news
ஆன்மிகம்
நாம் உயிர்ப்பின் மக்கள்! அல்லேலூயா!

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! அன்புக்குரியவர்களே, பாஸ்கா திருவிழிப்பு, ‘திருவிழிப்புகளுக்கெல்லாம் தாய்என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழிப்பிலே ஆண்டவர் சாவை வென்று வெற்றி வீரராக உயிர்த்தெழுகிறார்! நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் ஆக்குகின்றார். தந்தையாம் கடவுள் தம் மக்களை எப்படி விடுவிக்கின்றார்; எப்படித் தம் மக்களோடு இருக்கின்றார்; எப்படி அடிமைத் தனத்திலிருந்து காக்கின்றார்; எப்படி இன்றைக்கும் கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகின்றார்; வாழவைக்கின்றார் என்கிற மீட்பின் வரலாற்றை இன்றைய வாசகங்கள் மிக அழகாக விளக்குகின்றன. இன்றைய இரவின் மகிமையை நாம் அனைவரும் உணரும் வண்ணமாகப் பாஸ்காப் புகழுரை நமக்குத் தரப்பட்டுள்ளது.

இந்த நாள் நமக்கு என்னென்ன செய்திகளைக் கூறுகின்றது என்பதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். உயிர்ப்புப் பெருவிழா என்பது விழாக்களுக்கெல்லாம் பெருவிழா! இலத்தீன் மொழியிலேfestum festorumஎன்று அழைக்கப்படுகிறது. எத்தனை விழாக்கள் இருந்தாலும், நமக்குத் தலையாய விழா - உயிர்ப்பு! ஏனென்றால், இந்த உயிர்ப்புப் பெருவிழாதான் நமது நம்பிக்கை வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கிறது. இந்த உயிர்ப்புப் பெருவிழாவிலிருந்துதான் நமது கிறித்தவ வாழ்வை அர்த்தமுள்ள விதத்திலே வாழ்வதற்கான ஓர் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில்கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14) என்கிறார். “கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் நம்முடைய நம்பிக்கை வீணானது; அர்த்தம் இல்லாதது. இந்த நம்பிக்கையை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே... அதுவும் வீணானது. நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்ற அந்தப் போதனையும் வீணானதுஎன்று திருத்தூதர் பவுல் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, நம்முடைய நம்பிக்கை வாழ்வின் அடித்தளமாகிய இந்த உயிர்த்தெழுதலை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; நன்றியோடு கொண்டாடுவோம். ஏனென்றால், இறைவன் நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் வாழ வைக்கிறார்.

ஆண்டவரின் உயிர்ப்பிலே பழைய வாரம் முடிந்துவிட்டது; புதிய வாரம் தொடங்குகிறது. பழைய காலம் முடிந்துவிட்டது; புதிய யுகம் ஆரம்பமாகிறது. காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் இருளின் ஆட்சி முடிந்து போயிற்று; இப்பொழுது புதிய ஒளி உதித்திருக்கிறது. இந்த உலகத்தின் இருளை அகற்ற வந்த புதிய ஒளி இங்கே உதித்திருக்கிறது.

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாய் இருந்தது; ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது; வெறுமை - இருள் மக்களுடைய வாழ்விலே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஆண்டவர் பேசுகிற முதல் வார்த்தை: “ஒளி தோன்றுக!” (தொநூ 1:3) என்பதுதான். ஆண்டவருடைய உயிர்த்தெழுதலிலே ஆண்டவர் புதிய படைப்பு நிகழ்வாக உயிர்த்தெழுகிறார். நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் உயிர்த்தெழ வைக்கிறார். அவர்தான் புதிய ஒளி! அவர்தான் புதிய கதிரவன்! பழைய காலம் முடிந்துவிட்டது; நமது புதிய வாழ்வு பிறந்துள்ளது. அந்தப் புதிய வாழ்வை நமக்குத் தருபவர் நம்முடைய ஆண்டவர் இயேசு. நம் ஒவ்வொருவரையும் புதுப்படைப்பாக மாற்ற அவர் நம் இதயத்திலே ஒளி வீசுகின்றார்.

உயிர்ப்பின் நிகழ்வில் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் கல்லறைக்குச் செல்கின்ற பொழுது, அவர்கள் கலக்கத்தோடு செல்கிறார்கள். அவருடைய கலக்கத்திற்குக் காரணம் என்ன? பெரிய கல் அந்தக் கல்லறை வாயிலை மூடியிருக்கிறது. ‘இந்தக் கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?’ இந்த வார்த்தையிலே பொதிந்திருக்கிற உணர்வு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றிய எல்லா மக்களின் மனங்களையும் அழுத்திக் கொண்டிருந்தது. ‘இவர் ஒரு நல்ல மனிதர், நல்லதைத்தானே செய்தார்என்று எண்ணி அவரிடம் நம்பிக்கை கொள்ளாத மக்கள் கூட, ‘ஏன் இப்படி ஒரு கேவலமான மரணம்? ஏன் இத்தனை கொடுமை கள்? எத்தனை வேதனைகள்? எத்தனை கசையடிகள்? கடவுள் ஏன் அவரைக் கைவிட்டார்?’ இதுதான் பெண்களுடைய மனத்திலும் சீடருடைய மனத்திலும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் மனத்திலும் ஒரு பெரிய பாரமாக இருந்தது.

எவ்வளவு அருமையான போதனைகளை எல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்தார். நாம் எப்படி நல்ல மனிதர்களாக வாழ்வது என்று நமக்குக் கற்றுத் தந்தாரே! இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ வேண்டும் என நமக்குச் சொல்லிக் கொடுத்தாரே! ‘ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தாரே! எத்தனை எத்தனை அற்புதங்கள் செய்தார்! மக்களுக்கு இவ்வளவு நன்மை செய்தும் மக்களை வாழவைத்தும் தந்தை கடவுள் அவரை விட்டுவிட்டாரே! ‘என் தந்தையே, ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்?’ என்று இவரை வேதனையோடு புலம்ப வைத்துவிட்டாரே இந்தக் கடவுள்! ஏன் இப்படிச் செய்தார்?” இந்தத் தாங்க முடியாத மனவேதனையோடும் அழுத்தத்தோடும் பாரத்தோடும்தான் அங்கே ஆண்டவர் இயேசுவினுடைய சீடர்களும், அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் நடைபிணமாய்த் திரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ஆண்டவருடைய உயிர்ப்பு அவர்களுக்கு ஒரு விடை தருகிறது. கடவுள் ஆண்டவர் இயேசு இறக்கின்றபோது அவரோடு அவரும் இறந்து, அவரோடு பாதாளத்தில் இறங்கி, அவரைத் தூக்கி எல்லா மனிதர்களுக்கும் மேலாக அவரை உயர்த்தி விடுகின்றார்; அவரை எழுப்பி விடுகின்றார். இந்த உயர்வை, மாட்சியை, மகிமையைத்தான் நாம் இன்று உணர்ந்துகொள்ள வேண்டிய முதல் செய்தி.

