news-details
சிறப்புக்கட்டுரை
“கல்வி எனும் கருத்துநிலைக் கருவி” (Ideological Apparatus)

இந்தியக் கல்வி அமைப்பின் முதன்மை முன்னோடிகள் திரு அவையைச் சார்ந்த கல்வியாளர்களே என்று பெருமை பாராட்டிக் கொள்வதில் நியாயம் உண்டு.

கொசுகூட நுழைய முடியாத இடங்களையும் தேடிச்சென்று கல்விக் கனியைப் பரவலாக்கிய பெருமை கிறித்தவருக்கு உண்டு.

அடிப்படை எழுத்தறிவுகூட பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட இந்தியச் சமூகத்திற்குக் கல்விக் கண்ணைத் திறந்த பாராட்டுக்குரியது கிறித்தவம். கல்வி எனும் மறைப்பணியைக் கிறித்தவம் காலூன்றிய காலத்தின் சூழமைவு என்ன? இன்றைய சூழமைவு என்ன? இந்த ஆய்வை எங்கேனும், எப்போதேனும் நாம் சிந்தித்ததுண்டா?

கல்விப்பணி, எப்போதும் எக்காலத்தும் ஏற்புடையதே. கல்விக்கென்று தனித்த கால வரையறை இல்லை. மாந்தர்தம் செம்மையைச் செழிப்பாக்கும் கல்வி, மானுட விடுதலையை முழுமையாக்கும் கல்வி எப்போதும் எக்காலத்தும் தோன்றி மறையும் மானுடருக்கு உரியதே. “இது மானிடருக்கு உரியது” என்பதனால்தான் சனநாயக அரசுகளும், ஐக்கிய நாட்டவையின் உரிமை சாசனங்களும் கல்விக்கான உரிமையை ‘அடிப்படை உரிமை’ என்று அறிவித்தது. கல்வி அடிப்படை உரிமை என்பதால், அவ்வுரிமை ஒரு குடிமகனின் வாழ்வுரிமையோடு (Right to life), அவரின் மாண்புரிமையோடு (Right to dignity) எல்லாருக்கும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்பதால் சமத்துவ உரிமையோடும் (Right to equality) இணைத்துப் பார்க்கப்பட்டது.

சுதந்திரம் பெற்ற நாடுகள் அனைத்தும் தமது நாடுகளின் அடையாளமாகக் கருதப்பெற்ற அரசமைப்புச் சட்டங்களில், கல்விக்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஏகோபித்த முறையில் ஏற்றன.

கல்விக்கான உரிமை பாதுகாப்பு என்பது, கல்வி நிறுவனங்களுக்கான உட்கட்டமைப்பை உத்தரவாதப்படுத்துதலில் மட்டுமல்ல; நிறுவப்படும் கல்விக்கூடங்களின் உட்கட்டமைப்பும் கூட பாகுபடுத்தும் வகையில் இல்லாமல் இருப்பதே.

நம் கல்வி அமைப்பும், அதன் உள்ளடக்கமும் இருவகையிலானவை. ஒரு சனநாயக அரசு குடிமக்களுக்கான சனநாயகத்தை உத்தரவாதப்படுத்தவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது? இந்தியச் சமூகம் வர்க்கரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. இருவகையாகப் பிளவுபட்டுக் கிடக்கும் அச்சமூகத்தின் பிளவைச் சமன் செய்யும் எவ்வித முனைப்புமற்றதாகவும், பிளவுபட்ட இரு வேறு சமூக அமைப்பை மறு உற்பத்தி (Reinforce) செய்யும் கருவியாகவும் நமது கல்வி அமைப்பு உள்ளது.

சமத்துவமற்றச் சமூகத்தில் சமத்துவமற்றக் கல்விமுறை! இப்போக்கை எக்கொள்கையால் நியாயப்படுத்த முடியும்? இரட்டைச் சமூகம் (Dual Society), இரட்டைக் கல்விமுறை (Dual Educational System) என்பது அநியாயமல்லவா! அறக் கொள்கைக்கு முரணானதல்லவா?

