news
ஆன்மிகம்
மாற்று வாழ்வியலும் இறைவேண்டலே! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 37)

‘இறைவேண்டல் என்பது சொற்களைக் கடந்து வாழ்வில் வெளிப்பட வேண்டும். நமது வாழ்வு இறைவனுக்குச் சான்று பகர்வதாக இருக்கும்போது, அதுவே ஓர் இறைவேண்டலாக மாறுகிறது. கடவுளின் தீவிர சாட்சியாக வாழ்ந்து, இறையாட்சியின் அடையாளமாகத் திகழ்வதும் ஒரு சிறந்த இறைவேண்டலே என்பதை நமது இறைவேண்டல் பார்வையில் இணைத்துக்கொள்ள வேண்டும். திருவிவிலியத்தில் இத்தகைய மாற்று வாழ்வியல் சான்றுகளாகப் பலரைப் பார்க்கிறோம்.

1. திருமுழுக்கு யோவான்: இயேசு மக்களோடு ஒன்றாகக் கலந்து இறைப்பணியாற்றிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், திருமுழுக்கு யோவான் ஒரு தீவிர மாற்று வாழ்வியல் சான்றாக இருந்தார். அவர் மக்களைவிட்டு விலகி, பாலைநிலத்தில் வாழ்ந்தார். அவர் “ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார் (மத் 3:4).

இவ்வாறு, உணவு, உடை, வாழுமிடம், போதனை என அனைத்திலும் தீவிர மாற்று வாழ்வியலாளராக விளங்கினார். அவரது வாழ்வும் பணியும் மக்களுக்கு மாபெரும் அறைகூவலாக விளங்கியது. “மக்கள் யோவானை இறைவாக்கினர் என்று உறுதியாய் நம்பியிருந்தனர் (லூக் 20:6). அவரைப் பார்த்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அஞ்சினர். ஏன், ஏரோது அரசன்கூட அஞ்சினான். காரணம், யோவான் ‘நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்திருந்தான் (மாற் 6: 20).

2. இறைவாக்கினர் கைம்பெண் அன்னா: கணவனை இழந்துவிட்டால் வாழ்வே முடிந்து விட்டது என்று கருதி, தங்கள் வாழ்வு வட்டத்தைச் சுருக்கிக்கொள்ளும் பெண்கள் இன்றளவும் நம்மிடையே உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அன்னா, ஒரு மாற்று வாழ்வியல் சான்றாகவும், இன்றைய பெண்களுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார்.

அவரைப் பற்றிய குறிப்புகளை லூக்கா நற்செய்தியில் பார்க்கிறோம். “ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்த பின் கைம்பெண் ஆனவர். அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி, அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தார் (லூக் 2:36-37). அவர் கோவிலிலேயே தங்கியிருந்தார், நோன்பிருந்தார், மன்றாடினார், திருப்பணி செய்தார் என்னும் நான்கு செய்திகளும் அவரை ஒரு மாற்றுச் சிந்தனையாளராக, செயல்பாட்டாளராகக் காட்டுகின்றன.

3. தானியேலும் தோழர்களும்: பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் காலத்தில் அரண்மனையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இளைஞர்களில் தானியேலும், அவரது தோழர்களான அனனியா, மிசாவேல் மற்றும் அசரியாவும் அடங்குவர். மற்ற இளைஞர்கள் அரசரது சிறப்புணவிலும், திராட்சை இரசத்திலும் பங்குபெற்றனர். ஆனால், அந்த உணவுகளால் ‘தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தம் உள்ளத்தில் உறுதி செய்துகொண்ட (தானி 1:8-16) தானியேல், அலுவலர் தலைவனிடம் சிறப்பு அனுமதி பெற்று, மரக்கறி உணவையே உண்டுவந்தார்.

விரைவு உணவுகளைச் சுவைத்துப் பழகிவிட்ட இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தானியேலும், அவரது தோழர்களும் ஓர் அறைகூவலாக இருக்கின்றனர் என்பது கண்கூடு. இயற்கை உணவுகளையும், எளிய உணவையும் உண்பது இன்றைய தலைமுறைக்குத் தேவையான மாற்று வாழ்வியல் இறைவேண்டல்.

4. இறைவாக்கினர் சாமுவேல்: சாமுவேலின் தாய் அன்னா இறைவனிடம் தவமிருந்து பெற்ற பிள்ளை சாமுவேல். அவர் குழந்தைக்காக இறைவனிடம் மனங்கசந்து மன்றாடியபோது, “எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியே படாது (1சாமு 1:11) என்று பொருத்தனை செய்துகொண்டார்.

அதன்படி, சாமுவேல் பிறந்ததும் அவனைக் கோவிலுக்கு எடுத்துச்சென்று “இவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன் என்று கூறி சாமுவேலை இறைப்பணிக்கெனக் கையளித்தார். தனது குழந்தை இறைவனின் கொடை; எனவே, எனக்குச் சொந்தமல்ல; இறைவனுக்கே சொந்தம் என்று அர்ப்பணித்த செயல் ஒரு மாற்று வாழ்வியல் செயல்பாடுதானே!

5. தோபித்து: இறந்த யூதர்களின் உடல்களைச் சட்டத்தை மீறி, யூத முறைப்படி அடக்கம் செய்யும் பணியை மிகவும் துணிவுடன் செய்து வந்தார் தோபித்து (தோபி 1:18). அவரது இந்தப் பணி மற்ற யூதர்களுக்கு அச்சத்தையும் அறைகூவலையும் தந்தது.

6. இயேசு: தமது காலச் சமய, சமூக, அரசியல் சூழல்களைக் கடந்து, மாற்றிச் சிந்தித்து, மாற்றிச் செயல்பட்டு, இந்த உலகை மாற்றியவர் இயேசு. அவரது போதனைகள், நலமளிக்கும் செயல்பாடுகள், ஓய்வுநாள் சட்டம் போன்றவற்றை உடைக்கும் துணிவு, தலைசாய்க்கவும் இடமின்றி நடமாடும் போதகராகவே வாழ்ந்த வாழ்வு, ஏழைகள், ஒதுக்கப்பட்டோர், பெண்கள் ஆகியோருடன் அவர் கொண்டிருந்த பரிவுணர்வு... இவை அனைத்துமே மாற்று வாழ்வியல் சான்றுகளே.

திருவிவிலியம் காட்டும் இந்த மாற்று வாழ்வியல் சான்றோரைப் பின்பற்றி, நாமும் பிறருக்கு அறைகூவல் விடுக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும். குறிப்பாக, இன்றைய உலகமயமாக்கப்பட்ட, வணிக நோக்குடைய, நுகர்வு வெறிகொண்ட சூழலில் மக்களுக்கு மாற்று வாழ்வியலை விடுக்கும் வண்ணம் வாழ்வது ஒரு சிறந்த இறைவேண்டலே. அந்த வழியில் ஒரு சில பரிந்துரைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன:

1. இறைச்சி உணவைத் தவிர்த்து, காய்கறி உணவு மட்டுமே உண்பது.

2. தங்க நகைகள் அணியாமல் வாழ்வது.

3. அலைப்பேசி, தொலைக்காட்சி இல்லாது வாழ்தல்.

4. அதிக ஆடைகள், உடைமைகளின்றி எளிமையாக வாழ்தல்.

5. மணத்துறவு கொள்தல்.

6. பதவி, இடம், பட்டம் இவற்றில் பற்றின்றி வாழ்தல்.

7. சாதியை மறுத்து, அனைவருடனும் நட்புறவுடன் வாழ்தல்.

8. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்புதல்.

9. பிளாஸ்டிக் பொருள்கள், குளிர்பானங்கள் தவிர்த்தல்.

10. மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களில் பங்கேற்றல்.

