news
சிறப்புக்கட்டுரை
கேளாத செவிகள் கேட்கட்டும்!

கேளாத செவிகள் கேட்கட்டும்; காது என்ற ஒன்று கேட்கத்தானே! அதைவிடுத்து வேறென்ன இதில் புதுவிதம் இருக்கு? இருக்கு! ‘கற்றலைவிடக் கேட்டல் மிக நன்றுஎன்று நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். இதைக் கொஞ்சம் அசைபோட்டால் இதன் முக்கியத்துவம் தெரியவரும். ‘கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கமாட்டியா?’ எனக் கேட்பதும், ‘கொஞ்சம் உன் காதக் கொடு, இரகசியம் சொல்லணும்என ஒருவரை இழுப்பதும் இதனால்தான்.

ஜூலியஸ் சீசர் கொலையுண்ட நேரத்தில் மார்க் ஆண்டனி ஆவேச உரை நிகழ்த்தி அனைவரையும் தன் பக்கம் இழுக்க அவர் ஆரம்பித்த முதல் வார்த்தை: “Friends, Romans, countrymen, lend me your ears.” இங்கு அவர்உங்கள் காதுகளை எனக்குக் கடன் கொடுங்கள்எனும் பொருளில் சொல்லவில்லை; மாறாக, ‘உங்கள் கவனம் எனக்கு வேண்டும்; என் எண்ணத்தை நீங்கள் கேட்க வேண்டும்எனும் பொருளில் தொடங்கியுள்ளார். அதேபொருளில்தான் நானும் சொல்கிறேன்... Please lend me your ears.

உறுப்புகளை மையப்படுத்தி ஒரு சில முக்கியத்துவத்தை உணர்த்துவது தமிழில் தொன்றுதொட்டு இருக்கும் பழக்கம். ‘என் கண்ணுல்லஎனப் பிள்ளைகளைக் கொஞ்சுவதும், ‘என் இதயமே நீதானடி!’ எனக் காதலியிடம் கெஞ்சுவதும், ‘ரொம்பப் பேசுனா உதட்டப் பேத்துருவேன்எனப் பிடிக்காதவர்களிடம் சொல்வதும், ‘நான் இங்க நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன்; கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டா கொறஞ்சா போயிருவீங்க?’ என மனைவி கணவனை வசைபாடுவதும், ‘மூக்குமேல விரல் வைக்கிற அளவுக்கு ஒரு யோசனையைச் சொல்லிட்டாப்லஎனப் பிடித்தவர்களைப் பாராட்டுவதும்... என இதுபோன்ற உறுப்புகளை மையப்படுத்திப் பேசுவது என்பது நாம் சொல்ல வருவதற்கு மேலும் பொருள் சேர்க்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

வெளி உறுப்புகள் பெரும்பாலும் பாராட்டுவதற்கும், உள் உறுப்புகள் ஒருவரைக் கொச்சையாகத் திட்டுவதற்கும் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நமக்கு இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளும் மிக அவசியமானவை. அதில் காது மிக அவசியமானது, அறிவைப் பெருக்குவதில் இதன் பங்கு பெரியது. காது என்பது கேட்கும் அமைப்பின் ஒரு பகுதியாகும். இது சுற்றுப்புறத்தில் உள்ள ஒலி அலைகளைப் பெற்று, அவற்றை வெளிக்காது, நடுக்காது மற்றும் உள்காது வழியாக மூளைக்கு அனுப்புகிறது. இந்த ஒலி அலைகள் மின்சாரச் சிக்னல்களாக மாற்றப்பட்டு மூளையால் செயலாக்கப்படுகின்றன. காதின் முக்கியப் பணி, கேட்கும் திறன் மூலம் தகவல்களைப் பெறுவதும், மனிதர்களுக்குத் தொடர்பு, கற்றல் மற்றும் சூழலுக்கு ஏற்ப பதிலளிக்கும் திறனை வழங்குவதும் ஆகும்.

மனித உடலில் காது மற்றும் சிந்தனை (எண்ண) செயல்முறை ஆகியவை மிகவும் அற்புதமான இரண்டு அம்சங்களாகும். காது என்பது ஒலிகளைக் கேட்க உதவும் ஓர் உடல் உறுப்பு. அதே நேரத்தில், சிந்தனை செயல்முறை என்பது புரிந்துகொள்வது, பகுத்தறிவது மற்றும் முடிவெடுப்பது போன்ற மனச் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இவை வெவ்வேறு பணிகளைச் செய்தாலும், மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் திறம்படத் தொடர்புகொள்ள இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாக உள்ளன.

காதின் மூலம் பெறப்பட்ட எண்ண ஓட்டம் சிந்தனை வடிவம் பெற்று, அதன் செயல்முறை அமைப்பு மூளையில் நிகழ்கிறது. இது தகவல்களைப் புரிந்துகொள்வது, சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கருத்துகளை உருவாக்குவது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. சிந்தனைகள் ஒருவரின் அறிவு, அனுபவம், உணர்வுகள் மற்றும் பார்வைகளால் வேறுபடுகின்றன. காது வழியாகப் பெறப்பட்ட சிந்தனை, மூளை மூலம் செயல்முறை பெறுவது, நாம் கண்டு மகிழும் ஓர் அறிவார்ந்த செயல்பாடாகும்.

அறிவுப் பெருக்கத்திற்கு அளப்பரிய பணியாற்றும் அமைப்பாக நம் காது செயல்படுவது ஆச்சரியம் தரும் ஒன்றுதானே! காது நமக்குக் கிடைக்கப்பெற்ற எண்ண அலைகளை ஒலித் தகவலாக மூளைக்கு வழங்குகிறது; சிந்தனை செயல்முறை அந்தத் தகவல்களுக்கு அர்த்தம் அளிக்கிறது.

உதாரணமாக, ஓர் உரையைக் கேட்கும்போது, காது அந்த ஒலிகளைப் பெறுகிறது. பின்னர், மூளை அந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டு, அதன் பொருளை ஆராய்ந்து, அதற்கான கருத்துகளையும் பதில்களையும் உருவாக்குகிறது. காது இல்லையெனில் ஒலித் தகவல்கள் கிடைக்காது; சிந்தனை செயல்முறை இல்லையெனில் அந்த ஒலிகளுக்கு அர்த்தமே இருக்காது.

காது தகவல்களைப் பெறுகிறது, சிந்தனைச் செயல்முறை அந்தத் தகவல்களை மதிப்பீடு செய்து, அவற்றை அறிவு மற்றும் செயலாக மாற்றுகிறது. ஆதலால்தான் செவிச்செல்வம் எத்துணை மேன்மை மிக்கது என்பதை நம் திருவள்ளுவர் கூட மிகச் சிறப்பாகக் குறளில் கூறியுள்ளார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்                                                                                    செல்வத்து ளெல்லாந் தலை (குறள் 411)

காது மற்றும் மூளை மனித வாழ்க்கையில் தனித்துவமானது. ஒன்றுக்கொன்று துணைபுரிந்து நம் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இவை இரண்டும் அறிதல் மற்றும் புரிதல் எனும் இரு வளர்ச்சிகளுக்கு உறுதுணையாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயல்படுவதன் மூலம் மனிதனுக்குக் கற்றல் மற்றும் சிறந்த முடிவெடுக்கும் திறன் கிடைக்கிறது. இதன் மூலம் மனித உடலின் உணர்வு அமைப்புகளுக்கும் மனத்தின் அறிவாற்றலுக்கும் இடையேயான அற்புதமான ஒத்துழைப்பு வெளிப்படுகிறது.