ஆனாலும், இன்னும் ஒரு கேள்வி. அப்படிச் சிலுவையிலே முழுமையாக இறக்கும் வரை தந்தை ஏன் காத்திருக்க வேண்டுமா? அதற்கு முன்பாக அவரைக் காப்பாற்றி நம் எல்லாருக்கும் மீட்பளித்திருக்க முடியாதா? என்கிற ஒரு கேள்வி நமக்கு எழும். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆண்டவருடைய அன்பை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தம்முடைய ஒரே மகனை மானுட மீட்புக்காக, மனிதகுல வாழ்வுக்காக, மனிதனுடைய விடுதலைக்காக ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம். அதற்குக் காரணம் நம்மீது ஆண்டவர் கொண்ட அன்பு மட்டுமே (யோவா 3:16). அன்புதான் வாழவைக்கும்; ஆற்றல் அழித்துவிடும். ஆகவேதான் ஓர் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “நீ கடவுளை அன்பாகப் புரிந்துகொள். எல்லை இல்லாத இரக்கமாக அவரை ஏற்றுக்கொள். எல்லாம் வல்லவர் என்று நினைக்காதே.” நாம் உணர வேண்டிய ஆழமான கருத்து.

நம்முடைய உள்ளங்களிலே ஏராளமான பாரங்கள் இருக்கலாம்; சோகங்கள் இருக்கலாம்; வேதனைகள் இருக்கலாம்; பெரிய பாறைகள் இருக்கலாம்; ஆனால், அந்தப் பாறைகளையும் கற்களையும் வேதனைகளையும் சோதனைகளையும் எல்லாவற்றையுமே ஆண்டவர் தம்முடைய அன்பினால் புரட்டிப் போடுவார். எனவே, நாம் உயிர்த்த ஆண்டவரிலே நம்பிக்கை வைப்போம்; அவரிலே நாம் சரணடைவோம் என்பதுதான் நாம் முதன் முதலாக உணர வேண்டிய கருத்து.

இரண்டாவதாக, ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பு என்பது தந்தை கடவுள் அவர் சொன்னதையும் செய்ததையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். இயேசுவைக் கொல்ல நினைத்தவர்கள் அவரை மட்டுமல்ல, இயேசுவினுடைய போதனைகளையும் அவருடைய இலட்சியங்களையும் அவருடைய இறையாட்சிக் கனவுகளையும் மக்களுக்காக அவர் எடுத்த நிலைப்பாட்டையும் கொன்றுபோட்டதாக நினைத்தார்கள். ஆனால், இறுதியிலே வென்றது கடவுள்தாம்! ஏனென்றால், தம்முடைய மகனின் உயிர்ப்பிலே ஆண்டவர் எதை எண்பிக்கின்றார்? “என்னுடைய அன்பு மகனிலே நான் பூரிப்படைகிறேன். அவர் என்னுடைய பணிகளைத்தான் செய்தார். தம் இன்னுயிரைக் கையளித்தபோது என்னுடைய திருவுளத்தை நிறைவேற்றினார் என்று நானும் உணர்ந்தேன். எனவே, அவர் எவற்றையெல்லாம் போதித்தாரோ, அவையெல்லாம் என்னுடையவை; அவர் என்னவெல்லாம் செய்தாரோ, அவையெல்லாம் எனக்கு ஏற்புடையவை. ஆகவே, அவரையும் அவருடைய வாழ்வையும் அவர்களுடைய செயல்களையும் அவருடைய போதனைகளையும் அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன்என்று அவருக்கு நற்சான்றிதழ் கொடுப்பதுதான் உயிர்ப்பு.

மூன்றாவதாக, உயிர்ப்பிலே சீடர்கள் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும் என்ற செய்தி தரப்படுகிறது. ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் சொன்னபடியே நீங்கள் அவரை அங்கே சந்திப்பீர்கள். ஏன் அவர்கள் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும்? ஏன் அவர்கள் எருசலேமில் இருக்கக்கூடாது?’ எனச் சிந்திப்போம். ஆண்டவர் இயேசு கூறுவதிலே ஆழமான ஓர் உண்மை இருக்கிறது. “எருசலேம் என்னுடைய பாடுகளின் இடம். நான் இங்கே இறந்திருக்கிறேன்; நான் இங்கே புதைக்கப்பட்டு இருக்கிறேன்; ஆனால், கலிலேயா என்னுடைய வாழ்வின் இடம். என்னுடைய பணிகளை நான் அங்கே செய்தேன்மக்களோடு அங்கே நான் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அவர்களுடைய துன்பத்தில் நான் பங்கு கொண்டேன். அவர்களுடைய இன்பத்திற்கு நான் வழிவகுத்தேன். அவர்களுடைய வாழ்க்கைக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொண்டேன். ஆகவே, நீங்களும் அங்கே வாருங்கள். இறப்பின் காட்சி எங்கே நடக்கிறதோ, அந்த இடத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் வாழ்வு கொடுத்திருக்கிறேனே, அந்த இடத்திற்கு வாருங்கள். எதற்காக? நீங்களும் மக்களை வாழவையுங்கள். நீங்களும் மக்களுக்கு நற்செய்தியை அறிவியுங்கள். ‘கடவுள் அவர்களோடு இருக்கின்றார்; அவர்களை வாழ வைக்கின்றார்என்கிற நற்செய்தியை அந்த மக்களுக்கு அறிவியுங்கள். நீங்களும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று அங்கே ஆண்டவருக்கு நீங்கள் சாட்சியம் சொல்வீர்கள். ஆண்டவர் கூறியபடியே, திருத்தூதர்கள் எருசலேமுக்குச் சென்று உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகிர்கிறார்கள்.

இன்று நமக்கு என்ன அழைப்புத் தரப்படுகிறது? நீங்களும் நானும் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாய் வாழ வேண்டும். நம்முடைய வாழ்விடங்களில் நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்று அழைக்கப்படுகிறோம். எப்போது நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாக இருப்போம்? எப்பொழுதெல்லாம் ஏழைகளை வாழ வைக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் சுமை சுமந்து சோர்ந்து கிடப்பவர்களுடைய சுமைகளைத் தாங்குகின்றோமோ, எப்பொழுதெல்லாம் சமுதாயத்தினுடைய விளிம்புகளுக்குத் தள்ளப்படுகின்ற மக்களை மையத்திற்கு அழைத்து வருகின்றோமோ, எப்பொழுதெல்லாம் மக்களுடைய கண்ணீரைத் துடைத்து அவர்களுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் முயற்சி செய்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் இந்தச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்காக நாம் பாடுபடுகின்றோமோ, எப்பொழுதெல்லாம் நம்மை ஏழை எளிய மக்களுக்காகக் கையளிக்கின்றோமோ... அப்பொழுதெல்லாம் நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகிர்கிறோம். அப்படிப்பட்ட சாட்சிகளாய் நாம் வாழ வேண்டும் என்று ஆண்டவர் இன்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

