news
ஆன்மிகம்
ஆற்றல் மையங்கள் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 17)

அன்புச் செல்வன்:தந்தையே! பிறப்புநிலைப் பாவம் என்பது மனம் தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் அந்நியப்பட்டு, புறம் நோக்கிச் சென்று, தன் வாழ்வின் மகிழ்வைத் தேடுவதற்கான வேட்கை என்று கூறினீர்கள். இத்தகைய பிறப்புநிலைப் பாவத்தைதான் திருமுழுக்கு அருளடையாளம் கழுவுகின்றது என்று நாம் நம்புகின்றோம். அது எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து எடுத்துரைக்க முடியுமா?”

அருள்பணி:இங்கு ஆற்றல் மையங்கள் (energy centres) குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நம் உடலில் ஏழு ஆற்றல் மையங்கள் உள்ளன. இந்த ஏழு இடங்களும் உடலின் நரம்பு மண்டலத்தோடு மிக நெருங்கியத் தொடர்பு உள்ளவையாக இருப்பதோடு, உடல் மற்றும் மனநலனைப் பேணுவதற்குக் காரணமான ஏழு சுரப்பிகளோடு (glands) தொடர்புடையதாக இருக்கின்றன. முதலாவது ஆற்றல் மையமானது, நம் உச்சந்தலையில் உள்ளது. குழந்தைகளின் தலையைப் பார்த்தோம் என்றால் அவர்களது உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போன்ற ஒரு வட்டமான பகுதி பள்ளமாக இருப்பதையும், அதைத் தோல் மூடி இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதுவே, உச்சந்தலை ஆற்றல் மையம். இந்த ஆற்றம் மையம் மூளையின் மேற்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியோடு (pineal gland) தொடர்பு உடையது.

இரண்டாவது ஆற்றல் மையம், நம் புருவ மத்தியில் உள்ளது. இது பிட்யூட்டரி சுரப்பியோடு (pituitary gland) தொடர்புடையது. மூன்றாவது ஆற்றல் மையம், நம் தொண்டைப்பகுதியில் உள்ளது. இது தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. நான்காவது ஆற்றல் மையம், நம் இதயத்திற்கு அருகில் உள்ளது. இதுஇதய ஆற்றல் மையம் (Heart Center) என்று அழைக்கப்படுகிறது. இது தைமஸ் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஐந்தாவது ஆற்றல் மையம், நம் தொப்புளுக்கு அருகில் உள்ளது. இது கணையம் என்ற சுரப்பியோடு தொடர்புடையது. ஆறாவது ஆற்றல் மையம், நம் பாலியல் உறுப்போடு தொடர்புடையது. இது பாலியல் சுரப்பிகளான டெஸ்ட்ரஜன் மற்றும் ஈஸ்ட்ரஜன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஏழாவது ஆற்றல் மையம், நம் முதுகுத் தண்டு வடம் முடியும் இடத்தில் உள்ளது. இது அட்ரினல் சுரப்பியோடு தொடர்புடையது.”

அன்புச் செல்வன்:தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்க்கும்போது, இந்திய ஆன்மிக மரபில் கூறப்படும் ஏழு சக்கரங்கள் (seven chakras) என்பனவற்றிற்கும், இந்த ஆற்றல் மையங்களுக்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது.”

அருள்பணி:உண்மைதான்! இந்திய ஆன்மிகத்தின்படியும் இன்றைய அறிவியலின் கூற்றுப்படியும், ஒரு மனிதரின் மேற்கண்ட ஏழு ஆற்றல் மையங்களும் சிறப்பாகச் செயல்படும்போது மேற்கண்ட ஏழு சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்பட ஆரம்பிக்கின்றன. இச்சுரப்பிகள் சிறப்பாகச் செயல்படும்போது நம் வாழ்வு முழு மனித வாழ்வாக மாற ஆரம்பிக்கிறது.”

அகஸ்டின்:ஆச்சரியமாக இருக்கிறது தந்தையே! இந்த ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளின் செயல்பாடுகள் குறித்தும் கொஞ்சம் கூறுங்கள்...”

அருள்பணி:ஒவ்வோர் ஆற்றல் மையமாக எடுத்துச் சிந்திக்கலாம். உச்சந்தலை ஆற்றல் மையமானது பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான இணைப்புப் பாலமாகக் கருதப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஆற்றல் அபரிமிதமாக நமக்குள் நுழைவது இந்த இடத்தின் வழியாகத்தான். இந்த ஆற்றல் மையம் பீனியல் சுரப்பியோடு தொடர்புடையது. அறிவியல் ஆராய்ச்சிகளின் பின்னணியில் பார்க்கும்போது நம் மனத்தை அமைதிப்படுத்தி, எண்ணங்களைக் குறைத்து மனத்தைத் தளர்வான நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடிய தன்மை பீனியல் சுரப்பிக்கு உண்டு. தியானத்தின்போது மனத்தின் எண்ணங்களைக் குறைத்து, உடலைத் தளர்வான நிலைக்குக் (relaxed state) கொண்டு செல்வதில் பீனியல் சுரப்பியின் பங்கு அபரிமிதமானது. நாம் இரவில் ஆழ்ந்து தூங்குவதற்கு ஏதுவாக மெலாட்டானின் (melatonin) என்ற வேதிப்பொருள் சுரப்பதற்குக் காரணமாக இருப்பதும் இந்தப் பீனியல் சுரப்பியே! இந்த ஆற்றல் மையம் அடைபட்டுக் கிடக்குமென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எப்பொழுதுமே தனித்துவிடப்பட்டு, தனிமையால் துன்புறுவது போன்ற உணர்வு நம்மிடம் இருக்கும்.”

அன்புச் செல்வன்:தந்தையே, டெகார்த்தே என்ற தத்துவயியலாளர் ஆன்மாவிற்கும், பீனியல் சுரப்பிக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார். ஆன்மாவும் உடலும் பீனியல் சுரப்பியா(யி)லே ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது அவரது கருத்து.”

