உயிர்த்த நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் அன்பிற்கினியவர்களே!
மறைக்கல்விப்
பணிகளால் இறைமக்களின் நம்பிக்கை வாழ்வை ஒளிரச் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
இயேசு
ஒரு மாபெரும் மறைக்கல்வியாளர். அவரது வாழ்வும் பணிகளும் போதனைகளும் வல்ல செயல்களும் அவர் ஏற்ற பாடுகளும், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அனைத்துமே மறைக்கல்வியின்
பரிணாமங்கள். இயேசுவின் ஏக்கமும் நோக்கமும் வானகத் தந்தையின் எல்லையில்லா அன்பை இந்த மானிடம் உள்ளுணர வேண்டும் என்பதே. அந்த உயர்ந்த சிந்தனையை அவர் பல விதங்களில் பறைசாற்றினார்.
அதற்காக அவர் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தாம் சென்ற இடங்களையும், சந்தித்த மக்களையும் மறைக்கல்விக் களமாக்கினார்.
இயேசு,
தாம் அறிமுகப்படுத்திய இறையாட்சியை இம்மண்ணில் மலரச்செய்ய மறைக்கல்வியை ஒரு கருவியாக்கினார். அவரது மறைக்கல்வியில் உவமைகள், உருவகங்கள், நாட்டு நடப்புகள், கேள்வி-பதில்கள், உரையாடல்கள், அறிவுறுத்தல்கள், பாராட்டுகள், எச்சரிக்கைகள் என எல்லாம் நிறைந்திருந்தன.
தாம் எடுத்துச் சொல்ல விரும்பிய எல்லாவற்றையும் மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும், எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் கையாண்டார்.
இயேசுவைப்
பின்தொடர்ந்து பல மறைப்பணியாளர்கள் மறையை அறிவிக்கும்
நோக்கில் தம் நாடு, வீடு, வசதி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் துறந்து
நம் நாட்டிற்கு வந்து, தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அர்ப்பணத்தோடு உழைத்த வரலாற்றை நாமறிவோம். அவர்கள் மறைப்பணி ஆற்றும் நோக்கில் பல பங்குத்தளங்களை உருவாக்கினர்.
பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினர். துறவு மடங்களை ஏற்படுத்தினர். குருமடங்களைத் தொடங்கினர். பற்பல தொண்டு நிறுவனங்களை நிறுவினர். எல்லாவற்றின் ஊடாகவும் நம்பிக்கை வளர் கல்வியான மறைக்கல்வியை வழங்கி கிறிஸ்துவின் மனநிலையில் மாணவச் செல்வங்களை உருவாக்கினர்.
மறைக்கல்வி
என்பது ஒவ்வொரு மனிதனையும் இறை இயேசுவின் மனநிலையில் உருவாக்கி, இறைநம்பிக்கையில் முதிர்ச்சியடையச் செய்து, நற்செய்தி மதிப்பீடுகள் காட்டும் வாழ்க்கை முறையில் செயல்படப் பயிற்றுவிக்கும் கல்வி. மறைக்கல்விதான் திரு அவைக்குள் பல்லாயிரக்கணக்கான புனிதர்களையும் மறைச்சாட்சியர்களையும் இலக்குத் தெளிவோடு இறையாட்சிப் பாதையில் பயணிக்கவும் பணியாற்றவும் உருவாக்கத்தைக் கொடுத்துள்ளது. மறைக்கல்விதான் இந்தியாவில் சிறப்பாக, தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரமாயிரம் அருள்பணியாளர்களையும் துறவியரையும் அர்ப்பணமிக்கப் பொதுநிலையினரையும் உருவாக்கி அவர்களை உலகின் உப்பாக, ஒளியாக, புளிக்காரமாக ஆன்மிகப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பொறுப்போடும் பொறுமையோடும் செய்திடத் தூண்டியுள்ளது.
தமிழ்நாடு
மறைக்கல்வியின் தந்தை என வருணிக்கப்படும் பாரிஸ் மறைபோதக
அருள்தந்தை தாமஸ் கவான் டஃபி (1888-1942) மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை “திருமுழுக்குப் பெற்று மறைப்பணி ஆற்றத் தேர்ந்துகொள்ளப்பட்ட நம் பணிகளில் மறைக்கல்வியே மத்தி; பிற பணிகளெல்லாம் அதைச் சுத்தி” என்று
பாமரத் தமிழில் பாங்காய் பகர்ந்துள்ளார்.
இன்று
தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகள், அவற்றை வழிநடத்த பங்கு அருள்பணியாளர்கள் ஒருபுறம்; மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என்று பத்தாயிரத்திற்கும் மேலான பள்ளிக்கூடங்கள் - அவற்றை மேலாண்மை செய்யவும் நிர்வகிக்கவும் ஆயிரக்கணக்கான தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், துறவியர், பொதுநிலையினர் என மறுபுறம்.
இச்சூழலில் நம் பங்குகளிலும் பள்ளிகளிலும் மறைக்கல்விக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?
இந்தியத்
திரு அவை தன்னகம் கொண்டுள்ள 136 மறைமாவட்டங்களுக்கும் மறைக்கல்விப் பணிக்கு முன்னோடியாகத் திகழ்வது எதுவெனில் 18 மறைமாவட்டங்களைக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு திரு அவைதான் என்ற பெருமை நமக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டின் கத்தோலிக்கப் பங்குகளில் இன்னும் ஞாயிறு மறைக்கல்வி நடத்தப்படாத பங்குகள் பல நூறு உள்ளன
என்பது அதிர்ச்சி தரும் தகவல். அருள்பணியாளர்கள், துறவியர் நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்களில் மறைக்கல்வி, நன்னெறி வகுப்புகள் நடத்தப்படாதது மிகவும் வேதனை தரும் செய்தி. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மறைக்கல்வி வழங்காமலிருப்பது இறையாட்சி மதிப்பீடுகளுக்கும் கத்தோலிக்கத் திரு அவைக்கும் அதன் போதனைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் நாம் திரு அவைக்கு அளித்த வாக்குறுதிகளுக்கும் முற்றிலும் முரணான செயலாகத் தோன்றவில்லையா? மறைக்கல்வி இன்றி நாளைய நலமான திரு அவையைக் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. ஏனெனில், மறைக்கல்விதான் திரு அவையின் உயிர்மூச்சு.
நற்கருணை
கிறித்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக (திவ, எண் 10) இருப்பதுபோல, இறைவார்த்தை, இறைநம்பிக்கை வாழ்வின் உயிர்நாடியாக (இவெ, எண் 24) இருப்பதுபோல, மறைக்கல்வி இறைநம்பிக்கைப் பயணத்தின் உயிர்மூச்சு (கிக, எண் 4) என்பதை உளமார உணர்ந்து களமிறங்கிச் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. மறைக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத பங்குகளும் பள்ளிகளும் அல்லது அவற்றை நிர்வகிப்போரும் மறைமுகமாகத் திரு அவையையும், அதன் தலைவராகிய கிறிஸ்துவையும் கண்டுகொள்ளாத அபாயகரமான செயலை மேற்கொள்கின்றனரோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
திருத்தூதர்
பவுல், “தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்? அனுப்பப்படாமல் அவர்கள் எவ்வாறு அறிவிப்பார்கள்?” (உரோ 10:14-15) என எழுப்பும் பல
கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் மொழி என்ன? மழலைப்பருவத்திலும் பதின் பருவத்திலும் வழங்காத மறைக்கல்வியையும் நன்னெறியையும் நம் பிள்ளைகளுக்கு எந்தப் பருவத்தில் வழங்கப் போகின்றோம்? ஏனெனில், மறைக்கல்வி, நன்னெறி ஏனைய பாடங்களைப் போன்றவையன்று; மாறாக, நம்பிக்கையையும் நல்வாழ்வையும் அனுபவமாக்கும் வாழ்வியல் கலைகள். விரும்பினால் நடத்துவதற்கும், விரும்பாவிட்டால் கண்டுகொள்ளாமலிருப்பதற்குமான
விருப்பப்பாடங்கள் அல்ல; இப்பணிப் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொருவர்மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை. இதில் யாருக்கும் விதிவிலக்கு இருக்கத் தேவையில்லை.