புனித அகுஸ்தினார் நமக்குக் குறிப்பிடுவது போல நாம் உயிர்ப்பின் மக்கள், ‘அல்லேலுயாஎன்பது நம்முடைய கீதம்! We are an Easter people.  Alleluia is our song. Happy Easter!

news
ஆன்மிகம்
இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடே குருத்துவம்

குருத்துவம்என்ற வார்த்தையை எழுதும்போதே என்னைப் புரட்டிப் போடுவதை உணர்கிறேன். என் மூளை, மூட்டு, நரம்புகளையெல்லாம் ஆட்டிப் படைத்து அசைத்துப் போடுவதை உணர்கிறேன். ஏனென்றால், குருத்துவம் இயேசுவின் இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடு என்பதை அவரின் பணி வாழ்வின் வீரியத்திலிருந்தும் விருட்சத்திலிருந்தும் உணர முடிகிறது. அவரின் இறையாட்சிக் கனவின் இன்ப ஊற்றிலிருந்து உன்னதமாக வெளிப்பட்ட உயர்ந்த நிலை என்பதை என்னால் அறிய முடிகிறது.

இயேசு தமக்குப்பின் இறையாட்சிப் பணிக்காகப் பணியாளர்களைத் தெரிந்தெடுத்து, அர்ச்சித்து அனுப்புவதே குருத்துவம். இயேசுவின் குருத்துவம் மனிதப் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும் வேறுபட்டதும் ஆகும். புனித வியாழனன்று அழியா முத்திரையாகச் சிறப்பான சித்திரமாகக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

குருத்துவம் ஆண்டவர் இயேசுவால் கொடுக்கப்பட்ட தனிப்பெரும் கொடை! தனித்தன்மை வாய்ந்த தன்னிகரற்ற வாழ்வு! இத்தரணியையே தலைசாய்க்க வைக்கும் பணி! அர்ப்பணம் கொண்ட தலைசிறந்தப் பரிசு! இது திரு அவைக்கு இறைவன் கொடுத்த ஒப்புயர்வற்ற மாபெரும் கொடை!

திரு அவையிலிருந்து குருத்துவத்தைப் பிரிக்க முடியாத அளவுக்குப் பிணைப்பையும் இணைப்பையும் இறைவன் பகுத்துத் தொகுத்து வைத்துள்ளார். அதுதான் இறைவன் வகுத்து வைத்தத் திட்டமும் தீர்மானமும் ஆகும். எனவேதான் திரு அவையிலிருந்து குருத்துவத்தைத் தனித்துப் பிரித்துப் பார்க்கவோ பகுக்கவோ இயலாது. குருவானவர் இல்லையேல் நற்கருணை இல்லை. நற்கருணை இல்லையேல் இயேசு இல்லை. இயேசு இல்லையேல் திரு அவை இல்லை. இம்மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. தாம் பாடுபடுவதற்கு முந்தைய நாள் புனித வியாழன் அன்று இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதோடல்லாமல் தமது இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடாகக் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

குருத்துவ வாழ்வு என்பது மகிழ்ச்சிஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். நற்கருணையாக வாழவும், நற்கருணையை நாளும் இறைமக்களுக்கு வழங்கவும் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் குருத்துவக் கனவு யூத சமயக் குருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மாற்றுச்சிந்தையில் உருவானது. அவ்வேளையில் குருத்துவம் மக்களிடமிருந்து அகன்று அந்நியப்பட்டிருந்தது. ஆணவமும் ஆதிக்கமும் தலைதூக்கி நின்றது. வெறும் வெற்றுச் சடங்குகளுக்கும் சட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவத்தையும் முதன்மை இடத்தையும் கொடுத்து, ஏழைகளை முன்னேறவிடாமல், முன்னுக்குவரவிடாமல் முடக்கிப் போட்டக் குருத்துவத்தைக் கேள்வி கேட்கிறார் இயேசு. ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றாமல் மக்களை ஆடு மாடுகளாகவும் அடிமைகளாகவும் நுகர்வோர்களாகவும் மட்டுமே பார்த்தனர் யூத சமயக் குருக்கள்.

இப்பார்வையையும் பணியையும் வேரறுத்து, குரு என்பவர் மனிதர்களை இறைவனோடு இணைக்கும் பாலம் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார் இயேசு. அதையும்விட மேலாகக் குருவானவர் என்பவர் பணி ஏற்பவர் அல்லர்; பணிவிடை புரிபவர். பாதங்களைப் பணிந்து, குனிந்து, கழுவித் துடைத்து முத்தமிடுபவர் என்பதைச் சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார். “இயேசு பந்தியிலிருந்து எழுந்து தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார் (யோவா 13:4-5). பின்னர் அவர் சீடர்களிடம்நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவான் 13:13-14) எனக் குறிப்பிடுகிறார்.

இயேசு தம்மை ஒரு குருவென்று அழைக்க விரும்பவில்லை. அவர் தம்மை ஓர் இறைவாக்கினர் என்றே அடையாளம் காட்டினார். ஆனால், அவரது வாழ்வும் பணியும் அவரை நல்லதொரு குருவாக அடையாளப்படுத்தின. இயேசு தேவையில் இருந்தவர்களைத் தேடிச்சென்று பேணிக்காத்தார். அவர்களின் வாழ்வை வளமாக்கி, அவர்களோடு வாழ்வைக் கொண்டாடி மகிழ்ந்தார். கடவுள் தூரத்தில் இல்லை, துன்பப்படும் மக்களின் மத்தியில்தான் உள்ளார் என்பதை உடனிருந்து உணர வைத்தார். அவரது குருத்துவப் பணியின் உச்சமாகவும் துச்சமாகவும் உயிராகவும் உயரமாகவும் விளங்கியது அவரது சிலுவைச் சாவு. குரு என்பவர் தனக்காக வாழ்பவர் அல்லர்; தன்னலத்தோடு வாழ்பவரும் அல்லர்; சுயநலத்தில் சுருங்கி வாழ்பவரும் அல்லர்; அவர் பிறருக்காக, பிறர் வாழ்வுக்காகத் தன்னை முழுமையாகக் கொடுப்பதே குருத்துவத்தின் அர்ப்பணம் என்பதை அவருடைய இறப்பு நமக்கு வெளிப்படுத்துகிறது. குருத்துவம் பிழைப்புக்காக அல்ல, பிறரைப் பிழைக்க வைக்க என்பதை உணர்வோம். குருத்துவ வாழ்வை மதிப்போம்.

