news-details
ஆன்மிகம்
இந்தியத் திரு அவை மற்றும் சமூக வளர்ச்சிக்கு பிரான்சிஸ்கன் துறவியரின் வரலாற்றுப் பங்களிப்பு

இந்தியாவில் பிரான்சிஸ்கன் சபை 735 ஆண்டுகால வரலாறு உடையது. பிரான்சிஸ்கன் சபை பேராயர் ஜான் தெ மோந்தே கொர்வினோ, மயிலாப்பூர் புனித தோமையார் கல்லறையில் 1291-1292 ஆண்டுகள்  தங்கி  மறைப்பணியில் ஈடுபட்டார். நான்கு இத்தாலிய பிரான்சிஸ்கன் துறவிகள் 1321-இல் மராத்தியத்தின் தானே பகுதியில் மறைச்சாட்சிகளாக மரித்தனர். கி.பி. 1500 முதல்  போர்த்துக்கீசிய பிரான்சிஸ்கன் சபையினர் கி.பி. 1632 முதல் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்னிந்தியாவின் பல கப்புச்சின் மறைமாநிலங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களின் மறைப்பணி, இந்தியத் தலைமையிலான பிரான்சிஸ்கன் வாழ்விற்கும், மறைமாவட்டங்களின் தன்னிறைவுக்கும், இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்கும் நகர்த்தியது.

கோவா, கொச்சி, கொல்லம், மங்களூர், மயிலாப்பூர் லஸ் ஆலயம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மும்பை ஆகியவை போர்ச்சுக்கீசிய பிரான்சிஸ்கன்கள் நிறுவிய வரலாற்றுச் சிறப்புமிக்க மறைத்தளங்கள்.

கப்புச்சின் சபையினரின் ‘சென்னையின் திருத்தூதர்’ எனப் போற்றப்பெறும் பிரெஞ்சு அருள்தந்தை எப்ரேம் தெ நெவெர்ஸ் (1607-1695) அவர்களின் 53 ஆண்டுகாலத் தளராத மறைப்பணியால் புனித அந்திரேயா, புனித ஜார்ஜ் கோட்டை (1642-1751), புனித மரியன்னை இணைப் பேராலயம் (1658), பாரிஸ் கார்னர் ஆலயங்களை எழுப்பி, இந்தியாவின் முதல் ஆங்கிலப் பள்ளியை நிறுவி, மறைப்பணி மற்றும் கல்விப் பணிகளில் சிறந்து விளங்கினர். இவ்வாறு சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் (1632-1834) 200 ஆண்டுகள் பணியாற்றினர். புதுச்சேரி, சூரத், சென்னை மற்றும் வட இந்தியா, திபெத், இந்துஸ்தான் போன்ற பரந்த பகுதிகளில் கப்புச்சின் மறைப்பணி விரிவடைந்தது. பெத்தியா, பாட்னா, ஆக்ரா, அலகாபாத், ஆஜ்மீர், டெல்லி, மீரட், லக்னோ, காசி, போபால், சாகர், இந்தூர், ஜபுவா, காந்துவா, ஜெய்ப்பூர், உதய்பூர், சிம்லா, சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், லாகூர் மற்றும் சில மறைமாவட்டங்கள் கப்புச்சின் மறைப்பணியின் வியர்வையில் எழுதப்பட்ட மகுடங்களாகும்.

1943, ஜூன் 13 அன்று திருச்சி அமல ஆசிரமம் நிறுவப்பட்டதன் மூலம், கப்புச்சின் மறைப்பணி தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கியது. 1972-இல் தமிழக அமல அன்னை கப்புச்சின் மறைமாநிலம் உருவானது. 2012, ஏப்ரல் 25 முதல் தமிழ்நாடு கப்புச்சின் மறைமாநிலம் வடக்கு மற்றும் தெற்கு என இரு மறைமாநிலங்களாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கப்புச்சின் துறவிகள் பங்குப்பணி, மறைபரப்புப்பணி (ஜிம்பாப்வே, புர்கினா பாசோ) கல்வி, சமூகப்பணி, ஆற்றுப்படுத்தல்பணி மற்றும் ஏழையர் சேவை எனப் பணியாற்றுகின்றனர். அமல ஆசிரமம், கோவை புனித பாத்திமா, சென்னை புனித மத்தியாஸ், தூத்துக்குடி புனித யூதா ததேயு ஆலயங்கள்,  திண்டுக்கல் அனுகிரஹா மற்றும் கிருஷ்ணகிரி பவுண்டன் ஆற்றுப்படுத்தல் நிறுவனங்கள் புகழ்பெற்றவை.

தமிழ்நாட்டில் பிரான்சிஸ்கன் ஆன்மிகத்தைப் பின்பற்றும் பல துறவறச் சபைகள் பணியாற்றி வருகின்றன. பிரான்சிஸ்கன் மரியாளின் மறைபரப்புச் சபை (FMM), பிரான்சிஸ்கன் புனித இதய அன்னை சகோதரிகள் (FIHM), பிரான்சிஸ்கன் புனித அடைக்கல அன்னை சகோதரிகள் (FBS), பிரான்சிஸ்கன் புனித காணிக்கை அன்னை சகோதரிகள் (FSPM), பிரான்சிஸ்கன் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் (FSAG), பிரான் சிஸ்கன் புனித வளனார் சகோதரிகள் (FSJ), சென்னை புனித அன்னாள் சகோதரிகள் (SSA), பிரான்சிஸ்கன் புனித தோமையார் சகோதரிகள் (FST), பிரான்சிஸ்கன் மறைபரப்புச் சகோதரர்கள் (CMSF) மற்றும் பிரான்சிஸ்கன் புனித மரியாளின் ஊழியர்களின் சபை (FSM) ஆகியவை. இவற்றுடன் பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை (OFM Cap) பிரான்சிஸ்கன் சபை (OFM), பிரான்சிஸ்கன் கான்வென்ச்சுவல்  (OFM Conv.) ஏழை கிளாராவின் இடைவிடா ஆராதனை கன்னியர் சபை (PCPA) மற்றும் பொதுநிலையினரின் பிரான்சிஸ்கன் இயக்கம் (OFS) ஆகியவை பிரான்சிஸ்கன் குடும்பத்தின் முக்கிய அங்கங்கள். இந்தியாவில் பிரான்சிஸ்கன் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத்துறையில் பங்களிப்பு நற்செய்தி அறிவிப்பின் துணைச் செயல்பாடாக மட்டும் அமையவில்லை; அது மனித அறிவு, மனித மாண்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கிய ஒரு விரிவான பணியாக வளர்ந்துள்ளது.

புனித அல்போன்சா, அருளாளர் இராணி மரியா, இறையடியார் தந்தை ஜான் பீட்டர் போன்ற இந்தியப் பிரான்சிஸ்கன் குடும்பங்களில் உருவான புனிதர்களின் வாழ்க்கை, எளிமை, தியாகம், சகோதரத்துவம், ஏழைகளுக்கான முன்னுரிமை, மன்னிப்பு மற்றும் நற்செய்தி பற்றுறுதி பிரான்சிஸ்கன் ஆன்மிகத்தின் வரலாற்றுப் பரிமாணத்தைத் தாண்டி, சமகாலத் திரு அவைக்கும் சமூகத்திற்கும் நெறிப்படுத்தும் ஆன்மிகச் சாட்சியாக விளங்குகிறது.