news
ஆன்மிகம்
இறைவேண்டலின் பரிமாணங்கள் – 25

செபமாலை இறைவேண்டல்!

கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆனால், செபமாலை பற்றிய நமது பார்வையைச் சற்று விசாலப்படுத்த வேண்டும். செபமாலை என்பது ஒரு மரியியல் மன்றாட்டு, மரியன்னைமீது அன்பு கொண்ட பிள்ளைகள் தவறாது வெளிப்படுத்தும் அன்பின் வேண்டுதல் என்பதே பலரின் பொதுவான புரிதல். அது உண்மைதான் என்றாலும், முழு உண்மையல்ல.

மேற்கூறியவைகளோடு, செபமாலை ஒரு கிறிஸ்தியல் மன்றாட்டு என்பதும், இயேசுவின் வாழ்க்கை மறையுண்மைகளைச் சிந்திக்கும் ஒரு கிறிஸ்து மைய வேண்டுதலும்கூட என்பதே முழு உண்மை. இது சிலருக்கு வியப்பைத் தரலாம். ஆனால், இதுவே செபமாலை பற்றிய முழுமையான பார்வை. செபமாலையில் நம் உதடுகள் ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்று உச்சரித்தாலும், நம் உள்ளம் இயேசுவின் வாழ்வு மறையுண்மைகளையே சிந்திக்கிறது. எனவேதான், அது ஒரு ‘கிறிஸ்து மைய மன்றாட்டு’ என அழைக்கப்படுகிறது.

கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண்:971) மரியன்னை வணக்கம் என்பது கிறிஸ்தவ வழிபாட்டின் இன்றியமையாப் பங்கு என்கிறது. முற்காலத்திலிருந்தே திரு அவை அன்னை மரியாவைக் கடவுளின் தாய் என்று வணங்கி வந்துள்ளது என்றும், மரியன்னை வணக்கம் என்பது இறைவழிபாடு, ஆராதனையிலிருந்து வேறுபட்டது என்றும் தெளிவுபடுத்துகிறது. மேலும், மரியன்னை வணக்கம் மரியன்னை விழாக்கள், செபமாலை போன்ற மரியன்னை மன்றாட்டுகள் வழியாக வெளிப்படுகிறது என்கிறது. சிறப்பாக, ‘செபமாலை நற்செய்தி நூலின் மிகச் சிறந்த மாதிரி’ என்றும் செபமாலையைப் புகழ்கிறது கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி.

செபமாலையைத் தங்கள் அன்றாட இறைவேண்டலில் இணைத்துக் கொண்ட பலரும் அதன் ஆசிகளைப் பற்றி சான்று பகர்ந்துள்ளனர். திருத்தந்தை 12-ஆம் பயஸ் செபமாலை மனிதரிடமிருந்து அல்ல; இறைவனிடமிருந்தே வந்தது என்று சொல்லி செபமாலை வேண்டலை ஊக்குவித்தார். அது வெறுமனே, அன்னை மரியாவிடம் மட்டும் நம்மை இட்டுச் செல்வதில்லை. செபமாலையை உளமார, உணர்ந்து வேண்டுபவர்கள் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூவோர் இறைவனிடம் நெருங்கி வருகின்றனர் என்பதே செபமாலை அன்பர்களின் அனுபவம்.

இறைவார்த்தைக்கு முதன்மை தருகிற இன்றைய நாள்களில் செபமாலை ஒரு விவிலிய மன்றாட்டு என்பது வலியுறுத்தப்படுகிறது. ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ என்னும் மன்றாட்டின் முதல் பகுதி முழுவதும் விவிலியத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்பது முதல் வாதம். செபமாலையின்போது நாம் சிந்திக்கின்ற கிறிஸ்துவின் வாழ்வியல் மறையுண்மைகள் அனைத்தும் விவிலியம் சார்ந்தவையே என்பது இரண்டாவது வாதம்.

செபமாலையின் தனிச்சிறப்பே அதன் எளிமைதான்; அன்னை மரியாவைப்போல! படித்தவர், பாமரர், பெரியோர், சிறியோர் என அனைவரும் மிக எளிதாக இறைவேண்டல் செய்யக்கூடிய பண்பு செபமாலைக்கு இருக்கிறது. மேலும், செபமாலையின்போது அன்னை மரியாவும் நம்மோடு சேர்ந்து மன்றாடுகிறார் என்பது அதன் கூடுதல் சிறப்பு. மரியன்னை ஓவியங்கள் பலவற்றில் அன்னையின் கையில் செபமாலை இருப்பதைக் காணலாம். நாம் செபமாலை செபிக்க நம்மை ஊக்குவிக்கவே அன்னை மரியா செபமாலையோடு காட்சி தருகிறார். லூர்து நகரில் மசபியேல் குகையில் சிறுமி பெர்னதத்துவுக்கு 18 முறை காட்சி தந்த அன்னை தனது கையில் செபமாலை ஒன்றை வைத்திருந்தார். பெர்னதத் செபமாலை செபித்தபோதெல்லாம், மரியன்னையின் கையிலுள்ள செபமாலை மணிகள் அசைந்ததைக் கண்டதாகப் பெர்னதத் சான்று பகர்ந்துள்ளார்.

திரு அவையின் நெடிய வரலாற்றில் எத்தனையோ புனிதர்கள் செபமாலையைத் தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்டுள்ளனர். புனித தோமினிக்கில் தொடங்கி, அருளாளர் ஆலன் டி லா ரோச், புனித லூயி மரிய மாண்ட்ஃபோர்ட், புனித இராபர்ட் பெல்லார்மின், புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், புனித அன்னை தெரசா, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், இன்றைய திருத்தந்தை பிரான்சிஸ் என திரு அவையின் புனிதர்கள், மாமனிதர்கள் அனைவரின் மனம் கவர்ந்த மன்றாட்டாகச் செபமாலை இருக்கிறது.

செபமாலையின் நிறைவான தனித்துவச் சிறப்பு அது ஓர் ஆழ்நிலைத் தியான வேண்டல் (Contemplative prayer) என்பது. நமது இறைவேண்டல் சொற்களிலும், சிந்தனையிலும் தொடங்குகிறது. அடுத்து அது தியானம் என்னும் நிலைக்கு உயர்கிறது. தியானத்தில் சிந்தனை, கற்பனை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தையும் கடந்த அமைதியே ஆழ்நிலைத் தியானம் என்பது. இறைவேண்டலின் சிகரமே ஆழ் நிலைத் தியானம் என்றும் சொல்லலாம். செபமாலையை நாம் பொருளுணர்ந்து,  முழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணத்தோடு மன்றாடும்போது, அதுவே ஓர் ஆழ்நிலைத் தியான வேண்டலாக மாறுகிறது.