மறைக்கல்வியின்
முக்கியத்துவம் உணர்ந்தே இரண்டாம் வத்திக்கான் சங்கம் “திரு அவை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் மறைக்கல்வியைத் தளரா ஊக்கத்துடன் வழங்க வேண்டிய முக்கியமான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்”
(கிறித்தவக் கல்வி, எண். 7) என அறிவுறுத்துகின்றது. அத்தோடு கத்தோலிக்கப்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் “உலகியல் அறிவு, மறை அறிவு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, திருத்தூது உணர்விலும் ஊறித் திளைத்து, தங்கள் வாழ்வாலும் படிப்பினையாலும் ஒரே ஆசிரியரான கிறிஸ்துவுக்குச் சான்றுபகர வேண்டும்”
(கிறிஸ்தவக் கல்வி, எண். 8) என எதிர்பார்க்கின்றது.
எனவே,
இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டின் எல்லாப் பங்குத்தளங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் அவற்றின் பொறுப்பிலிருப்போர் ஞாயிறு மற்றும் பள்ளி மறைக்கல்வியையும் நம் பள்ளிகளில் பயிலும் பிற சபைகள், சமயங்கள், சார்ந்த மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வியையும் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆயர் பேரவை சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
மறைக்கல்விக்கான
பாடநூல்களைத் திண்டிவனம் முப்பணி மையமும், நன்னெறிக் கல்விக்கான நூல்களைத் திண்டுக்கல் வைகறைப் பதிப்பகமும் வெளியிட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குத் தேவையான பாடநூல்களை உங்கள் மறைமாவட்ட மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர், மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர், பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். மேற்காணும் பொறுப்பிலுள்ள அருள்பணியாளர்கள் தங்கள் பங்குகள், பள்ளிகளைச் சந்தித்துக் கலந்துரையாட வருகையில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ்நாடு
திரு அவையானது 2011-2012-ஆம் ஆண்டுதனை ‘மறைக்கல்வி ஆண்டாக’ அறிவித்து, ‘எல்லாருக்கும் மறைக்கல்வி’ எனும்
மையச் சிந்தனையோடு கொண்டாடியதை இந்நேரத்தில் நினைவுகூர்கிறேன். மறைக்கல்வி தொடர்பான நம் திட்டங்களும் பணிகளும் அந்த ஆண்டோடு முற்றுப்பெற்றுவிடவில்லை. அதன் ஒளியில் நாம் இன்னும் ஆழமாகத் திட்டமிட்டுப் பணிகளைத் தொடரக் கடமைகொண்டுள்ளோம்.
இத்தருணத்தில்,
ஒவ்வொரு மறைமாவட்டத்திலுமுள்ள பங்குகளில் நடைபெறும் ஞாயிறு மறைக்கல்வி, பள்ளி மறைக்கல்வி பற்றிய தகவல்களைச் சேகரித்து தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு அனுப்ப மறைமாவட்ட மறைக்கல்வி பணிக்குழுச் செயலர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று
நிலவும் இந்தியச் சூழலில் மறைக்கல்வி, நன்னெறி தவிர்க்க இயலாத வாழ்வியல் பாடங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு மாணவச் செல்வங்களை உருவாக்கிட உங்கள் எல்லாரையும் மிக அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
கிறிஸ்டினா: “தந்தையே, அறிவைக் கொடுத்தும் நம் கண்களைத் திறந்தும் நம் வாழ்வைச் செழிக்கச் செய்யும் ‘நன்மை-தீமை அறியும் மரமாகிய’ நம் மனம் பல்வேறுபட்ட சிக்கல்களையும் நம் வாழ்விற்குள் கொண்டு வருகிறது என்று கூறினீர்கள். முக்கியமாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை அது உருவாக்குவதாகச் கூறினீர்கள். இது
குறித்துக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?”
அருள்பணி:
“ஆணவம் என்பது ‘நான் பெரியவன்’
என்கின்ற மனநிலையோடு நடந்து கொள்வது. பிறரோடு நம்மை ஒப்பிட்டு, ஏதோ ஒரு வகையில் நாம் மற்றவர்களைவிட உயர்வாக இருப்பதாகத் தெரியவந்தால், நம்மில் அழையா விருந்தாளியாக ஆணவம் குடியேறி விடுகிறது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’
என்றும், ‘பிறருக்கு ஒன்றும் தெரியாது’
என்றும் தீர்ப்பிட ஆரம்பிக்கின்றோம். வாழ்வில் பிறரைவிட நாம் உயர்வாக இருப்பதாக எண்ணி ஆணவம் கொள்ளும் நாம், அதோடு திருப்தியடைந்து விடுவதில்லை; எல்லா நேரமும் மற்றவர்களைவிட உயர்வாக இருக்க வேண்டும் என்ற வேட்கையோடும் செயல்பட ஆரம்பிக்கின்றோம். மற்றவர்களைக் கீழே தள்ளி, நம்மை மேலே நிலைநிறுத்திக்கொள்ள முனைகின்றோம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மற்றவர்களைவிட நாம் ஒரு படி மேலே என்று நிரூபிக்க முயல்கின்றோம். குடும்பங்களிலும் சமூகங்களிலும் நடக்கும் பல்வேறு சண்டைகளுக்கான காரணம் ஆணவமும் அகந்தையுமே என்பதை மறந்துவிடக் கூடாது.”
மார்த்தா:
“தந்தையே, எனக்கு நகைச்சுவை ஒன்று நினைவிற்கு வருகிறது. பொங்கல் திருவிழாவின்போது ஒரு குடும்பத்தில் கணவனும்-மனைவியும் ஆர்வத்தோடு தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கணவன் அதில் காண்பித்த ஆர்வத்தைக் கண்ட மனைவி கிண்டலோடு ‘ஜல்லிக்கட்டை இவ்வளவு ஆர்வமாக டி.வி.யில
பார்க்கிறீங்களே! நேரா போய் மாட்டை அடக்க வேண்டியதுதானே!’ என்று கூற, கணவன் கொஞ்சமும் சளைக்காமல், ‘நீ வேற! கட்டுன
மாட்டையே அடக்க முடியல! இதுல போய் கட்டாத மாட்ட எப்படி அடக்குவது?’ என்று பதில் தந்தாராம். பல குடும்பங்களில் ‘கட்டிய’ நபர்களை அடக்க முயற்சிப்பதிலே பலரது வாழ்வின் நேரமும் ஆற்றலும் வீணாகிவிடுகிறது.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை ‘சிலருக்கு இந்த உலக உருண்டை அவர்களது தலையைவிடச் சிறியதாகத் தெரிகிறது’
என்று கூறினார். மேலும், தமிழ் இலக்கியத்தில் ‘புல்லறிவு’
என்ற ஒன்று உண்டு. அதாவது, கொஞ்சம் தெரிந்து கொண்டு, எல்லாம் தெரிந்ததுபோல பேசுவதே புல்லறிவு என்பது. இவை அனைத்தும் மனித மனத்தில் தோன்றும் ஆணவத்தையும் அகந்தையையும் சுட்டிக்காட்டுகின்றன.”
