news
ஆன்மிகம்
அருளும் உறவும் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 10)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

மார்த்தா:பாதர், கடந்த முறை நாம் பேசிக் கொண்டிருந்தபோது, கடவுளின் அளப்பரிய ஆற்றல் அருளடையாளங்கள் வழியாக நம்மீது பொழியப்பட்டாலும், பெரும்பாலான மனிதர்கள் அதைப் பெற்றுக்கொள்வதில்லை என்ற கருத்தை முன் வைத்தீர்கள். அது குறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!”

அருள்பணி:ஒருசில உதாரணங்களைப் பார்க்கலாம்! மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாம் பாத்திரத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே வைக்காத வரை மழைநீர் நமதாவதில்லை. பூக்கள் நிறைந்த ஒரு தோட்டம் வழியே நாம் செல்லும்போது அந்த இடம் முழுவதும் நறுமணத்தால் நிரம்பியிருக்கிறது. எனினும், நாம் மூக்கடைப்பால் அவதிப்பட்டோம் என்றால், நறுமணத்தை உணரப்போவதில்லை. தோட்டம் நறுமணத்தை நமக்குத் தந்தாலும், நாம் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக, அதைப் பெற்றுக்கொள்வதில்லை.”

அன்புச் செல்வன்:தந்தையே! மற்றுமோர் உதாரணத்தை நான் தருகிறேன். பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக எத்தனையோ நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றோம். ஆனால், பிள்ளைகளிடம் சரியான மனநிலை இல்லை என்றால், அவற்றை உள்வாங்குவதில்லை, தங்களுடையதாக ஆக்குவதுமில்லை.”

அருள்பணி:ஆம்! இது கடவுளின் கொடைக்கும் பொருந்தும். கடவுளின் கொடைகள் பொழியப்பட்டாலும், அவற்றை நமதாக்குவதற்கு நம்மிடம் சரியான மனப்பக்குவம் இருக்கவேண்டும்.”

கிறிஸ்டினா:அது என்ன தந்தையே!”

அருள்பணி:கடவுளின் கொடைகளை நாம் பெற்றுக்கொள்ள, இரண்டு விதங்களில் நம்மை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாவதாக, கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவில் நாம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இரண்டாவதாக, நம் மனத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.”

அகஸ்டின்:ஒவ்வொன்றாக விளக்குங்கள் தந்தையே!”

அருள்பணி: கடவுளிடம் நாம் அருளைப் பெறுவதற்கும், அவரோடு உறவுகொள்வதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. சாதாரணமாக மனித உறவில்கூட, நாம் சகமனிதரோடு கொள்ளுகின்ற உறவின் ஆழத்திற்கேற்பவே  அவரிடமிருந்து கொடைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நம் பிறந்த நாளுக்கு வருபவர்களில் எப்பொழுதோ நம்மிடம் பேசும் ஒரு நபரும், நம் நெருங்கிய நண்பர் ஒருவரும் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு பேருமே பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள். நிச்சயமாக இருவரும் ஒரே மாதிரியான பரிசுகளை வழங்குவதில்லை. எனவே, கடவுளின் கொடைகளை அதிகமதிகமாக நமதாக்க வேண்டுமெனில், அவருக்கும் நமக்குமிடையேயான உறவை நாம் ஆழப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.”

அகஸ்டின்:கடவுளோடு நாம் கொள்ளக்கூடிய உறவை ஆழப்படுத்துவது குறித்து கொஞ்சம் சொல்லுங்கள் தந்தையே!”

அருள்பணி:கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையேயான உறவைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மனிதர்களுக்கிடையேயான உறவைப் பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்வது அவசியமானது. மனித உறவில் நான்கு நிலைகள் உள்ளன. முதலாவது, அறிமுக நிலை: ஒரு நபரை நாம் புதிதாகச் சந்திக்கும்போது நிகழ்வது. இரண்டாவது, அறிவு சார்ந்த நிலை. ஒருவருக்கொருவர் தகவல்களையும் அறிவுப்பூர்வமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது. மூன்றாவது, உணர்வுநிலை. ஒருவர் மற்றவர்மீது உணர்வுப்பூர்வமாக ஈடுபாடு கொண்டிருப்பது. நான்காவது நெருக்க நிலை (intimate stage). தனக்கும் அடுத்த நபருக்குமிடையேயான ஆழமான தொடர்பை எல்லா நேரங்களிலும் உணரும் நிலை இது.

கடவுளோடு உள்ள உறவிலும் நாம் இந்த நான்கு நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சிலர் ஆலயத்திற்கு எப்போதாவது வருவது, ஒருசில குறிப்பிட்ட மனப்பாடம் செய்யப்பட்ட வார்த்தைகளை இறைவேண்டல்களாகச் சொல்வது, கடமை உணர்வோடு கிறித்தவ வாழ்வை அணுகுவது போன்ற செயல்பாடுகளைச் செய்கின்றனர். இது அம்மனிதர்கள் கடவுளுக்கும் தங்களுக்குமிடையேயான உறவில் அறிமுக நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அடுத்ததாக, ஆன்மிக வாழ்வு பற்றிய புத்தகங்களை வாசிப்பது, அதன் பின்னணியில் தன் வாழ்வைப் புடமிடுவது போன்றவை நாம் இறையுறவில் இரண்டாம் நிலையில் இருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேற்கண்ட இருவிதமான செயல்பாடுகளை ஆர்வத்தோடும் தேடலோடும் தொடர்ந்து மேற்கொண்டோம் என்றால், நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒருவிதமான உணர்வுப் பிணைப்பு ஏற்படுவதை நம்மால் உணர முடியும். இது நாம் இறையுறவின் மூன்றாம் நிலைக்குள் கடந்து செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய உணர்வுநிலைக்குள் நாம் ஆழப்பட ஆழப்பட கடவுளைப் பற்றிய உணர்வு எப்பொழுதுமே நம்மோடு இருந்து கொண்டிருக்கும். இதுவே நான்காவது நிலை.”

கிறிஸ்டினா:இறையுறவின் இந்த நான்கு நிலைகளுக்கும், கடவுளின் அருளை நாம் பெற்றுக் கொள்வதற்கும் நேரடித் தொடர்பு உண்டு என்கிறீர்கள். அப்படித்தானே!”

அருள்பணி:ஆம்! புனித அவிலா தெரசா ஓர் அழகான உதாரணம் கொண்டு இக்கருத்தை விளக்குகிறார். ஒரு தோட்டத்திற்கு நாம் நீர் பாய்ச்சும்போது, நான்கு வகைகளில் நீர் பாய்ச்ச முடியும். முதலாவதாக, கிணற்றிலிருந்து வாளியின் வழியாக நீரை இறைத்துப் பாய்ச்சுவது. இரண்டாவதாக, இயந்திரங்களின் உதவியோடு நீரை இறைத்துப் பாய்ச்சுவது. மூன்றாவதாக, அந்தப் பகுதியில் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருந்தது என்றால், அதைப் பாத்திகளுக்குத் திருப்பிவிடுவது. நான்காவதாக, மழையின் வழியாகத் தோட்டம் நீரைப் பெற்றுக் கொள்வது.

நம் உள்ளமாகிய தோட்டத்திற்கு இறைவனின் அருளாகிய நீரை நாம் பெற முயற்சிக்கிறோம். உறவின் தொடக்கநிலையில் இருந்தோம் என்றால், அது கிணற்றிலிருந்து வாரி இறைத்து நீரைப் பெற்றுக்கொள்வது போன்றது. நம் வாழ்வில் நாம் நிறைய முயற்சிகளை எடுப்பது போன்று தெரியும்! அதனால் கிடைக்கும் பலனோ மிகவும் குறைவானதாக இருக்கும். அதேவேளையில், கடவுளுக்கும் தங்களுக்குமிடையேயான உறவில் நான்காவது நிலையாகிய நெருக்க நிலைக்குச் சென்றவர்களோ, கடவுளின் அருள்மழை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் தங்களது உள்ளமாகிய தோட்டத்தில் பொழியப்படுவதை உணர்கிறார்கள்.”

