திரு அவையின் அனைத்து ஆவணங்களும் திருமடல்களும் மரியன்னையின் உதவியை நாடி நிறைவடைவதை ஒரு மரபாகவே கொண்டுள்ளன. எனவே, இறைவேண்டல் பற்றிய நமது பார்வையும் பகிர்வும் அன்னை மரியாவோடு நிறைவடைவது பொருத்தமானதே.
அன்னை
மரியாவுக்கு எத்தனையோ சிறப்புப் பெயர்களைச் சூட்டி நாம் மகிழ்கிறோம். அவர் இறைவேண்டலின் தாய் என்பது அவற்றுள் ஒன்று. நாம் இறைவேண்டல் செய்வதற்கும், நமது எல்லாப் பணிகளையும் நிறைவாக ஆற்றுவதற்கும் நம் தாய் நமக்குத் துணை நிற்கிறார். திருவிவிலியம் காட்டும் உண்மை இதுவே. திரு அவையின் மரபும் இதுவே. நமது சொந்த அனுபவமும் இதுவே.
தொடக்கத்
திரு அவையினர் இறைவேண்டலில் ஈடுபட்டபோது, அன்னை மரியாவின் துணை அவர்களுக்கு இருந்தது என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளது. “இயேசுவின் சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்” (திப
1:14). அந்த இறைவேண்டலின் விளைவாகத்தான் தூய ஆவியார் பெருவிழாவின்போது அனைவரும் தூய ஆவியாரைக் கொடையாகப் பெற்றுக்கொண்டார்கள்.
தனது
‘இறைவேண்டல்’ என்னும்
மறைக்கல்வித் தொடரில் அன்னை மரியா பற்றி உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தைப் பருவத்திலிருந்தே மரியா இறைவேண்டலில் ஆர்வம் உடையவராக இருந்தார் என்றும், இளமைப் பருவத்தில் அமைதியிலும், இறைவனோடு உரையாடுவதிலும் அவர் நேரம் செலவழித்திருப்பார் என்றும் கூறுகிறார். வழக்கமான யூத மரபிலான மன்றாட்டுகளோடு, தன் வாழ்வில் இறைவன் செய்த அருஞ்செயல்களைப் போற்றிப் புகழும் இறைப்புகழ்ச்சியாளராகவும் (லூக் 1:47-55) அன்னை மரியா இருந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.
இதைவிட
மேலாக, “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக்
2:19) என்னும் பதிவின் வழியாக, மரியா ஓர் ஆழ்நிலைத் தியானி (Contemplative) என்பதையும்
நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் நம் திருத்தந்தை.
மேலும்,
மரியா மரபார்ந்த இறைவேண்டலில் மட்டும் ஈடுபடவில்லை; அவரது வாழ்வே ஓர் இறைவேண்டலாக
இருந்தது என்கிறார். மரியாவின் தாழ்ச்சியும், இறைத்திருவுளத்துக்குப் பணிதலும் இறைவேண்டலின் வடிவங்கள் என்பது திருத்தந்தையின் கருத்து.
“நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்பதே மரியாவின் மிகச்சிறந்த இறைவேண்டல் என்று கூறி நம்மை நெகிழ வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் இறைப்பற்றை இழக்காமலிருப்பதும், இறைநம்பிக்கையில் நிலைத்திருப்பதும் எத்துணை பெரிய பேறு! “மரியா சிலுவையடியில் நின்றபோது இறைநம்பிக்கையில் உயர்ந்து நின்றார். அது மிகச்சிறந்த இறைவேண்டல் அல்லவா!” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை
16-ஆம் பெனடிக்ட் அவர்களும் 2011-12-ஆம் ஆண்டுகளில்
‘இறைவேண்டல்’ பற்றிய
தொடர் உரைகளைத் தனது புதன்கிழமை மறைக்கல்வி நேரங்களில் வழங்கியுள்ளார். நாற்பத்தைந்து வாரங்கள் தொடர்ந்து வழங்கிய இந்தத் தொடரில், ‘மரியாவின் இறைவேண்டல் உடனிருப்பு’ என்னும்
தலைப்பில் மரியன்னையின் இறைவேண்டலைப்பற்றிக் கற்பித்துள்ளார்.
மரியா
இறைவனின் தாய் மட்டுமல்ல; திரு அவையின் தாயும்கூட அல்லவா! எனவே, மன்றாடும் திரு அவைக்கு மாதிரியாகவும் உடன் வேண்டுபவராகவும் திகழ்கிறார். நற்செய்தியாளர் லூக்காவின் பார்வையில் மீட்பின் வரலாறு மரியாவுடன் தொடங்கி, திருத்தூதர் பணிகள் நூலில் திரு அவையின் பிறப்பின்போது இறைவேண்டல் செய்த மரியாவுடன் நிறைவடைகிறது. வழிநெடுக மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிபவராகவும், அதனைப் பற்றிச் சிந்திப்பவராகவுமே காட்சி தருகிறார். எனவே, அந்தத் தாயை நாமும் பின்பற்ற வேண்டும் என்கிறார் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்.
திருத்தந்தையர்களைப்
போலவே, திரு அவைப் புனிதர்களும் மரியாவைத் தங்களின் இறைவேண்டல் மாதிரியாகக் கொண்டனர். தங்கள் பணிகளையும் இறைவேண்டலையும் மரியன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.
அன்னை
மரியாவிடமிருந்து இறைவேண்டல் செய்ய கற்றுக்கொண்டவர்கள் என்று சில புனிதர்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, புனித தோமினிக் மரியன்னையைக் காட்சியில் கண்டு, ‘வானதூதரின் வாழ்த்து’
என்னும் செபமாலையைத் தோற்றுவித்தார்.
