news-details
ஞாயிறு மறையுரை
அனைத்துப் புனிதர்களின் பெருவிழா (01.11.2026) திவெ 7:2-4;9-14; 1யோவா 3:1-3; மத் 5:1-12 - மகிழ்ச்சியான புனிதமான வாழ்விற்கான செய்முறைகள்

“அம்மா, புனிதர்கள் என்பவர்கள் யார்?” என்று ஒரு சிறுவன் தன் தாயிடம் கேட்டான். அவனுடைய தாய் ஓர் அழகுவாய்ந்த பேராலயத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள். அங்கே வண்ணக் கண்ணாடி சன்னல்களில் புனிதர்களின் உருவங்கள் அழகாகப் பொறிக்கப்பட்டிருந்தன. காலைக் கதிரவனின் ஒளி புனிதர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த சன்னல்களின் வழியாக ஊடுருவி, அவ்வாலயத்தை ஒளியால் நிரப்பி இருந்தது. தாய் மகனைப் பார்த்துக் கூறினாள்: “இந்தச் சன்னல்கள் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வருவதைப் பார்க்கிறாயா? புனிதர்களும் அப்படித்தான். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் வழியாகக் கிறிஸ்துவின் ஒளியைத் தாங்கி, அதனைத் தங்களின் வாழ்வின் செயல்களில் வெளிப்படுத்தினார்கள்.” சிறுவன் சிறிது நேரம் சிந்தித்துவிட்டுக் கேட்டான்: “அப்படியென்றால் நானும் அப்படிப்பட்ட சன்னலாக மாறமுடியுமா?” தாய் கூறினாள், “ஆம், அதைத்தான் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும் விரும்புவதும். அவரின் ஒளியைத் தாங்கி, அதனைப் பிறருக்கு வழங்கிடவே அவர் விரும்புகின்றார்.”

இன்று அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவினைக் கொண்டாடுகின்றோம். அவர்களின் இப்புனித நிலைக்குக் காரணம், அவர்கள் அனைத்தையும் சரியாகச் செய்தார்கள், குறைகளின்றி வாழ்ந்தார்கள் என்பதால் அல்ல; மாறாக, அவர்கள் இறையருளும் இறையிரக்கமும் தங்களைத் தொட அவர்கள் அனுமதித்ததால், அவர்கள் புனிதர்களாக மாற்றம் பெற்றார்கள். இறை ஒளி அவர்களின் வாழ்வில் ஊடுருவி, செயல்படத் தொடர்ந்து அனுமதித்தார்கள். அதனையே விரும்பினார்கள், செயல்படுத்தினார்கள். இறை ஒளி ஊடுருவத் தடையாய் இருக்கும் பாவங்கள், அழுக்குகள், கறைகள் அனைத்தையும் புனிதர்கள் விட்டொழித்தார்கள். இறை ஒளியை வரவேற்றார்கள்; உள்ளத்தில் வெளிப்படுத்தினார்கள்; அதனையே உலகிற்கு வழங்கினார்கள்.

மலைப்பொழிவு பேறுகள் - வாழ்விற்கான வரைபடம்: இன்றைய நற்செய்தியில் இயேசு மலைமீது ஏறி அமர்ந்து சீடர்களுக்கு மலைப்பொழிவை எட்டு முதன்மைப் பேறுகளாகக் கற்பிக்கின்றார். பிரெஞ்சு விவிலிய அறிஞர் Jacques Pohier மலைப்பொழிவை இப்படியாகக் குறிப்பிடுகிறார்: ‘மலைப்பொழிவுகளின் எட்டு பேறுபெற்ற வாழ்க்கை முறைகள் என்பது மற்றொரு உலகில் சிறப்பாக வாழ்வதற்கான வரைபடம் அல்ல; மாறாக, மண்ணுலகிலேயே ஒரு புதிய வாழ்க்கை முறையைச் சிறப்பாக வாழ்வதற்கான வரைபடம்.’

Google Map Vs Christian Map: பயணிப்பவர்கள் தாங்கள் சென்றடைய இருக்கும் இடத்தினை அடைந்திட இன்றைய காலச்சூழலில் Google Map-ஐ பயன்படுத்தி, துல்லியமாக அவ்விடத்தை அடைகின்றனர். சில நேரங்களில் இவ்வலைதளத்தில் வழங்கப்படும் பாதைகள், நம்மைப் பாதைகள் இல்லாத சிக்கல்களான இடங்களில் நிறுத்துவதும் உண்டு. ஆனால், இயேசு கிறித்தவ வாழ்விற்கும், இறையாட்சி வாழ்விற்கும் வழங்கிடும் வரைபடங்களை மலைப்பொழிவுப் போதனைகள் வழியாக வழங்குகின்றார். அவையே சிறந்த வாழ்விற்கும், புனித வாழ்விற்கும் நம்மை இட்டுச்செல்லும் திசைமானிகள்.

