news
ஆன்மிகம்
மனம் என்னும் மரம் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 13)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அகஸ்டின்:தந்தையே! இதுவரை அருளடையாளங்கள் குறித்த பொதுவான சிந்தனைகளை உளவியல் ஆன்மிகப் பின்னணியில் விளக்கினீர்கள். இனி நீங்கள் ஒவ்வோர் அருளடையாளமாக எடுத்துத் தனித்தனியாக விளக்கினீர்கள் என்றால், அவற்றை இன்னும் அர்த்தமுள்ள வகையில் அணுக முடியும் என்று எண்ணுகின்றேன்.”

அருள்பணி:முதலாவதாக, நாம் திருமுழுக்குக் குறித்துச் சிந்திக்கலாம். ‘பாவத்தின் கழுவாய், ‘புதுப் பிறப்பின் தொடக்கம், ‘கிறித்தவ வாழ்வின் நுழைவாயில், ‘ஆதிப்பெற்றோரின் பாவத்தைப் போக்கும் அருளடையாளம்என்றெல்லாம் அழைக்கப்படுகிறது திருமுழுக்கு. கடந்த கட்டுரையில் நாம் பார்த்ததுபோல, திரு அவையின் தொடக்கம் முதலே கொண்டாடப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற அருளடையாளம் திருமுழுக்கு!”

மார்த்தா:ஆனால், பெரும்பாலான கிறித்தவர்களைப் பொறுத்தமட்டில் திருமுழுக்கு என்பது பெயர் வைக்கின்ற ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது தந்தையே! அதன் வழியாகப் பொழியப்படும் அருள்வரங்கள் அற்புதமானவை என்பது குறித்த விழிப்புணர்வு அவர்களிடம் இருப்பதுபோல தெரியவில்லையே!”

அருள்பணி:உண்மைதான்! நம் மக்கள் அருளடையாளங்களைச் சடங்காச்சாரமாக அணுகப் பழகிவிட்டார்களேயொழிய, அவற்றின் ஆழத்தில் நிகழ்கின்ற அருள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலான கிறித்தவர்களின் வாழ்வு குறுகிய வட்டத்தில் முடங்கிப்போனதாக இருக்கிறது.”

கிறிஸ்டினா:தந்தையே, திருமுழுக்கு நம் பிறப்புநிலைப் பாவத்தைக் (சென்மப் பாவத்தை) கழுவுகிறது என்று சொல்லப்படுகிறதே! இதைப் பற்றிய உங்களது பார்வை என்ன?”

அருள்பணி:முதலில் பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன? என்பதை உளவியல்-ஆன்மிகப் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சி எடுப்போம்.”

மார்த்தா:ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதுதானே  பிறப்பு நிலைப் பாவம் என்பது!”

அருள்பணி: ஆம்! எனினும், இதை நாம் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். என்றோ வாழ்ந்த ஆதாமும்-ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்டதாகவும், அதனுடைய பாதிப்பு நம்மைத் தாக்குவதாகவும் புரிந்துகொள்வது முழுமையான புரிதலாக இருக்க முடியாது.”

கிறிஸ்டினா: அப்படியானால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட நிகழ்வைச் சரியாகப் புரிந்துகொள்வது எப்படித் தந்தையே?”

அருள்பணி:ஆதாம் என்றால்மனிதன்என்று பொருள்; ஏவாள் என்றால்பெண்என்று பொருள். எனவே, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணும் நிகழ்வு ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் நிகழ்கிறது.”

அகஸ்டின்:ஆச்சரியமாக இருக்கிறது! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் தந்தையே!”

அருள்பணி:விலக்கப்பட்ட மரம் என்பதுநன்மை-தீமை அறிகின்ற மரம் (The tree of the knowledge of Good and Evil) என்று திருவிவிலியத்தில் (தொநூ 2:16,17) குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குநன்மை-தீமை அறிகின்ற மரம்என்பது ஒரு குறியீடு (Symbol). அது நம் மனத்தைச் சுட்டிக்காட்டும் குறியீடு. அதாவது, நம் வாழ்வில் நன்மை என்றும், தீமை என்றும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் பகுத்துப் பார்ப்பதற்கான காரணம் நம் மனமே! எனவேதான் இதுபகுத்தறிவு (பகுத்து அறிவது) என்று அழைக்கப்படுகிறது. அதேபோல நாம் உலகைஅறிந்துகொள்வதற்கான காரணமாக இருப்பதும் நம் மனமே. நாம் உலகை அறிய முற்படுவதால் நமக்குக் கிடைப்பதே அறிவு (Knowledge) என்பது!”

அன்புச்செல்வன்:தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால்நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனிஎன்று திருவிவிலியம் கூறுவதுமனத்தின் கனிஎன்று அர்த்தம் தருகிறது. அப்படியானால் நம் மனம் மனித வாழ்விற்குச் சாபத்தைக் கொண்டு வருகிறதா?”

அருள்பணி:மனம் முழுக்க முழுக்கக் கெட்டது அல்ல; அதனால் பல நன்மைகள் விளைகின்றன. முதலாவதாக, ஏதேன் தோட்ட நிகழ்வை நாம் முழுக்க முழுக்க எதிர்மறையாகவே பார்த்துப் பழகிவிட்டோம். அதில் சில நேர்மறைத்தன்மைகள் இருப்பதை நாம் மறந்துவிடுகின்றோம். ஆதாமும், ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்ட பின்பு அவர்களது கண்கள் திறக்கப்பட்டதாகவும் (தொநூ 3:7), அவர்கள் கடவுளைப் போல ஆனதாகவும் (தொநூ 3:22) திருவிவிலியம் கூறுகின்றது. ‘கண்கள் திறக்கப்படுவதுஎன்பது சுய அறிவு உள்ளவர்களாகவும், தமக்கெனச் சிந்திக்கும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ‘கடவுளைப்போல ஆவதுஎன்பது படைப்புத் திறன் உள்ளவர்களாக இருப்பது. கடவுளது முதல் வேலையே படைப்பதுதானே! எனவே, படைப்புத் திறன், சிந்தனை, அறிவு முதலியவை மனத்திலிருந்து உருவாகும் சில நன்மைகள்.”

கிறிஸ்டினா:தந்தையே, இக்கருத்தை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா?”

அருள்பணி:ஒவ்வொரு மனிதருமே தம் குழந்தைப் பருவத்தில் கண்கள் மூடிய நிலையில்தான் இருக்கின்றனர். அதாவது, தமக்கெனச் சுய சிந்தனைகள் இல்லாதவர்களாகப் பெற்றோரும் மற்றோரும் கூறுவதை உள்வாங்கி, அதற்கேற்ப நடந்துகொள்கின்றனர். பதின் பருவத்தில்நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியைஉண்ண ஆரம்பிக்கின்ற பொழுது, அதாவது ஒரு மனிதர் தன் மனத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றபோது, தனக்கெனச் சுயசிந்தனைகளை வளர்த்துக்கொள்கின்றார். இதுவே கண்கள் திறக்கப்படும் நிலை என்பது! எனவே, நன்மை, தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்பதும், கண்கள் திறக்கப்படுவதும் ஒவ்வொரு மனிதரது வாழ்விலும் நடந்தேறுகிறது. அதேபோல, அறிவானது நம்மைப் படைப்புத்திறன் வாய்ந்தவர்களாக மாற்றுகிறது. மனிதர்களுக்கென்று கடவுள் கொடுத்துள்ள ஒரு மாபெரும் கொடை படைப்புத் திறன்! மனிதர்கள் தங்களது படைப்புத் திறனால் பூமியைத் தொடர்ந்து அழகாக்கிக் கொண்டு இருக்கின்றனர். கடவுள் காட்டைப் படைத்தார் என்றால், மனிதர்கள் தோட்டத்தைப் படைக்கின்றனர். கடவுள் நிழலைப் படைத்தார் என்றால், மனிதர்கள் குளிர்சாதனப் பெட்டியைப் படைக்கின்றனர். கடவுள் பறவைகளைப் படைக்கிறார் என்றால், மனிதர்கள் விமானத்தைப் படைக்கின்றனர். கடவுள் மின்னலைப் படைக்கிறார் என்றால், மனிதர்கள் மின்சாரத்தைப் படைக்கின்றனர். கடவுள் மனிதர்களைப் படைக்கின்றார் என்றால், மனிதர்கள் இயந்திர மனிதர்களைப் படைக்கின்றனர். மனிதர்களது தொடர் படைப்பால் இந்தப் பூமி அழகும் பொலிவும் பெறுகின்றது.”

