எளிமை எனும் வலிமை, அதன் தனித்துவம் என்ன என்பதைப் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருக்கும். இப்போது காணவிருக்கும் ‘வலிமையே வாழும்’ என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
வலிமை
என்பது வெறும் உடல் ஆற்றலை மட்டுமே குறிக்காது; அதையும் தாண்டி மனிதர்களை, சமுதாயங்களை, தலைமுறைகளை வடிவமைக்கும் நிலையான கருத்துரு கொண்ட எண்ண ஆற்றலைக் குறிக்கும். வலிமையைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருத்து, உடல் பலத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது என்பதுதான். இதுவும் ஒரு வலிமைதான் இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது. மற்றொரு வலிமையாக, அதன் மற்றொரு பிம்பமாக நாம் உணர வேண்டியது, எது உண்மையான வலிமை என்பதுதான்.
உண்மையான
வலிமை என்பது பொறுமை, விடாமுயற்சி மற்றும் துணிவு மூலம் தடைகளை மீறி வெற்றி காணும் ஆற்றலில் இருக்கிறது. ஒருவர் வாழ்வில் காட்டும் வலிமை, அவருக்குப் பிறகு வரும் தலைமுறைகளை வழிநடத்தும், ஈர்க்கும்; அது ஒரு மரபாக நிலைத்து நிற்கும். எங்கள் இனம் காத்த பெருந்தலைவன் என்று சிலரை அடையாளம் காட்டிப் பேருவுவகை கொள்வது இதன் அடிப்படையில்தான். ஏனென்றால் வலிமை என்றும் நிலைக்கும்.
வலிமையின்
இயல்பை இருவகையாக நாம் பிரிக்கலாம். புறவலிமை மற்றும் அகவலிமை. புறவலிமை என்பது நம் உடல் பலத்தைக் குறிக்கிறது. அகவலிமை என்பது நம் எண்ணங்கள் மற்றும் மனவலிமையைக் குறிக்கிறது. இந்த இரண்டும் இருந்தால்தானே நல்லது!
ஆம்,
இவை இரண்டும் ஒருசேர அமைந்தால் இரட்டிப்பு வலிமைதான். உடல் வலிமை மட்டுமே இருந்தால் அது முரட்டுத்தனத்திற்குள் தள்ளிவிடும். அகவலிமை மட்டுமே இருந்தால் அது சில நேரம் சூழ்ச்சிக்குப் பாதை வகுக்கும். இரண்டும் ஒருசேர அமையும்போது மட்டும் நல்லது நடந்துவிடுமா? இல்லை! அதோடு நன்னெறியும் சேரும்போதுதான் அவ்வலிமை சிறப்புமிக்க வலிமையாக வாழ்த்தப்படும்.
வலிமை
என்பது நம் வாழ்க்கைக்குப் பலமாக அமைகிறது. எப்படி? அதன் ஆழமான அர்த்தம், அதைப் புரிந்துகொள்ளும் உள்ளுணர்வில்தான் உள்ளது. எந்த இன்னலையும் எதிர்கொண்டு, தோல்விகளைக் துளைத்து, தடைகளைக் கடந்து, மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் எழுந்து, அடையவேண்டிய நோக்கத்தில் உறுதியோடு நடைபோடும் வீரம் இருக்கிறதல்லவா... அதுதான் ஆகச்சிறந்த வலிமை. அதை எப்படி உள்ளூர உணர்வது? ஒன்றைப்பற்றித் தீர்க்கமாக, சரியான எண்ணத் தெளிவு இருந்தாலே போதும்; அது நமக்குள்ளே இருந்து இயக்கும் ஆக்கச் சக்தியாக மாறிவிடும்.
குழந்தைகளைத்
தனியாக வளர்க்கும் தாய் தனக்குள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி; நாட்டினைக் காக்க எவ்விதச் சமரசமின்றிக் கொட்டும் பனியிலும் அயராது பணியில் ஈடுபடும் பாதுகாப்பு வீரனின் வீரம்; தொடர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி விடாமுயற்சியோடு விடைகாணத் துடிக்கும் அறிவியல் அறிஞரின் முயற்சி; மாணவர்களை எதிர்கால ஆற்றலாக மாற்ற கூர்தீட்டும் ஆசிரியரின் அர்ப்பணிப்பு, உண்மைக்காகவும் நன்மைக்காகவும் அயராது போராடுபவர்களின் செயல்பாடு... இப்படி எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வலிமை அவர்களை இயக்குகிறது; அது தங்குதடையின்றி வெளிப்படுகிறது.
என்
வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள்தான் என்னை இத்தனை வலிமையுள்ளவனாக மாற்றியுள்ளது. வலிகளே வலிமையைத் தருகிறது, வலிகளே வழிகளை ஏற்படுத்துகிறது.
சோதனைகள்
ஒருவரின் உண்மையான வலிமையைச் சோதனை செய்கிறது. எப்படி இருந்தாலும், நேருக்கு நேர் பார்த்துவிட வேண்டும் எனும் ஆழ்ந்த நம்பிக்கையோடு செயல்படுபவர்களின் வாழ்வுமுறைதான், உலகம் முழுவதும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக இருந்து, நிலையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், ஒரு மனிதரின் வலிமை அவருடன் மடிந்து, முடிந்துவிடாது. அவருடைய செயல்கள் வழிவழியாக வாழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
ஒவ்வொரு
குடும்பமும் நற்பண்புகள் மூலமும், ஒவ்வோர் அரசும் மக்களுக்கான நல்லரண், அது சார்ந்திருக்கும் சமூக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் காப்பதன் மூலமும் வலிமையை நிலைநிறுத்துகின்றன. இவை இரண்டும் சரிவர அமையும்போது உணர்வுள்ள சமூகம் வளர்கிறது. எதிர்காலத் தலைமுறைக்குத் தேவையான விதையை இதன்மூலம்தான் விதைத்து வளர்த்தெடுக்க முடியும்.
ஒருவரது
தனிப்பட்ட வலிமையே இவ்வளவு சாதனையைத் தரும்போது, ஒன்றிணைந்த வலிமை எவ்வளவு பெரிய சாதனையை உருவாக்கும் என்பதை நினைக்கும்போது மிகப் பெருமையாக உள்ளது. ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும்போது வலிமை இன்னும் சிறப்படைகிறது. இந்த ஒற்றுமையை இயற்கைப் பேரிடர் அல்லது தொற்றுநோய் வரும்போது எவ்வித வேறுபாடுமின்றி மனித மனம் ஒன்றிணைந்து தனது ஒருமைப்பாட்டைக் காட்டும் வலிமையை எதைக்கொண்டும் தடுத்திட முடியாது. ஒருமித்த கருத்தோடும் ஒருமித்த நோக்கோடும் ஒன்று சேரும்போது நிலையான மாற்றங்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்ட வலிமை ஒருபோதும் குறையாது; மாறாக, வளரும். மேலும் ஒற்றுமையால் உறவு நலன் பெருகும்.
எவ்வளவு
நீண்ட காலம் வாழ்கிறோம் என்பதைத் தாண்டி, எவ்வளவு வலிமையோடும், உள்ளத் தெளிவோடும் வாழ்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். அதுதான் உண்மையான வலிமை. நம் கனவுகளை மற்றும் தன்னம்பிக்கையைப் பிறருக்குப் பரப்பி அவர்களைத் தூண்டுவதே உண்மையான வலிமை என்று சொல்லி அதைச் செய்து வாழ்ந்தவர்கள்தான் இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார்கள். ஏனென்றால், வலிமை என்றும் நிலைக்கும்.
தீர்க்கமான
நோக்கம் உள்ள வலிமை ஒருபோதும் குன்றாது; அது ஒரு நிலையான ஆற்றல் கொண்டது; அது காலம் கடந்து சென்றாலும் மறையாது; நினைவுகள், சாதனைகள் மற்றும் விட்டுச்சென்ற வழிகள் மூலம் உறுதியாக நம்மைப் பின்தொடரும். அது தனிநபர் உறுதிமொழியாகவோ, வரலாற்றுத் தாக்கமாகவோ, ஓர் இயக்கத்தின் கொள்கையாகவோ அல்லது ஒற்றுமை கொண்ட மக்களின் சக்தியாகவோ... இப்படி ஏதோ ஒரு வடிவத்தில் வலிமை தொடர்கிறது.
உடல்
வலிமை, உள்ள வலிமை மற்றும் அதிகார வலிமை இவை மூன்றும் ஒருவருக்கு அமைந்துவிட்டால் போதும்தானே! எனும் எண்ணம் வரும். நாம் ஏற்கெனவே கூறியுள்ளது போல இந்த வலிமைகளோடு நற்குணங்களும் (Virtues) சேர்ந்தால்தான் அது சிறப்பான வலிமையாக அமையும்.
உடல்
வலிமை பொறுமையையும், உள்ள வலிமை மன்னிப்பையும் தருவதே தகுதி நிறைந்த வலிமையாகும்.
