாயானவள் முன்குறித்து வைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நம்பிக்கையாளரின் பக்தி மற்றும் வாழ்வில் அவரின் தனிப்பட்ட இடத்தைத் திரு அவையின் திருவழிபாடே அங்கீகரிக்கின்றது.   மரியியல் போதனையும் பக்தியும் ஏதோ ஒருவித உணர்ச்சியின் விளைவால் வந்ததல்ல என்பதை வலியுறுத்த வேண்டியது முக்கியமானதொன்றாகும். மரியாவின் மறையுண்மை நம்பிக்கையாளர்களின் அறிவுத்திறனால் ஏற்கச் செய்வதற்குரியதொரு வெளிப்படுத்தப்பட்ட உண்மையாக இருக்கிறது. மேலும், இந்த மறையுண்மையை, எல்லா இறையியல் தளங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற சிறிதும் நெறிதவறாத கோட்பாட்டுச் சிந்தனை வழியாக மரியியல் படிப்பு மற்றும் போதனைப் பணியைத் திரு அவையில் செய்கின்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும்மரியாவில் சிறப்பாக அவர் இறைவார்த்தைக்குச் செவிசாய்த்து, அதை உள்ளத்தில் வைத்திருந்து தியானித்ததால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்றுணர்ந்து (ஒப்பிடுக. லூக்கா 11:28),  அவருடைய தாயைப் பார்க்கும் பொழுது ஆர்வத்தால் வழிநடத்தப்படாமல் (not to be led by enthusiasm) இருக்க வேண்டுமென்று இயேசுவே அவரோடு வாழ்ந்தவர்களையே அழைக்கின்றார்.

இயேசுவின் தாய் மற்றும் மீட்புத் திட்டத்தில் அவரின் பங்களிப்பைப் புரிந்துகொள்வதில் அவர் மீதான நம் பாசம் மட்டுமல்லாமல் குறிப்பாக, ஆவியாரின் ஒளியும் நம்மை வழிநடத்த வேண்டும்.  

3. மரியியல் கோட்பாடு மற்றும் பக்தி முயற்சி இவை இரண்டிலும் கடைப்பிடிக்க வேண்டிய அளவு கோல் மற்றும் சமநிலையைப் (measure and balance) பொருத்தவரை, ‘எல்லா வகையான தவறான மிகைப்படுத்துதலிலிருந்தும்விலகி நிற்பதில் கவனத்துடன் இருக்குமாறு (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 67) திருச்சங்கமானது இறைவார்த்தையை அறிவிக்கின்ற மறைப்பணியாளர்களையும் இறையியல் வல்லுநர்களையும் கண்டிப்புடன் அறிவுறுத்துகின்றது.

இந்த மிகைப்படுத்துதல் (exaggeration) கிறிஸ்துவின் தனிச்சிறப்புகளையும் திரு அவையின் எல்லாத் தனிவரங்களையும் திட்டமிட்டு மரியாவுக்கும் விரிவுபடுத்த விரும்புகின்ற மிகைப்படுத்துகின்றதொரு மனப்பான்மை (those who adopt maximalist attitude) கொண்டவர்களிடமிருந்து வருகிறது. உண்மையில், மரியியல் கோட்பாட்டில் மரியாவின் மனித நிலைக்கும் இயேசுவின் இறைமை நிலைக்கும் இடையே இருக்கின்ற எல்லையற்ற வேறுபாட்டைப் பாதுகாப்பதென்பது எப்பொழுதும் அவசியமானதொன்றாக இருக்கிறது. ‘மிக உயர்ந்த நிலையைமரியாவுக்கு வழங்குவதென்பது மரியியலுக்கானதொரு வழிகாட்டு முறையாக (norm of Mariology) முடியாது. இது (மிக உயர்ந்த நிலை) அவரின் உன்னதமான பணியின் நிமித்தம் கன்னி மரியாவுக்குக் கடவுளின் கொடைகள் எனக் கருதி திருவெளிப்பாட்டின் சான்றிற்கு (testimony of Revelation) உறுதியானதொரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல, திருச்சங்கமானது இறையியல் வல்லுநர்களையும் மறைப்பணியாளர்களையும் மிகவும் குறைத்துக் கூறுகின்றதொரு மனநிலையிலிருந்துவிலகி நிற்குமாறு அதாவது, மிகவும் குறைத்துக் கூறும் ஆபத்திலிருந்து (Danger of a Minimalism) குறிப்பாக கோட்பாட்டு நிலைப்பாட்டில், இறைவார்த்தையை விளக்கும் முறையில் மற்றும் பக்தி முயற்சிகளில் சுட்டிக்காட்டப்படக் கூடிய மீட்பின் வரலாற்றில் மரியாவின் முக்கியத்துவம், அவரின் கன்னித்தன்மை மற்றும் புனிதத்தைக் குறைக்க முயல்கின்ற மற்றும் பெரும்பாலும் மறுக்கின்ற ஆபத்திலிருந்து விலகி நிற்க அறிவுரை கூறுகின்றதுதிருவிவிலியம் மற்றும் கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளவாறு வெளிப்படுத்தப்பட்ட உண்மை மீதான (revealed truth) திடமான மற்றும் உண்மையான நம்பிக்கையின் வழியாக அத்தகைய மிகைப்படுத்தும் (extreme positions) நிலைப்பாடானது எப்பொழுதும் தவிர்க்கப்பட வேண்டும்.

