முதன்மை ஆசிரியர் அன்புத்தந்தை இராஜசேகரன் அவர்களே,
வணக்கம்!
‘செய்தியைத் திரட்டுவதிலும் பரப்புவதிலும் ஒழுக்க நெறிகளையும் தனிமனிதரின் முறையான உரிமைகளையும் மாண்பையும் நுணுக்கமாகக் காக்கவேண்டும்’ என்று
(அச்சு) ஊடகத்தின் பணி நெறியை 2-ஆம் வத்திக்கான் சங்கம் வரையறுத்துத் தந்துள்ளது (சமூகத் தொடர்புக் கருவிகள்: எண்- 5). இந்தப் பின்னணியில்...
• ‘கூர்முனைப் புரட்சியால்
சீர்மிகு உலகமைப்போம்’ என்ற
இலட்சிய வேட்கையுடன் தொடங்கப்பட்ட ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ் ஆகஸ்டு 15-ஆம் நாள் ஓராண்டை நிறைவு செய்கிறது.
• 5 இலட்சம் வாசகர்களை
முதல் ஆண்டிலேயே இவ்விதழ் கடந்துள்ளது என்பது ஓர் இமாலய வளர்ச்சி! 4 அல்லது 5 பக்கங்கள்தான். எனினும், இதழின் கட்டமைப்பு ஆச்சரியமளிக்கிறது.
• திருத்தந்தையின் பணிகள், பகிர்வுகள், மடல்கள், வத்திக்கான் வழிகாட்டுதல்கள், உலக, தேசிய, மாநிலத் திரு அவைச் செய்திகள், முக்கிய
சமூக, அரசியல்
நிகழ்வுகள், அவை பற்றிய நடுநிலைத் தவறா கிறித்தவ நோக்கிலான அலசல்கள், ஆய்வுகள், காலத்திற்கேற்ற இறையியலாக்கச் சிந்தனைகள், முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளின் சுருக்கமான பதிவுகள், அவ்வப்போது, வேலைவாய்ப்புக்கான
தகவல்கள்... இவற்றினூடே பொருத்தமான புகைப்படங்கள்... அனைத்தும் சிறப்பு!
• முக்கியச் செய்திகளின் ஆழ, அகலங்களைத் தேவையான அளவு வடிகட்டி, அவற்றின் சுருக்கத்தை வீரியம் குறையாமல் இரு வரிச் செய்திகளாகத் தருவது அழகோ அழகு! (அதிலும் உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற ‘பாத்திக் கட்டுதல்’
வேறு).
• முதல் பக்கத்தின் இடப்புறம் ‘உள்ளே’ என்ற பகுதி முன்னோட்டமாக இடம்பெற்றுள்ள செய்திகளுக்கு முகமன் கூறுவது தனி அழகு!
• இதழின் வடிவமைப்பு (Lay-out) பார்வைக்கு
இதமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
• இதழில் இடம்பெறும் ஒவ்வொரு தலைப்பும், அதன் அடுத்த வரியில் பயன்படுத்தப்படும் சிறிய
வடிவிலான (Small Font) தலைப்பின்
தொடர்ச்சியும் வாசிப்புக்கு வளம் சேர்ப்பவை!
• ‘எதிர்நோக்கு ஏமாற்றம்
தராது’, ‘நான்
உன்னை அன்பு செய்கிறேன்’, ‘மகத்தான
மானுடம்’ போன்ற
திருத்தந்தையரின் அண்மைக்கால மடல்களின் விழுமியங்களைத் தாங்கிய தலையங்கங்கள் இறையாட்சிப் பணிக்கான புதிய திசைகளை அடையாளம் காட்டுகின்றன.
• அடர்த்தி மிக்க செய்தியைக் கூட அதன் பொருளைச் சிதைத்துவிடாமல், மிகவும் எளிமையாக வடிவமைக்கும் கலை உங்களுக்குச் சிறப்பாக வசப்பட்டுள்ளது.
• இதழ் முழுவதும் துலங்கி விரியும் தூய தமிழின் நறுமணத்தில் பூரித்துப்போகிறேன். வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை. சில தமிழ் சொற்களைப் புதிதாகக் கற்றுக்கொண்டேன் என்பது என்னளவில் உண்மை.
• ‘பாலியம்’ (Pallium) என்பதை ‘திரு நேரியல்’ என்றும், ‘பரிபாலகர்’
(apostolic
administrator) என்பதை ‘திருத்தூதரக நிர்வாகி’
என்றும் மிகவும் பொருத்தமாகத் தமிழ் மாற்றம் செய்திருக்கிறீர்கள்.
நிறைவாக...
• அதிகாலை 5.00 மணியளவிலேயே மின்னஞ்சல் நாளிதழை வெளியிடும் அதிசயம் நாள் தவறாமல் சரியாக எப்படி நடக்கிறது?
• உங்களின் துணை ஆசிரியர்கள் அருள்தந்தை ஞான சேகரன், அருள்தந்தை பிரின்ஸ், ஆசிரியர் குழுவினர், உடன் ஊழியர்களின் கடின உழைப்பையும், தகைசால் அர்ப்பணிப்பையும் கண்முன் காண்கிறேன். நித்திரையைத் தொலைத்தவர்களுக்கே இத்தனையும் சாத்தியம்.
• ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியிலும் உணர்வையும் சிந்தனையையும் இடைவிடாமல் ஒருமுகப்படுத்தும் கடுந்தவம் இது. ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால், மின்னஞ்சல் நாளிதழைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனையை நாள்தோறும் அனுபவிக்கும் அதிசயத் தாய் நீங்கள்!
பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமரிடம் அசிரீரி வினாக்கள் பல விடுக்கிறது. அதில் ஒன்று ‘காற்றைவிட வேகமானது எது?’ தருமரின் உடனடி பதில் ‘மனம்.’ ஆம், நம் மனம்போல் வேகமாக இயங்கக்கூடிய ஏதேனும் ஆற்றல் உண்டா?
நம்
வேகமான ‘மனம்’ போலவே எல்லாமும், எல்லா இடத்திலும் நடந்தே ஆகவேண்டும் எனும் எண்ண ஓட்டத்திற்குள் எதிர்பார்ப்புகளுக்குள் இவ்வுலகம் அமிழ்ந்து கொண்டிருக்கிறது.
‘Survival
of the fittest’ எனும் எதார்த்தக் கோட்பாட்டினைக் கூறிய ஹெர்பர்ட் ஸ்பென் சரின் சொல்லாடல் தீர்க்கத்தரிசனமாக மாறிக் கொண்டிருக்கிறதை நிகழ்காலம் எண்பித்துக் கொண்டிருக்கிறதல்லவா! இந்தப் பிரபஞ்சத்தின் அதிமிக வேகத்துடன் நாமும் சேர்ந்து தள்ளப்பட்டு விடுவோமோ என எல்லோர் மனத்திலும்
ஒரு சிறு கலக்கம் உள்ளது.
‘விளைவு’
- இது மட்டுமல்ல: ‘Short and crispy’
- இத்தகு செய்திகளே வைரல் ஆகின்றன. WhatsApp-இல்
கூட Tnq – நன்றி,
n – and என
எழுத்துகள் சுருங்கி வார்த்தைகளை விளங்கவைக்கின்றன. நாமும் இதைப் புரிந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தம்!
‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்’ என்ற
விருதுவாக்குடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாய் ‘நம் வாழ்வு’-
நம் வாழ்வுடன் இணைந்து இயங்கிக்கொண்டே மேற்கூறிய ‘விரைவுக்குள்’ குறுஞ்செய்திகளுக்குள்
நுழைந்து ஓர் ஆண்டு நிறைவுபெற்று, சின்னஞ்சிறு குட்டிக்குருவியாக நம் கைகளில் மின்னஞ்சல் நாளிதழாகத் தவழ்கிறது. மனமார வாழ்த்துவோம்.
பல
நூற்றாண்டு காலம் வாழ்க!
நோய்
நொடி இல்லாமல் வளர்க!!
ஊராண்ட
மன்னர் புகழ் போல
உலகாண்ட
புலவர் தமிழ் போல!!!
சின்னஞ்சிறு
தேனீக்களே
இனிய
தேனைத் தருகின்றன!
சின்னஞ்
- சிறுவர்கட்கே
விண்ணரசு
உரித்தாகிறது!!
சின்னஞ்சிறு
பெத்லகேமே
உலக
மீட்பரை ஈந்தது!!
ஆக,
சின்னஞ்சிறு குறுஞ்செய்திகளாய் வலம் வரும் நம் ‘நம் வாழ்வு’ நாளிதழும் சிறியதாய், அளவாய், அழகாய், அருமையாய் உலா வருகிறதே!
நாம்
சிறுவயதில் இருந்தபோது படித்த கதைகளில் ஒரு மந்திரவாதி கையில் மை தடவ, காணாமல்
போன இளவரசி, அவளிருக்கும் இடம் தெரியும். அட! அதேதான் இன்றும்!
உலகமே
நம் கைப்பேசிக்குள் அடங்கி, அனைத்தையும் காட்டும் விந்தை! - அதேதான்! நம் வாழ்வின் மின்னஞ்சல் நாளிதழில் கையடக்கச் செய்திகளாகி மிளிரும் அழகு! ஆஹா!!
Tv, WhatsApp, Insta, Facebook என
பல சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள் பல பல செய்திகளை
reels ஆக real போலத்
தருகின்றன. ஆனால், காலையில் இவற்றின் முகத்தினைத் திறந்தால் கொலை, கொள்ளை, வன்முறை, ஆர்ப்பாட்டங்கள், அடக்குமுறைகள், அரசியல் நாடகங்கள், விபத்துகள், இறப்புகள்!
எல்லாமே
எதிர்மறைச் செய்தித் திணிப்புகள்! அதிகாலையில் இதை வாசிக்கும் மனித மனம் - இதையே அசைபோட நாள் முழுவதும் ஒருவித மன வேதனை, பயம்,
துக்கம், சுயநலம் போன்ற உணர்வுகளுடனே உலா வருகின்றனர் அல்லவா! செய்தித் தாள்களின் தாக்கம் அல்லவா இது!
நம்
‘நம் வாழ்வு’ மின்னஞ்சலை, நாளிதழைக் கடந்த ஓராண்டாகப் படிக்கிறேன். நல்லவர்களின் நாடித்துடிப்பை உணர்கிறேன். தலைமை ஆசிரியரின் - அவரது குழுவின் ‘கண்துஞ்சா’
வேலைத் திறன் கண்டு மகிழ்கிறேன். உலகெங்கும் நீண்டு செய்திகளைப் பெறும் உழைப்பைக் கண்டு வியக்கிறேன். சமூக அக்கறையைக் கண்டு களிக்கிறேன். சவால்களைத் துணிவுடன் சந்திப்பதைக் காண்கிறேன்.
