news-details
ஆன்மிகம்
பிரான்சிஸ் உணர்த்தும் மனமாற்றம்

புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் தெரிந்தது.  அவரின் வாழ்வை மூன்று பகுதிகளாக நாம் பார்க்கலாம்:

முதல் பகுதி (1182-1202): செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார், வளர்ந்தார்.  இளமையில் இளைஞருக்குரிய செயல்பாடுகள் மிஞ்சி இருந்தது. படைவீரர் ஆனார், அதிலும் மிகச் சிறந்த படைவீரனாக மாற விரும்பினார்.

இரண்டாம் பகுதி (1202-1224): பிரான்சிசின் வீரப்பயணத்தை ஆண்டவர் தடுத்து நிறுத்தினார். தமக்காக அழைக்கின்றார்; ‘அவராகவே (இயேசு) மாற’ செயல்படுகின்றார்.

மூன்றாம் பகுதி (1224-1226): ஐந்து காயங்கள் பெற்ற பின்பு மறு கிறஸ்துவாகவே மாறி விடுகின்றார்.

புனித பிரான்சிஸ் வாழ்வில் இரண்டு வகையான மனமாற்றம்:

1202 முதல் 1224 - செயல்வடிவுக்கான மாற்றம்: தன்னுடைய மனமாற்றத்திற்குப் பின்பு தன்னுடைய வாழ்வில் கிறிஸ்துவின் வார்த்தைக்குச் செயல்வடிவம் கொடுக்கின்றார். தமியான் ஆலயத்தைப் புதுப்பிக்கின்றார்; தன்னோடு இணைந்த சகோதரர்களுக்கு இறைவார்த்தையை அறிவிக்கின்றார். அவர்களின் வாழ்க்கையை எளிய சகோதரத்துவ வாழ்வாக மாற்றுகின்றார். இறைவார்த்தையைப் புனித பிரான்சிசே போதிக்கின்றார்.  எனவே, முதல் மனமாற்றம் என்பது இறைவார்த்தைக்குச் செயல் வடிவம் கொடுக்கின்ற மனமாற்றம்.

1224 முதல் 1226 - இருத்தலுக்கான மனமாற்றம்: இரண்டாவது மனமாற்றம் என்பது இறைவனோடு இணைந்த நிலை மாற்றம்.  இந்த மனமாற்றம்தான் புனிதரை அதிகமாகக் கடவுளின் படைப்புகளை நேசிக்க வைத்தது.  படைப்பு அனைத்தையும் சகோதர-சகோதிரிகளாகக் காணச்செய்தது. சூரியனைத் தன் சகோதரனாகவும், சந்திரனைச் சகோதரியாகவும் பார்க்க வைத்தது. இந்தக் காலத்தில்தான் இயற்கையைப் பற்றிப் பாடினார். இந்தக் காலகட்டத்தில் புனிதரின் வாழ்வு ஓர் உயிர்த்தெழுதல் பெற்ற வாழ்வாக மாறியது.

அசிசி நகர மேயருக்கும் ஆயருக்கும் கருத்து மோதல்கள் இருந்தபோது, ‘இறைவன் உங்களுக்கு அமைதி அளிப்பாராக!’ என்று சகோதர வஞ்சையோடு வாழ்த்தி அவர்களிடம் அமைதியை உருவாக்கினார். தன்னுடைய இறப்பின்போது அனைத்துச் சகோதரர்களையும் அழைத்து “இறப்புதான் முடிவில்லா வாழ்வுக்கு விதை” என்று சொல்லி, கொண்டாட வைத்தார்.

இயேசுவின் போதனைகளில் மனமாற்றம் பல பரிமாணங்களில் பார்க்கப்பட்டாலும், ஆழமாகப் பார்க்கின்றபோது கடவுளையும் மனிதனையும் அன்பு செய்வதுதான் நல்ல மனமாற்றத்திற்கான மனித வெளிப்பாடு. அதைத்தான் தன்னுடைய மனமாற்றத்திற்குப் பின்பு புனித பிரான்சிஸ் அசிசியார் தன் வாழ்விலும் கடைப்பிடித்தார்.

நம் ஆண்டவரைப் போலவே, புனித பிரான்சிஸ் அசிசியாரும் கடவுளையும் மனிதர்களையும் மட்டும் அன்பு செய்யவில்லை; கடவுளின் படைப்பு முழுவதையுமே அன்பு செய்தார்.  இதுதான் புனித பிரான்சிஸ் அசிசியார் நமக்கு உணர்த்தும் உண்மையான மனமாற்றம்.