கிறிஸ்டினா:
“அடுத்து மனத்திலிருந்து கன்மம் என்ற கனி எவ்வாறு விளைகிறது என்பதைக் கூறுங்கள், தந்தையே!”
அருள்பணி:
“கன்மம் என்றால் ‘வெறுப்பு’
என்று பொருள். நம் மனம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை ஒப்பிட்டு, தரம் பிரித்து, மதிப்பீடு செய்வதாக நாம் பார்த்தோம். எதன் அடிப்படையில் நம் மனம் அனைத்தையும் தரம் பிரிக்கிறது என்றால், நம் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அடிப்படையில்தான்! நம் மனம் ஒவ்வொரு வினாடியும் ஏராளமான விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. நம் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றாற்போல் நடப்பவர்களை ‘நல்லவர்கள்’ என்று
முத்திரை குத்தி அவர்களை ஏற்றுக்கொள்கின்றது; அவ்வாறு நடக்காதவர்களை ‘கெட்டவர்கள்’ என்று
முத்திரை குத்தி வெறுக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நம் ஆசைகளின்படியும் விருப்பங்களின்படியும் நிகழ்வுகள் நடைபெறாதபோது, மனித மனத்தில் ஏராளமான வெறுப்பும் கோபமும் குடியேற ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக மனிதர்களால் நிம்மதியாக வாழ முடியாமல் போவதோடு, சரியான உறவுகளையும் முன்னெடுக்க முடியாமல் போய் விடுகிறது.”
அகஸ்டின்:
“ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள் என் நினைவிற்கு வருகின்றன: ‘நீ என்னை அன்பு
செய்தாலும் சரி, வெறுத்தாலும் சரி, இரண்டுமே எனக்குச் சாதகமானவைதான். நீ என்னை அன்பு
செய்தால் நான் உன் இதயத்தில் இருப்பேன்; நீ என்னை வெறுத்தால்
நான் உன் மனத்தில் இருப்பேன்’
(Love me or hate me, both are in my favour. If you love me, I will
be in your heart. If you hate me, I will be in your mind) என்று அவர் கூறுகின்றார். நாம் வெறுப்பவர்களையும் நம்மை வெறுப்பவர்களையும் நாம் எவ்வாறு நம் தலையில் தூக்கி வைத்து கோபத்தாலும் வெறுப்பாலும் பழிவாங்கும் உணர்வாலும் நம்மை நிரப்பிக் கொள்கின்றோம் என்பதை ஷேக்ஸ்பியர் கவிதை நயத்தோடு எடுத்துரைக்கிறார்.”
அன்புச் செல்வன்: “வள்ளுவர்கூட வெறுப்பும் சினமும் எவ்வாறு நம்மையே அழிக்கவல்லது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்:
‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப்
புணையைச் சுடும்’
(குறள் 306)
இதன்
பொருள் ‘கோபமாகிய கொடிய நெருப்பு அதைக் கொண்டவரை அழிப்பதோடு, அவர் வீடு பேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்துவிடும்’ என்பதாகும்.”
அகஸ்டின்: “மாயை என்றால்?”
அருள்பணி: “இல்லாததை இருப்பதாகப் பார்ப்பதே மாயை என்பது. கானல் நீர் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பாலைவனத்தில் ஓர் இடத்தில் தண்ணீர் இல்லை என்றாலும், அங்குத் தண்ணீர் இருப்பது போன்று தெரியும். மற்றோர் உதாரணம்: ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் நேராக உள்ள ஒரு குச்சியைப் போட்டோம் என்றால், தண்ணீர்க்குள் இருக்கும் குச்சியின் பகுதி வளைந்து இருப்பது போன்று தெரியும். இவை மாயைக்கான ஒருசில உதாரணங்கள்! இத்தகைய மாயையானது மனிதப் பார்வையில் உள்ள கோளாறைச் சுட்டிக்காட்டுகின்றது. ஏறத்தாழ இதையொத்தக் காரியத்தை மனமும் செய்கிறது. பணம், பொருள், வசதி ஆகியவை மனிதர்களுக்கு உண்மையான மகிழ்வைக் கொடுக்க இயலாது. எனினும், இவற்றில் மகிழ்வு இருக்கிறது என்று மனிதர்களை நம்ப வைத்து, அவர்களை இரவு-பகலாக ஓடவைப்பது மனம்தான். பொருளாதாரம், புகழ், மனித அங்கீகாரம் போன்றவை நிலையற்றவை. அவற்றால் நிலையான மகிழ்ச்சியைத் தர இயலாது. எனினும்,
பல மனிதர்கள் இரவு-பகலாக இவற்றையே தேடி ஓடுகின்றனர். காரணம் இவற்றில்தான் மகிழ்வு உண்டு என்று மனம் இவர்களை நினைக்க வைக்கிறது. மனம் உண்டாக்கும் மாயையின் பின்னால் மனிதர்கள் போவதன் காரணமாக உண்மையான மகிழ்வின் ஊற்றாகிய உறவை உதாசீனப்படுத்திவிடுகின்றனர்.
உறவைக் கட்டி எழுப்புவதற்கான நேரத்தையும் வாய்ப்புகளையும் இவர்கள் உருவாக்குவதில்லை.”
அன்புச் செல்வன்:
“தந்தையே, மனம் என்னும் ‘நன்மை-தீமை அறிகின்ற மரம்’ ஆணவம், வெறுப்பு, மாயை என்ற தீமைகளை உருவாக்கி, எவ்வாறு உறவு வாழ்விற்கு உலை வைக்கிறது என்பதை அற்புதமாக விளக்கினீர்கள். இதைத் திருவிவிலியத்திலும் என்னால் பார்க்க முடிகிறது. நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்பதற்கு முன்னால் ஆதாமும், ஏவாளும் கடவுளோடு நல்ல உறவு கொண்டிருந்தனர். தங்களுக்கு இடையேயும் ஆழமான உறவு கொண்டிருந்தனர். எனவேதான் ஆதாம் ஏவாளைக் குறித்து ‘இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்’
(தொநூ 2: 23) என்று கூறினார். ஆனால், இதே ஆதாம் நன்மை-தீமை அறிகின்ற மரத்தின் கனியை உண்ட பின்பு ஏவாளைக் குறித்து ‘என்னுடன் இருக்கும்படி நீர் கொடுத்த அந்தப் பெண்’
(தொநூ 3:12) என்று அந்நியப்படுத்திப் பேசினார். மேலும், இருவரும் கடவுளுடைய உறவில் இருந்தும் அந்நியப்பட்டுப் போயினர், கடவுளைக் கண்டு ஓடி ஒளிந்தனர்.”