லூர்து
நகரில் காட்சி தந்த மரியன்னையோடு இணைந்து செபமாலையை வேண்டும் வியப்பான பேற்றைப் பெற்றவர் புனித பெர்னதெத். அன்னை காட்சி தந்த 18 முறையும் செபமாலை அவரின் கைகளில் இருந்தது. பெர்னதெத் செபமாலையை மன்றாடியபோது, மரியன்னை அமைதியில் அவரோடு இணைந்தார். திருத்துவப் புகழ் கூறப்பட்டபோது மரியன்னையும் இணைந்துகொண்டார் என்னும் வியப்பான செய்தி பெர்னதெத்தின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,
மரியன்னையின்மீது கொண்ட பக்தியினால் அனைத்துப் புனிதர்களுமே தங்கள் இறைவேண்டல் வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டனர். இன்றளவும் பல கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கும்
மரியன்னை மன்றாட்டுகளுக்கும் சிறப்பிடம் இருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே மரியா இறைவேண்டலின் தாயாக விளங்குகிறார்.
நமது
இறைவேண்டல் வாழ்வுக்கும் நம் தாய் மரியா துணை நிற்பாராக! அவரது துணையும் பரிந்துரையும் நம் அருள் வாழ்வை, இறைவேண்டலை ஊக்கப்படுத்தட்டும்.
மரியன்னையைப்
போலவே நாமும் தனி வேண்டலில் இறைப்புகழ்ச்சியும், பிறரோடு இணைந்து மன்றாடுவதில் பரிந்துரையும், நம் வாழ்வின் நிகழ்வுகளை ஆய்வு செய்து, சிந்திப்பதில் தியானியாகவும் வளர்வோமாக! இறைத்திருவுளத்திற்குப் பணிதலும் எளிமையும் தாழ்ச்சியும் பிறரன்பும் நம்மில் செழிக்கட்டும்.
கடந்த
50 வாரங்களாக இந்தத் தொடரை எழுத அருள்கூர்ந்த இறைவனைப் போற்றி மகிழ்கிறேன். யூபிலி 2025-க்கு ஆயத்தமாக இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு இறைவேண்டலின் பரிமாணங்களை விரிவாக எழுத என்னை ஊக்குவித்து, பெருமைப்படுத்திய நம் வாழ்வின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இறைவனுக்குத் திருவுளமானால், மற்றொரு தொடரில் மீண்டும் சந்திப்போம்.
“ஒத்துழைப்பான மற்றும் அமைதியான சிவில் சமூகங்களை உருவாக்குவது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். இதை முதலில் குடும்பத்தில் முதலீடு செய்வதன் மூலம் செய்யலாம். ஆணும்-பெண்ணும் இணைந்து உருவாக்கும் நிலையான ஒன்றிப்பே (stable union between a man and a woman) குடும்பம். சிறியதாயினும், இது உண்மையான சமூகம். எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது.”
இவ்வார்த்தைகளைக்
கடந்த மே 16 வெள்ளியன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை 14-ஆம் லியோ பகிர்ந்துகொண்டார். திருத்தந்தையின் சர்ச்சைக்குரிய வார்த்தையாக ‘ஆணும்-பெண்ணும் இணைந்த நிலையான ஒன்றியம்’
என்ற சொற்றொடரில் கவனம் செலுத்தி டிரென்டிங் செய்தன உலக ஊடகங்கள். தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை-நம்பிகள் போன்றவர்களைக் காயப்படுத்திவிட்டார் என்றெல்லாம் பேசின. ஆனால் உண்மையென்ன?
மறைந்த
திருத்தந்தையர்களான 13-ஆம் லியோ (ரேரும் நோவாரும்), புனித இரண்டாம் யோவான் பவுல் (ஃபாமிலியாரிஸ் கான்சோர்டியோ) மற்றும் பிரான்சிஸ் (அமோரிஸ் லெட்டீஷியா) இவர்களைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ
அவர்களும் திரு அவையின் சமூகக் கோட்பாட்டில் குடும்பத்தை முக்கியமாகக் கருதுகிறார். “மனிதர் - ஆணும் பெண்ணும் - என்பதன் உண்மை ஒரு கலாச்சாரக் கட்டுமானம் அல்ல; மாறாக, இறைவனின் கொடையாகும். நம் குழந்தைகளைக் குழப்பும், இறைவனின் திட்டத்தைத் திரித்துவிடும் சித்தாந்தங்களை நாம் எதிர்க்கவேண்டும். குடும்பம் என்பது இறைவனால் வடிவமைக்கப்பட்ட வாழ்வு மற்றும் அன்பின் புனிதத் தலமாகும். இந்த அடித்தளத்தை மறுவரையறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்கிறார். இந்நிலைப்பாட்டினை
உறுதிப்படுத்த முன்னோடி திருத்தந்தையர்கள் மூவரின் சிந்தனைகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறார்.