காது என்பது மனித உடலின் மிக முக்கியமான உணர்வு உறுப்புகளில் ஒன்றாகும். இது கேட்கும் திறனை மட்டுமல்லாமல், உடலின் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.

காதின் முதன்மைப் பணி ஒலிகளை உணர்வதாகும். மனிதர்களின் பேச்சு, இசை, இயற்கை ஒலிகள் மற்றும் எச்சரிக்கைச் சத்தங்கள் போன்றவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ள காது உதவுகிறது. கேட்கும் திறன் இல்லாமல் பயனுள்ள தொடர்பாடல் சாத்தியமில்லை. மற்றவர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள காது முக்கியப் பங்கு வகிக்கிறது.

குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்வதிலும், மாணவர்கள் பாடங்களைக் கேட்டு அறிவைப் பெறுவதிலும் பெருக்குவதிலும் காது முக்கியப் பங்காற்றுகிறது. கேட்பதன் மூலம் மனிதர்கள் புதிய தகவல்களை அறிந்துகொள்கிறார்கள். உள்காதில் உள்ள சமநிலை அமைப்பு (Vestibular System) உடலின் நிலைத்தன்மையையும் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நிமிர்ந்து நிற்பது, நடப்பது மற்றும் ஓடுவது போன்ற செயல்கள் சீராக நடைபெறுகின்றன.

காது என்பது வெறும் கேட்கும் உறுப்பாக மட்டுமல்ல; அது கற்றல், தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் உடல் சமநிலை ஆகியவற்றிற்கும் அத்தியாவசியமான ஓர் உறுப்பு ஆகும். எனவே, காதின் அவசியத்தைக் காதோரமாய் கூறியுள்ளேன். எண்ணங்களை மேம்படுத்த, நம் வாழ்வை உயர்த்திப் பிடிக்க நம் காது நமக்கு அவசியமானது, இதைப்  பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும். இத்தனை பயன்களைத் தரும் காதுகளை நாம் அலட்சியம் செய்யாது இருப்போம். காதைத் திருகி நம்மை யாராவது வம்பிழுக்கும்போது அவரின் காதருகே கூறுங்கள், ‘கேட்கச் செவி உள்ளவன் கேட்கட்டும், கேட்க இயலாதவன் வலிகளை உணரட்டும்என்று.

நல்ல நல்ல எண்ணங்களுக்குச் செவி கொடுப்போம். வாழ்க்கைக்கான வழிகளை நாமே கண்டெடுப்போம்

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: சாதகங்கள்... சவால்கள்... எதிர்பார்ப்புகள்!

சட்டமன்றம் என்பது வெறும் சட்டங்களை இயற்றும் அமைப்பு மட்டுமல்ல; மக்களின் விருப்பமும் குரலும் வெளிப்படும் சனநாயகக் கருவி - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

ஒரு மாநிலத்தின் சனநாயகத் தரத்தை அளவிட வேண்டுமென்றால், அந்த மாநிலச் சட்டமன்றத்தின் செயல்பாடுகளைப் பார்க்கவேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுவார்கள். காரணம், சட்டமன்றம் என்பது வெறும் அரசியல் மேடை அல்ல; அது மக்களின் பிரச்சினைகள் பேசப்படும் இடம்; அரசின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் இடம்; எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனங்களை முன்வைக்கும் இடம்; மக்கள் நலத்திட்டங்கள் உருவாகும் இடம்.

தமிழ்நாடு சட்டமன்றம் இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றங்களில் ஒன்றாகும். 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றமாகத் தொடங்கிய இந்த அமைப்பு, நூற்றாண்டைக் கடந்த சனநாயக மரபைக் கொண்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது அரசியல் சிந்தனைகளையும், மக்கள் நலக் கொள்கைகளையும் இந்த அவையின் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர்.

தமிழ்நாடுஎன்ற பெயர் மாற்றம், சமூகநீதி சார்ந்த சட்டங்கள், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள், சத்துணவுத் திட்டம், பெண்கள் முன்னேற்றம், கல்வி விரிவாக்கம் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் இந்தச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றம் அதன் நீண்ட வரலாற்றில் பல உயர்ந்த விவாதங்களையும், சில விரும்பத் தகாத நிகழ்வுகளையும் கண்டுள்ளது. காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் இன்றும்கூட அரசியல் மாணவர்களால் படிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அமளி, வெளி நடப்பு, உறுப்பினர்கள் இடைநீக்கம், கடுமையான அரசியல் மோதல்கள் போன்ற நிகழ்வுகளும் சில காலங்களில் நடந்துள்ளன. இருந்தபோதிலும், சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கம் மக்கள் நலனே என்பதை தமிழ்நாட்டு அரசியல் வரலாறு தொடர்ந்து நிரூபித்துள்ளது.

தற்போதைய சட்டமன்ற அமர்வின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக ஆளுநர் உரையைக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசிற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் ஆளுநர் உரை தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் உரை சுமூகமாக நடைபெற்றது நல்ல சனநாயக முன்னேற்றம். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், அரசமைப்பு அமைப்புகளுக்கிடையேயான மரியாதை நிலைத்திருக்கவேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இந்த அமர்வின் மற்றொரு சிறப்பம்சம், சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகும். இதன்மூலம் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் பொழுதுபோக்குக் காணொளிகள், குறும்படங்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களில் அதிக நேரம் செலவழித்து வந்த இளையோர், தற்போது சட்டமன்ற விவாதங்களை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கியிருப்பது மிகவும் நேர்மறையான மாற்றமாகும். எந்த உறுப்பினர் மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கிறார்? யார் தரமான விவாதத்தில் ஈடுபடுகிறார்? யார் வெறும் அரசியல் குற்றச்சாட்டுகளில் நேரத்தைச் செலவிடுகிறார்? என்பதை இளையோர் நேரடியாக மதிப்பிடத் தொடங்கியுள்ளனர்.

கல்லூரிகள், சமூக ஊடகங்கள் மற்றும் நண்பர் வட்டாரங்களில் சட்டமன்ற விவாதங்கள் குறித்து ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறுவது சனநாயகத்திற்கு நல்ல அறிகுறியாகும். நாளைய வாக்காளர்களும் தலைவர்களும் இன்றைய இளையோரே என்பதால், அவர்களின் இந்த அரசியல் விழிப்புணர்வு தமிழ்நாட்டு சனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது.

இந்த அமர்வில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கன. சட்டமன்ற நடவடிக்கைகளை ஒழுங்காக நடத்துவதில் அவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் அவையின் விதிமுறைகளை மீறியபோது எச்சரிக்கை வழங்கினார். சில நேரங்களில் ஆளும் கட்சியினரின் கருத்துகளையும் திருத்தினார்; அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் அறிவுறுத்தல் வழங்கினார். விரும்பத்தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டபோது அவற்றைப் பதிவிலிருந்து நீக்க உத்தரவிட்டதும், உறுப்பினர்களை விவாதப் பொருளுக்குத் திருப்பியதும் அவரது நடுநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்தியது. சனநாயக அமைப்பில் சபாநாயகர்மீது அனைத்துத் தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த வகையில் பெரும்பாலான நேரங்களில் அவர் நடுநிலையைக் கடைப்பிடிக்க முயற்சித்ததாகக் கூறலாம்.

