‘உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம் - வீணில்
உண்டுகளித்
திருப்போரை
நிந்தனை
செய்வோம்’
என்றான்
பாரதி. உழைப்பதன், தொழில் புரிவதன் அவசியத்தை வலியுறுத்தவே பாரதி அப்படிப் பாடினான். இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருமே வளமாக, அனைத்து வசதிகளுடன் வாழவே ஆசைப்படுகிறோம். அதில் தவறில்லை; ஆனால், உழைக்காமல் உண்பதில் இன்பம் காணும் எண்ணம்கொண்டு வாழ்வதே பெருங்குற்றமாகும். இப்படிப்பட்ட சிந்தனை படைத்த சோம்பேறி மனிதர்களால் நாட்டிற்கும் வீட்டிற்கும் கடுகளவுகூட பயனில்லை.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று கூறுவர். எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம்; அதை யாரும் தவறு என்று கூறமுடியாது. ஆனால், சும்மா இருந்துகொண்டு சோத்துக்குத் தண்டமாக வாழும் நடைபிணங்களைத்தான் சமுதாயம் மதிப்பதில்லை. இவர்களைத்தான் நிந்தனை செய்ய வேண்டுமென்று மகாகவி வலியுறுத்துகிறான்.
மனிதன்
வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் வருமானம் அவனுக்கு மிக முக்கியத் தேவையாகின்றது. சரி, வருமானம் எப்படி வரும்? ஏதோவொரு தொழில் செய்தால்தான் வரும். அது விவசாயம், கைத்தொழில் போன்ற குடும்பத் தொழிலாக இருக்கலாம்; அரசுத்துறைப் பணியாக இருக்கலாம்; ஏன், ஒருவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்டு பொருள் ஈட்டும் சுயதொழிலாகக் கூட இருக்கலாம்.
சுயதொழிலின் அவசியம்
இந்தியா
சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இன்றுள்ள நிலையில் நாட்டைச் சுழன்றடிக்கும் சூறாவளி ஒன்று உண்டென்றால், அதுதான் வேலையில்லாத் திண்டாட்டம். வெள்ளையரிடமிருந்து நாம் நாட்டை மீட்டதிலிருந்து நமது அரசு எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டுத்தான் பார்க்கின்றது; தொழில்களைப் பெருக்கியிருக்கின்றது; விவசாயத்தை வளர்த்திருக்கின்றது; ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் எனும் சிக்கலைத்தான் இதுவரை அரசால் தீர்க்க முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம், கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கதிகமான மக்கள்தொகைப் பெருக்கம்தான்.
இன்று
நாட்டின் மக்கள்தொகை 140 கோடி என்கிறார்கள். நாளை 150 கோடி, அடுத்த நாள் 160 கோடி. இப்படி நாடு வீங்கிக்கொண்டே போனால் எந்த அரசுதான் எல்லாருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும்? எனவேதான் நமக்குத் தேவையான வேலையை, அதாவது சுயதொழில் ஒன்றை நமக்கு நாமே உருவாக்கி, அதன் மூலம் வரும் வருவாயை வைத்து உயிர்வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு எல்லாரும் தள்ளப்பட்டிருக்கிறோம்.
சுயதொழிலின் நன்மை
ஆதிமனிதன்
மீன்பிடித்தல், வேட்டையாடுதல், தன் உணவுக்குத் தேவையான காய்கறி, பழங்களைத் தானே சேகரித்தல் போன்ற பல்வேறு விதமான சுயதொழில்களைச் செய்தே உயிர் வாழ்ந்து வந்தான். இங்கிலாந்தில் இயந்திரங்களின் தொழில்புரட்சி ஏற்படுவதற்கு முன்பு அங்கே சுயதொழில் களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இன்றும் நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் உழவுத்தொழில், கால்நடை வளர்த்தல், சிறு தொழில்கள் செய்தல் என்று பல்வேறு விதமான சுயதொழில்கள் செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். சுயதொழில் புரிவதில் கிடைக்கக்கூடிய நன்மையை உணர்ந்தே ‘கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ என்கிறார்
நாமக்கல் கவிஞர்.