தனது
‘ரேரும் நோவாரும்’
பகுதிகள்
9-11-இல், திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘குடும்பம்’
என்பதன் கத்தோலிக்கப் பார்வை சோசலிசப் பார்வையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். குடும்பம் ஒரு ‘புரோலெட்டேரியா நிறுவனம்’
மட்டுமே. இது முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடக்கப்படுகிறது. மதம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இவ்வமைப்பை அழித்து, அதற்குப் பதிலாகச் சமூகக் கட்டமைப்பான அரசுகள் குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சோசலிசம் வாதிட்டது. இதற்கு மாற்றாய், குடும்பம் என்பது இயற்கையான, மனித இயல்புக்கு அடிப்படையான அமைப்பு. இது ‘இல்லத் திரு அவைச் சமூகம்.’ எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது. எனவே, இதற்குச் சொந்த உரிமைகள் உண்டு. அரசுகள், மாநிலங்கள் இந்த உரிமைகளை அளிப்பதில்லை. அங்கீகரிக்க மட்டுமே செய்கின்றன. குடும்பத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்து ‘ரொட்டித் தொழிற்சாலையாக’ சோசலிசம்
மாற்றப் போராடிய தருணத்தில் திரு அவை குடும்பத்தைச் சுதந்திரமான ஆனால், சமூகத்துடன் இணைந்து ‘உணவு தயாரிக்கும் வீடாக’ மாற்றப் போராடியது. ஆனால், 1968-க்குப் பிறகு, குடும்பத்தின் அர்த்தமே கேள்விக்குள்ளாகியது. உலகமயமாக்கலின் தாக்கம் குடும்பக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தத் தொடங்கியது. அதன் நீட்சியாக இன்று ‘எப்படியும் வாழலாம், யாரோடும் வாழலாம்’ என்கிற அணுகுமுறைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாபெரும்
சவால்களை உற்றுநோக்குகையில், நவீனகாலச் சவால்களின் இதயம் குடும்பம் எனலாம். இங்குதான் மிக முக்கியமான போர் நடக்கிறது என்பதைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஆழமாகப் புரிந்துகொண்டார். எனவே, குடும்பங்களுக்காக அதிகம் உழைத்தார்.
தனது
‘பாமிலியாரிஸ் கான்சோர்டியோ’வில்
குடும்பத்தை ‘சமூகத்தின் அடிப்படைச் செல்’ என்று ஒரு தீர்க்கதரிசன பார்வையை மொழிந்தார். இப்போதனையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிசும் தனது திருத்தூதுப் பணியில் குடும்பத்தை மையமாக வைத்தார். இரண்டு ஆயர் மாமன்றங்களைக் கூட்டினார். ‘அன்பின் மகிழ்ச்சி’
(Amoris Laetitia) என்ற
திருத்தூது ஊக்கவுரை வழியாகக் குடும்பங்களின் அனுபவங்களையும் சவால்களையும் கருத்தில் கொண்டு, தெளிந்து தேர்ந்து செயல்படுவது, உடன் பயணிப்பது போன்ற மறைபரப்புத் திட்டங்களை முன்மொழிந்தார்.
புதிய
திருத்தந்தையும் குடும்பத்தின் முன்னுரிமையை அரசுகள், அவற்றின் மாநில அமைப்பு முறைகள் மற்றும் உலகமய சந்தைப் பொருளாதாரத்திற்கு மேலானதாக மீண்டும் உயர்த்திப் பிடிக்கிறார். நேற்றும் இன்றும் என்றுமான சமூகப் பிரச்சினையின் வேர்கள் குடும்பத்திலிருந்துதான் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இவ்விதம்
குடும்பத்தைத் தனிப்பட்ட மற்றும் ஆன்மிக விவாதத்தின் மையமாக மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் விவாதத்தின் இதயத்திலும் மீண்டும் வைக்கிறார்; குடும்பத்தை உள்ளார்ந்த மற்றும் தனிப்பட்டத் தேர்வுகளின் கோளத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான அவசரத்தேவையை முன்னெடுக்கிறார்.
இதன்
முத்தாய்ப்பாகக் கடந்த ஜூன் 1 அன்று நடந்த குடும்பங்களின் யூபிலி அமைந்திருந்தது.
“கிறிஸ்துவைச் சந்திப்பதன் வழியாகத் தீமை மற்றும் மரணத்தின் நீரிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தின் ‘மீனவராக’நாம் மாறவேண்டும்” என்கிற
திருத்தந்தையின் அழைப்பை வாழ்வாக்குவோம்.
அன்புச் செல்வன்: “தந்தையே! பிறப்புநிலைப் பாவம் என்பது மனம் தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் அந்நியப்பட்டு, புறம் நோக்கிச் சென்று, தன் வாழ்வின் மகிழ்வைத் தேடுவதற்கான வேட்கை என்று கூறினீர்கள். இத்தகைய பிறப்புநிலைப் பாவத்தைதான் திருமுழுக்கு அருளடையாளம் கழுவுகின்றது என்று நாம் நம்புகின்றோம். அது எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து எடுத்துரைக்க முடியுமா?”
அருள்பணி:
“இங்கு ஆற்றல் மையங்கள் (energy centres) குறித்து நாம்
தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நம் உடலில் ஏழு ஆற்றல் மையங்கள் உள்ளன. இந்த ஏழு இடங்களும் உடலின் நரம்பு மண்டலத்தோடு மிக நெருங்கியத் தொடர்பு உள்ளவையாக இருப்பதோடு, உடல் மற்றும் மனநலனைப் பேணுவதற்குக் காரணமான ஏழு சுரப்பிகளோடு (glands) தொடர்புடையதாக இருக்கின்றன. முதலாவது ஆற்றல் மையமானது, நம் உச்சந்தலையில் உள்ளது. குழந்தைகளின் தலையைப் பார்த்தோம் என்றால் அவர்களது உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போன்ற ஒரு வட்டமான பகுதி பள்ளமாக இருப்பதையும், அதைத் தோல் மூடி இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதுவே, உச்சந்தலை ஆற்றல் மையம். இந்த ஆற்றம் மையம் மூளையின் மேற்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியோடு (pineal gland) தொடர்பு உடையது.
