கத்தோலிக்கத் திரு அவையின் உயிர் பாதுகாப்பு நிலைப்பாடு, அறிவியல் மற்றும் இயற்கை விதிகளில் வேரூன்றியுள்ளது. இது பகுத்தறிவின் அடிப்படையிலும் புரிந்துகொள்ளக் கூடியதாகும். நலிவடைந்த நபர்களுக்காகத் திரு அவை துணை நிற்பதைப் போலவே, அனைத்து மனிதரின் உயிரின் மாண்புக்காகவும், புனிதத்திற்காகவும் திரு அவை தொடர்ந்து வாதிடுகிறது.
உலகெங்கிலும்
உள்ள உயிர் பாதுகாப்பு இயக்கங்கள், மனித வாழ்வின் புனிதத்தன்மையைக் குறித்த
தெளிவை ஏற்படுத்த வெவ்வேறு தலைமுறையினர்மீது கவனம் செலுத்துகின்றன. இந்தக் கட்டுரையில்
நாம் இன்றைய ‘ஜென் Z\\\' (Gen Z) தலைமுறையினருக்கு உயிர் பாதுகாப்பு (Pro life) தொடர்பான சவால்கள் குறித்தும், திரு அவையின் போதனைகள்
குறித்தும் சுருக்கமாகப் பார்க்கலாம்.
இன்றைய
சூழலில், ‘ஜென் Z’ தலைமுறையினரின்
உண்மைக்கான தேடல், ஒரு சிலரைக் கத்தோலிக்கத் திரு அவைக்கு மீண்டும் வந்துசேர உதவியுள்ளது.
அவ்வாறு வந்தவர்கள் வாழ்வின் புனிதத்தை உணர்ந்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்கும் கருவுற்றது
முதல் இயற்கையான மரணம் வரை உள்ளார்ந்த கண்ணியம் உண்டு என்ற திரு அவையின் பார்வையுடன்
துணை நிற்கிறார்கள். மேலும், Youth United for Christ (YU4C), Jesus Youth, Youth Commission போன்ற அமைப்புகள் மனித உரிமைகள் மற்றும்
சமூக நீதி விழுமியங்களில் உறுதியாக வேரூன்றி நிற்கிறார்கள். எனவே, ‘ஜென் Z’ தலைமுறையினருக்கு
ஆன்மிகப் போதனைகள் மூலம் தொடர்ந்து வழிகாட்டுவதும், பிரச்சாரங்களில் பங்கேற்கச் செய்து,
சமூகத் திட்டங்களில் ஈடுபடுத்துவதும் திரு அவையின் பங்காகும்.
சவால்கள்: இன்றைய மதச்சார்பற்ற உலகம், ‘தனிநபர்
தேர்வு உரிமை’ (pro-choice)
சார்ந்த முன்னெடுப்புகளை ‘ஜென் Z’ தலைமுறையினரிடையே பரவலாக ஊக்குவிக்கிறது. கருக்கலைப்பு,
கருத்தடை, செயற்கை கருத்தரிப்பு (IVF), கருத்தரித்தலை ஒரு வணிகப் பொருளாக
மாற்றுதல், பாலியல் மற்றும் பாலின அடையாளங்கள் சார்ந்த கோட்பாடுகள் போன்றவற்றிற்கான
ஆதரவையும் நிதி உதவியையும் இவர்கள் மூலம் முன்னெடுக்கின்றனர்.
‘வாழ்க்கை
ஒருமுறைதான்’ (YOLO) என்ற கோட்பாட்டால் ஈர்க்கப்பட்ட இன்றைய
‘Gen Z’தலைமுறையினர் சமூக, கலாச்சார, பாரம்பரிய
அல்லது மதரீதியான நெறிமுறைகளுக்குள் கட்டுப்படாமல் ‘தேர்வுரிமை’ (Pro-choice) அடிப்படையில் வாழ்வதை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
கல்வி, தொழில், வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துணை
தேர்வு, பாலினம் மற்றும் பாலியல் அடையாளம் போன்றவைகளில் தங்கள் விருப்பப்படியே
முடிவெடுத்து வாழ வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
‘தேர்வுரிமை’ என்பது தனிநபர்களுக்கான ஒரு சுதந்திரமான தேர்வு அல்ல; மாறாக,
நவீன சிந்தனை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தைக் கொண்டு நிதி ஆதாயத்திற்காக ஒரு வணிகப்
பொருளாக விற்கப்படும் கருத்தாக்கமேயாகும். ‘FOMO’(விட்டுவிடப்படுவோமோ என்ற அச்சம்) எனும் கருத்தாக்கத்தை
ஏற்கெனவே ‘Gen Z’ தலைமுறையினருக்கு
விதைத்திருப்பதால், அவர்களுக்கு அங்கீகாரம் தேவை என்பதை உணர்ந்து வணிக உலகம் இவற்றைச்
செயல்படுத்துகிறது. இந்தக் கூற்றுகளின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள நம் திரு அவை
நமக்குத் தெளிவான விளக்கங்களைத் திருவிவிலிய மற்றும் மறைக்கல்விப் போதனைகள் வாயிலாக
வழங்குகிறது
கருக்கலைப்பு: ‘தேர்வுரிமை’ பாலியல் சுகாதார உரிமை மற்றும் பராமரிப்பின் கீழ் ‘மருத்துவ
ரீதியான கருக்கலைப்பை’ (MTP) குறிப்பிடுகிறது. திரு அவை கருத்தரித்த
கணம் முதலே மனித உயிர் முழுமையாக மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் எல்லா உரிமைகளைக்
கொண்ட நபராக அங்கீகரிக்கிறது (CCC 2270. CCC 2271). கருக்கலைப்பை விரும்பிச் செய்தால் அது மனித உயிருக்கு
எதிரானது (காண்க: நியமன விதி 1398). மனித உயிர் எவ்வாறு கருத்தரிக்கப்பட்டிருந்தாலும்
(பாலியல் வல்லுறவு, வன்கொடுமை, முறையற்ற உறவு) அது விலைமதிப்பற்றது என்று திரு அவை
தெளிவாகக் கூறுகிறது. கருக்கலைப்பு பாலியல்
வன்புணர்வின் வலியை, தாக்கத்தை நீக்குவதில்லை, அது மேலும் ஒரு நபர் பாதிப்புக்குள்ளாவதற்கு
வழிவகுக்கிறது. உண்மையான மருத்துவ அவசரநிலைகளில் (எ.கா. கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்,
புற்றுநோய் சிகிச்சை), திட்டமிடப்படாத சிசுவின் மரணம் போன்ற சூழல்களை நேரடிக் கருக்கலைப்பிலிருந்து
திரு அவை தார்மீக ரீதியாக விலக்கு அளிக்கின்றது (இரட்டை விளைவுக் கோட்பாடு - CCC
2263).
‘Gen Z’ தலைமுறையினருக்குத் திரு அவையின் போதனை ஆண்-பெண் என்னும்
பாலின அடையாளத்தை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும். பாலியல்பு, உடல் ஒழுக்கம் (chastity), திருமணத்தின் நன்மைகளையும் குடும்ப
வாழ்வின் செழிப்பை மையப்படுத்தியதாக உள்ளன என்பதை வலியுறுத்துகிறது (CCC 2333). மேலும், பாலின அடையாள முரண்பாடுகளை (gender dysphoria) எதிர்கொள்ளும் நபர்களுக்கு கருணைமிக்க ஆலோசகர்கள் மற்றும்
ஆன்மிக வழிகாட்டிகளின் ஆதரவைப் பெற்றுத் தரவேண்டும் என்று அங்கீகரிக்கிறது. ஒரே பாலின
ஈர்ப்பு கொண்ட நபர்களை மரியாதை, கருணை மற்றும் உணர்வுப்பூர்வமான புரிதலுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்று திரு அவை போதிக்கிறது. அவர்கள் கிறித்தவர்களாக இருப்பின், தங்கள் நிலையால் ஏற்படும்
சிரமங்களை ஆண்டவரின் சிலுவை தியாகத்தோடு இணைக்கவும் அழைக்கப்படுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறது (CCC 2358 – 2359).
திருமணத்திற்கு
முன் அல்லது திருமணப் பந்தத்திற்கு வெளியே
பாலுறவு கொள்வதைத் திரு அவை மனித உடலின் மாண்பைக் குறைக்கும் செயலாகக் கற்பிக்கிறது. தூய ஆவியின் ஆலயமான நம் உடலைக் களங்கப்படுத்தும் செயலாகக் கருதுகிறது; ‘Gen Z’ தலைமுறையினருக்குத் தம் உடலைக் காத்துக்கொள்ளப் போதிக்கிறது.
திரு
அவை IVF-ஐ எதிர்க்கிறது. IVF-இல் பல கருக்களை உருவாக்கி, பின்னர் உருவான உயிர்கள்
உறைய வைக்கப்படுகின்றன, நிராகரிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. கருக்கள்
ஒவ்வொன்றும் கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு மனித உயிர். அதன் மாண்பைக் காக்கவே இந்த நிலைப்பாடு.