அன்புச் செல்வன்:தந்தையே! நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது, ஊதாரிமைந்தன் உவமையின் பின்னணியில் ஒரு சிந்தனை எனக்குத் தோன்றுகிறது. மூத்தமகன் தன் தந்தையைப் பார்த்து, தான் அவருக்கு அடிமைபோல்  வேலை செய்ததாகவும், தந்தையோ தன் நண்பர்களோடு கொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட தரவில்லை என்று சொல்வான். தந்தையோ, ‘மகனே! என்னுடையவை யாவும் உன்னுடையவையேஎன்று சொல்வார். அதாவது தந்தையுடைய சொத்து முழுவதும் தனக்கு உரிமை என்றாலும், மூத்தவனிடம் மகன் என்ற உணர்வை விட, அடிமை என்கின்ற உணர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக, ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட எடுக்க யோசித்திருக்கிறான். இது அவனிடம் இருந்த பிரச்சினைதானேயொழிய, தந்தையுடைய பிரச்சினையில்லை.”

அருள்பணி:ஆம்! கடவுளின் அருள் எல்லா இடங்களிலும் எப்பொழுதுமே கொட்டிக் கிடந்தாலும், நமது மனநிலைக்கு ஏற்பவும், நம் உறவு நிலைக்கு ஏற்பவுமே நாம் பெற்றுக் கொள்கிறோம்.”

மார்த்தா:கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவை ஆழப்படுத்திக் கொள்வது எப்படி பாதர்?”

அருள்பணி:கடவுளுடனான உறவு என்பது ஆலயத்தோடு முடிந்துவிடக்கூடிய ஒன்று மட்டுமல்ல! சக மனிதர்களுடனான உறவில் ஆழப்படும்போதும், இயற்கையுடனான நம் உறவு ஆழப்படும்போதும், கடவுளோடு உள்ள உறவில் நாம் வளர்கிறோம் என்று அர்த்தம். அடுத்தபடியாக, ஆலயத்தில் நாம் கொண்டாடும் அருளடையாளக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முயற்சிப்பதன் வழியாகவும் இறையுறவை நாம் ஆழப்படுத்திக் கொள்ள முடியும்.”

கிறிஸ்டினா:அர்த்தமுள்ள அருளடையாளக் கொண்டாட்டம் என்றால் என்ன தந்தையே?”

அருள்பணி:ஒவ்வோர் அருளடையாளக் கொண்டாட்டத்திலும் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, வெளியடையாளச் செயல்பாடுகள். இரண்டு, இவ்வடையாளச் செயல்பாடுகள் சுட்டிக்காட்டும் அனுபவம். பல நேரங்களில் அருளடையாள நிகழ்வுகளைக் கொண்டாடுபவர்களும் சரி, பங்கேற்பவர்களும் சரி, இரண்டாவது பகுதிக்குள் நுழைவதே கிடையாது. வெளி அடையாளங்களாக இருக்கும் சில வார்த்தைகளையும் செயல்பாடுகளையும் நாம் பிடித்துக்கொண்டு, அவை சுட்டிக்காட்டும் அனுபவத்திற்குள் செல்வதில்லை. சரியான பங்கேற்பு என்பது அடையாளச் செயல்பாடுகள் சுட்டிக்காட்டும் அனுபவத்திற்குள் நுழைய முயற்சி எடுப்பது. அப்போது நம் உள்ளத்திற்குள் இறைவனின் அருள் அபரிமிதமாகப் பொழியப்படுவதை உணர ஆரம்பிப்போம்.”  

(தொடரும்)

news
ஆன்மிகம்
வாழ்வை எழுதுதல் (கண்டனையோ, கேட்டனையோ! – 28)

அமெரிக்க இறையியலாளர் ஜெரி மெக்ரெகோர் எழுதி,  மும்பை பவுலைன் பதிப்பகம் வெளியிட்டுள்ள40 Ways to Get Closer to Godஎன்ற ஆங்கில ஆன்மிகப் புத்தகத்தை அண்மையில் விரும்பி வாசித்தேன். சிறிய நூல். ஆற்றொழுக்கான ஆங்கிலம். திருவிவிலியச் சான்றுகளும், பிரபல ஆன்மிகவாதிகளின் மேற்கோள்களும், எழுத்தாளர் படித்தவர் என்பதைக் காட்டுகின்றன.  விரிவான 40 தலைப்புகள்; ஒவ்வொரு பிரிவின் கீழும் வாசகர் செய்து பார்க்கக்கூடிய பயிற்சிக் குறிப்புகள்... என ஜெரி மெக்ரெகோர் இந்த நூலை ஏறக்குறைய ஒருspirtual workbook-ஆன்மிக பயிற்சிக் கையேடு வடிவில் தந்துள்ளார்.  200 ரூபாய்  தாராளமாகக் கொடுக்கலாம்.

கடவுளை நெருங்கிச் செல்ல வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால், அது Repidex-இன்முப்பது நாளில் ஆங்கிலம் கற்பதுபோன்று அவ்வளவு எளிதான செயல் அல்ல; ஆயுள்கால அர்ப்பணிப்பு தேவை. ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்ய வேண்டும். நிறையத் தேர்வுகள் நடக்கும். விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும். பல நேரங்களில் இது கடினமாக உள்ளது. ஒரு கோர்வையாக நம்மால் ரொம்ப தூரம் செல்ல முடிவதில்லை. உலகம் அடிக்கடி குறுக்கே வந்துகேட்போடுகிறது. ‘சரிஎன்று ஓர் இடைவெளி எடுத்துக்கொண்டு போய், சில பலஇன்ப/துன்ப சுற்றுலாக்கள்அடித்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தால், கடவுள் விலகிப் போய், கண்ணுக்கெட்டாத தொலைவில் நின்றுக் கொண்டிருக்கிறார். திரும்பவும் முதலிலிருந்தா? கடவுளை நெருங்கிச் செல்லும் ஆன்மிகப் பயணத்தில், நாம் தொடர்ந்து நீடித்திருக்க ஜெரி மெக்ரெகோர் 40 நடைமுறைக் குறிப்புகளை இந்நூலில் தருகிறார். அவற்றில் இரண்டு பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே...

நோன்பு: அறிவியலாளர்கள் அவ்வப்போதுஅழிந்து வரும் உயிரினங்கள்என்று ஒரு பட்டியல் வெளியிடுவார்கள். வாசித்திருக்கிறீர்களா? காண்டாமிருகம், பனிச்சிறுத்தை, கொரில்லாக்கள் என்று. அதுபோல அழிந்து வரும் நல்ல பழக்கங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், முதல் பத்து இடத்தில் நோன்பு கட்டாயம் இருக்கும். மற்றொரு பழக்கம், பெரியவர்களுக்குவணக்கம்சொல்வது (அழிந்து வரும் அருளடையாளம்-ஒப்புரவு). உடல் ஒறுத்தலுக்கு தமிழ்க் கலாச்சாரத்தில் முக்கிய இடம் உண்டு. முன்பெல்லாம் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருப்பார்கள்இப்போது அது வழக்கொழிந்து விட்டது. மக்கள் நிறையச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைகள். பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற துரித உணவுகள் வருகைக்குப் பின், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இன்றுobesityஎன்று சொல்லப்படும் உடல் பருமன் பிரச்சினை, இந்தியாவில் ஒரு கொள்ளை நோய்an epidemic எனக் கூறுகிறார்கள். ஆசைப்படுவதை, ஆசைப்படும் நேரத்தில், ஆசைப்படும் அளவுக்குச் சாப்பிடுவது சுதந்திரம் அல்ல, அடிமைத்தனம். இதை foodies உணர வேண்டும்.

