news
சிறப்புக்கட்டுரை
முதல்வரே... மனந்திறந்து பேசிடுங்கள்!

ஓர் அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டும்? ஒரு நல்ல அரசியல் தலைவரின் அடையாளம் என்ன?

அவர் தமிழ்நாடு அறிந்த மூத்த அரசியல் தலைவர். அவர் தன் தொகுதிக்குள் செல்லும்போது, கார் கண்ணாடிகளை இறக்கிவிடுவார்; தெருவில் செல்வோர் அனைவருக்கும் பாகுபாடின்றி முகம் பார்த்துவணக்கம்வைப்பார். வயது மூப்பு காரணமாகச் சில வேளைகளில் ஆள் இல்லாத இடங்களில்கூட கும்பிடுவார். அவரது ஓட்டுநர் கூறுவார்: “தலைவரே, ஆள் இல்லாத இடங்களில் கூட வணக்கம் வைக்கிறீர்கள்எனக் கூறிப் புன்னகை செய்வார்.  “60 வருடமாகப் பழகிப்போச்சு தம்பிஎனக் கூறி தன் இடி சிரிப்பால் நழுவுவார்.

அரசியல் தலைவரின் உறவினர் ஒரு நேர்காணலில் சொல்கிறார்: “ஐயா, எப்பொழுதும் தமது தொகுதி மக்களின் நேரடித் தொடர்பில் இருக்கவேண்டும்என எங்களுக்கு அறிவுறுத்துவார். அவரும் நடந்த சட்டமன்றத் தேர்தல் மாய அலையில் மூழ்கிப்போனார்; தோல்வி அடைந்தார்.

இதற்கு எதிர்மறையாக, புதிய முதல்வர் 30 மாவட்ட மக்களைச் சந்திக்கவில்லை. 200 தொகுதிகளின் காற்றை அவர் சுவாசிக்கவில்லை. ஆயினும், மக்கள் வாக்கு அளித்தார்கள், முதல்வரானார். மக்கள் தீர்ப்பை மதித்து  ஏற்பதே  அறிவுடை மையாகும்.

புதிய முதல்வர் உடல்மொழி, பேச்சுகள், வார்த்தை உச்சரிப்பு என ஒவ்வோர் அசைவும் எட்டுக் கோடி தமிழ் மக்களின் வாழ்வாகும்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் தயாரிக்கப்பட்ட பதில் வருத்தமானதே. திருச்சி  கிழக்கு வாக்காளர் நன்றி அறிவிப்பு  உள்ளரங்கக் கூட்டத்திலும் இது தொடர்கிறது.

பதவிப் பிரமாணமேற்ற மேடையில்கஜானா காலிஎன்ற தப்பித்தலை முன்வைக்கிறார். தான் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், அடுத்த நிமிடமே  மகளிருக்கு மாதம் 2,500; தமிழ் நாடு முழுவதும் மகளிருக்கு இலவசப் பேருந்து; திருமணத்திற்குத் தங்கம், பட்டுச்சேலை, பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம், மாணவர்களுக்கான  உயர்கல்வி கடன் எதையும் தற்போது செய்ய இயலாது என்கிறார். புதிதாகக் கூட்டணி சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சண்முகம் அவர்களும், “தி.மு.. தன் தேர்தல் வாக்குறுதிகளை ஐந்தாவது ஆண்டில்தானே செய்ததுஎன ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார்.

முன்பு வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத்தை .வெ.. அரசு  200 யூனிட்டாக உயர்த்தியது. அது விளக்கங்கள், கண்டனங்கள் என ஒரு வார காலம் பேசுபொருளானது. .வெ..வின் விவசாயக் கடன் இரத்து என்ற அறிவிப்பும் விமர்சனங்களைப் பெற்றது.

28.11.2025 அன்று ரிசர்வ் வங்கி விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியது. அதைக் கருத்தில் கொள்ளாமல் 16.4.2026-இல் .வெ.. வழங்கிய தேர்தல் வாக்குறுதியில், அனைத்து வகை விவசாயக் கடன்களும் தள்ளுபடி என வாக்குறுதி வழங்கிவிட்டது. .வெ.. அரசின் அறிவிப்பால் பயிர்க்கடன் பெற்ற 10% விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பதே உண்மையாகும். டெல்டா மாவட்டங்களில் ஆளும் அரசை எதிர்த்த போராட்டங்கள் தொடர் கதையாகிறது.

தமிழ்நாடு அரசிற்கு டாஸ்மாக், பத்திரப் பதிவு, வாகன வரி, கேளிக்கை வரி, கனிமங்கள், சுரங்கங்கள் வகை என மாநில அரசின் தனி வருவாய் மிகக் குறைவாகும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு புதிய முறையால் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ஒன்றிய அரசிடம் நிதி கேட்க தமிழ்நாடு முதல்வர் தனது பரிவாரங்களுடன் டெல்லி பறக்கிறார். அவருடன் நிதி அமைச்சரோ, நிதித்துறை செயலாளரோ எவரும் செல்லவில்லை.

பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் சந்திக்கிறார். நான்கு நிமிடச் சந்திப்பில் மாலை, மரியாதை, சால்வை, பரஸ்பர நலம் விசாரிப்புகள், மனு அளித்தல் என மரபுகள் பேணப்படுகின்றன. தமிழ் நாடு முதல்வர் மாநில கீதம், மேகதாது, தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை, மாநில நிதி ஒதுக்கீடு என நான்கு கோரிக்கைகளைப் பிரதமரிடம் வைக்கிறார். பிரதமர்நீங்கள் இது குறித்து நிதி அமைச்சரைச் சந்திக்கும்போது பேசுங்கள்என்கிறார்.

ஒன்றிய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டு இரயில்வே திட்ட நிதி ஒதுக்கீடுகள், மாநில அரசிற்கான நிதிப் பகிர்வுகள் எனக் கோரிக்கை வைத்தார். ஒன்றிய நிதி அமைச்சர், “உங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம்; நீங்கள் அதைச் சரியாகச் செலவு செய்யவில்லை; இனிமேலாவது நேர்மையாகச் செலவு செய்யுங்கள்எனக் கூறுகிறார்.

பிரதமரின் சந்திப்புக் குறித்த வழக்கமான தமிழ் நாட்டு முதல்வர்களின் செய்தியாளர் சந்திப்பும் தற்போது நடைபெறவில்லைபிரதமர் மோடியைப் போலவே தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும் செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்ற விமர்சனம் எழுகிறது. தமிழ்நாடு அரசு நாளது தேதிவரை, தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம் குறித்த செய்திக்குறிப்பைக் கூட வெளியிடவில்லை.

வாகன எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக எரி, உருளை விலை உயர்வு என்பது குறித்து தமிழ்நாடு அரசு மௌனம் சாதிக்கிறது. ஒரு மாதத்தில் மாநில அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்த அரசின் அடிப்படைச் செயல்பாடுகள் தொடங்கப்படவில்லை. மானியக் கோரிக்கைள், அது குறித்து அமைச்சர்களின் பதில்கள், அவர்களின் அறிவார்ந்த செயல்பாடுகள் யாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பற்றி எரியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, குதிரைபேர அரசியல், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் குறித்த .வெ.. அரசின் செயல்பாடுகள் பொதுமக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின்  காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் காவிமயமாகிவிட்டது என்ற விமர்சனமும் எழுகிறது.