4. திருச்சங்கமே உண்மையான மரியா கோட்பாட்டை ஆய்ந்தறிவதற்கானதொரு நெறிமுறையை நமக்குக் கொடுக்கிறது: மரியாதிரு அவையில் கிறிஸ்துவிற்குப் பிறகு மிக உயர்ந்த மற்றும் நமக்கு மிக அருகிலுள்ளதுமானதொரு இடத்தைப் பெறுகின்றார் (இறைத்திட்டத்தில் திரு அவை எண். 54).

மிகவும் உயர்ந்த இடம்: மீட்பின் மறையுண்மையில் மரியாவுக்குக்  கொடுக்கப்பட்ட இந்த மேன்மையான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும், இது முற்றிலும் கிறிஸ்துவோடு உள்ள உறவு சம்பந்தமான ஓர் அழைத்தலின் கேள்வியாக இருக்கின்றது.

நமக்கு மிகவும் நெருக்கமான இடம்: நம் வாழ்வானது மரியாவின் முன்மாதிரி மற்றும் பரிந்துரையால் ஆழமான முறையில் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறது. இருப்பினும், அவரோடு நெருக்கமாக இருப்பதற்கான நம் முயற்சி பற்றி நாம் நம்மையே கேள்வி கேட்டுப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த மீட்பு வரலாற்றுப் போதனையும் மரியாவை உற்றுநோக்குவதற்கு நம்மை அழைக்கின்றது. கடவுளின் விருப்பத்திற்கு மிகச் சரியாக ஒத்துப்போவதன் மாதிரியாக அவரைக் கருதுவதற்கு எல்லாக் காலத்திலும் கிறித்தவ கடுந்துறவு வாழ்வானது (christian asceticism) நம்மை அழைக்கின்றது. புனிதத்தின் மாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியா விண்ணகத்திற்கான பயணத்தில் நம்பிக்கையாளர்களின்  காலடிச் சுவடுகளை என்றும் வழிநடத்துகின்றார்

நம் அன்றாட வரலாற்று நிகழ்வுகளில் தனது உடனிருப்பின் வழியாக, மரியா எப்பொழுதும் நமக்கு நிலையான மீட்பின் இலக்கைச் சுட்டிக்காட்டி, சோதனை நேரங்களில் நம்மைத் தேற்றுகிறார். மேலும், நமது துயரங்களில் நமக்கு ஊக்கமூட்டுகிறார். இவ்வாறாக, தாய் என்ற முறையில் அவரின் பங்கானது எப்பொழுதும் மிகத் தெளிவாகப் பார்க்கப்படுகின்றது; கரிசனையுள்ள மற்றும் கண் விழித்துக் காத்திருக்கும் தாயாக யாரைச் சிலுவையிலிருந்து நம் ஒவ்வொருவருக்குமே இயேசு மீட்பர் கொடுத்தாரோ, அவரை நம்பிக்கையில் அவரின் பிள்ளைகள் என்கின்ற வகையில் நாம் வரவேற்க வேண்டும்.

மூலம்: Pope John Paul II, Mary’s place is highest after Christ, in “L’Osservatore Romano”, Weekly Edition in English, 10 January 1996, p.11.

news
ஆன்மிகம்
இயற்கையைப் பேணலும் இறைவேண்டலே! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 37)

இன்றைய மனித வாழ்வின் மகிழ்வும் ஏக்கமும் கவலையும் கிறித்தவர்களுக்கும் முற்றிலும் உரியனவே. கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயத்தில் உண்மையான மனிதக் கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றனஎன்னும் புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்குகிறதுஇன்றைய உலகில் திரு அவைஎன்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டு.

காலத்தின் அறிகுறிகளைத் துழாவி உய்த்துணர்ந்து எதிர்வினையாற்ற நம்மை அழைக்கிறது நம் திரு அவை. அந்த அழைப்பின் அடிப்படையில் நமது இறைவேண்டலும் மரபின் பார்வைகளையும் அனுபவங்களையும் கடந்து, இன்றைய வாழ்வின் உண்மைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

அவ்வாறு நோக்கும்போது நம்மை உலுக்குகின்ற ஓர் அறைகூவல் சுற்றுச்சூழல் மாசு. அதன் விளைவாகப் புவி வெப்பமயமாதலும், தொடரும் இயற்கைச் சீற்றங்களும் மனித குலத்தை அச்சுறுத்துகின்றன. எனவே, இயற்கையைப் பேணுவதையும், சுற்றுச்சூழலைப் பராமரிப்பதையும் ஓர் அவசரக் கடமையாக மேற்கொள்ள அழைக்கிறது நம் திரு அவை.