உணவு விளம்பரங்கள் அளவுக்கு, உடல் எடையைக் குறைக்கும் நிறுவன விளம்பரங்கள் பெருகிவிட்டன. அண்மையில் இரயிலில் பயணம் செய்தபோது, இரயிலின் சிறிய டாய்லட் கதவில் இது போன்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ‘உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?’ என்ற கேள்வியும், வயிறு தள்ளிய ஓர் ஆணின் அரை நிர்வாணப் படமும் போட்டு முகவரி, போன் நம்பர் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளம்பரம் அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதன் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று இது ஒரு பணம் கொழிக்கும் தொழில். சிறப்பு உணவுகள், ஆலோசனைகள், உடற்பயிற்சிகள், சப்போர்ட் குழுக்கள் எனக் கலர் கலர் வார்த்தைகளில் ஆசை வலை விரித்து, பணம் பிடுங்குகிறார்கள்.   அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் மக்கள் 40 கோடி டாலர்களை எடையைக் குறைக்கச் செலவிடுகிறார்களாம். அந்தப் பயிற்சியாளர்கள் அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார்கள்? ‘உணவைக் குறை, நடஎன்பதைத் தவிர்த்து! ஓர் ஆன்மிகப் பயிற்சியாக நோன்பும் அதையே சொல்கிறது... ‘உணவைக் குறை; கடவுளை நோக்கி நட!’

திருவிவிலியம் நோன்பிற்கு முக்கிய இடம் கொடுக்கிறது. யூதப் பண்பாட்டில் அது ஒரு முக்கிய சமய, ஆன்மிகச் செயல்பாடு. கடவுள்மீது கவனத்தைக் குவிக்கும் அரசபாட்டைபாவக்கழுவாய் நாளில், இஸ்ரயேல் நாடு முழுவதும் மக்கள் நோன்பிருந்தார்கள். மத்தேயு 6:16-இன் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்: “நீங்கள் நோன்பு இருக்கும் போது....” என்று கூறி இயேசு ஆரம்பிக்கிறார். “நீங்கள் நோன்பு இருந்தால்.....” என்று கூறவில்லை. நோன்பு, ஒரு சாதாரண யூதச் செயல். இயேசு தம் பணிவாழ்வை ஆரம்பிக்கும் முன், பாலைவனத்திற்குச் சென்று நாற்பது நாள்கள் நோன்பிருக்கிறார். “அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லைஎன்று லூக்கா 4:2-இல் கூறப்பட்டுள்ளது. நோன்பும் இறைவேண்டலும் கைகோர்க்கும்போது, அது ஒரு வல்லமை மிக்க கருவி. “ஏன் இந்தப் பேயை எங்களால் ஓட்ட முடியவில்லை?” என்று சீடர்கள் கேட்கும்போது, இயேசு, “இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி, வேறு எதனாலும் வெளியேறாதுஎன்று மாற்கு 9:29-இல் கூறுகிறார்.

தொடக்கக்காலத் திரு அவை வாழ்விலும் நோன்பைப் பார்க்க முடிகிறது. திப 13-ஆம் பிரிவில், பவுலையும் பர்னபாவையும் பணிக்கு அனுப்பும் போது, “அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள். தங்கள் கைகளை அவ்விருவர் மீதும் வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்என்று கூறப்பட்டுள்ளது.

நோன்பு கடவுளை நெருங்கிச் செல்ல ஒரு முக்கிய வழி. உணவில் மட்டுமல்ல, பல வடிவங்களில் நோன்பு செயல்படுத்தப்படலாம். பொருள்களை வாங்கிக் குவிப்பது, அலங்காரம் செய்வது, ஃபேஸ் புக், ரீல்ஸ் போன்ற தளங்களில் மேய்வது, வீடியோ கேம்ஸ் ஆடுவது, புறணிப் பேசுவது.... என நம்மை ஆட்டுவிக்கும் எந்த இச்சையையும் சில காலம் உத்தரவாதமாகத் தவிர்த்து, அது ஏற்படுத்தித் தரும் sielnt space... அமைதி வெளியில், கடவுளைப் பற்றி சிந்திக்க முடிந்தால், அதுதான் நோன்பு. முயன்று பார்க்கலாம்.

ஆன்மிக நாள்குறிப்பேடு: ஜெரி மெக்ரெகோர் தன் நூலில் பரிந்துரைக்கும் மற்றொரு வழி, ஆன்மிக நாள்குறிப்பேடு எழுதுவது A spiritual diary! இன்றைக்கு யாரும் டைரி எழுதுகிறார்களா? என்று தெரியவில்லை. அப்பாயின்ட்மென்ட் மற்றும் நிகழ்வுளைக் கூட google calendar போன்ற செயலிகளில் குறித்துக்கொள்வது வசதியாக உள்ளது. ஆனால், கடவுள் டைரி எழுதுகிறார்... ஒவ்வொரு நாளும்! திபா 56:8-இல், “என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?” என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். அந்தக் குறிப்பேட்டை வாய்ப்பு கிடைக்கும்போது வாசித்துப் பார்க்க வேண்டும்.

எதில் எழுதுகிறோம் என்பது முக்கியம் அல்ல; எழுதுவதுதான் முக்கியம்! தாளிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ... எதிலாவது எழுதி வையுங்கள். அதுதான் ஜெரி மெக்ரெகோர் கூறும் அறிவுரை.

பிரபல டச்சு ஆன்மிக எழுத்தாளர் ஹென்றி நோவன், “நான் தொடர்ந்து எழுதுகிறேன். எழுதுவதை எப்போதும் நிறுத்துவதில்லை. எழுத்தே என்னை உயிருடன் வைத்திருக்கிறது. என் எழுத்து, என்னிடமிருந்தே என்னை சற்று விலக்கி வைத்து, நான் ஆற்றாமையில் அமிழ்ந்து விடாமல் பாதுகாக்கிறதுஎன்று கூறுகிறார்.

எழுதச் சொல்லிப் பணிக்கிறது திருவிவிலியம். குறிப்பாக, பழைய ஏற்பாடு. ‘எழுதி வை... எழுதி வைஎன்று எத்தனை முறை கடவுள் திருவிவிலியத்தில் கூறுகிறார். விடுதலைப் பயணம் 17:14-இல் ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதை நினைவு கூரும்படி ஒரு நூலில் எழுதிவை; ‘நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன்என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவைஎன்று கூறுகிறார். அபக்கூக்கு 2:2: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுதுஎன்று கூறுகிறது. திருவெளிப்பாடு 1:19-இல், வானதூதர் யோவானிடம், “எனவே, நீ காண்பவற்றை அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவைஎன்று கூறுகிறார்.

ஏன் எழுத வேண்டும்? ஏனென்றால், மனிதர்கள் மிகப்பெரும் மறதியாளர்கள். நம் டிசைன் அப்படி! எளிதில் எல்லாவற்றையும் மறந்து விடுவோம். எழுதி வைக்கப்படும் சொற்கள் நம் நினைவைப் புதுப்பித்து, அவை அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றன.