(தொடரும்)
1944-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் உச்சமடைந்த நேரம். காங்கிரஸ் கட்சி தேச விடுதலைக்காக ‘வெள்ளையனே, வெளியேறு’ எனப் போராட்டம் நடத்துகிறது. மறுபக்கத்தில், திரை மறைவில் ஆங்கில அரசிடம் அரசுப் பதவிகளைப் பெற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது.
பேரறிஞர்
அண்ணா தனது ‘திராவிட நாடு’ இதழில் காங்கிரஸ் கட்சியைச் சாடி ‘பிஸ்கட்’ எனும் தன் புகழ்பெற்ற சிறுகதையை எழுதினார்.
துரைசாணி
அம்மா தன் பங்களா வராண்டாவில் அமர்ந்து பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செல்ல நாய் ஜிம்மி அருகில் நின்று வாலாட் டுகிறது. துரைசாணி அம்மா ஒரு பிஸ்கட்டை ஜிம்மியிடம் வீசி ‘கேட்ச்’ என்கிறாள். ஜிம்மி பிஸ்கட்டை வாகாகக் கவ்விக்கொண்டு இன்னும் வேகமாக வாலாட்டுகிறது.
வேலைக்காரன்
இராமசாமி, துரைசாணி அம்மாவிடம், “எசமானி அம்மா, காலையில் இருந்து சாப்பிடலே, பசிக்குது”
என்றார். துரைசாணி அம்மா முகம் சுளித்து, “என்னது, ஜிம்மி தின்கிற பிஸ்கட்டை நீ கேட்கிறாயா? நீ
என்ன நாயா? போ வெளியே” என்கிறார். வேலைக்காரன் இராமசாமி தலை குனிந்தவாறு செல்கிறார். காட்சி மாறுகிறது.
கதர்
சட்டை, குல்லாவுடன் காங்கிரஸ் தலைவர் துரைசாணி அம்மாவைச் சந்திக்கிறார்.
“மேடம் துரைசாணி அம்மா, எங்கள் மக்கள் துன்பப்படுகிறார்கள்; எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்”
என்கிறார். துரைசாணி அம்மா உதட்டில் விரல் வைத்து “உஷ், ஜிம்மி தூங்குகிறது, சத்தம் போடாதே” என்கிறாள்.
காங்கிரஸ்
தலைவர் குரலில் பணிவு கூட்டி, “அம்மா, தயவுசெய்து டொமினியன் அந்தஸ்தாவது கொடுங்கள்”
என்கிறார். துரைசாணி அம்மா ஒரு பிஸ்கட்டை காங்கிரஸ் தலைவர் காலடியில் போடுகிறார். பின் சொல்கிறார், “பிஸ்கட் வேணுமா? அப்ப ஜிம்மி மாதிரி குரை, வாலாட்டு”
என்கிறார்.
தலைவர்
சுற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, இடுப்பை வால்மாதிரி ஆட்டிக்கொண்டு ‘லொள், லொள்’ என்கிறார். துரைசாணி அம்மா விழுந்து விழுந்து சிரித்தவாறு இன்னொரு பிஸ்கட்டைப் போடுகிறாள். தலைவர் அந்தப் பிஸ்கட்டை எடுத்துச் சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக்கொள்கிறார்.
துரைசாணி
அம்மா சொல்கிறாள், “இப்போ போய் உன் மக்களிடம் சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொல்” என்கிறார்.
இக்கதை
பதவிக்காகக் குறுக்குவழி தேடும் காங்கிரஸ் கட்சியின் முகத்திரையைக் கிழித்தது. இக்கதை
வெளியான அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் இக்கதைக்காக அரசால் தடை செய்யப்பட்டது.
இந்திய
அரசியல் அமைப்பு
கூட்டாட்சி முறையை உள்ளடக்கியது. ஒன்றிய அரசு அதிகாரம், மாநில அரசு அதிகாரம், பொதுவான அதிகாரம் என மூன்று வகைகளைக்
கொண்டது. அரசியல் கட்சிகள், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற வகையில் பிரிக்கப்படுகின்றன.
முதன்
முதலாக 1967-இல் தி.மு.க.
என்ற மாநிலக் கட்சி ஆட்சிக்கு வரும்வரை கூட்டாட்சி முறையில் வாதங்கள், பிரதிவாதங்கள் இல்லை. ஒன்றிய அரசு, மாநில அரசுகளை நசுக்குகிறது. மாநிலச் சுயாட்சிவேண்டும் என்பது, தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை முழக்கத்தில் முதன்மையானது.
காங்கிரஸ்,
பா.ச.க. என்ற
தேசிய அரசியலிலும், மாநிலக் கட்சிகளின் மூன்றாம் அணி என்ற அரசியலும் தவிர்க்க இயலாத ஒன்றாகும். இதன் அடிப்படையில் எதிர்ப்பதைவிட உறவாடிக் கெடுப்பதில் தேசியக்
கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. தங்கள் அரசியல், ஆட்சி அதிகாரத்திற்காக இருபெரும் தேசியக் கட்சிகளும் செய்த அரசியல், அரசியல் அமைப்பிற்கே சவால் விட்டதாகும். 356 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தல், நெருக்கடி நிலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
நீக்கம், காஷ்மீர் உடைப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தேசியக்
கட்சிகள் மாநிலக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைப்பததற்காக ஒன்றிய அரசின் புலனாய்வுப் பிரிவுகள் இறக்கிவிடப்படும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர் சுவேந்து அதிகாரியைப் பயன்படுத்தி பா.ச.க.
மம்தா பானர்ஜி அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.
தமிழ்நாட்டு
அரசியலைப் போலவே, பத்து ஆண்டுகளாக மகாராஷ்டிரா அரசியலை ஊன்றிக் கவனித்து வருகிறோம். சிவசேனா உடைப்பு, அதன் பல பிரிவுகள், தேசியவாத
காங்கிரஸ் உடைப்பு, அதன் உட்பிரிவுகள், ஆட்சி அமைத்தல், கவிழ்த்தல், தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்க ஒரு கூட்டணி என நடந்த காட்சிகள்
மக்களின் தீர்ப்பை மதிக்காத இருபெரும் தேசியக் கட்சிகளின் ஆட்சி அதிகார வெறியாகும்.
தமிழ்நாட்டு
அரசியலில் 79 ஆண்டுகளாக நடக்காத அதிசயங்கள் நடந்தன. தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் பிரிந்த தலைவர்கள்
ஒவ்வொருவரும் புதுதில்லி சென்று, உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் அரசியல் முடிவுகளை எடுத்தார்கள். அ.தி.மு.க. என்ற தொண்டர்களின்
கட்சியை பா.ச.க.
சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது.
எம்.ஜி.ஆர். அவர்கள்
தி.மு.க.விலிருந்து
பிரிந்ததற்கு, அ.தி.மு.க. உருவானதற்கு காங்கிரஸ்
மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பின்னணி இருந்தது என்பதே வரலாறாகும். தங்களின் புதிய அடிமைகளால்
மாநில அரசியல் சூழல்களை மடை மாற்றும் வலிமை பெறுகிறார்கள்.
தேசியக்
கட்சிகள் தங்கள் பேர வலிமையால், மாநிலக் கட்சிகளை முடக்குகிறார்கள். வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்வரை சீட் பேரம் பேசுகிறார்கள். அதன்பின் வேட்பாளர் தேர்வில் திணறித் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் ஒரு சிறு கட்சி ஒரு தொகுதியில் தாமரையிலும், மற்றொரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் நிற்கிற அதிசயம் நடந்தது. ‘இந்தியா’ கூட்டணியில் கட்சியில் இல்லாத - வேறு கட்சியில் சீட் கேட்டவருக்குச் சீட் கொடுத்த புதிய அரசியல் வரலாறும் பதிவானது.
தேசியக்
கட்சிகள் தங்கள் தேவைகள் முடிந்தவுடன் மாநிலக் கட்சிகளின் காலை வாரி விடுவதிலும், முதுகில் குத்துவதிலும் வல்லவர்களாக இருக்கின்றன. ஆட்சி அதிகாரம் என்ற பிஸ்கட் பெற சதுரங்க ஆட்டங்கள் பல நடத்துகிறார்கள்.
2026 தமிழ்நாட்டுத் தேர்தல்
முடிவுகளுக்குப் பின் தொங்கு சட்டசபை அமைந்தது. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், ‘இந்தியா’ கூட்டணியினரும், எதிர் என்.டி.ஏ. கூட்டணியினரும்
ஆளும் அரசிற்கு ஆதரவாக வாக்களித்தனர். என்.டி.ஏ. கூட்டணியினர்
கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர். அ.தி.மு.க. கட்சி அவர்களுக்கு
மன்னிப்பு வழங்கிவிட்டது. இருப்பினும், சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்கள் பதவி பறிப்புக்கு ஆளாகலாம் என்பதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகள், ஆட்சி அமைப்பு, கூட்டணி மாற்றம் என்பது 2029 பாராளுமன்றத்
தேர்தலில், தேசிய அளவில் மூன்றாவது அணி என்ற முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளது. தேசியக்
கட்சிகளின் ‘பிஸ்கட் அரசியல்’ என்ற வர்ணிப்பு புதிய உரு பெற்றுவிட்டது. பத்தாண்டு காலப் பல மாநில
அரசியலைப் புரட்டிப்பார்த்தால், மாநிலக் கட்சிகளும்,
கொள்கைச் சித்தாந்தக் கட்சிகளும் பிஸ்கட்டை நோக்கி நகர்ந்துவிட்டன என்பதே உண்மை.
