news
ஆன்மிகம்
மனமும் குணமும் (சதுக்கத்தின் சப்தம் - 3)

இன்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்கே, எதிலே சிக்கித் தவிக்கிறீர்கள்?

நம் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி கருத்துரையில், யோவான் நற்செய்தியில் வருகின்ற பெத்சதா குளத்தில் நடந்த ஒரு நிகழ்வை, ஒரு மருத்துவமனைக்குள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளைக் காண்கின்ற உணர்வாகப் பார்க்கின்ற நமக்கு, “அங்கே பலர் - நோயாளிகள், கண் குருடானவர்கள், காது கேளாதவர்கள், கால் ஊனமுற்றோர் போன்ற பலர் படுத்திருந்தனர் (யோவா 5:1-9) என்றும், நம் வாழ்வில் பல நேரங்களில் இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் நாம் உள்ளாகும்போது பிரச்சினைகளைச் சோர்வில்லாமல் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய துணிவை, நோயுற்ற மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதைஇயேசுவின் குணப்படுத்துதல்குறித்துச் சிந்திக்கும் நாம் குறிப்பாக, முடக்கப்படுதல், ஒரு சூழலுக்குள் சிக்கிக்கொள்ளுதல் பற்றியும், தொடர்ந்து போரிட விரும்பாமல் விட்டுக்கொடுத்துச் செல்லும் நிலையிலிருக்கும் ஒரு மனிதராகஉடல் நலமற்ற மனிதர் நலமடைதல்என்ற பகுதியைக் கொண்டு விவரிக்கின்றார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

குணப்படுத்தும் குளம்

இயேசு யூதர்களின் திரு விழாவில் பங்கேற்பதற்காக எருசலேமுக்குச் செல்கின்றார். நேரடியாக ஆலயத்திற்குள் செல்லாமல், ஆடுகளைக் குளிப்பாட்டித் தூய்மைப்படுத்தி, அதன்பின் காணிக்கையாக்கும் இடத்திற்கு வந்து அதன் வாயிலருகில் நிற்கின்றார். இந்த ஆட்டுவாயிலின் அருகே தீட்டானவர்கள், தூய்மையற்றவர்கள் என்று கருதப்பட்ட, கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நோயாளிகள் இருந்தனர்.

இம்மக்கள் தங்களது வாழ்க்கை விதியை மாற்றக்கூடிய ஓர் அதிசயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வாயிலின் அருகே இருந்த குளத்தில் இருந்த நீரானது அதிசய நீராக, குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட நீராகக் கருதப்பட்டது. அந்த நீர் கலங்கும்போது, யார் முதலில் இறங்குகின்றார்களோ அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தது.

இரக்கத்தின் வீடு, ஏழைகளின் போர்

இக்குளமானதுஏழைகளிடையே போராட்டம்இருந்ததால் ஒரு விரும்பத்தகாத காட்சியை உருவாக்கியது. அங்கிருந்த நோயாளிகள் குளத்திற்குள் நுழைய சிரமப்பட்டுத் தங்களது உடலை இழுத்துச் செல்லும் சோகமான காட்சியை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பெத்சதா என்றால்இரக்கத்தின் வீடுஎன்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டும் அக்குளமானது, இறைவன் வாழும் திரு அவையின் உருவகமாகக் கூட இருக்கலாம்.

சாக்குப்போக்குத் தன்மை 

38 ஆண்டுகளாக உடல்நலமற்று, பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இயேசுவின் கேள்வி இதுதான்: ‘நீர் குணமடைய விரும்புகிறீரா?’

1. ‘என்னை குளத்தில் இறக்கிவிட யாரும் இல்லைஎன்று அவர் கூறுகிறார். எனவே, தவறு அவருடையது அல்ல; ஆனால், அவரைக் கவனித்துக்கொள்ளாத மற்றவர்களின் தவறு என்பதாகக் கூறுகின்றார். இந்த அணுகுமுறையானது பொறுப்பேற்றலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக மாறுகிறது.

2. ‘நான் போவதற்குமுன் வேறு ஒருவர் இறங்கி விடுகிறார்என்று உடல்நலமற்றவர் இயேசுவிடம் கூறிய வார்த்தைகளானது; அம்மனிதர் தனது வாழ்வை ஒரு விவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது. நாம் அதிர்ஷ்டமற்றவர்களாக இருப்பதால், விதி நமக்கு எதிராக இருப்பதால் நமக்கு எல்லாம் மாறாக நடக்கின்றன என்று நாம் எண்ணுகின்றோம். இம்மனிதரும் அதைப்போலவே உற்சாகமிழந்தவராக, வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவராகவே தன்னை உணர்கின்றார்.   

வாழ்க்கையில்அடுத்து என்ன செய்வது?’ என்ற உறுதியான தீர்மானம் செய்யாமல் இருப்பதற்கான ஓர் ஏமாற்றுவழியாக இதனைக் கையாள்கின்றார். நற்செய்தியில் முடங்கிப்போன மனிதனைப் போலவே, நாமும் சிக்கிக்கொள்ளலாம். மேலும், குணமடைய வேண்டும் என்ற ஆசை நமக்கும் மங்கிப்போகலாம்.

உன் வாழ்க்கை உன் கையில்

எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்என்ற வார்த்தைகளின் வழியாக அம்மனிதர் எழுந்து நடக்கவும், பல ஆண்டு களாக இருந்த அவரது சூழலை மாற்றவும், படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கக் கட்டளையிடுகின்றார். அவரது படுக்கையானது அப்படியே அங்கேயே விட்டுவிடக்கூடாது, தூக்கி எறியப்படவும் கூடாது. அது அவரின் நோயினை, வாழ்க்கை வரலாற்றை அடையாளப்படுத்துகின்றது.

அதுவரை கடந்த காலத்தினால் தடுக்கப்பட்டு, இறந்த மனிதனைப்போல அங்கேயே படுத்துக் கிடந்த அவர், இப்போது தனது படுக்கையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில் என்ன செய்யலாம்? என்பதை அவரே தீர்மானிக்கலாம். எந்தப் பாதையில் நடப்பது என்பதை அவரே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்.

அவருக்கு உதவ யாரும் இல்லைஎன்பது உண்மையா? புனித அகுஸ்தினார் கூறுகையில், “முடக்குவாதத்திற்கு ஓர் உதவிக்கரம் மட்டுமல்ல; கடவுளாகவும் இருக்க ஒரு மனிதர் தேவைஎன்கிறார்.