உலகப் பேறுகளும் இறையாட்சியின் பேறுகளும்: இயேசு மலைப்பொழிவின் வழியாக வழங்கிட்ட போதனைகளை எட்டு பேறுகளாக மத்தேயு நற்செய்தியாளர் அட்டவணைப்படுத்துகின்றார். ஆனால், பணம், சுயவெறி, தன்னிலை உயர்வு, அதிகாரம் ஆகியவை உலகப் பேறுகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இவையே மகிழ்ச்சியின் அடையாளங்களாக உலகம் முன்வைக்கிறது. மனிதர் தேடும் இத்தகைய ‘மகிழ்ச்சி’ நீடித்த நிலையான மகிழ்ச்சி அல்ல; மாறாக, இயேசு முன்வைக்கும் மலைப்பொழிவின் எட்டு பேறுகளின் செயல்பாடுகளே நிலையான, நீடித்த, பேறுபெற்ற மகிழ்ச்சியின் தளங்கள்.

உலகம் முன்னிலைப்படுத்தும் பேறுகள்: 1. பணம் உள்ளவர்கள் பேறுபெற்றவர்கள், 2. ஆனந்தக் களியாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேறுபெற்றவர்கள், 3. புகழ் பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள், 4. வெற்றி பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள், 5. அனைவருக்கும் விட்டுக்கொடுக்கும் ஏமாளிகளாய் இல்லாதவர்கள் பேறுபெற்றவர்கள், 6. தன்னை உயர்த்திக்கொள்ள அனைத்தையும் செய்பவர்கள் பேறுபெற்றவர்கள், 7. சண்டை, பிரிவினை மற்றும் அநீதியான சூழலில் அதைப் பொருள்படுத்தாமல் தம் வழியே ஒதுங்கிச் செல்பவர்கள் பேறுபெற்றவர்கள், 8. எல்லாருக்கும் நல்லவர்களாய் இருப்பதுபோல் காட்டிக்கொள்பவர்கள் பேறுபெற்றவர்கள்.

இவ்வுலகப் பேறுகளை முன்வைப்பவர்கள் எளிய உள்ளத்தையும் தாழ்ச்சியையும், பிறருக்காகத் துன்புறுவதையும், பொதுநன்மைக்காகத் தங்களது சுயத்தையும் நேரத்தையும் இழக்க விரும்புவதில்லை. தன்னைப் பற்றியும், தன் சூழலைப் பற்றியும் மட்டுமே இவ்வுலகப் பேறுகள் சிந்திக்க வைக்கின்றன. ஆனால், இயேசு முன்மொழியும் இறையாட்சியின் பேறுகளோ இறைவனையும் பிறரையும் இணைக்கும் பாலங்கள்.

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் தங்களின் பணத்திலும் பலத்திலும் அறிவிலும் அதிகாரத்திலும் ஆளுமையிலும் மட்டும் நம்பிக்கை கொள்ளாமல், அவை அனைத்திற்கும் காரணமாய் அமையும் இறைவனின் அருளில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். தங்களின் செயலில் பெருமை பாராட்டாமல், இறைவனின் அருளைக் குறித்துப் பெருமைப்படுபவர்கள். இதுவே புனிதர்களின் பாதையாகவும் அமைந்திருந்தது.

துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள், துன்பங்களின் மத்தியிலும் இறைநம்பிக்கையில் தளர்வதில்லை. துன்பங்கள் புனிதத்தை அழிப்பதில்லை; மாறாக, அவை புனிதத்தை ஆழப்படுத்துகின்றன. துன்புறுவோரின் சூழலை அறிந்து உடனிருக்க துன்புற்ற வாழ்வுநிலை கற்றுத்தருகின்றது. பிறரின் வாழ்விற்காக, ஏற்றத்திற்காகத் துன்பத்தைச் சந்திப்பதும், ஏற்றுக்கொள்வதும் பேறுபெற்ற வாழ்வுநிலையே. நமது வாழ்வில் ஏற்படும் இழப்பு, தனிமை, தோல்வி, தவறான புரிதல் இவையெல்லாம் இறைவனை விட்டு விலகிச் செல்லும் காரணியாய் அமையக்கூடாது; மாறாக, அவற்றின் வழியாக இறைவனிடம் நெருங்கிவரும் வாய்ப்பாக மாற்றும் பொழுது, இறைவனின் ஆறுதலைப் பெற்று, பேறுபெற்றவர்களாக புனிதத்தின் பாதையில் நடந்திடுவோம்.

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர்; திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் யூபிலி ஆண்டு கொண்டாட்டத்தின் பொழுது ‘இரக்கமே திரு அவையின் அடையாள அட்டை’ எனக் குறிப்பிட்டுள்ளார். புனித வாழ்வு என்பது தன்னிலை துறந்த, இரக்கம் நிறைந்த வாழ்வு.  தூய உள்ளத்தினராய், முகமூடி வேடங்களைக் களைந்து வாழ்வோர், இறைவனைக் காணும் பேறுபெற்றவர்கள். அவர்களின் வாழ்வு பொய்மையைக் களைந்து, நேர்மையாய் வாழும் வாழ்வு.