மக்களின்
வாக்கு சக்தியைக் கேவலப்படுத்தும் அரசியல் கட்சிகளை, மக்கள் வாக்கு
வழியே மீண்டும் தண்டிப்பார்கள் என்பதே நம்பிக்கை மிகு நாளைய
அரசியலாகும்.
‘சூசை’ தமிழ்க் கத்தோலிக்கர் நன்கறிந்த பெயர். வாடா மலரைக் கையிலேந்தி, வாழ்ந்த ஒரு புனிதர். இவரைத் தமிழ்க் கத்தோலிக்கருக்கு அறிமுகப்படுத்த முனைவது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமே.
தூயவரான
ஜோசப்பை (யோசேப்பு) அல்லது தமிழில் அழைக்கப்பெறும் சூசையை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல;
பின் ஏன் இக்கட்டுரையின் நாயகனாய் சூசை வருகிறார்?
சூசை
எனும் ஜோசப் கத்தோலிக்க இறைச் சமூகத்தில் வணக்கத்திற்குரியவர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்க ஊரகங்களில் ‘சூசை’ எனும் பெயர் மிகச் சாதாரண பெயர். கத்தோலிக்க மரபில் ‘சூசை’ எனும் பெயர் மிகப் பிரபலமானது.
சூசைக்கு என்ன
நடந்தது?
தமிழுக்கு
ஜோசப்பைச் சூசையாக்கியவர் ‘தத்துவப் போதகர்’ என்றழைக்கப்பட்ட இராபர்ட் டி நொபிலி. சூசையும்
ஜோசப்பும் 2026-ஆம் ஆண்டின் தேர்தல் களத்தில் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவார் என்று தெரியாமல் ஜோசப்பைச் சூசையாக்கிய நொபிலிக்கு உய்த்துணர வாய்ப்பில்லைதான்!
நொபிலி
என்ன செய்தார்? என்ற உண்மைகள் இன்றைய கத்தோலிக்கம் அறியாத உண்மை. எப்படியும் நற்செய்தியை அறிவித்தே ஆக
வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய இவர், கத்தோலிக்கத் துறவிக்கான ஆடை துறந்து, பார்ப்பனிய கோலம் தரித்தவர். தமிழின் ஒப்பற்ற இலக்கியத் தரங்களைத் தமிழருக்குரியதாக்க உரைநடைத் தமிழை அறிமுப்படுத்தி,
தமிழை மக்கள் மயப்படுத்தியவர். கத்தோலிக்கர் இன்று பயிலும் மந்திரங்களைத் தமிழ் உரைநடையில் தந்தவர். அவர் ஜோசப் எனும் உயரிய புனிதரைச் சூசையாக உச்சரிக்கவைத்தமையுள் எந்த அரசியலும் இல்லை. வாக்கரசியல் நிச்சயமாக இல்லை.
இன்று என்ன
நடந்தது?
இன்று
85% இந்துச் சகோதரர் வீடுகளின் சமையற்கட்டு வரை புகுந்துள்ள ஒரே பெயர் ‘ஜோசப்’ என்பதுதான். திருக்குடும்பத்தில் ஒருவரான ‘சூசை’ எனும் ஜோசப் இப்படிப் புகுந்துள்ளமை யாருக்கு மகிழ்வைத் தருகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக் கத்தோலிக்கர் எவரும் மகிழாது இருக்கவியலாது. சூசையாம் ஜோசப் நிகழ்த்தியிருக்கும் விந்தையுள் அடங்கியுள்ள உண்மை என்ன?
திரையுலகில்
வெறும் ‘விஜய்’ என்று அறியப்பட்ட ஒருவரை, இவர் வெறும் விஜய் அல்ல; ஜோசப் விஜய் என்று ஒரு மதவாதி வேண்டுமென்றே பகை வளர்க்கும் நோக்கில், பிரிவினைவாத உணர்வோடு ஜோசப்பை அழுத்திக் கூறினார். அம்மதவாதி கொடுத்த அழுத்தத்திற்குப் பின்னர்தான் விஜய்க்குத் தனக்கு ‘ஜோசப்’ என்ற பெயரும் உண்டு என்றிருந்திருக்கலாம்.
எந்த
நோக்கோடு அந்தப் பெரும்பான்மைவாதி ‘ஜோசப்’ என்ற பெயரை அழுத்திக் கூறினாரோ, அம்மதவாதியின் இழிந்த நோக்கம் நிறைவுறாமலேயே போயிற்று.
புனிதராம்
சூசையின் அருளால் ஜோசப் விஜய் உண்மையிலேயே ஜெயம் பெற்றார். மதவாதியின் நோக்கம் சிதைந்தமைக்குப் புனிதர் சூசைதான் காரணரோ?
இன்றைய
தமிழ்நாட்டு முதல்வரை ‘ஜோசப் விஜய்’ என்றழைப்பதில் கத்தோலிக்க நம்பிக்கையாளருக்கு மிக்க மகிழ்ச்சிதான். ஆனால், ஜோசப் விஜய் அவர்கள், விஜய்க்கு முன் ஜோசப் என்ற சொல் இடம்பெற்றிருந்ததை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டிருப்பாரா? தான் வெறும் விஜய் அல்ல; ஜோசப் விஜய்தான் என்றழைப்பதைப் பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வாரா?
ஜோசப்
விஜய் அவரின் மறைசார்ந்த ஒழுங்கின்படி, நிச்சயமாகத் திருமுழுக்குப் பெற்றிருக்க வேண்டும்; தொடர்ந்து அவர் பெறவேண்டிய அருளடையாளங்களைப் பெற்றாரா? என்பது எவரும் அறியார் (விஜய் அசோக் நகர் பங்கில் நற்கருணை அருளடையாளம் பெற்ற புகைப்படங்கள் இணையங்களில் உலவுகின்றன. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்!). ஆனால், இவரின் திருமணம் முழுக்க முழுக்க கிறித்தவம் சாராது தமிழ் மணம் முறைப்படியே நடந்தது. இவரின் தாய் ஓர் இந்துப் பெண்மணி. இவரின் தந்தையார் கிறித்தவர் என்பதும் உண்மையே. இவரும் இவர் மனைவியும் நல்ல கணவன்-மனைவியாகவே இல்லறம் நடத்துகின்றனர். இவரின் எண்பதாவது பிறந்த நாளினை இந்துமத கோவில் ஒன்றில் இந்துமதச் சடங்காச்சாரப்படியே நடந்தது என்பதையும் அறிகின்றோம்.
இக்கட்டுரையின்
நோக்கம் ஜோசப் விஜய் எந்த மதத்தைச் சார்ந்தவர்? அல்லது சாராதவர் என்று ஆய்வதல்ல; ஒரு தனிமனிதர் சார்ந்த மதத்தை வைத்து ஒருவரை அளவிடுவதும் நம் நோக்கமல்ல. மதரீதியாக ஒருவரை அளவிட்டு அவர் தகுதியை நிர்ணயிப்பதும் நமக்குரிய பணியுமல்ல.
மதத்தையும்,
மதம் உள்ளடக்கிய கடவுளர் நம்பிக்கையையும் காட்டுமிராண்டித்தனம் என்று இழித்துப்பேசிய தந்தை பெரியாரை நாம் இகழ்வதில்லை. தன் சமய நம்பிக்கையின் அடையாளத்தை எங்கும் காட்டிக்கொள்ளாத தலைவர் காமராசரையும் நாம் ஒதுக்குவதில்லை. நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பது குடிமக்களின் தெரிவு (Choice). குடிமக்களின்
இவ்வுரிமையைத் தடுப்பது, சமய மொழியில் பாவம் (Sin). அரசியல்
மொழியாக வன்முறை (Violence). அதுவும்
ஒரு மதச்சார்பற்ற நாட்டில், ஓர் அரசியல் தலைமைக்கு மதம் சார்ந்து ஒரு நம்பிக்கை இருக்கலாம்; அதே வேளை ஒரு மதம் சார்ந்தவர் என்பதால், பிறமத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை நாம் ஏற்பதில்லை.
இன்றைய
நம் பிரதமர் குசராத் முதல்வராக இருந்தபோதுதான், குசராத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 2000 இசுலாமியர் கொல்லப்பட்டனர். சொந்த ஊரில் பாதுகாப்பற்ற இசுலாமியர் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களின் துயர் கண்டு கவலையுறாத முகாம்களில் இசுலாமியர் இனப்பெருக்கம் (breeding) செய்து கொண்டிருப்பதாக நையாண்டி செய்தார்.