நீங்கள் குணமடைய விரும்புகிறீர்களா?

ஒரு மருத்துவமனையில் இது என்ன கேள்வி? உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், இதயநோய், மனநோய், முடக்குவாதமுற்றோர் இவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இது என்ன கேள்வி? எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கேள்வி தேவைப்படுகிறது. இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் மண்டபத்தில் படுத்துக் கிடப்பவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நோய். அவ்வளவுதான் வேறுபாடு. ஏதோ ஒரு வரிசையில், எதற்கோ காத்திருக்கிறோம்.     

சில சமயங்களில் ஆண்டாண்டாகத் துன்பம் நம்மைத் தொடர்ந்து வரலாம். ஆம், முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருக்கலாம். அடுத்தவரோடு போட்டிபோடவும் நமக்குத் துணிவு, திறமை, வசதி இல்லாமல் இருக்கலாம். நல்லவர்கள் நாலுபேர் நமக்கு உதவி செய்ய முன்வராமலிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். மனம் சோர்ந்து போக வேண்டாம். கடவுள் நம்மைத் தேடிவரும் நேரத்தில் தயாராக இருப்போம். கடவுள் உன்னிடம்நலம்பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கும்போது, உன் உடலும் உள்ளமும் தயாராக இருக்கட்டும். எத்தகைய நோயோடு, குறையோடு, தேவையோடு இருந்தாலும், நம் இயேசு நமக்குத் தருவார் என்ற நம்பிக்கை கொள்வோம்.   

நாம் எவ்வளவு விடாமுயற்சி கொண்டவர்கள்?

இரண்டு தவளைகள் தவறுதலாக ஒரு வெண்ணெய் பாட்டிலில் விழுந்தன. சுமார் ஒரு மணி நேரம் அவை தப்பிக்க முயன்றன. சோர்வடைந்த ஒரு தவளை, “இதற்குமேல் பயனில்லை!” என்று கூறி விட்டது, அது வெண்ணெயில் மூழ்கியது. மற்றொரு தவளை தொடர்ந்து முயற்சி செய்தது. அடிக்கடி அசைந்தது, போராடியது. திடீரென்று அது ஒரு வெண்ணெய் உருண்டையின்மீது பாதுகாப்பாக அமர்ந்திருந்தது

பெரிய மனிதர்கள் எட்டிய உச்சிகளை, திடீரென அவர்கள் அடையவில்லை; அவர்கள் உறங்கும் நேரத்திலும் கூட அவர்கள் உழைத்துக்கொண்டே உயரம் சென்றார்கள்.”

இயேசு எப்போதும் பிரச்சினைகளின் மத்தியில் இருக்கிறார். எங்கு விடுதலை தேவைப்படுகிறது? எங்கு மகிழ்ச்சி கொண்டுவர வேண்டும்? அங்கேயே அவர் இருக்கிறார். 38 ஆண்டுகளாகக் குணமடைய விரும்பி, நம்பிக்கையோடு காத்திருந்த மனிதனுடைய நம்பிக்கையும் விடாமுயற்சியும்  வீணாகவில்லை. நாம் குணமடைய விரும்புகிறோமா? இயேசுவால் குணமாக்க முடியும் என நம்புகிறோமா? இயேசு நம்மைக் குணமாக்க விரும்புகிறோமா? நம்மைச் சுற்றி தினமும் ஏராளமானநடக்க முடியாதவர்கள்இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறதா?

நம்பிக்கைத் தளர்ச்சியைப் போக்குவோம்

நமது வாழ்வில் நமக்கு எப்போதும் அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்தச் சிறுதுளி நம்பிக்கைதான் நமது வாழ்வில் பல அற்புதங்கள் நடப்பதற்குத் தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. எனவே, நாம் எப்போதும் இறைவனில் நம்பிக்கையாளர்களாய் வாழ்வோம்.

news
ஆன்மிகம்
ஏழையரின் திருத்தந்தை பிரான்சிஸ் (நீங்கா நினைவுகள் – 5)

அர்ஜென்டினாவிலிருந்து கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ மார்ச் 13, 2013-இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அருகே அமர்ந்திருந்த அவரது நண்பர் கிளாடியோ ஹீம்மஸ், “நண்பா, ஏழைகளை மறந்துவிடாதே”… என்று வாழ்த்துக் கூறினார். எந்தவொரு தயக்கமுமின்றி, “நான் ஏழைகளின் தோழனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயர் கொண்டு அழைக்கப்பட விரும்புகிறேன்என்று கூறினார். அவர் கூறியபடியே ஏழ்மைக்கும் எளிமைக்கும் பெயர்போனபிரான்சிஸ்என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்து, தொடக்கத்திலிருந்தே தனது வாழ்வாலும் வார்த்தையாலும் தானும்ஏழைகளின் தோழன், ‘எளியவர்களின் காவலன்’… என்பதை உறுதிப்படுத்தினார்.

இறைவனுக்கு அர்ச்சனையான மலர்: இவர் குருவாக, பேராயராக, கர்தினாலாக வாழ்ந்த காலத்தில் சேரிகளுக்குச் சென்று, சேரிவாழ் மக்களின் ஆன்மிகத் தேவைகளுடன் அடிப்படைத் தேவைகளையும், மிக்க ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, வறுமைக்கெல்லாம் வறுமையான, ஆன்மிக வறுமையும் (Spiritual Poverty) நவீன காலத்து மனிதனிடம் ஆழமாகப் புரையோடிக் கொண்டிருக்கும் நோயாகும் என்கிறார்.

ஏழைகளின் குரலான திருத்தந்தை பிரான்சிஸ்: 2015, நவம்பர் மாதம் ஆப்பிரிக்கா, கென்யா நாட்டின் தலைநகரான நைரோபிக்குப் பயணமாகிறார். அங்குள்ள பெரிய சேரிக்குச் செல்கின்றார். சேறும் சகதியும் நிறைந்த தெருக்களைக் கடக்கிறார். பசியும் பட்டினியுமாக உள்ள சிறார் மற்றும் எலும்பும் தோலுமாக நின்ற ஆண்-பெண்களிடம் உரையாடுகிறார். அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு வேதனை அடைகிறார். பாழடைந்த குடிசைகளில் உள்ள பெண்களின் மாண்பினைக் கெடுக்கும் சாராய முதலாளிகளைப் பார்த்து, “இந்தச் சேரிகள் உங்களால் உருவாக்கப்பட்ட புண்கள்”… என்று அவர்களைச் சாடுகின்றார். எனவே, இவர்சேரிகளின் பேராயர்என அழைக்கப்பெற்றார்.

