news
சிறப்புக்கட்டுரை
ஆகஸ்டு 10 கறுப்பு நாள்

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவையில்  ஆகஸ்டு 10 அன்று தலித் கிறித்தவர்களின் நீண்டகால உரிமை கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கறுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஒருநாள் அடையாள நிகழ்வாக மட்டும் முடிவடைந்துவிடக் கூடாது. இந்திய அரசமைப்பு உறுதி செய்துள்ள சமத்துவம், சமூகநீதி, மனித மாண்பு மற்றும் சமமான வாய்ப்புக்கான உரிமையை நடைமுறைப்படுத்தும் நீண்டகால மக்கள் இயக்கமாக இது வளரவேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாகத் தலித் கிறித்தவர்கள் எதிர்கொள்ளும் இடஒதுக்கீட்டு மறுப்பு, கல்வி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வு, வேலை வாய்ப்புப் பின்தங்கல் மற்றும் சமூக அநீதிகள் குறித்து எண்ணற்ற கருத்தரங்குகள், தீர்மானங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவை பெரும்பாலும் ஒருநாள் நிகழ்வுகளாகவே முடிந்துவிட்டன. இனி அந்த அணுகுமுறை மாறவேண்டும். இந்தப் போராட்டம்ஒருநாள் கண்டனம்என்பதிலிருந்துதொடர்ச்சியான கொள்கை மாற்ற இயக்கம்என்ற புதிய கட்டத்திற்கு நகரவேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மாநிலத்தில் மொத்த MBBS இடங்கள் சுமார் 5,850 மட்டுமே இருந்த நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் மூலம் இன்று சுமார் 14,000 MBBS இடங்கள் உள்ளன. ஒரே கட்டமாக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் காரணமாக மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக ஆதிதிராவிடர் (SC/SCA) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க அளவில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மட்டுமே ஆண்டுதோறும் 850-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் SC/SCA மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. இதனுடன், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய 7.5% உள் ஒதுக்கீடு கல்வி வரலாற்றில் மிக முக்கியமான சமூகநீதித் திட்டமாக மாறியுள்ளது. 2025-26 கல்வியாண்டில் இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 650 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகவும், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த வளர்ச்சியின் முழுப் பலனும் மதம் மாறிய தலித் கிறித்தவர்களுக்குக் கிடைப்பதில்லை. சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக ஆதிதிராவிட இந்து மாணவர்களுக்கு ஒப்பான நிலையிலேயே வாழ்ந்தாலும், கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித் சமூகத்தினர் தற்போதைய 1950 குடியரசுத்தலைவர் ஆணையின் காரணமாக ஆதி திராவிடர் (SC)   இடஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை தொடர்கிறது. இதன் விளைவாக அவர்கள் மத்திய அரசின் SC இடஒதுக்கீடு, பல்வேறு கல்விச் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்து விலக்கப்படுகின்றனர். இதுவே சமூகநீதிக்கான மிகப்பெரிய முரண்பாடாகும்.

அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெரும்பாலான தலித் கிறித்தவ மாணவர்கள் அரசு உதவி பெறும் கிறித்தவப் பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். ஆனால், தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 7.5% உள் ஒதுக்கீட்டின் பயன், அதே பொருளாதார மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்ட அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, ஒரே கிராமத்தில் வாழும், ஒரே குடும்ப வருமானம் கொண்ட, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் அரசுப் பள்ளியில் படித்ததால் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பெறுகிறார்; மற்றொருவர் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் அந்த வாய்ப்பை இழக்கிறார். இந்த வேறுபாடு சமூக நீதியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் அல்லது அரசு அதிகாரி உருவாகும்போது, அந்த மாற்றம் அந்த ஒரே நபரிடம் முடிவதில்லை. அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலை, அடுத்த தலைமுறையின் கல்வி, பெண்களின் முன்னேற்றம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சமூக மரியாதை ஆகிய அனைத்திலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. எனவே, தலித் கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை என்பது வேலை வாய்ப்பிற்கான கோரிக்கை மட்டுமல்ல; அது பல தலைமுறைகளை முன்னேற்றும் சமூக முதலீடு.

இந்திய அரசமைப்பின் 14-வது பிரிவு, சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது. 15-வது பிரிவு, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. 16-வது பிரிவு, அரசு வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்பை உறுதி செய்கிறது. பிரிவு 21A, கல்வி உரிமையை வலியுறுத்துகிறது. பிரிவு 46, வழிகாட்டும் கொள்கை சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பது அரசின் கடமை என்று தெளிவாகக் கூறுகிறது. எனவே, தலித் கிறித்தவர்களின் உரிமை கோரிக்கை அரசமைப்பின் அடிப்படை நோக்கங்களோடு ஒத்துப்போகும் ஒரு சமூகநீதி கோரிக்கையாகும்.

இன்றைய காலகட்டத்தில் எந்த உரிமைப் போராட்டமும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் வெற்றிபெற முடியாது. மக்கள்தொகை, கல்வி நிலை, பள்ளி இடைநிற்றல், உயர்கல்வி சேர்க்கை, மருத்துவக் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு, வறுமை, நிலமின்மை மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறும் நிலை போன்ற அனைத்துத் தரவுகளையும் அறிவியல் முறையில் சேகரித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இத்தகைய தரவுகள் நீதிமன்றங்களிலும், நாடாளுமன்ற விவாதங்களிலும் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளிலும் வலுவான ஆதாரங்களாக அமையும்.

எனவே, ஆகஸ்ட் 10 கறுப்பு நாள் வெறும் கறுப்பு ஆடை அணியும் நிகழ்வாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டின் 39 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களைச் சந்தித்து, மதம் மாறிய தலித் கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5ரூ உள் ஒதுக்கீட்டை அதே சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையில் கல்வி பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக விசாரணைக்கு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும். நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையத்திற்குத் தலித் கிறித்தவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை வெளிப்படுத்தும் ஆதாரப்பூர்வமான தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனுடன், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் தலித் கிறித்தவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறும் நிலை குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும். சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் இணைந்த நிரந்தர செயற்குழுவை உருவாக்கி, மாநில மற்றும் தேசிய அரசுகளிடம் தொடர்ச்சியான கொள்கைப் பரிந்துரைகளை முன்வைக்கவேண்டும்.