நம் திருத்தந்தை பிரான்சிஸ்சுற்றுச்சூழல் பராமரிப்பின் திருத்தூதர்என அழைக்கப்படுமளவுக்குத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். 2015-ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தந்தையின் சுற்றுமடலானஇறைவனுக்குப் புகழ் (லவு தாத்தோ சி) வெப்பநிலை மாற்றத்தை இன்றைய உலகின்அறநெறிச் சிக்கல்என்று குறிப்பிட்டு, அதற்கு விடை காண நல்மனம் கொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தது.

யூபிலி 2025 கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலிக்கு ஆயத்தமாக நாம் அனைவரும் இறைவேண்டல் செய்யப் பணித்தார். இறைவேண்டலைப் பற்றி விளக்கும்போது, ‘படைப்பின் கடவுளுக்கு நன்றி செலுத்தவும், படைப்பைப் பாதுகாக்கவும் நமது இறைவேண்டல் உதவ வேண்டும்என்றார்.

திருவிவிலியத்தைக் கூர்ந்து நோக்கும்போது, இயற்கை இறைவனின் கைவேலை; எனவே, நாம் இயற்கையை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்னும் செய்திகள் இழையோடுவதைக் காணலாம். “மண் ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே (திபா 24:1-2) என்னும் திருப்பாடல் வரிகள் ஓர் எடுத்துக்காட்டு. எசாயா இறைவாக்கினரின் சொற்களில்நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகம் தளர்ந்து வாடுகின்றது. நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது (எசா 24:4-5) என்னும் எச்சரிக்கை மொழிகளைப் பார்க்கிறோம். நிலம், நீர், காற்று, மரம், செடி கொடிகள் மானிடரால் மாசுபடுத்தப்படுவது முற்காலத்திலிருந்து இன்றும் தொடர்வது வருத்தத்துக்குரியது.

திரு அவை வரலாற்றில் இயற்கையை மதித்துப் போற்றிய பல மாமனிதர்களைப் பார்க்கிறோம். பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸ் அசிசியார் இயற்கையோடு உறவாடிய ஒரு புனிதர். எனவே, அவர்சுற்றுச்சூழலின் பாதுகாவலர்என அழைக்கப்படுகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித கத்தேரி டெகாக்விதா (Kateri Tekakwitha) ஓர் அமெரிக்கப் பழங்குடியின இளம்பெண். தனது 19 வயதில் கத்தோலிக்கராகி, 24-ஆம் வயதில் இறையடி சேர்ந்தவர் (1656-1680). இவரைச் சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் பாதுகாவலி என்று அழைக்கிறது திரு அவை.

இன்று நம் திரு அவை எத்தனையோ வழிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதில் நாம் பெருமையடையலாம். எவற்றையெல்லாம் உலக நாடுகள் பின்பற்ற வேண்டுமோ, அவற்றையெல்லாம் திரு அவையின் தலைநகராம் வத்திக்கான் மாநகரம் செயல்படுத்தி வருகிறது. வத்திக்கான் நகரின் கரும்புகை வெளியீட்டை 2050-ஆம் ஆண்டுக்குள் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்கள் மட்டுமே வத்திக்கான் நகரில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி, சூரியஒளி மின் திட்டம் ஆகியவற்றை மட்டுமே இனி வத்திக்கான் நகரம் பயன்படுத்தும். குப்பை மேலாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து, தேவையற்ற குப்பைகளை அகற்றிவிட்டது. பயன்படுத்தப்பட்ட பல பொருள்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துகிறது. ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு, சுற்றுச்சூழல் பராமரிப்பில் பிற நாடுகளுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்கிறது திருத்தந்தையின் தலைமையில் இயங்கும் வத்திக்கான் நகரம்.

இன்று உலகில் 2,800 மறைமாவட்டங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இணைந்து சுற்றுச்சூழல் பராமரிப்பை முன்னெடுத்தால், அது உலகின்மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காகஇறைவனுக்குப் புகழ் இயக்கம்(Laudato Si Movement) தொடங்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் இந்தச் சுற்றுமடலை அனைத்து மறைமாவட்டங்களிலும் பரவச் செய்தல், மறைமாவட்ட அளவில் சுற்றுச்சூழல் வல்லுநர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்குதல், நமது வழிபாடுகளில் சுற்றுச்சூழல் பராமரிப்பு தொடர்பான மன்றாட்டுகள், பாடல்கள், மறையுரைகளை இணைத்தல், செயல்திட்டங்களை உருவாக்கி அவற்றைக் கண்காணித்தல், நமது விழாக்கள், கூட்டங்களில் நெகிழி போன்ற சுற்றுச்சூழல் மாசுகளைத் தவிர்த்தல், சுற்றுச்சூழல் போராளிகளுக்கு ஆதரவு அளித்தல் போன்றவற்றைச் செய்ய இவ்வியக்கம் ஊக்குவிக்கிறது.

தனிப்பட்ட விதத்தில் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

இறைச்சி உண்பதைக் குறைத்தல், தனி வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல், நெகிழிப் பயன்பாட்டை அறவே தவிர்த்தல், உணவு, தண்ணீரை வீணாக்காமலும், மாசுபடுத்தாமலும் பயன்படுத்துதல் போன்றவற்றின் வழியாக நாமும் நமது பங்களிப்பை வழங்கலாம்.