7. ‘ஆன்மிகக் கொடைகள்’ குறித்து எழும் சில கேள்விகள்
மரியா
காட்சி அனுபவங்களிலிருந்து வெளிப்படும் நேர்மறை வரன்முறைகளில் முக்கியமானதாக ‘ஆன்மிகக் கொடைகள்’ மேற்கண்ட புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளன. அதாவது, செப ஆர்வம், மனமாற்றம், இறையழைத்தல், பிறரன்புப் பணிகள், பக்தி போன்றவை ஆன்மிகக் கொடைகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொதுவாகத் தனிப்பட்ட ஒரு பக்தி முறையை வெளிப்படுத்துகிறதே அன்றி, இன்றைய பிரச்சினைகளைத் தொட்டு, சமூக அக்கறையும் ஈடுபாடும் கொண்ட நம்பிக்கை வாழ்க்கை முறையைக் கட்டியமைப்பதாகத் தெரியவில்லை. இந்நிலைக்கு மூன்று எடுத்துக்காட்டுகளை இங்குக் குறிப்பிடலாம்:
1) இந்தியா
உள்பட சமயப் பக்தியிலும் பற்றிலும் சிறந்து விளங்குவதாகக் கருதப்படும் பல நாடுகள் ஊழல்
மலிந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடங்களைப் பிடித்துள்ளன. அதேவேளையில், சமயப் பற்றும் பக்தியும் குறைந்த, மறைந்த நாடுகளாகக் கருதப்படுபவை ஊழல் குறைந்த நாடுகளாக அறியப்படுகின்றன. இப்பின்புலத்தில் சமூகச் சீர்கேடுகளைத் தொட்டுக் களையாத ‘பொதுமக்கள் பக்தியை’
(popular devotion) எப்படிப் புரிந்துகொள்வது?
2) ‘பொது வீடு’ என்றழைக்கப்படும்
நமது பூமிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இன்று உருவெடுத்திருப்பது சூழல் மாசு. லீட்ஸ் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில், உலகளவில் நெகிழிக்கழிவின் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது இந்தியா என்றும், இங்கு ஆண்டுக்குப் பத்து மில்லியன் டன் நெகிழிக் கழிவைக் கொட்டிச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘பக்தகோடிகள்’ என்றழைக்கப்படும்
திருப்பயணிகள் கூடும் திருத்தலங்கள், அவற்றைச் சுற்றியுள்ள வளாகங்கள், கடற்கரைகள், ஆறுகள், குளங்கள் போன்றவை நச்சுக்கழிவுகளால் நாசமாக்கப்படுவதை அறியாதவர் இல்லை. இதேபோல் சமய விழாக்களிலும், திருத்தலங்களிலும் பயன்படுத்தப்படும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், விண்ணைப் பிளக்கும் வெடிகள் போன்றவற்றால் ஏற்படும் ஒலி மாசுகள் மனிதர்களையும் பறவைகளையும் விலங்கினங்களையும் தாக்கும் கொலையாளிகளாக உருவெடுத்துள்ளன. அதனால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் ஆன்மிகக் கனிகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டுமல்லவா!
3) தனிப்பட்ட
பக்திமுறை வாழ்வை எடுத்துக் கொண்டாலும், மரியா காட்சி கொடுத்த பல திருத்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள்
உண்மையான மனமாற்றம் பெறுகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனது பணித்தள அனுபவத்திலிருந்து நான் பார்த்தது சிந்தனைக்கு உரியது. ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் வேளாங்கண்ணிக்குத் திருப்பயணம் செல்லும் பக்தர்கள் உண்டு. ஆனால், இந்தத் திருப்பயணம் இவர்களின் குடும்ப / குழும வாழ்வில் ஆண்டுக்கணக்காகக் குமைந்து கொண்டிருக்கும் பிளவுகள், பிணக்குகள், வன்மங்கள், குரோதங்கள், பகைமைகள் போன்ற எதையும் தொட்டு மாற்றம் ஏற்படுத்தியதாக நான் பார்த்ததில்லை. இதேபோல், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருப்பயணத்திற்குப் பின்னர் மீண்டெழுந்ததாகவும் கூறுவதற்கில்லை.
மேலும் சொல்வதென்றால், காட்சி அனுபவங்களின் திருத்தலங்களுக்குச் செல்லும் கத்தோலிக்கக் கிறித்தவர்களில் பலர் தங்களது பங்குகளில் நடைபெறும் ஞாயிறு திருப்பலிகள், திருவிவிலிய மதிப்பீடுகளை உள்ளடக்கிய சமூக ஈடுபாடு மற்றும் பிறரன்புப் பணிச் செயல்பாடுகளில் பங்கேற்பதும் இல்லை. இவ்வாறு கிறித்தவ வாழ்வின் புதுப்பித்தலிலும், திரு அவையின் அருள்பணியிலும் ஈடுபாடில்லாத ‘பொதுமக்கள் பக்தியை’ எப்படிப் புரிந்துகொள்வது?
(தொடரும்)
‘இறைவேண்டல் இறைவனின் அருள்! அதேவேளையில் மனித முயற்சியும்கூட’ என்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (கதிம 2725). எனவே, நமது இறைவேண்டல் நிறைவானதாக, பொருளுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும்; நமது படைப்பாற்றலையும் பயன்படுத்த வேண்டும்.
இறையாட்சி
பற்றிய உவமைகளின் நிறைவில் “விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” (மத்
13:52) என்றார் இயேசு. இவ்வாக்கியத்தைப் பல விதங்களில் நாம்
புரிந்துகொள்ளலாம். இயேசுவின் இந்தப் போதனை கிறித்தவ இறைவேண்டலுக்கும் பொருந்தும். இறைவேண்டல் பற்றிக் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கிறித்தவரும் திரு அவைக் கருவூலத்திலிருந்து பழையவற்றையும், அதாவது இருபத்தொரு நூற்றாண்டு கால மரபுகளையும் பின்பற்ற வேண்டும். அதேவேளையில் படைப்பாற்றலோடு புதியவற்றையும் இணைத்துக்கொள்ள வேண்டும். எனவே, நமது தனி வேண்டல், குடும்ப வேண்டல், திரு அவைச் சமூக வேண்டல் என்னும் அனைத்துத் தளங்களிலும் படைப்பாற்றலோடு நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.
இறைவேண்டலின்
பரிமாண வளர்ச்சியை உற்றுநோக்கும்போது, அதில் இறைவனின் அருளோடு, இறையடியார்களின் படைப்பாற்றலும் இணைந்திருப்பதை நாம் காணலாம். இயேசுவே இறைவேண்டலைப் படைப்பாற்றலோடு அணுகியவர்தாமே!
யூதர்களின்
மரபிலே அதுவரையில் இல்லாத ஓர் அணுகுமுறையில் கடவுளை ‘எங்கள் தந்தையே’ என்று முதன்முதலாக அழைத்தவர் இயேசுதாம். அவரது படைப்பாற்றலே தொடக்கத் திரு அவைக்கு ஊக்க மருந்தாக அமைந்து, திரு அவையின் இறைவேண்டல் பயணம் பரிமளிக்க உதவியது.
தொடக்கத்
திரு அவை இப்போது நாம் கொண்டாடும் திருப்பலியை ‘அப்பம் பிடுதல்’ என்று படைப்பாற்றலோடு அழைத்தது. தொடக்கத் திரு அவையினர் “திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்” (திப 2:42).
