news
ஞாயிறு மறையுரை
சனவரி 18, 2026 ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு - எசா 49:3,5-6; 1கொரி 1:1-3; யோவா 1:29-34 (ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள்!)

இந்தச் சமூகத்தில் ஒருவர், பொதுவாக அவரின் அடையாளங்கள், பண்பு, குடும்பப் பின்னணி இவற்றின் மூலமாக அறிமுகமாகிறார். சில வேளைகளில் ஒரு மனிதரை நாம் அறிமுகப்படுத்தும்போது அவருடைய அதிகாரம், பதவி, வலிமை, சாதனை இவற்றைக் கூறி அறிமுகப்படுத்துகிறோம். ஆனால், கடவுள் தம்மை மனிதகுலத்திற்கு வெளிப்படுத்திய விதம் முற்றிலும் மாறுபட்டது. இயேசுவைத் திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்தும்போது, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்று அறிமுகப்படுத்துகிறார். இங்கே இயேசு ஓர் அரசராக அல்ல; ஒரு போர்வீரராக அல்ல; மாறாக, பலியிடப்படும் செம்மறியாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். இதுவே, கிறித்தவ நம்பிக்கையின் மைய உண்மை.

கடந்த இரு வாரங்களாக, ஆண்டவருடைய திருக்காட்சி மற்றும் ஆண்டவருடைய திருமுழுக்கு ஆகிய இரு நிகழ்வுகள் வழியே நமக்கு அறிமுகமான இயேசு, இன்றுஉலகத்தின் பாவத்தைப் போக்கும் செம்மறியாகஅறிமுகமாகிறார். இந்த அறிமுகம் யோவான் நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ளது.

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்எனச் சுட்டிக்காட்டுகிறார்.  ‘ஆட்டுக்குட்டிஎன்ற சொல்லில் பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. இவை மூன்றும் இயேசுவுக்கு மிகவும் பொருந்திப்போவதை அறியமுடிகிறது. திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டியஇதோ! கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்ற கூற்று மாசுமரு வற்றதாய் மீட்புக்காக இரத்தம் சிந்திய (விப 12:5) ஆட்டினை நினைவூட்டுகிறதுஆட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி என்பது யோவான் நற் செய்தியில் ஒரு முக்கியமான அடையாளம். ‘கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்பதைப் பலவிதமாகப் புரிந்துகொள்ளலாம். இச்சொற்றொடருக்கு இருவேறு பொருள்கள் உள்ளன: 1. ஆட்டுக்குட்டி, 2. இறைவனின் ஊழியன்.

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டிஎன்பதை இஸ்ரயேல் மக்களின் மீட்புக்குக் காரணமாய் இருந்த மாசுமருவற்றதாக, மீட்புக்காக இரத்தம் சிந்திய பாஸ்கா ஆடாக (விப 12:5,46; யோவா 19:36; 1பேது 1:8,18,19; திவெ 5:9), மனிதகுலத்தின் பாவங்களைச் சுமந்து நகருக்குப் புறம்பே துரத்தப்பட்டுக் கொல்லப்படும் (லேவி 16:20) பாவப் பரிகார ஆடாக (தொநூ 9:6; எபி 9:6), மக்கபேயர் காலத்திலிருந்தே கொம்புடன் தோன்றும் ஆடு வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது போன்று, இயேசுவும்இதோ இறைவனின் வெற்றிஎனும் பொருளில் திருவெளிப்பாட்டு ஆடாக (திவெ 7:17; 17:14) அல்லது ஒவ்வொரு நாளும் திருப்பீடத்தில் பலியிடப்படும் ஆட்டுக்குட்டியாகப் புரிந்துகொள்ளலாம்

இதோ! இறைவனின் ஆட்டுக்குட்டிஎன்பதைஇதோ! இறைவனின் ஊழியன்என்றும் சில திருவிவிலிய அறிஞர்கள் மொழிபெயர்க்கின்றனர். இறை ஊழியர் கொடுமையாக நடத்தப்பட்டார்; இழுத்துச் செல்லப்பட்டார்; கைது செய்யப்பட்டார்; செம்மறிபோல் வாய் திறக்கவில்லை (எசா 53:7). இறை ஊழியர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நம் குற்றங்களுக்காகக் காயப்பட்டார், தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் (எசா 53:4,5) எனும் கூற்றுகள் இயேசுவுக்கு முற்றிலும் பொருந்திப் போகிறது. எனவேதான், திருமுழுக்கு யோவான் இயேசுவைஉலகத்தின் பாவங்களைப் போக்கும் செம்மறிஎன அறிமுகப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகம் உலகிற்கு மீட்பைக் கொண்டுவந்த கடவுளின் ஊழியர் (கடவுளின் ஆட்டுக்குட்டி) இயேசுவே என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பாடலாக அமைகிறது. இவ்வாசகப் பகுதி இரண்டாவதுஆண்டவரின் ஊழியர் பாடல்என அறியப்படுகிறது. இப்பாடல்இஸ்ரயேலைஆண்டவரின் ஊழியராகக் காட்டுகிறது (49:3). இந்த இஸ்ரயேல் என்போர் ஆண்டவர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்த இஸ்ரயேலரைக் குறிக்கலாம். இருப்பினும், இப்பாடலின் கருத்துகள் இயேசுவோடு ஒன்றிப் போவதைப் பார்க்கமுடிகிறது. ‘இயேசுவே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி (லூக் 2:32); அவர் தம்மையே வெறுமையாக்கி, கடவுளால் மாட்சிப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதலுள்ள ஊழியர் (பிலி 2:8). இவ்வாறு இயேசு ஓர் உண்மையான இறை ஊழியராக வெளிப்படுகிறார். சிதறிக் கிடக்கும் (எசா 49:5) இஸ்ரயேல் மக்கள்மீது இரக்கம் கொண்டு ஆண்டவர் அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பார்; அவர்கள்மீது கொண்டுள்ள அன்பை அவர் சிதறுண்டு கிடக்கும் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும், எதிரிகளை வென்று அவர்களுக்கு விடுதலை வழங்குவதிலும், அவர்களுக்குப் புதுவாழ்வு அளிப்பதிலும் வெளிப்படுத்துவார். அவரே முன்னின்று அதைச் செய்வார் என்ற உண்மையை இது கூறுகிறது.

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும்இயேசுவே இறை ஊழியர்-கடவுளின் ஆட்டுக்குட்டிஎன அறிவிக்கும் வேளையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடவுளின் ஆட்டுக்குட்டியாம் இயேசுவைஅனைவருக்கும் ஆண்டவர்என உறுதிப்பட அறிக்கையிடுகின்றார். மேலும், இயேசுவின் திருத்தூதனாகத் தன்னை அடையாளப்படுத்தும் பவுல், அவருடைய பதிலாளாக இருந்து அவரை அறிக்கையிடுவதும் சான்று பகர்வதும் ஒவ்வோர் ஊழியருடைய கடமையாக இருக்கிறது எனப் பணிக்கிறார்.

உரோமை மதங்களும் மற்றும் பல உரோமைய கடவுள்களின் வழிபாடுகளும் கொரிந்தில் காணப்பட்ட வேளையில், கொரிந்து நகரம்கடவுளின் திரு அவை (1கொரி 1:1) என்கிறார் பவுல். கொரிந்து திரு அவை கிறிஸ்துவில் புனிதமாக்கப்பட்டுள்ளது என்று வரைவிலக்கணம் கொடுக்கிறார். எனவே, திரு அவையைப் புனிதமாக்குவது எவருடைய மனித ஆற்றலாலுமல்ல; மாறாக, இயேசுவின் ஆற்றலால் என்பது இங்கே புலப்படுகிறது.