இதே
மனிதர் நாடு முழுவதும் பயணம் செல்கையில் தொழுகை செய்யாத கோவில்கள் இல்லை. கோவிலுள் பெரும் பக்தனாகவே காட்சியளிக்கிறார். மோடியின்
தனிப்பட்ட நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். அவர் இந்துவாக இருப்பதில் நமக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால், மத அடிப்படையில் ஒரு
தேசத்தைக் (Raistra) கட்டமைப்பதை
நாம் ஏற்க முடியாது. மத அடிப்படையில் அமையும்
தேசம் எல்லாருக்குமான (Raistra) தேசமாக
இராது என்பதனால் எதிர்க்கிறோம். மதங்களை மதிக்கும் நாம் மதவாதத்தை மறுக்கிறோம்.
திரு.
ஜோசப் விஜய் ஒரு கிறித்தவராக இருப்பது அரசமைப்புக்கு எதிரானதல்ல; ஏற்கெனவே கூறியது போன்று மத உரிமை என்பது
மனிதரது அடிப்படை உரிமை; மதச்சுதந்திரம் பற்றிப் பேசும் இந்திய அரசமைப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. மதம் ஒரு கருத்தியல் எனும்போது, கருத்தியலைத் தாங்கும் ஒரு மதத்தை ஏற்க, கடைப்பிடிக்க, பரப்புரை செய்ய அரசமைப்பு உரிமை அளிக்கிறது; இது குடிமக்களுக்கான அடிப்படைக் கவசமாகும். இக்கவசம் புனிதமானது, போற்றுதற்குரியது.
விஜய் என்ன
செய்கிறார்?
திரு.
ஜோசப் விஜய் தன்னைக் கிறித்தவராக அடையாளப்படுத்தலில் எத்தவறும் இல்லை. ஆனால், இவர் என்ன செய்கிறார்? இவர் தன்னைச் சமயங்களைக் கடந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் தவறில்லை. மேனாள் முதல்வர் சமயம் பேசும் கடவுளை நம்பாதவர்; எந்தவகை வழிபாட்டையும் ஏற்காதவர். அவர் மனைவி ஒரு கடவுள் பக்தை; இதனையும் ஸ்டாலின் மதிக்கிறார். மதங்களைக் கடந்து மனிதரை மதித்ததால், சிலவேளை இவரை ‘இந்து மதத்தின் விரோதி’ என்று தூற்றியதைப் பார்த்திருக்கிறோம். திரு. ஸ்டாலின் அவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டு
அரசின் சட்டமன்றத் தலைவர் பிரபாகர் தன் கிறித்தவ அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்ள தயங்காதவர். பொது இடங்களில் திருவிவிலிய வாசகங்களை உச்சரிக்க இவர் தயங்குவதே இல்லை.
ஒரு
சிறுபான்மை மதம் சார்ந்த இவர், பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்தாலும், இவர் சார்ந்த மத அடையாளத்தை வலுவாக
வெளிக்காட்டுவதில் உறுதியாக இருக்கிறார். தான் சார்ந்த மத அடையாளத்தைப் பெரும்பான்மை
சமயத்தார் வெளிப்படையாகக் காட்டுவதில் தயக்கம் காட்டாத நிலையில், சிறுபான்மை மதம் சார்ந்த ஒருவர் தயக்கம் காட்டத் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.
அண்மையில்
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இயங்கும் இளங்குருமடத்தின் பேராசிரியர் ஒருவர் என்னோடு பேசும்போது, ஒரு கிறித்தவர் தமிழ்நாட்டு முதல்வராகிவிட்டார் என்றும், குருமடத்தின் குருமட மாணவர்கள் பெருமகிழ்வில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். திருச்சி மாநகரின் ஒரு தேவாலயத்திற்குள் சென்று, முழங்கால்படியிட்டு வணங்கியதைக் கண்டு பேருவகை கொண்டதாகவும் கூறினார்.
அந்தோணியார்
ஆலயத்தில் முழங்காலிட்டு வணங்கிய விஜய், திருச்செந்தூர் வேல் முருகனின் வேலைத் தாங்கியமை, மராட்டியம் வரை சென்று சீரடி பாபாவைத் தொழுதமை, கர்நாடகாவின் மூகாம்பிகைக்கு மகுடம் சூட்டியமை... இவையெல்லாம் கிறித்தவருக்கான நம்பிக்கை அடையாளமா?
ஒருவர்
மதம் சார்ந்தவரா? இல்லையா? என்பது நமது கேள்வியல்ல; ஒரு மதம் சார்ந்தவன் என்று தேவைக்குக் காட்டிக்கொண்டு,
எல்லா மதக் கடவுளரையும் வழிபடுகிறேன் என்று காட்டிக்கொள்வது உண்மையில் நாடகமே.
அடையாளம்
குடிமக்களின் உரிமை; அடையாளத் திணிப்பு அராஜகம்; அடையாள வழி பாகுபடுத்தல் வன்முறை; பன்முக அடையாளங்களை மதித்தல் சனநாயகம். குடிமக்களின் அடையாளத்தில் சமரசம் செய்வது போலித்தனம்.
“நீதிநெறிமிக்க சமுதாயம் ஒவ்வொரு மனித உயிரையும் அமைதியையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது!”
உலக
அரசியல் அரங்கிலும், ஆன்மிகத் தளத்திலும் 2026-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எட்டாம் நாள்
ஒரு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக விடிந்தது. ஸ்பெயின் நாட்டின் தலைநகரான
மாட்ரிட்டில் உள்ள பிரதிநிதிகள் சபையின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், கத்தோலிக்கத்
திரு அவையின் உச்சத்தலைவர் திருத்தந்தை 14-ஆம் லியோ ஆற்றிய உரை, உலகளாவிய மனிதநேயத்தின்
பிரகடனமாக ஒலித்துள்ளது. மதச்சார்பின்மை தழைத்தோங்கியுள்ள ஓர் ஐரோப்பிய நாட்டின் நாடாளுமன்றத்தில்,
திருத்தந்தை ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறை என்பதால், இது வரலாற்றின் பக்கங்களில்
அழியாத்தடம் பதித்துள்ளது.
சுமார்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட இந்த ஆறு நாள் பயணத்தின்
மூன்றாம் நாளில், அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் திருத்தந்தை
லியோ நுழைந்தது, ஆன்மிகமும் அரசியலும் அறத்தின் அடிப்படையில் எவ்வாறு இணையவேண்டும்
என்பதற்கான இலக்கணமாக அமைந்தது.
அவரது
இந்த உரை இன்றைய உலகிற்கு ‘காலத்தின் கட்டாயம்’ என்பதையும் உணர்த்தியிருக்கிறது.
அழைப்பில் மலர்ந்த வரலாற்று
மாற்றம்
பதினாறாம்
நூற்றாண்டில் உலக வல்லரசாகத் திகழ்ந்த ஸ்பெயின், கத்தோலிக்கத் திரு அவையோடு பல நூற்றாண்டுகால
ஆழமான பிணைப்பைக் கொண்டது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் ஜெனரல் பிரான்சிஸ்கோ
ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் திரு அவையின் செல்வாக்கு அரசியலில் அதிகமாகப்
பரவியிருந்ததன் விளைவாக, 1970-களில் சனநாயகம் மலர்ந்த போது, திரு அவையின் மீதான பொதுமக்களின்
அணுகுமுறை மதச்சார்பின்மையை நோக்கி வேகமாக நகர்ந்தது. இத்தகையதொரு சூழலில், கத்தோலிக்கத்
திரு அவையை ஒரு மாபெரும் ஆன்மிகத் தூணாக அங்கீகரித்து, ஸ்பெயின் நாடாளுமன்றம் அவருக்கு
அழைப்பு விடுத்ததே ஒரு பெரும் வரலாற்று மாற்றமாகும்.
கொமிலாஸ்
போண்டிஃபிகல் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய உறவுகள் துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான
எமிலியோ சயன்ஸ் ஃபிரான்சிஸ் (Prof. Emilio Sáenz
Francés) குறிப்பிடுவதுபோல:
“இந்த நிகழ்வு அரங்கேறாவிட்டாலும் திருத்தந்தை லியோவின் ஸ்பெயின் பயணம் வரலாற்றுச்
சிறப்புமிக்கதுதான். ஆனால், ஜூன் 8, 2026 திங்கள்கிழமை காலையை அவர் நாடாளுமன்ற வளாகத்தில்
தொடங்கியதன் மூலம், திரு அவையின் சிந்தனைகளுக்கும் தற்போதைய ஸ்பானிய அரசியல் விவாதங்களுக்கும்
இடையே ஒரு துடிப்பான, நீடித்த உறவு இன்னும் சாகாமல் உயிர்ப்போடு இருக்கிறது என்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது.”