நாளிதழின்
அமைப்பு, வண்ணங்கள், பத்திகள், இருவரிச் செய்திகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, குஜராத் முதல் மேற்குவங்கம் என வியாபித்துச் செய்திகளை
அள்ளித்தரும் வேகம், உலகத் திரு அவைச் செய்திகள், கத்தோலிக்க நிகழ்வுகளின் தொகுப்பினைச் சுடச்சுடத் தரும் பாங்கு அனைத்தையும் படித்துத் தெளிகிறேன்.
ஊடகப்
பொறுப்புணர்ந்து நம் தலைமை ஆசிரியர் அருள்தந்தை இராஜசேகரன் நல்கும் சிறப்புக் கட்டுரைகள் தாங்கிவரும் கருத்துகள் வித்தியாசமானதாய், உன்னதமானதாய், சமூக அக்கறை கொண்டதாய் அமைகின்ற சிறப்பினைப் படித்து மகிழ்கிறேன்.
சீரிய
சிந்தனை, சமுதாயத்தின் மீது அக்கறை, தியாகம், இளைய சமுதாயம் பகுத்தறிவுடன் நற்குணங்களை வளர்த்துக்கொண்டு உயர வேண் டுமே தவிர, ஊடகங்களுக்குள் மூழ்கி வீணாகிவிடக் கூடாது; தடம் புரண்டு சென்றுவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்; ‘நான்’,
‘எனது’ என
உணர்வு மாற்றம் பெற்று ‘நமது’ எனும் பொதுநோக்கு வர, வளர, உயர நம் வாழ்வின் மின்னஞ்சல் நாளிதழின் ஒவ்வோர் எழுத்தும் உழைக்கிறது எனில் மிகையில்லையே!
ஆசிரியரின்
தமிழ்ப்புலமை - அவர் எடுத்தாளும் குறள்பாக்களும் - சங்கப் பாடல்களும் - இன்றைய ‘ஹைகூ’ கவிதைகளின் பயன்பாடும் கொண்டு சுட்டும் அறிவுரைகள் - துணிவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி உண்மையை, சத்தியத்தைத் தெளிவாகப் பதிவிடும் தன்னம்பிக்கைச் சிறப்புக் கட்டுரைகள் செழுமை! அருமை!
உள்ளத்தின்
நிறைவையே வாய்பேசும் - பேனா எழுதும்!
சமூக,
ஆன்மிக, அரசியல், வாழ்வியல் வழிகாட்டியின் செல்லக் குழந்தையாகத் தொட்டிலில் தவழும் ‘நம் வாழ்வு - மின்னஞ்சல் நாளிதழ்’ நடந்து, வளர்ந்து, உயர்ந்து, செழித்து, இப்புண்ணிய தேசத்தை மென்மேலும் செழிப்பாக்க இதயம் கனிந்த, நிறைந்த வாழ்த்துகளும் செபங்களும்!
‘நம் வாழ்வு’ ஆரம்பித்து 50 ஆண்டுகளை வார இதழாகக் கடந்துவிட்டது. சென்ற ஆண்டு ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ‘நம் வாழ்வை ஒரு தினசரியாக நம்மால் கொண்டு வர முடியுமா?’ என்று. அதற்காக ஓர் ஆய்வை நாங்கள் நடத்தினோம். அந்த ஆய்வின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களிடம் கேள்விகளைக் கேட்டபொழுது, ‘தினசரி நம் வாழ்வு வருமேயானால் நீங்கள் அதை வரவேற்பீர்களா? அது எப்படி இருக்கவேண்டும்?’ என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டபொழுது, அதிகமான ‘நம் வாழ்வு’ வாசகர்கள் ‘இது ஓர் அன்றாடத் தேவை’ என்பதைக் கூறினார்கள்.
‘ஸ்டேக் ஹோல்டர்ஸ்’
(Stakeholders) என்று
சொல்லப்படுகின்ற பலதரப்பு மக்களிடமிருந்தும் இந்த ஆவல் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு தான் கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்னையின் விண்ணேற்பு, இந்த நாட்டின் சுதந்திரம் அடைந்த நாளில் இந்த ‘மின்னஞ்சல் நாளிதழ்’ அன்றாடம் வெளிவர ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக ஓர் ஆண்டை இந்நாளிதழ் பூர்த்திசெய்துள்ளது.
இந்த
நேரத்தில் முதன்மை ஆசிரியர் அருள்திரு இராஜசேகரன் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியைச் சொல்லவேண்டும். ஏனென்றால், ஆயர் பேரவையின் வழிகாட்டுதலில் அவர்தான் இந்த முயற்சியை முன்னெடுத்தார். எடுத்தது மட்டுமல்ல, அதைத் தெளிவாகச் செய்தார். ஓர் ஆய்வின் மூலமாக இது தேவை என்பதை உணர்ந்து, அதன் அடிப்படையில் இதை எப்படி ஆரம்பிக்கவேண்டும்? என்று அதற்கான வேலைகளை மேற்கொண்டு, இந்த நான்கு பக்கங்களை இப்போது ஐந்து பக்கங்களாக, தினசரி ‘மின்னஞ்சல் நாளிதழாக’
விடியற்காலையில்
நம் கையில் வந்துவிடுகின்றது.