இங்கு எழுகின்ற கேள்வியெல்லாம் என்ன?

இந்தியாவில் கல்விப்பணியின் முன்னோடிகள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மவர்கள், இம்முன்னோடிகளுக்கு இருக்கின்ற நியாயமான காரணங்களால், சனநாயக அரசின் கல்வி அளிக்கும் கடமையை அல்லது பொறுப்பைத் தம் தோளில் சுமந்து நிற்கும் திரு அவையினர், கேள்வி கேட்கும் உரிமையுடையோர் என்பதை நினைவில் கொள்ளவும், சனநாயக அரசு கல்விக்கான உரிமைகளை மீறுகையில் தட்டிக் கேட்கவும், சனநாயக அரசைப் பதில் சொல்ல வைக்கவும் உரிமை பெற்றவர்கள் என்பதை ஏன் மறந்து செயல்படுகின்றனர்?

மாணவ-மாணவியரைக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கவும் (Admission), ஆசிரியர்களை நியமிக்கவும் (Appointment) ஆகிய இரு நிலைகளில் முழுவதும் கவனம் செலுத்தி வருவது போன்று ஓர் உண்மை நிலையைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். நம் கிறித்தவத்திற்குக் கல்விப்பணி என்பது, நம் தலையாய ‘மிஷன்!’ இந்த ‘மிஷன்’ கொள்கையை - அர்ப்பணத்தோடு உறுதி செய்வது ஒரு வேள்வி. அந்த வேள்விக்கு வேண்டுவது தியாகம். உலக வாழ்வைத் துறந்த பல்லாயிரக்கணக்கான தியாகச் சீலர்களை இக்கல்விப் பணியெனும் பெருங்கடலில் கரைத்துள்ளோம். தற்போது இப்பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள எத்தனை பேருக்கு இக்கல்வி அமைப்பின் வடிவம், அதன் உள்ளடக்கம், அவ்வுள்ளடக்கத்தில் உறையும் அரசியல் பற்றி ஏதேனும் அறிவார்களா?

கல்வியிலும், கல்வி அமைப்பின் வரலாற்றிலும் உள்ளடங்கிய அரசியல் பற்றி அறியாத ‘கபடற்றப் புறாக்களாக’ சேவை எனும் பெயரில் ஆற்றி வரும் நம் பணி யாருக்கானது? என்ற கேள்வியை நாம் நமது அமர்வுகளில் என்றேனும் சிந்தித்துள்ளோமா?

கல்வி அமைப்பு தன்னாட்சி பெற்ற சுதந்திரமான அமைப்பல்ல; நம் நிறுவனத் தலைவர்களோ சுதந்திரமான ஓர் அமைப்பில் செயல்படுகிறோம் என்று கருதுவோரானால்... அது  பொய்யே!

பள்ளிக்கட்டடம் நமதே; பள்ளியின் உட்கட்டமைப்பும் நமதே; ஆனால், பள்ளி மூலம் தரப்பெறும் பாடங்கள் நமதல்ல! பாடங்கள் சுதந்திரமானதல்ல! பாடங்கள் அனைத்தும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டவை (Prescribed). தயாரிக்கப்பட்ட பாடங்களை விமர்சிக்கவோ, கடுகளவு மாற்றம் செய்யவோ உரிமையற்றவர்கள் நாம். அப்படியிருக்க இப்பணியை ‘மிஷன்’ என்று எப்படி அழைக்க முடியும்?

