news
சிறப்புக்கட்டுரை
நற்செய்தியில் வேரூன்றி நம்பிக்கையில் வளர்ந்த MEP சபையினரின் புதுவை மறைப்பணியின் 250 ஆண்டுகள் (1776-2026)

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்(யோவா 12:24).

இறைவனின் அளவற்ற அருளையும் அன்பையும் நன்றியுணர்வுடன்  நினைவுகூர்ந்து, புதுவை மறைப்பணியின் 250-ஆம் ஆண்டு யூபிலியை நாம் கொண்டாடுகின்றோம். 1776-ஆம் ஆண்டு பாரிஸ் அயலக மறைபரப்புச் சபை (MEP) மறைப்பணியாளர்கள் புதுவை மண்ணில் நற்செய்தியின் விதையை விதைத்தனர். இரண்டரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்தச் சிறிய விதை இறைருளால் வேரூன்றி, கிளைபரப்பி, பல தலைமுறைகளின் நம்பிக்கை, தியாகம், உழைப்பு ஆகியவற்றால் பெரு மரமாக வளர்ந்திருப்பதை நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். இந்த யூபிலி வெறும் வரலாற்று நினைவுகூரல் அல்ல; இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் உன்னதமான தருணம். இம்மண்ணில் மறைப்பணி செய்த நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவுகூரும் புனிதமான நேரம். நிகழ் காலத்தில் நம் பொறுப்பை உணர்த்தும் ஆன்மிக விழிப்புணர்வுக்கான காலம். மேலும், இது எதிர்கால மறைப்பணிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் அழைப்பும் ஆகும்.

முதலில், நமது நன்றியை எல்லாம் வல்ல இறைவனுக்குச் செலுத்துவோம். வரலாற்றின் ஏற்றத் தாழ்வுகளிலும் சோதனைகளிலும் எதிர்ப்புகளிலும் புதுவை மறைப்பணியைத் தம் அருளால் வழிநடத்தியவர் இறைவனே. “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே வளரச் செய்தவர் (1கொரி 3:6) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் இம்மறைப்பணியின் 250 ஆண்டுகால வரலாற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

புதுவை மறைப்பணித்தளத்தில் 331 MEP மறைப்பணியாளர்களின் தியாகச்சுவடுகள்

கடந்த இரண்டரை நூற்றாண்டுகளில் ஆயர் பிரிகோ முதல் அருள்தந்தை ஒலிவியர் வரை பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையைச் சேர்ந்த 331 மிஷனரிகள் புதுவை மறைப்பணித்தளத்திற்கு வருகை தந்து, மறைப்பணிக்காகத் தங்களையே முழுமையாக அர்ப்பணித்துப் பணிசெய்துள்ளனர். அவர்கள் தங்கள் தாய்நாடு, குடும்பம், வசதிகள் ஆகியவற்றை விட்டுவிட்டு, அறியாத மொழியும் பண்பாடும் கொண்ட தொலைதூர நாட்டிற்குப் புறப்பட்டு வந்தனர். கடல்களைக் கடந்து, நீண்ட பயணங்களை மேற்கொண்டு, வசதிகளற்ற சூழல்களில் வாழ்ந்து, தொலைதூரக் கிராமங்களை அடைந்து, நோய், வறுமை, அரசியல் குழப்பம் மற்றும் சமூகச் சவால்களுக்கிடையே நற்செய்தியை அறிவித்தனர். ஆலயங்கள், பள்ளிகள், குருமடங்கள், மறைக்கல்வி நிலையங்கள், மருத்துவ மற்றும் சமூகநல நிறுவனங்கள் எனப் பல தளங்களில் அவர்கள் உழைத்தனர்; மொழிகளைக் கற்றனர்; நூல்களைப் படைத்தனர்; உள்ளூர் குருக்களை உருவாக்கினர்; ஏழைகள் மற்றும் நோயாளிகளின் துயரங்களில் பங்கெடுத்தனர்.

அவர்களின் வியர்வையும் கண்ணீரும் தியாகமும், சில நேரங்களில் இரத்தமும் இம்மண்ணோடு கலந்தன. அவர்களின் வாழ்க்கை, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும் (யோவா 12:24) என்ற இயேசு ஆண்டவரின் வார்த்தைக்கு உயிருள்ள சாட்சியாக அமைந்தது. அவர்களுடைய பயணம் எளிதானதல்ல; போர்கள், அரசியல் மாற்றங்கள், பஞ்சங்கள், தொற்றுநோய்கள், பயணச் சிரமங்கள், மொழித்தடைகள், பண்பாட்டு வேறுபாடுகள், மத மற்றும் சமூக எதிர்ப்புகள் ஆகியவற்றை அவர்கள் எதிர்கொண்டனர். வரலாற்றை நேர்மையுடன் அணுகும்போது, அவர்களும் வரலாற்றிற்குள் வாழ்ந்த மனிதர்கள் என்பதையும், அவர்களுடைய முயற்சிகளில் மனித வரம்புகளும் குறைபாடுகளும் இருந்திருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பின் வழியாக இறையருள் செயல்பட்டு, தென்னிந்தியத் திருச்சபையின் வளர்ச்சிக்கான வலிமையான அடித்தளத்தை அமைத்தது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்தியத் தலைமையின் கீழ் தொடர்ந்த மறைப்பணி

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையினரின் கரங்களிலிருந்து பெறப்பட்ட முத்தாய்ப்பான பணிகளை 1955-ஆம் ஆண்டு முதல் இந்தியப் பேராயர்கள் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். நான்கு இந்தியப் பேராயர்கள், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகி மற்றும் தற்போதைய பேராயர் ஆகியோரின் தலைமையில் முன்னோர் விதைத்த விதைகள் நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. மேய்ப்புப்பணி பரந்து விரிவடைந்துள்ளது. குருத்துவம் மற்றும் துறவற அழைத்தல்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. கல்வி, மருத்துவம், சமூகநீதி மற்றும் சமூகநலப் பணிகள் வலுப்பெற்றுள்ளன. காலம் மாறினாலும் நற்செய்தியை அறிவித்து, கிறிஸ்துவின் அன்பை வாழ்வில் வெளிப்படுத்தும் திரு அவையின் பணிகள் மாறவில்லை. இன்று MEP மறைப்பணியின் பாரம்பரியம் எதிர்காலச் சந்ததிக்கு மிகப்பெரிய பொறுப்பாக அமைந்துள்ளது.

250 ஆண்டுகள் - நினைவுகூர்வதற்காக மட்டுமல்ல; மாறாக, புதுப்பிப்பதற்காக!

250-ஆம் ஆண்டு யூபிலி என்பது கடந்த காலத்தைப் போற்றுவதற்கான விழா மட்டுமல்ல; எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இறையழைப்பு என்பதை நாம் நினைவுகூரவேண்டும். ஆனால், இந்த அழைப்பு நினைவுகளில் மட்டும் இருந்து விடக்கூடாது; மாறாக, நன்றியின் செயலாக மாற வேண்டும்; நம் முன்னோர்களைப் போற்ற வேண்டும்; அவர்கள் விட்டுச் சென்ற பணியை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செய்யவேண்டும்.

இன்றைய உலகம் புதிய சவால்களை முன்வைக்கிறது. சமயச்சார்பின்மை, நுகர்வு கலாச்சாரம், வறுமை, இடப்பெயர்வு, குடும்பச் சிக்கல்கள், சமூகப் பாகுபாடுகள், இளைஞர்களின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள், சுற்றுச்சூழல் நெருக்கடி, தொழில்நுட்ப மாற்றம் மற்றும் ஆன்மிக வெறுமைநிலை ஆகியவை நமது முன்னால் நிற்கின்றன.

