news
ஆன்மிகம்
பன்மையில் ஒருமை திரு அவையின் வளமை – (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 06)

மூன்றாம் உலக நாடுகளில் கிறித்தவம் பெரிதும் பரவியது 16-ஆம் நூற்றாண்டிலிருந்துதான். இந்தியாவில் அது முதல் நூற்றாண்டிலேயே வேரூன்றியிருந்தாலும், படர்ந்து பரவலாகியதும் அதே காலத்தில்தான். அதற்கான மறைபரப்பு முயற்சிகள் பெரிதும் ஐரோப்பாவிலிருந்தும் ஐரோப்பிய பணியாளர்களாலுமே மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலும் பண்பாடுகளிலும் சூழமைவுகளிலும் வாழ்கின்ற பல்வேறு திரு அவைகளுக்கான அனைத்து முக்கியச் சட்டதிட்டங்களும் இன்றளவும் உரோமைத் தலைமையகத்திலேயே இயற்றப்படுகின்றன. இதனால், உலகெங்கும் திரு அவையில் ஐரோப்பியத்தன்மையே அதிகம் மேலோங்கி நிற்கிறது. அதுவும் குறிப்பாக, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தன் நடை, உடை, பாவனைகளில் மட்டுமல்ல, சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் சட்ட திட்டங்களிலும்கூட அந்நியமானதாகவே தோன்றுகிறது. அந்தந்த இடத்துப் பண்பாட்டு வளங்களால் அது அதிகம் செழுமைப்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, அந்தந்த இடத்து மக்களின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தனது நற்செய்தியின் ஆற்றலால் அதனால் இயன்ற முழு பங்களிப்பையும் செய்ய இயலவில்லை. அதன் நற்செய்திப்பணியும் உரிய பெரும் வெற்றியைப் பெறவில்லை.

வேரூன்றி நின்று வேறுபடுவது

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது அங்குத் திரு அவை உருவாகிறது. அந்த இடத்துப் பண்பாட்டிலும், வரலாற்றுச் சூழமைவிலும்தான் அம்மக்கள் மீட்பளிக்கும் இறைவனின் சந்திப்பு அனுபவத்தை உண்மையாகவும் ஆழமாகவும் அனுபவிக்கவும், பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். இவ்வாறு குறிப்பிட்ட இடங்களைச் சார்ந்ததாகத் திரு அவை இருப்பதால்தான் நம்பிக்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் எனும் வளமை அதில் தோன்றவும் பாதுகாக்கவும்படுகிறது (இஅ* 110).

ஓர் இடத்தில் வேரூன்றியிருத்தல் என்பதை இன்று நாம் ஒரு நிலப்பகுதியைச் சார்ந்து இருத்தல் என்று மட்டும் புரிந்துகொள்ளல் ஆகாது; ஏனெனில், இன்று அது முன்பு ஒருபோதும் இல்லாத இயக்கமும் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட உறவுகளின் பின்னலையும் பண்பாட்டுப் பன்மைநிரையையும் சார்ந்திருப்பதும் ஆகும். இதற்கு முக்கிய ஒரு காரணியாக இருப்பது நகர்மயமாதல், மக்களின் புலம்பெயர்தல் என்பன. இவற்றால் நிலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட மறைமாவட்டங்கள், பங்குகள் என்பனவற்றின் எல்லைகள் மங்கி புதுவகைப் பிணைப்புகள் உருவாகின்றன. இம்மாற்றங்கள் திரு அவையின் அருள்பணிசார் செயல்பாடுகளுக்குப் பல சவால்களை முன்வைக்கின்றன. இச்சவால்களை எதிர்கொள்ளப் புதிய வகைகளிலான அருள்பணிச் செயல்பாடுகளைக் கற்பனை செய்து, தெளிதேர்வு செய்து நடைமுறைப்படுத்தும் மறைத்தூதுப் படைப்பாற்றல் அவசியம் (இஅ 111).

இந்நிலையில் திரு அவையை நாம் ஓர் இல்லம் எனப் புரிந்துகொள்வது அவசியம். “அதனை எல்லா வகையிலும் பாதுகாக்கப்படவேண்டிய, வாயில் திறவாத, மூடிய ஓர் இடமாகக் கருதாது, ஓர் இல்லமாக உருவகிக்கும்போது வரவேற்றல், விருந்தோம்பல், ஏற்றுக்கொள்ளுதல் என்பனவற்றிற்கான வாய்ப்புகள் பிறக்கின்றன. இம்மண்ணுலகம் என்பதே ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஏனைய படைப்புகளுடன் வாழும் நமது பொது இல்லம்தானே! (அனைவரையும்) வரவேற்கும் ஓர் இல்லமாகவும், சந்திப்பு மற்றும் மீட்பின் அருளடையாளமாகவும், கடவுளுடைய பிள்ளைகளாகிய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்குமான உறவு ஒன்றிப்பின் பயிற்சி இல்லமாகவும் திரு அவை பார்க்கப்படுவதைத் தூய ஆவியின் துணையுடன் உறுதிசெய்வதே நமது ஈடுபாடு (இஅ 115).

ஒற்றுமை என்பது

ஒருமைப்பாடு அல்ல!

பல்வேறு நாடுகள், பண்பாடுகள், சூழமைவுகள் என்பனவற்றில் இணைந்து பயணிக்கும் திரு அவைக்குப்பன்மையில் ஒருமைஎன்பது இன்றியமையாதது. ஏனெனில், அது மூவொரு கடவுளின் வாழ்வில் பங்கேற்கின்ற கடவுளின் மக்கள் சமூகம். தந்தை, மகன், தூய ஆவியார் மூன்று ஆள்களாக இருப்பினும், அவர்கள் ஒரே கடவுளாகவும், பன்மையில் ஒருமையாகவும் வேறுபடினும் ஒன்றிப்புறவில் இணைந்தவர்களாகவும் இருப்பவர்கள். இவ்வாறே, திரு அவையும் பல நாடுகள், இனங்கள், மொழிகள், பண்பாடுகளைச் சார்ந்த மக்களாக இயேசுவின்மீது கொண்ட ஒரே நம்பிக்கையில் ஒன்றித்து வாழ வேண்டிய சமூகமே. ஆனால், “திரு அவையின் ஒன்றிப்பு என்பது ஒருமைப்பாடு அல்ல; மாறாக, அது முறையான வேறுபாடுகளின் உயிரிணைப்பு சார்ந்த கூட்டமைப்பே. மீட்பின் செய்தி பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது. இது அச்செய்தியைத் திரு அவையின் வாழ்க்கைமுறை மற்றும் அது எடுக்கும் இறையியல், திருவழிபாடு, அருள்பணி, ஒழுங்குமுறைகள் என்பவற்றின் வடிவங்களையும் பற்றிய ஒற்றைப்புரிதலுக்குள் முடக்கிவிடுவதைத் தவிர்க்க உதவுகிறது (இஅ 39). ஏனெனில், “திரு அவையின் கத்தோலிக்கத் தன்மையின் பொருள் பன்மையில் ஒருமை என்பதே (இஅ 38).