மேற்கூறியவை சில மாதிரிகள் மட்டுமே. இன்னும் எத்தனையோ வழிகளில் நாம் மாற்று வாழ்வியல் நடைமுறைகளைச் செயல்படுத்தலாம். விருப்பமிருந்தால், தீவிர மாதிரிகளாக நாம் திகழலாம். இதுவே சிறந்த இறைவேண்டலாகும்.

news
ஆன்மிகம்
எதிர்நோக்கும் இராணுவப் படையும் காவல் துறையும் பாதுகாப்புக் காவலர்களும்! - எதிர்நோக்கு ஏமாற்றம் தராது! (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை-7)

‘எதிர்நோக்கின் திருப்பயணிகள் எனும் மையக் கருத்துடன், இந்த யூபிலி ஆண்டு 2025-இன் இரண்டாவது பெருவிழா அண்மையில் வத்திக்கானில் நடைபெற்றது, பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் உலகெங்குமுள்ள கத்தோலிக்க இராணுவப் படையினர், காவல்துறையினர், பாதுகாப்புக் காவலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், ஓய்வுபெற்ற இராணுவப் படையினர், இராணுவ மையங்கள், இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் பணிபுரிவோர், இராணுவத்தில் ஆன்மிகப் பணிபுரிவோர் மற்றும் இவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், மறையுரையில் “தாய் நாட்டைப் பாதுகாத்தல், சமுதாயத்தில் பாதுகாப்பை உறுதிசெய்தல், சட்டம்-ஒழுங்கு மற்றும் நீதியை நிலை நாட்டுதல் என்ற சமூக மற்றும் அரசியல் வாழ்வின் பல்வேறு நிலைகளில் பொதுமக்களைத் தீமையிலிருந்து பாதுகாக்கும் மேன்மையான பணி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும்; “சமூக வாழ்வை அச்சுறுத்தும் பல்வேறு வகையான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் நிகழும்போது, நீங்கள்தான் முன்னின்று அவற்றை எதிர்த்துப் போராடுகிறீர்கள். மேலும், இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது முன்வந்து மீட்புப்பணி புரியும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், கடலில் தத்தளிப்போரை மீட்கும் பணியில் ஈடுபடும், தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ளோரைப் பாதுகாக்கும், அமைதியை நிலைநாட்டும் இம்மகத்தான பணியைப் புரியும் உங்கள் அனைவரையும் நான் நன்றியோடு நினைவுகூருகிறேன் என்றும் கூறினார். 

அன்றைய ஞாயிறு நற்செய்திப் பகுதியான லூக்கா 5:1-11-இல் தங்கள் வலைகளை அலசிக் கொண்டிருந்த சீமோன் பேதுரு மற்றும் அவருடைய கூட்டாளிகளை இயேசு, கருணைக்கண் கொண்டே பார்க்கிறார். கடவுளின் மூன்று குணங்களான நெருக்கம், பரிவு, கனிவு இவற்றைக் கொண்டே அவர்களை அணுகுகிறார். இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒரு மீனும் கிடைக்காமல் கவலையோடும் சோர்வோடும் இருந்த சூழலிலும் அவர்களுக்கு ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதை உறுதிப்படுத்துகிறார்.

இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு பணியாற்றுவது போலவே, கத்தோலிக்க இராணுவப் படையினர், காவல்துறையினர், பாதுகாப்புக் காவலர்கள், போக்குவரத்துக் காவல்துறையினர், ஓய்வுபெற்ற இராணுவப் படையினர், இராணுவ மையங்கள், இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் பணிபுரிவோர், இராணுவத்தில் ஆன்மிகப் பணிபுரிவோர் அனைவரும் தத்தம் பணிகளைச் செய்ய அழைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு துன்பச் சூழல்களில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை இயேசு கிறிஸ்துவின் கருணைக்கண் கொண்டு காண இயேசு அவர்களை அழைப்பதாகக் குறிப்பிட்ட அவர், “உங்களது சீருடைப் பணியில் உங்களை உருவாக்கிய சுயஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு, உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் சின்னமாக உங்களது; அது உங்கள் ‘நாட்டையும் நாட்டு மக்களையும் நான் பாதுகாப்பேன் என்று நீங்கள் எடுத்த உறுதிமொழியை நினைவூட்டுகிறது.

தோல்வியில் கவலையிலிருந்த சீமோன் பேதுருவின் படகிலேறி அமர்ந்து தம் உடனிருப்பை வெளிப்படுத்திய இயேசுவைப்போல, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட, பாதுகாப்பற்றோருக்கு பாதுகாப்பளிக்க, சமூகத்தில் பல்வேறு தீமைகளால் பாதிக்கப்படும் மக்களைக் கருணைக் கண்கொண்டு பார்த்து, அவர்களின் வாழ்க்கைச் சூழலில் இறங்கி, அவர்கள் சார்பாக நீங்கள் தீமையை எதிர்த்துப் போரிடுவது பொதுசேவை செய்யும் உலக மாந்தருக்கெல்லாம் ஓர் உன்னத எடுத்துக்காட்டு என்றார்.

மேலும், “உங்கள் பாதுகாப்புப் பணி வாயிலாக தீமையின் ஆதிக்கத்தை எதிர்த்து அதிக மனிதாபிமானமும், நீதியும், சகோதர அன்பும் நிறைந்த உலகை நம்மால் உருவாக்கி, நம் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் விட்டுச்செல்ல முடியும்.

உங்களது பணியில் கிறிஸ்துவின் பிரசன்னமாக, உங்களுடன் உடன் பயணிக்கும் ஆன்மிக வழிகாட்டிகளை இனம் கண்டுகொண்டு அவர்களது உதவியை நாடத் தவறாதீர்கள். ஒழுக்கம் மற்றும் ஆன்மிக வழிகாட்டல் தந்து, நற்செய்தியின் அழைத்தலுக்கேற்ப பொதுநலனைப் பேணும் உங்கள் பணி சிறக்க, அவர்களது சேவை உங்களுக்குத் தேவை என்பதையும் மறவாதீர்கள் என்றார்.

அவ்வாறே, “உயிர்களை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் வளர்ப்பதுமே மனுக்குலத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவையின் நோக்கம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; இறுதியாக, கவனமாக இருங்கள். தேவையில்லாப் போர் மற்றும் சண்டையைத் தூண்டும் தீய ஆசைக்கு எதிராகக் கவனமாக இருங்கள். அதிகாரம் மற்றும் போர்க்கருவிகளின் சத்தம் எனும் மாய வலைக்குள் விழாதவண்ணம், கவனமாக இருங்கள். பாதுகாக்கப்பட வேண்டிய நட்பு நாடுகள் மற்றும் போர்தொடுக்க வேண்டிய எதிரி நாடுகள் என்ற உலகப் பிரிவினைவாதங்கள், உங்கள் உள்ளத்தில் வெறுப்பு எனும் நஞ்சை விதைத்து விடாவண்ணம் கவனமாக இருங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர-சகோதரிகளாக வாழ விரும்பும் விண்ணகத் தந்தையின் அன்புக்குத் துணிச்சலான சாட்சிகளாக விளங்குங்கள். நாம் அனைவரும் சேர்ந்து அமைதி, நீதி, சகோதரத்துவம் நிறைந்த புதிய வரலாற்றை உருவாக்க முனைவோம் என்றார்.

இந்த யூபிலி ஆண்டில் நம் மறைமாவட்டம், பங்குத்தளங்கள் மற்றும் குடும்பங்களில் இராணுவப் படை, காவல்துறை, பாதுகாப்புக் காவலர்களைச் சிறப்பிக்க நாம் அழைக்கப்படுகிறோம். மக்கள் பாதுகாப்புப் பணிபுரியும் இருபால் பணியாளர்களுக்காகவும், அவர்கள் குடும்பத்தாருக்காகவும், பணி ஓய்வு பெற்றோரின் நலனுக்காகவும், பணியில் இருக்கும் போது வீரமரணம் அடைந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் ஒருநாள் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, அவர்களுக்கு மரியாதை செய்வது நலம். இப்பணியில் ஈடுபடுவோர் நம் பங்கிலிருந்தால், பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து மரியாதை செய்யும்போது, பங்கிலுள்ள சிறுவர்-சிறுமியர், இளையோர்-இளம் பெண்களுக்கு இப்பணியின் மீதுள்ள ஆர்வமும் மரியாதையும் அதிகமாகும்.  பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் நம் குடும்பத்தினராகவோ, நம் உறவினர்களாகவோ இருந்தால், அவர்களை அடிக்கடித் தொடர்புகொண்டு நம் அன்பு, அக்கறை, நன்றி இவற்றைத் தெரிவித்து அவர்களை அவர்களது பணியில் உற்சாகப்படுத்துவோம்!