திரு
அவையும், உயிர் பாதுகாப்பு இயக்கங்களும் அருளடையாளங்கள் வழியாகக் கிறிஸ்து இயேசுவின்
மறையுடலில் அனைவரையும் மீண்டும் இணைப்பதை ஊக்குவிக்கிறது. இறைவனால், திரு அவையால் மன்னிக்க முடியாத குற்றம் எதுவும்
இல்லை என்பதை ‘Gen Z’தலைமுறையினருக்கு
மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அவ்வாறு பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இணைந்த
‘Gen Z’-தலைமுறையினர் உள்பட பலர் உயிர் பாதுகாப்புக்கான
மிகச்சிறந்த குரல்களாகத் திகழ்கின்றனர்.
‘Gen Z’தலைமுறையினரின் YOLO மற்றும் FOMO கோட்பாடுகளைத்
திரு அவை தன் வழியில் இன்னும் மெருகேற்றி, நாம் ஒருமுறை மட்டுமே இவ்வுலகில் வாழ்கிறோம்
(YOLO), அதையும்
நாம் இறைவனுக்காக வாழ்வோம் எனும் கருத்தை அறிவுறுத்துகிறது. ‘Gen Z’தலைமுறையினருக்கு ear Of Missing Out
(FOMO) இந்த உலக வாழ்வில்
விடுபட்டு விடுவோமோ என்ற பயத்தைப் போக்கி, திரு அவையின் ஒப்புரவு அருளடையாளத்தின் வாயிலாக
இறையாட்சியில் இடம்பெற புது வாழ்வு அளிக்கிறது.
Youth
United for Christ (YU4C), Jesus Youth, Youth Commission போன்ற அமைப்புகள் ‘Gen Z’ தலைமுறையினருக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.
நாமும் அவர்களோடு இணைவோம், நம்பிக்கை வாழ்வு வாழ்வோம். இறைமகன் இயேசுவின் வார்த்தையின்படி
நம் நம்பிக்கையின்படியே நம் வாழ்வு மூவோர் இறைவனின் மாட்சிக்காக அமையட்டும்.
பூமியின் அதிசயிக்கத்தக்க பொருள் என்ன? இக்கேள்விக்குச் சிலர் ‘விவரிக்க முடியாத எல்லையற்று விரியும் கோடிக்கணக்கான விண்மீன் கூட்டம்’ என்று பதில் கூறலாம். வேறுசிலர், நொடிப்பொழுதில் கோடிக்கணக்கான கணிப்புகளைச் செய்யும் ‘சூப்பர் கம்ப்யூட்டர்’ என்று கூறலாம். இன்னும் சிலர் ‘உயிரணுக்களின் நுட்பமான நேர்த்தி’ எனலாம். ஆனால், இவை எல்லாவற்றையும்விட அதிசயிக்கத்தக்க ஒன்று உண்டு. அது நமக்கெல்லாம் தெரிந்த ஆனால், நாம் அதிகம் எண்ணிப்பார்க்காத ஒன்று. அதுதான் மனித உயிர்!
பூமியின்
அதிசயம், எல்லையற்று விரியும் விண்மீன் கூட்டங்கள் மட்டுமல்ல; அதைவிட அதிசயம், அவற்றை எண்ணிப்பார்த்து வியந்து நிற்கும் ஓருயிர் - மனித உயிர்! உலகம் அற்புதமானது. ஆனால், அதன் அற்புதம் அதற்குப் புரிவதில்லை. அதைப் புரிந்துகொள்ளும் ஒரே உயிர் மனித உயிர்!
உலகில்
பல கோடி உயிரினங்கள் வாழ்ந்தாலும், அவற்றுள் ஒன்றான மனித உயிரினம் அதிசயமானது. நாம் ஒவ்வொருவரும் கருவுற்ற, கண்ணுக்குத் தெரியாத ஒற்றை உயிரணுவிலிருந்து தோன்றினோம். அந்த உயிரணு தன்னகத்தே உள்ளடக்கி வைத்திருக்கும் உயிர் தகவல்கள் வியக்கத்தக்கவை. மனித மூளையின் ஆற்றல், எந்த ஓர் உயர்திறன் கணினியின் ஆற்றலைவிடவும் பல மடங்கானது. எனவேதான்
திருத்தந்தை லியோ இதை ‘அற்புதமான மானுடம்’ என்கிறார். இந்த மானுடம் இன்று மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்கிறது. ஒருவகையில் இங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்றே கூற வேண்டும். ஒரு குறிப்பிட்ட மக்கள் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் குறிவைத்துக் கொல்லப்பட்டால், அதை இனப்படுகொலை என்றுதான் கூறமுடியும். இவர்கள் இன்னும் பிறக்கவில்லை; உலகைக் காணவில்லை; தங்களைக் கொல்வது யார் என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை என்பது இன்னும் வேதனையான ஒன்று.
அமெரிக்காவில்
மட்டும் ஆண்டுதோறும் 12 இலட்சம் மனித உயிர்கள் கருவிலே கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் இரண்டு கோடியே இருபது இலட்சம் மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. வினாடிக்கு ஒரு கொலை என்னும் அளவுக்கு எண்ணிக்கை இன்னும் உயர்ந்துகொண்டே செல்கின்றது.
மரணத்தின் பண்பாடு:
“ஒரு சமூகத்தின் பண்பாட்டு உயரத்தை அதன் சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து பார்த்தால் கண்டுகொள்ளலாம்” என்றார்
இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் பியடோர் டொஸ்ட்டேவ்ஸ்கி. அதையே இன்றைய சூழலில் இப்படியும் கூறமுடியும்: ‘ஒரு சமூகத்தின் பண்பாட்டு உயரத்தை அது குரலற்ற மனிதர்களை - இன்னும் பிறக்காத, ஊனமுற்ற, முதிய மற்றும் மறக்கடிக்கப்பட்ட மனிதர்களை எப்படி
நடத்துகிறது என்பதிலிருந்து கண்டுகொள்ளலாம்.’
இன்னும்
பிறக்காத அல்லது ஊனமுற்ற அல்லது முதிர்வயதில் உள்ள மனிதர்களைத் தூக்கி வீசி எறியப்பட வேண்டிய உயிர்கள் என நினைக்கும் மனநிலையைத்
திருத்தந்தை புனித ஜான்பால் ‘மரணத்தின் பண்பாடு’
(culture of death) என்று அழைக்கிறார்.
‘வாழ்வின் நற்செய்தி’
(Evangelium Vitae- 1995)
என்னும் தனது மடலில் கருக்கொலை, கருணைக்கொலை, கருவில் நடைபெறும் முறையற்ற ஆய்வுகள் இவற்றைக் கண்டிக்கிறார். மனித உயிர் அதன் தொடக்க நிலையிலும், இறுதி நிலையிலும் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கருவிலே உயிரை வேரறுப்பது கொலை என்ற நனவுணர்வுகூட இன்று இல்லை. இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு கருத்தியல், ‘கருவில் இருப்பதை ஒரு மனிதன் என்று அழைக்க முடியுமா?’ என்ற கேள்வியை மையப்படுத்தியது. அதோடு, ஒரு பெண்ணுக்குத் தன் உடலில், தான் சுமக்கும் கருவின்மீது முழு உரிமையும், அதை என்ன செய்ய வேண்டும் என்பதில் முழுச் சுதந்திரமும் இருக்கிறது என்ற கருத்தாக்கமும் இதன்பின் உள்ளது.
கருச்சிதைப்பிற்கான உரிமை: ஜூடித் ஜார் விஸ் தாம்சன் என்னும் அமெரிக்காவைச் சேர்ந்த மெய்யியலாளர் 1971-இல் எழுதிய ‘கருக்கலைப்பிற்கான நியாயங்கள்’ (A Defense of Abortion) என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் இதைக் கற்பனை செய்துபாருங்கள்; ஒருநாள் நீங்கள் கண்விழிக்கும்போது ஒரு மருத்துவமனையில் படுத்திருக்கிறீர்கள். நீங்கள் உறங்கும்போது, உங்கள் உடலில் அறுவை சிகிச்சை செய்து உங்கள் உள்ளுறுப்புகளை, சிறுநீரகம் செயலிழந்து உணர்வற்றுப் படுத்திருக்கும் ஓர் உலகப் புகழ்பெற்ற இசை மேதையின் உடலோடு குழாய்கள் மூலம் இணைத்திருக்கிறார்கள். அவர் உங்களோடு உங்கள் படுக்கையிலே உணர்வற்றுக் கிடக்கிறார். உங்கள் சிறுநீரகங்கள் மட்டுமே அந்த மேதையை உயிருடன் வைத்திருக்கும். உங்களுடனான அந்த
இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவர் இறந்துவிடுவார். நீங்கள் அவருடன் ஒன்பது மாதங்கள் தொடர்ந்து இணைப்பில் இருந்தால் அவர் பிழைத்துக்கொள்வார்.” ஜூடித் தொடர்ந்து கேட்கிறார்: “அறவியல் அடிப்படையில், நீங்கள் தொடர்ந்து அவருடைய உடலோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறதா?”