திரு அவையின் இந்தப் பன்மையில் ஒருமை என்பது ஒரு வளமை எனும் அனுபவமாக மாமன்றக் கூடுகைகள் தங்களுக்கு அமைந்திருந்தன என அதன் பங்கேற்பாளர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்: “கூடுகை நாள்களில் திரு அவை பல்வேறு வெளிப்பாடுகளாகத் திகழ்வதை நேரடியாகவும், மிக்க மகிழ்ச்சியாகவும் நாங்கள் அனுபவித்தறிய முடிந்தது (முஅ 5o). எவ்வாறெனில், “தலத்திரு அவைகளின் அருள்வாழ்வுசார் மரபுச் செல்வங்களை மாமன்ற இயக்கமுறை வெளிச்சம் போட்டுக்காட்டியது, திரு அவையின் பொதுமை (கத்தோலிக்கத் தன்மை) காரணமாக அதன் தனிப்பகுதிகள் தத்தம் கொடைகளை ஏனைய பகுதிகளுக்கும், முழு திரு அவைக்கும் கொண்டுவருகின்றன. இதனால், அவை தங்களுக்கு இடையிலான பகிர்வுப் பரிமாற்றம் மற்றும் நிறை ஒற்றுமைக்கான ஒன்றுபட்ட முயற்சிகள் வழியாக முழுத் திரு அவையும் அதன் தனிப் பகுதிகளும் வளர்ச்சியடைகின்றன(இஅ 37).

- மாமன்ற முதல் அமர்வின் அறிக்கை *(முஅ),

இறுதி அறிக்கை (இஅ)

news
ஆன்மிகம்
புனித யோசேப்பு பக்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் (நீங்கா நினைவுகள் - 06)

சிறுவயது முதலே இறைமகன் இயேசுவின் இவ்வுலகத் தந்தை புனித யோசேப்புமீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். இதை எண்பிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பணி ஏற்ற நாள் 2013, மார்ச் 19 புனித யோசேப்பு பெருவிழா நாள் அவர் மனத்துக்கு ஏற்றபடி அழகாகவும் பொருத்தமாகவும் அமைந்தது. ஒரு திருத்தந்தையாகப் பின்னாள்களில் புனித யோசேப்பு பக்தி முயற்சிகளை அனைத்துலகுக்கும் வளர்த்தெடுக்கும் செயல்பாடுகளுக்கு முன்னோட்டமாகவும், புனித யோசேப்புக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தைக் கட்டியம் கூறும் சாட்சியமாகவும் திருத்தந்தை பிரான்சிசின் தலைமைப் பணி ஏற்பு நாள் அமைந்தது.

பாதுகாப்பதில் புனித யோசேப்பின் பங்கு  

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தலைமைப் பணி ஏற்பு விழாவை எளிமையான விதத்தில் கொண்டாடிய திருத்தந்தை, விழாவின் மையப்பொருளாகத் தேர்வு செய்ததுபுனித யோசேப்பு திருக்குடும்பத்தின் பாதுகாவலர், திரு அவையின் பாதுகாவலர்என்பதாகும். அன்றைய திருப்பலியில்பாதுகாத்தல்என்பதை மையக்கருத்தாகக் கொண்டு திருத்தந்தை ஆற்றிய மறையுரை, அவர் புதிதாக ஏற்றுக்கொண்ட மிகப்பெரும் பொறுப்புக்கு, புனித யோசேப்பின் பாதுகாவலையும் துணையையும் நாடுவதாக அமைந்தது.

தனது மறையுரையில் புனித யோசேப்பின் விழா நாளன்று பணி ஏற்பு நடப்பதன் பொருத்தத்தைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “இறை இயேசுவுக்கும் அன்னை மரியாவுக்கும் பாதுகாப்பளித்து அவர்களைப் பேணிக் காத்தவர் புனித யோசேப்பு; எனவேபாதுகாத்தல்என்பது திரு அவைக்கும் கிறித்தவர்களுக்கும் மிக முக்கியமானதுஎனத் தெரிவித்தார். மேலும், “உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் புனித யோசேப்பைப் போன்று மக்களைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும்என்றும் அறிவுறுத்தினார்.

உலகில் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பொறுப்பு மிக்க பதவியில் இருப்பவர்கள் கடவுளின் படைப்புலகு குறித்து அக்கறை கொண்டிருக்கவேண்டும், உலக மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் மிக்கவர்களாக விளங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உலகத் தலைவர்களும் குழந்தைகளை, முதியோர்களை, துன்பத்தில் உழல்வோரைப் பாதுகாக்கக் கடமை கொண்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்தினார். திருத்தந்தையின் இறையியல் பார்வையில் திரு அவை மற்றும் மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புனித யோசேப்பின் பாதுகாப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெளிவுபடுத்தினார். உறங்கும் நிலையிலும் ஓர் அமைதியான புனிதராக யோசேப்பு திருக்குடும்பத்துக்கும் திரு அவைக்கும் பாதுகாவலராகத் திகழ்கிறார் எனத் தெரிவித்தார்.

புனித யோசேப்புடன் நெருக்கமானவர்

திரு அவையின் வரலாற்றில் குழப்பம் மிகுந்த ஒரு காலகட்டத்தில் திருத்தந்தை 9-ஆம் பத்திநாதர் திரு அவையைப் புனித யோசேப்பின் பாதுகாவலில் வைக்க விரும்பினார். எனவே,  1870-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாள் புனித யோசேப்பைகத்தோலிக்கத் திரு அவையின் பாதுகாவலர்என அறிவிப்பு செய்தார். எப்பொழுதும் கன்னியான மரியாவின் மிகத் தூய்மையான கணவராகவும், இறைமகனைச் சிறந்த முறையில் வளர்ப்பவராகவும், திருக்குடும்பத்தின் தலைவராகவும் தேர்ந்துகொள்ளப்பட்டதன் காரணமாக இயேசுவால் கட்டியெழுப்பப்பட்ட திரு அவைக்குப் புனித யோசேப்பு பாதுகாவலராகக் கிறிஸ்துவின் பிரதிநிதியான திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.