மார்த்தா:தந்தையே! இந்த மையம் அடைபட்டுக் கிடப்பது எதனால்?”

அருள்பணி:ஏராளமான எண்ணங்கள் நம் மனத்தில் இடையறாது ஓடிக்கொண்டிருப்பது முதல் காரணம். மனம் ஏராளமான எண்ணங்களை உருவாக்கி சஞ்சலத்தில் இருக்கும்போது பிரபஞ்சத்தின் ஆற்றலும், கடவுளின் அருளும் நமக்குள் பாயாது என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம். இரண்டாவதாக, ‘நான்என்ற அகந்தையோடும், ‘எனதுஎன்ற பற்றோடும், ‘எனக்குஎன்ற சுயநலத்தோடும் வாழ்கின்றபோது நம் வாழ்வு முழுக்க முழுக்க தன்னை மையப்படுத்திய வாழ்வாக மாறிவிடுகின்றது. அகந்தையோடு வாழ்கின்ற மனிதர் கடவுளிடமிருந்து அந்நியமாகி விடுகிறார்.”

கிறிஸ்டினா:தந்தையே, அடுத்தடுத்த ஆற்றல் மையங்கள் குறித்துக் கூறுங்களேன்?”

அருள்பணி:புருவ மத்தியில் உள்ள இரண்டாவது ஆற்றல் மையமானது இந்திய ஆன்மிகத்தில்நெற்றிக்கண்என்றும், ‘மூன்றாம் கண்என்றும் அழைக்கப்படுகிறது. வாழ்வைப் பற்றியும், சக மனிதர்களைப் பற்றியும் தெளிவான, சரியான புரிதலைக் கொண்டிருப்பதற்கு இந்த ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் நம் புரிதல் குறைவுபட்ட ஒன்றாக இருக்கும். குறைவுபட்ட புரிதலில் இருந்து வரும் செயல்பாடுகளும், வாழ்வியல் அணுகுமுறைகளும் அரைகுறையாக இருக்கும். இந்த ஆற்றல் மையம் பிட்யூட்டரி சுரப்பியோடு தொடர்பு உடையது. பிட்யூட்டரி சுரப்பியானது நம் நாளமில்லா சுரப்பு மண்டலத்தில் தலையாயச் சுரப்பியாகக் (master gland) கருதப்படுகிறது. உடலில் நடைபெறும் ஏறத்தாழ எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிட்யூட்டரி சுரப்பிக்கு உண்டு. இது தமிழில்கவச்சுரப்பிஎன்று அழைக்கப்படுகிறது. தொண்டைப்பகுதியில் உள்ள ஆற்றல் மையம் நம் தொடர்புகொள்ளும் திறன் (Communi
-cation
), கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் (expression), உண்மைக்கான தேடல் ஆகியவற்றோடு தொடர்புடையதுஇந்த ஆற்றல் மையம் சிறப்பாகச் செயல்படும்போது பேச்சில் தெளிவும், தொடர்பு கொள்ளுதலில் உண்மைத்தன்மையும் இருக்கும். இவ்வாற்றல் மையம் தைராய்டு சுரப்பியோடு தொடர்புடையது. தொண்டைப்பகுதியில் அமைந்திருக்கும் இச்சுரப்பி உடலின் வளர்ச்சிதை மாற்றம் (metabolic process), உடலின் செரிமானம், மூளைவளர்ச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நெஞ்சுப்பகுதியில் அமைந்திருக்கும் இதய ஆற்றல் மையம் அன்பு, மன்னிப்பு, திறந்த மனம், பிறர்மீதான நம்பிக்கை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய சுரப்பி தைமஸ். மருத்துவயியலின் கருத்துப்படி தைமஸ் சுரப்பியானது உடலிலிருந்து நோயை விரட்டுகின்ற ‘T’ Blood அணுக்களை உருவாக்குகிறது. இவ்வாறு உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குதலில் இந்த ஆற்றல் மையமும் தைமஸ் சுரப்பியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தொப்புள் பகுதியில் உள்ள ஆற்றல் மையம் உடலின் ஆற்றல் அளவு (energy level), செரிமானமடைந்த உணவை உள்வாங்கும் திறன், சுய அடையாளம் ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையமானது கணையம் சுரப்பியோடு தொடர்புடையது. உடல் நலனைப் பேணுவதில் இந்த ஆற்றல் மையத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. உணவுச் செரிமானம், உணவை ஆற்றலாக மாற்றுதல், உடலில் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்திருத்தல் போன்ற பணிகளைத் தொப்புள் ஆற்றல் மையமும் கணையமும் இணைந்து செய்கின்றன. பாலியல் உறுப்போடு தொடர்புடைய ஆற்றல் மையம் படைப்புத்திறன், இன்பம், பாலியல் வேட்கை போன்றவற்றோடு தொடர்புடையது. இவ்வாற்றல் மையத்தின் செயல்பாடானது இந்தப் பகுதியில் உருவாக்கப்படும் டெஸ்ட்ரஜன், ஆன்ட்ரஜன், ஈஸ்ட்ரஜன் சுரப்பிகளோடு தொடர்புடையது.

ஏழாவது ஆற்றல் மையம் முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் உள்ளது. இது உடலின் அடிப்படைத் தேவைகளான உண்ணுதல், உறங்குதல், தற்காப்பு, சமநிலைத்தன்மை ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்த ஆற்றல் மையத்தோடு தொடர்புடைய அட்ரினல் சுரப்பியானது ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கானசண்டையிடுதல் அல்லது சரணடைதல்என்ற வழிமுறையை நமக்குள் முன்னெடுக்கிறது.”