திருத்தந்தையின்
வருகையைக் கண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, ஏழு நிமிடங்களுக்கும்
மேலாக “விவா எல் பாப்பா!” (Viva el Papa!) என முழக்கமிட்டு நெகிழ்ந்தது, திரு
அவையின் மீதான தற்காலச் சமூகத்தின் தார்மீக மரியாதையைக் காட்டுகிறது.
இறையாண்மையும் திரு அவையின்
உரிமையும்
அரசியல்
அமைப்புகளின் சட்டப்பூர்வமான இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குவது திரு அவையின் நோக்கமன்று
என்பதைத் திருத்தந்தை லியோ மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எடுத்துரைத்துள்ளார்.
அண்மைக்கால சனநாயகம் கடுமையான அரசியல் துருவமுனைப்பைச் (Polarization)
சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் எதார்த்தங்கள்
குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் முழுத் தார்மீக உரிமை திரு அவைக்கு
உண்டு என்பதை அவர் நிலைநாட்டியுள்ளார். அதிகார வர்க்கத்தின் மொழியைக் கடந்து, எளிய
மனிதனின் இதயங்களைத் தொடும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
சலமன்கா சிந்தனைப் பள்ளியும்
தற்கால சனநாயகச் சிதைவும்
திருத்தந்தை
லியோவின் உரையில் மிக முக்கியமான தத்துவார்த்தப் பகுதி, அவர் ஸ்பெயினின் புகழ்பெற்ற
‘சலமன்கா சிந்தனைப் பள்ளி’யைக் (School of Salamanca)
குறிப்பிட்டதாகும். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஏகாதிபத்தியம் உலகை வென்றுகொண்டிருந்த
காலத்தில், மனித உரிமைகள் மற்றும் முதலாளித்துவம் குறித்த கோட்பாடுகளை முதன்முதலில்
வகுத்த அறிவுஜீவிகள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்களாவர்.
கிறித்தவ
விழுமியங்களின் அடிப்படையில் உருவான இச்சிந்தனைப் பள்ளி, உலகியல் அதிகாரங்களுக்கு ஒரு
தார்மீக எல்லை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியது. இன்றைய காலகட்டத்தில், உலக வல்லரசுகள்
எந்தவித தார்மீகக் கட்டுப்பாடுகளும் இன்றி, சனநாயகத்தின் இன்றியமையாத அங்கங்களான ‘அதிகாரப்
பகிர்வு மற்றும் சமநிலை’ அமைப்புகளைச் சிதைத்து வரும் வேளையில்,
சலமன்கா பள்ளியின் கோட்பாடுகள் மிக முக்கியமான எச்சரிக்கையாகும். மேற்கத்திய பண்பாட்டின்
தொட்டிலாகக் கருதப்படும் ஸ்பெயின், நாடாளுமன்றத்திற்கும் சனநாயத்திற்குமான சமநிலையைப்
பேண வேண்டியதன் அவசியத்தைத் திருத்தந்தை நினைவுகூர்ந்துள்ளார்.
மனித கண்ணியத்திற்கு
எழும் சவால்களும் திருத்தந்தை வழிகாட்டுதலும்
ஒரு
சமுதாயம் உண்மையான நீதிநெறிமிக்க சமுதாயமாக மாறவேண்டுமெனில், அது ஒவ்வொரு மனிதனின்
உள்ளார்ந்த கண்ணியத்தையும் அங்கீகரித்துச் சட்டங்களை இயற்றவேண்டும். அத்தகைய சட்டமே
அடித்தட்டு மக்களின் அரணாகத் திகழ முடியும்.
“கருவிலிருக்கும்
குழந்தை முதல் இயற்கை மரணம்வரை அனைத்து உயிர்களும் போற்றப்பட வேண்டும்; பலவீனமானவர்களைப்
புறந்தள்ளும் ‘நுகர்வுக் கலாச்சாரம்’ (Throwaway
culture) ஒழிய வேண்டும்” எனும் ‘உயிர்ப் பாதுகாப்பு’ பற்றியும், “சமூகத்தின் முதலாவது இயற்கை அடித்தளம் குடும்பமே;
தலைமுறைகளை இணைக்கும் ஆன்மிக மற்றும் சமூக நிலைத்தன்மை இங்குதான் பிறக்கிறது. ஆகவே,
குடும்பக் கட்டமைப்பு சிறப்புற அமையவேண்டும்” என்றும்,
“புதிய தலைமுறையினர் உண்மையை நேசிக்கவும், மனித கண்ணியத்தை மதிக்கவும் கற்றுத்தரும்
பள்ளிக்கூடங்களாக நமது கல்வி நிறுவனங்கள் மாறவேண்டும்” என்றும்
சமூகத்தின் அடிப்படை விழுமியங்களைத் திருத்தந்தை
வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர்ந்தோரின் அவலமும்
சமூக நீதியும்
இன்று
உலகையே அச்சுறுத்தும் மிக மோசமான மனிதநேய நெருக்கடி, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின்
துயரமாகும். ஸ்பெயினின் தற்போதைய சோசலிச அரசு, புலம்பெயர்ந்தோருக்குச் சாதகமான பொருளாதார
மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த ஐரோப்பாவும் உலகமும்
இதில் இன்னும் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இது
குறித்து அவர் இருமுனைச் சமூக நீதியை (Twofold demand of social justice) முன்வைத்தி ருக்கிறார். ஒன்று, பாதுகாப்பான
சட்டப்பூர்வ வழிகள். அதாவது, வறுமை, போர் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு
வருவோருக்கு மரியாதையான வரவேற்பும், அவர்கள் புதிய சமூகத்தோடு ஒருங்கிணைவதற்கான சமவாய்ப்புகளும்
வழங்கப்படவேண்டும். மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் அவர்கள் சிக்குவதைத் தடுக்க
பன்னாட்டுக் கூட்டுறவு அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு, தாய்நாட்டிலேயே
வாழும் உரிமை. அதாவது, வறுமை, பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக
எவரும் தங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறக் கூடாத சூழ்நிலையை அந்தந்த நாடுகளிலேயே
உருவாக்க உலக நாடுகள் பாடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத் தவறுகளுக்குத்
திரு அவையின் மன்னிப்பு
திருத்தந்தையின்
உரையில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு குறிப்பு, திரு அவை தன் கடந்த காலத் தவறுகளை வெளிப்படையாக
ஒப்புக்கொண்டதாகும். அட்லாண்டிக் கடந்த அடிமை வணிகத்திலும், காலனித்துவ ஆதிக்கத்திலும்
திரு அவையின் சில பிரிவுகள் ஆற்றிய பங்கை மறைக்காமல், “கிறித்தவ விழுமியங்களின் உன்னதத்தைத்
திரு அவையே சில காலங்களில் கடைப்பிடிக்கத் தவறியுள்ளது” என்று
கூறி, வத்திக்கானின் சார்பில் அண்மையில் அவர் கோரிய மன்னிப்பை மீண்டும் நினைவுபடுத்தினார்.
இது அவரது வெளிப்படையான நேர்மையைக் காட்டுகிறது.
ஆயுதப் பெருக்கத்திற்கு
எதிரான அறைகூவல்
இன்று
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போர் பதற்றமும், உக்ரைன் மீதான இரஷ்யாவின்
படையெடுப்பும் உலகை இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக ஆபத்தான புவிசார் அரசியல்
சூழலுக்குள் தள்ளியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டங்களை
(Defense Budgets)
உயர்த்தி, ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபட்டு வருவதைக்
கடுமையாகச் சாடிய திருத்தந்தை, “ஆயுதங்கள் தற்காலிக அமைதியைக் கொண்டுவரலாமே தவிர, ஒருபோதும்
நிரந்தரமான நீதியான அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது; ஒவ்வொரு போரும் இறுதியில் மனிதகுலத்தின்
பேச்சுவார்த்தை திறனுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி” என்று
தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவும்,
போர்க்கள அறமும்
நவீனத்
தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) இராணுவத் துறையில் புகுத்தப்படுவதைக்
குறித்துத் திருத்தந்தை விடுத்த எச்சரிக்கை மிகக் கூர்மையானது. உயிர் மற்றும் இறப்பு
குறித்த இறுதி முடிவுகளை ஒருபோதும் தானியங்கி அமைப்புகளிடமோ (Automated Systems)
அல்லது கணினி அல்காரிதம்களிடமோ ஒப்படைக்கக்கூடாது. மனிதனின் தார்மீகப் பொறுப்புகளுக்குப்
பதிலாக, தொழில்நுட்பத்தைப் புகுத்தக்கூடாது என்று உலகச் சமூகத்திற்கு அவர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அதிகாரத் தொனி கொண்ட
மொழியைக் களைதல்
இன்றைய
சூழலில் திருத்தந்தை லியோவின் இந்த உரை மிக அவசரமான, அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பல்வேறு ஊழல் புகார்களாலும், அரசியல்
துருவமுனைப்பாலும் சட்டம் இயற்ற முடியாமல் தவித்து வரும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில்,
திருத்தந்தையின் வார்த்தைகள் ஒரு சிறப்பான திசைகாட்டியாக (Moral Compass)
வந்துள்ளன.