இந்தச் சூழலில் நமது MEP முன்னோரிடம் இருந்த துணிவு, தியாகம், படைப்பாற்றல், இறைநம்பிக்கை மற்றும் மறைப்பணி ஆர்வத்தை நாம் புதுப்பித்துக்கொள்ளவேண்டும். எனவே, இந்த யூபிலியின் புனித தருணத்தில் நமது குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள், இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் அனைத்துப் பொதுநிலை நம்பிக்கையாளர்களும் தங்கள் அழைத்தலுக்கேற்ற பணியின் அர்ப்பணிப்பைப் புதுப்பித்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.

நமது பங்குகள் நற்செய்தியின் உயிர்த்துடிப்பான மையங்களாக மாறட்டும்.

நமது குடும்பங்கள் உண்மையான இல்லத் திரு அவைகளாக விளங்கட்டும்.

நமது கல்வி நிறுவனங்கள் அறிவோடு மனித மாண்பையும் விளைவிக்கட்டும்.

நமது இளைஞர்கள் நம்பிக்கையின் தூதுவர்களாக எழுச்சி பெறட்டும்.

நமது துறவியர் இரக்கத்தின் முகங்களாகத் திகழட்டும்.

நமது குருக்கள் கிறிஸ்துவின் மேய்ப்புப் பணியைத் தங்கள் வாழ்வால் வெளிப்படுத்தட்டும்.

ஒவ்வொரு திருமுழுக்குப் பெற்றவரும் தாம் ஒரு திருப்பணியாளர் என்ற உணர்வுடன் தமது நம்பிக்கையை வாழ்ந்து காட்டட்டும்.

ஒரு பாரம்பரியம் - ஒரு பொறுப்பு - ஒரு புதிய பயணம்

331 MEP மறைப்பணியாளர்களின் தியாகப் பணிகளுக்கு நாம் மிகுந்த நன்றியுடன் தலை வணங்குகிறோம்.

அவர்கள் நமக்கு ஆலயங்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை; நம்பிக்கையை விட்டுச் சென்றனர்.

பள்ளிகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை; அறிவின் ஒளியை விட்டுச் சென்றுள்ளனர்.

சொத்துகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை; வருங்காலத் திரு அவைக்கான அடித்தளத்தை விட்டுச் சென்றனர்.

நூல்களை மட்டும் எழுதவில்லை; நற்செய்தியை மக்களின் மொழியில் பேசக்  கற்றுக்கொடுத்தனர்.

குருக்களை மட்டும் உருவாக்கவில்லை; மாறாக, உள்ளூர் திரு அவையின் எதிர்காலத்தை உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் நமக்கு ஒரு வரலாற்றை மட்டும் அளிக்கவில்லை; ஒரு புனிதப் பொறுப்பையும் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.

எனவே, அவர்களின் புனித மரபு கடந்த காலத்தின் நினைவுச் சின்னமாக மட்டும் இருக்கக் கூடாது; அது நமது வாழ்வில் தொடரவேண்டிய உயிருள்ள மறைப்பணி அழைப்பாக மாறவேண்டும். இந்த 250-ஆம் ஆண்டு யூபிலியில் நாம் அனைவரும் ஒரு புதிய உறுதிமொழி எடுப்போம்:

நம்பிக்கையில் வேரூன்றி, நம்பிக்கையில் உறுதியாக நின்று, அன்பில் ஒன்றுபட்டு, நீதிக்காகக் குரல் கொடுத்து, ஏழைகளுடன் பயணித்து, இளைஞர்களை வழிநடத்தி, நற்செய்தியைத் துணிவுடன் அறிவித்து, அடுத்த தலைமுறைக்கான திரு அவையை உருவாக்குவோம்.

புதுவையின் மறைப்பணியின் முதல் 250 ஆண்டுகள் நமக்கு ஒரு மகத்தான கடந்தகாலத்தை அளித்துள்ளன. அடுத்த 250 ஆண்டுகளுக்கான நற்செய்தியின் விதைகளை விதைக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறையின் கரங்களில் உள்ளது என்பதை ஆழமாக உணர்வோம்.

அன்னை மரியா, திரு அவையின் தாய், நமது MEP முன்னோருடன் இப்புதுவை மறைப்பணியின் பாதைகளில் பயணித்தவர், நம்மையும் வழிநடத்துவாராக. இம்மண்ணில் நம்பிக்கையின் விதைகளைத் தங்கள் வாழ்வால் விதைத்த புனிதர்களும் மறைச்சாட்சிகளும் நமக்கு முன்மாதிரிகளாக இருப்பார்களாக. 250 ஆண்டுகளுக்கு முன்பு நற்செய்தியின் விதையை இம்மண்ணில் விதைத்த இறைவன், இன்று நமது கரங்களின் வழியாக புதிய விதைகளை விதைக்க அருள்புரிவாராக.

MEP மறைப்பணியாளர்களின் வியர்வையால் ஈரமான இந்த மண்ணில், நமது அர்ப்பணிப்பால் புதிய நம்பிக்கையின் மலர்கள் மலரட்டும். அவர்களின் நம்பிக்கையால் கட்டப்பட்ட திரு அவை, நமது ஒன்றிப்பால் மேலும் வலுப்பெறட்டும். அவர்களின் தியாகத்தால் தொடங்கிய மறைப்பணி, நமது புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பால் புதிய தலைமுறைகளை கிறிஸ்துவிடம் வழிநடத்தட்டும்.

ஆண்டவரே, நீர் தொடங்கிய நற்செயலை நிறைவுறச் செய்யும்வரை எங்களைப் பயன்படுத்தும்.

Ad Majorem Dei Gloriam - அனைத்தும் இறைவனின் மாபெரும் மகிமைக்காக!

news
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 09

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை (குறள் 9)

குறள் விளக்கம்: கேட்காத செவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள் பயனற்றவைகளாம்.

சிந்தனை:கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பது கடினமா? மனிதர்களுக்கு மருத்துவம் பார்ப்பது கடினமா?’ என்று ஒரு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

மனிதர்களுக்குத்தான் கடினம்என்ற அணியில் பேசியவர் கூறினார்: “இப்பொழுது மனிதர்களுக்குத்தான் புதிய புதிய நோய்கள் வருகின்றன. பல நோய்களுக்கு இன்னும் மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதுதான் கடினம்என்றார்.

கால்நடை அணியைச் சார்ந்தவர் கூறினார்: “மனிதர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்று வாய் திறந்து கூறிவிடுவார்கள். எனவே, கால்நடைகளுக்குத்தான் கடினம்என்றார்.

நடுவர் தீர்ப்பு கூறும்போது கூறினார்: “மனிதர்களுக்குச் சர்க்கரை நோய் வந்தால் நைசாக நழுவி ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் போல, மாடுகள் செய்வதில்லை. கண் வலி வந்தாலும் கட்டாயம் தொலைக்காட்சி பார்ப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை. விலங்குகளில் கற்பழிப்பு இல்லை; கருக்கலைப்பு இல்லை; பெண் சிசுக்கொலை இல்லை; ஆடு மாடுகள் புகை பிடிப்பதில்லை; மது குடிப்பதில்லை; தகாத உறவு அவைகளிடம் இல்லை; பேச முடியாததால் மன அழுத்தமும் அவற்றிற்கு இல்லை. எனவே, கால்நடை வைத்தியம் கடினமே இல்லைஎன்றார்.