இவ்வாறு புனித யோசேப்பு உலகளாவிய திரு அவையின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டதன் 150-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் புனித யோசேப்பு யூபிலி ஆண்டினை 2020, டிசம்பர் 08 அன்று துவக்கினார். அன்று அவர் வெளியிட்டPatris cordeஅதாவதுஒரு தந்தையின் இதயத்தோடுஎன்ற தலைப்பில் அமைந்த திருத்தூது மடல் மூலமாக, அவரும் புனித யோசேப்பும் திரு அவையின் திருத்தந்தை மற்றும் திரு அவையின் பாதுகாவலர் என்ற முறையில் ஒருவருக்கொருவர் நெருக்கத்தில் இருப்பது வெளிப்பட்டதுபுனித யோசேப்பின் யூபிலி ஆண்டில் சிறப்புப் பேறுபலன்களை அறிவித்த திருத்தந்தைபுனித யோசேப்பே, ஒரு தந்தையாக வாழும் வாழ்வுப் பாதையை எமக்குக் காட்டியருளும். இரக்கமும் துணிவும் நிறைந்த அருளை எமக்குப் பெற்றுத்தாரும்என்ற செபத்துடன் தன் மடலை நிறைவு செய்தார்.       

புனித யோசேப்பிடம் பக்திப் பற்றுதல்  

இறைவனின் தாய் மரியாவிடமும், புனித யோசேப்பிடமும் திருத்தந்தை பிரான்சிஸ் குழந்தைத்தனமான பாசம் கொண்டிருந்தார். அந்தப் பாசமே துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னை மற்றும் உறங்கும் நிலை யோசேப்பு ஆகியோரின் பக்தியைத் திரு அவையில் வளர்க்கச் செய்தது.

19-ஆம் நூற்றாண்டில் இயேசு-மரியா துறவு சபை பிரெஞ்சு மொழியில் வெளியிட்டபுனித யோசேப்பு பக்தி முயற்சிகள்என்ற பழமையான நூலிலுள்ள செபத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒவ்வொரு நாளும் தவறாமல் செபித்து புனிதரிடம் தனக்குள்ள நேசத்தில் நிலைத்தார். மேலும், தன்னுடைய  ஆட்சி முத்திரையில் புனித யோசேப்பைக் குறிக்கும் லீலி மலரை இடம்பெறச் செய்தார். அவர் தலைமைப் பணியேற்ற அதே ஆண்டிலேயே புனித யோசேப்பின் பரிந்துரையை நாடும் விதத்தில் அனைத்து நற்கருணை மன்றாட்டுகளிலும் புனிதரின் பெயரையும் இணைத்தார். உறங்கும் நிலை புனித யோசேப்பின் பக்தி உலகம் முழுக்கப் பரவுவதற்குத் திருத்தந்தையின் இந்த அனுபவமே காரணமாயிற்று.

புனித யோசேப்பு குறித்த சிந்தனைகளை அடிக்கடிப் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் உள்ளவராகத்  திருத்தந்தை விளங்கினார். புனித யோசேப்பை ஒரு தந்தையாகவும், இயேசுவின் வளர்ப்பாளராகவும், மரியாவிடம் பக்தி செலுத்துபவராகவும் போற்றிய திருத்தந்தை, திரு அவையில் புனித யோசேப்பு ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார். மக்களால் அதிகம் கவனிக்கப்படாதவராய், அதேவேளை காலமறிந்து செயல்படுகிறவராய் மறைவாழ்வு வாழ்ந்தாலும், மீட்பு வரலாற்றில் எவரோடும் ஒப்பிட முடியாத செயல் வீரராக அவர் விளங்கினார் என்றும், இதனாலேயே கிறித்தவ மக்களால் புனித யோசேப்பு எப்போதும் அதிகம் நினைவுகூரப்படுகிறார் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

புனித யோசேப்பிடம் பெற்ற படிப்பினைகள்   

புனித யோசேப்பிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்வதற்குப் பல படிப்பினைகள் உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் கருதினார். நாசரேத் தச்சர் யோசேப்பு தனது மனைவி மரியாவை ஏற்றுக்கொண்டது மற்றும் இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கைகொண்டது போன்ற தன் செயல்களால் உலகம் வேண்டுமென்றே புறக்கணிக்கும் விசயங்களைக் கவனிக்கவேண்டும் என்பதைத் திரு அவைக்கு நினைவூட்டுகிறார். மற்றவர்கள் நிராகரிப்பதை நாம் மதிக்கவேண்டும் என்பதை நம் ஒவ் வொருவருக்கும் அவர் அறிவுறுத்துகிறார். உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களைக் கவனிக்கவும், அவர்களைப் பராமரிக்கவும் நமக்கெல்லாம் கற்பிக்கிறார். இவ்வுலகில் ஒருவர் தந்தையாகப் பிறப்பதில்லை; அவர் ஒரு குழந்தையின் வாழ்வுமீது பொறுப்பேற்கும்போதே தந்தையாக மாறுகின்றார். தந்தையரால் கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் நிறைந்துள்ள இன்றைய உலகிற்கு புனித யோசேப்பு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இப்படிப்பினைகளோடு இயேசுவின் பணி வாழ்விற்குமுன் அவர் வாழ்ந்த இடமான நாசரேத், கடவுளால் முன்னரே புனித யோசேப்பின் பிறப்பிடமாகத் தேர்வு செய்யப்பட்டது என்பது அதிகம் அறியப்படாத பகுதிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மீதுள்ள இறைவனின் விருப்பத்தைக் காட்டுவதாக அமைவதாகவும் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதனின் தனிப்பெரும் மாண்பும் மகத்துவமும், அந்த மனிதர் பெற்றுள்ள அரும்பெரும் பண்புகளாலும், அந்த மனிதர் ஏற்றுள்ள பதவிப் பொறுப்புகளாலும் அவருக்குக் கிடைக்கிறது. அந்த வகையில் இறைவனின் இதயத்துக்கு ஏற்றவராக விளங்கிய புனித யோசேப்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவராக விளங்கினார்.

news
ஆன்மிகம்
ஆலயப் பாடல்களுக்கு அனுமதி பெற வேண்டுமா?

1. பின்புலம்

கத்தோலிக்கத் திருவழிபாட்டிலும் (திருப்பலி), திருவழிபாட்டிற்குப் புறம்பே திருமணங்கள், அடக்கச் சடங்குகள், மரியா / புனிதர்களின் நவ நாள்கள் மற்றும் திருவிழாக்களிலும், கிறிஸ்து பிறப்பு, வருடப் பிறப்பு மற்றும் தவக்காலம் / புனித வாரச் சிறப்புக் கொண்டாட்டங்களின் போதும் இறைமக்கள் பாடுவதற்காகப் புதுப்புது பாடல்கள் இயற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், பொதுநிலையினர் என்று பலரும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஆலயப் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் பாடல்கள் கொண்டிருக்க வேண்டிய சிறப்புப் பண்புகள் யாவை? அவற்றிற்குத் திரு அவையின் உரிய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமா? திரு இசைக்கு அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள் என்ன? இக்கேள்விகளுக்கு இக்கட்டுரை விளக்கமளிக்கிறது.