இறுதியாக, ஆட்டுக்குட்டியாக அறிமுகமாகும் கடவுள் தாழ்ச்சியின், தியாகத்தின், அன்பின் ஆட்டுக்குட்டியாகச் சான்றுபகர்ந்து வாழ நம்மை அழைக்கிறார். தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று கூறுவதற்கு வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி மட்டும் போதாது; தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றிய தெளிவும் தேவை. இத்தகைய தெளிவும் நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் போலியான தாழ்ச்சி தெரியும். தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை இயேசுவின் பக்கம் திருப்பி, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என்றார் திருமுழுக்கு யோவான்.

ஆட்டுக்குட்டி பலவீனத்தின் அடையாளம் போலத் தோன்றலாம்; ஆனால், அதில் மறைந்திருப்பது அன்பின் மிகப்பெரிய வலிமை. இயேசு எதிர்த்துப் போராடவில்லை, பழிவாங்கவில்லை, குரல் எழுப்பி தம்மை நிரூபிக்கவில்லை. மாறாக, அமைதியாகச் சிலுவையை ஏற்றுக்கொண்டார். நம் வாழ்க்கையில் நாம் எத்தனை முறை எதிர்ப்பதையே வலிமை என்று எண்ணுகிறோம்? பழிவாங்குவதையே நீதியாகக் கருதுகிறோம்? ஆட்டுக்குட்டியாக வந்த கடவுள் நமக்கு உணர்த்தும் முதல் பாடம்பணிவே உண்மையான வலிமைஎன்பதுதான்.

இரண்டாவதாக, இயேசுவைச் சுட்டிக்காட்டும் திருமுழுக்கு யோவான்இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர் (யோவா 1:29-30) எனக் குறிப்பிடுகிறார். அதாவது, பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரையே கொடுக்கும் செம்மறி இயேசுவே (1பேது 1:18,19). ஆட்டுக்குட்டியாம் இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்பதாலே அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் ஆகிறார். அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார் (எசா 53:7). ஆகவே, நாம் எந்த அளவிற்குப் பிறருக்காகத் தியாகம் செய்கிறோம்? நம் நேரம், நம் வசதி, நம் ஆறுதல் பிறரின் வாழ்க்கைக்காக உடைக்கப்படுகிறதா? ஆட்டுக்குட்டியாக நமக்கு அறிமுகமாகும் கடவுள் நமக்கு உணர்த்தும் மற்றொரு பாடம் தியாகம் என்பது தனக்காக மட்டும் வாழ்வதில் அல்ல; பிறருக்காக வாழ்வதிலும் அடங்கியுள்ளது என்பதுதான்.

மூன்றாவதாக, ஆட்டுக்குட்டியாம் இயேசு நமக்கு அன்பின் முகமாக அறிமுகமாகிறார். பிரச்சினைகளால், பல்வேறு சிக்கல்களால் கசப்புற்று வாழ்பவர்களுக்கு, “உங்களை நான் மறக்கவில்லை, உங்களை என் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளேன், உங்களை நான் அன்பு செய்கின்றேன் (எசா 49:15-16) என்று கூறி, அன்பின் அடையாளமாக அவர் இருக்கிறார்.

அன்பிலேதான் தாழ்ச்சியும் தியாகமும் இணைந்திருக்கிறது. ஆகவே, நாம் சுமந்து கொண்டிருக்கும் கோபம், வெறுப்பு, பழைய காயங்கள் ஆகியவற்றைக் களைந்து ஆட்டுக்குட்டியாக நம் இதயத்தில் வந்துள்ள இயேசுவுக்கு அன்பின் சாட்சிகளாக, தியாகத்தின் உருவாக, பிறர் வாழ்வில் ஓர் உந்துசக்தியாக மாறுவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 11, 2026, பொதுக்காலத்தின் முதல் வாரம் (ஆண்டவருடைய திருமுழுக்கு) - எசா 42:1-4,6-7; திப 10:34-38; மத் 3:13-17 (நாம் அனைவரும் கடவுளின் அன்புக்குரிய பிள்ளைகள்!)

நாம் வாழும் சமூகத்தில் அநீதிகள் என்பது அரிதான நிகழ்வுகளல்ல; அவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. பசியால் வாடும் மனிதரின் அலட்சியம், அதிகாரத்தின் பெயரால் நிகழும் அத்துமீறல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஏழைகளின் உரிமைகள் மறுக்கப்படுதல், உண்மை பேசுபவர்களின் குரல் அடக்கப்படுதல், புலம்பெயர்ந்தோர் தாக்கப்படுதல், போதை கலாச்சாரச் சீரழிவு... என இவை அனைத்தும் நம்மைச் சுற்றி தினந்தோறும் நடைபெறும் அநீதியான செயல்களின் வெளிப்பாடுகளாகும். பல நேரங்களில் இவற்றைக் காண்கிறோம்; ஆனால், பழகிப்போன மனநிலையால், பயத்தால் அல்லது பொறுப்பற்ற தன்மையால் அமைதியாகக் கடந்து செல்கிறோம்.

அநீதி நிகழும் இடங்களில் மட்டுமல்ல, அதைக் கண்டும் மௌனம் காக்கும் நம்மிடமும் அதன் வேர்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. ‘இது நம்முடைய பிரச்சினை அல்லஎன்ற மனப்பாங்கு சமூகத்தின் மனிதநேயத்தை மெல்ல மெல்ல நீர்த்துப் போகச் செய்கிறது. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காத ஒவ்வொரு தருணமும், அது மேலும் வலுப்பெற நாமே வழிவகுக்கிறோம்.

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? பொதுவாக, வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும் - செல்வர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம்வேண்டும்; ஆட்சியாளர்கள் மாற வேண்டும்; இது மாறவேண்டும்; அது மாறவேண்டும்... என்ற பட்டியலைத் தயாரித்து, நம்மில் பலர் காத்திருக்கிறோம். அதேவேளையில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றங்கள் தேவை என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெறும் வெளி மாற்றங்களால் எவ்விதப் பயனும் நிகழப்போவதில்லை.

மகாத்மா காந்தியின் ஒரு வாசகம் இவ்வாறு அமைகிறது: “நீங்கள் இந்த உலகத்தில் என்ன மாற்றத்தைக் காண விரும்புகிறீர்களோ, அதைப்போல நீங்களும் மாறியிருக்கவேண்டும் (Be the change that you wish to see in the world). அப்படி மாறாவிட்டால் தார்மிகமாக அவர்கள் பேசத் தகுதியற்றவர்களாகிறார்கள். ‘இந்த உலகம் எப்படி இருக்கவேண்டும்? என்னவெல்லாம் மாறவேண்டும்?’ என்று அதிகம் பேர் பேசுகிறார்கள். ஆனால், அந்த மாற்றத்தை அவர்கள் உள்வாங்கி மாறியிருக்கிறார்களா என்றால் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.

இன்று நாம் அன்றாடம் இவ்வுலகில் காணும் அநீதியான செயல்கள் அனைத்துமே, மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தாம். உள்ளத்தில் உருவாகும் இந்தக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு மனமாற்றம் அவசியம். மனமாற்றத்தின் வழியே கலாச்சார மாற்றத்தையும், அவற்றின் விளைவாக இன்னும் பல உன்னத மாற்றங்களையும் கொணர்வதே தம் பணி, தம் வாழ்வு என்பதைக் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்தார் இயேசு. மாற்றங்கள் மேலிருந்து அல்ல; மாறாக, கீழிருந்து அதாவது, மக்களிடமிருந்து தொடங்கவேண்டும் என்பதைத் தெளிவாக்க தம்மையே மக்களில் ஒருவராகக் கரைத்துக்கொண்டார். தம் பணிவாழ்வின் முதல் அடியை யோர்தானில் எடுத்துவைத்தார். அதுதான் அவர் பெற்ற திருமுழுக்கு.

இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். பொதுக்காலத்தின் முதல் வாரத்தைத் தொடங்குகின்றோம். மனிதகுலத்தை மீட்க இறைவனுக்கு எத்தனையோ பல வழிகள் இருந்திருக்கும். வானிலிருந்த வண்ணம் அவர் மக்களைக் காக்க வழியிருந்தும், இயேசு நம்மில் ஒருவராகத் தம்மையே இணைத்துக்கொண்டார். பாவிகளோடு இருக்க விரும்பி அவர்களோடு வரிசையில் நின்ற இயேசுவின் செயல் மேலிருந்துகொண்டே இயேசு நம்மை மீட்க விரும்பவில்லை; மாறாக, பாவங்களைத் தம்மீது சுமந்துகொண்டு நம்மை மீட்க கீழிறங்கி வந்தவர் என்பதை இயேசுவின் திருமுழுக்கு நமக்குக் காட்டுகிறது. இயேசு தண்ணீருக்குள் இறங்குமுன்னரே மக்கள் கூட்டத்திற்குள் இறங்கியது-பாவம் தவிர மற்றனைத்திலும் அவர் மனித உருவெடுத்திருந்தார் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

பாவிகளோடு தம் அருகாமையை, இரக்கத்தை வெளிப்படுத்திய இயேசுவின்மீது தூய ஆவியார் இறங்கி வந்ததும் வானத்திலிருந்து, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; அவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மத் 3:17) என்று தந்தையின் குரலொலியால் அவர் கடவுளின் மகனாக உலகிற்கு அறிவிக்கப்படுகிறார். இறைத்தந்தை தமது முகம் மற்றும் குரல் வழியாகத் தம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துகின்றார். அவரது முகம் இணக்கமான உறவையும், குரல் மனித நேயத்தையும் வெளிப்படுத்துகின்றன. இறைத்தந்தையின் முகத்தையும் குரலையும் இன்றைய விழாவில் நாம் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். அவரது குரலுக்குச் செவிசாய்த்து, தந்தையின் கருணையின் முகத்தை இயேசுவிலும் பிறரிலும் கண்டுகொண்டு மக்களின் நல்வாழ்விற்காகப் பணியாற்றிய பலநூறு நல்ல உள்ளங்களுள் ஒருவராக அறியப்படுபவர் புனித தமியான்.

1850-ஆம் ஆண்டு, ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அத்தீவில் ஒரு சிற்றாலயத்தை நிறுவுவதற்கென இளம் அருள்பணியாளர் தமியான் ஆயரால் அனுப்பப்பட்டார். தன் 33-வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம் அருள்பணியாளர் தமியான், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு அந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார்.

ஆயரின் அனுமதியுடன் அத்தீவில் தங்கிய அருள்பணியாளர் தமியான் விரைவில் அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ஒருசில மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர் திருப்பலி நிறைவேற்றும்போது, ‘தொழுநோயாளிகளாகிய நாம்என்று அவர்களோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார். ஐந்தாண்டுகள் தொழுநோயாளியாக அவர்கள் நடுவே உழைத்துவந்த அவர், 1889, ஏப்ரல் 15-ஆம் தேதி தன் 49-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

தம்மை முன்னிலைப்படுத்தாமல், முப்பது ஆண்டுகள் சாதாரண ஒரு வாழ்வை வாழ்ந்த இயேசு, மூன்று ஆண்டுகளே பொதுவாழ்வில் ஈடுபட்டார். இயேசுவின் பொதுவாழ்வு மற்றும் பணியின் தொடக்கமாக அமைந்திருந்தது அவரது திருமுழுக்கு. இயேசு தம் திருமுழுக்கை யோர்தான் நதியில் தனியே பெறவில்லை; மக்களோடு மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவு மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்வித்தன. இயேசு யோர்தான் நதியில் மக்களோடு மக்களாய் தம்மைக் கரைத்துக் கொண்டதற்கு ஒரு முக்கியக் காரணம், தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை. இயேசுவும் தம் மைந்தனுக்குரிய தம் பணியைச் செய்யும் பணியாளருக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் சொற்களாக ஒலிக்கின்றன. “இதோ, என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது...” (எசா 42:1-4).

இயேசுவின் திருமுழுக்கு பல்வேறு சிந்தனைகளை இன்று நமக்கு விட்டுச்செல்கின்றன. முதலில், நாம் இயேசுவோடு இணைந்து பணியாற்ற வேண்டியதைக் குறித்து நிற்கிறது. சமூகத்தில் நிலவி வரும் அநீதி அமைப்புகளின் தொடர் செயல்பாடுகளுக்குத் தாமும் பொறுப்பேற்கவேண்டும் என்பதன் வெளிப்பாடாக இயேசு திருமுழுக்குப் பெறுகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற உழைப்பதும், நமக்கான சமூகப் பொறுப்புகளை ஏற்பதும் தேவையானது என்பதே இயேசுவின் திருமுழுக்கு நமக்கு உணர்த்தும் பாடம். இரண்டாவதாக, இயேசுவின் திருமுழுக்கு, நம் திருமுழுக்கின் வாக்குறுதிகள் குறித்த உறுதிப்பாட்டைப் புதுப்பிக்க உதவுகிறது. இயேசுவைப் போல நாம் ஒருவர் மற்றவரது சுமைகளைப் பகிரவேண்டும் எனவும், கருணையுடன் ஒருவர் மற்றவருக்கு உதவவேண்டும் எனவும் இயேசுவின் சீடர்களாகிய நாமும் உடன் வாழ்பவர்கள், திரு அவை மற்றும் சமூகத்துடன் நீதியைக் கடைப்பிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நிறைவாக, மக்களை நல்லவர்-கெட்டவர் என்று பிரித்து கடுமையாகத் தீர்ப்பளித்துக் கண்டனம் செய்பவர்களைப்போல் அல்லாமல், உடன் வாழ்பவர்களின் காயங்கள் மற்றும் பலவீனங்களைக் கருணையுடன் பகிர்ந்துகொள்பவர்களாக, நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை உணர்ந்து எல்லாரும் அவர் அன்பில் வாழ முயற்சி செய்வோம். இறைத்திட்டத்தை மகனுக்குரிய கீழ்ப்படிதலுடனும் எளிமையுடனும் தாழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் காட்டிய இயேசுவைப் போன்று சமூக மாற்றத்திற்காக உழைக்க முன்வருவோம்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 04, 2026, (ஆண்டவருடைய திருக்காட்சி) எசா 60:1-6; எபே 3:2-3,5-6; மத் 2:1-12 - கடவுள் நம் அனைவருக்குமான தந்தை!

இன்று நாம் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழாவைமூன்று அரசர்கள் திருநாள்என்றும், ‘மூன்று ஞானிகள் திருநாள்என்றும் நாம் அழைக்கின்றோம். கீழ்த்திசை ஞானிகள் மெசியாவைத் தேடிவந்து வணங்கிய நாள் இந்த நாள். ‘இறைவனின் வெளிப்பாடு ஒரு சிலருக்கானதல்ல; இனம், சமயம், மொழி, பண்பாடு என அனைத்து எல்லைகளையும் கடந்து, மெசியா அனைத்துலக மக்களுக்குமானவர்என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இது. இவ்விழாவைக் குறித்துத் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடும்போது, “திருக்காட்சிப் பெருவிழா என்பது கிறிஸ்துவின் பிறப்பு என்ற மறையுண்மையை உலகறியச் செய்த ஒரு நிகழ்வுஎன்றும், “கிறிஸ்து கொணர்ந்த மீட்பு, எவ்வித எல்லையுமின்றி அனைவருக்குமானதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு, கிறித்தவர்களின் கடவுள் மட்டுமல்லர்; அவர் அனைவருக்குமான கடவுள். அவர் அனைவரையும் அன்பு செய்யும் கடவுள். அவர் அனைவரையும் மீட்க வந்த மெசியா. அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டுப் பிரித்து, அதனால் மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை. கடவுள் எல்லாருக்குமான தந்தை என்பதே இன்றைய விழா நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடம். இன்றைய வாசகங்கள் அனைத்திலும் இதே பாடம் இழையோடுவதைக் காணமுடிகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், ‘நாடு கடத்தப்பட்டு நாலாப்பக்கமும் சிதறிக் கிடக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒன்றுகூட்டப்படுவர்; அனைவரும் எருசலேமுக்குக் கூட்டி வரப்படுவர்; அவர்கள் இழந்த மேன்மையை மீண்டும் அடைவர்; ஆண்டவரே முன்னின்று இதைச் செய்வார்என்ற நம்பிக்கை செய்தியைத் தருகிறார் இறைவாக்கினர் எசாயா. மேலும், ‘ஆண்டவருடைய மாட்சி எருசலேம் மீது ஒளிரும்போது எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் எருசலேமை நோக்கி வருவர்; எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவர்; எருசலேம் செல்வங்களால் நிறையும்என்கிறார். இவ்வாசகத்தில்பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர் (எசா 60:3) எனும் கூற்று, கடவுள் எல்லாருக்குமானவர் என்பதை நேரடியாகவே குறிப்பிடுகின்றது.

