news-details
தலையங்கம்
SIR-இல் நிகழ்ந்த தவறுகளுக்கு SSR தீர்வாகுமா? கேள்விகளால் தலைகுனியும் இந்தியத் தேர்தல் ஆணையம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி, நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நேர்மையாகவும் சுயாட்சியுடனும் நடத்துவதற்கும், அதற்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960-ஆம் ஆண்டின் வாக்காளர்கள் பதிவு விதிகளின்படி இயங்கும் இந்தத் தன்னாட்சி அமைப்பு, இன்றைக்குத் தன் வரலாற்றிலேயே சந்திக்காத பெரும் நம்பகத்தன்மை நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவுகளும், ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision - SIR) என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்களும் இந்திய சனநாயகத்தின் வேரையே அசைத்துப் பார்த்துள்ளன. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் கொந்தளிப்பும், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனக் கணைகளும் எழுந்த நிலையில், தற்போது ‘சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தம்’ (Special Summary Revision - SSR)  பற்றிய அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆனால், ‘SIR மூலம் இழைக்கப்பட்ட இமாலயத் தவறுகளுக்கு இந்த அவசரச் சுருக்கமுறைத் திருத்தம் பரிகாரமாகிவிடுமா?’ எனும் கேள்விதான் இன்றைக்குத் தேசிய அளவில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் இந்த இரண்டு வெவ்வேறு நடைமுறைகளையும், அதன் நுட்பமான சட்ட வேறுபாடுகளையும் ஆழமாக நாம் பகுப்பாய்வு செய்து பார்ப்பது அவசியமாகிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ எனும் இந்த  SIR நடைமுறை, ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, புதிய பட்டியலைத் தயாரிக்கும் தீவிர நடவடிக்கையாகும். இதில், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள்தாம் என்பதை ஆவணங்கள் மூலமாகவும், குடியுரிமைச் சான்றுகள் மூலமாகவும் மீண்டும் புதிதாக நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இதன் விளைவாக, நாடு முழுவதும் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். குடிமக்களைத் தங்களின் வாக்களிக்கும் உரிமையை நிரூபிக்கச் சொல்லித் தெருவில் அலையவிட்டதும், மத்திய மென்பொருள் மூலம் தன்னிச்சையாக நோட்டீஸ்களை அனுப்பியதும் SIR-இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிர்வாக அத்துமீறலாகும்.

மேலும், 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21(2)-இன் படி நடத்தப்படும் ‘சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தம்’ எனும் SSR  என்பது, நடைமுறையில் இருக்கும் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அதில் புதிதாக 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களை இணைப்பதும்(Form 6), இறந்தவர்கள் அல்லது நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களைத் தகுந்த, சட்டப்பூர்வ விசாரணைக்குப் பின் நீக்குவதும் (Form 8) ஆகும்.

இங்குத் தகுதி நிரூபணப் பொறுப்பு குடிமக்களின் தலையில் சுமத்தப்படுவதில்லை; ஏற்கெனவே உள்ள பட்டியல் செல்லுபடியாகும் என்ற நேர்மறை அனுமானத்துடனே பணி தொடங்குகிறது.

வழக்கமாக, ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்படவேண்டிய SSR நடைமுறையை, SIR கணக்கெடுப்பைக் காரணம் காட்டி 2026-ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் முற்றிலுமாகத் தவிர்த்தது. ஆனால், SIR-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாரானதும், தெருவெங்கும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) போன்ற அமைப்புகளின் போராட்டங்கள் தீவிரமடைந்ததும் ஆணையத்தை நிலைகுலையச் செய்துள்ளன.

இந்த மக்கள் கொந்தளிப்பைத் திசை திருப்பவும், தங்களின் தவறுகளை மூடிமறைக்கவும், அக்டோபர் 15, 2026 அன்று தமிழ்நாட்டை உள்ளடக்கிய 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான 2027 – SSR கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக அறிவித்துள்ளது. 2026-இல் கைவிடப்பட்டதற்கு இப்போது அவசரம் ஏன்? என்ற கேள்வியும் தேர்தல் ஆணையத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.

இங்குதான் முக்கியமான கேள்வி எழுகிறது. SIR என்னும் பெயரால், 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து அநியாயமாக நீக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 33%, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் 21%, தமிழ்நாட்டில் 11.5% என வாக்காளர்கள் கொத்துக் கொத்தாகத் துண்டிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இமாலயத் தவறுகளுக்குச் சுருக்கமுறைத் திருத்தம் தீர்வாகுமா?

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள SSR நடைமுறையில், ஏற்கெனவே SIR-இன் போது ‘தகுதியற்றவர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கோடிக்கணக்கான வாக்காளர்கள், தானாகவே மீண்டும் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படப் போவதில்லை; அவர்கள் மீண்டும் புதிய வாக்காளர்களைப் போல ‘படிவம் 6’ (Form 6) அல்லது திருத்தத்திற்கான ‘படிவம் 8’ ஆகியவற்றைக் கொடுத்து, தங்களின் வாக்காளர் உரிமையை மீட்டெடுக்கவேண்டும் என்ற நிலையே நீடிக்கிறது.

இரண்டு மாத காலத்திற்குள் இத்தனை கோடிப் பேரின் மனுக்களைப் பரிசீலித்து, முறையான விசாரணை நடத்தி, ஜனவரி 4, 2027-க்குள் உண்மையான வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, SIR உருவாக்கிய பேரழிவை இந்த அவசர SSR ஒருபோதும் சரிசெய்துவிட முடியாது. இது காயப்பட்ட இடத்திற்கு மருந்து போடாமல், மேலே ஒப்பனை செய்யும் வெறும் தற்காலிக மழுப்பல் வேலையாகும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துகளைப் புறக்கணித்துத் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததும், ஒன்றிய அரசின் கேபினட் செயலாளரின் தலையீட்டை அனுமதித்ததும், உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி, தேர்தல் ஆணையம் தலைகுனிந்து நிற்கிறது.

தேர்தல் ஆணைய அமைப்பிற்குள் வெடித்துள்ள பூசலும், மக்கள் மத்தியில் இழந்து நிற்கும் சுயாட்சி நம்பகத்தன்மையும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை வரலாற்றுச் சந்தியில் நிறுத்தியுள்ளன. ‘மனச்சான்றின்படி வாக்களியுங்கள்’ என மக்களுக்குப் போதிக்கும் ஆணையம், தன் மனச்சான்றை அடகு வைத்துவிட்டுச் செயல்படுவதை இந்திய சனநாயகம் ஒரு போதும் இனி சகித்துக்கொள்ளாது.

SIR-இல் நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் முழுமையான தரவுகளை வெளிப்படையாக வெளியிட்டு, தவறிழைத்த அதிகாரிகளைத் தண்டித்து, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களின் வாக்குரிமையையும் எவ்வித நிபந்தனையுமின்றி மீட்டெடுப்பதே தேர்தல் ஆணையம் தனது கறையைப் போக்கிக்கொள்ளும் ஒரே வழியன்றி வேறில்லை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்