இந்தப் போராட்டம் தலித் கிறித்தவர்களின் போராட்டமாக மட்டும் இருக்கக்கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தி மனித சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பை வலியுறுத்துகிறது. “நீங்கள் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலா 3:28) என்ற இறைவார்த்தை, இந்தப் போராட்டத்தின் ஆன்மிக அடித்தளமாக இருக்கவேண்டும். எனவே, கத்தோலிக்கத் திரு அவையின் அனைத்துப் பணிக்குழுக்கள், மறைமாவட்டங்கள், பங்குகள், துறவற சபைகள், கல்வி நிறுவனங்கள், இளைஞர் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் மற்றும் பொதுநிலையினர் இந்த இயக்கத்தில் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைப் போராட்டமாக அல்லாமல், சமூகநீதிக்காகக் கிறித்தவச் சமூகம் ஒன்றிணையும் இயக்கமாக மாற வேண்டும்.

இன்று நாம் கேட்பது சலுகை அல்ல; சமூக நீதியின் அடிப்படையில் கிடைக்கவேண்டிய சமமான வாய்ப்பையே. கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி. அந்தக் கல்விக்கான கதவு, ஒரே சமூகப் பின்னணியைக் கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு, அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக வெவ்வேறு விதமாகத் திறக்கப்படக்கூடாது.

ஆகஸ்ட் 10 கறுப்பு நாள் என்பது வெறும் கறுப்பு ஆடை அணியும் நாளாகவோ, கண்டன முழக்கங்கள் எழுப்பும் நாளாகவோ இருக்கக்கூடாது. அது தலித் கிறித்தவர்களின் உரிமைக் குரலை இந்திய நாடாளுமன்றத்திற்கும், தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கும், நீதித்துறைக்கும், நாட்டின் மனசாட்சிக்கும் கொண்டு செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தின் வெற்றி ஒருநாள் நிகழ்வில் இல்லை; ஒரு தலைமுறையின் கல்வி வாய்ப்பை மாற்றும் சட்ட மற்றும் கொள்கை மாற்றங்களை உருவாக்குவதில்தான் உள்ளது. சமூகநீதி என்பது ஒரு கோஷமல்ல; அது ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான எதிர்காலத்தை உறுதி செய்யும் அரசமைப்பின் வாக்குறுதியாகும். ஆகஸ்டு 10 கறுப்பு நாள், அந்த வாக்குறுதியை நனவாக்கும் புதிய வரலாற்றின் தொடக்கமாக அமையட்டும்.

news
சிறப்புக்கட்டுரை
“அழுகுரலைக் கேளுங்கள்; காயத்தை ஆற்றுங்கள்; நம்பிக்கையைப் புதுப்பியுங்கள்!” - சிறைப்பணி ஞாயிறு (09-08-2026)

தமிழ்நாடு சிறைப்பணி அமைப்பானது சிறைக்கைதிகளுக்கும், அவர்களின் குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு மற்றும் அவர்களின் நலனுக்காக உழைக்கும் தேசியத் தன்னார்வ இயக்கமாகும். இது இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் யூபிலி 2000-ஆம் ஆண்டில் இந்தியச் சிறைப்பணியாக அங்கீகரிக்கப்பட்டது.

நமது தன்னார்வத் தொண்டர்கள் ஏறக்குறைய நாடு முழுவதும் 850 பிரிவுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் குறிப்பாக, ஆற்றுப்படுத்துதல், மருத்துவ முகாம், இலவசச் சட்ட உதவிகள், வேலை சம்பந்தமான பயிற்சி முகாம்கள் மூலமாக இந்தியாவில் உள்ள சிறைகளில் மிகவும் தியாக உள்ளத்தோடு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டுச் சிறைவாசிகள் நமது இந்தியச் சிறைகளில் மொழி அறியாது வாடி வருகின்றனர். அவர்களது குரலைக் கேட்டு நமது தாயாம் திரு அவை அந்நாட்டுத் தூதர்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினரோடு இணைத்து வைப்பது நமது சிறப்புப் பணியாகும்.

புனித மாக்சிமிலியன் கோல்பே தன்னுடைய துணிவான வாழ்வு முறையால் சிறைக்கைதிகளைப் பாதுகாப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். புனித கோல்பே இரண்டாம் உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் சிறைக்கைதிகளோடு இருந்தபோது தனக்காக அளிக்கப்பட்ட சிறிதளவு உணவையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். பலரைச் சிறப்பானதோர் ஒப்புரவு அருள்சாதனம் பெற ஆயத்தம் செய்து, அவர்களுக்காகச் செபம் செய்தார்.

இறுதியாக, ஒரு சகோதரருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து, இன்றைய உலகில் யாரும் செய்ய இயலாத செயலை அன்று செய்து முடித்தார். இந்தத் தியாக மனநிலை பகிர்தல், தனக்கு முக்கியம் என்று கருதுகின்ற சில பொருள்கள், செபம், நேரம், பணம் மற்றும் நம்வாழ்வுமுறை ஆகியவற்றை இன்று இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

தமிழ்நாட்டில் 9 மத்தியச் சிறைச்சாலைகள், 5 பெண்கள் தனிச் சிறைச்சாலைகள், 10 மாவட்டச் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் மற்றும் கிளை சிறைச்சாலைகள் உள்பட 120 சிறைச்சாலைகளில் ஏறக்குறைய 22,631 சிறைவாசிகள் நமது வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 18 மறைமாவட்டங்களில் மறைமாவட்ட ஆயர்களது மேற்பார்வையில் சிறைவாசிகளின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, சிறைவாசிகளின் குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி, வாழ்வாதார உதவி, சிறைவாசிகளுக்கு மன ஆற்றுப்படுத்துதல், சிறைப்பணி தன்னார்வத் தொண்டர்கள் வழியாக நடைபெற்று வருகிறது.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டப் பேராயரின் உதவியுடன் உற்றார்-உறவினர் இல்லாதவர்களுக்கு மறுவாழ்வு இல்லம் ஒன்று திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சிறைவாசிகள் தங்களுக்கு ஒருவருமில்லை என்ற மன ஏக்கத்தை மாற்றும் முயற்சியாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.

