குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. முக்கியமாக இந்தியாவில் அவை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
குழந்தைகள்
ஒரு நாட்டின் கல்வி, வளர்ச்சி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தேசியக் குற்றப்பதிவுப் புலனாய்வு அமைப்பு (NCRB) 2023-ஆம்
ஆண்டு வெளியிட்ட தகவலின்படி 1,77,335 குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டு 1,62,449 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத்
தகவலின்படி 2022-ஐ ஒப்பிடும்போது 2023-இல் குழந்தைகளுக்கு
எதிரானக் குற்றங்கள் 9.2% அதிகரித்துள்ளன.
இந்தப் புள்ளி விவரங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களான வன்கொடுமை, பாலியல் குற்றம், கடத்தல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் POCSO-வில்
மட்டும் பதிவானக் குற்றங்களின் எண்ணிக்கை 2017-இல் 33,210 ஆகும். ஆனால், 2022-இல் இது 94% அதிகரித்து, 64,449 ஆக உயர்ந்துள்ளது.
பெரும்பாலும்
குழந்தைகள் அவர்களுக்கு நெருக்கமான உறவின் மூலமாகத்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தனது குடும்பத்தினர் என்று சொல்லப்படும் மாமா, அண்ணன், சித்தப்பா, தாத்தா போன்றோர்களால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள்மீது குழந்தையின் பெற்றோர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால், அவர்கள் மிகவும் எளிதாகத் தங்களின் வக்கிரத்தைப் பிஞ்சுக் குழந்தைகள்மீது நடத்துகின்றனர்.
குடும்பத்தினரை
ஒப்பிடுகையில், அயலாரிடம் குழந்தைகள் குறைந்த அளவில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அயலாரிடம் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்த்தால், வீட்டின் அருகில் வாழும் நபர்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போன்றோர்களால் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, பொது இடங்களிலும், பேருந்து மற்றும் புகைவண்டி போன்ற நெருக்கம் நிறைந்த இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல நடத்தப்படுகின்றன. இப்படியாக, குழந்தைகள்
பாதுகாப்பு இன்று, இந்தியாவில் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
குழந்தைகள்மீது
நடத்தப்படும் வன்முறைகள் உடல் ரீதியான வெறும் பாலியல் குற்றம் என்று அடக்கிவிட முடியாது. உடல் ரீதியான துன்புறுத்தல், வார்த்தை வழியாகத் தகாத வார்த்தைகளால் அவர்களைத் துன்புறுத்தல், உளவியல் ரீதியான துன்புறுத்தல் போன்றவை பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் மனத்தில் ஆறாக் காயங்களாக மாறி அவர்களது ஆளுமை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
குழந்தைகள்
பாதுகாப்பு குறித்து பல நெறிமுறைகள் கூறப்படுகின்றன.
குறிப்பாக, ‘Good touch and Bad touch’ அதாவது,
‘நல்ல தொடுதல்’ மற்றும் ‘கெட்ட தொடுதல்’ என்பவை. இங்குப் பல Good
Touch-களுக்குப்
பிறகுதான் Bad Touch தொடங்குகிறது.
அதுவும் குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து
இப்படித்தான் தொடங்குகிறது. இதனால் குழந்தைகள் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது என்று குழம்பிவிடுகின்றனர். இதுபோன்ற சூழலைத் தவிர்க்க குழந்தைகளுக்கு ‘Don\'t touch’
என்றும், ‘விருப்பம் இல்லாத குழந்தையைத் தொடுதல் கூடாது’ என்றும் சொல்லித் தரப்படவேண்டும்.
பெரும்பாலானோர்
பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், பெண் குழந்தைகளுக்கு நடைபெறும் அளவிற்கு இல்லாவிட்டாலும், ஆண் குழந்தைகளுக்கும் அதிகமாகப் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. ஆனால், கலாச்சாரம் என்ற பெயரில் ‘ஆண் பிள்ளை அழக்கூடாது’ போன்ற
சொல்லாடல்கள் வருவதால், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகப்படியாக வெளியே தெரிவதில்லை.
இந்தியப்
பெற்றோர் சாதி, மதம், பாகுபாடு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் ஒரு குழந்தையிடம் எந்த மாதிரியான உரையாடல்கள் நடத்தவேண்டும் என்று தெரியாமல் கலாச்சாரம் என்ற போதைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை அதனைத் தன் பெற்றோரிடம் கூற வரும்பொழுது, அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களை மீண்டும் மன அழுத்தத்திற்கே பெரும்பாலான
பெற்றோர் ஆளாக்குகின்றனர். பாதிப்பை ஏற்படுத்தியது தனது குடும்ப உறுப்பினர் என்று தெரிந்தால் அவர் அப்படிச் செய்யமாட்டார் என்றும், அப்படியே தெரிந்தாலும் அதனை மூடி மறைப்பது போன்ற பல வழிகளில் பெற்றோரின்
அணுகுமுறை அமைகிறது.
பாலியல்
துன்புறுத்தலை அனுபவித்த பிறகு குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாகப் பெரும் பாதிப்பை அனுபவிக்கின்றனர். அவர்கள் அச்சிறு வயதில் மனநலப் பாதிப்பு, கவலை, சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். கல்வி மீதான வெறுப்பு, சுற்றி இருப்பவர்கள் மீது நம்பிக்கை இழப்பு போன்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கிறது, கேள்விக்குள்ளாக்குகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் மீதான அவநம்பிக்கை மிகுந்த பாதிப்பை அவர்களது உறவு வாழ்வில் ஏற்படுத்துகிறது. தனிமை விரும்பிகளாக, தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக, அன்பு செலுத்த முடியாதவர்களாக, உணர்வுத் தளங்களில் பெரும் பாதிப்புகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு
அவர்களது உரிமையைப் புரியும் வகையில் எடுத்துக் கூறுவது; பள்ளிகளில் அவர்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது; பள்ளிப் புத்தகங்களில் அதற்கான பாடங்களை வகுப்பது; குழந்தைகள் பாதுகாப்பிற்காக இருக்கின்ற POCSO போன்ற
சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் குறைக்கும் என்றாலும், இதில் சமூகத்தின் பங்கு மிகப்பெரியதாகும்.
குழந்தைகளுக்கெதிரான
பாலியல் வன்கொடுமை ஒரு சமூகப் பாவம்; அது மனித மாண்பைச் சிதைக்கிறது. குழந்தைகளின் ஆளுமையை அழிக்கிறது. எனவே, இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்றச் செயல்களுக்குக் குடும்பம் மட்டும் விழிப்புணர்வு அடைந்து எதிர்த்தால் போதாது; மாறாக, நமது சமூகம் இதன் விளைவுகள் குறித்தான விழிப்புணர்வைப் பெறவேண்டும். அதனை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.