ஆகவே, முதல்வர் அவர்களே, மனந்திறந்து பேசுங்கள். சட்டப்பூர்வ உத்தரவுகளைத் தாமதிக்காமல் இடுங்கள். நீங்களே எட்டுக் கோடி தமிழ் மக்களின் நல்வாழ்வு.

news
சிறப்புக்கட்டுரை
திரைகளுக்கும் சமூகத்திற்கும் இடையே இன்றைய இளைய தலைமுறை

இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை (சென்ற இதழ் தொடர்ச்சி)

விவிலிய கால இளையோர் செயலற்ற பார்வையாளர்கள் அல்லர்

இளையோரைப் பொழுதுபோக்குகளைச் செயலற்று நுகரும் நுகர்வோராக திருவிவிலியம் காட்டவில்லை; மாறாக, மனிதகுலத்திற்கான இறைவனின் திட்டத்தில் துணிச்சலோடு பங்கேற்பாளர்களாகவே முன்வைக்கிறது. அனுபவம் வாய்ந்த போர்வீரர்களே நடுங்கி நின்றபோதும், தாவீது எதார்த்தத்தை விட்டு ஓடிவிடவில்லை; அவர் கோலியாத்தை நேருக்கு நேர் எதிர்கொண்டார்: “இந்தப் பெலிஸ்தியன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை (1சாமு 17:32). சமூகத்தை அச்சுறுத்தும் அரக்கர்களான அநீதி, போதை, ஊழல், பயம் மற்றும் ஒழுக்கக் குழப்பம் ஆகியவற்றை இளையோர் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதை தாவீது நமக்குக் கற்பிக்கிறார். யோசேப்பு சோதனைகளை எதிர்த்து நின்றார்; துரோகத்தையும் சிறைவாசத்தையும் சகித்துக்கொண்டார்; இறுதியாக, தன் ஞானத்தாலும் நேர்மையாலும் நாடுகளைக் காப்பாற்றினார்: “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; ஆனால், கடவுள் அதை நன்மையாக முடித்தார் (தொநூ 50:20). பகுத்தறிவு, உணர்ச்சி முதிர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாக யோசேப்பு விளங்குகிறார். தலைவர்கள்  நம்பிக்கையிழந்தபோது, யூதித் துணிச்சலான நம்பிக்கையோடு எழுந்து நின்றார்: “ஆண்டவர் ஒரு பெண்ணின் கையின் மூலமாய் அவனை வீழ்த்துவார் (யூதித் 8:33). அவர் ஒழுக்கநெறித் தெளிவு, ஆன்மிகத் துணிவு மற்றும் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார்.

அனைத்திற்கும் மேலாக, இயேசு கிறிஸ்து தாமே சமூக உணர்வுள்ள ஓர் இளைஞருக்குரிய மிகச்சிறந்த முன்மாதிரியாக நம் முன்னே நிற்கிறார். அவர் இளம் வயதிலேயே போதகர்கள் நடுவில் அமர்ந்து, அவர்கள் பேசுவதைக் கேட்டும், அவர்களிடம் வினவியும், ஞானத்தைத் தேடுபவராயும் காணப்பட்டார் (லூக் 2:46). அவர் வளர வளர ஏழைகள், துன்புறுவோர், ஒதுக்கப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர்மீது மிகுந்த அக்கறை கொண்டவராக மாறினார். அவருடைய இளமைப் பருவம் சுயநலத்தால் வடிவமைக்கப்படவில்லை; மாறாக, இரக்கம், இறைவேண்டல், பொறுப்புணர்வு மற்றும் இறையாட்சியின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றாலேயே வடிவமைக்கப்பட்டது. திருவிவிலிய கால இளையோர் ஒருபோதும் பொழுதுபோக்குக் கலாச்சாரத்தால் உருவாக்கப்படவில்லை; அவர்கள் நம்பிக்கை, ஒழுக்கம், துணிவு மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகியவற்றாலேயே உருவாக்கப்பட்டார்கள்.

நமது கல்வி நிறுவனங்கள் தோல்வியடைந்து விட்டனவா?

இந்த நெருக்கடி, வேதனையானது என்றாலும் அவசியமான சில கேள்விகளை நம்மிடம் எழுப்புகிறது. நம் இளைஞர்களுக்கு நாம் எத்தகைய கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்? நமது பள்ளிகளும் கல்லூரிகளும் நற்பண்பு, சமூக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தார்மீகத் துணிவு ஆகியவற்றை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, வெறும் தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்பிற்கும் மட்டுமே அவர்களைத் தயார்படுத்தி இருக்கின்றனவா? நாம் அவர்களுக்குப் போட்டியிடக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே தவிர, பிறர்மீது அக்கறை கொள்ளக் கற்றுக் கொடுக்கவில்லை. நுகரக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே தவிர, பங்களிப்புச் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. சாதிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறோமே தவிர, சேவை செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. நவீனக் கல்வியானது பெரும்பாலும் தொழில்நுட்பத் திறன் கொண்ட நபர்களை உருவாக்குகிறது. ஆனால், சமூகத்தோடு தொடர்பில்லாத மனிதர்களையே அது உருவாக்குகிறது. அது இரக்கமில்லாத நிபுணர்களையும், ஒழுக்கநெறி சார்ந்த அடித்தளம் இல்லாத சாதனையாளர்களையும், கலாச்சார வேர்களற்ற நுகர்வோரையும் மட்டுமே உருவாக்குகிறது.

உண்மையான கல்வி என்பது வெறும் தகவல்களைக் கடத்துவது மட்டுமே அல்ல; அது மனச்சான்றை உருவாக்குவதாகும். ஆழமாகச் சிந்திக்கவும், தாராளமாக அன்பு செய்யவும், துணிவோடு செயல்படவும், சமூகத்தில் பொறுப்புணர்வுடன் நிமிர்ந்து நிற்கவும் கூடிய இளம் ஆண்களையும் பெண்களையும் கல்வி உருவாக்க வேண்டும். உண்மையான மனித உறவுகளைப் பலவீனப்படுத்தும் ‘தூக்கியெறியும் கலாச்சாரம் (throwaway culture) மற்றும் ’எண்மத் தொழில்நுட்பத் தனிமை (digital isolation) ஆகியவற்றிற்கு எதிராக, திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து எச்சரித்து வந்தார். அவர் தனது ‘கிறிஸ்து வாழ்கிறார் (Christus Vivit) என்ற திருத்தூது அறிவுரை மடலில், “நுகர்வோர் சமூகத்தின் கவர்ச்சியான மற்றும் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சலுகைகளுக்கு எதிராக, இளையோர் தங்களின் விமர்சனப்பூர்வமான சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் (Christus Vivit, 105) எனக் குறிப்பிடுகிறார். மேலும், “எண்மத் தொழில்நுட்ப உலகம் உங்களைச் சுயநலம், தனிமை மற்றும் வெற்று இன்பங்களுக்குள் மூழ்கடிக்கும் அபாயத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார். இந்த வார்த்தைகள் இன்றைய நமது சூழலுக்கு மிகவும் பொருத்தமானவையாகும்.

திரு அவையின் ஞானம்

தீய செல்வாக்குகளின் மூலம் மனம் சீரழிவதைக் குறித்துத் திரு அவைத் தந்தையர் நமக்கு எச்சரித்துள்ளனர். “மனம் உடலுக்குக் கட்டளையிடும் போது, உடல் உடனடியாக அதற்குக் கீழ்ப்படிகிறது. ஆனால், மனம் தனக்குத்தானே கட்டளையிடும் போது, அது எதிர்ப்பைச் சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஹிப்போ நகரின் புனித அகுஸ்தினார். இந்த உள்மன எதிர்ப்பை ஒழுக்கத்தின் மூலமும், இறையருளின் மூலமுமே வெல்ல வேண்டும். இளையோரை உருவாக்குவதே சமூகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது என்று எச்சரித்த புனித ஜான் கிறிசோஸ்தம், “பிள்ளைகளைப் புறக்கணிப்பது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார். எனவே, இளம் மனங்கள் எண்மத் தொழில்நுட்ப சக்திகளாலும், வணிக நலன்களாலும், கொள்கை ரீதியான முரண்களாலும் முற்றிலும் வடிவமைக்கப்படும்போது, திரு அவையினால் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்க முடியாது.

திரு அவை செய்ய வேண்டியது என்ன?

நமது மறைமாவட்டங்கள், பங்குகள், இளைஞர் இயக்கங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை முழுமையான மனித உருவாக்கத்திற்கான மையங்களாக மாறவேண்டும். திரு அவையின் பணி என்பது வெறும் அருளடையாளங்களை வழங்குவது மட்டுமல்ல; மாறாக, நம்பிக்கை, கலாச்சாரம், மொழி மற்றும் ஒழுக்க விழுமியங்களில் வேரூன்றிய, சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதுமாகும். எனவே, தற்காலப் போக்குகளைவிட உண்மைக்கும், சுயவிளம்பரத்தை விடச் சேவைக்கும், புகழைவிட ஞானத்திற்கும், வசதி வாய்ப்புகளை விடத் தியாகத்திற்கும் மதிப்பளிக்கும் இளம் மனங்களை நாம் வடிவமைக்கவேண்டும். நம் இளைய தலைமுறையினர் சமூகத்தோடு பொறுப்புணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர்களைத் தயார்படுத்தும் அதேவேளையில், அவர்கள் தங்களது நம்பிக்கை, தமிழ்ப் பண்பாடு, மொழி மற்றும் நமது நாகரிகத்தின் ஆன்மிகச் செழுமை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றி நிலைத்திருக்க நாம் அவர்களுக்கு உதவவேண்டும்.