அகஸ்டின்: ஏழு ஆற்றல் மையங்கள் குறித்தும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகள் குறித்தும் தெளிவைக் கொடுத்ததற்கு நன்றி தந்தையே! இவற்றுக்கும், திருமுழுக்கு அருளடையாளத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”

அருள்பணி:அடுத்து நாம் சந்திக்கும்போது இது குறித்துப் பேசுவோம்.” 

(தொடரும்)

news
ஆன்மிகம்
இயேசுவும் திருத்தந்தை பிரான்சிசும் (நீங்கா நினைவுகள் – 03)

இயேசுவின்வழியும் உண்மையும் வாழ்வும் நானே (யோவா 14:6) என்ற இறைவார்த்தையை வாழ்வாக்கியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் சீடராகப் பிரதிபலித்த திருத்தந்தை பிரான்சிஸ் மாமனிதர்; மங்காத விளக்கு; இயேசுவின் பாதச்சுவடுகளை இன்பமாகப் பின்பற்றியவர்; கருணை உள்ளம் கொண்ட கடவுளின் படைப்பாற்றல்!

கடவுளை அன்பால் உணரலாம்; இரக்கத்தினால் அறியலாம்; அன்பையும் இரக்கத்தையும் இரண்டறத் தன் துறவற வாழ்க்கையில் துணிவோடு பின்பற்றியவர் திருத்தந்தை பிரான்சிஸ். ஆன்மிகத்தில் ஆழமானதால் அன்பால் உலகை ஆண்டவர். அவரை நினைக்காத உள்ளம் இல்லை, உணராத இல்லமும் இல்லை.

கொரோனா என்ற கொள்ளை நோய் உலகைத் தாக்கியபோது திருத்தந்தை பிரான்சிஸ் நம் அனைவருக்காகவும் நம் மீட்புக்காகவும் புனித பேதுரு சதுக்கத்தில் விடாத மழையிலும் செபித்தார் என்பதற்கு நாங்களே சாட்சிகள். கடவுள்மேல் வைத்த பேரன்பாலும் நம்பிக்கையினாலும் அனைவரையும் ஆண்டவர்பால் அரவணைத்து, இறைவன்மீது நம்பிக்கையை ஆழப்படுத்தும் வகையில் காணொளியில் திருப்பலியை நிறைவேற்றிதிருவிருந்துதான் நமக்கு அருமருந்துஎன்று ஒவ்வொரு நாளும் இறைப்பிரசன்னத்தில் வழிநடத்தியவர். இயேசுவின் விழுமியங்களான செபம், அன்பு, இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை, தாழ்ச்சி இவற்றையெல்லாம் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, நம் இதயத்தில் விதைக்கப்படுகிறார்கள். பல நூற்றாண்டு இம்மண்ணிலே பலராலும் போற்றப்பட இருப்பவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக (மத் 6:9) என்று இயேசு தந்தையை நோக்கிச் செபித்ததுபோல திருத்தந்தை பிரான்சிசும் செபத்தின் மூலம் கடவுளின் தயவையும் வழிகாட்டுதலையும் நாடினார். திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தை வாழ்வின் ஆதாரமாகப் பார்த்தார். செபத்தின் மூலம் மனிதர்கள் கடவுளின் உதவியையும் ஞானத்தையும் பெறமுடியும் என நம்பினார். சிறியோர் முதல் பெரியோர் வரை இறையன்பை எடுத்து இயம்பியவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அகில உலகத்தை அன்பால் அரவணைத்தவர்; அன்புக்கும் அடிபணியாத உயிர்கள் எதுவுமில்லை என்பதை வாழ்வாக்கியவர்; இயேசுவின் முதன்மையான கட்டளையைக் கடைப்பிடித்தவர்; “முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே, தலைசிறந்த முதன்மையான கட்டளை (மத் 22:37); “உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக (மத் 22:39) என்ற இந்த இரண்டு கட்டளைகளுக்கும் சொந்தக்காரர். தன் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் கட்டளைகளைக் கடைப்பிடித்து இறைவனின் அருள்கரம் பிடித்தவர்.

ஏழை-எளியவர்கள்மீது இரக்கம் கொண்டார். பாவிகளின்மீது இரக்கம் கொண்டார். கைம்பெண்கள், கைவிடப்பட்டவர்கள்மீது இரக்கம் கொண்டார். சிறையில் வசித்தவர்கள்மீதும் இரக்கம் கொண்டார்தந்தையாம் கடவுளிடமும் இயேசுவிடமும் பெற்ற இரக்கத்தைத் தூய ஆவியின் துணையோடு செயல்படுத்தினார்ருவாண்டா நாட்டில் நடந்த இனப் படுகொலைக்காக மன்னிப்புக் கேட்டார். பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களுக்காக மன்னிப்புக் கேட்டார்.

ஆடம்பரத்தைத் தவிர்த்து ஏழைகளுடன் தொடர்புகொண்டு பொதுமக்களுடன் எளிதாகப் பழகிப் பணிவை வெளிப்படுத்தினார். எளிமையான வாழ்க்கைமுறை, சமூகத்துடன் தொடர்பு, எளிய மொழிகளைப் பேசுதல், சகோதரத்துவத்தை வலியுறுத்தல், மற்றவர்களைச் சார்ந்திருப்பது போன்ற செயல்கள் மூலம் கத்தோலிக்கத் திரு அவையின் தலைவராகப் பணிவு மற்றும் எளிமை ஆகியவற்றிற்கு நல்ல உதாரணமாக விளங்கினார். நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டுத் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்ட நம் திருத்தந்தை உயிர்ப்பில் இயேசுவோடு இணைந்து தந்தையின் வலப்பக்கத்தில் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசுவார் என்ற நம்பிக்கையோடு நாம் நம்முடைய நம்பிக்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

news
ஆன்மிகம்
தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 49)