அதிகரிக்கும்
இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் வெளியில் தெரிந்தாலும், அதன் வேரானது ஆபாசப் படங்கள், அதீத பாலியல் உணர்வைத் தூண்டும் இணையத்தளங்கள்- செயலிகளில் ஊன்றியிருக்கிறது. ஆகவே, இணைய வழியிலும் அதிகம் பாதிப்புள்ளாகின்றனர். வளரிளம் குழந்தைகள் பாலியல், பாலியல் உணர்வு குறித்தான சரியானப் புரிதலுக்கு வளர்ந்து வரும் முன்னர் இணைய வழி பாலியல் கொடுமைகளும், ஆபாச இணையத்தளங்களும் அவர்களது திரையில் எளிதில் கிடைக்கின்றன. அதன் விளைவாக, முதிர்ச்சியடையாத பாலியல் நம்பிக்கைகளும், பாலியல் உணர்வு போன்றவை பிஞ்சுகளின் நெஞ்சத்தில் நிலைபெறுகின்றன.
ஆபாசப்
பேச்சுத் தளங்கள், நேரலை ஆபாசக் காட்சிகள் இன்னும் பல வகையிலான பாலியல்
உணர்வைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தளங்களை இந்தியச் சமூகத்திலிருந்தும் இணையத்திலிருந்தும் ஒழிக்கவேண்டும். பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஆபாசப் படங்களை எல்லா வகையான ஊடகங்களிலும் தடை செய்யவேண்டும்.
தனிநபர்,
அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றங்களைக் குறைக்க முடியும்.
நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் எங்களோடு வேலை பார்த்த ஒரு நண்பர், தான் எதிர்பார்த்த ஏதாவது நடைபெறவில்லை என்றால், தன் மீதோ தன் செயல்பாடு மீதோ எவ்விதப் பரிசோதனையும் செய்யமாட்டார். மாறாக, ‘எனக்கு இந்த நிற சட்டை போட்டாலே இப்படித்தான் நடக்கும்; நான் அலுவலகத்திற்கு வரும் வழியில் பாக்கக்கூடாத ஒரு முகத்த பாத்துட்டேன்; என்மேல அவருக்கு இருக்குற பழைய கோபம்... அதான் அவரு இப்படி நடந்துக்கிறாரு; இன்னக்கி எனக்குக் கட்டம் சரியில்ல, செவ்வகம் சரியில்ல, வட்டம் சரியில்ல...’ என வரிசையாகப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார். கேட்டுக் கேட்டுச் சலித்துப்போய் விட்டது.
இதெல்லாம்
சரியா? அவரவர் மனப்போக்கு. எதில் நாம் தீவிரமாகக் கவனம் செலுத்துகிறோமோ, அது நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. யார்மீது நாம் அதீத பாசம் வைக்கிறோமோ அவர்களும் நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விடுவார்கள். உறவு என்பதில் ஒரு கட்டத்தில் சலிப்போ சண்டையோ வந்தால் அது முறிவு காணும் சூழல் வரும். எண்ணங்கள் அப்படியல்ல; தனக்குத்தானே ஏதேதோ நினைத்துக்கொண்டு, தானும் நொந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் நொந்து நூடுல்ஸாக மாற்றிவிடும் இரகம் உண்டு. இதிலிருந்து விடுதலை உண்டு. நம்மை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களுக்குத் தீவிர நேர்மறை எண்ணங்கள்தான் மருந்தாக அமையும்.
எப்போதுமே
தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் என்னென்ன நடக்கும்? மனித வாழ்க்கையில் எண்ணங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நல்ல எண்ணங்கள் நம்மை முன்னேற்றத்தின் பாதையில் நடத்தினால், எதிர்மறை எண்ணங்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. சில நேரங்களில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் சாதாரணமானவை. ஆனால், அவை எப்போதும் மனத்தில் நிலைத்திருக்கும்போது, வாழ்க்கையின் பல பகுதிகளிலும் பாதிப்புகளை
ஏற்படுத்துகின்றன. மனித வாழ்க்கையில் எண்ணங்கள் மிக முக்கியமானவை. நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அதன்படியே நமது செயல்களும் வாழ்க்கையும் அமைகின்றன. நேர்மறை எண்ணங்கள் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், எப்போதும் எதிர்மறை எண்ணங்களிலேயே மூழ்கி இருந்தால் அது நமது மனநலம், உடல்நலம், உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதலில்,
எதிர்மறை எண்ணங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
‘என்னால் முடியாது’,
‘நான் தோல்வியடைவேன்’, ‘எல்லாம்
தவறாகிவிடும்’ போன்ற
எண்ணங்கள் தொடர்ந்து வந்தால், மனத்தில் பயமும் பதற்றமும் அதிகரிக்கும். இதனால் நிம்மதி குறைந்து தூக்கமின்மை, கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.
இரண்டாவது,
தன்னம்பிக்கை குறையும். ஒருவர் எப்போதும் தன்னைப் பற்றி எதிர்மறையாக நினைத்தால், தனது திறமைகளை நம்ப முடியாமல் போகிறார். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் முயற்சி செய்யத் தயங்குவார். இதனால் திறமை இருந்தும் முன்னேற முடியாத நிலை ஏற்படும்.
மூன்றாவது,
உறவுகள் பாதிக்கப்படும். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் மற்றவர்களின் செயல்களையும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். சந்தேகம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் அதிகரித்து குடும்பம், நண்பர்கள் மற்றும் பணியிட உறவுகளில் பிரச்சினைகள் உருவாகலாம்.
நான்காவது,
உடல்நலமும் பாதிக்கப்படும். நீண்டகால மன அழுத்தம் உடலில்
பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தலைவலி, சோர்வு, உயர் இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு அதிகம்.
ஐந்தாவது,
வாழ்க்கை முன்னேற்றம் தடைப்படும். எதிர்மறை எண்ணங்கள் முயற்சியைக் குறைக்கின்றன. ‘இது நடக்காது’
என்று முன்பே முடிவு செய்துவிட்டால், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், இலக்குகளை அடையவும் ஆர்வம் குறையும். இதனால் கனவுகள் நிறைவேறாமல் போகலாம். இவை அதிகரிக்கும்போது மிகச் சாதாரண நிகழ்வுக்குக் கூட மனம் நொந்து சிறு சிறு முடிவுகள் எடுக்கக் கூட காலம் தாழ்த்தி மன நிம்மதியை இழக்க
நேரிடும்.