அன்புச்செல்வன்:தந்தையே, கடவுள் ஆறு நாள்கள் உலகத்தையும், அதன் உச்சமாக மனிதர்களையும் படைத்துவிட்டு, ஏழாவது நாள் ஓய்வு எடுத்தார் என்று திருவிவிலியம் கூறுகின்றது. தமது படைக்கின்ற வேலையை மனிதர்களிடம் கொடுத்துவிட்டதால், கடவுள் ஓய்வு எடுத்தார் என்று பொருள் கொள்ளலாமா?”

அருள்பணி:நல்ல சிந்தனை! தனக்குப் பிறந்த மகன், தன் குடும்பப் பொறுப்பை எடுத்துக்கொண்ட பின்பு, தந்தை ஓய்வு பெறுவதுபோல, தம் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர், படைப்புத் தொழிலைத் தொடரும் பொருட்டுக் கடவுள் ஓய்வெடுத்தார் என்று பொருள் கொள்வது சரியானதே! மனம் இத்தகைய நற்செயல்பாடுகளைச் செய்தாலும், அது நம் வாழ்விற்குள் பல பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது என்ற உண்மையை நம்மில் பலர் புரிந்துகொள்வது இல்லை.”

(தொடரும்)

news
ஆன்மிகம்
போராட்டமும் இறைவேண்டலே! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 42)

இறைவேண்டல் என்பது ஓர் அருள்வாழ்வுப் போராட்டம் என்னும் செய்தியைத் திரு அவைத் தந்தையர்கள், புனிதர்களின் வாழ்விலிருந்து அறியவருகிறோம். எல்லாப் புனிதர்களும் இறைவனோடு ஒன்றிப்பதற்காகப் பல தடைகளைக் கடந்தனர். உடல், உலகம், அலகை என்னும் முப்பெரும் பகைவர்களோடு போராடியே இறையனுபவத்தைப் பெற்றனர். புனித தோமா அக்குவினாவிலிருந்து, திரிதெந்தின் திருச்சங்கம்வரை இம்மூன்று ஆற்றல்களோடு நாம் போராட வேண்டும் என்னும் செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலில், “அப்பொழுது நீங்கள் இவ்வுலகப் போக்கின்படி, வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப் பணிந்து நடந்தீர்கள். இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம். நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து, உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு, மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம் (எபே 2:2-3) என்னும் வரிகளில் இம்மூன்று பகைவர்கள் பற்றி வாசிக்கிறோம்.

யூபிலி 2025-க்கு ஆயத்தமாக 2021-ஆம் ஆண்டு முழுவதும் புதன்கிழமை மறைக்கல்வியில் இறைவேண்டல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 12.05.2021 அன்று அவர் ஆற்றிய உரையின் தலைப்புபோராட்டமும் இறைவேண்டலேஎன்பதுதான். கிறித்தவ இறைவேண்டல் என்பது எளிதானதன்று; மாறாக, அது ஓர் அகப்போராட்டம் என்கிறார் திருத்தந்தை.

இறைவேண்டல் செய்ய நினைக்கும்போதுதான் நாம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய சிந்தனை நமக்கு வருகிறது என்று நாம் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் இறைவேண்டல் போராட்டம் பற்றிப் பகிர்கிறார் திருத்தந்தை. திரு அவை வரலாற்றின் எல்லா மாமனிதர்களும் இறைவேண்டலின் மகிழ்ச்சி பற்றி மட்டுமல்ல, இறைவேண்டலின் போராட்டம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துள்ளனர். குறித்த நேரத்தில் இறைவேண்டல் செய்வது, குறிப்பிட்ட முறையில் இறைவேண்டல், சில நேரங்களில் மனநிறைவற்ற இறைவேண்டல் போன்றவை எல்லாருக்கும் பொதுவான சிக்கல்கள் என்கிறார் திருத்தந்தை.

பல புனிதர்கள்இருண்ட இரவுஎன்னும் அனுபவத்தைப் பெற்றிருந்தனர். வாரக்கணக்கில், சில வேளைகளில் மாதக்கணக்கில் இறைவேண்டலில் இறையனுபவம் இன்றியே அவர்கள் இருந்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருபோதும் இறைவேண்டலை அவர்கள் கைவிட்டதில்லை.

கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி இறைவேண்டல் தடைகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இறைவேண்டல் என்னும் போராட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமென்றால், இறைவேண்டல் பற்றிய தவறான சிந்தனைகளை அகற்ற வேண்டும் (கதிம 2726). சிலர் இறைவேண்டலைத்தலைவலி மாத்திரைபோலக் கருதுகின்றனர். தலைவலி வரும்பொழுது மாத்திரையைப் பயன்படுத்துகிறோம்; தலைவலி போனவுடன் மாத்திரையைப் பயன்படுத்துவதில்லை. இறைவேண்டல் அப்படியல்ல; அது நம் அருள்வாழ்வின் உயிர்மூச்சு. எனவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும். இறைவேண்டலை உளவியல் நிறைவுதரும் உத்தியாகவோ, மனத்தை ஒருங்கிணைக்கும் தியானமாக மட்டுமோ நாம் சுருக்கிவிடக்கூடாது என்று கற்பிக்கிறது நமது திரு அவை.

சில வேளைகளில் இறைவேண்டல் தொடர்பான சலிப்போ அல்லது சோர்வோ நமக்கு நேரிடலாம். அவ்வேளைகளில் நாம் மனம் சோர்ந்துவிடக்கூடாது. இப்போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மறைக்கல்வி தரும் மருந்துகள் என்ன தெரியுமா? தாழ்ச்சி, நம்பிக்கை, தொடர் முயற்சி ஆகியவையே (கதிம 2728). திரு அவையின் புனிதர்கள் நமக்கு முன்னால் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

இறைவேண்டலில் மறையனுபவம் பெற்ற புனித அவிலா தெரசாவின் துறவு நாள்களின் தொடக்கத்தில் பராக்குகள், ஆர்வமின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். அவரது நாற்பதாவது வயதில் அருள்வாழ்வின் இரண்டாம் மனமாற்றம் நிகழ்ந்தது. அவரது இறைவேண்டல் செழுமை பெற்றதோடு, அவரது துறவற அவையின் அனைத்துச் சகோதரிகளையும் இறைவேண்டலில் ஊக்குவிக்கும் அருளையும் பெற்றுக்கொண்டார். அதன் பின்னரும் இறைவேண்டலில் தடைகள் வராமலில்லை. ஆனால், அவற்றை உடைத்தெறியும் ஆற்றலும் மனந்தளராமையும் அவரிடம் வந்துவிட்டன. எனவே, மாபெரும் புனிதையாக வாழ்ந்தார்.