செபமாலையை மூன்று விதங்களில் பயன்படுத்தலாம். அதனை ஓர் எளிய மரபு வேண்டலாக மன்றாடலாம். இதுவே முதல் படி. கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளைத் தியானிக்கும் தியான இறைவேண்டலாகவும் பயன்படுத்தலாம். இது இரண்டாவது படி. இன்னும் சிறப்பாக, செபமாலையைத் தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் மூவோர் இறைவனோடு அமைதியில் ஒன்றிக்கும் ஆழ்நிலைத் தியான வேண்டலாகவும் உயர்த்தலாம். இதுவே சிறப்பான படி. செபமாலை அன்பர்கள் அனைவரும் முதல் படியிலிருந்து மூன்றாம் படிக்குப் பயணம் செல்வோமாக!               

(தொடரும்)

news
ஆன்மிகம்
புதிய மரியியல் தொடர் – 1 (அறிமுகம்)

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி

அன்புக்குரிய வாசகப் பெருமக்களே!

திரு அவை வரலாற்றில் மரியன்னை பக்தி, மரியியல் ஆன்மிகம் தவிர்க்க இயலாத ஒன்று. திருவிவிலியம், கோட்பாடு, திரு அவைப் போதனை, திரு அவை மரபு எனப் பல தளங்களில் விரவிக் கிடக்கும் மரியியல் பேருண்மைகளைத் தனது திருத்தூது மடல், மூவேளைச் செப சந்திப்பு, திருத்தூது ஊக்கவுரை வாயிலாக மக்களுக்கு வழங்கிய திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் சிந்தனைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து, ‘நம் வாழ்வு  வாசகர்களுக்கு தொடர் கட்டுரைகளாக வழங்க முன்வந்துள்ளார் மரியன்னை ஊழியர் சபையைச் சார்ந்த தந்தை அமல்ராஜ் ஆரோக்கியசாமி, ... அவர்கள். உரோமையில் தங்கள் துறவற சபை தலைமையகத்தில் ஆவணக்காப்பக  இயக்குநராகவும், தங்கள் சபையின் வரலாற்று ஆய்வாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், ‘மரியன்னை மறைக்கல்விஎனும் இத்தொடர் வாயிலாக மரியன்னை பற்றிய முழுமையான தரவுகளைத் திரு அவை வழிநின்று வழங்கவுள்ளார். தந்தை அமல்ராஜ் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்வாசகர் மத்தியில் இத்தொடர் மரியன்னை பக்தியை வளர்க்கும் என நம்புகிறேன்.                                                                                          

- முதன்மை ஆசிரியர்

திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் செப்டம்பர் 7, 1995 முதல் நவம்பர் 13,  1997 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் தனது மக்கள் சந்திப்பின்பொழுது (Wednesday Papal audience) அன்னை மரியா குறித்த எழுபது மறைக்கல்விச் சிந்தனையை வழங்கியுள்ளார். அன்னை மரியா பற்றிய திருத்தந்தையினுடைய இந்த எழுபது மறைக்கல்விச் சிந்தனைகளும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது பகுதியில், ‘திரு அவையினுடைய வரலாற்றில் கன்னி மரியாவின் பிரசன்னம்என்கின்ற தலைப்பில் ஒன்பது சிந்தனைகளை வழங்கியுள்ளார். இதில் அன்னை மரியா தொடக்கக்காலத் திரு அவையால் எவ்வாறு பார்க்கப்பட்டார், வணக்கம் செலுத்தப்பட்டார் மற்றும் திரு அவையின் வரலாற்றில் எத்தகைய இடம் அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரித்தபின், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தினுடைய மரியியல் சிந்தனைகளோடு நிறைவு செய்கின்றார்.

இரண்டாவது பகுதியில், ‘கன்னி மரியா மீதான திரு அவையின் நம்பிக்கை குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். அதிகமான தலைப்புகளைக் கொண்ட இப்பகுதியில் (46 தலைப்புகள்) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மரியன்னை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு திரித்துவம், கிறிஸ்து மற்றும் திருச்சபையின் மறையுண்மையில் கன்னி மரியாவின் பிரசன்னம் மற்றும் பங்கு பற்றிய முழுமையான மற்றும் மிக ஆழமானதொரு விளக்கத்தைத் திருவிவிலியம், திரு அவைத் தந்தையர்களுடைய சிந்தனை, திரு அவையின் ஆசிரியம் மற்றும் பாரம்பரியம் இவைகளை அடிப்படையாகக் கொண்டு விளக்குகின்றார்.

மூன்றாம் பகுதியில், திரு அவையில் கன்னி மரியாவின் பங்கு பற்றி 14 தலைப்புகளில் விளக்குகின்றார். இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கம் கற்பிப்பதை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு மரியா திரு அவையின் நிறுவுநர் மற்றும் தலைவராகிய கிறித்துவின் தாயாக இருப்பதுடன், அருளின் வரிசையில் விசுவாசிகளின் தாயாக இருக்க அவர் தந்தையாம் கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றார். பல சவால்கள் நிறைந்த இவ்வுலகில் வாழும் இறைமக்கள், அன்னை மரியாவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ வேண்டும் என்பதையும் அவர் இவ்வுரைகளில் வலியுறுத்துகின்றார்.

இறுதியில், திருத்தந்தை அவர்கள் தனது மரியியல் சிந்தனையை அனைத்துக் கிறித்தவப் பிரிவுகளிடையே ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இயேசுவின் தாயான மரியா கிறித்தவர்களைப் பிரிக்கும் ஒரு நபர் அல்லர்; மாறாக, அவர் அனைவருக்கும் தாய். எனவே, ஒவ்வொரு கிறித்தவனும் தனது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் மரியன்னையிடமிருந்து பெறும் மகிழ்ச்சியைத் தனது சகோதர-சகோதரிகள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்தி, அத்தகைய சாட்சிய வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ நம்மை அழைக்கின்றார்.

இத்தகைய கருத்தாழமிக்க  திருத்தந்தையின் மரியியல் சிந்தனைகளை வாசித்து, நமது தாயான மரியாவைப் பற்றிய திரு அவையின் போதனையிலும், அன்னை மரியா மீதான அன்பிலும் நாளும் வளர்வோம்.                           

(தொடரும்)

news
ஆன்மிகம்
தெய்வீகத் தடங்கள் - 11 (என் பெயர் சொல்ல வேண்டாம்!)
மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டதான சக்திமிக்க ‘மின்னலாலும் இடியாலும்’ நான் நள்ளிரவில் திடீரென்று எழுப்பப்பட்டேன்!  அன்றொரு நாள் யாரோ கேட்டார்கள் ‘இரவு எப்படி? தூங்க முடிந்ததா?’