இருப்பினும்,
எதிர்மறை எண்ணங்களை முழுவதும் அகற்ற முடியாவிட்டாலும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். நல்ல நண்பர்களுடன் பழகுதல், உடற்பயிற்சி செய்தல், தியானம், நன்றியுணர்வை வளர்த்தல், சிறிய வெற்றிகளை நினைவுபடுத்திக் கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மனத்தை நேர்மறை நோக்கில் மாற்ற உதவும். எப்போதும் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மனநலம், உடல்நலம், உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகிய அனைத்தையும் பாதிக்கக்கூடியவை. எனவே, அவற்றை உணர்ந்து, நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதே மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கான முக்கியமான வழியாகும்.
இதெல்லாம்
கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு, எப்படி இதிலிருந்து மீண்டு வர்றது என்று நம்முள்ளே ஓர் எண்ணம் ஓடும்? எவ்வகையான எண்ணங்கள் நம் வாழ்வில் அதிகம் இடம் பெறுகிறது? எதனால் அவை வருகிறது, அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றி அடுத்த வாரம் காண்போம்.
‘நம் வாழ்வு’ இதழொன்றில் ‘அசிங்கம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதிய நினைவு இருக்கிறது. அக்கட்டுரை எழுதப்பட்ட காலம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநரும், அவரது தவப்புதல்வனும் தமிழ்நாடு அரசியல் களத்தைத் துவம்சப்படுத்திக் கொண்டிருந்த அசிங்கமான காலம். யாருடைய அரசியல் போக்கைப் பெரியவர் இராமதாசு அசிங்கமென வர்ணித்தாரோ, ‘அவரா’கிய குமாரன் தன் உதிரத்தே உதித்தவன் என்பதால் தம்மைத் துறந்து, உடன் வந்தோரையெல்லாம் ‘அய்யோ’ என்று அலறவிட்டுவிட்டு, ‘அவரா’கிய மகனை உச்சிமோந்து, கண்ணீர் சிந்தி அணைத்துக் கொண்ட நிகழ்வில், அசிங்கம் கரைந்து போய் புனிதமாகிவிட்டதோ?
பெற்றெடுத்த
மகன் நிகழ்த்திய அரசியல் கூத்தை அசிங்கம் என விமர்சித்த பெரியவருக்கு,
இன்று ‘மா’பெரும் தலைவர்கள் என வாழ்த்தப் பெறுவோர்
பலர் ஆடிவரும் அரசியல் அநாகரிக அசிங்கங்கள் மகிழ்வையும், ஒருவகை ஆறுதலையும் தந்திருக்கலாம் என்றும் நம்பலாம்!
அசிங்கத்தின்
உச்சம்
இன்று
தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? தமிழ்மண், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் அறம் என்று பேசப்பட்டவையெல்லாம் வெறும் கற்பனையோ? வெறுங்கனவோ? என்று எண்ணப்பெறுகின்ற அளவுக்கு அனைத்துவகை சீர்குலைவுகளும் அரங்கேறி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையைச் சந்தித்து வருகின்ற காலச்சூழல்! இச்சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
கொள்கை மறந்த
கட்சிகள்
இந்தியச்
சமூக அமைப்பையும், இவ்வமைப்புள் நிறுவப்பட்ட சனநாயக அரசையும் பிரபல அரசியல் ஆய்வறிஞர் ரஜினி கோத்தாரி அவர்கள் ‘பொருத்தமற்ற ஒன்று’
(Mismatch)
என்று வர்ணிப்பார். இந்தியச் சமூக அமைப்பும், அதன் கலாச்சாரமும் ஏற்காத சனநாயகக் கலாச்சாரத்தை வலிந்து திணித்த இந்தியத் தேசியத் தலைமைக்கு எவ்விதச் சுயநலநோக்கும் இல்லை என்பதே உண்மை. பெரும்பான்மை மக்களின் சமயரீதியான உணர்வைத் தாண்டியும் இந்நாட்டினைச் சமயச்சார்பற்ற நாடாக உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த பண்டித நேருவின் தெளிந்த மனப்பான்மையைப் போற்றுகிறோம்.
மதப்பெரும்பான்மையைக்
கட்டமைத்து, மதவாத அரசொன்றினை ஏற்கும் மனநிலை நியாயப்படுத்தப்பட்ட பின், இங்குச் சனநாயகத்தின் பொருள் என்ன? சமயச் சார்பின்மையின் ஏற்புடைமை (Relevance) என்ன? இந்தப் பெருங் கேள்விகளுக்கெல்லாம் விடைகாண வேண்டிய இந்திய அரசியல் சமூகச் சூழ்நிலையில், இந்திய மதவாத அரசியலை, மதவாதம் முன்வைக்கும் மதப்பெரும்பான்மைவாதத்தை, மதப்பெரும்பான்மைவாதம் முன்னெடுக்கும் பாசிச அரசியலை எதிர்கொள்ள வேண்டி உருவாக்கப்பட்ட ‘இந்தியா’
(INDIA) கூட்டணி இந்திய அளவில் என்ன நிலையில் இருந்தாலும், தேசிய அளவில் இராகுல்காந்தி தலைமையிலும், தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ அரசின் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி என்னவானது?
‘இந்தியா’ கூட்டணியின் தலைவராகவும், தொடர்ந்து இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராகவும், திராவிடத்தின் ஸ்டாலின் அவர்களால் முன்மொழியப்பட்ட இராகுல்காந்தி அவர்கள், தி.மு.க
கூட்டணியைக் கண்டுகொள்ளாமையின் அரசியல் என்ன?
நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் 40 இடங்களில் வெற்றியை உறுதி செய்த ஸ்டாலின் செய்த அரசியல் தவறு என்ன? தேசியத் தலைமைக்கு மிகத் தாராள மன நிலையில் ஆதரவு
தந்த நிலையில், ஸ்டாலினோடு இணைந்து பரப்புரை கூட செய்ய முடியாத அளவுக்குத் தனித்துப் போய் பரப்புரை செய்து, மக்களுக்குத் தந்த செய்தி என்ன? இன்று தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி பற்றிப் பேச இயலாமைக்கு என்னென்ன காரணம் என்று யோசிக்க வேண்டியிருக்குமோ! அதன் தொடக்கப்புள்ளி இதுதான்.
