news-details
ஆன்மிகம்
புனித பிரான்சிஸ் அசிசியும் பொதுநிலையினரின் புனிதமும்

பொதுநிலையினரில் சாதாரண நம்பிக்கையாளராகவும், ஏழ்மையின் காதலனாகவும், கடவுளுக்காகச் சொத்தையும் உறவையும் துறந்த ‘முட்டாளாகவும்’ இருந்த பிரான்சிஸ், கத்தோலிக்கத் திரு அவையில் பிரச்சினைகள் தலைதூக்கி இருந்த காலத்தில் ஒரு துறவற சபையைத் தொடங்கியது கடவுளால் மட்டுமே சாத்தியமான ஒரு செயல். 

பொதுநிலையினரை புனித பாதையில் திரு அவையின் வழியாகச் சிலுவையில் அறையப்பட்டவருமான கிறிஸ்துவிடம் ஈர்த்து வருவதற்காகவே கடவுள் பிரான்சிசைத் தூண்டி விட்டார். இதற்காகவே இயேசு பிரான்சிசை அழைத்தார், தயார் செய்தார், வழிநடத்தினார். பிரான்சிசும் அன்னை மரியாவைப்போல, சோதனைக் காலங்களிலும், ஆன்மிக வறட்சியின் காலங்களிலும் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கவில்லை.

பிரான்சிசைப் பொறுத்தவரை நம்பிக்கையாளர்கள் அனைவரும் இந்த உலகில் பாவமன்னிப்புக் கோருபவர்கள். மனம் மாறிய வாழ்க்கையை மடத்திற்குப் போகாமல், இருக்கின்ற இடத்திலேயே வாழப் பொதுநிலையினரை பிரான்சிஸ் அழைக்கின்றார். இவர் பொதுநிலையினருக்கு எழுதிய மடலில் ‘கடவுளையும் அயலானையும் அன்பு செய்யவும், மனம் மாறிய வாழ்க்கையை வாழவும், தீய பழக்கங்களையும் பாவங்களையும் வெறுக்கவும், இயேசுவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் திருப்பலியின் மூலமாகப் பெற்றுக்கொள்ளவும், மூவொரு இறைவன் வாழும் கோவிலாக இருங்கள்’ என்று வலியுறுத்துகின்றார்.  

25 வருடங்கள் பாவத்தில் ஊறிப் போய் கிடந்த பிரான்சிசின் மனத்தை, கடவுள் பக்கம் திருப்பி புனிதத்தில் வளர வைத்த பக்தி முயற்சிகள் பின்வருமாறு: நமது போராட்டங்களில் நம்மைப் பாதுகாப்பவர்களான தேவதூதர்கள் குறிப்பாக, அதிதூதரான புனித மிக்கேல் தூதர், நம்பிக்கையற்ற நிலையிலிருந்து நம்பிக்கைக்கு நம்மை வழி நடத்துகின்ற அன்னை மரியா, ஏழ்மையான மற்றும் தாழ்மையான குழந்தை இயேசு குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலத்தில் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின் திரு உடல்-திரு இரத்தம், இறைவனுக்குச் சாட்சி பகர்ந்த புனிதர்களின் வல்லமை மிக்க திருப்பண்டங்கள், பாவத்தையும் சாத்தானையும் வெல்லும் சிலுவை... இவை அனைத்தும் ஆவியின் அருள்பொழிவிலும் புனிதத்திலும் நிலைத்து நிற்க உறுதுணையாக இருந்தன.

13-ஆம் நூற்றாண்டில் பொதுநிலையினர் மத்தியில் அதிகமாக மத விரோதக் கொள்கைகள் இருந்த காலகட்டத்தில், திருத்தந்தை 9-ஆம் கிரகோரி செலானோவைச் சேர்ந்த தாமஸ் என்பவரிடம் பொதுநிலையினருக்காக புனித பிரான்சிசின் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூற, அவரும் 1230-இல் முடிக்கின்றார். அவரது சிந்தனைக்குரிய எழுத்துகளில், பிரான்சிசைப் புனிதராக்கிய ஆறு செய்திகளை செராபினின் ஆறு இறக்கைகளோடு தொடர்புபடுத்தி முன்வைக்கிறார். செராபினின் தலையை மூடியவாறு இருந்த இறக்கைகள் தூய நோக்கத்தையும், நேர்மையான நடத்தையையும் குறிக்கின்றன. மற்ற இரண்டு பறப்பதற்கான இறக்கைகளும் ஆன்மாவுக்கு இறைவார்த்தையை உணவாகக் கொடுப்பதையும் உடலுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பதையும் குறிக்கின்றன. இடுப்புக்குக் கீழே உடலை மூடியவாறு இருந்த இரண்டு இறக்கைகளும் பாவம் செய்யும்பொழுது இருக்க வேணடிய மனவருத்தத்தையும் பாவ அறிக்கையிடுவதையும் குறிக்கின்றன. இவை உங்களையும் புனிதராக்கும்!

தூய நோக்கம் இருந்தால் நம் செயல்கள் நேர்மையானதாகவும் நேரடியாகவும் இருக்கும். ஒளிவு மறைவுகள் இல்லாமல் அச்செயல்கள் இறைவனுக்குத் தூய காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படும். இந்த இரண்டையும் கொண்ட சொல், செயல்களுக்கு ஒருவர் மனிதர் முன்பும் கடவுள் முன்பும் வெட்கப்படத் தேவையில்லை.  ஆன்மாவிற்கும் உடலுக்கும் தேவையான உணவு கொடுக்கப்பட்டால், புனிதத்திலே ஒருவர் உயர்ந்து பறக்க முடியும். உடலுக்காக ஓடுகின்ற மனிதன், ஆன்மாவிற்கு ஓட மறுக்கின்றான். நேரத்தையும் பணத்தையும் ஆற்றலையும் செலவிட மனமில்லை. பாவம் வாழ்க்கையில் நுழையும்பொழுதெல்லாம் ஆன்மிக உலகிலே ஆதாம் ஏவாளுக்கு நடந்தது போல உடல் நிர்வாணமாகின்றது. பாவ அறிக்கையோ இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொடுக்கின்றது.

தன் மரணப் படுக்கையில் பிரான்சிஸ் இவ்வாறு கூறுகிறார்: “நான் என் பங்கைச் செய்துவிட்டேன்; கடவுள் உங்கள் பங்கைக் காட்டட்டும்.”