புனித அவிலா தெரசாவைத் தன் ஆன்மிக அன்னையாகக் கருதிய புனித சிலுவை யோவான்தான்ஆன்மாவின் இருண்ட இரவுஎன்னும் சொல்லாடலை அறிமுகப்படுத்தியவர். சில வேளைகளில் நமது இறைவேண்டல் நேரங்கள் வறண்டதாகவோ, இறைப்பிரசன்னம் இல்லாததாகவோ இருக்கின்றன. இறைவன் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்னும் மயக்க நிலை நேரலாம். ஆனாலும், அத்தகைய வேளைகளிலும் இறைவன் நம்மோடுதான் இருக்கிறார். இத்தகைய அனுபவங்களைக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம். இந்தப் போராட்டங்களே நம்மைத் தூய்மைப்படுத்தி, இறைவனிடம் நாம் நெருங்க உதவுகின்றன என்கிறார் புனித சிலுவை யோவான்.

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய் (1திமொ 6:12) என்று திமொத்தேயுவை ஊக்குவித்தார் பவுலடியார். நம் இறைவேண்டல் வாழ்வுக்கும் அது பொருந்தும். நம் வாழ்வே ஒரு போராட்டம்தான். அதைக் கண்டு சோர்ந்துவிடாமல், தொடர்ந்து போராடுவதே வெற்றி. இறைவேண்டலும் அப்படித்தான். இறைவனோடு ஒன்றிக்க நாம் போராட வேண்டும். அந்தப் போராட்டமே ஓர் இறைவேண்டல்தான்; அந்தப் போராட்டமே ஒரு வெற்றிதான்.

news
ஆன்மிகம்
இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்வோம்!

ஈஸ்டர் ஞாயிறு, சாவின்மீது கிறிஸ்து அடைந்த வெற்றியைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான நாள். உலக வரலாற்றில் இதுபோன்று இருந்ததில்லை; இனியும் இருக்கப்போவதும் இல்லை. இயேசு கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் கிறித்தவர்களாகிய நாம் நம்புகிறோம். மூன்றாவது நாளில் கல்லறை காலியாக இருந்தது என்றும், கல்லறை உடைகள் இன்னும் உள்ளன என்றும் நம்புகிறோம்.

இயேசு, இதற்குமுன் யாரும் அறிந்திராதபடி வியத்தகு முறையில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். வானதூதர்கள் கல்லை அப்புறப்படுத்துவதற்கு முன்பே அவர் கல்லறைக்கு வெளியே இருந்தார் (மத் 28:2). அவர் ஏற்கெனவே உயிர்த்தெழுந்துவிட்டார். பின்னர் அவர் உயிருடன் செயல்பட்டார்!

திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இதோமகதலா மரியாவுக்கும் வேறொரு மரியாவுக்கும் தோன்றினார் (மத் 28:1,9,10). இயேசு தம் கைகளையும் விலாவையும் சீடர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் (யோவா 20:20,27). “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டு அவர்களுடன் உண்டார் (லூக் 24:41,43). எம்மாவு சீடர்களுக்குத் தோன்றி அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் கண்களைத் திறந்தார் (லூக் 24:13-31). ‘தம்முடைய தலைமைச் சீடரான பேதுருவுக்கும், பின்னர் 12 திருத்தூதர்களின் உள்வட்டத்திற்கும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்-சகோதரிகளுக்கும், பின்னர் யாக்கோபுக்கும் தோன்றினார். இறுதியாக, ஆரம்ப கால இயேசுவின் திரு அவையைத் துன்புறுத்திய எனக்கும் தோன்றினார்என்று பவுல் கூறுகிறார் (1கொரி 15:5-7). இவை யாவும் திருவிவிலியத் தரவுகளின் தொகுப்பு. உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.

மனித வரலாற்றில் நடந்த ஓர் உண்மையான நிகழ்வு இது. கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் (1கொரிந்தியர் 15:3,4). இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய வரலாற்றுத் தரவுகள், திருவிவிலியம் வாயிலாக உண்மையானது மற்றும் மேன்மையானது என அறிய முடிகிறது. கிறித்தவம் பிறந்தது கிறிஸ்து பிறந்ததால் அல்ல; அவர் நம் பாவங்களுக்காகச் சிலுவையில் பரிகாரப் பலியாகி, அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததால்தான். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14) என்கிறார் பவுல். உயிர்த்தெழுதல் இல்லையென்றால், இயேசு இறந்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை. இயேசு இறந்தோரிலிருந்து உயிர்த்தெழவில்லை என்றால், மரணம் அவர்மீது அதிகாரம் கொண்டு அவரைத் தோற்கடித்துவிட்டது என்றாகி விடும்.

மரணத்திற்கு இயேசுவின் மீது அதிகாரம் இருந்திருந்தால், அவர் கடவுளின் மகனாக இருந்திருக்க முடியாது. இயேசு கடவுளின் மகனாக இல்லையென்றால், அவர் பாவங்களுக்காக ஒரு முழுமையான பலியாகத் தம்மை ஒப்படைத்திருக்க முடியாது. பாவங்களுக்காக இயேசு ஒரு முழுமையான பலியைச் செலுத்த முடியாவிட்டால், நம்முடைய பாவங்கள் கடவுளுக்கு முன்பாக முழுமையான பரிகாரம் செலுத்தப்படவில்லை என்றால், நாம் இன்னும் பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, இயேசு உயிர்த்தெழவில்லை என்றால், அவரால் நம்மைக் காப்பாற்ற முடியாது. உயிர்த்தெழுதல் என்கின்ற கொள்கை இல்லையென்றால், முழுக் கிறித்தவ வாழ்க்கையும் நகைப்புக்கு உரியதாய் இருந்திருக்கும். மேலும், எதிர்நோக்குவதற்கு இந்த வாழ்க்கையைத் தாண்டி நமக்கு வேறெதுவும் இருந்திருக்காது.

நமக்காக இறப்பதற்கு மட்டுமல்ல, நமது பாவங்களுக்கான தண்டனையான உடல், ஆன்மிக மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து முழுமையாகவும் இறுதியாகவும் வெல்லப்படும் வகையில் நமக்காக மரணத்தை எதிர்கொண்டு, அதைக் கொல்லும் ஒருவர் நமக்குத் தேவை. அவர்தாம் இயேசு கிறிஸ்து! அவரே சிலுவையில் மரித்தபோது, தம்மை நம்புகிற அனைவரின் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார்.

இயேசு தம்மில் உள்ள அனைவருக்காகவும் மரணத்தின் எதிர்பார்ப்பு, மரண அனுபவம் மற்றும் மரணத்தின் விளைவு ஆகியவற்றை என்றென்றும் முறியடித்தார். “ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!” (1கொரி 15:57) என்று பவுல் கூறுவதில் ஆச்சரியமில்லை.

கிறித்தவம் 2000 ஆண்டுகால விமர்சனத்தைத் தாங்கி நிற்கிறது. நாசரேத்து இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் உண்மையான, நம்பகமான மற்றும் வரலாற்றுக் கணக்கு. அவர் சாதாரண மனிதர் அல்லர்; அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக முழு உலகத்தின் வரலாற்றின் போக்கையே மாற்றிய ஒரு மனிதர்; தெய்வீகத் தோற்றம் மற்றும் மகிமையைக் கொண்ட ஒரு மனிதர்!