விடியற்காலையிலேயே
மின்னஞ்சல் நாளிதழைப் பார்க்கும்பொழுது அதில் திரு அவைச் செய்திகள், உலக மற்றும் இந்தியச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இன்றைக்கு நடக்கக்கூடிய சமூக - பொருளாதார நிகழ்வுகள் நம்முன் கொண்டு வரப்படுகின்றன. சில சமயங்களில் ஒரு நல்ல சிறப்புக் கட்டுரையும் கொடுக்கப்படுகின்றது. அந்த விமர்சனக் கட்டுரை ஒரு முடிவை எடுக்க, நம் நிலைப்பாட்டை எடுக்க உதவியாக இருக்கின்றது.
அண்மையில்
இருவரிச் செய்திகளும் இதில் அடங்கியுள்ளன. ‘நியூஸ் இன் கேப்சூல்’
(news
in capsule) என்று கூறுகின்ற மாதிரி, அதை இரு வரிகளில் கூறும்பொழுது நமக்கு என்ன நடக்கின்றது என்று தெரிகின்றது. அதன் அடிப்படையில் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள மேலும் ஆவலாக இருப்பவர்கள் நாம் தெரிந்துகொள்ளலாம். இந்த மின்னஞ்சல் நாளிதழ் வர ஆரம்பித்ததிலிருந்து இதுதான் இனிமேற்பட்டு
வரப்போகின்ற ஒரு செய்தித்தாளாக இருக்கும். எல்லாரும் குறிப்பிடுவதுபோல இன்றைக்கு ‘பிரிண்ட் மீடியா’ குறைந்துகொண்டே வருகின்றது. அது நின்றுவிடாது; அதேசமயத்தில் அது குறைந்துகொண்டுதான் இருக்கின்றது.
மின்னஞ்சல்
நாளிதழ்கள்தான் இன்றைக்கு அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. 100
ஆண்டுகளைத் தாண்டிய செய்தித்தாள்கள், செய்திப் பத்திரிகைகள் எல்லாமே, இன்றைக்கு மின்னஞ்சல் நாளிதழைக் கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படை யில் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலைகளை உணர்ந்து ‘நம் வாழ்வும்’
இந்த மின்னஞ்சல் நாளிதழைக் கொண்டுவர ஆரம்பித்திருக்கின்றது.
கட்டாயமாக
வரும் நாள்களில் இது இன்னும் சிறப்பாக வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதற்கு நம் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருந்தால் கட்டாயமாக இன்னும் பொலிவாகவும், இன்னும் அதிக பக்கங்களுடனும், இன்னும் அதிக விவரங்களுடனும் விமர்சனக் கட்டுரைகளுடனும் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இந்த ஓர் ஆண்டை நிறைவு செய்கின்ற ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
“நாள்தோறும் விடியலின் வெளிச்சமாய், நற்செய்தியின் முழக்கமாய், உண்மையை விளக்கும் அறத்தின் குரலாய்...” காலத்தின் சுவடுகளைத் துல்லியமாகப் பதிப்பித்து, கத்தோலிக்கத் திரு அவையின் இறையாட்சி மதிப்பீடுகளையும் இறையியல் சிந்தனைகளையும் உலகியல் நிகழ்வுகளையும் உடனுக்குடன் மக்கள் கரங்களில் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியில், ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்’ (Nam Vazhvu
E-Newspaper) தனது
முதலாண்டு நிறைவை இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் மகிழ்வோடு கொண்டாடுகிறது.
எண்மத்
தொழில்நுட்ப யுகத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டு, ஓராண்டு காலமாகத் தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நாளிதழ், நவீனத் தமிழ் இதழியலில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தின்
அசுர வளர்ச்சியால் உலகம் ஒரு சிறு கிராமமாகச் சுருங்கிவிட்ட சூழலில், தகவல்களை விரைவாகவும், துல்லியமாகவும், அறநெறி சார்ந்தும் பெறவேண்டியது இக்காலகட்டத்தின் கட்டாயமாகும். குறிப்பாக, திரைகளில் தகவல்களைத் தேடும் ‘டிஜிட்டல் தலைமுறை’ (Digital Natives) மற்றும் ‘ஜென்-சி’ (Gen-Z) இளைஞர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே நற்செய்தியையும், நாட்டு நடப்புகளையும், சிந்தனைத் தெளிவையும் வழங்குவது இன்றியமையாத தேவையாக உருவெடுத்தது.
அந்தத்
தேவையை உணர்ந்து உதித்ததே இந்த ‘நம் வாழ்வு மின் - நாளிதழ்.’ இது வெறும் மின்னஞ்சல் செய்தித்தாள் மட்டுமல்ல; உறங்கிக்கிடக்கும் சமூக மனச்சாட்சியை ‘துயில் எழுப்பத் தூது வரும்’ அறிவு ஒளிவிளக்கு! இந்த மின்னஞ்சல் நாளிதழ் வாசகர்களின் அன்றாட அறிவுப் பசியைத் தீர்க்கும் வண்ணப் பேழையாகத் திகழ்வது இதன் தனிச்சிறப்பு! திருத்தந்தையின் மேய்ப்புப்பணிச் செய்திகள், வத்திக்கானின் அறிவிப்புகள், ஆசிய மற்றும் இந்தியத் திரு அவையின் ஆன்மிக நிகழ்வுகள் போன்றவை உடனுக்குடன் பகிரப்படுகின்றன. இத்துடன், உலக அரசியல் நகர்வுகள், இந்திய மற்றும் தமிழ்நாடு அரசியல் தளங்களில் நிகழும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்த நடுநிலையான, கூர்மையான பார்வைகள் இடம்பெறுகின்றன.