நமது இறைவேண்டல் கடவுளின் கொடை! அதே வேளையில் நமது முயற்சியும்கூட என்னும் இறைவேண்டல் பற்றிய ஒரு முகாமையான செய்தியைக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியில் (கதிம 2725) வாசிக்கிறோம். ஆம், கடவுளின் அருளின்றி நம்மால் இறைவேண்டல் செய்ய இயலாது. எனவே, நாம் தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்யவேண்டும். திரு அவையின் நெடிய மரபின்படி, செபமாலை போன்ற பல மன்றாட்டுகளும், வழிபாட்டு நிகழ்வுகளும் தூய ஆவியாரின் அருள் வேண்டியே தொடங்குகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த மரபு திருவிவிலியத்திலிருந்துதான் தோன்றியது என்பதை மறந்துவிடக்கூடாது. “எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள் (எபே 6:18) என்பது தொடக்கத் திரு அவையினருக்குப் புனித பவுலடியார் தந்த தெளிவான போதனை. அதனையே, “தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள் (யூதா 1:20) என்னும் யூதாவின் திரு மடல் அழைப்பும் உறுதி செய்கிறது.

ஏன் நாம் தூய ஆவியாரின் துணையுடன் இறைவேண்டல் செய்ய வேண்டும்? இதற்கான விடையை இயேசுவே தந்துள்ளார்: “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார் (யோவா 14:26) என்பது இயேசுவின் வாக்குறுதி. “இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார் (திப 1:1) என்றுதான் திருத்தூதர் பணிகள் நூலே தொடங்குகிறது.

எனவே, இயேசுவின் அறிவுறுத்தலின்படி திருத்தூதர்களும், தொடக்க காலக் கிறித்தவர்களும் தூய ஆவியாரின் துணையோடுதான் - இறைவேண்டல் உள்பட - அனைத்தையும் செய்தனர். குறிப்பாக, இறைவேண்டலுக்குத் தூய ஆவியாரின் துணை அவசியம் என்பதைப் பவுலடியார் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார் (உரோ 8:26).

கடவுளைஅப்பா, தந்தாய்என அழைக்கும் உரிமையை இயேசு வழியாகத் தூய ஆவியார்தாம் பெற்றுத்தருகிறார் என்னும் இறையியல் உண்மையைநீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவிஅப்பா, தந்தையேஎனக் கூப்பிடுகிறது (கலா 4:6) என்னும் புனித பவுலடியாரின் சொற்களிலிருந்து உணர்கிறோம். தூய ஆவியாரின் துணையோடு இறைவேண்டல் செய்வதாகப் பவுலே சான்று பகர்ந்துள்ளார்: “நான் பரவச நிலையில் இறைவனிடம் வேண்டும்போது என்னிடம் செயலாற்றும் தூய ஆவியாரே இறைவேண்டல் செய்கிறார். என் அறிவுக்கு அங்கு வேலை இல்லை (1கொரி 14:14) என்பது அவரது வாக்குமூலம்.

மேலும், இறைவேண்டல் என்பது கடவுளின் அருள்; அதேவேளையில் நமது முயற்சியும்கூட என்பதற்குப் பவுலடியாரின்தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைவேண்டல் செய்வேன்; அறிவோடும் இறைவேண்டல் செய்வேன். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுத் திருப்பாடல் பாடுவேன்; அறிவோடும் திருப்பாடல் பாடுவேன் (1கொரி 14:15) என்னும் சொற்கள் வலு சேர்க்கின்றன.

தாவீதின் புகழ்பெற்ற 51-ஆம் திருப்பாடலில்என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும் (திபா 51:15) என்னும் மன்றாட்டை வாசித்து நாம் வியப்படைகிறோம். இறைவனுக்குப் புகழ் சாற்ற வாயை நாமன்றோ திறக்க வேண்டும்? பின் ஏன் தாவீது கடவுளிடம் மன்றாடுகிறார்? ஆம், அவரது புகழைப் பறைசாற்றுவதற்கும் அவரது உதவி தேவை. கடவுளின் அருளின்றி நாம் வாய் திறந்து மன்றாட முடியாது என்னும் உண்மையைத் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான், அதே திருப்பாடலில்உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும் (திபா 51:11) என்று கெஞ்சுகிறார்.

எனவே, தூய ஆவியாரை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அவரே நமக்கு இறைவேண்டல் ஆர்வத்தைத் தருகிறார். எப்படி இறைவேண்டல் செய்வது எனக் கற்றுத் தருகிறார். இறைவேண்டல் செய்ய மனமும் உடலும் தடையாக வரும்போது, தடைகளை உடைத்து நமக்கு இறைவேண்டலுக்கான ஆற்றலைத் தருகிறார். அவரே நமது இறைவேண்டலின் சொற்களையும், மனத்தின் நோக்கத்தையும் புனிதப்படுத்துகிறார். நமது வாழ்வும் இறைவேண்டலும் முரண்படாதபடி அவரே பாதுகாக்கின்றார். புதுமையாகவும் தேவைக்கேற்பவும் மன்றாட நமக்குப் படைப்பாற்றலையும் அவரே தருகின்றார்.

எனவேதான், திரு அவையின் மாபெரும் புனிதர்கள் அனைவரும் தூய ஆவியாரின் துணையை நாடினர். தூய ஆவியாருக்கென்றே சிறப்பு மன்றாட்டுகளையும் இயற்றினர். புனித அகுஸ்தினாரின்என்னுள் சுவாசியும் தூய ஆவியாரே, புனித ஜோஸ் மரிய எஸ்கிரிவா இயற்றியஎன் மனத்தை ஒளிரச் செய்யும் தூய ஆவியாரே, இரபானுஸ் மவுருஸ் இயற்றியவாரீர் படைத்திடும் தூய ஆவியாரே (Veni Creator Spiritus) போன்றவை புகழ்பெற்ற தூய ஆவியாருக்கான மன்றாட்டுகள்.