போதுமான இடிமுழக்கமும், வானில் நெருப்பு அம்புகளும் விரைவில் மழை இருக்கும் என்பது விடை! குழம்பி அவன் கண்கள் இடப்பக்கம் திரும்பின. தோளைச் சிலிர்த்து இன்னும் மேகங்கள் இல்லை. மன்னிக்க! புவி அதிர்ச்சிகளால் ஆடுவது போல என் உடலில் தோள் முதல் விரல்கள் வரையில் ஒழுங்கற்று உச்சக்கட்ட வேகத்தில் ஓடும் உணர்வுகளைச் சொற்களாக்கவே இந்த உருவகம். இருண்ட மேகங்களை மின்னல் ஊடுருவதுபோல, கொடுமையான இடி மேகங்களை உரசுவதுபோல உள் நரம்புகளும் தமனிகளும் நசுங்கி நடுங்கி கைகளில் இடி இறங்கும்.

இந்தத் தாக்குதலைச் சமாளிக்க வழி தெரியாமல் என் மனம் கொந்தளிக்கும், கையை நசுக்குறச் செய்த என் நிலையைச் சபித்து, ‘வலக்கை இல்லாமலிருந்தாலே நலமோ?’ என்று எண்ணும். ஐயோ! தாங்க முடியாத வலி உணர்வு! பிறகு யாரோ என்னை வன்முறையாய் மேலே தள்ளி, என் கழுத்தைப் பிடித்து மேலே எறிவதுபோல உடல் எந்திரம் இயக்கத்தை மாற்றுகிறது. திடீரென்று தோன்றிய அதிர்ச்சி என் தலையைத் திருப்புகிறது. ஆட்டம் காணும் உடல் படுக்கையில் அமர்கிறது. என் முழங்காலைத் தலை தொட சம்மணமிடுகிறேன். பற்கடிப்புத் தாடையை  ஒடுக்குகிறது. திரும்பத் திரும்ப அதிர்ச்சியில் முதுகு குனிகிறது. வலது தோள் இரு பக்கமும் சுற்றுகிறது. இடது விரல்கள் வலது மணிக்கட்டை அழுத்துகின்றன. ஆழ்ந்த பெரு மூச்சு! வியர்வை கொட்டுகிறது. இடது உள்ளங்கை இடது தோளைத் தேய்க்கிறது. மூச்சுக் காற்றை ஊதி மூச்சுத்திணறி வலி உணர்வுகளோடு பேசுகிறேனோ? அப்படியானால் எல்லா வலிகளையும் விலக்க முடியாதா?

வலியின் கொடூரம் சிறிது நேரம் வாட்டுகிறது. வாழ்க்கை வீண் என்று எண்ண வைக்கிறது. மனம் அச்சுறுத்தும் எண்ணங்களால் குழம்ப, அவற்றில் எதுவும் என் வேதனையைக் குறைக்கவில்லை. அவ்வேளை நான் ஆறுதலுக்குக் கடவுளையே நாடுகிறேன். அவர் ஒருவரே என் தடத்தைச் சீராக்க முடியும்! என்னிலுள்ள நம்பிக்கை என்னை அறிக்கையிடச் செய்கிறது. அவரிடம் நான் பணிவோடு உரைக்கிறேன்: “இதுவரையில் நடந்தவற்றிற்கும், இனி நடக்கவிருப்பவற்றிற்கும் நன்றி!”

ஆம், இப்போதைக்கு எனது வலக்கையில் உணர்வு தோளிலிருந்து முழங்கை வரையில் இருக்கிறது. தோளைச் சுற்றவும், கையைத் தூக்கவும் ஓரளவு முடிகிறது. முழங்கையிலிருந்து விரல் நுனிகள் வரையில் உணர்வு இல்லை. கை ஏறத்தாழ உயிரற்று இருந்தாலும், என்னால் துன்பத்தில் துடிக்கும் வலியை உணர முடிந்தது.

வலிக்கு மூன்று காரணங்கள்:  முதலாவது, உணர்வு செல்களின் வளர்ச்சியை மூளை அறிந்து கொள்கிறது; அதனால் வலி. அடுத்து, மூளை கைகளுக்கு இடுகிற கட்டளைகள் கை இல்லை என்ற செய்தியுடன் திரும்பி மூளைக்கே வருவதால் ஏற்படும் வலி. மூன்றாவதாக, கைக்குள் இருக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்வதற்காக அறுபட்ட நுண் நரம்புகள் போராடுகின்றன. இந்தக் காரணங்கள் அனைத்தும் சேர்ந்து துன்பம் தரும் வலியை ஏற்படுத்துகின்றன. வலி நோய்க்குறிகள் ஏற்படுத்தும் துன்பம், அவற்றைக் குறைக்க எந்த மருந்தும் இல்லாத நிலையில், அவற்றைச் சமாளிக்க என்னை வேறு மாற்று அணுகுமுறைகளைத் தேடச்செய்தது. வலியை மேலாண்மை செய்ய என்ன மாற்று வழிகள்? யுத்திகள்?

மேல் கை நரம்புப் பின்னல் சேதமடைவதால் அல்லலுறும் நோயாளிகளின் வாழ்வு நிலையில் வலி ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். இது ஒரு நரம்பு நோய். இதனால் தொடுதல் உணர்ச்சி  போய்விடும்; வெப்பம், குளிர்ச்சி ஆகியவற்றை உணரும் சக்தி இருக்காது. மேலும், வலி விடாமல் இருப்பதால், நோயாளியை எங்கேயாவது தள்ளிவிடும். ஆகவே வாழ்க்கையின் தன்மையை உயர்த்த வேண்டியது இன்றியமையாதது.

அறுவை சிகிச்சைகளின்போது பொது மயக்க மருந்து கொடுத்த நேரங்களில் மட்டும்தான் நரம்பு நோய்க்கான வலியிலிருந்து விடுதலை கிடைக்கும். மயக்க மருந்தின் தாக்கம் குறைந்த உடன் நான் பழைய நிலைக்கே திரும்பி விடுவேன்.