நமக்கு ‘சொந்தமான’ வானுயர்ந்த கட்டடங்களும், அங்கே வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் வகுப்பறைகளும் நம் உரிமைச் சொத்து என்று நாம் கருதுவது உண்மையில் தவறான ஒன்றாகும். கல்வி வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நமதாக இருந்தாலும் அவை சுதந்திரமானவை அல்ல; பல்கலைக்கழக மானியக்குழு (UGC, NCERT, NCTE), இன்னும் பல உயர்கல்வி அமைப்புகள் யாவுமே இன்று சுதந்திரமாகச் செயல்படவில்லை; செயல்படவும் முடியாது.

ஆளும் அரசுக்கு ஓர் அரசியல் சிந்தாந்தம் உள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டோமானால், அவ்வரசின்கீழ் இயங்கும் கல்வி அமைப்பிற்கும், இக்கல்வி அமைப்பின் சித்தாந்தத்திற்கும் (Content) தொடர்புண்டு என்பதை நாம் அறிவோம். நாம் நம் மக்களுக்கான அறிவு மற்றும் ஆற்றலை வளர்க்கவும், அவை மூலம் மாந்தர்தம் மகத்துவம் மற்றும் மாண்பை வளர்ப்போம் என்ற கனவில் கல்வி நிறுவனங்களை நிறுவியிருப்பதாகக் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். அக்கனவில் உண்மையுண்டு; ஆனால், அக்கனவு உண்மையாவதற்கான சாத்தியங்கள் இன்று உள்ளனவா? கல்வியை ஒரு மிஷனாக ஏற்று நடத்தும் நம்மவர்கள், இக்கல்வி தனித்த, சுதந்திரமான அமைப்பல்ல என்பதனைப் புரிந்துள்ளனரா? கல்வி அமைப்பும், அதன் உள்ளடக்கமும் நடுநிலையானது (Neutral) அல்ல என்பதைப் புரிந்துள்ளோமா?

கல்வியின் நோக்கம் கீழ்க்காணும் இருவகையாகக் கூறப்படும் என்பர். கல்வி விடுதலை தரும் இயல்புடையது (to liberate) அல்லது ஒடுக்கும் தன்மையுடையது (subjugate).  நம்மை ஆளும் அரசுகள் ஏதேனும் ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கும் என்பதே உண்மை. இந்தியாவின், இந்திய தேசிய காங்கிரசின் ஆட்சி ஒரு மிதவாத (liberal) ஆட்சி. சனநாயக சமயச் சார்பின்மையை ஓரளவு தூக்கிப்பிடித்த கட்சி. இக்கட்சியின் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட உயர்கல்வி நிறுவன அமைப்புகளில், சமூக மாற்று இடதுசாரிச் சிந்தனையாளர்களும் இடம்பெற வாய்ப்புகள் இருந்தன. பல்கலைக்கழக மாநிலக் குழு, தேசிய அளவிலான ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NCERT), தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (NCTE) போன்ற நிறுவனங்கள் மூலம் சமூக மாற்றுச் சிந்தனையாளர்கள் இடம்பெற வாய்ப்பிருந்தது. அத்தகைய அறிவுஜீவிகளுக்கு இந்நிறுவனங்களில் இனி இடமில்லை. இத்தகையவர்களுக்கு இடம் மறுக்கப்பட்ட இச்சூழலில், புதிதாக நியமிக்கப்பட்ட கல்வியாளர்கள் எத்தகையோராய் இருப்பர்?

டெல்லி பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் சோயா அசன் அவர்கள், இவ்வாண்டு விடுதலை நாளன்று டெல்லி மாநகரின் பள்ளியொன்றில் ‘பன்மைத்துவம்’ (Pluralism) பற்றி உரையாற்ற அழைக்கப்பட்டார். உரையாற்ற வந்த இப்பேராசிரியரின் உரை, சங்கப் பரிவாரங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் முனைவர் ரொமிலா தப்பார் போன்றோர் ‘திமாகி நக்சல்கள்’ என்று இகழப்பெறுகின்றனர். இவையெல்லாம் வெறும் செய்திகளல்ல; உண்மையில் இவை நமக்கு எச்சரிக்கை! ஆனால், நாம் எச்சரிக்கப்பெறும் அளவிற்கு மாற்றுச் சிந்தனையாளர்களாக இல்லை. மிகப்பெரிய அளவில் நடத்தப்பெறும் நம் கல்வி நிறுவனங்களின் உள்ளடக்கம் எவருக்கும் எச்சரிக்கை அளிக்கவில்லை. ஆளும் வர்க்கம் அதிர்கின்ற எந்த செயலையும் நாம் செய்யவில்லை.

