news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாகை மாவட்டத்தைச் சார்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் அண்மையில் சிறைப்பிடித்துள்ளனர். இதேபோல, மற்றொரு சம்பவத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், அவர்களது நாட்டுப் படகும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவச் சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கைது நடவடிக்கையின் போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதுடன், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வும் பாதுகாப்பற்ற நிலையும் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கைவசம் உள்ளன. எனவே, இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளவேண்டும்.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், முதலமைச்சர், தமிழ்நாடு

இந்திய மரபில் திருமணம் என்பது நீண்ட காலம் நீடிக்கும் புனித உறவாகும். திருமணத்தின் புனிதம் ஒருதலைப்பட்சமான அடக்குமுறை அல்லது அமைதியான துன்பத்தைத் தாங்கிக்கொள்வதில் இல்லை. திருமண உறவின் உண்மையான அர்த்தம் பரஸ்பரம் மரியாதை, நட்பு, கருணையில்தான் உள்ளது. பெண் குடும்ப மரியாதையையும், திருமண புனிதத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அவமதிப்பு, இழிவு, புறக்கணிப்பைத் தாங்குகின்றனர். சகிப்புத்தன்மை தங்களது கடமை என்ற எண்ணத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நடக்கும் துன்புறுத்தல்களை அமைதியாகச் சகித்துக்கொண்ட இந்தியப் பெண்கள் பலர் உள்ளனர். திருமணம் என்பது ஆண்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது என்ற தவறான நம்பிக்கையை விட்டு அகலவேண்டும். தனது மனைவியின் நலன், பாதுகாப்பு, தேவைகள், மரியாதை ஆகியவை திருமண உறவின் முக்கியப் பொறுப்புகள் என்பதைக் கணவர் உணர வேண்டியது அவசியம். திருமண உறவு என்ற பெயரில் அவமரியாதையை நியாயப்படுத்த முடியாது. குடும்பம் என்ற பெயரில் கணவர் தனது மனைவியைத் தனிமைப்படுத்தி, உணவையும் உடனிருப்பையும் மரியாதையையும் பறித்துவிட்டதால் அது துன்புறுத்துதல் என்ற வரம்பையும் தாண்டிவிடுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி

பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களைப் பெற்று உரிய மீதித் தொகையை வழங்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிமனைகளில் பணியின்போது நடத்துநர்களுக்கு  வழங்கப்படும் முன்பணத்தைப் பயணிகளிடம் பயணச்சீட்டு வழங்கும்போது முறையாகப் பயன்படுத்தவேண்டும். பயணிகளிடம் சில்லறை தொடர்பான விவாதங்களைத் தவிர்த்து, கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும். இது தொடர்பாகப் புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”

மாநகரப் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

மலிவான இணையக் கட்டணங்களால் ஏழைகளும் சமூக ஊடகங்களை அணுக முடிவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், தொலைத்தொடர்பு துறையில் ஒரேயொரு நிறுவனத்தின் ஏகபோகத்தை அனுமதிப்பது குறித்துப் பதில்கூற மறுக்கிறார். ரீல்ஸ், இன்ஸ்டாகிராமுக்கு மக்கள் அடிமையாக வேண்டும் என்பதே அவரது விருப்பம். அப்படி அடிமையாகிவிட்டால், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியிருக்காது. மகாராஷ்டிரம், ஹரியானாவைப் போல பீகாரிலும் வாக்குகளைத் திருட பா... முயற்சிக்கிறது. வாக்குத் திருட்டு என்பது அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகும்.”

திரு. இராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

வெனிசுலாவின் சோசலிச சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் மச்சாடோ, தனியார்மயப்படுத்தப்பட்ட சந்தை, வெளிநாட்டு முதலீடுகள், அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை ஆதரிக்கிறார். ஆயுதப் போராட்டங்கள் இல்லாமல், அச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் உலகெங்கிலும் இருக்கிற மக்களுக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாக நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மச்சாடோவைப் பார்க்கலாம். சர்வாதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் ஜனநாயகத்தின் புன்னகையாகவே மச்சாடோவின் கரங்களில் தவிழ்கிறது இந்த நோபல் பரிசு.”

முனைவர் திரு. வைகைச்செல்வன், மேனாள் அமைச்சர்

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால் இப்பொழுது, மனிதநேயம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (..) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், அது இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப்பெரிய சவாலாக அமையும்.”

திரு. எஸ்.எஸ். ஜவஹர், ..எஸ். அதிகாரி (ஓய்வு)

news
இந்திய செய்திகள்
மும்பை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய துணை ஆயர்

இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கத் தூதரான பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி அவர்களின் செயலாளராகப் பணியாற்றி வரும் அருள்தந்தை ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்களை மும்பை உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக திருத்தந்தை நியமித்துள்ளார்.