எனவே, முதலாவதாக, வலியின் மெய்நிலையைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் என்னுடைய ஆழமான இறை அனுபவத்தை முன்னிறுத்தினேன். அது முதலில் எளிதானதாக இல்லை. ஏனென்றால், வலியில் அப்படிச் செய்ய முடியவில்லை. துன்புறுதலை என்னுணர்வோடு இணைத்துப் பார்க்க முடிந்தாலும், அதிலேயே என்னை அடையாளப்படுத்தி எதிர்வினை ஆற்ற முடியவில்லை. என்னுடைய செப வாழ்க்கை, இறை வார்த்தை, இயேசுவின் வாழ்க்கை, என்னுடைய பக்தி முயற்சிகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் இயைந்து செயலாற்றி, நான் யோபுவினுடைய வழி முறைகளைப் பின்பற்ற எனக்கு உதவின. கேள்வி கேட்டலிலிருந்து பணிந்துபோதல், ஐயத்திலிருந்து நம்பிக்கை, பகுத்தறிதலிலிருந்து புரிதல் என்ற நிலைகளை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இவ்வாறு கடவுள் ஓர் அதிர்ச்சி தாங்கியாக (shock absorber) இருந்து, என் வாழ்க்கையின் அதிர்ச்சி அலைகளை ஏற்கவும் குறைக்கவும் செய்தார்.

என்னுடைய இடர்ப்பாடுகளின்போது கடவுளுக்கு நன்றி செலுத்துமாறு செய்ய எனது நம்பிக்கை முக்கியப் பங்கு வகித்தது. கடவுள் எனது மருத்துவர், என்னைக் குணமாக்குபவர் என்றும், அவரையே நான் சார்ந்திருக்க வேண்டும் என்றும் நான் அறிந்துகொண்டேன். இச்செயல்பாடுகளில் எனது நம்பிக்கைகள் உறுதிபெற்றன. நானே எனக்குள், ‘கடந்த 41 ஆண்டுகளாக, கடவுள் எனக்கு நல்ல சுகத்தைக் கொடுத்திருக்கிறார். அதனை முழுவதுமாக நான் அனுபவித்திருக்கிறேன். இப்போது என் வாழ்வில் வலி என்னும் கட்டத்தைக் கடந்து செல்வேன், சிலுவையை அனுபவிப்பேன்’ என்று சொல்லிக் கொண்டேன். புனித இஞ்ஞாசியார், புனித பாத்ரே பியோ, புனித அல்போன்சா ஆகியோரின் வாழ்க்கை என் வாழ்வில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திற்று.

நான் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு மிக உயர்ந்த அன்பினால் நான் சூழப்பட்டிருந்தேன் என்பது எனக்குக் கிடைத்த ஆசிர்! எனது தேவைகளைக் கவனித்துக் கொண்ட என் உடன்பிறந்தோர், அறிமுகம் இல்லாதவர்கள் உள்பட பலரின் வேண்டுதல்கள், என்மேல் அக்கறை கொண்டோரின் உற்சாக மொழிகள் எல்லாமே நேர்மறையாக உறுதி சொல்வதற்கான சக்தியை அனுபவிக்கும் பயணத்தை மேற்கொள்ள உதவின. எனது உடல் முழுவதிலும் நான் நேர்மறை அதிர்வுகளை அனுப்புகிறேன் என்பதை என்னால் உணரத் தொடங்கினேன். இதனால் எதிர்மறை எண்ணங்கள் வராமல் அணைபோட முடிந்தது. எனது நன்மைத்தனத்தை வறண்டுபோகச் செய்பவற்றையும் மனிதரையும் நான் தவிர்த்தேன். இது நன்றியுள்ள வாழ்க்கையை வாழவும் காணவும் முதல் முக்கியபடி என்பதை அறிந்தேன்.

குறை சொல்வோர், முனகுவோர், வருங்காலத்தில் நம்பிக்கை இல்லாதோர், புலம்புவோர், இரக்கத்தையும் கருணையையும் நாடுவோர், நல்லதையே காணாதோர் இவர்களின் இடத்தை நான் எடுப்பதைத் தவிர்த்தேன். எனது செபத்தில், ‘நான் ஆண்டவரின் அருமைப் பிள்ளை, என்னுடைய இந்த நிலையிலும், இப்போதும் எப்போதும் கடவுள் என்மேல் மகிழ்ச்சி கொள்கிறார்’ என்பதை நான் அறிந்து கொண்டேன். இந்த அறிவு எனக்கு ஆழ்ந்த ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. என்னைச் சுற்றி இருந்தவர்களாலும் இந்த அதிர் வலைகளை உணர முடிந்தது. ஏனென்றால், அவர்களிடத்தே இறைவன் தனிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தார்கள்.

‘கடவுள் என் துன்பத்தில் பங்கு கொள்கிறார்’, ‘எந்தப் பகையையும் இறைவன் அருளால் நானே வெற்றி கொள்வேன்’, ‘வலி என்பது கடந்துபோகும் ஒரு மெய்நிலை’, ‘மருத்துவச் சிகிச்சைகளின் போதும், அறுவை சிகிச்சைகளின் போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்’, ‘வலி என்னை நசுக்கி விடமுடியாது; ஏனென்றால், இயேசு சாவை வென்றவர்’ போன்ற எனது நம்பிக்கை நிறைந்த வாசகங்கள் என் முன்னால் இருந்த சூழலில், வாழ்க்கையை முழுமையாக வாழ வழியமைத்துத் தந்தன. அச்சம், விரக்தி, மனவழுத்தச் சிந்தனைப் போக்குகள் ஆகியவற்றை வெற்றி கொண்டேன்.

அண்மையில் 13 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது நான் அச்சம் கொள்ளவே இல்லை. நாள்கள் செல்லச் செல்ல ‘கடவுள் தமது படைப்பில் தொடர்ந்து செயலாற்றுகிறார்; அது மட்டுமல்ல, என் தனி வாழ்க்கையில் அவர் செயல்படுகிறார்’ என்ற எனது உறுதிப்பாடு இன்னும் ஆழமானது.

“சினம் கொள்வதோ, கசப்படைவதோ வலியை விரட்டப் போவதில்லை. நீ அருளோடு எளிதாக வாழ்க்கையின் அறைகூவல்களை ஏற்கக் கற்கும்போது, அது தானாகவே போய்விடும்” என்றார் லியான் பிரவுன். இவ்வாறுதான் வாழ்க்கையின் பேரிடர்பாட்டின்போது கவலையின்றி இருக்க ஆழமான நம்பிக்கையும், கடவுள் தரும் பாதுகாப்பின் நம்பிக்கையும் எனக்கு உதவின.

மூன்றாவதாக சிரிப்பு. ‘சிரிப்பு மிகச்சிறந்த மருந்து’ என்று சொல்லப்படுகிறது. ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் வள்ளுவர். சிரிப்பு நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. வலியைக் குறைக்கிறது. உடல் நலிவினைப் பொறுத்துக்கொள்ள உதவுகிறது. நம்மைச் சுற்றிலும் ஒரு நேர்மறையான உணர்ச்சிச் சூழலை ஏற்படுத்துகிறது அல்லது மீண்டும் கொண்டு வருகிறது. அவற்றோடு இரத்தக் குழாய்கள் சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது. என்னுடைய அனுபவத்தில், நகைச்சுவைக் காட்சிகள், ஜோக்குகள், வேடிக்கை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது எனது வலியைக் குறைத்ததைக் கண்டேன். அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது எனது கவனம் வலியிலிருந்தும், வலியின் நோய்க் குறிகளிலிருந்தும் திருப்பப்படுகிறது. என்னுள்ளே ஒரு நேர்மறைச் சக்தி பரவுகிறது. 