அதேபோல, 2019-இல் ஐரோப்பாவில் உள்ள ரொமேனியா நாட்டிற்குப் பயணம் செய்தபோது, உடைமை, உரிமை, வேலையின்மை, தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களைப் பார்த்து, “நான் கனத்த இதயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். இந்த அரக்கத்தனமான சமுதாயமும், அதில் அடங்கியுள்ள கத்தோலிக்கர்களும் இழைத்த அநீதிகளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்”……என்றார். அடுத்த நாள் பல ஊடகங்களும், “பாவமன்னிப்பு வழங்கும் திருத்தந்தையே, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்”…என்று வியந்தனர்.

இன்னும் இறைவன் முன் ஆணும்-பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக, 2024-இல் புனித வியாழனன்று குற்றங்கள் (பாவங்கள்) செய்து, உரோமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்-பெண் பாதங்களைக் கழுவி முத்தமிட்டு, இயேசு விலைமகளிடம்இனி பாவம் செய்யாதீர் (யோவா 8:11) என்று இயேசு காட்டிய மன்னிக்கும் அன்பைத் தன் இரக்கத்தின் பார்வையால் உணர்த்தினார்.

இவ்வாறாக, திருத்தந்தையின் அரிய பண்புகளால் மக்களைக் காந்தம் போல் தன்பால் ஈர்த்து, எதிர்மறையான சிந்தனைகளுக்குப் பதில், நேர்மறையான சிந்தனைகளையும், அலகையின் பாவத்திற்குப் பதில், ஆண்டவரின் தெய்வீக அன்பையும் விதைத்தார். தான் மேற்கொண்ட விருதுவாக்கானஇறைவனின் இரக்கப் பெருக்கால் மந்தையின் மணத்தை உணரும் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்என்ற கூற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்து விட்டுச் சென்றதால், திருத்தந்தை பிரான்சிஸ்மக்களின் திருத்தந்தை, ‘நலிந்தோரின் திருத்தந்தை, ‘ஏழைகளின் திருத்தந்தைஎன்று போற்றப் பெற்றார்.

இறுதியாக, ‘எல்லாருக்கும் எல்லாமுமான திருத்தந்தைஎன்ற தனிச் சிறப்பு முத்திரையைப் பெற்றார்.

ஒரு நேர்காணலில்நீங்கள் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?’ என்ற கேள்விக்கு, “இந்த மனிதன் ஒரு நல்ல ஆள் - இவர் நல்லது செய்ய முயன்றார்என்று அவர் பதிலளித்தார்.

மனிதர்களின் புனிதராக வாழ்ந்த திருத்தந்தை, இறந்தும் இறவாது நம்முடன் வாழ்கிறார்.

news
ஆன்மிகம்
வயது முதிர்வு என்பது ஒரு கொடை! (நீங்கா நினைவுகள் – 4)

இன்றைய நவீன காலத்தில் முதியோரின் ஆயுள் காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால், இச் சமூகம் முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகக் கருதுகின்றது.  ஒரு சமூகம் தன் மூத்த குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்துதான் அந்தச் சமூகத்தின் தரத்தை நாம் கணிக்க முடியும். எளிதில் பாதிப்பு அடையக்கூடிய நிலையில் இருக்கும் முதியோர் குறிப்பாக, தனிமையில் மற்றும் நோயில் இருப்போர் நமது சிறப்புக் கவனத்திற்கும் அக்கறைக்கும் உரியவர்கள். இவர்கள் சுமையானவர்கள் அல்லர்; மாறாக, திருவிவிலியம் எடுத்துக்கூறுவது போன்று ஞானத்தின் சேமிப்புக்கிடங்குகள் (சீராக் 8:9). எனவேதான், நம் திருத்தந்தை பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு திரு அவையில் முதலாவது தாத்தா-பாட்டிகள் தினத்தை நிறுவினார்.

முதியோர்களைப் பயனற்றவர்களாகக் கருதும் ‘தூக்கி எறியப்படும் கலாச்சாரத்திற்கு மாறாக, அவர்களின் பங்களிப்புகளை மதிப்பதன் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் மதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். காணாமல் போன மகன் பற்றிய உவமையைக் குறிப்பிட்ட திருத்தந்தை, வயது முதிர்ந்த தந்தை தனது இரு மகன்கள் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளலை விண்ணகத் தந்தையின் அன்போடு ஒப்பிட்டுப் பேசினார்.

முதியோர்மீது இரக்கம் மற்றும் கருணையை வலியுறுத்துவதற்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அடிக்கடி முதியோர் குறித்த நற்செய்திப் பகுதிகள் மற்றும் திருவிவிலிய வசனங்களை மேற்கோள் காட்டினார் (திபா 71:9; சீரா 14:2; சீரா 8:9; லூக் 1:42). கடவுளின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முதியோர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்ட திபா 71-ஐ மேற்கோள்காட்டினார். பெற்றோரை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, முதியோர்களை அவமதிப்பது கடவுள் பார்வையில் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.

முதியவர்களை ஒரு சுமையாகப் பார்ப்பதையோ அல்லது அவர்களை நிராகரிப்பதையோ விட, அவர்களை மதிப்பது மற்றும் பராமரிப்பது, அன்பு மற்றும் இரக்கம் காட்டுவது, அவர்களோடு நட்புறவு பாராட்டுவது, முதியவர்களுடன் மீண்டும் இணைவது, அவர்களுக்குச் செவிசாய்ப்பது, அவர்களுக்கு மரியாதை காட்டுவது குறித்து இளைஞர்களுக்குத் திருத்தந்தை பல அறிவுரைகளை வழங்கினார்.

தனிமையாகவோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ இருக்கும் முதியவர்களுடன் இணைய இளைஞர்களை அவர் ஊக்குவித்தார். கருணை மற்றும் பாசத்தைக் காட்ட தொலைப்பேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள் அல்லது நேரில் சென்று சந்திக்குமாறு பரிந்துரைத்தார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் சுயநலத்தையும் தோற்கடித்து, மிகவும் மனிதாபிமான மற்றும் சகோதரத்துவ உலகத்தை உருவாக்க உதவும் என்று திருத்தந்தை நம்பினார்.

இளைஞர்கள் முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் ஞானத்திலிருந்தும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். அங்கு அனுபவம் வாய்ந்த தனிநபர்களின் ‘சாறு இளைய தலைமுறையினரில் ‘நம்பிக்கையின் தளிர்களை வளர்க்க முடியும் எனக் குறிப்பிட்டார். முதுமையை நோயாகக் கருதாமல், ஒரு பேறாகப் பார்க்கக் கூறினார்.