உண்மையில் திருத்தூதர் கற்பித்த நம்பிக்கை அறிக்கையே கி.பி. 325-ஆம்
ஆண்டு ‘நீசே’ நம்பிக்கை அறிக்கையாக வளர்ச்சி அடைந்தது. கிறித்தவ நட்புறவு ஒற்றுமையிலும் பொதுவுடமைப் பகிர்விலும் மலர்ந்தது. அவ்வாறே, இறைவேண்டலும் படைப்பாற்றலோடு புதிய வடிவங்களை எடுத்தது.
இறைவேண்டலின்
பல்வேறு வடிவங்களைத் தூய ஆவியாரின் துணையோடு உருவாக்கினார்கள் இறையடியார்கள். திருப்பாடல்களைத் திருப்புகழ் மாலையாக இறைவேண்டல் செய்தனர் துறவியர். புனித தோமினிக் பெற்ற வெளிப்பாடே செபமாலையாக மலர்ந்தது. எத்தனையோ புனிதர்களும் திருத்தந்தையர்களும் புதிய புதிய இறைவேண்டல் முறைகளை, மன்றாட்டுகளை உருவாக்கினார்கள். எனவேதான், இன்றைய திரு அவையின் பொதுவழிபாட்டிலும் தனி இறைவேண்டல்களிலும் எத்தனையோ வடிவங்களில் இறைவேண்டல் ஏறெடுக்கப்படுகின்றது.
இன்றைய
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாட்ஸ் ஆப் (Whats app)
இறைவேண்டல் குழுக்கள் இயங்குகின்றன. வீடியோ அழைப்பு வழியே குடும்பச் செபமாலை அன்றாடம் நடைபெறுகிறது. திருத்தலங்களிலும் வழிபாட்டுத் தளங்களிலும் நடைபெறும் வழிபாடுகளும் இறைவேண்டல்களும் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இவையெல்லாம் இறைவனின் கொடையாகவும் மனித முயற்சிகளின் வெளிப்பாடாகவும் அமைகின்றன.
நமது
தனிவேண்டலில் நம் வாழ்வு அனுபவங்களை இணைத்துப் புதிய முறைகளில், புதிய வழிகளில் நாம் இறைவேண்டல் செய்யலாம். இங்கே எனது அனுபவத்திலிருந்து மூன்று பரிந்துரைகளைப் பகிர விரும்புகிறேன். எனது பார்வையில் ஆராதனை, இறைப்புகழ்ச்சி-நன்றி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் என்னும் இறைவேண்டலின் ஐந்து கூறுகளில் தனி வேண்டலில் அதிக அழுத்தமும் நேரமும் பெறவேண்டியது இறைப்புகழ்ச்சி-நன்றியே. இறைப்புகழ்ச்சியில் நாம் பல புதிய முறைகளை
உருவாக்கலாம்:
1. ஒருவருக்கு
எத்தனை வயதோ, அத்தனை ஆசிகளை இறைவன் அவர்கள்மீது பொழிந்துள்ளார் என்று ஒவ்வொருவரும் நம்பலாம். எனவே, நமது வயதுக்கேற்ப அத்தனை ஆசிகளைப் பட்டியலிட்டு நாள்தோறும் மூவோர் இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.
2. இயேசுவின்
48 பெயர்களைச் சொல்லி ‘உமக்குப் புகழ் இயேசு’ என்னும் பதில்மொழியை இணைத்து நாள்தோறும் பாடலாகவோ, வேண்டலாகவே ‘இயேசுவுக்குப் புகழ்மாலை’
சூட்டுகிறேன்;
Anbudan Arulventhan என்னும்
யூடியூப் தளத்தில் இந்தப் பாடலின் காணொளியைக் காணலாம்.
3. செபமாலையைப்
பயன்படுத்தி ஐந்து பத்து மணிகளிலும் ‘இயேசுவே உமக்குப் புகழ், இயேசுவே உமக்கு நன்றி’ எனக்
கூறி, பெரிய மணியில் ‘மரியே வாழ்க, அருள் நிறைந்த அன்னையே வாழ்க’ என்றும், பின்னர் ‘தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி’ என்னும் திருத்துவப் புகழைக் கூறலாம். ஐந்து பத்து மணிகளின் தொடக்கத்தில் ஒவ்வொரு நன்றிக் கருத்தையும் இணைத்து இந்த ‘இறைப்புகழ்ச்சி செபமாலையை’
மன்றாடலாம். பல ஆண்டுகளாக இம்மூன்றையும்
நான் என் தனி வேண்டலில் இணைத்துக்கொள்வதோடு, நான் நடத்தும் தியானம், பாசறைகளில் பிறருக்கும் இவற்றைக் கற்பித்துள்ளேன்.
இந்திய
மரபையும் பண்பாட்டையும் நம் இறைவேண்டலில் இணைத்துக்கொள்வதும் ஒரு படைப்பாற்றலே. இயேசு சபைத்துறவி அருள்தந்தை அந்தோணி டிமெல்லோ உருவாக்கிய ‘சாதனா’ தியானம் துறவியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நடந்துகொண்டே
இறையோடு ஒன்றிக்கும் ‘இறைவேண்டல் உலா’
(Prayer Walk), ஐந்து
விரல்களையும் கொண்டு வேண்டும் ‘ஐவிரல் மன்றாட்டு’
(Five Finger Prayer), உடலசைவோடு
பாடிப் போற்றுதல் (Action Song Prayer), குடும்பத்தினர்,
நண்பர்களின் பெயர்களைக் கூறி மன்றாடுதல், சமைக்கும்போதும் இறைப்புகழ்ச்சி... என எத்தனையோ விதவிதமான
வகைகளில் வேண்டலாம்.
மனம்
இருந்தால், வழி உண்டுதானே! தேவையானது ஒன்றே; இறைவேண்டல் ஆர்வம் இருந்தால் போதும். நாமே நம் இறைவேண்டலைச் செதுக்கிக்கொள்ளலாம்.
பழைய ஏற்பாடு தாய்மையைக் கடவுளின் கொடையாக மட்டுமல்லாமல், அன்னையர்கள் மற்றும் அவர்களின் மகன், மகள்களின் நோக்கத்தின் சிறப்பான இணைப்பாகவும் பரிந்துரைக்கின்றது.
1. தாய்மை
என்பது கடவுளின் ஒரு சிறந்த கொடையாகும். காயினைப் பெற்றெடுத்த பின் ஏவாள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்
(தொநூ 4:1). இந்த வார்த்தைகளோடு தொடக்க நூலானது படைத்தவரின் நற்குணத்திலிருந்து ஊற்றெடுக்கும் அருள் மற்றும் மகிழ்ச்சியாக மனித வரலாற்றின் முதல் தாய்மையைக் காட்டுகின்றது.
2. இதைப்போலவே,
ஈசாக்கின் பிறப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தொடக்க வரலாற்றிலிருந்து விவரிக்கப்படுகின்றது.
பிள்ளைகளின்றி
இருந்த மற்றும் முதிர்ந்த வயதை எட்டியிருந்த ஆபிரகாமுக்கு வானத்து நட்சத்திரங்களைப் போன்று எண்ணற்ற வழிமரபினருக்குக் கடவுள் வாக்களிக்கின்றார் (ஒப்பிடுக. தொநூ 15:5). மனிதனுக்கான கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் இந்த வாக்குறுதியானது குடிமுதல்வரால் (Patriarch) நம்பிக்கையோடு
வரவேற்கப்படுகிறது. “ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்”
(தொநூ 15:6).