கடவுளின் அருளும் இரக்கமும் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, நாம் குருக்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களின் வாழ்வும் பணியும் இயேசுவின் வாழ்வும் பணியுமாக அமைய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் அவர்களைத் திருப்பலியிலும், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப இறைவேண்டல்களிலும் ஒப்புக்கொடுப்போம். “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தமது அறுவடைக்கு வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் (லூக் 10:2) என்று மொழிந்த ஆண்டவரிடம் மன்றாடுவோம். “என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள் (எரே 3:15) என்று கூறிய கடவுள் தொடர்ந்து நல்ல அருள்பணியாளர்களைத் தர வேண்டுவோம்.

அருள்பணியாளர்களே! அருளடையாளங்களை நிறைவேற்றுபவர்களே! அயராது அன்பு மக்களுக்காய்ப் பணியாற்றி அர்ப்பணிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்பணியாளர்கள் தின நல்வாழ்த்துகள்!

news
ஆன்மிகம்
கழுமரம் பூப்பூத்தது கல்வாரி மலையில்!

வரலாற்றை வகிடெடுத்து தனக்கு முன் என்றும், பின் என்றும் கோடு கிழித்த சரித்திர நதி, உலகில் பல பெரும்புள்ளிகளைப் பிரசவித்திருக்கிறது. பல்வேறு உன்னதங்களை உடைமையாக்கிக் கொண்ட ஆளுமையாக வரலாற்றின் வரப்புகளின் ஊடே பலர் பயணித்திருக்கிறார்கள். எவர் போலும் இல்லாமல் தனிப்பெரும் ஆளுமையாய்ப் பூமிப் பந்தின் எல்லாப் பக்கங்களையும் ஆக்கிரமித்துக் கொண்ட ஓர் ஒப்பில்லா அதிசயம் இயேசு என்பதற்குக் கடலளவு காரணங்களை அடுக்கிவைக்கலாம்.

பூகோள வரைபடத்தில் புள்ளிவைக்கக்கூட இடமில்லாத பெத்லகேம், பூமிப்பந்தையே புரட்டிப்போட்ட பூகம்ப விடியலாய் புறப்பட்டது. கடவுளின் இரகசியம் மானுடத்தில் மொட்டவிழ்த்து, தெய்வீகத்தின் மானுட மொழிபெயர்ப்பாய் மரியாவின் மடியில் கண்விழித்த இந்தக் கருணையின் கவிதை பூமியின் முகத்தை மாற்றிடப் புறப்பட்ட புதிய வேதம் என்பதைத் தம் செயல்பாடுகளால் எண்பித்தது. அழவும் தொழவும் மட்டுமே பயன்பட்ட இறைவேண்டல் கூடங்களை, எழுச்சியும் புரட்சியும் கொண்ட ஏற்றமிகு மாற்றுச் சிந்தனைக் களமாக மாற்றினார். முற்காலத்தில் எழுதப்பட்ட வேத வரிகளைப் புள்ளிகள் மாறாமல் புரட்டிக் கொண்டிருந்த வேத விற்பன்னர்களை விழி பிதுங்க வைத்தது அவரது புத்துலகு அமைக்கும் புரட்சிக் கருத்துகள். உழைக்காமல் உலகைச் சுற்றித்திரிந்து ஊரார் பணத்தில் வயிறு வளர்த்துக்கொண்டு ஓய்வுநாள் ஒழுங்கு என்று பிதற்றிக்கொண்டு வறியோர்மீது சுமைகளை ஏற்றிவைத்த எத்தர்கள் எரிச்சல் அடையும் வண்ணம் ஓய்வுநாளிலும் ஓய்வறியாது இயங்கினார்.

ஆமைகள் ஓய்வெடுக்கலாம்; ஆழி ஓய்வெடுக்காதே! முடவரை நடக்க வைப்பதும், விழியிழந்தோரை ஒளிகொடுத்துப் பார்க்க வைப்பதும், தொழுநோயாளரைத் தொட்டு நலப்படுத்துவதும் தம் வாழ்நாள் வேலையாகக் கொண்டு வழிநடந்த இயேசுவின்மீது வேத முகமூடிகளோடு திரிந்த வெளிவேடக்காரர்களுக்கு ஆத்திரம் மூக்கின்மீது முக்காலி போட்டு அமர்ந்திருந்தது.

பல்லை உடைத்தவனின் பல்லை உடைத்திட வேண்டும்; கண்ணை நோண்டியவனின் கண்ணை நோண்ட வேண்டும்என்று நீள்கிற வன்முறை வரிகளையே கடவுள் தந்த வேதமெனக் காலங்காலமாய் போற்றிவந்த சமூகத்தில், ‘ஒரு கன்னத்தில் அடித்தவருக்கு மறுகன்னத்தையும் காட்டுஎன்று புதிய வேதம் கூறிய இயேசுவை, வேத விரோதியாய் விமர்சனம் செய்தனர். அபலைப் பெண்ணைப் பாலியல் குற்றவாளியாய்ச் சித்தரித்து, அவரைக் கல்லெறிந்து கொல்வதே கடவுளின் கட்டளையென்று வேடதாரிகள் இறைவன் பெயரால் மனித உரிமைகளை மீறியபோது அதைத் தடுத்து நிறுத்தும் தேவதாரு மரக்கிளையாய் நிமிர்ந்த இயேசு எதிர்வினையாற்றினார். ‘உங்களில் குற்றமற்றவர் அவள்மேல் முதல் கல்லை எறியட்டும்என்று யாருமே எழுப்பாத உரிமைக்குரலைப் பதிவு செய்தார். சாத்தான்கள் ஓதிய வேதத்தைத் தடுத்து நிறுத்தி, இறைவனின் ஆட்சிக்கான அறிகுறிகளை நெஞ்சை நிமிர்த்தி நடத்திக்காட்டினார்.

வெளிச்சம் பரவுவதை இருள் எப்போதும் விரும்புவதே இல்லை. தாங்கள் காலங்காலமாகக் கட்டிக் காத்து வந்த அழுக்கு மரபுகளை இந்தப் புதுமை நெருப்பு எரித்துவிடும் என்று அவரது சம காலத்து மரபின் மைந்தர்கள் அச்சப்பட்டார்கள்; அதனால் ஆத்திரமும் பட்டார்கள். இயேசு எனும் பிரளயம் தங்களின் அதிகார நாற்காலிகளை அடித்துச் சென்றுவிடும் என்று கவலை கொண்ட ஆதிக்கப் பேர்வழிகளும் அரிதாரம் பூசிக்கொண்ட ஆலயப் பேர்வழிகளும் கூட்டுச் சேர்ந்து இயேசுவுக்குக் குழிபறிக்க வழிதேடினார்கள்.