எண்ணற்ற நற்குணங்களின் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகளைப்போல, இருந்தும் பயனில்லாதவையே என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

வேறு ஒரு குறளில், ‘இறைவன் பாதம் பணியாத ஒருவன் கற்றதனால் என்ன பயன்?’ என்று கூறிய வள்ளுவர், இந்தக் குறளில் இறைவனின் பாதத்தை வணங்காத மனிதனின் புலன்கள் அவனுக்கு இருந்தும் பயனில்லை என்று கூறுகின்றார்.

எனவே, இறைவனை ஒருவன் வணங்கினால்தான் அவன் ஒரு நல்ல மனிதனுக்குரிய அனைத்து இயல்புகளையும் கொண்டிருக்கிறான் அல்லது அவன் மனிதன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். ஏனென்றால், மனிதன் மட்டும்தான் இறைவனைத் தொழக்கூடியவன். அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை என்றாலும், மனிதனைத் தவிர எந்த உயிரினமும் அறிவுப்பூர்வமாக ஆராதித்து, அன்பு செய்ய முடியாதவை. எனவே, மனிதனுடைய புலன்களும், மனிதனுடைய கல்வியின் பயனும் இறைவனை வணங்காமல் இருக்குமேயென்றால், அதனால் எந்தவொரு பலனும் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.

நம் ஆண்டவர், “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன் உங்களுக்கு நினைவில்லையா?” என்று மாற்கு 8:18-இல் அருமையாகக் கூறியுள்ளார்.

அவர்களுக்குக் கண்கள் இருந்தன; அவர்கள் பார்க்கத்தான் செய்தார்கள். அவர்களுக்குக் காதுகள் இருந்தன; அவர்கள் கேட்கத்தான் செய்தார்கள். ஆனால், ஆண்டவர்அவர்கள் பார்க்கவில்லை, கேட்கவில்லை, அவர்கள் புலன்கள் வேலை செய்வதில்லைஎன்கிறார். அப்படியென்றால், உண்மை இறைவனை அறிந்து, அன்பு செய்யாமல் இருப்போமேயென்றால், நம்முடைய புலன்கள் அனைத்தும் செயல்படாதவை என்கிறார். எனவே, இறைவனை அன்பு செய்வோம்; முழு மனிதனாக வாழ்வோம்.

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
ஊடகம் ஏந்தும் சுடர் ஓர் அணையா விளக்கு!

(சென்ற இதழ் தொடர்ச்சி)

மனிதநேயமும் மானுட மாண்பும்

எந்தவிதமான சமரசத்திற்கும் உட்படாத ஊடகவியலை உருவாக்க, மனிதநேயத்திற்கும் மானுட மாண்பிற்கும் இடையே உள்ள தத்துவார்த்தத் தொடர்புகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘மனிதநேயம்என்பது நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் மனித இயல்பை விவரிக்கிறது. அதேவேளையில், ‘மாண்புஎன்பது ஒவ்வொரு தனிமனிதனும் மதிக்கப்படவேண்டும் மற்றும் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதற்கான அடிப்படை உரிமையாகும். இந்த உள்ளார்ந்த மதிப்பு, ஒவ்வொருவரும் தீவிர வறுமை அல்லது பாகுபாடற்ற, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழத் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

புகழ்பெற்ற தத்துவஞானி இம்மானுவேல் காண்ட் கூறுவதுபோல, “மனிதநேயம் என்பது தன்னிலே ஒரு மாண்பு கொண்டதாகும்.” ஒரு நபர் அரசியல் மோதல்களையோ, கடுமையான வறுமையையோ அல்லது அறிவாற்றல் குறைபாட்டையோ (Cognitive decline) எதிர்கொண்ட போதிலும், அவர்களின் அடிப்படை மனித மதிப்பு முற்றிலும் சிதையாமல் அப்படியே இருக்கிறது.

 செய்தியாளர்களுக்கு இந்த வேறுபாடுதான் மிக முக்கியமானது. சமரசம் செய்துகொண்ட ஓர் ஊடகத்துறை, மனிதர்களை வெறும் தகுதி அல்லது பயன்பாட்டின் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. தனிநபர்களைத் தரவுப் புள்ளிகளாகவோ, நுகர்வோராகவோ அல்லது இணையதளத்தின் குறியீடுகளாகவோ மட்டுமே நடத்துகிறது. ஆனால், சமரசம் செய்யாத ஓர் ஊடகத்துறை உள்ளார்ந்த மனித மாண்பை அங்கீகரிக்கிறது. அது மனிதர்களை அளப்பரிய, மதிப்புமிக்க ஆளுமைகளாக நடத்துகிறது; எவரையும் ஒரு பொருளாகக் கருதுவதில்லை.

உண்மையும் பொதுநலமும்: செயற்கை உள்ளடக்கங்கள், தானியங்கி உரை உருவாக்கிகள் மற்றும் போலியான காணொளிகள் நிறைந்த இன்றைய ஊடகச் சூழலில், ‘உண்மைஎன்பது அழியும் நிலையிலுள்ள ஒரு பொது வளமும் சமுதாயத்தின் பொதுநலமுமாகும். சமரசம் செய்யாத ஊடகவியல் உண்மையின் இரண்டு அடிப்படைத் தூண்களைப் பாதுகாக்கிறது. அதாவது, அறியும் உரிமை மற்றும் மதிப்பை மீட்டெடுத்தல்.

அறியும் உரிமை: அரசியல் முடிவுகள், சமூகப் பொருளாதார ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பின்னால் உள்ள புறநிலை எதார்த்தத்தைக் கண்டறிய ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமை உண்டு. இந்த உரிமைதான், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்பதைப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கண்டறிவதை உறுதி செய்கிறது.

மதிப்பை மீட்டெடுத்தல்: மறைக்கப்படாத உண்மையை அறிந்து, அதனை வெளியிடுவது, அதிகாரத்தில் உள்ளவர்களால் இதுவரை மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட துயரங்களைச் சந்தித்தவர்களின் வாழ்விற்கு ஆழமான அர்த்தத்தை மீட்டளிக்கிறது. பொது விசாரணைகளும் புலனாய்வு ஊடகவியலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு பாதுகாப்பான, அங்கீகரிக்கப்பட்ட இடத்தை வழங்குகின்றன.

ஓர் ஊடக நிறுவனம் அரசியல் சார்புக்காகவோ, பெரும் வணிக நிறுவனங்களின் ஆதாயத்திற்காகவோ அல்லது நிர்ணய கணக்கீடுகளின் வேகத்திற்காகவோ உண்மையைச் சமரசம் செய்யும்போது, அது மனித மாண்பிற்கு எதிராகச் செய்யும் ஒரு வன்முறையாகும். வசதியான பொய்களை அச்சிடத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ அல்லது உண்மைகளைக் கற்பனையாகக் கட்டவிழ்த்துவிடும் சரிபார்க்கப்படாத செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமோ, ஊடகவியல் தன் வாசகர்களை அவமதிக்கிறது. அவர்களைச் சுயேச்சையாக முடிவெடுக்கத் தகுதியுள்ள சுதந்திரமான மனிதர்களாக நடத்தாமல், ஏமாற்றி வழிநடத்தக்கூடிய எளிய இலக்குகளாகவே அது கருதுகிறது.