இந்த
வாக்குறுதியானது ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்த வேளையில் ஆண்டவர் கூறிய பின்வரும் வார்த்தைகளால் உறுதிப்படுத்தப்படுகின்றது:
“உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே; எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்” (தொநூ
17:4).
இந்த
வழக்கத்திற்கு மாறான மற்றும் இரகசியமான நிகழ்வுகள் மனித எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து ஓர் உயிரைப் பெற்றெடுத்த சாராவின் தாய்மையானது கடவுளுடைய இரக்கத்தின் கனியை அனைத்திற்கும் மேலாக வலியுறுத்துகின்றது: “அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்”
(தொநூ 17:15-16).
தாய்மையானது
கடவுளின் தீர்க்கமானதொரு கொடையாகக் காட்டப்படுகின்றது. கடவுள் நிகழ்த்தவிருக்கும் வியக்கத்தக்க மற்றும் எதிர்பாராத மாற்றத்தைக் குறிக்கும் வண்ணம் குடிமுதல்வரும் (Patriarch) அவரின்
மனைவியும் புதியதொரு பெயர் கொடுக்கப்படுவார்கள்.
தாய்மையின் கொடையால்
ஆண்டவர் மகிழ்கின்றார்!
3. திரு
அவைத் தந்தையர்களால் திரித்துவத்தின் ஒரு முன்னடையாளமாக விளக்கப்பட்ட மூன்று அதிசய மனிதர்களின் வருகையானது மிக வெளிப்படையாக ஆபிரகாமுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் நிறைவாகவே அறிவித்தது: “பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிராம் தன் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தன் அருகில் நிற்கக் கண்டார்”
(தொநூ 18:1-2). ஆபிரகாம் மறுத்தார்: “நூறு வயதிலா எனக்குக் குழந்தைப் பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தைப் பெறப் போகிறாள்?” (தொநூ 17:17; உக. 18:11-13). அந்த இறைவிருந்தினர் இவ்வாறு பதிலளித்தார்: “ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்\" (தொநூ 18:14; உக. லூக்1:37).
அந்த
விவரிப்பானது அதுவரை மலடியாக இருந்தவளின் திருமண உறவை வளமையாக்கிய இந்த இறைச்சந்திப்பை முன்னிலைப்படுத்துகின்றது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து எல்லா நம்பிக்கைக்கும் எதிராக ஆபிரகாம் ஒரு தந்தையாகின்றார். மேலும் அவர் ‘நம்பிக்கையின் தந்தை’;
ஏனென்றால், அவரின் நம்பிக்கையிலிருந்தே தேந்தெடுக்கப்பட்டவர்களின் நம்பிக்கையானது தொடங்குகின்றது.
4. தாய்மையின்
கொடையோடு ஆண்டவரால் மலட்டுத்தன்மையிலிருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட மற்ற பெண்களின் வரலாற்றோடு இதைத் திருவிவிலியம் தொடர்புபடுத்துகின்றது. மனிதத்தன்மையில் நம்பிக்கையின்றி இருப்போரின் இதயப்பூர்வமான செபங்களை ஏற்பதனால் அடிக்கடி ஏற்படும் வேதனை மிகுந்த சூழ்நிலைகள் கடவுளின் தலையீட்டினால் மகிழ்ச்சியின் அனுபவங்களாக மாறுகின்றன. உதாரணமாகத் தன் வழியாக யாக்கோபுக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பதால் இராகேல் தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தன் கணவனை நோக்கி “நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும்; இல்லையேல் செத்துப் போவேன்” என்றார். யாக்கோபு அவர்மீது சினம் கொண்டு, “நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்” என்றார்
(தொநூ 30:1-2).
ஆனாலும்,
உடனடியாகத் திருவிவிலியமானது இவ்வாறு கூறுகின்றது: பின்பு கடவுள் இராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார். அவரும் (இராகேல்) கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து ‘கடவுள் என் இழிவைப் போக்கினார்’ (தொநூ
30:22-23) என்றார். யோசேப்பு என்ற இந்த மகன்தான் எகிப்திலிருந்து குடிபெயர்ந்த காலத்தில் இஸ்ரயேலுக்கு மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றுகின்றார்.
மற்ற
கதையாடல்களில் இருப்பதைப் போன்றே இதிலும், பெண்ணினுடைய மலட்டுத்தன்மையின் ஆரம்ப நிலையில் அவர்களின் துயரங்களை அடிக்கோடிட்டுக் காட்டி, கடவுளின் அற்புதமான தலையீட்டை முன்னிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. அதேவேளையில், இது எல்லாத் தாய்மையிலும் இருக்கின்ற உள்ளார்ந்த பெருந்தன்மையைப் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றது.
5. சாம்சனின்
பிறப்புப் பற்றிய விவரிப்பிலும் இதே மாதிரியானதொரு நடைமுறையை நாம் காணலாம். ஒரு குழந்தையை ஒருபோதும் கருத்தரிக்க இயலாதிருந்த மனோவாகுவின் மனைவி வானதூதரிடமிருந்து
ஆண்டவருடைய பின்வரும் அறிவிப்பைக் கேட்கின்றாள்: “நீ மலடியாய் இருந்ததால்
இதுவரை குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை; ஆனால், இனி நீ கருவுற்று ஒரு
மகனைப் பெற்றெடுப்பாய்” (நீதி
13:13). சிம்சோன் வழியாக ஆண்டவர் செய்ய விரும்பாததை இந்த எதிர்பாராத மற்றும் அற்புதமான கருத்தரிப்பு அறிவிக்கின்றது.
சாமுவேலின்
தாயான அன்னாவின் மகப்பேற்றின் வழியாக, இறை வேண்டலின் சிறப்பான பங்கானது அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றது. அன்னா மலடியாக இருப்பதால் அவமானத்தினால் துன்பப்படுகிறாள். ஆனால், இந்தத் துன்பத்தை வெற்றிகொள்வதற்கு அவளுக்கு உதவ வேண்டி தொடர்ந்து ஆண்டவரை நோக்கி வேண்டுகின்றாள். கோவிலில் ஒருநாள் அவள் பின்வரும் உறுதிமொழியை எடுக்கின்றாள்: “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி, என்னை மறவாமல் நினைவுகூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன்” (1சாமு
1:11).
அவளுடைய
இந்தச் செபமானது கேட்கப்பட்டது: “ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ‘நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்’
என்று கூறி, அவள் அவனுக்குச் ‘சாமுவேல்’
என்று பெயரிட்டார்” (1சாமு
1:19-20). அவளுடைய வாக்குறுதியில் நிலைத்திருந்து அன்னா அவளின் மகனைப் பின்வருமாறு கூறி ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்: “இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன். அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்” (1சாமு
1:27-28). கடவுளால் அன்னாவுக்குக் கொடுக்கப்பட்டு, பின்னாளில் அன்னாவால் கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட சிறுவனான சாமுவேல், அன்னா மற்றும் கடவுளுக்கு இடையேயான உயிரோட்டமான உறவினுடைய ஒப்பந்தத்தின் சாட்சியாகின்றார்.