மேலும், இளம்
தலைமுறையின் எதிர்காலத்தை வளப்படுத்தும் தொழில் வழிகாட்டுதல்கள், வேலைவாய்ப்புச் செய்திகள் மற்றும் திறன் மேம்பாட்டுக் குறிப்புகள் முன்னுரிமை பெறுகின்றன. இத்தகைய சிறப்புகளுடன், தமிழ்நாடு தலத் திரு அவையில் இன்றைக்குப் பெருமையுடன் பேசுபொருளாக மாறும் அளவுக்கு, இது அச்சு ஊடகக் கலையை எண்மத் தொழில்நுட்பத் தளத்தில் வெற்றிகரமாக மறுவடிவமைப்பு செய்து, ஓர் ‘எண்மத் தொழில்நுட்ப அச்சுப் புரட்சியை’
(Digital Printing Revolution) நிகழ்த்தியுள்ளது என்றால் அது
மிகையல்ல.
2025-ஆம் ஆண்டு
ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த மின்னஞ்சல் நாளிதழ், கடந்த ஓராண்டு காலத்தில் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. புள்ளி விவரங்களின்படி, இவ்விதழ் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சென்றடைந்துள்ளதுடன், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்களின் இதயங்களை வென்றுள்ளது. நாள்தோறும் விடியற்காலையில் மின்னஞ்சல் கலத்தில் புலனம் (WhatsApp) தளத்தை
அலங்கரிக்கும் இந்த இதழ், இலட்சக்கணக்கான மக்களின் காலைப் பொழுதை நற்செய்தியோடு தொடங்கும் நற்பழக்கமாக மாற்றியுள்ளது.
இந்த
மகத்தான ‘டிஜிட்டல் மறைபரப்புப் பணி’ (Digital Evangelization) சாத்தியமாவதற்கு
மூலக்காரணமாக விளங்கியதுடன், இத்தகைய நவீன ஊடகப் புரட்சிக்குத் தங்களின் மேலான வழிகாட்டுதலையும், தொடர் ஊக்கத்தையும் வழங்கி வரும் தமிழ்நாடு ஆயர் பேரவைக்கும் (TNBC), அச்சு
ஊடகப் பணிக்குழுவின் தலைவர் மேதகு ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்புதிய
மின்னஞ்சல் நாளிதழை வடிவமைத்து, வெற்றிகரமாகத் தொடங்குவதற்குத் தலைமை தாங்கி உழைத்த பேராசிரியர் முனைவர் திரு. பெர்னாட் டி சாமி அவர்களுக்கும்,
ஊடக உலகில் புகழ்பெற்ற வல்லுநரும், எம் அறிவுசார் ஆலோசகருமான, மேனாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் முனைவர் திரு. ரபி பெர்னார்ட் அவர்களுக்கும், எம்மோடு இணைந்து களப்பணியாற்றும் துணை ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், வடிவைப்பாளர், அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இறுதியாக,
‘விடியலின் ஒளிக்கீற்றாய், உண்மையின் குரலாய்’ புறப்பட்டு வந்துள்ள ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்’ தொடர்ந்து தமிழ் கத்தோலிக்கச் சமூகத்தையும் கடந்து, பொதுவெளி குடிமைச் சமூகத்திலும் சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை. எண்மத் தொழில்நுட்ப உலகின் சவால்களை வென்று, தொடர்ந்து நற்செய்திப் பணியில் புதிய சிகரங்களைத் தொட, ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழுக்கு’ பேராதரவு
நல்கிட உங்களை அன்போடு வேண்டுகிறேன்.
முதன்மை ஆசிரியர்
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியர்களாகிய நாம் இருபெரும் ‘விடுதலை’…… விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம். முதலாவதாக, அகில உலகத் திரு அவையுடன் இணைந்து, புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு (முழுமையான விடுதலை) விழாவைக் கொண்டாடுகிறோம். இது நமது அன்னை, தான் பெற்ற விண்ணகத்தின் முன் சுவையை அவரது பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல அனைத்துத் தீமைகள், பாவங்களில் இருந்தும் விடுதலை அடைந்து, அவரோடு நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள, அன்றைய திருப்பலியில் இறையருள் வேண்டி செபிக்கிறோம். இரண்டாவதாக, மீண்டும் அதே ஆகஸ்டு 15-ஆம் நாள் நமது நாட்டின் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி, நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, தங்களையே தியாகம் செய்த நமது நாட்டு தந்தை மகாத்மா காந்தி, நமது நாட்டை சமத்துவம், சகோதரத்துவம், சமயச்சார்பின்மை நாடாகச் செதுக்கிய சிற்பி ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் மகத்தான சேவைகளை எண்ணிப் பார்த்து நன்றி கூறவும், அவர்கள் காட்டிய வழியில் நாமும் பயணித்து, நவீன இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்கிறோம்.
சுதந்திரம்
அடைந்து இந்நாள்வரை நமது நாட்டின் வரலாற்றைப் பறவைப் பார்வை கொண்டு பார்த்தோமென்றால் பொருளாதாரம், கல்வி, தொழில் நுட்பம், ‘டிஜிட்டல்’
புரட்சி, அறிவியல், விண்வெளி, விவசாயம் ஆகிய துறைகளில் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், நாம் சனாதனம், சாதியம், பெண்ணடிமைத்தனம், பார்ப்பனியம், மதவாத அரசியல்வாதிகளின் அடிமைகளாகவும், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் தீய உறவுகளுக்கு (toxic
relationship) அடிமைகளாக உள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை.