மூத்தவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இளைஞர்கள் மிகவும் சகோதரத்துவச் சமூகத்தை உருவாக்க உதவலாம்; திரு அவையில் பாரம்பரியத்திற்கும் புதுமைக்கும் இடையிலான உரையாடலை எளிதாக்கலாம். எனவே, இன்று முதியோரின் முக்கியத்துவத்தை உணர்வோம். முதியோர்களே சமூகத்தின் அடித்தளம்; அவர்களே சமூகம் எனும் கட்டடத்தின் மூலைக்கற்கள். அவர்களை மாண்புடன் நடத்துவோம்; அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவோம்; உள்ளன்புடன் அவர்களைப் பராமரிப்போம்.

news
ஆன்மிகம்
சீர்மிகு பெண் ஒரு விலைமதிப்பற்ற செல்வம்! (Ideal woman is a Precious treasure) திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 16

1. பழைய ஏற்பாடு மற்றும் யூதப் பாரம்பரியம் பெண்களின் தார்மீக வலிமையை வலியுறுத்துகிறது. தாய்மை மற்றும் இஸ்ரயேலின் மீட்புக்காக எதிரிகளுடைய தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டுவதன் மூலம் கடவுள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அவர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்திற்காக மதிக்கப்படுகிறார்கள். யூதித்தைப் போன்ற உருவங்கள் குறிப்பாக, சமூகத்தால் அவர்களின் வீரம், ஞானம் மற்றும் போற்றத்தக்கக் குணங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றன. இந்த நற்பண்புகளை நிலைநிறுத்தவும், தெய்வீக வழிகாட்டுதலில் நம்பிக்கை வைக்கவும் மற்றவர்களை ஊக்குவிக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க மாதிரிகளாகிய திருவிவிலியக் கதாநாயகிகளுக்கிடையே, எதிர்மறைச் சான்றாக நிற்கக்கூடிய சில பெண்களின் பதிவுகளும் இல்லாமலில்லை. எடுத்துக்காட்டாக, சிம்சோனின் இறைவாக்குரைக்கும் திறமையைச் சீரழித்த தெலீலா (நீத 16:4-21), சாலமோனின் முதிர்ந்த வயதில் அவருடைய இருதயத்தை ஆண்டவரிடமிருந்து திருப்பி மற்ற தெய்வங்களை வணங்கச் செய்த அந்த வெளிநாட்டுப் பெண் (1அர 11:1-8), இறைவனின் அனைத்து இறைவாக்கினர்களையும் கொன்றழித்த ஈசபேல் (1அர 18:13), ஆகாபிற்கு அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பதற்காக நாபோத்தைக் கொன்றவள் (1அர 21) மற்றும் யோபுவின் துன்ப காலத்தில் அவரை அவமதித்து, கடவுளைச் சபிக்கத் தூண்டிய அவருடைய மனைவி (யோபு 2:9).

இந்த நிகழ்வுகளில், பெண்களின் நடத்தையானது ஏவாளுடைய செயல்களை நினைவுபடுத்தக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், திருவிவிலியத்தின் பொதுவான கண்ணோட்டமானது பெண்ணைக் கடவுளின் தோழியாகப் (ally of God) பார்க்கின்ற தொடக்க நற்செய்தியினால் (Proto-Gospel) தூண்டப்பட்டதாக இருக்கின்றது

பெண்ணானவள் ஆண்டவரின் விலைமதிப்பற்ற கொடையாவாள்!

2. உண்மையில், உண்மையான இறைவனிடமிருந்து சாலமோனைத் திருப்பினார்கள் என்று அந்நிய நாட்டுப் பெண்கள் குற்றம் சாட்டப்படுவார்களேயானால், அதற்கு மாறாக ரூத்து புத்தகமானது ஓர் அந்நிய நாட்டுப் பெண்ணை மிகச்சிறந்தவளாகவும் நமக்குக்  காட்டுகின்றது. மோவாபு நாட்டுப் பெண்ணான ரூத்தின் பக்தி, நேர்மை, தாழ்ச்சி மற்றும் தாராள குணத்தில் அவளின் உறவினர்களுக்கு மாதிரியாக இருந்தாள். மேலும், இஸ்ரயேலின் வாழ்வு மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்து, தாவீதின் கொள்ளு பாட்டியாகவும், மெசியாவின் மூதாதையராகவும் திகழ்ந்தாள். நற்செய்தியாளராகிய மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலில் அவளுடைய பெயரையும் சேர்த்து, மனுக்குலம் அனைத்திற்கும் கடவுளின் இரக்கத்தைப் பரப்புகின்ற உலகளாவிய தன்மைக்கான அடையாளமாகவும்  (A sign of universality) அவளை ஆக்குகின்றார்.

முதல் நற்செய்தியாளர், கடவுளுடைய நன்மைத்தனமானது பாவத்தைவிடச் சிறந்தது என்பதை அறிவிப்பதற்காக, இயேசுவின் மூதாதையர்களுக்குள் தாமார், இராகாபு மற்றும் உரியாவின் மனைவியான பத்சேபா என்ற மூன்று பாவிகளான ஆனால், சீர்கேடற்றப் பெண்களையும் மெசியாவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறார். கடவுளின் அருள் வழியாக, கடவுள்  திருமணச் சட்டங்களுக்கு எதிரான அவர்களின் நிலைகளைப் பிற்காலத்தில் மெசியாவின் பிறப்பிற்கான தயாரிப்பில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குப் பங்களிப்பவர்களாக ஆக்குகின்றார் (God, through His boundless grace, employs irregular marriages as divine instruments to fulfil His sacred and eternal salvation plan for humanity).

ரூத்திடமிருந்து வேறுபட்ட, தாழ்மையான அர்ப்பணிப்புக்கு மற்றோர் உதாரணம், இப்தாவின் மகள், அம்மோனியர்களுக்கு எதிரான தனது தந்தையின் வெற்றியைக் கொண்டாடுவதற்குத் தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் (நீத 11:34-40). அவளது சோகமான விதியைத் துக்கத்தில் அவள் எதிர்க்கவில்லை. ஆனால், அவளது மரணத்தை ஏற்றுக்கொள்கிறாள். அந்த நேரத்தில் இன்னும் பொதுவான பழமையான பழக்கவழக்கங்களில் வேரூன்றிய பெற்றோரின் தூண்டுதலான சபதத்தை நிறைவேற்றுகிறாள் (எரே 7:31; மீக் 6:6-8).

