news-details
ஆன்மிகம்
அன்னை கற்றுத் தந்த செபமாலை

“மிகவும் இனிமையும் எளிமையுமான செபமாலை, மிகுந்த ஆற்றல் கொண்ட செபம்; அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அற்புதமான செபம். திருப்பலிக்கு அடுத்து மிகுந்த தெய்வீகம் கொண்ட செபம் செபமாலை” என்று புனிதர் சார்லஸ் பொரோமேயு சொல்லியிருக்கிறார்.

1917, மே 13 முதல் அக்டோபர் 13 வரை போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் மரியன்னை லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ என்ற மூன்று சிறார்களுக்குக் காட்சி அளித்தார். “நான் செபமாலை அன்னை” என்று கூறினார். தினமும் செபமாலை சொல்லப் பணித்தார்.

வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று வாழ்த்தி, “இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” என்றார். அந்தப் பொழுதில் விண்ணகம் முழுவதும் கன்னி மரியாவின் பதிலை எதிர்பார்த்துத் திகைத்து நின்ற வேளையில், “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே நிகழட்டும்” என்று பணிவோடு, தாழ்மையோடு, முழு மனத்தோடு நம் அன்னை மரியா கூறிய பதிலில், அனைத்துலகும் மகிழ, ‘வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார்.’

‘அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே’ என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லிச் செபிக்கும்போது, நம் அன்னையைப் போல நாமும் இறைவிருப்பத்திற்கு ‘ஆம்’ என்று கூறிப் பணிவோம், மகிழ்வோம்.

‘எலிசபெத் தன் முதிர் வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்’ என்று வானதூதர் கூறியதைக் கேட்ட மரியா, எலிசபெத்திற்கு உதவி செய்ய யூதேயா நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். நம் அன்னையின் வருகையினால் அற்புதங்கள் நிகழுமன்றோ! எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார். “பெண்களுள் நீர் ஆசி பெற்றவர், உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்றார். “என் வயிற்றினுள் குழந்தை பேருவகையால் துள்ளிற்று” என்று எலிசபெத் அறிக்கையிட்டார்.

அன்று விரைந்து சென்ற நம் அன்னை, இன்றும் நாம் துன்பங்களினால் துவளும்போதும், நோயினால் துன்புறும்போதும், தனிமையில் வாடும்போதும் நமக்கு உதவி செய்ய விரைந்து வருகிறார்.

‘பெண்களுள் ஆசிர் பெற்றவர் நீரே, உம் திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர் பெற்றவரே’ என்று செபித்து அன்னையை அழைப்போம். நம் அழைப்பினை ஏற்று விரைந்து வருவார் நம் அன்னை.

கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது, நேரமும் கடந்துவிட்டது, அவசர உதவி தேவைப்படுகிறது. “எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்று இயேசு கூறியபோதும், பரிதவித்து நிற்கும் தம் பிள்ளைகளுக்கு உதவிட நம் அன்னை மரியா மறுக்கவில்லை. அன்னையின் அசைக்க முடியாத நம்பிக்கை செயல்படுகிறது. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். நம் இயேசுவின் முதல் அரும் அடையாளம் நடந்தேறியது, தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியது.

எனவே, ‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’ என்று சொல்லி அன்னையின் பரிந்துரையை நாடுவோம். அவர் திருமகன் சொல்வதையெல்லாம் செய்வோம், அற்புதங்கள் நடைபெறும்.

சிலுவையில் தொங்கிய இயேசு சாகுந்தறுவாயில் தம் தாயையும், தம் அருகில் நின்ற சீடரையும் கண்டு தம் தாயிடம், ‘அம்மா, இவரே உம் மகன்’ என்றார். தம் சீடரிடமும் ‘இவரே உம் தாய்’ என்றார். விண்ணையும் மண்ணையும் படைத்தாளும் இறைவனின் தாய் நமக்கும் தாயானார். இறை இயேசு நமக்குத் தந்த அற்புதமான நற்கொடை! அந்நேரம் முதல் அச்சீடர் அவரைத் தன் வீட்டில் ஏற்று ஆதரவளித்தார்.

பிறரால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்ட வேளைகள், நோயினால் அவதியுறும் நேரங்கள், நம்முடைய வேதனைகள் அனைத்தின்போதும் சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்குவோம். மிக உயர்ந்த நற்கொடையை, ஆதரவை, ஆறுதலை, அன்பின் இரக்கத்தை இறை இயேசு நமக்குத் தருகின்றார்.

“இவரே உம் தாய்” என்று நம் இதய இல்லத்தில் அன்னை மரியாவை ஏற்றுக்கொள்வோம். அன்பான அரவணைப்பில், நம் அன்னை மரியாவின் பரிந்துரையில் வாழ்வோம்.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, சீடர்கள் மிகவும் அச்சமுற்றார்கள். மேல் மாடியில் அவருடைய தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். நம் அன்னையின் செபத்தால் தூய ஆவியானவர் இறங்கி வந்தார்; அனைவரையும் ஆட்கொண்டார். தேற்றரவாளரின் வருகையால் வல்லமையும் திடமும் பெற்றுத் துணிவுடன் சீடர்கள் வெளியே சென்று போதிக்கத் தொடங்கினார்கள். அன்னையின் வேண்டுதலினால் தூய ஆவியின் கொடைகளை, கனிகளைப் பெற்று வல்லமையோடு துணிந்து வாழ்வோம்.

அன்னையின் வழி இயேசுவின் திருவடியில் மகிழ்ச்சி, ஒளி, துயர், மாட்சி முதலிய இயேசு கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானித்து செபமாலை செபிக்கும்போது அன்பும் இரக்கமும் கொண்ட இறைவனின் அருளை, அன்னை மரியாவின் வழியாக நிறைவாகப் பெறுகிறோம்..

செபிப்போம்... செபிப்போம்...

செபமாலை செபிப்போம்!

போற்றுவோம்... போற்றுவோம்...

துயர் நீங்க போற்றுவோம்!