இரண்டாவது
ஆற்றல் மையம், நம் புருவ மத்தியில் உள்ளது. இது பிட்யூட்டரி சுரப்பியோடு (pituitary gland) தொடர்புடையது. மூன்றாவது
ஆற்றல் மையம், நம் தொண்டைப்பகுதியில் உள்ளது. இது தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. நான்காவது ஆற்றல் மையம், நம் இதயத்திற்கு அருகில் உள்ளது. இது ‘இதய ஆற்றல் மையம்’
(Heart Center) என்று
அழைக்கப்படுகிறது. இது தைமஸ் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஐந்தாவது ஆற்றல் மையம், நம் தொப்புளுக்கு அருகில் உள்ளது. இது கணையம் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஆறாவது ஆற்றல் மையம், நம் பாலியல் உறுப்போடு தொடர்புடையது. இது பாலியல் சுரப்பிகளான டெஸ்ட்ரஜன் மற்றும் ஈஸ்ட்ரஜன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஏழாவது ஆற்றல் மையம், நம் முதுகுத் தண்டு வடம் முடியும் இடத்தில் உள்ளது. இது அட்ரினல் சுரப்பியோடு தொடர்புடையது.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது, இந்திய ஆன்மிக மரபில் கூறப்படும் ஏழு சக்கரங்கள் (seven chakras) என்பனவற்றிற்கும், இந்த ஆற்றல்
மையங்களுக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது.”
அருள்பணி:
“உண்மைதான்! இந்திய ஆன்மிகத்தின்படியும் இன்றைய அறிவியலின் கூற்றுப்படியும், ஒரு மனிதரின் மேற்கண்ட ஏழு ஆற்றல் மையங்களும் சிறப்பாகச் செயல்படும்போது மேற்கண்ட ஏழு சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. இச்சுரப்பிகள் சிறப்பாகச் செயல்படும்போது நம் வாழ்வு முழு மனித வாழ்வாக மாற ஆரம்பிக்கிறது.”
அகஸ்டின்:
“ஆச்சரியமாக இருக்கிறது தந்தையே! இந்த ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளின் செயல்பாடுகள் குறித்தும் கொஞ்சம் கூறுங்கள்...”
அருள்பணி:
“ஒவ்வோர் ஆற்றல் மையமாக எடுத்துச் சிந்திக்கலாம். உச்சந்தலை ஆற்றல் மையமானது பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான இணைப்புப் பாலமாகக் கருதப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஆற்றல் அபரிமிதமாக நமக்குள் நுழைவது இந்த இடத்தின் வழியாகத்தான். இந்த ஆற்றல் மையம் பீனியல் சுரப்பியோடு தொடர்புடையது. அறிவியல் ஆராய்ச்சிகளின் பின்னணியில் பார்க்கும்போது நம் மனத்தை அமைதிப்படுத்தி, எண்ணங்களைக் குறைத்து மனத்தைத் தளர்வான நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடிய தன்மை பீனியல் சுரப்பிக்கு உண்டு. தியானத்தின்போது மனத்தின் எண்ணங்களைக் குறைத்து, உடலைத் தளர்வான நிலைக்குக் (relaxed state) கொண்டு செல்வதில்
பீனியல் சுரப்பியின் பங்கு அபரிமிதமானது. நாம் இரவில் ஆழ்ந்து தூங்குவதற்கு ஏதுவாக மெலாட்டானின் (melatonin) என்ற வேதிப்பொருள் சுரப்பதற்குக் காரணமாக இருப்பதும் இந்தப் பீனியல் சுரப்பியே! இந்த ஆற்றல் மையம் அடைபட்டுக் கிடக்குமென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எப்பொழுதுமே தனித்துவிடப்பட்டு, தனிமையால் துன்புறுவது போன்ற உணர்வு நம்மிடம் இருக்கும்.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, டெகார்த்தே என்ற தத்துவயியலாளர் ஆன்மாவிற்கும், பீனியல் சுரப்பிக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே
முன்வைத்தார். ஆன்மாவும் உடலும் பீனியல் சுரப்பியா(யி)லே ஒருங்கிணைக்கப்படுகின்றன
என்பது அவரது கருத்து.”
மார்த்தா:
“தந்தையே! இந்த மையம் அடைபட்டுக் கிடப்பது எதனால்?”
அருள்பணி:
“ஏராளமான எண்ணங்கள் நம் மனத்தில் இடையறாது ஓடிக்கொண்டிருப்பது முதல் காரணம். மனம் ஏராளமான எண்ணங்களை உருவாக்கி சஞ்சலத்தில் இருக்கும்போது பிரபஞ்சத்தின் ஆற்றலும், கடவுளின் அருளும் நமக்குள் பாயாது என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, ‘நான்’ என்ற அகந்தையோடும், ‘எனது’ என்ற பற்றோடும், ‘எனக்கு’ என்ற சுயநலத்தோடும் வாழ்கின்றபோது நம் வாழ்வு முழுக்க முழுக்க தன்னை மையப்படுத்திய வாழ்வாக மாறிவிடுகின்றது. அகந்தையோடு வாழ்கின்ற மனிதர் கடவுளிடமிருந்து அந்நியமாகி விடுகிறார்.”
கிறிஸ்டினா:
“தந்தையே, அடுத்தடுத்த ஆற்றல் மையங்கள் குறித்துக் கூறுங்களேன்?”