நள்ளிரவில்
சுதந்திரம் பெற்றதால் நாம் மேற்கூறியவைகளுக்கு அடிமைகளாகக் கட்டுண்டு கிடக்கின்றோமோ? என்று சொல்லத் தோன்றுகிறது. இவைகளில் ஒருசில முக்கியமான அடிமைத்தனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, அவைகளைக் களைந்து, நாம் கனவு காணும் சமத்துவம், சகோதரத்துவம், மதச் சார்பின்மை கொண்ட இலட்சிய சுதந்திர நாட்டைப் படைக்க முடியும்.
சாதிய-சமய
அடிமைத்தனம்
“நாம் சாதியாலும் மதத்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்” என்று
தந்தை பெரியார் பல்வேறு சமயங்களில் பதிவு செய்துள்ளார். டாக்டர் அம்பேத்கர்
ஒரு படி மேலே சென்று, “சாதி சமுதாயத்தை அழிக்கிறது; சமயமோ அதை நியாயப்படுத்துகிறது”…… என்று
சாடுகிறார். இவ்வாறாக சாதி, சமயம் இரண்டும் இணைபிரியாத இரு தீய சக்திகள், தடைக்கற்களாக இருந்து நாட்டின் முன்னேற்றப் பாதைகளில் மாபெரும் இடையூறாக உள்ளன.
முதலாவதாக,
ஒரு மனிதன் கருவறையில் தொடங்கி கல்லறைக்குச் செல்லும் வரை, இவ்விரு அடிமைச் சங்கிலிகளும் அவனைக் கட்டிப் போடுகின்றன. எனவேதான், “அவன் எந்த திசையை நோக்கிச் சென்றாலும், அவன் வாழ்க்கைப் பாதையில், சாதி என்னும் பூதம் குறுக்கே நிற்கும். அப்பூதத்தைக் கொல்லாத வரையில் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார மாற்றத்தையோ கொண்டு வர முடியாது” என்று ‘சாதி ஒழிப்பு’ என்னும் நூலில் அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவதாக,
இந்தியச் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழாதிருக்கத் தடுக்கும் வலுவான கட்டமைப்பு மதமாகும். சாதியும் சமயமும் இழுவைக் கம்பிகளாக இருந்து, தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதோடு, முன்னேறிச் செல்லத்துடிக்கும் நம் சமுதாயத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. மேற்கூறிய கருத்துகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான வே. இறையன்பு ஐ.ஏ.எஸ்.
“சாதியின் பெயராலும், சமயத்தின் குறியீடுகளாலும் மானுடம் சுருங்குகிறது; அதன் மகத்துவம் நொறுங்குகிறது” என்கிறார்.
சுருக்கமாக,
சாதியம் ஊடுருவாத இடமே இல்லை. ஒருவரின் பெயருக்குப் பின்னால், அவன் வசிக்கும் இடத்திற்கு, செல்லும் பள்ளிக்கு, சாமி கும்பிடும் புனிதத்தளத்திற்கு, திருமணத்திற்கு, இறுதியாக நீங்காத் துயில்கொள்ளும் கல்லறைகளிலும் சாதியம் புரையோடி உள்ளது. இருப்பினும், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் மற்றும் கல்வியறிவு பெற்ற மக்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம், காவலாண்டியூர் என்னும் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்கள் வழியாகச் சமத்துவமிக்கச் சமுதாயம் உருவாகி உள்ளதாகக் கிடைக்கும் செய்தி, நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் கொடுக்கும் நிகழ்வாக அமைகிறது. இதற்கு அப்பாற்பட்டு, சாதி அமைப்புகள் என்பது நமது சாபக்கேடு……
என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, விடுதலை பெறவேண்டும் என்றால், பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒரு நபர், நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்ற எண்ணத்துடன் செயல்படவேண்டும். மேல்சாதி என்று சொல்லிக்கொள்ளும் நபர், என்னுடன் வாழும் சகோதர-சகோதரியின் உடலில் உள்ள உயிரும் உணர்வும் எலும்பும் சதையும், அவரது ஆளுமையும் என்னைப் போன்றதே என்ற எண்ணத்துடன் வாழும்போது, இயல்பாக உண்மையான சமூக மாற்றம் ஏற்படும்.
பெண்ணடிமைத்தனம்
திருவிவிலியத்தின்
தொடக்கநூல் மானிட சமத்துவத்தைப் பற்றிக் கூறுகையில், “கடவுள் மானிடரைத் தம் உருவில் ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்”…
(தொநூ 2:27) என்கிறது. ஒரு பெண்ணைத் தாயாகக் கணித்து, அவரது அன்பு, தாய்மைப் பண்புகள், தியாகம், பொறுமை போன்றவைகளை வானளாவப் புகழ்ந்து, சிகரத்தின் உச்சிக்கே கொண்டு சென்று அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றுவது நமது சமுதாயம். ஆனால், அவரை நம் குடும்பங்களில், சமுதாயத்தில் நாம் சுயநலத்துடன் பயன்படுத்திக்கொள்ளவும், இரண்டாந்தரக் குடிமகளாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். இன்னும் சில இடங்களில் பெண் குழந்தைகள் வேண்டாத விருந்தாளிகளாக, பெண் கருக்கள் கருவறையிலேயே சிதைக்கப்படுகின்றன. பெண் சிசுக்கொலைக்கும் பஞ்சமில்லை.