நீதி, நேர்மை, பொதுநலம் இவற்றை மட்டும் கருத்தில் கொண்டு சுயநலமின்றி, அச்சமின்றி, தியாக உணர்வோடு பணிபுரியும் இவ்வகைப் பாதுகாப்பு அலுவலர்களை நாம் காணவோ, அவர்களைப் பற்றி அறியவோ நேரிடும்போது, அவற்றை நம் குடும்பத்தில், உறவினர்களிடத்தில், நண்பர்களிடத்தில், நம் சமூக வலைதள இடுகைகளில் பகிர்ந்து, அவர்களைப் பற்றிய நல்லெண்ணம், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பு மேலோங்கிப் பரவ வழிசெய்வோம். தங்கள் பணிநிறைவுக்குப் பின்னோ, பணியில் ஏற்பட்ட விபத்தால் பணியை விடுத்து வீட்டில் இருக்கும் பாதுகாப்பு அலுவலர்கள் பலர், அதீத மன உளைச்சலால் (Post Traumatic Stress Disorder) பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று புரிந்துகொண்டு அவர்களை இரக்கத்தோடு பேணுவோம்.

நிகழும் இந்த யூபிலி ஆண்டில் ஆண்டவர் நம் உள்ளங்களையும் இல்லங்களையும் எதிர்நோக்கால் நிரப்புவாராக!

news
ஆன்மிகம்
பாச மலர்கள் & பாச மடல்கள் (கண்டனையோ கேட்டனையோ – 29)

பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம், அமெரிக்காவில் ஒரு பெரிய வியாபார நாள். நம் ஊர் தீபாவளி மாதிரி! நகைகள், பரிசுப் பொருள்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட், பூங்கொத்து, மெழுகு வெளிச்ச இரவு விருந்துகள்... என்று காதலர் தினக் கொண்டாட்டத்தின் விற்பனை அங்கே ஒரு பெரிய பொருளாதாரச் சம்பவம். உணவகங்களில் ரிசர்வேஷன் பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிடும். ஒரு ரோஜாப்பூ ஆயிரம் ரூபாய்க்கு மேல் போகும். 2025-இல் மட்டும் Valentines Day அன்று அமெரிக்கர்கள் 1,500 கோடி டாலர்கள் செலவிட்டார்களாம். காசு இல்லாமல் அங்கே காதலிக்க முடியாது.

நம் நாட்டில் காதலர் தினக் கொண்டாட்டம் இன்னும் அத்தனை வியாபார வலிமை பெறவில்லை. பச்சைக் கலர் சட்டை போடுவதா? சிவப்புக் கலர் சட்டை போடுவதா? என்ற குழப்பத்திலேயே நம் பையன்களுக்கு அந்த நாள் முடிந்துவிடுகிறது. பெற்றோரைப் பொறுத்தமட்டில், காதல் ஒரு கெட்டப்பழக்கம். பூங்காக்களில் தாலியோடு சுற்றும் கலாச்சாரத் தடியர்கள், இந்தியாவைக் காதலிக்கப் பாதுகாப்பில்லாத நாடாக மாற்றிவிட்டார்கள்.

காதலர் தினம் ‘Romantic Love-ஐ கொண்டாடுகிறது. அதாவது, காமம் கலந்த அல்லது அதற்கான கதவுகள் திறந்திருக்கிற அன்பு. காதல், மானுட வாழ்வின் ஹைலைட்! இலக்கியமும் இதரக் கலைப் படைப்புகளும் காதலையே முதன்மையாகப் பாடுகின்றன. ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு, ஷாஜஹான் - மும்தாஜ்.... என்று காலத்தால் அழியாத எத்தனை யெத்தனை காதலர்கள்... காதல் கதைகள்? இதில் சமீபத்திய வரவு ஜேக் & ரோஸ் (டைட்டானிக்). (நான் கல்லூரி படிக்கும்போது திருச்சி, சிப்பி தியேட்டரில் நண்பர்களோடு பார்த்தேன். அடுத்த  இரண்டு நாள்கள் தூக்கம் வரவில்லை. ‘பெண்ணே, நீ எப்படி இந்த இழப்பை எதிர்கொள்ளப் போகிறாய்?’) 

திருவிவிலியத்தில் ஒரு முழுநூல் காதல் அன்பிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது - இனிமை மிகு பாடல். “காதல் நோயால் நான் மிகவும் நலிந்துபோனேன். இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக்கொள்வார். வலக்கையால் அவர் என்னைத் தழுவிக்கொள்வார் (இபா 2:5-6) போன்ற வரிகளை வைரமுத்து எழுதினார் என்று கூறினால் பலர் நம்பக் கூடும். இன்று எடுக்கப்படும் திரைப்படங்களில் பாதிக்கு மேல் காதல் படங்கள். சினிமா பாடல்களில் 10-க்கு 9 காதல் பாடல்களே. மீதி ஒன்று ‘சட்டி சுட்டதடா போன்ற தத்துவ ஒப்பாரிகள்! கவிதையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்; காதல் இல்லையென்றால், தமிழில் கவிதை இல்லை.

Romantic love, கடவுளால் நம் ஜீன் சரடுகளில் அழுத்தமாக எழுதி வைக்கப்பட்டுள்ள ஒரு சமாச்சாரம். மனித வாழ்வை அழியாமல் வைத்திருக்கும் மென்நிரல் இது. காமம் ஒரு பெரிய மானுட ஆற்றல். அது இல்லாமல் கல்யாணம், கத்தரிக்காய் என்று எதுவும் சாத்தியமில்லை. காதல் அன்பு கொண்டாடப்படுவதில் யாருக்கும் புகார் இருக்கக்கூடாது. ஆனால், சமூகம் அத்தனை  கவனிக்காத மற்றொருவகை அன்பும் இருக்கிறது. Platonic love! நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இதில் காமம் கிடையாது. உடல் வேட்கையற்ற, அறிவு மற்றும் ஆன்மிகத் தளத்தில் மட்டும் நிகழும் ஆழமான, தூய அன்பு. இப்படியோர் அன்பை மேற்கொள்ளவும் மனித மனத்திற்கு கடவுள் திறன் கொடுத்துள்ளார். கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ ‘Symposium என்ற நூலில் முதலில் இதைக் குறிப்பிட்டார். அதனால் அவர் பெயரிலேயே இது ‘Paltonic love என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆன்மிக அன்பிற்குப் பிரபலத் திரு அவை, உதாரணமாக புனித சிறுமலர் தெரேசா - அருள்பணி. அடால்ஃப் ரோலண்ட் நட்பைக் கூறலாம். தெரேசா பற்றி எல்லாருக்கும் தெரியும். வட்ட முகம் கொண்ட அழகு புனிதை! யார் இந்த அடால்ஃப் ரோலண்ட்? சுருக்கமாகச் சில தகவல்கள்: இவர் பிரெஞ்சு நாட்டவர். 1870-இல் பிறந்தார். மறைபரப்புப் பணியில் நாட்டம் கொண்டவர். குருமாணவனாக இருந்தபோதே கார்மெல் கன்னியர் இல்லத்திற்குச் சென்று தலைமைச் சகோதரியிடம், “எனக்காகவும், என் பணிக்காகவும் இறைவேண்டல் செய்ய ஒரு சகோதரியைத் தாருங்கள் என்று ரோலண்ட் கேட்டிருக்கிறார். அவருக்குத் தரப்பட்ட சகோதரி தெரேசா.

இருவரும் கடிதங்கள் பரிமாறத் தொடங்கினார்கள். தெரேசா ரோலண்டுக்கு எழுதிய முதல் கடிதத்தில், “எனக்கு ஓர் உதவி செய்வீர்களா?  நீங்கள் வைக்கும் முதல் திருப்பலியில் எனக்காக வேண்டிக் கொள்ள வேண்டும். கருத்து இதுதான்: நான் இயேசுவின் அன்பில் பற்றியெரிய வேண்டும். பிறர் இதயங்களிலும் அந்தத் தீயை வளர்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  ரோலண்ட் பதிலுக்கு, “என் முதல் திருப்பலியில் மட்டுமல்ல, என் எல்லாத் திருப்பலிகளிலும் உனக்காக வேண்டிக்கொள்வேன் என்று எழுதினார்.  ரோலண்ட் தெரேசாவை ‘இயேசுவில் என் இனிய தங்கை (my little sister in Jesus) என்று அழைத்தார். அவரைவிட தெரேசா மூன்று வயது இளையவர் (பிறப்பு 1873). தெரேசா ரோலண்டை ‘என் ஆன்மாவின் சகோதரனே (the brother of my soul) என்று அழைத்தார்.

