“நாட்டுப்பற்று என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்கோ (Teritory), அந்நாட்டின் ஒரு கொடிக்கோ அளிக்கப்பெறும் மரியாதையில் அடங்குவதல்ல; நாட்டுப்பற்று என்பது நாட்டில் வாழும் குடிமக்களிடம் காட்டப்பெறும் தோழமையில் வெளிப்படுவது. ஒரு நாட்டின் அடையாளம் (National Identity) என்பது குடும்பம், சமூகம், நம்பிக்கை என்னும் எல்லைகளைத் தாண்டி (Borders) மானுடர் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் பந்தமாகும் (Bonds). தேசிய அடையாளங்கள் (Symbols), தேசிய கீதங்கள் என்பனவெல்லாம் இப்பந்தங்களை வலுவாக்கிடும் கருவிகள்தாம். ‘பெரும்பான்மை’ எனும் பெயரில் பெரும்பான்மைவாத அரசியல் மூலம் குடிமக்கள்மீது திணிக்கப்பெறும் எந்தவிதக் கட்டாயமும் - உருவாக்கப்பெற வேண்டிய பந்தத்தை உடைத்தெறியவே வழிவகுக்கும்” (தி ‘இந்து - தலையங்கம், செப். 25, 2026).
‘தேசங்களின் கீதம் அல்லது பாடல்’(Song) என்ற தலைப்பில்
வெளியான இந்தத் தலையங்கத்தை அனைவரும் படிக்கவேண்டும் என்பதே எம் அவா.
தேசப்பெருமை
(Honour), பாதுகாப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் (2026) தேசிய கீதத்தை முழுமையாகப் பாடாது விடுவோமானால், இப்போக்கு தேசத்தையும் தேசிய கீதத்தையும் அவமதிக்கும் (Insult) என்ற எச்சரிக்கையையும்
விதித்தது. தேசிய கீதத்தை அவமதிக்கும் போக்கு எவருக்கும் இல்லை. இந்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று பாடப்பெறும் தேசிய கீதத்தை எவரும் அவமதிப்பதில்லை.
1937-ஆம் ஆண்டு
நடைபெற்ற காங்கிரஸ் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கிம் சட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை, தேசியக் கூட்டங்களில் பாடவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது, இப்பாடலின் முதல் இரண்டு அடிகளை மட்டும் பாடினால் போதும் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
இந்தியா
குடியரசான 1950-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் தாகூர் இயற்றிய ‘சன கண மன’ எனத்
தொடங்கும் பாடலைத் தேசிய கீதமாகப் பாடுவது என முடிவெடுக்கப்பட்டது. அப்போதே எல்லாரும்
அறிந்திருந்த ‘வந்தே மாதரம்’ பாடலும் பாடவேண்டும் என்ற விவாதம் எழுந்தபோது, ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவு எதுவும் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதல்ல; பங்கிம் சட்டர்ஜியின் முழுப்பாடலையும் பாடவேண்டாம் என்ற முடிவில் பண்டித நேரு இருந்தார். அரசமைப்புச் சட்ட அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இராஜேந்திர பிரசாத்தும் அம்முடிவிலேயே இருந்தார். இம்மாபெரும் தலைவர்கள் முழுப் பாடலையும் பாடவேண்டாம் என்ற முடிவில் ஏன் இருந்தார்கள்? ‘தாய்நாட்டை வணங்குவோம்’ என்ற
தலைப்பில் அமைந்த பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டுமே பாடவேண்டும் என்று ஏன் இவர்கள் வலியுறுத்தவேண்டும்? முதல் இரண்டு வரிகளையும் தவிர்த்த ஏனைய வரிகள் அனைத்தும் பாரத தேவியையும், பாரதத்தின் வழிபடு தெய்வங்களாகிய துர்க்கை, சரஸ்வதி என்போரைப் போற்றி வழிபடும் வகையில் அமைந்திருப்பதால், ஒரு பன்மைச் சமூகத்தில் பல்வகை வழிபாடுகளும், பல்வகை வழிபாட்டுத் தெய்வங்களும் இருப்பது இயல்பு என்பதனால், சுதந்திரம் பெற்ற இந்தியா எந்தவித மத அடையாளமும் கொண்ட
நாடாக இருத்தல்கூடாது என்பதிலும், மதச்சார்பற்றக் குடியரசாகவே இயங்கவேண்டும் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்த இத்தலைவர்கள், முதல் இரண்டு வரிகள் போதும் என்று பரிந்துரைக்கவே, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
‘வந்தே மாதரம்’ என்ற பாடலின்
பின்னே இருக்கும்
அரசியல்
என்ன?
