news-details
ஞாயிறு தோழன்
அனைத்துப் புனிதர்களின் பெருவிழா (01.11.2026) திவெ 7:2-4;9-14; 1யோவா 3:1-3; மத் 5:1-12

திருப்பலி முன்னுரை

இறைவனின் அன்பில் நிலைத்து, நம்பிக்கையிலும் தூய்மையிலும் வாழ்ந்து, தங்கள் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்த அனைத்துப் புனிதர்களின் விழாவைச் சிறப்பிக்க அன்னையாம் திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. புனிதர்கள் நமக்கு வெறும் வரலாற்றுச் சான்றுகள் அல்லர்; மாறாக, நம் வாழ்வின் முன்மாதிரிகள். இவர்கள் விண்ணக விழுமியங்களை இம்மண்ணில் வாழ்வாக்கியவர்கள்; நம்பிக்கையைக் காக்கத் தம்முயிரையும் தகனப் பலியாக்கியவர்கள்;  இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தை ஆதாயமாக்கிக்கொள்ள பல்வேறு துன்பங்களை ஏற்றவர்கள்; சோதனைகளைச் செபத்தால் வென்றவர்கள்; தம் பெயர் நிலைக்க அல்ல, இயேசுவின் பெயர் நிலைக்க உழைத்தவர்கள்; சோதனைகள், பலவீனங்கள், போராட்டங்கள், கண்ணீர், கலக்கம் என அனைத்திலும் இறைவனை ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டவர்கள். இவர்கள் நமக்குத் தந்துள்ள விலைமதிக்கமுடியாத முன்மாதிரிகையும் பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட்டும், ஊக்குவிக்கும் உதவிகளாகும் என்று திருத்தந்தை 23-ஆம் யோவான் கூறுகின்றார்.

புனிதர்களைப் போன்று இறைவனுக்காக வாழ்வதிலும், இறைவனுக்காக மரிப்பதிலும் மகிழ்ச்சி காண்போம். நம் அன்றாட வாழ்வில் இறைவனின் விருப்பத்தைத் தேடி அன்பு, தியாகம், மன்னிப்பு, இரக்கம், நேர்மை மற்றும் சேவை ஆகியவற்றின் வழியாக உலகிற்குக் கிறிஸ்துவை வெளிப்படுத்தி, ஒவ்வொரு நாளும் புனிதத்தில் பயணிக்க வரம் வேண்டி இணைவோம் இப்புனிதப் பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில், சோதனைகளின் நடுவிலும் இறைவனைப் பற்றிக்கொண்டு நம்பிக்கையில் நிலைத்திருப்பதே உண்மையான புனித வாழ்வு எனக் கூறி, இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட நம்மைத் தூய வாழ்வு வாழ அழைக்கும் திருவெளிப்பாடு வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனிதர்கள் இறைவனின் பிள்ளைகள் என்ற தங்கள் அழைப்பை உணர்ந்து, கிறிஸ்துவைப்போல் வாழ முயன்றதுபோல நாமும் நமது தூய்மையான வாழ்வால் கிறிஸ்துவைப் பிரதிபலிக்க அழைக்கும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. தூய்மைநிறை இறைவா! அனைத்துப் புனிதர்களின் சாட்சியால் உமது திரு அவை நம்பிக்கையில் வலிமை பெறவும், உலகில் அன்பு, அமைதி, நீதி ஆகியவற்றைத் தொடர்ந்து அறிவிக்கவும் திரு அவைத் தலைவர்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வழிகாட்டும் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் நேர்மையிலும் வளரவும், போர், அநீதி, வன்முறை ஆகியவற்றை அகற்றி, அனைத்து மக்களும் அமைதியுடனும் சகோதரத்துவத்துடன் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் புனிதர்களிடம் விளங்கிய உண்மையான இறைபக்தி, தூய வாழ்வு, இறைநம்பிக்கை போன்ற மதிப்பீடுகளில் ஒவ்வொரு நாளும் வளர வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! எம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கிறித்தவ நம்பிக்கையில் வளரவும், ஆன்மிக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், இறைவார்த்தையைப் படிப்பதிலும், நற்கருணையைச் சந்திப்பதிலும் ஆர்வம் கொண்டு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.