தேவையானது ஒன்றே: இயற்கையைப் பேணலும் இறைவேண்டலே என்னும் விழிப்புணர்வே அது!

news
ஆன்மிகம்
அருளும் உறவும் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 10)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

மார்த்தா:பாதர், கடந்த முறை நாம் பேசிக் கொண்டிருந்தபோது, கடவுளின் அளப்பரிய ஆற்றல் அருளடையாளங்கள் வழியாக நம்மீது பொழியப்பட்டாலும், பெரும்பாலான மனிதர்கள் அதைப் பெற்றுக்கொள்வதில்லை என்ற கருத்தை முன் வைத்தீர்கள். அது குறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”

அருள்பணி:ஒருசில உதாரணங்களைப் பார்க்கலாம்! மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாம் பாத்திரத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வைக்காத வரை மழைநீர் நமதாவதில்லை. பூக்கள் நிறைந்த ஒரு தோட்டம் வழியே நாம் செல்லும்போது அந்த இடம் முழுவதும் நறுமணத்தால் நிரம்பியிருக்கிறது. எனினும், நாம் மூக்கடைப்பால் அவதிப்பட்டோம் என்றால், நறுமணத்தை உணரப்போவதில்லை. தோட்டம் நறுமணத்தை நமக்குத் தந்தாலும், நாம் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக, அதைப் பெற்றுக்கொள்வதில்லை.”

அன்புச் செல்வன்:தந்தையே! மற்றுமோர் உதாரணத்தை நான் தருகிறேன். பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக எத்தனையோ நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றோம். ஆனால், பிள்ளைகளிடம் சரியான மனநிலை இல்லை என்றால், அவற்றை உள்வாங்குவதில்லை, தங்களுடையதாக ஆக்குவதுமில்லை.”

அருள்பணி:ஆம்! இது கடவுளின் கொடைக்கும் பொருந்தும். கடவுளின் கொடைகள் பொழியப்பட்டாலும், அவற்றை நமதாக்குவதற்கு நம்மிடம் சரியான மனப்பக்குவம் இருக்கவேண்டும்.”

கிறிஸ்டினா:அது என்ன தந்தையே!”

அருள்பணி:கடவுளின் கொடைகளை நாம் பெற்றுக்கொள்ள, இரண்டு விதங்களில் நம்மை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவதாக, கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவில் நாம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இரண்டாவதாக, நம் மனத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.”

அகஸ்டின்:ஒவ்வொன்றாக விளக்குங்கள் தந்தையே!”

அருள்பணி: கடவுளிடம் நாம் அருளைப் பெறுவதற்கும், அவரோடு உறவுகொள்வதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. சாதாரணமாக மனித உறவில்கூட, நாம் சகமனிதரோடு கொள்ளுகின்ற உறவின் ஆழத்திற்கேற்பவே  அவரிடமிருந்து கொடைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நம் பிறந்த நாளுக்கு வருபவர்களில் எப்பொழுதோ நம்மிடம் பேசும் ஒரு நபரும், நம் நெருங்கிய நண்பர் ஒருவரும் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு பேருமே பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள். நிச்சயமாக இருவரும் ஒரே மாதிரியான பரிசுகளை வழங்குவதில்லை. எனவே, கடவுளின் கொடைகளை அதிகமதிகமாக நமதாக்க வேண்டுமெனில், அவருக்கும் நமக்குமிடையேயான உறவை நாம் ஆழப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.”

அகஸ்டின்:கடவுளோடு நாம் கொள்ளக்கூடிய உறவை ஆழப்படுத்துவது குறித்து கொஞ்சம் சொல்லுங்கள் தந்தையே!”

அருள்பணி:கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மனிதர்களுக்கிடையேயான உறவைப் பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்வது அவசியமானது. மனித உறவில் நான்கு நிலைகள் உள்ளன. முதலாவது, அறிமுக நிலை: ஒரு நபரை நாம் புதிதாகச் சந்திக்கும்போது நிகழ்வது. இரண்டாவது, அறிவு சார்ந்த நிலை. ஒருவருக்கொருவர் தகவல்களையும் அறிவுப்பூர்வமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது. மூன்றாவது, உணர்வுநிலை. ஒருவர் மற்றவர்மீது உணர்வுப்பூர்வமாக ஈடுபாடு கொண்டிருப்பது. நான்காவது நெருக்க நிலை (intimate stage). தனக்கும் அடுத்த நபருக்குமிடையேயான ஆழமான தொடர்பை எல்லா நேரங்களிலும் உணரும் நிலை இது.