இரண்டாம் வாசகத்தில், பவுல் எபேசு திரு அவைக்கு அறிவித்த மறைபொருள், நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளராகவும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள் (எபே 3:6). இந்த ஒன்றிணைப்பை உடன் உரிமையாளர்கள், ஒரே உடலின் உறுப்பினர்கள், உடன் பங்காளிகள் என்ற வார்த்தைகளில் விளக்கி, பிற இனத்தாரும் - யூதரும் இனி வெவ்வேறு நாட்டினர், சமயத்தினர், இனத்தினர் அல்லர்; இரு இனங்களும் வேறுபாடற்ற ஒரே சமூகமாகக் கிறிஸ்து வழியாக மாறிவிட்டது எனப் பிற இனத்தாருக்குக் கிடைத்த நலன்களை எடுத்துரைக்கின்றார் பவுல்.

நற்செய்தியில், “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கின்றோம் (மத் 2:1-2) என்று ஞானிகள் எருசலேமுக்குப் பயணம் மேற்கொண்டதை வாசிக்கிறோம். யார் இந்த ஞானிகள்? இவர்கள் எத்தனை பேர்? இவர்களின் தொழில் என்ன? எங்கிருந்து வந்தவர்கள்? ஏன் வந்தார்கள்? போன்ற கேள்விகளுக்குச் சரியான திருவிவிலிய ஆதாரம் இல்லை. அவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள் பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மூவராக இருக்கக்கூடும் என்றும், மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்பதே அவர்கள் பெயர்கள் என்றும் பாரம்பரிய மரபு கூறுகின்றது. மேலும், ஞானிகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லானமாஜாய் (Magi) என்பது பாரசீகர்களைக் குறிக்கலாம் என்றும், அவர்கள் விண் ஆய்வாளர்களாக இருப்பதால் பாபிலோனியர்களாக இருக்கும் என்றும் இயேசுவுக்குக் கொண்டு வந்த பரிசுப்பொருள்களின் அடிப்படையில் அவர்கள் அராபிய அல்லது சிரியாவின் பாலைநிலங்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மேலும், “கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள் (மத் 2:1) என்பது பிற இனத்தாரைக் குறிப்பதாகவே கொள்ளலாம். அதாவது, யூதர்களுக்குக் கிழக்குப் பகுதி என்பது யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதியைக் குறிக்கிறது. இப்பகுதி எப்போதுமே பிற இனத்தார் பகுதியையே குறித்து வந்தது. எனவே, ஞானிகள் என்போர் பிற இனத்தார், தெரிந்துகொள்ளப்படாதவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களுக்கும் இயேசுவின் திருக்காட்சி அருளப்படுகின்றது என்பது யூதர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி.

வானதூதர் வழியாகவும், எரியும் புதரிலும் தங்களுடன் பேசி, உறவாடி, உடன்படிக்கை ஏற்படுத்திய கடவுளைத் தங்களுடைய உடமையாக்க முயன்றனர் யூதர்கள். அனைவரும் கடவுளுடைய பிள்ளைகள் என்பது அவர்களுக்குக் கசப்பாகவே இருந்தது. அவர்கள் பிற இனத்தாரைப் புறக்கணித்தனர்; எரிநரகத்திற்குரியவர்கள் எனக் கருதினர். “நீங்களே எல்லா மக்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள் (விப 19:5), “நீங்கள் மக்களாய் இருப்பீர்கள், நான் உங்கள் கடவுளாய் இருப்பேன் (எரே 30:22) போன்ற வாக்குறுதிகளைத் தங்களுக்கே உரிய தனியுடைமையாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், உன்னதக் கடவுளின் மகனாக உதித்தவரின் பிறப்பைத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தினர் தெரிந்துகொள்வதற்கு முன்பே கீழ்த்திசை ஞானிகள் அறிந்துகொண்டதுதான் கடவுளின் திருவுளம்.

இம்மானுவேலாகப் பிறந்தவர் (மத் 1:23) யூத இனத்திற்கான தனியுடைமை அல்ல; எல்லா மக்களுக்கும் உரிய பொதுவுடைமை. மீட்பு யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி அழைப்பு அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்று போதித்தார் பேதுரு (திப 10). இதைப் புரிந்துகொண்ட பவுல், ‘பிற இனத்தாரும் இயேசுவின் உடலின் உறுப்பினராகிறார்கள்என்று கூறினார் (எபே 3:6). திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய மூவேளைச் செபவுரையில், “கிறிஸ்துவின் ஒளியை நாம் வரவேற்பதன் அடையாளமாக, அவரை நமது தனிப்பட்ட உரிமைச் சொத்தாகக் கருதாமல், அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் கடமையை நாம் பெற்றுள்ளோம்எனக் கூறியுள்ளார் (06.01.2021).

இன்றைய மதவாத அரசியல் சூழலில், கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்; அவர் அனைவருக்குமான தந்தை என்பது கருத்தியலாகவே நிற்கின்றது. கடவுள் எல்லாருக்கும் சொந்தம் என்று எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தானே மதங்களாலும் மார்க்கங்களாலும் மனிதர்கள் பிரிந்தே இருக்கின்றனர்! கடவுளை இதயத்தால் வழிபடும் மனிதர்கள் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மதவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இச்செயல் கடவுளின் இயல்புக்கே முரணானது. அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதே இறைமை. தம்மைத் தேடும் அனைவருக்குமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். அன்பும் அமைதியும் கடவுளுக்கே உரித்தானவை.

கீழ்த்திசை ஞானிகளின் தேடல் நமக்குத் தரும் அழுத்தமான அழைப்பு சமயம், சாதி, மொழி, இனம் - இவற்றால் எழுகின்ற பிணக்குகளைக் களைந்து ஒருவர் மற்றவரைச் சகோதர மனப்பான்மையோடு நடத்தவேண்டும் என்பதுதான். இதுதான் தந்தைக்குரிய விருப்பமாகவும் இருக்கமுடியும். ஆனால், ஏன் மானுட மனம் இன்னும் ஒன்றாகச் சங்கமிக்கவில்லை? மனிதகுலத்தோடும் மனிதகுல வரலாற்றோடும் நெருங்கி இணைக்கப்பெற்றுள்ள திரு அவையிலும் பிளவுகள் இல்லாமல் இல்லை. வெறுப்புகளுக்கும் பிரிவினைகளுக்கும் கிறித்தவர்களாகிய நாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், மூன்று நிலைகளில் நம் மனத்தை நிலைநிறுத்த வேண்டும். அவை 1. சமநிலை, 2. ஏற்புநிலை, 3. துணிவுநிலை.