‘அரசியல்
எதிரிகளைத் தொடர்ந்து இழிவுபடுத்துவது சனநாயகம் ஆகாது’ என்று
எச்சரித்த திருத்தந்தை, போர்களும் வன்முறைகளும் கொண்ட இச்சூழலில் நமது மொழியும் அன்றாட
உரையாடலும் அன்பை விதைப்பதாகவும் நல்லுறவை வளர்ப்பதாகவும் அமையவேண்டும்; அதற்கு, ‘அதிகாரத்
தொனி கொண்ட மொழியைக் களைதல்’ (Disarming
Language) என்ற சிறப்பானதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.
வன்முறையை
ஒழிப்பதற்கு முன்பாக நமது சொற்களில் உள்ள வன்முறையை நீக்கவேண்டும். உறுதிப்பாட்டிற்கு
இகழ்ச்சி தேவையில்லை; கருத்து வேறுபாட்டிற்கு அவமதிப்பு தேவையில்லை. மாற்றுக்கருத்துடையோரையும்
மதித்துப் பேசும் பண்பை மீட்டெடுத்தால் மட்டுமே, பேச்சுவார்த்தைகள் மூலம் உலகளாவிய
அமைதியை எட்ட முடியும். ஸ்பெயின் நாடு உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று
அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இறுதியாக,
நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, “சட்டத்திட்டங்களை இயற்றும்போது காகிதங்களைப் பார்க்காமல்,
இரத்தமும் சதையுமான மனிதர்களைப் பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை லியோவின் செய்தி,
உலகத் தலைவர்கள் அனைவருக்குமான படிப்பினையாகும். புனித யாக்கோபின் (Saint James)
ஆசியும், அன்னை மரியாவின் (Our Lady of the Pillar) பேரருளும் கொண்ட ஸ்பெயின் திருநாடு,
அமைதி மற்றும் மனிதநேயத்தின் புகலிடமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்தி, அவர் தனது
உரையை நிறைவு செய்துள்ளார்.
திருத்தந்தை
14-ஆம் லியோவின் இந்த மாட்ரிட் பிரகடனம், வெறுமனே ஒரு மதத் தலைவரின் உரையல்ல; மாறாக,
அது உலகளாவிய அமைதி, மனிதக் கண்ணியம் மற்றும் சுதந்திரத்தை நோக்கி மனிதகுலம் பயணிக்கவேண்டிய
பாதையைக் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாகும்!
காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் சமூகம் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் நிலைத்து நிற்கிறது. அச்சு ஊடகங்களின் நறுமணத்தில் திளைத்துக் கொண்டிருந்த தமிழ்கூறும் நல்லுலகம், இன்று எண்மத் தொழில்நுட்பத்தின் விரல் பிடித்து அதிவேகமாக நடைபோடுகிறது.
இத்தகையதொரு
கணினியுகத்தின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியில், தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவ மதிப்பீடுகளையும், சமூக விழுமியங்களையும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களுக்கும் உள்ளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியைச் சிறப்பாக
ஆற்றி வருகிறது ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ்.
விதைக்கப்பட்ட
ஒரு சிறு விதை, ஆழமாய் வேரூன்றி இன்று ஆலவிருட்சமாய் வளர்ந்து நிற்பதைப் போல, தனது அர்ப்பணிப்புமிக்கத் தகவல் சேவையால் இன்று 300-ஆம் நாளில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ்.
வைகறைப்
பொழுதின் அமைதியில், விடியற் காலையிலேயே மக்களின் மின்னஞ்சல் பெட்டிகளை நற்செய்திகளாலும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளாலும் நிரப்பும் இந்த நாளிதழ், குறுகிய காலத்தில் படைத்துள்ள சாதனைகள் தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் என்றால் அது மிகையாகாது.
பரந்து விரிந்த
மக்கள்
மன்றம்
ஒரு
நாளிதழின் உண்மையான பலமும் வெற்றியும் அதன் வாசகர் பரப்பிலும், அவர்கள் கொண்டுள்ள மாறாத நம்பிக்கையிலும்தான் அடங்கியுள்ளன. அந்த வகையில், ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ் இன்று ஐந்து இலட்சம் வாசகர்களைக் கடந்து சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகெங்கும் சிதறி வாழ்ந்து வரும் தமிழ் கத்தோலிக்கக் கிறித்தவச் சமூகத்தை இணைக்கும் உன்னதப் பாலமாக இது செயல்படுகிறது.
ஆயினும்,
இதன் உள்ளடக்கம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் சுருங்கிவிடவில்லை. தமிழ்கூறும் நல்லுலகில் வாழும் யாவரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த மக்கள் மன்றமாக இது உருவெடுத்துள்ளது. சாதி, மத, மண்டல எல்லைகளைக் கடந்து, மானுட மாண்பையும், சமூக நீதியையும், அறநெறிகளையும் போற்றும் ஒவ்வொரு தமிழரின் காலைப் பொழுதிலும், இந்த மின்னஞ்சல் நாளிதழ் நீங்காத இடம் பிடித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
செய்தி நடையும்
இருவரிச்
சுவையும்
இன்றைய
வேகமான உலகத்தில், பக்கம் பக்கமாகச் செய்திகளைப் படிப்பதற்கு மக்களுக்கு நேரமில்லாத சூழலை உணர்ந்து, ‘சுருக்கமாகவும் சுவையாகவும்’ செய்திகளைத்
தரும் தனித்துவமான வழியை இந்நாளிதழ் கையாண்டு வருகிறது. செய்திகளின் சாராம்சம் சற்றும் குறையாமல், இரத்தினச் சுருக்க நடையில்
செய்திகளை வழங்குவதில் ‘நம் வாழ்வு’ தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளது. குறிப்பாக, இதன் ‘இருவரிச் செய்திகள்’
வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். உலக நடப்புகளை வெறும் இரண்டு வரிகளில், துல்லியமாகவும் அதேசமயம் சுவாரசியமாகவும் சுருக்கித் தரும் இந்த உத்தி, வாசகர்களின் நேரத்தைச் சேமிப்பதோடு, செய்திகளின் மையப் புள்ளியை உடனடியாக மனத்தில் பதிய வைக்கிறது. இத்தகைய சுருக்கமான செய்தி வடிவமைப்பு, வாசகர்களின் அன்றாட வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியும், சுறுசுறுப்பான காலைப் பொழுதை நோக்கியும் வழிநடத்துகிறது.
வைகறையில் வசந்தம்
நம்பகத்தன்மைக்கு
அடுத்தபடியாக ஒரு செய்தி ஊடகத்திற்குத் தேவைப்படுவது காலம் தவறாமை. அந்த வகையில், எந்தவொரு தடையுமின்றி, எவ்விதத் தொய்வுமின்றி தினமும் அதிகாலை 5:00 மணிக்கு வாசகர்களின் டிஜிட்டல் தளங்களுக்கு இந்த நாளிதழ் வந்தடைகிறது. தூக்கத்திலிருந்து விழித்தெழும் வாசகர்களுக்கு, உலக நடப்புகளையும் ஆன்மிகப் பதிவுகளையும் உடனுக்குடன் வழங்கும் ஒரு நம்பிக்கைமிகு தோழனாக இது திகழ்கிறது.
வத்திக்கான் முதல்
நம்
வாசல்
வரை
‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழின் உள்ளடக்கப் பரப்பு உலகளாவியது. வாசகர்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளையும் பன்முகத்தன்மையுடன் இது அள்ளி வழங்குகிறது. சிறப்பாக, உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் மையமான வத்திக்கானிலிருந்து வெளியாகும் திருத்தந்தையின் செய்திகள், உலக அமைதிக்கான அவரது முழக்கங்கள் மற்றும் ஆன்மிக வழிகாட்டல்கள் உடனுக்குடன் துல்லியமாகத் தமிழாக்கம் செய்து தரப்படுகின்றன. அவ்வாறே, உலகளாவிய அரசியல் மாற்றங்கள் முதல் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் அன்றாடச் சமூக-அரசியல் நகர்வுகள் வரை அனைத்துச் செய்திகளும் நடுநிலையோடு அலசப்படுகின்றன. மேலும், விளிம்புநிலை மக்கள் மற்றும் சிறுபான்மையினரின்
உரிமைகளுக்கான குரலாக, அவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைப் பேசும் செய்திகளுக்கு இந்நாளிதழ் முக்கியத்துவமளிப்பதையும் வாசகர்கள் நன்கு அறிவர்.