இவ்வாறு
சாமுவேலின் பிறப்பானது மகிழ்ச்சியின் அனுபவமாகவும் நன்றி கூறுவதற்கானதொரு நேரமாகவும் இருக்கின்றது. சாமுவேல் முதல் புத்தகமானது மரியாவின் புகழ்ச்சிப்பாடலை முன்பே அறிவிக்கும் அன்னாவின் புகழ்ச்சிப் பாடலாக அறியப்படும் ஒரு பாடலைக் கொண்டுள்ளது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!” (1சாமு 2:1).
அன்னாவின்
இடைவிடாத செபத்தினால் கடவுள் அவளுக்குக் கொடுத்த அந்தத் தாய்மை என்னும் அருளானது அவளைத் தாராளக் குணத்தினால் நிரப்பப்பட்ட ஒரு புதிய பெண்ணாக மாற்றியது. சாமுவேலின் அருள்பொழிவானது, கடவுளுடைய இரக்கத்தின் கனியை அவளின் குழந்தையில் கண்டுகொண்டு, அவரின் கொடைக்குப் பதிலாக அவள் இதுநாள் வரை எந்தக் குழந்தைக்காக ஏங்கினாளோ அந்தக் குழந்தையையே அவருக்காக ஒப்படைக்கின்ற ஒரு தாயினுடைய நன்றியின் பதிலாக இருக்கின்றது.
கடவுள் மனித
வரலாற்றின்
முக்கியமான
தருணங்களில்
தலையிடுகின்றார்
6. நாம்
இப்பொழுது நினைவுகூர்ந்த இந்த அற்புதமான தாய்மை பற்றிய நிகழ்வுகளில், மகன்களுடைய பணியில் அவர்களின் அன்னையர்களுக்கும் முக்கியமானதொரு பங்கைத் திருவிவிலியம் கொடுப்பதை நாம் எளிதாகக் கண்டுகொள்ளலாம். சாமுவேலின் நிகழ்வில், அவரைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான முடிவெடுப்பதில் அவள் தீர்க்கமானதொரு பங்கைப் பெற்றிருக்கிறாள். இதற்கு இணையான தீர்க்கமானதொரு பங்கானது யாக்கோபுக்காகச் சந்ததிகளைப் பெற்றுக்கொடுத்த மற்றொரு தாயாகிய இரெபேக்காவினால் ஆற்றப்படுகின்றது (தொநூ 27). திருவிவிலியத்தில் விவரிக்கப்பட்ட இந்த அன்னையர்களின் தலையீடானது,
கடவுளின் உயரியத் திட்டத்திற்காக அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கருவியின் அடையாளமாக இருப்பதாகவும் விளக்கப்படலாம். அந்தக் கடவுள்தான் தந்தையின் ஆசிரையும், பரம்பரைச் சொத்தையும் பெற்று, அதன் காரணத்தினாலேயே அவருடைய மக்களின் ஆயர் மற்றும் தலைவராக… இளைய மகனாகிய யாக்கோபுவைத் தேர்ந்தெடுக்கின்றார். அவர்தான் சுதந்திரமான மற்றும் விவேகமான முடிவுகளால் ஒவ்வொருவருடைய வாழ்வின் இலக்கையும் தீர்மானிக்கின்றார் மற்றும் வழிநடத்துகின்றார் (சாஞா 10:10-12).
தாய்மை
தொடர்பான திருவிவிலியச் செய்தியானது முக்கியமான மற்றும் எல்லாக் காலத்திற்குமானதொரு பார்வையை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக, மலட்டுப் பெண் சம்பந்தமான விசயம், பெண்ணுடனான கடவுளின் தனிப்பட்ட உடன்படிக்கை, தாய் மற்றும் மகனின் முன்பே வகுத்தமைக்கப்பட்ட முடிவில் இருக்கும் சிறப்புப் பிணைப்பு போன்றவைகளில் வெளிப்படும் தாராள மனப்பான்மையின் அம்சங்களை இது வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
அதேநேரத்தில்,
மக்களுடைய வரலாற்றின் முக்கியமான தருணங்களில் கடவுளின் தலையீடானது சில
மலட்டுப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்கின்றது மற்றும் காலம் நிறைவுற்றபோது அவருடைய மகனின் மனுவுருவாதலுக்காக ஒரு கன்னியையும் வளமைமிக்கவளாகச் செய்கின்ற கடவுளின் தலையீட்டில் நம்பிக்கை வைப்பதற்கு நம்மைத் தயாரிக்கின்றது.
மூலம்:
John Paul II, Motherhood is God’s special gift, in «L’Osservatore
Romano», Weekly Edition in English, 13 March 1996, p. 11.
ஓவியக் கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் கலாச்சார உலகில் பணிபுரிவோருக்கான யூபிலி உரோமை நகரில் 2025, பிப்ரவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் வழி திருத்தந்தை பிரான்சிஸ் புரிதலை, உறவை, மன்னிப்பை, ஒற்றுமையை விதைக்கும் உரையாடல், யாரையும் விலக்காமல் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றைப் பறைசாற்றும் உன்னதக் கருவிகளாகப் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் செயல்பட வேண்டும் என்ற கருத்தை அவர்களுக்கு நினைவூட்டினார்.
அழகையும்
படைப்பாற்றலையும் கொண்டாடுவது சீரிய சிந்தனையைக் கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் மத்தியில் விதைப்பதற்கும் அவர்களது கலைத்திறமையால் மனுக்குல ஒற்றுமையை உலகிற்குத் தெளிவாகக் காட்டவும், நீதி நிறைச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் வழிகோலும்.
தமிழ்க்
கலை உலகில், தமிழ்க் கத்தோலிக்கத் திரு அவையில் இன்று பணிபுரியும் கவிஞர்கள், இலக்கியப் புலமைமிக்கோர், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், சிற்பங்கள் மற்றும் சுரூபங்கள் செய்வோர், பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் இக்காலத் தமிழ் நடனக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், குறும்பட மற்றும் திரைப்படக் கலைஞர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் மற்றும் தமிழ்மொழி, பண்பாடு, கலாச்சாரம் இவற்றின் அறநெறி, கத்தோலிக்கத் திரு அவையின் நற்செய்தி வாழ்வுநெறி இவற்றைத் தங்களின் பல்வேறு தனித்திறமைகள் மூலம் வெளிப்படுத்தும் யாவரும் இக்கொண்டாட்டத்தில் நினைவுகூரப்பட்டனர். “கலைஞர்களும்
கவிஞர்களும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுமான நீங்கள், இவ்வுலகில் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் யார் என எடுத்தியம்பும் இயேசுவின்
புரட்சிகரமான இறைக் கண்ணோட்டத்தை உலகிற்குப் பறைசாற்றும் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
அழகை உருவாக்கி உலகிற்கு அளிப்பது மட்டும் உங்கள் பணி என்று இருந்துவிடாதீர்கள். உலகின் பல்வேறு மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பனவற்றின் வரலாற்று மடிப்புகளில் புதைந்திருக்கும் புதைக்கப்பட்டிருக்கும் உண்மையை, நன்மையை, அழகை வெளிப்படுத்துவதும்கூட மனித குலத்திற்கான உங்கள் சேவை என்பதை உணர்ந்திடுங்கள்.