அதேநேரத்தில், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் திருத்திக்கொள்ளவேண்டிய சில அம்சங்களும் உள்ளன. முதலமைச்சர் தனது உரையில் நிர்வாகச் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை அதிகம் பேசுவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மேனாள் தலைவர்கள் அல்லது முந்தைய அரசுகளை விமர்சிக்கும் நோக்கில் தேவையற்ற சிறுகதைகள், அரசியல் உவமைகள் அல்லது சைகைகள் போன்றவை தவிர்க்கப்படலாம். சட்டமன்றம் என்பது அரசியல் மேடையாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் மக்கள் நலனுக்கான விவாதங்களே!

அதேபோல் எதிர்க்கட்சியும் அதிகப் பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியமாகும். முதலமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, உரை முடிந்த பிறகு போதுமான நேரம் வழங்கப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளையும் எழுப்ப வாய்ப்பு இருக்கும் என்றும் உறுதியளித்திருந்தார் சபாநாயகர். அந்தச் சூழ்நிலையில் அவையிலேயே இருந்து கேள்விகளை எழுப்பிப் பதில்களைப் பெற்றிருக்கலாம். வெளிநடப்பு என்பது சனநாயக உரிமை என்றாலும், அவையில் இருந்து விவாதத்தின் மூலம் பதில்களைப் பெறுவது மக்களுக்கு அதிகப் பயன் அளிக்கும். பின்னர் அவைக்கு வெளியே சென்று முதலமைச்சரின் குடும்ப வாழ்க்கை குறித்துத் தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதும் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. கொள்கைகள், நிர்வாகம் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விமர்சிப்பதே சனநாயக அரசியலின் ஆரோக்கியமான வழிமுறையாகும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மிகப்பெரிய பலம் அதன் வரலாற்று மரபும் சபாநாயகர் சனநாயக கலாச்சாரமுமாகும். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே சட்டமன்றத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும். குறைவாகப் பேசி அதிகமாகச் செயல்படுவது எவ்வாறு சிறந்த தலைமைத்துவத்தின் அடையாளமோ, அதேபோல் கூச்சல், வெளிநடப்பு மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களைவிட ஆக்கப்பூர்வமான விவாதங்களே ஒரு சிறந்த சட்டமன்றத்தின் அடையாளமாக அமையும்.

வரலாற்றுப் பெருமைமிக்க தமிழ்நாடு சட்டமன்றம், சனநாயகத்தின் உயரிய மரபுகளைக் காக்கும் முன்னுதாரணமாகத் தொடர்ந்து திகழவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

news
சிறப்புக்கட்டுரை
தேசிய அரசியலில் மூன்றாவது அணி உருவாகுமா?

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்இந்தியாகூட்டணியை அசைத்தது. மே 4-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில்தொங்கு சட்டசபைஎன முடிவானது. அன்று வழக்கத்திற்கு மாறாகமாநிலக் காங்கிரஸ், .வெ.. ஆட்சிக்கு ஆதரவு தருவதா? வேண்டாமா? என முடிவெடுக்கும்என டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

மே 5-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கூடியது. .வெ.. ஆட்சிக்கு ஆதரவு நிலை எடுக்கப்பட்டது. முக்கியமாக, வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல்கள், 2029 நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட்டணி, தொகுதி பங்கீடு அமைச்சரவையில் பங்குவரை முடிவானது.

மே 6-இல் நிபந்தனையுடன் காங்கிரஸ் .வெ..வை ஆதரித்தது. ‘.வெ.. எந்தச் சூழ்நிலையிலும் பா...வின் என்.டி..வுடன் உறவு கூடாதுஎன்றது. ஆனால், .தி.மு.வின் 25 சட்டமன்ற உறுப்பினர்களை சி.வி. சண்முகம் அலுவலகம் சென்று வேலுமணி உள்பட பல .தி.மு.. உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் சால்வைப் போர்த்தி ஆதரவு திரட்டினார். தினகரனின் ..மு..வின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் அவர்களைத் .வெ.. தன் கட்சியில் சேர்த்தது. இவர்கள் அனைவரும் என்.டி.. கூட்டணி வாக்குப் பெற்று வெற்றி பெற்றவர்கள்.

இன்றும் என்.டி.. கூட்டணியில் தொடர்பவர்கள். காங்கிரஸ் தன் ஆட்சி ஆதரவிற்கான நிபந்தனை மீறப்பட்டது குறித்து மௌனம் காக்கிறது. காங்கிரஸ் 2004 முதல் 2026 வரை (2014 பாராளுமன்றத் தேர்தல் தவிர) கூட்டணியிலிருந்து வெற்றிக்குக் காரணமாக இருந்த தி.மு..வை மறந்தது. பொதுவுடைமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சித் தலைவர்கள் தி.மு.. தலைமையிடம் பேசி .வெ.. அரசில் சேர்ந்தன.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், “நாங்கள் .வெ.. கூட்டணியில் இணைவது குறித்து தி.மு..விடம் பேசி, எங்கள் முடிவைச் சிறப்பாகக் கையாண்டு இருக்கவேண்டும்; தவறு செய்துவிட்டோம்எனத் தங்கள்  பிழையைப் பொதுவெளியில் ஏற்றுக்கொண்டார்.

மே 8-இல் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்திரப்பிரதேச மேனாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மு.. ஸ்டாலின் அவர்களுடனான தன் சந்திப்புப் படங்களையும், மேற்குவங்க மம்தா பானர்ஜியின் படங்களையும் போட்டு ஒரு பற்றிக்கொள்ளும்ட்வீட்இந்தியில் போட்டார். ‘துன்ப காலங்களில் ஒருவரை ஒருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்லர்.’ இது காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்திய அரசியலை இந்தியா முழுவதும் பேச வைத்தது. காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தலுக்காக மாநிலக் கட்சிகளிடம் தஞ்சம் அடைகிறது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரம் தவிர இந்தியாவில் எங்கும் மாநிலத் தேர்தல்களில்இந் தியாகூட்டணி கிடையாது.

அண்மைக்கால உதாரணமாக, பீகாரில் இராகுல் காந்தியும், தேஜஸ்வி யாதவ்வும் இணைந்த பாதயாத்திரைகளில், பொதுக்கூட்டங்களில் அதிகபட்சம் பத்து இலட்சம் பேர் திரண்ட அதிசயம் நடந்தது. தேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வராகிவிடுவார் என்ற நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் பீகார் தேர்தலில் அதிக சீட் கேட்டு, கடைசி நேரம் வரை அழுத்தம் கொடுத்தது. ‘பிரண்ட்லி மேட்ச்என்பதாக காங்கிரஸ் பல தொகுதிகளில் கூட்டணி மாண்பிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியது. இந்தநட்புப் போட்டியால் 15 தொகுதி முடிவுகள் மாறின. பீகாரில் செல்வாக்கு மிக்க லாலு பிரசாத்தின் இராஷ்ட்ரிய ஜனதா தளம் தோற்றது.

