பிரான்சிஸ்கன் வாழ்க்கை முறை எட்டு நூற்றாண்டுகளைக் கடந்தும், திரு அவையில் உயிரோட்டத்துடன் தழைத்து நிற்பதில் தூய கிளாராவின் பங்கு இன்றியமையாதது. தன்னை ஒரு ‘சிறு செடி’ என்று அழைத்துக்கொண்டாலும், ‘பிரான்சிஸ்கன் இயக்கம்’ என்ற பெரும் மரத்தின் ஆணிவேராக விளங்கியவர் தூய கிளாரா. 1212-ஆம் ஆண்டு தூய ஆவியாரின் தூண்டுதலால் உலகத்தைத் துறந்து பிரான்சிஸ்கன் வாழ்க்கை முறையைப் பின்பற்ற கிளாரா விரும்பினார். அதற்காகக் குருத்தோலை ஞாயிறன்று இரவில் தனது பிறந்த இல்லத்தை விட்டு பிரான்சிசும், அவருடைய சகோதரர்களும் தங்கியிருந்த போர்சியுங்குலா சிற்றாலயத்திற்குச் சென்றார். அவர்களைப்போல நற்செய்தி வாழ்வு வாழ்வதே கிளாராவின் விருப்பமாக இருந்தது. ஆனால், அக்காலத் திரு அவையின் சட்டதிட்டங்களும் சமூக நெறிமுறைகளும் பெண்கள் அத்தகைய நற்செய்திப் பணியில் ஈடுபட அனுமதிக்கவில்லை. எனவே, பிரான்சிஸ் கிளாராவைப் பெனடிக்டைன் மடத்தில் சேர்த்தார். பின்னர் சான் தமியானோ ஆலயத்திற்கு அவரை அழைத்து வந்தார். அங்கு கிளாராவுக்கும், அவருடைய சகோதரிகளுக்கும் நான்கு வரிகளைக் கொண்ட ஒரு சிறிய வாழ்க்கை ஒழுங்குமுறையை வழங்கினார். பிரான்சிஸ், கிளாராவை சான் தமியானோவில் விட்டுச் சென்றபின் அரிதாகவே அங்கு திரும்பினார்.
அக்காலத்தில்
மடங்களுக்குச் சொத்துகளை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தல்கள் எழுந்தன. ஆனால், நற்செய்தி ஏழ்மையை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க கிளாரா உறுதியுடன் போராடினார்.
பிரான்சிஸ்கன்
இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் பல்வேறு புதிய ஆலோசனைகளும் மாற்றங்களும் எழுந்தபோது, ஏழ்மை என்னும் அரிய செல்வத்தைப் பாதுகாத்தவர் கிளாரா. பிரான்சிஸின் சகோதரர்கள் அவரிடம் ஆலோசனை கேட்க வந்தனர். அவர்களுக்கு மூத்த சகோதரியாகவும் தாயாகவும் இருந்து அழைப்பில் நிலைத்திருக்க ஊக்கமளித்தார். வார்த்தைகள் பிரான்சிஸ் உடையது; அதை வாழ்ந்து காட்டியவர் கிளாரா. அகத்தூண்டல் பெற்றவர் பிரான்சிஸ்; அதற்கு வடிவம் கொடுத்தவர் கிளாரா. புதிய வாழ்க்கை முறையைத் தந்தவர் பிரான்சிஸ்; அதை உறுதியுடன் வாழ்ந்து புத்துயிர் அளித்தவர் கிளாரா. பிரான்சிஸ் தனது அழைப்பைப் பற்றிச் சந்தேகங்கள் எழுந்தபோதும், சகோதரர்களுக்கு இறைவேண்டுதல் தேவைப்பட்ட போதும் கிளாராவை நாடினார். கிளாராவும் தனது தேவைகளில் பிரான்சிஸை அணுகினார். கிளாராவின் எழுத்துகளில் பிரான்சிஸின் சிந்தனைகள் பிரதிபலித்தன. இருவருடைய உறவின் மையமாக கிறிஸ்துவே விளங்கினார்.
பிரான்சிஸ்
தனது வாழ்க்கை முறையைப் பெண்கள் மீது திணிக்கவில்லை. அவர்களுடைய தனித்துவத்தையும், அக்காலச் சூழ்நிலையையும் மதித்து நற்செய்தியை முழுமையாக வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்தார். கிளாராவும் அடைப்பட்ட மடத்திற்குள் இருந்து ஏழ்மை, கடின உழைப்பு, போராட்டங்கள், உலகத்தின் வெறுப்பு ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். உடலளவில் வலுவற்றவர்களாக இருந்தபோதிலும், இச்சோதனைகளை உள்ளத்தால் புறக்கணிக்கவில்லை என்று கிளாரா தனது இறுதி மொழியில் குறிப்பிடுகிறார். பிரான்சிஸ்கன் வாழ்வு அனைவரையும் ஒரே விதமாக வாழ அழைப்பதில்லை. பிரான்சிஸ், தனக்கிருந்த சுதந்திரத்தோடு சமூகத்தில் நற்செய்தியைப் போதித்து வாழ்ந்தார். கிளாராவோ அடைபட்ட மடத்திற்குள் இருந்து அதே நற்செய்தியை வாழ்ந்தார். நமது இயல்பையும் தனித்துவத்தையும் திறமைகளையும் இறைவன் தந்த தாலந்துகளையும் இழந்துவிடாமல் நற்செய்தியின் கனிகளை வாழ்வில் வெளிப்படுத்துவதே பிரான்சிஸ்கன் அழைப்பு.
கிளாரா
தன்னுடன் வாழ்ந்த சகோதரிகளை மட்டுமல்லாhமல், மடத்திற்கு
வெளியே நற்செய்தி வாழ்வைப் பின்பற்றிய பலரையும் ஊக்குவித்தார். பிரான்சிஸின் மறைவுக்குப் பின்னரும் அவரது கனவுகள் நனவாக உழைத்தார். யாரையும் தன்னை நோக்கி ஈர்க்காமல் தன்னைக் கவர்ந்த சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும் அவரது திருத்தாயையும் நோக்கி வழிநடத்தினார். பிரான்சிஸின் இதய ஆவலைப் பாதுகாத்து நற்செய்தி ஏழ்மைக்கு உயிரூட்டி, பலரையும் அதில் நிலைத்திருக்கச் செய்த இவரது பங்களிப்பு ஒரு தாய்மையின் பங்களிப்பாகும்.