அருள்பணி:
“புருவ மத்தியில் உள்ள இரண்டாவது ஆற்றல் மையமானது இந்திய ஆன்மிகத்தில் ‘நெற்றிக்கண்’ என்றும்,
‘மூன்றாம் கண்’ என்றும் அழைக்கப்படுகிறது. வாழ்வைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும்
தெளிவான, சரியான புரிதலைக் கொண்டிருப்பதற்கு இந்த ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் நம் புரிதல் குறைவுபட்ட ஒன்றாக இருக்கும். குறைவுபட்ட புரிதலில் இருந்து வரும் செயல்பாடுகளும், வாழ்வியல் அணுகுமுறைகளும் அரைகுறையாக இருக்கும். இந்த ஆற்றல் மையம் பிட்யூட்டரி சுரப்பியோடு தொடர்பு உடையது. பிட்யூட்டரி சுரப்பியானது நம் நாளமில்லா சுரப்பு மண்டலத்தில் தலையாயச் சுரப்பியாகக் (master gland) கருதப்படுகிறது. உடலில் நடைபெறும்
ஏறத்தாழ எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிட்யூட்டரி சுரப்பிக்கு உண்டு. இது தமிழில் ‘கவச்சுரப்பி’ என்று
அழைக்கப்படுகிறது. தொண்டைப்பகுதியில் உள்ள ஆற்றல் மையம் நம் தொடர்புகொள்ளும் திறன் (Communi
-cation), கருத்துகளை
வெளிப்படுத்தும் திறன் (expression), உண்மைக்கான தேடல் ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த
ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்படும்போது பேச்சில் தெளிவும், தொடர்பு கொள்ளுதலில் உண்மைத்தன்மையும் இருக்கும். இவ்வாற்றல் மையம் தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. தொண்டைப்பகுதியில் அமைந்திருக்கும் இச்சுரப்பி உடலின் வளர்ச்சிதை மாற்றம் (metabolic process), உடலின் செரிமானம், மூளைவளர்ச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நெஞ்சுப்பகுதியில் அமைந்திருக்கும் இதய ஆற்றல் மையம் அன்பு, மன்னிப்பு, திறந்த மனம், பிறர்மீதான நம்பிக்கை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய சுரப்பி தைமஸ். மருத்துவயியலின் கருத்துப்படி தைமஸ் சுரப்பியானது உடலிலிருந்து நோயை விரட்டுகின்ற ‘T’ Blood அணுக்களை
உருவாக்குகிறது. இவ்வாறு உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குதலில் இந்த ஆற்றல் மையமும் தைமஸ் சுரப்பியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொப்புள்
பகுதியில் உள்ள ஆற்றல் மையம் உடலின் ஆற்றல் அளவு (energy level), செரிமானமடைந்த உணவை
உள்வாங்கும் திறன், சுய அடையாளம் ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையமானது கணையம் சுரப்பியோடு தொடர்புடையது. உடல் நலனைப் பேணுவதில் இந்த ஆற்றல் மையத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. உணவுச் செரிமானம், உணவை ஆற்றலாக மாற்றுதல், உடலில் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்திருத்தல் போன்ற பணிகளைத் தொப்புள் ஆற்றல் மையமும் கணையமும் இணைந்து செய்கின்றன. பாலியல் உறுப்போடு தொடர்புடைய ஆற்றல் மையம் படைப்புத்திறன், இன்பம், பாலியல் வேட்கை போன்றவற்றோடு தொடர்புடையது. இவ்வாற்றல் மையத்தின் செயல்பாடானது இந்தப் பகுதியில் உருவாக்கப்படும் டெஸ்ட்ரஜன், ஆன்ட்ரஜன், ஈஸ்ட்ரஜன் சுரப்பிகளோடு தொடர்புடையது.
ஏழாவது
ஆற்றல் மையம் முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் உள்ளது. இது உடலின் அடிப்படைத் தேவைகளான உண்ணுதல், உறங்குதல், தற்காப்பு, சமநிலைத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய அட்ரினல் சுரப்பியானது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான ‘சண்டையிடுதல் அல்லது சரணடைதல்’
என்ற வழிமுறையை நமக்குள் முன்னெடுக்கிறது.”
அகஸ்டின்: “ஏழு ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகள் குறித்தும் தெளிவைக் கொடுத்ததற்கு நன்றி தந்தையே! இவற்றுக்கும், திருமுழுக்கு அருளடையாளத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”
அருள்பணி: “அடுத்து நாம் சந்திக்கும்போது இது குறித்துப் பேசுவோம்.”
(தொடரும்)
இயேசுவின் “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவா 14:6) என்ற இறைவார்த்தையை வாழ்வாக்கியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் சீடராகப் பிரதிபலித்த திருத்தந்தை பிரான்சிஸ் மாமனிதர்; மங்காத விளக்கு; இயேசுவின் பாதச்சுவடுகளை இன்பமாகப் பின்பற்றியவர்; கருணை உள்ளம் கொண்ட கடவுளின் படைப்பாற்றல்!
கடவுளை
அன்பால் உணரலாம்; இரக்கத்தினால் அறியலாம்; அன்பையும் இரக்கத்தையும் இரண்டறத் தன் துறவற வாழ்க்கையில் துணிவோடு பின்பற்றியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ஆன்மிகத்தில் ஆழமானதால் அன்பால் உலகை ஆண்டவர். அவரை நினைக்காத உள்ளம் இல்லை, உணராத இல்லமும் இல்லை.
கொரோனா
என்ற கொள்ளை நோய் உலகைத் தாக்கியபோது திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவருக்காகவும் நம் மீட்புக்காகவும் புனித பேதுரு சதுக்கத்தில் விடாத மழையிலும் செபித்தார் என்பதற்கு நாங்களே சாட்சிகள். கடவுள்மேல் வைத்த பேரன்பாலும் நம்பிக்கையினாலும் அனைவரையும் ஆண்டவர்பால் அரவணைத்து, இறைவன்மீது நம்பிக்கையை ஆழப்படுத்தும் வகையில் காணொளியில் திருப்பலியை நிறைவேற்றி ‘திருவிருந்துதான் நமக்கு அருமருந்து’ என்று
ஒவ்வொரு நாளும் இறைப்பிரசன்னத்தில் வழிநடத்தியவர். இயேசுவின் விழுமியங்களான செபம், அன்பு, இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை, தாழ்ச்சி இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, நம் இதயத்தில் விதைக்கப்படுகிறார்கள். பல நூற்றாண்டு இம்மண்ணிலே
பலராலும் போற்றப்பட இருப்பவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
“விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக” (மத்
6:9) என்று இயேசு தந்தையை நோக்கிச் செபித்ததுபோல திருத்தந்தை பிரான்சிசும் செபத்தின் மூலம் கடவுளின் தயவையும் வழிகாட்டுதலையும் நாடினார். திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தை வாழ்வின் ஆதாரமாகப் பார்த்தார். செபத்தின் மூலம் மனிதர்கள் கடவுளின் உதவியையும் ஞானத்தையும் பெறமுடியும் என நம்பினார். சிறியோர்
முதல் பெரியோர் வரை இறையன்பை எடுத்து இயம்பியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அகில உலகத்தை அன்பால் அரவணைத்தவர்; அன்புக்கும் அடிபணியாத உயிர்கள் எதுவுமில்லை என்பதை வாழ்வாக்கியவர்; இயேசுவின் முதன்மையான கட்டளையைக் கடைப்பிடித்தவர்; “முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே, தலைசிறந்த முதன்மையான கட்டளை”
(மத் 22:37); “உன்மீது நீ அன்புகூர்வது போல
உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” (மத்
22:39) என்ற இந்த இரண்டு கட்டளைகளுக்கும் சொந்தக்காரர். தன் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் கட்டளைகளைக் கடைப்பிடித்து இறைவனின் அருள்கரம் பிடித்தவர்.