ஜூடித் கூறவரும்
கருத்து:
“இசை மேதைக்கு உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் உயிர் வாழ, உங்கள் உடலைப் பயன்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை.” ஜூடித் கூறிய இந்த உவமைதான் கருச்சிதைவிற்கான உரிமை குறித்த விவாதங்களுக்குப் பின்னால் இருக்கும் அனுமானம். ஒருவரின் உயிரைத் தொடர்ந்து காப்பாற்ற மற்றொருவர் கட்டாயப்படுத்தப்படலாமா?
சிக்கல்களும்
சவால்களும்:
இப்பிரச்சினை குறித்த திரு அவையின் கண்ணோட்டம் தெரிந்த ஒன்றுதான். மனித உயிர்கள் உற்பத்தி செய்யப்படவில்லை; அவை பெறப்படுகின்றன. மனித உறவில் கருவாகி, உதரத்தில் சற்று நின்று, உலகில் வந்து சேர்கின்றன. அவை மாண்புக்குரியவை. போற்றப்பட வேண்டியவை. மனிதனுக்குரிய அனைத்து உரிமைகளும் அதற்கு உள்ளன. எனவேதான், மாறிவரும் காலச்சுழலிலும் கருக்கலைப்பிற்கு எதிரான வலுவான குரல் திரு அவையிடமிருந்து தொடர்ந்து எழுகிறது.
திரு
அவையின் கரிசனைகளில் நியாயம் இருக்கிறது. ஆனால், இன்று பிரச்சினை, பிறக்காத குழந்தைக்கான உயிர் வாழும் உரிமையா? அல்லது ஒரு பெண்ணுக்குத் தன் உடலில் வளரும் கருவைக் குறித்தான விருப்ப உரிமையா? என்னும் கேள்விகளைத் தாண்டி நிற்கிறது. “என் உடல், என் விருப்பம்” என்று முழக்கமிடும் பெண்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு என்றே எண்ணுகிறேன். கருக்கலைப்பு என்பது பல நேரங்களில் பெண்ணின்மேல்
திணிக்கப்படும் தீர்மானமாகவே உள்ளது.
கருக்கலைப்பு
விசயத்தில் இது ஒரு பெண்ணுக்கும், அவள் உதரத்தில் வளரும் குழந்தைக்குமான பிரச்சினை எனப் பார்க்கப்படுவதே குறைபாடான பார்வை. இதில் ஆணின் பங்கு என்ன? குடும்பத்தின் பங்கு என்ன? சமூகத்தின் பங்கு என்ன? போன்ற கேள்விகள் பிரச்சினை குறித்த முழுமையான புரிதலைக் கொடுக்கும். பல நேரங்களில் பெண்ணின்
விருப்பமின்றியே கணவனின் அல்லது குடும்பத்தின் அழுத்தங்களினால் கருச்சிதைவிற்கான முடிவுக்கு ஒரு பெண் வருகிறாள். எனவே, கருக்கலைப்பு ஓர் இனப்படுகொலை என்றால், அதனை அரங்கேற்றுவதில் ஆண் சமூகத்திற்கு இருக்கும் பங்கு அதிகமானது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.
இளமையின்
தவறுகள், வறுமை, வன்புணர்வு, தன் மற்றும் குடும்ப மானம், சமூகம்... இப்படியாக எத்தனையோ காரணிகள் இப்பிரச்சினைக்குப் பின்னால் ஒளிந்து நிற்கின்றன. அத்தோடு இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போன ஆண் மகனுக்கான வேட்கை, கருவில் இருப்பது பெண்சிசு என்றால் கருவறுக்கத் தூண்டும் அவலம் போன்றவை இப்பிரச்சினையின் வேர்களாகி, அவை அகலமாக, ஆழமாக ஊன்றி நிற்கின்றன.
தேவை: புதிய
பார்வைகள்:
எனவே, மனித உயிர்களைப் பேணிப்பாதுகாக்கும் ஆர்வலர்களின் பணி, அறவியல் கோட்பாடுகளை
முழக்கமிடுவதில் மட்டும் அடங்கிவிட முடியாது. மனித உயிர் குறித்த ஒரு வியப்பு கலந்த நற்புரிதல் இளமையிலிருந்தே வளர்த்தெடுக்கப்படவேண்டும்.
‘கருவில் வளரும் குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியுமா?’ என்று அங்கலாய்க்கும் குடும்பங்களுக்கான அரசு நலத் திட்டங்கள் உறுதி செய்யப்படவேண்டும். இளமையின் தவறுகள், பாலியல் வன்புணர்வுகள் (சில நேரங்களில் இவை குடும்பங்களில் நடைபெறுகின்றன என்பதுதான் துன்பியல்), இவற்றால் ஏற்படும் கருவுறுதலின்போது பாதிக்கப்பட்டவருக்கான நீதியோடு, அவரைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் குடும்பத்திலும் சமூகத்திலும் வளரவேண்டும். இப்படியாக இப்பிரச்சினை ஒட்டுமொத்தச் சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டு, தனிமனித, சமூக மாற்றத்திற்காக உழைப்பதில்தான் மனித உயிர்கள் மீதான நம் தணியாத காதலில் பொருள் இருக்கும்.
தமிழ்நாடு திரு அவையின் உயர்ந்ததோர் அமைப்பான தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டமானது மதுரையிலுள்ள ‘பில்லர்’ என்னும் நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இனிதே நடைபெற்றது. தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் தலைவர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் இனிதே ஆரம்பமானது.
சாந்தோம்
கலைத்தொடர்பு பணிக் குழு வழங்கிய இறைவணக்கப் பாடலுடன் இணைந்த இறைவேண்டல் முடிந்தவுடன், துணைத் தலைவர் திரு. வனத்தைய்யன் பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருப்பவர்களை மகிழ்வுடன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கூட்ட அறிக்கையினை, செயலர் தந்தை அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப் தொகுத்து வழங்கிட, அனைவரும் அதை மாற்றமின்றி ஏற்றுக்கொண்டனர்.
தனது
தலைவர் உரையில் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, “ஏழையரை முன்னிறுத்துதல் என்பது பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிரான நிலைப்பாடா?” என்ற வினாவைத் தொடுத்து ஆரம்பித்தார். திரு அவை யாரையும் புறக்கணிப்பதில்லை. இறைவனின் அன்பு அனைவருக்கும் சமமானது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து, ‘திரு அவை ஒருமையை உயர்த்திப் பேசுவதில்லை; மாறாக, மனித மாண்பைச் சிதைக்கும் ஏழ்மை ஒருபோதும் இறைவனின் விருப்பமல்ல; ஆனால், ஏழ்மையால் மனித மாண்பை இழந்து வாடும் சகோதர-சகோதரிகளின் பக்கம் நிற்பதே திரு அவையின் அழைப்பாகும்’ என்று
வலியுறுத்தினார்.
இன்றைய
சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களால் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பவர்களை விடுதலை செய்வதே திரு அவையின் மறைப்பணி என்பதைக் கோடிட்டுக் காட்டினார் பேராயர். ஏழையருக்கான முன்னுரிமை என்பது சமூக, அரசியல் அல்லது பொருளாதாரக் கருத்தியல் சார்ந்த முடிவு அல்ல; அது நமக்கு அனைத்திருக்கும் மேலான ஓர் இறையியல் தேர்வு. ஏழையருக்கான திரு அவையின் தேர்வு என்பது ஆவணங்களில் மட்டுமல்லாமல், நமது வாழ்விலும் மேய்ப்புப் பணியிலும் ஆளுமையிலும் உண்மையிலேயே வெளிப்படவேண்டும்.
பல
துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ள நமது தமிழ்நாடு நவீன ஏழையரைக் குறித்தும் கவனம் கொள்ளவேண்டும். எண்ணற்ற மறைப்பணியாளர்கள், ஆயர்கள், அருள்தந்தையர்கள், துறவியர், பொதுநிலையினர் தங்கள் வாழ்வை ஒரு பொருட்டாக எண்ணாமல் இந்தப் பணிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு நன்றியுடன் தலை வணங்குவோம். ஆழமான மனமாற்றத்திற்கு அழைக்கும் இறைவனின் குரலைக் கேட்டவர்களாய், ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை, ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவை என்பவை கனவின் மையக்கருத்தாகும் என்றார். அருள்பணிப் பேரவை வெறும் கலந்துரையாடலுக்கான அரங்கமாக இருந்துவிடாமல், திரு அவையின் மனமாற்றத்திற்கான திருப்புமுனையாக அமையவேண்டுமென்று கூறி, தனது தலைவர் உரையை நிறைவு செய்தார் பேராயர்.