இறைவனின் வெளிப்பாட்டில் அனைவரும் சமம் என்பதற்கு மாட்டுத்தொழுவம் ஒரு சான்று. சமநிலையில் நுண்மதி கொண்ட ஞானிகளும், கடைநிலையில் வாழும் இடையர்களும் பிறந்த பாலன் இயேசுவைச் சமநிலையில் காண்கின்றனர். நீண்ட மற்றும் கடினமான பயணத்திற்குப் பிறகு, குழந்தை இயேசுவைக் கண்ட ஞானிகள், அக்குழந்தை தாங்கள் கற்பனை செய்த விதத்தில் அல்ல; மாறாக, அவர் எளியவராகவும் ஏழையாகவும் இருக்கிறார் என்ற நிலையிலும் அவரை மீட்பராக ஏற்றுக்கொள்கின்றனர். கடவுளை ஏற்றதால் உள்ளும் புறமும் வாழ்வில் மாற்றம் பெற்ற அவர்கள்கடவுள் எல்லாருக்குமான தந்தைஎனும் பேருண்மையைத் துணிவுடன் அறிவிக்கத் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர்.

எனவே, இன்று வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பல நேரங்களில் மறைந்திருக்கும் ஆண்டவரை வணங்குவதற்கு இந்த ஞானிகள் நம்மைத் தூண்டுகின்றனர். கடவுளின் பெயரால் அரசியல்வாதிகளும் அடிப்படைவாதிகளும் உருவாக்கும் பிரிவுகளையும் பிளவுகளையும் வேரோடு களைய இவ்விழா நம்மை அழைக்கிறது. இறுதியாக, நாம் புதிய பாதையில் பயணிக்கும்போது எழும் தடைகளையும் தளர்வுகளையும் வீழ்த்தி, எல்லாருக்கும் எல்லாமும் என்றிருக்கும் இறைவனைத் துணிவுடன் உலகுக்கு அறிவிக்க நாம் புறப்படவேண்டும்.

news
ஞாயிறு மறையுரை
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6:22-27; கலா 4:4-7; லூக் 2:16-21 - தரணியின் தன்னிகரில்லா உறவு அன்னை மரியா!

2025-ஆம் ஆண்டு நன்றியோடு விடைபெறுகிறது. 2026-ஆம் ஆண்டு கனவுகளோடும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் புதிதாய்ப் பிறக்கின்றது. இறைவனுக்கு நன்றிகூறி இப்புதிய ஆண்டை வரவேற்போம்.

ஆண்டின் முதல் நாள் நமக்கு மூன்று முக்கிய விழாக்களை நினைவூட்டுகின்றன. முதலில், அன்னையின் மகிமையை எண்ணிப்பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய் என்று அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம். இரண்டாவதாக, இன்று ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளையும்; மூன்றாவதாக, உலக அமைதி நாளையும்  நினைவு கூர்கிறோம்.

ஆண்டின் முதல் நாளான இன்று பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசிபெறுவதுபோல, நாம் நம் விண்ணக அன்னையிடம் ஆசிபெறுவோம். அன்னை மரியா மீட்பு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் உன்னதமான உயிர். மனித மீட்பில் அவரது பங்களிப்பு தலைமுறைதோறும் (லூக் 1:48) நினைவுகூரப்படுகிறது. அன்னை மரியா இறைமகன் இயேசுவின் தாயாக இருப்பதால் அவர் நமக்கும் தாயாகிறார். அவரே நம்பிக்கையின் தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவிபுரிய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு இறைவனின் ஆசிரையும் அருளையும் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம்பற்றித் தொடங்குவோம்.

அன்னை மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள மதிப்பிற்குரிய தலைப்பு அல்லது பட்டம் ‘மரியா-கடவுளின் தாய்.’ அன்னை மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள ‘மரியா கடவுளின் தாய், ‘மரியா என்றும் கன்னி, ‘மரியா அமல உற்பவி, ‘மரியாவின் விண்ணேற்பு ஆகிய நான்கு மறைக்கோட்பாடுகளிலும் (Dogma) மிகவும் தொன்மையானது ‘மரியா கடவுளின் தாய் என்ற உயரிய பட்டம்தான். அன்னை மரியாவைக் ‘கடவுளின் தாய் என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா? அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார். அன்னை மரியாவை ‘இறைவனின் தாய் என நாம் அழைக்கும்போது, கடவுள் மனிதகுலத்திற்கு அருகில் உள்ளார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. காலங்களைக் கணித்து, யுகங்களை நொடித்து அவரவர் வினையின் விளைவை அறுக்கச்செய்யும் இறைவன் நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல் உருவெடுத்தார். ‘கடவுள் மனிதரானார் (யோவா 1:14), ‘கடவுள் நம்மோடு (மத் 1:22-23), ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர்  அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (பிலி 2:6,7) என்பதில்தான் அவரது பேரன்பு வெளிப்பட்டது. எனவே, ‘மரியா கடவுளின் தாய் என்னும் கோட்பாடு ‘இயேசு கிறிஸ்துதாம் உண்மையான கடவுள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலேயே ‘மரியா கடவுளின் தாய் என ஏற்றுக்கொள்வதில் திரு அவைக்குள் கருத்துமோதல்களும் பிரிவினைகளும் ஏற்பட்டன. இயேசு கடவுளா? மனிதனா? அவரில் மனித- இறைத்தன்மைகள் இருந்தனவா? போன்ற மோதல்கள் தொடர்ந்தன. குறிப்பாக, கான்ஸ்டாண்டி நோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியா கடவுளின் தாய் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ‘மனித உயிர் கடவுளை எப்படிப் பெற்றெடுக்க முடியும்? மரியா, இயேசு என்ற மனிதனின் தாய் மட்டுமே. கடவுளின் தாய் அல்லர் என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான் ‘நெஸ்டோரியனிசம்’ (Nestorianism) என்று அழைக்கப்பட்டது. இந்தச் சிக்கலைத் தீர்க்க கி.பி. 431-இல் எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் ஒன்றுகூடிய பொதுச்சங்கம், ‘மரியா, கடவுளின் தாய்  என உறுதிபட அறிவித்தது. ஆகவே, நாமும் அன்னை மரியாவை ‘நம் தாய் எனப் புகழ்ந்து பாடி இப்புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

இன்றைய வழிபாட்டில் மிக முக்கியமாக, நாம் ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளைக் கொண்டாடுகிறோம். இந்த நாள் இறைவனின் தாய் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நாளாக, அதாவது, மோசேவின் சட்டப்படி கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்தசேதனம் செய்த நாளாக, குழந்தைக்கு வானதூதர் அறிவித்தபடியே ‘இயேசு என்று பெயரிட்டு மகிழ்ந்த நாளாக இருக்கிறது. இயேசு என்ற பெயருக்கு ‘கடவுள் நம்மை மீட்கின்றார், நமக்கு உதவுகின்றார், நம்மை வாழ்விக்கின்றார், நம்மோடு உடனிருக்கின்றார் என்று பொருள். இயேசு எனும் பெயர் வல்லமையுள்ள பெயர். மண்ணகமும் விண்ணகமும் மண்டியிடும் பெயர். இப்பெயர் இயேசுவே இறைச்சாயல், ஒவ்வொருவருக்கும் அனைவருக்குமான ஆசிர் மற்றும் உலகின் அமைதி என்ற இறைவெளிப்பாட்டின் நிறைவாகும். எனவே, இயேசு என்ற பெயர், அவர் வாக்களித்த அமைதி (யோவா 14:27) நமக்கு உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இன்று நம் உள்ளங்களில் விதைக்கிறது.

மூன்றாவதாக, இந்த நாளை உலக அமைதி நாளாகக் கொண்டாட திரு அவை நம்மைப் பணிக்கின்றது. 1968-ஆம் ஆண்டில் புனித திருத்தந்தை 6-ஆம் பவுல் சனவரி முதல் நாளில் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட வேண்டுமென அழைப்புவிடுத்தார் (எண் 5).  இறைவன் வழங்கிய இந்தப் புதிய ஆண்டின் முதல் நாளான இன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகம், இறைவன் மோசேவுக்கு வழங்கிய ஆசி, ஆரோன், அவரது புதல்வர்கள் வழியாகத் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து நமக்கும் வருகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!\" (எண் 6:25,26). இன்று ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் இறைவன் நிறைவான ஆசியையும் அருளையும் பொழிகிறார். இறையமைதியே இறைவன் நமக்கு வழங்கும் ஆசி. இந்த ஆசியை முழுமையாக மனிதர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே நமது முக்கியப் பணியாகும்.