மேலும், இம்மடலின் வழியாக, பேராயர்கள், ஆயர்கள், மாநிலக்குழு மற்றும் தமிழ்நாடு சிறைப்பணியின் 18 மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல், சிறைச்சாலை சந்திப்பில் திரு அவையின் பிரசன்னத்தைக் கொண்டுவருதல் போன்ற அவர்களது இடைவிடாத முயற்சிகள் விலைமதிப்பற்றவை.

தமிழ்நாட்டில் உள்ள எங்கள் 18 மறைமாவட்டக் குழுக்களின் அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நாங்கள் உளமார அங்கீகரிக்கிறோம். மறக்கப்பட்டவர்களுடன் நடந்து, சட்ட உதவியை எளிதாக்கி, சிறை நண்பர்களின் குடும்பங்களுக்கு மன ஆலோசனை, வாழ்வாதார உதவி மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவி என விடாமுயற்சியுடன் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற சேவை நம்பிக்கை இல்லாத இடத்தில் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது.

news
சிறப்புக்கட்டுரை
இளையோரே! துணிவுடன் இருங்கள்!

இளைஞர் இயேசுவில் அன்பிற்கினிய ஆண் - பெண் இளையோரே, அருள்பணியாளர்களே, ஆண் - பெண் துறவியரே, இளைஞர் பணியில் ஈடுபட்டு உழைக்கும் இயக்குநர்களே, வழிகாட்டிகளே! இளைஞர் இயேசுவின் அருளும், புதுப்பிக்கும் தூய ஆவியாரின் வழிநடத்துதலும், தாயும் தந்தையுமான கடவுளின் உடனிருப்பும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

இவ்வாண்டு முழுவதும் இளையோரை ஆற்றல்படுத்தும் கருப்பொருளாகதுணிவுடன் இருங்கள்! நான் உலகின்மீது வெற்றி கொண்டு விட்டேன் (யோவா 16:33) எனும் இறைவார்த்தை உலகளாவிய திரு அவையால் தரப்பட்டுள்ளது.

இளைஞர் இயேசுவின் நட்புடன் அவரின் விழுமியங்களை வாழ்வாக்கும் இளைஞர் பலர் துணிவுடன் உண்மைக்குச் சான்று பகர்வதையும், பொதுநலப்பணிகளில் மிளிர்வதையும், சமூக நயன்மையை (நீதியை) நிலைநாட்டுவதையும், கிறித்தவ நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவதையும், ஏழைகளின் ஏக்கக் குரல் கேட்டு அவர்களுக்காக ஈகம் செய்வதையும், எளியோர் சார்பெடுத்து அவர்களுக்குரிய வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவதையும் அவ்வப்போது கண்டு மகிழ்கிறோம். இயேசுவின் அன்புறவில் இணைக்கப்பட்ட இளையோர் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் நேர்மையுடனும் உண்மையுடனும் துணிவுடனும் நயன்மையுடனும் (நீதியுடனும்) சுதந்திரத்துடனும் பொறுப்புடனும் இலட்சியத் தெளிவுடனும் வாழ்வதையும் நாம் காணத் தவறுவதில்லை.

காங்கோ நாட்டின் தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தர ஆய்வாளராகப் பணியாற்றிய 26 வயதான ஃப்ளோரிபெர்ட் பவானா சுய் (Florivert Bwana Chuii) என்ற இளைஞனின் வாழ்வை ஓர் எடுத்துக்காட்டாக உங்களுக்குத் தர விரும்புகிறேன். உங்களைப் போல ஒரு சிறந்த கிறித்தவ இளைஞனாக வாழ்ந்த ஃப்ளோரிபெர்ட், நீங்கள் கிறித்தவக் கடமைகளை ஆற்றுவது போலவே எளிய மக்களுக்கும், தெருவோரக் குழந்தைகளுக்கும் உதவுவதைத் தனது அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார். தான் பணியாற்றிய காங்கோ நாட்டின் கோமா நகருக்குக் கடத்தல் கும்பல், கப்பல் வழியாகத் தரமற்ற, கெட்டுப்போன உணவுப் பொருள்களைக் கடத்த முயற்சித்தபோது அதை நேர்மையுடன் தடுத்தார்.

ஆயிரக்கணக்கான டாலர்களைக் கடத்தல்காரர்கள் வழங்க முன்வந்தபோது, அதை வாங்கத் திட்டவட்டமாக மறுத்தார். “பணத்திற்காக ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் உயிரை என்னால் பணயம் வைக்க இயலாது; எனது கிறித்தவ மனச்சான்று இதற்கு ஒருபோதும் இடம் தராதுஎன்று கூறி துணிச்சலுடன் கெட்டுப்போன உணவுகளை அழிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆத்திரமுற்ற அந்தக் கடத்தல் கும்பல் 2007 சூலை 09 அன்று நேர்மையோடும் துணிவோடும் கிறித்தவ மனச்சான்றோடும் நிலைப்பாடு எடுத்த 26 வயதான இளைஞனைக் கொடும் வதைசெய்து, கொன்று கோமா நகரின் தெருவில் வீசி எறிந்தது. இளைஞர் இயேசுவின் உண்மைக்கான துணிவைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த அந்த இளைஞனை நினைவில் வாழும் திருத்தந்தை பிரான்சிஸ் மறைச்சாட்சியாக அறிவித்தார். திருத்தந்தை லியோ 2025 சூன் 15 அன்று இவரை அருளாளராக அறிவித்தார். இவர் அன்றாடம் வாசித்து கிறித்தவ மனச்சான்றில் வேரூன்ற வழிகாட்டிய இவரது விவிலியம் உரோமை நகரிலுள்ள புனித பர்த்தலமேயு பெருங்கோவிலில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.