சரி, மெக்ரெகோர் சொல்லும் இந்த ஆன்மிக டைரியில் என்ன எழுத வேண்டும்? ‘அங்கே  போனேன், இங்கே போனேன், அவளைப் பார்த்தேன், புடவை நன்றாக இருந்தது, சாப்பாடு காரமாக இருந்ததுபோன்றஅல்பங்கள்கூடாது. இது போன்ற தகவல்களுக்கு எந்த டைரி மதிப்பும் இல்லை. உங்கள் ஆன்மிக அனுபவங்களை எழுதுங்கள். நீங்கள் நினைப்பது, உணர்வது, உங்களுக்குத் தோன்றுவது, உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், ஆற்றாமைகள், நம்பிக்கைகள், தோல்விகள், சவால்கள், உறவுகளில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோசங்கள், துக்கங்கள், முடிவுகள்! இதில்சரி-தப்புஎன்று எதுவும் இல்லை. இது உங்களுக்கே உங்களுக்கான பிரத்யேக டைரி.

இலக்கணப் பிழையில்லாமல், மார்ஜின் கோடு போட்டு, கண்ணில் ஒத்திக்கொள்ளும் கையெழுத்தில், அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இயல்பாக எழுதுங்கள். நீங்கள் மட்டும்தான் வாசிக்கப் போகிறீர்கள். கடவுள் இலேசாக எட்டிப் பார்க்கலாம். உண்மையாக எழுதுங்கள். பொறாமைப்பட்டால், ‘பொறாமைப்பட்டேன்என்று எழுதுங்கள். உங்களுக்கு நீங்களே பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி எழுதிய பல நாள்களின் குறிப்புகளை ஓர் இடைவெளி விட்டு, ஒருசேர வாசிக்கும்போது, உங்களுக்குச் சில புரிதல்கள் கிடக்கும். ‘நான் முன்னேறுகிறேனா? இல்லை, பின்னோக்கிச் செல்கிறேனா? என் பலவீனங்கள் என்ன? நான் எங்கு சறுக்குகிறேன்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்? என் பலங்கள் என்ன? அவற்றை எப்படி இன்னும் வளர்க்கலாம்? நான் கைவிட வேண்டிய விசயங்கள் என்ன? நான் மாற்றி அமைக்க வேண்டிய விசயங்கள் என்ன?’

அந்தக் குறிப்புகளினால் உங்களுக்குக் கிடைக்கும் திறப்புகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

யாருக்குத் தெரியும்? ஒரு சாதாரண டைரி எழுதும் பழக்கம், உங்கள் வாழ்க்கை வரலாற்றையே மாற்றி எழுதலாம்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
மரியா காட்சி அனுபவங்கள் (திரு அவையின் புதிய விதிமுறைகள் – 02)

2. பொதுவான வழிகாட்டுதல்கள்

உரோமைப் பேராயம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி திரு அவை தனது உய்த்துணரும் கடமையைக் கீழ்க்காணும் நான்கு பொதுவான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் செய்கிறது:

1) சாட்டியுரைக்கப்பட்ட (Alleged) இயல்நிலை கடந்த நிகழ்வுகளில் இறைச் செயல்பாட்டின் அறிகுறிகளை உறுதிப்படுத்துதல்;

2) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணங்கள் அல்லது எழுத்துகளில் நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகளுக்கு முரணானது எதுவும் உள்ளனவா? என்று கண்டறிதல்;

3) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளிலிருந்து வெளிப்படும் ஆன்மிகக் கனிகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏற்கலாமா? பிரச்சினைக்குரிய கூறுகளிலிருந்து அவை சுத்திகரிக்கப்பட வேண்டுமா? அல்லது இடையூறு நேர்வுகளிலிருந்து இறைமக்கள் எச்சரிக்கப்பட வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதல்;

4) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளின் அருள்பணித் தரத்தைக் கணித்திட திரு அவைசார் அதிகாரத்திற்குப் (மறைமாவட்ட ஆயர், ஆயர்கள் பேரவை, நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம்) பரிந்துரைக்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் காணுதல்.

3. கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாட்டு முறைகள்

சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வுகளைப் பற்றிய தகவலை மறைமாவட்ட ஆயர் பெறும் பொழுது, குறைந்த அளவு உண்மை இருக்கிறதா? என்பதைக் கண்டறியதானோ அல்லது பொருத்தமான தனது பதிலாள் வழியாகவோ கவனமுடன் விசாரணை நடத்த வேண்டும். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வு போலியானது என்றறிந்தால் அதற்கான அறிவிப்பைக் கொடுத்து அவ்விவகாரத்தை அத்துடன் முடித்துவிட வேண்டும். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வில் குறைந்த அளவு உண்மை இருப்பதாகத் தெரிந்தால், அடுத்து மறைமாவட்ட ஆயர் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அதில் ஓர் இறையியல் வல்லுநர், ஒரு திரு அவைச் சட்ட வல்லுநர், நிகழ்வின் இயல்புக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிபுணர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அக்குழு சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய அறிவியல், தொழில்நுட்ப, உளவியல்பூர்வமான சான்றுகளைச் சேகரிக்க வேண்டும். அச்சான்றுகளைக் கீழ்க்காணும் நேர்மறை மற்றும் எதிர்மறை வரன்முறைகளின்படி திறனாய்வு செய்ய வேண்டும்.

நேர்மறை வரன்முறைகள்

1) சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களைப் பெற்றவர்கள் மற்றும் அவர்களது சாட்சிகளின் நன்னடத்தை மற்றும் நம்பகத்தன்மை;

2) இயல்நிலை கடந்த நிகழ்வும் நிகழ்வின் செய்தியும் திரு அவை மறைக் கோட்பாடு மற்றும் மரபுறுதி வழுவாமைக்கு முரணாக இல்லாதிருத்தல்;

3) நிகழ்வைப் பற்றி முன்னறிந்து கூற முடியாத இயல்பு; அது சம்பந்தப்பட்டவர்களின் திட்டமிடப்பட்ட செயலாக இல்லாதிருத்தல்;

4) தூய ஆவியாரிடமிருந்து வரும் கிறித்தவ வாழ்வின் கனிகளான செப ஆர்வம், மனமாற்றம் இறையழைத்தல், பிறரன்புப் பணிகள், பக்தி, திரு அவை உறவு ஒன்றிப்பின் வளர்ச்சி போன்றவை இந்நிகழ்வுகளில் வெளிப்படுகின்றனவா? என்று கண்டறிதல்.

எதிர்மறை வரன்முறைகள்

1) வெளிப்படையான மறைக்கோட்பாடு சார்புடைய தவறு இந்நிகழ்வில் இருப்பதற்கான சாத்தியம்;

2) திரு அவையில் பிளவை ஏற்படுத்தும் மனப்பான்மை;

3) நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புள்ள ஆதாயம், புகழ், சமூக அந்தஸ்து, சுய இலாபம், ஆதிக்கம்;

4) நிகழ்வுடன் தொடர்புள்ள மோசமான ஒழுக்கக் கேடு நடவடிக்கைகள்;

5) நிகழ்வில் சம்பந்தப்பட்டவரின் உளவியல் மற்றும் மனநோய் கோளாறுகள்;

6) காட்சி அனுபவங்களைப் பெற்றதாகக் கூறுவோரிடம் காணக்கூடிய மனப்பிரமை, மனப்பிறழ்வு, மனச்சிதைவு மற்றும் வெறித்தனம்.

மறைமாவட்ட ஆயர் மேற்கண்ட நேர்மறை / எதிர்மறை வரன்முறைகளைக் கையாண்டு, சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த நிகழ்வைக் கவனமுடன் ஆய்வு செய்து தனது தீர்ப்பை உரோமைப் பேராயத்திற்கு அனுப்ப வேண்டும்.