இவ்வாண்டு, திருத்தந்தை லியோ “உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக; ஆயுதங்களற்ற அமைதியை நோக்கி...” (யோவா 20:19) என்பதை உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளாகத் தந்துள்ளார். அவர் தன்னுடைய செய்தியில், வன்முறை மற்றும் போரினை நிராகரித்து, அன்பு மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியைத் தழுவ உலக அமைதி நாளானது மனிதகுலத்தை அழைக்கிறது என்றும், இந்த அமைதியானது ஆயுதங்களற்ற அமைதியாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். நல்லிணக்கம், நம்பிக்கை, அக்கறை, பரிவு மற்றும் பற்றுறுதியை உருவாக்கும் திறன் கொண்டதாக அமைதி இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதி என்பது இறைவனின் கொடை. இயேசு நமக்கு வழங்கிய பிறரன்பின் முதற்கனி அமைதி. அதுவே இறைவனுடனான நம் ஒப்புரவு அமைதி. வன்முறை மற்றும் தீமைகளின் விதையைவிட வலிமை நிறைந்தவை. உலக அமைதித் திருநாளான இன்று அன்னை மரியின் திரு உருவின் முன்னால், அமைதியின் கொடைக்கான பரிந்துரையை வேண்டுவோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு பாலனைப்போல், நாமும் இந்த அன்னையின் கைகளில் குழந்தையாக உள்ளோம். இந்த அன்னையிடம் நமது தேவைகள், உலகின் தேவைகள் அனைத்தையும் ஒப்படைப்போம். குறிப்பாக, உலகில் நீதியையும் அமைதியையும் தேடுவோர் அனைவரின் தேவைகளையும் அவரிடம் ஒப்படைப்போம். நேர்மறை எண்ணங்களுடன் நன்மைகளை நினைத்து, நன்மைகளையே ஆற்றுவோம்.

இந்த ஆண்டில் நமது எண்ணங்கள், நமது சொற்கள், நமது செயல்கள், நமது வாழ்வுமுறை இறைவனுக்குத் தகுதியானவைகளாக மாறிட... இறைவனுடைய ஆசியும் அருளும், நம் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம், நிறைவான மகிழ்ச்சி, உழைப்புக்கேற்ற ஊதியம், மன அமைதி, நிபந்தனையற்ற அன்பு, உண்மையான உறவுகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்திட நாம் ஒருவர் மற்றவருக்காக வேண்டிக்கொள்வோம். இனிமையும் பராமரிக்கும் தன்மையும் கொண்ட இத்தாய், இறைவனிடமிருந்து மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத்தருவாராக!

இறுதியாக, நம் இறைவன் இரக்கமும் கனிவும் உடையவர். வாக்கு மாறாதவர். முக்காலமும் கடந்து நம்மை அன்பு செய்பவர். அவர் நமக்கு வழங்கியுள்ள அனைத்துக் கொடைகளுக்காக நன்றிகூறுவோம். இயேசுவின் ஆதரவும், அவரது அன்பும் நமக்கு நிறைவாக உண்டு என்ற நம்பிக்கையோடு இந்தப் புதிய ஆண்டை எதிர்கொள்வோம். இறைவனின் தாயும், நம் தாயுமான அன்னை மரியா நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் நாடுகளுக்கிடையிலும், அமைதி என்ற கொடையை இறைவனிடமிருந்து பெற்றுத்தருவாராக!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 28, 2025, திருக்குடும்ப விழா - சீஞா 3:2-7,12-14; கொலோ 3:12-21; மத் 2:13-15,19-23 - அன்பின் இல்லிடம் திருக்குடும்பம்

நமக்கு முகமாய், முகவரியாய், அடையாளமாய் அமைவது குடும்பம். குடும்பம் பாசத்தின் உறைவிடம்; அன்பின் இல்லிடம்; நெருக்கத்தின் இருப்பிடம். இங்குதான் உரையாடல் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றம் ஆகிய கலைநுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. குடும்பத்தில்தான் ஒவ்வொருவரும் தங்கள் மேன்மையையும் பெருமையையும் அறிந்துகொள்கின்றனர். அன்பு செய்கின்ற, ஒருவரையொருவர் முழுமையாக நேசிக்கின்ற, ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்கின்ற, மற்றவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கக்கூடிய குறிப்பாக, மிகவும் நலிந்தோரையும் நோயுற்றோரையும் கனிவாய்ப் பாதுகாக்கக்கூடிய தளமாகப் பல தன்மைகளைக் கொண்டதே குடும்பம். எனவேதான், குடும்பம் சமுதாயத்தின் அடித்தளம் எனவும், அடிப்படை உயிரணு என்றும் அழைக்கிறோம்.

குடும்பம் என்பது மனித உறவின் நிறைவு. இங்கேதான் ஒருவரையொருவர் மதிக்கவும் அன்பு கூரவும் வேண்டும் என்ற பண்பும் ஒற்றுமையும் மேலோங்கி இருக்கும். குடும்பம் என்பது நம்பிக்கையின் தொடக்க வித்து. குடும்பத்தில் நம்பிக்கை என்பது தாய்ப்பாலுடன் சேர்ந்தே ஊட்டப்படுகிறது. குடும்பத்தில்தான் பெற்றோரும், தாத்தா-பாட்டிகளும் தங்கள் நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்றனர். எனவேதான்குடும்பம் என்பது நற்செய்தி அறிவிப்பதற்குச் சிறந்த தளம்என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மனிதகுலத்திற்கு நற்செய்தியை அறிவிக்க முதன்முதலில் அழைக்கப்பட்ட சமூகம் கிறித்தவக் குடும்பங்களே.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால், “திரு அவையின் இதயமே குடும்பங்கள்தாம்; இந்த இதயம் பழுதடைந்தால் மனிதன் வாழமுடியாது; குடும்பங்கள் சிதைவுற்றால் திரு அவையும் சிதைவுறும்என்கிறார். ஒரு நல்ல குடும்பம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, திரு அவைக்கும் அடித்தளமாக இருக்கிறது. ஒரு நல்ல குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கையை, அன்பை, கிறித்தவ ஆன்மிகத்தைத் தன்னுடைய பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது. அதனால்தான், கிறித்தவக் குடும்பம்ஒரு குட்டித் திரு அவைஎன்ற கருத்துருவாக்கத்தைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன்னுடையகுடும்ப வாழ்வு (Familiaris Consorti) என்ற சுற்றுமடலில் முன்மொழிந்தார். குடும்பம் என்பது குட்டித் திரு அவை என்பதற்கு முதல் மாதிரியாக வாழ்ந்த குடும்பம் நாசரேத்தூர் திருக்குடும்பம்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசுவின் குடும்பத்தைப்போலவே உலகில் உள்ள எல்லாக் குடும்பங்களும் இருக்கவேண்டும் என்பதே இவ்விழா இன்று விடுக்கும் அழைப்பு. திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை அழைப்பு விடுத்ததன் காரணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாகத்தான் தொடக்கத் திரு அவையில் வளர்க்கப்பட்டு வந்தது. முதன்முதலில் 1893-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் லியோ இவ்விழாவை அறிமுகம் செய்தார். 1921-ஆம் ஆண்டு திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் இத்திருவிழாவைத் திருவழிபாட்டுக் கால அட்டவணையில் இணைத்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப் போர். 1918-இல் நடைபெற்ற இப்போரில் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. தந்தையையும் மகனையும் இழந்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில், அவ நம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திரு அவை முயன்றது.