2. திரு இசையின் பண்புகள்

இறைவனுக்கு மாட்சிமை நல்குவதையும், மானிடரைத் தூய்மைப்படுத்துவதுமே திரு இசை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிடும் திரு அவை, ஆசிரியப் படிப்பினை, அதன் இன்றியமையாத பண்புகளாகக் கீழ்க் காண்பவற்றைக் கோடிட்டுக்காட்டியுள்ளது:

1) இசை அமைப்பாளர்கள் கிறித்தவ உணர்வால் நிரம்பியிருக்க வேண்டும். திரு இசையைப் பேணி அதன் கருவூலத்தைப் பெருக்கத் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் அமைக்கும் பண்கள் பாட்டுக் குழுக்களால் மட்டும் பாடக்கூடியனவாய் இல்லாமல், நம்பிக்கையாளர் குழுமம் அனைத்தும் செயல்முறையில் பங்கு கொள்ளப் பொருத்தமானவையாகவும் விளங்கவேண்டும்.

2) ஆலயப் பாடல்கள் திருவிவிலிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டும், கத்தோலிக்கக் கோட்பாடுகளுக்கு ஒத்திருப்பதாகவும் அமைய வேண்டும்.

3) திருவழிபாட்டுக் காலங்களோடும், திருவழிபாட்டு மறைநிகழ்வுகளின் கொண்டாட்டங்களோடும், திருவழிபாட்டுப் பாடல்களின் வார்த்தைகளும் இசையும் பொருந்திச் செல்லவேண்டும்.

4) திரு இசையின் வார்த்தைகள் இறைவனின் பெயரில், அவரை நோக்கி விளித்து, அவரது மாட்சியையும் மாபெரும் செயல்களையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

5) திருவழிபாட்டில் இடம்பெறும் பாடல்களின் கீழ்க்காணும் வகைகளுக்கு ஏற்றவாறு திரு இசை அமைய வேண்டும்.

வருகைப்பாடல்: கொண்டாட்டத்தைத் தொடங்கவும், திருக்கூட்டத்தின் ஒன்றிப்பைப் பேணவும், திருவழிபாட்டுக் காலத்தின் அல்லது திரு நாளின் மறையுண்மையைப் பற்றிய அவர்களுடைய சிந்தனையைத் தூண்டவும், அருள்பணியாளரும் பிற பணியாளர்களும் வரும் பவனியில் இணைந்திருப்பதும் இவ்வருகைப் பாட லின் நோக்கம் ஆகும்

பதிலுரைப் பாடல்: முதல் வாசகத்தைத் தொடர்ந்து வரும் பதிலுரைப் பாடலுக்கு வாசக நூலில் உள்ள பதிலுரைத் திருப்பாடலையே பாடவேண்டும். அதே திருப்பாடல் ஏற்கெனவே இசையமைக்கப்பட்டுள்ள ஒரு தியானப் பாடலாக இருப்பின் அதைப் பாடலாம்.

காணிக்கைப் பாடல்: நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான அப்ப, இரசம் உள்ளிட்ட காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதற்காகப் பவனியாகவோ பவனியின்றியோ பீடத்திற்குக் கொண்டுவரும்போது பாடுவது.

திருவிருந்துப் பாடல்: நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மிக ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உள்ளத்து மகிழ்ச்சியை எடுத்துக்காட்டவும், பவனியாகச் செல்பவரின் குழும இயல்பைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அமையும் பாடல் (‘கிறிஸ்துவின் ஆத்துமமேஎன்ற பாடலை ஒவ்வொரு திருப்பலியிலும் பாடவேண்டுமென்ற கட்டாயம் இல்லை).

நன்றிப்பாடல்: நற்கருணை விருந்திற்குப் பின், ‘திருவிருந்துக்குப்பின் மன்றாட்டுக்கு முன் அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சிறிது நேரம் அமைதியாகச் செபித்த பின் இறைவனுக்கு நன்றிகூறுவதற்காகப் பாடப்படும் ஒரு திருப்பாடல் அல்லது புகழ்ச்சிப் பாடல்.

இறுதிப்பாடல்: திருப்பலியின் இறுதியில் அருள்பணியாளர் திருக்குழுமத்திற்கு ஆசி வழங்கி, நற்செய்தியை அறிவிக்கவும், நற்பணி செய்யவும் திரும்பிச் செல்லும்படி அதை அனுப்பியபின் பாடுவதற்கு உரோமைத் திருப்பலி நூலில் ஏற்பாடு எதுவும் இல்லை (மக்கள் கலைந்து செல்லும்போது அன்னை மரியா / புனிதர்களின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடுவதும் ஏற்புடையதல்ல; அந்நேரத்தில் பொருத்தமான இசையை மட்டும் இசைப் பெட்டியில் வாசிப்பது உகந்தது).

6) திருவழிபாடு திரு அவையின்தனிநபர் கொண்டாட்டம்என்றல்லாமல், ‘பொதுக் கொண்டாட்டம்என்பதால் அதில் இடம்பெறும் திரு இசையும், திரு அவையினுடைய மரபு மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பின்பற்றியிருக்க வேண்டும் (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம். திருவழிபாடு, எண்: 112-121; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண்: 40-41, 47-48, 61, 74, 86 - 88 அன்பின் அருளடையாளம் (Sacamentum Caritatis, 2007), எண் : 42 - 70; ஆண்டவரின் அருள்வாக்கு, (Verbum Domini, 2010), எண்: 69.

3. அனுமதிபெற வேண்டிய வழிமுறைகள்

ஆலய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பாடல்கள், இராகங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றைத் தீர்மானிப்பதும் அனுமதிப்பதும் அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதும் ஆயர் பேரவையின் பொறுப்பாகும் (காண்: உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை, 2017, எண்: 48 - 393). இந்தியாவில் திருவழிபாடு சார்ந்தவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பை அந்தந்த மண்டல ஆயர் பேரவைக்கு இலத்தின் ஆயர் பேரவை வழங்கியுள்ளது. சில நாடுகளின் ஆயர் பேரவைகள் (கனடா, வட அமெரிக்கா, மலேசியா) இசை அமைப்பாளர்கள் தங்களின் திரு இசைக்கு அனுமதி பெறுவதற்காக வழங்கியுள்ள கீழ்க்காணும் விதிமுறைகள் மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

1. ஓர் இசை அமைப்பாளர் தனது இடத்து ஆயருக்குத் தனது படைப்புகளை அனுப்ப வேண்டும். 2. அதை, அந்த ஆயர் தமக்குரிய ஆயர் பேரவை திருவழிபாட்டுப் பணிக்குழுவிற்கு மேலனுப்ப வேண்டும். 3. மேற்காணும் திருவழிபாட்டுப் பணிக்குழு அனுப்பப்பட்டுள்ள திரு இசைப்பாடல்களை மேற்கூறப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளின்படி ஆராய்ந்து அவற்றின் தகுதியைப் பற்றிய கருத்தை மறைமாவட்ட ஆயருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. அக்கருத்தைப் பெற்றவுடன் மறைமாவட்ட ஆயர் திரு இசைப்பாடல்கள் அனுப்பிய இசை அமைப்பாளருக்குஅனுமதி வழங்கப்படுகிறது / ‘மறுக்கப்படுகிறதுஎன்ற பதிலை அனுப்ப வேண்டும். 5. மறைமாவட்ட ஆயர் அனுமதி வழங்கும் திரு இசைப் பாடல்களின் காப்புரிமை (Coyright) மறைமாவட்டத்திற்கு உரியது. அப்பாடல்கள் மறைமாவட்ட டிஜிட்டல் கருவூலத்தில் சேமிக்கப்படும். அவற்றைக் கத்தோலிக்க இறைமக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவற்றையே ஆலயப் பாடல்களாகப் பயன்படுத்தவேண்டும். 6. தனிச்சுற்றுக்காக வெளியிடப்படும் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளிலிருந்து பாடல்களை ஆலயங்களில் பாடுவதற்கும் மேற்கண்ட முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

4. இறுதியாக...