(தொடரும்)
news
ஆன்மிகம்
கண்டனையோ, கேட்டனையோ! (இன்னொரு தலையும் இரண்டு கைகளும்)
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் மேனாள் பேராயர் சின்னப்பா, பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ‘ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே’ என்ற பாடலைப் பாடும் அழகிய காணொளி ஒன்றை அண்மையில் பார்த்து, கேட்டு இரசித்தேன்.

பேராயர் ஓர் இசை ஆர்வலர். இசை நுட்பங்கள் அறிந்தவர். தமிழ் கிறிஸ்தவ இசையைச் சனநாயகப்படுத்தி, முன்னெடுத்துச் சென்ற பெரிய மனிதர்களில் ஒருவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஒரு விழாத் திருப்பலியில் கலந்துகொள்ள பேராயர் வந்தார் (எந்த இடம் என்பது மறந்து விட்டது). அங்கே மொட்டை வெயிலில் நின்று, ஒரு பேண்ட் வாத்தியக் குழுவினர் மாதா பாடல்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். நான் அப்போது குருமாணவன். நாற்காலிகளை வரிசையில் போட்டு, துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்தோம். வாத்தியக் குழுவின் பக்கத்திலேயே காரை நிறுத்தி இறங்கிய பேராயர், பேண்ட் மாஸ்டரிடமிருந்து  குச்சியை (baton) வாங்கிக்கொண்டு, அவர் குழுவை வழிநடத்த ஆரம்பித்தார். கச்சேரி களைகட்டியது. மக்கள் கூட்டமாகச் சுற்றிநின்று பார்த்தார்கள். நாங்கள் நாற்காலிகளைத் துறந்தோம். அது ஒரு விநோத அனுபவம்!

கிறிஸ்தவப் பாடல்களில் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வாசிக்கப்படும் ‘interlude’ என்கிற இடையிசைத் துணுக்கு ஒழுங்கமைவோடு இருப்பதில்லை என்ற ஒரு புகார் அவரிடம் இருந்தது.  “கீபோர்டு வாசிக்கிற ஆளு ஏதோ ஒரு  பீசை கெக்கெபிக்கே என்று வாசித்து விட்டு, கடைசியில தண்ணி தெளிச்ச  மாடு மாதிரி, தலைய ஓர் ஆட்டு ஆட்டுவான். பிள்ளைகள் உடனே சரணத்தைப் பாடணும். வாசிச்ச துணுக்கிற்கும், சரணத்தின் மெட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது” என்று ஒருமுறை அவர் கிண்டலாகக் கூறியது ஞாபகம் இருக்கிறது.

பேராயர் சின்னப்பாவிற்கு வயது 87. திருத்தந்தையின் வயது. காணொளியில், “நான் எப்போது இங்கு வந்தாலும் ஒரு பாட்டு பாடுவேன். அடுத்த வருடம் நான் உயிரோடு இருப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது. நான் பல கட்டங்களைத் தாண்டிவிட்டேன். ஆகவே, என் நன்றியறிதலாகவும், உங்கள் குடும்பங்களுக்கு அர்ப்பணமாகவும் இந்தப் பாடலை அரங்கேற்றம் செய்ய விரும்புகிறேன்” என்று சொல்லி நெகிழ்வாக ஆரம்பிக்கிறார். இசைக்கருவியாளர்களுக்கு ஆணைகள் கொடுக்கும்போது சிரிப்பு மறைந்து, முகம் ஒரு நிபுணரின் தீவிரத்தை அடைகிறது. “சாருகேசி ராகம். ஆறரைக் கட்டைல பிடி” என்று சொல்கிறார். அவரும் பிடிக்கிறார். நாம் என்ன கட்டையைக் கண்டோம்? சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “அவ்வளவுதான். கார்ட்ஸ் கீட்செல்லாம் பிடிக்காதே” என்று கறார் காட்டுகிறார். தபேலா  வாசிப்பவரிடம் தாளத்தைச் சொல்லி, “மெதுவாக வாசி” என்கிறார். தாளத்தின் பெயரும், சாருகேசி இராகத்திற்கும், ஹிந்துஸ்தானி இசை வடிவத்திற்கும் உள்ள நட்பு குறித்து அவர் சொல்லும் தகவலும் இசைப் பாமரனான எனக்கு விளங்கவில்லையென்றாலும், காணொளியை இரசிக்க அது தடையாக இல்லை.

சற்று நேரம் ‘தனநதனனதனதனன.....’ என்று தயார் ஆகி, ‘ஆரோக்கியத் தாயே, ஆதாரம் நீயே’ என்று அவர் வெண்கலக் குரலில் ஆரம்பிக்கும்போது, கூடவே தபேலாவும், கீபோர்டும் செல்லப் பிராணிகள் போல ஓடிவந்து, உறுத்தாமல் ஒட்டிக்கொள்கின்றன. அதன்பின் நிகழ்வது ஒரு மகத்தான கலை, இறை அனுபவம் என்று தயக்கமில்லாமல் சொல்வேன்.

தன் குரல்மீது அபார நம்பிக்கை உள்ள ஒருவரால்தான், பேராயர் போல மைக்கிலிருந்து அத்தனை ஆரோக்கியமான தொலைவில் நின்று கொண்டு பாடமுடியும். குறைந்தது அரை அடியாவது இருக்கும். இடையிடையே ‘பாடு’, ‘சொல்லு’ என்று கூட்டத்திற்கு ஒருமையில் செல்ல மிரட்டல்கள் விடுக்கிறார்.  அரசியல் சரிகள் பற்றிக் கவலைப்படாமல், இயல்பாகப் பேசக்கூடிய உரிமையை -  தகுதியும், வயதும் பேராயருக்குத் தந்திருக்கின்றன. சரணம் முடிந்து பல்லவிக்குத் திரும்பும்போது, பிரமித்து உட்கார்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘பாடேன்’ என்று அவர் செல்லமாகக் கோபிக்கும்போது, பெண்கள் முக்காடை இழுத்து விட்டுக்கொண்டு, குனிந்து சிரிக்கிறார்கள். சிரிப்பு அகலாமல் சேர்ந்து பாடுகிறார்கள். நம் வீட்டில் தாத்தா பேசுவதுபோல இருக்கிறது.