3. ஞான இலக்கியமானது (Sapiential Literature) பெண்ணின் குறைகளை அடிக்கடிக் குறிப்பிட்டாலும், அவளில் மறைந்திருக்கும் செல்வத்தையும் எடுத்தியம்புகின்றது. “நல்ல மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான் (நீமொ 18:22) என்று நீதிமொழிகள் புத்தகமானது பெண்மையைப் பற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாராட்டுகளையும் வெளிப்படுத்தி, பெண்ணானவள் ஒரு விலைமதிக்க முடியாத ஆண்டவருடைய கொடை என்று கூறுகின்றது.

அதே புத்தகத்தின் இறுதியில் உயர்வான பெண் பற்றியதொரு பிம்பமானது விவரிக்கப்பட்டுள்ளது. அடைய முடியாததொரு மாதிரியைக் குறித்துக்காட்டாத (far from representing an unattainable model), மிகவும் மதிக்கத்தக்கதொரு பெண்ணின் அனுபவத்திலிருந்து பிறந்த அவள் ஒரு நிலையான மாதிரியாக இருக்கின்றாள் என்று கூறுகின்றது: “திறமை வாய்ந்த, மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள் (நீமொ 31:10). 

ஞான இலக்கியமானது, தெய்வீக உடன்பாட்டிற்கான பெண்ணின் நம்பகத்தன்மையில் அவளுடைய திறமைகளின் உச்சநிலையைக் காண்கின்றது. உண்மையில், சில வேளைகளில் அவள் நம்மை ஏமாற்ற முடிந்தாலும், அவளின் உள்ளமானது கடவுளுக்கு விசுவாசமுள்ளதாக இருக்கின்றபொழுது எல்லாவித எதிர்பார்ப்புகளையும் கடந்துசெல்கின்றாள் என்று கூறுகின்றது: “எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள் (நீமொ 31:30). தாயானவள் மதிப்புமிக்கப் புகழ்ச்சிக்குத் தகுதியானவளே!

4. இந்தச் சூழலில் 2மக்கபேயர் நூலானது, அந்தியோக்கிய எபிஃபானெஸ், இறைவார்த்தைக்காக உயிர்த்தியாகம் செய்த ஏழு சகோதரர்களின் தாயின் கதையில், சோதனையின்போதும் அவளிடமிருந்த வியக்கத்தக்க, மிக உன்னதமான மாண்பின் மாதிரியைத் தூக்கிப்பிடிக்கின்றது.

அந்த ஏழு சகோதரர்களின் இறப்பை விவரித்த பிறகு அந்நூலின் ஆசிரியர், “எல்லாருக்கும் மேலாக அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர்; பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தன் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக்கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிச்சலையும் இணைத்து அவர்களிடம் பேசினாள்.” இவ்வாறு உயிர்த்தெழுதல் பற்றிய அவளுடைய எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தி, “நீங்கள்  என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்று சேர்த்ததும் நான் அல்ல; உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில், அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை (2மக் 7:20-23) என்று விவரிக்கின்றார்.

இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பதைவிட, இறப்பதற்குத் தன்னையே கையளிப்பது மேல் என்று அவளுடைய ஏழாவது மகனைத் தூண்டி, ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் படைத்த கடவுளின் செயலில் அவளுடைய நம்பிக்கையை அந்தத் தாயானவள் வெளிப்படுத்துகின்றாள்: “குழந்தாய், உன்னை நான் வேண்டுவது; விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்றுநோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால், நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்என்று கூறி ஊக்கமூட்டினார் (2மக் 7:20-23).

ஏழுமுறை இதயத்தில் சித்திரவதை  அனுபவித்த பிறகு அசைக்க முடியாத நம்பிக்கை, அளவிட முடியாத எதிர்நோக்கு மற்றும் வீரமுள்ள துணிவுக்குச் சான்றுபகர்ந்து, கொடூரமான சாவிற்குத் தன்னையே கையளிக்கின்றார்.

இறையருள் வெளிப்படுகின்ற வியத்தகு செயல்கள் இத்தகைய பெண்களில் மிகவும் உன்னதமானவராக, ஆண்டவரின் தாய் மரியாவை நாம் காண்கின்றோம்.

மூலம்: John Paul II, Ideal woman is a precious treasure, in “L’Osservatore Romano”, Weekly Edition in English, 17 April 1996, p.7.

news
ஆன்மிகம்
தந்தையைக் கொண்டாடுதல்! (கண்டனையோ, கேட்டனையோ! – 36)

மெஜோலின் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. ‘யார் மெஜோலின்?’ என்று கேட்கிறீர்களா? ஐந்தாவது படிக்கும் என் பங்குச் சிறுமி; பீடப் பணியாளர். வயது 10. பங்கு நிர்வாகம் மற்றும் ஆன்மிகப் பணிகளில் என் முதன்மை ஆலோசகர்.

ஜூன் 15 அன்று ஞாயிறு திருப்பலி முடிந்து வீட்டிற்குச் சென்றபின், என்னைப் போனில் அழைத்து, “Happy Father’s Dayஎன்று கூறினாள். “அது இன்றைக்கா?” என்றேன். “ஆமாம். இதுகூட உங்களுக்குத் தெரியலியா? செமினேரியில் அப்படி என்னதான் கற்றுக்கொண்டீர்கள்?”

கூடுதல் அவமானங்களைத் தவிர்க்க  அவசரமாகப் போனைத் துண்டித்துவிட்டு, கூகுளில் தேடினேன். அதுவும், ‘ஆம், இன்றைக்கு ஃபாதர்ஸ் டேதான்என்றுஅப்பா சத்தியம்செய்தது.

Father’s Day-க்கு ஐந்து நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1500-களின் ஆரம்பங்களிலேயே ஐரோப்பாவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தொடக்கத்தில் இது ஒரு சமய வழிபாட்டு நிகழ்வாக இருந்துள்ளது. நாள் - மார்ச் 19, புனித யோசேப்பு விழா தினம். திருப்பலி வைத்து, யோசேப்பு போலவே எல்லா அப்பாக்களும் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார்கள். விழா நாளடைவில் மற்ற கலாச்சாரங்களுக்குச் சென்றபோது, நோக்கத்திலும் வடிவத்திலும் மாற்றங்கள் வந்தன.