பாண்டிச்சேரியில் 2026 மார்ச் 23-ஆம் தேதி  மாலை மூன்று மணிக்கு வேட்புமனு திரும்பப் பெறும் காலம். பிற்பகல் ஒரு மணி வரை கூட்டணி பேசி  தி.மு.., விடுதலைச் சிறுத்தைகளைக் காங்கிரஸ் நட்புப் போட்டிக்குத் தள்ளியது.

புதுதில்லி மேனாள் முதல்வர் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் விடுதலை பெற்றதைக் காங்கிரஸ் கண்டித்தது. ஒரு படி மேலாக, கேரள சட்டமன்றத் தேர்தல்களில் இராகுல் மற்றும் கார்கே, பினராயி விஜயனுக்கும், பா...வுக்கும் இரகசிய உறவு எனப் பிரச்சாரம் செய்தார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.. பேபி அவர்கள் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

இக்குழப்பங்களுக்கு இடையேஇந்தியாகூட்டணியின் கூட்டம்  2026 ஜூன் 8-ஆம் தேதி நடந்தது. ‘இந்தியாகூட்டணிப் பிணக்குகள் பிளக்ஸ் பேனர்களாக டெல்லி முழுவதும் வெளிப்பட்டன. அவை அன்று புதுதில்லி பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. அன்று வைக்கப்பட்ட பேனர்களில் பல்வேறு நேரங்களில்இந்தியாகூட்டணித் தலைவர்கள் காங்கிரஸ்மீது வைத்த விமர்சனங்கள் இந்தியில் வெளியாகின.

இந்தியாகூட்டணியைக் கட்டமைத்த தி.மு.., ஜூன் 8 அன்றுஇந்தியாகூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்தது. ஆம் ஆத்மி கட்சியும் இதே புறக்கணிப்பு நிலையை எடுத்தது.

இந்தியாகூட்டணிக் கூட்டத்தில் தேசியவாதக் கட்சியின் சரத்பவாரின் மகள் சுப்ரியாசுலே, அகிலேஷ்  யாதவ், தேஜஸ்வி யாதவ், தொல். திருமாவளவன்  ஆகியோர், ‘தி.மு,-வைக் குறிவைத்து, காங்கிரஸ் தோல்வி அடையச் செய்தது. காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சிகளை இறுக்கிப் பிடித்து தொகுதிகளை வாங்குவது, கூட்டணிக்குள் விமர்சனங்கள் செய்வது ஏன்?’ என ஏகத்திற்கும் குற்றம் சாட்டினர். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மட்டும்இந்தியா  கூட்டணி ஒற்றுமை குறித்துப்  பேசியுள்ளனர்.

கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கடந்தகாலக் கசப்பான காங்கிரஸ் அனுபவங்களை எண்ணுகிறார்கள். மாநிலத் தேர்தல்கள் குறித்த காங்கிரஸ் நெருக்குதலால்மூன்றாம் அணிஎன்ற முன்னெடுப்பு குறித்துச் சிந்திக்கிறார்கள், வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். ‘இந்தியாகூட்டணிக்  கூட்டத்திலும் அதிருப்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

மூன்றாம் அணி என்பது பா...வுக்கு வெற்றி வாய்ப்பைத் தட்டில் வைத்துத் தருவதாகும் என்ற விமர்சனங்கள் உள்ளன. ஆனால், மாநிலங்களின் அரசியல் மாநிலக் கட்சிகளைப் பா...வைப் போலவே அழிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது அணியே  மாற்று என்ற வாதமும் உண்டு.

தமிழ்நாட்டில் மேனாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி, திருச்சி வேலுச்சாமி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோரைக் கொண்ட தி.மு,. வெறுப்பின் பழைய அணி இருந்தது. 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சமூக ஊடகங்கள் வழியும், செய்தியாளர் சந்திப்பு வழியும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கீரிஸ் சோடாங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் இராஜேஷ் குமார் ஆகியோர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டுஇந்தியாகூட்டணியின் நம்பகத்தன்மையைப் பொதுமக்களிடம் சிதைத்தன. ‘இந்தியாகூட்டணி தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தது.

தமிழ்நாட்டில் திராவிடத்திற்கு மாற்றாக .வெ.. வந்தபின், காங்கிரஸ் அதிரடி அரசியல் நடத்துகிறது. அதன் உடைப்புச் சத்தம்இந்தியாகூட்டணியில் பிரதிபலிக்கிறது. இந்நாள்வரை .வெ.. ‘இந்தியாகூட்டணி குறித்து ஒருவார்த்தை கூடப் பேசவில்லை.

தி.மு..வின் மக்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, “நாங்கள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களோடு அமர விருப்பமில்லை; வேறு இடம் தாருங்கள்என மக்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதிவிட்டார். தி.மு..வின் அதிகாரப்பூர்வக் கட்சி நாளேடானமுரசொலிதலையங்கம் உள்பட அனைத்துச் செய்தி வடிவிலும் காங்கிரஸ் கட்சியைக் கட்டம் கட்டுகிறது.

மூன்றாவது அணி என்பது காலத்தின் கையில் உள்ளது. அதற்கான அடிப்படைக் காரணிகளை மாநிலத் தேர்தல் வெற்றிகளுக்காக காங்கிரஸ் உருவாக்கியது என்பதில் ஐயமில்லை.

மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டாட்சியே அரசமைப்புச் சட்டநெறிக்கு உள்பட்ட அடிப்படையாகும். அது மூன்றாவது அணியால்  மட்டுமே சாத்தியமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
காலத்திற்கேற்ற தலையீடு

சில கருத்தியல்களோடு நான் முரண்படுகிறேன். நான் பங்களிப்பு செய்ய அல்லது நான் சார்ந்த சமூகத்திற்கு என் பங்களிப்பை மறுக்கும் கருத்தியலை நான் மறுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கருத்தியல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இவ்வரசமைப்பு உரிமைச் சட்டம் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கியது. பிரிவினைவாதத்தை (division) உள்ளடக்கிய இக்கருத்தியலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உற்றார் உறவினர் எவரும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், ஏனையோர் இக்கருத்தியலை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.”

இதே கருத்தியல்தான் மகாத்மாவின் கொலைக்குக் காரணி ஆனது. இதே கருத்தியல்தான் பாபாசாகேப் அம்பேத்கரைலில்லிபுட்என்று அழைக்கவைத்தது. இதே கருத்தியல்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மக்களைத் திரட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறுக்கவும் மனுஸ்மிருதியை அதனிடத்தில் வைக்கவும் மக்களைத் தூண்டியது. கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய மண்ணில் விதைக்கப்பட்டு வரும் இக்கருத்தியலால்தான் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் மதம் பற்றிய கருத்தால் செருப்படி வாங்க நேர்ந்தது.”

கர்நாடக மாநிலத்தின் இன்றைய உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே அவர்கள், கடந்த 2025, டிசம்பர் 15 அன்றுபிரண்ட் லைன்என்ற ஆங்கில மாத இதழுக்கு அளித்த நேர்காணலின் சில பகுதிகள்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கருத்தியலைத் தோலுரித்துக் காட்டிய கார்கே, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு நிலவும் சட்ட விதிகளை மதித்து நடக்கவேண்டும் எனவும், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், பொது மைதானங்கள், சாலைகள், பூங்காக்களை விருப்பம்போல் பயன்படுத்துவதை அனுமதிக்க உரிய அனுமதி (Permission) பெறவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தபோது, ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பும், அவ்வமைப்பின் கிளை அமைப்புகளும் சினம் பொங்கத் துள்ளிக்குதித்தன.