4. சாத்தியமான முடிவுகள்

சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களின் நிகழ்வைப் பற்றியத் தீர்ப்பை மறைமாவட்ட ஆயரிடமிருந்து பெற்ற பின்னர் கீழ்க்காணும் சாத்திய முடிவுகளை உரோமைப் பேராயம் செயல்படுத்தும்.

தடை இல்லை(Nihil Obstat)

தடை இல்லைஎன்ற முடிவு, சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த ஒரு நிகழ்வில் வெளிப்படும் தூய ஆவியானவருடைய செயல்பாட்டின் அறிகுறிகளுக்கு ஏற்புத் தெரிவித்தல் ஆகும். அதாவது, அந்த நிகழ்வின் அருள்பணிசார் பயன்களை உய்த்துணர்ந்து அதனைப் பரப்புவதை-திருப்பயணங்கள் உள்பட- மறைமாவட்ட ஆயர் ஊக்குவிப்பது ஆகும். ‘தடை இல்லைஎன்ற முடிவு அந்நிகழ்வை நேர்மறையாக அங்கீகரிக்கும் அறிக்கை என்று கருதமுடியாது; அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் பொருளாகாது; அதை எல்லாரும் ஏற்றுக்கொண்டு நம்பவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதும் ஆகாது; அதை நம்பினால்தான் ஒருவர் உண்மைக் கிறித்தவராக இருக்கமுடியும் என்று கருதவும் முடியாது. ஏனெனில், கிறித்தவ அருள் வாழ்விற்கும் மீட்பினை வழங்கும் நிரந்தர வழிமுறைகளுக்கும் அடிப்படையானவை நற்செய்திப் படிப்பினைகள். குறிப்பாக, நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு மட்டுமே (எபே 3:17; தெச 1:3). அதனால் ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்விற்கு நம்பிக்கையாளர் தங்களின் பற்றை விவேகமான முறையில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது என்பதுவேதடை இல்லைஎன்ற முடிவின் அர்த்தம் ஆகும்.

2) ‘கண்முன் காட்டுக (Prae Oclis Habeatur)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வில் முக்கிய நேர்மறை அறிகுறிகள் காணப்பட்டாலும், அதில் குழப்பங்கள் அல்லது சாத்தியச் சிக்கல்களின் அம்சங்கள் இருப்பதாக மறைமாவட்ட ஆயர் உய்த்துணர்ந்தால், அந்நிகழ்விலிருந்து ஆன்மிக அனுபவம் பெற்றதாகக் கூறுபவர்களிடம் கவனமாக உரையாடல் நடத்த வேண்டும் என்பதும், அந்நிகழ்வைப் பற்றிய எழுத்துப் பதிவுகள் அல்லது செய்திகள் இருப்பின், அவற்றின் மறைப்படிப்பினைத் தெளிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும்கண்முன் காட்டுகஎன்ற முடிவின் அர்த்தம் ஆகும்.

3) ‘கவனத்தில் கொள்க (Curatur)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவ நிகழ்வும் அதனை எண்பிக்கக்கூடிய ஆன்மிகக் கனிகளும் இணைந்துள்ளதாகத் தோன்றும் நிலையில், நம்பிக்கையாளர்களைக் கவலைக்குள்ளாக்கும் தடை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேவேளையில், அந்நிகழ்வை மறைமாவட்ட ஆயர் ஊக்குவிக்க வேண்டாம் என்று இந்த முடிவின் வழியாக அறிவுறுத்தப்படுகிறார்.

4) ‘ஆணையின் கீழ் (Sub Mandato)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்விற்கும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லை என்றாலும், அதைத் தவறாகப் பயன்படுத்தி முறையற்றப் பொருளாதார ஆதாயம் அல்லது ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடும் ஆள்கள் அல்லது குழுக்கள் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தின் அருள்பணிசார் நிர்வாகத்தை மறைமாவட்ட ஆயரிடமோ அல்லது அவரது உரிமைப் பதிலாளரிடமோ திருத்தந்தை ஆட்சிப்பீடம் ஒப்படைக்கும்.

5) ‘தடை செய்தலும் மூடுதலும் (Prohibetur et Obstruatue)

ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வில் பல நேர்மறை அம்சங்கள் இருப்பினும், அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் சிக்கல்களும் தீவிரமாக இருக்கலாம். அப்பொழுது மக்களுக்கு முறையான மறைக்கல்வி வழங்கி அவர்கள் உண்மையான ஆன்மிக நலன்களில் கவனம் செலுத்தும்படி இடத்து ஆயரிடம் உரோமைப் பேராயம் இந்த முடிவின் வழியாகக் கோரும்.

6) ‘இயல்நிலை கடந்த நிகழ்வல்ல என்ற அறிக்கை (Declaratio de Non – Supernaturalitate)

புனைவுக் காட்சியாளர்கள் அல்லது நம்பத்தகுந்த சாட்சிகளின் உண்மை வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வு இயல் நிலை கடந்ததல்ல என்று அறிக்கையிடும்படி இடத்து ஆயருக்கு உரோமைப் பேராயம் அனுமதி அளித்தல் இந்த முடிவின் அர்த்தம் ஆகும்.         

(தொடரும்)

news
ஆன்மிகம்
குழந்தைகளை நேசிப்போம் பாதுகாப்போம்! (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை – 5)

பிப்ரவரி 3-ஆம் தேதி வத்திக்கானில்  கிளமெந்தினா அறையில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட உலகக் குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டி பன்னாட்டுக் கருத்தரங்கில்குழந்தைகளை நேசிப்போம்; பாதுகாப்போம்என்ற மையக் கருத்தில் திருத்தந்தை ஆற்றிய உரையை எளிய தமிழில் சுருக்கமாகத் தர விழைகிறேன்.

1. குழந்தைகளின் இன்றைய நிலை

மில்லியன் கணக்கான குழந்தைகள் வறுமையால், போர்களால், கல்வியின்மையால், அநீதியால், சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை நாடுகளில் குழந்தைகளின் வாழ்வு  சிதைக்கப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்தப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல நாடுகளில் குழந்தைகள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் நல வாழ்வு பணிக் குழு அதிகக் கரிசனையுடன் குழந்தைகளை அணுக வேண்டி இருக்கிறதுபலவிதமான குழப்பங்களில் நடமாடும் இளையோரை, தங்களைத் தாங்களே காயப்படுத்தும் இளையோரை இனம் கண்டு, பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

செயல்திறன் அதிகமாகக் காணப்பட்டாலும் முதியோரைப்போல குழந்தைகளையும் விளிம்பு நிலையினராய்ப் பார்ப்பதும் வேதனைக்குரியது. நம்பிக்கை இழந்த நிலையற்ற எதிர்காலத்தைச் சந்திக்கும் இளையோர், வேலை வாய்ப்பில்லாத இளையோர், படித்தும் பயனில்லாத நிலைகளை எண்ணிப் பார்க்கும் இளையோர், கனவு நனவாகாது என்னும் மனநிலையில்  வாழும் இளையோரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் சோர்வடைவது உறுதி.

குண்டுவெடிப்பில் சிதறிப்போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அதிகார மமதையில் குழந்தைகளைக்  கொல்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தைகளின் வாழ்வைவிட இந்த உலகில் உயர்வானது வேறு எதுவுமில்லை. குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பதாகும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள்; வன்முறையினால் பாதிக்கப்படுகின்றார்கள்; குற்றமிழைக்கும் கும்பல்களால் குழந்தைகள் அனாதையாக்கப்படுகிறார்கள்; ஓரங்கட்டப்படுகிறார்கள். பாதுகாக்க வேண்டியவர்களே குழந்தைகளைக் கொல்வது ஆபத்தானது. சண்டை சச்சரவுகளுக்கும், சமூக மன அழுத்தங்களுக்கும், பெற்றோரின் பிரச்சினைகளுக்கும் குழந்தைகள் பலியாகின்றனர்.