சமரசம் செய்யாத ஊடகத் துறைக்கான வழிகாட்டி: இந்த நிர்ணயக் கணக்கீடுகளின் அலைக்கு எதிராக நாம் எவ்வாறு போராடுவது? ஊடகத்துறை என்றும் நேர்மையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை நாம் எவ்வாறு உறுதிசெய்வது? என்ற கேள்வி இப்போது நம் கண்முன் எழுகிறது. சமூகப் பொறுப்பு மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட விழுமியங்களின் அடிப்படையில் ஒரு நடைமுறைச் சட்டகத்தை நாம் செயல்படுத்தவேண்டும் என்பதே இப்போது நம்முள் இருக்கும் எதிர்நோக்கு.

1. மனிதக் கட்டுப்பாட்டின் விதியை நடை முறைப்படுத்துதல்: துணைநிலைத்தன்மை(Subsidiarity) என்ற கோட்பாடு, உயர்மட்ட அமைப்புகளோ அல்லது மத்திய அதிகாரங்களோ உள்ளூர் மற்றும் அடிமட்டக் குழுக்களின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடாது என்று கற்பிக்கிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில், பெருநிறுவனங்களின் வழிமுறைச் சூத்திரங்கள் செய்திகளின் மீதான இறுதி முடிவை ஒருபோதும் எடுக்கக்கூடாது என்பதே இதன் பொருள். அதாவது, உள்ளூர் செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தங்களின் படைப்பு மற்றும் செய்திக் கட்டுப்பாட்டை முழுமையாகத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். பெரிய தரவுத் தொகுப்புகளை வரிசைப்படுத்த செயற்கை நுண்ணறிவை ஒரு பயனுள்ள ஆராய்ச்சி உதவியாளராகப் பயன்படுத்தலாம். ஆனால், இறுதித் தீர்ப்பும், தார்மீகச் சூழலும், செய்தி வெளியீட்டு முடிவும் எப்போதும் ஒரு மனிதனுக்கே உரியதாக இருக்கவேண்டும்.

2. படைப்பாற்றலும் மனித உழைப்பும்: எண்மத் தொழில்நுட்ப யுகத்தின் முக்கியக் கவலை என்னவென்றால், ஊடக நிறுவனங்கள் தங்கள் இலாப வரம்புகளை உயர்த்துவதற்காக எழுத்தாளர்களுக்குப் பதிலாக மலிவான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கட்டமைப்பு ரீதியான வேலையின்மை அச்சுறுத்தலாகும். சமரசம் செய்யாத ஊடகவியல் மனித உழைப்பை மதிக்கிறது. உண்மையான சமூக முன்னேற்றத்தை வெறும் பெருநிறுவனங்களின் செலவுக் குறைப்பைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவுசார், ஆன்மிக மற்றும் பொருளாதார நலனை நாம் எவ்வளவு சிறப்பாக ஆதரிக்கிறோம் என்பதைக் கொண்டே அளவிடப்படவேண்டும்.

3. துருவமுனைப்பும் மொழியழிப்பும்: ஊடகத் தளங்கள் பெரும்பாலும் மோதல்களை இயல்பானதாக்கி, அரசியல் பிரிவினைகளைத் தூண்டி, அதன் மூலம் மக்களின் ஆத்திரத்தையும் கவனத்தையும் பெற்று இலாபம் ஈட்டும் உலகில் நாம் வாழ்கிறோம். சமரசம் செய்யாத செய்தியாளர்கள் வெறுப்பைத் தூண்டும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட தலைப்புகளைப் பயன்படுத்த மறுக்கிறார்கள்.

திருத்தந்தை லியோ தனதுமகத்தான மானுடம்(Magnifica Humanitas என்ற திருத்தூது ஊக்கவுரையில், “உலக மக்கள் யாவரும் தங்களின் வார்த்தைகளை ஆயுதமற்றதாக்க வேண்டும்என்றும், “அதிகாரக் கலாச்சாரத்தை நிராகரிக்கவேண்டும்என்றும் அழைப்பு விடுக்கிறார். மேலும், “மோதல் கலாச்சாரத்திற்குத் தீனி போடுவதற்குப் பதிலாக, ஊடகத்துறை ஓர் அன்பின் நாகரிகத்தை (Civilaization of Love) கட்டியெழுப்ப வேண்டும்; அதாவது, புறநிலை உண்மைகளை முன்னிறுத்துதல், மரியாதைக்குரிய பொது உரையாடல்களை வளர்த்தல், மற்றும் ஏழைகள், விளிம்புநிலை மக்கள், மற்றும் மறக்கப்பட்டவர்களின் குரலாகத் திகழ்தல் வேண்டும்என்று வலியுறுத்துகிறார்.

நம்பிக்கையின் தூதுவர்கள்: ஊடகவியல் என்பது ஒரு சவாலான, சோர்வூட்டும், அதேவேளையில் அழகிய, உன்னதமானதோர் அழைப்பாகும். சட்டங்களை மாற்றியமைக்கவும், கொடுங்கோலர்களை வீழ்த்தவும், சமூகங்களைக் குணப்படுத்தவும், மனித துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிகளின் பகிரப்பட்ட புரிதலின் மூலம் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள முற்றிலும் அறியாத மனிதர்களை இணைக்கவும் இதற்கு ஆற்றல் உண்டு.

பேரளவு சமூக மற்றும் தொழில்நுட்பக் குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தில், நாம்நம்பிக்கையின் தூதுவர்களாகமாறவேண்டும். பேனாவை ஏந்தும் எழுத்தாளர்களுக்கும், உண்மைகளைத் தேடும் வாசகர்களுக்கும், எதிர்காலப்பாதை என்பது எவ்விதச் சமரசமும் இல்லாத ஓர் எல்லையை வகுப்பதைக் கோருகிறது. ஒரு மனிதன் ஒருபோதும் வெறும் இயந்திரம் அல்ல என்றும், உண்மை என்பது ஒருபோதும் விற்கும் வணிகப் பண்டம் அல்ல என்றும் நாம் துணிச்சலுடன் முழங்க வேண்டும்.

மனிதநேயம், மாண்பு மற்றும் உண்மை ஆகியவற்றில் சமரசம் செய்ய மறுப்பதன் மூலம், ஊடகவியல் எந்தவொரு நிர்ணயக் கணக்கீடுகளையும் கடந்து நிலைத்து நிற்கும். அது எப்போதும் எதற்காக இருக்கவேண்டும் என்று கருதப்பட்டதோ, அதைப் போலவே மனித ஆன்மாவின் பெருமிதம் மிக்க, உடைக்க முடியாத ஒரு கண்ணாடியாக என்றும் திகழும். கடினமான கேள்விகளைக் கேட்கவும், உண்மைகளை எழுதவும், எவ்விதச் சமரசமுமின்றி உண்மைக்காகக் குரல் கொடுக்கவும் மனிதர்கள் இருக்கும்வரை, ஊடகவியலின் குறிப்பாக, இதழியலின் சுடர் ஒருபோதும் அணையாது. நமக்குத் தகவல்களை வழங்கவும், நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நம்மைச் சுதந்திரமாக வழிநடத்தவும் இரவு-பகலாக உழைக்கும் ஊடக நிருபர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் உண்மைத் தேடலர்களை நாம் போற்றுவோம். அவர்களின் தியாகமே நமது கூட்டு வலிமையாகும்.

news
சிறப்புக்கட்டுரை
சிரிக்க மறந்த மனிதர்கள்

உங்கள் இதயம் மகிழ்ச்சியடையும்; அந்த மகிழ்ச்சியை உங்களிடமிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்கள்  (யோவா 16:22).

