news-details
சிறப்புக்கட்டுரை
மனம் எனும் மயக்கநிலை (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 14)

நமக்கு ஒரு சம்பவம் நடந்து முடிந்துவிட்டது; அந்த மனிதர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்; அந்த வேலை முடிந்துவிட்டது; அந்தத் தவறு நடந்து முடிந்துவிட்டது; அந்த வார்த்தைகள் சொல்லப்பட்டுவிட்டன; ஆனால், அந்தச் சம்பவம் நம் வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட்டாலும், அதை நம் மனம் வெளியேற்றாமல் வைத்திருக்கிறது. அதனால்தான் சில காயங்களுக்கு மருந்து போடமுடியாது; அவை உடலில் இல்லை, மனத்தில் இருக்கின்றன.

ஒருவர் நம்மிடம் கூறிய ஒரு கடுமையான வார்த்தையை நாம் மறந்துவிட்டோம் என்று நினைத்தாலும், பல வருடங்கள் கழித்தும் அது நம் நினைவிற்கு வரலாம். அதேபோல், நம்மை நம்பி ஒருவர் கூறிய ஓர் அழகான வார்த்தையும் நம் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக மாறிவிடலாம். இதிலிருந்து மனத்தின் மற்றொரு மயக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். ‘என்ன ஆகுமோ?’, ‘நாளை என்ன ஆகும்?’, ‘நான் தோல்வியடைந்தால்?’, ‘அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?’, ‘இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றால்?’, ‘எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால்....?’

இப்படி நம்முடைய மனம் எதிர்காலத்தைப் பற்றி ஆயிரம் கதைகளை உருவாக்குகின்றது. ஆனால், அதில் பெரும்பாலானவை நடந்ததே இல்லை. நடக்காத நாளுக்காக இன்றைய நாளை இழக்கிறோம். இதுதான் கவலையின் விசித்திரம். நாம் எதிர்கொள்ளாத ஒரு பிரச்சினைக்காக இன்று கவலைப்படுகிறோம்; நாளை அந்தப் பிரச்சினை வராமல் போகலாம். வந்தாலும் நாம் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லாமல் போகலாம். ஆனால், அதற்குள் இன்றைய அமைதியை இழந்திருப்போம்.

மனத்தைப் பற்றி ஓர் அழகான விசயம் என்ன தெரியுமா? அது நம்மை ஏமாற்றவும் முடியும்; அதே மனம்தான் நம்மை மீட்டெடுக்கவும் முடியும். ‘என்னால் முடியாது’ என்று மனம் கூறினால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். ‘ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம்’ என்று அதே மனம் கூறினால் வாழ்க்கையே மாறிவிடுகிறது. ஒரு தோல்வியை ஒருவர் ‘முடிவு’ என்று பார்க்கலாம்; மற்றொருவர் அதையே ‘அடுத்த முயற்சிக்கான பாடம்’ என்று பார்க்கலாம். நிகழ்வு ஒன்றுதான்; பார்வை வேறு; மனநிலை வேறு; முடிவும் வேறு.

அப்படியானால், மனத்தை எப்படிக் கையாள்வது? மனத்தை அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்றால், முதலில் அதை எதிரியாகப் பார்க்கக் கூடாது. கவலை வந்தால், ‘கவலைப்படாதே’ என்று சொல்லிப் பயனில்லை; அதற்குப் பதிலாக, ‘நான் ஏன் கவலைப்படுகிறேன்?’ என்று கேட்க வேண்டும். கோபம் வந்தால், ‘இந்தக் கோபம் என்னைக் காப்பாற்றுகிறதா?’ அல்லது ‘என்னைக் காயப்படுத்துகிறதா?’ என்று கேட்கவேண்டும். வருத்தம் வந்தால், ‘இந்த நினைவிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ள முடியும்?’ என்று கேட்கவேண்டும். சில நேரங்களில் நம் மனத்திற்கு அறிவுரை தேவையில்லை; அதற்குக் கொஞ்சம் அமைதி தேவை, கொஞ்சம் தனிமை தேவை, கொஞ்சம் அன்பு தேவை. அதிலும் முக்கியமாக, நம்மிடமிருந்து நமக்கே கொஞ்சம் புரிதல் தேவை.