ரோலண்ட் அருள்பணியாளராகப் பட்டம் பெற்றவுடன், “நான் என் முதல் திருப்பலியை உங்கள் இல்லத்தில் நிறைவேற்றலாமா? என் இனிய தங்கைக்கு அவள் நேசிக்கும் நற்கருணை ஆண்டவரை வழங்குவது எனக்கு மிகப்பெரிய மகிழ்வைத் தரும் என்று கேட்டு எழுதினார். இல்லத் தலைவி அனுமதி வழங்க, அந்த அழகிய நிகழ்வு ஒரு ஜூலை நாளின் முற்பகலில் நடந்தது. கார்மெல் கன்னியர் இல்லச் சிற்றாலயத்தில், ரோலண்ட் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார். தெரேசா அவருக்குப் பீடப்பணியாளராக உதவி செய்தார்.

திருப்பலி முடிந்து ரோலண்ட் தெரேசாவோடு சில நிமிடங்கள் தனிமையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த முதல் மற்றும் ஒரே நேரடிச் சந்திப்பு. மற்ற எல்லாமே கடிதங்கள் வழியே. ரோலண்ட் சீனாவுக்கு மறைப்பரப்புப் பணி செய்ய அனுப்பப்பட்டார். செல்லும் முன், “இனிய தங்கையே, உன் பணியும் என் பணியும் கடவுளால் ஆசிர்வதிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று எழுதினார். ரோலண்ட் சீனாவுக்குச் சென்ற பிறகும் இருவருக்கும் இடையே கடிதத் தொடர்பு நீடித்தது. ஒரு கடிதத்தில் தன் அழைத்தல் கதையை தெரேசா ரோலண்டுக்குக் கூறினார். இது ‘The Story of a Sou (‘ஓர் ஆன்மாவின் கதை) என்கிற அவருடைய தன் வரலாற்று நூலிலும் இடம்பெற்றுள்ளது.

பதினைந்து வயதிலேயே தெரேசாவிற்குக் கன்னியர் இல்லத்தில் சேர வேண்டும் என்று ஆசை.  ஆனால், விதிப்படி 21 வயது வரை காத்திருக்க வேண்டும். தெரேசாவிற்குப் பொறுமையில்லை. மறைமாவட்ட ஆயரிடம் போய் கேட்டுப் பார்த்தார். வயதை அதிகரித்துக் காட்டுவதற்காக முடியை உயர்த்தி அலங்காரம் செய்து கொண்டு போனார். ஆயர் ஏமாறவில்லை. அனுமதி கிடையாது என்று கூறிவிட்டார். தெரேசா பிடிவாதம் கொண்ட பெண். அவருக்கு உரோமை நகர் திருப்பயணம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது திருத்தந்தையாக இருந்தவர் 13-ஆம் லியோ. அது 1887-ஆம் ஆண்டு. அந்த வருடம் திருந்தந்தை லியோ அவர்கள் தன் குருத்துவப் பொன்விழாவைக் கொண்டாடினார். அவரிடமே பேசி அனுமதி வாங்கிவிடுவது என்று தெரேசா முடிவெடுத்தார். உரோமையில், போப்பாண்டவர் மாளிகையில் சந்திப்பாளர்கள் வரிசையாக நின்று திருத்தந்தை முன் முழந்தாளிட்டு, ஆசிர் வாங்கிச் சென்றார்கள். யாருக்கும் பேச அனுமதி இல்லை. தெரேசாவின் முறை வந்தபோது, அவர் போப்பின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் நிறைந்த விழிகளை உயர்த்தி, “திருத்தந்தையே, எனக்கு ஓர் உதவி வேண்டும் என்றார். போப் லியோ ஆச்சரியத்துடன் அவரைக் குனிந்து பார்த்தார்.

உங்கள் பொன்விழாவை முன்னிட்டு நான் 15 வயதிலேயே கார்மெல் கன்னியர் இல்லத்தில் சேர அனுமதி தாருங்கள் என்று கேட்டார். “பெரியவர்கள் சொல்வதுபடி செய் மகளே என்றார் போப் லியோ. தெரேசா விடவில்லை. “இல்லை திருத்தந்தையே, நீங்கள் சரி என்று கூறிவிட்டால் அவர்கள் மறுக்க மாட்டார்கள்.” போப் லியோ “சரி, செல். இது கடவுளின் விருப்பம் என்றால் நடக்கும் என்று கூறி அனுப்பினார். இந்த நிகழ்வைக் கடிதத்தில் விவரித்துவிட்டு, தெரேசா நகைச்சுவையாக, “உங்கள் சிறிய தங்கைக்குத் திருத்தந்தையிடமே பேசும் தைரியம் இருந்தது உங்களுக்குத் தெரியாது என்று கூறுகிறார்.

ரோலண்ட் சீனாவுக்குப் போன ஒரு வருடத்தில் அங்கே நிலைமை மோசமாகிறது. அவர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகி, இறப்பு வரைக்கும் சென்று மீள்கிறார். நாட்டில் பஞ்சம். குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். பசி மக்களைச் செய்யக் கூடாத செயல்களைச் செய்ய வைக்கிறது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை. அங்குத் தொடர்ந்து இருப்பது அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அப்போது ரோலண்ட், “என் இனிய தங்கையே, எனக்குத் துன்பம் வரக்கூடாது என்று வேண்டாதே. துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் துணிவை எனக்குத் தரக்கூறி வேண்டு. ஒருவேளை நான் கொல்லப்பட்டு, மேலே போய் என் பாவங்களுக்காகத் துயருறு நிலையில் அவதிப்பட வேண்டியிருந்தால், நீ உன் இறைவேண்டல்களால் என்னை விரைவில் விண்ணகம் அனுப்பிவிடு. அங்குப் போய் நான் உன் வருகைக்காகக் காத்திருப்பேன் என்று எழுதுகிறார்.

இதற்டையில் தெரேசாவிற்குக் காசநோய் வந்து, மிகவும் அவதியுறுகிறார். ஆனால், ரோலண்டுக்கு அவர் எழுதும் கடிதங்களில் தனது நோய் பற்றி எந்தக் குறிப்போ, புகார்களோ இல்லை.

ரோலண்ட் சீனாவில் மறைச்சாட்சியாக இறந்து போக வாய்ப்புண்டு என்று தெரேசா எண்ணினார். ஒரு கடிதத்தில் அவருக்கு நம்பிக்கை தரும் விதமாக “அப்போது நான் உங்கள் அருகில் இருப்பேன். உங்கள் கரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்பேன் என்று எழுதுகிறார்.  1897, ஜூலை, 14-ஆம் நாள் தெரேசா ரோலண்டுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் தன் உடல்நலக் குறைவு பற்றி குறிப்பிடுகிறார். “இப்போது என்னால் திட உணவு எதுவும் உட்கொள்ள முடியவில்லை. பால் மட்டுமே சாப்பிடுகிறேன். விரைவில் நான் வாழ்வு தரும் ஊற்றில் என் தாகத்தைத் தணித்துக்கொள்வேன் (your little sister for eternity)  என்று எழுதி, ‘எல்லாக் காலத்திலும் உன் இனிய தங்கை என்று கையெழுத்திடுகிறார்.

1897, செப்டம்பர் 30-ஆம் நாள் அன்று தெரேசா இறந்து போனார். அந்தச் செய்தி பல மாதங்களுக்கு ரோலண்டுக்குச் சென்று சேரவில்லை. தெரேசா உயிரோடு இல்லை என்று அறியாமல், ரோலண்ட் அவருக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில், சீனாவில் நிறைய பேர் கத்தோலிக்க நம்பிக்கையைத் தழுவுகிறார்கள் என்று மகிழ்வுடன் குறிப்பிடுகிறார். தான் மறைச்சாட்சியாக இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறுகிறார். “தெரேசா, நான் இறப்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. உன் சிலுவைகளை உன்னைத் தனியே சுமக்க விட்டு விட்டு, நான் முன்பே இறந்து போய்விடுவேனே என்பதுதான் துக்கமாக இருகிறது என்று எழுதுகிறார்.