பேருந்து நிறுத்தத்தில் ஒரு சாதாரண காலைப் பொழுது. வெயில் இன்னும் முழுமையாக எழவில்லை; காற்றில் இரவின் குளிர்ச்சி இன்னும் மிச்சமிருக்கிறது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பத்துப் பேர். ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு கைப்பேசி. ஒவ்வொரு முகத்திலும் ஒரு திரையின் நீல ஒளி. யாரும் யாரையும் பார்க்கவில்லை, யாரும் பேசவில்லை.

அந்த மௌனத்தில் ஒரு வினோதமான தனிமை நிழலாடியது. பத்துப் பேர் அருகருகே நின்றும், பத்துத் தீவுகளாய்ப் பிரிந்து நின்ற தனிமை. அந்த நேரத்தில் ஓரமாய் நின்றிருந்த ஒரு தெரு நாயுடன் சிறு குழந்தை ஒன்று மட்டும் விளையாடிக் கொண்டிருந்தது. அதன் கலகலப்பான சிரிப்பு மட்டும் அந்த மௌனமான இடத்தை ஒரு நொடி உயிர்ப்பித்தது. அந்தக் காட்சி மனத்தில் ஒரு கேள்வியை விதைத்தது: ‘நாம் எப்போது சிரிக்க மறந்தோம்?’

இழந்துபோன மாலை நேரங்கள்

ஒரு காலத்தில் வீடுகளின் வாசற்படியில் மாலை நேரங்கள் கழிந்தன. அண்டை வீட்டார் வந்தால் ஒரு தேநீர், இரண்டு சிரிப்புகள், சில நிமிட உரையாடல்... அவ்வளவுதான், வாழ்க்கையை இலகுவாக்கியது. இன்று வீடுகள் பெரிதாகிவிட்டன. அறைகள் அதிகமாகிவிட்டன. ஆனால், அந்த அறைகளுக்குள் ஒலிக்கும் உரையாடல்கள் மட்டும் குறைந்துவிட்டன.

நண்பர்கள் பட்டியலில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்; ஆனால், மனம் திறந்து பேச ஒருவரைத் தேடி நாம் இன்னும் அலைகிறோம். சமூக வலைத்தளங்களில் சிரிக்கும் புகைப்படங்கள் நிறையவே உள்ளன. ஆனால், உண்மையிலேயே இதயத்திலிருந்து பிறந்த சிரிப்புகள் எத்தனை? திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு (குறள் 786)

முகம் மட்டும் சிரிப்பது நட்பு அல்ல; நெஞ்சம் சிரிக்கும்போதுதான் அது உண்மையான நட்பு. சிரிப்புக்கும் இதே நியதி பொருந்தும். உதடு மட்டும் வளையும் சிரிப்பு அல்ல; உள்ளம் நிறையும் சிரிப்புதான் உண்மையானது.

சிரிப்பு என்பது உதட்டின் அசைவு மட்டுமல்ல; அது உள்ளத்தின் அமைதியின் வெளிப்பாடு. மனத்தில் சுமைகள் அதிகரிக்கும்போது, சிரிப்பு மெதுவாக நம்மை விட்டு விலகுகிறது, காற்றில் மெல்ல அணையும் ஒரு விளக்கைப் போல.

வேலைப்பளு, பொருளாதாரப் போராட் டம், குடும்பப் பொறுப்புகள், எதிர்கால அச்சம் இவை எல்லாம் நம் முகத்தில் காணாத சுருக்கங்களை உருவாக்குகின்றன. சில நேரங்களில் நாம் வாழ்வதைவிட, வாழ்க்கையைச் சமாளிப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்.

இயேசு காட்டிய மகிழ்ச்சி

இயேசுவின் வாழ்வைத் திரும்பிப் பாருங்கள்... அவர் துன்பங்களை மறுக்கவில்லை. கண்ணீர் சிந்தினார் (யோவா 11:35). சிலுவையையும் சுமந்தார்; ஆனாலும், அவர் சந்தித்த ஒவ்வொருவரிடமும் நம்பிக்கையை விதைத்தார்; கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோன நேரத்திலும், அவர் அந்த விருந்தின் மகிழ்ச்சியைக் காப்பாற்றினார் (யோவா 2:1-11). சிறு பிள்ளைகள் தம்மை நெருங்குவதைத் தடுத்த சீடர்களைத் திருத்தி, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்என்று அன்புடன் அழைத்தார். சோர்ந்து, சுமை தாங்காதவர்களிடம், “சுமை சுமப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்என்று அழைத்தார் (மத் 11:28). இயேசுவின் அருகில் இருந்தவர்கள் பயத்துடன் அல்ல; நம்பிக்கையுடன் திரும்பிச் சென்றார்கள். அவருடைய இருப்பே ஒரு மகிழ்ச்சியைப் பரப்பியது - வார்த்தைகளால் அல்ல, இருப்பால்!

தாத்தாவின் புன்னகை

சில வருடங்களுக்கு முன்பு ஒரு முதியவரைச் சந்தித்தேன். வயது எண்பதைக் கடந்திருந்தது. கைகள் நடுங்கின, கண்கள் மங்கின. உடல்நலம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனாலும், அவர் முகத்தில் எப்போதும் ஒரு மென்மையான புன்னகை தவழ்ந்தது. பொய்யில்லாத, பலவீனமில்லாத, அமைதியான ஒரு சிரிப்பு.

ஆவலுடன் கேட்டேன்: “தாத்தா, இவ்வளவு வயதிலும் இப்படிச் சிரிப்பதற்குக் காரணம் என்ன?”

அவர் கண்களை மூடி அமைதியாகச் சொன்னார்: “பிரச்சினைகள் இல்லாததால் அல்ல;… ஒவ்வொரு நாளும் கடவுள் என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதால்தான்.”

இந்த ஒரு வரி பல புத்தகங்களும் சொல்லாத ஓர் உண்மையை என் முன் திறந்து வைத்தது.

தவறான இடங்களில் தேடும் மகிழ்ச்சி

இன்று நாம் மகிழ்ச்சியைத் தேடுவது தவறான இடங்களில். புதிய கைப்பேசி வந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைக்கிறோம். சம்பளம் உயர்ந்தால் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புகிறோம். அனைவரும் நம்மைப் பாராட்டினால் மட்டுமே நிறைவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இவை அனைத்தும் சில நாள்கள் மட்டுமே நீடிக்கும். நிலையான மகிழ்ச்சி பொருள்களில் இல்லை; அது உறவுகளில் உள்ளது. இறைவனோடு இருக்கும் உறவு, குடும்பத்தோடு பகிரும் அன்பு, நண்பர்களோடு பகிரும் நேரம்... இவைதான் மனத்தை உண்மையில் சிரிக்க வைக்கின்றன.

மீண்டும் சிரிக்க மூன்று சிறிய முயற்சிகள்

தினமும் ஒருவரையாவது புன்னகையுடன் வாழ்த்துங்கள்.

ஒரு புன்னகை பல நேரங்களில் ஒரு செபத்தை விட அதிக ஆறுதலை அளிக்கலாம்.

குடும்பத்துடன் கைப்பேசி இல்லாத சில நிமிடங்களை உருவாக்குங்கள்.

இந்தச் சிறு உரையாடல்கள் நாளடைவில் விலைமதிப்பற்ற நினைவுகளாக மாறும். நன்றியுடன் நாளை முடியுங்கள். இன்று நடந்த ஒரு நல்ல விசயத்தை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறுங்கள். நன்றியுணர்வு உள்ளத்தில் மகிழ்ச்சியை மீண்டும் மலரச் செய்கிறது.