புலம்பெயரும்போது அதிகமான குழந்தைகள் கடலில், பாலைவனத்தில், சாலைகளில்  இறக்கின்றனர். மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், உதவிக்கு யாரும் இல்லாமல் தவிக்கின்றனர். சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தாலும், ஒரே ஒரு கேள்விதான்: ‘குழந்தைகள் வாழ்வு இப்படித்தான்  முடிய வேண்டுமா?’ இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

2. கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்

சமத்துவமற்ற பொருளாதாரம், போர்களின் கொடுமை, போதிய மருத்துவமும் கல்வியும் இல்லாமை போன்றவற்றால் குழந்தைப்பருவம் மறுக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இதனை எதிர்த்துக் கண்டிப்பது அமைதிக்கான ஒரு கூக்குரலாக அமையும். இந்த அநீதியின் சுமை நமது சகோதர-சகோதரிகளில் மிகவும் பலவீனமானவர்களையும் பாதுகாப்பற்றவர்களையும்தான் அதிகம் பாதிக்கிறது. இது ஓர்  உலகளாவிய தார்மீகப் பிரச்சினை.

நம் இதயத்தின் கருணையும் இரக்கமும் ஒருபோதும் கடினமாகி விடக்கூடாது. 40 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பல்வேறு பிரச்சினைகளால் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வீடிழந்து நிற்கின்றனர். குழந்தைகள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். சுமார் 160 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். பலர் கடத்தப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். மில்லியன் கணக்கில் அகதிகளாய் குடும்பங்களோடு அதேநேரத்தில் தனிமையாக அலைகிறார்கள்.

யார் துணையும் இல்லாமல் வாழும் குழந்தைகளின் வாழ்வு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடியே ஐம்பது இலட்சம் குழந்தைகளுக்குச் சட்டப்பூர்வ இருப்பு இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கல்வி சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் ஒரு தடையாக இருக்கிறது. சட்டப் பாதுகாப்பு இல்லாததால் அடிமைகளாக விற்கப்படலாம். ரோஹிங்கியா இளையோர் பதிவு செய்யப் போராடுகிறார்கள். அமெரிக்க எல்லையில் உள்ள ஆவணமற்ற குழந்தைகள் தெற்கிலிருந்து அமெரிக்காவை நோக்கி விரக்தியுடன் வருகின்றனர். இவ்வாறு குழந்தைகள் மீதான அடக்குமுறை வரலாற்றில் தொடர்கிறது.

3. குழந்தைகளுக்கான கரிசனையே எதிர்நோக்கின் ஆதாரம்

நமது தாத்தா-பாட்டிகளிடம் சிறு வயதில் அனுபவித்த போரைப் பற்றிக்கேட்டால் அவர்களின் நினைவுகளிலிருந்து சோகம் வெளிப்படுகிறது. போர்க்காலம் இருளின் காலம். துர்நாற்றம், குளிர், பசி, அழுக்கு, பயம், உறவுகளை, உடைமைகளை இழப்பது போன்ற வன்முறை நிறைந்த கதைகளைத் தாத்தா வழியாகக் கேட்டபோது முதல் உலகப் போரின் பயங்கரத்தை அறிந்ததாகவும் அது தன் கண்களையும் இதயத்தையும் திறந்ததாகவும் திருத்தந்தை பதிவு செய்கிறார். விலைமதிப்பற்ற வாழ்வைப் போரில் பாதிக்கப்பட்டோரின்  கண்கள் வழியாகப் பார்த்தால்  நன்கு புரிய முடியும். கருக்கலைப்பு தொடர்வது கொடூரமான நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. எந்த ஒரு மதிப்பீடும் இல்லாமல், மரியாதையும் இல்லாமல் தூக்கியெறியும் கலாச்சாரம் தொடர்வது ஆபத்தானது.

செவிசாய்த்தல் மிக முக்கியம். சிறு குழந்தைகள் கவனிக்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், நினைவில் கொள்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். குழந்தைகள் தங்கள் பார்வையாலும் அமைதியாலும் நம்மிடம் பேசுகிறார்கள். நாம் அவர்களுக்குச் செவிசாய்ப்போம். நமது பங்களிப்பு குழந்தைகளுக்குப் புதிய உலகைக் காண துணை புரியட்டும். எதிர்நோக்கின் ஆதாரமே நாம் நமது குழந்தைகளின் கனவுகளைதேவைகளை, உரிமைகளை, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் உள்ள கரிசனைதான் என்பதை மனத்தில் பதிய வைப்போம். இதை அடிப்படையாகக்கொண்டு விரைவில் குழந்தைகளுக்கான திருத்தூது ஊக்கவுரை ஒன்று தயாரிக்கப்படும் என்பதையும் திருத்தந்தை உறுதி செய்திருக்கிறார்.

news
ஆன்மிகம்
பரிவே இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 36)

நமது இறைவேண்டல், சொற்களையும் எண்ணங்களையும் கடந்து செயல்வடிவம் பெறவேண்டும் என்னும் புரிதல் இன்று மிகவும் தேவைப்படுகிறது. நம் வழிபாடுகளில் நாம் செய்யும் இறைவேண்டல் நம் வாழ்வுக்கு நம்மை இட்டுச் சென்று செயல்வீரர்களாக மாற்ற வேண்டும். அதுவே சிறந்த இறைவேண்டல்.

இறைவேண்டலின் அடிநாதம் இறைவன் மீதும், பிற மனிதர்கள் மீதும் நாம் காட்டும் அன்பே. அன்பின் நுட்பமான வெளிப்பாடு. குறிப்பாக, துன்புறுவோர் மீதும், துயர் நிறைந்தவர் மீதும் காட்டப்படும் அன்பே பரிவு எனப்படுகிறது. இறைவனின் கனிந்த அன்பை இரக்கம், பரிவு என அழைக்கிறது திருவிவிலியம். திருவிவிலியத்தின் பார்வையில் பரிவு பல செயல் வடிவங்களில் வெளிப்படுகிறது. இதோ, அவற்றில் சில:

1) அவசரத்தில் உதவி: பரிவு என்றாலே அது செயல் வடிவில் வெளிப்படும்போதுதான் சிறப்படைகிறது. செயல் வடிவம் பெற்ற பரிவிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இயேசு உவமையாகக் கூறிய நல்ல சமாரியர்தான். கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராக விடப்பட்ட அவரைக் கண்ட குருவும், லேவியரும் மறுபக்கமாய் விலகிச் சென்றனர். ஆனால், அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தான் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார் (லூக்கா 10:33-34). இதுவல்லவோ பரிவின் மிகச் சிறந்த வெளிப்பாடு.

2) உணவு கொடுத்தல்: பசியோடு இருப்பவர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். பாலைநிலத்தில் தம்மோடு இருந்த மக்கள் திரளைக் கண்டு இயேசு தம் சீடரிடம்நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம் (மத் 15:32) என்று கூறினார். இந்தப் பரிவின் வெளிப்பாடாக ஏழு அப்பங்களைக் கொண்டு, நாலாயிரம் பேருக்கு வயிராற உணவு வழங்கினார்.

3) நலமாக்குதல்: இயேசுவின் பரிவு நோயாளர்களைச் சந்தித்தபோது, குணமாக்குதலின் வழியாக வெளிப்பட்டது. இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார். அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார் (14:14) என்று மத்தேயு பதிவு செய்துள்ளார்.

4) கற்பித்தல்: இயேசு கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34). கற்றுக் கொடுத்தலும் ஒரு பரிவின் செயலே என்பதை அறிந்து நாம் வியக்கிறோம்.