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரு இசையின் பண்புகளை உள்வாங்கி இசை அமைக்கப்பட்டு வெளியிடப்படும் அருமையான ஆலயப் பாடல்கள் உள்ளன. அதேவேளையில், திருவிவிலியத்திலும், இறையியல் கோட்பாட்டிலும் வேரூன்றி இல்லாத, இறைவனின் பெயரை விளித்து எழுதப்படாத, நம்பிக்கையாளர்களின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்தாத பண்களும், திருக்குழுமம் அனைத்தும் பங்குகொள்ள இயலாத, சினிமா/பாட்டுக் கச்சேரிப் பாடல்களின் இராகங்களைப் பிரதிபலிக்கும் இசையும் கொண்ட பாடல்கள் ஆலயப் பயன்பாட்டிற்காக வியாபாரப் போட்டியுடன் புதிது புதிதாக இறக்கப்படுகின்றன என்பதையும் மறுக்கமுடியாது. இந்நிலையில், தமிழ்நாடு ஆயர் பேரவை திரு அவை ஆசிரியப் படிப்பினைகளின்படி ஆலயப் பாடல்களை இயற்றுவதற்குரிய விதிமுறைகளை வெளியிட்டு, அனுமதி வழங்கி, கண்காணிப்பு செய்து திரு இசையின் தரத்தையும் மாண்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென்பதே எமது வேண்டுகோள்.

news
ஆன்மிகம்
ஆற்றல் மையங்களும் திருமுழுக்கும் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 18)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்:தந்தையே! கடந்த வாரம் முழுவதும் நம் உடலில் உள்ள ஆற்றல் மையங்களுக்கும், நம் வாழ்விற்குமான தொடர்பு குறித்துதான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நம் ஒட்டுமொத்த மானிட வாழ்வே ஹார்மோன் சுரப்பிகளின் விளையாட்டுதான் என்று கூறினால் அது மிகையல்ல. நம் உடலில் எத்தகைய ஹார்மோன்கள் சுரக்கின்றன என்பதற்கு ஏற்ப நம் உடலும் நம் செயல்பாடுகளும் நம் வாழ்வியல் அணுகுமுறைகளும் அமைகின்றன என்பதை இன்றைய அறிவியலும் மருத்துவத்துறையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இத்தகைய பின்னணியில் பார்க்கும்போது, நம் வாழ்வு சீராகவும் முழுமையாகவும் அமைய வேண்டுமெனில், உடலில் உள்ள ஏழு ஹார்மோன் சுரப்பிகளும் சீராகச் செயல்பட வேண்டியிருக்கிறது. அவற்றைச் சீராக்குவதற்கான வழிமுறையே அவற்றோடு தொடர்புடைய ஆற்றல் மையங்களைச் செயல்படுத்துவது.”

அருள்பணி: நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எனினும், பிரச்சினை என்னவென்றால் பல மனிதர்களுக்கு உடலின் மேல்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்களும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதுதான். நம் உடல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால், உடல் சார்ந்த செயல்பாடுகளான நடத்தல், வேலைகள் செய்தல், ஓடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின்போது உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் தாமாகவே தூண்டப்படுகின்றன. அப்பொழுது அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளும் இயல்பாகவே தூண்டப்படுகின்றன. அதாவது, உடல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது அட்ரினல், கணையம், பாலுறவுச் சுரப்பிகள் இயல்பாகவே இயக்கப்படுகின்றன. எனவே, அவற்றோடு தொடர்புடைய செயல்களை நம் உடல் இயல்பாகவே முன்னெடுக்கின்றது.”

அகஸ்டின்:நீங்கள் கூறுவதைப் பார்த்தால், உடலின் மேல்பகுதியில் உள்ள பீனியல், பிட்யூட்டரி, தைமஸ் சுரப்பிகளும், அவற்றோடு தொடர்புடைய ஆற்றல் மையங்களும் நம்மில் அதிகமாக இயங்குவதில்லை என்பது போல் தெரிகிறதே?”

அருள்பணி:ஆம், அவற்றை இயக்குவதற்கான சில முயற்சிகளைத்தான் நாம் ஆன்மிகப் பயிற்சி என்கிறோம்.”

கிறிஸ்டினா:தந்தையே, நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது, எனது வகுப்பு ஆசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்வது எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘புருவ மத்தியில் கவனத்தை வைத்து மூச்சுக் காற்றைக் கவனித்தால் மனம் ஒருமுகப்படும், படிப்பு நன்றாக வரும்என்று அவர் அடிக்கடி கூறுவார்.”

மார்த்தா:தந்தையே! உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும், நாம் கடந்த கட்டுரையில் சிந்தித்த மனம் புறம்நோக்கி இயங்குவதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரிகிறதே?”

அருள்பணி:ஆம், உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படும்போது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற வேட்கையும், தனக்குத் தேவையானவற்றை அடையவேண்டும் என்ற வாழ்வாதாரத் தேடலும் ஒரு மனிதரில் இயல்பாகவே முகிழ்க்கின்றன. இது மனத்தைப் புறம்நோக்கி இயக்குகிறது. இது நல்லது என்றாலும், இதில் இருக்கின்ற தீமைகள் குறித்து நாம் ஏற்கெனவே விவாதித்து இருக்கின்றோம்.”

அகஸ்டின்:இத்தகைய நிலையைச் சமன் செய்யும் பொருட்டே உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் தூண்டப்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள்... அப்படித்தானே?”