கல்வி மானுடத்தின் மகத்துவத்தைப் பேணுவது என்பதில் இருவேறு கருத்தில்லை. பிறப்பின் அடிப்படையில் மறுக்கப்பட்ட கல்விச் செல்வத்தை எல்லாருக்கும் உரியதொன்றாக மாற்றிய பெருமை நமக்கு இருக்கலாம்; இக்கல்வி அமைப்பின்மீது நமக்கு இருக்கும் வாஞ்சையை எண்ணிப் பார்க்க வேண்டிய காலம் நெருங்கி பல ஆண்டுகளாகி விட்டன.

சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அறிவிக்கப்பட்ட சனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை என்பன இந்தியாவின் பழமையைத் தூக்கிப்பிடித்து பிளவுவாத அரசியல் நடத்துவோருக்கு எரிச்சலைத் தந்ததாலேயே, சங்கப் பரிவாரங்கள் கல்விக் களத்தைத் தமது கருத்துநிலைக் கருவியாக்க முனைந்துள்ளனர். ‘வித்ய பாரதி’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் தொடங்கப்பட்ட பள்ளிகள் 1991-இல் மட்டும் 4,000 ஆகும். மேலும் 40 கல்லூரிகளும் அடங்கும். இங்கு சேர்க்கப்படும் மாணவருக்குக் கற்பிக்க பயிற்சி ஆசிரியர்கள் 36,000 பேர். ‘வித்யா பாரதி’ என்ற பெயரில் நடத்தப்பெறும் இப்பள்ளிகளில் இன்று பத்து இலட்சம் குழந்தைகள் கற்கின்றனர். இம்மாதிரியான பள்ளிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் இயங்குகின்றன. இதனைப் போலவே ‘சிசுவதிகாஸ்’ என்ற பெயரிலான மழலையர் பள்ளிகள் மாண்டி சோரி பள்ளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளன (‘The SANGH PARIVAR’ Christophe jaffrelot P. 199).

இன்றைய பாரதிய சனதா அரசு, ஆட்சியேறுமுன்னே கல்வி அமைப்பினுள் ஊடுருவி, தம் கருத்தியல் கருவியாகக் கல்விக்கூடங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் சிறிய அடையாளங்களைத்தான் நாம் இங்கே விளக்கியிருக்கிறோம். இன்று இந்திய மதவாத அரசு கைப்பற்றாத கல்வி நிறுவனங்கள் இல்லை. அறிவுசீவிகள், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் என அனைவரும் - அனைத்தும் காவிமயமாகியுள்ளனர்.

ஏற்கெனவே மேலே சுட்டிக்காட்டியபடி, கல்வித் துறை ஆளும் அரசின் கருத்தியல் துறையாகவே செயல்படுவதுபோல் மதவாத, மத அடிப்படைவாத, அறிவுலகிற்கு எதிரான ஓர் அரசின் கல்விக் கொள்கை எப்படியிருக்கும்? என்ற அச்சம் இன்று பலரிடமும் எழுந்துள்ளது. இப்போக்கு நியாயப்படுத்தப்படுகின்றபோது, எந்தவிதக் கருத்தியலின் பரப்புரைக் கருவியாக நம் நிறுவனங்கள் செயல்படப் போகின்றன? மதவாதிகளின் கருத்தியலை எதிர்கொள்ள நாம் தயாரா? சிந்திப்போம்.