அலைபாயும் காட்சிகள் இல்லாமல், பெரும்பாலும் பேராயர் மேல் நிலைத்திருக்கும் கேமிராக் கோணங்களைக் கொண்டே, காணொளியைக் கோர்த்திருக்கும் எடிட்டர் தம்பிக்கு (அ) தங்கைக்குப் பாராட்டுகள். காணொளியில் வெளிப்படும்  பேராயரின் உடல் மொழி, ஓர் உண்மையான மரியின் அடியாரின் உடல்மொழி. ஒரு மூத்தத் தமிழ் கத்தோலிக்கர், அருள்பணியாளர், கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழ்நாடு திரு அவை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த தாக்கம் செலுத்தி ஓய்வு பெற்றிருக்கும் ஒரு பேராயர் பெருங்கிழவனார் இத்தனை பற்றுதலோடு அன்னையைப் புகழ்ந்து பாடும்போது, அதைப் பார்க்கும் எல்லாருடைய நம்பிக்கையும் ஒரு நகர்வைச் சந்திக்கிறது.

எனக்குக் காணொளி கிடைத்த அந்த நாளில், பலமுறை அதை நான் திரும்பத் திரும்பப் பார்த்தேன். என் நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். இப்போது ‘பலமுறை பகிரப்பட்ட காணொளி’ என்ற அந்தஸ்தை ‘வாட்சப்’ இதற்குக் கொடுத்துள்ளது. 25,000 பேர் இதை மாதா டிவி You Tube சானலில் பார்த்திருக்கிறார்கள். காணொளியைக் காண்பதற்கான கொழுவி: https://youtu.be/EIYFmzklv2Y

பேராயர் இதே பாடலைப் பாடி, மாதா டிவியால் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு தொழில்முறை காணொளியும் இணையதளத்தில் கிடைக்கிறது. எனினும், எனக்கு அதைவிட இந்த வடிவமே அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், இதில் உள்ள நேரடித்தன்மை. எடிட்டிங், ஒப்பனைகள் எதுவும் இல்லாமல், எப்படி நிகழ்ந்ததோ அப்படியே பதியப்பட்டு, பகிரப்பட்டுள்ள அதன் இயல்பு. இது காணொளியின் நம்பகத்தன்மையைக் கூட்டி, மனதுக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது. பாடலின் முடிவில், “எல்லாரும் மாதாவுக்கு ஜோரா ஒருமுறை கைதட்டுங்க” என்கிறார் பேராயர். அப்போது மாதாவும், பேராயருக்காக ஜோரா ஒருமுறை கைதட்டியிருப்பார்கள்! 

பேராயர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும். ஆண்டுதோறும் பெசன்ட் நகர் திருத்தலத்திற்கு வந்து இந்தப் பாடலைப் பாடி, ஆரோக்கிய அன்னையை மகிழ்விக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். பேராயருக்கு என் அன்பும் வாழ்த்தும்!

ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு, ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாகக் காலியாக இருந்த தஞ்சை மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக மேதகு சகாயராஜ் தம்புராஜ் அவர்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 18-ஆம் தேதி தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் மறைமாவட்டப் பேராலயத்தில் நடந்த ஒரு நேர்த்தியான அருள்நிகழ்வில், பொறுப்பேற்றார்.

புதிய  ஆயர் திருச்சி மறைமாவட்ட அருள்பணியாளராகப் பணியாற்றியவர். பணி வாழ்வின் பெரும் பகுதியைப் பங்குத்தளங்களில் செலவழித்தவர். ஏழைகளின் மேல் அன்பும் கரிசனையும் கொண்டவர். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் மதிப்பீடுகள் குறித்தும், அவர் இதுவரை நிகழ்த்தியுள்ள சமூக முன்னேற்ற முன்னெடுப்புகள் குறித்தும் ‘நம் வாழ்வு’ வெளியிட்ட சிறப்பு மலரிலும், திருப்பொழிவு தினத்தன்று செங்கல்பட்டு ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் மிகக் கச்சிதமான வார்த்தைகளில் வாசித்தளிக்கப்பட்ட ஒரு முன்னுதாரண வாழ்த்துரையிலும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பதவியேற்புக்குப் பின் கவனித்த வகையில், புதிய ஆயர் ஒரு விவிலிய அன்பர். தன் மறையுரைகளைப் பெரும்பாலும் விவிலியச் சொற்கள் கொண்டே கட்டமைக்கிறார். அவருக்கு இலக்கியம் பிடித்திருப்பது ஓர் இனிய ஆச்சரியம். மறைமாவட்ட குருக்கள் எங்களுக்கு வழங்கிய அறிமுக உரையில், புதிய ஆயர் மேற்கோள் காட்டிய அமெரிக்கக் கவிஞர் Robert Frost-‹, ‘the road less travelled’ and ‘miles to go before I sleep’ என்ற இரண்டு பிரபல கவிதை வரிகளும்,  அவருடைய புதிய ஆயத்துவத்தின் அக்கறைகள் மற்றும் செல்லவிருக்கும் திசைகள் குறித்து, ஏதோ ஒரு வகையில் ஆருடம் சொல்கின்றன.

வேலுத்தம்பி தளவாய் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருகின்றீர்களா? 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவிதாங்கூர் மாகாணத்தின் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தளவாய் மற்றும் தளபதியாக ஆட்சி செய்தவர். நாஞ்சில் நாட்டு களரி வீரர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ஆட்சியாளர்களில் ஒருவர். அவர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழின் முதன்மை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘போழ்வு’ என்ற ஓர் அழகிய சிறுகதை இருக்கிறது. அதில், வேலுத் தம்பி பிறந்தபோது நடந்ததாகப் பின்வரும் நிகழ்வைக் கதையாசிரியர் சித்தரிக்கின்றார்.

அது 1765-ஆம் ஆண்டு.  தலக்குளத்தில், குஞ்ஞுமாயூட்டிப் பிள்ளைக்கும், வள்ளியம்மைத் தங்கச்சிக்கும் மகனாக வேலுத்தம்பி தளவாய் பிறந்தார். அந்த ஆண்டுதான் இராஜா கேசவதாஸ் திருவிதாங்கூரின் இராயசம் ஆக பதவியேற்றார். அந்த ஆண்டிலேயே ஒருமுறை இராஜா கேசவதாஸ் பத்மநாபபுரத்திற்கு வந்திருந்தார். குஞ்ஞுமாயூட்டிப் பிள்ளையும், வள்ளியம்மைத் தங்கச்சியும் அவருக்குத் தங்கள் மூன்றுமாதக் குழந்தையைக் காட்ட விரும்பினார்கள். அதற்கு ‘அரசரை முகம்காட்டல்’ என்று பெயர்.  மலர், கனி, நெல், உடைவாள், பொன் என்று ஐந்துவகை மங்கலங்களை அரசர் முன் படைத்து வணங்கினார்கள். அதற்கு ‘திருமுன் காட்சிவைப்புகள்’ என்று பெயர்.

