news-details
தலையங்கம்
வரம்பு மீறிய தேர்தல் ஆணையத்தால் வாக்குரிமை இழந்த குடிமக்கள்?

‘சனநாயகம்’ என்பது வெறும் வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமல்ல; மாறாக, அது அத்தொகுதியைத் தீர்மானிக்கும் குடிமக்களின் தன்னாட்சி உரிமை கொண்டது. ‘மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி முறை’ எனப் பெருமைகொள்ளும் மக்களாட்சித் தத்துவம், அதிகாரம் மக்களிடமே உள்ளது என்ற கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆட்சி அமைப்பு.

ஒரு மக்களாட்சியில், அரசின் முடிவுகள் மக்களின் கூட்டு விருப்பத்தைப் பிரதிபலிப்பதோடு, அவர்களின் தனிப்பட்ட உரிமைகளையும் பாதுகாக்கவேண்டும். ஓர் இறையாண்மையுள்ள சனநாயக நாட்டில், இத்தகைய உரிமையைப் பாதுகாக்கும் தலையாய பொறுப்பு அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகளுக்கே உரியது. இந்தியத் திருநாட்டில், மக்களாட்சியின்  தூண்களைத் தாங்கிப் பிடிக்கும் தன்னாட்சி அமைப்புகளில் முதன்மையானதாக விளங்குவது ‘இந்தியத் தேர்தல் ஆணையம்.’

அரசைத் தேர்ந்தெடுக்க உதவுவது, தேர்தல் செயல்பாடுகளை நடுநிலையோடு கண்காணிப்பது, விதிமீறல்களைத் தண்டிப்பது என மகத்தான பங்களிப்பை ஆற்றி வந்த தேர்தல் ஆணையத்தின் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டு வீதிக்கு இழுக்கப்பட்டிருப்பது, இந்தியச் சனநாயகத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரவலமாகும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் சர்ச்சைகளில் சிக்குவது இது முதன்முறையல்ல; கடந்த காலங்களில் அரசிற்கும் ஆணையத்திற்கும் இடையேயான அதிகார மோதல்களாகவோ, தனிப்பட்ட அதிகாரிகளின் அரசியல் சார்பு நிலைகளாகவோ அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் எழுந்த ஐயங்களாகவோ அவை இருந்தன. ஆனால், இன்றைய சூழல் முற்றிலும் வேறுபட்டது; முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மிகவும் ஆபத்தானதும் கூட.

இன்று தேர்தல் ஆணையம், இந்தியக் குடிமக்களில் ‘யாருக்கு வாக்குரிமை உண்டு? யாருக்கு இல்லை?’ எனக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய ‘வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை’ எனும் அடிப்படை உரிமையிலேயே நேரடியாகக் கைவைத்திருக்கிறது.

வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது தேர்தலுக்கு முன்போ நடத்தப்படும் ‘சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தம்’ (Special Summary Revision - SSR) என்பது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, முகவரி மாற்றங்களைச் செய்வது போன்ற அன்றாடப் பணிகளை உள்ளடக்கியது.

ஆனால், ‘சிறப்புத் தீவிரத் திருத்தம்’ (Special Intensive Revision - SIR) என்பது அப்படியல்ல. அது வாக்காளர் பட்டியலையே முழுமையாக மறுபரிசீலனை செய்து, அனைவரின் தகுதியையும் புதிதாக உறுதிப்படுத்தி, முற்றிலும் புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் ஒரு தீவிரமான செயல்திட்டமாகும்.

சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகளில் சீரான இடைவெளிகளில் SIR நடத்தப்பட்டு வந்திருந்தாலும், இம்முறை இந்தியத் தேர்தல் ஆணையம் வடிவமைத்த நடைமுறைகள் மிகவும் கடினமானதாகவும், நடைமுறைச் சாத்தியமற்ற சிக்கல்கள் நிறைந்ததாகவும் அமைந்தன.

ஒவ்வொரு குடிமகனும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற SIR கணக்கெடுப்போடு தங்களுக்கு இருக்கும் தொடர்பை ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்கவேண்டும்; தவறினால் தங்களின் வாக்குரிமையைத் தக்கவைத்துக்கொள்ள மலைபோல் ஆவணங்களைத் தூக்கிக்கொண்டு தேர்தல் அலுவலர்களை நேரில் சென்று சந்திக்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது.

இதன் விளைவாக, நாடு முழுவதும் இதுவரை சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் சுமார் 13 விழுக்காடாகும். அதிகபட்சமாக டெல்லியில் 33% வாக்காளர்களும், தெலுங்கானா, மகாராஷ்டிராவில் 21% வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இப்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் அதிர்ச்சி தரவைக்கும் விழுக்காட்டில் வாக்காளர்கள் நீக்கம் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 11.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் மீண்டும் தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டுப் பெயரை இணைத்துக்கொள்ள முடியும் என்றாலும், அது தொடர்பான முழு நிலவரம் இன்னும் வெளிவரவில்லை.