வலுவான கூட்டணிக்
கட்சிகளும்,
தடுமாறும்
நிலைப்பாடும்
தமிழ்நாட்டில்
மதச்சார்பற்றக் கூட்டணி வலுவான ஒன்று. இது வெறும் கட்சிக் கூட்டணி அல்ல; கொள்கைச் செறிவான கூட்டணி என்றெல்லாம் தமிழ்நாட்டின் முற்போக்குச் சக்திகளாலும், அறிவுசீவிகளாலும் போற்றப்பட்டு வந்த நிலையில், இக்கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் இன்றைய போக்கு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள அவநம்பிக்கை, வருத்தம் தரும் ஒன்றாகும். பொதுவெளியில் மக்களிடம் ஏற்படுத்தி வரும் இந்த நம்பிக்கை, சனநாயகத்திற்கு இழைக்கப்படும் பெரிய அவமானமாகும். சனநாயகத்தின் மிகப்பெரிய உள்ளீடு சுதந்திரமாகும். இச்சுதந்திரத்தின் மிகப்பெரியது கருத்துச் சுதந்திரம்! கருத்துச் சுதந்திரமே இன்று நாம் காணும் கட்சிகள். கட்சிகள் என்பன கொள்கைக் கலன்கள். நாட்டின் சனநாயக இயக்கத்தின் முதன்மைக் கூறாம் தேர்தல், அத்தேர்தல் முன்வைக்கும் தெரிவுச் சுதந்திரம் அனைத்தும் கட்சிகளின் செயல்பாட்டில்தான் உருப்பெறும். இக்கட்சிகள் நபர்களால் உருவாக்கப்பெறும் கும்பலும் அல்ல, கூட்டமும் அல்ல! கொள்கை வேறுபாட்டால், கொள்கை மற்றும் கருத்துச் சுதந்திரத்தால், பேச்சுரிமையால், சங்கமாகக் கூடுதற்கான உரிமையால் உருவாக்கப்பட்ட கட்சிகள் வெறும் பெயர்களால் வேறுபட்டதல்ல. தேர்ந்து கொண்ட கொள்கையால் தனித்த வேறுபட்ட அடையாளங்களைக் (Identity) கொண்டவை.
கொண்ட
கொள்கைகளை வேதமெனப் போற்றாது, சந்தர்ப்பவாத நோக்கில் செயல்படும் கட்சிகள் கட்சிகளே அல்ல. இவை
வாக்கு தேடி அலைந்து, பதவி சுகம் மட்டும் தேடுதலால், சனநாயக விழுமியங்களை வணிகமயமாக்குதலால், இக்கட்சிகள் வணிகம் செய்யும் வணிக நிறுவனமாகவே செயல்படுகின்றன. வணிகம் இலாபத்தை நோக்காகக் கொண்டது. இலாபம் தீட்ட வணிகர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் ‘போட்டி.’ இப்போட்டியில் எந்தவித அறக் கோட்பாடும் இல்லை; போட்டியில் எந்த ஒழுக்க விதிகளும் (Morality) இல்லை. இன்றைய அரசியல் கட்சிகள் போட்டி அரசியலுக்குப் (Competitive Politics)
பயன்படுத்தப்படுமானால்,
மேலே கூறப்பட்ட கட்சிகளுக்கான இலக்குகளால் என்ன பயன்?
“கொள்கை எனும் நங்கூரமற்ற (anchorless) கட்சிகளே இன்றைய எதார்த்தம்” என்பார்
அறிஞர் ரஜினி கோத்தாரி. கொள்கை எனும் உள்ளீடற்ற கட்சிகளுக்கு எந்த வலுவும் இல்லை. எந்த வகை நிலைப்பாடும் இல்லை. வெறும் கூடுகளான (Single Shell) இக்கட்சிகளை எவர் வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம், அபகரிக்கலாம். சமயச் சார்பற்றக் கட்சிகள், மதவாத பாரதிய சனதாவிடம் பலியான காரணம் இதுவே. பாரதிய சனதா தன் கொள்கைகளை என்றும் எப்போதும் சமரசம் செய்ததே இல்லை. மேனாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்கள், “இந்துத்துவமே பாரதிய சனதாவின் Mascot” என்பார்.
இக்கட்சியின் உயிரார்ந்த கலாச்சாரத் தேசியத்தின் அடிப்படைக் கூறுகள் கடந்த 12 ஆண்டு பாரதிய சனதா ஆட்சியில் நடைமுறைக்கு வருவதைப் பார்க்கிறோம்.
இவ்வளவு
வலுவான இக்கட்சியுடன் அணி சேர்ந்து சோரம் போன தமிழ்நாட்டுக் கட்சிகளை நாம் அறிவோம். இக்கட்சிகளுள் திராவிடம் பேசிய கட்சிகளும் அடக்கம். பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே ஓரளவு
சுயமரியாதையைக் காத்துக் கொண்டவை என்று கூறமுடியும்.
தமிழ்நாட்டுக்
கட்சிகளின்
நம்பகத்தன்மை
தமிழ்
மக்கள் இன்று தமிழ்நாட்டில் செயல்படும் ஏதோ ஒரு கட்சியின்மீது நம்பிக்கை கொண்டிருப்பர். இவர்களால் போற்றப்பட்ட கட்சித் தலைமைகள் ஏற்கும் முடிவுகளை எப்படி இவர்களால் ஏற்க முடிகிறது? அல்லது நாளொரு முடிவை ஏற்கும் தலைவர்கள், தம்மை இதுவரைப் பின்தொடரும் தொண்டர்கள் என்ன நினைப்பர்? என்று கூட எண்ணிப் பார்க்கமாட்டார்களா?
அண்மையில்
திசை மாறிய வைகோ அவர்கள், தன் மாற்றத்திற்கு என்ன காரணம் கூறினார்? தமிழ், தமிழ் தேசியம், ஈழ விடுதலை என்று
நாளும் பேசிவந்த இந்த நெடிய மனிதர் த.வெ.க.விடம் சரணாகதி ஆகின்றார். இந்த நெடிய நீண்ட பாராளுமன்றவாதி எந்த அனுபவத்தை, எதைத் தேடி அங்கு போகிறார்? இவர் போக்கில் நடந்த சமரசம் எது? இவரின் பல பத்தாண்டு அனுபவம்
மக்களுக்குத் தரும் செய்தி என்ன? இத்தனை பெரிய மனிதரின் அரசியலுக்கு இவர் முன்வைத்த தர்மம் என்ன?
அண்மையில்
தடம் மாறிப்போன இக்கட்சிகள் நியாயப்படுத்தும் மற்றொரு சொல் பங்கேற்பு. பங்கேற்பு என்பது சனநாயக விழுமியம். பங்கேற்பு எனும் விழுமியம் சனநாயகத்தின்
உண்மையான உட்கூறு. இது குடிமக்களின் அடிப்படை உரிமை. இது சலுகையன்று. தமிழ்நாட்டின் புதிய அரசு அளிக்க முன்வந்துள்ள பங்கேற்பைப் பெருங்கருணையென ஏற்றுக்கொண்ட (கொள்கை) கட்சிகள், வலுவாக அணி திரண்டுள்ளன. இவ்வணியில் இடம் பெற்ற வி.சி.க.
தலித் விடுதலைக்கு இதுவே அச்சாரம் எனப் பூரிப்பு கொள்கிறது. ‘எழுச்சித் தமிழர்’ இங்குத் தோற்றாரா? வென்றாரா? வரலாறு பதில் கூறும். என்றாலும், இவர் காட்டிய இன்றைய வழி சரியானது அல்ல.