நவீனத் தந்தையர் தினம் அமெரிக்காவில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகி, பின் உலகம் ழுழுவதும் பரவி பிரபலமடைந்த ஒரு கொண்டாட்டம். வியாபார நோக்கங்கள் மலிந்தது. ஒருசில நாடுகளில் வேறு நாள்களில் அனுசரிக்கப்பட்டாலும், ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு என்பது ஓரளவு நிலைபெற்றுவிட்டது.

தந்தையரைthe unsung parentஎன்றுதான் கூறவேண்டும். அமெரிக்காவில் கூட கவனித்திருக்கிறேன்அன்னையர் தினத்தின் மவுசு, தந்தையர் தினத்திற்கு இல்லை. உலகம் முழுவதும் அதுதான் நிலைமை. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம்!

அப்பா என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி! பெரிதாகக் கொண்டாடப்படவில்லையென்றாலும், ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தந்தை மிகப்பெரும் தாக்கம் செலுத்துகிறார். இது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்பாவின் முன்மாதிரியால் சிறப்பாக உருவான குழந்தைகளும் உள்ளனர். அப்பாவைப் பின்பற்றிக் கெட்டுப் போனவர்களும் உள்ளனர்.

அண்மையில், ‘National Catholic Registerஎனும் இணையப் பத்திரிகையில், ‘திருத்தந்தையர்களும் அவர்களின் தந்தையர்களும்என்ற தலைப்பில் நான்கு திருத்தந்தையர்களின் அப்பாக்கள் குறித்து வெளியான சிறு குறிப்புகளை இரசித்து வாசித்தேன்

லூயிஸ் ப்ரெவோஸ்ட்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தந்தை. முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர். 23 வயதில் கல்லூரி முடித்தவுடன் 1943-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றினார். D-Day Operationஎன்று வரலாற்றில் குறிப்பிடப்படும் மிக முக்கிய இராணுவ நடவடிக்கையில் ஏறக்குறைய 1,56,000 நேசப் படை வீரர்களைப் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் கொண்டு வந்து இறக்கிய கப்பல்கள் ஒன்றின் அதிகாரியாக லூயிஸ் இருந்தார்

போர் முடிந்தபின்பு சிகாகோ நகரில் மவுண்ட் கார்மெல் துவக்கப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார். குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தார். 1949-ஆம் ஆண்டு நூலகராகப் பணிபுரிந்த மில்ட்ரெட் மார்டினெஸ் என்ற பெண்ணை மணந்தார். மூன்று ஆண் குழந்தைகள். கடையவர்தான் இன்றைய திருத்தந்தை லியோ.

2024-ஆம் ஆண்டு அப்போதைய கர்தினால் இராபர்ட் ப்ரெவோஸ்ட் ஓர் இத்தாலிய டி.வி. சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டார்:

இளம் அருள்பணியாளராக இருந்தபோது இராபர்ட் அழைத்தல் வாழ்க்கையில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தார். ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல உணர்ந்தார். தான் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.

ஒருநாள் தன் தந்தையை அழைத்து, “நான் துறவற வாழ்வைக் கைவிட்டு, திருமணம் செய்துகொள்வது நல்லது என நினைக்கிறேன்எனக்குக் குழந்தைகள் வேண்டும். நான் ஓர் இயல்பான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்என்று இராபர்ட் கூறினார்.

தந்தை லூயிஸ், “நீ எதையும் இழந்துவிடவில்லை. எனக்கும் உன் அம்மாவிற்கும் இடையே உள்ள அன்பு மிக முக்கியமானது. ஆனால், அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாதது, ஓர் அருள்பணியாளருக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற அன்பு. யோசித்து முடிவெடுஎன்று கூறினாராம். அதை நினைவுகூர்ந்து, ‘There is something to listen to hereஎன்று அந்த நேர்காணலில் குறிப்பிடும் இராபர்ட், அதன்பின் எந்தவித மாற்றுச் சிந்தனைக்கும் தன் மனத்தில் இடம்கொடுக்காத காரணத்தால்தான்  இன்று அவர் திருத்தந்தை!

கரோல் வொய்த்திவா சீனியர்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் தந்தை. இருவரின் இயற்பெயர்களும் ஒன்றேகரோல், போலந்து நாட்டு இராணுவத்தில் லெஃப்டினன்ட் பதவி வகித்தவர்.   தன் இறையழைத்தல் ஊக்குநர் என்று ஜான்பால், தந்தை கரோலையே குறிப்பிடுகிறார்.

எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது, என் அம்மா இறந்துபோனார். நான் புதுநன்மை கூட பெற்றிருக்கவில்லை. என் மூத்த சகோதரனும் சீக்கிரமே இறந்துவிட, நான் என் தந்தையுடன் தனித்து விடப்பட்டேன். அவர் ஒரு போர்வீரர். ஆழமான நம்பிக்கையாளர். அம்மாவின் இறப்புக்குப் பின், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்பெரும் பொழுதை இறைவேண்டலிலேயே செலவழித்தார். இரவில் சில நேரங்களில் நான் கண்விழித்துப் பார்க்கும்போது, என் தந்தை முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருப்பார்.

நான் அருள்பணியாளராக வேண்டும் என்று ஒரு நாளும் அவர் என்னிடம் கூறியதில்லை. இறையழைத்தல் குறித்து நாங்கள் இருவரும் வீட்டில் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. ஆனால், என் தந்தையின் வாழ்க்கைதான் அருள்பணியாளராக என்னைத் தூண்டியது. அவருடைய முன்னுதாரணம்தான் என் முதல் குருமடம்என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் குறிப்பிடுகிறார்.

ஜோசப் இராட்சிங்கர்

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் தந்தை. அவர் பெயரும் ஜோசப் இராட்சிங்கர்தான். ஒரு போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. ‘Liebfrauenboteஎன்ற பத்திரிகையில்மணமகள் தேவைஎன்று விளம்பரம் கொடுத்துள்ளார்.  ‘மாநில அரசு ஊழியர். கத்தோலிக்கர். வயது 43. ஒரு திறமையான கத்தோலிக்கப் பெண் தேவை.’ இராட்சிங்கர் குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கை, வழிபாடு, இறைவேண்டல் ஆகிய மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது.