அன்புமிக்க இளையோரே! நீங்கள் அன்றாடம் இறைவார்த்தையை வாசிக்கிறீர்களா? உங்கள் திருவிவிலியம் உங்களை இறையாட்சி விழுமியங்களின்படி துணிவுடன் செயல்பட அனுமதிக்கின்றதா? இன்று இளைஞர் பலர் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். தாழ்வு மனப்பான்மையிலும், தம்மை ஏற்க இயலா நிலையிலும், குற்றப்பழி உணர்விலும் தன்னம்பிக்கையின்மையிலும் உழல்கிறார்கள். இணையவழி அச்சுறுத்தல், ஊடக அடிமைத்தனம், பாலுணர்வைத் தூண்டும் படங்கள், இணைய விளையாட்டுகள் போன்றவற்றால் முடமாக்கப்படுகிறார்கள். வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற, நிலைத்தன்மையில்லா வேலை, அச்சுறுத்தும் தகுதித்தேர்வுகள், ஏழைகளின் உயர்கல்வி வாய்ப்பினைப் பறிக்கும் கல்விக் கொள்கைகள், மும்மொழிக் கொள்கைத் திணிப்பு போன்றவைகளால் நிலைகுலைக்கப்படுகிறார்கள்.

ஆணவப் படுகொலை, சாதியப் பாகுபாடு, காவல்நிலையப் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கவர்ச்சி அரசியல், நாயக வழிபாடு, சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் திட்டங்கள், வாழும் உரிமையை மறுக்கும் அரசாணைகள் போன்றவற்றால் சிதைக்கப்படுகிறார்கள். அக, புறக் காரணிகளால் அச்சத்தில் வாழும் இளையோருக்காக நம் திரு அவை கண்ணீர் வடிக்கிறது (கிறிஸ்து வாழ்கிறார் எண்:75).

இளைஞர்களின் அச்சங்களை நீக்கித் துணிவூட்டக் காத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் இயேசு. “உலகில் உங்களுக்குத் துன்பம்  உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள்!” என்கிறார். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறுமென உறுதியூட்டுகிறார். இளைஞர் இயேசு தமது வரலாற்று வாழ்வில் ஒடுக்கப்பட்ட நிலையில், அச்சத்தில் வாழ்ந்த ஏழையர், சமாரியர், நோயுற்றோர், நாடிழந்து அடிமையானோர், பெண்கள், யாருமற்றோர் போன்றோருக்குத் தமது உடனிருப்பால், வார்த்தையால், நலமாக்கும் செயல்களால், வல்ல செயல்களால், விழிப்புணர்வாக்குதலால், விடுதலைச் செயல்களால் துணிவூட்டினார். அதுபோலவே, தந்தை இறைவனோடு கொண்டிருந்த நெருக்கமான உறவால், இறைத் தந்தையின் திருவுளம் அறிந்ததால், தம்மைப் பற்றிய தெளிவான புரிதலால், இறையாட்சி எனும் பொதுமைத் தத்துவத்தால், தமது இலட்சியத் தெளிவால், ஆழ, அகலமான சுதந்திரத்தால், அடிமைத்தனங்களில்லாத் தூய்மையால், பகுத்தாயும் பார்வையால், அளவற்ற அன்பால், ஈடில்லா ஈகத்தால் இவ்வுலகின்மீது வெற்றி கொண்டார்.

இன்று பல்வேறு அச்சங்களால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்களை வலுவூட்ட இளைஞர் இயேசு நமக்கு ஆழமான அழைப்பு விடுக்கிறார். “கவனச் சிதறல்களிலிருந்து விலகி, கிறிஸ்துவுடன் ஆழமான நட்பை வளர்த்து, பிளவுபட்ட உலகில் அமைதியின் செயலூக்கமுள்ள தூதுவர்களாக வாழுங்கள்என்று திருத்தந்தை லியோ இளையோருக்கு அழைப்பு விடுக்கிறார். “உங்கள் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அமைதியைக் கட்டி எழுப்புங்கள்என்ற சிறப்புச் செயல்பாட்டிற்குத் திசைகாட்டுகிறார்.

துணிவுடன் வாழ நாம் இளைஞர் இயேசுவின் ஆழமான நட்பு வளையத்திற்குள் நம்மை இணைப்போம். இளைஞர் இயேசுவோடு நெஞ்சார்ந்து உரையாடுவோம்; உறவாடுவோம். இளைஞர் இயேசு தமது சீடர்களோடு இணைந்து இயக்கமாகச் செயல்பட்டது போன்று எல்லாப் பங்குகளிலும் ஆண்-பெண் இளைஞர் இயக்கங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு திரு அவையின் இளைஞர் பணிக்கான கொள்கையின் அடிப்படையில் செயல்படுவோம்.

உளச்சிக்கல்களில் வாழும் இளையோருக்கு உளநல உதவிகள் வழங்கிட மறைவட்ட, மறைமாவட்ட அளவில் உளநல ஆலோசகர்களை நியமிப்போம். மனநல முகாம்களை நடத்துவோம். இணைய அடிமைத்தனம், போதை நோய் போன்ற அடிமைத்தனங்களிலிருந்து இளையோர் வெளிவர மறுவாழ்வு மையங்களைப் பயன்படுத்துவோம். தொடர் வழிகாட்டுதல்கள், அருள்வாழ்வுப் பயிற்சிகளை வழங்குவோம்.

மாவட்ட அளவில் இளையோருக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவோம். தொழில் முனைவோர் பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களை யும் வழங்குவோம். இளைஞர் உருவாக்கத்திற்காக ஆண்டுதோறும் தலைமைத்துவம், சமூகப் பகுப்பாய்வு, அரசியல் பகுப்பாய்வு போன்றவற்றை உள்ளடக்கிய மூன்று கட்டப் பயிற்சிகளை வழங்குவோம்.

இளைஞரின் வாழ்வுரிமையைச் சீர்குலைக்கும் கல்விக்கொள்கை, பொருளாதாரத் திட்டங்கள், கனிமவளக் கொள்ளை, தகுதித் தேர்வுகள் போன்றவற்றிற்கெதிராகச் சட்டப்பூர்வமான நமது எதிர்ப்புகளைப் பதிவு செய்வோம். நம் சிந்தனையொத்த பிற முற்போக்கு இயக்கங்களோடும் கைகளைக் கோர்ப்போம்.

தமிழ்நாடு ஆயர் பேரவையின் சிறப்பு அறிவுறுத்தலின்படி மறைமாவட்ட இளைஞர் இயக்கங்கள் மறைமாவட்டங்களில் செயல்படும் துறவறத் தாரோடு இணைந்து, பன்முனை இளைஞர் உருவாக்கப் பணிகளில் ஈடுபடுவோம். துறவற சபைகளும் மறைமாவட்டங்களும் சிறப்புக் கரிசனையோடு இளையோரை நம் பணியாற்றும் தளங்களில், பங்குகளில், கல்வி நிறுவனங்களில், இயக்கமாக்கி இறையாட்சிப் பணிகளில் ஈடுபட வழி காட்டுவோம்.