இவர்களுள்
பெரிய அதிர்வைத் தந்த இந்திய முசுலிம் லீக் கட்சி மிகப்பெரிய பாதகம் இழைத்தது என்பதே உண்மை. இந்திய அரசியல் வாழ்வில், பண்பாட்டுத்தளத்தில் முசுலிம்களை முழுவதுமாக முடித்துக்கட்டும் பணியைத் திட்டமிட்டு செய்து வரும் இந்திய மதவாதிகளைக் கொள்கை ரீதியாக எதிர்த்து, சிறுபான்மையினருக்குக் காவல் அரணாகத் திகழ்ந்த திராவிடத்தை, ‘பங்கேற்பு’
என்ற பெயரில் சமரசம் செய்த போக்கைச் சனநாயகச் சமூகம் மன்னிக்காது.
காமராசர் சுருக்கமாகவே பேசுவார். ஆனால், அவர் செயலில் தீரமுண்டு. எடுத்த காரியத்தை முடித்துவிடுவார். படிக்காத மேதையாக விளங்கிய இவர், மிகவும் புத்திக்கூர்மையுடன் எந்தக் காரியத்தையும் தொடங்குவார். செயலில் கெட்டிக்காரர். பேச்சுத்திறமை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பேச்சிலும் வல்லவர்தான். ஆனால், மக்கள் மொழியில் அளந்தேதான் பேசுவார்.
திருவள்ளுவர்
கூறுவது போல,
‘ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல்
சொல்லின்கட் சோர்வு’
(குறள் 642)
என்பதை
அறிந்து திறம்பட காமராசர் நடந்தார். இனி இவர் பேசிய முறை, மக்களின்பால் கடமை செய்யத் தூண்டிய வகை பற்றி அவர் சொற்பொழிவுகளிலிருந்தே ஆராய்வோம்:
“நாடு ஒற்றுமை அடையவேண்டும். இதற்காக முதலில் வேண்டுவது சாதி, மத பேதம் ஒழிவது;
உயர்வு-தாழ்வு என்பது கூடாது; சுதந்திரம் பெற்றது ஒற்றுமையினால்; இனி புதிய சமுதாயத்தை உருவாக்குவதும் ஒற்றுமையினாலேயே!
சுதந்திரம்
அடைந்த பாரதம், இனி முன்னேறும் பாணியில்தான் இருக்கவேண்டும். புதியதொரு சமுதாயம் உருவாகவேண்டும். இதற்குச் சட்டம் போட்டு ஆவது ஒன்றுமில்லை. பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் மட்டும் புதுமை செய்துவிட முடியாது. மக்களிடத்தில் ஒரு மனப்புரட்சி, மன எழுச்சி, மனவேகம்
ஏற்பட்டாகவேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் பெருகும்.
இன்றைய
சிறுவர்கள் மூலமே வருங்காலப் பாரதம் உருவாகவேண்டும். மாணவர்களிடையே தன்னம்பிக்கை நிலவவேண்டும். தமது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு இருந்தால்தான் அவர்கள் மகத்தான சாதனைகள் பல புரியமுடியும்.
புத்திக்
கூர்மையுடையவர்கள் சிலர், அவர்கள் தமது மிகுந்த அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி முன்னேறுகிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. சொல்லப்போனால், உடல் வலிமை மாத்திரம் அதிகாரத்தைக் கவர அடிப்படை அல்ல; அறிவும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
அறிவு
பரம்பரைச் சொத்தல்ல; அது ஆள்களைப் பொறுத்துள்ளது. ஆனால், அது பலவீனமானவர்களுக்குச் சரியான வசதிகள் அமைத்துத் தருவதால், அவர்களையும் சமுதாயத் தலைவர்களாக, அறிவாளிகளாக ஆக்கிவிடலாம். பெரிய பணக்காரர்களை அவர்களிலும் புதுப் பணக்காரர்களை நாட்டில் அவர்களது விருப்பம் போல் விட்டுவிடக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்கள் ஏழைகளை உறிஞ்சும் அட்டைகளாக மாறிவிடுகிறார்கள். அப்போது பணக்காரன் பணக்காரனாகத்தான் இருப்பான்; ஏழை இன்னும் கூட தாழ்ந்த நிலையில்தான் இருப்பான். இதனால்தான் பணக்காரர்களின் வசதிகளை ஓரளவு குறைக்க வேண்டியுள்ளது.
நம்
நாடு பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது. நாம் சுதந்திரம் பெற்றது அண்மையில்தான். நம் நாடு முன்னேற வேண்டுமாயின் வறுமையும் அறியாமையும் போகவேண்டும். அதற்கான திட்டங்கள் போட்டு நாம் அவற்றைச் செயலாற்ற வேண்டும்.
இவையெல்லாம்
வேண்டியவைதான். ஆனால், சூழ்நிலை அவ்வளவு சாதாரணமாக அமைந்து விடவில்லையே! சமுதாயத்தினிடையே விழிப்புணர்வு இருக்கவேண்டும். இவை அற்றுப்போய் விட்டால் காரியங்கள் நடக்கமுடியாது. மக்களுக்குப் பேச்சுரிமைதான் இருக்கிறதே! ஆகவே, எதையும் துணிந்து சொல்லவேண்டும். இவை நல்லமுறையில், ஒழுங்குடன் இருந்தால், எவ்வளவோ சாதிக்க முடியும்.
இப்போதுள்ள
சூழ்நிலைகளில் அவ்வப்போது சமூக, பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்குத் தேசிய அடிப்படையில் பாடுபடவேண்டும். எல்லாரும் ஒரே தொழிலில் கவனம் செலுத்தக்கூடாது. பல்வேறு துறைகளில், பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும். அதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். வாழ வழி வகுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, வேதாந்தம் பேசுவதில் பயனில்லை.
ஒற்றுமை
பல காரியங்களைச் சாதிக்கும். ஊருக்கு நல்லது செய்வதில் எல்லாரும் ஒருமைப்படவேண்டும். அவரவர் தேவைகளை அவரவர் பூர்த்திசெய்து கொள்ளவேண்டும். முக்கியமாக இது கிராமங்களில் நிலவ வேண்டியது அவசியம். மக்கள் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சுயநலமில்லாமல் ஒற்றுமையுணர்ச்சியோடு மக்களுக்குச் சேவை செய்ய முன்வருபவர்களுடைய வாழ்வு சிறக்கும், செழிக்கும்.
மக்கள்
ஒரு காரியத்தை நன்கு உணர வேண்டும். இப்போது மிகுந்த தேவை ஏற்பட்டுவிட்டது. அதனால் ஆட்சி சரியில்லை என்று சொல்லிவிட முடியாது. வாழ்வில் வசதி ஏற்பட்டால், தேவை வரத்தான் செய்யும். தேவை இல்லாவிட்டால் வாழ்வு செயலற்றுப் போய்விடும். தேவைகள் ஒரு நாட்டில் இல்லையென்றால், அங்கு எப்படி வளர்ச்சி இருக்கமுடியும்? இல்லையென்றே பொருள்.