எனவே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பார்வையை நாம் இழந்தால், எல்லா வகையான கேள்விகளாலும் முற்றுகையிடப்படுவோம். சோதனை மற்றும் நம்பிக்கையின்மையால் மூழ்கிவிடுவோம். நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்லலாம்; ஆனால், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் நாம் பரிதாபத்துக்குரியவர்கள். ஆகவே, உயிர்த்தெழுப்பப்பட்ட மீட்பரின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவாகவும் உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். அப்போது கிறிஸ்து அடைந்த வெற்றியை நாமும் அடைவோம்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதே நம் வாழ்வின் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும். ஏனெனில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மேன்மையான காரியம். எனவே, நற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும் இயேசுவின் மரணத்தை மட்டுமல்ல, உயிர்த்தெழுதலையும் நினைவுகூரக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

இந்த உயிருள்ள உணர்வால் நாம் தூண்டப்படும்பொழுதுஎனக்கு உயிர்த்தெழுந்த மீட்பர் இருக்கிறார்; அவர் எனக்காகத் தந்தை கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்; வாழ்க்கையிலோ அல்லது மரணத்திலோ எதுவும் என்னை அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாதுஎன்கிற நம்பிக்கையின் ஒளி நம்மில் பிறக்கும். ஆகவே, இயேசு வரும்வரை அவரது மரணத்தை அறிக்கையிடுவோம்; அவரது உயிர்ப்பையும் எடுத்துரைப்போம். இதுவே நமது நம்பிக்கையின் மறைப்பொருள்!

news
ஆன்மிகம்
இரக்கத்தின் தூதர்கள் நாம்!

இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.  எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம் (2கொரி 5:18,20).

உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமையைஇறை இரக்கத்தின் ஞாயிறுஎனக் கொண்டாடுகிறோம். மனிதர்கள் கையிட்டுக் கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்குக் கடவுள் மனுக்குலத்தோடு நெருக்கமாகிறார். இறைவனின் அளப்பரிய இரக்கமே இந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுடைய இரக்கத்தை நாம் அனுபவிப்பதும் அறிவிப்பதும் எப்படி? இப்பணியைச் செய்வதற்காகச் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டஇரக்கத்தின் தூதர்கள்யார்? என்னும் கேள்விகளுக்கு விடை தேடுவதுடன், நம் குடும்பங்களிலும் பங்குத்தளங்களிலும் சமூகத்திலும் நாம் அனைவருமேஇரக்கத்தின் தூதர்கள்ஆவோம்.

) ‘இரக்கத்தின் தூதர்கள்- என்ன? யார்? ஏன்?

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் (2015-2016) ஒரு நிகழ்வாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016, பிப்ரவரி 10 அன்று, 800 அருள்பணியாளர்களைஇரக்கத்தின் தூதர்கள்என்று நியமித்து உலகெங்கும் அனுப்பினார். இவர்களில் 17 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 அருள்பணியாளர்கள்  இரக்கத்தின் தூதர்களாகப் பணியாற்றுகிறார்கள்: 1. அருள்பணி. அருள் அம்புரோஸ் (பாளையங்கோட்டை), 2. அருள்பணி. நித்திய சகாயம் ஆண்டனி (கப்புச்சின் சபை), 3. அருள்பணி. லியோ வில்லியம் (சேலம்),  4. அருள்பணி. ஜோசப் மைக்கேல் செல்வராஜ் () ஜோமிக்ஸ் (பாளையங்கோட்டை), 5. அருள்பணி. பன்னீர்செல்வம் செல்வராஜ் (சேலம்),  6. அருள்பணி. யேசு கருணாநிதி (மதுரை).

இவர்களுக்கு இரண்டு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன) ‘இரக்கம்பற்றிய சிறப்பு மறையுரைகள் ஆற்றுவது) சிறப்பு ஒப்புரவு அடையாளக் கொண்டாட்டங்களை நிகழ்த்துவது.

இந்தக் கொண்டாட்டத்தில் திருத்தந்தை மட்டுமே மன்னிக்கும் அதிகாரத்துக்கு உள்பட்ட ஐந்து பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டது. ‘புனிதப் பொருள் அவமதிப்புச் செய்தல் - நற்கருணையை அதற்குரிய இடத்திலிருந்து அகற்றுதல் அல்லது அதற்குரிய மதிப்பைத் தராமல் இருத்தல், திருத்தந்தைக்கு எதிராகக் கை ஓங்குதல், ஆறாம் கட்டளைக்கு எதிரான பாவத்தில் தன்னோடு உடனிருந்தவரை அருள்பணியாளரே மன்னித்தல், ஒப்புரவு அருளடையாளத்தின் முத்திரையை உடைத்தல், அதாவது ஒப்புரவு அருளடையாளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒன்றை அருள்பணியாளர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றொருவரிடம் வெளிப்படுத்துதல் மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தில் அருள்பணியாளர் அல்லது பாவ அறிக்கை செய்பவர் பகிர்ந்துகொள்வதை ஒலி அல்லது ஒளி வடிவில் பதித்து, அதைப் பரவலாக்கம் செய்தல் என்பவையே சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்ட பாவங்கள்.

மேற்காணும் ஐந்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தினை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். எனினும், ‘இரக்கத்தின் தூதர்கள்என்னும் அருள்பணியாளர்கள் அவர்களுக்குரிய சிறப்பு நிலையைப் பெற்றுள்ளார்கள்.

2022-ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் உரோமையின் திருப்பேராயங்களை நெறிப்படுத்தும்நற்செய்தியை அறிவியுங்கள்!’ (‘ப்ரெதிகாத்தே எவான்ஜெலியும்) என்னும் ஆணையை வெளியிட்டார். அதில்இரக்கத்தின் தூதர்கள்அகில உலகத் திரு அவையில் ஆற்ற வேண்டிய நற்செய்திப் பணியை வலியுறுத்துவதோடு, இவர்களைத் திரு அவையின் அதிகாரப்பூர்வ சிறப்புப் பணியாளர்களாக அறிவிக்கிறார்: “இறை இரக்கத்தை அறிவிப்பதன் வழியாகவே நற்செய்தி அறிவிப்பு நடக்கிறது. இரக்கத்தின் தூதர்கள் ஆற்றுகிறச் சிறப்புப் பணி நற்செய்தி அறிவிப்புக்குத் துணை செய்கிறது (எண். 59.2).

எதிர்நோக்கு ஏமாற்றம் தருவதில்லைஎன்னும் யூபிலி 2025 அறிவிப்பு ஆணையிலும் இவர்களுடைய பணியின் முக்கியத்துவத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார்: “கடந்த சிறப்பு யூபிலி ஆண்டில் நான் இரக்கத்தின் தூதர்களை ஏற்படுத்தினேன். அவர்கள் ஒரு முதன்மையான பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்நோக்கைப் புதுப்பிப்பதன் வழியாகவும் திறந்த மனத்தோடும் நொறுங்குண்ட உள்ளத்தோடும் தங்களிடம் வருகிற பாவிக்கு மன்னிப்பை வழங்குவதன் வழியாகவும் வருகிற யூபிலி ஆண்டில் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வார்களாக! தந்தையின் இரக்கத்தினால் தூண்டப்படும் இதயம் நிறை எதிர்நோக்கை வழங்குவதால் ஒப்புரவின் ஊற்றாகவும், நல்ல எதிர்காலத்தைக் காண்கிற உற்சாகத்தை நமக்குத் தருபவர்களாகவும் விளங்குவார்களாக! அவர்களுடைய இந்த மேன்மையான பணியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆயர்களை அழைக்கிறேன். எதிர்நோக்குச் சோதிக்கப்படும் இடங்களுக்கு - சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், மக்களின் மாண்பு சிதைக்கப்படும் இடங்கள், வறுமையும் சமூகச் சீரழிவும் மிகுந்திருக்கும் இடங்களுக்கு  அவர்களை அனுப்புங்கள். இந்த யூபிலி ஆண்டில், கடவுளின் மன்னிப்பையும் ஆறுதலையும் பெறுகிற வாய்ப்பு யாருக்கும் மறுக்கப்பட வேண்டாம் (எண். 24).