இளைஞரே, நீங்கள் இறைவனின் இப்பொழுது (கி.வா:178). கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார், உங்களுடன் இருக்கிறார், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ‘கிறிஸ்து வாழ்கிறார், நீங்களும் உயிர்த்துடிப்புடன் இருக்கவே அவர் விழைகிறார் (கி.வா:1).

இளமை ஒரு கொடை! கவலையும் அச்சமும் நம் கனவுகளையும் நம்பிக்கையையும் உடைக்க நேரிடும். எனவே, கவலையையும் அச்சத்தையும் அகற்றிவிட்டுத் துணிவுடன் எழுந்து நில்லுங்கள். உங்களால் புதிதாகத் தொடங்க முடியும். உங்களுடைய நம்பிக்கையைக் கொள்ளையடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. துணிவுடன் உங்களை உறுதிப்படுத்தும் தூய ஆவியார் உங்களோடு இருப்பாராக! இளமைத் துடிப்போடு அச்சம் அகற்றிஇதோ, ஆண்டருடைய அடிமைஎனத் துணிவுடன் தன்னை இறையழைத்தலுக்குக் கையளித்து, பணி செய்ய விரைந்து சென்ற இளம்பெண் மரியாவின் வழிநடத்துதல் உங்களோடு இருப்பதாக!

news
சிறப்புக்கட்டுரை
மகிழ்ச்சியும் மனநிறைவும் (இளமை ஒரு சவால்! – 09)

நாம் வாழ்க்கையில் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்? மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய அடிப்படையான தேவை எது?

வெற்றி! வெற்றி! வெற்றி! இதைத்தான் இன்றைய சந்தைச் சமுதாயம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

போட்டிபோடு, வெற்றி பெறு,

எப்படியாவது வெற்றி பெறு! நன்றாகப் படி, மற்றவர்களைத் தாண்டி முன்னேறு!

பெரிய வேலைக்குப் போ,

நிறைய பணத்தைத் தேடு!

அதன் பிறகு... பெரிய கார் வாங்கு,

பெரிய வீடாகக் கட்டு!

அதன் பிறகு... இன்னும் முன்னேறு,

முன்னேறிக்கொண்டே இரு!

உள்நாட்டில் என்ன சம்பாத்தியம்? வெளிநாட்டுக்குப் போ. அங்கே இன்னும் நிறைய சம்பாதிக்கலாம். இன்னும் அதிகமான வசதிகளைத் தேடிக்கொள்ளலாம்.

அதன்பிறகு... இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நீயே சொந்தமாகத் தொழில் தொடங்கலாம், கல்வி நிலையம் தொடங்கலாம். கல்வி நிலையங்கள் இன்றைக்கெல்லாம் எவ்வளவு பெரிய தொழில் தெரியுமா?

இப்படி வாழ்க்கை என்பதே நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம், எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் மதிப்பிடப்படுகிறது.

பணம், படாடோபம், பெரிய கார், பெரிய கட்டடம்... இவைதாம் வெற்றிகரமான வாழ்க்கை என்று சந்தைச் சமூகம் நமக்குத் திரும்பத் திரும்பக் கற்றுக்கொடுக்கிறது. எனவே, பெரிய மனிதராக வேண்டுமானால் பணம் நிறையவேண்டும் என்கிற குறிக்கோளை நோக்கி ஓடத் தொடங்குகிறோம். முட்டி மோதி முன்னேறப் பார்க்கிறோம். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறுகிறோம். மற்றவர்களை ஏமாற்றிக் குறுக்கு வழிகளைக் கையாளவும் நாம் தயங்குவதில்லை. ஏன்? நம் நண்பர்கள், உறவினர்களைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாமல் போகிறது. பெற்றோரைப் பற்றிச் சிந்திக்க மறந்து போகிறோம். குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் நேரம் செலவிடக்கூட முடியாமல் போகிறது.

ஓயாத உழைப்பு... ஓயாத போட்டி... நம்மைச் சுற்றி பொறாமை...  சூழ்ச்சி... பகை...! நாம் பலவகைகளில் தனிமைப்பட்டுப் போகிறோம். உயர தனிமை, கவலை, சோர்வு, மன அழுத்தம். இப்படிப் பல சிக்கல்களைச் சந்திக்கின்றோம்.

மிகுந்த உற்சாகத்தோடும் துடிப்போடும் வாழ்க்கையைத் தொடங்கும் பல இளைஞர்களும் இளம்பெண்களும் இன்று இந்தவகை மனச்சோர்விற்குச் சுலபமாகப் பலியாகிப் போகின்றனர்.

வாழ்க்கையில் பணம் தேவைதான்; நம் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற அடிப்படை வசதிகளும் தேவைதான்; ஆனால், பணமும் வெற்றியும் மட்டும் மகிழ்ச்சியாகிவிட முடியாதுமகிழ்ச்சி என்பது மன நிறைவிலும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நாம் கொண்டிருக்கும் நல்லுறவிலும்தான் இருக்கிறது.

இளம் வயதில் நாம் நன்றாக உழைக்கவேண்டும்; ஒவ்வொரு நாளும் உழைக்கவேண்டும்; சந்தேகமில்லை. ஆனால், அப்படி உழைப்பதற்குத் தகுந்த முறையில் நம் உடலையும் மனநிலையையும் கவனமாகக் காத்துக்கொள்ளவேண்டும். இதுவும் முக்கியம்.

ஒவ்வொரு நாளும் நல்ல உணவு, கொஞ்சம் உடற்பயிற்சி, கொஞ்சம் வழிபாடு அல்லது தியானம், உறவாடக் கொஞ்சம் நேரம், தினமும் நல்ல ஓய்வு, தூக்கம்...