நாமும் நாள்தோறும் தூய ஆவியாரை நோக்கி மன்றாடுவோமாக. அவரது துணையோடு இறைவேண்டல் செய்வோமாக.

news
ஆன்மிகம்
திரு அவையும் ஆலயங்களும்

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலும், அதற்கு முன்னும் திருத்தலங்களைப் பற்றிய திரு அவை ஆசிரியப் படிப்பினைகள் இல்லை. இக்குறையைப் போக்கியவர் திருத்தந்தை 6-ஆம் பவுல்.  திருத்தலங்களின் அதிபர்களுக்கு வழங்கிய தனது வருடாந்திரச் சொற்பொழிவுகளில் திருத்தலங்கள் ‘ஆன்மிக மருத்துவங்கள் (‘Spiritual clinics, 1965) ‘அ (‘Centres of Spiritual Refreshment,1970) என்றும் அவர் கூறியுள்ளார்.

1983-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட திரு அவைச் சட்டத் தொகுப்பில் திருத்தலங்களைப் பற்றி முதன் முதலாக ஐந்து சட்டங்கள் (திச 1230-1234) இடம் பெற்றுள்ளன. அதன்பிறகு 1999, மே 8 தேதியிட்ட ஆவணத்தில் நாடோடிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கான திருத்தந்தை அருள்பணிப் பேரவை திருத்தலங்களைப் பற்றிய விரிவான படிப்பினைகளை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் 2001, டிசம்பர் 17-இல் வெளியிட்ட ‘பொதுமக்கள் பக்தி மற்றும் திருவழிபாடு (Popular piety and the liturgy) என்ற வழிகாட்டி ஆவண இறுதிப் பகுதியில் (எண்: 261-287) திருத்தலங்களின் இயல்பு பற்றிச் சிறப்பாக விளக்கியுள்ளது. மேலும், இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (இலத்தீன்) 2024, மார்ச் 19 தேதியிட்ட ‘தேசியத் திருத்தலங்கள் நிலையைப் பெறுவதற்கான விதிமுறைகள் (Norms for the designation of national shrines) என்ற ஏட்டில் திருத்தலங்களுக்கான முக்கிய நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.

இந்நிலையில் பங்கு ஆலயம் அல்லது அதன் கிளைக் கோவில்களுள் ஒன்றை ‘திருத்தலம் என்று தன்னிச்சையாக அறிவித்து, அதன் பெயர் கொண்ட அருள் ஆதரவாளரைக் (patron) குறித்து நவநாள், ஆராதனை, திருப்பலி, அன்னதானம் போன்றவை நடப்பதாக நவீன ஊடகங்களில் விளம்பரம் செய்து ‘பக்த கோடிகளை அழைக்கும் போக்கு சில அருள்பணியாளர்களிடையே அண்மைக்காலமாகப் பரவலாகி வருகிறது.

இவ்வாறு தன்னிச்சையாக ஓர் ஆலயத்தை ‘திருத்தலம் என்று அறிவிக்கலாமா? திருத்தலங்களுக்கும் மற்ற ஆலயங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திருத்தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் யாவை? போன்ற கேள்விகளை இக் கட்டுரை விளக்குகிறது.

ஆலயங்களின் வகைகள்

சர்ச் (church) என்ற ஆங்கிலச் சொல் கிறித்தவ இறைமக்களின் சமூகமான திரு அவையையும், அது குழுமமாகக் கூடி வழிபடும் ஆலயத்தையும் குறிக்கிறது. ஆலயம் ‘கோயில் அல்லது ‘கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திரு அவையில் ஆலயங்கள் பல வகைப்படும்.

1) பங்கு ஆலயங்கள் (Parish churches)

ஒரு மறைமாவட்டத்தில் நிலையான முறையில் நிறுவப்படும் நம்பிக்கையாளர்களின் ஒரு குறிப்பிட்ட குழுமம் இறைவனை வழிபடும் இடம் பங்கு ஆலயம் ஆகும். இங்கு அருளடையாளங்கள் குறிப்பாக, திருப்பலிக் கொண்டாட்டங்கள் மற்றும் அடக்கச் சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இதே நோக்கத்திற்காகப் பங்கில் கிளை (sub stations churches) அல்லது வழிபாட்டுக்கூடங்கள் (oratories) அமைக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆலயத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்படுகிறது. மூவொரு இறைவன், கிறிஸ்து ஆண்டவர் (பிறப்பு, குழந்தைப் பருவம், உருமாற்றம், உயிர்ப்பு, மீட்பு உள்ளிட்ட மறையுண்மைகள்), அன்னை மரியா, திருத்தூதர்கள், புனிதர்கள், வானதூதர்களின் பெயர் ஒன்று அதில் இடம்பெறும்; அப்பெயர் அவ்வாலயத்தின் அருள் ஆதரவாளராகக் கருதப்படும்; அதன் நினைவாக விழாக்களும் எடுக்கப்படும்.

2) சிற்றாலயங்கள் (Chapels)

தனியார் வசதிக்காகத் தலத்திரு அவை மேலதிகாரியின் அனுமதியுடன் இறைவழிபாட்டிற்காக அமைக்கப்படுபவை சிற்றாலயங்கள் ஆகும். அங்குத் திருப்பலிகள் மற்றும் புனிதக் கொண்டாட்டங்களை நிறைவேற்றலாம். ஆயர் இல்லம், அருள்பணியாளர் பயிற்சியகங்கள். அர்ப்பண வாழ்வுக் குழுமங்களின் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் சிற்றாலயங்கள் உள்ளன.