ஏழை-எளியவர்கள்மீது இரக்கம் கொண்டார். பாவிகளின்மீது இரக்கம் கொண்டார். கைம்பெண்கள், கைவிடப்பட்டவர்கள்மீது இரக்கம் கொண்டார். சிறையில் வசித்தவர்கள்மீதும் இரக்கம் கொண்டார். தந்தையாம்
கடவுளிடமும் இயேசுவிடமும் பெற்ற இரக்கத்தைத் தூய ஆவியின் துணையோடு செயல்படுத்தினார். ருவாண்டா
நாட்டில் நடந்த இனப் படுகொலைக்காக மன்னிப்புக் கேட்டார். பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களுக்காக மன்னிப்புக் கேட்டார்.
ஆடம்பரத்தைத்
தவிர்த்து ஏழைகளுடன் தொடர்புகொண்டு பொதுமக்களுடன் எளிதாகப் பழகிப் பணிவை வெளிப்படுத்தினார். எளிமையான வாழ்க்கைமுறை, சமூகத்துடன் தொடர்பு, எளிய மொழிகளைப் பேசுதல், சகோதரத்துவத்தை வலியுறுத்தல், மற்றவர்களைச் சார்ந்திருப்பது போன்ற செயல்கள் மூலம் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகப் பணிவு மற்றும் எளிமை ஆகியவற்றிற்கு நல்ல உதாரணமாக விளங்கினார். நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டுத் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்ட நம் திருத்தந்தை உயிர்ப்பில் இயேசுவோடு இணைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசுவார் என்ற நம்பிக்கையோடு நாம் நம்முடைய நம்பிக்கைப் பயணத்தைத் தொடர்வோம்.
நமது இறைவேண்டல் கடவுளின் கொடை! அதே வேளையில் நமது முயற்சியும்கூட என்னும் இறைவேண்டல் பற்றிய ஒரு முகாமையான செய்தியைக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியில் (கதிம 2725) வாசிக்கிறோம். ஆம், கடவுளின் அருளின்றி நம்மால் இறைவேண்டல் செய்ய இயலாது. எனவே, நாம் தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்யவேண்டும். திரு அவையின் நெடிய மரபின்படி, செபமாலை போன்ற பல மன்றாட்டுகளும், வழிபாட்டு நிகழ்வுகளும் தூய ஆவியாரின் அருள் வேண்டியே தொடங்குகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த மரபு திருவிவிலியத்திலிருந்துதான் தோன்றியது என்பதை மறந்துவிடக்கூடாது. “எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்” (எபே 6:18) என்பது தொடக்கத் திரு அவையினருக்குப் புனித பவுலடியார் தந்த தெளிவான போதனை. அதனையே, “தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்” (யூதா 1:20) என்னும் யூதாவின் திரு மடல் அழைப்பும் உறுதி செய்கிறது.
ஏன்
நாம் தூய ஆவியாரின் துணையுடன் இறைவேண்டல் செய்ய வேண்டும்? இதற்கான விடையை இயேசுவே தந்துள்ளார்: “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவா
14:26) என்பது இயேசுவின் வாக்குறுதி. “இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்” (திப
1:1) என்றுதான் திருத்தூதர் பணிகள் நூலே தொடங்குகிறது.
எனவே,
இயேசுவின் அறிவுறுத்தலின்படி திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவர்களும் தூய ஆவியாரின் துணையோடுதான் - இறைவேண்டல் உள்பட - அனைத்தையும் செய்தனர். குறிப்பாக, இறைவேண்டலுக்குத் தூய ஆவியாரின் துணை அவசியம் என்பதைப் பவுலடியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்” (உரோ
8:26).
கடவுளை
‘அப்பா, தந்தாய்’ என அழைக்கும் உரிமையை
இயேசு வழியாகத் தூய ஆவியார்தாம் பெற்றுத்தருகிறார் என்னும் இறையியல் உண்மையை “நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது” (கலா
4:6) என்னும் புனித பவுலடியாரின் சொற்களிலிருந்து உணர்கிறோம். தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்வதாகப் பவுலே சான்று பகர்ந்துள்ளார்: “நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார். என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை”
(1கொரி 14:14) என்பது அவரது வாக்குமூலம்.
மேலும்,
இறைவேண்டல் என்பது கடவுளின் அருள்; அதேவேளையில் நமது முயற்சியும்கூட என்பதற்குப் பவுலடியாரின் “தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன்”
(1கொரி 14:15) என்னும் சொற்கள் வலு சேர்க்கின்றன.