அருள்பணி:ஆம், உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் இயக்கப்படும்போது மனம் அகம் நோக்கித் திரும்புவது இயல்பாகவே நடக்கும். அதாவது, மனத்தை அகம் நோக்கித் திருப்புவதற்கும், உடலின் மேற்பகுதியில் உள்ள ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. இத்தகைய செயல்பாடுதான் திருமுழுக்கு அருளடையாளத்தின்போது நிகழ்கிறது. இந்திய ஆன்மிகத்தின் பின்னணியில் உச்சந்தலை ஆற்றல்மையமே (crown chakra) மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான பாலமாகத் திகழ்கிறது என்று கடந்த கட்டுரையில் நாம் பார்த்தோம். உச்சந்தலை ஆற்றல் மையமானது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று காரணிகளால் அடைபடும்போது, நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவில் பிளவு ஏற்படுகிறது. பாலமாக இருக்க வேண்டிய இடம் பாவத்திற்கான காரணமாகி விடுகிறது. உச்சந்தலை ஆற்றல் மையத்தைத் தூய்மையாக்கி, கடவுளுக்கும் நமக்குமிடையேயான உறவுப் பிணைப்பைக் கொண்டு வருவதே திருமுழுக்கு.”

அகஸ்டின்:இது மிகவும் வித்தியாசமான விளக்கமாக இருக்கிறது தந்தையே! உச்சந்தலையில் ஏன் கிறிஸ்மா தைலம் பூசப்படுகிறது? ஏன் அங்கு புனித நீர் ஊற்றப்படுகிறது? என்பதன் அர்த்தம் இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது.”

அருள்பணி: ஆம்! கிறிஸ்மா தைலம் பூசப்பட்டு, புனித நீர் (தீர்த்தம்) ஊற்றப்படும்போது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றையும், இதற்குப் பின்புலமாக இருக்கின்ற மனத்தின் புறம்நோக்கிய அதீத வேட்கையையும் வெற்றி கொள்வதற்கான சிறப்பு அருள், திருமுழுக்கைப் பெறுபவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல திருமுழுக்கின்போது செயல்படுத்தப்படும் மற்றோர் ஆற்றல் மையம் இதயம் (heart center)! ஏழு ஆற்றல் மையங்களில் நடுவில் இருக்கும் இது சமநிலை வாய்ந்ததாக இருக்கின்றது. அகம்நோக்கிய தன்மையையும், புறம்நோக்கிய தன்மையையும் சமமாக வைத்திருப்பதற்கான ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. எந்த ஒரு மனிதர் தன் இதயத்தில் கவனத்தை வைத்து வாழ்கிறாரோ, அந்த மனிதரது வாழ்வு எத்தகைய பதற்றத்திற்கும் ஆளாகாமல் சமநிலையில் இருக்கும் வாழ்வாக இருக்கும். மேலும், இது தைமஸ் சுரப்பியைச் சுரக்க வைத்து, ஒரு மனிதரது அன்பு செய்யும் தன்மையையும் அதிகப்படுத்துகிறது.”

கிறிஸ்டினா:ஒரு குழந்தையின் நெஞ்சில் எண்ணெய் பூசப்படுவது இதற்காகத்தானா?”

அருள்பணி:ஆம், இதையே இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும்போது, எல்லா ஆன்மிக மரபுகளிலும்  ‘இதயக் குகை (cave of the heart) என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. ‘இதயக் குகைஎன்பது ஒரு மனிதர் தன்னை அமைதிப்படுத்தி, தனக்குள் இருக்கின்ற இறைத்தன்மையை உணர்வதற்கான இடமாக இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆன்மிக ஞானியான இரமண மகரிஷி, ‘இதயக் குகையில் கடவுள் நம்மை தம் இயல்பாக உருமாற்றித் தருகிறார்என்கின்றார். அவர் கற்றுக்கொடுத்த தியானம், இதய ஆற்றல் மையத்தில் நம் கவனத்தை வைத்துநான் யார்?’ என்கின்ற கேள்வியைக் கேட்பதாகும். இந்தக் கேள்வியின் நோக்கம் அறிவுப்பூர்வமான பதிலைக் கண்டுபிடிப்பதல்ல; மாறாக, நமக்குள்ளே பயணிப்பதாகும். இராம்தாஸ் என்ற மற்றொரு ஞானி, ‘இதயக் குகையில் வாழத் தெரிந்தவருக்கு எல்லையுமில்லை, காலமுமில்லைஎன்கின்றார்.”

அகஸ்டின்:தந்தையே, ஆற்றல் மையங்களையும், அவற்றோடு தொடர்புடைய சுரப்பிகளையும் செயல்படுத்துவது முழுமையான வாழ்விற்கு அவசியம் என்கின்ற உண்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இக்கருத்து இன்றைய அறிவியலோடு இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. எனினும், இந்த ஆற்றல் மையங்கள்மீது புனித நீர் ஊற்றப்படுவதாலும், எண்ணெய் பூசப்படுவதாலும் அவை செயல்படுத்தப்படுகின்றன என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள என் மனம் தயங்குகிறது.”

அருள்பணி:இது குறித்து நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.”              

(தொடரும்)

news
ஆன்மிகம்
மனமும் குணமும் (சதுக்கத்தின் சப்தம் - 3)

இன்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எங்கே, எதிலே சிக்கித் தவிக்கிறீர்கள்?

நம் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி கருத்துரையில், யோவான் நற்செய்தியில் வருகின்ற பெத்சதா குளத்தில் நடந்த ஒரு நிகழ்வை, ஒரு மருத்துவமனைக்குள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளைக் காண்கின்ற உணர்வாகப் பார்க்கின்ற நமக்கு, “அங்கே பலர் - நோயாளிகள், கண் குருடானவர்கள், காது கேளாதவர்கள், கால் ஊனமுற்றோர் போன்ற பலர் படுத்திருந்தனர் (யோவா 5:1-9) என்றும், நம் வாழ்வில் பல நேரங்களில் இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் நாம் உள்ளாகும்போது பிரச்சினைகளைச் சோர்வில்லாமல் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய துணிவை, நோயுற்ற மனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதைஇயேசுவின் குணப்படுத்துதல்குறித்துச் சிந்திக்கும் நாம் குறிப்பாக, முடக்கப்படுதல், ஒரு சூழலுக்குள் சிக்கிக்கொள்ளுதல் பற்றியும், தொடர்ந்து போரிட விரும்பாமல் விட்டுக்கொடுத்துச் செல்லும் நிலையிலிருக்கும் ஒரு மனிதராகஉடல் நலமற்ற மனிதர் நலமடைதல்என்ற பகுதியைக் கொண்டு விவரிக்கின்றார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

குணப்படுத்தும் குளம்

இயேசு யூதர்களின் திரு விழாவில் பங்கேற்பதற்காக எருசலேமுக்குச் செல்கின்றார். நேரடியாக ஆலயத்திற்குள் செல்லாமல், ஆடுகளைக் குளிப்பாட்டித் தூய்மைப்படுத்தி, அதன்பின் காணிக்கையாக்கும் இடத்திற்கு வந்து அதன் வாயிலருகில் நிற்கின்றார். இந்த ஆட்டுவாயிலின் அருகே தீட்டானவர்கள், தூய்மையற்றவர்கள் என்று கருதப்பட்ட, கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நோயாளிகள் இருந்தனர்.