1962-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருக்குடும்பம் குறித்த சிந்தனைகளைப் புதுப்பித்தது. நடைபெற்ற உலகப் போர்களுக்குப் பின்னர் குடும்பங்கள் சந்தித்த துயரங்கள், சிதைவுகள், அவநம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் போதைப்பொருள்களின் பரவலான பயன்பாடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் போன்ற காரணிகளால் நிலைகுலைந்த குடும்பங்களைக் காப்பது என்பது திரு அவையின் முக்கியக் கடமையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் உண்மையான அன்பையும் அமைதியையும் திருக்குடும்பம் வழங்கமுடியும் எனத் திரு அவை உணர்ந்தது.

எகிப்தில் அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலை யோசேப்பு, மரியா, குழந்தை இயேசு அனுபவித்தனர். பச்சிளம் குழந்தை இயேசுவோடு மரியாவும் யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோது பல நூறு குழந்தைகளின் உயிர்களைப் பலிவாங்கினான். திருக்குடும்பம் சந்தித்த அதேபோன்ற மோசமான சூழ்நிலையை இன்று குடும்பங்கள் சந்திக்கின்றபோது, கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற கடினமான பிரச்சினைகளைச் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இயேசு இருக்க விரும்புகிறார் என்ற ஆழமான நம்பிக்கையைத் திரு அவை குடும்பங்களுக்கு ஊட்டியது. அனைத்துக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியாகத் திருக்குடும்பத்தை முன்னிறுத்தியது. கிறிஸ்துமஸ் விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறைத் திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்று 1960-இல் திரு அவை அறிவித்தது.

திருக்குடும்பம் நம் மத்தியில் எப்படி வாழ்ந்தது? அந்தக் குடும்பம் கடைப்பிடித்து வாழ்ந்த விழுமியங்கள் என்னென்ன? என்பதை இன்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பம் பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடு இரவாக வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்ததுநாட்டிற்குள்ளும் அடுத்த நாடுகளுக்கும், இரவோடு இரவாக ஓடும் இன்றைய புலம்பெயர்ந்தோரின் நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குடும்பம் அனுபவித்தது. வானவரின் செய்தியைக் கலக்கத்தோடு ஏற்றுக்கொண்ட மரியா, இச்செய்தியை அறியும்போது மனக்கலக்கமும் குழப்பமும் அடைந்த யோசேப்பு, குழந்தை இயேசுவைக் குறித்த சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:35), தாயும்-தந்தையும் இயேசுவைக் காணவில்லையே என்ற ஏக்கமிகு தேடல் (லூக் 2:44) எனத் திருக்குடும்பம் எந்நேரமும் பிரச்சினைகளோடே வாழ்ந்து வந்தது. இருப்பினும், அவர்கள் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்கு நல்லதொரு பாடம்.

திருக்குடும்பம் துன்பங்கள், சோதனைகள் வேளையிலும் செபத்தில் இணைந்திருந்ததைச் சிறந்த மாதிரியாக நாம் பார்க்கிறோம். அன்னை மரியாவும் யோசேப்பும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதிலும், அவரின் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் எப்போதும் கவனமாய் இருந்தனர். எப்போதும் கடவுளுக்காக வாழக்கூடியவர்களாவும், தங்களையே முழுவதும் அர்ப்பணிக்கக்கூடியவர்களாவும் இருந்தனர். கடினமான சூழலிலும், கலக்கமடைந்த வேளையிலும் கடவுளுக்குஆம்என்றே பதிலளித்தனர். குறிப்பாக, அன்னை மரியாவின்ஆம்கல்வாரி மலையின் உச்சம்வரை தொடர்ந்தது. இறை நம்பிக்கை என்பது தங்களையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணிப்பதைவிட வேறு எது இருக்கமுடியும்? இறுதிவரை பரிவு, இரக்கம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய நற்பண்புகளால் தங்கள் உள்ளங்களை அணிசெய்தனர் இயேசு-மரி-யோசேப்பு குடும்பம்.

திருக்குடும்ப விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நம்பிக்கையின் நாற்றங்காலாய் விளங்கும் நமது குடும்பங்களை எண்ணிப்பார்ப்போம். இன்றைய வணிகப் பொருளாதார வாழ்க்கை அமைப்பில் குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. திருமணத்தின் புனிதமும், அதன் முறிவுபடாத் தன்மையும் இன்று உலகுசார்ந்த நவீன கலாச்சார அழுத்தத்தால் சிதைவுற்றுப்போகின்றன. தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளுக்கு எதிராக எழும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. தாயின் மடியில் தலைவைத்துப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள குழந்தைக்கும், குழந்தையின் மழலையில் குதூகலிக்க பெற்றோருக்கும் இன்று நேரமில்லை.

ஒரு குழந்தை வளர ஒரு கிராமமே தேவைப்படுகிறதுஎன்ற ஆப்பிரிக்க முதுமொழி நினைவுகூரத்தக்கதே. மனிதர்கள் இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். ‘பயன்படுத்தித் தூக்கியெறிஎனும் கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். முதியோர் குறிப்பாக, நோயுற்றோர் இன்று சுமையாகி விட்டனர். மனித உறவுகள் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்த உறவுகள் என்பதைப் பல வேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம்.

உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியைக் கொணர விரும்பினால் வீட்டுக்குச் சென்று உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்என்றார் அன்னை தெரேசா. எனவே, தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி அன்பை, அக்கறையை, ஆதரவைத் தங்கள் குடும்பத்திலும், தாங்கள் வாழ்ந்த சூழல்களிலும் நிலைநாட்டிய திருக்குடும்பத்தைப்போல மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்ப வாழ்வு வாழ திருக்குடும்பத்திடம் வேண்டுவோம்.

அனைவருக்கும் திருக்குடும்ப விழா வாழ்த்துகள்!

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 25, 2025, ஆண்டவருடைய பிறப்புப் பெரு விழா - எசா 9:2-4,6-7; தீத் 2:11-14; லூக் 2:1-14 – தீவனத்தொட்டியில் குழந்தை இயேசு!

கடவுள் மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார். அவர்தாம் இம்மானுவேல்! கடவுள் நம்மோடு! அவர் அந்நியர் அல்லர்; அவருக்கு முகம் உண்டு; அதுவே இயேசுவின் முகம். மீட்பின் இந்நாளில் நாம் பெருமகிழ்ச்சிகொள்கிறோம். இந்நாள் இரக்கத்தின் நாள்! இதில் நம் தந்தையாம் இறைவன் தம் உன்னத பாசத்தை உலகம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இது ஒளியின் நாள்! இது அச்சம், ஏக்கம் எனும் இருளை விரட்டியடிக்கிறது. இது அமைதியின் நாள்! இது சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் ஒப்புரவிற்கும் வழியமைக்கிறது. இது மகிழ்வின் நாள்! இது ஏழைகளுக்கும் தாழ் நிலையில் உள்ளோருக்கும் அனைத்து மக்களுக்கும் உன்னத மகிழ்வைத் தருகிறது.

கடவுள் குழந்தையாகப் பிறந்துள்ளார் என்ற வியப்புக்குரிய செய்தி முதலில் இடையர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழ்மையான நிலையில் அவர் பிறந்திருக்கிறார் என்பது இடையர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஓர் அடையாளம். அதாவது, தீவனத்தொட்டியில் குழந்தை கிடத்தப்பட்டிருக்கும் என்பதுதான் அந்த அடையாளம். அங்கு ஆடம்பர அலங்கார விளக்குகளோ அல்லது வானதூதர்களின் பாடல்களோ இல்லை. ‘ஒரு குழந்தை பிறந்துள்ளதுஎன்பது மட்டுமே அடையாளம்.

பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார் (லூக் 2:7), “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் (2:12), “விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள் (2:16) என்ற இறைவார்த்தைகளில் மூன்றுமுறைதீவனத்தொட்டிஎன்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மையான அர்த்தத்தைக் காண நாம் தீவனத்தொட்டியை உற்றுநோக்குவோம். ஏனெனில், கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார் என்பதை அது நமக்கு விளக்கிக் கூறுகிறது. இதன் அடிப்படையில் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்தும் 1. நெருக்கம், 2. ஏழ்மை, 3. தாழ்ச்சி ஆகிய மூன்று இறைப்பண்புகளைச் சிந்திப்போம்.