3) பெருங்கோவில் (Basilica)

முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொதுக் கட்டடங்களைக் குறிக்கும் ‘பசிலிக்கா என்ற கிரேக்கச் சொல் காலப்போக்கில் முக்கியக் கிறித்தவப் பெருங்கோவில்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தந்தையின் ஆணையால் மட்டுமே ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் பெருங்கோவிலாக உயர்த்தப்பட முடியும். அதில் ‘மேஜர் பசிலிக்கா மற்றும் ‘மைனர் பசிலிக்கா என்று இருவகை உள்ளது. மேஜர் பசிலிக்கா என்பது திருத்தந்தையின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. உரோமை நகரில் உள்ள திருத்தூதர் பேதுரு (வத்திக்கான்), திருத்தூதர் யோவான் (இலாத்தரன்), திருத்தூதர் பவுல் (மதில்களுக்கு வெளியே), புனித மரியா மஜோரே ஆகிய நான்கு பெருங்கோவில்கள் மட்டுமே ‘மேஜர் பசிலிக்கா என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை புரியும் திருப்பயண இடங்களாகவும் பெருங்கோவில்கள் அறியப்படுகின்றன. ஓர் ஆலயம் அல்லது ஒரு திருத்தலம் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகளை ‘திரு அவையின் இல்லம் (Domus Ecclesiae) என்ற 1989, நவம்பர் 9 தேதியிட்ட ஆவணத்தில் இறை வழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயம் வழங்கியுள்ளது. அந்த விதிமுறைகளின்படி சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள ஓரியூர் திருத்தலம் அண்மையில் மைனர் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4) பேராலயம் (Cathedral)

ஒரு மறைமாவட்ட ஆயரின் இருக்கை (Cathedra) உள்ள ஆலயம் அந்த மறைமாவட்டத்தின் தலைமைக் கோவில் அல்லது பேராலயம் என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆயர், அருள்பணியாளர்களின் திருநிலைப்பாடு அருளடையாளங்கள், அவர்களது அடக்கச் சடங்குகள் மற்றும் மறைமாவட்டம் தழுவிய சிறப்புத் திருச்சடங்குகள் நடைபெறுகின்றன.

5) திருத்தலங்கள் (Shrines)

திருத்தலம் என்பது நம்பிக்கையாளர்கள் திரளான எண்ணிக்கையில் திருப்பயணம் செல்கின்ற ஓர் ஆலயம் அல்லது மற்றொரு புனித இடம் ஆகும். அப்புனிதத்திற்குக் குவிமையமாக இருப்பவை அங்குள்ள புனிதரின் திருவுருவம், அருளிக்கம் (relic), உருவ ஓவியம் (icon), காட்சி அனுபவங்கள், புதுமைகள் போன்றவை ஆகும். அவற்றின் மூலம் வாழும் கடவுளின் நினைவு, உடனிருப்பு மற்றும் வரலாற்றில் அவரது இடையீட்டின் குறியீடாக அத்திருத்தலம் பார்க்கப்படுகிறது.

மேலும், ஒரு பங்கு ஆலயத்திற்கு இருப்பதுபோல் குறிப்பிட்ட இறைமக்களோ அவர்களுக்குரிய அருள்பணிகளை நிறைவேற்றுதலோ திருத்தலத்திற்கு இல்லை. மாறாக, ஆன்ம, உடல், மன ரீதியான புத்துணர்வும் புதுப்பித்தலும் நலமும் நாடும் அனைவருக்கும் உரிய இலக்கு இடமாகத் திருத்தலம் கருதப்படுகிறது.

news
ஆன்மிகம்
இரக்கமும் இறைவனும் (சதுக்கத்தின் சப்தம் – 2)

இன்று நாம் அனைவரும் ஒலி கடிக்கும், அமைதியை ஆரவாரத்தில் தேடும் அலை யழுந்திய கப்பலென, ஒலி ஒழுங்குகளை உடைக்கும் யுகத்தில் வாழ்கிறோம்.

ஒரு சிக்கலான சூழ்நிலை உள்ளடக்கிய ஒரு விரைவான பந்தயத்தில் பயணிக்கின்ற நம்மை, எல்லாக் காலத்திலும் மிகவும் பிரபலமான திருவிவிலியப் பகுதி ஒன்றை நினைவுகூர திருத்தந்தை லியோ அவர்கள் தனது இரண்டாவது புதன் மறைக்கல்வி உரையில்நல்ல சமாரியன்உவமை குறித்து எடுத்துரைத்தார்.

போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற திருச்சட்ட அறிஞரின் கேள்விக்கு, “உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக (இச 6:5); “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக (லேவி 19:18) என்ற இயேசுவின் பதிலுக்குத் தன்னை நேர்மையாளராகக் காட்டிக்கொள்ளும் பொருட்டுஎனக்கு அடுத்திருப்பவர் யார்?’ என்று கேட்கும் திருச்சட்ட அறிஞரின் வார்த்தைகளைக் கொண்டு திருத்தந்தை லியோ பகிர்ந்து கொண்டதாவது:

இன்று நான் ஒரு நிபுணர், அறிவுள்ள நபர், சட்டத்தின் மருத்துவர் பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன், இருப்பினும் அவர் தனது கண்ணோட்டத்தை மாற்றவேண்டும், ஏனென்றால் அவர் தன்னை மையமாகக் கொண்டு மற்றவர்களைக் கவனிக்கவில்லை (லூக்கா 10:25-37).

உண்மையில் நிலைவாழ்வு எந்த வழியில் மரபுரிமையாக வருகிறது என்று அவர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார். ஆனால், இந்தக் கேள்விக்குப் பின்னால் ஒருவேளை மறைக்கப்பட்டுள்ள கவனத்தின் தேவையே துல்லியமான கேள்வியாக இருக்கலாம். இயேசு விளக்குமாறு அவர் கேட்கும் ஒரே வார்த்தைஅருகில் இருப்பவர்என்று பொருள்படும்அடுத்திருப்பவர்என்ற சொல்.