தம்மையே கடவுள் என்றும், கடவுளின் மகன் என்றும் கூறிக்கொண்டார் என்று குற்றப்பத்திரிகை வரைந்து கொண்டு ஊரெல்லாம் கூவித்திரிந்தார்கள். அப்பாவிகள், அபலைகள், குரலற்றோர்கள், அன்றாடங்காய்ச்சிகள் எனப் பட்டியலிடப்பட்ட கடவுளின் பிள்ளைகள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. அந்நாளில் பாலஸ்தீனத்தைத் தங்கள் பிடியில் வைத்திருந்த உரோமையின் ஆட்சியாளர்கள் அங்கே தங்களின் கைக்கூலிகளை நியமித்து வைத்திருந்தார்கள். இயேசு அவர்களின் அதிகார நாற்காலியைக் கைப்பற்ற முயல்கிறார் என்றும், உரோமை ஆட்சியாளரைக் கவிழ்த்துவிட்டு அவர் அரியணை ஏறப்போகிறார் என்றும் கட்டுக்கதைகள் புனைந்து ஆட்சியாளர்கள் காதில் போட்டுப் பார்த்தனர். பிலாத்துவிடம் இந்தக் கதை பிசுபிசுத்துப் போயிற்று. ‘தமது அரசு இந்த உலகின் போக்கைக் கொண்டது அல்லஎன்று தெளிவுபடுத்திய பிறகும் கொக்கரித்தவர்களின் கோபம் அடங்கவில்லை. ஒத்துப்போகாதவர்களை ஒழித்துவிடுவதே ஒரே வழி என கங்கணம் கட்டிக்கொண்டு இயேசுவின் சாவுக்காகக் காத்தே இருந்தனர் அந்தக் கடின நெஞ்சுக்காரர்கள். சதிகாரர்களும் அதிகாரம் கொண்டோரும் கூட்டுச் சேர்ந்து பூமியைப் புனரமைக்க வந்த புதிய வேதத்தைப் புதைகுழியில் தள்ளிவிட வகுத்த வியூகம் தற்காலிக வெற்றியைத் தந்தது.

இயேசு தெய்வீகமும் மானுடமும் கலந்த புதுமை கலவை. பூமியின் அதிகாரம் எவரையும் உயிரைப் பறிக்கும் வலிமை கொண்டது என்பதை இயேசுவின் கொலை வரலாற்றில் பதிவு செய்தது. சாதாரண மனிதர்களின் சரித்திரம் சாவோடு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், இயேசுவுக்குச் சாவே சரித்திரமாகிவிட்டது. தேசியக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையின் கருவியாகச் சிலுவை இருந்தது. இயேசுவின் மரணத்தால் கொலைக்கருவியான சிலுவை பூமியெங்கும் வணங்கப்படும் புனித சின்னமாய் புத்தெழுச்சி பெற்றது. கருணையின் கவிதையான இயேசுவின் உயிர்த்தியாகத்தால் கல்வாரிக்குன்றில் கழுமரமே பூப்பூத்த அதிசயம் நிகழ்ந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ஒரு கறுப்பு நிகழ்வு, இயேசுவின் அவமானத்திற்குரிய சிலுவைச் சாவு. இது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு. வறியோரும் குரலற்ற விளிம்பு நிலையினரும் ஆதிக்கச் சக்திகளால் அன்றாடம் கொல்லப்படுகிற கொடிய நிகழ்வுகள், இயேசு கொலையுண்ட புனித வெள்ளியின் தொடர்ச்சியே!

இன்று பூமியெங்கும் திரும்புகிற திசையெங்கும் மனித உரிமை மீறல்கள்! உரிமைக்குக் குரல் எழுப்புவோரின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. விடுதலைப் போராளிகள் கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். பெண்ணினம் சிதைக்கப்பட்டு கொலைக்களத்தில் பலியாடுகளாகின்றன. ‘இயேசுவின் சீடர்களாய் இருக்கிறோம்என்பவர்கள் நிறுவனங்களையும், மரபுகளையும், வழிபாட்டு முறைகளையும் மட்டுமே கட்டிக் காப்பதைக் கடமையாகக் கருதாமல் மானுட உரிமையைக் காக்க இனியும் தாமதியாமல் புறப்பட வேண்டும்.

தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர் அதனை இழந்துவிடுவர்என்று இயேசு கூறிய வரலாற்று வரிகளை நினைவில் கொள்ள வேண்டும். கொள்கைகளை விற்றுக் கோபுரங்களைக் கட்டுவதால் பயனில்லை. நீதிக்குக் குரல் கொடுக்க நிமிர்ந்து நின்றால் நம்மைத் தலைகுனிய வைக்க தவளைகள் கூட முயற்சிக்கும். வறியோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் உரிமையிழந்தோருக்காக வீதியில் வந்து போராடத் தொடங்கினால், நாம் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். இனவெறி, மதவெறி, வெறுப்பு அரசியல் முதலியனவற்றை எதிர்த்து நிற்கும்போது நமது வாழ்வுரிமையே வருத்தத்திற்குள்ளாகும். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக இயேசுவைப்போல எழுகிறபோது நமது அமைப்புகள், நிறுவனங்கள், உடைமைகள், நாம் சம்பாதித்த சொத்துகளும், நற்பெயரும் கூட சிதைக்கப்படலாம். உண்மைக்குச் சாட்சியம் கூறும் ஒவ்வொரு கிறிஸ்துவின் தொண்டர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் புனித வெள்ளியாக மாறும்.

அஞ்சி நடுங்கும் கோழைகளாக இயேசுவின் குழந்தைகள் குறுகிவிடக்கூடாது. எல்லா இரவுகளும் விடிகின்றன. மறைந்த சூரியன் மறுநாள் காலையில் கிழக்கு வானில் முகம் காட்டுவதுபோல வாய்மையே வெற்றிபெறும். கழுமரமோ, கல்லறையோ இயேசுவின் இறையாட்சி வேள்விகளுக்கு வேட்டு வைத்திட இயலவில்லை. நீதிக்காக நிமிர்ந்து நின்று புனித வெள்ளிகளைச் சந்தித்தால் உயிர்ப்பின் ஞாயிறு எல்லாருக்கும் பிரகாசிக்கும். சாவு சரித்திரமாகி புதிய வாழ்வு பூமியில் புலப்படும்.

news
ஆன்மிகம்
குருத்துவம் எனும் அருள்கொடைக்காக ஒரு குருவின் நன்றிப் பாமாலை!

அன்பின் இறைவா உமக்கே நன்றி!

தூய குருத்துவத்தை நீர் ஏற்படுத்தியதற்காக!

இறையாட்சிப் பணிபுரிய என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக!

தூய திரு அவையில் பணியாற்றும் சிறப்புக் கொடைக்காக!

போதிக்கும் பணிசெய்ய நீர் தந்த அருளுக்காக!

உம் மந்தையைப் பேணிக்காக்கும் திருக்கொடைக்காக!

நம்பிக்கை மறையுண்மைகளைக் கற்பிக்க நீர் அளித்த தகுதிக்காக!

திருமுழுக்கு வழங்க நீர் தந்த ஆற்றலுக்காக!