கடவுளோடு உள்ள உறவிலும் நாம் இந்த நான்கு நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சிலர் ஆலயத்திற்கு எப்போதாவது வருவது, ஒருசில குறிப்பிட்ட மனப்பாடம் செய்யப்பட்ட வார்த்தைகளை இறைவேண்டல்களாகச் சொல்வது, கடமை உணர்வோடு கிறித்தவ வாழ்வை அணுகுவது போன்ற செயல்பாடுகளைச் செய்கின்றனர். இது அம்மனிதர்கள் கடவுளுக்கும் தங்களுக்குமிடையேயான உறவில் அறிமுக நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அடுத்ததாக, ஆன்மிக வாழ்வு பற்றிய புத்தகங்களை வாசிப்பது, அதன் பின்னணியில் தன் வாழ்வைப் புடமிடுவது போன்றவை நாம் இறையுறவில் இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேற்கண்ட இருவிதமான செயல்பாடுகளை ஆர்வத்தோடும் தேடலோடும் தொடர்ந்து மேற்கொண்டோம் என்றால், நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒருவிதமான உணர்வுப் பிணைப்பு ஏற்படுவதை நம்மால் உணர முடியும். இது நாம் இறையுறவின் மூன்றாம் நிலைக்குள் கடந்து செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய உணர்வுநிலைக்குள் நாம் ஆழப்பட ஆழப்பட கடவுளைப் பற்றிய உணர்வு எப்பொழுதுமே நம்மோடு இருந்து கொண்டிருக்கும். இதுவே நான்காவது நிலை.”

கிறிஸ்டினா:இறையுறவின் இந்த நான்கு நிலைகளுக்கும், கடவுளின் அருளை நாம் பெற்றுக் கொள்வதற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்கிறீர்கள். அப்படித்தானே!”

அருள்பணி:ஆம்! புனித அவிலா தெரசா ஓர் அழகான உதாரணம் கொண்டு இக்கருத்தை விளக்குகிறார். ஒரு தோட்டத்திற்கு நாம் நீர் பாய்ச்சும்போது, நான்கு வகைகளில் நீர் பாய்ச்ச முடியும். முதலாவதாக, கிணற்றிலிருந்து வாளியின் வழியாக நீரை இறைத்துப் பாய்ச்சுவது. இரண்டாவதாக, இயந்திரங்களின் உதவியோடு நீரை இறைத்துப் பாய்ச்சுவது. மூன்றாவதாக, அந்தப் பகுதியில் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருந்தது என்றால், அதைப் பாத்திகளுக்குத் திருப்பிவிடுவது. நான்காவதாக, மழையின் வழியாகத் தோட்டம் நீரைப் பெற்றுக் கொள்வது.

நம் உள்ளமாகிய தோட்டத்திற்கு இறைவனின் அருளாகிய நீரை நாம் பெற முயற்சிக்கிறோம். உறவின் தொடக்கநிலையில் இருந்தோம் என்றால், அது கிணற்றிலிருந்து வாரி இறைத்து நீரைப் பெற்றுக்கொள்வது போன்றது. நம் வாழ்வில் நாம் நிறைய முயற்சிகளை எடுப்பது போன்று தெரியும்! அதனால் கிடைக்கும் பலனோ மிகவும் குறைவானதாக இருக்கும். அதேவேளையில், கடவுளுக்கும் தங்களுக்குமிடையேயான உறவில் நான்காவது நிலையாகிய நெருக்க நிலைக்குச் சென்றவர்களோ, கடவுளின் அருள்மழை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தங்களது உள்ளமாகிய தோட்டத்தில் பொழியப்படுவதை உணர்கிறார்கள்.”

அன்புச் செல்வன்:தந்தையே! நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது, ஊதாரிமைந்தன் உவமையின் பின்னணியில் ஒரு சிந்தனை எனக்குத் தோன்றுகிறது. மூத்தமகன் தன் தந்தையைப் பார்த்து, தான் அவருக்கு அடிமைபோல்  வேலை செய்ததாகவும், தந்தையோ தன் நண்பர்களோடு கொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட தரவில்லை என்று சொல்வான். தந்தையோ, ‘மகனே! என்னுடையவை யாவும் உன்னுடையவையேஎன்று சொல்வார். அதாவது தந்தையுடைய சொத்து முழுவதும் தனக்கு உரிமை என்றாலும், மூத்தவனிடம் மகன் என்ற உணர்வை விட, அடிமை என்கின்ற உணர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக, ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட எடுக்க யோசித்திருக்கிறான். இது அவனிடம் இருந்த பிரச்சினைதானேயொழிய, தந்தையுடைய பிரச்சினையில்லை.”

அருள்பணி:ஆம்! கடவுளின் அருள் எல்லா இடங்களிலும் எப்பொழுதுமே கொட்டிக் கிடந்தாலும், நமது மனநிலைக்கு ஏற்பவும், நம் உறவு நிலைக்கு ஏற்பவுமே நாம் பெற்றுக் கொள்கிறோம்.”

மார்த்தா:கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவை ஆழப்படுத்திக் கொள்வது எப்படி பாதர்?”

அருள்பணி:கடவுளுடனான உறவு என்பது ஆலயத்தோடு முடிந்துவிடக்கூடிய ஒன்று மட்டுமல்ல! சக மனிதர்களுடனான உறவில் ஆழப்படும்போதும், இயற்கையுடனான நம் உறவு ஆழப்படும்போதும், கடவுளோடு உள்ள உறவில் நாம் வளர்கிறோம் என்று அர்த்தம். அடுத்தபடியாக, ஆலயத்தில் நாம் கொண்டாடும் அருளடையாளக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முயற்சிப்பதன் வழியாகவும் இறையுறவை நாம் ஆழப்படுத்திக் கொள்ள முடியும்.”