தேவையற்ற நட்பு, அளவுக்கதிகமான தொலைப்பேசி உரையாடல், புகை, மது, போதை...  இப்படியெல்லாம் நம் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கக்கூடியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டால் நன்றாக உழைக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

தினமும் உழைக்கலாம். நீண்ட நாள்கள் உழைக்கலாம். மற்ற சக நண்பர்களோடு கூட்டாகப் பணிசெய்து முன்னேறவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. சில வேலைகளில் அவ்வப்போது போட்டி தவிர்க்க முடியாததுதான். அப்போதும் நாம் குறுக்கு வழிகளையோ, தவறான வழிகளையோ தேடிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். நேர்மையான பாதையில், நிதானமாக நீண்ட நாள் நம்மால் உழைக்க முடியும். படிப்படியாக மனநிறைவோடு முன்னேறவும் முடியும். நம் குடும்பத்தோடும் பெற்றோருடனும் பிள்ளைகளோடும் தினமும் நேரம் செலவிடவேண்டும். இவர்களோடு நாம் செலவிடுகின்ற நேரங்கள் மகிழ்ச்சியானவை, மனநிறைவு தருபவை.

வெற்றியும் மகிழ்ச்சியும் வாழ்வின் இரண்டு பக்கங்கள். மகிழ்ச்சி இல்லாத வெற்றி அர்த்தமற்றது. வெற்றி இல்லாத மகிழ்ச்சி நிலைத்து நிற்க முடியாதது.

மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தொலைத்துவிட்டு வெற்றியின் உச்சியைத் தொட முயல்வதில் பயனில்லை. கண்களை விற்றுச் சித்திரம் வாங்கி என்ன பயன்? இதை எப்படிப் பார்ப்பது? எப்போது பார்ப்பது?

வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் சமமாக மதிப்பளிப்பேன். என் பணியில் வெற்றி பெற்று முன்னேற முயல்வேன். ஆனால், அதற்காக என் உடல் நலம், மன அமைதி, நல்ல குடும்ப உறவு, நட்பு ஆகியவற்றை விட்டுக்கொடுக்கமாட்டேன்.

news
சிறப்புக்கட்டுரை
சமூக ஊடகங்கள் சுமக்கும் பொய்மை!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை  அறிவே பலம்(Knowledge is the power)  என்றவர்கள், அந்த அறிவும் நிறைய தகவல்களைச் சேகரித்து வைப்பதே பலம் என்றும் கற்பித்தார்கள். எனவே, அன்றைய மாணவர்கள் எந்த நாட்டுக்கு எது தலைநகர்? எந்த நதிக்கரையோரம் எந்த நகரம் இருக்கிறது? என்பது போன்ற பல தகவல்களைத் தங்கள் மனத்தில் பதித்துவைப்பதேபொது அறிவுஎன்று நம்பி தகவல்களைத் தங்கள் மூளையில் சேகரித்து வைத்தார்கள். ஆனால், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், இந்தத் தகவல்கள் எல்லாம் செல்போன்கள் வழியாக நமது பாக்கெட்டில் வந்து குடிகொண்டு விட்டபடியால்தகவல்களைச் சேகரிப்பது அறிவுஎன்ற பழைய பல்லவி பழுதாகிவிட்டது.

கூடுதலாகத் தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தது அறிவு என்பது அபத்தமாகி, இன்று நாம் தேடாமலேயே பல தகவல்கள் தொடர்ந்து நம்மைச் சூழ்ந்து நின்று நம்மையே அலைக்கழித்து விடுகின்றன.

அலைப்பேசியில் ஒரு தகவலைத் தேட ஆரம்பித்த அடுத்த வினாடியே நாம் தேடுவது தொடர்புடைய பலப்பல தகவல்கள் அடுத்தடுத்து நமக்கு முன்னால் வந்து விழும் நிலையை இன்று காணமுடிகிறது. உதாரணமாக, இயற்கை விவசாயம் குறித்து நாம் அறிய விரும்பி அலைப்பேசியில் தேடினால் அடுத்த நொடி நாம் தேடாமலேயே அந்த இயற்கை விவசாயம் குறித்த பல தகவல்கள் நமது அலைப்பேசியில் அடுத்தடுத்து நம் கண்முன்பு வந்து போகின்றன. அவ்வாறே ஒரு நபரைக் குறித்து நல்ல தகவல்களைத் தேடினால் அடுத்த நொடியே அவரைப் பற்றிய பலரின் பார்வையில் பல நல்ல தகவல்கள் வந்து சேர்கின்றன. அவரைப் பற்றிய விமர்சனங்களைத் தேடினால் அதையொட்டி அவரைப் பற்றிய பல விமர்சனங்களாகவே வந்து விழுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், மனித மூளை எளிதாகவே சலவை செய்யப்படுகிறது. நாம் தேடுகிற ஒரு செய்தியைக் குறித்து அடுத்தடுத்து அதே போன்று செய்திகள் நமது கண்களில் திரும்பத் திரும்பப் படுவதால், அதுவே அத்துபடியாகி நமது மூளையின் மூலம்அந்தச் செய்தி உண்மையா? பொய்யா?’ என்று நாம் ஆராய்ந்து உணர்ந்து பார்க்காமலேயே நம் ஆழ்மனத்தில் அப்படியே பதிந்து விடுகிறது.

இந்தச் சூழலில், ‘இன்று அறிவு என்பது எது?’ என்கிற கேள்வி நம்முன் எழுகிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே அறிவு எனப்படுவது எது என நம் முப்பாட்டன் வள்ளுவன் தெளிவாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423)