• திருமணம் எனும் அருளடையாளத்தை நிகழ்த்தி சாட்சியாகிட நீர் தந்த                                                                                          மதிப்பிற்காக!

இது என் உடல்என மொழிந்திட நீர் தந்த அருள்கொடைக்காக!

நோயுற்றோரைக் குணமாக்குவதிலும், இறக்கும் தருவாயில் உள்ளோரைத் தேற்றுவதிலும்  பெறுகின்ற மகிழ்வுக்காக!

உன் பாவங்களை மன்னிக்கின்றேன்என்னும் வார்த்தைகளைக் கூற நீர் தந்த ஆற்றலுக்காக!

கிறிஸ்துவின் பதிலாளாய்பணிசெய்ய நீர் தந்த கொடைக்காக!

செபத்தில் வேரூன்றியிருக்க என்னை வழி நடத்துவதற்காக!

தூய பலி நிறைவேற்ற என் கரங்களைத் திருநிலைப்படுத்தியதற்காக!

உன்னதக் குருவின் வழிமரபுடன் வாழ்ந்திட நீர் தந்த மாண்பிற்காக!

அடியேனின் தகுதியற்ற நிலையைப் பாராது, புனிதத்தின் மாதிரியாக வாழ அழைத்ததற்காக!

மேய்ப்புப்பணியில் மக்களை ஆற்றுப்படுத்த என்னைத் தகுதியுள்ளவனாக மாற்றுவதற்காக!

குருத்துவத்தின் சகோதரத்துவ உறவுக்காக!

துன்ப துயர வேளைகளில் நீர் எம்மைத் திடப்படுத்துவதற்காக!

 ஏழைகளையும் கைவிடப்பட்டோரையும் தேடிச் சென்றிடும் ஆர்வத்தைத் தந்ததற்காக!

குருத்துவத்தின் இரக்கம், மேன்மை மற்றும் பெருந்தன்மையான கொடைகளுக்காக!

எனது பலவீனங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் என்னை உருமாற்றம் செய்வதற்காக!

உம்மீது மாறாத பற்று கொண்டு வாழ எமக்குத் துணை செய்வதற்காக!

முழுமையான தியாக அன்பில் வாழ வழிகாட்டுவதற்காக!

கிறிஸ்துவின் உடனிருப்புக்காகவும், அவர் எனது குருத்துவத்தில் ஒளிர்வதற்காகவும்!

பிறரை ஊக்குவிக்க நீர் தந்த கொடைகளுக்காக!

உமது மந்தைக்கு உணவூட்ட நீர் தந்த வாய்ப்புக்காக!

அருள் வழங்கும் கருவியாக என்னைப் பயன்படுத்துவதற்காக!

திரு அவையின் ஒன்றிப்பின்போது ஒவ்வொரு முறையும் நற்கருணை வழங்கியதற்காக!

முழுமையான அர்ப்பண வாழ்வு வாழ கற்பு எனும் கொடையைத் தந்ததற்காக!

குருக்களின் அன்னையாம் தூய மரியாவின் அன்புக்காக!

இயேசுவின் திரு இதய அன்பைப் போலிருக்க குருத்துவத்தை ஏற்படுத்தியதற்காக!

பிறரைப் புனிதப்படுத்த நீர் தந்த தெய்வீகக் கட்டளைக்காக!

இயேசுவின் திருப்பீடமாக விளங்கிட நீர் தந்த அளவில்லாக்  கொடைகளுக்காக!

எண்ணிலா வரங்களால் நீர் என் வாழ்வைப் புனிதப்படுத்துவதற்காக!

தூய ஆவியே துணையாக வாரும்!

எனது குருத்துவ அருள்பொழிவு நாளில் நான் அறிக்கையிட்ட வாக்குறுதிகளில் குறிப்பாக, குருத்துவத்தின் கடமைகளைத் தடையின்றி ஆற்றவும், குருகுலத்தில் ஆயருடன் இணைந்து உண்மையான மனச்சான்றுடன் இறைவனின் மந்தையைப் பேணிக்காத்திட...

கடவுளின் அதிமிக மகிமைக்காகவும், கிறிஸ்துவின் மக்களைப் புனிதமாக்கவும், திரு அவை வழங்கியுள்ள மறைப்பணிகளை நேர்மையுடனும் அர்ப்பணத்துடனும் கிறிஸ்துவின் மறைப்பொருளை நான் நிறைவேற்றிட...

எனது இறைவாக்குப் பணியில் நேர்மையுடனும் ஞானத்துடனும் நற்செய்தியைப் போதிக்கவும், கத்தோலிக்கத் திரு அவையின் மறையுண்மைகளையும் நம்பிக்கைக் கோட்பாடுகளையும் தக்க விதத்தில் விளக்கிக் கூறிட மன்றாடுகிறேன்:

மிகவும் இரக்கமுள்ள தந்தையே! தலைமைக் குருவாம் இயேசு, புனிதமான குருத்துவத்தை ஏற்படுத்திய இந்த மகிமையான நாளில், அம்மறைநிகழ்வைக் கொண்டாடவிருக்கும் என்னை அதே தூய ஆவியானவரால் திடப்படுத்துவீராக! எனது குருத்துவ வாழ்வின் வாக்குறுதிகளில் கருத்தாய் இருந்து, அவற்றை எனது இறுதி மூச்சுவரை உறுதியோடு நிறைவேற்றிட அருள்புரிவீராக. கிறிஸ்துவின் உன்னதக் கொடையாம் குருத்துவத்திற்காக நான் நன்றியுள்ளவனாக வாழ்ந்திடவும், இறைமக்களுக்குப் புனித நிலையில் எந்நாளும் பணி செய்ய வழங்கப்பட்ட உன்னதக் கொடை அது என மகிழ்ந்திடவும், எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் சாயலாக வாழ அருளப்பட்டுள்ள மாபெரும் கொடையெனக் கருதி நான் வாழ்ந்திடவும் துணை செய்வீராக. இவற்றை எல்லாம் எம் உன்னத குருவாம் கிறிஸ்து வழியாகவே உம்மை வேண்டுகிறேன். ஆமென்.”

(நன்றி: ‘Magnificat’ – Magazine,  April – 2022)

மொழிபெயர்ப்பு: அருள்சகோதரி முனைவர் லூர்துமேரி FMM

news
ஆன்மிகம்
கெத்சமனித் தோட்டம்: கற்றுத்தரும் பாடம்

தவக்காலம் இயேசுவின் பாடுகளைத் தியானிக்கும் காலம். துன்பங்கள் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. துன்பத்தை எதிர்கொள்வதா? அல்லது துன்பத்தை விட்டு விலகி ஓடுவதா? துன்பத்தை விட்டு விலகி ஓட நினைப்பதே மனிதர்களின் பலவீனம்.