அமைதியை ஏற்படுத்துவோர், தர்க்கங்களையும் ‘நான் சரி’, ‘நீ தவறு’ என்னும் மனநிலையையும் தவிர்த்து, அமைதியையும் உறவு இணைப்பையும் மன்னிப்பையும் விதைப்பவர்கள்.

நீதியின் பொருட்டு, துன்பங்களை ஏற்பவர்கள், இறையாட்சியின் உரிமையாளர்கள். ஏனென்றால், இறையாட்சியின் முதன்மையான மதிப்பீடுகள், நீதி, அன்பு, இரக்கம் மட்டுமே. நீதியாகவும் நேர்மையாகவும் வாழ்வதனால் இழப்புகள் ஏற்படினினும், அந்நிலைப் பாட்டிலிருந்து பின்வாங்காமல், நீதியை நிலைநாட்டு பவர்கள் பேறுபெற்றவர்கள். எல்லாருக்கும் ஏற்றவகையில் வாழ்கின்றார்களா? என்பது அல்ல; இறைவனுக்கும் இறையாட்சிக்கும் ஏற்ற வகையில் வாழ்வதே புனிதம்.

புனிதம் அனைவருக்கும் உரியது: எண்ணிக்கையில் அடங்காத பெருங்கூட்டத்தின் காட்சியைத் திருவெளிப்பாட்டு நூலில் யோவான் விளக்குகின்றார். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினங்களையும் மொழியையும் சார்ந்தவர்கள். புனித வாழ்வு ஓர் இனத்திற்கோ, மொழிக்கோ, நாட்டிற்கோ சொந்தமானது அல்ல; அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் பெயரால் ஒன்றிணைக்கப்பட்டு, கிறிஸ்துவின் முன் நின்று அவரைப் புகழ்கின்றார்கள். எல்லாரும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்; அவர்களின் பணிகள் வேறுபட்டன. அவர்களின் கலாச்சாரங்கள் வேறுபட்டன. இருப்பினும், அவர்களின் பொது அடையாளம் கிறிஸ்துவே. அவர்கள் தங்களது புகழ்ச்சியையும் பெருமையையும் ஞானத்தையும் நன்றியையும் மாண்பையும் வல்லமையையும் வலிமையையும் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டதால், அவை அனைத்தும் இறைவனுக்கே உரியதாகக் கருதி, அவரைப் புகழ்ந்து பாடுகின்றார்கள். நற்செய்தியின் பேறுகளை உரிமையாக்கிக் கொள்வோர் தமது பலத்தையும் அதிகாரத்தையும் பெருமையும் முன்னிறுத்தாமல், இறையருளையும் பிறரையும் முன்னிறுத்தி மகிழ்வார்கள். புனிதர்களின் கூட்டம், பெருந்துன்பங்களைச் சந்தித்தாலும், நம்பிக்கை குன்றாமல், கிறிஸ்து இரத்தம் சிந்திய மீட்புச் செயலினை மற்றவர்கள் அறிந்துகொள்ள தங்களின் பங்களிப்பை வழங்குபவர்கள். அதற்காக எத்துன்பங்களையும் பொல்லாப்புகளையும் எதிர்கொண்டவர்கள். துன்பம் அவர்களை இறைவனிடமிருந்து பிரிக்கவில்லை; மாறாக, இன்னும் அவருடன் நெருக்கத்தை அதிகரித்தது.

நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்: புனித வாழ்விற்கான முதல் படி, நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்பதை உணர்வதே. இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பை நாம் உணரும் பொழுது, அறியும் பொழுது நாமும் இறைவன் போன்று பிறருக்கு அதை வழங்கிடுவோம். இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் உணரும் வாழ்வே தூய வாழ்வு, கிறிஸ்துவின் அன்பைத் தேர்ந்தெடுப்பதே புனித வாழ்வு.

பேறுபெற்ற வாழ்வு நிலை என்பது உணர்ச்சிகளுக்கும், இவ்வுலகின் மகிழ்ச்சியின் அளவுகோலிற்கும் அடிமைப்பட்டு வாழ்வதல்ல; மாறாக, கிறித்தவ வாழ்வின் வரைபட வழிகாட்டியைப் பின்பற்றி, கிறிஸ்துவின் அன்பைத் தேர்ந்தெடுத்து, மகிழ்ச்சியான வாழ்விற்கான இறைச் செய்முறைகளைப் பின்பற்றுவது. மேற்கூறிய எட்டு பேறுகளில் ஒன்றையாவது அன்றாடம் தொடர்ந்து பின்பற்றினால் இறையாட்சியிலிருந்து நாம் வெகுதொலைவில் இல்லை.