எத்தனை
கோட்பாடுகள், கொள்கைகள் ஒரு நாட்டில் இருந்தாலும், நாட்டில் அமைதிவேண்டும். கொள்கைகள், வேறுபாடுகள் காரணமாக அமைதி குலையக்கூடாது. இந்தச் சூழ்நிலை குலைந்தால் மக்கள் வாழ்வே குலையும். நம் சக்திகள், தேசச் செல்வங்கள் பாழாய்ப் போகும். அமைதியைக் காக்க இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு. இதற்கெல்லாம் சனநாயக அடிப்படையில்தான் தீர்வு காண வேண்டியிருக்கிறது.
நாட்டில்
மொத்தத்தில் எல்லாரும் நல்லவர்களாக இருந்துவிட முடியாது. அவ்வாறு இருந்தால் சட்டம் கூட வேண்டாமே! இது நடக்கக்கூடிய காரியமா? ஆளும் உணர்ச்சியே கொண்ட பணக்காரர் சிலர் ஏழையரைக் கசக்கிப் பிழிகிறார்களே? அப்படியானால் உழைப்பவன் காலமெல்லாம் பிறர் செய்யும் தர்மத்தை எதிர்பார்த்து ஏங்கிச் சீரழிவதா? இதுதான் தர்மமா?
நமது
நாடு பரந்துபட்டது. இங்குப் பலர், பல இனத்தவர், பல
மொழியினர் இருக்கிறார்கள். நாம் இந்த வேறுபாடுகளைப் பாராட்டக்கூடாது. வேறுபாடு வளர்ந்தால் நாட்டில் பல தகராறுகள் ஏற்படும்.
நாடு முன்னேற வழி இராது. நம்மில் ஒற்றுமையில்லையேல் அனைவருக்கும் தாழ்வுதான். நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்.”
காமராசர்
கவர்ச்சியாகப் பேசத் தெரியாதவர்தான். ஆனால், அவரது கருத்துகள், பேச்சுகள் நமது சிந்தனையைத் தூண்டுவதென்னவோ உண்மைதானே?
காரைக்குடிக்கு அருகில் உள்ள திருப்பத்தூரில் நமக்கு ஒரு நண்பர். அவர் மகள் மருத்துவப் படிப்புத்தான்வேண்டும் என்று அடம்பிடித்தார். நடுத்தரக் குடும்பம். மதிப்பெண் வாங்கியாக வேண்டும்.
மேல்நிலைப்பள்ளிப்
படிப்பிற்காக காரைக்குடியில் தனியாக வீடு எடுத்தார்கள். தினமும் காலை, மாலை டியூஷன் வகுப்புகள். அம்மா பகலில் திருப்பத்தூருக்கு வேலைக்குப் போய்த் திரும்பினார். இரண்டு வருடங்கள் குடும்பமே அலையாய் அலைந்தது.
மேல்நிலைத்
தேர்வில் 1200-க்கு 900 மதிப்பெண்கள். அப்போதும் விடாமல் “நீட் (NEET) போட்டித்
தேர்வை எழுதுகிறேன்” என்றாள்.
மீண்டும்
இரண்டு மாத அலைச்சல். அதிலும் தேறவில்லை. கடைசியாகப் போனதால் கலைக் கல்லூரியிலும் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை. கடைசியில் என்ன
மிச்சம்? அலைந்ததைத் தவிர!
இதே
கதை இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் எல்லாக் குடும்பங்களிலும் நடக்கிறது. எட்டு இலட்சம் மாணவர்களும் மருத்துவராகி, கோடி கோடியாகக் குவிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்மைச்
சுற்றி இருக்கின்ற ஏராளமான நல்ல நல்ல வாய்ப்புகளை ஏன் கைநழுவ விடவேண்டும்? நம்முடைய இன்றைய கல்வித் திறமைக்கும் ஆர்வத்திற்கும் பெற்றோரின் வசதிக்கும் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கக்கூடாதா? குறிப்பாக, நம் பெற்றோரின் பொருளாதார நிலை, உடல் நலம் பற்றியும் இளைஞர்களாகிய நாம் அக்கறை எடுத்துக்கொள்ளக்கூடாதா? அவர்களின் அறிவுரைகளையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கக்கூடாதா?
நம்மைச்
சுற்றி நம் ஒவ்வொருவருக்கும் பிடித்தமாகக் கல்விப் பயணத்தை மேற்கொள்ள மிக அதிக அளவில் வாய்ப்புகள், ஏராளமான கல்வி நிலையங்கள், கல்வி வாய்ப்புகள் உள்ளன.
மேல்நிலைப்பள்ளியிலேயே
தொழில்சார் கல்வி, பாலிடெக்னிக் நிறுவனங்கள்... இவற்றில் சேர்ந்து சிறப்பாகப் படித்துத் தேறினால் 17, 18 வயதிலேயே தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போய்விடலாம். குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே மேலே படித்து முன்னேறலாம்.
இன்று
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஏராளமான கல்வி வாய்ப்புகள் உள்ளன. வணிகவியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் மட்டுமல்ல, இதழியல், தொலைக்காட்சி, உணவுக்கலை போன்ற பல்வேறு படிப்புகளும் இன்று கிடைக்கின்றன. பொறியியல் கல்லூரிகள் இன்று ஏராளம். பாடங்களும் ஏராளம். நன்கொடை வசூலும் பெருமளவு குறைந்துவருகிறது.
மருத்துவம்
மட்டுமல்ல, மருத்துவம் சார்ந்த பல் மருத்துவம், உடலியக்கப் பயிற்சியாளர் (Physio therapist),
செவிலியர் போன்ற வாய்ப்புகளும் இருக்கின்றன.
எதைப்
படிக்கப்போகிறோம் என்பது முக்கியமில்லை; எதைப் படித்தாலும், அதை நன்றாகப் படிக்கிறோமா? அதில் முதல் 20 விழுக்காடு தேர்வுப்
பட்டியலில் இடம்பிடிக்கிறோமோ என்பதுதான் முக்கியம். நாம் விரும்பும் வேலைக்கான தகுதிகளையும், திறமைகளையும் நாம் படித்துக் கொண்டிருக்கும்போதே வளர்த்துக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம். வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளைச் சந்திக்க உரிய நேரத்தில் தயாராகிறோமா என்பதுதான் முக்கியம்.