இம்மக்கள் தங்களது வாழ்க்கை விதியை மாற்றக்கூடிய ஓர் அதிசயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வாயிலின் அருகே இருந்த குளத்தில் இருந்த நீரானது அதிசய நீராக, குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட நீராகக் கருதப்பட்டது. அந்த நீர் கலங்கும்போது, யார் முதலில் இறங்குகின்றார்களோ அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தது.

இரக்கத்தின் வீடு, ஏழைகளின் போர்

இக்குளமானதுஏழைகளிடையே போராட்டம்இருந்ததால் ஒரு விரும்பத்தகாத காட்சியை உருவாக்கியது. அங்கிருந்த நோயாளிகள் குளத்திற்குள் நுழைய சிரமப்பட்டுத் தங்களது உடலை இழுத்துச் செல்லும் சோகமான காட்சியை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பெத்சதா என்றால்இரக்கத்தின் வீடுஎன்று திருத்தந்தை லியோ சுட்டிக்காட்டும் அக்குளமானது, இறைவன் வாழும் திரு அவையின் உருவகமாகக் கூட இருக்கலாம்.

சாக்குப்போக்குத் தன்மை 

38 ஆண்டுகளாக உடல்நலமற்று, பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இயேசுவின் கேள்வி இதுதான்: ‘நீர் குணமடைய விரும்புகிறீரா?’

1. ‘என்னை குளத்தில் இறக்கிவிட யாரும் இல்லைஎன்று அவர் கூறுகிறார். எனவே, தவறு அவருடையது அல்ல; ஆனால், அவரைக் கவனித்துக்கொள்ளாத மற்றவர்களின் தவறு என்பதாகக் கூறுகின்றார். இந்த அணுகுமுறையானது பொறுப்பேற்றலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக மாறுகிறது.

2. ‘நான் போவதற்குமுன் வேறு ஒருவர் இறங்கி விடுகிறார்என்று உடல்நலமற்றவர் இயேசுவிடம் கூறிய வார்த்தைகளானது; அம்மனிதர் தனது வாழ்வை ஒரு விவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது. நாம் அதிர்ஷ்டமற்றவர்களாக இருப்பதால், விதி நமக்கு எதிராக இருப்பதால் நமக்கு எல்லாம் மாறாக நடக்கின்றன என்று நாம் எண்ணுகின்றோம். இம்மனிதரும் அதைப்போலவே உற்சாகமிழந்தவராக, வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவராகவே தன்னை உணர்கின்றார்.   

வாழ்க்கையில்அடுத்து என்ன செய்வது?’ என்ற உறுதியான தீர்மானம் செய்யாமல் இருப்பதற்கான ஓர் ஏமாற்றுவழியாக இதனைக் கையாள்கின்றார். நற்செய்தியில் முடங்கிப்போன மனிதனைப் போலவே, நாமும் சிக்கிக்கொள்ளலாம். மேலும், குணமடைய வேண்டும் என்ற ஆசை நமக்கும் மங்கிப்போகலாம்.

உன் வாழ்க்கை உன் கையில்

எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்என்ற வார்த்தைகளின் வழியாக அம்மனிதர் எழுந்து நடக்கவும், பல ஆண்டு களாக இருந்த அவரது சூழலை மாற்றவும், படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கக் கட்டளையிடுகின்றார். அவரது படுக்கையானது அப்படியே அங்கேயே விட்டுவிடக்கூடாது, தூக்கி எறியப்படவும் கூடாது. அது அவரின் நோயினை, வாழ்க்கை வரலாற்றை அடையாளப்படுத்துகின்றது.

அதுவரை கடந்த காலத்தினால் தடுக்கப்பட்டு, இறந்த மனிதனைப்போல அங்கேயே படுத்துக் கிடந்த அவர், இப்போது தனது படுக்கையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில் என்ன செய்யலாம்? என்பதை அவரே தீர்மானிக்கலாம். எந்தப் பாதையில் நடப்பது என்பதை அவரே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்.

அவருக்கு உதவ யாரும் இல்லைஎன்பது உண்மையா? புனித அகுஸ்தினார் கூறுகையில், “முடக்குவாதத்திற்கு ஓர் உதவிக்கரம் மட்டுமல்ல; கடவுளாகவும் இருக்க ஒரு மனிதர் தேவைஎன்கிறார்.

நீங்கள் குணமடைய விரும்புகிறீர்களா?

ஒரு மருத்துவமனையில் இது என்ன கேள்வி? உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், இதயநோய், மனநோய், முடக்குவாதமுற்றோர் இவர்கள் கூடியிருக்கும் இடத்தில் இது என்ன கேள்வி? எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கேள்வி தேவைப்படுகிறது. இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் மண்டபத்தில் படுத்துக் கிடப்பவர்கள்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நோய். அவ்வளவுதான் வேறுபாடு. ஏதோ ஒரு வரிசையில், எதற்கோ காத்திருக்கிறோம்.     

சில சமயங்களில் ஆண்டாண்டாகத் துன்பம் நம்மைத் தொடர்ந்து வரலாம். ஆம், முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் இருக்கலாம். அடுத்தவரோடு போட்டிபோடவும் நமக்குத் துணிவு, திறமை, வசதி இல்லாமல் இருக்கலாம். நல்லவர்கள் நாலுபேர் நமக்கு உதவி செய்ய முன்வராமலிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். மனம் சோர்ந்து போக வேண்டாம். கடவுள் நம்மைத் தேடிவரும் நேரத்தில் தயாராக இருப்போம். கடவுள் உன்னிடம்நலம்பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கும்போது, உன் உடலும் உள்ளமும் தயாராக இருக்கட்டும். எத்தகைய நோயோடு, குறையோடு, தேவையோடு இருந்தாலும், நம் இயேசு நமக்குத் தருவார் என்ற நம்பிக்கை கொள்வோம்.   

நாம் எவ்வளவு விடாமுயற்சி கொண்டவர்கள்?

இரண்டு தவளைகள் தவறுதலாக ஒரு வெண்ணெய் பாட்டிலில் விழுந்தன. சுமார் ஒரு மணி நேரம் அவை தப்பிக்க முயன்றன. சோர்வடைந்த ஒரு தவளை, “இதற்குமேல் பயனில்லை!” என்று கூறி விட்டது, அது வெண்ணெயில் மூழ்கியது. மற்றொரு தவளை தொடர்ந்து முயற்சி செய்தது. அடிக்கடி அசைந்தது, போராடியது. திடீரென்று அது ஒரு வெண்ணெய் உருண்டையின்மீது பாதுகாப்பாக அமர்ந்திருந்தது

பெரிய மனிதர்கள் எட்டிய உச்சிகளை, திடீரென அவர்கள் அடையவில்லை; அவர்கள் உறங்கும் நேரத்திலும் கூட அவர்கள் உழைத்துக்கொண்டே உயரம் சென்றார்கள்.”