மறந்து விடாதே... நீ என் தங்கை. நான்தான் உனக்கு முன் இறக்க வேண்டும். “Au revoir, in the hearts of Jesus and Mary என்று கூறி அக்கடிதத்தை முடிக்கிறார். காவியத் துயரம்! வேறு என்ன சொல்ல முடியும்? இந்த இரண்டு பாச மலர்களும், அவர்களின் பாச மடல்களும், Platonic Love என்று சொல்லப்படுகிற ஆன்மிகத் தளத்தில் மட்டும் நிகழ்கிற தூய, உன்னத அன்பிற்குச் சாட்சிகள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்! (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 2025-ஆம் ஆண்டிற்கான தவக்காலச் செய்தி)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

நாம் அனைவரும் திருநீற்றை நெற்றியில் பூசிக்கொள்ளும் பரிகாரச் சடங்கின் வழியாக, தவக்கால ஆண்டுத் திருப்பயணத்தை நம்பிக்கையிலும் எதிர்நோக்கிலும் தொடங்க உள்ளோம். நமது அன்னையும் ஆசிரியையுமான திரு அவை, கடவுளின் அருளுக்கு நமது இதயங்களைத் திறந்திட அழைத்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தின் மீதும் சாவின் மீதும் கொண்ட பாஸ்கா வெற்றியை மிகுந்த மகிழ்வோடு நாம் அனைவரும் கொண்டாட விரும்புகிறது. இதுவே, “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?” (1 கொரி 15: 54-55) என்று பவுலடியாரை அறைகூவலிடத் தூண்டியது. உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டவரும் பின்பு உயிர்த்தெழுந்தவருமான இயேசு கிறிஸ்துவே நமது நம்பிக்கையின் இதயமாகவும் எதிர்நோக்கின் உறுதிமொழியாகவும் உள்ளார். இது, தம் அன்பார்ந்த மகனில் முன்பே நிறைவேறிய நிலைவாழ்வு எனும், கடவுளின் பெரிய வாக்குறுதியாக அமைகிறது (யோவா 10:28; 17:3).

யூபிலி ஆண்டின் அருளில் நாம் பங்கெடுக்கும் இத்தவக்காலத்தில், ‘எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்என்றால் என்ன? என்பதைக் குறித்தும் கடவுள் தம் இரக்கத்தால் நம் எல்லாருக்கும் தனிப்பட்ட விதத்திலும் குழுவாகவும் விடுக்கும் மனமாற்றத்திற்கான அழைப்பினைக் குறித்தும் ஒரு சில சிந்தனைகளை விவரிக்க ஆசைப்படுகிறேன்.

முதன் முதலாக, பயணம் மேற்கொள்வது: இந்த யூபிலி ஆண்டின் விருதுவாக்கானஎதிர்நோக்கின் திருப்பயணிகள்விடுதலைப் பயண நூலில் விவரிக்கப்பட்டுள்ள வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிய இஸ்ரயேல் மக்களின் நெடிய பயணத்தை நம்மில் தூண்டி எழுப்புகிறது. அடிமைத்தளையிலிருந்து விடுதலையை நோக்கிய கடினமான இந்தப் பாதை, இறைவனால் விரும்பப்பட்டதும் வழிநடத்தப்பட்டதுமாய் உள்ளது. அவர் தம் மக்களை அன்பு செய்பவராகவும் எப்பொழுதும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கின்றார். நாம் வாழும் இந்நாள்களில் நம்முடைய சகோதர சகோதரிகள், தங்களுக்கும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் சிறந்ததொரு வாழ்வை அமைத்துக்கொள்ள அவலம் மற்றும் வன்முறை போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் அவர்களை நினைக்காமல், திருவிவிலியத்தினுடைய விடுதலைப் பயணத்தைச் சிந்தித்துப் பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றுஆகவே, மனமாற்றத்திற்கான முதல் அழைப்பு என்பது நாம் அனைவரும் இந்த வாழ்க்கையில் திருப்பயணிகள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து வருகிறது. நம் அனைவரின் வாழ்வு, இந்தக் கருத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி, சற்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். ‘நான் உண்மையிலே பயணத்தை மேற்கொள்கிறேனா? இல்லை, பயத்தினாலும் எதிர்நோக்கின்மையாலும் செயலற்றவனாகவோ அல்லது என்னுடைய சுகமான வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாமல் தயக்கம் கொண்டவனாகவோ அதனால் நகர முடியாமல் அப்படியே தேங்கியே நிற்கிறேனா?’

நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் புலம்பெயர்ந்தவரோடு அல்லது வெளிநாட்டவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் வழியாக அவர்களுடைய அனுபவங்களில் எப்படி நாம் நம்மையே ஒன்றிணைத்துக் கொள்வது? என்ற படிப்பினையைப் பெறவும், இதன் வழியாகக் கடவுள் நம்மிடம் தந்தையின் இல்லத்தை நோக்கிச் சிறந்த முறையில் நம் திருப்பயணத்தில் முன்னேற எதை எதிர்பார்க்கிறார் என்று கண்டுணர்ந்துகொள்வதும் நமக்கான சரியானதொரு தவக்காலப் பயிற்சியாக அமையும். வழிப்போக்கர்களாகிய நம் எல்லாருக்கும் இது சிறந்ததோர் ஆன்மிகச் சோதனையாகவும் அமையும்.

இரண்டாவதாக, இணைந்து பயணித்தல்: கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இருக்க, இணைந்து பயணிக்க நாம் அழைக்கப்படுகிறோம். கிறித்தவர்கள் தனிமையாகப் பயணிக்கும் பயணிகளாக அல்லாமல், மற்றவர்களுடன் ஒன்றிணைந்து நடக்க அழைக்கப்படுகின்றோம். தூய ஆவியார் நம்மைப் பின்னால் கொண்டுவந்து நாம் சுயநலவாதிகளாக இல்லாமல் கடவுளையும் நமது சகோதர-சகோதரிகளையும் நோக்கி நடந்திட உந்தித் தள்ளுகிறார்இணைந்து பயணித்தல் என்பது கடவுளின் பிள்ளைகள் என்ற பொதுவான மேன்மையின் அடித்தளத்தில் நம் ஒன்றிப்பை ஒருங்கிணைந்து பார்ப்பதாகும் (கலா 23: 26-28). அதாவது, ஒருவர் மற்றவருடன் இணைந்து நடப்பதும், எவரையும் தள்ளாமலும் மிதித்து விடாமலும், கோபம் மற்றும் வெளிவேடத்தால் எவரையும் பின்னால் விடாமலும் ஒதுக்கிவிடாமலும் இருப்பதாகும். நாம் அனைவரும் அன்பிலும் பொறுமையிலும் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு ஒற்றை இலக்கை நோக்கி உறுதியோடு ஒரே திசையில் பயணிப்போம்!

இத்தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையில், நம் குடும்பங்களில், பணித்தளங்களில் மற்றும் பொது இடங்களில் நாம் மற்றவருடன் ஒன்றாக இணைந்து நடப்பதற்கும், அவர்களுக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக  நம்முடைய தேவைகளைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் சோதனையிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தகுதி உள்ளவர்களா? என்பதைக் குறித்து கடவுள், நம்மைச் சுய பரிசோதனை செய்ய அழைக்கிறார்.

இறையாட்சிப் பணியில் பங்குபெறும் நாம் ஆயர்களாக, குருக்களாக, துறவிகளாக, பொதுநிலையினர்களாக மற்றவர்களோடு இணைந்து செயலாற்றுகிறோமா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். நம் அருகில் இருப்பவரோடும் தூரத்தில் இருப்பவரோடும் ஆக்கபூர்வமான உடல் மொழிகளில் வரவேற்கும் மனநிலையை வெளிப்படுத்துகிறோமா? குழுமங்களில் நானும் ஒருவர் என மற்றவர்கள் பங்கெடுக்கச் செய்கிறோமா? அல்லது அவர்களைத் தனித்து வைக்க முயற்சித்திருக்கிறோமா? இதுவே மனமாற்றத்தின் இரண்டாம் அழைப்பாகும். அது கூட்டொருங்கியக்கத்திற்கான அழைப்பாகும்.