அதைத்
தொடர்ந்து ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாக’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற வந்த இயேசு சபையைச் சார்ந்த அருள்பணி. ஜெரி சே.ச., வத்திக்கான்
சங்க வரிகளிலிருந்தும், நாம் வாழும் காலத்தில் திருத்தந்தையாய் பணியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் திருத்தந்தை லியோ அவர்களின் உரைகளிலிருந்தும் எழுத்துகளிலிருந்தும் மேற்கோள்காட்டி, ஏழையர் எவ்வாறு திரு அவையில் முன்னிறுத்தப்படலாம் என்று எடுத்துரைத்தார். “ஏழை
இயேசுவின் வாரிசுகள் நாம்” என்ற திருத்தந்தை லியோவின் கூற்றைக் கொண்டு ஆரம்பித்து, நவீன உலகு ஏழை மக்கள் யார் என்பதைத் திருத்தந்தையர் பிரான்சிஸ் மற்றும் லியோ இவர்களின் பார்வையில் எடுத்துரைத்தார். இயற்கையைப் பாழ்படுத்துவது, இறைமையை ஏழ்மைப்படுத்துவது என்ற கருத்தில் இயற்கைக்கெதிரான செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தனது
உரையின் நிறைவில் சில பரிந்துரைகளை வந்திருந்த அனைவருக்கும் வழங்கிய அருள்தந்தை ஜெரி சே.ச., அவற்றைக்
கொண்டு குழு ஆய்வில் சிந்திக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.
பன்னிரண்டு
குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் ஆன்மிக உரையாடல் வழியாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்வியை விவாதிக்க அழைக்கப்பட்டனர். ‘தமிழ்நாடு திரு அவையை ஏழையரை முன்னிறுத்தும் திரு அவையாக மாற்ற என்னுடைய பரிந்துரை என்ன?’ மற்றும் ‘என் குழு உறுப்பினர்கள் கூறுகின்ற பரிந்துரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது என்ன?’ என்பதைக் குறித்து ஒவ்வொரு குழுவும் சிந்திக்க அழைக்கப்பட்டனர்.
நண்பகல்
உணவிற்குப் பின் பன்னிரண்டு குழுக்களின் செயலர்கள் தங்களது குழுவில் இறுதியாக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு பரிந்துரைகளை மட்டும் அக்குழுவின் அறிக்கையாக வாசித்தனர். அவற்றைத் தொகுத்த பின்பு இறுதியாகச் செயல்திட்டம் தீட்டப்பட்டு ஆயர் பேரவையின் அனுமதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
அனைவராலும்
முழுமனதாக ஏற்கப்பட்டு ஆயர் பேரவையின் அனுமதியுடன் தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணி 2026-2027-ஆம் ஆண்டிற்கான செயல்திட்டம் பின்வருமாறு:
நமது இலக்கு
ஏழை
இயேசுவின் வாரிசுகள் நாம் (திருத்தந்தை லியோ), இறையருளிலும், நிறைவாழ்விலும் வளர (காண். யோவா 10:10), நம்மைச் செல்வந்தராக்க (காண். 2கொரி 8:9) தம்மையே வெறுமையாக்கிக் கொண்டவரின் (காண். பிலி 2:6-11) புதிய உடன்படிக்கையாளர்கள் நாம். ஏழையருக்கு நற்செய்தி அறிவிப்பதோடு, ஏழையரோடு நற்செய்தியாக வாழக் கடமைப்பட்டவர்கள் நாம் (திருத்தந்தை பிரான்சிஸ்).
ஏழையரின்
மதிப்பை உயர்த்துவதே நமது அனைத்து அருள்பணிகளின் அழுத்தம். அதன்வழி, ஒரு சமத்துவ, சமதர்ம, சகோதரத்துவமிகு புதிய சமுதாயமே நமது இலட்சியம். இறையாட்சியின் இலக்கணமும் அதுவே (காண். லூக் 11:1-4).
நமது ஏழையர்
இன்றைய
நம் சூழலமைவில் கீழ்க்காண்பவர்களை ‘ஏழையரிலும் ஏழையாக’ தெளிந்து தேர்ந்தோம்: தலித்துகள்/தலித்திலும் கடைநிலையிலிருப்போர், திருநர், மாற்றுத்திறனாளர், நாடோடிகள், குடிநோயாளர், கைவிடப்பட்ட முதியோர், அனாதையாக்கப்பட்ட குழந்தைகள், பாலினப் பாதிப்பாளர்கள், அந்தந்தத் தளங்களில் அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக அன்றாடம் போராடுபவர்கள்.
நமது செயல்திட்டங்கள்
“ஏழையர் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும்”
(மாற் 14:7) என்னும் அழைப்பின் அடியொற்றி, இக்காலம் காட்டுகின்ற அறிகுறிகளான ஏழையரை முன்னிறுத்தி 2026-2027 ஆண்டின்போது பின்வருபனவற்றைச் செயல்படுத்தத் தீர்மானித்தோம்:
1. மறைமாவட்ட,
மறைவட்ட, பங்கின் பங்கேற்பு அமைப்புகளில் ஏழையருக்கும், அவர்களின் திட்டங்களுக்கும் முதன்மை தந்து, ஏழையருக்குப் போதிய பிரதிநிதித்துவமும் உரிய உரிமைகளையும் வழங்குவோம்.
2. மறைமாவட்டம்,
பங்கு, துறவற சபைகள், நிறுவனங்களில் மொத்த வருமானத்தில் குறைந்தது 10% ஏழையரின் கல்வி,
மருத்துவம், வீடுகள் போன்ற வாழ்வாதாரங்களுக்கு ஒதுக்கீடு செய்வோம்.
3. படிப்பை
இடைநிறுத்தம் செய்த மாணாக்கர் அதனைத் தொடர்ந்திட உதவிடவும்; மேலும் உயர் கல்வி பெற்றிட பங்கு அளவில் பொருளுதவியும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களால் கல்வி, வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்கு வழிகாட்டுதலும், பங்கு வழக்குரைஞர்களால் அரசின் திட்டங்களைப் பெற இலவசச் சட்ட உதவி வழங்குதலும் செய்வோம்.
4. தலித்
கிறித்தவர்களின் முழுவிடுதலைக்கான தமிழ்நாடு ஆயர் பேரவையின் பத்து அம்சத் திட்டங்கள், எட்டு அம்சத் திட்டங்கள், இந்திய இலத்தீன் ஆயர் பேரவையின் ‘ஆற்றல்படுத்தும் கொள்கை’ ஆகிய ஆவணங்களைப் பரவலாக்குவதுடன், தலித் மாணாக்கருக்கு வகுக்கப்பட்டுள்ள கொள்கை விதிகளுக்கேற்ப கட்டணச் சலுகையுடனான உரிமையினை வழங்குவோம்.
5. பசுமைப்
பங்குகளாகவும், பரந்த பசுமை இயக்கமாகவும் நம் பங்குகள் வளர்வதற்கான முனைப்புகளை முன்னெடுப்போம்.
மேற்கண்ட
செயல்திட்டங்களை மனத்தில் கொண்டு அருள்பணிப் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் அல்லது மேய்ப்புப் பணி நிலையங்களின் இயக்குநர்கள், ஆயரோடு கலந்தாலோசித்து மறைமாவட்டத்தில் செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இவ்வாறு
நன்முறையில் செயல்படுத்தும் திட்டங்களால் திரு அவையின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் குறிப்பாக, கூட்டொருங்கியக்கத் திரு அவையில் ஏழையரின் வளமான பங்கேற்பிற்கும் சிறப்பான பங்களிப்பிற்கும் ஆவன செய்திட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து துணைத் தலைவி திருமதி. மேரி இந்திரா பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மகிழ்வுடன் நன்றிபகர்ந்தார். இறுதியாக, இறைவேண்டலுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தமிழ்நாடு
– பாண்டிச்சேரி அருள்பணிப்
பேரவைக்காக அருள்பணி.
பிரான்சிஸ்
ஜோசப்
செயலாளர், தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை
‘பயன்படுத்திவிட்டு வீசி எறிந்திடு’ எனும் கோட்பாடு இன்று ஏறக்குறைய உலகத்தின் வாழ்வியல் நடைமுறை என்றாகிவிட்டது. ஒரு பொருளோ, மனிதரோ பயன்படுகிற வரைதான் முக்கியம் என்பதை ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குக் காலம் நம்மைக் கொண்டு வந்துவிட்டது. எப்போது ஒரு பொருளோ, மனிதரோ நமக்கு இனி பயனில்லை என உணரும்போது தூக்கி எறிந்துவிட எவ்விதத் தயக்கமும் மனிதருக்கு ஏற்படுவதில்லை.