பங்கு இளையோர் குழுக்கள் வெறும் கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்புகளாக மட்டுமே சுருங்கிவிடக் கூடாது; அவை தலைமைத்துவம், இறைவேண்டல், சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் உருவாக்கத்திற்கான மையங்களாக மாற வேண்டும். அதேபோல, நமது கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள் விமர்சனப் பார்வைகொண்ட சிந்தனை, தார்மீகப் பொறுப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு, உரையாடல், சுற்றுச்சூழல் உணர்திறன் மற்றும் பொது நலன் மீதான அக்கறை ஆகியவற்றை வளர்க்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக, இளையோர் ஏழைகளையும் துன்புறுவோரையும், விளிம்புநிலை மனிதர்களையும் களத்தில் சந்திக்கவேண்டும். ஏனெனில், மனிதகுலத்தின் காயங்களைத் தொட்டுணராத வரை, நம்பிக்கை என்பது ஆழமற்றதாகிவிடும், கல்வி தனது ஆன்மாவை இழந்துவிடும்.

ஆகவே, நமது இளைஞர்கள் எண்மத் தொழில்நுட்ப ஏமாற்று வேலைகளுக்குப் பலியாகாமல், உண்மையின் சாட்சிகளாக மாறட்டும். அவர்கள் கலாச்சாரத்தைச் செயலற்று நுகரும் நுகர்வோராக இல்லாமல், நீதியும் இரக்கமும் நிறைந்த ஒரு சமூகத்தைப் படைப்பவர்களாக மாறட்டும். அவர்கள் தற்காலப் போக்குகளைப் பின்பற்றுபவர்களாக இல்லாமல், கிறிஸ்துவின் சீடர்களாக விளங்கட்டும். நமது குடும்பங்கள், பள்ளிகள், பங்குகள், இளையோர் பணிக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து, நமது இளைஞர்களின் தார்மீக மற்றும் அறிவுசார் அடித்தளங்களை மறு சீரமைக்கும் இந்தப் புனிதமான பணியில் கைகோர்த்துச் செயல்படட்டும்.

நமது இளையோர் அனைவரும் இவ்வுலகிற்கு ஒளியாகவும், உண்மை, நீதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு புதிய நாகரிகத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் மாறுவதற்கு, ஆண்டவர் தாமே அவர்களை வழிநடத்தி வலிமைப்படுத்துவாராக.

உங்கள் அனைவருக்கும் என் செபமும் ஆசிரும்!

news
சிறப்புக்கட்டுரை
வெம்பிய பிஞ்சா? விளைந்த கனியா? (இளமை ஒரு சவால்! – 6)

எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இருவரின் வாழ்வில் நடந்த, அவர்கள் நேரில் சந்தித்த நிகழ்வுகள் இன்றைய இளையோரின் சவால்கள் பற்றி மிகுந்த கவலையோடு என்னைச் சிந்திக்கத் தூண்டின.

பல ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து நடந்த கொடுமைகள்:

ஒருவர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர். மாணவ- மாணவிகள் ஒன்றாகப் பயிலும் பள்ளி. ஒருநாள் அந்தப் பள்ளியின் பெண்கள் கழிப்பறையில் சிதைந்த கருவைப் பார்த்து ஆசிரியர்கள் பதறிப் போனார்கள். நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவி காதல் இந்தக் கொடுமையில் முடிந்து போனது.

மற்றொருவர் ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருந்த மாணவி. அவர் வகுப்பில் மருத்துவப் பெற்றோரின் ஒரே மகனும் சேர்ந்திருந்தான். ஒரே மாதம்தான் பையன் புதிய பெரிய பைக் கேட்டிருக்கிறான். பெற்றோர் தயங்கித் தடுத்திருக்கிறார்கள்.  தாத்தாவின் செல்லப்பிள்ளை,  அவர் வாங்கிக் கொடுத்துச் சில நாள்கள்தான். நெரிசல் நிறைந்த கடைத்தெருவில் விபத்து. பையன் சிதைந்து போனான். மாணவ- மாணவிகளிடம் நல்ல பெயர். அவர்களால் பல வாரங்கள் அந்த நினைவுகளை விட்டு விடுபடவே முடியாமல் தவித்துப்போனார்கள்.

இதுபோன்ற செய்திகள் அன்றாடம் ஊடகங்களில் வருகின்றன. ஒருசில நிகழ்வுகள் நம்மைச் சுற்றியும் அன்றாடம் நடக்கின்றன. நம்மையும் உலுக்கிப்போட்டுவிடுகின்றன.  ஆனாலும், இவையெல்லாம் நம் போன்ற பல இளைஞரைச் சிந்திக்கத் தூண்டுகின்றனவா? நல்வழிப்படுத்துகின்றதா? நாம் இந்த எச்சரிக்கைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறோமா? விழித்துக்கொள்கிறோமா? இல்லை என்றால் ஏன் நம் இளம்பயிர்கள் வளரும்முன் கருகிப் போகின்றன? விளைந்து கனியும் முன் வெம்பிப்பழுக்கின்றன?

இன்று பருவப் பயணத்தில் ஆணும்-பெண்ணும் ஒன்றாகப் பழகும் சூழல்கள் ஏராளம். ஒன்றாகப் படிக்கிறோம், ஒன்றாகப் பயணிக்கிறோம், ஒரே அலுவலகத்தில் வேலை.

பருவப் பயணத்தில் இளையோருக்கு ஒருவகைப் பாலினக் கவர்ச்சி ஏற்படுவதும் இயற்கைதான். அதை ஒருவகைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, நம் வாழ்க்கைக் குறிக்கோளை நோக்கிப் படிப்படியாக மேலேறியாகவேண்டும்.

இங்கே நாம் சறுக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஊடகங்கள் இன்று நம்மை எக்கச்சக்கமாகத் திசைதிருப்புகின்றன. ஆபாசப் படங்கள், பாடல்கள், காட்சிகள்.. தொல்லைப் பேசியாக மாறியிருக்கும் கைப் பேசி. அதில் பரவிவரும் உரையாடல்கள், காட்சிகள். கிட்டத்தட்ட இலவசமாகப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள். மிக எளிதாகக் கிடைக்கும் மது, புகை. போதையை அனுபவிப்பதாக நினைத்து அலைமோதும் காட்சிகள். இவற்றால் நாம் கல்வியைக் கோட்டை விடுகிறோம்; நல்ல வேலைவாய்ப்புகளைக் கோட்டை விடுகிறோம்.

அவசரக் காதல், அவசரக் குழந்தை, இளமையில் தற்கொலை, திருமணம் நடந்தவுடன் விவாகரத்து. பல்வேறு வகையான வன்முறைகள், பகைமை.

எல்லாமே மிக மிகச் சிறிய சலனங்களில் இருந்துதான் தொடங்குகின்றன. ஒரே ஒரு சிகரெட், ஒரே ஒரு பெக், ஒரே ஒரு புன்னகை, ஒரே ஒரு சந்திப்பு.

சரிவுப் படிகள் இறங்குவது சுலபம்; ஆனால், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிவிட்டால் அவ்வளவுதான்.

நல்லவனா? வல்லவனா?

என்னைப் பொறுத்தவரை முதலில் நாம் நல்லவர்களாக வாழப் பழகவேண்டும். நல்லவர்கள் நட்பையே தேடவேண்டும். நல்ல பழக்கங்களையே வளர்த்துக்கொள்ளவேண்டும்.

முதலில், ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் வந்துவிட்டால் அமைதியும் தன்னம்பிக்கையும் நம்மைத் தேடிவரும். நம் முயற்சிகள் தெளிவாகவும் திருத்தமாகவும் அமையும்.

வாழ்க்கை என்பது சிலநொடிச் சலனங்களில் முடிந்து போவதல்ல. அறுபது, எழுபது, எண்பது ஆண்டுகளைத் தாண்டியும் மகிழ்ச்சியாக நகரக் கூடியது. ஒவ்வொரு பருவத்திலும் ஒரு மகிழ்ச்சியிருக்கிறது.