திரு. கார்கே அவர்களின் கோரிக்கையை ஏற்ற சித்தாராமையா அரசு, அரசின் அனுமதியைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தது.

இப்போதும் என்ன?

இந்நாட்டின் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார மேன்மையையும், மதரீதியிலான தேசியத்தையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாகிச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதிமூலம் எது?’ என்ற கேள்வியை ஒருவர் எழுப்பி, இவ்வமைப்பின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குகிற கொடுமை இன்று நிகழ்ந்துள்ளது. ஆம், ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பை, அவ்வமைப்பின் கிளை அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகாக்களை, பகை வளர்க்கும் பரப்புரைகளை, பிரிக்கும் மத உணர்வுகளால் மக்களைத் துருவப்படுத்தியுள்ள (Polaris) தேசிய அமைப்பின் பிறப்பினை, அதன் ஆதிமூலத்தை கார்கே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது?

ஆர்.எஸ்.எஸ். எனும் பூனையின் கழுத்தில் கட்டப்பட்ட மணி தரும் செய்தியால், கார்கே ஒரு பூகம்பத்தையே கட்டவிழ்த்துள்ளார். ஒரு நிறுவனத்தை நாடெங்கும் கிளை பரப்பி, ‘ஷாகாஎன்ற பெயரில் இராணுவ ரீதியான பயிற்சி அளித்து இந்திய ஊடகங்களை, தொடர்பு சாதனங்களைத் தமதாக்கி, விஷமத்தனமானப் பிரச்சாரங்களால் வன்மம் வளர்த்து, கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலமாக அசைக்க இயலாத அளவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆட்சியாளரின் பூர்வக் கதையையும், அவர்களின் முகவரியையும் கேள்வி கேட்கத் துணிந்துள்ளார் ஓர் இளைய அமைச்சர். இவர் இளைஞர் மட்டுமல்லர்; இவர் ஒரு பட்டியலினத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகள்கூட வாக்கு வங்கி அரசியலுக்கு அஞ்சி எழுப்ப அஞ்சும் கேள்வியை இதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் எழுப்புவது சங்கப் பரிவாரங்களிடம் கோபத்தை எழுப்பியிருப்பதில் வியப்பு ஒன்றுமில்லையே!

கார்கே என்னதான் கேட்டார்?

கார்கே இப்போதைய சிவக்குமார் அரசில் உள்துறை அமைச்சர்; ஏற்கெனவே முதல்வராக இருந்த சித்தாராமையா அரசில் வேறு துறையில் அமைச்சராக இருந்தபோதுதான், தனது கல்புர்கி தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்தவிருந்த ஆர்.எஸ்.எஸ். பவனியின்போது, அரசிடம் முன் அனுமதி கேட்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனால் சித்தாராமையா பெறவேண்டிய அனுமதியைச் சட்டப்பூர்வமாக்கினார் (Mandatory).

இப்போது கோபக்குரல் எழுப்பும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்து உள்துறை அமைச்சர் என்ற உயர் பொறுப்பிலிருப்பவர் பொங்கி எழுந்துள்ளார்.

நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். என்ற நிறுவனம் எங்கே, எப்படிப் பதிவு (Register) செய்யப்பட்டுள்ளது?’ என்பதே இவரின் தலையாய கேள்வி. ஒரு மாநிலத்தின் அமைச்சர்களுள் ஒருவர், இப்படி ஒரு வினா எழுப்பியதைக் கண்டு அதிர்ந்து போன சங்கப் பரிவாரங்கள் சார்பாக அதன் இப்போதைய தலைவர் மோகன் பகவத் என்ன பதில் கூறுகிறார்?

ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் நாள்தோறும் ஓயாது செயல்பட்டு வருவதாகவும், இவ்வமைப்பு முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு தன் பணிகளை நடத்தி வருவதாகவும் பதிலிறுத்ததோடு, இவ்வமைப்பைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அதை நியாயப்படுத்த, இந்து தர்மம்கூட இன்னும் பதிவு செய்யப்பெறவில்லை என்றும் விரைந்து பதிலிறுத்தார். “இந்து தர்மமே பதிவு செய்யப் பெறாமலே, மக்கள் இத்தர்மத்தை அனுசரித்து வருகையில், இந்துகளுக்கான ஆர்.எஸ்.எஸ். ஏன் பதிவு செய்யப்பெறவேண்டும்?” என்று வினா எழுப்புகிறார்.

1925-இல் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பெற்ற ஆர்.எஸ்.எஸ். இதன் மதத்தீவிரவாதப் போக்கால் வரலாற்றில் மூன்று முறை ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டது என்பதை மக்கள் அறிவர். மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்சேயால் கொலை செய்யப்பட்ட போது பண்டித நேரு, சர்தார் படேல் எனும் பெருந்தலைவர்களின் ஒப்புதலோடு ஆர்.எஸ்.எஸ். முதல் முறையாகத் தடை செய்யப்பட்டது. அன்றைய ஆர். எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வாக்கர் எடுத்துக் கொண்ட முயற்சிகளாலும், ‘இவ்வமைப்பு நாட்டுப் பற்றில் நம்பிக்கை கொண்டதுஎன்று படேல் போன்றோர் கொண்ட நம்பிக்கையினாலும் அந்தத் தடை நீக்கப்பட்டது.

ஆனால், தடை நீக்கத்திற்கு ஒப்புக்கொண்ட பண்டித நேரு, ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்தார்: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் அமைப்பு (Constitution) பற்றிய விளக்கத்தை எழுத்துவடிவில் எழுதித் தரட்டும்; நிரந்தரமாகத் தடைநீக்கம் பற்றி யோசிக்கலாம்என்றார்.

இப்போது திரு. கார்கேஇவ்வமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒன்றா?’ என்றுதான் கேள்வி எழுப்புகிறார். 1948-இல் நேரு தலைமையிலான ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரான சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான அமைப்பு விதி (Constitution) பற்றிக் கேள்வி எழுப்பினார். அப்போதுதான் ஓர் உண்மை அம்பலமாகியது - இவ்வமைப்புக்கென்று ஓர் அமைப்பு விதி இல்லை என்ற கதை. உடனே இவ்வமைப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அவசர அவசரமாக ஓர் அமைப்பு விதியை உருவாக்கி, ஒன்றிய அரசிற்குச் சமர்ப்பித்த பின்பே ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக ஒருவர் நியமிக்கப்படுகிறார். போட்டியின்றி நியமிக்கப்படும் தலைவருக்குப் பதவிக்காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இவ்வமைப்பின் ஆட்சிக் குழுவில் பெண்களுக்கு இடமில்லை. இவ்வமைப்பின் செயல் திட்டங்களுக்குப் பின் எவ்விதச் சனநாயக முறைமையும் கடைப்பிடிக்கப் பெறுவதில்லை. சுருக்கமாகக் கூறினால், இது ஒரு சனநாயக அமைப்பே இல்லை; சனநாயகப் பண்பு இதன் அடிப்படையில் இல்லை என்பதால்தான், இன்றைய மோடி அரசின் போக்கில் சனநாயகத்தின் எச்சம் எதையும் நம்மால் காணமுடியவில்லை.