தாவீதின்
புகழ்பெற்ற 51-ஆம் திருப்பாடலில் “என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்” (திபா
51:15) என்னும் மன்றாட்டை வாசித்து நாம் வியப்படைகிறோம். இறைவனுக்குப் புகழ் சாற்ற வாயை நாமன்றோ திறக்க வேண்டும்? பின் ஏன் தாவீது கடவுளிடம் மன்றாடுகிறார்? ஆம், அவரது புகழைப் பறைசாற்றுவதற்கும் அவரது உதவி தேவை. கடவுளின் அருளின்றி நாம் வாய் திறந்து மன்றாட முடியாது என்னும் உண்மையைத் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான், அதே திருப்பாடலில் “உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்” (திபா
51:11) என்று கெஞ்சுகிறார்.
எனவே,
தூய ஆவியாரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அவரே நமக்கு இறைவேண்டல் ஆர்வத்தைத் தருகிறார். எப்படி இறைவேண்டல் செய்வது எனக் கற்றுத் தருகிறார். இறைவேண்டல் செய்ய மனமும் உடலும் தடையாக வரும்போது, தடைகளை உடைத்து நமக்கு இறைவேண்டலுக்கான ஆற்றலைத் தருகிறார். அவரே நமது இறைவேண்டலின் சொற்களையும், மனத்தின் நோக்கத்தையும் புனிதப்படுத்துகிறார். நமது வாழ்வும் இறைவேண்டலும் முரண்படாதபடி அவரே பாதுகாக்கின்றார். புதுமையாகவும் தேவைக்கேற்பவும் மன்றாட நமக்குப் படைப்பாற்றலையும் அவரே தருகின்றார்.
எனவேதான்,
திரு அவையின் மாபெரும் புனிதர்கள் அனைவரும் தூய ஆவியாரின் துணையை நாடினர். தூய ஆவியாருக்கென்றே சிறப்பு மன்றாட்டுகளையும் இயற்றினர். புனித அகுஸ்தினாரின் “என்னுள் சுவாசியும் தூய ஆவியாரே”,
புனித ஜோஸ் மரிய எஸ்கிரிவா இயற்றிய “என் மனத்தை ஒளிரச் செய்யும் தூய ஆவியாரே”,
இரபானுஸ் மவுருஸ் இயற்றிய “வாரீர் படைத்திடும் தூய ஆவியாரே”
(Veni Creator Spiritus) போன்றவை
புகழ்பெற்ற தூய ஆவியாருக்கான மன்றாட்டுகள்.
நாமும்
நாள்தோறும் தூய ஆவியாரை நோக்கி மன்றாடுவோமாக. அவரது துணையோடு இறைவேண்டல் செய்வோமாக.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலும், அதற்கு முன்னும் திருத்தலங்களைப் பற்றிய திரு அவை ஆசிரியப் படிப்பினைகள் இல்லை. இக்குறையைப் போக்கியவர் திருத்தந்தை 6-ஆம் பவுல். திருத்தலங்களின் அதிபர்களுக்கு வழங்கிய தனது வருடாந்திரச் சொற்பொழிவுகளில் திருத்தலங்கள் ‘ஆன்மிக மருத்துவங்கள்’ (‘Spiritual clinics’, 1965) ‘அ’ (‘Centres of Spiritual Refreshment’,1970) என்றும் அவர் கூறியுள்ளார்.
1983-ஆம்
ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட திரு அவைச் சட்டத் தொகுப்பில் திருத்தலங்களைப் பற்றி முதன்
முதலாக ஐந்து சட்டங்கள் (திச 1230-1234) இடம் பெற்றுள்ளன. அதன்பிறகு 1999, மே 8 தேதியிட்ட
ஆவணத்தில் நாடோடிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கான திருத்தந்தை அருள்பணிப் பேரவை
திருத்தலங்களைப் பற்றிய விரிவான படிப்பினைகளை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவழிபாடு
மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் 2001, டிசம்பர் 17-இல் வெளியிட்ட ‘பொதுமக்கள்
பக்தி மற்றும் திருவழிபாடு’ (Popular
piety and the liturgy) என்ற வழிகாட்டி ஆவண இறுதிப் பகுதியில் (எண்:
261-287) திருத்தலங்களின் இயல்பு பற்றிச் சிறப்பாக விளக்கியுள்ளது. மேலும், இந்தியக்
கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) 2024, மார்ச் 19 தேதியிட்ட ‘தேசியத் திருத்தலங்கள்
நிலையைப் பெறுவதற்கான விதிமுறைகள்’ (Norms
for the designation of national shrines)
என்ற ஏட்டில் திருத்தலங்களுக்கான முக்கிய நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.
இந்நிலையில்
பங்கு ஆலயம் அல்லது அதன் கிளைக் கோவில்களுள் ஒன்றை ‘திருத்தலம்’ என்று தன்னிச்சையாக அறிவித்து, அதன் பெயர் கொண்ட அருள்
ஆதரவாளரைக் (patron) குறித்து நவநாள், ஆராதனை, திருப்பலி,
அன்னதானம் போன்றவை நடப்பதாக நவீன ஊடகங்களில் விளம்பரம் செய்து ‘பக்த கோடிகளை’ அழைக்கும் போக்கு சில அருள்பணியாளர்களிடையே அண்மைக்காலமாகப்
பரவலாகி வருகிறது.
இவ்வாறு
தன்னிச்சையாக ஓர் ஆலயத்தை ‘திருத்தலம்’ என்று அறிவிக்கலாமா? திருத்தலங்களுக்கும்
மற்ற ஆலயங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திருத்தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
யாவை? போன்ற கேள்விகளை இக் கட்டுரை விளக்குகிறது.
ஆலயங்களின் வகைகள்
‘சர்ச்’ (church) என்ற ஆங்கிலச் சொல் கிறித்தவ இறைமக்களின்
சமூகமான திரு அவையையும், அது குழுமமாகக் கூடி வழிபடும் ஆலயத்தையும் குறிக்கிறது. ஆலயம்
‘கோயில்’ அல்லது ‘கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திரு அவையில் ஆலயங்கள்
பல வகைப்படும்.