பிறகு குழந்தையை மகாராஜாவின் காலடியில் வைத்துவிட்டு, அவனுடைய தந்தை குஞ்ஞுமாயூட்டிப்பிள்ளை அரசரைப் பார்த்து இவ்வாறு சொன்னாராம்: “தங்கள் சேவைக்காக இதோ இன்னொரு தலையும் இரண்டு கைகளும், தம்புரானே.”

என்னே ஓர் அழகிய வாக்கியம்!

புதிய ஆயர் சகாயராஜ் தம்புராஜ் குறித்தும் நாம் கடவுளிடம் இதே வார்த்தைகளைச் சொல்லலாம்.

“தமிழ்நாடு திரு அவையை முன்னெடுத்துச் செல்லும் உம் பணிக்காக இதோ இன்னொரு தலையும், இரண்டு கைகளும், தம்புரானே!”

புதிய ஆயருக்கு வாழ்த்துகளும், இறை வேண்டல்களும்!!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
news
ஆன்மிகம்
இறைவேண்டலின் பரிமாணங்கள் – 20 (அமைதியில் இறைவேண்டல்)
பேசுவதற்கு ஒரு காலம்; பேசாதிருப்பதற்கு ஒரு காலம்” (சஉ 3:7) என்கிறார் சபை உரையாளர். மனிதரோடு உறவாடுகையில், சில நேரங்களில் நாம் பேசவேண்டும்; சில நேரங்களில் நாம் பேசாதிருக்கவும் வேண்டும். “பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்” (நீமொ 17:28) என்கிறது நீதி மொழிகள் நூல். இதுவே ஞானம்; இதுவே உறவை வளர்க்கும் உத்தி.

இறைவனோடு கொள்ளும் உறவாடலாகிய இறைவேண்டலிலும் இத்தகைய வேறுபாடுகள் இருக்கின்றன. சொற்களைக் கொண்டு இறைவேண்டல் செய்வதற்கு ஒரு காலமென்றால், சொற்களின்றி அமைதியில் இறைவேண்டல் செய்வதற்கும் தேவை இருக்கிறது. அதற்கான  வாய்ப்புகளும் உள்ளன.

எப்படி நாம் நின்றுகொண்டு, அமர்ந்துகொண்டு, முழந்தாளிட்டு வழிபாட்டில் கலந்துகொள்கிறோமோ, அதுபோலவே சில வேளைகளில் குரலெழுப்பியும், சில வேளைகளில் அமைதியிலும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

இறைவாக்கினர் எலியாவை “என் திருமுன் வந்து நில்” என்று கடவுள் அழைத்தபோது, சுழற்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியன எழுந்தன. ஆனால், அவற்றில் ஆண்டவர் இருக்கவில்லை. அதற்குப் பின் ‘அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது’ (1அர 19:12); அதில்தான் எலியா இறைவனைச் சந்தித்தார். அதுபோலவே, சில வேளைகளில் ஆர்ப்பாட்டமான வழிபாடுகளிலோ, ஆரவாரமான இறைவேண்டலிலோ சந்திக்க முடியாத இறைவனை, உள்ளத்தின் ஆழ்ந்த அமைதியிலும், நமக்குள்ளே அவர் பேசும் மெல்லிய ஒலியிலும்தான் கண்டுகொள்ள முடியும். எனவேதான், ‘அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்’ (திபா 46:10) என்னும் திருப்பாடல் வரிகளில் ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

சில வேளைகளில் நாம் ஆர்ப்பரித்து, ஆரவாரத்துடன் குரலெழுப்பி ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்பது உண்மையே. ஆனால், எல்லா வேளைகளிலும் அல்ல என்னும் ஞானத்தை மறந்து விடக்கூடாது. சில வேளைகளில் இரைச்சலும், ஆரவாரமும் தேவையற்றவை, அமைதியே தேவை. எனவேதான், “என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள்; உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்” (ஆமோ 5:23) என்று இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக ஆண்டவர் அறிவித்தார். அது மட்டுமல்ல, “உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள்” (மலா 2:17) என்னும் அறிவுரை நம்மை வியப்படையச் செய்கிறது.

‘அமைதியின் கனி இறைவேண்டல்’ என்பது அன்னை தெரேசாவின் ஒரு புகழ்பெற்ற பொன் மொழி. அமைதியின் ஆழத்தில்தான் ஆண்டவரை நாம் ஆழமாக உணர முடியும். எனவேதான், குழந்தை போன்ற மனநிலை கொண்ட இறையடியார், “என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” (திபா 131:2) என்கிறார்.

திரு அவையின் எல்லாப் புனிதர்களும் அமைதியில் ஆண்டவரோடு உறவாடியவர்களே. சிறப்பாக, திரு அவையின் தொடக்கக் காலத்தில் வனாந்தரத்திலும், பாலைநிலத்திலும் புனித வனத்து அந்தோணியார், புனித வனத்துச் சின்னப்பர் போன்ற புனிதர்கள் அமைதியில் ஆண்டவரை எதிர்கொண்டனர். அவர்களைப் போல புனித அவிலா தெரேசா, பிங்கன் ஹில்டகாட், சியன்னா கத்தரீன், பிரிஜிட் போன்ற மறையனுபவப் புனிதர்களும் (mystics) அமைதிக்குத் தங்கள் இறைவேண்டலில் அதிக அழுத்தம் கொடுத்தவர்கள்.

புனிதர்கள் வாழ்வில் மட்டுமல்ல, நம் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும், அமைதிக்கு ஓர் இடமிருக்க வேண்டும். ‘அமைதியாய் இருப்பதே ஓர் இறைவேண்டல்தான்’ என்னும் புரிதல் நமக்குத் தேவை. இன்று பல இல்லங்களிலும் இரவில் தொலைக்காட்சியின் ஓசை, திறன் பேசிக் காணொளிச் சந்தடிகள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. துறவற இல்லங்களிலும், குருத்துவப் பயிற்சி இல்லங்களிலும் இரவு இறைவேண்டலுக்குப் பிறகு ‘பெரிய அமைதி’ (Grand Silence) கடைப்பிடிக்கப்படுகிறது. நமது இல்லங்களிலும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். வெளியரங்க அமைதியே பல வேளைகளில் உள்ளார்ந்த அமைதிக்கு இட்டுச் செல்லும்.