பொதுவாக,
படித்தவர் அரசுத்துறைகளில் வேலை செய்வதையே விரும்புகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அரசுப்பணிகள் நிலையானவை; அரசுப் பணிகளில் நல்ல வருமானம் கிடைக்கின்றது; அதில் எந்தத் தனிப்பொறுப்பும் இல்லாமல் வேலை செய்யலாம்; தொழில் எப்படி நடந்தாலும் கூலி கிடைக்கும்; ஓய்வு மிகுதியாக இருக்கும்; அரசுப் பணிகளில் விடுமுறை கிடைக்கின்றது என்பதாகும். ஆனால், அரசுப் பணிக்கான முழுத் தகுதியிருந்தும் எத்தனை பேருக்கு அப்பணிகள் வீடு தேடி வந்து கதவைத் தட்டுகின்றன?
இந்தச்
சூழ்நிலையில்தான் சுயதொழில்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தனித்திறமையும் முயற்சிகளும் மட்டும் இருந்தால் போதும்; யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான சுயவேலைவாய்ப்பைத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ள முடியும். சுயதொழில் செய்பவருக்குத் தன்னம்பிக்கை உண்டு. அவர் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சுயவேலைவாய்ப்பில் சுயமரியாதை காக்கப்படுகின்றது. சுயதொழில் புரிபவர்கள் மற்றவருக்குப் பாரமாக இருப்பதில்லை. அவர்கள் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க மறைமுகமாக உதவி செய்கின்றனர். சொந்தத் தொழில் நடத்துகிறவர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது. கடினமாக உழைக்க உழைக்க அவர்கள் அதிகமான ஊதியம் பெறுகின்றனர். மேலும், மற்றவர்கள் சாதிக்க முடியாத ஒன்றைச் சுயதொழில் செய்பவர்களால் சாதிக்க முடிகின்றது. ஆகையால் சமுதாயத்தில் அவர்களின் மதிப்பு உயர்கின்றது.
சுயதொழில் புரிவோருக்கான
தகுதிகள்
சுயதொழில்
புரிபவருக்குச் சில தகுதிகளும்
திறமைகளும் அவசியம் இருக்கவேண்டும். அப்போதுதான் எடுத்துக்கொண்ட காரியத்தில் அவர் வெற்றிபெற முடியும். முதலில் செய்யும் தொழிலில் ஆர்வம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது தண்ணீர் கண்டு பயப்படுகிறவன் நீச்சல் அடிக்க ஆசைப்பட்ட கதையாகிவிடும். இரண்டாவது கடின உழைப்பு முக்கியம். இரவு பகலென்று பாராமல் உழைக்கின்ற மனநிலை வரவேண்டும். ‘தொழிலை வளர்ப்பதற்குப் பணம் போதவில்லையே’ என்று
மனம் தளர்ந்துவிடக்கூடாது. தன்னம்பிக்கையும் துணிவும்வேண்டும். வங்கிகள் எல்லாம் தொழில் முனைவோருக்குக் கடன்தர முன்வருகின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
‘எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றவை’ என்பார் வள்ளுவர். தொழில் கணக்குகள், கடிதப் போக்குவரத்துகள் வைத்துக்கொள்வது, அவற்றை முறையாகப் பராமரிப்பது தவிர்க்க முடியாதது. அதற்கு எழுத்தறிவு தேவை. சோப்பு செய்தல், பொம்மைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைப் பயிற்சிகள் இல்லாமல் செய்ய முடியாது. சுயதொழில் புரிவோருக்குக் கல்வி அறிவும் பயிற்சியும் ஓரளவிற்காவது அவசியப்படுகின்றது.
சுயதொழிலில் பெண்கள்
உலகில்
வாழ்க்கைப் போட்டி அதிகமாகி விட்டது. குடும்பச் செலவுகள் பெருகிவிட்டன. ஓர் ஆள் சம்பாத்தியம் என்பது இக்காலத்தில் பற்றாக்குறை பட்ஜெட்டோடுதான் முடிகிறது. குடும்பப் பொருளாதாரம் வளமாக அமையவேண்டுமென்றால் ஆண்களோடு சேர்ந்து பெண்களும் பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயச் சூழல். எனவே, அவர்கள் சிக்கனமாக இருப்பதோடு, வீட்டு வேலைகளைக் கவனிப்பதுடன், வேறு ஏதாவது வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டிற்கு வெளியில் வேலை கிடைத்தால் போகலாம்தான்; ஆனால், பலமான போட்டிகள் நிறைந்த இக்காலத்தில், எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், வீட்டுப் பொறுப்பையும் நிர்வகித்துக்கொண்டு, வெளியிலும் வேலைக்குப் போவது என்பது பெண்களுக்குப் பெரிய சுமை. ஆகவேதான் பெண்கள் வீட்டிற்குள்ளேயே செய்ய முடிகிற ஒரு சுயதொழிலை உருவாக்கிக் கொண்டு செயல்படுவது மிகவும் வசதியானது. இப்போது சில பெண்கள் தையல், பொம்மைகள் செய்தல், கூடைமுடைதல் போன்ற சுயதொழில்களைச் செய்துகொண்டுதான் வருகின்றனர்.