தூதர்கள்என்னும் சொல்லைத் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டியக்கத்திற்கான மாமன்றத்தின் இறுதி ஆவணத்தில்கூட்டியக்கத்தின் தூதர்கள்என்று பயன்படுத்தி அனைவரையும் இணைந்து பயணிக்க அழைக்கிறார் (கூட்டியக்கத்திற்கான மாமன்றம், இறுதி ஆவணம், எண்கள் 9, 11, 155).  இரக்கத்தின் தூதர்களுடைய சிறப்பான பணியைப் பின்வருமாறு வரையறுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்: “மன்னிப்பைத் தேடிவருகிற அனைவரையும் வரவேற்கும் தந்தையைப்போல இருங்கள்! நீங்கள் அனைவரும் வரவேற்கிற தந்தையின் அடையாளங்கள் (இரக்கத்தின் முகம், 18). ஒப்புரவு அருளடையாளத்தையும் தாண்டி, இரக்கத்தை அறிவித்தல், மேய்ப்புப்பணியில் உடனிருத்தல், இரக்கத்தின் பண்பாட்டை வளர்த்தல் போன்றவற்றில் ஈடுபட அவர்களை அழைக்கிறார்.

) கடவுளின் பெயர்இரக்கம்

விப 34:6-இல் ஆண்டவராகிய கடவுள் தம் பெயரை மோசேவுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வில்ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம்கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர்என்று அறிவிக்கிறார். நீதி அல்லது அதிகாரத்தை அடிப்படையாக அல்ல; மாறாக, இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது ஆண்டவருடைய பெயர். இரக்கம் என்பது கடவுளுடைய பண்புகளுள் ஒன்று அல்ல; மாறாக, அது கடவுளுடையதான்மைஅல்லதுஅடையாளம்ஆகும்.

திருவிவிலியத்தின் பல பகுதிகள் ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்திற்குச் சான்றாக அமைகின்றன. தன் குழந்தையை மறந்துபோகாத ஒரு தாயின் அன்பைப் போல கடவுளின் அன்பு இருக்கிறது (எசா 49:15). ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா 136) என்று கடவுளின் இரக்கத்தை நமக்கு நினைவுறுத்துகிறது. கடவுள் நீதியின்படி தங்களைத் தண்டித்துவிட்டார், பாபிலோனிய அடிமைத்தனத்திற்குத் தங்களை விற்றுவிட்டார் என்று யூதா நாட்டினர் புலம்பும் நேரத்திலும்கூட எதிர்நோக்கு அங்கே ஒளிர்கிறது: “ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!” (புலம்பல் 3:22-23).

புதிய ஏற்பாட்டில்காணாமற்போன மகன்உவமை (லூக் 15) மற்றும்நல்ல சமாரியன்உவமை (லூக் 19) என்னும் இயேசுவின் போதனைகள் கடவுளின் பரிவுள்ளத்தை எடுத்துரைப்பதோடு, கடவுளைப்போல பரிவு காட்டவும் நம்மை அழைக்கின்றன. விபசாரத்தில் பிடிபட்ட பெண்மேல் இரக்கம் காட்டுகிறார் இயேசு (யோவா 8:1-11). பரிவு கொண்டு நோயுற்றவர்களைக் குணமாக்குகிறார் (மத் 14:14). எருசலேமுக்காகக் கண்ணீர் விடுகிறார் (லூக் 19:41-44). இறப்பு என்னும் எதார்த்தத்தின்முன் மானிடர் அனுபவிக்கிற வலுவற்ற நிலையை எண்ணிப் பார்த்து இலாசருக்காகக் கண்ணீர் விடுகிறார் (யோவா 11:35). இறுதியாக, சிலுவையில் தொங்கியபோது அனைவரையும் மன்னிக்கிறார் (லூக் 23:34).

ஆகவே, இயேசுவின் போதனைகளும் செயல்களும் அவரை ஓர் இரக்கத்தின் தூதராக நம் முன்னிறுத்துவதோடு, அவரைப்போல அனைவருக்கும் இரக்கம் காட்ட நம்மைத் தூண்டுகின்றன.

) இரக்கத்தில் கனியும் நீதி

திராட்சைத் தோட்டப் பணியாளர் உவமையில் (மத் 20:1-16), காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை பணிக்கு வந்தவர்களுக்குநீதியின்அடிப்படையில் ஒரு தெனாரியம் வழங்குகிறார் நிலக்கிழார். மாலை 5 மணிக்கு வந்து வெறும் ஒரு மணி நேரமே வேலை செய்தவர்களுக்குஇரக்கத்தின்அடிப்படையில் அவர் ஒரு தெனாரியம் வழங்குகிறார். நீதிக்கும் இரக்கத்திற்கும் பொருந்தாமை அல்லது முரண் இருப்பதை நாம் காண்கிறோம். கடவுள் ஏன் ஒருசிலரை நீதியின் அடிப்படையிலும், இன்னும் சிலரை இரக்கத்தின் அடிப்படையிலும் நடத்துகிறார்? என்னும் கேள்வி நம்மில் எழுகிறது.

மேலும், ‘காணாமற்போன மகன்உவமையில் (லூக் 15) இளைய மகன் திரும்பி வந்தவுடன் தந்தை விருந்து அளித்து மகிழ்கிறார். தந்தையின் இச்செயல் மூத்த மகனுக்கு நெருடலாக இருக்கிறது. நினிவே நகர்மேல் இரக்கம் காட்டிய கடவுள்மேல் கோபம் கொண்ட இறைவாக்கினர் யோனாபோல (யோனா 4:1-11) தந்தையின்மேல் கோபம் கொள்கிறார் மூத்த மகன். வீட்டுக்குள் நுழைய மறுக்கிறார். வீட்டுக்கு வெளியே வந்து அவரை உள்ளே அழைக்கிற தந்தைநாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டியது முறையே!’ என்கிறார். நீதியின்படிமுறை இல்லைஎன்று நாம் நினைப்பது இரக்கத்தின் கண்கொண்டு பார்க்கும்போது முறை என்றாகிறது.

நம் உறவு நிலைகளில் பல நேரங்களில் நாம் நீதியின் அடிப்படையில் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் கோபமும் வன்மமும் பகைமையும் பாராட்டுகிறோம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இரக்கம் காட்டுவது நீதிச் செயலே. மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு வந்தவர் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார் என்று கணக்கு பார்ப்பது நீதியான செயலே. அதே வேளையில், அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஒரு தெனாரியம் தேவை என்று இரக்கம் காட்ட வேண்டியதும் நீதியின் செயலே. அவரிடம் கணக்குப் பார்க்க வேறு ஒன்றும் இல்லை. சொத்துகளை இழந்து பசியோடு வீடு திரும்புகிற இளைய மகன் கைகள் வெறுமையாயிருக்கக் கண்டு அவர்மேல் கோபம் கொள்வது நீதியான செயலே. ஆனால், அவர்மேல் கோபம் கொள்வதால் அவர் சொத்துகளை மீண்டும் கொண்டு வந்து சேர்த்துவிடுவாரா? வலுவற்ற நிலையில் நிற்கிற அவர்மேல் இரக்கம் காட்டுவதும் நீதிதானே!

இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்!” என்று ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்கள்மேல் சில நேரங்களில் கோபம் கொள்கிறார் (எரே 15:6). வலுவற்றவர்கள்மேல் இரக்கம் காட்டும்போது நாம் வலுவற்றவராகிறோம். நல்ல சமாரியன் உவமையில், சாலையில் குற்றுயிராய்க் கிடந்தவரைக் கண்டு கழுதையிலிருந்து கீழே இறங்குகிற சமாரியர் தன்னையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகிறார். ஏனெனில், அவரையும்கூட கள்வர்கள் வந்து கொள்ளையிட நேரிடலாம். ‘இவருக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என நினைத்தால் அது வியாபாரம். ஆனால், ‘இவருக்கு இதைச் செய்யாவிட்டால் அவருக்கு என்ன ஆகும்?’ என நினைத்தால் அது பரிவு. நல்ல சமாரியர் பரிவு கொள்கிறார்.