நாம் மற்றவர்களை மன்னிப்பதைப் பற்றி நிறையப் பேசுகிறோம். ஆனால், சில நேரங்களில் நாம் மன்னிக்க வேண்டிய முதல் மனிதர் நாமாகவே இருக்கிறோம். ‘அன்று நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது;… அந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. அந்த வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன்’ என்று நம்மையே குற்றம் கூறிக்கொண்டே இருப்போம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள்... அன்று உங்களுக்குத் தெரிந்த அறிவைக் கொண்டு அன்றைய சூழ்நிலையில், அன்றைய மனநிலையில் நீங்கள் எடுத்த முடிவுதான் அது. இன்று உங்களிடம் இருக்கும் அனுபவம் அன்று உங்களிடம் இல்லை. அதனால் கடந்த காலத்தில் இருந்த உங்களை இன்றைய அறிவால் தண்டிக்காதீர்கள்.

வாழ்க்கை என்பது எப்போதும் நாம் நினைப்பது போல நடக்காது. சிலர் நம் வாழ்க்கைக்குள் வருவார்கள்; சிலர் வெளியேறுவார்கள்; சில வாய்ப்புகள் கிடைக்கும்; சில வாய்ப்புகள் நம்மைத் தவிர்த்துச் செல்லும். சில கனவுகள் நனவாகும்; சில கனவுகள் நம்மை வேறு ஒரு பாதைக்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது மனம் குழம்பலாம். அப்போது ஒரு விசயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்: ‘எல்லாவற்றிற்கும் உடனடியாகப் பதில் கிடைக்கவேண்டிய அவசியமில்லை.’ சில கேள்விகளுக்குக் காலம் பதில் சொல்லும்; சில காயங்களுக்குக் காலம் மருந்தாகும்; சில பிரிவுகளுக்குக் காலம் அர்த்தம் சொல்லும்; சில தோல்விகள் பின்னாளில் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடமாக மாறும். எனவே, ‘மனம்’ எனும் மயக்கநிலையிலிருந்து வெளியே வருவது என்பது எண்ணங்கள் இல்லாத நிலை அல்ல; எண்ணங்கள் இருந்தாலும் அவற்றால் நாம் இழுத்துச் செல்லப்படாமல் இருப்பது. கடந்த காலத்தை நினைத்தாலும் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது. எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிட்டாலும் அதற்காக நிகழ்காலத்தை இழக்காமல் இருப்பது. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட, நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை முக்கியமாகக் கருதுவது.

மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்போது வாழ்க்கையில் பிரச்சினைகள் குறையாது; ஆனால், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நம் திறன் அதிகரிக்கும். சூழ்நிலைகள் மாறாமல் இருக்கலாம்; அதைச் சுற்றிப் பார்க்கும் நம் பார்வை மாறும். வாழ்க்கை மாறாமல் இருக்கலாம்; வாழ்க்கையை வாழும் விதம் மாறும். அதுதான் மனத்தின் சக்தி.

இறுதியாக ஒரு சிறிய கேள்வி: நம்மை அதிகமாகச் சோர்வடையச் செய்வது வாழ்க்கையா? அல்லது வாழ்க்கையைப் பற்றி நாம் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதா? ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள். உங்கள் மனத்தைக் கவனியுங்கள். அதில் ஓடும் எண்ணங்களைப் பாருங்கள். அவற்றில் சில கடந்த காலத்தைச் சார்ந்தவை; சில எதிர்காலத்தைச் சார்ந்தவை. ஆனால், நீங்கள்? நீங்கள் இந்த நொடியில் இருக்கிறீர்கள். அதனால் கடந்ததைப் பாடமாக எடுத்துக்கொள்வோம்; எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்; ஆனால், நிகழ்காலத்தை மட்டும் தவறவிடாமல் வாழ்வோம். ஏனென்றால், மனம் ஒரு மயக்கநிலைதான்; ஆனால், அந்த மயக்கத்திலிருந்து விழித்தெழும் தருணம்தான் நம் உண்மையான வாழ்க்கையின் தொடக்கம். தவறுகளை நினைவுகளாக வைத்துக்கொள்ளுங்கள்; தண்டனைகளாக வைத்துக்கொள்ளாதீர்கள்.