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

புதுமை மற்றும் ஆச்சரியத்தைப் பொறுத்தவரை நல்ல சமாரியனின் உவமை சிறந்தது. கதையின் போக்கில், அடித்து நொறுக்கப்பட்ட மனிதனைப் பார்த்து குருகடந்து சென்றார்என்று பார்க்கிறோம். அதேபோல், லேவியனும்கடந்து சென்றான்.’ திருச்சட்ட அறிஞரைப் போலவே இந்த இருவருக்கும் சட்டம் தெரியும், அவர்கள் தூங்கும்போது கூட அதை ஓதுவார்கள். ஆயினும்கூட, ஒரு சமாரியன் எந்தக் கற்பனையிலும்அடுத்திருப்பவர்என்று அழைக்க முடியாதவர். ஆனால் உவமையில், இச்சமாரியனே பாதிக்கப்பட்டவர்மீது இரக்கம் கொள்கின்றார்.

இரக்கம் என்பது மனிதகுலத்தின் வேள்வி!

விசுவாசிகளாக இருப்பதற்கு முன், நாம் மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். இந்த இரக்கம் ஒரு பிச்சைக்காரனின் கிண்ணத்தில் ஒரு நாணயத்தை வீசுவது போன்ற ஒரு தொண்டு செயல் மட்டுமல்ல, இது உறவுகளை உள்ளடக்கியது. சமாரியன், “அவரைக் கவனித்துக்கொள்ளுங்கள், நான் திரும்பி வரும்போது கூடுதல் செலவுகளைச் சரிசெய்வேன்!” என்று கூறுகிறார்.

நல்ல சமாரியனின் உவமையில் குருவும் லேவியனும் கேட்ட முதல் கேள்வி என்னவென்றால், ‘நான் இந்த மனிதனுக்கு உதவுவதை நிறுத்தினால், எனக்கு என்ன நடக்கும்?’ ஆனால், அவரது அக்கறையின் தன்மையால் நல்ல சமாரியன் கேள்வியை மாற்றினார், ‘நான் இந்த மனிதனுக்கு உதவுவதை நிறுத்தினால், அவனுக்கு என்ன நடக்கும்?’

ஆனால்கடந்து செல்ல, ‘உதவ மறுக்கநமக்கு எண்ணற்ற சாக்குகள் உள்ளன. நேரம் இல்லை, பணம் இல்லை, இப்போது இல்லை, நான் சோர்வாக இருக்கிறேன்... இது ஒரு போலிஸ் வழக்கை உள்ளடக்கும்! நான் வெகுதூரம் செல்லவேண்டும்! வேறு யாராவது உதவுங்கள்! அந்த மனிதன் காயம் அடைந்ததாக மட்டுமே பாசாங்கு செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம்... என் மோட்டார் சைக்கிளில் அடித்து நொறுக்கப்பட்ட ஒரு பெண்ணை நான் அழைத்துச்சென்றால் மக்கள் என்ன நினைப்பார்கள்? ‘கடந்து செல்ல, ‘உதவ மறுக்கஎனக்குக் காரணங்கள் ஆயிரமாயிரம்!…

எதை நான் அடிக்கடிகடந்து செல்கின்றேன்?’

நீங்கள் ஒரு நல்ல அண்டை வீட்டுக்காரராக, ஓர் ஆசிரியராக, ஓர் அரசு ஊழியராக, ஒரு கடைக்காரராக, ஒரு போலிஸ்காரராக, ஒரு குருவாக... வெளியில், தெருக்களில், நீர்நிலைகளில் குப்பைகளை வீசுவதைத் தவிர்க்கிறீர்களா? உரத்த இசை அல்லது ஒலிகளை உருவாக்குவதைத் தவிர்க்கிறீர்களா? அல்லதுஹார்ன்அடிப்பது நமது சுற்றுப்புறங்களை, பொது அரங்குகளை மாசுபடுத்துகிறதா? பொது இடங்களில் தொலைப்பேசியைப் பயன்படுத்துவது மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றதா? எவற்றை நான் அடிக்கடிகடந்து செல்கின்றேன்?’

யாரை நாம் அடுத்திருப்பவராகப் பார்க்கிறோம்?

பொதுவாக, நாம் அண்டை நாட்டவரை நமது மக்களாக நினைக்க விரும்புகிறோம். நமது நம்பிக்கை, நமது சமூகம், நமது நிறம் மற்றும் நமது சமூக வர்க்கம் என்கிற எண்ணம். ஆனால் இயேசு, நம் அடுத்திருப்பவர் முற்றிலும் வேறுபட்டவராக இருக்கலாம் என்று சிந்திக்க நமக்குச் சவால் விடுக்கின்றார்.

நமது நேரம், அக்கறை மற்றும் கவனிப்புக்கு எவரும் தகுதியானவரல்லர் என்று நாம் கருதலாம். இருப்பினும், அனைவருமே நாம் நேசிக்க அழைக்கப்படும் அடுத்திருப்பவர்கள். திருச்சட்ட அறிஞர், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்டிருந்தார். இயேசு அவரது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை; ஆனால், ஒரு நல்ல அடுத்திருப்பவராக இருக்கக் கூறினார். “நீயும் போய் அவ்வாறே செய்.” என்ன செய்ய வேண்டும்? என்று இயேசு நமக்குக் கூறவில்லை. மாறாக, மற்றவர்களைப் பற்றிய நமது மனப்பான்மையையும் சிந்தனையையும் மாற்றும்படி நம்மை அழைக்கிறார். இது மனமாற்றத்திற்கான அழைப்பு, யாரையும் விலக்காத வரவேற்பு மற்றும் திறந்த இதயத்தை உருவாக்குவதற்கான அழைப்பு. ஏனென்றால், நம் அடுத்திருப்பவரை நேசிப்பதில் நாம் கடவுளை நேசிக்கிறோம்.