நமது வழிபாட்டுத் தலங்களிலும் அமைதி வேண்டலுக்கு இடமிருக்க வேண்டும். எனவேதான், இன்று பல பங்குகளில் நற்கருணைச் சிற்றாலயங்கள் உருவாக்கப்பட்டு, அங்கே பலரும் அமைதியில் இறைவேண்டல் செய்யும் நற்பழக்கத்தைக் காண்கிறோம். நமது திருப்பலி மற்றும் இதர வழிபாடுகளிலும் அமைதி வேண்டல் இருக்க வேண்டும் எனத் திருவழிபாட்டு ஒழுங்கு ஊக்குவிக்கிறது. அமைதி இறைவேண்டலுக்கும், நம் வாழ்வை அலசிப் பார்க்கும் ஆன்ம ஆய்வுக்கும் நமது கோவில்களில் நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்கிறது கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி (எண்: 1185).

“விளக்கம் கூறுபவர் இல்லையெனில் அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும்; தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்” (1கொரி 14:28) என்னும் வியப்பான வரிகள் தொடக்கத் திரு அவையின் வழிபாடுகளிலும் அமைதி வலியுறுத்தப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறது. எனவே, நமது வழிபாடுகளிலும் நாம் அமைதி காத்து, உள்ளத்தில் கடவுளோடு உரையாடுவோமாக! “ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு” (திபா 37:7) என்கிறது திருப்பாடல். அதுவே ஓர் இறைவேண்டல்தான் என்பதை உணர்ந்து ஒழுகுவோம்!

(தொடரும்)
news
ஆன்மிகம்
தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் – 36
‘சின்ன சவேரியார்’ மறைப்பணி!

‘சின்ன சவேரியார்’ எனப் போற்றப்பெறும் பிரெஞ்சு இயேசு சபைக் குரு தாமஸ் ஜேக்ஸ் தெ ரோசி  1736 -இல்  மறவ நாட்டில்  மறைப்பணியைத்  துவங்கினார்.  இராமநாதபுரம்,  சிவகங்கை, அறந்தாங்கி  மற்றும்  பட்டுக்கோட்டை  பகுதிகளில்  மறைப்பணியை  மேற்கொண்டு  ஓர் ஆண்டுக்குள்  740  பேர்களுக்குத்  திருமுழுக்களித்தார்.  மரியன்னையிடம்  பக்தி  கொண்டு,  பல இடங்களில்  புனிதமிக்க  கன்னி மரியாவுக்கு  ஆலயங்கள்  எழுப்பினார்.  பண்டாரத்தார் ஆளுகையான  பட்டுக் கோட்டையில்  புனித  சூசையப்பருக்கு  ஆலயம்  எழுப்பினார்.  புனித வியாகுல  அன்னை,  புனித  சுவக்கின்,  புனித  சூசையப்பர்,  புனித  ஞானப் பிரகாசியார்,  புனித சவேரியார்,  அருளாளர்  அருளானந்தர்  பெயரால்  பல  புதுமைகளை  ஆற்றி  மக்களின் விசுவாசத்தைத்  தட்டி  எழுப்பினார்.  13  ஆண்டுகளுக்குள்  (1736-1748)  18,667  பேர்களுக்குத் திருமுழுக்களித்து ஆத்ம தாகத்துடன் பணியாற்றினார். எனவேதான் தந்தை ரோசி அவர்களை ‘சின்ன  சவேரியார்’  என  அன்புடன்  அழைத்தனர். 

1746  முதல்  தந்தை  ரோசி  இடைநிலைச் சாதி கிறிஸ்தவர்களையும்,  தந்தை  ஜோசப்  பெர்னார்டு  தலித்  கிறிஸ்தவர்களையும்  பராமரித்தனர். தந்தை  ரோசி  1748 -இல்  மரணியல்  என்ற  ஊரில்  புனித  வியாகுல  அன்னைக்கு  ஆலயம் எழுப்பினார். 38 ஆண்டுகள் மறவ நாட்டில் மறைப்பணியாற்றிய தந்தை ரோசி, 1774 அக்டோபர் 12 அன்று மறைந்தார். அவர் இம்மறைத்தளத்தைப் பற்றிப் பல மடல்கள் எழுதியுள்ளார். அந்த ஓலைச்சுவடிகள் சருகணியில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சருகணியை  நடுவமாகக்  கொண்டு  தந்தை  ரோசி  1736  முதல்  1774 வரை பணியாற்றினார்.  18 -ஆம்  நூற்றாண்டின்  மத்தியில்  இப்பங்கில்  பல்வேறு சாதிப் பிரிவுகளைக்  கொண்ட  2600 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். சத்திய வேதபோதகர் என்ற பெயரில் முன்னாள் இயேசு சபைக் குரு ஜோசப் தெரேம் 1780-களில் இப்பகுதியில் பணியாற்றினார். சருகணியைப் போன்று சூராணம் புனித சந்தியாகப்பர் மறைத்தளமும் பழமையானது. 1730 -ஆம் ஆண்டு இயேசு சபை மடலின் மூலம் சூராணம் 170 கிறிஸ்தவக் கிராமங்களுக்குத் தலைமையிடமாகத் திகழ்ந்தது தெரிய வருகிறது. தந்தையர் ஜான் அலெக்சாண்டர், வியரா மற்றும் லியோனார்டு ஜோன்ஸ் இங்குப் பணியாற்றினர். பாம்பன், வேதாளை, வேம்பார் மற்றும் பெரியப்பட்டினம் பகுதியில் புனித சவேரியார், மறைச்சாட்சி கிரிமினாலினி  மற்றும்  தந்தை  பல்தசார்  தெ  கோஸ்தா  பணியாற்றியுள்ளனர்.  பாம்பன், வேர்க்கோட்டில் வாழும் 450 கிறிஸ்தவர்களுக்கு 1644 -இல் புனித சந்தியாகப்பருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.  இராமநாதபுரம்  சேதுபதி  இவ்வாலயத்தில்  1715 -இல்  வழிபட்டார்.  கடல்  கலக்கும் முகத்துவாரத்தில்  அமைந்துள்ள  ஆற்றங்கரையில்  புனித  முடியப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம்  இருந்ததை  1715  ஆண்டறிக்கை  குறிப்பிடுகிறது.  1644 -ஆம்  ஆண்டே  இங்குத் திருச்சிலுவைக்கு  எழுப்பப்பட்ட  ஆலயமும்,  80  கிறிஸ்தவர்களும்  இருந்தனர்.  சேதுபதி கட்டத்தேவன்  காலத்தில்  முத்துப்பேட்டையில்  புனித  பிரான்சிஸ்  சவேரியாருக்கு  ஆலயம் எழுப்பப்பட்டது.  இவ்வாறு  18 -ஆம்  நூற்றாண்டின்  இறுதியில்  கிறிஸ்தவம்  மறவநாடு  முழுவதும் பரவியது.

(தொடரும்)