கற்பது ஒரு மகிழ்ச்சி. நல்ல பணியைத் தேடிக்கொண்டு சொந்தக்காலில் நிற்பது ஒரு மகிழ்ச்சி. அதற்குப் பிறகுதான் காதல், திருமணம், குழந்தைகள் என்று அடுத்தடுத்த மகிழ்ச்சி.

இளமையிலேயே சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது ஒரு மிகப்பெரிய சவால். நல்ல நட்பு, நல்ல உறவு, தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, விழிப்புணர்வு...! இந்த வகைக் கவசங்களைத் தாங்கி இந்தச் சவாலைச் சந்திப்போம். அடுத்தச் சவால்களைச் சாதிக்க முற்படுவோம்.

வாழ்க்கை என்பது அறுபது எழுபது ஆண்டுகளையும் தாண்டி இனிமையாக நகரவேண்டிய நெடிய பயணம். பதின் பருவத்தில் அவசரப்பட்டுப் பிஞ்சில் பழுத்து வெம்பிப் போகமாட்டேன்; கல்வி, தொழில், சேமிப்பு, காதல், குடும்பம் என்று ஒவ்வொரு பருவத்தின் மகிழ்ச்சிக்காகவும் கட்டுப்பாட்டுடன் காத்திருப்பேன்.

news
சிறப்புக்கட்டுரை
AI ஆசிரியர்களா? (உலகம் உன் கையில்! – 24)

கல்வி கற்பிக்கும் .. நண்பன்

கற்பனை செய்து பாருங்கள்... உங்கள் வகுப்பறையில் இருக்கும் கரும்பலகை, நீங்கள் பாடம் கவனிக்கும் போதே உங்கள் முகபாவனையை வைத்து, ‘உங்களுக்கு இந்தக் கணக்கு புரியவில்லைஎன்பதைப் புரிந்துகொண்டு, இன்னும் எளிமையாக விளக்கத் தொடங்கினால் எப்படியிருக்கும்?

ஆம்! இன்று நாம் .. யுகத்தின் வாசலில் இல்லை; அதன் உள்ளறைக்கே வந்துவிட்டோம். உலக வரலாற்றின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் இந்தமின்னணு மூளைஇன்று கரும்பலகையையும் நோட்டுப்புத்தகத்தையும் டிஜிட்டல் மந்திரக்கோலாக மாற்றிவருகிறது.

ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவதைக் காட்டிலும், மாணவர்களின் தேர்வுத்தாள்களைத் திருத்தவும், யார் யாருக்கு எந்தப் பாடம் புரியவில்லை என்று அட்டவணை (Pattern) போடவுமே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். .. வந்தபிறகு இந்தஹோம்வொர்க்அனைத்தையும் அது சில நொடிகளில் முடித்துவிடுகிறது. இதனால் ஆசிரியர்கள் இயந்திரமயமான வேலைகளில் இருந்து விடுபட்டு, கற்பிப்பதில் மாணவர்களோடு அதிக நேரம் செலவழிக்க முடிகிறது

உலக நாடுகள் .. கல்வியை வெறும் பாடமாகப் பார்க்காமல், தங்களின் எதிர்காலப் பேராயுதமாகப் பார்க்கின்றன. .. என்பது மனிதர்கள் போலவே சிந்தித்து, கற்று முடிவெடுக்கும் திறன் பெற்ற மென்பொருள் என்பதை அறிவோம். இந்த மென்பொருள்-இயந்திரத்துடன் பேசுதல், உரைகள் மற்றும் பிம்பங்கள் உருவாக்குதல், மொழிபெயர்த்தல் என்று பல வழிகளில் மனிதனைப் போன்று சூழலுக்கேற்ப இயங்கும் .. நாள்களில் வாழத் தொடங்கி விட்டோம். பல நாடுகள் இதில் தங்களுக்கென்று இடத்தைப் பிடிக்க .. கல்வியில் ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி, முதலீடு செய்தும் வருகின்றன. .. கல்வி என்பது கற்றல், திட்டமிடுதல், மதிப்பிடுதல் மற்றும் அறிவுறுத்தல் என்பவைகளை டிஜிட்டல் கருவிகள் துணையுடன் செயல்படுத்துவது.

உலக அளவில் அமெரிக்கா, பின்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சீனா, தென் கொரியா, ஜப்பான், எஸ்தோனியா போன்ற நாடுகள் .. கல்விமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில நாடுகள் இத்தொழில்நுட்பத்தைக் குறித்து அறிதல், செயலாற்றல் என்பவைகளை எவ்வகையில் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்ற பயிற்சியை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பாடத்திட்டத்தை (curriculum) வகுக்கவும் தொடங்கியுள்ளன.

.. கல்வி தொழில்நுட்பம்

மனித ஆற்றல் (intelligence) சார்ந்த வேலைகளை நவீன கணினி - இயந்திரத் திறன் அடிப்படையில் செயல்படுத்தும் .. தொழில்நுட்பம் உலகளவில் கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்து வருகிறது. .. கல்விப் பிரிவில் கற்கும் இயந்திரம், பேசும் இயந்திர மாடல்கள், ரோபோ, நரம்புவலை (ML, LLM, Robotics and neural networks) போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்காற்றுகின்றனதொழில்நுட்பம் என்பது ஒரு தையல் இயந்திரம் போன்று வகுப்பறை அறிவுத்திறனை வாழ்க்கைத் தேவைகளுக்குத் தைக்கும் கருவியாக, கல்வியை அறைக்குள்ளிருந்து வெளியே எடுத்துச்சென்று ஒருவரின் வாழ்க்கையோடு பயணிக்கத் துணைபுரிகிறது. இத்திசையில், மாணவர் கற்கும் முறையில் புதிய வடிவம், ஆசிரியர் கற்பிக்கும் முறையில் மாற்றம் என்று ஒரு புதிய கற்கும் இயக்கமாக .. கல்வி உருவெடுத்து வருகிறது.

பேசும் இயந்திரமாடல்கள் (LLMS), ஆசிரியர் துணையின்றி மாணவர்களுக்கு உடனுக்குடன் சந்தேகங்களைத் தீர்க்கும் கருவியாகச் செயல்படுவது கல்வி உலகில் புதுமையாகப் பார்க்கப்படுகிறது. போதனைத் திட்டமுறை, மாணவர்களுக்கான உதவி மற்றும் தரவுப் பாதுகாப்பு என்பவைகளை நடைமுறைப்படுத்த கல்விக்கூடங்களும் தயாராகி வருகின்றன. உலகளவில் இத்தொழில்நுடபத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்கள், ஆராய்ச்சி, கடினமான பாடத் தலைப்பு போன்ற தேவைகளுக்கு ..யைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

.. கல்வியின் பயன்கள், இடறல்கள்

கரும்பலகையும் சுண்ணக்கட்டியும் இருந்த வகுப்பறைகள் இன்று கணினித் திரைகளுக்கு அப்பால் செயற்கை செயலாற்றலின் (AI) புரட்சி நாள்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்துவது, துல்லியமான பாடத் திட்டங்களை வகுப்பது, மாணவர்களின் கற்றல் திறனைச் சீராகக் கண்காணிப்பது எனக் கல்வித் துறையின் எஞ்சினாக AI உருவெடுத்து வருகிறது.

ஒருபுறம் அசுர வேகம்; மறுபுறம் சில சவால்கள்... .. கல்வி நம் வாழ்வில் நிகழ்த்தும் வித்தைகளையும், நாம் கவனிக்க வேண்டிய பக்க விளைவுகளையும் சற்று ஆராய்வோம்.

வகுப்பறைக்கு வெளியே மாணவர்களுக்கு 24 மணி நேரமும் கூடவே இருக்கும் ஒரு தனிப்பட்ட ஆசிரியர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ..! மாணவர்கள் இதன் மூலம் பெறும் நேரடிப் பயன், எழுதும்போதே இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவது, சூழலுக்கேற்ப கடிதமாகவோ, கட்டுரையாகவோ அல்லது உரையாடலாகவோ எழுத்தின் தொனியை மாற்றியமைத்தல், சுவாரசியமான கதைகள் மற்றும் உரையாடல்களை உருவாக்கி மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டுதல், படிக்கும்போது சந்தேகம் வந்தாலும், உடனுக்குடன் பதிலளித்து நேரத்தை மிச்சப்படுத்துவது போன்றவை இதன்மூலம் பெறும் வேறு நன்மைகள் எனலாம். சில நேரங்களில் .. கருவிகள் பார்ப்பதற்கு மிகவும் சரியானது போலத் தோன்றும். ஆனால், முற்றிலும் தவறான பதில்களை அள்ளி  வீசும். இவற்றைக் கண்டறிய திறன்பெற்ற ஆசிரியர்களும், விழிப்புடன் இருக்கும் மாணவர்களும் மிக மிக அவசியம்.

