news-details
உலக செய்திகள்
“குடியேறிகளுக்காகக் குரல் கொடுப்பது ஒரு வழிபாட்டுச் செயல்” - கர்தினால் பிளேஸ் குபிச்

“குடியேறிகளுக்காகக் குரல் கொடுப்பது இயேசுவின் ஒவ்வொரு சீடருக்கும் உரிய கடமை. அது உண்மையான அர்த்தத்தில் இறைவனை வழிபடும் ஒரு புனிதச் செயல்” என்று சிகாகோ பேராயர் கர்தினால் பிளேஸ் குபிச் தெரிவித்துள்ளார். அக்டோபர் 3 அன்று சிகாகோவில் உள்ள பழமையான புனித பேட்ரிக் தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிப் பேசிய அவர், குடியேறிகளை அன்போடு வரவேற்ற வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட சிகாகோ நகரில், இன்று அத்தகைய வரவேற்பு மனப்பான்மை குறைந்து வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். “நமது சொந்த வரலாற்றை நினைவில்கொண்டு, அந்நியர்களை அன்போடு அணுக வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் இறைவனை வழிபடும் நாம், குடியேறிகளின் துயரங்களைக் கண்டு விலகி நிற்க முடியாது” என்று  சுட்டிக்காட்டினார்.

“அகதிகளுக்கும் குடியேறிகளுக்கும் அடைக்கலம் அளித்து, உணவு, சட்ட உதவி மற்றும் கல்வி வழங்குவது வெறும் சமூகப் பணி அல்ல; மாறாக, அது கிறிஸ்துவை நேரில் சந்திக்கும் நற்கருணைச் சீடத்துவமாகும். அதேவேளையில், குடியேறிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மனிதாபிமானமற்ற சட்ட நடவடிக்கைகளை எதிர்த்து, நியாயமான குடியேற்றச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்” எனக் கத்தோலிக்க மக்களுக்கு கர்தினால் குபிச் அழைப்பு விடுத்தார்.