இன்று நம் வாழ்வில் நாம் இரக்கம் காட்டும்போது நாம் ஏமாற்றப்படலாம்; மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்; மற்றவர்கள் நமக்குப் பதிலிரக்கம் காட்டாமல் போகலாம்; இருந்தாலும் நாம் இரக்கம் காட்ட வேண்டும்.

) நாம் அனைவரும் இரக்கத்தின் தூதர்களே!

திருத்தந்தையால் அனுப்பப்பட்ட அருள்பணியாளர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே இரக்கத்தின் தூதர்களே. ஒருவர் மற்றவரை மன்னிக்கும் போதும், பரிவு, கனிவு என்று நம் கரங்களை வலுவற்றவர்கள் நோக்கி நீட்டும்போதும், பகைமையால் புரிதலின்மையால் அந்நியப்பட்டு நிற்பவர்கள் இடையே ஒப்புரவை ஏற்படுத்தும்போதும் நாம் அனைவரும் இரக்கத்தின் தூதர்களே.

இறை இரக்கத்தின் திருநாளைக் கொண்டாடுகிற நாம், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட இரக்கத்தை ஒருவர் மற்றவருக்கு வழங்க முயற்சி செய்வோம். ஏனெனில்நீரும் போய் அவ்வாறே செய்யும்!” (லூக் 10:37) என்பதே இயேசுவின் கட்டளையாக இருக்கிறது.

news
ஆன்மிகம்
வாழ்ந்து வழிநடத்தும் உயிர்த்த இயேசு!

அண்மையில் ஒரு பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. புத்தரின் இறுதி நாள்கள். அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தன் அழுதவண்ணமாக இருந்தார். புத்தர் அவரிடம், “கலங்காதே ஆனந்தா! மரணத்திற்குப் பின்னும் நான் உங்களோடுதான் இருப்பேன்என்றாராம். உலக வரலாற்றிலும் மானுடம் தொடர் சங்கிலியாகப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருவனுடைய பெற்றோர் இறந்தும் இறவாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், தங்கள் பிள்ளைகள் வழியாக வாழ்ந்துகொண்டு, தங்கள் நற்பண்புகளின் வழியாக வழிகாட்டுகின்றனர். பிற சமயத்தவரும்கூட தங்கள் முன்னோர்களின் உடனிருப்பை, முக்கியமாக அவர்கள் இறந்த நாள்களில் நினைவு கூர்ந்து, அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைக் கொண்டு தர்ப்பணம்செய்கிறார்கள். யூதச் சமயத்திலும்கூடமேன்மை பொருந்திய நம் முன்னோர்களை மறவாது புகழஞ்சலி செலுத்துவோம் (சீராக் 44:1) என்று சீராக்கின் ஞானாகமம் கூறுகின்றது. இதனடிப்படையில் நற்செய்தி நூல்களும், இறைவன் இயேசு மண்ணில் பிறந்து, மக்களுக்காகத் தம்மைச் சிலுவையில் கையளித்து, உயிர்த்து எழுந்து, நம்முடன் இருந்து செயல்பட்டு நம்மை வழிநடத்துகிறார் (மாற் 16:20) என்பதை எடுத்துரைக்கின்றது.

திரு அவை ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடுகின்றது. இது ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுக் கொண்டாட்டமல்ல; நமது வாழ்வை மறுவாசிப்புச் செய்ய அழைப்பு விடுக்கும் ஆன்மாவின் வசந்தகாலம். இதன் சிறப்பைச் சுட்டிக்காட்டும் விதமாகப் புனித அத்தனாசியுஸ், கிறிஸ்துவின் பாஸ்கா விழாவானது மற்ற கிறித்தவ விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக விளங்குகிறதுஎன்றார். “பரிவுமிக்க நம் கடவுள், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்து, நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார் (1 பேது 1:3) என்கிறார் பேதுரு.

மக்களின் கலங்கரை விளக்கான இயேசு

இவ்வுலகில் தோன்றியப் பல கோடி மக்களிடையே விண்மீன்களாகத் தோன்றி மறைந்தவர் பலர். யாரும் பிறர் வாழத் தனக்குத் தெரிந்து தன் உயிரை இழக்கத் தயாராக இருப்பதில்லை. ஆனால், இயேசு ஒருவர் மட்டுமே இறப்பையும் எதிர்கொள்ளத் தயங்கவில்லை. அவர் சாவு நமக்கு வாழ்வானது (His death has become our life). இயேசு தன்னிலை விளக்கமாக, “வாழ்பவரும் நானே, நான் இறந்தேன்; ஆயினும் இதோ, என்றென்றும் வாழ்கின்றேன் (திவெ 1:18) என்கிறார். இன்னும் இரத்தினச் சுருக்கமாக, “நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள் (யோவா 14:19) என்று கூறுகின்றார். “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் (யோவா 8:12) என்று தாம் உலகிற்கு ஒளிவிளக்காகத் திகழ்வதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

திருவிவிலியத்தில் உயிர்த்தக் கிறிஸ்துவைச் சந்தித்தவர்களுள் எம்மாவு சீடர்களும் அடங்குவர். அவர்கள் இதயமும், ஏன் அவர்கள் பயணித்த வேளையில், காரிருள் சூழ்ந்திருக்க இயேசு அவர்கள் முன்னின்று ஒளிரும் தீபமாக வழிநடத்தினார் (லூக் 24:29-32). மேலும், அவரது சீடர்களுக்கும் அப்பாற்பட்டுத் தங்கள் இறையனுபவத்தால் கிறிஸ்துவைச் சந்தித்து வழிநடத்தப்பட்ட எண்ணிலடங்காப் பலரைத் திரு அவை அங்கீகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் திசைமாறிய பறவையாக, பாவச் சேற்றிலே வாழ்ந்த புனித அகுஸ்தினார், “இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, பகலில் நடப்பதுபோல் மதிப்புடன் நடந்துகொள்வோம். குடிவெறி, கூடா ஒழுக்கத்தைத் தவிர்ப்போம் (உரோ 13:12-13) என்ற இறைவார்த்தைகளால் தொடப்பட்டு, திரு அவையில் சிறந்த ஓர் ஆயராக, மறைவல்லுநராக மாறி, திரு அவையை வழிநடத்தினார் என்கிறது திரு அவை வரலாறு.

அதேபோன்று, 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உயிர்த்த ஆண்டவரை இறைவார்த்தையாலும் திருப்பலி வழியாகவும் தியானங்களில் அகவழிப் பயணம் செய்து இயேசுவைச் சந்தித்து மனமாற்றம் பெற்றார். இயேசுவின் இதயத்திற்கேற்ற மேய்ப்பனாக மாறி (எரே 3:15), சோர்ந்துபோயிருந்த திரு அவைக்குப் புத்துணர்வையும் புதிய வழிகாட்டுதலையும் அமைத்துக் கொடுக்கும் இயேசு சபையின்நிறுவுநராகி, திரு அவையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார் புனித லொயோலா இஞ்ஞாசியார்.