உலகம் இன்று வேகமாக ஓடுகிறது. ஆனால், அந்த வேகத்தில் நம் சிரிப்பை இழந்துவிடக் கூடாது. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது. ஆனால், பிரச்சினைகளுக்கிடையிலும் புன்னகைக்கக் கற்றுக்கொள்ளும் மனம் கிடைக்கலாம். அது பணத்தால் வாங்க முடியாத பரிசு! அது இறைவன் தரும் அருள்! முகத்தில் தெரியும் புன்னகை சில நொடிகள் மட்டுமே வாழலாம்; ஆனால், இறைவனை நம்பும் இதயத்தில் பிறக்கும் மகிழ்ச்சி, வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.

இறைவா, எங்கள் முகங்களில்

மீண்டும் புன்னகையை

மலரச் செய்யும்.

எங்கள் இதயங்களில்

நிலைத்த மகிழ்ச்சியை நிரப்பும்!

news
சிறப்புக்கட்டுரை
அம்பெனத் துளைக்கும் அன்பு - (ஏற்றம் தரும் எண்ணங்கள் - 09)

மனித வாழ்வில் எல்லாரையும் வெல்லும் ஆற்றல் அன்பிற்கு மட்டுமே உண்டு. அம்பு துளைக்கும் காயமும், வாள் வெட்டும் காயமும் காலப்போக்கில் ஆறி விடும்; ஆனால், அன்பின் வார்த்தைகள் மனத்தில் என்றும் நிலைத்திருக்கும். அதனால்தான், ‘அம்பெனத் துளைக்கும் அன்பு எண்ணங்கள்என்று கூறப்படுகிறது.

அம்பு உடலைத் துளைக்கும்; அன்பு இதயத்தைத் துளைத்து மனிதனை மாற்றும். அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.

ஒருவரிடம் அன்போடு பேசப்படும் ஒரு சிறிய வார்த்தை கூட, அவருடைய மனத்தில் நம்பிக்கை எண்ணங்களை விதைக்கிறது. அன்பு நிறைந்த எண்ணங்கள் மனித உறவுகளை வலுப்படுத்துகின்றன.

அன்பு என்பது எதிர்பார்ப்பில்லாத கொடையாகும். நாம் காட்டும் உண்மையான அன்பு பல மடங்கு திரும்பிவரும். பெரு உயரம் கண்ட மனிதர்கள் எல்லாம் அன்பையே தங்களின் மிகப் பெரிய ஆயுதமாகக் கொண்டு உலக மக்களின் இதயங்களை வென்றனர்.

ஒரு புன்னகை, ஓர் ஆறுதல் வார்த்தை, ஒரு நன்றி, ஒரு மன்னிப்பு... இவை அனைத்தும் அன்பின் அழகிய வடிவங்கள். இத்தகைய சிறிய செயல்களே பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மனித வாழ்வின் உயர்ந்த மொழி அன்புதான்; உலகை ஒன்றிணைக்கும் அழியா வழியும் அதுதான்.

எண்ணங்களே மனிதனின் வாழ்க்கையை வழிநடத்தி வடிவமைக்கிறது. மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால், அவை நல்ல சொற்களாகவும், நல்ல செயல்களாகவும் வெளிப்படும்.

அன்பு மனத்தில் ஒரு சிறிய எண்ணமாகப் பிறக்கிறது; அந்த எண்ணம் கருணையாக வளர்கிறது; கருணை உதவியாக மலர்கிறது; உதவி மனிதநேயமாக மாறுகிறது. எனவே, அன்பு என்பது ஓர் உணர்வு மட்டுமல்ல; அது உயர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடாகும்.

அன்பு எண்ணங்கள் பிறர் மனத்தை அம்பெனத் துளைக்கின்றன என்றால், அவை அவர்களின் இதயத்தைத் தொட்டு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதே பொருள். அன்போடு நினைப்பதும், அன்போடு பேசுவதும், அன்போடு செயல்படுவதும் மனித உறவுகளை வலுப்படுத்தி, சமுதாயத்தில் அமைதியையும் மனிதநேயத்தையும் வளர்க்கின்றன.

அம்புஎன்றால் நம் நினைவிற்கு வருவது வீரமும் போர்க்களமும் வெற்றியும் ஆகும். அம்பு எய்யப்பட்டவுடன் இலக்கைத் துளைக்கிறது. ஆனால், மனித வாழ்வில் மற்றோர் அம்பு உள்ளது. அது இரும்பால் செய்யப்பட்ட அம்பு அல்ல; அன்பு நிறைந்த எண்ணங்களால் உருவாகும் அம்பு. அந்த அம்பு உடலை அல்ல; இதயத்தைத் துளைக்கிறது. அதனால்தான்அம்பெனத் துளைக் கும் அன்பு (எண்ணங்கள்) என்ற இத் தலைப்பு ஆழமான பொருளைக் கொண்டதாகும். அம்பு ஒருமுறை பாய்ந்தால் மீண்டும் திரும்பி வராது. அதுபோல நாம் வெளிப்படுத்தும் எண்ணங்களும் வார்த்தைகளும் பிறர் மனத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் விஷ அம்புகளைப் போன்றவை; அவை உறவுகளைச் சிதைக்கின்றன. ஆனால், அன்பு, மரியாதை, மன்னிப்பு, நம்பிக்கை போன்ற நேர்மறை எண்ணங்கள் பொன் அம்புகளைப் போன்றவை; அவை மனிதர்களின் இதயத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைக்கின்றன.

அன்பு எண்ணங்களின் உண்மையான வலிமை; அவை பிறரை மாற்றும் திறனில்தான் உள்ளது. கடினமான மனத்தையும் மென்மையாக்கும் சக்தி அன்பிற்கு உண்டு. ஓர் ஆறுதல் வார்த்தை, ஒரு புன்னகை, ஓர் ஊக்கமளிக்கும் பாராட்டு, ஒரு மன்னிப்பு... இவை அனைத்தும் அன்பு எண்ணங்கள் எய்யும் அம்புகளே. அவை காயப்படுத்துவதில்லை; மாறாக, காயங்களை ஆற்றுகின்றன. அவை வெறுப்பை வென்று, நம்பிக்கையை உருவாக்குகின்றன.

இன்றைய உலகம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறியிருந்தாலும், மனித மனங்களில் அன்பு எண்ணங்கள் குறைந்தால் அமைதி நிலைக்காது. குடும்பத்தில் அன்பு எண்ணங்கள் இருந்தால் ஒற்றுமை வளரும்; பள்ளியில் இருந்தால் நல்ல பண்புகள் வளரும்; பணியிடத்தில் இருந்தால் ஒத்துழைப்பு அதிகரிக்கும்; சமூகத்தில் இருந்தால் மனிதநேயம் மலரும். எனவே, நம் மனத்தில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் அன்பால் நிறைந்ததாக இருக்கவேண்டும். அன்பு எண்ணங்கள் அம்பெனப் பிறர் இதயத்தைத் துளைக்கட்டும். ஆனால், அந்தத் துளை வலியை ஏற்படுத்தாமல் வழியைக் காண்பிக்கட்டும்.