பாரதிதாசன்
பார்வையில் “பெண்ணடிமை தீரும் வரை, மண்ணடிமை தீருமோ?” என்ற வைர வரிகளில், ஒரு நாட்டின் விடுதலை என்பது, ஒரு பெண்ணின் விடுதலையோடு நேரடித் தொடர்பு உண்டு என்கிறார். நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன்னையே தியாகம் செய்த நம் நாட்டுத் தந்தை, “என்று ஒரு பெண் தனியாக நள்ளிரவில் எவ்விதப் பயமும் இன்றி வீதியில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றே இந்த நாட்டில் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது”…என்றார்.
அரசியல்வாதிகளின்
அடிமைகளாக
நாம்
ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை அடைந்து 80-வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவதில் பெருமையும் பெருமிதமும் கொள்ளவேண்டிய நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. இந்த நன்னாளில் நமக்காகப் பல்லாண்டுகள் சிறையிலிருந்தும், பல்வேறு துன்பங்களையும் மனமார ஏற்றுக்கொண்ட தலைவர்களை நாம் இதயத்தில் வைத்து அவர்களுக்கு இன்று மரியாதை செய்து வருகிறோம். ஆனால், காலம் செல்லச் செல்ல குறிப்பாக, கடந்த 12 ஆண்டுகளாக மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மதச்சார்பின்மையைச் சிதைத்து, அறிவிக்கப்படாத அவசர நிலையைப்…பயன்படுத்தி இன்று ஒன்றிய அரசை நடத்தும் பா.ச.க.
அரசால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி’ என்ற முழக்கங்களுடன் சனநாயக நாட்டைச் சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பெரும்பான்மையினர் - சிறுபான்மையினர் என்று பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து மக்களிடம் பகையை உண்டாக்குகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிறித்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் மதக்கலவரங்கள் இதற்குச் சான்று. உலக நாடுகளெல்லாம் வலம்வரும் இந்நாட்டின் பிரதமருக்கோ அங்குச் செல்ல மனமில்லை; நேரமும் இல்லை!
ஒன்றிய
அரசால் கடந்த ஜூன் 23 அன்று நடைமுறைக்குக் கொண்டு வந்த திருத்தப்பட்ட FCRA மசோதா நிறுவனத் திரு அவைக்கு நேரடியான சவாலாகவும், அதிகமான எதிர்வினைகளையும் உண்டாக்கும் அடக்குமுறையாகவும் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டின் நிதியில் உருவாக்கிய பள்ளி, மருத்துவமனை, நிலம் போன்றவைகளை FCRA இரத்தானால் அரசு கையகப்படுத்தும். அவற்றை நிர்வகிக்க அரசே புதிய அரசு அதிகாரிகளை நியமிக்கும். இதனால் கிறித்தவர்கள் இலவசமாக நடத்தும் கருணை இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பெரிதும் பாதிக்கப்படும்.
சமூக ஊடக
அடிமைகளாக
இன்றைய
நவீனகாலக் கண்டுபிடிப்புகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. நமது சமுதாயத்தைக் குறிப்பாக, இளைய தலைமுறை இவைகளால் காந்தம்போல் ஈர்க்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகளான AI (செயற்கை
நுண்ணறிவு, Meta AI) போன்ற
உதவி உபகரணங்கள்,
சமூக ஊடக வர்த்தகங்கள் (Social Commerce), மேலும்
பல வளர்ச்சிப் பணிகளும் பயனுள்ளதாக இருப்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால், சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் மனச்சோர்வு, கவலை, தனிமை, விரக்தி, குடும்ப உறவு சிதைவு ஆகியவைகளுக்கு அடிமைகளாகின்றனர். இன்று குடும்ப உறவைத் துண்டித்துவிட்டு கைப்பேசியில் தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மனிதனுக்கு இன்பமளிப்பது மது, மாது போன்றவைகளுக்கு அடிமைகளாகி கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து, தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். இச்சூழ்நிலையில், பெற்றோரும், திரு அவைத் தலைவர்களும் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, சமூக ஊடகங்களின் பாதுகாவலராக…… புனித
கார்லோ அக்குத்திஸ் போன்ற இளந்தலைமுறையை உருவாக்க முன்னுரிமை அளிக்கவேண்டும்.
தன்நிலை அடிமைகளாக
ஒரு
மனிதனை அடிமையாக்கும் காரணிகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, புறவழி அடிமைத்தனம். இரண்டாவது, அகவழி அடிமைத்தனம். மேலே குறிப்பிட்ட எல்லா வகை புறவழி அடிமைத்தனங்களுக்கும் அப்பாற்பட்டு, நம்மை நாமே நமது உள்ளத்திலிருந்து உண்டாகும் தீய சிந்தனைகள், தீய செயல்கள்... சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், பாவ வாழ்க்கைக்குக் கட்டுண்டவர்களாக நமக்கு நாமே அடிமைகளாக வாழ்கிறோம்.