பெனடிக்ட் 1927-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் பிறந்தார். அது ஒரு புனித சனிக்கிழமை. அந்த நாளில் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, புதுத் தண்ணீரை நிரப்புவது வழக்கம். இராட்சிங்கருக்குத் தன் மகன் பாஸ்கா புது தண்ணீரில் திருமுழுக்குப் பெறவேண்டும் என்று ஆசை. குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகியிருந்தது. அம்மா இன்னும் படுக்கையிலிருந்து எழவில்லை. இராட்சிங்கர் தன் மகனை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு, வேகமாகக் கோவிலுக்கு ஓடிப்போய், அவன் பிறந்த நாளிலேயே திருமுழுக்குப் பெறச்செய்தார். இது குறித்துப் பின்னாளில், “பாஸ்கா மறைபொருளில் மூழ்கி எழும் அனுபவத்தை என் வாழ்வின் முதல் நாளிலேயே எனக்குப் பெற்றுத் தந்த என் தந்தைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்என்று பெனடிக்ட் குறிப்பிடுகிறார்.

மரியோ பெர்கோக்லியோ

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தை. இரயில்வே துறையில் கணக்கராகப் பணிபுரிந்தார். இளம்வயதிலேயே ஒரு பெரும் கப்பல் விபத்தில் இறக்க வேண்டியவர். அவர் உயிர் தப்பிய நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்Hopeதன் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டிலிருந்து அர்ஜென்டினாவுக்குப் புறப்பட்டSS Principessa Mafaldaஎன்ற பயணிகள் கப்பல், 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் நடுக்கடலில் மூழ்கியது. மொத்தம் 314 பேர் இறந்தனர்.

இந்தக் கதை எங்கள் குடும்பத்தில், எங்கள் ஊரில், குடியிருப்பில்  திரும்பத் திரும்பக் கூறப்பட்டது. என்னுடைய தாத்தாவும், பாட்டியும், பிற்காலத்தில் என் தந்தையான இளம் மரியோவும், அந்தக் கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கித் தயாராக  இருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லைஎனவே உயிர் பிழைத்தார்கள்.\"

ஒரு தந்தை காப்பாற்றப்பட்டு, ஒரு திருத்தந்தை நமக்குக் கிடைத்தார்.

ஒவ்வொரு மனிதத் தந்தையும், தந்தை கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்ய அழைக்கப்படுகிறார்.

தந்தைமையைக் கொண்டாடுவோம்!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
ஏழைகளுக்கு முதன்மை! (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 05)

கடவுளின் இதயத்தில் ஏழைகளுக்கும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் தனியோர் இடம் உண்டு. இதனால் அவர்கள் திரு அவையின் இதயத்திலும் இருக்கின்றனர். ஏழைகளாக்கப்பட்டோரிடம் இயேசுவின் முகத்தையும் ஊனுடலையும் இனம் கண்டுகொள்ள கிறித்தவக் குழுமம் முழுவதும் அழைக்கப்படுகிறது(இஅ 19). மேலும், அவர் ஏழையாகவும் தாழ்ச்சி உடையவராகவும் இருந்தவர்; ஏழைகளிடம் நட்புறவு கொண்டிருந்தவர்; அவர்களுடன் சமபந்தி அமர்ந்தவர்; ஏழ்மைக்கான காரணிகளைக் கண்டித்தவர். அவருடைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டிய திரு அவையும், ஏழைகளுக்கும் விளிம்புநிலையினருக்கும் முதன்மை தருவது அவசியம். இது கிறித்தவ நம்பிக்கையின் இன்றியமையாத ஒரு கூறும், இறையியல் அடிப்படையிலான கடமையும் ஆகும்.

பல வேளைகளில் ஏழைகளே திரு அவையில் பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த ஏழைகளோடு ஏழையாக இருக்கவும், அவர்களது குரலைக் கேட்கவும், அவர்களுக்கு ஆவியார் தரும் அருங்கொடைகளை எவ்வாறு கண்டறிவது என அவர்களோடு இணைந்து கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது (இஅ 19).

ஏழைகள் திரு அவையிடம் கேட்பது அன்பையே. அன்பு செய்தல் என்பது அவர்களுக்கு நமது ஏற்பையும் மதிப்பையும் புரிதலையும் தருவது. அவை இன்றி உணவு, பண உதவிகள் என்பனவற்றை எவ்வளவுதான் தந்தாலும், அது அவர்களது மனித மாண்பை முழுமையாக மதிக்கத் தவறுவது ஆகும். அத்தகைய புரிதலும் மதிப்பும் தருவதுதான் பிறருடைய உதவிகளின் பயனாளர்களாகிய அவர்களைத் தங்களது வளர்ச்சியைத் தாங்களே முடிவு செய்ய ஆற்றல் படைத்தவர்கள் ஆக்குகிறது.

ஏழைகள் பல வகையினர்!

மாண்புடன் வாழ்வதற்கான பொருள் வளம் அற்றவர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பழங்குடியினர், வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டோர் சிறப்பாகப் பெண்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றிலிருந்து மீண்டுவரப் போராடுவோர், அமைப்பு முறையாலேயே குரலற்றோர் ஆக்கப்பட்ட சிறுபான்மையினர், கைவிடப்பட்ட முதியோர், இனவெறி, சுரண்டல், ஆள்கடத்தல் என்பனவற்றிற்கு ஆளாக்கப்பட்டோர், அதிலும் குறிப்பாக இளையோர், சுரண்டப்படும் தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் பயன்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையினர் ஆகிய அனைவரும் ஏழைகளே. மிக அதிகமாகப் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் கருவிலிருக்கும் குழந்தைகளும், அவர்களின் அன்னையருமே. அவர்களுக்கான ஆதரவுக் குரலும் செயல்பாடுகளும் மிகவும் அவசியம். மேலும், பல நாடுகளில் நிகழும் போர்களும் பயங்கரவாதமும் புதுவகை ஏழைகளை உருவாக்கியுள்ளன. அவர்களின் குரல் தங்களுக்குக் கேட்கிறது என அறிவிப்பதுடன், அவற்றிற்குக் காரணிகளான ஊழல் அரசியல் மற்றும் சுரண்டல் பொருளாதார அமைப்புகளையும் மாமன்றம் கண்டிக்கிறது.

ஏழ்மையின் மற்றொரு வகை அருள்வாழ்வைச் சார்ந்தது. வாழ்வில் அர்த்தம் இல்லாத நிலை, பிறரைத் தனக்குப் போட்டியாகவோ பகையாகவோ கருதும் மிகையான தன்னல நோக்கு என்பன அதன் சில வடிவங்கள். “இத்தகைய அருள்வாழ்வுசார் ஏழையரும் பொருளாதார ஏழையரும் சந்திக்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவரது தேவையை நிறைவு செய்யும் இணைந்த பயணத்தைத் தொடங்குகின்றனர் (முஅ 5d). இவ்வாறுதான்ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் (மத் 5:3) எனும் நற்செய்திப் பேற்றினை நிறைவாக அனுபவமாக்கும் வகையிலான இணைந்து பயணிக்கும் திரு அவை செயலாக்கம் பெறும்.