இயேசு எப்போதும் பிரச்சினைகளின் மத்தியில் இருக்கிறார். எங்கு விடுதலை தேவைப்படுகிறது? எங்கு மகிழ்ச்சி கொண்டுவர வேண்டும்? அங்கேயே அவர் இருக்கிறார். 38 ஆண்டுகளாகக் குணமடைய விரும்பி, நம்பிக்கையோடு காத்திருந்த மனிதனுடைய நம்பிக்கையும் விடாமுயற்சியும்  வீணாகவில்லை. நாம் குணமடைய விரும்புகிறோமா? இயேசுவால் குணமாக்க முடியும் என நம்புகிறோமா? இயேசு நம்மைக் குணமாக்க விரும்புகிறோமா? நம்மைச் சுற்றி தினமும் ஏராளமானநடக்க முடியாதவர்கள்இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறதா?

நம்பிக்கைத் தளர்ச்சியைப் போக்குவோம்

நமது வாழ்வில் நமக்கு எப்போதும் அடிப்படை ஆதாரமாக இருக்க வேண்டியது நம்பிக்கை. அந்தச் சிறுதுளி நம்பிக்கைதான் நமது வாழ்வில் பல அற்புதங்கள் நடப்பதற்குத் தூண்டுகோலாய் இருக்கப்போகிறது. எனவே, நாம் எப்போதும் இறைவனில் நம்பிக்கையாளர்களாய் வாழ்வோம்.

news
ஆன்மிகம்
ஏழையரின் திருத்தந்தை பிரான்சிஸ் (நீங்கா நினைவுகள் – 5)

அர்ஜென்டினாவிலிருந்து கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ மார்ச் 13, 2013-இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அருகே அமர்ந்திருந்த அவரது நண்பர் கிளாடியோ ஹீம்மஸ், “நண்பா, ஏழைகளை மறந்துவிடாதே”… என்று வாழ்த்துக் கூறினார். எந்தவொரு தயக்கமுமின்றி, “நான் ஏழைகளின் தோழனாக வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் பெயர் கொண்டு அழைக்கப்பட விரும்புகிறேன்என்று கூறினார். அவர் கூறியபடியே ஏழ்மைக்கும் எளிமைக்கும் பெயர்போனபிரான்சிஸ்என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்து, தொடக்கத்திலிருந்தே தனது வாழ்வாலும் வார்த்தையாலும் தானும்ஏழைகளின் தோழன், ‘எளியவர்களின் காவலன்’… என்பதை உறுதிப்படுத்தினார்.

இறைவனுக்கு அர்ச்சனையான மலர்: இவர் குருவாக, பேராயராக, கர்தினாலாக வாழ்ந்த காலத்தில் சேரிகளுக்குச் சென்று, சேரிவாழ் மக்களின் ஆன்மிகத் தேவைகளுடன் அடிப்படைத் தேவைகளையும், மிக்க ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, வறுமைக்கெல்லாம் வறுமையான, ஆன்மிக வறுமையும் (Spiritual Poverty) நவீன காலத்து மனிதனிடம் ஆழமாகப் புரையோடிக் கொண்டிருக்கும் நோயாகும் என்கிறார்.

ஏழைகளின் குரலான திருத்தந்தை பிரான்சிஸ்: 2015, நவம்பர் மாதம் ஆப்பிரிக்கா, கென்யா நாட்டின் தலைநகரான நைரோபிக்குப் பயணமாகிறார். அங்குள்ள பெரிய சேரிக்குச் செல்கின்றார். சேறும் சகதியும் நிறைந்த தெருக்களைக் கடக்கிறார். பசியும் பட்டினியுமாக உள்ள சிறார் மற்றும் எலும்பும் தோலுமாக நின்ற ஆண்-பெண்களிடம் உரையாடுகிறார். அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு வேதனை அடைகிறார். பாழடைந்த குடிசைகளில் உள்ள பெண்களின் மாண்பினைக் கெடுக்கும் சாராய முதலாளிகளைப் பார்த்து, “இந்தச் சேரிகள் உங்களால் உருவாக்கப்பட்ட புண்கள்”… என்று அவர்களைச் சாடுகின்றார். எனவே, இவர்சேரிகளின் பேராயர்என அழைக்கப்பெற்றார்.

அதேபோல, 2019-இல் ஐரோப்பாவில் உள்ள ரொமேனியா நாட்டிற்குப் பயணம் செய்தபோது, உடைமை, உரிமை, வேலையின்மை, தீண்டாமையினால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களைப் பார்த்து, “நான் கனத்த இதயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். இந்த அரக்கத்தனமான சமுதாயமும், அதில் அடங்கியுள்ள கத்தோலிக்கர்களும் இழைத்த அநீதிகளுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்”……என்றார். அடுத்த நாள் பல ஊடகங்களும், “பாவமன்னிப்பு வழங்கும் திருத்தந்தையே, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்”…என்று வியந்தனர்.

இன்னும் இறைவன் முன் ஆணும்-பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக, 2024-இல் புனித வியாழனன்று குற்றங்கள் (பாவங்கள்) செய்து, உரோமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்-பெண் பாதங்களைக் கழுவி முத்தமிட்டு, இயேசு விலைமகளிடம்இனி பாவம் செய்யாதீர் (யோவா 8:11) என்று இயேசு காட்டிய மன்னிக்கும் அன்பைத் தன் இரக்கத்தின் பார்வையால் உணர்த்தினார்.

இவ்வாறாக, திருத்தந்தையின் அரிய பண்புகளால் மக்களைக் காந்தம் போல் தன்பால் ஈர்த்து, எதிர்மறையான சிந்தனைகளுக்குப் பதில், நேர்மறையான சிந்தனைகளையும், அலகையின் பாவத்திற்குப் பதில், ஆண்டவரின் தெய்வீக அன்பையும் விதைத்தார். தான் மேற்கொண்ட விருதுவாக்கானஇறைவனின் இரக்கப் பெருக்கால் மந்தையின் மணத்தை உணரும் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்என்ற கூற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்து விட்டுச் சென்றதால், திருத்தந்தை பிரான்சிஸ்மக்களின் திருத்தந்தை, ‘நலிந்தோரின் திருத்தந்தை, ‘ஏழைகளின் திருத்தந்தைஎன்று போற்றப் பெற்றார்.

இறுதியாக, ‘எல்லாருக்கும் எல்லாமுமான திருத்தந்தைஎன்ற தனிச் சிறப்பு முத்திரையைப் பெற்றார்.

ஒரு நேர்காணலில்நீங்கள் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?’ என்ற கேள்விக்கு, “இந்த மனிதன் ஒரு நல்ல ஆள் - இவர் நல்லது செய்ய முயன்றார்என்று அவர் பதிலளித்தார்.

மனிதர்களின் புனிதராக வாழ்ந்த திருத்தந்தை, இறந்தும் இறவாது நம்முடன் வாழ்கிறார்.