.. கல்வி வளையத்தில் மாணவர்கள் தொடர்பான ஏராளமான தரவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் கடமையும் உள்ளது. .. பயன்படுத்துவது இணையதளத்தைச் சார்ந்துள்ளது. ஆசிரியர்-மாணவர், நகர - கிராமப் புறங்களில் பரவலாக இதனைப் பெற்றிருப்பதே ஏற்றத்தாழ்வைத் தவிர்த்து, ஒன்றிணைந்த சமநிலைச் சமுதாயத்தைக் கட்டமைக்கும் கருவியாக அமையும்.

.. ஆசிரியருக்குப் பதிலாக அமையுமா?

பாரம்பரியக் குருகுல முறை, வகுப்பறைக் கல்வி, அஞ்சல்வழிக் கல்வி, ஆன்லைன் கல்வி என உருமாறி,இன்று ..கல்வியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். காகிதத்திற்குப் பதில் -புத்தகங்களும், பேனாவிற்குப் பதில் மென்பொருள்களும் வந்தது போல, ஆசிரியர்களுக்குப் பதிலாக .. வந்துவிடுமா? காலப்போக்கில் இவைகளைக் கணினி முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ற சந்தேகம் எழுவது இயல்பு. இன்றைய டிஜிட்டல் உலகில் காகிதப் புத்தகங்கள் இடத்தில், -புத்தகங்கள் மற்றும் பிடிஎஃப் (PDF), பேனாவிற்குப் பதிலாக மென்பொருள்கள் என்ற மாற்றங்கள் போன்று ஒருநாள் ஆசிரியர்களையும் இத்தொழில்நுட்பம் மாற்றிவிடுமோ என்ற சந்தேகமும் எழலாம்.

இன்று நாம் ஏராளமான அறிவு சார்ந்த செய்திகளையும், நுண்ணிய விளக்கங்களையும் தொலைக்காட்சி மற்றும் பல வலையமைப்பு  ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். ஆனால், கல்வி நிலையங்களோ, பல்கலைக்கழகங்களோ  இதனால் பாதிப்படைவதில்லை என்பதைப் போன்று, .. கல்வி வழி ஆசிரியரின் இடத்திற்கு மாற்றாக அமையாது. .. என்பது கல்வி பயில உதவும் துரிதமான கருவியாக இருந்தாலும், மாணவர்களை உருவாக்குதல், சிந்திக்கும் திறனை மேம்படுத்தல், புதுமையைப் படைத்தல் என்ற உயரிய நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்குமா என்று சிந்திக்க வைத்துள்ளது.

ஆசிரியர்கள் அறிவை மட்டும் புகட்டுவதில்லை; மாணவர்களுக்குச் சிறந்த ஆலோசகராக, வழிகாட்டியாக, ஊக்கமளிப்பவராகத் திகழ்கின்றனர். மனித ஈடுபாடு, அறிவுறுத்தல், கவனமான மேற்பார்வை போன்ற பிரிவுகளில் உதவிடும் ஒரு புதிய துணையாகவே கல்வியில் .. பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் தொழில்நுட்ப முன்னேற்றமிருந்தாலும் வளமான ஆசிரியர்-மாணவர் உறவு, மாணவர்-பெற்றோருடன் தெளிவான தொடர்பு, மாணவரின் நலன் காத்தல் என்பவையே கருவிகளைவிட ..-யைச் சேர்த்துக் கல்விக்கூடங்களின் வெற்றிக்குக் காரணமாக அமையுமென்று அறியப்படுகிறது.

news
சிறப்புக்கட்டுரை
யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகள் எதற்கு?

முற்போக்கு இந்தியப் பெண் முகங்களில் ஒருவரும், ‘புக்கர்பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளருமான சூசன்னா அருந்ததி ராய், “யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகளால் என்ன பயன்?” என்று வினா எழுப்புகிறார்.

உங்கள் எழுத்துகள் படிக்கிறவர்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக்கூட இருக்கலாம். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துகள், எழுத்துகளே அல்லஎன்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

எப்போது அன்றாடப் பேச்சில்கூட இயல்பாக ஓர் எழுத்தாளன், சிந்தனையாளன் உள்ளே வருகிறானோ... அப்போதே அவன் உண்மையான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறான் என்று பொருள்என்கிறார் அமெரிக்கக் கவிஞர் தாமஸ் எலியட். அக்காலத்தில் குடும்பப் பாச உறவுக் கடிதங்களுக்குக் குடும்பங்களின் மகிழ்ச்சியிலும் கவலையிலும் உணர்வுப்பூர்வமான பெரும் பங்கிருந்தது. இதயப் பரிமாற்றங்களுக்குக் காதல் கடிதங்கள் துணைசெய்தன. பணம் பெற்றுக்கொண்ட பின்பு கிழிக்கப்படும் மணியார்டர் அட்டையில் எழுதப்பட்ட வரிகளும் மகிழ்ச்சியளித்தன. காலப் போக்கில் கடிதம் எழுதுவது காலாவதியான பின்பு கடிதங்கள் பழைய நினைவுகளாகிவிட்டன.

எழுத்து என்பது என்ன?

எழுத்து என்பது உயிரைப் பிரசவிப்பது போன்றது. தனக்கு ஒரு கருத்து தோன்றியது என்றால், உண்மையான எழுத்தாளன் மக்களுக்குப் புரியும்படி எளிய நடையில் கொண்டுசேர்த்த பின்னரே அவனுக்கு மனத்தில் உற்சாகம், நிம்மதி பிறக்கும். வாசகர்கள் அக்கருத்தை ஏற்காவிட்டாலும், கூறவேண்டியதைத் தானே சரியாகப் புரிந்துகொண்டு கூறினாலே நிறைவு கிடைக்கும். கூற வந்ததைப் பேச்சுவழக்கில் அல்லாமல், அதிநவீன வார்த்தைகளால் மனத்தில் தோன்றும் உணர்வுகளை விளக்கமாக, தெளிவாக, வலுவான முறையில் எழுத்துகளில் கூறமுடியும். நல்ல எழுத்து, தொடர்பு நிலைக்கான எரிசக்தியாகச் செயலாற்றுகிறது, தொடர்புகள் சமூகக் கட்டமைப்பு உருவாவதில் பெரும் பங்காற்றுகிறது.

எழுத்துகளின் பயன்பாடுகளாக வெளிப்படுத்த, விளக்கிட, ஆய்வு செய்திட, கற்றுக்கொள்ள, மகிழ்விக்க, தெரிவிக்க, விவரிக்க, விவாதிக்க, வலியுறுத்த, மதிப்பீடு செய்ய, பிரச்சினைக்குத் தீர்வு காண, சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்த என பல்வேறு வகைகளில் உதவுகின்றன.   எழுத்துகள் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன; சிந்தனைகள் நாகரிகத்திற்கு வடிவம் கொடுப்பதுடன், அதன் கூறுகளில் ஒன்றான கலாச்சாரம் எழுத்து ஊடகத்தால் உறுதித்தன்மை அடைகிறது. சமூகங்கள் மற்றும் அவற்றின் பண்பாட்டுக்கான அடையாளத்திற்கு எழுத்தாற்றல் பெரும் உதவி புரிகிறது. எழுத்துகள் வாசிப்பவரை அதன் நடையில், விவரிக்கும் போக்கில், கருத்தாழத்தில் தொந்தரவு செய்யவேண்டும். அதிகப் பிழைகள் கொண்ட எழுத்துகள் வாசகர்களைத் தொடர்ந்து படிக்கவிடாமல் ஆர்வம் குறைத்து தொந்தரவு செய்கின்றன. எழுத்தாளர்கள் முதலில் பிழையின்றி எழுதத் தெரிந்திருக்கவேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது இலக்கியத் தமிழ் அல்ல; பிழையில்லாத் தமிழே. ‘எழுத்துகள் புனிதமானவை, மதிக்கத் தகுதியுள்ளவை. சரியான எழுத்துகள் சரியான முறையில் எழுதப்பட்டால், அவை உலகை சற்றேனும் உந்தித்தள்ளும் சக்தி வாய்ந்தவைஎன்கிறார் ஆங்கில நாடக ஆசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான டாம் ஸ்டாப்பர்ட்.