இவ்வமைப்பு பதிவு செய்யப்படாத நிலையில், எவருக்கும், ஏன் அரசுக்கும்கூட பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இந்திய நாட்டில் மக்களிடம் அல்லது சமூகத்தில் செயல்படும் சிறு அமைப்புகள் கூட பதிவுசெய்யப்பட்டவைதாம். அனைத்து நிதி நிறுவனங்களையும் பதிவு செய்தால் மட்டுமே அவை இயங்குவதற்கான உரிமம் என்ற பெயரில் அனுமதியைப் பெறுகின்றன. அப்படியிருக்க, இலட்சக்கணக்கான உறுப்பினர்களை வைத்து நடத்தப்பெறும் செயல்பாடுகள், பயிற்சிகள்... இவையெல்லாம் தங்குதடையின்றி நடத்தும் போது அதைப் பதிவுசெய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புது தில்லியில் இவ்வமைப்பின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைக்கிறார். இவ்வலுவலகம் 3.75 ஏக்கரில் அமையப் பெற்றுள்ளது. 150 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் கட்டி முடிக்க எங்கிருந்து நிதி பெறப்பட்டது? நாட்டு மக்களின் நலனுக்காகவே இவ்வமைப்பு செயல்படுகிறது என்று கூறிவருவது உண்மையானால், இப்பணிக்கான செலவீனங்களை அல்லது நிதி ஆதாரங்களை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூறவேண்டாமா? மக்களுக்கு ஆற்றவிருப்பதாகச் சொல்லப்படும் அனைத்துப் பணிகளுக்கும் நிதி வேண்டுமே! அந்த நிதியை எங்கிருந்துதான் பெறுகின்றீர்கள்?” - கார்கே. ‘பிரண்ட் லைன், 15-12- 2025.

மேற்கண்ட  திரு. கார்கே அவர்களின் கூற்றின் நீட்சிதான் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு பற்றிய கோரிக்கை. வெளிநாட்டு நிதியுதவி பெறுதற்கான F.C.R.A-வின்மீது தொடர்ந்து மிகு தீவிர அக்கறை காட்டிவரும் இன்றைய ஒன்றிய அரசு, மதச்சிறுபான்மையினர் பெறும் நிதி ஆதாரங்கள் அனைத்தும் அரசு விதித்த தணிக்கை முறைக்கு ஆட்படுத்தப்பட்டபோதும் எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், நிதி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாற்றும் சமய நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் என இவையனைத்தும் முடக்கப் பெறுவதை நாளும் பார்க்கிறோம். முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் இந்நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவை.

ஆனால், வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் கணக்கிலடங்கா நிதிபெற்று இந்தியாவில் செயல்படும் விசுவ இந்து பரிஷத் (VHP) என்ற ஆர்.எஸ்.எஸ்-சின் கிளை அமைப்பு இதுவரை பெற்ற நிதியின் அளவை எவரும் அறியார். இந்தியாவின் மிகப்பெரிய N.G.O. போல இயங்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பின் வரவு-செலவை மிகப்பெரிய அளவில்சிதம்பர இரகசியமாககாப்பாற்றி வரமுடிவதன் காரணம், இதன் பதிவு செய்யப்படாத நிலைதான்.

இந்தியாவின்  மிகப்பெரிய மதப்பாதுகாப்பிற்கென உருவான ஆர்.எஸ்.எஸ். மதப்பெரும்பான்மை எனும் வாக்கு வங்கியினைக் காட்டி அச்சுறுத்தி வருவதால், சமய சார்பற்ற சனநாயக சக்திகள்கூட இம்மாதிரியான கேள்விகளை எழுப்ப அஞ்சுகின்றன. தேர்தல் அரசியல் தரும் அச்சம் இக்கட்சிகளை மௌனியாக்கிவிடுகின்ற சூழலில், கார்கே போன்றவர்களின் நிலைப்பாட்டைப் பாராட்டுவோம்.

கார்கேயின் இந்த உறுதியான தலையீட்டை, வெளிப்படையான சவாலைக் கேள்விக்குட்படுத்த முடியாத அளவுக்கு அரசின் மறைமுகப் பலமாகச் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்திய போக்கை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வமைப்பு இந்நாட்டில்தான் நினைத்ததையெல்லாம் செய்துவருகிறது. இவ்வமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றதேயில்லை. அரசமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பண்புகளும் செயலிழக்கும் வகையில் இவ்வமைப்பு தன் செயலைத் திறம்பட நடத்தி வருகிறது. இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் இவ்வமைப்பைக் கேள்விக்குள்ளாக்க அஞ்சினால் அது ஓர் அரசியல் தற்கொலையே.”

.நாராயணா, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், ‘பிரண்ட் லைன், 15-12-2025.

news
சிறப்புக்கட்டுரை
Ai சந்தையில் மாணவர்கள் (உலகம் உன் கையில்! – 25)

இன்றைய தொழில்நுட்ப உலகம் ஒரு சுவாரசியமான போர்க்களமாக மாறியிருக்கிறது. ஒருபுறம், அமெரிக்காவின் வற்றாத முதலீடு, அதிநவீன ஆராய்ச்சி, உலகையே மிரட்டும் கார்ப்பரேட் செல்வந்தர்கள் என அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ‘நாங்கள் என்ன சளைத்தவர்களா?’ என்று சவால் விடுகிறது சீனா. அமெரிக்காவிடம் தனியார் நிறுவனங்களின் பலம் இருந்தால், சீனாவிடம் ஒட்டுமொத்த அரசின் இரும்புக்கரமும் இருக்கிறது. .. கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதிய மாடல்களை மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்துவது, அதைத் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் புகுத்துவது... என சீனா கொடுக்கும் கழுத்தை நெரிக்கும் போட்டி அமெரிக்காவையே யோசிக்க வைக்கிறது.

இவர்கள் அனைவரின் ஒற்றை இலக்கு AGI (Artificial General Intelligence) என்னும் மனிதனுக்கு நிகரான அல்லது மனிதனை மிஞ்சிய, சிந்தனைத் திறன் கொண்ட .. மாடலை முதலில் உருவாக்குவது யார் என்பதுதான். இப்போட்டியில் ஓபன் .., கூகுள், அன்த்ரோபிக், மைக்ரோசாஃப்ட், மேடா போன்ற புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதற்குத் தேவையான பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டவும், சிறிதும் தயக்கம் காட்டாமல் இரவும் பகலும் உழைத்து வருகின்றன. இந்த .. பந்தயம் வெறும் ஆய்வகங்களோடு நின்றுவிடவில்லை. உலகளவில் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தலைகீழாக மாற்றி வருகிறது. இத்தொழில்நுட்பம் அனைத்துலகக் கவனத்தையும் திருப்பியுள்ளதோடு, இத்துடிப்பான .. ஆராய்ச்சியில் அமெரிக்கா முன்னிற்பதால் மாணவர்களை ஈர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது.