20-09-1961 அன்று பிறந்த அருள்தந்தை பெர்னாண்டஸ், 31-03-1990 அன்று மும்பை உயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தாதர் இரட்சணிய அன்னை மற்றும் மாதுங்கா டான்போஸ்கோ பள்ளிகளில் கல்வி கற்ற இவர், 2000-ஆம் ஆண்டில் உரோமையில் அறநெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பை உயர் மறைமாவட்டக் குருக்கள் அவையின் செயலாளராகவும், புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இந்திய ஆயர் பேரவையின் இறையியல் பணிக் குழுவின் நிர்வாகச் செயலாளர், F.I.A.M.C. உயிரி மருத்துவ நெறிமுறைகள் மையத்தின் இயக்குநர் பொறுப்புகளிலும் இருந்தார். இந்தியக் கத்தோலிக்கச் செவிலியர் குழுவின் தேசிய ஆலோசகராகவும், CBCI-இன் நீதி, சமாதானம், மேம்பாட்டு அலுவலகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

news
இந்திய செய்திகள்
கொச்சி மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

கொச்சி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் அவர்களை நியமித்து திருத்தந்தை லியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இம்மறைமாவட்டத்தின் ஆயராக மேதகு ஜோசப் கரியிலின் பதவி விலகலைத் தொடர்ந்து தந்தை ஆண்டனி கட்டிப்பரம்பில் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொச்சி மறைமாவட்டத்தில் 78 பங்குகளை உள்ளடக்கிய 1,82,324 கத்தோலிக்கர்கள், 134 மறைமாவட்டக் குருக்கள், 116 துறவறக் குருக்கள் மற்றும் 545 துறவற சகோதரிகள் உள்ளனர். தற்போது இம்மறைமாவட்டத்தின் நீதித்துறை ஆயர் பதில் குருவாகப் பணியாற்றி வரும் இவர், தத்துவம் மற்றும் இறையியலில் உயர்கல்வி பெற்றுள்ளார். மேலும், உரோமில் உள்ள உர்பானியானா பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். கும்பளம் புனித ஜோசப் ஆலயத்தின் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார்.

ஆயராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பலரும் இவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

news
இந்திய செய்திகள்
திருத்தந்தை லியோ இந்திய வருகைக்கான அழைப்பு!

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) தலைவரும், திருச்சூர் பேராயருமான மேதகு ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள், அண்மையில் வத்திக்கானில் நடைபெற்ற பொதுவான சந்திப்பின்போது திருத்தந்தையை இந்தியாவிற்கு வருகை தருமாறு ஓர் அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது பேராயர், இந்தியத் திரு அவையின் தற்போதைய நிலை, அதன் பணி, சவால்கள் மற்றும் பங்களிப்புகளை விளக்கும் ஒரு விரிவான அறிக்கையையும், SWOT பகுப்பாய்வையும் திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும், “திருத்தந்தையின் இந்திய வருகை குறித்து நான் இந்திய அரசுடனும் ஆலோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்தச் சந்திப்புக் குறித்து பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் குறிப்பிடுகையில், திருத்தந்தை லியோ இவ்வழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டு, இந்தியத் திரு அவைக்கும் மக்களுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கியதாகப் பகிர்ந்துகொண்டார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

கொரோனா தொற்றுக்கான சிகிச்சையின்போது, அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் உயிரிழந்தது உண்மையானால், அதற்கான காப்பீட்டுத்தொகையை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தவேண்டும். இலாபத்திற்காக மட்டும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர் என்ற ஊகம் சரியானதல்ல. மருத்துவர்களைப் பாதுகாக்காவிட்டாலோ, அவர்களுக்குத் துணையாக நிற்காவிட்டாலோ நீதித் துறையைச் சமுதாயம் மன்னிக்காது.”                

உச்ச நீதிமன்றம்

உலகம் எந்த வேகத்தில் மாற்றத்தை அடைகிறதோ, அதே வேகத்தில் நாமும் மாறவேண்டும். இதில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால்கூட நாம் பின்தங்கியிருப்பதாகக் கூறிவிடுவார்கள். அதேபோல், தலைமைத்துவம் என்பதற்கு அவர்கள் உருவாக்கும் நேர்மறையான தாக்கம்தான் அடையாளம். செயற்கை நுண்ணறிவு (..) காலத்தில் நேர்மைதான் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை தேவை. எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படைகள் எப்போதும் மாறாது. அதில் மாணவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.”    

திரு. மு..ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

இரயில் நிலையங்களில், வங்கிகளில் மற்றும் ஏனைய பொது இடங்களில் தமிழில் தொடர்ந்து பேசாமல்விட்டால், சமரசம் செய்துகொண்டு ஆங்கிலத்திலோ அல்லது புதிதாக வேலைக்கு வந்து இருப்பவர்கள் பேசுகிற இந்தியில் பேசத்தொடங்கினால் தமிழ் என்னவாகும்? அது குறித்த விழிப்புணர்வு இல்லை; அப்படிச் செய்கிறோம் என்கிற உணர்வும் இல்லை. தொடர்ந்து பல்வேறு தமிழ் சொற்களைப் பயன்படுத்தவேண்டும்; தமிழ் தெரிந்தவரிடம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்; தமிழ் தெரியாதவர்களிடமும் தமிழைக் கற்றுக்கொடுக்கும் விதம் அவர்கள் நம் மாநிலத்தில் இருந்தால் செய்யவேண்டும். சமரசம் செய்து கொள்கிறோம், நல்லவர்களாக நடந்துகொள்கிறோம் என்று நம் மொழியை விட்டுக்கொடுத்து, பிற மொழியைப் பயன்படுத்துகிறபோது நம் மொழி அழிவதைத் தடுக்க இயலாது.”    

திரு. சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்