5) மன்னித்தல் பரிவின் மற்றொரு சிறந்த அடையாளம்: ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர். பாவங்களை மன்னிப்பவர் (சீஞா 2:11) என்று சீராக்கின் ஞானநூல் இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது. பவுலடியாரும்ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள். கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள் (எபே 4:32) என்னும் அறிவுரை வழியாக மன்னிப்பைப் பரிவின் வெளிப்பாடாகக் காட்டுகிறார்.

6) செல்வத்தைப் பகிர்தல்:உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதர, சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால், அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?” (1யோவா 3:17) எனக் கேள்வி எழுப்புகிறார் புனித யோவான்.

7) கடன்களைத் தள்ளுபடி செய்தல்: நம்மிடம் பொருளாகவோ, பணமாகவோ கடன் பட்டிருப்பவர்களிடம் அதனைத் தள்ளுபடி செய்வது பரிவின் ஒரு சிறந்த அடையாளம்இயேசுவின் மன்னிக்க மறுத்த பணியாள் உவமையில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்த பணியாள் தலைவரின் காலில் விழுந்து மன்றாடியபோது, அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார் (மத் 18:27). திருவிவிலியம் காட்டும் யூபிலிக் கொண்டாட்டத்தின் மையமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் அமைகின்றது (லேவி 25).

8) தண்டனையிலும் பரிவு: மக்கபேயு மற்றும் அவரது ஆள்கள் இறைவனிடம் மன்றாடியபோது, அவர்கள் எப்போதாவது பாவம் செய்ய நேரிட்டால், கடவுளால்பரிவோடு தண்டிக்கப்படவேண்டுமென்று மன்றாடினார்கள் (2மக் 10:4) என்னும் செய்தி நமக்கு வியப்பைத் தருகிறது.

சாலமோனின் ஞானநூலில் இறைவனின் கனிவும் இரக்கமும் நிறைந்த தண்டனை மனம் திரும்புவதற்கான வாய்ப்பு என்ற செய்தி தரப்பட்டுள்ளது. “உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர். அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும்பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர் (சாஞா 12:20).

9) இறந்தவர்களுக்கும் பரிவு: வாழ்வோருடன் பரிவின் செயல்கள் முடிந்துவிடுவதில்லை, இறந்தோருக்கும் அது தொடர வேண்டும் என்னும் இனிய செய்தியைத் திருவிவிலியம் நமக்குத் தருகிறது. தோபித்து நூலில் அவரது பல இரக்கச் செயல்களைப் பற்றி வாசிக்கிறோம். “பசியுற்றோருக்கு உணவும், ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன். சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன் (தோபி 1:17) என அவரே கூறியுள்ளதை அறிகிறோம். மறைக்கல்வி போதிக்கும் இரக்கச் செயல்களுள், இறந்தோரை நல்லடக்கம் செய்வதும் ஒன்று.

10) கால்நடைகளுக்கும் பரிவு: பரிவுணர்வு வாழ்வோரையும் இறந்தோரையும் தாண்டி, கால்நடைகளையும், எல்லா உயிரினங்களையும் தொட வேண்டும் என்பதே இன்றைய தேவை. இதனைத் திருவிவிலியமும் எடுத்துரைப்பதை அறிந்து வியக்கிறோம். “நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர் (நீமொ 12:10) என்கிறது நீதிமொழிகள் நூல்.

நாம் சொல்லிலும், பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1யோவா 3:18) என்னும் அறைகூவலுக்கேற்ப, தூய ஆவியாரின் கனிகளுள் ஒன்றான பரிவை (கலா 5:22) நாம் செயல்படுத்திக் காட்டுவோமாக! அதுவே சிறந்த இறைவேண்டல்.

news
ஆன்மிகம்
திரு அவைச் சட்டப் பார்வையில் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான இறுதி ஆவணம் (சென்ற இதழ் தொடர்ச்சி)

பொறுப்புடைமையையும் (accountability), வெளிப்படைத்தன்மையையும் (transparency) திறனாய்வு செய்யும் அங்கங்கள்

ஆயர் மற்றும் மறைமாவட்ட இறைநம்பிக்கையாளர்களின் சமூகத்திற்கும் இடையில் தொடர் கலந்தாலோசனைகள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணியாக விளங்குகிற மறைமாவட்ட மன்றத்துக்கு உரிய அங்கீகாரம் அளிப்பது அவசியம் என்று இந்த இறுதி ஆவணம் எடுத்துக் கூறுகின்றது. மறைமாவட்ட மேய்ப்புப்பணித் திட்டங்கள், கூட்டொருங்கியக்கத் திரு அவையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையும் செயல்முறைகளையும் உருவாக்குதல், நிதி மேலாண்மை மற்றும் மேய்ப்புப்பணிச் செயல்பாட்டுத் திட்டங்களைப் பொறுப்புணர்வோடு இறைநம்பிக்கையாளர்களுக்குச் சமர்ப்பிக்க ஆயருக்கு உதவுகிற ஒரு தளமாக மறைமாவட்ட மன்றம் செயல்பட வேண்டுமென்றும் இந்த இறுதி ஆவணம் கூறுகின்றது. இந்த முயற்சி பொறுப்புடைமையையும் (accountability) மற்றும் வெளிப்படைத்தன்மையையும் (transparency) ஊக்குவித்து வளர்த்தெடுக்க வழிவகை செய்யும்.

தனிப்பேரவைகளைப் புதுப்பித்தல் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் (decentralization)

அதிகாரப் பரவலாக்கலைச் சாத்தியமாக்கும் பொருட்டு, மறைமாநிலப் பேரவைகள் (provincial councils), முழு நிறைவான பேரவைகள் (plenary councils) ஆகிய நிறுவன அமைப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு அவை நடத்தப்பட வேண்டும் என்ற தேவையை முன்னிறுத்துகின்றது இந்த இறுதி ஆவணம். இத்தகைய பேரவைகளை அவ்வப்போது தொடர்ந்து கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கடமையாக இருந்திருக்கின்றது. மேலும், இது திரு அவைச் சட்டத்தாலும் தேவையான ஒன்றாக அறிவுறுத்தப்படுகின்றது (தி.... 439-446).

திரு அவையின் ஒருமை மற்றும் அதன் படிப்பினைகளில் ஒன்றித்திருத்தல் ஆகியவற்றைப் பாதுகாக்கிற அதே வேளையில், தனிப் பிரச்சினைகள் எழும்போது அதை நிவர்த்தி செய்ய ஆயர்களுக்கு அனுமதி வழங்குகிறதுநற்செய்தியை அறிவியுங்கள் (Praedicate Evangelium) என்று பொருள்படும் திருத்தூதுக் கொள்கை விளக்கம். இதனை அவர்கள் திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தினால் வெளியிடும்Motu proprioஎனப்படும் சமீபத்திய சிறப்பு அறிக்கையான competentias quasdam decernereஎன்ற ஆவணம் மாற்றியமைத்த 11 திரு அவைச் சட்டங்களைப் பின்பற்றி, அதற்கான வழி வகைகளை வகுக்கவேண்டும் என்றும் இறுதி ஆவணம் வலியுறுத்துகின்றது. 2022-ஆம் ஆண்டு வரை திரு அவையில் மேல்நிலைப் பொறுப்பில் இருந்தவர்கள் மட்டுமே பெற்றிருந்த அதிகாரத்தைக் கீழ்நிலையில் இருக்கும் பொறுப்பாளர்களும் பெறும் வகையில் இந்த மாற்றியமைக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட திரு அவைச் சட்டம் வழங்குகிறது. இத்தகைய சட் டங்கள் திரு அவையின் ஒவ்வொரு தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இறுதி ஆவணம் அடிக் கோடிட்டுக் காட்டுகின்றது.