தொந்தரவு செய்வதற்கான தகுதிகள்

ஒரு நல்ல எழுத்தாளனின் எழுத்துகள் நிச்சயம் வாசிப்பவர் மனத்தை சிறிதேனும் அசைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். உங்களை ஓர் எழுத்தாளர் என்று நீங்கள் கருதினால், எழுதுவது உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கக்கூடாது, அது உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். தினமும் உணவு போல, தினமும் எழுதவேண்டும். தினமும் எழுதுவதன் மூலமே எழுத்தாளனுக்குரிய தன்னம்பிக்கை உருவாகும். தினமும் எழுத எழுதத்தான் எழுத்துகள் மெருகேறும்.

எழுத்து என்பதை உடல் பயிற்சியோடு ஒப்பிட்டால் புத்தகங்கள் படிப்பதுதான் அதற்கான ஊட் டத்தையும் ஆற்றலையும் தரும் உணவு. உணவு உண்ணாமல் ஓடினால் என்னவாகும்? எழுத்தாற்றலுக்கு அடிப்படையான புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். மேலோட்டமாக அல்லாமல், கருத்துகளை உள்வாங்கிப் படிப்பதன் மூலம் நம் மனத்தில் இருக்கும் கருத்துகளை எழுத்துகளில் பதிவு செய்யமுடியும். அதிக வாசிப்பின் மூலம் பல்வேறு எழுத்தாளர்களையும், அவர்களது நடை, அவர்களின் கதாபாத்திரங்களின் உருவாக்கம், பல்வேறு சமூக வாழ்க்கைச் சூழல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். வித்தியாசமாக, சுவாரஸ்யமாக எழுதவும் அறிய முடியும்.

எழுதும் படைப்புகள் சொந்தப் படைப்பாக, பயனுள்ள படைப்பாக இருக்கும்போது, மக்கள் நாம் எழுதுவதை விரும்பிப் படிக்கத் தொடங்குவார்கள். தொடர்ந்து எழுதும்போது உங்கள் எழுத்துகளை எல்லாருக்கும் பிடித்துவிடும். ஒருவரைத் தாக்கும் நோக்கிலோ, சாதகமாகவோ எழுதாமல் நியாயமான, உண்மையான படைப்புகளைக் கொடுக்கும்போது மக்களுக்கும் அது பயனளிக்கும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடாமல் சிறந்த படைப்புகளை ஓர் எழுத்தாளனால் தர இயலாது.

புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங், “எல்லா இடங்களிலும் படியுங்கள்; ஒரு குறிப்பிட்ட இடத்தில் எழுதுங்கள்என்கிறார். எழுதுவதற்காகத் தினமும் நேரம் ஒதுக்கிய அவர், தான் எழுதுவதற்காகத் தனது வீட்டில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட மேசையில் எப்பொழுதும் எழுதுவதை வழக்கமாக்கியிருந்தார்.

எழுதும் சூழ்நிலையை அறிவது  மட்டுமல்ல; ஒரு நல்ல எழுத்தாளனுக்குத் தன் எழுத்தில் எது சிறந்தது? எது தரமற்றது? என்று பிரித்தறியவும் முடியும். அவ்வாறு பிரித்தறிந்து தரமான எழுத்துகளை மட்டுமே மக்கள் முன் வைப்பர். ஒரு படைப்பாளி மிகப் பரவலாக அறியப்பட்டு, படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில் வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடுகள் மேற்கோள்களாகக் காட்டப்படும் போது, வாசிப்பவர் சிந்தனையிலும் அவை தாக்கத்தை உருவாக்குகின்றன

எவ்வாறு தொந்தரவு கொடுப்பது?

உங்கள் இதயத்தின் சுவாச மூச்சுகளால் காகிதத்தை நிரப்புங்கள்என்றார் பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். ஒரு படைப்பை உருவாக்கும்போது தன் எண்ண அலைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து எழுத வேண்டுமே தவிர, இது எல்லாராலும் பாராட்டப்பட வேண்டிய படைப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால் எண்ண ஓட்டங்களின் விளைவுகள் எழுத்தோட்டத்திற்குத் தடங்கல் ஆகிவிடும். இந்த நிலையில் மற்றவர் கருத்திற்கும் முக்கியத்துவம் தந்து தவறுகளைத் திருத்திக்கொண்டால், ஒரு நல்ல எழுத்தாளராகச் சமூகத்தில் உங்கள் படைப்பு சிலரையாவது தொந்தரவு செய்தே தீரும்.

உங்கள் படைப்புகள் கதையாக, கட்டுரையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக என எதுவாக இருந்தாலும், அந்தப் படைப்புக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அதனை எடுத்தியம்பும் விதத்தில் ஆழம் இருக்கவேண்டும். வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். படைப்பின் ஆரம்பத்திலோ முடிவிலோ அன்றி, இடைப்பட்ட இடங்களிலோ மனத்தில் மெல்லிய நெருடலை ஏற்படுத்தவேண்டும். ஒரு படைப்பை வாசிக்கையில் வாழ்வின் சுயஒப்பீடு, ஓர் ஏக்கம், ஓர் எதிர்பார்ப்பு, தார்மீகக் கோபம் என ஏதாவது ஒருவகையில் மனத்தைத் தொந்தரவு செய்ய வேண்டும். சிரிக்க வைப்பது நோக்கமென்றால், அதுவும் நகைச்சுவையாகத் தொந்தரவு செய்யும்.

சமூகப் பார்வையோடு எழுதும்போது சமூக அவலங்கள் வாசிப்பவர் மனத்தில் மானசீகமாகக் கோபத்தை ஏற்படுத்தும். அதற்காக நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்து தன்னை மேம்படுத்திக்கொள்வது ((Update)) அவசியமான ஒன்றாகும். குடும்ப வாழ்வின் மெல்லிய மற்றும் கடினத்தனமான உணர்வுகள், தீண்டாமை, பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் முதலான உள்ளடக்கங்கள் குறித்து நாம் படித்தது, பார்த்தது, கேட்டது யாவற்றையும் எழுத்தில் வடிக்கும்போது, வாசகர்கள் மனங்களை  உலுக்கும். கதையென்றால், கதாபாத்திரங்களுக்குள் உள்ள முரண், வித்தியாசமான கதைக் கண்ணோட்டம், அழகான எழுத்து நடை உணர்வுகளைத் தூண்டவும், மர்மத்தை உருவாக்கி அதனை அறியும் ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்யவேண்டும்.

மொத்தத்தில், ஓர் எழுத்தாளனின் எண்ணங்கள், உணர்வுகள், சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியன குறிப்பிடத்தக்க தாக்கத்தை மக்களுக்கு ஏற்படும் வகையில் கற்பனை வளமோ, வாசிப்பு ஞானமோ அவனுக்குள் பெருகியிருக்கவேண்டும்.

தொந்தரவின் விளைவுகள்

வாளைவிட பேனா வலிமையானதுஎன்ற சொற்றொடரை 1839-ஆம் ஆண்டில் எழுத்தாளர் எட்வர்ட் புல்வர்லிட்டன் முதன்முதலாகக் கூறினார். வாளால் பயத்தைக் காட்ட முடியும்; எழுத்தால் இதயங்களை வெல்ல முடியும். வன்முறையைவிட சிந்தனையும் எழுத்தும் மக்கள்மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். வாளின் சக்தி தோல்வி, தியாகம், இழப்புடன் முடிவடைகிறது. ஆனால், பேனா ஆன்மாவுக்கு உந்துதல், உத்வேகம், வளர்ச்சியைக் கொண்டு வருகிறது.

எழுத்து என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் அல்ல; உலகை ஊக்குவிக்கவும், வற்புறுத்தவும் மாற்றவும் கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவி. சிறந்த எழுத்தாளர்கள் புரட்சிகளைத் தூண்டுவதற்கும், சமூக விதிமுறைகளுக்குச் சவால் விடுவதற்கும், தனிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் தங்கள் எழுத்துகளைப் பயன்படுத்தினர்.