கிறிஸ்டினா:அர்த்தமுள்ள அருளடையாளக் கொண்டாட்டம் என்றால் என்ன தந்தையே?”

அருள்பணி:ஒவ்வோர் அருளடையாளக் கொண்டாட்டத்திலும் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, வெளியடையாளச் செயல்பாடுகள். இரண்டு, இவ்வடையாளச் செயல்பாடுகள் சுட்டிக்காட்டும் அனுபவம். பல நேரங்களில் அருளடையாள நிகழ்வுகளைக் கொண்டாடுபவர்களும் சரி, பங்கேற்பவர்களும் சரி, இரண்டாவது பகுதிக்குள் நுழைவதே கிடையாது. வெளி அடையாளங்களாக இருக்கும் சில வார்த்தைகளையும் செயல்பாடுகளையும் நாம் பிடித்துக்கொண்டு, அவை சுட்டிக்காட்டும் அனுபவத்திற்குள் செல்வதில்லை. சரியான பங்கேற்பு என்பது அடையாளச் செயல்பாடுகள் சுட்டிக்காட்டும் அனுபவத்திற்குள் நுழைய முயற்சி எடுப்பது. அப்போது நம் உள்ளத்திற்குள் இறைவனின் அருள் அபரிமிதமாகப் பொழியப்படுவதை உணர ஆரம்பிப்போம்.”  

(தொடரும்)

news
ஆன்மிகம்
வாழ்வை எழுதுதல் (கண்டனையோ, கேட்டனையோ! – 28)

அமெரிக்க இறையியலாளர் ஜெரி மெக்ரெகோர் எழுதி,  மும்பை பவுலைன் பதிப்பகம் வெளியிட்டுள்ள40 Ways to Get Closer to Godஎன்ற ஆங்கில ஆன்மிகப் புத்தகத்தை அண்மையில் விரும்பி வாசித்தேன். சிறிய நூல். ஆற்றொழுக்கான ஆங்கிலம். திருவிவிலியச் சான்றுகளும், பிரபல ஆன்மிகவாதிகளின் மேற்கோள்களும், எழுத்தாளர் படித்தவர் என்பதைக் காட்டுகின்றன.  விரிவான 40 தலைப்புகள்; ஒவ்வொரு பிரிவின் கீழும் வாசகர் செய்து பார்க்கக்கூடிய பயிற்சிக் குறிப்புகள்... என ஜெரி மெக்ரெகோர் இந்த நூலை ஏறக்குறைய ஒருspirtual workbook-ஆன்மிக பயிற்சிக் கையேடு வடிவில் தந்துள்ளார்.  200 ரூபாய்  தாராளமாகக் கொடுக்கலாம்.

கடவுளை நெருங்கிச் செல்ல வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், அது Repidex-இன்முப்பது நாளில் ஆங்கிலம் கற்பதுபோன்று அவ்வளவு எளிதான செயல் அல்ல; ஆயுள்கால அர்ப்பணிப்பு தேவை. ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டும். நிறையத் தேர்வுகள் நடக்கும். விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும். பல நேரங்களில் இது கடினமாக உள்ளது. ஒரு கோர்வையாக நம்மால் ரொம்ப தூரம் செல்ல முடிவதில்லை. உலகம் அடிக்கடி குறுக்கே வந்துகேட்போடுகிறது. ‘சரிஎன்று ஓர் இடைவெளி எடுத்துக்கொண்டு போய், சில பலஇன்ப/துன்ப சுற்றுலாக்கள்அடித்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கடவுள் விலகிப் போய், கண்ணுக்கெட்டாத தொலைவில் நின்றுக் கொண்டிருக்கிறார். திரும்பவும் முதலிலிருந்தா? கடவுளை நெருங்கிச் செல்லும் ஆன்மிகப் பயணத்தில், நாம் தொடர்ந்து நீடித்திருக்க ஜெரி மெக்ரெகோர் 40 நடைமுறைக் குறிப்புகளை இந்நூலில் தருகிறார். அவற்றில் இரண்டு பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே...

நோன்பு: அறிவியலாளர்கள் அவ்வப்போதுஅழிந்து வரும் உயிரினங்கள்என்று ஒரு பட்டியல் வெளியிடுவார்கள். வாசித்திருக்கிறீர்களா? காண்டாமிருகம், பனிச்சிறுத்தை, கொரில்லாக்கள் என்று. அதுபோல அழிந்து வரும் நல்ல பழக்கங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், முதல் பத்து இடத்தில் நோன்பு கட்டாயம் இருக்கும். மற்றொரு பழக்கம், பெரியவர்களுக்குவணக்கம்சொல்வது (அழிந்து வரும் அருளடையாளம்-ஒப்புரவு). உடல் ஒறுத்தலுக்கு தமிழ்க் கலாச்சாரத்தில் முக்கிய இடம் உண்டு. முன்பெல்லாம் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருப்பார்கள்இப்போது அது வழக்கொழிந்து விட்டது. மக்கள் நிறையச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைகள். பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற துரித உணவுகள் வருகைக்குப் பின், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இன்றுobesityஎன்று சொல்லப்படும் உடல் பருமன் பிரச்சினை, இந்தியாவில் ஒரு கொள்ளை நோய்an epidemic எனக் கூறுகிறார்கள். ஆசைப்படுவதை, ஆசைப்படும் நேரத்தில், ஆசைப்படும் அளவுக்குச் சாப்பிடுவது சுதந்திரம் அல்ல, அடிமைத்தனம். இதை foodies உணர வேண்டும்.