தொழில்நுட்பமும் மாணவர்களும்

ஹார்வர்ட் கென்னடி பள்ளியின்இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ்நிறுவனம் 2025-இல் நடத்திய ஆய்வு சுமார் 70% கல்லூரி மாணவர்கள் ..-யைத் தங்கள் வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர் என்றும், அண்மையGallupநிறுவன ஆய்வுகள், அமெரிக்கத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களால் தங்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் வந்துவிடுமோ என்ற நிச்சயமற்றத்தன்மை, தொழில்கல்வி சார்ந்த கல்வி பயில்பவர்களிடையே அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றன.

மாணவர்கள் ..-யில் நிபுணத்துவம் பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தாலும், அதே சமயம், அதுவே தங்களை வேலையிலிருந்து நீக்கிவிடுமோ என்று அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இளம் மாணவர்கள் பாரம்பரியக் கல்வித் திட்டங்களில் படிப்பை முடித்து வெளிவரும்போது, முற்றிலும் மாறிப்போகும் வேலைச் சந்தையைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். என்றாலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு .. எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துக் கற்பிக்கப்படுவது மிகவும் அல்லது ஓரளவிற்கு முக்கியமானதும்கூட என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புவதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது. இதே மனநிலைதான் உலகளவில் பரவலாக இருப்பதாகவும் உணரப்படுகிறது.

..யினால் பாதிக்கப்படாத பாடப்பிரிவுகளைத் தேடி...

சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் ஒருவர் பல கல்விப் பிரிவுகளை ஆய்வுசெய்து, ஒரு திட்டத்துடன்பிசினஸ் அனலிட்டிக்ஸ் (Business Analytics) என்ற துறையில் திறன்களைக் கற்று, படிப்பை முடித்ததும், ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று பட்டமும் பெறுகிறார். ஆனால், ..-யின் வளர்ச்சி, அவரின் திட்டங்களை முற்றிலும் மாற்றிவிட்டது. அவர் அந்தப் படிப்பைக் கற்று முடித்து வேலை தேடும் தருவாயில், புள்ளி விவரப் பகுப்பாய்வு (Statistical analysis), கணினி குறியீடு (Coding) போன்ற அடிப்படைத் திறன்களை .. எளிதாகச் செய்யும் நிலை உருவாகி, அவரின் கனவு உடைந்துபோனது. இவ்வாறு ஆரம்பநிலை வேலைகள் (Entry-level jobs) பலவற்றை .. பறித்து விடுவது பலர் மனத்தில் பயத்தையும், எதிர்காலம் குறித்த கேள்வியையும் எழுப்புகிறது என்கிறார் ஓஹியோவில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர்.

இச்சூழலில், மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவை மாற்றியமைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், இன்றைய கல்லூரி மாணவர்கள், ‘..-யினால் பாதிக்கப்படாதஒரு முதன்மைப் பாடத்தைத் (major) தேர்ந்தெடுத்தல் என்பது நகரும் இலக்கைக் குறிவைப்பது (carrot infront of the cart) என்றாகிவிட்டது.

வேலைக்கேற்ற கல்வி

உலகளவில் இன்று பிளம்பர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர் போன்ற உடல் உழைப்பு சார்ந்த எந்தவொரு வேலையும் .. ஆக்கிரமிக்க முடியாதது. அதேநேரத்தில், மருத்துவம், நீதித்துறை மற்றும் கட்டடக்கலை போன்றவற்றைத் தவிர, பட்டதாரிகள் சேரும் பல வேலைகள் அவர்கள் படித்த பாடத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்பதுதான் உண்மை. எனவே, ஒரு பட்டம் என்பது, நாம் எந்தப் பாடத்தைப் படித்திருந்தாலும் நம்மால் ஒரு கருத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் விமர்சிக்கவும் மற்றும் தகவல்களைச் செயல்படுத்தவும் முடியும் என்பவைகளுக்கு அடிப்படையாய் உள்ளதென்பது நம் அனுபவமும்கூட.

நாம்மனிதர்களைக் கணினிகளாக மாற்றமுயற்சி செய்தோம். இப்போது கணினிகள் நம்மை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன. என்றாலும், வருங்காலத்தில் இயந்திரங்களால் வழங்க முடியாத மனிதப்பண்புகளே அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் குறிப்பாக, இரக்கம் (Empathy), அறநெறி (Ethics) மற்றும் படைப்பாற்றல் மிக புதிய சிந்தனை (Innovative Thinking) போன்ற திறன்களே மனிதர்களை இயந்திரங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்பது நம் இடைக்கால அனுபவமுமாக உள்ளது.

அறிவியல் என்பது ஒரு வலிமையான வாகனம் என்றால், மனிதநேயம் என்பது அந்த வாகனத்தைச் சரியான திசையில் செலுத்தும் திசைக்காட்டி. திசைக்காட்டி இல்லாத பயணம் ஆபத்தானது என்பதை உணர்கிறோம். இன்று STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) அறிவியல்-கல்வி முறைக்கு முதலிடம் கொடுப்பதைக் காண்கிறோம். இது வேலை வாய்ப்பிற்கு ஏற்றதென்றாலும், முழுமையான மனிதனை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது. அறிவியல் நமக்கு எப்படி ஒரு கருவியை உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. ஆனால், மனிதநேயம் (Humanities) மட்டுமே அக்கருவியை ஏன் உருவாக்கவேண்டும்? எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்ற அறநெறியைக் கற்றுத்தருகிறது.

உதாரணமாக, அணுசக்தி என்பது ஒரு வீறு கொண்ட பொருள். இது மின்சாரம் தயாரிப்பதற்கா அல்லது அழிக்கும் ஆயுதமாக மாறவேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது மனிதநேயம்தானே! அடித்தளம் பலமாக இருக்க STEM கல்விப் பிரிவுகள் தேவைதான். இன்று, அந்த அடித்தளத்தின் மேல் கோபுரம் கட்ட .. தேவை என்றாகிவிட்டதால், ஒரே திசைக்கல்வி என்றில்லாமல், பல்முனை அறிவு இன்றைய சமுதாயத்தின் தேவை என்றும் உணரப்படுகிறது. எனவே, STEM-உடன் சேர்த்து மனிதநேயப் பண்புகளையும் (Humanities/Arts) ஊக்குவிப்பது இன்றைய தொழில்நுட்பத்தின் கட்டாயமாக உள்ளது.

எதிர்காலத்தைச் சந்திக்கத் தயார்படுத்திக் கொள்வதன் அவசியம்

வருங்காலத்தில் நம்மை அசைத்துக் கொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிதான் ..-ஐவிடப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து பிராந்திய அல்லது குழுவாதப் (tribalised) பொருளாதாரமாக மாறும் சூழலில், அந்தப் பாதிப்புகளிலி ருந்து தப்பிக்க முடியாத துறைகளைக் கண்டறிந்து, தவிர்க்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எனவே, ..-யைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், நாம் எதில் சிறந்திருக்கிறோமோ, எதை விரும்பிச் செய்கிறோமோ அதனை மேம்படுத்தவும், ஒரு நிறுவனத்திற்கு நாம் ஒரு சொத்தாக இருப்போமென்பதையும் வெளிப்படுத்த வேண்டியது இன்றைய தேவை. அதோடு, எதிர்காலம் எப்படி மாறினாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நம்பகமான கூடுதல் தொழிலை (side hustle) வளர்த்துக்கொள்வது நமக்கு நம்பிக்கை கொடுப்பதோடு, ..-யினால் வரும் எதிர்பாராத பாதுகாப்பின்மை மற்றும் நம்பகத்தன்மை போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.