மறுபுறம், இயேசு கிறிஸ்துவின் வாழ்வாகும் வார்த்தையால் தொடப்பட்டவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வாழ்ந்த டெரிக் ஃபோன்ஹோவர் என்னும் பிரிவினை சபை அருள்பணியாளர். அக்காலகட்டத்தில் நாசிசக் கொள்கையால் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அடால்ப் ஹிட்லருக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் சிறையில் பல துன்பதுயரங்களை அனுபவித்து 1945-இல் தூக்கிலிடப்பட்டார் என்பதைகிறித்தவத்திற்கு உன் உயிர்தான் விலை (The cost of discipleship) என்னும் புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

 கால வரலாற்றின் நீரோட்டத்தில் இயேசுவுடன் ஒன்றாகி, மக்களுக்காக வாழ்ந்து இறந்தோர் ஏராளம். அன்னை தெரசா, அருள்சகோதரி இராணி மரியா, பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, தேவசகாயம், ஸ்டான் சுவாமி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற மாமனிதர்களையும் இயேசு தமது வார்த்தைகளால் ஆட்கொண்டார் என்பதும் வரலாறு. நாமும் இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு, அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம்.

இயேசு திருப்பணியாற்றிய நாடுகளில் யோர்தானும் ஒன்று. அங்குப் புறப்படும் யோர்தான் ஆறு, யோர்தான் பள்ளத்தாக்கைச் செழிப்படையச் செய்து, கலிலேயா கடலில் மீண்டும் சங்கமமாகி, செல்லுமிடமெல்லாம் பசுமைப் புரட்சியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், யோர்தான் ஆற்றில் பிரியும் மற்றொரு நீரோட்டமோ சாக்கடலில் (Dead Sea) கலந்து ஆண்டாண்டு காலமாகப் பயனற்றதாக, தனக்கு வரும் நீரை உயிர்வாழ முடியாத அளவிற்கு உவர்ப்புள்ளதாக மாற்றி, ஒன்றுக்கும் உதவாததாக (சாக்கடல் = சாவும் கடலாக) இன்றும் மாற்றிக் கொண்டுள்ளது. உயிர்த்த ஆண்டவரிடம் ஆற்றல் பெற்ற தெய்வீக நீரோட்டம் நம்மில் எவ்வாறு செயல்படுகின்றது? உயிராற்றல் மிக்க நீரூற்றாகவா? அல்லது உயிர்வாழ முடியாத உவர்ப்புள்ளதாக உள்ளதா?

ஆப்பிரிக்கப் பாலைவனத்தில்ஜெரிக்கோ ரோஸ்என்ற தாவரம் உண்டு. தண்ணீர் இல்லாவிட்டாலும், மணலுக்குள் தன்னையே புதைத்துக் கொண்டு தூக்க நிலையிலேயே பல ஆண்டுகள் உயிர் வாழும். மழைத்துளி விழுந்த மறுநிமிடமே துளிர்க்க ஆரம்பித்து விடும். இதற்குஉயிர்த்தெழும் தாவரம்என்று மற்றொரு பெயரும் உண்டு. இவ்வாறுபட்டுப்போன செடியேஉயிர்க்கும்போது, இயேசு நமக்காய் உயிர் தந்து, நம்மை மீட்டு, புதுவாழ்வுக்கு வழிநடத்தும் தீபமாக இருக்கின்றார் என்பதை மகிழ்வுடன் ஏற்போம். உயிராற்றல் மிக்க இயேசுவைச் சந்தித்து, எதிர்நோக்கின் பயணிகளாய் வாழ்ந்து, 2025-ஆம் யூபிலி ஆண்டின் கருப்பொருளாகிய மன்னிப்பு என்னும் பண்பிற்குச் செயல்வடிவம் கொடுப்போம். உயிர்த்த ஆண்டவர் வழங்கும் அமைதியின் தூதர்களாக மாறுவோம். ‘அல்லேலூயாகீதம் ஒலிக்கும் மக்களாக வாழ்வோம்.

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்!

news
ஆன்மிகம்
அவர்தம் காயங்களால் குணமடைந்துள்ளோம்!

நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைப் பற்றிய தரவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நற்செய்தியாளரும் தனித்துவமான விவரங்களையும் கண்ணோட்டங்களையும் வழங்குகின்றனர். குறிப்பாக, யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் விலாப்பகுதியில் குத்தப்பட்ட நிகழ்வைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் (யோவா 19:31-37). கூடுதலாக, உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம்முடைய சீடர்களுக்குத் தம் கைகள், கால்கள் மற்றும் விலாவைக் காட்டி, அந்தக் காயங்களைத் தொடும்படி அவர்களை அழைப்பது (லூக் 24:39) மற்றும் இயேசுவின் ஐந்து மகிமையான காயங்களின் முக்கியத்துவத்தை (யோவா 20: 20,27) மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் காயங்களைப் பற்றித் தியானிப்பது நமது நம்பிக்கையையும் ஆன்மிகத்தையும் ஆழப்படுத்தும்.

ஐந்து மகிமையான காயங்களுக்கான காரணங்கள்

புனித தாமஸ் அக்குவினாஸ் ஐந்து மகிமையான காயங்களுக்கான ஐந்து காரணங்களை விளக்குகிறார்:

ஐந்து மகிமையான காயங்கள் இயேசு கிறிஸ்துவின் மகிமையைக் குறிக்கின்றன. புனித பீட் (St. Bede) கூறுவார்: “கிறிஸ்து தமது காயங்களைத் தக்க வைத்துக்கொள்வது, அவற்றை அவரால் குணப்படுத்த முடியாது என்பதால் அல்ல; மாறாக, அவர் அவற்றை அவரது வெற்றியின் நிலையான கோப்பையாக அணிந்திருக்கிறார்.”

இயேசுவின் மகிமையான காயங்கள் திருத்தூதர்களின் இதயங்களை வலுப்படுத்தி, அவருடைய உயிர்த்தெழுதலில் அசைக்க முடியாத நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது (லூக் 24:40).

அவருடைய மகிமையான காயங்களைத் தந்தையாகிய கடவுளிடம் ஒப்படைத்து, நமக்காகத் தொடர்ந்து பரிந்துபேசுகிறார் என்பதன் அடையாளம்.

மகிமையான காயங்கள் அவருடைய இரத்தத்தில் மீட்கப்பட்டவர்கள் எந்தளவு இயேசுவின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த மகிமையான காயங்கள் மூலம் இறுதித் தீர்ப்பில் நம்பிக்கையற்றவர்களுக்குக் கிடைக்கும் நியாயமான கண்டனத்தின் அடையாளம்.

ஐந்து மகிமையான காயங்களைப் பற்றிய சிந்தனைகள்

1. ‘வலது கரத்தின் காயமே... அழகு நிறைந்த இரத்தினமே... அன்புடன் முத்தி செய்கிறேன்

ஆற்றல், மரியாதை மற்றும் செல்வாக்கைக் குறிப்பது வலது கரம். திருமணத்தில் வலது கரம் பிடித்தல், வலது கரத்தினால் ஆசிர்வாதம் செய்தல், கொடுத்தல் என்பதன் சிறப்பு அம்சங்கள் யாவரும் அறிந்ததே. எது இயேசுவின்  வலது கரத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? பணிவு இல்லாத ஆற்றல் - Power without service. நமது ஆற்றலை அல்லது அதிகாரத்தைச் சுய இலாபத்திற்காக அல்லது சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது இயேசுவின் வலது கரத்தைக் காயப்படுத்துகிறது. திருவிவிலியத்தில் சிறந்த உதாரணம்: நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடைய ஆற்றலால் பறிக்க நினைத்த ஆகாபு  அரசன். நாபோத் தன் திராட்சைத் தோட்டத்தைக் கொடுக்காததற்கு இரண்டு காரணங்கள்: 1) மூதாதையரின் உரிமைச் சொத்தை விற்பது ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிரானது.

