news
இந்திய செய்திகள்
“திரு அவை மீதான அன்புதான் பணியின் அடித்தளம்!” - ஆயர் மேதகு ஜோஸ் செபாஸ்டியன்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோஸ் செபாஸ்டியன் தன்னுடைய மறைமாவட்டத் துறவிகள் நம்பிக்கை, அன்பு மற்றும் இறைப்பணியில் நிலைத்து நிற்க அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் தனது மறைமாவட்டத் துறவிகளைச் சந்தித்த ஆயர், ஆபிரகாம் மற்றும் இயேசுவின் வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இன்றைய சூழலில், துறவியர்கள் உலகத்தின் ஈர்ப்புகள், பணிபுரியும் நிறுவனங்களின் அழுத்தங்கள் மற்றும் தங்கள் சொந்த நம்பிக்கையில் சோர்வுகள் ஏற்படும்போது, கடவுளின் வாக்குறுதியில் ஆபிரகாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்ததுபோல இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

துறவியர்களிடையே குறைந்துவரும் நம்பிக்கை, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகள், ஆன்மிக நலனைவிட தனிப்பட்ட நலனுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் ஆகியவற்றை வேதனையோடு சுட்டிக்காட்டிய ஆயர், இயேசு கிறிஸ்துவின் மீதான நமக்குள்ள அன்புதான் திரு அவைக்கு நாம் செய்யும் பணியின் அடித்தளம் என்றும், அவரின் அன்புக்கு நம்மையே நாம் அர்ப்பணிக்கவேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதில் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற இச்சட்டம், உயர்கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதாக அமையும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனால் எளிய குடும்பங்களைச் சார்ந்த குறிப்பாக, பட்டியல் சாதி/பழங்குடி பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இட ஒதுக்கீடு சதவிகிதத்திற்கும் தனியார் பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. ஆகவே, இச்சட்டத்திருத்தம் இட ஒதுக்கீடு மீதும், சமூகநீதி மீதும் கடும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.”

திரு. ஜி. இராமகிருஷ்ணன், அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழுத்தலைவர். சி.பி..(எம்)

கேரளத்தில் கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க சங்கப் பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன. இதற்காகவே சபரிமலை உள்ளிட்ட  மத பாரம்பரியத்தில் தலையிட்டு, பிரச்சினைகளைத் தூண்டுகின்றனர். சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கும் வாவர் சுவாமிக்கும் நாம் இடமளித்துள்ளோம். இதுவே நமது பாரம்பரியம். ஆனால், முஸ்லிம் ஒருவர் அந்த இடத்தில் இருப்பதைச் சங்கப் பரிவார் விரும்பாது. ஆர்.எஸ்.எஸ்., பா... முன்னிறுத்தும் கொள்கைகள் கேரளத்தில் முக்கியத்துவம் பெற்றால், அதற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் தனி அடையாளத்தையும் பெருமையையும் அழித்துவிடும்.”

திரு. பினராயி விஜயன், கேரள மாநில முதல்வர்

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் முன்னேறி வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்கள் விட்டுத்தரப்படாது. அவர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும். அமெரிக்காவின் வரிவிதிப்பால் உலக அளவில் வர்த்தக ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதேவேளையில், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகளுக்கு உலகம் முழுவதும் தேவை உள்ளது. எனவே, நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியடையும்.”

திரு. பியூஸ் கோயல், மத்திய வர்த்தக துறை அமைச்சர்

news
இந்திய செய்திகள்
இந்திய இறையியலாளர்கள் அமைப்பில் முதல் பெண் தலைவர்! - பாலினச் சமத்துவத்திற்கான ஓர் அழைப்பு!

புனேயில் நடைபெற்ற இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் (ITA) ஆண்டிறுதிக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக, சவனோட் சிலுவை சகோதரிகளின் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி ஈவ்லின் மொன்டேய்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் வரலாற்றில் ஒரு பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. தொலைநோக்குப் பயிற்சி அனுபவம் கொண்ட இறையியல் பேராசிரியரான அருள்சகோதரி ஈவ்லின்,  ITA-வின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இறையியலாளர் மற்றும் சமூகத் தொடர்பாளர் ஆஸ்ட்ரிட் லொபோ இந்தத் தேர்வு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இதுவரை ஆண்கள் மட்டுமே இருந்த ஒரு துறையில், ஒரு பெண்ணின் குரல் கேட்கப்பட தேவையான மதிப்பும் பார்வையும் நம்பிக்கையும் ஈவ்லினிடம் உள்ளதுஎன்று குறிப்பிட்டார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

எழுத்தாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் வேறுபாடு இருக்கிறது. சாதாரண மனிதர்கள் எல்லாச் செய்திகளையும் உற்றுநோக்குவது கிடையாது. ஆனால், எழுத்தாளர் அனைத்துச் செய்திகளையும் உற்றுநோக்குகிறார். பார்க்கும் பார்வைதான் வித்தியாசப்படுகிறது. சாதாரண மனிதர்கள் சாதாரணமாக வாழ்ந்து இறக்கிறார்கள். ஆனால் படைப்பாளர்கள் இறந்த பிறகும், தங்களது படைப்புகளின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எழுத்திற்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. நல்ல புத்தகங்களை நேசிக்கவேண்டும்; அது மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். தற்போதைய தலைமுறையினருக்குப் படிப்பு, பணம், சமூக நிலை இருக்கிறது. ஆனால், மன அமைதி இல்லை. அதிக நபர்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இதனால் தெளிவும் தன்னம்பிக்கையும் கொண்ட தலைமுறைகளைப் படைப்பாளர்களால்தான் உருவாக்க முடியும்.” 

நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்

பா...வின் அரசியல் முகவராகத் தேர்தல் ஆணையம் மாறியிருக்கிறது. பீகாரில் 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய, பட்டியலின, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இளைஞர்கள், இது பா...வின் வெற்றிக்காகத் தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு மையங்களின் சி.சி.டி.வி. தகவல் சேகரிப்பு நீக்கம் பா...வின் தேர்தல் மோசடியை உறுதி செய்கிறது!”

திரு. எம்.. பேபி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர்

தமிழ்நாடு அரசு எந்தவொரு வழக்கையும் விசாரிக்கவில்லை எனக் கூறி அனைத்து வழக்குகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளுமா? தமிழ்நாடு அரசு விசாரணை மேற்கொள்ளும் எந்த வழக்கிலும் அமலாக்கத் துறை தலையிடுவதும் விசாரிப்பதும் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக அமையாதா?”

உச்ச நீதிமன்றம்

சமூகத்தில் சாதியக் கொலைகள், அத்துமீறல்களைச் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதற்குச் சமூக உணர்வுடன் பணியாற்றும் வழக்கறிஞர்களின் பங்களிப்பு அளப்பரியது.”

திருமதி. பி.எஸ். அஜிதா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

news
இந்திய செய்திகள்
முழு திருவிவிலியத்தையும் கைகளால் எழுதிய கல்லூரி மாணவி!

இன்றைய இளைஞர்கள் இறைப்பக்தியில் பின்தங்கியவர்கள் அவர்கள் திருவிவிலியத்தை வாசிப்பதில்லை என்று குறை கூறுவதற்குப் பதிலாக, அவர்களிடம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் இறைச்செய்தியை எடுத்துச் சென்றால், அவர்கள்கூட சாட்சிய வாழ்வு வாழமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக நிற்கிறார் சிவகங்கை மறைமாவட்டம், வேம்பத்தூர் மிக்கேல்பட்டினம் பங்கைச் சேர்ந்த செல்வி ஜோவிட்டா. 2024 டிசம்பரில் பங்குத்தந்தை அருள்பணி. C.A. ஜேம்ஸ் அவர்களின் ஊக்கத்தின்படி திருவிவிலியத்தைத் தனது கையால் எழுதத் தொடங்கி, 2025 செப்டம்பரில் முழுமையாக எழுதி முடித்துள்ளார். மொத்தம் 2400 பக்கங்கள் எழுதியுள்ளார். ஜோவிட்டாவின் இந்த ஆன்மிக முயற்சியைப் பாராட்டும் வகையில், பங்கின் திருவிழா நாளில் ஊர் மக்கள் சார்பாக ரூ.10,000/- வழங்கப்பட்டது. மேலும், அண்மையில் ஓரியூரில் நடைபெற்ற சிவகங்கை மறைமாவட்டத்தின் திருப்பயணத்தின்போது, மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் ஜோவிட்டாவைப் பாராட்டி ஊக்குவித்தார்.

news
இந்திய செய்திகள்
சிறந்த ஆசிரியருக்கான விருது!

புதுதில்லி மாநகராட்சி ஆணையம் (NDNC), நடப்பு கல்வி ஆண்டின் (2025-26) சிறந்த ஆசிரியருக்கான விருதை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை குளோரி மேரி (வயது 53) என்பவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.  ஆசிரியர் குளோரி தனது பள்ளிப் படிப்பை விருதுநகரில் PKN பெண்கள் பள்ளியிலும், இளங்கலைப் பட்டத்தை (B.Sc.,) V.V.V. கல்லூரியிலும், ஆசிரியர் பயிற்சியை (B.Ed.,) மதுரை, காமராசர் பல்கலைக் கழகத்திலும் படித்து முடித்தவர். 1995-இல் தில்லியில் உள்ள IIT-இல் பணியாற்றிய இவர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1999 முதல் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றினார். ஆசிரியர் பணியில் அர்ப்பணமும் ஆர்வமும் நிறைந்தவராக விளங்கிய  இவர், தொடர்ந்து மாணவர்களின் பல்வகைக் கல்வித் திறனை வளர்த்து வந்தார். மாநகராட்சிப் பள்ளிகளில் அதிகமான மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றார். மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்து NMMS தேர்வு எழுதச் சொல்லி பலருக்கு அரசு உதவித் தொகை பெறத் துணைநின்றவர்.

விருது பெற்றது குறித்து இவர் கூறும்போது, “நான் நேர்மையாகவும் கடவுள் பக்தி உள்ளவராகவும் எனது ஆசிரியப் பணியைச் செய்தேன். உடல்நலம் குன்றிய நிலையிலும் கடமையில் தவறியதில்லை. நான் இன்னும் உயிருடனும் நிறைவுடனும் வாழ்கிறேன் என்றால், அதற்கு என் பள்ளிக் குழந்தைகளின் அன்பும் பாசமும் பரிவும்தான் காரணம். இந்த விருதைக்  கேட்டு நான் விண்ணப்பிக்கவில்லை. மாறாக, என் தலைமையாசிரியரும் சக ஆசிரியர்களும் விண்ணப்பித்து இதை எனக்கு வழங்கியுள்ளார்கள்என்றார். புதுதில்லி தமிழ்க் கிறித்தவக் கத்தோலிக்க அமைப்பின் சார்பாக அருள்முனைவர் சிரில் சே.. அவர்கள் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.