உயரப்
போகவேண்டும் என்று ஆசைப்படுவோம், கனவு காண்போம். அது அவசியம், தேவைதான். ஆனால், நமது உயர்வுப் பயணத்தை நாம்தான் மேற்கொள்ளவேண்டும். அதற்கான பொறுப்பை நாம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய பெற்றோர் துணை நிற்பார்கள். பணத்தை வைத்து நம்மை அலுங்காமல் குலுங்காமல் வாழ்க்கைக் கோபுரத்தில் நம் பெற்றோர் தூக்கி வைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில்தான் போய்முடியும். எல்லா நிலைகளிலும் தகுதித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் பெருகிக் கொண்டிருக்கும் காலமிது.
படிப்பு,
வேலைவாய்ப்பு, சம்பளம்... இந்த வட்டத்திற்குள் மட்டும்தான் நாம் சுற்றிச் சுற்றி வரவேண்டும் என்பதில்லை. இசை, நடனம், நடிப்பு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஊடகம் சார்ந்த திறமைகள், சமூகப் பணிகள், ஏராளமான விளையாட்டுகள்... படிப்பை விட்டுவிடாமல், நமக்கு விருப்பமான ஒரு கலைத்துறையில் கால்பதிக்கலாம். சுயதொழில் அதிகம் அதிகமான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் தங்கச் சுரங்கம்.
நாங்கள்
கல்லூரியில் படித்தபோது பரமக்குடி நண்பர் ஒருவர் வணிகம் படித்தார். நாங்கள் எல்லாம் வேலைக்குப் போனபோது அவர் மிளகாய் வியாபாரத்தில் இறங்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்றார். இன்று அவர் மகன் மேலாண்மைத் துறையில் படித்துத் தேறி, மிளகாய் சார்ந்த உயர் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்!
குண்டுச்
சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத் தவிர்ப்போம். விரிந்த பார்வையால் உலகை அளப்போம்; நமக்கேற்ற துறையில் ஆழக்கால் பதிப்போம், வெல்வோம்!
இன்றைய
உலகில் ஏராளமான கல்வி வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள்! என்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளமாட்டேன். அகலப் பார்வையோடு என் வாய்ப்புகளை அலசுவேன். எதைப் படித்தாலும் அதை விரும்பிப் படிப்பேன்; அதன்மூலம் வெற்றி பெறுவேன்.
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற முதல் சமூகச் சுற்றுமடலை அறிந்து கொள்வதற்கு ஏதுவான சில செய்திகள், கருத்துகள், புரிதல்கள் இங்கே இடம் பெறுகின்றன.
• ‘Magnifica Humanitas’ என்பது இம்மடலின் தலைப்பு. இத்தலைப்பைத் தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது? ‘மாண்புமிகு மனிதம்’ என்றா? ‘மிக மதிப்புக்குரிய மனிதம்’ என்றா? ‘மாட்சிமிகு மனிதம்’ என்றா? ‘மகத்தான மானுடம்’ என்று மொழிபெயர்ப்பது பொருத்தமாக இருக்கலாம்.
• பொதுவாக, திருத்தந்தையரின் சுற்றுமடல்கள் தலைப்பை வைத்தே தொடங்கும். உதாரணத்திற்குத் திருத்தந்தை 13 -ஆம் லியோ அவர்களின் சுற்றுமடல் Rerum Novarum (புதிய
உலகு - ஆலைத் தொழிலாளர் பிரச்சினை குறித்து) எனத் தொடங்குகிறது. ஆனால், இம்மடல் Magnifica Humanitas என்று
தொடங்கவில்லை. இதன் உபதலைப்பு ‘செயற்கை நுண்ணறிவு’
(AI) யுகத்தில்
மானிடரைப் பாதுகாத்தல் என அமைந்திருக்கிறது. ‘மகத்தான மானுடம்’ என்ற
தலைப்பில் உள்ள மானுடம் அருவமான ஒரு கருத்து; நம் பார்வைக்கு அப்பாற்பட்டது. மானிடரைப் பாதுகாத்தல் என்ற உபதலைப்பில் ‘மானிடர்’ என்பது பொருண்மையானது; நம் பார்வைக்கும் அனுபவத்திற்கும் உட்பட்டது.
• ‘செயற்கை நுண்ணறிவு’ என்பது
என்ன? என்ற விளக்கம் இம்மடலில் இல்லை. மனிதர்களுக்கு இது பற்றிய புரிதல் உண்டு எனத் திருத்தந்தை எண்ணியிருக்கலாம். காதுகள், வாய் இவைகளின் நீட்சி அலைப்பேசி அல்லது கைப்பேசி எனலாம். இதுபோல மனித மூளையின் நீட்சி செயற்கை நுண்ணறிவு எனக் கொள்ளலாம்.
• செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது? எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது? என்பதைக் காட்டிலும், இதன் நேர்மறைப் பயன்பாடு என்ன? அபாயங்கள் என்ன? என்கிறது இம்மடல்.
• மனிதர் பற்றிய பல புரிதல்கள் உள்ளன.
மனிதர் விலங்கினத்தைச் சார்ந்தவர் என விலங்கியலும் உயிரியலும்
கூறுகின்றன. விலங்குகளிலிருந்து மனிதரை வேறுபடுத்துவது அவரது சிந்திக்கும் ஆற்றல். எனவே, அரிஸ்டாட்டில் ‘மனிதர் சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த விலங்கு’ என்றார். நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் பிரான்ஸ்
நாட்டு ரெனேடெகார்ட் ‘சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்’ என்றார்.
• சமூகவியல், சமூக உளவியல் ஆய்வாளர்கள் ‘மனிதர்கள் உறவு சார்ந்தவர்கள், உறவுகளால் உறவுகளுக்காக வாழ்வதே மனித வாழ்வு’ என்கின்றனர்.
• ‘மனிதர் அடிப்படையில்
உழைக்கும் உயிரினம். இயற்கையை மாற்றி, உழைப்பின் மூலம் தன்னையும் சமூகத்தையும் உருவாக்குபவர் மனிதர்’ என்கிறார் கார்ல் மார்க்ஸ்.
• ‘மனிதரை மனிதராக
அடையாளப்படுத்துவது பண்பாடு (culture); எனவே, மனிதர் பண்பாட்டு விலங்கு’ என்கிறது மானுடவியல்.
• கடவுளால் படைக்கப்பட்ட அனைத்திலும் மகத்தானது மானுடம்; ஏனெனில், ‘கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர் மனிதர்’
(தொநூ 1: 26-27) என்கிறது இச்சுற்றுமடல்.
முன்னுரை
மனிதத்தின்
உண்மையான தான்மை சிதைக்கப்படும்போது கிறித்தவர்களாகிய நாம் மனுவுருவான இறைவனை நோக்கி கண்களை உயர்த்துகிறோம். ஏனெனில் வார்த்தை மனுவுருவான மறைபொருளில்தான், மானுடம் என்ற மறைபொருள் தெளிவாகிறது. ஒவ்வொரு தலைமுறையும் மனிதருடைய மாண்பைப் பாதுகாக்கவும், நீதியை வளர்த்தெடுக்கவும், சகோதரத்துவத்தைச் செயல்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறது.
இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் திறந்த மனத்தோடு கூடிய உரையாடலை மானிட வாழ்வின் இன்றியமையாத கூறாகக் கருதுகிறது. அனைத்துச் சகோதர, சகோதரிகளோடு திறந்த மனத்தோடு உரையாடி உண்மையான மானுடத்தைக் கண்டறிய திரு அவை அழைப்பு விடுகிறது என்கிறது இம்மடல்.
திரு
அவை உலகக் காரியங்களில் தலையிட்டு நேரத்தை விரயமாக்க வேண்டாமெனச் சிலர் கூறுகின்றனர். இதற்குத் திருத்தந்தை 13-ஆம் லியோ, ‘நற்செய்தி அறிவிப்பு என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் புறந்தள்ள முடியாது’
என்று பதிலுரைத்தார். இப்பாரம்பரியத்தைத் தொடர்ந்து நானும் தொடக்கம் முதல் இவ்வுலகில் செயல்பட்டு வரும் ஆவியாரின் துணை வேண்டி (நீமொ 8:22-31). இன்றைய எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உலகில் இச்சுற்றுமடலை எழுதுகிறேன் என்கிறார் திருத்தந்தை லியோ.
‘மானிடராகிய நாம் எத்தகைய இலக்கை நோக்கி நகர விழைகிறோம்?’ என்ற கேள்வியை எழுப்பி, திருவிவிலியத்திலிருந்து இரண்டு காட்சிகளை நம்முன் வைக்கிறது இம்மடல். ஒன்று, பாபேல் கோபுர உருவாக்கம் (தொநூ 11:1-9); மற்றொன்று, நெகேமியா எருசலேம் சுவர்களைத் திரும்பக் கட்டுவது (நெகே 2- 6).
பாபேல்
கோபுரம் கடவுள் இல்லாத உலகைக் கட்டமைக்கிறது. பன்மையை ஒதுக்கி, ஒற்றை மையத்தை உருவாக்குகிறது. மனித முகத்தை அழித்து, தோழமை உறவைக் கெடுக்கிறது. தன் மையப்போக்கில் தானும் தன் கணினியும் போதும் என்று மானிட உறவுகளைத் தவிர்க்கிறது. மாறாக, பாபிலோன் நாடு கடத்தலிலிருந்து திரும்பி வந்த நெகேமியா நோன்பிலிருந்து இறைவேண்டல் செய்து, மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார். அழிக்கப்பட்ட சுவர் பகுதிகளை அமைதியில் ஆய்வு செய்கிறார். அனைவரோடும் இணைந்து சிதிலமடைந்த சுவர்களைத் திரும்பக் கட்டி எழுப்புகிறார். இங்கு மனிதர்களின் பன்மைத் தன்மையும் கூட்டு முயற்சியும் சகோரத்துவமும் வெளிப்படுகின்றன.
பாபேல்
கோபுரம், எருசலேம் சுவர்கள் இரு காட்சிகளின் ஒளியில் தூய ஆவியார் இன்றைய நவீன தொழில் நுட்பத்தோடும் தொடரும் எண்ணியல் புரட்சியோடும் நமக்குள்ள உறவை எண்ணிப் பார்க்க அழைக்கிறார். மானிடப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் தீர்வு அல்ல. மானிடர் நவீன தொழில்நுட்பத்தைவிட உயர்ந்தவர்கள். மேலும், தொழில்நுட்பம் நடுநிலையான ஒன்று அல்ல; அதை உருவாக்குவோர், அதற்கு நிதி முதலீடு செய்வோர், அதைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அது பிரதிபலிக்கிறது. எனவே அதற்கு அறநெறி வழிகாட்டுதலும் பொதுப்பொறுப்பும் தேவைப்படுகிறது.
பாபேல்
கோபுர நோய், இலாபத்தையே சிலை வழிபாடாகக் கொண்டது. இதற்காக ஏழைகளைப் பலியாக்குகிறது, பன்மையை மறைக்கிறது. எண்ணியல் மொழியையே பேசுகிறது. மானுடத்தின் மறைபொருளைத் தரவுகளாக மொழிபெயர்க்கிறது. இவ்வாறு மகத்தான மானுடத்தைச் சிதைக்கிறது. கடவுளற்றத் தொழில்நுட்ப எதிர்காலத்தைக் கட்டமைக்கிறது.
நெகேமியாவின்
வழியோ, கூட்டுத் தோழமையில் கடவுளின் நகரைக் கட்டி எழுப்ப அழைக்கிறது. இக்கூட்டு முயற்சி ஒருவருக்கொருவர் செவிமடுத்து, உரையாடி, பொதுநன்மையின் மேல் நீதிப் பண்பாட்டையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதைச் சாத்தியப்படுத்துகிறது. அப்போது திருவெளிப்பாடு சொல்வதுபோல, ‘புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரும்’
(திவெ 21:2) என்பதைக் காண முடியும்.
பொதுநன்மையைக்
கட்டி எழுப்பும் 4 தூண்கள்
1. கடவுளோடு
கொண்டுள்ள மிக உறுதியான அடித்தளம் அமைத்தல். செயற்கை நுண்ணறிவு, கடவுள் தேவையில்லை என்கிறது.
2. மனித
வரையறைகளையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்வது. செயற்கை நுண்ணறிவு, மனித வரையறைகளையும் பலவீனங்களையும் திருத்தப்படவேண்டிய தவறு என்று கருதி, இவைகளைக் கடந்துவிட அழைக்கிறது.
3. ஒவ்வொருவரும்
வளமாக வாழக் கூட்டுப் பொறுப்புணர்வும் துணிச்சலும் தேவை. செயற்கை நுண்ணறிவு, நானும் என் கணினியும் போதும் என்கிறது.
4. அனைவரையும்
ஒருங்கிணைக்கும் நற்செய்தி மொழியைப் பேசுதல். செயற்கை நுண்ணறிவு, மூளை மொழியைப் பயன்படுத்துகிறது. கைகளையும் உடலையும் பயன்படுத்தி உழைப்பவர் மொழிக்கும் மூளையைப் பயன்படுத்துபவர் மொழிக்கும் இடையே ஒருங்கிணைக்கும் பொதுமொழி சாத்தியமில்லை என்றாகிறது.
புறக்கணிப்பட்ட
கற்களான ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோர், சமுதாயத்தின் கடை நிலையினர் சமுதாயத்தின் மூலைக்கல்லாகும் போது, ‘பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் நிலைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்’ (திபா
85:10) உலகு உருவாகும்.