நவீன
உலகின் தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் வாழ்க்கை முறைகளும் உறவு, மதிப்பீடு, அறம், ஒழுக்கம், நன்றியுணர்வு, வாழ்வியல் மாண்பு, மனிதநேயம், இயற்கை நேசம் என நீள்கிற மானுடக்கூறுகளை
அழித்து, ஒழித்து வருகின்றன. அதன் விளைவாக, மனிதரை அதுவும் குறிப்பாக, வயது மூப்பின் காரணமாக உடல் நலிவுற்ற மூத்த குடிமக்களை முற்றிலும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தன்னைப் பெற்றவர்கள், தனக்கு உயர்நிலையைத் தந்தவர்கள், வசதியான வாழ்வுக்கு வழிவகை செய்தவர்கள், தம் தியாகத்தால் நம்மை ஆளாக்கி வளர்த்தவர்கள் என யாராக இருந்தாலும்
அவர்கள் முதுமையை அடையும்போது அவர்களை மூலையிலே முடக்கிப்போடுவது வேதனை நிறைந்த உண்மைகளாய் வீட்டுக்கு வீடு தலை நீட்டுகிறது.
குடும்பம்
மனித வாழ்வின் நாற்றங்கால்; அடிப்படை விழுமியங்கள் கட்டமைக்கப்படும் அன்புப் பாசறையே குடும்பம்! சமூகத்தின் முதல் அணுக்கலம் என்றும் மனுக்குலத்தின் மூல மற்றும் அடிப்படைப் பள்ளி என்றும் குடும்பத்தை வரையறுக்கிறார் திருத்தந்தை லியோ. குடும்பத்தை ‘வீட்டுத் திரு அவை’ எனக் குறிப்பிடும் திருத்தந்தை லியோ, வீட்டில் மேசையில் உணவு பகிரப்படுவதுபோல நம்பிக்கை தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றப்படுகிறது எனப் பாரம்பரியக் கத்தோலிக்கக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதோடு, குடும்பத்தில் தாய்-தந்தையர் ஓரங்கட்டப்படுவதை எடுத்துரைத்து, பெற்றோர் எனும் புனித நிலைக்குக் கண்ணியத்தை மீட்டெடுக்கும் சமூகக் கொள்கைக்கு அழைப்பு விடுக்கிறார்.
திருத்தந்தை
லியோ மூத்த குடிமக்கள் மற்றும் முதுமையின் மதிப்பு குறித்த ஆவணங்களையும் ஆண்டு உரைகளையும் வழங்கியுள்ளார். மூத்த குடிமக்களை ‘வாழ்க்கை ஆசிரியர்கள்’ எனக்
குறிப்பிட்டு, அவர்கள் திரு அவையின் சிறப்பு ஆசிர் என வர்ணிக்கிறார். தாத்தா,
பாட்டி மற்றும் மூத்த குடிமக்கள் உலக தினத்தில் கண்ணியம், சமூகம் மற்றும் தனிமையை எதிர்த்துப் போராடுதல் ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்தி, வருடக் கொண்டாட்டங்களில் மூத்த குடிமக்களைப் போற்றி செய்திகள் வெளியிட்டு வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய ‘அமோரிஸ் லேத்தியா’
எனும் ‘அன்பின் மகிழ்ச்சி’
திருமடல் வழியாகக் குடும்ப வாழ்க்கை குறித்த விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறார். இறுக்கமான விதிகளை விடுத்து, இரக்கமும் கருணையும் கொண்ட குடும்பங்களைக் கட்டிக்காப்பதே திரு அவையின் முக்கியப் பணி என வலியுறுத்துகிறார்.
திரு
அவையின் முதன்மைக் கரிசனையாக மூத்த குடிமக்களைப் போற்றி வந்தாலும், குடும்ப வாழ்வின் நலிவு அத்தனை வாழ்வியல் அறங்களையும் பின்னடைய வைக்கிறது. கூட்டுக் குடும்பங்களின் வீழ்ச்சி ஒட்டுமொத்த மானுட உறவுகளுக்கே உலை வைத்துவிட்டது. திருமணம் எனும் உயரிய அருளடையாளத்தால் இணைக்கப்பட்டு, புனித உடன்படிக்கையாக அமையவேண்டிய இல்லற வாழ்வு, இன்று பல சவால்களைச் சந்திக்கிறது.
திருமண உறவை மீறிய சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம், மாற்று இணையரோடு வாழ்தல், ஒரே பாலினச் சேர்க்கை, திருமணப் பந்தத்தை முறித்தல் போன்ற இல்லறத்திற்கு உலை வைக்கும் காரணிகள் குடும்ப வாழ்வைச் சிதைப்பதோடு, மூத்தோரையும் பெற்றோரையும் மாண்புடன் பேணுதல்வேண்டும் என்கிற மானுட அறத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறது.
கூட்டுக்
குடும்ப வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த அன்றே, மூத்த குடிமக்களைப் பேண வேண்டும் என்னும் அன்புக் கடமை முடிவுக்கு வந்துவிட்டது. முன்காலத்தில் தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா, பிள்ளைகள்-பேரப்பிள்ளைகள் என மேன்மைமிக்க உறவு
முறைகள் குடும்பத்தை அலங்கரித்தன. கணவன்-மனைவியிடையே குடும்பத்தில் விரிசல்கள் தொடங்கும்போதே குடும்பத்திலிருக்கும் மூத்தவர்கள் தலையிட்டு அதனைக் கச்சிதமாகத் தீர்த்து வைப்பதுண்டு. வக்கீல்கள், வழக்கு, நீதிமன்றம், விவாகரத்து எனும் தளங்களுக்குக் குடும்ப வாழ்க்கை சென்றதில்லை. குடும்பத்தில் மூத்தவர்களின் அறிவுரைகளும் கண்டிப்பும் உறவுகளை வலுப்படுத்தின. பிள்ளைகளைப் பராமரிக்க வாடகை மனிதர்களை அமர்த்தியோ, மழலைப் பள்ளிகளில் குழந்தைகளைச் சிறைவைக்க வேண்டிய அவசியமோ ஏற்படவில்லை. தாத்தா-பாட்டியரின் பாசமிகு பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான குடும்பத்தைக் கட்டிக் காத்து வந்தார்கள். தாத்தா-பாட்டி கதைகள், வைத்தியங்கள், பராமரிப்புகள் இன்று காணாமல் போய்விட்டன.
தாத்தா-பாட்டியரின் இடங்களை இன்று தொலைக்காட்சிப் பெட்டியும் கைப்பேசியும் பிடித்துக்கொண்டன. பாட்டி வைத்தியம் இருந்த இடத்தை மாத்திரை, மருந்துப் பெட்டிகள் ஆக்கிரமித்துக்கொண்டன. உறவுகள் உடைந்து விடாமல் சேர்த்துவைக்க இவர்கள் இல்லாததால் தம்பதியரைப் பிரித்து வைக்க வக்கீல்களும் நீதிமன்றங்களும் வந்துவிட்டன.
வீடுகளில்
எஞ்சியிருக்கிற மூத்தவர்கள் பேணப்படும் நிலை மிகவும் கவலைக்குரியது. ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களாவது மாதத்தின் தொடக்கத்தில் பணத்திற்காகச் சிறிதளவு பராமரிக்கப்படுகிறார்கள். எந்த வருமானமும் இன்றி தங்கள் உடைமைகளை எல்லாம் சிந்திக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரர்களாகத் தன்மானம் இழந்து வீடுகளில் சித்திரவதைகளைத் தினம் தினம் அனுபவிக்கும் அபலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் உயிரோடு வீடுகளில் கல்லறை வாழ்க்கை நடத்தும் பெரியவர்களின் நிலையைக் கவனத்தில்
கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வயது
முதிர்வால் ஏற்பட்ட முதுமை, பார்வை மங்கி, செவி மந்தமாகி நிரந்தர நோயாளராகிவிட்ட நிலையில், மூத்த குடிமக்கள் படும்பாடு பரிதாபமானது. தங்கள் உழைப்பால் நிலம் வாங்கி, பட்டினி கிடந்து கட்டிய வீட்டில் அவர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. வயதான பெற்றோரை வீட்டுக்கு வெளியே குடிசை அமைத்துக் குடி வைத்திருக்கிற பிள்ளையர் தங்களின் எதிர்காலத்தைத் தெரிந்திருப்பதில்லை. இறந்த காலத்தில் இவர்களை வளர்த்திட இன்றைய முதியவர்கள் செய்த தியாகத்தையும் நிகழ்காலத்தில் நினைப்பதில்லை. பேரப்பிள்ளைகளாக உறவு பாராட்ட வேண்டிய குழந்தையரை முதியோரிடமிருந்து பிரித்து வைப்பதையும், அவர்களைப் பற்றி குழந்தையரிடம் தவறாகச் சொல்லித் தந்து இழிவுபடுத்துவதையும் சில இளம்பெற்றோர் இயல்பாகச் செய்து வருகின்றனர். பழுத்த ஓலையைப் பரிகசிக்கும் இந்தப் பச்சை ஓலையின் நிலை, நாளை பரிதாபம் எனும் எதார்த்தத்தை ஏனோ உணராமல் போகிறார்கள்.