அம்பெனத் துளைக்கும் அன்புஎன்ற சொற்றொடர் மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்த்துகிறது. முன்பு உள்ள தொடரில் கூறப்பட்டது போல, எண்ணங்கள் எத்தனையோ தோன்றும். எதற்கு நாம் அதிகக் கவனத்தைச் செலுத்துகிறோமோ அது முக்கியத்துவம் பெறுகிறது. எதற்கு நாம் ஆசைப்படுகிறோமோ, எப்போது அந்த ஆசை தீவிரமாகிறதோ அப்போது நம் சிந்தனை அதைப்பற்றியே இருக்கும். எந்த எண்ணங்களுக்கு நாம் முன்னுரிமை தருகிறோமோ (நல்லதோ, கெட்டதோ எதுவானாலும்...) அந்த முன்னுரிமை ஆசையாக மாறுகிறது. அம்பெடுத்தால் அம்பாகவும், அன்பெடுத்தால் அன்பாகவும் அது உருப்பெறுகிறது.

நமது வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடப்பதுபோல் நாமாகச் சில எண்ணங்களை வைத்து நம்மைப் பூட்டிக்கொள்வதால் நம் தோல்வியை நாமே தீர்மானிக்கிறோம். அந்த ஏதோ ஒன்று நடப்பதுபோல் நாம் நினைக்கும் எண்ணங்களை ஏன் நல்லெண்ணமாக மாற்ற கடினமாக உள்ளது? பிறர் அசந்து போகும் அளவிற்கு நான் யோசிக்கவேண்டும் என்பதைவிட, எனக்குள் இருக்கும் இந்த எண்ணத்தை எப்படிச் சிறப்புற அமைப்பது எனும் உள்மனப் பயணம்தான் அதைச் சிறப்பாக்கும். ஆதலால், பிறர் அசந்து போகிற அளவிற்கும் அல்லது கசந்து போகிற அளவிற்கும் நாம் அன்பினை அவர்மேல் பொழிய வேண்டும் என்பதல்ல; நாம் பிறரைத் தாக்கும்போதும், பிறரால் நாம் தாக்கப்படும்போதும் ஓர் அறத்தைப் பின்பற்றும்போதும், நாம் நம் வாழ்க்கையையும் பிறர் வாழ்க்கையையும் அம்பெனத் துளைக்காமல் அன்பெனத் துளைப்போம்.

அம்பைவிட, அன்புதான் வீரியமிக்க ஆயுதம்! நம் எண்ணங்கள் அம்பாகத் துளைக்காமல் அன்பாகத் துளைக்கட்டும்.

(தொடர்ந்து பயணிப்போம்)

news
சிறப்புக்கட்டுரை
கரப்பான்பூச்சிகளின் அரசியல்

இந்திய அரசியலில் என்ன நடக்கிறது? கரப்பான் பூச்சிக் கூட்டம் கேள்வி கேட்கிறது. ‘மீம்ஸ்வழி நையாண்டி செய்கிறது.  சமூக ஊடகங்களில் நான்கு இலட்சம்  பதிவுகளையும், இரண்டு கோடி பின் தொடர்பாளர்களையும் கொண்ட இந்த இளைஞர் கூட்டம் யார், எப்படி, எங்கு இருக்கிறார்கள்?

காகிதத்தில் செய்யப்பட்ட கரப்பான்பூச்சி உடையணிந்து போராட்டங்களை நடத்துகிறார்கள். தூய்மைப் பணி செய்கிறார்கள்விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் தருகிறார்கள். அரசைக் கேலி செய்து  ‘மீம்ஸ்போட்டுக் கேலியாய் சிரிக்கிறார்கள்.

யார் இந்த விவரமான புதிய கோமாளிகள்?

2026, மே 15 அன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த், தொழில் முறை பட்டங்கள் குறித்துப் பகிரங்க விசாரணையின் போது வர்ணிக்கிறார்: “எந்த வேலையும் இல்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் போன்றவர்கள்.” அடுத்த நாள் இந்திய இளைஞர்களின் அறச்சீற்றமாககரப்பான்பூச்சி  ஜனதா தளம்எனும் நையாண்டி அரசியல் இயக்கம் உருப்பெறுகிறது.

தினமும் அரசைக் கேலி செய்து ஆயிரக்கணக்கான பதிவுகள் சமூக ஊடகங்களில் இந்திய இளைஞர்களால் பதியப்படுகின்றன. மே 21 அன்று கரப்பான்பூச்சிகளின் அதிகாரப்பூர்வஎக்ஸ்வலைதளம் அரசால் முடக்கப்படுகிறது. அன்றேகரப்பான்பூச்சி திரும்பிவிட்டது  என்ற தலைப்பில் புதிய கணக்கில் பதிவுகள் பகிரப்படுகின்றனசி.ஜே.பி. நிறுவுநர் அபிஜித் திப்கே, “நீங்கள் எங்கள் சமூக ஊடகக் கணக்குகளை நீக்கலாம்; ஆனால், எங்களை நீக்க முடியாதுஎனச் சவால் விடுகிறார்.

23 மே அன்று மீண்டும் கரப்பான்பூச்சி இணையம் முடக்கப்படுகிறது. வேறு கணக்கு என ஆட்டம் நடந்துகொண்டே இருக்கிறதுஇந்நிலையில் சி.பி.எஸ்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தம், ‘நீட்தேர்வு வினாத்தாள் கசிவு, .எஸ்.எம். விவகாரம், கல்வித்துறை தொழில்நுட்பக் கோளாறுகள் என தேசத்தின் கல்வி குறித்த நம்பிக்கை இழப்பு கரப்பான்பூச்சிகளைக் கொதிநிலைக்குத் தள்ளுகிறது.

25 மே அன்று கரப்பான்பூச்சி கட்சியினர்ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்என்று இணைய வழி மனுக்களை முன்னெடுத்தனர். இந்நிலையில், செயல்பாடுகளுக்கு உதவாது என முடிவெடுத்து  ஜூன் 6 அன்று புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் எனக் களம் இறங்கினர்.

புதுதில்லியில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இன்றைய கல்விமுறை குறித்துக் கவலைகொள்ளும் பெற்றோர் என 2000 பேர் கூடினர். போராட்டம் எட்டு மணி நேரம் அமைதியாக நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிகளைச் செய்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சி.ஜே.பி. போராட்டத்தின்போது அண்ணி ராஸா மற்றும் சி.ஜே.பி. தலைவர்கள்மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்தியது எனக் கூறப்படுகிறது. புதுதில்லி காவல்துறை இரு குழுக்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க ஆறு பேர் கைது என்றது. சி.ஜே.பி. “புதுதில்லி போராட்டம் எங்கள் வருங்காலப் போராட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம்(Trailer) என வர்ணித்தது.

தேசிய அளவிலான இளைஞர்களின் எழுச்சியைத் தலைநகர் தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. மூன்று தேசிய ஊடகங்கள் மட்டுமே செய்திகளைப் பதிவு செய்தன. சமூக ஊடக வழி இந்திய இளைஞர்களைக் கரப்பான்பூச்சி இயக்கம் கவர்ந்துள்ளது என்பதே நிதர்சனம்.