‘வந்தே மாதரம்’ என்ற பாடலை காங்கிரஸ் எப்போதுமே ஆதரித்ததில்லை என்பதோடு, ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை முழுமையாக காங்கிரஸ் கட்சி 1937-லேயே எதிர்த்து வந்ததன் மூலம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்துகளுக்கும் காங்கிரஸ் எதிரானதென்பது போன்ற ஒரு பரப்புரையைச் சங்கப் பரிவாரங்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.
‘இரண்டு அடிகள் மட்டும் பாடினால் போதும்’ என்ற காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைத்தலுக்கும், இன்றைய மதவாத அரசு முன்னெடுத்துள்ள முறைமைக்கும் உள்ள காலவெளியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் கவனத்தில் கொண்டால், இந்திய அரசியலின் போக்கில் நடந்துள்ள மிகப்பெரிய சீர்கேட்டினை நாம் அறியமுடியும்.
இந்தியா
விடுதலை பெற்ற காலத்திலேயே மதம்சார்ந்த அல்லது மத அடையாளத்தைத் தாங்கிய
‘வந்தே மாதரம்’ பாடலில் ஒரு பெரும்பான்மை மதம்சார்ந்தோரின் அடையாளமான தெய்வங்களைத் துதித்தல் என்பது, பன்மைச் சமூகத்தின் அடையாளத்திற்கு வேற்றுமையுள் ஒற்றுமையை விரும்பும் அரசியலுக்கு நேர் எதிரானது என்பதால், அப்போதே அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல், தீர்க்கத்தரிசனத்தோடு ஒதுக்கிய இம்மாமனிதர்களை நினைத்துப் பார்த்து நன்றி சொல்வோம்.
இந்தியா
விடுதலை பெற்று, ‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்று பெயரிட்டு, சுதந்திரக் குடியரசை மதச்சார்பற்ற குடியரசாக அறிவித்து, குடிமக்கள் சமத்துவ உரிமையுடையவர்கள், மதம்-மொழி-இனம் ரீதியிலான பாகுபாடற்றவர்கள் என்று அறிவித்து, இப்போக்கிற்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பையும் கொடுத்த பின்பும், இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்பெறவேண்டும் என்ற
திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. என்னே... வீழ்ச்சி!
இந்தியாவிற்கென்று
அறிவிக்கப்பட்ட ஓர் அடையாளத்திற்கும் (Identity) இன்று இந்திய அரசின் நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் என்னதான் நடந்தது? இந்தியா, தான் உறுதியாக எடுத்த நிலைபாட்டிலிருந்து ஏன் தோற்றுப் போயிற்று?
பல்சமய
நம்பிக்கை உடைய ஒரு நாட்டில் பன்மைக் கலாச்சாரமே இந்நாட்டின் உயிர்க்கொள்கை என்ற அடிப்படையில், பன்மைக் கலாச்சார அடிப்படையில் பன்மையைப் போற்றும் வகையில் உருவான அரசியல் சித்தாந்தம் இங்கு ஏன் தோற்றுப்போயிற்று?
‘மதவாத அரசியல் என்ன செய்யும்?’ என்பதனை முன்கூட்டியே உணர்ந்திருந்த அன்றைய பெருந்தலைவர்கள்கூட, இன்று நாம் காண்கிற மதவாத அரசியலின் அனைத்துவகை பரிமாணங்களும் நனவாகும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்துத்துவர்கள்
இந்திய தேசத்தை வெறும் புவி சார்ந்த அளவில் சுருக்கி, ‘இது இந்து நாடு; இந்துகளின் நாடு; இந்த நாட்டில் நிலவும் இந்து மதம் இந்தியாவின் இதயம்; இதைப் புண்ணிய பூமியாக, பித்ரு பூமியாக ஏற்பவர்கள் மட்டுமே இந்தியர்களாக இருக்க முடியும்’
என்கிறார்கள்.
இதை இவர்களின் குரு சவார்க்கர் அழுத்தமாகவே கூறியுள்ளார். ‘இந்து’ இத்தேசத்தின் கலாச்சாரம், ‘இந்து’ இந்தியாவின் ஆன்மா என்றெல்லாம் பேசி, நடைமுறைப்படுத்த முற்படும் கொள்கைகள், இவ்வரசின் அனைத்துவகை நடவடிக்கைகளிலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியானால் நாம் போற்றவேண்டிய வேற்றுமையில் ஒற்றுமை என்னவாவது? வேற்றுமையுள் ஒற்றுமையைப் பேணவேண்டிய பன்மை (Pluralism) இனி என்னவாகும்?