மூத்த
குடிமக்களின் நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்களின் ஓய்வூதியம், அரசு தரும் உதவிகள், அவர்களின் சேமிப்பு ஆகியவற்றைப் பிடுங்கும் ஈனச் செயல்களிலும் சில குடும்பத்தினர் ஈடுபடுவதுண்டு. முதியோரின் உடல் நலிவைப் பயன்படுத்தி, அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கும்
நிகழ்வுகளும் சில வீடுகளில் நடப்பதுண்டு. மூத்த குடிமக்களைச் சுமையாகக் கருதிக்கொண்டு அவர்களுக்கு உணவைத் தராமல், உடல்நலம் பராமரிக்காமல், தூய்மையான ஆடைகளைத் தராமல் கொடுமைப்படுத்தும் கூட்டத்திற்குச் சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தரவேண்டியது இன்றைய தேவையாகும்.
படுக்கை
நோயாளராக இருக்கும் மூத்த குடிமக்களைப் பராமரிப்பதில் சவால்கள் உள்ளன. ஆயினும், அவர்கள் மனிதர்கள், நமக்கு உடல் தந்து வாழ்வு தந்த நமது உதிரத்தின் உதிரம் என்கிற உறவு உந்துதல் இருந்தால் மட்டுமே அவர்களைக் கரிசனையோடு கவனிக்க முடியும். மொத்தத்தில், மூத்த குடிமக்களின் உடைமைகளை மொத்தமாகக் கபளீகரம் செய்துகொள்கிற அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மனிதராகக் கருத மனமில்லாமல் போவது ஏன்? இவர்கள் வீணைகள்; எரிக்கப்படுகிற விறகுகள் அல்ல என்பதை உணரவேண்டும்.
வீடுகளில்
இருக்கும் மூத்த குடிமக்கள் வீட்டிற்குப் பாரங்கள் அல்ல; வீட்டின் விளக்குகள். அவர்கள் ஒரு காலத்தில் ஆற்றல்மிகு ஆளுமைகளாக இருந்தவர்கள். தங்கள் உழைப்பாலும் முயற்சியாலும் தியாகத்தோடு குடும்பத்தை நிலைநிறுத்தியவர்கள். நாம் இன்று காணும் உயரங்களுக்கு அன்றைக்குத் துயரங்களைச் சுமந்தவர்கள். இவர்கள் எதற்கும் உதவாதவர்கள் என்று ஊரைக் கூட்டி ஊளையிடுகிறவர்கள், அவர்கள் போட்ட உணவுப் பிச்சையாலும், கல்விப் பிச்சையாலும் கரையேறியவர்களே! இன்று இவர்களின் பெயருக்குப் பின்னால் அலங்காரமாய் அமர்ந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அவர்களின் வியர்வைத் துளிகளின் மொழிபெயர்ப்பு. குடியிருக்கும் கோபுர வீடுகள் அவர்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்த கலவை. அவர்களின் முகத்தில் இயற்கை வரைந்திருக்கின்ற நெற்றிச் சுருக்கம் இன்றைய தலைமுறையின் முகவரி.
இன்றைய
வசதியான வாழ்க்கை விருட்சத்திற்கு வேர்களாக அமைந்திருப்பது நம்மால் ‘பயனற்றவர்கள்’ எனத்
தூக்கி எறியப்படும் மூத்த குடிமக்களே. வேர்களை வெட்டி எறிந்துவிட்டு மரக்கிளைகளில் மகரந்தச்சேர்க்கை நடத்துகிறோம். நம்மால் புழுதியில் வீசப்படுகிற இந்தப் புல்லாங்குழல்கள் நமக்குத் தாலாட்டு பாடல் இசைத்தவை. அவர்களின் தொங்கிய தோள்களில்தான் இன்றைய இளையோருக்குத் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. வீடுகளில் மனிதப் பட்டியலிலிருந்து நம்மால் விலக்கி வைக்கப்பட்ட இவர்கள்தான், நாம் தொடக்கப்பள்ளிகளைத் தொடாத காலத்திற்கு முன்பிருந்தே தொடக்கப் புள்ளிகள். இவர்களின் பக்குவம் நிறைந்த பழக்கங்களும், அளப்பரிய அனுபவங்களும் அடுத்ததலைமுறைக்கான அகராதிகள். செயற்கை நுண்ணறிவைத் தாண்டிய இயற்கையின் ஞானங்கள்.
இவர்கள்
கண்மூடுகிற காலம் வரை இவர்களைக் கருத்தாய் கவனித்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இவர்களின் வயோதிகக் காலத்தில் வயிற்றுக்கு உணவிடாமல், நோய்க்கு மருந்திடாமல், கவலையில் ஆறுதல் தராமல் அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்துவிட்டு, உயிர் போனபின்பு ஊரைக் கூட்டி இரங்கல் நடத்துவதும், ஆடம்பரமாய் அடக்கச்சடங்கு நடத்துவதும், பெரும்பணம் செலவழித்துப் பத்திரிகை விளம்பரம் தருவதும் போலித்தனத்தின் புதுப் பதிப்பல்லவா?
சாகும்வரை
சங்கடப்படுத்திவிட்டு,
இறந்த பிறகு சந்தனப் பெட்டியில் அடக்கம் செய்கிற ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’
ஊருக்கு ஊர் பெருகிவிட்டார்கள். இந்த வாசம் வீசும் இயற்கை மலர்களை வீதியில் வீசி எறிந்துவிட்டு, காகிதப் பூக்களைக் கௌரவிக்கும் போக்கு போலித்தனம் என்பதைப் புரிந்துகொள்வது எப்போது?
இறைவனின் படைப்புகள் அனைத்துமே அற்புதமானவைதாம்! குறிப்பாக, மனிதனை அடுத்து விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் அற்புதங்களே! விலங்குகள், உணர்ச்சியும் அறிவும் கொண்டிருப்பதால் தாவரங்களை விடவும் மேலான படிநிலையில் உள்ளன. அதனால் விலங்கினங்கள் மீதான இறைப்பராமரிப்பு காணக்கூடிய சான்றாக உள்ளன. ஆனால், மானிடரான நாம் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளோம்.
“ஞானி தன் ஞானத்தைக் குறித்து பெருமை பாராட்டவேண்டாம்; வலியவர் தன் வலிமை குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம்; செல்வர் தன் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்டவேண்டாம். பெருமை பாராட்ட விரும்புபவர், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக” (எரே
9:23) என்று கூறுகின்றார் இறைவன்.
பகுத்தறிவு அல்ல,
உள்ளுணர்வே (INSTINCT) காரணம்
விலங்குகளுக்குப்
பகுத்தறிவு இல்லாவிடினும், அவைகளிடம் உள்ளுணர்வும் இயற்கை நாட்டமும் இருக்குமாறு படைக்கப்பட்டுள்ளன. அதனால் விலங்குகள் பல செயல்களில் அறிவுத்திறனுடன்
செயல்படுவதாக நமக்குத் தோன்றுகிறது. இறைவன் விலங்கின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பது மட்டுமல்ல; தமது மகிமையை விலங்குகள் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அதன்வழி அவர் செய்த அற்புதங்கள் பெரியவை, எண்ண முடியாதவை.
மனிதன்
வீட்டைக் கட்டி வாழ்வதன் மூலம் தனக்குப் பாதுகாப்பைத் தேடிக்கொள்கிறான். அதுபோல விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பைத் தேடுகின்றன. எடுத்துக்காட்டாக, தூக்கணாங்குருவியைப் பார்க்கலாம். அது வாழும் கூட்டை ஆராய்ந்து பார்த்தால், நெசவாளரின் நேர்த்தியான கைவண்ணமும், பாய் முடையும் தொழிலாளியின் திறமையும் தோற்றுப் போகக்கூடும். கூட்டைக் கட்ட அது எடுத்த முயற்சிகளைக் கற்பனை செய்து பார்த்தால், நாம் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.
இறைவன்
மனிதனுக்குப் பகுத்தறிவைத் தந்துள்ளார். அதனால் அவன் தனது பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் நன்மைக்காகவும் செயல்படுகிறான். இறைவன் தந்த எண்ணற்ற வசதிகளில் எவையெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் தனது சக்திக்கேற்ப அமைத்துக்கொள்கிறான். அதேவழியில் பகுத்தறிவற்ற விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பை அடைய வழியில்லாதபடியால் இறைவன் அவைகளுக்கு இயற்கையான நாட்டத்தையும் உள்ளுணர்வையும் தந்துள்ளார். அதனால் சில சமயத்தில் அவை மனிதனைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன.