இலக்கிய வாழ்வியலும்,
சிறப்புக்
கட்டுரைகளும்
செய்திகளைத்
தாண்டி, குறிப்பிட்ட அந்த நாளின் முக்கியத்துவம் குறித்தோ அல்லது அன்றாடச் சமூக-அரசியல் சூழல் குறித்தோ எழுதப்படும் சிறப்புக் கட்டுரைகள் இந்நாளிதழின் மகுடமாகும். வெறும் மேலோட்டமான கருத்துகளைப் பதியாமல், வரலாற்றுப் பின்னணியுடனும், கருத்துச் செறிவுடனும் எழுதப்படும் இப்பகுப்பாய்வுக் கட்டுரைகள், வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, சமுதாயப் பார்வையை விசாலமாக்குகிறது.
தமிழ்மொழியின்
செழுமையை எடுத்தியம்பும் இலக்கியக் குறிப்புகள், மனித உறவுகளை மேம்படுத்தும் உளவியல் ஆலோசனைகள் மற்றும் இளையோர் நல்வாழ்விற்கான வழிகாட்டல்கள் என இதன் உள்ளடக்கம்
யாவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தங்களின் வேர்களையும் மொழியையும் பண்பாட்டையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதற்கான உன்னதக் கருவியாக மாற்றியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், தென்கிழக்கு ஆசியா என உலகின் எந்த
மூலையில் இருந்தாலும், தாயகத்தோடும் தமிழோடும் விடியலைக் காணும் வாய்ப்பை இது சாத்தியமாக்கியுள்ளது.
தொழில்நுட்பமும்
தமிழ்
ஊடகவியலும்
அச்சு
ஊடகங்களின் செலவீனங்களும் பரவலாக்கச் சிக்கல்களும் அதிகரித்துள்ள இந்நாளில், சூழலியலுக்கு உகந்த ‘காகிதமில்லா’ ஊடகமாக
மின்னஞ்சல் வழியே நேரடியாக வாசகர்களைச் சென்றடைவது ஒரு தனித்துவமான உத்தியாகும். ‘நம் வாழ்வு’ நாளிதழின் வடிவமைப்பும், உள்ளடக்கக் கட்டமைப்பும் அலைப்பேசி மற்றும் கணினிகளில் எளிதாக வாசிக்கும் வண்ணம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
தினமும்
காலையில் வாசகர்களின் புலனம் முகவரிக்கு நேரடியாகச் செய்திகள் வந்து சேர்வதால், தேட வேண்டிய அவசியமின்றி உடனுக்குடன் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தொழில்நுட்ப நேர்த்தியே, குறுகிய காலத்திற்குள் நான்கு இலட்சம் வாசகர்களைப் பெற்றுத் தனித்துவமான முத்திரை பதிக்க வைத்துள்ளது.
மின்னணு
ஊடகப் பரப்பில் தினமும் நூற்றுக்கணக்கான தளங்கள் தோன்றி மறையும் சூழலில், ஒரு நாளிதழைத் தொடர்ந்து 300 நாள்கள் தங்குதடையின்றி, சிறப்பாகக் கொண்டு வருவது என்பது சாதாரண காரியமன்று. இதற்குப் பின்னால் ஆசிரியக் குழுவின் அயராத உழைப்பும், செய்தியாளர்களின் அர்ப்பணிப்பும், உலகளாவிய தமிழ்க் கத்தோலிக்கச் சமூகத்தின் பேராதரவும் அடங்கியுள்ளன. விமர்சனங்களை எதிர்கொண்டு, வாசகர்களின் தேவைகளை உணர்ந்து, அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தன்மையே ‘நம் வாழ்வு’ நாளிதழைத் தொய்வின்றி இயக்கி வருகிறது. உண்மைக்கு அரணாகவும், நலிந்தோர் குரலாகவும் ஒலிக்கும் இதன் கொள்கை முழக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
நெஞ்சம் நிறை
நன்றி!
300-ஆம் நாளில்
அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில், இந்நாளிதழின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றியைக் காணிக்கையாக்குகிறோம். தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஆயர் பெருமக்கள், செய்திகளை
உடனுக்குடன் வழங்கி வரும் செய்தியாளர்கள், ஆசிரியர் குழுவினர், நேர்த்தியாக வடிவமைக்கும் தொழில்நுட்பக் குழுவினர், இதற்குப் பேராதரவு நல்கி வரும் வாசகப் பெருமக்கள், உலகளாவிய தமிழ் கத்தோலிக்கச் சமூகம், சிறப்பாக பொருளுதவி தந்து தாங்கிப்பிடிக்கும் நல்மனம் கொண்டோர் என அனைவருக்கும் எமது
நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம்.
300-ஆம் நாளில்
புதிய பொலிவோடும், பன்மடங்கு வீரியத்தோடும் அடியெடுத்து வைக்கும் ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்’ உலகத் தமிழர்களின் உன்னத நாளிதழாகப் பயணித்திட தொடர்ந்து பேராதரவு நல்கிட அன்போடு வேண்டுகிறேன்!
முதன்மை
ஆசிரியர்
‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்’ எனப் போற்றப்படும் தஞ்சைத் தரணியின் நிலை இன்று நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளது. கர்நாடக அரசு, காவிரி நதியில் நமக்குச் சேரவேண்டிய தண்ணீரை விடாமல் முரண்டு பிடிப்பதால், அந்நீரை நம்பியே விவசாயம் செய்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் கண்களில் இன்று கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது.
தஞ்சைப்
பகுதிகளின் நிலங்களில் விளையும் விளைபொருள்கள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதால் தஞ்சைத் தரணியைத்தான் தமிழ்நாடே தன் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஆரம்ப நிலையிலிருந்தே கர்நாடகம் இப்பிரச்சினையில் நாடகங்களைத்தான் அரங்கேற்றி வருகிறது. ஆனால், அது போடும் நாடகத்தை யாராலும் இரசிக்கத்தான் முடியவில்லை.
காவிரியின் அமைப்பு
காவிரி
நதி கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் முடிகிறது. 800 கி.மீ. நீளமுள்ள
காவிரி நதி 320 கி.மீ. தூரம்
கர்நாடக மாநிலத்திலும், 64 கி.மீ. கர்நாடக-தமிழ்நாடு எல்லையிலும், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும்,
125 கி.மீ. நீளம் காவிரி டெல்டா பகுதியிலும் பாய்ந்து இறுதியில் சிறு ஓடையாக வங்கக் கடலில் கலக்கிறது.
காவிரியின் பழமை
காவிரியின்
பாசனப் பகுதி, சிந்து நதிப் பள்ளத்தாக்கைப் போன்று மிகவும் பழமை வாய்ந்தது. கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளின் பாசனங்கள் இதற்கு நீண்ட காலத்திற்குப் பின்பே உருவாக்கப்பட்டன என்பதிலிருந்து காவிரியின் பழமையை நாம் அறிந்துகொள்ள முடியும்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஒருமுறை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகள் உடைந்துவிட்டனவாம். உடைந்த கரைகள் வழியே வெளியேறிய தண்ணீர் தற்போது உள்ளாறு என்று அழைக்கக்கூடிய சிறு ஓடை வழியாகக் கொள்ளிடத்தில் கலந்ததாம். இந்த உடைப்பைச் சரிசெய்வதற்காக அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் கரிகால் சோழன் என்பவன், இன்றும் காவிரியின் குறுக்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கல்லணையைக் கட்டி முடித்தானாம். இந்த வரலாற்றுச் சான்றிலிருந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காவிரித் தண்ணீரைத் தமிழர்களாகிய நாம் உபயோகப்படுத்தி வந்திருக்கிறோம் என்கிற உண்மை தெரிய வருகிறது. எனவே, தொடர்ந்து அந்நீரைப் பயன்படுத்துவதற்கான உரிமை நமக்கு நிறையவே இருக்கிறது.
பாசனத் திட்டங்கள்
காவிரி
நீர், தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய அளவைப் பொறுத்து, வெவ்வேறு காலங்களில், பல்வேறு பாசனத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அத்திட்டங்களின்படி காவிரி டெல்டா பகுதிகள் 12,90,000 ஏக்கர்களும், மேட்டூர் பாசனத்திட்டம் 3,22,600 ஏக்கர்களும், கட்டளைத் திட்டம் 1,22,300 கொள்ளிடம் கீழ் அணைக்கட்டு 1,63,100 சேலம்-திருச்சி கால்வாய் 1,12,000 சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு 60,700 மேட்டூர் கால்வாய் 45,000 புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் 20,600 புள்ளம்பாடி கால்வாய் திட்டத்தின்படி 23,100 ஏக்கர்களும் காவிரி நீர் வரத்தின் மூலம் பயன்பெறவேண்டும். ஆனால், கர்நாடக அரசு செய்துவரும் ஒப்பந்த மீறல் மோசடிகளால் இத்திட்டங்களின் பலன் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. இதன் காரணமாக, காவிரியை நம்பியிருக்கும் சுமார் 35 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இன்று வேலை இழந்து நிற்கிறார்கள். 21 இலட்சத்து 59 ஏக்கர் நிலம், காய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது.