இயேசுவின் வார்த்தைகள் எளிமையானவைதாம்; ஆனால், அவை நம்மை முழுமையாய் மாற்றும் சக்தியைக் கொண்டவை. அவர் நம்மிடம் கேட்டுக் கொள்வது: ‘இறைவனை உண்மையாய் நேசியுங்கள்; அடுத்திருப்பவரையும் நம்மைப்போல் நேசியுங்கள்; இரக்கம் காட்டுங்கள்; சடங்குகளுக்குப் பதிலாக அன்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.’

நம்முடைய உண்மையான பக்தி என்பது சடங்குகளின் புற அலங்காரங்களில் அல்ல; நாம் மற்றவர்களுக்குச் செயலில் காட்டும் அன்பிலும், இரக்கத்திலும் உள்ளது. அன்பு இல்லாத வழிபாடு வெறுமைதான். அன்புள்ள செயல்கள் இல்லாமல் பக்தியாக இருப்பது வீணாகும். நம்மை ஒன்றாக இருக்க அழைக்கும் இயேசுவைப் பின்பற்றும் நாம் பிறருக்கு நன்மை செய்வதில் நமது கரங்கள் அழுக்காக அனுமதிப்போம், தீட்டுப்படுத்திக்கொள்வோம். இரக்கம் காட்டுவோம், இறைவனைக் காண்போம். ஏனெனில், இரக்கமே இறைவனாக இருக்கின்றார்!

news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக!

பேரொளியின் ஒளியாக நம்மில் வாழும் இறைவனாகிய பேரொளி! நம்பிக்கை ஒளியை ஏற்றி, விண்ணக ஒளியோடு நம்மை இணைக்கின்ற அனுபவம் நம்மை இவ்வாறு பாடச் செய்கின்றது ‘உமது முகத்தின் ஒளி  என்மீது வீசச் செய்யும் ஆண்டவரே!’ இந்த நம்பிக்கை ஒளி நம்மில் ஏற்றப்படும் பொழுது நம் பலவீனங்கள் மறைந்து வல்லவர்கள் ஆகின்றோம். குணமாக்கும் வல்லமை நம்மில் நிரப்பப்படுகின்றது. அதனால்தான் நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்த நோயாளிகள் குணம் பெற்றபோது இயேசு கூறினார்: “உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று.”

நலமடைதலில் மட்டுமல்ல, நம்பிக்கை அனைத்தையும் பெறச் செய்யும். நாம் செய்ய வேண்டியதை இயேசு இவ்வாறு வலியுறுத்துகிறார்: “அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது, இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33).

இயேசுவின் வார்த்தை ஒளிமயமானது என்பதை நாம் அறிவோம். அவ்வார்த்தை நம்பிக்கையை ஆழப்படுத்தி நங்கூரமாகச் செயல்படுகின்றது. புனித பவுல் கூறுவதுபோல, “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது. உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது” (உரோ10:8).

இயேசுவின் வார்த்தையை உள்வாங்கி, நமதாக்கி வாழ்வாக்கும் பொழுது அவர் கரத்திலிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். நிலைவாழ்வை நோக்கித் திருப்பயணம் மேற்கொள்ளும் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை உருமாற்றும்.

கடந்த சில நாள்களுக்குமுன் நடந்த ஒரு நிகழ்வு என்னைப் பூரிப்படையச் செய்தது. மே மாதம் முதல் நாள் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இல்லத்திலோ, அருகில் உள்ள ஆலயங்களிலோ திருப்பலி இல்லை. எனவே, புனித மரியன்னைப் பேராலயத்தில் திருப்பலியில் பங்குபெற அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விரைந்தேன். சாலையில் 20 நிமிடங்களுக்குமேல் ஆட்டோ அல்லது பேருந்துக்காகக் காத்திருந்தேன். அண்மையில் ஏற்பட்ட விபத்தால் இடது காலில் மூன்று இடத்தில் எலும்புக் கீறல் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் நடப்பது கடினமாக இருந்தாலும், திருப்பலியில் பங்குபெற வேண்டும் என்ற ஆர்வத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோ கிடைத்தது.

நான் ஆலயத்தில் நுழையும்போது வருகைப் பாடல் பாடினர். மகிழ்வோடு நன்றி கூறிக்கொண்டே திருப்பலியில் பங்கேற்றேன். திருப்பலி முடிந்ததும் சில ஆண்டுகளாகச் சந்திக்க இயலாமல் இருந்த அன்பான, நட்புடன் உறவாடும் ஆசிரியை ஒருவரைக் கண்டேன். இருவரும் உரையாடிக்கொண்டே அவர்கள் இல்லம் சென்றோம். காலை உணவிற்குப் பின் கார் ஏற்பாடு செய்து என்னை அனுப்பி வைத்தார்கள். தன் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவிகளுக்குப் பலவகைகளில் உதவி செய்பவர்கள். ஜூலி என்ற இந்த ஆசிரியை மதுரை புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர்.

இத்தகையோர்தான் உலகிற்கு ஒளியாக இருக்கிறவர்கள். அவர்களது நற்செயல்களைக் கண்டு மக்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழும்படி வாழ்பவர்கள். இயேசு மீண்டும் மாட்சியுடன் வரும்பொழுது அவரது வலப்பக்கத்தில் நிற்கும் பேறுபெற்றவர்கள் (மத் 25:34,36). அத்தகைய பேறுபெற்றவர்களாக  வாழ்வோம். விண்ணகத் தந்தையை மாட்சிப்படுத்துவோம்.

அனைத்திற்கும் மேலாக ஆண்டவரை மட்டுமே தேடுவோம். அவரில் நம்பிக்கைகொள்வோம். அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையதையும் நாடுவோம்.

நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் கரங்களிலிருந்து பெற்று மகிழ்வோம். அவற்றைப் பிறரோடு பகிர்ந்து இறையாட்சி மலரச் செய்யும் மீட்பின் கருவிகளாவோம்.