அவை
தங்கள் உள்ளுணர்வின் மூலமாகச் செயல்படுவதால் மனிதனைக் காட்டிலும் உறுதி தவறாமை, ஒழுங்கு ஆகிய பண்புகளால் கட்டி எழுப்பித் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன. தாவரங்களில் பயன் தருபவை, மருத்துவக் குணமுள்ளவை ஆகியவற்றை அறிவதுடன் வெப்பநிலை உயர்வு, காலநிலை மாற்றம் ஆகியவைகளையும் விலங்குகள் புரிந்து வைத்துக்கொள்கின்றன. பல சமயங்களில் அவைகளின்
மூலமாகவே மனிதனும் அவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வுலகில் விலங்கு, பறவை இனங்கள் எண்ணற்றவை. அவற்றில் மிகச் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவற்றில் இறைவன் தமது பெருமை, ஆற்றல், ஞானம் மற்றும் இறைப்பராமரிப்பையும் மிகவும் சரியாக வெளிப்படுத்துகிறார். அதில் குறைவோ கூடுதலோ கிடையாது. எல்லாருக்கும் எல்லாம் சமம்.
நன்மைத்தனத்தின்
மொத்த உருவான இறைவன், மனிதனின் சேவைக்காக விலங்கினங்களைப் படைத்துள்ளார். அதேசமயம் அவற்றின் நன்மைக்காகவும், தேவையான சொந்த பாதுகாப்பிற்காகவும் இறைப்பராமரிப்பையும் வழங்குகிறார். அதனால் விலங்கினங்கள் உணவு கொள்ளவும், நோயினின்று விடுபடவும் இனப்பெருக்கம் செய்யவும் ஆற்றல் பெற்றுள்ளன.
இறை ஆற்றல்
விலங்குகளிலும்
வெளிப்படுகிறது
இறைவன்
பல்வேறுபட்ட விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் உணவுக்காகப் பலவிதமான உணவுகளை விகிதாச்சார அளவின்படி கொடுத்துள்ளார். சில விலங்குகள் இறைச்சியையும், சில விலங்குகள் தாவரங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன. மிகச்சிறிய விலங்காயினும் அதன் வாழ்வாதாரத்திற்கு ஏற்ப தேவையான சத்துணவுகளை வழங்குகிறார்.
திருப்பாடல்
ஆசிரியர் கூறுவது போல், “உடல் கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவருக்கு நன்றி செலுத்துங்கள்” (திபா
136:25). இறைவன் எல்லா விலங்குகளுக்கும் உணவைத் தந்துள்ளார்.
விலங்குகளும்
மனிதரைப்போல் நோயுறுகின்றன. கடவுள் அவை சுகம்பெற இயற்கையான உள்ளுணர்வை வழங்கியுள்ளார். அதன்வழி பரிகாரங்களையும் தேடிக்கொள்கின்றன. பகை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கத் தேவையான ஆற்றலையும், புத்திக்கூர்மையையும் கொண்டுள்ளன. ஆடுகள் ஓநாய்க்குப் பயந்து அதனிடம் அகப்படாமல் இருக்க ஓடுகின்றன. ஆனால், கிட்டத்தட்ட அதே தோற்றமுடைய ஆயனின் நாயைக் கண்டு அவை ஓடி ஒளிவதில்லை.
காலநிலையில்
ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னதாக அறிந்துகொள்ளும் ஆற்றலை விலங்குகளுக்கு வழங்கி உள்ளார் கடவுள். அதனால் அவை வரும்முன் காப்பானாக ஆபத்திலிருந்து பிழைக்க வழிதேடிக் கொள்கின்றன. பறவைகள் இடம் விட்டு இடம் செல்லும் ‘வலசை’
(MIGRATION) போகும்
வழக்கத்தைக் கொண்டுள்ளன. புவியில் குளிர்காலத்தில் அவை தென் பகுதிக்கும், கோடையில் வட பகுதிக்கும் பயணமாகின்றன.
குளிர்கால உறக்கம் (HIBERNATION) கொள்ளும்
விலங்குகளுடன் மற்ற சில விலங்குகளும் குளிர்காலத்தில் தங்களுக்குத் தேவையான உணவைக் கோடையில் தேடிப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கின்றன.
பறவைகள்
தங்கள் குஞ்சுகள் மீது கொண்டுள்ள கரிசனையைச் சிந்தித்துப் பார்ப்போம். கடவுள் அவற்றைக் குஞ்சுகளின்பால் மிகுந்த அன்புள்ளவைகளாகப் படைத்துள்ளார். ஏனென்றால், அவை தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. “கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல், நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!” (மத் 23:37) என்ற இறைமகன்
இயேசு கூறிய வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.
பறவைகள்
பறக்க அவைகளுக்கு எடை குறைவான மெல்லிய உடலமைப்பைக் கடவுள் தந்துள்ளார். மேலும், மற்ற விலங்குகளைப் போல் பாலூட்டும் உறுப்பையும் பறவைகள் படைப்பின் போது தவிர்த்துள்ளார். அவை தாங்கள் சேகரித்த உணவைக் கொண்டு சென்று, குஞ்சுகளுக்கு ஊட்டுவதில் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின் றன, துன்புறுகின்றன, தியாகம் செய்கின்றன. நேசிப்பவருக்காகத் தியாகம் செய்வது எளிது. “சகோதரர்களே, நாம் இயேசுவை அன்பு செய்வோம்; ஆகையால் கடினமான அனைத்தும் நமக்கு எளிதாகி உள்ளன”
- புனித பெர்னார்ட்.
நாம்
உற்றுநோக்கிக் கவனித்தால் பல பறவைகள் தங்கள்
கூடுகளைக் கூடைபோல் அமைத்திருப்பதைக் காணலாம். ஏனென்றால், அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் அதில் வசிக்க முடியும். கூட்டின் தரையில் மெல்லிய புற்களையும் மிருதுவான சிறகுகளையும் வைக்கின்றன. அப்போதுதானே குஞ்சுகள் கரடுமுரடான தளத்தால் காயப்படாமல் இருக்கும்! அவை குஞ்சுகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்கின்றன. குஞ்சுகளைக் கூட்டின் ஓரத்தில் வைக்கின்றன. அதனால் குஞ்சுகள் வெளியிடும் கழிவை உடனுக்குடன் தாய்ப் பறவை தனது அலகாலேயே நீக்கிக் கூட்டைச் சுத்தம் செய்கிறது. “எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்” (திபா
145:15,16).
தங்களைப்
பாதுகாக்க இயலாத, வலுவற்ற சில பறவைகளும் விலங்குகளும் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. தெய்வீகப் பராமரிப்பு அவ்வினத்தைப் பாதுகாக்க அவைகளுக்கு விரைவான கருத்தரிப்பு வாய்ப்பை வழங்குகிறது. புறாக்களிடமும் முயல்களிடமும் இதனை நாம் காணலாம். முயல் ஒவ்வொரு மாதமும் கருத்தரித்து குட்டிகளை ஈனுகிறது. கௌதாரி போன்ற பறவை இனங்கள் மாதம் 25 முட்டைகள் வரை
இடுகின்றன.
எல்லா
விலங்குகளும் தங்களைக் காக்கவும், எதிரிகளைத் தாக்கவும் தேவையான ஆயுதங்களை உடல் உறுப்புகளாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக கொம்பு, நகம், பற்கள் போன்றவற்றைக் கூறலாம். வலுவான உடல் அமைப்பு இல்லாத விலங்குகளுக்கு இறைவன் புத்திக்கூர்மையையும் வேகத்தையும் கொடுத்துள்ளார். எதிரியைக் கண்ட புள்ளிமானும் முயலும் தங்களைக் காத்துக்கொள்ள கடுமையான வேகத்தில் ஓட்டம் பிடிக்கின்றன. தங்களிடம் உள்ள ஆயுதங்களை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை விலங்குகள் தங்கள் உள்ளுணர்வால் அறிந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பசுவின் கன்று. அது நம்மைத் தாக்கவும் காயப்படுத்தவும் கொம்பு வளர்ச்சி அடையாத தலைப் பகுதியால் முட்டித் தாக்க முயல்கிறது..
உணவு
வகையில் ஆரோக்கியமானது எது? ஆபத்தானது எது? என்பதை விலங்குகள் அறிந்துள்ளன. அதில் ஆரோக்கியமானதை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுகின்றன. அதிகமான பசி வந்தாலும் கூட மற்றவற்றை எடுப்பதில்லை. இறைவன் அதை விலங்குகளுக்குப் போதித்துள்ளார். மனிதன் ஆராய்ந்து பார்த்துச் சோதித்தால் ஒழிய அதைக் கண்டுபிடிக்கமாட்டான்.