மூன்றாவதாக, எதிர்நோக்கின் அடிப்படையில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்: ஏனெனில் வாக்குறுதியை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்யூபிலியின் மையக்கருத்தானஎதிர்நோக்கு ஏமாற்றம் தராது  (உரோ 5:5) என்பது, பாஸ்காவின் வெற்றியை நோக்கி நமது தவக்காலத் திருப்பயணத்தின் இலக்காக அமையவேண்டும். ‘நம்பிக்கை விடுதலை அளிக்கும்என்ற தனது திருமடலில் திருத்தந்தை 16-ஆம் ஆசிர்வாதப்பர் நமக்குக் கற்பித்ததைப் போன்று மனிதனுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. “சாவோ, வாழ்வோ வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமைமிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்த படைப்போ, நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை (உரோ 8:38-39), என்று கூற உறுதித்தன்மை தேவைப்படுகிறது. என் நம்பிக்கையாம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார்; அவர் மாட்சியில் வந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்; சாவு வெற்றியாய் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆகவே, கிறித்தவர்களின் நம்பிக்கையும் சிறந்த எதிர்நோக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பில் அடங்கியுள்ளன.

இதுவே, மனமாற்றத்தின் மூன்றாவது அழைப்பு. கடவுளையும் நிலைவாழ்வாகிய அவரது சிறந்த வாக்குறுதியையும் நம்பும் எதிர்நோக்கிற்கான அழைப்பாகும். ஆண்டவர் எனது பாவங்களை மன்னிக்கிறார் என்று உறுதிகொள்கிறேனா? மீட்புக்காக ஆவலாய் இருந்து அதை அடைவதற்குக் கடவுளின் உதவியைக் கேட்கிறேனா? வரலாற்றின் நிகழ்வுகளை விளக்குவதற்கும் நீதிக்கும் சகோதரத்துவத்துக்குமான அர்ப்பணத்தை என்னில் தூண்டுவதற்கும் நமது பொது இல்லத்தைப் பராமரிப்பதற்கும் மற்றும் அதன் வழியாக எவர் ஒருவரும் தனித்துவிடப்பட்டதாய் உணராமல் இருக்கவும் என்னைச் செயல்படத் தூண்டும் எதிர்நோக்கை உறுதிபட அனுபவிக்கின்றேனா?

சகோதரிகளே, சகோதரர்களே, கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கிடைக்கப்பெற்ற கடவுளின் அன்பிற்காக நன்றி. ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது (உரோ 5:5) என்பதில்தான் நாம் உறுதி அடைந்துள்ளோம். நம்பிக்கை என்பது ஆன்மாவின் உறுதியான நிலையான நங்கூரம். அதுவே எல்லாரும் மீட்படைய திரு அவையை இறைவேண்டல் செய்யத் தூண்டுகிறது (1திமோ 2:4). விண்ணக ஆட்சியில் தனது மணவாளன் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் ஆவலைக் கொடுக்கிறது. இதுவே, அவிலா திரேசாவின் இறைவேண்டலாகவும் இருந்தது: “நம்பிக்கை கொள், மனமே, நம்பிக்கை கொள். நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது. விழிப்பாய் இருங்கள், ஏனெனில், நிலையானவற்றைக் குறித்து உங்களது பொறுமையின்மை சந்தேகத்தை வலுப்பெறச் செய்தாலும், குறுகிய ஒன்றை நீண்டதாக மாற்றினாலும், அனைத்தும் விரைவாகக் கடந்து செல்கிறது (கடவுளுக்கு ஆன்மாவின் ஆச்சரியக் குறியீடுகள் 15:3).

நம்பிக்கை எதிர்நோக்கின் அன்னையாம் கன்னி மரியா நம் அனைவருக்காகவும் பரிந்து பேசி, தவக்காலத் திருப்பயணத்தில் நம்மோடு இணைந்து பயணம் மேற்கொள்வாராக.

(உரோமை, தூய யோவான் ஆலயம் இலாத்திரன் பேராலயம், 6 பிப்ரவரி 2025, மறைச்சாட்சிகளான பால் மீக்கி மற்றும் அவருடைய தோழர்கள் நினைவு தினத்தன்று கொடுக்கப்பட்டது.)

news
ஆன்மிகம்
எதிர்நோக்கின் அடையாளங்கள் (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை – 6)

யூபிலி-2025 ஆண்டைப் பொருளுள்ள விதத்தில் கொண்டாட, நம் திருத்தந்தை அவர்கள் காலத்தின் அறிகுறிகளில் எதிர்நோக்கைக் கண்டறிய எட்டு அடையாளங்களை நம்முன் வைக்கிறார். ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது (உரோ 5:5) என்பது ஒரு நம்பிக்கை தரக்கூடிய இறைவார்த்தையாகப் பவுலடியாரின் வரிகளிலிருந்து அவர் எடுத்திருக்கிறார். எதிர்நோக்கு என்பது நாம் எதிர்பார்ப்பது நடக்கும் என்பதுதான் ஆழமான நம்முடைய நம்பிக்கை. எதிர்நோக்கு என்பது இலக்கு மட்டுமல்ல, அது ஓர் ஆள். அந்த ஆள் நம் இயேசுதாம். எனவே, ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராதுஎன்று சிந்திக்கும் நாம், இயேசு நம்மை ஏமாற்றமாட்டார் என்கிற ஒரு நம்பிக்கை செய்தியையும் பெறுகிறோம்.

அதேநேரத்தில் எதிர்நோக்கு என்பது ஓர் ஆள் என்பதைச் சிந்திக்கும்பொழுது, கிறிஸ்துவின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் குறிப்பாக, கண்டுகொள்ளப்படாதவர்கள்தான் நம்முடைய இலக்கும் எதிர்நோக்கும் என்பதில் உறுதியாக இருப்போம். இவர்களையும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் ஏமாற்றிவிடக்கூடாது. கண்டிப்பாக நாம் அவர்களுடைய வாழ்வைப் பலமாக்க, நலமாக்க நாமும் நம்பிக்கை செய்தியாக வாழவேண்டும் என்னும் அடிப்படையில் எட்டு அடையாளங்களைத் திருத்தந்தை நமக்குத் தருகிறார்.

1. அமைதிக்கான அழைப்பு

போரின் சோகத்தில் மூழ்கியுள்ள உலகில் அமைதிக்கான விருப்பம் எதிர்நோக்கின் முதல் அறிகுறியாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை விருப்பம் கொள்கிறார். வன்முறைக்கும் கொடூரமான தாக்குதல்களுக்கும் உள்ளான மனிதகுலம் இப்பொழுது அமைதிக்காக ஏங்குகிறது. ஆயுதங்களின் சத்தமும் அழிவும் இறப்பும் எப்போது நிறுத்தப்படும் என்று குழந்தைகள் கனவு காண்கிறார்கள். “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத் 5:9) என்று இயேசு கூறுவதை நாம் இங்கு நினைவுகூர்கிறோம். உரையாடல் வழியாக உறவைப் பலப்படுத்துவதுதான் உலக அமைதியைக் கொண்டு வரும் என்கிற எண்ணம் நமக்குள் தோன்ற வேண்டும்எனவே, குறிப்பாக அன்பியங்களில் உறவுகளை நாம் கொண்டாடுவோம். பகைமைகளைப் புதைத்துப் பாசத்தை விதைத்து அமைதிக்கான விருப்பம் கொண்டால் நாம் அழகிய அன்பியம் படைக்கலாம். யூபிலி ஆண்டு ஒப்புரவின் ஆண்டு என்பதையும் மனத்தில் நிறுத்தி அமைதிக்கான விருப்பம் கொள்ள நாம் முன்வருவோம்.

2. உயிரைப் பகிர அழைப்பு

உயிரைப் பகிர்ந்துகொள்ளும் விருப்பம் என்பது இரண்டாவது எதிர்நோக்கின் அடையாளமாய் அமைகிறது. காரணம், மக்கள்தொகை அதிகம் என்கிற பெயரில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது உலகத் தலைவர்கள் உண்மையான பிரச்சினையை எதிர்கொள்ள மறுப்பதற்கான ஒரு வழியாகும். பொறுப்பான பெற்றோர் உயிர்களை வாழ விடுகிறார்கள்.