மனித
இனம் நேரிய பாதையிலிருந்து தடம் புரண்டுவிடாமல், எதிர்நோக்கு நிறைந்த பார்வையோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவுவது பல்வேறு கலைஞர்களின் கடமையாகும். அதே சமயத்தில் எதிர்நோக்கு எளிதானதோ, மேலோட்டமானதோ, வெறும் கருத்தியல் கொள்கையோ அல்ல என்பதையும் உங்கள் கலைகளில் வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உண்மையான எதிர்நோக்கு மனித வாழ்வின் பல்வேறு நாடகங்களுக்குள்ளேயே பின்னிப் பிணைந்திருக்கிறது என்று அறிந்திடுங்கள்” என்று
குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “எதிர்நோக்கு என்பது வெறும் புகலிடமன்று; அது பற்றியெரிந்து பட்டொளி வீசும் இறைவார்த்தையை ஒத்த நெருப்புப் போன்றதாகும்” என்கிறார்.
எனவேதான்
நம்மைவிட மேம்பட்ட அழகு, நமக்குச் சவாலான நம் வலிகள், நம்மை அழைக்கும் உண்மை இவற்றைத் தன்னகத்தே கொண்ட உண்மை கலை எதுவாயினும், அது புறக்கண்களுக்குப் புலப்படாத கடவுளுடன் நாம் ஓர் அக உறவை நாம்
உணரும்படி செய்துவிடுகிறது.
எனவே,
மறைந்திருக்கும் பிரமாண்டத்தைக் கண்டுபிடித்து, வெளிக்கொணர்ந்து அதை நம் புறக்கண்களும் அகக்கண்களும் காணும்படிச் செய்வதே கலைஞர்களின் பணியாகும். கலை உலகில் பணிபுரிவோர் உலகின் பிரமாண்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றுள் எவையெல்லாம் பயமூட்டி நம்மை மயக்கும் பிரமாண்டங்கள் எனவும், எவையெல்லாம் மனிதத்தை மலரத்தூண்டும் பிரமாண்டங்கள் எனவும் நமக்குக் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர். கலையுலகிலுள்ள பிரமாண்டங்களில் எவையெல்லாம் ‘காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப் போன்றவை’ எனவும், எவையெல்லாம் ‘ஆற்றங்கரையில் நடப்பட்டு மிகுந்த கனிதரும் பழமரங்கள் போன்றவை’
(திபா 1:3-4) எனவும் நாம் அடையாளம் கண்டுகொள்ளக் கலைத்துறையினர் நமக்கு உதவ வேண்டும்.”
“உலகின் பிளவுகளுக்கு மருந்திட்டு ஆற்றும் ஏழைகள், துயருறுவோர், காயமடைந்தோர், சிறையிலிருப்போர், துன்புறுத்தப்படுவோர் மற்றும் அகதிகளின் குரலுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருக்கும் உங்களை, உலகின் மனிதகுலத்தின் அழகைப் பாதுகாக்கும் காவலர்கள் இந்தக் கலைஞர்கள்”
என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், “நாம் வாழும் இவ்வுலகில் புதுப்புது தடுப்புச்சுவர்கள் கட்டப்படுகின்றன; மொழி, கலாச்சார, ஆன்மிக, இன வேறுபாடுகள் ஒன்றையொன்று
மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களாகக் கருதப்படாமல் பிளவுகளை உருவாக்கும் காரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கலையுலகின் அங்கத்தினர்கள் மனித மனங்களுக்கு ஒளியூட்டி இதமளிக்குமாறு இவ்வேறுபாடுகளுக்கிடையே பாலங்களைக் கட்ட வேண்டும்; இவ்வேறுபாடுகள் ஒன்றையொன்று சந்திக்கவும், உரையாடவும் கலைகள்வழி சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்”
என்றார்.
மேலும்,
“கலை ஒரு பகட்டோ அல்லது ஆடம்பரத்தின் வெளிப்பாடோ அல்ல; மாறாக, அது ஓர் ஆன்மிகத் தேவை. கலை நம் அன்றாட வாழ்வின் சூழலிலிருந்து நம்மைப் பிரித்துக் கனவு உலகிற்கு எடுத்துச்செல்வதல்ல; மாறாக, நம் அன்றாட வாழ்வின் சூழலை நாம் இன்னும் அதிக ஆர்வத்தோடு ஏற்று, அதிலுள்ள குறைகளைக் களைய நம்மைத் தூண்டுவது; நம்மை அழைப்பது. அழகைப் பற்றிக் கற்பிப்பது, எதிர்நோக்கையே கற்பிப்பதாகும். எதிர்நோக்கு என்பது ஒருபோதும் நம் வாழ்க்கையின் நாடகங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல; மாறாக, அது நம் அன்றாடப் போராட்டங்கள், வாழ்க்கைத் துன்பங்கள் மற்றும் இக்காலகட்டத்தின் சவால்கள் இவற்றினூடே பின்னிப் பிணைந்திருப்பது. ஆகவே,
இறைவாக்கினர்களான, திடம் நிறைந்த அறிவாளிகளான, கலாச்சாரத்தைப் படைப்பவர்களான கலைஞர்கள் இவ்வுலகத்திற்குத் தேவை.
புதிய
உலகின் தூதர்களாகக் கலைகள் அமைய வேண்டும். தேடலையும், கேள்விகளையும், துணிந்து செயல்படுவதையும் கலைஞர்கள் ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. கலை ஒருபோதும் எளிதல்ல; கலை ஓய்வற்ற ஓர் அமைதியைத் தருகிறது. எதிர்நோக்கு ஒரு மாயையல்ல; அழகு ஒரு கற்பனை வாதமல்ல. கலைத்திறமை ஒருவகை இறையழைத்தல். அவ்வழைத்தலுக்குத் தாராளமாக, அன்புடன், முழுமூச்சுடன் நாமனைவரும் செவிமடுக்க வேண்டும்.
திருத்தந்தையின்
இக்கருத்துகளைக் கீழ்க்காணும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்.
• கலைத்துறையும் முக்கியமானதென உணர்ந்து, நம் குடும்பங்களிலும் பங்குத் தளங்களிலும் கலைத்துறையில் சாதிக்க விரும்பும் சிறுவர்- சிறுமியர், இளையோர்-இளம்பெண்களை உற்சாகப்படுத்துவோம்.
• கிறித்தவப் பள்ளிகளில், பங்குகளில் மனித மாண்பை, ஒற்றுமையைப் படம் பிடித்துக்காட்டும் ஓவியம், நாடகம், நடனம், பாடல், கவிதை, கட்டுரை, சொற்பொழிவு மற்றும் பல கலைகள் வாயிலாக
இளம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.
• தமிழ் இலக்கியங்களில் புதைந்திருக்கும் மனித மாண்பை வெளிக்கொணர பல்வேறு வகையான போட்டிகளை நடத்துவோம்.
• கலைத்துறையினரது படைப்புகளை அவர்களது அனுமதியோடு பயன்படுத்தி, அப்பயன்பாட்டுக்கு ஏற்ற தொகையைப் படைப்பாளிகளுக்குச் சென்றடையச் செய்வோம்.
• திரு அவையில் பயன்படுத்தப்படும் பாடல்களில் இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர்களைப் பாடல் புத்தகங்களிலும், தட்டச்சு செய்த தாள்களிலும் குறிப்பிட்டு அவர்களது படைப்பாற்றலை அங்கீகரிப்போம்.