உணவு விளம்பரங்கள் அளவுக்கு, உடல் எடையைக் குறைக்கும் நிறுவன விளம்பரங்கள் பெருகிவிட்டன. அண்மையில் இரயிலில் பயணம் செய்தபோது, இரயிலின் சிறிய டாய்லட் கதவில் இது போன்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ‘உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?’ என்ற கேள்வியும், வயிறு தள்ளிய ஓர் ஆணின் அரை நிர்வாணப் படமும் போட்டு முகவரி, போன் நம்பர் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளம்பரம் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று இது ஒரு பணம் கொழிக்கும் தொழில். சிறப்பு உணவுகள், ஆலோசனைகள், உடற்பயிற்சிகள், சப்போர்ட் குழுக்கள் எனக் கலர் கலர் வார்த்தைகளில் ஆசை வலை விரித்து, பணம் பிடுங்குகிறார்கள்.   அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் மக்கள் 40 கோடி டாலர்களை எடையைக் குறைக்கச் செலவிடுகிறார்களாம். அந்தப் பயிற்சியாளர்கள் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார்கள்? ‘உணவைக் குறை, நடஎன்பதைத் தவிர்த்து! ஓர் ஆன்மிகப் பயிற்சியாக நோன்பும் அதையே சொல்கிறது... ‘உணவைக் குறை; கடவுளை நோக்கி நட!’

திருவிவிலியம் நோன்பிற்கு முக்கிய இடம் கொடுக்கிறது. யூதப் பண்பாட்டில் அது ஒரு முக்கிய சமய, ஆன்மிகச் செயல்பாடு. கடவுள்மீது கவனத்தைக் குவிக்கும் அரசபாட்டைபாவக்கழுவாய் நாளில், இஸ்ரயேல் நாடு முழுவதும் மக்கள் நோன்பிருந்தார்கள். மத்தேயு 6:16-இன் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்: “நீங்கள் நோன்பு இருக்கும் போது....” என்று கூறி இயேசு ஆரம்பிக்கிறார். “நீங்கள் நோன்பு இருந்தால்.....” என்று கூறவில்லை. நோன்பு, ஒரு சாதாரண யூதச் செயல். இயேசு தம் பணிவாழ்வை ஆரம்பிக்கும் முன், பாலைவனத்திற்குச் சென்று நாற்பது நாள்கள் நோன்பிருக்கிறார். “அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லைஎன்று லூக்கா 4:2-இல் கூறப்பட்டுள்ளது. நோன்பும் இறைவேண்டலும் கைகோர்க்கும்போது, அது ஒரு வல்லமை மிக்க கருவி. “ஏன் இந்தப் பேயை எங்களால் ஓட்ட முடியவில்லை?” என்று சீடர்கள் கேட்கும்போது, இயேசு, “இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி, வேறு எதனாலும் வெளியேறாதுஎன்று மாற்கு 9:29-இல் கூறுகிறார்.

தொடக்கக்காலத் திரு அவை வாழ்விலும் நோன்பைப் பார்க்க முடிகிறது. திப 13-ஆம் பிரிவில், பவுலையும் பர்னபாவையும் பணிக்கு அனுப்பும் போது, “அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள். தங்கள் கைகளை அவ்விருவர் மீதும் வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்என்று கூறப்பட்டுள்ளது.

நோன்பு கடவுளை நெருங்கிச் செல்ல ஒரு முக்கிய வழி. உணவில் மட்டுமல்ல, பல வடிவங்களில் நோன்பு செயல்படுத்தப்படலாம். பொருள்களை வாங்கிக் குவிப்பது, அலங்காரம் செய்வது, ஃபேஸ் புக், ரீல்ஸ் போன்ற தளங்களில் மேய்வது, வீடியோ கேம்ஸ் ஆடுவது, புறணிப் பேசுவது.... என நம்மை ஆட்டுவிக்கும் எந்த இச்சையையும் சில காலம் உத்தரவாதமாகத் தவிர்த்து, அது ஏற்படுத்தித் தரும் sielnt space... அமைதி வெளியில், கடவுளைப் பற்றி சிந்திக்க முடிந்தால், அதுதான் நோன்பு. முயன்று பார்க்கலாம்.