விலங்குகள்
பகுத்தறிவு இல்லாதிருப்பதால் தங்கள் உடம்பை மூடிப் பாதுகாக்க ஆடைகளை, பாதங்களைப் பாதுகாக்க பாத உறைகளை அணிந்துகொள்ளவில்லை. அதனால் கடவுள் அவைகள் பிறக்கும் முன்னதாகவோ அல்லது பிறந்த பின்னரோ ஆடைகளால் அணிவிக்கிறார். விலங்குகளைப் பொருத்து அவை தோலாக, செதில்களாக, கம்பளி உரோமங்களாக, கால் குளம்புகளாக அமைத்துக் கொடுத்துள்ளார். சில விலங்குகள் ஆண்டுதோறும் அவற்றை மாற்றுகின்றன; மற்றவை ஆயுள் முழுவதும் அவற்றை அப்படியே வைத்துக் கொண்டுள்ளன. அவை கிழிவதுமில்லை, அழிவதுமில்லை.
பறவைகளும்
விலங்குகளும் பேசுவதில்லை. ஆனால், தங்கள் குரலால் கோபம், வீரம், பசி, தாழ்வு, வேதனை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. பறக்க இயலாமல் இருக்கும் குஞ்சுகள் உரத்தச் சத்தத்தால் குரல் எழுப்பி உணவின் தேவையைத் தாய்க்குத் தெரிவிக்கின்றன.
விலங்குகளும்
பறவைகளும் தங்களைத் தாங்களே பாதுகாக்கவும், இனத்தை வலுப்பெறச் செய்யவும் வழிவகை செய்துள்ள இறைவன் அத்துடன் திருப்தி கொள்ளவில்லை. அவைகளுக்கு மகிழ்ச்சியும் எல்லா வகையான இன்பங்களை அனுபவிக்கவும் வகை செய்துள்ளார். இறைவன் உரிய காலத்தில் அவைகளுக்கு உணவும் நீரும் அளிக்கின்றார். தமது கைகளை விரித்து ஒவ்வொரு படைப்புக்கும் ஆசிரை வாரி வழங்குகின்றார். ஞானமும் பேரறிவும் கொண்ட படைப்பாளி இல்லாமல் எந்தப் படைப்புயிரும் பிழைக்கவும், வளர்ச்சி அடையவும் இயலாது என்பதுதான் உலகமே அறிந்து வைத்திருக்கும் உண்மை.
‘கனவு காணுங்கள்’ என்று நம் இராமேஸ்வரத்து வழிகாட்டி அப்துல்கலாம் கூறினார்; அவர் கூறினாலும், கூறாவிட்டாலும் நாம் எப்போதுமே கனவு காண்பதில் மட்டும்தான் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவை நிறைவேற்ற அவர் அதிகாலையில் வீடு வீடாகச் செய்தித்தாள் போட்டுவிட்டு படிக்கப் போனாரே! படிப்படியாகக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு தனக்குப் பிடித்த வழியில் முன்னேறிக் காட்டினாரே! அந்தக் கனவை நனவாக்கும் வழித்தடத்தைப் பின்பற்றி நாம் முயல்கிறோமா? அதுதான் கேள்வி!
‘என் கனவை யார் நனவாக்குவது? என்னைத் தவிர வேறு யார் நிறைவேற்றுவார்கள்? யாரால் நிறைவேற்ற முடியும்? நான் மருத்துவக் கல்லூரியில்தான் படிப்பேன்; நீ இடம் வாங்கிக்கொடு!
நான் இந்தப் பொறியியல் பாடம்தான் படிப்பேன்; அதற்குரிய மதிப்பெண்கள் வாங்க மாட்டேன்! போட்டித்
தேர்வை எழுதமாட்டேன்; ஆனால், அங்கே என்னைச் சேர்த்துவிட வேண்டியது உன் வேலை!’
‘என் நண்பர்கள் அதை வைத்திருக்கிறார்கள், இதை வைத்திருக்கிறார்கள். ஆடம்பர உடை, மொபைல், பைக், ஸ்கூட்டர்... எனக்கு எல்லாம்வேண்டும், நீங்கள் வாங்கிக் கொடுங்கள்...’
படிப்பைத்
தாண்டியும் இந்த ‘என் கனவு’ அதை நிறைவேற்றுவது உன் பொறுப்பு என்கிற மனப்போக்கு தொடர்கிறது.
நாம்
விரும்பிய வேலை, நான் விரும்பிய ஊதியம், நான் விரும்பும் வெளிநாட்டு மாப்பிள்ளை, நான் விரும்பும் சினிமா ஸ்டார் பெண்... இப்படி
நமக்குப் பிடித்த கனவுகள் ஏராளம்! ஆனால், உலகில் நம்மைச் சுற்றி இருக்கும் இளைஞர் எல்லாருமே இதே வகையான கனவுகளைத்தான் தூக்கிச் சுமந்து கொண்டு காலம் கடத்துகிறார்கள். இன்று ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்கும் போட்டி, மிகக் கடுமையான போட்டி! போகப்போக இந்தப் போட்டி கடுமையாகத்தான் இருக்கும்! பணம் பாதாளம் மட்டும் பாயாது! பெற்றோரின் வசதி வாய்ப்புகள் நமக்குத் துணையாக நிச்சயம் இருக்கும். ஆனால், நம் கடுமையான முயற்சியும் உழைப்பும் இல்லாமல் நம் கனவுகள் கைகூடாது.
எந்த
வேலைக்குப் போனாலும் வேலையில் சேர்ந்ததும் கால்மேல் கால்போட்டுக் கொண்டு பணத்தை அள்ளிக்கொட்டும் வாய்ப்புகளும் இன்றில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசுப் பணிகளிலும் கூட பணிகள் கூடுகின்றன. கண்காணிப்பும் அதிகரித்து வருகிறது.
எனவே,
கனவு காண்போம். நமக்குப் பிடித்த வாழ்க்கை பற்றி நாம்தான் கனவு காணவேண்டும். நமது வாழ்க்கைக்கான குறிக்கோள்களை நாம்தான் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
பார்வையில் தெளிவிருந்தால்தான் பாதைகள் தெளிவாகும். இதைத்தான் கனவு என்கிறோம். ஆனால், பாதையைப் பார்த்துக்கொண்டு நம் வீட்டுப் படிக்கட்டிலேயே உட்கார்ந்திருக்க முடியாது. கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு நாம்தான் பயணத்தைத் தொடங்கவேண்டும். எந்த முயற்சியிலும் எடுத்தவுடன் வெற்றிபெற்றுவிட முடியாது. சவால்கள் வரும். புதிய பணிகளில் சிரமங்கள் வரும். தடைகள் குறுக்கே வந்து வழிமறிக்கும், தோல்விகள் வரும். ஆனால், இவற்றையெல்லாம்
தாண்டித்தான் நாம் வெற்றி பெற்றாகவேண்டும். நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை நோக்கி முன்னேறியாகவேண்டும்.
நமக்கு
முன்னால் அப்துல்கலாம் மட்டுமல்ல; அவரைப் போன்ற ஏராளமான வெற்றி வீரர்கள் இத்தகைய கனவுப் பயணத்திற்கு வழிகாட்டி இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது பற்றியும் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன.
இவர்கள்
எல்லாரும் கடைப்பிடித்த சில உத்திகளை நாம் நினைவில் பதித்துக் கொண்டு செயல்பட்டால் போதும், வெற்றி நிச்சயம்.
• ‘இந்த வேலை
எனக்குப் பிடிக்கவில்லை’ என்று
ஒருபோதும் நினைக்கமாட்டேன், சொல்லமாட்டேன். என் செயல்திறனை நானே குறைத்துக் கொள்ளமாட்டேன்.
• ‘என் உழைப்புக்கேற்ற
பலன் கிடைக்கவில்லை’ என்று
ஒருநாளும் புலம்பமாட்டேன். பலன் கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன்.
• ‘இது என்
வேலையில்லை’ என்று
ஒருநாளும் ஒதுங்கமாட்டேன். மற்றவர்கள் பணியிலும் பங்கேற்பேன். கூட்டு முயற்சிகளின் மூலம் வெற்றிபெற முயற்சிப்பேன்.
• ‘இது நடக்காது,
சரியா வராது, முடியாது’
போன்ற எதிர்மறைச் சொற்களைத் தவிர்ப்பேன். செய்யக்கூடிய பணிகளில் மட்டும் உற்சாகத்துடன் பங்கேற்பேன்.
• ‘வேறு வழியில்லாமல்
இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன்’ என்று
ஒருநாளும் நினைக்கமாட்டேன், கூறமாட்டேன். உழைக்கத் தயாராக இருந்தால் ஆயிரம் வாய்ப்புகள்.
எனக்குப்
பிடித்த வாழ்க்கை அமையும் வரை என் முயற்சி தொடரும்.
இந்த
நம்பிக்கைச் சிந்தனையை நாள்தோறும் நினைவுபடுத்திக்கொள்வோம். நெஞ்சில் பதிப்போம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம்.
எனக்குப்
பிடித்த சுகமான வேலைக்காகக் காத்திருக்கமாட்டேன். என் முழுத்திறமையையும் பயன்படுத்தி, கிடைத்த வேலையைக் கொண்டு படிப்படியாக முன்னேறுவேன்.