“தேசம் எனும்
கருத்து
(idea)
எப்போதும் இந்தியாவில் இல்லை;
அரசியல்
ரீதியான
தேசம்
நம்மிடம்
இல்லை;
இது
இப்போதைய
வளர்ச்சியாக
இருக்கலாம்;
ஆனால்,
இந்தியாவில்
கலாச்சார
மற்றும்
ஆன்மிகக்
கருத்துள்ள
தேசமே
எப்போதும்
இருந்து
வந்துள்ளது” என்கிறார்
அரவிந்தர்.
“இந்தியா ஒரே
வடிவிலான
ஒன்று;
இங்கு
வாழும்
அனைத்து
மக்களும்
பொதுவான
ஒரு
கலாச்சாரத்தை
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாகத்
தாங்கி
வாழ்ந்து
வருகின்றனர்” என்கிறார்
அருண்சோரி.
இந்நாட்டை
இந்துத்துவர்கள் எப்போதுமே ‘நாடு’ என்று அழைப்பதில்லை. இந்தியாவை ‘துணைக்கண்டம்’ என்று
அழைப்பதிலும் இவர்களுக்கு உடன்பாடில்லை. இந்தியாவைத் தேசமாகப் பார்க்கும் இவர்கள், இந்தியா பல தேசங்களால் ஆனது
என்ற உண்மையையும் ஏற்பதில்லை. ‘துணைக்கண்டம்’ என்றழைப்பதிலும்,
‘நாடு’ என்று
அழைப்பதிலும் தொக்கி நிற்கும் பன்மைப் பண்பு, இவர்களின் ‘தேசம்’ என்ற கருத்தாக்கத்திற்கு எதிரான ஒன்று. ஏனெனில், வேற்றுமை என்பது இயல்பான ஒன்று என்பதையும், வேற்றுமையை மதித்தலே சனநாயகம் என்பதையும் இந்துத்துவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதே இல்லை.
நாம்
வாழும் நாட்டை நாம் மதிக்கிறோம்; நாம் வாழும் நாட்டின் அடையாளமாகத் திகழும் அரசமைப்புச் சட்டத்தையும் மதிக்கிறோம்; இந்தியப் பண்பின் அடையாளமாகிய பன்மைப் பண்பையும் ஆராதிக்கிறோம். இந்நாட்டின் நிலவும் பல் சமயங்களையும் மதிக்கும் நாங்கள், ‘மத நல்லிணக்கத்தைப் பேணுவோம்’ என்னும் உறுதியையும் அளிக்கிறோம். ஆனால், இந்திய அரசின் மதச்சார்பின்மை எனும் கொள்கைக்கு எதிராக, ஒரு மதம் சார்ந்த அடிப்படையில் இயங்கும் அரசின் கொள்கைகளை நாங்கள் ஏற்கவில்லை. ‘தேசிய கீதம்’ என்ற பெயரில் அனைவரும் அனைத்துப் பொது நிகழ்வுகளிலும் கட்டாயம் அதைப் பாடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் ஏற்கமுடியும்.
மதங்கள்
பல உடைய நாட்டில், ஒரு மதம்சார்ந்த மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வங்களை உள்ளடக்கிய தேசிய கீதத்தைப் பாடவேண்டும் என்று வற்புறுத்துவதை ஏற்க மறுக்கிறோம். அரசின் இவ்வாணை மதச் சுதந்திரத்தையும், மத ரீதியான நம்பிக்கைகளையும்
கேள்விக்குள்ளாக்கும்
என்பதைப் புரிந்துகொள்வோம்.
இசுலாமியரின்
வழிபாட்டு நம்பிக்கைகளுக்கு இது எதிரானது; கிறித்தவத்தின் நம்பிக்கைக்கு இது எதிரானது. எனவே, இச்சட்டம் நடைமுறைக்கு வருகையில் அதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?
நாடெங்கும்
கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கிறித்தவத் துறவியர், இனிமேல் பள்ளிக் கூடுகையின்போது துர்க்கை, சரஸ்வதி எனும் தெய்வங்களின் ஆசிரோடுதான் தொடங்க வேண்டியிருக்கும். இம்முறை மீறப்பட்டால் அது தேசத்திற்கு எதிரானது; அது தேசத் துரோகமாகும்! தேசிய கீதம் பாடாவிட்டால் தேசத் துரோகமாகும் என்பதனால், நாம் பாடாது விட்டுவிடப் போகிறோமா? அல்லது பாடித்தான் சமரசம் செய்யப் போகிறோமா? சிந்திப்போம்.