ஆன்மிக நாள்குறிப்பேடு: ஜெரி மெக்ரெகோர் தன் நூலில் பரிந்துரைக்கும் மற்றொரு வழி, ஆன்மிக நாள்குறிப்பேடு எழுதுவது A spiritual diary! இன்றைக்கு யாரும் டைரி எழுதுகிறார்களா? என்று தெரியவில்லை. அப்பாயின்ட்மென்ட் மற்றும் நிகழ்வுளைக் கூட google calendar போன்ற செயலிகளில் குறித்துக்கொள்வது வசதியாக உள்ளது. ஆனால், கடவுள் டைரி எழுதுகிறார்... ஒவ்வொரு நாளும்! திபா 56:8-இல், “என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?” என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். அந்தக் குறிப்பேட்டை வாய்ப்பு கிடைக்கும்போது வாசித்துப் பார்க்க வேண்டும்.

எதில் எழுதுகிறோம் என்பது முக்கியம் அல்ல; எழுதுவதுதான் முக்கியம்! தாளிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ... எதிலாவது எழுதி வையுங்கள். அதுதான் ஜெரி மெக்ரெகோர் கூறும் அறிவுரை.

பிரபல டச்சு ஆன்மிக எழுத்தாளர் ஹென்றி நோவன், “நான் தொடர்ந்து எழுதுகிறேன். எழுதுவதை எப்போதும் நிறுத்துவதில்லை. எழுத்தே என்னை உயிருடன் வைத்திருக்கிறது. என் எழுத்து, என்னிடமிருந்தே என்னை சற்று விலக்கி வைத்து, நான் ஆற்றாமையில் அமிழ்ந்து விடாமல் பாதுகாக்கிறதுஎன்று கூறுகிறார்.

எழுதச் சொல்லிப் பணிக்கிறது திருவிவிலியம். குறிப்பாக, பழைய ஏற்பாடு. ‘எழுதி வை... எழுதி வைஎன்று எத்தனை முறை கடவுள் திருவிவிலியத்தில் கூறுகிறார். விடுதலைப் பயணம் 17:14-இல் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவு கூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவைஎன்று கூறுகிறார். அபக்கூக்கு 2:2: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுதுஎன்று கூறுகிறது. திருவெளிப்பாடு 1:19-இல், வானதூதர் யோவானிடம், “எனவே, நீ காண்பவற்றை அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவைஎன்று கூறுகிறார்.

ஏன் எழுத வேண்டும்? ஏனென்றால், மனிதர்கள் மிகப்பெரும் மறதியாளர்கள். நம் டிசைன் அப்படி! எளிதில் எல்லாவற்றையும் மறந்து விடுவோம். எழுதி வைக்கப்படும் சொற்கள் நம் நினைவைப் புதுப்பித்து, அவை அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றன.

சரி, மெக்ரெகோர் சொல்லும் இந்த ஆன்மிக டைரியில் என்ன எழுத வேண்டும்? ‘அங்கே  போனேன், இங்கே போனேன், அவளைப் பார்த்தேன், புடவை நன்றாக இருந்தது, சாப்பாடு காரமாக இருந்ததுபோன்றஅல்பங்கள்கூடாது. இது போன்ற தகவல்களுக்கு எந்த டைரி மதிப்பும் இல்லை. உங்கள் ஆன்மிக அனுபவங்களை எழுதுங்கள். நீங்கள் நினைப்பது, உணர்வது, உங்களுக்குத் தோன்றுவது, உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், ஆற்றாமைகள், நம்பிக்கைகள், தோல்விகள், சவால்கள், உறவுகளில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசங்கள், துக்கங்கள், முடிவுகள்! இதில்சரி-தப்புஎன்று எதுவும் இல்லை. இது உங்களுக்கே உங்களுக்கான பிரத்யேக டைரி.

இலக்கணப் பிழையில்லாமல், மார்ஜின் கோடு போட்டு, கண்ணில் ஒத்திக்கொள்ளும் கையெழுத்தில், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இயல்பாக எழுதுங்கள். நீங்கள் மட்டும்தான் வாசிக்கப் போகிறீர்கள். கடவுள் இலேசாக எட்டிப் பார்க்கலாம். உண்மையாக எழுதுங்கள். பொறாமைப்பட்டால், ‘பொறாமைப்பட்டேன்என்று எழுதுங்கள். உங்களுக்கு நீங்களே பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி எழுதிய பல நாள்களின் குறிப்புகளை ஓர் இடைவெளி விட்டு, ஒருசேர வாசிக்கும்போது, உங்களுக்குச் சில புரிதல்கள் கிடக்கும். ‘நான் முன்னேறுகிறேனா? இல்லை, பின்னோக்கிச் செல்கிறேனா? என் பலவீனங்கள் என்ன? நான் எங்கு சறுக்குகிறேன்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்? என் பலங்கள் என்ன? அவற்றை எப்படி இன்னும் வளர்க்கலாம்? நான் கைவிட வேண்டிய விசயங்கள் என்ன? நான் மாற்றி அமைக்க வேண்டிய விசயங்கள் என்ன?’

அந்தக் குறிப்புகளினால் உங்களுக்குக் கிடைக்கும் திறப்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

யாருக்குத் தெரியும்? ஒரு சாதாரண டைரி எழுதும் பழக்கம், உங்கள் வாழ்க்கை வரலாற்றையே மாற்றி எழுதலாம்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)