என்று நமக்கெல்லாம் கூறிச் சென்றுவிட்டான். இருப்பினும், தகவல்களைச் சேகரிப்பது அறிவு என்றெல்லாம் நம்பிய நமது கல்விமுறை, அத்தகவல்கள் மலிந்துகிடக்கும் இன்றைய நாளிலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை உணராமலேயே, நமக்கும் உணர்த்தாமலேயே இன்றுவரை நமக்குக் கற்பிக்கப்படுகிறது. இதனால் கேட்கும் எந்த ஒரு தகவலையும் உண்மையா? பொய்யா? என்று ஆய்ந்தறிய நம் நாட்டில் படித்தவர்கள் என்று கூறப்படுகிறவர்கள் உள்பட அனைவரும் பயிற்சி பெறாததால், அப்படிப் பழகாததால், தான் உள்வாங்கிய தகவல்களை எல்லாம் அப்படியே நம்பிவிடும் போக்கு இந்தியச் சமூகத்தில் தாராளமயமாகி இருக்கிறது. இதனால் நம் நாட்டு மக்களின் மெய்ப்பொருள் காணப் பழகாத இந்நிலையைப் பொய்யர்களும் போலிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்றிவிடும் நிலை ஏற்படுகிறது. நமது சனநாயக அடிப்படை உரிமையானஒருவருக்கு ஓர் ஓட்டுஎன்கிற தத்துவமே களவாடப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றிய அரசின் செய்தித்துறை மந்திரியாக இருந்த தமிழர் . இராசா என்பவர், ஓர் இலட்சத்து எழுபதாயிரம் கோடி அளவிற்கு ‘2ஜிஅலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டார் என்கிற ஒரு பொய்யை ஒன்றிய அரசு அதிகாரி தேசாய் என்பவர் திட்டமிட்டே கொளுத்திப் போட, அதனைத் தொடர்ந்து பல ஊடகங்கள் வழியாக அது திரும்பத் திரும்ப நமக்கு முன்பு ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஓர் இலட்சத்து எழுபதாயிரம் கோடி என்பதும், எவ்வளவு பெரிய தொகையை அவ்வளவு எளிதாக ஒருவர் சம்பாதிக்க முடியுமா? என்றெல்லாம் கூட யோசிக்காத இந்நாட்டு மக்கள் அனைவரும் அதை நம்பினர். ஆனால், அந்தப் பொய் ஊதி ஊதி ஊடகங்களால் திட்டமிட்டே பெரிதாக்கப்பட்டு, இந்தியாவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.

இதற்கிடையில் குற்றம் சுமத்தப்பட்ட . இராசா தனிநபராக நின்று நீதி மன்றத்தில் வாதாடி, ‘இது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுஎன நீதிமன்றத் தீர்ப்பு பெற்றார். ஆனால், பொய்யைப் பரப்பிய அளவுக்கு அதன்மீது வெளியிடப்பட்ட தீர்ப்பை, அதன் உண்மைத்தன்மையை ஊடகங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாததால் அத்தகைய தீர்ப்பு வந்த பிறகு இன்றும் கூட அந்தக் குற்றச்சாட்டைப் பலர் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆக, ‘மெய்ப்பொருள் காண்பதே அறிவுஎன்கிற தாரக மந்திரத்தைத் தமிழர் நாமும் கூட உணராத காரணமாக, அதற்கேற்ப கல்வி கற்பித்தல் முறை இங்கும் அமையாத காரணமாகப் பகுத்தறிவு பகலவன் தோன்றிய தேசமான தமிழ்நாட்டிலும் சமூக ஊடகப் பிரசாரங்கள் மூலம் மக்களின் மனங்களில் எவர் வேண்டுமானாலும் திட்டமிட்டு ஊடுருவி, எளிதாக ஆதிக்கம் செலுத்தி எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. மன்னராட்சியில் ஒற்றர்கள் போர்வீரர்களை ஒரு நாட்டிற்குள் ஊடுவுருவச் செய்து, உள்நாட்டில் கலகம் விளைவித்து, ஆட்சியைக் கவிழ்த்து கைப்பற்றுவதுபோல, இன்று மக்களாட்சியில் பொய்த்தகவல்களைத் திரும்பத் திரும்பச் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் மனங்களில் விதைத்து, மூளையை மழுங்கச் செய்து, அவர்களின் ஓட்டு உரிமையையே கைப்பற்றி ஆட்சி அமைக்க முடிகிறது.

மக்களின் சனநாயக உரிமையையே பொய்த் தகவல்களால் வேட்டையாட முடியும் என்றால் நமக்குப் படிப்பு எதற்கு? பட்டம் எதற்கு? தேடுவதும் கண்டுபிடிப்பதும்தான் கற்றல்; தேடவைப்பதும், கண்டுபிடிக்கத் தூண்டுவதும்தான் கற்பித்தல் என்கிற புரிதலில், கற்றல் கற்பித்தல் என்கிற கல்வியின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, கல்வி கற்பிக்கக் கல்வியாளர்கள் முன்வரும்போது இத்தகைய ஆபத்திலிருந்து நம் சமூகம் காப்பாற்றப்படும். அதிலும்எதைத் தேட, எதைக் கண்டுபிடிக்கத் தூண்டுவது?’ என்கிற வினாவை எழுப்பி, உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்கத் தூண்டுவதே கல்வி என்கிற ஒற்றை நோக்கில் கல்விப்பணி செய்தால் அதுவே அறிவியல் மற்றும் ஆன்மிகப் புரட்சி செயலாக மாறும். இன்று திரு அவையின் கல்வி நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய அறைகூவல்.

மக்களிடம் அறிவியல் பார்வை ஏற்படுவதுடன், உண்மையை உணரும் ஆன்மிக வழிநடத்தலும் மக்கள்மயமாவதால் பொய்யர்களும், அவர்தம் பொய்மையும் மக்களிடம் தோற்றுப் போய் சாமானிய மக்களின் சனநாயக உரிமை காக்கப்படும். ஆக, கல்விப்பணி மூலம் நாம் முன்னெடுக்கும் ஒரு சிறு மாற்றுச் செயல் மக்களிடம் அறிவியல் பார்வை, ஆன்மிக வளர்ச்சி, சனநாயக உரிமைப் பாதுகாப்பு எனப் பல பயன்பாடுகளை வழங்கும்.

நாம் முன்னெடுக்கும் சில திட்டங்கள் பல பொய்யர்களின் பொய்மையைச் சமூகம் உணர வழிவகுக்கட்டும்.

news
சிறப்புக்கட்டுரை
இளைஞனே! எங்கே உனது ஆற்றல்?

மனிதன் தொடக்கத்தில் சமூகமாகச் சேர்ந்து வாழத் தொடங்கியபொழுது நாகரிகம் வளர்ச்சி அடைந்தது என்பது  அனைவரும் அறிந்ததே. அந்த வளர்ச்சி ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் வழியாக அதாவது, தேவையைக் குறித்து அல்லது அவர்களின் அவசியத்தை உணர்ந்து வாழ்ந்ததன் வழியாக மனிதனின் பண்பு நலன்களும் அங்கே வளர்ச்சி அடைகிறது. இவ்வாறாக மனிதனின் வாழ்வில் தொழில்நுட்பமும் புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

தமிழ்ச்சமூகம் தோற்றமும் இயக்கமும்

தமிழ் மண்ணில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் வாழ்ந்தது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக, அண்மையில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே செழிப்பான பெருநகர நாகரிகம் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துமுறை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சங்க காலம் தொடங்கி, அயல் நாட்டவரின் வருகை மற்றும் சுதந்திரப் போராட்டம் என அனைத்துக் காலகட்டங்களிலும் தமிழ் மக்களும் மிகத் திறமையாகச் செயல்பட்டவர்கள், சிறப்பாகப் பேசப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏன், இன்றளவும் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது என்பதும் பெருமைக்குரியதே!