இயேசு கெத்சமனித் தோட்டத்தில்  பாடுகளை நினைத்து இரத்த வியர்வை சிந்துகிறார்துன்பத்தை விட்டு விலக நினைக்கிறார். “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம்  என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே நிகழட்டும் (மத் 26.39) என்று தந்தையிடம் வேண்டுகிறார்.

கெத்சமனித் தோட்டத்திலிருந்தே பாடுகள் தொடங்குகின்றன. கெத்சமனி என்பதற்குஎண்ணெய் ஆலைஎன்று பொருள். ஒலிவ மரக் கொட்டைகளை நசுக்கி எண்ணெய் எடுக்கப்படுவதைப் போல் இயேசு நமது பாவங்களால் நசுக்கப்பட்டு இரத்தம் சிந்தப்படுவதன் குறியீடு.

இன்றும் மறைந்த அருளாளர் ஸ்டேன் சுவாமி போன்று அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் போராளிகளும் நீதிக்காகத் துன்பங்களை வீரத்துடன் எதிர்கொள்கிறார்கள். துன்பத்தைக் கண்டு ஓடி ஒளியவில்லை. அவர்கள் செபத்தின் மூலம் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வல்லமையைப் பெறுகிறார்கள். “தினமும் ஒரு மணி நேரம் நற்கருணை நாதர் முன் செபம் செய்கிறேன். நாள் முழுவதும் நோயாளிகளிடம் பணியாற்ற வல்லமையைப் பெறுகிறேன்என்றார் அன்னை தெரேசா.

ஆனால், இன்று ஒருசிலர் செபம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, பேய்களை விரட்டுவது, துன்பங்களிலிருந்து விடுதலை அளிப்பது என்று வழிபாடுகள், செபக்கூட்டங்கள், தியானங்கள் நடத்துகிறார்கள். மக்களும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருந்து மாறி செபம் மூலம் துன்பங்களிலிருந்து எளிதாக விடுதலை கிடைத்துவிடாதா? என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்போலி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, கூட்டம் கூட்டமாகச் செபக்கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். திருப்பலியைவிட இந்தச் செபக்கூட்டமே முக்கியம் என்று  கருதுகிறார்கள். திரு அவையை விட்டுச் செல்பவர்களும் உள்ளனர்.

இறைவன் விருப்பம் இருந்தால் மட்டுமே புதுமைகள் நடக்கும்இயேசு அற்புதங்களை விளம்பரத்திற்காகச் செய்யவில்லை. மாறாக, குணமடைந்தவர்களிடம் இதை யாரிடமும்  சொல்ல வேண்டாம் என்றே எச்சரித்திருக்கிறார். புதுமைகளை மையப்படுத்தி வியாபாரமாக்கப்படும் செபக்கூட்டங்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (மத் 16: 24) என்கிறார் இயேசு. நாம் துன்பங்களை விட்டு பயந்து ஓடாமல் அதை எதிர்கொள்வதையே இயேசு விரும்புகிறார். துன்பங்களைக் கண்டு பயந்து ஓடுபவன் உண்மையான கிறித்தவனாக இருக்க முடியாது.

கெத்சமனியில் மனத்தளவில் துவண்ட இயேசு, தந்தையின் சித்தத்தை உணர்ந்து அதை நிறைவேற்ற மனவுறுதியுடன்  சிலுவை மரணத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டார்.

நாமும் இந்தப் புனித வாரத்தில் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், இயேசுவின் துணையோடு  வெற்றிகரமாகத் துன்பங்களை எதிர்கொள்வோம். நீதிக்காகப் போராடும் போராளிகளாக மாறுவோம்.

news
ஆன்மிகம்
ஆண்டவரின் இரவு விருந்து: வரலாறு படைத்த வியாழன்

புனித வியாழன் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் உச்சக்கட்டமாக விளங்கிய இறுதி மூன்று நாள் நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வின் நினைவு. இந்நாளின் திருவழிபாடு கீழ்க்காணும் ஐந்து பரிமாணங்களைக் கொண்டுள்ளது.

1) பாஸ்கா (கடத்தல்) உணவின் நினைவு

எகிப்து நாட்டில் பார்வோனுக்கு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களானஅபிருக்களைஅவ்வடிமைத்தளையிலிருந்து மோசே மீட்டு, அடிமை விலங்கொடிப்பின் முன் சுவையாக நீசான் மாதம் 14-ஆம் நாள் இரவில்அபிருக்களுடன்இணைந்து கொண்டாடிய பாஸ்கா உணவின் நினைவே இந்நிகழ்வு.

கி.மு. 1330-களில் உலகெங்கும் இருந்த அரசுகளில் எல்லாம் பேரரசாக விளங்கியது எகிப்து. அந்நாட்டில் பார்வோனுக்கு அடிமைகளாக வாழ்ந்தஅபிருக்கள்என்று அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்களின் மூதாதையர்களோ இறைவன் யாவேயின் துணை கொண்டு மோசேயின் தலைமையில் பார்வோனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பினர். இறுதியாக, பார்வோனின் அடிமைத் தளையிலிருந்து இஸ்ரயேல் மக்களை மோசே மீட்டெடுத்த நீசான் மாதம் 14-ஆம் நாள் இரவில் அவர்கள் தங்கள் அடிமை விலங்கொடிப்பின் முன் சுவையாகப் பாஸ்கா உணவு உண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்கள். பாஸ்கா உணவை உண்டபின் எகிப்தை விட்டுப் புறப்பட்டார்கள். தங்கள் விடுதலை வாழ்விற்கு மிகப் பெரும் தடையாகத் தங்கள் முன் நின்ற செங்கடலை மாட்சி மிகு யாவேயின் துணை கொண்டு கடந்தார்கள். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதன் அடையாளமே புனித வியாழன் அன்று நினைவு கூரப்படும் பாஸ்கா உணவுக் கொண்டாட்டம்.

2) இறுதி இரவு விருந்தின் நினைவு

தமது இவ்வுலக வாழ்வை முடிக்கும் தருணத்தில் இயேசு தம் அன்புச் சீடர்களுக்குக் கொடுத்த இறுதி இரவு விருந்தின் நினைவு இது.

இயேசு தாம் இவ்வுலகில் வாழ்ந்த போது பல்வேறு விருந்து குழுமங்களில் விரும்பி கலந்துகொண்டார். பரிசேயர்கள், பணக்காரர்கள் மட்டுமின்றி ஆயக்காரர்களும் இயேசுவை விருந்துக்கு அழைத்தனர். பாவிகள், சாமானியர்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டோரும் அவ்விருந்துகளில் கலந்து கொண்டனர். இயேசுவும் பசியோடு இருந்த மக்களுக்குப் பசியாற உணவு வழங்கினார். தமது இவ்வுலக வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வரப்போவதை உணர்ந்த இயேசு ஏறக்குறைய கி.பி. 29-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் அவ்வாண்டு பாஸ்கா விழா நாளாகிய வியாழக்கிழமை அன்று மாலை பாஸ்கா உணவு உண்ண எருசலேம் மலையின் தென்பகுதியில் அமைந்த சீயோன் மலை உச்சியில் இருந்த மேலறையில் தம் சீடர்களுடன் பந்தி அமர்ந்தார். அது இயேசுவுக்கு இவ்வுலகின் இறுதி இரவு விருந்தாகவும் சீடர்களுக்கு இயேசு கொடுத்த பிரியாவிடை விருந்தாகவும் அமைந்தது.