அன்பின் வளமையின் அடையாளமாகப் புதிய மகன்களையும் மகள்களையும் பெற்றெடுப்பதில் பிரகாசமான எதிர்காலம் அடங்கியுள்ளது. வெற்றுத் தொட்டில்களில் குழந்தையின் சிரிப்பொலியும் அழுகுரலும் கேட்க வேண்டும். துறவற அழைத்தலைச் சிந்திக்கக்கூடிய நாம் இறைஅழைத்தலுக்காகக் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுக்க அழைக்கப்படுகின்றோம். நம்பிக்கை குறைந்து போகிற நேரத்தில், எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதை மக்கள் செல்வங்கள் வழியாக வெளிப்படுத்த ஒவ்வொரு தம்பதியினரும் முன்வர, அதன் வழியாக இறையாட்சிப் பணி தொடர நாம் அழைக்கப்படுகின்றோம்.

3. சிறைக்கைதிகளை வாழவைக்க அழைப்பு

சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார் (எசா 61:1-2). இயேசு தமது பணி வாழ்வின் தொடக்கத்திலேயே அருள்தரும் ஆண்டினை நிறைவாக வழங்க நம்மையும் அழைக்கிறார். எனவே, தடுப்புக் காவலின் கடுமையையும், அதன் கட்டுப்பாடுகளையும் பாசமின்மையையும் மரியாதையின்மையையும் அனுபவிக்கக்கூடிய கொடுமையான காலகட்டத்தில் நாம் அவர்களுடைய நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.

மன்னிப்பையோ மன்னிப்பின் வடிவங்களையோ அவர்களுக்கு வழங்க நாம் அழைக்கப்படுகின்றோம். சிறைக்கைதிகளுடன் நமது நெருக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். புதிய தன்னம்பிக்கையைக் காணச் செய்யவேண்டும். குறிப்பாக, சிறைச்சாலைகளில் பணியாற்றுவதற்குச் சிறைப்பணித்துறை நல்வாழ்வுப் பணியில் தன்னார்வப் பணியாளராக நம்மையே இணைத்துக் கொண்டு பணியாற்றுவது அவர்களுடைய குடும்பங்களின் கவலைகளைத் துரத்துவது என்கின்ற நலமான செயல்களில் இந்த ஆண்டில் செயல்படும்போது, நாம் அவர்களுக்கு எதிர்நோக்கை உறுதிப்படுத்துகிறோம் என்பது புலனாகும்.

2024 டிசம்பர் 26-ஆம் தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுதலையைக் கருத்தில் கொண்டு உரோமையில் உள்ள ரெபிபியா சிறைச்சாலையைத் திறந்து வைத்ததை நாம் நினைவு கூர்வோம்.

4. நோயாளர் நலம் காக்க அழைப்பு

வாழ்க்கை இதோடு முடிந்ததுஎன்று எதிர்நோக்கை இழந்து நிற்கும் நோயாளர்களுக்கு எதிர்நோக்கை உறுதிப்படுத்துமாறு, நமது அருகாமையை அவர்களுக்கு உணர்த்துவது என்பது யூபிலி ஆண்டின் மிக முக்கியமான செயல்பாடு.

நமது அருகாமையினாலும் பாசத்தாலும் ஆறுதல் வார்த்தைகளாலும் அவர்களின் துன்பங்களை நம்மால் தணிக்க முடியும். நன்றி உணர்வோடு இரக்கத்தின் செயல்பாடுகளால் அவர்களுக்கு நாம் காட்டும்போது அவை எல்லாம் எதிர்நோக்கின் செயல்பாடுகளே.

கவனத்துடனும் அக்கறையுடனும் அவர்களை அணுகுவது தங்கள் வாழ்நாள்களை அதிகப்படுத்தும். நமது அன்பியங்களில் கண்டுகொள்ளப்படாமல், கவனிக்கப்படாமல் இருக்கக்கூடிய நோயாளர்களைக் கவனிக்க வேண்டிய முழுப்பொறுப்பு நமது  அணுகுமுறைகளில் தெரிய வேண்டும்.

பொருளாதார நெருக்கடிகளில் இருக்கக்கூடிய நோயாளர்களை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவி செய்து மருத்துவமனைகளில் அவர்களைச் சேர்ப்பது, கவனிப்பது அல்லது வீடுகளில் முடங்கிக் கிடக்கிற பொழுதுகளில், அவ்வப்போது அவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்வது எல்லாமே யூபிலி ஆண்டின் இரக்கத்தின் செயல்பாடுகளே.

நீங்கள்தான் எதிர்நோக்கை நோயுற்ற மனிதர்களில் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
மூவோர் இறைவனோடு மரியாவுக்கு உள்ள உறவு (Mary’s relationship with the Trinity) - திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 11

1. ‘இறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற சங்க ஏட்டின் 8-வது இயலானது, கிறிஸ்துவின் மறையுண்மையில் மரியா கோட்பாட்டிற்கு உள்ள மிக முக்கியமானதொரு தொடர்பைக் காட்டுகிறது. இதைப் பொருத்தவரையில், அவ்வேட்டின் முகவுரையில் உள்ள தொடக்க வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவைகளாக இருக்கின்றன: “அவருடைய உயர்வான நன்மைத்தனத்தை விரும்பியும், உலக மீட்பின் விளைவுக்கான ஞானத்தை விரும்பியும்காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உள்பட்டவராகவும் அனுப்பினார் (கலா 4:4-5) (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 52). பழைய உடன்படிக்கையின் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா மற்றும் வரலாற்றின் இறுதியில் தந்தையால் அனுப்பப்பட்ட மகன் இவரே. ‘காலம் நிறைவேறியபோது (கலா 4:4) என்கின்ற இந்தத் திருவிவிலிய வார்த்தைகள் இந்த உலகில் பெண்ணிடமிருந்து பிறந்த அவரின் பிறப்போடு ஒத்துப்போகிறது. கடவுளின் மகனை மனுக்குலத்திற்குக் கொண்டு வந்த மரியாவை வரலாற்றில் நிறைவேற்றப்பட்ட இறைத்திட்டத்தின் மையமாக இருக்கின்ற இயேசு கிறிஸ்துவிடமிருந்து நாம் ஒருபோதும் பிரிக்க முடியாது.

அவருடைய மறையுடலாகிய திரு அவையில் கிறிஸ்துவுக்கான முதலிடமானது திருச்சங்கத்தால் பின்வரும் வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது: அவரில்நம்பிக்கையாளர்கள் தலையாம் கிறிஸ்துவோடு இணைந்துள்ளார்கள் மற்றும் அவருடைய அனைத்துப் புனிதர்களோடும் நல்லுறவில் இருக்கின்றார்கள் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 52). கிறிஸ்துதாம் அனைவரையும் அவரிடம்  இணைக்கிறார். மரியா தனது தாய்மையின் விளைவாக அவரின் மகனோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதால், நம்பிக்கையாளர்களின் பார்வை மற்றும் இதயத்தை இயேசுவை நோக்கி நடத்திச் செல்வதில் உதவுகின்றார்.

கிறிஸ்துவிடம் நடத்திச் செல்லும் வழி மரியாதான்: உண்மையில், “தன்னுடைய இதயத்திலும் உடலிலும் வானதூதருடைய செய்தி வழியாகக் கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 53), நம் வாழ்வின் மைய மற்றும் மிக முக்கியக் காரணருமாக இயேசுவை வைக்க நமக்குக் கற்றுத்தந்து, வானிலிருந்து இறங்கி வந்த இறைமகனை நம் வாழ்வில் எவ்வாறு ஏற்றுக்கொள்வதென்று நமக்குக் காட்டுகிறார்.

மரியாவுக்கும் தூய ஆவியாருக்கும்  இடையேயான தனித்தன்மை வாய்ந்த உறவு

2. மீட்புப் பணி முழுமைக்குமான தொடக்கத்தில் எல்லா மனிதர்களையும் தம் ஒரே மகனில்மகன்களாகமற்றும்மகள்களாகஅழைக்கின்ற எல்லாம்வல்ல தந்தையின் செயலைக் கண்டுகொள்வதற்கு மரியாவும் நமக்கு உதவுகின்றார். “கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம் அவ்வன்பின் வழியாக இணைந்து உயிர்பெறச் செய்தார் (எபே 2:4-5) என்று எபேசியருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள மிக அழகான சொற்றொடர்களை நினைவு கூர்ந்துதிருச்சங்கமானது கடவுளுக்குமிகவும் இரக்கமுள்ளவர் (most merciful) என்ற சிறப்புப் பெயரைக் கொடுக்கின்றது. ‘பெண்ணிடமிருந்து பிறந்தவரானமகன் இவ்வாறு தந்தையின் இரக்கத்தின் விளைவாகப் பார்க்கப்படுகின்றார். இது அன்னை மரியா எவ்வகையில்இரக்கத்தின் தாய் (mother of mercy) என அழைக்கப்படுகின்றார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவுகிறது.