முதல் ஒப்பந்தம்
தமிழ்நாடு,
கர்நாடகம் என்று பெயர் மாற்றம் அடையும் முன்பே, இவ்விரு மாநிலங்களுக்கிடையே காவிரிப் பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. இப்பிரச்சினையைப் பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்கிவைத்தது அப்போதைய மைசூர் அரசுதான். அது அன்றைய சென்னை அரசின் அனுமதி பெறாமலேயே தன் விருப்பத்திற்குப் பாசனப் பரப்புகளை அதிகரிக்கத் தொடங்கியது. மைசூர் அரசின் தன்னிச்சையான தான்தோன்றித்தனமான போக்கால், சென்னை அரசின் பாசனப்பரப்புகள் பெரிதும் பாதிப்புக்கு உட்பட்டன. இதன் எதிரொலியாக 1890-1892-ஆம் ஆண்டுகளில் இரு மாநிலங்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தைகள் நடந்து, முடிவில் 1892-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும் ஏற்பட்டது. அவ்வொப்பந்தத்தின்படி, காவிரியிலோ, அதன் துணை நதிகளான ஹேமாவதி, இலட்சுமணத் தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாச்சி ஆகியவற்றிலோ மைசூர் அரசு அணைகள் கட்ட விரும்பினால், சென்னை அரசின் அனுமதி பெற்ற பின்பே நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.
மேலும், மைசூர் அரசு அணைகள் கட்டுவது, தனது பாசன வசதிகளுக்கு இடையூறு ஏற்படுத்துமென்று தெரிந்தால், அதற்கு அனுமதி மறுக்கின்ற அதிகாரத்தையும் சென்னை அரசுக்கு அந்த ஒப்பந்தம் வழங்கியது.
புதிய ஒப்பந்தம்
போகப்போக
கர்நாடக அரசின் சுயரூபம் வெளிப்பட்டது. 1892-ஆம் ஆண்டின் ஒப்பந்த விதிகளை அப்பட்டமாக மீறத் தொடங்கியது கர்நாடக அரசு. சென்னை அரசின் அனுமதி பெற்று 1911-ஆம் ஆண்டு 11 டி.எம்.சி.
தண்ணீரைத் தேக்கி வைக்கும் உயரத்தில் சுண்ணம்பாடி அணையைக் கட்டத் தொடங்கியது மைசூர் அரசு. ஆனால், எதிர்காலத்தில் 41 டி.எம்.சி.
தண்ணீரைத் தேக்கிவைக்கும் உயரத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற சுயநல எண்ணத்தோடு ஆரம்பத்திலேயே அணையினுடைய அடித்தளத்தை அகலமாக அமைத்துக்கொண்டது. இதன் மூலம் ஒப்பந்த விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டது மைசூர் அரசு.
இரு
மாநிலங்களுக்கிடையேயும்
பிரச்சினைகள் வளர்ந்தன. பிரச்சினை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு விடப்பட்டது. ஆனால், நீதிபதி ஹென்றி கிரிஃபின் என்பவர் மைசூர் அரசுக்கு ஆதரவாக அப்போது தீர்ப்புச் சொல்லிவிட்டார். எனவே, பிரச்சினையை ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது சென்னை அரசு. ஒன்றிய அரசும் மைசூர் அரசுக்குச் சாதகமாகவே நடந்து கொண்டது.
எங்கும்
நியாயம் கிடைக்காமல் போகவே, இறுதியில் இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலரிடம் சென்னை அரசு முறையீடு செய்தது. அவர் எடுத்துக்கொண்ட முயற்சியால் இரு மாநிலங்களுக்கிடையேயும்
1924-ஆம் ஆண்டு ஒரு புதிய ஒப்பந்தமும், 17-06-29-இல் மற்றொரு துணை ஒப்பந்தமும் ஏற்பட்டது.
இந்த
ஒப்பந்தத்தின்படி முதலாவது, 44.827 டி.எம்.சி
கொள்ளளவுள்ள கிருஷ்ணசாகர் அணைக்கட்டை மைசூர் அரசு கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் 12.5 இலட்சம் ஏக்கர் புதிய பாசனப் பரப்பை அது அதிகரித்துக்கொள்ள முடியும். இரண்டாவது, 93.5 டி.எம்.சி.
கொள்ளளவுள்ள மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு சென்னை அரசு வசதி செய்து கொள்ளலாம். மூன்றாவது, 45 டி.எம்.சி.
கொள்ளளவுள்ள அணையைத் தனது துணை நதிகளில் அமைத்து 1.10 இலட்சம் ஏக்கருக்குப் புதிய பாசன வசதிகளை மைசூர் அரசு ஏற்படுத்திக்கொள்ளலாம். எனினும், சென்னை அரசின் நீர்ப்பாசன வசதிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது அமைய வேண்டும். எனவே, இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சென்னை அரசுக்கு அறிவிக்க வேண்டும்.
நான்காவது,
சென்னை அரசு தனது துணை நதிகளில் புதிய அணைகள் அமைத்துக் கொள்ளலாம். பவானி, நொய்யல், அமராவதி நதிகளில் அணைகளைக் கட்டினால் அதன் கொள்ளளவுகளில் அறுபது விழுக்காட்டிற்கு மேற்படாதவாறு காவேரியின் துணை நதிகளில் ஒன்றில் மைசூர் அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். எனினும், இது சென்னை அரசுக்குச் சேர வேண்டிய நீரின் அளவைப் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். ஐந்தாவது, இந்த ஒப்பந்தம் உருவாகி ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளக்கூடிய புதிய மாறுதல்களைச் செய்து கொள்ளலாம்.
கர்நாடகத்தின்
ஒப்பந்த
மீறல்
ஐம்பது
ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் ஒப்பந்தத்தின் சில பிரிவுகளைச் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதை மறுபரிசீலனை செய்து மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிறது மேற்குறிப்பிட்ட விதிகளின் கடைசிப் பகுதி. ஆனால், 1892-ஆம் ஆண்டிலும், 1924-ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட இரண்டு ஒப்பந்தங்களுமே காலாவதியாகிவிட்டதாக, கர்நாடக அரசு கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அன்றைய மைசூர் அரசுக்கு விதிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், இன்றைய கர்நாடக அரசைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அது வாதிடுகிறது.
மற்றொரு
விதியில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய தண்ணீரை முழுவதும் அனுப்பிய பின்னரே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரைக் கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில் சேமித்துக்கொள்ளலாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட அளவைச் சேமித்தவுடன் மேலும் உபரியாக வரும் தண்ணீரில் தேவைப்படும் அளவு தமிழ்நாட்டிற்குக் கொடுத்துவிடவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசோ தனது கிளை நதிகளில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, சுவர்ணவதி, இலட்சுமணதீர்த்தம் போன்ற அணைகளைக் கட்டி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுக்கும், மேட்டூர் நீர்த்தேக்கத்திற்கும் வருகின்ற தண்ணீரைத் தடுப்பதால், இப்போதெல்லாம் காவிரியில் வருகின்ற தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது. அதனால்தான் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரமுடியவில்லை என்றும் கர்நாடகம் கதைவிடுகிறது.
நடுவர் மன்றம்
இதுவரைக்கும்
தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையைக் குறித்து 27 முறைகளுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. ஆனால், எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன அல்லது நாய்க்கு எலும்புத்துண்டைப் போடுவதைப்போலக் குறைந்த அளவு தண்ணீரே திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, 1983-இல் ‘தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் சங்கம்’ எனும் அமைப்பு காவிரிப் பிரச்சினையைக் கையாள நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
மேலும்,
இது குறித்து 4-12-86 அன்று தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு மனு ஒன்றையும் கொடுத்தனர். இதன் பலனாக 4-5-90-ஆம் நாளில் நடுவர் மன்றம் அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
21-1-90 அன்று நடுவர்
மன்றத்தை ஒன்றிய அரசு அமைத்தது. பம்பாய் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. சித்தகோஷ் முகர்ஜி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.டி. அகர்வால், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி திரு. என்.எஸ். ராவ் ஆகியோர் அதற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். நடுவர் மன்றம் அமைத்ததன் பலனாக அதன் நீதிபதிகளிடம் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குறைகளை நேரிடையாகச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததே தவிர, மற்றபடி தமிழ் நாட்டிற்கு நேரிடையாகத் தண்ணீர் திறந்துவிடச் சொல்ல அதற்கு அதிகாரமில்லாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.
இந்நிலையில்,
சுப்ரீம்கோர்ட் உடனடியாகக் காவிரி ஆணையத்தை அமைக்கச்சொல்லி ஒன்றிய அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு, செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. இச்சூழ்நிலையில், எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்கிற கதையாக ஒவ்வோர் அரசியல் கட்சிகளும் ஓட்டுவேட்டை நடத்த தன்னாலான பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.
தற்போது அரங்கேறவிருக்கும் மேடையில் கர்நாடகம் எந்த மாதிரியான வேடம் கட்டவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.