இந்தியாவின் இரண்டு பெரிய மாநிலங்களின் மொத்த மக்கள்தொகைக்குச் சமமான 13 கோடிப் பேரின் வாக்குரிமை ஒரே பேனா மை வீச்சில் பறிக்கப்பட்டிருக்கிறது. ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெயர்களை நீக்குகிறோம்’ என்ற தேர்தல் ஆணையத்தின் வழக்கமான சாக்குப்போக்கை நம்பி, சனநாயகக் கடமையாற்ற முடியாமல் போனதைச் சகித்துக்கொண்ட மக்களுக்கு, இந்த SIR நடைமுறைப்படுத்தப்பட்டதில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் குளறுபடிகளும் வெளிச்சத்திற்கு வந்தபோது பேரதிர்ச்சியே காத்திருந்தது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், தற்போது உச்ச நீதிமன்றத்தின் பார்வைகளுக்கும், கடும் மக்கள் எதிர்ப்பிற்கும் உள்ளாகியுள்ளன. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை, தேர்தல் ஆணையத்தின் உள்ளேயே வெடித்துள்ள பெரும் பிளவை அம்பலப்படுத்தியுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் கொண்ட மூவர் குழுவே இணைந்து முடிவுகளை எடுக்கவேண்டும். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சக தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஆலோசனைகளையும் எதிர்ப்புகளையும் முற்றிலுமாகப் புறக்கணித்து, கடந்த பத்து மாதங்களில் குறைந்தது 14 முறையாவது தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6-இல், நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி SIR தொடர்பான கூடுதல் விவரங்களை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இதனைத் தன்னிச்சையாகச் சேர்த்தது ‘சட்டவிரோதமானது மற்றும் அதிகார வரம்பு மீறியது’ என உச்ச நீதிமன்றமே எச்சரிக்கும் நிலைக்கு நிலைமை முற்றியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் உள்விவகாரங்கள் குறித்து ஒன்றிய அரசின் கேபினட் செயலாளரிடம் முறையிட்டதும், தன்னாட்சி அமைப்பின் சுயாட்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்காமல், டெல்லியில் இருந்துகொண்டே மென்பொருள்கள் மூலமாக வாக்காளர் பட்டியலைக் கட்டுப்படுத்தியுள்ளனர். பெயர்கள் சேர்ப்பதும் நீக்கப்படுவதும் மாநில அதிகாரிகளின் கட்டுப்பாட்டைத் தாண்டி, டெல்லியிலிருந்து தீர்மானிக்கப்பட்டது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கே விடப்பட்ட சவாலாகும். முறையான காரணங்களின்றி, எவ்விதத் தெளிவான தரவுகளுமின்றி ஒரே நேரத்தில் 13 கோடிப் பேர்களின் வாக்குரிமையைப் பறித்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகும்.

இச்செய்தி  பூதாகரமாக வெடித்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்ட நிலையிலும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) போன்ற இளைஞர் அமைப்புகள் நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்த நிலையிலும், தேர்தல் ஆணையம் அவசர அவசரமாகச் கூடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

“ஆணையத்திற்குள் பிளவு எதுவுமில்லை; முடிவுகள் ஒருமனதாகவே எடுக்கப்பட்டன” என்றும், “இனி மக்கள் அலுவலர்களைத் தேடி ஓட வேண்டியதில்லை, அலுவலர்களே மக்களைத் தேடி வருவார்கள்” என்றும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளது. ஆனால், இவை அனைத்தும் பரிதாபகரமாகத் தரையில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைச் சிறிதும் மீட்டெடுக்கப் போவதில்லை.

இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது சாதாரண அமைப்பல்ல; மாறாக, அது கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சனநாயகத்தின் இதயம். அதன் ஆணையாளர்கள் நீதிபதிகளுக்கு நிகரான நடுநிலையையும் நியாயத் தராசையும் ஏந்தியிருக்க வேண்டியவர்கள்.

எனவே, தேர்தல் ஆணையம் தன் மீதான கறையைப் போக்க வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும். SIR கணக்கெடுப்பில் நடந்த தவறுகள் மற்றும் தன்னிச்சையான முடிவுகள் குறித்து நடுநிலையான உயர்மட்ட விசாரணைக்கு ஆணையம் உள்படவேண்டும். நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் விவரங்களையும், நீக்கத்திற்கான சரியான காரணங்களையும் மாநில வாரியாக வெளிப்படையாகத் தரவுகளோடு வெளியிடவேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையரின் தன்னிச்சையான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மூவர் குழுவின் சனநாயகப்பூர்வமான முடிவெடுக்கும் முறையை மீட்டெடுக்கவேண்டும்.

இறுதியாக, மக்களைத் தங்களின் மனச்சான்றின்படி வாக்களிக்கச் சொல்லும் தேர்தல் ஆணையம், முதற்கண் தன் மனச்சான்றின்படி மதிப்பளித்து நேர்மையோடு நடந்துகொள்வதே இந்தியச் சனநாயகத்தைக் காப்பாற்றும் ஒரே வழியாகும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்