இப்பின்னணியில், மரியாவுக்கும் தம் மறைமுகமான திட்டத்தில் கன்னியின் தாய்மையை விரும்பிய இறைஞானத்திற்குமிடையேயான நெருங்கியத் தொடர்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க கவனத்தை வேண்டி, திருச்சங்கமானது கடவுளைமிகவும் ஞானமுள்ளவர்(most wise) என்றும் அழைக்கிறது.

3. நற்கருணை வழிபாட்டில் நாம் கூறுகின்ற நிசேயன்-கான்ஸ்டான்டின் நாபோலிட்டன் திரு மறைக் கோட்பாட்டின் (Nicene-Constantinopolitan Creed) வார்த்தைகளைப் பயன்படுத்தி, திருச்சங்க ஏடானது மரியாவையும் தூய ஆவியாரையும் இணைக்கின்ற தனிச் சிறப்புமிக்க உறவு நிலையையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது: “நமக்காகவும் நம்முடைய மீட்பிற்காகவும் வானகத்திலிருந்து அவர் இறங்கி வந்தார்; தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார் மற்றும் மனிதரானார்.”

திரு அவையின் மாறாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதில், தூய ஆவியாரின் வல்லமையால், ஆணின் துணை இல்லாமலேயே கன்னி மரியாவின் உதிரத்தில் இறைமகனின் அந்த வியக்கத்தக்க மனுவுருவாதல் நிகழ்ந்ததைத் திருச்சங்கமானது நமக்கு நினைவுபடுத்துகின்றது.

இறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற சங்க ஏட்டின் 8-வது இயலானது மரியா கோட்பாட்டின் முக்கியக் கூற்றை இவ்வாறு தமத்திரித்துவக் (Trinitarian) கண்ணோட்டத்தில் காட்டுகின்றது. உண்மையில் அனைத்தும் தந்தையின் விருப்பத்திலிருந்து வருகின்றன. அவர் தமது மகனை உலகிற்கு அனுப்பி, அவரை மக்களுக்கு வெளிப்படுத்தி, அவரைத் திரு அவையின் தலைவராகவும் வரலாற்றின் மையமாகவும் நிறுவினார். இது மனுவுருவாதல் மற்றும் தூய ஆவியாரின் செயல்பாட்டின் வழியாக ஆனால், மூவோர் இறைவனை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகின்ற நிகழ்வின் ஒருங்கிணைந்த செயலில் ஒரு பெண்ணின் இன்றியமையாத ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டதொரு திட்டமாக இருக்கிறது.

4. மூவோர் இறைவனோடு மரியாவுக்குள்ள உறவானது பின்வரும் தெளிவான வார்த்தைகளோடும் ஆண்டவருடைய தாயைத் திரு அவையோடு இணைக்கின்ற பண்புறவின் விளக்கத்தோடும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: “அவர் உயர்நிலையோடும் கடவுளின் மகனுடைய தாய் என்ற மாண்போடும் அணி செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் தந்தையினுடைய அன்புக்குரிய மகளாகவும் மற்றும் தூய ஆவியாரின் ஆலயமாகவும் இருக்கின்றார் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 53).

மரியாவின் அடிப்படைத் தகுதியானது கிறித்தவக் கோட்பாட்டிலும்கடவுளின் தாய்என்ற சிறப்புத் தகுதியிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறமகனின் தாயாகஇருப்பதன் விளைவாகும்.

இது அவரின் மனுவுருவாதலில் கடவுளின் ஒரே அன்பு மகனின் தாழ்ச்சியைக் காட்டுகின்ற மற்றும் அதனுடன் தொடர்புடைய, அவருக்கு மனித உடல் கொடுப்பதற்காக அழைக்கப்பட்ட, படைப்புகளுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த சிறப்புச் சலுகையின் வியப்புக்குரிய சிறப்புக் கூறாகும்

மகனின் தாயாக, மரியா தனிச்சிறப்பான வகையில்தந்தையின் அன்பு மகளாகஇருக்கிறார். அவரின் தாய்மைக்கும் தெய்வீகத் தந்தைக்குமிடையே முற்றிலும் சிறப்பானதோர் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மறுபடியுமாக, திருத்தூதர் பவுல் அடியாரின் கூற்றுப்படி ஒவ்வொரு கிறித்தவனுமேதூய ஆவி தங்கும் கோவில் (1கொரி 6:19). ஆனால்மரியாவில்  இந்தக் கூற்றானது சிறப்பான பொருளைப் பெறுகிறது; அவரில் தூய ஆவியாருடன் உள்ள உறவானது திருமணம் சார்ந்த பரிணாமத்தால் (with a spousal dimension) வளமைப்படுத்தப்படுகிறது. இதைத் திருத்தந்தை அவர்கள்மீட்பரின் தாய் (Redemptoris Mater) என்ற திருமடலில் இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார்: ‘தூய ஆவியானவர் ஏற்கெனவே மரியா மீது வந்து இறங்கியிருந்தார் மற்றும் அவர் இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் உண்மையான கடவுளின் வார்த்தையை வரவேற்று, அவருடைய நம்பிக்கைக்குரிய மணவாட்டியாக (his faithful spouse) இருந்தார் (மீட்பரின் தாய், எண். 26).

மரியாவின் தகுதியானது ஒவ்வொரு படைப்பின் தகுதியையும் விஞ்சுகின்றது

5. ஆகவே, மூவோர் இறைவனோடு மரியாவுக்குள்ள சிறப்பு உறவானது மற்ற எல்லாப் படைப்புகளைவிடவும் மிகவும் விஞ்சி நிற்கும் அளவுக்கு அவருக்குத் தனிமதிப்பைக் கொடுக்கிறது. இதைத் திருச்சங்கம் வெளிப்படையாகவே இவ்வாறு நினைவு கூர்கின்றது: இந்தமாண்புமிக்க அருளினுடைய கொடையின் காரணமாக மரியாஅனைத்து உயிர்களையும் வெகுவாக விஞ்சி (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 53) நிற்கின்றார். இருப்பினும், இந்த மிக உன்னத மாண்பானது நம் ஒவ்வொருவரோடும் மரியாவுக்கிருக்கின்ற தோழமையைத் (Mary’s solidarity with each of us) தடுக்கவில்லை. இதையேஇறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற ஏடானது இவ்வாறு கூறுகிறது: ‘ஆனால், ஆதாம் இனத்திலிருந்து வந்த அவர், அதே நேரத்தில் மீட்கப்பட வேண்டியோர் அனைவரோடும் ஒன்றுபட்டிருக்கிறார்மற்றும் மரியாஅவருடைய மகனுடைய தகுதியின் காரணமாக, மிகவும் மேன்மைமிகு வழியில் மீட்கப்பட்டுள்ளார் (ibid.).

இங்கு நாம் மரியாவின் தனிச்சலுகைகளுடைய மற்றும் மூவோர் இறைவனோடு அவருக்குள்ள சிறப்பு வாய்ந்த உறவின் உண்மையான பொருளைப் பார்க்கிறோம். அவற்றின் நோக்கமானது மனுக்குலத்தின் மீட்பில் அவரை ஒத்துழைக்கச் செய்வதாக இருந்தது. ஆகவே, ஆண்டவரின் தாயின் அளவிட முடியாத பெருந்தன்மையானது எல்லா மனிதர்களுக்குமான இறைவனுடைய அன்பின் கொடையாக நிலைத்திருக்கிறது. அவரைபேறுபெற்றவள் (லூக் 1:48) என்று அழைத்து, ‘அவருடைய இரக்கத்தின் நினைவாக (லூக் 1:54) அவரில் எல்லாம் வல்லவர் செய்தஅரும்பெரும் செயல்களுக்காக (லூக் 1:49) எல்லாத் தலைமுறையும் மரியாவைப்  புகழ்கின்றது.

மூலம்: Pope John Paul II, Mary’s relationship with the Trinity, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 17 January 1996, p.11.