2) சட்டப்படி அவருடைய சொத்தை விற்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஆகாபு செய்தது என்ன? நாபோத் இறந்து போனதைக் கேட்டு அவருடைய திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடைய உடைமையாக்கிக்கொள்ளப் புறப்பட்டுப் போனான் (1அர 21:16). ஆகாபின் இறுதி நிலை யாவரும் அறிந்ததே (1அர 22:38).

2. ‘இடது கரத்தின் காயமே, கடவுளின் திரு  அன்புருவே...... அன்புடன் முத்தி செய்கிறேன்

வலது கரம் பலத்தைக் குறிக்கிறது எனில், இடது கரம் பலவீனத்தை, வலுவின்மையைக்  குறிக்கும். புனித பவுல் ஊனியல்பின் செயல்பாடுகளைப் பட்டியலிடுவார்: “பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும் (கலா 5:19-21). என் பலவீனம் அல்லது வலுவின்மை என்ன? சினம் கொள்ளுதலா? பழிவாங்கும் எண்ணமா? மன்னிக்க இயலாத நிலையா? எது இயேசுவின்  இடது கரத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? நம் வலுவின்மை அல்ல; மாறாக, நம் வலுவின்மை எதிர்நோக்கு இல்லா வலுவின்மையாக (Weakness without hope) மாறும்பொழுது, ஆண்டவருடைய இடது கரத்திற்குக் காயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

புனித பவுலின் வலுவின்மை, தன் உடலில் தைத்த முள்போல் தன்னை வருத்திக் கொண்டிருந்த ஒன்று. அதை நீக்கியருளுமாறு மூன்று முறை கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால், ஆண்டவர் அதை எடுத்துவிடவில்லை; மாறாகஎன் அருள் உனக்குப் போதும்எனக் கூறி அந்த வலுவின்மையை வல்லமையாக மாற்றுகிறார் (2கொரி 12:7-10).

பேதுருவின் வலுவின்மை ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தல்; யூதாசின் வலுவின்மை ஆண்டவரைக் காட்டிக்கொடுத்தல். இதில் வேறுபாடு என்னவென்றால், தன் வலுவின்மையிலிருந்து வல்லமை பெற ஆண்டவரைத் தேடினார் புனித பேதுரு. ஆனால், யூதாஸ் வலுவின்மையில் தன்னை மட்டுமே தேடினான். அதன் விளைவு நாம்  அறிந்த ஒன்றே.

3. ‘வலது பாதக் காயமே, பலன் மிகத் தரும் நற்கனியே....... அன்புடன் முத்தி செய்கிறேன்

வலது பாதம் என்பது நீதியை நிலைநாட்ட ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கும். எது இயேசுவின் வலது பாதத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறதுஇரக்கமற்ற நீதி (Justice Without Mercy). நீதி மறுக்க முடியாத அளவுக்கு இன்றியமையாதது என்றாலும், “இரக்கமற்ற நீதி கொடுமைஎன்று புனித தாமஸ் அக்குவினாஸ் வேதனையுடன் குறிப்பிடுகிறார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணின் கதையில் நீதியைத் தாண்டிய இரக்கத்தின் ஆழமான விளக்கத்தைக் காணலாம் (யோவா 8:1-11). ஒருபுறம் நீதியின் பாதுகாவலர்களாகத் தங்களையே முன்னிறுத்தும் மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மோசேயின் சட்டத்தை நிலைநிறுத்த இரக்கமற்ற நீதியின்பால் நிற்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, வெறும் நீதியின் வரம்புகளைக் கடந்து இரக்கத்தின் உருவகமான இயேசு மறுபுறம் நிற்கிறார். இறுதியில் வென்றது இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் புதைக்கும் நீதி அல்ல; மாறாக, நீதியைத் தாண்டிய இரக்கம்: “நீர் போகலாம்.”

4. ‘இடது பாதக் காயமே, திடம் மிகத் தரும் தேனமுதே....... அன்புடன் முத்தி செய்கிறேன்

இடது பாதம் என்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்தவர்களின் சாட்சிய வாழ்வை முன்னிலைப்படுத்துகிறது. யோசுவாவின் யாவே இறைவனைக் குறித்த சாட்சியம் சிறந்த உதாரணம்: “ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24:15). எது இயேசுவின் இடது பாதத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? சான்றுபகராக் கிறித்தவ வாழ்வே! (Christian life without witness).

திருத்தூதர் பணிகள் 1:8 - “நீங்கள் என் சாட்சிகள்.”

யோவான் 1:1 - “நாங்கள் கண்ணால் பார்த்ததை, தொட்டு உணர்ந்ததை அறிவிக்கிறோம்.” 

திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்Not I have a mission, but I am the mission.” நானே ஒரு நற்செய்திப் பணியாக மாற வேண்டும். எப்பொழுதெல்லாம் கிறித்தவ வாழ்க்கை சாட்சிய வாழ்க்கையாக இல்லையோ, அப்பொழுதெல்லாம் இயேசுவின் இடது பாதத்தில் காயத்தை உண்டாக்குகிறோம்.

5. ‘திருவிலாவின் காயம் அருள் சொரிந்திடும் ஆலயமே....... அன்புடன் முத்தி செய்கிறேன்

இயேசுவுக்கு ஏற்பட்ட காயங்களில் மிகப்பெரிய காயம் திருவிலாவின் காயம். இயேசு தோமாவிடம்இதோ! என் கைகள்! இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்என்றார் (யோவான் 20:27). இயேசு தோமாவைப் பார்த்து விரலை அல்ல, கையை நீட்டிஎன் விலாவில் இடுஎன்கிறார். ஒருவேளை கை செல்லும் அளவுக்கு அந்தக் காயம் பெரியதாக இருந்திருக்கும். எது இயேசுவின் திருவிலாக் காயத்தைக் கொடுக்கிறது? விண்ணகம் இல்லா மண்ணக வாழ்வு - Earth without heaven. எப்பொழுதெல்லாம் நாம் வாழ்கின்ற மண்ணக வாழ்வு விண்ணகத்தை நோக்கியப் பயணமாக இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவருக்கு மிகப்பெரிய காயத்தினைக் கொடுக்கிறோம்.  “நீங்கள் இயேசு கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தீர்கள் என்றால், மேல் உலகில் உள்ளவற்றை நாடுங்கள் (கொலோ 3:1).

ஒரு பங்கில் 40 நாள் தவக்காலத்தை எப்படிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்பு: அலைப்பேசியின்றி 20 நாள்கள், புறணி பேசாமல் 20 நாள்கள். நாமும் முயற்சி செய்யலாமே?

அவர்தம் காயங்களால் குணமடைந்துள்ளோம் (1பேதுரு 2:24).

இதில் நகைமுரண் என்னவென்றால், அவருடைய காயத்திற்குக் காரணம் நாம். நம்மால் தான் அவருக்கு அவ்வளவு காயங்கள் உண்டாயின. எந்தக் காயத்தை நாம் அவருக்குக் கொடுத்தோமோ, அதே காயங்களின் வழியாக நம் காயங்களைக் குணமாக்குகின்றார்.

என் உடல், உள்ளம் சார்ந்த நோய்களைக் குணமாக்குகிறார். எப்படி? 1பேதுரு 1:18-19 - “உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசுமருவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.”

என் வாழ்க்கையில் உடல் - உள்ளம் சார்ந்த காயங்கள், தழும்புகள் இருக்கின்றன என்றால், அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஏனெனில், ‘என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவின் அடிமை என்பதைப் பறைசாற்றும் (கலா 6:17).

இறுதி நாளில் ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்கக்கூடிய ஒரே கேள்வி: ‘உன் தழும்புகள் எங்கே?’ (where are your wounds)).