சுயதொழிலில்
ஈடுபடுகிறபோது சில முக்கியமான விசயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஏற்கெனவே பெண்களுக்குத் தலைக்குமேல் வீட்டு வேலைகள் இருக்கும். கணவன் எவ்வளவுதான் மனைவியைப் புரிந்துகொண்டு, வேலைகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய மனப்பான்மை உள்ளவராக இருந்தாலும்கூட குழந்தைப் பராமரிப்பு உள்பட சில குடும்பப் பணிகளைப் பெண்களால் தவிர்க்க முடியாது. எனவே, கிடைக்கின்ற நேரத்தைப் பொறுத்து, அந்த நேரத்தில் செய்ய முடிகின்ற தொழில்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கொள்வது விவேகமானது. மேலும், வீட்டிற்குள் செய்கின்ற தொழில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அது அவர்களின் வேலைப் பளுவை ஓரளவிற்காவது குறைக்கலாம். காரணம், வீட்டிலுள்ள மற்ற நபர்களின் உதவியையும் பெற்றுச் செயல்படலாம் அல்லவா!
சுயதொழில் தொடங்குவதற்கு
முன்னால்...
ஆண்களின்
வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார். அதைப்போல் ஒரு முதலாளியின் வெற்றிக்கும் அடிப்படை அடித்தளமே தொழில் தேர்வுதான். தொழில் தொடங்குபவர்கள் தமக்கு விருப்பமுள்ள தொழிலாகப்
பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லாவிடில், தொழிலில் ஆர்வம் குன்றி எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிடலாம்.
தொழில்
முனைவோர் மாவட்ட தொழில் மையங்களின் ஆலோசனை பெற்றுச்செயல்படுவது அறிவுப்பூர்வமானது. அம்மையங்கள், அவர்கள் வெற்றிபெறவும் சாதனைகள் படைக்கவும் ஊக்குவிக்கும் கருவிகளாக அமைகின்றன. இரண்டாவது, தொழிலின் தன்மையைப் பொருத்து அதற்கு ஏற்ற இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் தொழில் அமைப்பதே நன்மை பயக்கும். உற்பத்திப் பொருள்களை ஏற்றவும், மூலப்பொருள்களை இறக்கவும், போக்குவரத்து வசதி இன்றியமையாதாகும்.
தொழில்
தொடங்குவதற்கு ஆணிவேர் மூலதனமே! வேண்டிய மூலதனத்தைத் தன்னால் சமாளிக்க முடியுமா? என்பதனை ஆராய்ந்து பார்த்த பின்னரே ஒருவர் தொழில் ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். சரியான கட்டட வசதி, தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய இயந்திரங்களைப் பயன்படுத்துதல், தரமான மூலப்பொருள்களையே இறக்குமதி செய்தல் போன்றவையும் தொழிலின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைகின்றன. மேலும், உற்பத்திப் பொருள்களைத் தரமானதாக உற்பத்தி செய்யும் கடமையிலிருந்து தொழில்புரிவோர் தவறி விடக்கூடாது. தரமற்ற உற்பத்திப் பொருள்கள் காலப்போக்கில் சந்தையில் விலைபோகாமல்
வீழ்ச்சியடைந்துவிடும்.
சந்தை நிலவரம் அறிந்து, அதற்கேற்ற உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது தொய்வின்றி வியாபாரம் நடக்க வழிவகுக்கிறது.
நாடு
இன்று சுயதொழில் புரிபவரைத்தான் இரு கரம் கூப்பி வரவேற்கிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவரும் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு முயற்சிக்கவேண்டும். வீட்டின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் சுயதொழில்களின் எழுச்சியில்தான் கிளர்ந்தெழவேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.