மாணவர்களின் இன்றைய நிலை

மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவுகளை (Majors) மாற்றுவது இயல்பானது; ஆனால், அதற்குப் பல காரணங்கள் இருக்கும்என்கிறார் லுமினா (Lumina) கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோர்ட்னி பிரவுன். “இத்தனை மாணவர்கள் .. காரணமாகப் பாடப்பிரிவை ஏன் மாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறதுஎன்றும் அவர் கூறுகிறார்.

ஜென் ஜி (Gen Z) இளையோரிடம் நடத்தப்பட்ட கேலப் நிறுவன ஆய்வில், .. பயன்பாடு அதிகரித்து வந்தாலும், இத்தலைமுறையைச் சார்ந்த பலர் இத்தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டு அஞ்சுகின்றனர். குறிப்பாக, தங்களின் சிந்திக்கும் திறன் மற்றும் வேலைவாய்ப்புகள்மீது .. ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர். கணிசமான ஜென் ஜி பணியாளர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் ..-யினால் கிடைக்கும் நன்மைகளைவிட ஆபத்துகளே அதிகம் என்று உணர்கின்றனர் என்று கூறும் பிரவுன், இன்றைய கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர்கள் வழக்கமாக ஆலோசனை கேட்கும் பேராசிரியர்கள், ஆலோசகர்கள் அல்லது பெற்றோரிடமே இதற்குப் பதில்கள் இல்லை என்பதுதான்.

மேலும், “மாணவர்கள் எந்தவித வழிகாட்டியும் (GPS) இல்லாமல், தாங்களாகவே இந்தப் புதிய சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதுஎன்கிறார் பிரவுன்.

news
சிறப்புக்கட்டுரை
மகத்தான மானுடம்

திருத்தந்தை 13-ஆம் லியோ 1891-ஆம் ஆண்டுதொழிலாளர் நிலைமை (ரேரும் நொவாரும்) என்ற சுற்றுமடலை வெளியிட்டார். இது அன்றைய தொழில்புரட்சியின் பின்புலத்தில், ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினையை முன்னிறுத்தி எழுதப்பட்ட மடலாகும். தொழிலாளர் நிலைமை சுற்றுமடல் வெளியான 135-வது ஆண்டின் நினைவாக இன்றைய திருத்தந்தை 14-ஆம் லியோமகத்தான மானுடம் (மாக்னிபிக்கா ஹூமானித்தாஸ்) என்ற தனது முதல் சுற்றுமடலை, கடந்த மே 25 அன்று வெளியிட்டிருக்கிறார். இது இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தின் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து எழுதப்பட்ட மடலாகும்.

இன்றைய தொழில்நுட்பம் என்பது மனிதரை ஆளக் கூடாது; மாறாக, அது (செயற்கை நுண்ணறிவு உள்பட) மனிதருக்குப் பணியாற்றவேண்டும், சேவை செய்யவேண்டும். மேலும், இம்மடல் மனிதரின் சுதந்திரம், உண்மை, சமூகநீதி, அமைதி போன்ற கருத்துகள் பற்றியும் பேசுகிறது. இம்மடல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டது. அவை முறையே:

1. நற்செய்திக்குப் பிரமாணிக்கமான நம்பகத்தன்மையோடு கூடிய அணுகுமுறை

திருத்தந்தை 13-ஆம் லியோ தொழில்புரட்சி காலத்தில் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்குப் பதில் கூறினார். தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் காலம்வரை பல திருத்தந்தையர்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குப் பதில்கூறி வந்திருக்கின்றனர். இன்றைய செயற்கை நுண்ணறிவின் சவால்களுக்குத் திருத்தந்தை இச்சுற்று மடல் மூலம் பதில் கூறுகிறார். மாறாத நற்செய்தி, மாறிவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப புதிய விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறது.

2. திரு அவை சமூகப் படிப்பினையின் அடிப்படைகளும் கொள்கைகளும்

கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மானிடர் வெறும் உற்பத்திக் கருவி அல்லர்; அவரின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து மானிடரின் நலனும் குறிப்பாக, நலிவுற்றோர் நலனும் பேணப்படவேண்டும். பொதுநன்மை, கூட்டுத் தோழமை, சமூகநீதி, துணை நிலைக் கொள்கை (‘சப்சிடியாரிட்டி) போன்ற திரு அவையின் அடிப்படைக் கொள்கைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

3. தொழில்நுட்ப ஆதிக்கம், செயற்கை நுண்ணறிவின் வாக்குறுதிகள் ஒளியில் மகத்தான மானுடம்

நுண்ணறிவு ஒரு கருவியே அன்றி, அது மனிதரைவிட உயர்ந்ததோ மேலானதோ அல்ல; மானிடர் இயந்திரம் அல்லர்; அவர் அன்பு, மனச்சான்று, அருள்வாழ்வு, உறவுகளுக்குச் சொந்தக்காரர். தொழில்நுட்பத்தின் மூலம் மானிடரின் இயல்பான வரம்புகளை மீறி, அவர்களை மேம்படுத்த முயலும் போக்கை திருத்தந்தை லியோ விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.

4. மாற்றத்தின் காலத்தில் மானிடரைப் பாதுகாத்தல்

பொய்ச்செய்திகள், தகவல்திரிப்புகள் சனநாயகத்தைப் பாதிக்கின்றன. எனவே, உண்மை பகிரப்படவேண்டும். கல்வி என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டும் அல்ல; மாறாக, கல்வி மனித ஆளுமையைச் செழுமைப்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் மனிதருக்காக; மனிதர் தொழில்நுட்பத்திற்காக அல்லர். ஊடகங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாகும் அபாயம் இருக்கிறது. இதுகுறித்துச் சுயவிமர்சனமும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. அதிகாரத்தின் நாகரிகமும், அன்பின் பண்பாடும் போர், வன்முறை, அதிகாரக் குவிப்புப் பற்றியும் இம்மடல் பேசுகிறது. ஆயுதங்கள் மனிதகுலத்திற்கு ஆபத்துகொலை முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைக்கக்கூடாது. பாபேல் கோபுரம்போல அதிகாரத்தின் உச்சமல்ல நம் உலகு; மாறாக, அது அன்பின் பண்பாடாகப் பரிணமிக்கவேண்டும். சகோதரத்துவம், உரையாடல், அமைதி, நீதியின் மேல் கட்டப்பட்ட மனித சமுதாயத்திற்குத் திரும்ப இம்மடல் அழைப்பு விடுக்கிறது.

இச்சுற்றுமடலின் உச்சம் இந்த இறுதி அதிகாரத்தில் வரும்அதிகாரத்தின் நாகரிகமா? அல்லது அன்பின் பண்பாடா?’ இதுவே இச்சுற்று மடல் நம்முன் நிறுத்தும் சவாலான கேள்வி. எதைத் தேர்ந்தெடுப்போம்? இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தையும், இயற்கை நுண்ணறிவையும் எப்படி அன்பின் பண்பாடாக மாற்றுவது என்ற கேள்வியையும் திருத்தந்தை முன்வைக்கிறார்.                              

(தொடரும்)