1963-இல் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் எழுதியலெட்டர் ஃப்ரம் பர்மிங்காம் ஜெயில்என்ற கடிதம் அமெரிக்காவின்  சிவில் உரிமைகள் சட்டத்திற்கான ஆதரவை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்து அந்நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தின் கருப்பொருளைத் தொட்டு விடுதலை உணர்வைத் தூண்டின. காந்தியின் எழுத்துகள் ஆங்கிலேயருக்கு எதிரான வன்முறையற்ற எதிர்ப்பிற்காக வாதிட்டன. இந்திய எழுத்தாளர்கள் பலரும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவினார்கள்.

யூத இனப் படுகொலையின்போது தலைமறைவாக இருந்த ஆன் ஃப்ராங்க் என்ற யூதப்பெண் எழுதிய நாள்குறிப்பு, 1945-இல் அவர் இறந்தபிறகு ஹிட்லர் அடக்குமுறையின் இருண்ட அத்தியாயத்தை உலகுக்கு வெளிச்சமிட்டது. 1845-இல் ஃபிரடெரிக் டக்லஸ் எழுதிய ஒரு புத்தகம் அடிமைத்தனத்தின் கொடூரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிக்க கருவியாகச் செயல்பட்டது. கென்யாவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் வங்காரி மத்தாய், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து பல புத்தகங்கள் எழுதினார். அவை ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றங்கள் கொண்டு வர உதவின. 2012-இல் தாலிபான்களின் கொலைத் தாக்குதலுக்குத் தப்பிய மலாலா யூசுப் சாய் எழுதியநான் மலாலாஎன்ற நூல் 40-க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பெண்கள் கல்வி பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், மேலும் பலரை இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. இவை போன்று புரட்சிகரமான மாற்றங்கள் எழுத்துகளால் நிகழ்ந்தன

எழுத்துலகம் ஆழமான உணர்ச்சிகள், விரிவான சிந்தனைகள், அர்த்தமுள்ள பிரதிபலிப்புகள் நிறைந்தவை என்றாலும், அது வன்முறை மற்றும் சோகத்திற்கும் சாட்சியாக உள்ளது. ஆட்சியாளர்கள், வன்முறையாளர்கள், சனநாயக மற்றும் பாசிச விரோதிகள், சமத்துவ சமூகநீதி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கருத்துத் தொந்தரவுகள் எழுத்தாளர்களைப் பழிவாங்கின. பல ஆண்டுகளாகப் பல பிரபல எழுத்தாளர்கள் அகால மற்றும் கொடூரமான மரணங்களைச் சந்தித்துள்ளனர். எழுத்தாளர்களின் சோக மரணங்கள் உண்மை, நீதி மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டிற்காகத் தங்கள் இறுதி விலையைச் செலுத்தினர். ஸ்பெயின் நாட்டுக் கவிஞரும் எழுத்தாளருமான ஃபெடரிகோ கார்ஷியா லோர்கா எழுதிய காதல், மரணம், சமூக அநீதி கருப்பொருள் கொண்ட நூல்கள் ஆட்சியாளரைக் கோபப்படுத்தி, 1936-இல் அவரை விசாரணையின்றித் தூக்கிலிட வைத்தன. அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

சால்வடார் நோவோ என்ற மெக்சிகன் எழுத்தாளரின் பல படைப்புகள் மெக்சிகன் அறிவுசார் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. 1974-இல் அவர் மரணம் மர்ம மரணமானது. டேனியல் கார்ம்ஸ் என்ற இரஷ்ய எழுத்தாளர் தனது படைப்புகளுக்காக சோவியத் ஆட்சியால் தொடர் துன்புறுத்தலை எதிர்கொண்டார். 1942-இல் அவர் நேரடியாக அல்லாமல் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டார். நைஜீரிய எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கென் சரோவிவா தனது எழுத்தாலும் போராட்டத்தாலும் 1995-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார். 2015-ஆம் ஆண்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதிய, பேசிய எழுத்தாளர் கல்புர்கி தன் வீட்டு வாயிலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.

மேற்கூறியவை தங்கள் சொந்த வாழ்க்கையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எழுத்தைப் பயன்படுத்திய எழுத்தாளர்களுக்கு நேர்ந்த நல்லவை-கெட்டவையே; எனினும், அவர்கள் வரலாற்றுக்குள் வந்து நிற்கிறார்கள். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் ஒரு வரி கூட எழுதியவர் இல்லையாம்! ஆனால், அவர் பேச்சுகள் ஆட்சிப்பீடத்தை உலுக்கிப் போட்டதோடு, அவர் பகுத்தறிவு உரைகள் பின்னாளில் நூல் வடிவம் பெற்று பேசுபொருளாயின. அவர் நஞ்சுண்டு மரணிக்க வேண்டியிருந்தது.

இயேசு பற்றிய நற்செய்தி நூல்கள் இன்னமும் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. இவை அவரால் எழுதப்பட்டவை அல்ல; எனினும், இயேசு ஒரே ஒருமுறை மண்ணில் எழுதிக் காட்டினார். அந்த எழுத்துகள் அன்றைய யூதர்களை மட்டுமல்லாமல், இன்றைய உலகத்தாரையும் சுயபரிசோதனை செய்வதற்கான உறுத்தலாகவே பார்க்கப்படுகின்றன.  

news
சிறப்புக்கட்டுரை
அழகு என்பதை அளவிடுவது யார்? (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 01)

அழகு எனும் வார்த்தையைக் கேட்டதுமே நம் மனத்திற்குள் ஒரு குதூகலம் வந்து விடுகிறது. அப்படி என்னதான் அந்த அழகிற்குள் ஒளிந்து இருக்கிறது? அது எப்போதுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன்னதம் என்பதால், அதைப் பற்றிய தேடலும், அதை ஒட்டிய கவிதைகளும் கற்பனைகளும் கதைகளும் சிந்தனைகளும்... இன்னும் சொல்லப் போனால் தத்துவங்களும் தங்கு தடையின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி இல்லவே இல்லை.

வெறுங்கல் நமக்குக் கரடுமுரடாகத் தெரிகிறது. அந்தக் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் நமக்கு அழகாகத் தெரிகிறது. அந்தச் சிற்பத்தைக் கல்லுக்குள் இருந்து எழுப்பிய மனிதன் அழகுற இல்லையென்றாலும், அவனது எண்ணம் அழகுற இருந்ததால் சிற்பமும் அழகுற அமைந்தது. இதில் ‘எது அழகு?’ எனும் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது.

எனக்கு அழகாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகாகத் தோன்றாது. அழகு என்பது கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் ஓர் அபூர்வப் புதையல் போலத் தேடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேடலின் ஆழத்தில் ஒரு கேள்வி மெதுவாய் மிளிர்கிறது. அழகை அளப்பவர் யார்? மேலும், அழகைச் செதுக்குவது யார்? ஒன்றின்மீது வைத்திருக்கும் எண்ணங்களால் அது அழகாகத் தெரிகிறதா? அல்லது அந்த அழகால் நம் எண்ணங்கள் அழகாகிறதா? என்பதுதான்.

முன்னொரு காலத்தில் சில தத்துவஞானிகள், “அழகு என்பது நிலைத்து நிற்கும் அழியாமை; மேன்மையைத் தாண்டி நிற்கும் இலட்சிய வடிவம் என்று கூறினர்.