3) நற்கருணை நிறுவப்பட்டதன் நினைவு

இன்றுதான் இயேசு நற்கருணையை நிறுவி, அக்கொண்டாட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தும் அருள்பணி வாழ்விற்கும் அச்சாரமிட்டார். எனவே, இந்நாள் அருள்பணியாளர்கள் நாளாகவும் கொண்டாடப்படுகின்றது. அருள்பணியாளர்கள் தங்கள் அருள்பணி வாழ்வின் மேன்மையை உணர்ந்து இறைவனுக்கு நன்றிகூறும் பெருநாள் இது.

இந்நாளில் இயேசு, தம்மைப் பின்தொடர்ந்த சீடர்களுக்கெல்லாம் ஒப்பற்ற ஒரு நினைவை விட்டுச் சென்றார். பாஸ்கா உணவுக்காக ஏற்பாடு செய்திருந்த அப்பத்தைத் தம் கைகளில் எடுத்துச் சீடர்களுக்குக் கொடுத்து, ‘தம் உடல்என்றும், திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தையும் எடுத்து, ‘தம் இரத்தம்என்றும் கூறினார். அதைத் தம் நினைவாகச் செய்யுமாறும் அவர்களைப் பணித்தார். எனவே இந்நாள்உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருப்பேன் (மத் 28:20) என்ற இயேசுவின் கூற்றுக்கு முழு வடிவம் கொடுக்கும் நாளாயிற்று.

4) பாதம் கழுவும் நிகழ்வின் நினைவு

இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, தாமும் தம்மைப் பின்பற்றுபவர்களும் தொண்டாற்றும் பணியாளர்களாக இருப்பதிலே பெருமை கொள்ள வேண்டும் என உணர்த்திய பாதம் கழுவும் நிகழ்வை நினைவுகூரும் பொன்னான நாள் இந்நாள்.

தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்ப்படிந்தவர் இயேசு (பிலி 2:6-8). “உங்களில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும்; உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும் (மத் 20:26-27) என்று கூறியவரும் அவரே. “நான் தொண்டு ஏற்பதற்கல்ல; தொண்டு ஆற்றுவதற்கே வந்தேன் (மத் 20:29) என்றும் உறுதிபடக் கூறினார். தலைவர்களாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொண்டாற்றவும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்.

5) தலைமைச் சங்க விசாரணைக்கு உட்படுத்தியதன் நினைவு

இயேசுவைக் கொலை செய்ய வேண்டும் என்னும் சதித்திட்டம் தீட்டிய யூதத் தலைவர்கள் யூதாஸ் இஸ்காரியோத்துவின் துணையோடு இயேசுவைக் கெத்சமனித் தோட்டத்தில் கைது செய்து இரவு முழுவதும் அவரைத் தலைமைச்சங்க விசாரணைக்கு உட்படுத்தியதின் நினைவு இன்று.

வியாழன் இரவைக் கெத்சமனித் தோட்டத்தில் கழிக்க வந்த இயேசுவுக்கு அவ்விரவைத் தூங்கா இரவாகவே யூதாஸ் மாற்றிவிட்டான். கோவில் பாதுகாவலர்களின் துணை கொண்டு யூதத் தலைவர்கள் இயேசுவைக் கைது செய்து, அன்னா, அவரது மருமகன் கயபா மற்றும் தலைமைச்சங்கம் என இரவு முழுவதும் அவரை விசாரணைக் கைதியாக அலைக்கழித்தனர். நாற்பதற்கு ஒன்றுக்குக் குறையக் கசையடி கொடுத்து, அவரை நையப் புடைத்தனர். ‘எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போனாலும் நான் ஒருபோதும் உம்மை விட்டு ஓடிப்போக மாட்டேன்என்று வாக்குறுதி தந்த பேதுரு, இயேசுவின் கண் முன்னாலேயேநான் அவரை அறியேன்என்று மூன்று முறை மறுதலித்தார். இவ்வாறு கசையடியாலும் கேள்விக்கணையாலும் இயேசுவைத் துளைத்தெடுத்து விசாரணை செய்ததின் நினைவு நாள் இது.

வரலாறு படைத்த புனித வியாழன்

இந்நாளில்தான், தலைமைக் குருவின் வீட்டில் வைத்து இரவோடு இரவாக இயேசுவின்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைத் தயாரிக்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கைகூடி வந்தது. யூதர்களை மீட்பதற்காகவே இம்மண்ணகத்தில் பிறந்த இயேசுவின்மீதுமனிதக் கையால் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத கோவிலை மூன்று நாள்களில் கட்டுவேன் (மாற் 14:58) என்றும், ‘இறைமகன் (மத் 27:43) என்றும் கூறினார் என்னும் குற்றப்பழிகளைச் சுமத்தி அவரை யூதர்களுக்கு எதிராகத் திசை திருப்ப முடிந்தது. மேலும், இயேசுசீசருக்கு வரி செலுத்தக்கூடாது’ (லூக் 23:2) மற்றும்தாமே மெசியாவாகிய அரசன் (லூக் 23:2) என்றும் கூறினார் என்னும் பொய்ச்சான்றுகளைச் சுமத்தி அவரை உரோமையருக்கு எதிராகத் திசை திருப்பும் நாளாகவும் புனித வியாழன் அமைந்தது.

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி... இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்என்று இயேசுவைச் சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான் (யோவா 1:29). பாஸ்கா விழாவில் பலி கொடுக்கப்படும் செம்மறி ஆட்டுக்குட்டியைப் போன்று உலக மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரியில் சிலுவை மரணத்தை ஏற்றுப் பலியாகப் போகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது இப்புனித வியாழன். அடிமைத்தளைகளை அறுத்தெறிந்து, பார்வோனின் ஆதிக்க விலங்கை உடைத்தெறிந்து முரசு கொட்டி நிற்கின்றது இப்புனித வியாழன்!

காலடித் தொட்டுத் தொண்டாற்றுவதும் பாதம் பணிந்து பணியாற்றுவதும் இயேசுவின் சீடர்களுக்கான தனித்தகுதிகள் என எக்காள முழக்கமிடுகின்றது இப்புனித வியாழன்!

சோகப்பாடல் இசைத்து, முகாரி இராகமீட்டிய இப்புனித வியாழனே வெகுவிரைவில் பூபாள இராகத்துடன் பிறக்கப் போகும் புதுப்பாடலுக்கான தொடக்கப் புள்ளியே!