குருமடப் பயிற்சிகள்

குருப்பட்டப் பணிக்கான குருமடப் பயிற்சியிலும் கூட்டொருங்கியக்கத் திரு அவையைப் பிரதிபலிக்கும் கூறுகள் இடம்பெறும் வகையில் அமைய வேண்டுமென ஒரு பரவலான கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான அழுத்தமும் இந்த இறுதி ஆவணத்தில் விரவிக் கிடக்கின்றது. குறிப்பாக, குருமடப் பயிற்சியில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல், திரு அவையில் இருக்கிற அனைவரோடும் இணைந்து செயல்படுதலைச் சாத்தியமாக்கும் பயிற்சி மற்றும் திரு அவையின் ஒருமித்த மனநிலையை எட்டும் பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் குருத்துவப் பயிற்சிக்கான பொதுவான வரைமுறைக் கையேடானRatio fundamentalis instituitonis sacerdotalis (தி.... 241)’ என்ற ஆவணத்தைப் புதுப்பிக்கவும் அழைப்பு விடுத்திருக்கின்றது இந்த இறுதி ஆவணம்.

கலந்தாலோசிக்கப்படுபவர்களின் குரல்களை ஒடுக்காமல் இருத்தல்

திரு அவையில் நிறையச் சூழ்நிலைகளில் அதிகாரத்தில் இருப்போர் முடிவுகளை எடுப்பதற்கு முன் பங்கேற்பு அமைப்புகளைக் கலந்தாலோசித்தல் என்பது திரு அவைச் சட்டபடி அவர்களுடைய கடமையாகும். இது பங்கேற்பு அமைப்புகளின் உரிமையும் கூட. கலந்தாலோசனையின் வழியாக விளைந்த கனிகளால் ஒருமித்த ஒரு முடிவு எட்டப்படும்போது, அதனினும் மேலோங்கிய ஒரு காரணம் இருந்தாலொழிய, அதிகாரத்தில் இருப்போர், அவர்கள் கலந்தாலோசித்து உள் வாங்கிய ஆலோசனைகளை ஏதோ கலந்தாலோசித்தலே நடைபெறாதது போல், அவைகளைப் புறந்தள்ளக்கூடாது. எனவே, அதிகாரத்தில் இருப்போர் கலந்தாலோசனையில் பங்கேற்பவர்களுக்குச் செவிமடுத்தல் அவசியம். அவர்களுடைய உணர்வுகளையும், உள்ளச் சிந்தனைகளையும் இனம் கண்டுகொள்ளாமல் பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அவர்களுடைய விருப்பங்களை மட்டும் முடிவுகளாக மாற்றிச் செயல்படுத்த நினைப்பது கூட்டொருங்கியக்கத் திரு அவையின் போக்கிற்கு எதிரானது (தி.... 127 2, 2).

திரு அவையின் மற்ற நிலைகளில் பொதுநிலையினரின் பங்கேற்பு

திரு அவைச் சட்டம் மற்றும் இந்த இறுதி ஆவணம் குறிப்பிடுகிற பங்கேற்பு அமைப்புகளைத் தவிர்த்து, மறைமாவட்டப் பொறுப்புகள் மற்றும் திரு அவையின் நிறுவனங்களாகிய குருமடம், கல்வி நிறுவனங்கள், இறையியல் பிரிவு சார்ந்த துறைகள் ஆகியவற்றில் பொதுநிலையினர் ஈடுபடும் வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் அவசியப்படுகிறது. அர்ப்பண வாழ்வில் உள்ள துறவற நிலையிலிருக்கும் இருபால் துறவியர்கள் பெற்றுள்ள கொடைகளுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதும், திரு அவைச் சட்ட வழக்குமன்ற நடவடிக்கைகளில் தகுதியான பொதுநிலையினரை நீதிபதிகளாகத் தகுந்த திரு அவைச் சட்டத் தயாரிப்புப் பயிற்சிக்குப்பின் ஈடுபடுத்துவதும் அவசியம் என்பதை மிக அதிகமாகவே இறுதி ஆவணம் வலியுறுத்துகின்றது. அதோடுகூட திரு அவையின் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பொதுநிலையினர்களின் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உரிய மரியாதை வழங்குவதும் அவசியம். அவர்களுடைய திறமைகளையும் தனிப்பண்புகளையும் இனம் கண்டு, அவற்றை வளர்த்தெடுக்க விளைவதும் மிக அவசியம்.

ஆலோசனை வாக்குமட்டுமேஎன்பதில், ‘மட்டுமேஎன்ற வார்த்தை நீக்கப்பட்டது

திரு அவைச் சட்டத்தின் பல இடங்களில் முடிவுகளை எடுப்பதற்கு ஆயருக்கும் பங்குத்தந்தைக்கும் ஆலோசனை வாக்குகள் அவசியப்படுகிற நிறைய இடங்களில்மட்டுமே (only / merely tantum) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் போக்கு பல நேரங்களில் கலந்தாலோசித்தலை இரண்டாந்தர ஒரு தேவையாகத் தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. கலந்தாலோசித்து ஆலோசனைகளைப் பெறுவதையும் முடிவெடுத்தலையும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் வைப்பது சரியன்று; திரு அவையில் முடிவெடுத்தல் என்பது அனைவரது உதவியோடு நிகழ்கின்றது. கலந்தாலோசனைகளின் வாயிலாகவே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆலோசனைகள் வழங்குகின்ற பங்கேற்பு அமைப்புகள் எந்த விதத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களுக்குக் கீழானவர்கள் அல்லர்; மாறாக, இந்த இரண்டு நிலையினரும் சமமானவர்கள் என்பதைப் புரிந்து திரு அவையில் பணிபுரிய வேண்டும். எனவே, தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் ஆலோசனை வாக்குமட்டுமேஎன்ற வரிகள் திரு அவைச் சட்டத்திலிருந்து அகற்றப்பட ஆவன செய்ய வேண்டும் என இந்த இறுதி ஆவணம் அறைகூவல் விடுக்கின்றது. திரு அவைச் சட் டத்தில்ஆலோசனை வாக்கு மட்டுமேஎன்று மீண்டும் மீண்டும் வரும் வாக்கியத்தால் எழும் தெளிவின்மையைப் போக்கும் வண்ணம்மட்டுமேஎன்ற வார்த்தை நீக்கப்படல் வேண்டும்.

திருத்தந்தை பிரான்சிஸ் இந்த இறுதி ஆவணத்தின் கற்பிதங்களைக் கூட்டொருங்கியக்கத் திரு அவையை மலரச் செய்வதற்கான ஒரு வழிகாட்டுதலாகக் காண்கின்றார். எனவே, இந்த ஆவணத்தின் படிப்பினைகளைச் செயல்படுத்தத் தேவையான நடைமுறைகளை ஒவ்வோர் ஆயரும் தம் தலத் திரு அவையில் மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். இந்த இறுதி ஆவணத்தின் கற்பிதங்கள் திரு அவையில் கட்டமைப்புப் பரிணாமங்களாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். திரு அவைச் சட்டங்கள் வலியுறுத்துகின்ற பங்கேற்பு அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கட்டாயமாக நிறுவப்பட வேண்டிய பங்கேற்பு அமைப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், பொதுநிலையினருக்கான பங்கேற்புத் தளங்கள், அமைப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் இனம் காணப்பெற்று, அவர்களுடைய பங்கேற்பு மற்றும் பங்களிப்புத் திரு அவையில் மலர்கின்ற பொழுது, திரு அவை கூட்டொருங்கியக்கத்தின் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டு மிளிரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.