மேலும், ஏழைகள் சார்பாக நிலைப்பாடு எடுப்பது என்பது நமது பொதுவீட்டின் நலம் காக்க அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் ஆகும். ஏனெனில், “நிலவுலகின் அழுகுரலும் ஏழ்மையில் வாடுவோரின் அழுகுரலும் ஒரே அழுகுரலே (முஅ 5e).

ஏழைகளுக்காகச் செயல்படுவது

ஏழைகளின் நலனுக்காகச் செயல்படுவது என்பது ஏழ்மை மற்றும் ஒதுக்கப்படுதல் என்பனவற்றிற்கான காரணிகளை அகற்றுவதும் ஆகும். அவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் எழுப்புதல், அவர்களுக்கு எதிரான அநீதிகளைப் பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டித்தல் என்பனவையும் அதில் உள்ளடங்கும். அவை தனியார் மற்றும் தொழில்நிறுவனங்கள், அரசுகள் என்பன இழைக்கும் அநீதச் செயல்களாகவோ, அநீதச் சமூக அமைப்புகளாகவோ இருக்கலாம். அவற்றை இனங் கண்டு எதிர்ப்பதற்குத் திரு அவையின் சமூகப் படிப்பினை உதவ முடியும். அதனால் தூண்டுதல் பெற்று, பொதுநலம் பேணுவதிலும், மனித மாண்பைக் காப்பதிலும் ஈடுபடுவது கிறித்தவர்களது கடமை. இப்பணியில் அவர்கள் குடிமைச் சமூக அமைப்புகளுடனும் தொழில் சங்கங்களுடனும் மக்கள் இயக்கங்களுடனும் அடித்தட்டுக் குழுக்களுடனும் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்படுவது அவசியம். அரசியலிலும் இத்தகைய ஈடுபாடு அவசியம் ஆகலாம். இவ்வாறு ஈடுபடுவோருக்குக் கிறித்தவக் குழுமங்கள் தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவது அவசியம். ஏனெனில், “அவர்களது செயல்பாடும் நற்செய்தி அறிவித்து இறையாட்சியைக் கொணரும் திரு அவையின் பணியைச் சார்ந்ததே (முஅ 4 g).

ஏழைகள் மற்றும் துன்புறுவோரிடம் கிறித்தவச் சமூகம்தாம் செல்வராக இருந்தும் தமது ஏழ்மையின் வழியாக நாம் செல்வராகும் பொருட்டு நமக்காக ஏழையான...” (2கொரி 8:9) கிறிஸ்துவைக் காண்கிறது. அவர்களிடம் நெருங்கி வரவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது. “இணைந்து பயணிப்பது என்பது ஒன்றிணைந்து நடப்பது. அதனால் ஏழ்மையை அனுபவிப்போரைக் கூட்டியக்கத் திரு அவை தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மையப்படுத்த வேண்டும். ஏனெனில், தங்கள் துன்பங்கள் வழியாக அவர்கள் துன்புறும் இயேசுவை நேரடியாக அறிந்தவர்கள். அவர்களது வாழ்வு இயேசுவின் வாழ்வோடு ஒத்திருப்பதால் ஏழைகள் கொடையாகப் பெற்றுக்கொள்ளப்படும் மீட்பின் அறிவிப்பாளர்களாகவும் நற்செய்தியின் மகிழ்ச்சிக்குச் சாட்சிகளாகவும் அவர்களை அது ஆக்குகின்றது (முஅ 4h).

செயல்படுத்த சில பரிந்துரைகள்

1. ஏழைகள் வேறு, நாம் வேறு எனத் திரு அவையினர் எவரும் ஏழைகளை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியும், அவர்களை நம்மிடம் கையேந்தி நிற்பவர்களாகவும் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் (முஅ 4i).

2. திரு அவைகளின் நிதி நிர்வாகம் நற்செய்தியின் கோரிக்கைகளைத் துணிந்து எடுத்துரைக்கத் தடையாகிவிடக்கூடாது. இறைவாக்குத்தன்மையுடன் அநீதச் சூழமைவுகளைக் கண்டிப்பதும், சட்டங்கள் இயற்றுவோரைப் பொதுநலனுக்காகச் செயல்படத் தூண்டுவதும் ஒன்றுக்கு ஒன்று தடையாகிவிடாதவாறு இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் (முஅ 4j).

3. தான் நடத்தும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் நீதி நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்படுகிறார்களா? என்பதைப் பற்றிய நேர்மையான சுய ஆய்வைத் திரு அவை மேற்கொள்ள வேண்டும் (முஅ 4l).

4. பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள தலத் திரு அவைகளிடையே தாங்கள் பெற்றுள்ள வளங்களையும் கொடைகளையும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்கு இடையே நிலவும் கூட்டுத்தோழமையின் அடையாளம் ஆகும். இது அத்திரு அவைகளுக்கு இடையே ஒன்றிப்பை வளர்க்கும் (முஅ 4m).

5.  திரு அவையின் சமூகப் படிப்பினை எனும் வளம் அதிகம் அறியவும் பயன்படுத்தவும் அதனை அதிகமாகப் பரவலாக்கம் செய்வதுடன் பிறரும் ஏற்றுச் செயல்படுத்தத் தூண்டுதல் தரும் வகையில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும் (முஅ 4n).

6. கிறித்தவக் குழுமங்களில் தரப்படும் அனைத்து உருவாக்கப் பயிற்சிகளிலும் சிறப்பாக, அருள்பணியாளர் மற்றும் துறவியருக்குத் தரப்படுவனவற்றிலும் ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்ந்து அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன இன்றியமையாது இடம்பெறவேண்டும் (முஅ 4h).

7. திருத்தொண்டர் பணி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதில் ஏழைகளுக்குப் பணி செய்யும் பரிமாணம் அதிக அழுத்தம் பெறவேண்டும் (முஅ 4p).

8.“திரு அவையின் படிப்பினை, திருவழிபாடு, செயல்பாடுகள் என்பவற்றில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் சார்ந்த விவிலிய, இறையியல் அடித்தளங்கள் வெளிப்படையாகவும் கவனமாகவும் இணைக்கப்பட வேண்டும் (முஅ 4q).