இந்தச்
சூழ்நிலையில், இன்று நாம் இயேசுவின் தாய் புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு விழாவைக் (முழுமையான விடுதலை) கொண்டாடுகிறோம். நமது கிறித்தவ நம்பிக்கையின்படி மரியா கடவுளின் சித்தத்திற்கு “இதோ, உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்”
(லூக் 1:38) என்று இறைவனின் திட்டத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அதன்பிறகு தன் வாழ்க்கை முழுவதும் இறைவனின் திருமகன் இயேசுவிற்காகவும், அவரது பிள்ளைகளாகிய நமது விடுதலைக்காகவும் அவர் முழுமையாகச் சுதந்திர வாழ்வு வாழ்ந்து விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
அன்னையின் விடுதலை
விழாவின்
ஒளியில்
நமது
அரசமைப்புப் பிரிவு 19 முதல் 32 வரை நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமை, மதச் சுதந்திரம் மற்றும் சமத்துவ உரிமை உள்ளதா? என்று எண்ணிப்பார்த்து நமது ஒட்டுமொத்த சுதந்திரத்திற்காக அறவழியில் போராடுவது காலத்தின் கட்டாயம். சில நாள்களுக்கு முன்பு, தன்னை எந்த எமனாலும் எப்போதும் அசைக்க முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த பிரதமர் மோடியை, கரப்பான் பூச்சி…… ஜனதா கட்சி இளைஞர்கள் ஆட்டம்காணச் செய்தனர் என்பது நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றது.
வங்கக்
கவிஞர் தாகூரின் கீதாஞ்சலி 35-இல் கூறுவதுபோல்....
“எங்கே மனம் அச்சமற்று உள்ளதோ
எங்கே
தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே
உண்மை உரைக்கப்படுகிறதோ
எங்கே
மனம் வழி நடத்தப்படுகிறதோ
எம்
தந்தையே, அந்தச் சொர்க்கத்திற்குள்
எம்
தாய்நாட்டை விழித்தெழச்செய்”…
என்ற
சிந்தனைகளை உள்ளத்தில் இருத்திச் செயல்படுவோம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி
நீந்தல் அரிது (குறள் 8)
குறள் விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், பிறர் யாரும் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சிந்தனை:
அறக்கடலாகிய இறைவனின் தாள் பணிந்தவர்கள் மட்டுமே இன்பமும் பொருளும் அடைய முடியும் என்கிறார் வள்ளுவர். துன்பம், கவலைகள் இடைமறித்தாலும், அதிலும் இறைத் துணையால் உறுதிபெற்று, அதிலிருந்து மீண்டு எழுந்து, இன்பமும் பொருளும் பெற்று நிறைவாக வாழ்வர்.
தாமஸ்
ஆல்வா எடிசன் ஆய்வகத்தில் தீ விபத்து ஒன்று
ஏற்பட்டது. விபத்து ஏற்பட வாய்ப்பில்லாத அளவுக்கு அவர் அந்த ஆய்வகத்தை அமைத்திருந்தார். அதை மிகவும் குறைவான தொகைக்குத்தான் காப்பீடு செய்திருந்தார். இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு அவருடைய சொத்துகளும், அவருடைய பல ஆய்வுக் குறிப்புகளும்,
பல்வேறு நிலையிலிருந்த ஆராய்ச்சிப் பொருள்களும் நெருப்புக்கு இரையாயின. ஆனால், எடிசன் மிகவும் அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருப்பதை அவருடைய மகன் சார்லஸ் பார்த்துக் கொண்டிருந்தான். “மகனே
சார்லஸ், உன் அம்மா எங்கே? அவளையும் அழைத்து வா. அவள் இதுபோன்ற ஒரு காட்சியை வாழ்நாளில் இன்னொரு முறை பார்க்க முடியாது”
என்றாராம்.
அடுத்த
நாள் அந்த அழிவுகளையெல்லாம் முழுமையாகப் பார்வையிட்ட எடிசன், “இந்த விபத்தினால் ஒரு பெரிய நன்மை உண்டு. நம்முடைய தவறுகளையும் அது அழித்துவிட்டது. நாம் புதிதாக மறுபடியும் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்” என்றார்.
இந்த விபத்து நடந்த மூன்றே வாரங்களில் அவர் ஃபோனோ கிராஃப்-ஐக் கண்டுபிடித்தார். ஆத்திகரான எடிசன் அழிவைப் பார்த்து சோர்ந்து போகவில்லை. இறைவனுக்கு அந்த நேரத்திலும் நன்றி கூறினார். இழப்புகள் நம் தவறுகளை அழித்துவிடுகின்றன. புதிய தொடக்கத்தை ஏறெடுக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன என்று நம்பினார். அதனால்தான் ஆய்வக விபத்து நடந்த மூன்றே வாரங்களில் அவரால் புதிய கண்டுபிடிப்பை உருவாக்க முடிந்தது.
“எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக் கொண்டேன்”
(திபா 119:71).
இறை
நம்பிக்கையாளர், சோதனைகள் கடவுளிடமிருந்து வருகிறது என்றே கருதுகிறார். அத்துன்பத்தை கடவுள் தனக்கு அனுமதித்ததற்கு ஒரு காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அதனைக் கடந்துவர உத்வேகமும் பெறுகிறார். அவரது முயற்சியில் இறைவனும் அவருக்கு முழுமையாகத் துணை நிற்கிறார்.
இறைவனின்
துணையோடு துன்பமாகிய பிறவிப் பெருங்கடலைக் கடந்தவர் எத்தகைய துன்பக் கடலையும் துணிவோடு எளிதில் கடப்பர். நிலையான இன்பம் பெற, இறைவன் தாள்பணிவோம்.