கரப்பான்பூச்சி அமைப்பு தன் அமைப்பில் இளைஞர்கள் சேர விதிகளை வகுத்துள்ளது. முதலில் இளையோர் வேலைவெட்டியில்லாமல்சோம்பேறியாக இருக்கவேண்டும். தொடர்ந்து அலைப்பேசியில் ஆன்லைனில் இருக்கவேண்டும் (குறைந்தது 11 மணி நேரம்). எதற்கெடுத்தாலும் புலம்ப வேண்டும்; ஆனால், இங்கு சாதி, மத, ஆண் - பெண் பேதமில்லை என்கிறதுதன் இணையதளத்தில்இது வேலையற்றவர்கள் மற்றும் சோம்பேறிகளின் அனைத்துக் கரப்பான்பூச்சிகளின் ஒரு தளம்எனத் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால், இவர்களதுஅறிவார்ந்த செயல்பாடுகளுக்குசி.ஜே.பி.-யின் தேர்தல் அறிக்கையே முதல் அடையாளமாகும். ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி கோரக்கூடாது; உரிய காரணமின்றி  ஒரு குடிமகனின் வாக்கு நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையர்உபா (upua) சட்டப்படி கண்டிக்கப்பட வேண்டும்; தற்போது உள்ள இடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அமைச்சரவைகளில் மகளிருக்கு 50%  இடஒதுக்கீடு வழங்கவேண்டும்; அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சமூக ஊடக உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்; சமூக ஊடகக் கருத்துத் திணிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படவேண்டும்; அரசியல்வாதிகள் கட்சி மாறினால் 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத்  தடைசெய்யவேண்டும் என்பனவாகும்.

பின் இணைப்பாக, தகவல் அறியும் சட்டம் 2005 முழுமையாகச் செயல்படுத்தவேண்டும். ‘பி.எம்.கேர்நிதிபோல, எக்காலத்திலும்கரப்பான்பூச்சி கேர்ஸ்எனும் நிதியைக் கொண்டு வரக்கூடாது என்ற விதிகளும் ஏற்கப்பட்டன.

கரப்பான்பூச்சிகளின் அரசியல் நிலைப்பாடு என்பதுஎந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டோம்; எங்கள் கோட்பாடுகளோடு உடன்படும் அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம்என ஓங்கி அடிக்கிறார்கள். “எங்கள் இயக்கம் இந்திய இளைஞர்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதாரஅரசியல் பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும், போராடத் தூண்டும்என்கிறார்கள்.

கரப்பான்பூச்சி ஜனதா தளத்தை அபிஜித் திப்கே என்பவர் நிறுவுநராக இருந்து இயக்கி வருகிறார். இவர்ஆம் ஆத்மிகட்சியின் சமூக ஊடகப் பிரிவில் தன்னார்வலராகப் பணிபுரிந்தவர்குறிப்பாகஇளைஞர்களைக் கவரும்மீம்ஸ்அடிப்படையிலான  டிஜிட்டல் உள்ளடக்கத்தில் கைதேர்ந்தவர். புதுதில்லி கல்வித்துறை, தகவல் தொடர்பு ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். இதன் காரணமாக இவர் கல்வி சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுப்பதும், ‘மீம்ஸ்-சில் நெத்தியடி அடிப்பதும் நிகழ்வாகி, புதிய வரலாறாகி நிற்கிறதுசி.ஜே.பி.-க்கு சதுரங்தாஸ், விஜேதா தாஹியா, அசுகோ ரங்கா என்ற மூவரும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக நிற்கிறார்கள்.

இந்திய இளைஞர்களின் நீறு பூத்த கோப நெருப்பைப் பற்றவைத்த தலைமை நீதிபதி சூரியகாந்த், “இன்றைய இளைஞர்கள் வளர்ந்த இந்தியாவின் தூண்கள்என்று சமாதானம் செய்தார். அரசியல் கட்சித் தலைவர்களோ, “வேலையற்ற இளைஞர்களின் வடிகால்தான் சி.ஜே.பி.-யின் மீம்ஸ் அரசியல்என முட்டுக் கொடுக்கிறார்கள்.

இன்றைய கல்விமுறை குறித்தும், நுழைவுத் தேர்வுகள் குறித்தும், பெருகிவரும் வேலைவாய்ப்பினைக் குறித்தும் இந்திய இளைஞர்களின் கோபமே கரப்பான்பூச்சி ஜனதா தளத்தின்நீட்எதிர்ப்புப் போராட்டமாகத் தன்னிச்சையாக வெடித்தது.

ஜூன் 20-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் புதுதில்லியில் தேசத்தின்  போராட்டத்தளமான ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.  ‘நீட்தேர்வு வினாத்தாள் கசிவு, தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் உயர் கல்வித் தேர்வு முறைகேடுகள் குறித்துக் குரல் எழுப்பினர். ‘நீட்தேர்வு முறைக்கேடால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, ‘நீட்உள்பட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் முறைகேடுகளைத் தடுக்க பரந்து விரிந்த, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் எனக் கரப்பான்பூச்சிகள் போராட்டக் களத்தில் ஒன்றுகூடினர். அனைத்துத் தேர்தல் முறைகேடுகளுக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல் வைக்கப்பட்டது.

புதிய திருப்பமாகச் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், மாணவர்களோடு போராட்டக் களத்தில் இணைந்தார்உண்ணா நிலை எடுத்தார். (26 நாள்கள் தொடர்ந்து உண்ணா நோன்புமருத்துவமனையில் போராட்ட முடிவில்தான் முடிந்தது).

ஜூலை 25 அன்று பாராளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சிகள் நகர்ந்தனர். காவல்துறை அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டதுதடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என வலிமையான தடுப்புமுறைகள் நடந்தனபோராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் மாணவர்கள்இளைஞர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.

போராட்டக் களத்தில் இருந்த மாணவர்களுக்கு  உணவுஆன்லைன்முறையில் உலகெங்கும் உணர்வுள்ள இந்திய மக்களால் வாரி வழங்கப்பட்டன. ஜந்தர் மந்தரில் மழை பெய்தவுடன் இதே முறையில் மழைக்கோட்டுகள் தரப்பட்டன.

நாடாளுமன்றம் கூடிய காலம். தடிகளில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன; காலாவதியானஆண்சுபுகைக்குண்டுகள் வீசப்பட்டன; பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கின எதிர்க்கட்சிகள். அந்த நாளை கரப்பான்பூச்சிகளுக்கான ஆதரவு நாளாக எதிர்க்கட்சிகள் கூறின. பா... அரசையும் முடக்கிமேல் நடவடிக்கைகளுக்குத் தள்ளின. இறுதியில், பா... அரசு பணிந்தது.

ஜூலை 25 அன்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுகிறார். ஜூலை 26 அன்று 36 நாள்களாக நடந்த கரப்பான்பூச்சிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தேசியத் தேர்வு முகமையைச் சார்ந்த 42 அதிகாரிகள் பதவி நீக்கம்தேர்வு முறைக்கேடுகள் குறித்துக் கடுமையான சட்டங்கள் என பா... அரசு இறங்கி வந்தது.

தமிழ்நாடு கரப்பான்பூச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாட்டில் இதுபோன்ற நடந்தநீட்எதிர்ப்புப் போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லையென அறிவித்தார். ஆம், ‘நீட்தேர்வில் சீர்திருத்தம்வேண்டும் என்பதே கரப்பான்பூச்சிகளின் நிலைப்பாடாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பிலும் (மாணவர்கள், அரசியல் கட்சிகள்பெற்றோர்) ‘நீட்தேர்வு கூடாது என்பதாகும். 12 ஆண்டுகளாக உருவாக்கும், தமிழ்நாட்டின் பொதுக் கருத்துக்கு நாளைய நாள்களில் கரப்பான்பூச்சிகளும் வருவார்கள் என்பதைக் காலமே அவர்கள் படும் காயங்களில் அவர்களுக்கு உணர்த்தும்தேசத்தில் எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதே சரியான நிலைப்பாடாகும். அதற்கே தமிழரின் போராட்டம் என்பதே தேசத்திற்கான நெறிமிக்க வழிகாட்டலாகும்.