ஒரு சிலையின் ஒழுங்கான சமநிலை, இசையின் இனிய ஒற்றுமை அல்லது ஒரு கோட்பாட்டின் நயமான அமைப்பு... இதுதான், இப்படித்தான் என்று அழகைக் கணக்கிட்டுக் கூறுவது கடினம். எதையும் அதை நோக்கும் கண்கள் மற்றும் எண்ணங்கள் அடிப்படையில் இந்த அழகு எந்த ஒரு வரைமுறைக்குள்ளும் இல்லாமல் உருமாறிக்கொண்டே இருக்கும் ஒரு வடிவம். ஆனால், வரலாறு வேறு ஒன்றைச் சொல்கிறது. மனித விருப்பங்கள் சில ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் அழகைப் பற்றிய பார்வையும் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒரு காலத்தில் அழகாகக் கருதப்பட்டவை பின்னொரு காலத்தில் கண்டுகொள்ளப்படாமலே மாறிவிடுகிறது. மிகச்சிறந்த கலையாக, ஓவியமாகக் கருதப்பட்டவை பின்னொரு காலத்தில் மக்கள் கவனம் பெறாமல் வீணாகிவிடுகிறது. முன்பு உடல் பருமனோடு இருந்தவர்கள் அழகாகத் தெரிந்தார்கள்; தற்போது மெல்லிய தேகம் கொண்டவர்கள்தான் அழகோவியங்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

இந்த மாற்றம் எப்படி? காலமும் மனித எண்ணங்களும் அவ்வப்போது தனது பிடியை, பார்வையை மாற்றிக்கொண்டே இருக்கும். ஒரு சமூகத்தில் தேகம் வெளிர் நிறத்தில் இருப்பது அழகுறக் கொண்டாடப்படும்; மற்றொன்றில், கருகரு கார்மேக நிறம் கவனிக்கப்படும். அதையதை அவரவர் பார்வையிலே கண்டு மகிழ்வதுதான் பேரழகு!

இதில் ஏன் இந்த அளவீடு வந்து உள்ளே புகுந்து சண்டையிடுகிறது? இது போதாதென்று ஊடகங்கள் தங்களின் சில புனைவுகளாலும், திட்டமிட்டத் தரநிலைகளாலும் நம் பார்வையை நம்மை அறியாமலே திருடி, ‘இதுதான் அழகு என்று நம்மை நம்பவைத்து, மனித இனத்தின் பன்முகப் பண்புகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு அழகின் வரையறையைச் சுருக்குகின்றன. ஆனால், உண்மையான அழகின் அளவுகோல் தனிப்பட்டவர்களின் கருத்துகளில் அல்லாமல், அதை நாம் அனுபவிக்கும் உள்ளார்ந்த எண்ண அதிர்வில்தான் அடங்கியுள்ளதாம்!

  குழந்தையின் அழுகுரல், குளிரில் நடுங்கும் குரல், கடலலை, அந்தக் கடலலை மோதிப் பாறைகள் எழுப்பும் சத்தம், கடற்கரைக் காற்று, வெண்பனி நிலவு, கன்னிப் பெண்ணின் கடைக்கண் பார்வை, நாம் மதிக்கும் ஒருவரின் கரிசனப் பார்வை... இவை எதுவும் அழகு எனும் அளவீட்டில் பொருந்தாது. ஆனால், நம்மை அழகுற அமைதிப்படுத்தி ஆழமாக உணர உதவுகிறது. இவ்வகையில், அழகு என்பது உலகமும், நம் உள்ளமும் நடத்தும் ஓர் இரகசிய உரையாடல். ஒவ்வொரு பார்வையாளருக்கும் அது தனித்துவமானது. இதுதான் - இது மட்டும்தான் அழகு என ஒன்றை நம்முள் திணிக்கும்போது, அதைப்பற்றி நாம் மனத்தில் வைத்துள்ள கொஞ்ச நஞ்ச மதிப்புகூட இல்லாமல் போய்விடும். அழகு என்பது எண்ணமும் உள்ளமும் ஒருசேர இணைந்து இடமளிக்கும் ஓர் அருங்கொடை!

நமக்கெல்லாம் தெரிந்த ‘லைலா-மஜ்னு கதையில், தனது இளவரசன் காதலித்து அனுதினமும் அவளையே நினைத்து உருகும் லைலாவைப் பார்த்தே ஆகவேண்டும் எனச் சொல்லி அவளைப் பார்த்தபோது, அரசருக்கு அவளது தோற்றம் சகிக்கவில்லையாம். அப்போது அவரது அமைச்சர் சொன்ன வார்த்தை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கக்கூடியதாகும். “மன்னரே லைலாவைப் பார்க்க உங்களுக்கு மஜ்னுவின் கண்கள்வேண்டும்.”

இங்கு அழகை யார் மதிப்பிட்டது என்று பார்த்தால், அந்த அமைச்சர்தான். காதலன் - காதலி இடையே அழகு என்பதைத் தாண்டி, ஈர்ப்புதான் அந்த அழகை மெருகூட்டுகிறது. எந்த ஓர் அழகையும் மதிக்கும் அழகு பேரழகாக மாறுகிறது. ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்துவிட்டால், அவர் திட்டுவதுகூட தித்திப்பாய் இருக்கும்; அடிப்பதுகூட ஆனந்தமாய் இருக்கும்; முறைப்பதுகூட முத்தாய்ப்பாய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆத்திரப்படுவதுகூட அழகாகத் தெரியும்.

கரடுமுரடாய் நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், அதன் பயன் அதிகமாய் இருந்தால் அதுவும் நமக்கு அழகாகத்தான் தெரியும்.

பிறகு எப்படித்தான் அழகை அளவிடுவது? தரத்தை அளவிடலாம், அழகை எப்படி? அழகை ஒரு வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. அப்படியா, ஆம்! அது பல எண்ணங்களையும் காரணங்களையும் காரணிகளையும் உள்ளடக்கியது. ஒழுங்கற்ற ஓசை இரைச்சலைத் தருகிறது, ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை இனிமையான இசையாக மாறுகிறது. இங்கு அழகுக்கு வலு சேர்த்தது ஒழுங்குதான்.

பருவப் பெண்கள் பார்ப்பதற்கு அழகு என்பதைத் தாண்டி, ஏதோ ஓர் ஈர்ப்புதான் அந்த அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஒருவர் கண்ணுக்கு அழகாகத் தெரிபவர், மற்றொருவர் கண்ணுக்கு அப்படித் தெரிவதில்லை. இங்கு அழகைத் தீர்மானிப்பது ஈர்ப்புதான். இப்படி ஒருசில காரணிகளும் காரணங்களும் ஒருசேர அமையும் போது, அந்த அழகு மேன்மையும் மென்மையும் கொண்ட அழகாக அளவிடப்படுகிறது.

பல நேரங்களில் கட்டுக்கோப்புதான் பேரழகாக உணரப்படுகிறது. எந்த நிகழ்வாக இருந்தாலும், ஒரு கட்டுக்கோப்போடு நடக்கும்போது அது அழகாக அமையும். கட்டுக்கோப்பு கலையும்போது எரிச்சலும், வேண்டாத விளைவுகளும் ஏற்படும். சட்டம்-ஒழுங்கு சீர்கெடும். நேர்த்தியும் ஒழுங்கும் கட்டுக்கோப்பும் ஒருங்கமையும் போது அளவில்லா அழகும் ஆனந்தமும் நிரம்பி வழியும்.

அழகை அளவிடுதல் என்பதன் மிகச் சரியான வழி, அதை வெறும் தோற்றத்தில் மட்டுமே அல்லாமல் அதன் பயன், நோக்கம், குணநலன், ஈர்ப்பு, இசைவு என்பன போன்ற கலவைகள் கொண்ட வரையறையோடு பார்ப்பதுதான் சரியாக அமையும். மனித அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு அதை அவ்வப்போது மாற்றி அமைத்துவிடும். அழகை அளப்பதற்கான உரிமையை யாரும் முழுமையாகக் கொண்டிருக்க முடியாது. அதேநேரத்தில், விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மாறும்; தரநிலைகள் மாறும்; கலாச்சாரம் மாறும்; பண்பாடு மாறும்; மனித எண்ணங்கள் மாறும். ஆனால், அழகு எப்போதும் இருக்கும். அளக்க முடியாத வகையில் அது உயர உயர வளர்ந்துகொண்டே இருக்கும். பிளக்க முடியாத வகையில் மேலும் மேலும் ஆழமாகச் சென்றுகொண்டே இருக்கும்.

அழகின் உண்மையான அளவுகோல் எது? எதெல்லாம் ஆழமான மற்றும் தனிப்பட்ட முறையில் நம் இதயத்தோடு இணைந்து, ஆழ்மன எண்ண உணர்வோடு இணைகிறதோ அதுதான் அழகு. அது மட்டும்தான் அளக்க முடியாத தன்மையோடு எப்போதும் நிலைத்திருக்கும். உயர்ந்த எண்ணங்கள் தனி அழகு; அதன் செயல்வடிவம் மற்றுமொரு கூடுதல் அழகு! அவரவருக்கு உரிய அழகினை உயரிய அழகென நினைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லை.

(தொடரும்)