1) பங்கு ஆலயங்கள் (Parish churches)
ஒரு
மறைமாவட்டத்தில் நிலையான முறையில் நிறுவப்படும் நம்பிக்கையாளர்களின் ஒரு குறிப்பிட்ட
குழுமம் இறைவனை வழிபடும் இடம் பங்கு ஆலயம் ஆகும். இங்கு அருளடையாளங்கள் குறிப்பாக,
திருப்பலிக் கொண்டாட்டங்கள் மற்றும் அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இதே நோக்கத்திற்காகப்
பங்கில் கிளை (sub
stations churches)
அல்லது வழிபாட்டுக்கூடங்கள் (oratories) அமைக்கப்படுகின்றன.
ஒவ்வோர்
ஆலயத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்படுகிறது. மூவொரு இறைவன், கிறிஸ்து ஆண்டவர் (பிறப்பு,
குழந்தைப் பருவம், உருமாற்றம், உயிர்ப்பு, மீட்பு உள்ளிட்ட மறையுண்மைகள்), அன்னை மரியா,
திருத்தூதர்கள், புனிதர்கள், வானதூதர்களின் பெயர் ஒன்று அதில் இடம்பெறும்; அப்பெயர்
அவ்வாலயத்தின் அருள் ஆதரவாளராகக் கருதப்படும்; அதன் நினைவாக விழாக்களும் எடுக்கப்படும்.
2) சிற்றாலயங்கள் (Chapels)
தனியார்
வசதிக்காகத் தலத்திரு அவை மேலதிகாரியின் அனுமதியுடன் இறைவழிபாட்டிற்காக அமைக்கப்படுபவை
சிற்றாலயங்கள் ஆகும். அங்குத் திருப்பலிகள் மற்றும் புனிதக் கொண்டாட்டங்களை நிறைவேற்றலாம்.
ஆயர் இல்லம், அருள்பணியாளர் பயிற்சியகங்கள். அர்ப்பண வாழ்வுக் குழுமங்களின் இல்லங்கள்
உள்ளிட்ட இடங்களில் சிற்றாலயங்கள் உள்ளன.
3) பெருங்கோவில் (Basilica)
முற்கால
உரோமை நகரில் கட்டப்பட்ட பொதுக் கட்டடங்களைக் குறிக்கும் ‘பசிலிக்கா’ என்ற கிரேக்கச் சொல் காலப்போக்கில் முக்கியக் கிறித்தவப்
பெருங்கோவில்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தந்தையின் ஆணையால்
மட்டுமே ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் பெருங்கோவிலாக உயர்த்தப்பட முடியும். அதில்
‘மேஜர் பசிலிக்கா’ மற்றும் ‘மைனர் பசிலிக்கா’ என்று இருவகை உள்ளது. மேஜர் பசிலிக்கா என்பது திருத்தந்தையின்
நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. உரோமை நகரில் உள்ள திருத்தூதர் பேதுரு (வத்திக்கான்),
திருத்தூதர் யோவான் (இலாத்தரன்), திருத்தூதர் பவுல் (மதில்களுக்கு வெளியே), புனித மரியா
மஜோரே ஆகிய நான்கு பெருங்கோவில்கள் மட்டுமே ‘மேஜர் பசிலிக்கா’ என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான
பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அறியப்படுகின்றன. ஓர்
ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகளை
‘திரு அவையின் இல்லம்’ (Domus
Ecclesiae) என்ற
1989, நவம்பர் 9 தேதியிட்ட ஆவணத்தில் இறை வழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப்
பேராயம் வழங்கியுள்ளது. அந்த விதிமுறைகளின்படி சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள ஓரியூர்
திருத்தலம் அண்மையில் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4) பேராலயம் (Cathedral)
ஒரு
மறைமாவட்ட ஆயரின் இருக்கை (Cathedra) உள்ள ஆலயம் அந்த மறைமாவட்டத்தின்
தலைமைக் கோவில் அல்லது பேராலயம் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆயர், அருள்பணியாளர்களின்
திருநிலைப்பாடு அருளடையாளங்கள், அவர்களது அடக்கச் சடங்குகள் மற்றும் மறைமாவட்டம் தழுவிய
சிறப்புத் திருச்சடங்குகள் நடைபெறுகின்றன.
5) திருத்தலங்கள் (Shrines)
திருத்தலம்
என்பது நம்பிக்கையாளர்கள் திரளான எண்ணிக்கையில் திருப்பயணம் செல்கின்ற ஓர் ஆலயம் அல்லது
மற்றொரு புனித இடம் ஆகும். அப்புனிதத்திற்குக் குவிமையமாக இருப்பவை அங்குள்ள புனிதரின்
திருவுருவம், அருளிக்கம் (relic), உருவ ஓவியம் (icon), காட்சி அனுபவங்கள், புதுமைகள் போன்றவை
ஆகும். அவற்றின் மூலம் வாழும் கடவுளின் நினைவு, உடனிருப்பு மற்றும் வரலாற்றில் அவரது
இடையீட்டின் குறியீடாக அத்திருத்தலம் பார்க்கப்படுகிறது.
மேலும்,
ஒரு பங்கு ஆலயத்திற்கு இருப்பதுபோல் குறிப்பிட்ட இறைமக்களோ அவர்களுக்குரிய அருள்பணிகளை
நிறைவேற்றுதலோ திருத்தலத்திற்கு இல்லை. மாறாக, ஆன்ம, உடல், மன ரீதியான புத்துணர்வும்
புதுப்பித்தலும் நலமும் நாடும் அனைவருக்கும் உரிய இலக்கு இடமாகத் திருத்தலம் கருதப்படுகிறது.