முதலாவதாக, தீவனத்தொட்டி என்பதுகடவுளின் நெருக்கத்தைநமக்கு உணர்த்துகிறது. தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையைக் காண்பிப்பது, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தையும் காட்டுகிறது. கடவுளை எப்போதும் எளிமையான ஒரு சிறிய இடத்தில் மட்டுமே காணமுடியும். நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் கடவுள் இந்தச் சிறிய வழியைத்தான் தேர்ந்துகொள்கிறார். எனவே, தீவனத்தொட்டியில் பிறந்துள்ள கிறிஸ்து நம்முடன் நெருக்கமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அவர் நமது உணவாகவேண்டும் என்பதற்காக அதில் தம்மை வெளிப்படுத்துகிறார். அவர் நம்முடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கவும், விண்ணக அரியணையை விடுத்து ஏழ்மை நிலையில் தம்மை ஒரு தீவனத்தொட்டியில் வெளிப்படுத்தவும் திருவுளம்கொண்டார்.

பொதுவாக, நாம் யாரை அன்பு செய்கின்றோமோ அவர்களையே தேடிச்செல்கின்றோம். நாம் அன்பு செய்யும் ஒருவருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் அன்பு செய்பவர்களைத் தேடிச்சென்று சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் நம் உள்ளம் பெருமகிழ்ச்சிகொள்கின்றது. அதேபோன்று, இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். ஆம், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகின்றது. தமது அளவுகடந்த அன்பினால் நம்மை அரவணைக்க வருகின்றார். தீவனத்தொட்டியைத் தேர்ந்தெடுத்த கடவுள், தாம் எவரிடமும் தூரமாக இல்லை என்பதைக் காட்டுகிறார். எந்த நிலை, எந்தச் சூழல், எந்த வறுமை இருந்தாலும், கடவுள் மனிதருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது. ‘கடவுளின் நெருக்கம்கடவுள் உயர்ந்த அரண்மனைகளில் அல்லது பிரமிப்பூட்டும் இடங்களில் அல்ல; சாதாரண மக்கள் வாழும் எளிய இடங்களிலும்கூட வருகிறார்.

இரண்டாவதாக, தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் முக்கியமான செய்திகடவுளின் ஏழ்மை.’ இயேசு ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாகவே இறந்தார். தீவனத்தொட்டி- எளிமையின் உச்சமிது. தீவனத்தொட்டியைச் சுற்றி நின்றவர்களும் ஏழைகளே. அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் மற்றும் அனைத்து ஏழையரும்! இவர்கள் செல்வம் மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளால் அல்ல; மாறாக, அன்பால் மட்டுமே அங்கு ஒன்றுபட்டிருந்தனர். பணத்திலும் பதவியிலும் அல்ல; ஆனால், உறவுகளிலும் நபர்களிலும்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள் காணப்படுகின்றன என்பதைத் தீவனத்தொட்டியின் ஏழ்மை எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைக் காணவேண்டும்; அங்கே தான் இறைவன் இருக்கின்றார்.

எல் சால்வதோர் நாட்டின் பேராயராகப் பணிபுரிந்த புனித ஆஸ்கர் ரொமேரோ தன் மக்களுக்கு வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தியில் கூறிய வார்த்தைகள் இவை: “உண்மையில் ஏழையாக மாறாதவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடமுடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தனக்கு மட்டும் போதும் என்ற மனநிலையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை; அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. ஏழைகள், பசியுற்றோர், தேவையில் இருப்போர்... இவர்களாலேயே கிறிஸ்து பிறப்பு விழாவில் பொருள் காண முடியும். அவர்களைத் தேடியே இம்மானுவேல் அதாவதுகடவுள் நம்மோடுஎன்ற பெயர் தாங்கிய இறைவன் வருவார்.”

எனவே, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், நம்மைக் கடந்துசெல்வோரில் குறிப்பாக, எளியோர் மற்றும் உதவி தேவைப்படுவோரில் அவரைக் கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம். நம் மீட்பரின் நிச்சயமான வருகை குறித்து மகிழ்வதற்கு அழைப்புப்பெற்றுள்ள நாம், அந்த மகிழ்வைப் பிறருடன் பகிர்ந்து, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தனிமையில் இருப்போருக்கும் மகிழ்வின்றி வாழ்வோருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மூன்றாவதாக, தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் செய்திகடவுளின் தாழ்ச்சி.’ பெண்களுக்குள் பேறு பெற்ற, கடவுளின் அருளை அடைந்த அன்னை மரியா, ‘இதோ அடிமைஎன்று தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். தான் கடவுளின் தாய் என்ற ஆணவத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்ததேயில்லை. இத்தகைய ஒரு புண்ணியம் நிறைந்த தாழ்ச்சியைத் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்துகிறது. உலகினர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கடவுளின் மேன்மையான குணம் இவ்வகையில் வெளிப்பட்டது. எனவே, தீவனத்தொட்டியில் இருக்கும் இந்தக் குழந்தையைக் காணவேண்டுமெனில் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, நம்மையே அவருக்கு முன் தாழ்த்தவேண்டும்.

தாழ்ச்சி என்பது தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பது அல்ல; மாறாக, ‘தான்என்ற எண்ணத்தைக் குறைப்பது. தாழ்ச்சி என்பது, தன் கருத்துகளை அடக்கி வைப்பது அல்ல; மாறாக, பிறரது கருத்துகளுக்கு மதிப்பு தருவது. தாழ்ச்சி என்பது, தன் திறமைகளை மறைப்பது அல்ல; மாறாக, பிறர் திறமைகளையும் பாராட்டுவது. தாழ்ச்சி என்பது, தன்னைப்பற்றிக் குறை கூறுவது அல்ல; மாறாக, பிறரின் குறையை மிகைப்படுத்தாமல் இருப்பது. தாழ்ச்சி என்பது, தன்னை விலக்கிக்கொள்வது அல்ல; மாறாக, பிறருக்கு முக்கியத்துவம் தருவது. தாழ்ச்சி என்பது, தனது உரிமைகளை விட்டுக் கொடுப்பது அல்ல; மாறாக, பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது. தாழ்ச்சியாய் இருப்பது என்பது, அடக்கமாக இருப்பது அல்லது கண்களை மூடிச்செபிப்பது அல்ல; மாறாக, அவமானங்களை ஏற்கும் திறனைக் கொண்டிருப்பது. தாழ்ச்சியுள்ளவர் இயேசுவைப் போன்று அவமதிப்புகளை ஏற்றுக் கொள்வார்.

நிறைவாக, தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் குழந்தையின் வடிவில் இறைவன் நமக்கு விடுக்கும் செய்தி: எங்கெல்லாம், அமைதியும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண வேண்டும். பாலன் இயேசுவைக் கைகளில் தாங்கி, தூக்கி, அரவணைக்கும் நாம் தாகமுற்றிருப்போரை, அந்நியரை, உடையின்றி இருப்போரை, நோயாளிகளை, கைதிகளை... அவரில் ஏற்று அரவணைக்கத் தயங்கக்கூடாது. இயேசுவின் பிறப்பு கொணர்ந்துள்ள பெரும் மகிழ்ச்சியை விளிம்புநிலை மனிதர் ஒவ்வொருவருக்கும் வழங்குவோம். பெத்லகேமின் சின்னக் குழந்தையின் அழுகை நம்மை உலுக்கி, நம் பாராமுகம் எனும் போக்கிலிருந்து நம்மை அகற்றி, துன்புறுவோர் குறித்து நம் கண்களைத் திறக்கட்டும். தீவனத்தொட்டியிலும் சிலுவையிலும் தமது ஒன்றுமில்லாத் தன்மையில் ஏழ்மையை வெளிப்படுத்திய இயேசுவைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வோம். தீவனத்தொட்டியில் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். நாம் பிறருக்காகப் பிறப்போம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்!