இளம்பருவத்தினரின் ஆற்றலும் பங்களிப்பும்

இளைஞர்கள் மறுக்க முடியாத, மறைக்க முடியாத மிகப்பெரிய சக்தி என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறோம்; அதைப் பல நேரங்களில் கண்டும் வியந்திருக்கிறோம். மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், கேரள மாநிலத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மாணவன் ஒருவன் இவ்வாறாக அவரைக் கேட்கிறான்: “இந்தியாவினுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?” அதற்கு அப்துல் கலாம் இவ்வாறாகப் பதில் கூறினார்: “நீங்கள்தான்.” அதாவது ஆறு கோடி இளைஞர்தான் இந்தியாவின் பலம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் வரலாற்றில் மொழி, இனம், நிலம், சமூகநீதி மற்றும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் உலக அளவில் கவனம் ஈர்த்தவை. சுதந்திரப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம், ஈழத்தமிழர்களின் வாழ்விற்கான போராட்டம், தமிழ் சமூகத்தின் போர்க்குணத்தையும், உரிமைக்கான சமரசமற்றக் குரலையும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியப் போராட்டங்கள் ஆகும். சிறப்பாக, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் (2017) தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒற்றுமையும் உறுதியும் ஒன்றிய-மாநில அரசுகளைச் சட்டத்திருத்தம் கொண்டு வரச்செய்து, ஜல்லிக்கட்டு தடையை வெற்றிகரமாக நீக்க வைத்தது

திசைமாறும் இளைய சமுதாயம்

இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒரு பகுதி, சமூக வலைதளங்களின் (Reels) மாய உலகத்தில் தங்களது விலைமதிப்பற்ற நேரத்தை வீணடித்து, எண்மத் தொழில்நுட்ப (Digital) அடிமைத்தனத்திற்கு ஆளாகி வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய போதைப்பொருள் பழக்கம் அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை அச்சுறுத்துவதோடு, குற்றச்செயல்களிலும் தள்ளுகிறது. மேலும், ஆழமான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், மேலோட்டமான தகவல்களை நம்பி திசைதிருப்பப்படும் இவர்கள், சினிமா மற்றும் அரசியல் நடிகர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி, தங்களது உண்மை வாழ்க்கையை அழித்தும் தொலைத்தும் வருகிறார்கள் என்பது பெரும் கவலைக்குரியது.

மாறிவரும் தமிழ்நாட்டு இளையோரின் சவாலான மறுபக்கத்தைப் போல, மறுபுறம் தலைநகர் டெல்லியில் வடமாநில இளைஞரும், மாணவரும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு (NEET & National Education Policies) எதிராகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். முறையான கல்வி உரிமை, வினாத்தாள் கசிவுகளுக்கு நீதி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் தீவிரமான கேள்விகளுடன், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வீதிகளில் அவர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்கள் நாட்டின் கல்விச் சீர்திருத்தத்திற்கான வலுவான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

கொண்டாட்டங்களும் கொண்டாடும் முகங்களும்

போதைக் கலாச்சாரம், ரீல்ஸ் மாயை மற்றும் குருட்டுத்தனமான நடிகர் வழிபாடுகள் என இன்றைய தமிழ்நாட்டு இளையோரின் வாழ்வு திசைமாறிச் சென்றாலும், போராடும் மரபும், உரிமை மீட்பின் வரலாறும் கொண்ட தமிழினத்தின் இரத்தம் ஒருபோதும் உறையாது. ஜல்லிக்கட்டுக்காகவும், இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், ஈழத்தமிழர் உரிமைக்காகவும் தன்னிச்சையாக விழித்தெழுந்து ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த அதே வீரமிகு இளையோர் இருக்க, இன்று வடமாநில மாணவர்கள்நீட்போன்ற கல்வி உரிமைக்காக நாடாளுமன்ற வீதிகளில் அனல் பறக்கப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் எங்கே இருக்கிறோம்?

கொண்டாட்டங்களும் கொண்டாடும் முகங்களும் எப்போதுமே நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவதில்லை; மாறாக, நம் கைகளில் ஏந்தும் புத்தகங்களும், சிந்திக்கத் தொடங்கும் விழிப்புணர்வுமிக்க கேள்விகளுமே மாற்றத்தை உருவாக்கும். எனவே, சுயநல வணிகக் கருத்துகளுக்கும், மாய உலகப் பிம்பங்களுக்கும் அடிபணிந்து வீணாகும் விலைமதிப்பற்ற இளமையை, இனியாவது தடுத்து நிறுத்துவோம். நம் இனத்தின் உரிமைக்காகவும், கல்வி நலனுக்காகவும் மீண்டும் அந்த அர்த்தமுள்ள போராட்டக் களத்திற்குத் திரும்புவோம்.

இனிமேல் கைப்பேசித் திரைகளில் மூழ்கிக் கிடக்காமல், மெய்நிகர் உலகக் கொண்டாட்டங்களை அறவே விலக்குவோம்; போதைப் பழக்கத்திற்கும் போலிப் பிம்பங்களுக்கும் விடை கொடுத்துவிட்டு, சுயசிந்தனையையும் புத்தக வாசிப்பையும் நமது ஆயுதங்களாக மாற்றுவோம். நம்மை நாமே சுயஆய்வு செய்துகொண்டு, தனிநபர் புகழ்ச்சிகளைத் தாண்டி சமூக நலனுக்காகவும், கல்வி உரிமைக்காகவும் குரல் கொடுப்போம். அடிமைத்தனத்தின் அடையாளங்களை உடைத்தெறிந்து, அறிவுப்பூர்வமான பாதையில் புதிய வரலாறு எழுத இன்றே உறுதியேற்போம்.